நான் கிரிக்கெட் விளையாட்டின் ரசிகன். கிரிக்கெட் போட்டிகளில் ஒரு சில முறை நடுவர்கள் தவறான முடிவால் ஆட்டத்தின் போக்கே மாறிப்போவதுண்டு. அதே போல கால்பந்தாட்டத்திலும், நடுவரின் கவனக்குறைவால் பெனால்டி கிக் எல்லாம் எதிரணிக்குப் பரிசளிக்கப்பட்டு அந்த அணி வெற்றி பெறக் காரணமாய் இருக்கிறது.
நடுவர்களின் கவனக்குறைவையோ அல்லது சில இந்திய, இலங்கை நடுவர்களைப் போல பக்கச்சார்பான நடுவர்களோ இருந்தாலும் அதையும் மீறி வீரர்களின் திறமையால் வெற்றியைத் தட்டிப் பறித்த ஆட்டங்கள் பல உண்டு.
ஆனால் நடுவர்களால் மட்டுமே வெற்றி தோல்வி தீர்மானிக்கப் படும் விளையாட்டுகளில் வீரர்கள் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் நடுவர்கள் மனது வைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலமை இருந்தால்?
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் பார்த்திருப்பீர்கள். யாராவது ஒருவர் மிக நன்றாக பாடியிருப்பார். நாமும் ஆகா அருமையா பாடுனான்யா, ஃபுல் மார்க் வாங்கிருவான் என்று நினைத்திருப்போம். நடுவர்களில் ஒருவர், நன்னா பாடினேள், ஆனா உச்ச ஸ்தாயில சங்கதி கொஞ்சம் மிஸ்ஸாயிடுத்து. ரெண்டாவது ச்சரணம் பாடுறச்சே கொஞ்சம் ஸ்ருதி பிசகிடுத்து. அடுத்த தடவை நன்னாப் பாடுங்க. காட் ப்ளெஸ் என்று நம் முகத்தில் கரி பூசுவார். பல முறை சூப்பர் சிங்கர் போட்டிகளில் பக்கச்சார்பு இருப்பது பலர் பேசியிருக்கிறார்கள்.
சரி இது டிவியில் வரும் ரியாலிட்டி ஷோ. இதில் டி.ஆர்.பிக்காக டிவிக்காரர்கள் கொஞ்சம் முன்னே பின்னே செய்யத்தான் செய்வார்கள். விளையாட்டிலும் கூடவா என்று கேட்கலாம். ஆம் சாமி இருக்கிறதே..
ஜிம்னாஸ்டிக்ஸ் என்றொரு விளையாட்டு. அதில் பல events உண்டு. vault, uneven bars, floor, balance beam என. இதில் ஒவ்வொரு eventலும் வீரர்கள் தங்கள் உடற்பயிற்சித் திறமையைக் காட்டுவார்கள். அதை நடுவர்கள் மதிப்பிட்டு மானாட மயிலாட போல ஒரு ஸ்கோர் போடுவார்கள். யார் அதிக ஸ்கோர் பெறுகிறார்களோ அவர்கள் பதக்கம் பெறுவார்கள். உள்ளூர் ஜிம்னாஸ்டிக்ஸில் இருந்து ஒலிம்பிக் போட்டிகள் வரை இதுதான் வரைமுறை.
இதில் வீரர்கள் திறமையை விட, அவர்கள் விதிகளை ஒழுங்காகப் பின்பற்றுகிறார்களா என்பதையே நடுவர்கள் அதிகம் கவனிக்கிறார்கள் என்ற ஒரு குறையை வீரர்களும் கோச்களும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அதாவது ஒருவன்/ஒருத்தி எப்படி பெர்ஃபார்ம் செய்கிறார் என்பதை விட என்ன தவறு செய்கிறார் என்பதையே நடுவர்கள் பார்க்கின்றனர் என்கிறார்கள். விதிகள் என்றால் சில்லறைத்தனமான விதிகளும் உண்டு - வீராங்கனைகளின் பிரா பட்டி தெரிகிறது என்பதற்கெல்லாம் கூட 1/10 ஸ்கோர் குறைத்துவிடுவார்கள். மடத்தனமாக இருக்கிறதுதானே?
2006ம் ஆண்டு வெளிவந்த Stick It என்ற திரைப்படம் இந்தக் குறையைத்தான் பேசுகிறது. ஹேலி கிரஹாம் என்ற இளம் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை. இவர் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு அமெரிக்கா சார்பாக கலந்து கொள்ளத் தேர்ந்தெடுக்கப் படுகிறார். ஆனால் இவரது பெர்ஃபாமன்ஸுக்கு முன்னால் அவரது அம்மாவுக்கும், கோச்சுக்கும் இடையில் இருக்கும் தொடர்பு தெரிய வந்ததும் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறிவிடுகிறார். அமெரிக்கா தங்கப்பதக்கத்தை இழந்துவிடுகிறது. ஜிம்னாஸ்டிக்ஸ் ரசிகர்கள் பலரின் கோபத்துக்கு ஆளாகிறார். அந்த சம்பவத்திற்குப் பிறகு ஜிம்னாஸ்டிக்ஸ் பக்கமே தலை வைத்தும் படுக்காமல் இருக்கிறார். ஒரு சைக்கிள் விளையாட்டில் ஒரு வீட்டுக்குள் அனுமதி பெறாமல் (உடைத்துக்கொண்டு) நுழைந்துவிட, அலாரமடித்து போலிஸ் இவரைக் கைது செய்கிறது. ஜட்ஜ் இவரை வி.ஜி.ஏ என்னும் ஜிம்னாஸ்டிக்ஸ் அகாடமியில் சேர்ந்து பயிற்சி எடுக்கப் பணிக்கிறார்.
அந்த அகாடமியின் கோச் பர்ட் விக்கர்மேன், ஹேலியை மீண்டும் ஜிம்னாஸ்டிக் விளையாட அழைக்கிறார். சேதமடைந்த வீட்டிற்கான நஷ்ட ஈடு கொடுக்க இந்த விளையாட்டு உதவும் என்று அவரை சமாதானப் படுத்தி விளையாட வைக்கிறார். ஆனால் மீண்டும் அவர் அம்மாவின் தலையீட்டினால் பாதி போட்டியிலேயே வெளியேறுகிறார். ஆனாலும் தேசிய சேம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குபெற தேர்ந்தெடுக்கப் படுகிறார். அவரோடு அந்த அகாடமியைச் சேர்ந்த இன்னும் மூன்று பேரும் (மினா, ஜோயன்னா, வெய் வெய்) தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.
முதல் நாள் ஆல் ரவுண்ட் பெர்ஃபாமன்ஸ். அதில் ஹேலியின் மீதிருந்த கசப்பும், பர்ட் விக்கர்மேனின் மீது இருக்கும் வெறுப்பும் சேர்ந்து நடுவர்கள் ஹேலியை ஏழாவது இடத்துக்குத் தள்ளிவிடுகிறார்கள். அடுத்த நாள் Individual Events championship. அதில் முதலில் vaultல் மினா ஒரு கஷ்டமான பெர்ஃபாமன்ஸ் செய்தும் நடுவர்கள் 9.5/10 என்ற ஸ்கோர் கொடுக்கிறார்கள். காரணம் கேட்கும் பர்ட்டிடம் மினாவின் பிரா பட்டி தெரிந்ததை சுட்டிக் காட்டுகிறார் நடுவர்களில் ஒருவர். வெறுப்படைந்த ஹேலி தனது முறையின் போது வேண்டுமென்றே தனது பிராவின் பட்டையைக் காட்டி ஸ்க்ராட்ச்g செய்து வெளியேறுகிறார். அவரைத் தொடர்ந்து வந்த எல்லா வீராங்கனைகளும் இதே போலவே செய்ய, நடுவர்கள் வேறு வழியில்லாமல் மினாவுக்கு தங்கப் பதக்கம் வழங்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளாகிறார்கள்.
அதன் பிறகு என்ன நடந்தது. இந்த முட்டாள்தனமான நடுவர்களின் விதிகளை எதிர்த்து வீராங்கனைகளால் என்ன செய்ய முடிந்தது, அதற்கு எதிராக அட்மினிஸ்ட்ரேட்டர் என்ன செய்கிறார்கள் என்பதே படத்தின் கதை.
ஹேலியாக நடித்த Missy Peregrym ஒரு ஜிம்னாஸ்டுக்குத் தேவையான உடல் கட்டும் revolutionary girl பாத்திரத்துக்கான முக மிடுக்குடனும் நடித்திருக்கிறார். Invitational Competition போது அவரது அம்மா அப்பா இரண்டு மடங்கு பணம் கொடுத்ததால் தான் விக்கெர்மென் ஹேலியை அகாடமியில் சேர்த்துக் கொண்டார் என்ற உண்மையைச் சொல்லும்போது உடைந்துபோகும் காட்சியிலும் அதன் பிறகு விக்கெர்மேனிடம் அம்மாவுக்கும் பழைய கோச்சுக்கும் இருந்த தொடர்பைப் பற்றிச் சொல்லும் காட்சியிலும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பர்ட் விக்கெர்மேனாக வந்த ஜெஃப் ப்ரிட்ஜஸ் ஒரு கோச்சுக்குத் தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மொத்தத்தில் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டின் இன்னொரு பக்கத்தை வெளிப்படுத்தும் படம்.
எனக்குப் பொதுவாகவே ஸ்போர்ட்ஸ் மூவிஸ் பிடிக்கும். அந்த வரிசையில் இந்தப் படமும் சேர்ந்து கொண்டது.
1 comment:
mkum. IMDB நாங்க பார்த்துக்க மாட்டமா. டொரண்ட் எங்க?:))). பை தி வே க்ரிஸ்ப் ரெவ்யூ
Post a Comment