நானும் செகண்ட் இயர் காலேஜ் போயிட்டு வந்திட்டு இருந்தப்போ நடந்த விசயம்:
எங்க காலேஜுக்கு புதுசா ஒரு இங்க்லீஷ் வாத்தியார் வந்தாரு. நமக்கெல்லாம் இங்க்லீஷ் வாத்தின்னாலே அலர்ஜிதான். ஏன்னா அவங்களோட இங்க்லீஷ் புலமையை எல்லாம் நம்ம கிட்டத்தான் காட்டுவாங்க.
அந்த வாத்தி வந்த முதல் நாள், எல்லாரையும் (எங்கக் கூட கெமிஸ்ட்ரி டிபார்ட்மெண்டும் கம்பைண்ட் க்ளாஸ் வருவாய்ங்க) உக்கார வச்சி, “What do you expect from your English Teacher" உங்கள் ஆங்கில ஆசிரியரிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்னு இங்க்லீஷ்லயே ஒரு கட்டுரை எழுதச் சொனனாரு. எல்லாரும் சும்மா உக்காந்திட்டு இருக்கும்போது நான் எனக்குத் தெரிஞ்ச அரைகுறை இங்க்லீஷ்ல எழுதிக் குடுத்தேன்.
1. நாங்கல்லாம் கிராமத்துப் பக்கமிருந்து வந்த பயலுகங்கிறதை இங்கிலீஷ் வாத்தி மனசுல வச்சிக்கணும்.
2. எங்களுக்கெலலாம் இங்க்லீஷ் தெரியாதுங்கிறதால இங்க்லீஷ் பாடத்தை தமிழ்ல விளக்கி நடத்தணும்.
3. உங்க இங்க்லீஷ் பேசுற இஸ்டைலை எல்லாம் எங்கக் கிட்டக் காட்டக்கூடாது.
4. கடைசியா, இங்க்லீஷ் வாத்தின்னா வேற்றுக்கிரகவாசி மாதிரி நாங்க பார்க்கக் கூடாது
இங்கிலீஷ் வாத்தியார் அதை எல்லார் முன்னாடியும் படிச்சிக் காட்டினாரு. தமிழ்லயும் மொழி பெயர்த்துச் சொன்னாரு. சரி படிச்செல்லாம் காட்டுறாரு இவரு நல்லவரா இருப்பார் போலன்னு நினைச்சா..
இவரும் புது மொந்தையில பழைய கள்ளுதான். அதே அலட்டல், அதே அல்டாப்பு. அதே இஸ்டைலு. வீட்டுலயே எஸ்ஸேவை எழுதிட்டு க்ளாஸ்க்கு வந்து டிக்டேட் பண்ணுவாரு. அவரு சொல்லச் சொல்ல நாங்க எழுதிக்கணும். கஷ்டமான வார்த்தைக்கு ஸ்பெல்லிங் சொல்லுவாரு. What - இதை “வாட்”னு சொன்னா தப்பும்பாரு. Wவை உய் சவுண்டுலதான் சொல்லணும்பாரு. ”உவாட்” அப்பின்னுதான் சொல்லணும். why - வொய் இல்லை ஒய். இப்பிடி.
ஒரு நாளு டோக்ட் அப்பிடின்னு சொன்னாரு. ஒண்ணும் புரியலை. பக்கத்துல உக்காந்துட்டு இருந்தவன் மூஞ்சியப் பாத்தேன். அவனும் முழிச்சான். பக்கத்து பெஞ்சுல உக்காந்திருந்த எங்க கிளாஸ் ஃபர்ஸ்ட் ரேங்க் ஹோல்டரோட நோட்டை எட்டிப் பார்த்தேன். அவ toact னு எழுதியிருந்தா. இது என்னடா புது வார்த்தையா இருக்கு, அர்த்தம் கேட்ரலாம்னு வாத்தியை நிறுத்தி, “சார் டோக்ட்க்கு ஸ்பெல்லிங் சொல்லுங்க சார்”னு கேட்டேன். நாம எப்பவாவது சமைக்கிறேன்னு கெத்து விட்டுட்டு, தங்கமணிக்கிட்ட “ஏம்மா, இந்த அடுப்பை எப்பிடிப் பத்த வைக்கிறது?”ன்னு கேக்கும்போது உடுவாங்க பாருங்க ஒரு லுக்கு, அதே லுக்கை என்பக்கமா விட்டுட்டு சாக்பீஸை எடுத்தாரு. ஃபர்ஸ்ட் ரேங்க் ஹோல்டர் கேவலமா ஒரு லுக்கு விட்டா.
அவரு போர்ட் பக்கம் திரும்பி ஒவ்வொரு எழுத்தா எழுதினாரு
T
A
L
K
E
D
”ஏன் சார், talked ஐ டாக்டுதானே சொல்லுவோம், நீங்க டோக்ட்னு சொல்றீங்களே?” அப்பிடின்னு வேதாளத்தை விடாத விக்ரமாதித்தன் மாதிரி கேட்டேன். அதுக்கு அவரு, “al வரும்போது ஓ சவுண்டுதான் வரும்” அப்பிடின்னு சொல்லிட்டு கெத்தா க்ளாஸ் மொத்தத்தையும், பொம்பளப் புள்ளைங்க பக்கம் ரெண்டு செகண்ட் பாஸ் பண்ணி, ஒரு லுக்கு வுட்டாரு.
நாம விடுவோமா? அப்ப “walked இதை எப்பிடி சார் சொல்லுவீங்க?” அப்பிடின்னு மடக்குனோம்ல??
ஒரு வழியா அந்த செமஸ்டரை ஒப்பேத்திட்டு அடுத்த செமஸ்டருக்கு வந்தோம். அவரோட போறாத காலம், இந்தத் தடவையும் அவரு எங்க க்ளாஸுக்கு வந்தாரு. இந்தவாட்டி அவருக்கு Prose - Merchant of venice. அந்தப் புத்தகத்தை கட்டாயமா எல்லாரும் வாங்கணும் அப்பிடின்னு சொல்லி ஒரு வாரம் டைம் குடுத்தாரு. எப்பிடியும், அவரு டிக்டேட் பண்ணப் போற எஸ்ஸேவைப் படிச்சிட்டுத்தான் எக்ஸாமுக்குப் போவப் போறோம். இதுல எதுக்கு புக்குக்கு காசை வேஸ்ட் பண்ணனும்னு நாங்க 7 பேரும்(எங்க க்ளாஸ்ல பசங்க மொத்தமே ஏழு பேருதான்ல். எல்லாரும் ஜெலுசில் கைல வச்சிக்கோங்க, பொண்ணுங்க 14 பேரு) புக் வாங்கவே இல்லை.
ஒரு வாரம் போச்சி. அடுத்த வாரம் வந்து புக் எங்கன்னு கேட்டாரு. வாங்கலை சார்னு சொன்னோம். இன்னொரு வாரம் டைம் தர்றேன். வாங்கிட்டு வரலைன்னா க்ளாஸை விட்டு வெளியேத்திருவேன்னு சொன்னாரு. அந்த வாரமும் போச்சி.
எங்க கிளாஸ்ல ஒரு பையன் மட்டும் கொஞ்சம் பயந்தவன். அவன் போய் ஒரு புக் வாங்கிட்டு வந்துட்டான். இங்க்லீஷ் வாத்தி வந்து பாத்தாரு, ஏன் புக் வாங்கலைன்னு கேட்டாரு, “வீட்ல கஷ்டம் சார். சாப்பாட்டுக்கே வழி இல்லை. இதுல புக் எல்லாம் புதுசா வாங்க முடியாது”ன்னு சிரிக்காமத்தான் சொன்னேன். பயபுள்ளைக சிரிச்சிக் கெடுத்துருச்சிக. அவரும் சிரிச்சிட்டு, “போனாப் போவுது நாளைல இருந்து பெஞ்சுக்கு ஒரு புக்காவது கொண்டு வாங்க”ன்னு சொன்னாரு.
நல்ல புள்ளைங்களா “சரி சார்”னு சொன்னோம். அடுத்த நாளும் வந்திச்சி.
(இப்பத் தொடரும் போட்டா நல்லாருக்கும். ஆனா குடுகுடு ஃபோன்லயே என்னையக் கொன்னுருவாருங்கிறதால)
இன்னைக்கி நாங்க ஏழு பசங்களும் இடிச்சிப் பிடிச்சி ஒரே பெஞ்ச்ல உக்காந்திருந்தோம். நடுவால வேல்முருகன் வாங்கின புக் மட்டும். வாத்தியார் எங்களைப் பாத்து வெறுத்துட்டாரு.
“நீங்க வேணும்னே வெளாடுறீங்க. இப்பிடியே போச்சின்னா உங்க எச்.ஓ.டிக்கிட்ட கம்ப்ளெயிண்ட் பண்ணிருவேன்” அப்பிடின்னு மிரட்டினாரு.
அடுத்த நாள் எல்லாரும் புக் வாங்கிட்டு வந்துட்டாய்ங்க. என்னையத் தவிர. வாத்தியார் என்னைய வெளிய போகச் சொன்னாரு. நான் “அட்டெண்டன்ஸ் போடுவீங்களா சார்”னு கேட்டேன்.
“வெளிய போறதுக்கெல்லாம் அட்டெண்டன்ஸ் கிடையாது” அப்பிடின்னார்.
”சார் நானா வெளிய போகலை. நான் கிளாஸ்ல உக்காந்திருக்க தயாரா இருக்கேன். நீங்கதான் என்னைய வெளிய போகச் சொல்றீங்க. அப்ப அட்டெண்டன்ஸ் போடணும்ல?” அப்பிடின்னேன்.
(இந்த இடத்துல ஒரு குறிப்பு. இந்த டயலாக் இங்க்லீஷ்லயே நடக்குது)
“நான் குடுக்குறது பனிஷ்மெண்ட். அதுனால அட்டெண்டன்ஸ் கிடையாது” அவரு.
“எதுக்கு பனிஷ்மெண்ட்?”
“நீ புக் வாங்கிட்டு வராததுக்கு”
“புக் வாங்குறதும் வாங்காததும் எங்க பிறப்புரிமை (birth right). நீங்க கேள்வி கேக்க முடியாது. பாடம் நடத்தும்போது நான் பாடத்தைக் கவனிக்காம இருந்தாலோ இல்லை கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லலைன்னாலோதான் பனிஷ் பண்ணலாம்” அப்பிடின்னு சொன்னேன்.
வாத்தி கடுப்பாகி வெளிய போயிட்டாரு.