பல முறை சலிக்கச் சலிக்கப் பார்த்த நயகரா. நதியின் இரண்டு புறமிருந்தும் அருவிகளைப் பார்த்து ரசித்தாயிற்று. ஆனாலும் முகிலன் பிறந்த பின்னால் ஒரு முறை கூட போனதில்லை என்பதால் இந்த வருடம் சீசன் முடிந்ததும் (கூட்டம் குறைந்ததும்) போகவேண்டும் என்று முடிவெடுத்திருந்தோம்.
சொல்லி வைத்தாற்போல டெக்ஸாஸ் மாகாணத்திலிருந்து ஒரு அழைப்பு. நான் நயகரா வருகிறேன். சந்திக்கலாமா? தலைவரிடமிருந்து அழைப்பு வந்ததைத் தட்ட முடியுமா? சரி என்று போக முடிவெடுத்து விட்டோம்.
முதல் நாள் மாலை பஃபலோ (ஊர் பேர்தானுங்க) வந்து சேர்ந்ததும் அழைத்து உறுதிப் படுத்திக்கொண்டார். அடுத்த நாள் காலை எழுந்து கட்டு சோறு கட்டிக் கொண்டு - நயகராவில் சீசன் நேரத்தில் நல்ல சிற்றுண்டி சாலைகள் இல்லை. ஜன்க் ஃபுட் சாப்பிடுவது ஓக்கே என்றால் கவலைப் படாமல் போகலாம். ஆகவே நாங்கள் எப்போது கட்டு சோறு எடுத்துச் சென்று விடுவது - கிளம்பினோம்.மாங்காய் சாதமும், தயிர் சாதமும். எங்களுடன் இன்னொரு ஜோடியும் வருவதாக இருந்தார்கள். அவர்கள் காய்கறிகள் செய்து வந்தார்கள்.
திட்டப்படி காலை 10 மணிக்கு காரில் ஏற வேண்டும். ஆனால் இந்திய பங்க்சுவாலிட்டி படி 11மணிக்குக் காரில் ஏறி கிளம்பினோம். முகிலனுக்கு மோஷன் சிக்னெஸ் உண்டு (பரம்பரை சிக்னெஸ்). சொல்லி வைத்தாற்போல பஃபலோவை நெருங்கும் போது வாயிலெடுத்துவிட்டார். அப்புறம் அங்கேயே ஓரத்தில் காரை நிறுத்தி சுத்தம் செய்து கொண்டு நயகராவை நெருங்கினால் ட்ராஃபிக் ஜாம். அங்கே கிட்டத்தட்ட 45 நிமிடம் வெட்டியாய் செலவு செய்த பின் மணியைப் பார்த்தால் 1:00.
ஜம்பமாக சாப்பாடு எடுத்து வருவதாக வாக்குக் கொடுத்துவிட்டோமே. இப்போது அவர்கள் பசியில் இருப்பார்களே என்று வேகவேகமாக காரை ஓட்டி கோட் ஐலண்டை நெருங்கும்போது மணி 1:30. குடுகுடுப்பைக்கு தொலைபேசினால், கேவ் ஆஃப் த விண்ட்ஸ்ல இருக்கோம். அங்கயே வந்துருங்க என்றார். நாங்களும் அங்கேயே போய் காரை பார்க் செய்து விட்டு அங்கே ஒரு ஓரமாக இருந்த பெஞ்சுகளில் எங்கள் கையிலிருந்த பார்சல்கள அத்தனையையும் வைத்து விட்டு பார்த்தால், அங்கே ஒரு கூட்டம். மறுபடியும் தொலை பேசினேன்.
“குடுகுடு, இங்க ஒரு கூட்டமே இருக்கு. நீங்க எங்க இருக்கீங்க?”
“அந்தக் கூட்டத்துலதான் இருக்கோம்.”
“அடையாளம் சொல்லுங்க.”
“மஞ்சக்கலர்ல பாஞ்சோ (ரெயின் கோட்) போட்டிருக்கோம் பாருங்க”
“அதுக்கு நான் திருப்பதியில போயி மொட்டை போட்டவங்களத் தேடுவேனே?”
“நீங்க எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க”
“நாங்க இங்கதான் பெஞ்சில உக்காந்திருக்கோம்”
“சரி அப்ப நாங்க போயி கேவ் ஆஃப் த விண்ட்ஸ் பாத்துட்டு வந்துடுறோம்”
“சரி.”
வைத்துவிட்டு பதட்டத்தோடு உட்கார்ந்திருந்தேன். இதுவரை பார்த்திராத முகம். வலையுலகில் மட்டுமே பழக்கம். ஓரிரு முறை தொலைபேசியிருக்கிறோம். தங்கமணிக்கு பெரிய கவலை - ஹரிணியும், குடுகுடுவின் மாமியாரும் சாப்பிடாமல் இருப்பார்களே.
அரைமணி நேர காத்திருப்புக்குப் பின் வந்தனர். ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக வந்தார். பார்த்ததும் புன்னகையையும் கைக்குலுக்கல்களையும் பரிமாறிக் கொண்டோம். பரஸ்பர அறிமுகம் முடிந்ததும் சாப்பிட உட்கார்ந்தோம். அவருக்கு நான்கு மணிக்கு ஃப்ளைட் பிடிக்கப் போக வேண்டியிருந்ததால் நிறைய நேரம் இருக்க முடியவில்லை. கிடைத்த சந்தர்ப்பத்தில் வலையுலக அரசியல் பற்றியும் சமீபத்திய சர்ச்சைகள் பற்றியும் சிறிது நேரம் அலசினோம். என் மனைவி இந்தப் பிரச்சனையை சாதாரணமாக எடுத்துக் கொண்டதைப் பற்றி பின்னர் தொலைபேசியில் ஆச்சரியப்பட்டுக் கொண்டார் குடுகுடுப்பை.
குடுகுடுப்பையின் மாமியார் சளைக்காமல் பேசினார். அவருக்கு இந்தியாவுக்கு திரும்பிவிட வேண்டும். அங்கே குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை. அதை அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தார்.
அடுத்ததாக ஹரிணி, தன் நண்பர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பரிசு எதாவது வாங்க வேண்டும் என்று சொல்லவும், அழைத்துக் கொண்டு போனோம். கடையையே அலசி கடைசியில் சில பேனாக்களும், கட் செய்த கற்களும் வாங்கிக் கொண்டு வெளியே வந்தோம். முகிலன் வெட்கம் விட்டு சகஜமாக ஆரம்பித்தான். ஹரிணியும் முகிலனும் கொஞ்ச நேரத்தில் ஒட்டிக் கொண்டு விளையாட ஆரம்பித்துவிட்டனர். அதிலும் முகிலன் ஓட, நான் துரத்த, என்னை அவனைத் தூக்க விடாமல் ஹரிணி தடுக்க என்று இருவரும் என்னை நன்றாக ட்ரில் வாங்கினர்.
விடை பெறும் நேரம் வந்தது. அடுத்த முறை வரும்போது வீட்டில் தங்குவதைப் போல வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தி விடை கொடுத்தோம். புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். தலைவர் பகிரக்கூடாது என்று உத்தரவிட்டதால் பகிரவில்லை. (ஆனாலும் ஏன் அவரது அழகு முகத்தை யாருக்கும் காட்டக்கூடாது என்று நினைக்கிறாரோ தெரியவில்லை).
பார்த்த சிறிது நேரத்தில் நிறைய பேச முடியவில்லை தான். ஆனாலும் நீண்ட நாள் பழகிய ஒரு நண்பரைப் பார்த்த ஒரு மகிழ்ச்சி, ஒரு திருப்தி இருந்தது என்பதை மறுக்க முடியாது. இப்படி நல்ல நட்புகளைக் கொடுத்த வலையுலகிற்கு நன்றி.
(பொதுக்குழுவில் என்ன பேசினீர்கள் என்று கேட்பவர்களுக்கு, அது தான் ரகசியப் பொதுக்குழுன்னு சொல்லியாச்சில்ல. அப்புறம் எப்பிடி அதை வெளிய சொல்வோம். தலைவர் சீக்கிரம் நடவடிக்கைகள் எடுப்பார். ஒன்றிரண்டு தலைகளின் பதவிகள் கைமாறலாம்).
9 comments:
:)
விசிட் பண்ணின இடத்தையாவது போட்டோ போட்டிருக்கலாமில்ல! (அவ்ளோ ரகசியமா?)
என்னமோ திட்டம் இருக்கு :) பொதுச்செயலாளர் சீட்டுக்க வேட்டு வசிசிடாதீங்க முகிலன்..:)
நயாகரா போன அடையாளமா கும்பலா ரெயின்கோட் ஃபோட்டோவாவது போட்டீங்களே தலை..:))
உகந்த படங்கள் போடாமல் இருட்டடிப்புச் செய்வதைக் கண்டித்து வெளிநடப்புச் செய்கிறோம்!
---சார்லட் வட்டம்
nandru
Nandru
Nandru
பொதுக்குழு கூட்டாம நடைபாதை மீட்டிங் முடிவுகள் ஏற்கப்படமாட்டாது. டீக்குடிப்போம்.
இப்புடி உக்கார வச்சு சோறு போடுவாங்கன்னு தெரிஞ்சிருந்தா நாங்களும் ரெண்டு வாரம் கழிச்சே போயிருப்போம் :))
Post a Comment