Thursday, January 16, 2014

ப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - 9

முந்தைய பாகம்

கமிஷனர் அலுவலகம். 

அருணின் சீட்டின் எதிரில் சிவா உட்கார்ந்திருந்தார். 

"சார் நீங்க சொன்ன மாதிரி டி.டி.இயோட ட்யூட்டி ரோஸ்டர், நமச்சிவாயத்தோட ட்ராவல் டீட்டெயில்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணிட்டு வந்துட்டேன். சிவகுருவோட பேரண்ட்ஸ் பையனோட அஸ்தியைக் கரைக்க காசிக்குப் போயிருக்காங்க. அவங்களைப் பிடிக்க முடியலை. சோ, சிவகுரு ஆன்லைன்ல ரிசர்வ் பண்ணி ட்ராவல் பண்ண டேட்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துட்டேன்.

"நமச்சிவாயம் ரொம்ப ரேரா ட்ராவல் பண்றவர். அவர் கொள்முதல் பண்ற சரக்கை லாரியில போட்டுவிட லேட்டாயிருச்சின்னா அவரே ரயில்ல போட்டுக்கிட்டு சென்னை போறவர். கடைசி நிமிஷத்த்துல தான் பிரயாணம் உறுதியாகுங்கிறதால எப்பவுமே அன் ரிசர்வ்ட் தான். அவர் சென்னை வந்துட்டுத் திரும்பிப் போன நாள்ல எஸ்-1, 2, 3, 4 இந்த கோச்சஸ்ல சதாசிவம் டி.டி.ஈயா போயிருக்காரு. பட் அந்த டேட்ல சிவகுரு பிரயாணம் பண்ணலை. அதோட அது வீக் டே வேற. சிவகுரு வீக் எண்ட்ல தான் ட்ராவல் பண்றவன். சோ, இந்த ஆங்கிள் ஒர்க் அவுட் ஆகும்னு தோணலை சார்"

"சிவகுரு பேரண்ட்ஸ் இல்லைன்னா பரவாயில்லை. அவன் கேர்ள் ஃப்ரண்ட் மீனா இருக்காளே? அந்தப் பொண்ணுகிட்ட கேளுங்க. அன் யூசுவலா வீக் டேய்ஸ்ல ட்ராவல் பண்ணியிருந்தான்னா கண்டிப்பா நினைவுல இருக்கும்."

"ஓக்கே சார் விசாரிக்கிறேன்"

"அதோட எனக்கு அந்த டேட்ல எஸ்-4 கோச்சோட ரிசர்வேஷன் சார்ட் வேணும். ஏற்பாடு பண்ணுங்க. அப்புறம் அந்த டேட்ல இந்த ரூட்ல ஏதாச்சும் ஆக்ஸிடண்ட்ஸ் ஆர் இன்ஸிடெண்ட்ஸ் நம்ம போலீஸ் அல்லது ரயில்வே போலீஸ்ல ரெஜிஸ்டர் ஆகியிருக்கான்னும் விசாரிங்க. ஜஸ்ட் அ ஹன்ச்"

"ஷ்யூர் சார். ஈவினிங் எல்லா டீட்டெயில்ஸோடவும் உங்களை மீட் பண்றேன்"

********************************************* 

வேலூர் அரசு மருத்துவமனை. மரத்தடியில் நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த முத்து தூரத்தில் கொடி கட்டிய சுமோ வந்ததைப் பார்த்ததும் சிகரெட்டைக் கீழே போட்டு காலால் அணைத்தான். சுமோ நிழலாகப் பார்த்து பார்க் செய்த உடன், சுமோவை நோக்கி நகர்ந்து கதவைத் திறந்தான்.

டிரைவர் சீட்டில் உட்கார்ந்திருந்த சொக்கலிங்கத்தைப் பார்த்ததும் "வணக்கம் தல. ட்ராவல் கஷ்டமா இல்லையே?"

"அதான் நம்ம ஆட்சியில நாலு ரோடு போட்டு வச்சிருக்கோமே. கார் வெண்ணை மாதிரி வழுக்கிக்கிட்டு வந்திருச்சி"

அதற்குள் வைத்தி வீல் சேரை விரித்து வைத்திருக்க, முத்து இரண்டு கைகளையும் நீட்டி சொக்கலிங்கத்தை வீல் சேரில் இறக்கி வைத்தான். மருத்துவமனையின் மருந்தும் பினாயிலும் கலந்த நெடி மூக்கைத் துளைத்தது. ஹால்வேயில் ஒரு புறம் அவுட் பேஷண்டுக்கு வந்தவர்கள் வரிசையாக அமர்ந்திருந்தனர்.

"எங்கடா இருக்கான் கணேசன்?"

"ஐ சி யுல தல. ஒன்ர மாசமா கோமால இருக்கான். இன்னும் முழிக்கலை. நேத்துத்தான் கண்டு பிடிச்சேன். ரயில்வே ட்ராக் பக்கத்துல கிடந்தானாம். போலிஸ் கேஸ் ரெஜிஸ்டர் பண்ணியிருக்காங்க. இவன் முழிக்காததால இன்னும் க்ளோஸ் பண்ணாம வச்சிருக்காங்க. லோக்கல் பேப்பர்ல விளம்பரம் குடுத்துருக்காங்க. சென்னை பதிப்புல விளம்பரம் வரலை. இங்க நம்ம சகா ஒருத்தன் பேப்பர் பாத்துட்டுக் கூப்புட்டான். வந்து பார்த்து கன்ஃபர்ம் பண்ணதும் உங்களுக்கு சொல்லி விட்டுட்டேன்."

"எந்த போலீஸ் ஸ்டேஷன்னு விசாரிச்சியா? இவன் விழுந்து கிடந்தப்போ பக்கத்துல எதுனா இருந்துச்சான்னு கேட்டியா?"

"கேட்டேன் தல. நர்ஸ் வார்ட் பாய்க்கு ஒண்ணும் தெரியலை. போலீஸ் ஸ்டேஷன்ல தான் விசாரிக்கணும்."

ஐசியு வின் ஜன்னல் வழியாகப் பார்த்தார்கள். தலையைச் சுற்றி கட்டு போடப்பட்டு மூக்கில் மேல் பொருத்தப்பட்டிருந்த ட்யூபின் மூலமாக சுவாசித்துக் கொண்டிருந்தான். உயிர் இருக்கிறது என்பதை பக்கதில் பச்சை நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்த ஹார்ட் மானிட்டரில் அலையலையாக ஏறி இறங்கிக் கொண்டிருந்த இதயத் துடிப்பை வைத்துத்தான் கண்டுகொள்ள வேண்டியிருந்தது. 

"நல்லா அடி பட்டிருக்கும் போல. ரயில்ல தான போயிட்டு இருந்தான். இவனா விழுந்துட்டானா இல்லை வேற எவனும் தள்ளி விட்டுட்டானான்னு தெரியலையே. சரி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போவோம்"

போகும் வழியிலேயே லோக்கல் கட்சிப் பிரமுகர்களிடம் சொல்லி போலீஸ் ஸ்டேஷனில் தேவையான மரியாதை கிடைக்க வழி செய்துவிட்டு போய் இறங்கினார்கள். உள்ளே நுழைந்ததும் ரைட்டர் சீட்டிலிருந்து எழுந்து வந்து கும்பிடு போட்டார். "எஸ் ஐ உள்ளதான் இருக்காரு சார். போய்ப் பாருங்க". 

எஸ்ஐ எழுந்து கை கொடுத்தார். "அந்தப் பேஷண்ட் பேர் என்ன சொன்னீங்க சார்?" 

"கணேசன்"

"ம் கணேசன். நீங்க சொல்லித்தான் அந்தாளோட பேரே தெரியும். ஒன்ர மாசத்துக்கு முன்னாடி ரயில்வே ட்ராக் பக்கத்துல கிடந்ததா அங்க இருக்கிற ஸ்லம் ஆட்கள் 108 ஃபோன் பண்ணி ஹாஸ்பிட்டல்ல அட்மிட் செஞ்சிருந்தாங்க. நாங்களும் ஒரு பேருக்கு கேஸ் ஃபைல் பண்ணிட்டு லோக்கல் பேப்பர்ல விளம்பரம் குடுத்து தேடுனோம். அவன் கண் முழிக்கிற வரைக்கும் இந்த கேஸ்ல ஒரு இம்ப்ரூவ்மெண்டும் இல்லன்னு நினைச்சிட்டு இருந்தோம். நல்ல வேளையா நீங்க ஒரு லின்க் குடுத்திருக்கீங்க. அவனைப் பத்திச் சொல்லுங்க"

"அவன் என் கிட்ட வேலை பாக்குறான். ஒரு விசயமா அவனை கோயமுத்தூருக்கு அனுப்பி வைச்சேன். அவன் அங்கயும் போய்ச் சேரலை. இத்தனை நாளா எங்க எங்கயோ தேடுனோம். இப்பத்தான் இங்க இருக்கான்னு விசயம் தெரிஞ்சி வந்தோம்"

"எந்த ட்ரெயின்ல வந்தாருன்னு தெரியுமா?"

"ப்ளூ மவுண்டன். சார் அவன் விழுந்து கிடந்த எடத்துல எதுவும் பெட்டி பைன்னு கிடைச்சதா?"

"எதுவும் கிடைக்கலை. அதான் இவர் ட்ரெயின்ல வந்திருப்பாருன்னு நாங்க கெஸ் பண்ணவே இல்லை"

பேசிக் கொண்டிருந்த போதே ரைட்டர் உள்ளே வந்தார். 

"சார் ஹாஸ்பிட்டல்ல இருந்து ஃபோன் வந்திருக்கு. அந்த பேஷண்ட் கண் முழிச்சிட்டானாம். விசாரிக்க வரணும்னா வரலாம்னு சொன்னாங்க"

"ஓ கிரேட்." மேஜை மீதிருந்த தொப்பியையும் லட்டியையும் எடுத்துக் கொண்டு எழுந்தார்.

சொக்கலிங்கம் இடை மறித்தார். "எஸ். ஐ சார் நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா நாங்க முதல்ல பாத்து விசாரிச்சிட்டு வர்றோம். அதுக்குப் பிறகு நீங்க வர்றீங்களா?"

"ம்ம்… ஓக்கே சார். உங்களுக்காக இது கூட செய்யலைன்னா எப்பிடி? நீங்க பேசிட்டு எனக்குக் கூப்புடுங்க அதுக்குப் பிறகு வர்றேன்"

சுமோ மீண்டும் ஜி.எச்க்குப் போனது. 

ஐ.சி.யுவுக்கு வெளியே நர்ஸிடம் விசாரித்தார்கள். 

"ஆமாங்க கண்ணு முழிச்சிட்டாரு. முழிச்சதும் வட்டம், சொக்கலிங்கம்னு கேட்டாரு. உங்கள்ல யாரு சொக்கலிங்கம் அவரு மட்டும் உள்ள போய்ப் பாருங்க"

சொக்கலிங்கத்திற்கு மனதைப் பிசைந்தது. 'இவனைப் போய் தப்பா நினைச்சிட்டோமே' என்ற எண்ணம் தலை தூக்கியது. 

வைத்தி வீல் சேரை உருட்டிக் கொண்டு போய் உள்ளே வைத்துவிட்டு வெளியே போனான். 

கணேசனின் காதருகே குனிந்து, "கணேசா.. கணேசா.." என்று அழைத்தார் சொக்கலிங்கம்.

குரல் கேட்டதும் கண் திறந்த கணேசன், ஒரு முறை நன்றாக சொக்கலிங்கத்தைப் பார்த்துவிட்டு, "அண்ணே.. வந்துட்டீங்களா?"

"என்னடா ஆச்சி? ஏன் இப்பிடிக் கிடக்க?"

"அண்ணே நீங்க சொன்னாமேரி ரயில்ல ஏறி வந்திட்டு இருந்தேன், அப்ப…"

*************************************

ப்ளூ மவுண்டன் எக்ஸ்பிரஸ் சென்ட்ரல் ஸ்டேஷனின் பத்தாவது ப்ளாட்ஃபார்மில் புறப்படத் தயாராக நின்று கொண்டிருந்தது. கையில் ஹெல்மெட், தோளில் தொங்கிய பையுடன் ஓடி வந்தான் சிவகுரு. இடது கையில் ஒரு அன்ரிசர்வ்ட் டிக்கெட். எஸ்-1 அருகில் வரும்போது ஓரமாக நின்றுகொண்டிருந்த டி.டி.இ.ஐயைப் பார்ததும் நின்றான். ஒரு சில விநாடி தயக்கத்திற்குப் பிறகு மெதுவாக அவரை நெருங்கினான். 

"சார், அவைலபிளிட்டி ஏதாச்சும் இருக்குமா சார்? லாஸ்ட் மினிட் ப்ளன் பண்ணதால அன் ரிசர்வ்ட் தான் எடுக்க முடிஞ்சது. கொஞ்சம் பாருங்களேன். எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல சார்"

கையில் வைத்திருந்த சார்ட்டில் பார்வையைப் பதித்திருந்த சதாசிவம் குரல் வந்த திசையை நோக்கித் தலையைத் திருப்பினார். இளைஞன். கழுத்தில் திக்கான செயின், கையில் விலையுயர்ந்த வாட்ச், ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் துருத்திக்கொண்டு தெரிந்த செல்ஃபோன் இதையெல்லாம் பார்க்கும் போது இவனுக்கு ஏசிக்குக் குறைந்து எதிலும் பயணம் செய்து பழக்கமே இருந்திருக்காது என்று தோன்றியது. 

சார்ட்டை மீண்டும் ஒருமுறை மேலும் கீழுமாகப் பார்த்தவர், 

"கேன்சலேஷன் எதுவும் இல்லை. நோ ஷோ இருந்தாக்கூட ரெண்டு ஆர்.ஏ.சி இருக்கு. அவங்களுக்குத்தான் பெர்த் தரவேண்டியிருக்கும். ஒண்ணும் பண்ண முடியாதுப்பா"

"சார் சார் அப்பிடிச் சொல்லாதீங்க சார். அன் ரிசர்வ்ட்ல போனதே இல்லை. பஸ்ல போறது ஒத்துக்காது. அதான் இங்கயே வந்துட்டேன். கொஞ்சம் பாருங்க சார்" இப்போது சிவகுருவின் கையில் ஒரு ஐநூறு ரூபாய் முளைத்திருந்தது. 

ஐநூறு ரூபாயைப் பார்த்ததும் சுற்றும் முற்றும் பார்த்தார். கையை நீட்டி நோட்டைப் பிடுங்கிக் கொண்டு, "சரி எஸ்3, 51ல உக்காருங்க. அரக்கோணம் வர்றதுக்குள்ள மாத்தி விடுறேன்" கோட்டுக்குள் பணத்தைத் திணித்துக் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார். 

சிவகுரு திரும்பி நடக்கவும் இருட்டில் நின்று கொண்டிருந்த நமச்சிவாயம் சதாசிவத்தை நெருங்கினார். தலையைச் சொறிந்துகொண்டே "சார் அப்புடியே நமக்கும் கொஞ்சம் பாருங் சார்" 

"ஐநூறு ஆவும், பரவாயில்லயா؟"

"சார் அவ்ளோ இல்லீங்க். பாத்து சொல்லுங்க்"

"எவ்வளவு வச்சிருக்க؟'

"முந்நூறு இருக்குதுங்க்"

"முந்நூறெல்லாம் பத்தாது. கெளம்பு கெளம்பு"

"காலைல எறங்கின பிற்பாடு பஸ் டிக்கெட்டுக்கு ஒரு அம்பது இருக்குதுங்க். அத வேண்னாலும் வாங்கிக்ங். கக்கூச வாசம் புடிச்சிட்டே போய் வெறுத்துப்போச்சிங்க். ஒரு தரமாட்டு படுத்துட்டே போகோணொம்னு கொள்ள ஆசைங்க். பாத்து செய்யுங்க்" 

கிட்டத்தட்ட கெஞ்சும் குரலில் சொல்லவும், சதாசிவம் மனமிறங்கினார். 

"சரி சரி. காசை எடு". வாங்கிப்பையில் வைத்துக்கொண்டு, "எஸ் 3ல 52ல உக்காரு. வந்து பெர்த் குடுக்குறேன்". 

சொன்னது போலவே அரக்கோணம் வருவதற்குள் இருவருக்கும் எஸ்3யிலேயே பெர்த் ஒதுக்கிக் கொடுத்தார் சதாசிவம். சிறிது நேரம் மீனாவுடன் எஸ்.எம்.எஸ்ஸில் உரையாடிவிட்டு பாத்ரூம் போவதற்காக எழுந்தான் சிவகுரு. பாத்ரூம் போகும் வழியில் டி.டி.ஈக்கு ஒதுக்கப்பட்ட அறையில் சத்தம் கேட்கவே எட்டிப்பார்த்தான். அங்கே சதாசிவம், நமச்சிவாயம் இன்னும் இருவர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். பாத்ரூம் போய்விட்டு தானும் உள்ளே நுழைந்தான். 

அவனைப் பார்த்ததும் சதாசிவம் புன்னகைத்தார். 

நமச்சிவாயம், "வாங்க தம்பி. சீட்டு விளையாடுவீங்களா?"

ஆம் என்பதாகத் தலையசைக்கவும், "அப்ப உக்காருங்க ஒரு கை குறையுது" என்று சதாசிவம் சொன்னார்.

மற்ற இருவரில் ஒருவன் வேட்டி சட்டையில் இருந்தான். அதிகமாகப் படித்திருக்க மாட்டான் என்பது அவன் முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது. இன்னொருவன் ஜீன்ஸ் பேண்ட் ஏரோபோஸ்ட்ல் சட்டை போட்டு மாடர்னாக இருந்தான். அவன் அருகில் சிவகுரு அமர்ந்ததும் கையை நீட்டி "ரவி" என்றான். 

"சிவா. __ காலேஜ்ல பிஇ படிக்கிறேன்"

"நான் ____ல வேலை பார்க்கிறேன்"

மற்றவர்கள் சீட்டு விளையாட்டில் மும்முரமாக இருந்தார்கள். 

"அடிச்சாண்டா கணேசன் டிக்கு" என்று ஒரு சீட்டைக் கவிழ்த்துப் போட்டு மீதி சீட்டை மற்றவர்கள் முன்னால் ஷோ வைத்து விட்டு வலது கை ஆட்காட்டி விரலாலும் நடுவிரலாலும் மீசையை நீவி விட்டுக்கொண்டான். 

சிவா பொதுவாக, "240ஆ 320ஆ" கேட்டான்.

"ரெண்டும் இல்ல தம்பி. ஆட்டத்துக்கு 10 ரூவா. ஜெயிக்கிறவன் முழுக்க எடுத்துக்கலாம். என்ன சரியா?"

ஒரு விநாடி யோசித்துவிட்டு, "ம்ம் சரி" 

நமச்சிவாயம் சீட்டுக்களைப் பொறுக்கி கலைத்து ஆளுக்கொரு சீட்டாக ஒரே சீரான வேகத்தில் போட்டார். சிவாவும் எடுத்து விளையாட ஆரம்பித்தான். அடுத்தடுத்த ஆட்டங்களில் சிவா, ரவி, சதாசிவம், நமச்சிவாயம், மாறி மாறி ஜெயிக்க சதாசிவமும் கணேசனும் தொடர்ந்து பணத்தை இழந்து கொண்டே வந்தார்கள். 

கையில் வைத்திருந்த பணம் எல்லாம் தீர்ந்து போகவும் பக்கத்தில் வைத்திருந்த நகைக்கடைப் பையைத் திறந்து பணம் தேடினான் கணேசன். உள்ளே இருந்த சில பேப்பர்களை வெளியே எடுத்து வைத்தான். 
அந்தப் பேப்பர் ரவியின் கவனத்தை இழுக்கவே, ஒரு பேப்பரை எடுத்துப் பார்த்தான். அவன் உதடுகள் அன்னிச்சையாக வாவ் என்றது. 

"கணேசன் இது உங்களோடதா?” கணேசனைப் பார்த்துக் கேட்டான்.

“இல்லண்ணே, இது எங்க முதலாளியோடது. இதை எடுத்துக் கொண்டுபோய் கோயமுத்தூர்ல ஒரு எடத்துல குடுக்கச் சொல்லி அனுப்பி விட்டாரு”

“இது என்னன்னு தெரியாமலே கொண்டு போறீங்க. அப்பிடித்தான?”

கணேசன் பதில் சொல்லாமல் ரவியின் முகத்தையே பார்த்தான்.

“இதோட மதிப்பு எவ்வளவு தெரியுமா கணேசன்?”

“எவ்வளவா இருந்தா என்னண்ணே. முதலாளி கொண்டு போய் குடுக்கச் சொன்னாரு. கொண்டு போறேன். அவ்வளவுதான்”

கையில் இருந்த காகிதங்கள் அத்தனையையும் எண்ணினான். “பேக்ல இன்னும் ஏதாச்சும் இருக்கா?” 

இல்லை என்பதாகத் தலையாட்டினான் கணேசன்.

“மொத்தம் ஆறுகோடி. கமிஷன் போக எப்பிடியும் 5 3/4 கோடியாவது வரும்”

“இந்தப் பேப்பருக்கு அவ்ளோ மதிப்பா?” நமச்சிவாயம் வாய் திறந்தார்.

“ஆமாங்க. இதுக்குப் பேரு பேரர் பாண்ட்ஸ்னு (Bearer Bonds) சொல்லுவாங்க. இதுல ஒருத்தர் பேரும் இருக்காது. யாரு கையில இது இருக்கோ அவங்க இதைப் பணமாக்கிக்கலாம். கேள்வி கேக்காம காசு வந்துரும். வெளி நாட்டுல இது ரொம்ப ஃபேமஸ். இங்க இப்பத்தான் நான் பார்க்கிறேன்”

கணேசன் சட்டென்று காகிதங்களைப் பிடுங்கி பைக்குள் வைத்தான். “எத்தன கோடியா வேணும்னா இருக்கட்டும். உங்களுக்கென்ன. சீட்டாடுனோமா போனமான்னு இருங்க”

பையைப் பத்திரமாக தொடைக்கடியில் சொருகி வைத்துக் கொண்ட கணேசன் ஆட்டத்தைத் தொடர்ந்தான். மூன்று ஆட்டங்களுக்குப் பிறகு பாத்ரூம் போவதற்காக எழுந்த கணேசன் வாசல் வரை போய்விட்டுத் திரும்பி வந்து அந்தப் பையை எடுத்து கக்கத்தில் இடுக்கிக் கொண்டு திரும்பி நடந்தான்.

கணேசன் தலை மறைந்ததும், சீட்டுக் கடை முன்னால் போட்ட நமச்சிவாயம், ரவியைப் பார்த்து, “ஏந்தம்பி நெசமாலுமே அந்தக் காகிதத்துக்கு அம்புட்டு மதிப்பா?”

“ஆமாங்க”

“யார் கொண்டு போய் குடுத்தாலும் கேள்வி கேக்காம பணத்தைக் குடுத்துருவாளா?” சதாசிவம்.

“ஆமா சார். உண்மைதான்.”

சீட்டுக்கட்டை எடுக்க இருந்தவன் ஒரு விநாடி யோசித்தான். “டி.டி.இ சார். இப்பப் போனானே கணேசன், அவன் ரிசர்வ்ட் டிக்கெட்டா அன் ரிசர்வ்டா?”

“அன் ரிசர்வ்ட் தான். இந்தா இவா ரெண்டு பேருக்கு போட்ட மாதிரிதான் அவனுக்கும் சீட் போட்டேன்”

“குட். எனக்கு ஒரு யோசனை. இங்க இருக்கிற நாலு பேரும் அதுக்கு சம்மதிச்சாதான் செய்யமுடியும். இல்லைன்னா முடியாது. சம்மதம்னா சொல்லுங்க”

“என்ன யோசனைன்னே சொல்லாம சம்மதமான்னு கேட்டா எப்பிடி?” சிவகுரு.

“அந்த பேகை நாம எடுத்துக்கிட்டா 6 கோடி ரூபா நாலு பங்கு. ஆளுக்கு 1 1/2 கோடி. சம்மதமா?”


மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். “நாம எடுத்திக்கிறதுன்னா, அவன் சும்மா விட்ருவானா? ஆளைப் பாக்க ரவுடி மாதிரி இருக்கான். நம்ம நாலு பேரையும் அவன் ஒருத்தனே அடிச்சிருவான் மாதிரி இருக்கானே?”

“அவனை கஷ்டப்பட்டு அமுக்கி ரயில்ல இருந்து தூக்கிப் போட்டுட்டா யாருக்குத் தெரியும்? அவன் அன்ரிசர்வ்ட்ல வந்ததால எந்த ரிகார்ட்லயும் இருக்காது. அவன் ட்ரெயின்ல வந்தவனா இல்லை வேற எங்கருந்தாவது கொன்னு தூக்கிப் போட்டாங்களான்னு கூட போலீஸால கண்டு பிடிக்க முடியாது”

“ம்ம்.. கொஞ்சம் சொதப்புனாலும் நாம தொலைஞ்சோம்.”

“கவலைப் படாதீங்க. எல்லாம் நான் பார்த்துக்கிறேன். அடுத்த ஸ்டேஷன் வர இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு சார்?”

வாட்சைப் பார்த்த சதாசிவம், “அட்லீஸ்ட் அரைமணி நேரம் இருக்கு”

“ஓக்கே” சொல்லிவிட்டு எழுந்தான் ரவி. ஓரமாக மடித்து வைக்கப்பட்டிருந்த போர்வைகளில் ஒன்றை கையில் எடுத்துக் கொண்டான். “சிவா நீயும் என் கூட வா”

இருவரும் பாத்ரூமை நோக்கி நடந்தனர். ரயில் கதவைத் திறந்தான் ரவி. காற்று பலமாக முகத்தில் அறைந்தது. வெளியில் கும்மிருட்டு. “இங்க நின்னுக்கோ” என்று வாஷ்பேசினுக்கும் கதவுக்கும் இடையில் இருந்த இடததைக் காட்டினான். கையில் போர்வையைக் கொடுத்தான். 

பாத்ரூமில் இருந்து பெர்த்துக்குப் போகும் வழியை மறைத்துக் கொண்டு நின்றுகொண்டான் ரவி. பாத்ரூமில் தண்ணீர் பைப்பைத் திறக்கும் சத்தம் கேட்டது. தண்ணீர் சத்தம் நின்றதும் சிவாவிடம் சைகை காட்டினான். சிவா போர்வையை விரித்து இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டான். தாழ்ப்பாள் விலகும் ஓசை கேட்டது. கதவைத் திறந்து கொண்டு கைகளை வேட்டியில் துடைத்தபடி வந்தான் கணேசன். பெர்த்தை நோக்கி நடக்கத் திரும்பியவன் எதிரே நின்ற ரவியைப் பார்த்ததும் திகைத்து நின்றான்.

“என்னண்ணே இங்க நிக்கிறீங்க”

“எல்லாம் உங்களுக்காகத்தான் கணேசன்” பேசிக் கொண்டே முஷ்டியை மடக்கி கணேசனின் வயிற்றில் குத்து ஒன்றை இறக்கினான். எதிர்பாராமல் வந்து விழுந்த குத்தினால் லேசாக நிலை குலைந்த கணேசன் கக்கத்தில் இறுக்கிப் பிடித்திருந்த பை நெகிழ்தது. இடதுகையால் அந்தப் பையைப் பிடித்துக் கொண்டு முன்னால் லேசாக சாய்ந்திருந்த கணேசனின் தாடையில் வலதுகையால் இன்னொரு குத்தை இறக்கினான். தன்னிச்சையாக அவன் கையைப் பிடிக்க இரண்டுகைகளையும் நீட்டியவாறே பின்னால் சாய்ந்தான் கணேசன். பை இலகுவாக ரவியின் கைக்கு மாறியது. பின்னால் சாய்ந்த கணேசனின் முகத்தின் மீது விரித்துப் பிடித்த போர்வையால் மூடி இறுக்கிப் பிடித்துக் கொண்டான் சிவா.

முகத்தை மூடினாலும் பையைப் பறிகொடுத்த ஆத்திரத்தில் இரண்டு கைகளையும் காற்றில் வீசியவாறு வெறிகொண்ட மாதிரி திமிர ஆரம்பித்தான் கணேசன். 

“சிவா ஓரமா ஒதுங்கிக்கோ, போர்வையை இறுக்கமா பிடிச்சிக்கோ. விட்ராத” சொல்லிவிட்டு வலது காலை ஓங்கி கணேசனின் நெஞ்சில் உதைத்தான் ரவி. உதையின் வேகம் தாங்காமல் தள்ளாடி இரண்டடி பின்னால் போன கணேசன் கண் தெரியாமல் வாசல் பக்கம் திரும்பினான். 

“போர்வையை விட்றாத சிவா” குரலை உயர்த்தி கத்தி மறுபடியும் காலை உயர்த்தி கணேசனின் முதுகில் உதைத்தான். வாசல் வழியாக வெளியே விழுந்த கணேசன் வெளியே இருந்த போஸ்ட் மரத்தில் மோதி கீழே விழுந்தான். கணேசனைச் சுற்றியிருந்த போர்வை உருவிக் கொண்டு சிவாவின் கைக்கே வந்தது. கீழே விழுந்தவன் இழுத்த விசையில் சிவாவும் விழப் போக ரவி தாவி சிவாவின் கைகளைப் பிடித்து இழுத்தான். கதவை மூடிவிட்டு இருவரும் டி.டிஆரின் அறைக்குத் திரும்பினார்கள். 

ரவியின் கையில் இருந்த பையைப் பார்த்ததும் சதாசிவம் வேகமா எழுந்தார். கதவைச் சாத்திவிட்டு, “கணேசன் எங்க?”

“இந்நேரம் போய்ச் சேர்ந்திருப்பான். நாலு பேரும் செத்தாக்கூட யார்கிட்டயும் சொல்லக் கூடாது. சரியா?”

“இந்த பேப்பரை என்ன செய்யறது?”

“ஆறு கோடி ரூவா. ஒரே நேரத்துல வித்தோம்னா கவர்ன்மெண்டு மோப்பம் பிடிச்சிருவாங்க. எனக்குத் தெரிஞ்ச சிலர் இருக்காங்க. ஹவாலால எல்லாம் விளையாடுறவங்க. இந்த பேப்பர் எல்லாம் நான் எடுத்துட்டுப் போறேன். காசாக்கினதும் உங்க பங்கை உங்களைத் தேடி வந்து தர்றேன்”

”நோ நோ. நீங்க எடுத்துட்டுப் போயிட்டீங்கன்னா? இதுல இருக்கிற பாண்ட்ஸ் எல்லாம் நாலா பிரிச்சிருவோம் அவங்க அவங்க பங்கை அவங்கவங்க எடுத்துட்டுப் போகட்டும். உங்க காண்டாக்ட்ஸ் மூலமா பாண்ட்ஸ் விக்க ஏற்பாடு செஞ்சதும் எல்லாருக்கும் தகவல் குடுங்க. மீட் பண்ணி வித்துக் காசாக்கிட்டு அவங்க அவங்க டைரக்‌ஷன்ல போயிடலாம். எப்பிடி ஐடியா?”

“என்னை நம்பலையா நீ?”

“ஆமா. நம்பலை”

ரவியின் முகம் இறுகியது. ”ஓக்கே. உன் ஐடியாவையே ஃபாலோ பண்ணுவம்”

நான்கு கூறாகப் பிரித்தான் ஒவ்வொருவரும் அவர்களுக்குரிய பங்கை எடுத்துக் கொண்டார்கள்.

“எல்லாரும் எல்லார் ஃபோன் நம்பரையும் வாங்கிப்போம். பாண்ட்ஸ் விக்க ஆள் கிடைச்சதும் காண்டாக்ட் பண்ணலாம்” சிவா சொன்னான்.

“வேண்டாம். ஒருத்தர் மாட்டினாலும் மீதி மூணு பேரும் மாட்டிக்குவோம். அதனால சிவா நம்பர் என்கிட்ட, நமச்சிவாயம் நம்பர் சிவாக்கிட்ட, சதாசிவம் சார் நம்பர் நமச்சிவாயம்கிட்ட, என் நம்பர்  சதாசிவம் சார்கிட்ட. வேற யாரும் மத்தவங்களோட நம்பரை உங்க ஃபோன்ல ஸ்டோர் செய்யாதீங்க. இவ்வளவு ஏன் டயல்கூட செய்யாதீங்க. ஒருத்தர் போலீஸ்ல மாட்டினா அவங்களோட போயிடணும் ஓக்கே?”

“நல்ல ஐடியாதான். ஓக்கே”

அனைவரும் ஃபோன் நம்பர்களை ஷேர் செய்து கொண்டார்கள். 

(தொடரும்)

4 comments:

Unknown said...

nice .. work continue...

Unknown said...

உங்கள் கதையை படமாக்க தருவீர்களா??

Unknown said...

என்னய வச்சிக் காமெடி கீமெடி பண்ணலையே?

சீரியஸான்னா தாராளமா எடுத்துக்கோங்க.

Unknown said...

கதையை முடியுங்கள்... அப்போது தான் ஒரு ஐடியா வரும்