Saturday, September 8, 2012

இதுவும் ஒரு காதல் கதை - 14


பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 
பகுதி-6 பகுதி-7 பகுதி-8 பகுதி-9 பகுதி-10
பகுதி-11 பகுதி-12 பகுதி - 13


“என்னாச்சி மாலா, குரல் ஒரு மாதிரி டல்லா இருக்கிற மாதிரி இருக்கு? எதுவும் பிரச்சனையா?”

“ஆமா தேவா. பெரிய பிரச்சனை”

எனக்கு வயிற்றைக் கலக்கியது. ஏதாவது ஒன்று என்றால் உடனே இந்தியாவுக்குப் போக முடியுமா? தங்கைக்கு இப்போதுதான் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். “என்ன சொல்ற மாலா?”

“தேவா. என்கிட்ட ரெண்டு கெட்ட செய்தி, ஒரு நல்ல செய்தி இருக்கு. எதை முதல்ல சொல்ல?”

“கெட்ட செய்தியையே சொல்லு. நல்ல செய்தி கடைசியில ஆறுதலா இருக்குமே”

“என்னை இந்த ப்ராஜக்ட்ல இருந்து ரிலீவ் பண்றாங்க. அடுத்த ப்ராஜக்ட் பெங்களூர்ல இல்லை”

“அடப்பாவிகளா? ஆன்சைட்ல இருந்தா எதுவுமே என் கிட்ட சொல்லமாட்டீங்களா? ஏன் இப்பிடி? அடுத்த ப்ராஜக்ட் எங்க? மாட்யூல் லீடராவா? நான் திரும்ப இந்தியா வரும்போது நீயும் பெங்களூருக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்க முடியுமா?”

“இரு இரு. ஒவ்வொரு கேள்வியா கேளு. இப்பிடி மொத்தமா கேட்டா என்னால பதில் சொல்ல முடியாது”

“சரி அடுத்த ப்ராஜக்ட் எங்க?”

“அதுதான சந்தோஷமான நியூஸ். அதை இப்பவே சொல்லிடவா?”

ஆஹா. இவளும் அமெரிக்கா வரப் போகிறாள் போல. இதைச் சொல்ல ஏன் இத்தனை கெடுபிடி போடுகிறாள்? என்னுடன் விளையாடுவதே இவளுக்கு வழக்கமாகப் போய்விட்டது. “சொல்லுடி. யு.எஸ்ல எங்க வரபோற?”

“அடப் பரவாயில்லையே. கெஸ் பண்ணிட்டியே. அல்பனி. கேட்டு வாங்கியிருக்கேன் தெரியுமா? ஜே.எஃப்.கே வழியாத்தான் வரப் போறேன்”

“ஐ. சூப்பர். வீக் எண்ட் வீக் எண்ட் மீட் பண்ணலாம். எவ்வளவு நாள்? இங்க லீட் பொசிஷன் இருக்கா என்ன?”

“இல்லடா. ஆன்சைட் கோஆர்டினேட்டர் தான்”

“ஏன்ப்பா டிமோட் பண்ணிக்கிட்ட? கெரியர்ல விளையாடலாமா? அடுத்து ப்ராஜக்ட் லீட் பொசிஷன்னா கூட போயிருக்கலாம். இப்பிடி செஞ்சது தப்பு. எனக்குப் பிடிக்கலை”

“அடி செருப்பால நாயே. நானே உன் கூட இருக்கலாமேன்னு எல்லா ரிசோர்ஸ் மேனேஜர்கிட்டயும் கால்ல விழாத குறையா கெஞ்சிக் கூத்தாடி இந்த பொசிசன் வாங்கியிருக்கேன். இதுல நீ வந்து குறை கண்டுபிடிக்கிறியா? உனக்குப் பிடிக்கலைன்னா போ, நான் வரலை” ஃபோனை வைத்துவிட்டாள்.

மறுபடியும் அழைத்தேன். எடுக்கவில்லை. மூன்று முறை அழைத்த பின் எடுத்தாள். “ஏய் சாரி மாலா. கோவிச்சிக்காத. தப்புதான் சொன்னது. நீ இங்க வர்றதுதான் நமக்கும் நல்லது”

“புரிஞ்சா சரி. இன்னும் ரெண்டு வாரத்துல கிளம்புறேன். விசா ஸ்டாம்பிங் மண்டே போறேன்”

“நல்லது. நான் ஜே.எஃப்.கே வந்துடுறேன். அல்பனி போய் உனக்கு இப்பவே வீடு பார்த்து வைக்கணுமா?”

“அதெல்லாம் நாம ரெண்டு பேரும் சேர்ந்து போய் பார்த்துக்கலாம். நீ ஒண்ணும் முந்திரிக்கொட்டையாட்டம் எதையாவது செஞ்சி வைக்க வேண்டாம்.”

“மாலா. இன்னொன்னு யோசிச்சேன். இப்ப நீ ஆன்சைட் வர்றதும் நமக்கு ஒரு விதத்துல நல்லதுதான்.”

“என்ன? எதுவும் விவகாரமா யோசிக்கிறீயா?”

“இல்லடி. நீ இங்க வந்துட்டா உங்க வீட்ல இப்போதைக்கு மாப்பிள்ளை தேட மாட்டாங்கள்ல?”

“எப்பிடிடா? எப்பவுமே இப்பிடித்தானா இல்ல இப்பிடித்தான் எப்பவுமேவா?”

“எது?”

“உன் அறிவு”

“எப்பவுமே இப்பிடித்தான்”

“லூசு. நான் சொன்ன ரெண்டாவது கெட்ட செய்தி இதுதான்”

“என்னது?”

“நான் அமெரிக்கா போகப் போறேன்னு சொன்னதுமே எங்க வீட்ல ஒரே குஷி. என்னன்னு கேட்டா, எனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்காங்களாம். டாலஸ்ல இருக்காராம். ரெண்டு குடும்பமும் மீட் பண்ணி பேசிட்டாங்களாம். குடும்ப அளவுல பிடிச்சிருக்காம். இப்ப மாப்பிள்ளையும் நானும் மீட் பண்ண வேண்டியதுதான் பாக்கியாம். அவருக்கு லீவ் கிடைக்கலையாம். ஆறு மாசத்துக்கு வரமுடியாது போல. இப்ப நான் அங்க வர்றதால நானும் அவரும் மீட் பண்றது ஈஸியாகிடும். ரெண்டு பேருக்கும் பிடிச்சிப் போச்சின்னா, ஆறு மாசமோ ஒரு வருசமோ கழிச்சி ரெண்டு பேரும் இந்தியாவுக்கு வர்றப்போ கல்யாணம் வச்சிக்கலாம்னு பேசியிருக்காங்களாம்”

தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுக்கொண்டே வந்தாள். “என்ன மாலா. நீ என்ன சொன்ன?”

“நான் என்ன சொல்ல? சரின்னு சொல்லிட்டேன்”

“அடப்பாவி. அப்ப அந்தாளை மீட் பண்ணப் போறியா?”

“அப்புறம். எங்கப்பா சொல்றதை மீற முடியுமா?”

“என்னடி இப்பிடி சொல்ற? அப்ப என் கதி?”

“அதோ கதி” சொல்லிவிட்டு கலகலவென சிரித்தாள். “உன் மூஞ்சி எப்பிடிப் போகும்னு என்னால இங்கருந்தே புரிஞ்சிக்க முடியுது?” விடாமல் சிரித்தாள். எனக்கு எரிச்சலாக வந்தது? என்ன ஜென்மம் இவள். விளையாடுகிறாளா? இல்லை சீரியஸாகத்தான் பேசுகிறாளா? ஒன்றும் புரியவில்லை.

பதில் சொல்லாமல் இருந்தேன்.

“என்னடா பேச்சையே காணோம்?”

“...”

“டேய் பேசுடா”

“என்ன மாலா சொல்லச் சொல்ற? நீ சீரியஸா பேசுறியா காமடி பண்றியான்னே தெரிய மாட்டேங்குது”

“ம்ம்.. ஏண்டா? அவ்வளவு ஈஸியா என்கிட்ட இருந்து உன்னைய தப்பிச்சிப் போக விட்டுருவேனா நான்? நான் அங்க வர்றேன். வந்துட்டு என்ன செய்யலாம்னு பேசுவோம். சரியா?”

“யப்பா கொஞ்ச நேரத்துல கதி கலங்க வச்சிட்டியே”

அதன்பிறகு வழக்கமான காதலர்கள் போல ஸ்வீட் நத்திங்க்ஸ் ஒரு மணி நேரம் பேசிவிட்டு ஃபோனை வைத்தேன். மிகவும் சந்தோசமாக இருந்தது. அடுத்த இரண்டு வாரங்கள் வேகமாக ஓடிப் போனது.

ஜே.எஃப்.கேவில் வந்து இறங்கியவளை வரவேற்று நேராக என் அறைக்கு அழைத்துப் போனேன். குளித்து, சாப்பிட்டுவிட்டு பயண அசதியில் தூங்கிப் போனாள். காலையில் எழுந்ததும் ப்ரேக்ஃபாஸ்ட் முடித்துவிட்டு ரெண்டல் காரில் அல்பனி சென்றோம். அங்கே அவளுக்கு ஏற்கனவே புக் ஆகியிருந்த ஹோட்டலில் செக் இன் செய்துவிட்டு, நான் தொலைபேசி வைத்திருந்த மூன்று அப்பார்ட்மெண்ட்களைப் போய் பார்த்துவிட்டு வந்தோம். மூன்றும் ஃபர்னிஷ்ட் அப்பார்ட்மெண்ட்ஸ். ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் பிடித்திருந்தது. கடைசியாகப் பார்த்த சிங்கிள் பெட்ரூம் மாலாவுக்கு மிகவும் பிடிக்கவே பேப்பர் ஒர்க், அட்வான்ஸ் செய்துவிட்டு வந்தோம். இன்னும் 3 நாட்களில் சாவி தருவதாகச் சொன்னார்கள்.

அன்று இரவே கிளம்புவதாகச் சொன்ன என்னை காலையில் போகச் சொல்லி இருக்க வைத்தாள். அப்போதுதான் அவளைச் சந்திக்கப் போகும் அந்த மாப்பிள்ளையின் நினைவு வந்தது.

“ஏய் மாலா? அந்த டாலஸ் மாப்பிள்ளை யாரு? நாம எப்பிடி இதை சமாளிக்கப் போறோம்னு எல்லாம் நீ சொல்லவே இல்லையே?” ஹோட்டலின் வெளியே சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டே கேட்டேன்.

“லூசு, நீயா எதையும் செய்ய மாட்டியா? எப்பிடி சமாளிக்கப் போறோம்னு நீ யோசிக்கவே இல்லையா?” செப்டம்பரின் குளிர் காதுகளைத் தீண்டிவிடாமலிருக்க ஸ்கார்ஃபை சுற்றிக் கொண்டே கேட்டாள்.

“யோசிச்சேன். ஆனா அது சரியா வருமான்னு தெரியலை”

“உன் ஐடியா என்ன சொல்லு?”

“அவர் யாருன்னு சொன்னா, நான் கிளம்பி டாலஸ் போய் அவரைப் பார்த்து, அவர்கிட்ட நம்ம லவ்வைச் சொல்லி அவரையே வித்ட்ரா செய்ய வச்சிரலாம்னு நினைக்கிறேன்”

“ம்ம்.. நானும் நீ நினைச்சதைத்தான் நினைச்சேன். ஆனா எதுக்கு நாம டாலஸ் போகணும். அவர் எப்பிடியும் என்னைப் பார்க்க இங்க வருவார்ல. அப்ப ரெண்டு பேரும் அவரைப் பாத்து சொல்லிடலாம்”

“அதுவும் சரிதான். ஆமா அந்தாள் பேரென்னன்னு சொல்லவே இல்லையே?”

“அவர் பேரு சுதாகர். எம்.பி.ஏ படிச்சிருக்கார். ஏதோ ஒரு இன்ஷூரன்ஸ் கம்பெனியில மேனேஜர். ஆறு டிஜிட்ல சம்பளம். எனக்கே அந்தாளைக் கட்டிக்கலாமான்னு ஒரு சபலம் வந்திருச்சி”

“வரும் வரும். அப்புறம் டால்ஸ்க்கு வந்து வெட்டுவேன். எங்க பரம்பரை எப்பிடின்னு தெரியும்ல?”

“தோடா” என்று சிரித்துக்கொண்டே என் வயிற்றில் குத்தினாள்.

****************************************************************************
சுதாகர், (ஸிட் என்றுதான் அழைக்கவேண்டுமாம்) தேங்க்ஸ் கிவிங் வீக்கெண்டுக்கு முன்னால் அல்பெனிக்கு வர முடியாது, லீவ் கிடைக்காது என்று மெயில் அனுப்பியிருந்தான். இரண்டு முறை மாலாவிடம் ஃபோன் நம்பர் கேட்டும், நேரில் பேசிய பிறகு ஃபோன் நம்பர் எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ளலாம் என்று மெயிலில் தெரிவித்துவிட்டாள். நான் வார நாட்களில் நியூ யார்க்கிலும், வார இறுதிகளில் அல்பனியிலும் என செலவழித்துக் கொண்டிருந்தேன்.

தேங்க்ஸ் கிவிங் வீக்கெண்டும் வந்தது, (நவம்பர் மாத கடைசி வார இறுதி). புதன் காலையே அல்பனி வந்து சேர்ந்துவிட்டேன். மாலையில் டிராஃபிக் அதிகமிருக்கும் என்பதால். வியாழன் மாலை வருகிறான். ஏர்ப்போர்ட் அருகிலிருக்கும் ஹில்டனில் தங்குகிறான். டின்னருக்கு அவனை அங்கேயே மீட் செய்வதாகத் திட்டம். நாளை இதே நேரம் அவனுடன் சந்திப்பு நிகழ்ந்துகொண்டிருக்கும். அந்த நேரம் நெருங்க நெருங்க டென்ஷனாக இருந்தது. மாலாவும் நெர்வஸாகவே இருந்தாள்.

வியாழன் மாலை அவன் அல்பனியில் இறங்கியதும் மெயில் செய்திருந்தான். ஏழுமணிக்கு இரண்டு பேரும் காரில் ஏறி ஹில்டன் சென்றோம். எங்களுக்காக, இல்லை, இல்லை, மாலாவுக்காக ரிஷப்ஷனிலேயே காத்திருந்தான். டிப்பிக்கல் அமெரிக்க இளைஞனாக மாறிவிட்டதாக நினைக்கும் இந்திய இளைஞர்களின் தோற்றம், அவனுக்கு. ALL MY EX'S LIVE IN TEXAS என்று எழுதிய பனியன் அணிந்திருந்தான். சாயம் போன ஜீன்ஸ். கையில் ஐஃபோன். தலையை சைடில் வெட்டி உச்சந்த் தலையில் கோபுரம் போல சீவி விட்டிருந்தான். ஜெல்லின் உபயத்தால் அப்படியே நின்றது. தாடையில் குறுந்தாடி. குறுந்தாடி முடியும் இடத்திலிருந்து ஒரு மெல்லிய மயிற்கோடு கிளம்பி கிருதாவில் முடிந்தது. கட்டை விரலாலும் நடுவிரலாலும் மூக்கை இழுத்து இழுத்து விடுவதை மேனரிசமாக வைத்திருந்தான்.

ஃபோட்டோ பார்த்திருப்பான் போல. மாலாவை அடையாளம் கண்டுகொண்டான். மாலாவை எதிர்பார்த்துக் காத்திருந்தவன், என்னையும் அவளுடன் பார்த்த அதிர்ச்சி அவன் முகத்தில் எதிரொளித்தது.

“ஹாய் மாலா” என்று எழுந்து வந்து கை கொடுத்தான். அதை வாங்கிக் குலுக்கிய மாலாவிடம், இது யார் என்பது போல என்னைப் பார்த்தான்.

“திஸ் இஸ் தேவா. மை பாய் ஃப்ரண்ட்” என்றாள். அவன் முகம் சத்தியமாக மாறிப்போனது.

“ஹலோ” என்று கையை நீட்டினேன். வேண்டாவெறுப்பாக குலுக்கினான்.

“பாய் ஃப்ரண்ட்னா?”

“யெஸ். நீங்க நினைக்கிறதுதான் சுதாகர்... சாரி சிட். நானும் தேவாவும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கோம்”

“அப்புறம் ஏன் என்னை இவ்வளவு தூரம் டைமையும் மணியையும் ஸ்பெண்ட் பண்ணி வர வச்சீங்க? ஒரு ஈமெயில்லயே சொல்லியிருக்கலாமே?”

“சொல்லியிருக்கலாம் தான் சிட். உங்களை அலைய வச்சதுக்கு என் மனசார மன்னிப்புக் கேட்டுக்கறேன். ஒரு வேளை நான் ஈமெயில்லயே சொல்லியிருந்தா நீங்க உடனே கோவப்பட்டு எங்க வீட்ல விசயத்தை சொல்லிருவீங்க. அது எந்த மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும்னு தெரியலை. நாங்களா எங்க விசயத்தை எங்க வீட்டுல இருக்கிறவங்க முன்னாடி எடுத்து வைக்கணும்னு இருக்கோம். அதான் நேர்ல பார்த்து நிதானமா சொல்லலாம்னு...”

“புல் ஷிட். உங்க வாழ்க்கைக்காக என் நேரத்தோடயும் பணத்தோடயும் விளையாடுவீங்களா? What the fuck are you thinking about me? An asshole who would dance to your tunes? Sorry Mala, I aint that kind”

“மிஸ்டர் சிட். ப்ளீஸ் அண்டர்ஸ்டேண்ட். எங்களால உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டம் அண்ட் நஷ்டம் எனக்குப் புரியுது. இஃப் யு டோண்ட் மிஸ்டேக் மி, மானிட்டரி லாஸ் எவ்வளவுனாலும் காம்பன்ஸேட் பண்ண தயாரா இருக்கேன். நீங்க தயவு செஞ்சி எங்க நிலமையைப் புரிஞ்சிக்கோங்க. இங்க மாதிரி இல்ல இந்தியாவுல. இன்னமும் ஜாதி, மதம், அந்தஸ்து இதையெல்லாம் தலையில தூக்கி வச்சி ஆடிட்டுத்தான் இருக்காங்க. எங்க சிச்சுவேஷன் முள்ளு மேல விழுந்த சேலை மாதிரி. நிதானமாத்தான் அப்ரோச் பண்ணனும். அவசரப்பட்டுட்டோம்னா அப்புறம் முள்ளும் உடைஞ்சிரும், சேலையும் கிளிஞ்சிரும். அதனால தான் நேர்ல பாத்துப் பேசிட்டு இருக்கோம்”

உடன்படாதவன் போலவோ இல்லை மறுத்துப் பேச வார்த்தை இல்லாதவன் போலவோ தலையைக் குலுக்கிக் கொண்டான்.

“Ok guys. I give up. எங்கிருந்தாலும் வாழ்கன்னு பாடிட்டுப் போறேன். என்னோட ஃப்ரண்ட்ஸ் இந்த வீக்கெண்ட் வேகஸ் போலாம்னு சொன்னாங்க. நான் தான் இவளைப் பாக்கணும்னு இங்க ஓடி வந்தேன். I'm going to join my friend in Vegas. Will send you all the receipts and I expect you to compensate me.”

“தேங்க்யூ சிட். தென், இந்த விசயத்தை வீட்ல சொல்லிட வேண்டாம். ரெண்டு பேரும் பேசிப் பார்த்தோம். ஒத்து வராது போலன்னு மட்டும் வீட்ல சொல்லிருங்க. நானும் அதையே சொல்லிடுறேன்.” மாலா சொல்லிவிட்டு அவன் முகத்தைப் பார்த்தாள்.

தாடையத் தடவிய சிட், “ஓக்கேய். I ain't losing nothing” என்றான். இரவு உணவை அவனுடன் அருந்திவிட்டு பில்லும் கட்டிவிட்டு வீட்டுக்குத் திரும்பினோம்.

“இவ்வளவு ஈஸியா முடியும்னு நினைக்கலை. ஆனா காசுலையே குறியா இருக்கான் பாரு” மாலாவிடம் அங்கலாய்த்தேன்.

“விடு தேவா. எம்.பி.ஏ ஃபைனான்ஸ் படிச்சவன்ல. அதான் ஃபைனான்ஸ்ல குறியா இருக்கான். எவ்வளவு ஆனாலும் குடுத்துடலாம்ல. உன்கிட்ட சேவிங்க்ஸ் இருக்கா?”

“இருக்கு மாலா. டோண்ட் ஒர்ரி”

இரவு நெடுநேரம் எங்களின் எதிர்பார்ப்பையும் அவன் ரியாக்‌ஷனையும் பற்றிப் பேசிக் கொண்டே தூங்கிப் போனோம்.

அடுத்த நாள் ப்ளாக் ஃப்ரைடே. ஷாப்பிங்குக்குப் பெயர் போன தினம். முதல் நாள் இரவிலிருந்தே கடை வாசலில் வரிசை கட்டி நிற்பார்கள். எலெக்ட்ரானிக் சாதனங்கள் கம்ப்யூட்டரிலிருந்து கேமிரா வரை  (இந்த வருடத்தோடு ஒழித்துக் கட்டப் போகும் மாடல்களை) எல்லாம் சல்லிசாக சேல் போட்டிருப்பார்கள். அதை வாங்கத்தான் வரிசை. நானும் மாலாவும் காலை மெதுவாக எழுந்து ஷாப்பிங் செய்யப் போனோம். சேல் ஐட்டம் எதுவும் இல்லை. சுற்றிப் பார்த்ததோடு திரும்பினோம். ஞாயிறு காலையே - ட்ராஃபிக் தவிர்க்க - கிளம்பி நியூயார்க் வந்து சேர்ந்தேன்.

அன்று மாலை மாலா ஃபோன் செய்தாள்.

“என்னாச்சி மாலா?”

“அந்தப் படுபாவி கவுத்துட்டான் தேவா”

(தொடரும்)

அடுத்த பாகம் இங்கே

1 comment:

சிவக்குமரன் said...

எங்க அடுத்த பாகத்தை காணோம்! சீக்கிரம் எழுதுங்க சாமி!