Tuesday, April 16, 2013

ப்ளூ மர்டர் எக்ஸ்ப்ரஸ்

jigsaw_puzzle
சதாசிவம் படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்தவாறே உள்ளங்கைகளைப் பரபரவெனத் தேய்த்து மூடிய கண்களின் மீது அரை நிமிடம் வைத்துக் கொண்டார். “அம்மா, அப்பா எழுந்துட்டார்” குரல் கொடுத்தவாறு அறையின் மூலையில் இருந்த கம்ப்யூட்டரை ஷட்டவுன் செய்தான் மகேஷ்.

“அம்மாவை சுடுதண்ணி போடச் சொல்லுடா. நைட் டூட்டிக்குப் போகணும்” எழுந்து அவிழ்ந்திருந்த வேட்டியை இறுக்கிக்கொண்டே பாத்ரூமை நோக்கி நடந்தார்.

வெளியே வந்தவர் சன் நியூஸைப் போட்டு உட்கார்ந்தார். பின்னால் நிழலாடுவது உணர்ந்து திரும்பினார்.

“சுடுதண்ணி பாத்ரூம்ல வச்சிருக்கு. விளாவிக்கோங்கோ”

“ம்ம்”

“கோயமுத்தூர்தானே போறேள்”

“ஆமா”

“நம்ம கொழந்தே அங்கே தானே இருக்கா? ஒரு எட்டு பாத்துட்டு வரப்டாதோ?”

“எதுக்கு? இல்ல எதுக்குங்கறேன்? என் பேச்சை மீறி வேத்து ஜாதிக்காரன் கையப் பிடிச்சுண்டு ஓடிப் போனா, அவ ஆத்து வாசல்ல நான் போய் நிக்கணுமா? ஏன் தோப்பனார் வாரத்துக்கு மூணு தரம் கோயமுத்தூர் வரேன்னு தெரியுமோன்னோ அவளுக்கு? அப்பிடிப் பாசம் இருக்கிறவளா இருந்தா ஸ்டேஷனுக்கு வந்து பாத்துருக்க மாட்டாளா?? இன்னொருக்கா அந்த ஓடுகாலி பேச்சை எடுத்துண்டு என் கிட்ட வராதே. சொல்லிட்டேன்” சேரின் கைப்பிடியில் இருந்த துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தார்.

குளித்துவிட்டு வெள்ளை சட்டை கறுப்புப் பேண்ட் மாட்டிக் கொண்டு பூஜையறைக்குள் நுழைந்தார். சம்மணமிட்டு அமர்ந்து ஸ்ரீ மாதா ஸ்ரீமஹாராக்ஞீ ஸ்ரீமத் சிம்ஹாசனேச்வரீ என்று ஆரம்பித்து லலிதா சகஸ்ஹரநாமத்தை சொல்லி முடித்து எழுந்தார். ப்ரீஃப் கேஸைத் திறந்து எதையோ சரிபார்த்தார். திருப்தி அடைந்த முகத்தோடு வெளியே வந்து கோட்டை மாட்டிக் கொண்டு சமையலறையைப் பார்த்து “பார்வதீ” என்று குரல் கொடுத்தார்.

பார்வதி இரண்டடுக்கு டிஃபன் கேரியரை எடுத்துக் கொண்டு வந்து நீட்டினார். வாங்கிக்கொண்டு “போயிட்டு வர்றேன்”

“அப்பா ஸ்டேஷனுக்கு வந்து ட்ராப் பண்ணட்டுமா?”

“வேண்டாண்டா. உனக்கேன் வீண் சிரமம். ஆட்டோ பிடிச்சிண்டு போயிடுவேன்” சொன்ன படியே வெளியே வந்து ஆட்டோ பிடித்து பெரம்பூர் ஸ்டேஷன் வந்தார். ஸ்டேஷன் மாஸ்டர் இவரைப் பார்த்ததும் சினேகமாகப் புன்னகைக்க, பதிலுக்கு கையை உயர்த்திவிட்டு வந்து நின்ற எலெக்ட்ரிக் ட்ரெயின் ஏறினார். செண்ட்ரலில் இறங்கி பார்க் ஸ்டேஷன் நோக்கி நடந்தார். பார்க் ஸ்டேஷன் வாசலில் தான் இவர் வழக்கமாக பீடா வாங்கும் கடை இருக்கிறது.

சப்வேயில் இருந்து மேலே வந்ததும் எதிரே இருந்த பீடாக் கடை மாரி இவரைப் பார்த்து சிரித்தான். “வா சார். வயக்கம்போல ஜர்தா தானே?” தலையசைப்பைக் கூட கவனிக்காமல் பீடா மடிக்க ஆரம்பித்தான். பீடா மடிப்பதில் மாரி சூரன். ஒரு பெண்ணை கலவிக்கு தயார் படுத்துவதைப் போல இருக்கும் அவன் லாவகம். வெற்றிலையை எடுத்து அதன் முதுகுக் காம்பை நடுவிரலால் ஒரு நீவு நீவுவான். தேவையான தடிமனை விட அதிகமாய் இருப்பின் நீளமான அவன் கட்டை விரல் நகத்தையும் மோதிர விரல் நகத்தையும் வைத்து அளவுக்கதிகமான காம்பைக் கிள்ளி எறிவான். ஒரு பீடாவை மட்டும் அவன் மடித்ததை யாரும் பார்த்திருக்கவே முடியாது. குறைந்தது இரண்டு பீடாக்களையாவது சேர்த்துத்தான் மடிப்பான். இரண்டு இலைகளையும் முன்னால் வைத்துக்கொண்டு பீடாவின் வகைக்கேற்ப தேவையான பொருட்களை அவன் சேர்த்துக் கொண்டே வருவது ஒரு இசையமைப்பாளர் இசையைக் கோர்ப்பது போல இருக்கும்.

“சாருக்கு குல்கந்து கொஞ்சம் தூக்கலா வேணும்” பக்கத்தில் நின்றிருந்த அப்ரசண்டியிடம் பேசிக்கொண்டே இரண்டு கரண்டிகள் குல்கந்தை எடுத்து இலையில் கொட்டினான். எடுத்தது இரண்டு கரண்டி என்றாலும் எல்லாருக்கும் வைக்கும் அதே அளவு தான் விழுந்திருக்கும். அவன் நேக்கு அப்படி. வெற்றிலையை மடித்து கிராம்பு ஒன்றைக் குத்தி கொடுத்தான் என்றால் வாயில் போட்டு கடித்த பின் தான் உள்ளே இருப்பவை வெளியே வரும். அவ்வளவு கச்சிதம்.

“பார்சல் தானே?”

“ஆமா”

ஒரு சிறிய பாலித்தீன் பையில் போட்டு அவரிடம் நீட்டினான். வாங்கி சாப்பாடு வைத்திருந்த கூடைக்குள் வைத்துவிட்டு இருபது ரூபாயை நீட்டினார்.

“அஞ்சு ரூவா சில்லறை இல்லயே சார்”

“பரவாயில்ல. அடுத்த வாட்டி அட்ஜஸ்ட் செஞ்சிக்கோ” என்று திரும்பி நடந்தார். “அதான அய்யராவது சும்மா காசைத் தூக்கிக் குடுக்குறதாவது” அவன் பேசியது அவர் முதுகில் மோதியது. மீண்டும் சப்வேயில் நுழைந்து மறுபக்கம் போய் செண்டரலுக்குள் நுழைந்தார். டி.டி.ஈ ரூம் வந்து ப்ரீஃப் கேஸையும் சாப்பாடு கூடையையும் பத்திரமாக ஷெல்ஃபுக்குள் பூட்டி வைத்துவிட்டு சார்ட் வாங்க நடந்தார்.

சைன் ஆன் செய்து சார்ட்டை வாங்கிக் கொண்டு திரும்பி நடக்கும்போது சுந்தரம் எதிரில் வந்தார். “இருடா நானும் வாங்கிண்டு வந்துடறேன்” நீண்ட நாள் நண்பர். வா போ என்று ஒருமையில் அழைக்கும் உரிமை பெற்றவர்.

திரும்பி வந்தவர், “ஆமா வாலண்டரி ரிட்டயர்மெண்ட் குடுத்துட்டீயாமே? என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல”

“அட அதுக்குள்ள நியூஸ் வந்திருச்சா? ஆமாம்பா. பையன் கேம்பஸ்ல கிடைச்ச வேலைல அடுத்த மாசம் ஜாயின் பண்றான். குர்கான்ல. நானும் டியூட்டிக்கு வந்துட்டா வீட்டுல ஆம்படையா மட்டும் தனியா இருந்துண்டிருப்பால்லியோ. அதான் பேசாம ரிட்டையர்மெண்ட் குடுத்துட்டு அவ கூடவே இருக்கலாமேன்னு”

“உனக்கென்ன டா ஒரே பொண்ணையும் கைக் காசு ஒரு பைசா செலவில்லாம கட்டிக் குடுத்துட்ட. பேஷா ரிட்டயராயிட்டு ஆத்துல உக்காந்துண்டு சேத்து வச்ச பணத்தை செலவு செய்ய வேண்டியதுதான்”

“அட சும்மாருடா. நான் செஞ்சி வச்சிருந்தா எவ்வளவு செலவு செஞ்சிருப்பேனோ அந்தப் பணத்தை அவ மூஞ்சில விட்டெறிஞ்சிட்டேன்னு நோக்குத் தெரியுமோன்னோ? நீயே இப்பிடி கேலி பேசலாமோ?”

“ஏய் சும்மா சொன்னேண்டா. உடனே கோச்சிண்டு சண்டைக்கு வராதே. என்ன ஏ.சிதானா இன்னைக்கும்?”

“ஆமாம்.”

“ம்ம்.. நீ அதிர்ஷ்டக்காரன். நீ சும்மாவே நல்ல கலரு. இதுல டெய்லி ஏசி கோச்ல போய் இன்னும் புது மாப்பிள்ளை மாதிரி ஷைன் ஆகிண்டே வர்ற. என்னையப் பாரு. நான் ஸ்லீப்பர் கோச்சுல பொசுங்கி கருப்பாகிண்டே போறன்.”

“அடச் சும்மாருடா. அவங்கவங்க கஷ்டம் அவங்களுக்கு. விஐபிஸ் வரதும், அவங்களைக் கால்ல விழாத குறையா தாங்குறதுமா ஓடிண்டிருக்கு நேக்கு. சரி நேரமாச்சு ப்ளாட்ஃபார்ம் போலாமா?”

மறக்காமல் ப்ரீஃப்கேஸையும் சாப்பாட்டையும் எடுத்துக்கொண்டு ப்ளாட்ஃபார்ம் நோக்கி நடந்தார். ஸ்லீப்பர் கோச்சுகளின் பக்கத்தில் வந்ததும் சுந்தரத்தை ஆட்கள் சுற்றிவளைத்தார்கள். வெயிட்டிங் லிஸ்ட் கேஸ்களாக இருக்கும். மொய்க்கும் ஆட்களைப் பார்த்தால் சுந்தரத்துக்கு இன்று எப்படியும் கணிசமாகத் தேறும். இப்படி ஒரு நாளில் தானே... நினைத்துக் கொண்டே “நைட் டின்னர் சாப்புட என் சீட்டுக்கு வர்றியா?” கூட்டத்துக்கு நடுவில் தலையை மட்டும் ஆட்டி வைத்தார் சுந்தரம்.

எச்-1 பக்கத்தில் வந்ததும் இரண்டு பேர் வந்து டிக்கெட் நீட்டி, “சார் கன்ஃபர்ம் ஆயிடுச்சான்னு பாருங்க” என்றனர். கண்டிப்பாக பெட்டியில் ஒட்டப்பட்டிருக்கும் சார்ட்டில் பார்த்திருப்பார்கள். அடுத்து என்ன கேட்பார்கள் என்றும் தெரியும். கையில் இருந்த சார்ட்டில் செக் செய்துவிட்டு, “இல்லைங்க. கன்ஃபர்ம் ஆவலை. வெயிட்டிங் லிஸ்ட் தான்”

“சார் எப்பிடியாவது..” தலையைச் சொறிந்தனர். லேசாக சபலம் தட்டியது. இன்னும் ஒரு மாதம் தான். அதற்குள் கறுப்புப் புள்ளி எதுவும் விழ வேண்டாம். “வேக்கன்ஸி இல்லாததால தான வெயிட்டிங் லிஸ்ட். அப்புறம் எப்பிடி? போங்க சார். போய் டிக்கெட்டை கேன்சல் பண்ணிட்டு காசு வாங்கப் பாருங்க” பெட்டிக்குள் ஏறினார். தன் இருக்கையில் ப்ரீஃப்கேஸையும் சாப்பாட்டுப் பையையும் வைத்தார். ட்ரெயின் கிளம்பும் வரை காத்திருந்து விட்டு டிக்கெட் செக் செய்ய கிளம்பினார்.

டிக்கெட் எல்லாம் பரிசோதித்து விட்டு தன் இருக்கைக்குத் திரும்பினார். சுந்தரம் வந்து டின்னர் முடித்துவிட்டு தன் பெட்டிக்குத் திரும்பியபின், சாப்பாட்டுப் பையில் வைத்திருந்த பீடாவை எடுத்து வாயில் போட்டு மென்றுவிட்டு வாயைக் கொப்புளித்துவிட்டு வந்து படுத்தார்.

*****************************************************************

கோச் அட்டெண்டெண்ட் யாரும் தூங்கிக்கொண்டு இருக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டே வந்தார். டி.டி.ஈயின் சீட்டில் யாரோ படுத்திருப்பது போல் தெரியவே படுதாவை விலக்கிப் பார்த்தார். அங்கே சதாசிவம் செத்துப் போயிருந்தார்.

3 comments:

நாடோடி இலக்கியன் said...

அடுத்தடுத்த பார்ட்டில் பார்ப்போம்... நடை நல்லாயிருக்கு..

இன்னும் தலைப்பு வைக்கலை – 2 said...

[...] முதல் பகுதி [...]

Unknown said...

Thambi, super. I don't expect this much from u