Friday, October 30, 2009

பிதற்றல்கள் - 10/29/2009

ஆணி நிறைய சேர்ந்துவிட்டதால் சில நாட்களாக கடைப்பக்கம் வரமுடியவில்லை. ஒருவழியாக பிடுங்க முடிந்த ஆணிகளைப் பிடுங்கிவிட்டு பொட்டிதட்ட உட்கார்ந்துவிட்டேன்.

இடைப்பட்ட நாட்களில் எங்கள் ஊரில் நடந்த கந்த சஷ்டிவிழாவில் பங்கு கொண்டேன். நான் வசிக்கும் ஊரில் ஸ்ரீவித்யா பீடம் ஒன்று உள்ளது. இலங்கைத் தமிழர் ஒருவர் இதன் பீடாதிபதியாக இருந்து வருகிறார். நாங்கள் எல்லாம் அவரை "அய்யா" என்று அன்புடன் விளிப்போம். இந்தக் கோவிலில் சிவன்/தேவி சம்மந்தப்பட்ட விழாக்கள் எல்லாம் வெகு சிறப்புடன் நடக்கும்.

இப்போது கந்த சஷ்டி விழாவிற்கு வருவோம். சின்ன அம்மிணி இங்கே சொல்லியிருக்கும் அளவுக்கு விமரிசையாக நடக்கவில்லை என்றாலும் நன்றாகவே இருந்தது. முருகன் அபிஷேகம் முடிந்ததும் தன் அன்னையிடம் போய் வேல் வாங்கிக் கொண்டு வந்து சூரனை வதம் செய்தார். இங்கே சூரன் நின்ற இடத்திலேயே நின்றான். (ஒரு ஸ்டாண்டில் பூசணிக்காய் ஒன்றை சூரனின் தலை போல அலங்காரம் செய்து வைத்திருந்தனர்). முருகன் ஒரே ஆட்டம் தான். முருகன் கையில் இருந்த வேலால் சூரனின் முகத்தில் குத்திவிட்டு பின் ஒரு கத்தியால் அவனை இரண்டாகப் பிளந்தார்.  அதன் பின் கோயிலுக்குள் வைத்து தெய்வயானையை மணம் வைதீக முறைப்படி மணம் புரிந்தார். அன்னையிடம் ஆசி வாங்கிவிட்டு, தெய்வயானையை கோவிலுக்குள்ளேயே விட்டு விட்டு, வெளியே இருக்கும் பிள்ளையார் சன்னிதி முன் வள்ளிக்குறத்தியை (திருட்டுக்) கல்யாணம் செய்து கொண்டார். அப்போது கோவில், கோவிலின் வெளியே இருக்கும் விளக்குகள் அனைத்தையும் அணைத்து விட்டு சத்தம் இல்லாமல் செய்தனர்.

பின் இத்திருமண செய்தி கேட்டு தெய்வயானை கோபமாக வெளியே வந்து வள்ளியையும் முருகனையும் வழி மறித்தார். கோபித்துக் கொண்டு போன தெய்வயானையை முருகன் கல்கண்டு கொடுத்து சமாதானம் செய்து கொண்டு வந்தார். (இவ்வளவு ஈஸியா சமாதானம் பண்ணலாம்னா நாம கூட ரெண்டாவது கல்யாணம் பண்ணி இருக்கலாமே என்று சற்று சத்தமாக நினைத்ததும் பின் மண்டையில் நங் என்று ஒரு கொட்டு விழுந்தது). பின் வள்ளி தெய்வானையோடு முருகன் காட்சி அளித்தார். மிகவும் சுவாரசியமாக இருந்தது.

இந்தக் கோவிலில் அடுத்த வருடம் ஜூலை மாதம் புனருத்தாரண கும்பாபிஷேகத்தை ஒட்டி அதி ருத்ர ஹோமம் செய்யவிருக்கிறார்கள். துண்டு போட விரும்புபவர்கள் இங்கே சொடுக்கலாம்.

போன வாரம் பா.கிருஷ்ணகுமாரைப் பற்றி சொன்னேன். நான் கல்லூரியில் படிக்கும் போது வந்த ஒவ்வொரு பேச்சாளரும் தனது முத்திரைப் பேச்சாக சில விஷயம் வைத்திருப்பார்கள்.

பா.கிருஷ்ணகுமார் - வாட்டர் டேங்க் சுத்தம் பண்ணுவதைப் பற்றி பேசுவதைப் போல ஜெயலலிதா-சசிகலா அவர்களைப் பற்றி பேசுவார். அவர் எந்தக் கூட்டத்தில் எந்தத் தலைப்பில் பேசினாலும் இதை எப்படியாவது நுழைத்து விடுவார். அது இப்படி போகும் - 'நம்ம வீட்டு குழாயில புழு வருது. அதுக்கு யார் காரணம்? நம்ம வீட்டு குழாயா? இல்ல. ஊருக்கு வெளிய பெருசா உயரத்துல ரெண்டு வாட்டர் டேங்க் இருக்கு பாருங்க அது தான் காரணம். நாம இப்ப என்ன செய்யணும். நல்ல வெளக்கமாரு ஒண்ணு எடுத்துக்கிட்டு நேரா மேல போய் கையில இருக்குற வெளக்கமாத்தால நல்லா அடி அடின்னு அடிச்சி - நான் இப்ப டேங்க சுத்தம் பண்றத பத்தி பேசிட்டு இருக்கேன் - சுத்தம் பண்ணினோம்னா, நம்ம வீட்டு குழாயில் எப்பிடி புழு வரும்?'

மதுக்கூர் இராமலிங்கம் - இவர் தீக்கதிர் பத்திரிக்கையில் இணையாசிரியராக இருந்தார். இவர் வழக்கமாக டிவி விளம்பரங்களைப் பற்றி பேசுவார். 'நம்ம வீட்டுல ஆம்பளயாளுங்க எல்லாம் வெளில கிணத்துலயோ ஆத்துலயோ கம்மாவுலயோ குளிப்பாங்க. பொம்பளையாளுங்க வீட்டுக்குள்ளயே குளிப்பாங்க. ஆனா விளம்பரத்துல பாருங்க. ஆம்பள பாத்ரூமுக்குள்ளயே குளிக்கிறான். பொம்பள ஆறு குளம் அருவின்னு வெளிய குளிக்குது'  - இந்த பேச்சை அவர் புதிய பொருளாதாரக் கொள்கையைப் பற்றி பேசினாலும் சரி, வெளிநாட்டு முதலீடுகள் பற்றி பேசினாலும் சரி, தவறாமல் சேர்த்துவிடுவார்.

கவிஞர் நந்தலாலா  - இவர் திருச்சி இந்தியன் வங்கியில் பணியாற்றினார் என்று நினைவு. இவர் வழக்கமாக ஒரு ஜோக் சொல்வார். 'காந்தித் தாத்தா எதுக்கு கையில குச்சி வச்சிட்டு நிக்கிறாருன்னு உங்களுக்கு யாருக்காவது தெரியுமா? நம்ம நாட்டுல மக்கள் நலத் திட்டம்ங்கிறது குச்சி ஐஸ் மாதிரி. அதை போட்டதும் போட்ட மந்திரி ஒரு சூப்பு. அந்தத் துறைச் செயலர் ஒரு சூப்பு, அப்புறம் மாவட்ட கலெக்டர் ஒரு சூப்பு, ஆர்.டி.ஓ ஒரு சூப்பு, தாசில்தார் ஒரு சூப்பு, வி.ஏ.ஓ ஒரு சூப்பு, பஞ்சாயத்து தலைவர் ஒரு சூப்பு, வார்டு கவுன்சிலர் ஒரு சூப்பு.. இப்பிடி ஆளுக்கு ஒரு சூப்பு சூப்பிட்டு மக்கள் கையில வரும்போது வெறும் குச்சிதான் மிஞ்சும் அப்பிடிங்கிறத சிம்பாலிக்கா சொல்றதுக்கு தான் காந்தித்தாத்தா கையில குச்சி வச்சிட்டு நிக்கிறாரு' இப்படி சொல்லியதும் கண்டிப்பாகக் கை தட்டல் கிடைக்கும். இதையும் பல மேடைகளில் இவர் பேசி நான் கேட்டிருக்கிறேன்.


கல்லூரி காலங்களில் பல விவாதங்கள் நடத்தி இருக்கிறோம். முக்கியமான விவாதம் அப்போது வெளிவந்த இந்தியன் திரைப்படம் பற்றியது. லஞ்சம் வாங்கியவர்களை கொலை செய்வதென்பது சரியான தண்டனையா? என்பது பற்றி பேச்சு போனது. ஒரு கல்லூரி மாணவி முதல்முறையாக இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தார். அவர் இது காந்தி பிறந்த மண் இங்கே வன்முறை கூடாது என்ற ரீதியில் பேசும்போது, லஞ்சம் வாங்கியவருக்கும் மனைவி மக்கள் எல்லாரும் இருப்பார்கள் தானே. அவரைக் கொலை செய்வதன் மூலம் அந்த மனைவியையும் மக்களையும் சேர்ந்து தானே தண்டிக்கிறார் என்று வாதம் செய்தார் அந்த மாணவி. சரியான வாதம் போலத்தான் தோன்றியது.

அதற்கு பதிலடி கொடுத்தார் ஒருவர். 'அவன் லஞ்சப் பணத்துல வாங்குன சேலையைக் கட்டும்போது தப்புன்னு தெரியலைல? அவன் லஞ்சப் பணத்துல நகை வாங்கி கழுத்துல மாட்டும்போது குளு குளுன்னு தான இருந்தது? அப்படின்னா அவங்க எல்லாம் அவன் சாகுறதையும் ஏத்துக்கிட்டு தான் ஆகணும்' அப்பிடின்னு.. நீங்க என்ன சொல்றிங்க?

Thursday, October 22, 2009

பிதற்றல்கள் - 10/22/2009

ஒருவழியா வேலை ஒழிந்து ஒரு பதிவு இடுவதற்கு நேரம் கிடைத்தது.

கடந்த வாரம் அனைவரும் தீபாவளியைக் கொண்டாடி இருப்பீர்கள். பலகாரம் சாப்பிட்டு, பட்டாசு சுட்டு, சினிமா பார்த்து டாஸ்மாக் போய் என்று. நான் கல்லூரிக்காலம் தொட்டு பட்டாசு மட்டும் வெடிப்பதில்லை.

நான் பிறந்து வளர்ந்தது விருதுநகர் மாவட்டம். விருதுநகர் மாவட்டத்தில்தான் குட்டி ஜப்பான் சிவகாசி இருக்கிறது. இங்கே பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை சிறு வயது முதலே பார்த்து வந்திருக்கிறேன். சின்ன வயதிலேயே தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பாக இந்த வருடம் பட்டாசு வாங்கக்கூடாது என்று நினைப்பேன் பிரசவ வைராக்கியம் போல. தீபாவளிக்கு முதல்நாள் அப்பாவை நச்சரித்து பட்டாசு வாங்கி விடுவேன்.

கல்லூரியில் படிக்கும்போது ஒரு பேச்சாளர் - பெயர் ஞாபகம் இல்லை - குழந்தைத் தொழிலாளர்கள் பற்றி பேச வந்தார். சிவகாசியில் அவர்கள் படும் இல்லல்களைச் சொல்லி தீபாவளிக்கு யாரும் பட்டாசு வாங்காதீர்கள் என்று வேண்டிக்கொண்டார். "பட்டாசுத் திரியில் தீயைப் பற்ற வைக்கும் முன், அந்தத் திரி ஒரு சிறு குழந்தையில் தலையில் இருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். அதன் பின் நீங்கள் பட்டாசு வெடிக்க ஜென்மத்துக்கும் ஆசைப் படமாட்டீர்கள்" என்று அவர் சொன்னதிலிருந்து பட்டாசின் பக்கமே போக முடிவதில்லை.

இப்போது குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்திருப்பதாகக் கேள்விப் பட்டேன். யாராவது தெரிந்தவர்கள் சொல்லவும்.

என் வாழ்க்கையில் மறக்கமுடியாத, மறக்க நினைக்கிற தீபாவளி ஒன்று உள்ளது. அது ரொம்ப பெர்சனல் என்று தங்கமணி சொல்லிவிட்டதால் நீக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

இந்த வருட தீபாவளி என் மகனுக்கு முதல் தீபாவளி. அதனால் தங்கமணி லட்டும் முறுக்கும் செய்தார். என்னாலான உதவியைச் செய்தேன் (சாப்புட்டுப் பாத்து நல்லா இருக்குன்னு சொல்றதுதான்). மகன் எந்த அளவு அனுபவித்தான் என்று தெரியவில்லை.

சமீபத்தில் வலைமனையில் மேய்ந்து கொண்டிருந்த போது பாரதி கிருஷ்ணகுமார் அவர்களது "ராமய்யாவின் குடிசை" ஆவணப்படத்தைப் பற்றி படித்தேன். ஒளிக்காட்சியைத் தேடினேன். எங்கும் கிடைக்கவில்லை. யாராவது லிங்க் இருந்தால் அனுப்புங்கள்.

பாரதி கிருஷ்ணகுமார் பா.கிருஷ்ணகுமாராக இருக்கும் போதிருந்து அவரது பேச்சைக் கேட்டிருக்கிறேன். எங்கள் கல்லூரியில் என் துறைத் தலைவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்ததால், மாதம் ஒரு த.மு.எ.ச பேச்சாளரை அழைத்து வருவார். அதில் அதிகம் வந்தது பா.கிருஷ்ணகுமார். இவர் மயக்கும் வகையில் பேசக்கூடிய வல்லமை படைத்தவர். பாண்டியன் கிராம வங்கியில் பணியில் இருந்தார் (இப்போதும் இருக்கிறாரா என்று தெரியவில்லை). எம்.ஏ தமிழ் படித்துவிட்டு எப்படி வங்கி வேலை என்று கேட்டால் வேடிக்கையாக, "நானாவது தமிழ் படிச்சேன். எனக்கு இந்தப் பக்கம் டெஸ்ட் ட்யூப் பிடிச்ச கை, இந்தப் பக்கம் தவளையை அறுத்த கை, ஆனா மூணு கையும் இப்போ கணக்கு போட்டுடு இருக்கு" என்று சொல்வார்.

மதுரையில் தமுக்கம் மைதானத்தில் த.மு.எ.ச கலை இலக்கிய இரவில் இவர் பேசிய பேச்சில் மயங்கி, "பா.கிருஷ்ணகுமார் சார் பேசறத பாத்து எனக்கும் அவர் மாதிரி பேசணும்னு ஆசையா இருக்கு. கண்டிப்பா நல்லா பேசப் பழகி, அடுத்த வருசம் இதே த.மு.எ.ச மேடையில நல்லா பேசுவேன்" என்று சொன்ன பிரபலம் நடிகை ரேவதி.

வாமனன் படம் பார்த்தேன். ஈ மெயிலில் பெரும் சுற்று சுற்றிய சால்ட்டட் காஃபியை அப்படியே உபயோகித்து இருக்கிறார்கள். படத்தின் கிளைமேக்ஸ் "Enemy of the State" படத்திலிருந்து அப்படியே உருவி இருக்கிறார்கள். மணலைக் கொட்டி அதில் உருவங்கள் வரைந்து அதன் மூலம் காதலை சொல்வது நல்ல காட்சி.

கனடா செல்ல சந்தர்ப்பம் வாய்த்தது. வழக்கமாக காலை 9:00 மணிக்கு புறப்பட்டு ஒரு 12:30 மணி போல ஸ்கார்பரோ அஞ்சப்பர் ரெஸ்டாரண்ட்டில் போய் மதிய உணவு உண்டுவிட்டு எக்லிங்க்டன் சாலையில் உள்ள யாழ் சந்தையில் பலசரக்கு வாங்கிக் கொண்டு 5:30 மணி போல வீட்டுக்குத் திரும்பி விடுவது வழக்கம். இந்த முறை தங்கமணியின் மாமா, அத்தை மற்றும் அவருடன் பணியாற்றும் நான்கு பேர் வேலை நிமித்தமாக கனடா-அமெரிக்கா வந்திருந்தனர். அவர்களை டொரோண்ட்டோவிலிருந்து ரோச்சஸ்டர் அழைத்து வருவதே என் கனடா விஜயத்திற்குக் காரணம்.

போனது போய் விட்டோம் யாழ் சந்தையில் எதாவது வாங்கி வரலாம் என்று போனேன். சாமான்களை எடுத்துக் கொண்டு பில் போடச் சென்றேன். $18 சொச்சம் ஆனது. கிரடிட் கார்ட் வாங்க மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள். டெபிட் கார்ட் மட்டும்தான் வாங்குவோம் என்றார்கள். அதுவும் வேலை செய்யவில்லை. சரி ஏ.டி.எம் சென்று எடுக்கலாம் என்று போனால் என் ஏ.டி.எம் அங்கே வேலை செய்யவில்லை. எச்.எஸ்.பி.சி வங்கியில் தானே கணக்கு வைத்திருக்கிறோம் என்று எச்.எஸ்.பி.சி போனால் அங்கே ஏ.டி.எம் வேலை செய்யவில்லை. சரி வங்கிக்குள் சென்று எடுக்கலாம் என்று போனால் அமெரிக்க கணக்குக்கு கனடாவில் பணம் எடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள் - என்ன கணினி மயமாக்கலோ தெரியவில்லை -. கடைசியில் கையில் இருந்த பத்து டாலருக்கு என்ன கிடைக்குமோ அதை மட்டும் வாங்கிக் கொண்டு வந்து விட்டேன்.

பாடம்: கனடா போனால் கனடியன் டாலர் இல்லாமல் போகாதே.

பிறகு பார்ப்போம்.

Wednesday, October 14, 2009

ஆல்ப்ஸ் கொ(ம)லைக் காற்று வந்து..

சர்வேசன்500 - நச்னு ஒரு கதைப் போட்டிக்காக


எத்தனை நாள் ஆசை. பிரபுவும் மந்திராவும் பனிமலையில் "ஆல்ப்ஸ் மலைக் காற்று வந்து நெஞ்சைத் தீண்டுதே" என்று பாடியதைப் பார்த்ததில் இருந்து அந்த ஆல்ப்ஸ் மலையைப் பார்த்துவிட வேண்டும் என்ற என் ஆசை இன்று நிறைவேறிவிட்டது.



பனிக்காற்று முகத்தில் வந்து அடித்தது. மூச்சை இழுத்து நுரையீரல் முழுக்க  நிரப்பிக்கொண்டேன். அந்த இடமே ரம்மியமாக இருந்தது. கழுத்தில் புதிதாக வாங்கிய டெலி-ஜூம் பொருத்திய எஸ்.எல்.ஆர் காமிரா தொங்கிக்கொண்டிருந்தது.


என்னால் பெருமைப் படாமல் இருக்க முடியவில்லை. எத்தனை பேருக்கு வாய்க்கும் இப்படி ஒரு சந்தர்ப்பம்?. பார்க்கும் இடமெல்லாம் அழகாக இருந்தது எதைப் படம் பிடிப்பது எதை விடுவது என்று தெரியவில்லை.


தூரத்தில் ஒரு நாய் எதையோ முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. காமிராவில் கண் பொருத்தி ஜூம் செய்தேன். நாய் முகர்ந்து பார்க்கவில்லை. செத்துக் கிடந்த ஏதோ ஒரு விலங்கின் சதையை கடித்து இழுத்துக் கொண்டிருந்தது. இன்னும் ஜூம் செய்தேன். நாயின் முகம் க்ளோஸ்-அப்பில் பயங்கரமாக இருந்தது. அதன் பற்களின் இடையில் அந்த விலங்கின் சதைகள், கடைவாயிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டு.. அப்பப்பா.. அந்த நாயின் கண்களில் ஒரு குரூரம் கொப்பளித்ததை என்னால் உணர முடிந்தது. மேலும் யோசிக்காமல் காமிராவைக் கிளிக்கினேன். நல்ல ஷாட். ஏதோ புலிட்சர் விருது வாங்கியதைப் போல பெருமிதமடைந்தேன்.



அப்போது தான் அவர்களைப் பார்த்தேன். மூன்று பேரும் சற்று தூரத்தில் இருந்தனர்.ஓரு பெண், இரண்டு ஆண்கள். அவர்களை என்னால் பார்க்க முடிந்தது. ஆனால் என்ன பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. இப்போது ஒருத்தன் கையில் ஒரு துப்பாக்கி முளைத்திருந்தது. இன்னொரு பெண்ணையும் ஆணையும் துப்பாக்கி வைத்திருப்பவன் மிரட்டிக் கொண்டிருந்தான்.


துப்பாக்கி வைத்திருந்தவன் எட்டி அந்தப் பெண்ணின் தலை முடியைப் பற்றினான். அவள் தலையில் துப்பாக்கியின் முனையைப் பொருத்தினான். நான் என் கேமிரா வழியாகப் பார்க்கத்துவங்கினேன்.


துப்பாக்கி வைத்திருந்தவன் பார்க்க ஃப்ளெட்சர் கமல் மாதிரி இருந்தான். அவன் கையில் சிக்கி இருந்தவள் ஒரு சாயலில் சாண்ட்ரா புல்லக் மாதிரியும் இன்னொரு சாயலில் ஜூலியா ராபர்ட்ஸ் மாதிரியும் தெரிந்தாள். வலி தாங்காமல் கதறுவது ஊமைப் படம் போல தெரிந்தது. இன்னொரு ஆணும் கதறிக் கொண்டிருந்தான்.


ஃப்ளெட்சர் கையில் இருந்த துப்பாக்கியின் பின் பக்கத்தால் சாண்ட்ரா புல்லக்கின் தலையில் ஓங்கி அடித்தான். அந்த தங்க நிற கூந்தல் சடுதியில் சிவப்பானது..


இன்னொரு ஆண் கோட்டுக்குள் கை விட்டு எதோ ஒரு சிறிய பொட்டலத்தை எடுத்து ஃப்ளெட்சரின் கையில் கொடுத்தான். வாங்கிய ஃப்ளெட்சர் சாண்ட்ராவின் தலையிலிருந்து கையை எடுக்காமலே அதில் இருந்த ஏதோ ஒரு பொருளை சரி பார்த்தான். பார்த்ததில் திருப்தி அடைந்திருக்க வேண்டும். அவன் உதடுகள் கோணியது. சிரிக்கிறான் என்று நினைக்கிறேன். அந்த பொட்டலத்தை தன் கோட்டுப் பாக்கெட்டுக்குள் வைத்தான்.


துப்பாக்கி வைத்திருந்த கையை உயர்த்தி துப்பாக்கியின் பின் பக்கத்தால் இன்னொரு ஆணை அடித்தான். பலமான அடியாக இருந்திருக்க வேண்டும். எங்கோ மரத்தில் கோடரி இறங்கும் போது கேட்பது போல "சொத்" என்ற சத்தம் எனக்கே கேட்டது. அந்த இன்னொரு ஆண் கீழே விழுந்தான்.


சாண்ட்ராவின் கூந்தலில் இருந்து கையை எடுக்காமல் காலை உயர்த்தி அவள் வயிற்றில் எத்தினான். அவள் வலி பொறுக்க முடியாமல் சுருண்டு விழுந்தாள்.


ஃப்ளெட்சரின் முகத்தில் ஒரு குரூரம். துப்பக்கியால் இரண்டு பேரையும் சுட்டான். ஆளுக்கு இரண்டு குண்டுகள் பரிசளித்த பின்னர், சுற்றிப் பார்த்தான். நான் தயங்காமல் சில ஃபோட்டோக்கள் எடுத்திருந்தேன். அவன் இப்போது என்னைப் பார்த்து விட்டான். நான் இன்னும் சில கிளிக்குகள் கிளிக்கிய பிறகுதான் அவன் என்னைப் பார்த்ததை கண்டு பிடித்தேன். அவன் துப்பாக்கியை என்னை நோக்கி நீட்டினான்.


எனக்கு அப்போது தான் உறைத்தது. தடாரென்று கீழே விழுந்து தவழ்ந்து மரங்கள் அடர்ந்த பகுதியை நோக்கி விரைந்தேன். அவன் இரண்டு குண்டுகளை மரத்தின் மீது வீணாக்கினான்.


மரங்கள் அடர்ந்த பகுதிக்குள் வந்ததும் எழுந்து ஓட ஆரம்பித்தேன். அவன் ஓடி வரும் சத்தம் கேட்டது, அல்லது கேட்டது போல இருந்தது. பின்னால் திரும்பிப் பார்க்க தைரியம் இல்லை.. எந்தப் பக்கம் ஓடுகிறேன் என்றே தெரியவில்லை. உயிர் பயம் மட்டுமே மனதில். காமிராவை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டேன்.


திரும்ப திரும்ப ஒரே இடத்தில் ஓடுவது போல இருந்தது. ஒரு வழியாக மரங்கள் அடர்ந்த பகுதியில் இருந்து வெளியே வந்தேன். அங்கே ஒரு சிதிலமான கட்டிடம் ஒன்று இருந்தது. அதன் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன். கதவைத் தாளிட்டேன். உள்ளே இருட்டாக இருந்தது. கண்கள் இருட்டுக்குப் பழகவும் அந்த கட்டிடம் ஒரு சிற்பக்கூடம் என்பதைக் கண்டு கொண்டேன்.


வெளியே ஏதோ சத்தம் கேட்டது.


'ஃப்ளெட்சர் வந்து விட்டானோ?'


அந்தக் கட்டிடத்தின் பின் பக்கத்தில் சில அலமாரிகள் இருந்தன. அவற்றில் ஒன்றின் பின்னால் ஒழிநது கொண்டேன். என் இதயம் துடிப்பது எனக்கே கேட்டது. மூச்சு விடும் ஓசை ஒரு ரைஸ் மில் ஓடுவது போலக் கேட்டது. உயிர் பயம் என்ன என்பதை உணரவைத்துக் கொண்டிருந்தான் ஃப்ளெட்சர்.


கதவை யாரோ தள்ளுவது தெரிந்தது.

'திறக்க முயற்சி செய்கிறார்கள்'.


சில பல தள்ளுகளுக்கு அல்லது உதைகளுக்குப் பிறகு தாழ்ப்பாள் விட்டுக்கொடுத்துவிட்டது. கதவைத் திறந்து உள்ளே வந்தான் ஃப்ளெட்சர். அவன் நின்ற இடம் வெளிச்சமாக் இருந்தது. நான் இருக்கும் இடம் கும்மிருட்டு. அதனால் அவன் என்னைப் பார்க்க வாய்ப்பு இல்லை.

அந்த இருட்டைக் கிழித்துக் கொண்டு பார்க்க அவன் முயற்சி செய்வது அவனின் இடுங்கிய கண்களில் இருந்து தெரிந்தது. என் இதயம் துடிப்பது எனக்கே கேட்டது. மூச்சு விடும் ஓசை கூட கேட்டுவிடக்கூடாது என்று என் விரலை பற்களுக்கு இடையில் கொடுத்து இறுகக் கடித்துக் கொண்டேன்.

என் நினைவுக்கு வந்த எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொண்டேன். எப்படியாவது என்னை இவனிடமிருந்து காப்பாற்றிவிடுங்கள். எல்லாக் கோயில்களுக்கும் நடந்தே வருகிறேன்.

அந்த குறுகலான இடைவெளியில் என்னை நுழைத்துக் கொண்டேன். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்தேன். சிறிது நேரம் பார்த்து விட்டு இங்கு யாரும் இல்லை என்று நினைத்துக் கொண்டு திரும்பினான்.

"கண்கள் இரண்டால், உன் கண்கள் இரண்டால்" என்று என் செல்போன் நேரம் கெட்ட நேரத்தில் ஒலித்தது. வேக வேகமாக பைக்குள் கையை விட்டு போனை வெளியே எடுத்து பச்சைப் பொத்தானை அழுத்தி போனை காதுக்குக் கொடுத்தேன்.

"ஹலோ"
"டேய் எரும. பதிவர் சந்திப்புக்கு போலாம் வான்னு சொல்லிட்டு இன்னும் தூங்கிக்கிட்டா இருக்க?  கதவத் திற, வெளியதான் நிக்கிறேன்"

Monday, October 12, 2009

க்ரைம் கதை மன்னனின் சொதப்பல்கள்

க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் விகடனில் ஒரு புதிய தொடர்கதை தொடங்கியிருக்கிறார். அவரது கதைகளின் பெரிய ரசிகன் நான். வர வர அவரது கதைகளில் லாஜிக் இல்லாமல் போய் விட்டதா, இல்லை, உலக அனுபவம் எனக்கு கொஞ்சம் வந்து விட்டதால் எனக்கு இப்படி தோணுகிறதா என்று தெரியவில்லை.

இந்த வாரம் வெளிவந்த பாகத்தில் நான் பார்த்த சொதப்பல்கள்:

காரை விரட்டினாள் ஃப்ளோரா. ரோட்டின் நான்கு டிராக்குகளில் அதிவேக டிராக்கைத் தேர்ந்தெடுத்தாள். 140 மைல் வேகத்தில் பென்ஸ் வீல்கள் சுழன்றன

நியூ யார்க் மாகாணம் முழுவதுமே அதிக பட்ச வேகம் 65 மைல். அதில் 140 மைல் வேகத்தில் போனால் என்ன ஆகும்?

''அதற்குக் காரணம், இங்குள்ள மக்கள்தொகை. அது தவிர, நீக்ரோக்களின்...'' என்று ஃப்ளோரா பேசிக்கொண்டு இருக்கும்போதே விஜேஷின் செல்போன் ரிங்டோனை வெளியிட்டது.

அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களை நீக்ரோக்கள் என்று சொல்லும் வழக்கம் 1960தோடு போய் விட்டது. அந்த வார்த்தையை உபயோகிப்பது பெரும் குற்றமாகக் கருதப் படுகிறது. அப்படி இருக்க பெரிய எழுத்தாளர் இதை உபயோகப்படுத்தியிருப்பது வேதனை அளிக்கிறது.

இதையெல்லாம் விட பெரிய (என்னை இந்த பதிவை வெளியிடத் தூண்டிய) விசயம் இந்த தொடரை வைத்து ஆனந்த விகடன் ஒரு எஸ்.எம்.எஸ் போட்டியை நடத்துகிறது. அதில் இந்த வாரத்துக்கான கேள்வி

'கிரைம் சிட்டி' என்பது எது? 1. நியூயார்க் 2. பாரீஸ் 3. கோவை, AVCRIME என்று டைப் செய்து, ஒரு ஸ்பேஸ் விட்டு, சரியான விடைக்குரிய எண்ணையும் டைப் செய்து, 562636-க்கு உடனே எஸ்.எம்.எஸ். பண்ணுங்க!


இந்தக் கேள்வியைப் படிக்கும் என் பெற்றோர்களோ இல்லை உறவினர்களோ நான் வசிக்கும் நியூ யார்க் (நான் நியூ யார்க் மாகாணத்தில் வசித்தாலும் நியூ யார்க் நகரத்தையும் மாகாணத்தையும் குழப்புபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்) பற்றி என்ன நினைப்பார்கள்?

5,00,000க்கு மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் வசிக்க பாதுகாப்பான நகரங்களில் நியூ யார்க் 5 வது இடத்தில் இருக்கிறது. இப்படிப்பட்ட நகரத்தை கிரைம் சிட்டி என்று அழைப்பது சரியா?

நல்ல வேளை என் மனைவிக்கு திருப்பாச்சி விஜய் மாதிரி அண்ணன் இல்லை. அப்புறம் அவர் வேறு நியூ யார்க் குற்றங்களை ஒழித்துவிட்டுதான் மறுவேலை என்று அருவாளைத் தூக்கிக்கொண்டு வந்து விடுவார்.

Sunday, October 11, 2009

வெட்னஸ்டே - உன்னைப் போல் ஒருவன் ஆறு வித்தியாசங்கள்

Sl.Noவெட்னஸ்டேஉன்னைப் போல் ஒருவன்
1இது இந்திப் படம்நிறைய தமிழ்க்காரங்கோ வேசம் கட்டி இருக்குறதால இது தமிழ்ப் படம்னு நினைக்கிறேன். ஆனாலும் ரொம்ப நேரம் இங்கிலீசுலயே பேசிக்கிறாங்கோ. அப்பப்போ தமிழ் வருது. பின்னால இந்தி கூட பேசுறாங்கோ. போலிஸ்காரர் மலையாளத்துல பேசுறாரு.ஒண்ணியும் பிரியல.
2இந்தப் படத்துல தீவிரவாதிங்க நாலு பேருமே முஸ்லிம்இந்தப் படத்துல மூணு பேரு முஸ்லிம். இன்னொருத்தர் இந்து. ஆனா அவுரு தீவிரவாதியில்ல. தீவிரவாதிங்களுக்கு குண்டு சப்ளை பண்றவரு. ஆக தீவிரவாதிங்க எல்லாமே இந்தப் படத்திலயும் முஸ்லிம். வித்தியாசம்? இங்க மூணு பேருதான் தீவிரவாதிங்கோ
3இந்தப் படத்துல காமன் மேனா நடிச்சவரு நம்ம நாசர் மாதிரி அல்லா வேசமும் போடுவாராம்பா. இவரு வில்லனாக்கூட பல படத்துல நடிச்சிருக்காரு. அதுனால இவர் குண்டு வச்சிருக்கேன்னு சொல்லும்போது மெய்யாலுமே வச்சிருப்பார்ன்னு தோணுது. கடைசியில தீவிரவாதிங்க எல்லாம் குண்டு வெடிச்சி சாகும்போது "இன்னாடா இது" அப்பிடின்னு ஒரு அதிர்ச்சி வருதுஇந்தப் படத்துல நடிச்சவரு ஒலக நாயகன். இவுரு கூட வில்லனா வேசங்கட்டியிருக்காரு. ஆனா அந்தப் படத்துல ஹீரோவாவும் இவரே வேசம் கட்டியிருப்பாரு. அதுனால இவரு குண்டு வச்சிருக்கேன்னு போனு பண்ணும்போது இந்த மனுசன் எது செஞ்சாலும் ஒரு ரீஜன் இருக்கும்பான்னு தோணுது. அதுனால கட்சில தீவிரவாதிங்க பாம் வெடிச்சு சாகச்சொல்லோ "நாஞ் சொல்லல்ல" அப்பிடின்னு கூவத்தோணுது
4இதுல குண்டு வச்சிருக்கிறவரு இன்னா மதம், இன்னா சாதின்னு கட்சி வரைக்கும் தெரியாத மாதிரியே காட்டியிருக்காங்கோ.இதுலயும் குண்டு வச்சிருக்கிறவரு இன்னா மதம்னு தெரியலயாங்காட்டியும், இவரு முஸ்லீமு இல்லைன்னு மட்டும் தெரியுது.
5இதுல தீவிரவாதியா வர்றவன் நான் இன்னாத்துக்கு தீவிரவாதியானேன்னு சல்லியடிக்காம ஜிஹாத்து பிஹாத்துன்னு தத்துவம் பேசுறாரு. அதோட அந்த முஸ்லிம் போலிஸ்காரன அது இன்னா வாஷு, அக்காங்க் பிரயின் வாசு செய்யப்பாக்குறான்இதுல தீவிரவாதியா வர்றவன் சொம்மா இருந்தாலும் பரவாயில்ல. தான் தீவிரவாதியானதுக்கு ஒரு காரணம் சொல்றாம்பாரு. அதுக்கு காமன் மேன் சொன்ன காரணமே தேவலை
6இந்தப் படத்துல காமன் மேன் பேசினது பாம்பேக்காரனா இருந்து பாத்தா மனசுல டக்குனு தச்சிச்சிப்பா. இவன மாதிரி கஷ்டப்பட்டவன் பல பேரு இருந்திருப்பான்ல பாம்பேல. அதுனால அவங்களுக்கு டச்சிங்க்கா இருந்திருக்கும்.இந்தப் படத்துல காமன் மேன் சொன்ன விசயமெல்லாம் வேற ஊர்ல நடந்தது. அதுனால ஒட்டல. இத்த அவரே படத்துல சொல்லிடுராரு."பாம்பேல குண்டு வெடிச்சா டிவில பாத்து உச்சு கொட்டிட்டு நம்ம வேலைய பாக்க போயிடுவோம். ஏன்னா அவன் வேற மொழி பேசுறவன்." ஆமா 60 மைலு தூரத்துல என் மொழி பேசுரவன் செத்துக்கிட்டு இருக்கான் அதைப் படிச்சிட்டே நம்ம வேலையப் பாத்துக்கினு போயிட்டு இருக்கோம். ரெண்டாயிரம் கிலோ மீட்டரு தூரத்துல இருக்குறவன் என்ன ஆனா எனக்கின்னான்னு போறவனப்பத்தி யாரு கவலப்பட்டா?


பின் குறிப்பு 1: மூன்றாவது மனைவி, 16 வயசு என்று தீவிரவாதி பேசிய வசனத்தையும், அதை கேலி செய்யும் இந்துவின் வசனத்தையும் வைத்து இது சிறுபான்மை இஸ்லாமியர்களை பெரும்பான்மை இந்துக்கள் செய்யும் எள்ளல் என்ற பார்வை பலருக்கு விழுந்துவிடும் அல்லது விழுந்துவிட்ட காரணத்துக்காக இரா.முருகனின் சார்பில் அனைத்துலக இஸ்லாமிய நண்பர்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்தக் காட்சி இத் திரைப்படத்தில் கண்டிக்கத்தக்கது. இதையெல்லாம் சென்சாரில் வெட்டமாட்டார்களா?

பின் குறிப்பு 2: பெரும்பான்மையானவர்கள் இத்திரைப்படத்தை பாராட்டியும் திட்டியும் எழுதியிருந்தாலும் ஒரு இஸ்லாமியரின் நியாயமான விமர்சனம் இங்கே.

Sunday, October 4, 2009

களவு - சர்வேசன்500 - நச்னு ஒரு கதைப் போட்டிக்காக

நான்காவது அடகுக் கடையிலிருந்து வெளியே வந்தான் அவன். அவன் கையில் பாதுகாப்பாக சுருட்டப்பட்ட ஒரு மஞ்சள் பை. அவன் முகத்தில் கலக்கமும் களைப்பும் கூடிக் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தன.

சேகரின் கண்கள் அவனையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தன். கையில் வைத்திருந்த டீக் கோப்பையை உதடுகள் உரிஞ்சினாலும் எண்ணம் மஞ்சப் பைக்காரனை சுற்றியே வந்தது.

களைத்துப் போன அவன் டீக்கடைக்கு வந்தான்.

"ஒரு டீ போடுங்கண்ணே" என்று சொல்லிவிட்டு மஞ்சப்பையை கக்கத்தில் இடுக்கிக்கொண்டு சேகருக்கு அருகில் இருந்த மர பெஞ்சில் அமர்ந்தான்.

"என்னப்பா! நகைய அடகு வாங்க மாட்டேங்குறாங்களா?"

திடுக்கிட்டு திரும்பினான். "ஆமா. உங்களுக்கு எப்பிடி தெரியும்?"

"நான் அப்போலருந்து உன்னப் பாக்குறேன். சுத்தி சுத்தி வர்ற. அடகு வாங்கியிருந்தாத்தான் ஊருக்குப் போயிருப்பியே?" குரலைத் தாழ்த்தி, "என்ன திருட்டு நகையா?"

"அதெல்லாம் இல்ல. என் முதலாளியம்மா குடுத்து வுட்டாக"

"சரி நம்புறேன். நம்ம கிட்ட ஒருத்தரு இருக்காரு. அவரு எந்த நகைன்னாலும் வாங்குவாரு. கொஞ்சம் காசு கொறச்சு குடுப்பாரு. உன்ன அங்க கூட்டிட்டு போகவா?"

அவன் சற்றே யோசித்தான்.

"யோசிக்கிறாப்புல இருக்கு. அது சரி. நம்ம ஊருக்காரன் மாதிரி இருக்கேன்னு ஹெல்ப்பு பண்ணலாமுன்னு பாத்தேன். உனக்கு இஷ்டம் இல்லைன்னா போ"

சேகர் கடைசி வாய் டீயை சர்ரென்று உறிஞ்சிவிட்டு காலி கிளாசை டேபிளின் மேல் வைத்தான். "ஆனா ஒண்ணு. நீ எத்தன கடை ஏறினாலும் உன் நகையை ஒருத்தனும் அடகு வாங்க மாட்டானுங்க" சொல்லிவிட்டு நடையைக் கட்டினான்.

இவனுக்கு லேசாக பயம் வந்துவிட்டது. டீயைக் குடித்து விட்டு அடுத்த சேட்டுக் கடையை நோக்கி சென்றான். இவன் உருவத்தைப் பார்த்துவிட்டு யாரும் நகையை வாங்க மறுக்கிறார்கள். இன்னும் இரண்டு கடைகளிலும் அதே பதில். தானாக வந்த அந்த புரோக்கரையும் விட்டு விட்டோம். இனி என்ன செய்வது? பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. மறுபடியும் அதே டீக்கடை.

"இன்னாபா நகையை ஒர்த்தனும் அடகு வாங்க மாட்டேன்றானா?"

கைலி கட்டிக் கொண்டு ஒரு கோடு போட்ட டி ஷர்ட் போட்டவன் அருகே அமர்ந்திருந்தான். அவன் கையில் பீடி புகைந்தது.

"ஆமாங்க"

"என் கைல ஒருத்தன்கீறான். அவன் அல்லா நகையும் வாங்குவான். கூட்டிட்டுப் போகவா?"

இவனையும் விட்டால் அப்புறம் ஒரு பைசா தேறாது என்று தோணியது.

"சரிங்க. எம்புட்டு தருவாக?"

"ஆறு வட்டி. கிராமுக்கு ஆறு நூறு. எனக்கு அம்பது கமிசன். சரியா?"

மனதுக்குள் கணக்குப் போட்டான். "சரிங்க. மொத்தமா விக்கிறதுன்னா?"

"கிராமுக்கு எட்டு நூறு. என் கமிசன் அதே தான்"

"சரி கூட்டிட்டுப் போங்க"

எழுந்தான். ஒரு ஆட்டோ கூப்பிட்டான்.

"உக்காரு"

இருவரும் உட்கார்ந்ததும் ஆட்டோ கிளம்பியது. "எம்பேரு அமீரு. உன் பேரு என்ன?"

"சம்முவம்"

"ஏது நகை. திருட்டா?"

"அதெல்லாம் இல்ல"

"பொய் சொல்லாத. உண்மைய சொல்லு. பொய் சொன்னா ஒண்ணும் கிடைக்காது"

சம்முவம் எச்சில் விழுங்கினான். "அது வந்து..."

"அட சொம்மா சொல்லும்மா. ரோசனை பண்ணாத"

"ஆமாங்க. வேல செய்யிற வீட்டுல கை வச்சுட்டேன். காசு கைக்கு வந்ததும் வட நாட்டு பக்கம் போயிடலாமுன்னு இருக்கேன்"

"நான் வாங்கித் தர்றேன்"

ஆட்டோ நின்றது. இருவரும் இறங்கினார்கள். அமீர் ஆட்டோவுக்கு பணம் கொடுத்து அனுப்பினான்.

அது ஒரு பழைய ஓட்டல் மாதிரி இருந்தது. வெளியே வாகனங்கள் எதுவும் இல்லை. ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லாத தெரு. சம்முவத்துக்கு லேசாக பயம் எட்டிப் பார்த்தது.

"வா உள்ள போலாம்" இருவரும் உள்ளே நுழையும் முன் ஒரு உருவம் அவர்களை மறித்தது.

"யேய். இவன நாந்தான் முதல்ல பாத்தேன். நீ கமிசன் அடிக்கப் பாக்குறியா?" சேகர் அவர்கள் இருவருக்கும் குறுக்காக கையை வைத்துக் கொண்டு நின்றிருந்தான்.

"இத்த வேற யார் கைலயாவது போய் சொல்லு. நான் பேசி இட்டாந்திருக்கேன்"

"அவன்கிட்ட வேணும்னா கேளு. நான் தான் முதல்ல பேசினேன். நீ நகந்துக்கோ. அது என் கிராக்கி"

சம்முவம் சும்மா இருந்திருக்கலாம். "ஆமாங்க அவர் தான் பேசுனாரு. நான் அப்போ அவர பெருசா எடுத்துக்கல. நீங்களும் சொல்லவுந்தான்.."

சேகர் அமீரைப் பிடித்து தள்ளினான். "அதான் சொல்லிட்டான்ல. நீ வழியப் பாத்துட்டுப் போ"
பையிலிருந்து ஒரு ஐம்பது ரூபாய்த்தாளை அமீரிடம் விசிறினான்.

"ஆட்டோவுக்கு குடுத்ததுக்கு வச்சிக்கோ". சம்முவத்தின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

அது ஒரு பழைய ஓட்டல் தான். மர பெஞ்சிகள் போடப்பட்டிருந்தன. ஒரு மூலையில் ஒருவன் பரோட்டா தின்று கொண்டிருந்தான். முண்டா பனியன் போட்ட ஒருவன் அடுப்புக்கு அந்தப் பக்கம் இருந்து தோசை ஊற்றிக் கொண்டிருந்தான். வேறு யாரும் இல்லை.

"சகா. தம்பி கொஞ்சம் நகை வச்சிருக்காப்ல.." சம்முவத்திடம் திரும்பி "அடகா, விக்கணுமா?"

"விக்கனுமுங்க" சம்முவம் பயந்த குரலில் சொன்னான்.

"எத்தினி கிராமு?" சகா கேட்டான்.

"தெரியலிங்க"

"திருட்டு நகையா? நீதான் திருடினன்னு தெரியுமா?"

"தெரியாதுய்யா. நகை காணாம போனத இன்னும் பாத்திருக்க மாட்டாய்ங்க"

"சரி குடு. பாப்போம்." பையை வாங்கினான். தோசையை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவனின் இலையில் வைத்துவிட்டு பையைத் தூக்கி கையால் எடை பார்த்தான்.

"அம்பது அறுவது சவரன் தேறும்போல இருக்கே? ஒரிஜினல் தங்கமான்னு பாக்கனும்"

பைக்குள் கை விட்டு ஒரு நகையை உருவினான்."பாத்துட்டு வர்றேன்" பையை பின்னாலிருந்த ஜன்னலின் மேல் வைத்து விட்டு உள்ளே போனான்.

அமீர் உள்ளே வந்தான். "தோ பாரு சேகரு. இது என்னோட கிராக்கி. நீ வந்த வழியா போயிரு"

"போடாங்க.. நாந்தான் முதல்ல பேசினேன்னு சொல்றேன். நீ என்ன? போ போ"

"சேகரு நீ அடிக்கடி என் வழியில குறுக்க வர்ற. நா அல்லா நேரமும் போயிக்கினே இருக்க மாட்டேன் ஆமா"

"யேய் என்னடா செய்வ? ரொம்ப மிரட்டுர"

"சேகரு" அமீரின் குரல் தடித்திருந்தது. அமீரின் கையில் இப்போது ஒரு கத்தி மின்னியது.

"தோடா. போடாங்க. நான் அருவாளே பாத்திருக்கேன். இவரு கத்தி காட்டுறாரு"

"சேகரு உன்ன விட்டேனா பாரு" என்றவாறு சேகரின் மீது பாய்ந்தான் அமீர். அமீரை எதிர்பார்க்கவில்லை சேகர். ஆனாலும் லாவகமாக விலகினான். பாய்ந்து வந்த அமீரின் கையைப் பிடித்தான். அமீர் பலவந்தமாக கையை உதறினான். அமீரின் வேகத்தை எதிர்பார்க்காத சேகரின் பிடியிலிருந்து அமீரின் கை வழுகியது. கையை ஓங்கி சேகரின் வயிற்றை நோக்கி கத்தியைப் பாய்ச்சினான். மறுபடியும் ஒரு பயிற்சி பெற்ற சண்டைக்காரனின் லாவகத்துடன் அமீரின் கையைப் பற்றினான் சேகர். இப்போது இருவரும் ஒருவர் மீது ஒருவர் விழுந்து புரண்டனர். சம்முவம் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இருவருக்கும் குறுக்கே பாய்ந்தான். "சண்ட போடாதீங்க. ரெண்டு பேருக்கும் கமிசன் குடுக்குறேன்" என்று கத்தினான். அங்கே ஒரே களேபரமாக இருந்தது. யார் மீது யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

"அம்மாஆஆஆஆஆஆஆ" என்று அமீர் பெரிதாகக் கத்தினான். சேகரும் சம்முவமும் விலகினர். அமீரின் நெஞ்சில் ஒரு கத்திக் குத்து இருந்தது. ரத்தம் வெள்ளமாக வந்தது. சம்முவத்தின் கையில் இருந்த கத்தியில் ரத்தம். "அய்யோ" என்று அலறி சம்முவம் கத்தியைக் கீழே போட்டான்.

"அடப்பாவி. குத்திட்டியேடா?" சேகரின் கண்களில் அதிர்ச்சி. அமீர் துடித்து அடங்கினான்.

"அய்யோ கொலை கொலை" ஓரமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் கத்தியபடி வெளியே ஓடினான்.

"நகை விக்க வந்த எடத்துல இப்பிடி ஒரு கொலை பண்ணிப்புட்டியே? வா இங்கருந்து ஓடிடுவோம்"

"என்ன அங்க ஒரே சத்தம்?" உள்ளே இருந்து சகாவின் குரல் கேட்டது.

"சகா வந்தா உன்ன சும்மா விடமாட்டான். ஓடு ஓடு" என்று சேகர் சம்முவத்தை இழுத்துக் கொண்டு வெளியே ஓடினான்

"நக" என்று சம்முவம் ஓடிக்கொண்டே கேட்டான்.

"ஒனக்கு உயிர் முக்கியமா? நக முக்கியமா? நக வேணுமுன்னா நீயே உள்ளார போயி எடுத்துக்க" என்று அவன் கையை உதறி விட்டு சேகர் ஒரு சந்துக்குள் ஓடி மறைந்தான்.

சம்முவத்துக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரு நிமிடம் அந்த ஓட்டலுக்கு வெளியே நின்றிருந்தான். 'உள்ளே போய் நகையை எடுக்கலாமா' என்று அவன் மனதில் லேசாக ஒரு சபலம்.

"அய்யய்யோ அய்யய்யோ! என் ஓட்டல்ல வந்து ஒரு கொல பண்ணிட்டாங்களே? நான் என்ன செய்வேன்" என்று உள்ளே சகா கத்துவது வெளியே கேட்டது. 'இனி உள்ளே போனால் சகா தன்னை கண்டிப்பாக போலிஸில் மாட்டிவிடுவான். நகையும் கிடைக்காது, ஜெயிலுக்கும் போக வேண்டும். பேசாமல் இப்படியே ஓடி விட்டால் உயிராவது மிஞ்சும்' சேகர் போன அதே சந்துக்குள் புகுந்து ஓடினான், எதிர்காலம் இனி எப்படி இருக்கும் என்று தெரியாமல்.

கை கூட கழுவாமல் ஓடிய அவன் நின்றான். ஒரு டீக்கடையில் தண்ணீர் எடுத்து கை கழுவினான். லுங்கியில் கையைத் துடைத்து விட்டு பக்கத்து பெட்டிக் கடையில் சிகரெட் வாங்கிப் பற்றவைத்தான். யாருக்காகவோ காத்திருந்தான்.
ஆட்டோ வந்து நின்றது. சேகர் ஆட்டோவிலிருந்து இறங்கி இவன் கையிலிருந்த சிகரெட்டை வாங்கி ஒரு பப் இழுத்தான். "எப்போ வந்த?"

"இப்போ தான். பட்டிக்காட்டான் போயிட்டானா?"

"பின்னங்கால் பிடதியில பட ஓடிட்டான். இன்னேரம் எங்க போயி நிக்கிறானோ?"

"சரி வா. சகா கடைக்குப் போகலாம்"

இருவரும் சகா கடைக்குள் நுழைந்தார்கள். அங்கே சகாவும் அமீரும் ஆளுக்கு ஒரு க்ளாஸ் கையிலேந்தி உட்கார்ந்திருந்தார்கள்.

"வாங்கடா. இன்னிக்கு நல்ல வேட்டை"


பின் குறிப்பு: இந்தக் கதை எந்த ஆங்கிலப் படத்தின் Inspiration என்று சரியாகச் சொல்பவர்களுக்கு தமிழிஷ் மற்றும் தமிழ் மணத்தில் பத்து ஓட்டுகள் போடப்படும்.

Saturday, October 3, 2009

தேவுடு - சிறுகதை

சுப்ரபாதம் சி.டி ஒலித்துக் கொண்டிருக்க கடூரமான குரலில் உடன் பாடிக் கொண்டிருந்த ராம்பாபுவின் குரல் கேட்டு தூக்கத்திலிருந்து விழித்தேன். நான்.. ரவி சங்கர். பி.இ படித்துவிட்டு சென்னையில் ஒரு உப்புமா கம்பெனியில் சிறிது காலம் ஜாவாவை ஓட்டிக் கொண்டிருந்து விட்டு பின் ஒரு நண்பனின் மூலம் எச்.ஒன்.பி விசாவைப் பெற்று அமெரிக்கா வந்து நேற்றோடு மூன்று வருடம் முடிந்து விட்டது. இந்த மூன்று வருடத்தில் ஆறு காண்ட்ராக்ட்களில் வேலை செய்து விட்டேன். வழக்கமாக முதல் காண்ட்ராக்ட் முடியும் முன்பே அடுத்த அசைன்மெண்ட் ரெடியாக வைத்திருக்கும் நான் இப்போது தான் முதல் முறையாக ஒன்னரை மாதங்களாக பென்ச்சைத் தேய்த்துக் கொண்டிருக்கிறேன்.

ராம்பாபு உப்புமாக் கம்பெனியில் என்னுடன் வேலை பார்த்த ஒரு அக்கட பூமிக்காரன். சென்னையில் படித்து அங்கேயே இரண்டு வருடம் வேலை பார்த்த காரணத்தால் கொஞ்சம் நன்றாகவே தலுங்கு பேசக் கூடியவன். அதனால் அவன் ரூம் மேட்டாக காலம் ஓடுகிறது. இதுவரை அவன் மிளகாய் சாம்பாரை நானும் என் தண்ணி மோர்க்குழம்பை அவனும் ரசிக்கப் பழகிவிட்டோம்.

மற்றபடி நானும் ராம்பாபுவும் நேரெதிர் துருவங்கள். அவன் சுப்ரபாதத்தில் முழித்து மாலை அலுவலகம் விட்டு வந்ததும் விஷ்ணு சகஸ்ஹரநாமத்தை பாராயணம் செய்யவில்லை என்றால் அவன் உயிரோடு இல்லை என்று அர்த்தம். நான் சுயமரியாதைக் குடும்பத்தில் வளர்ந்தவன். சரஸ்வதி பிரம்மனின் நாவில் குடியிருந்தால் அவள் மலஜலம் கழிப்பதெங்கே என்று தொடங்கி ராம்பாபுவை வம்புக்கிழுத்துக் கொண்டே இருப்பேன். வேறு வழியில்லாமல் அவனோடு ரூம்மேட்டாக இருந்து வருகிறேன்.

இன்று வெள்ளிக்கிழமை. திங்கட்கிழமை ஒரு இண்ட்டர்வ்யூ இருக்கிறது. அதற்கு எம்.க்யூ வொர்க் ஃப்ளோ தெரிந்திருக்க வேண்டும். எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியும். திங்கட்கிழமைக்கு தான் இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறதே என்று கிடைத்த டாக்குமெண்ட்டுகளை வைத்து விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருந்தேன். அவ்வப்போது ராம்பாபுவும் உதவிக்கொண்டிருந்தான்.

"ஒரே ரவி. நாளிக்கி பிட்ஸ்பர்க் போவணும். மெமரி இருக்கில்ல?"

"என்ன பிட்ஸ்பர்க்கா? அடேய் எனக்கு மண்டே இண்டர்வ்யூ இருக்குடா"

"அட எண்ணடா இண்டர்வ்யூ? தேவுடுகிட்ட போய் கேட்டுட்டு வந்தா அவர் குடுக்குறாரு இண்ட்டர்வ்யூ"

"எனக்கு பதிலா அவர் போவாரா? அவர் நெத்தில போட்டிருக்குற நாமத்த பாத்தாலே மெரண்டு ஓடிடுவான் வெள்ளக்காரன்"

"டேய் எனிக்கு பர்த்து டே டா. அதுக்கு பிட்ஸ்பர்க் போய் சத்தியநாராயணா பூஜா செய்யணுண்டா"

"பர்த் டேயா. சொல்லவே இல்லை. அடேய். பர்த் டேன்னா நம்ம பக்கத்து பப்க்கு போய் தண்ணியடிச்சுட்டு வந்தா போதுண்டா. பிட்ஸ்பர்க் ஏண்டா போகணும்"

"டேய் இப்பிடி சொல்லாதேடா.யூ ஹாவ் டு கம் வித் மீ.யூ ஆர் த பெஸ்ட் ட்ரைவர். ஐ வில் ப்ரிங்க் த ரெண்ட்டல் கார். ஓக்கே?" என்று கேட்டுவிட்டு பதிலுக்கு நிற்காமல் வேலைக்குப் போய் விட்டான்.

என்னிடம் லைசன்ஸ் மட்டும்தான் இருக்கிறது. கார் இல்லை. அவனிடம் இருக்கும் 1992 காரில் சென்றால் I-90 வரை மட்டும் தான் செல்ல முடியும். அதற்கு மேல் போகாது. அதனால் ரெண்ட்டல் கார். சரி போகும் வழியில் இவனிடம் எம்.க்யூ பற்றி கதைத்துக் கொண்டே போகலாம் என்ற எண்ணத்தில் அன்றைய எம்.க்யூ படிப்பை ஒத்தி வைத்துவிட்டு முக்கியமான வேலை பார்க்கப் போய் விட்டேன்.

மாலை வரும்போது வெக்மன்ஸில் இருந்து இரண்டு பை நிறைய நொறுக்குத்தீனி வாங்கி வந்திருந்தான் - சிப்ஸ், குக்கீஸ், கேண்டிஸ்.

நான் என் முக்கியமான வேலை கலைந்து எழுந்து "எதுக்குடா இது?"

"ஃபைவ் அவர்ஸு ட்ரைவுடா. எதாவது சாப்புட்டுட்டே போகலாம்"

"அது சரி"

காலை ஏழு மணிக்கு எழுந்து அவனிடம் திட்டு வாங்கிக் கொண்டே கிளம்பி இதோ இப்பொது பிட்ஸ்பர்கை நெருங்கும்போது மணி மதியம் ஒன்று. அவன் கோயிலுக்குள் செல்ல நான் பிட்ஸ்பர்க் வந்த வேலையை செய்ய கேண்டினுக்குள் நுழைந்து ஒரு புளியோதரையையும் தயிர்சாதத்தையும் ருசித்து - என்னதான் சொல்லுங்கள் பெருமாள் கோயில் புளியோதரைக்கு ஈடு இணை எதுவுமில்லை - க்கொண்டிருந்த போது சுருங்கிய முகத்தோடு வந்தான்.

"என்னடா? என்னாச்சு?"

"மார்னிங்கே முடிஞ்சதுடா பூஜை. அடுத்து செவன் தர்ட்டி ஸ்லாட்டுல இருக்கு. புக் செஞ்சிட்டேன்."

"என்னது 7:30? டேய் அது முடிய எய்ட் தட்டி ஆயிடுமேடா? அதுக்கப்புறம் கிளம்பி எப்போடா போயி சேர்றது?"

"போயிடலாம்டா"

"டேய் வர்ற வழியெல்லாம் வெக்மன்ஸ்ல வாங்கின நொறுக்குத்தீனிய தின்னுட்டு வந்ததுல எம்.க்யூவ மறந்தாச்சு. போகும்போதாவது தூக்கம் வராம இருக்க எம்.க்யூவ பத்தி சொல்லிட்டே வாடா?"

"ஓக்கேடா. இப்போ செவன் தர்ட்டி வரை ஏமி செய்யறது?"

"பக்கத்துல க்ராவிட்டி ஹில்லுனு ஒரு இடம் இருக்குடா. அங்க போயிட்டு வரலாம்"

கிராவிட்டி ஹில்லுக்கு போய் கார் தானாக ரிவர்ஸில் மலையேறுவதைப் பார்த்து அதிசயித்துவிட்டு சரியாக ஏழு மணிக்கு கோவிலுக்குத் திரும்பினோம். அவன் பூசை முடித்து விட்டு மறுபடி கேண்டினில் ப்ரசாதம் சாப்பிட்டு விட்டு கார் ஏறும்போது மணி 9:15.

"ரொம்ப லேட்டாயிடுச்சேடா"

"பருவாயில்லடா. நாளிக்கு சண்டேதான?"

"அது சரி"

காரை வேறுவழியில்லாமல் விரட்ட வேண்டியாதாகிவிட்டது. எம்.க்யூ வொர்க்ஃப்ளோ பற்றி பேச வேண்டியவன் உண்ட களைப்பில் மல்லாந்துவிட்டான். அவன் குறட்டைதான் என்னுடன் பேசிக் கொண்டுவந்தது.

பாங்க் பாங்க் என்ற சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன். எப்போது கண்ணசந்தேன் என்று தெரியவில்லை. பின்னால் நீல சிவப்பு விளக்குகள் சுழல போலிஸ் கார். காரை புல்லோவர் செய்து நிறுத்தினேன். போலிஸ் காரர் என் ஜன்னலுக்கு வந்து நின்றார். கண்ணாடியைக் கீழே இறக்கிவிட்டேன்.

"மிஸ்டர். டூ யூ நோ ஒய் ஐ புல்ட் யூ?"

"நோ ஆஃபிசர்."

"இரண்டு காரணங்கள். நீங்கள் மிக வேகமாக சென்றீர்கள். மேலும் உங்கள் கார் நிலையில்லாம இரண்டு லேன்களில் சென்றது. குடித்திருக்கிறீர்களா?"

"இல்லை ஆஃபிசர்"

"தயவு செய்து கீழே இறங்குங்கள்"

வழக்கமாக குடித்தவர்களை சோதிக்கும் நூறிலிருந்து தலை கீழாக எண்ணுதல், கை இரண்டையும் விரித்துக் கொண்டு நடத்தல் ஆகியவற்றை செய்து முடித்தபின் ஓவர் ஸ்பீடிங்கிற்கான டிக்கட் மட்டும் கொடுத்தார். சத்தியமாக தூக்கம் போய் விட்டது.

ராம்பாபுவை எழுப்பி விசயத்தை சொன்னேன். "தேவுடா" என்று கன்னத்தில் போட்டுக் கொண்டான்.

ஊருக்கு வந்தது அசதியில் ஞாயிறு முழுக்கத் தூங்கியதும், இண்ட்டர்வ்யூவில் கோட்டை விட்டதும் இந்தக் கதைக்கு அவுட் ஆஃப் ஸ்கோப்.

டிக்கட்டை கில்ட்டி என்று கையொப்பமிட்டு அனுப்பி இரண்டு வாரம் ஆன பின், ஜட்ஜ்மெண்ட் வந்திருந்தது. நூற்று எழுபத்தைந்து டாலர் அபராதம். நான்கு பாயிண்டுகள் வேறு.

நொந்து போன நான் ராம்பாபு வரவும் அவனிடம் சொன்னேன். மறுபடியும் "தேவுடா" என்று கன்னத்தில் போட்டுக் கொண்டான்.

"என்னடா தேவுடா? அவராலதான் எனக்கு $175 தண்டம்"

"டேய் தேவுடு பவர்ஃபுல் காடு. அவரெ அப்புடி பேசாத"

"என்னடா பவர்ஃபுல்லு. வேலையும் கிடக்கல. நூத்தி எழுவத்தஞ்சி ரூவா தண்டம் வேற"

"பாத்தியா. உனக்குத்தான் வேல கிடக்கல. ஃபைனும் விழுந்துச்சி. எனக்கொண்ணும் ஆவல பாத்தியா? அது தாண்டா தேவுடு பவரு"

நான் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன்.