Monday, February 4, 2013

இதுவும் ஒரு காதல் கதை - 22



இது வரை அமைதியாக இருந்த அப்பா இப்போது வாயைத் திறந்தார். “அப்ப நாங்கதான் அப்பிடி வளர்த்துருக்கோம்னு சொல்றீங்களா? எங்க வீட்டுலயும் ஒரு பொண்ணு இருக்குதுங்க. அதுவும் பள்ளிக்கோடத்துக்கும் காலேசுக்கும் போயிட்டுத்தான் வந்திச்சி. நாங்க வீட்டுல பார்த்த மாப்பிள்ளையத்தான் கட்டிக்கிட்டு இந்தா சந்தோசமா வாழ்ந்துட்டு இருக்கு. அது ஒண்ணும் காதல் கத்திரிக்கான்னு உங்க வீட்டுப் பொண்ணு மாதிரி வந்து நிக்கலை.”

கூட்டத்தில் கட்டுச் சோத்தை அவிழ்த்துவிட்டார் அப்பா. அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு யார் என்ன பேசுகிறார்கள் என்பதே புரியவில்லை. ஆள் ஆளுக்குக் கூச்சல் ஒரே குழப்பம். நானும் மாப்பிள்ளையும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு நின்றிருந்தோம். தங்கையும் அம்மாவும் அப்பாவை அடக்கிக் கொண்டிருந்தார்கள். சத்தங்கள் வடிந்து கொஞ்சம் கேப் கிடைத்ததும் மாப்பிள்ளை மாலாவின் அப்பாவைப் பார்த்து ஆரம்பித்தார்.

“சார்! உங்க பக்கமும் பேசினீங்க, எங்க மாமாவும் பேசிட்டார். இதுக்கு மேல இதைப் பிரச்சனையாக்க வேண்டாம். நாங்க முறைப்படி பொண்ணு கேட்டு வந்துட்டோம். நீங்க பொண்ணு குடுக்க முடியாதுன்னு சொல்லிட்டீங்க. நாங்க இப்பிடியே கிளம்புறோம். மறுபடியும் ஒருதடவை உங்க பொண்ணோட வாழ்க்கையைப் பத்தி நினைச்சிப் பார்த்துட்டு எந்த முடிவா இருந்தாலும் எடுங்க”

எல்லாரும் திரும்பினோம். மாலாவைப் பார்த்தேன். கண்கள் கலங்கியிருந்தது. அவள் அம்மா என்னவோ எங்களைக்காட்டிக் காட்டி ஆவேசமாக அதே சமயம் மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தார். கண்களாலாவது விடைபெற்றுச் செல்லலாம் என்று நினைத்தால் என் கண்களைச் சந்தித்ததும் தலையைக் குனிந்து கொண்டாள். என்ன நினைக்கிறாள் என்று தெரியாமலே கிளம்பி வந்துவிட்டோம். வரும் வழியில் 15 மெசேஜ் அனுப்பிவிட்டேன். அவளிடமிருந்து பதிலே இல்லை.

இது மாதிரி எதாவது நடக்கும் என்று எதிர்பார்த்தேன். அப்பா சொன்னது அவள் மனதை பாதித்துவிட்டது. இருக்கும். எந்தப் பெண் தான் தன் வளர்ப்பு சரியில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்வாள். சமாதானம் ஆவாளா? இல்லை தன் வருங்கால மாமனாரே இப்படி ஒரு எண்ணம் வைத்திருக்கிறார் என்பதால் மறுத்துவிடுவாளா. அனுப்பும் மெசேஜ் எதற்கும் பதில் இல்லையே?? அழைத்துப் பார்த்தேன் ஸ்விட்ச்ட் ஆஃப் என்றே வந்தது.

அவளாக அழைத்தால் தான் உண்டு. ஆனால், அவர்கள் வீட்டிலும் என்னைப் பேசினார்களே?? காசுக்காக நான் வலை விரிக்கிறேன் என்று அவள் மாமாவும் என்னை ஏசினாரே?? அது மட்டும் சரியா? நான் மட்டும் பொறுத்துப் போகவேண்டும், அவள் மட்டும் எகிறுவாளா?? இது என்ன ஒரு பக்க நியாயமாக இருக்கிறது? வரட்டும். பேசுவது என்று வரும்போது நானும் கேட்கத்தான் போகிறேன். அவர்கள் வீட்டில் என்னைப் பேசியதற்கு என் அப்பா அவளைப் பேசியது சரியாகப் போய்விட்டது. இதற்கு மேல் அவள் இதை வளர்க்காமல் இருக்க வேண்டும்.

அடுத்த நாள் மாலை தான் பெங்களூருக்குத் திரும்புவது என்பதால் நிலை கொள்ளாமல் தவித்தேன். 24 மணி நேரத்தைக் கடத்த வேண்டுமே?

மாப்பிள்ளையும் தங்கையும் அன்றிரவே தூத்துக்குடி போய்விட்டனர். அப்பா தண்ணியடித்துவிட்டு வந்து கண்டபடி என்னையும் மாலாவின் குடும்பத்தினரையும் ஏசிக்கொண்டே இருந்தார். கேட்கப் பொறுக்காமல் அவரிடம் சண்டை போட்டபோது அம்மா வந்து சமாதானம் செய்தார். தூக்கம் வராமல் புரண்டு கொண்டே இருந்து விட்டு அதிகாலை மூன்று மணிக்கு மேல் படுத்தேன்.

******************

அடுத்த நாள் பஸ் ஏறும் வரை மாலாவிடம் இருந்து செய்தி இல்லை. ஒரே பஸ்ஸில் நான் இங்கிருந்தும் மாலா திண்டுக்கல்லிலும் ஏறுவது போல டிக்கெட் புக் செய்திருந்தோம். இப்போது செய்தி எதுவும் வரவில்லை என்றாலும் திண்டுக்கல்லில் ஏறத்தானே வேண்டும். அப்போது பார்த்துக் கொள்வோம் என்று மனதை சமாதானப் படுத்திவிட்டு உட்கார்ந்தேன். வார நாள் ஆனதால் பஸ்ஸில் அவ்வளவாக கூட்டமில்லை. பஸ் எப்படா திண்டுக்கல் வரும் என்றிருந்தது, விருதுநகரிலும் மதுரையிலும் நின்று ஆட்களை ஏற்றிப் போன பஸ் திண்டுக்கல்லில் நின்றது. இருள் கவியத் துவங்கியிருந்தது. மாலாவின் அப்பா மாமா என்று யாராவது வந்திருந்தால் தேவையில்லாமல் பிரச்சனை ஆகும் என்பதால் தலையை வெளியே காட்டாமல் உட்கார்ந்திருந்தேன்.

முதலில் ஒரு 50-60 வயதான அம்மா ஒருவர் ஏறினார். டிரைவருக்குப் பின்னாலிருந்த சீட்டில் உட்கார்ந்து கொண்டார். இரண்டு நிமிடம் கழிந்த பின் மாலா ஏறினாள். தோளில் மாட்டியிருந்த கைப்பையை நெஞ்சோடு அணைத்தவாறு உள்ளே வந்தாள். வெள்ளை நிற சுடிதார், நெற்றியில் மெல்லிய பொட்டு, தோள் வரை தொங்கியிருந்த பெரிய வளைய தோடு, கழுத்தில் புதியதாக ஒரு மெல்லிய சங்கிலி என மிதந்து வந்தாள். முதல் நாள் கேபிஎன் பஸ்ஸில் நான் பார்த்தது போலவே இருந்தாள்.

ஜன்னலோர சீட்டில் உட்காருவாள் என்பதால் வழி விட எழுந்து நின்றேன். எரிக்கும் பார்வை ஒன்றைத் தந்துவிட்டு எனக்கு முன்னால் காலியாக இருந்த சீட்டில் உட்கார்ந்தாள்.

இடி விழுந்தது போல இருந்தது. அப்பா பேசியது அவளை பாதித்துவிட்டதா?? இல்லை லேசாக விழுந்த கீறலில் ஆப்பை நுழைந்த்து அதிகமாக்கிவிட்டார்களா??? தலையைப் பிடித்துக் கொண்டு சீட்டில் சாய்ந்து உட்கார்ந்தேன். வாழ்க்கை அவ்வளவுதானா?? இவள் இல்லாமல் எப்படி இருப்பேன். என்ன காதலித்திருக்கிறாள் இவள். ஒரு வார்த்தை என் அப்பா சொன்னதுக்காக முறிந்து போய்விடுமளவுக்கு மெல்லியதா இவள் காதல்? கண்டதையும் யோசித்துக் கொண்டே கண்ணை மூடினேன். பஸ் கிளம்பி நகர ஆரம்பித்தது.

மூடிய கண்களைத் திறக்காமலே அமர்ந்திருந்தேன். தலையில் பொத்தென்று வெயிட்டாக எதோ விழ திடுக்கெட்டு எழுந்தேன். ஹேண்ட்பேகைத் தலைக்கு மேல் தூக்கியவாறு நின்றிருந்தாள் மாலா.

“எந்திரி”

நான் அனிச்சையாக எழவும் உள்ளே போய் ஜன்னல் சீட்டில் உட்கார்ந்தாள். “உக்காரு” சத்தம் காட்டாமல் உட்கார்ந்தேன்.

“இந்தா பாரு. உங்கப்பாட்ட சொல்லி வை. ரொம்பப் பேசுறாரு. கல்யாணத்துக்கு அப்புறமெல்லாம் இப்பிடிப் பேசுனாருன்னா நேத்து மாதிரி சும்மா பாத்துட்டு இருக்கமாட்டேன்”

எனக்கு உயிர் திரும்பிவந்தது போல இருந்தது. “யம்மா, தாயே.. பால வார்த்த. அப்புறம் எதுக்கு வந்தவ என் கிட்ட உக்காராம அந்த சீட்ல உக்காந்தியாம்”

“வெளிய எங்கப்பாவும் மாமாவும் வழியனுப்ப வந்திருந்தாங்க. அதான் பஸ் போற வரைக்கும் அந்த சீட்ல உக்காந்தேன். நீயும் நல்ல வேளையா எய்ல்ல உக்காந்திருந்த”

ஓ இதுதான் சங்கதியா.. “சரி என்ன சொல்றாங்க உங்க வீட்டுல”

“நேத்து நீங்க எல்லாம் கிளம்பின பிறகு ஆரம்பிச்ச அட்வைஸ் மழை இப்போதான் முடிஞ்சது. எங்க பாட்டி, மாமா, அத்தைன்னு எல்லாம் கூடி உக்காந்து அட்வைஸ். போதாக்குறைக்கு சென்னையில இருக்கிற மாமா வேற ஃபோன் பண்ணி அட்வைஸ் பண்றாரு. அந்த மாமா நல்லவருதான். அவர் பசங்க யாரும் இப்பிடி லவ்னு வந்து நின்னா எதுவும் சொல்ல மாட்டாரு. ஆனா எங்கப்பாவுக்காகத்தான் இந்த அட்வைஸ் எல்லாம் செய்யறாரு ”

“நான் தான் சொன்னேனே. இதெல்லாம் சரிப்பட்டு வராது. இருக்கிற சிக்கலை இன்னும் அதிகமாக்கிடும்னு”

“சிக்கல் அதிகமானா ஆகட்டும்னு தான் நான் பொண்ணு கேட்டு வரச்சொன்னேன். இப்ப என் பிடிவாதத்தைப் பார்த்துட்டு எங்க வீட்டுல வார்த்தை விட்டுட்டாங்க. அவனைத்தான் கட்டிக்கணும்னா எங்கிட்டாவது கண்காணாமப் போய்க் கல்யாணம் பண்ணிக்கோ. எங்க பொண்ணு செத்துப் போச்சின்னு நாங்க இருந்துர்றோம்னு”

“என்ன சொல்ற மாலா?? பாசமான பொண்ணு, குடும்ப குலவிளக்குன்னு எல்லாம் சொன்னாங்க. இப்ப இப்பிடிச் சொல்லிட்டாங்களா?”

“டேய் உடனே எங்க வீட்டை வாராத. அட்வைஸ் செய்யும்போது வந்து விழுற வார்த்தைதான். அதுக்காக அவங்க அப்பிடி விட்டுருவாங்கன்னு நினைக்காத”

எனக்குக் குழப்பம் அதிகமானது. ”இப்ப என்னதான் சொல்ல வர்ற?”

“நம்ம கல்யாணத்துக்கு உடனே ஏற்பாடு பண்ணனும். இன்னும் மூணு-ஆறு மாசத்துக்குள்ள கல்யாணம்”

(தொடரும்)

அடுத்த பாகம் இங்கே

No comments: