Wednesday, March 11, 2009

உயர்ந்து வரும் தமிழ்த் திரைப் படங்களின் தரம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த வலைப் பூவில் பதிப்பிக்க விழைந்துள்ளேன். (என்னவோ இதுக்கு முன்னாடி ஒரு நாலாயிரம் பதிப்பு வெளியிட்ட மாதிரி, அடங்குடா - மனசாட்சி).

சமீப காலமாக தமிழ்த் திரைப்படங்களின் தரம் உயர்ந்து வருவதாக எனக்கு தோன்றுகிறது. உலகத் தரத்தில் சினிமா எடுக்கும் கலையை தமிழ் இயக்குனர்கள் இப்போது கை கொண்டு விட்டதாகத் தெரிகிறது. உதாரணமாக சமீபத்தில் வந்த சில படங்களைப் பார்ப்போம்.

சரோஜா
கிட்டத்தட்ட ஒரே இரவில் நடக்கும் கதை. நாலு நண்பர்கள் கிரிக்கெட் மாட்ச் பார்க்க காரவேனில் (?!) சென்னையிலிருந்து ஹைதராபாத் போகிறார்கள். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மகள் காணாமல் போகிறாள். ஒரிஸ்ஸாவிலிருந்து வரும் ஒரு கெமிக்கல் லாரி விபத்தில் சிக்குகிறது. இந்த மூன்று சம்பவங்களையும் முடிச்சு போட்டு கதையை நகர்த்துகிறார் இயக்குனர். இதில் சிறப்பு அம்சம் நகைச்சுவை. படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் நாகரீகமான நகைச்சுவை வழிந்தோடுவது படத்தை போரடிக்காமல் கொண்டு செல்ல உதவுகிறது. இரவுக் காட்சிகளில் கொஞ்சம் வெளிச்சமாக படம் பிடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
இந்தப் படம் ஆங்கிலப் படம் ஒன்றின் காப்பி என்று பலர் சல்லியடித்துக்(நன்றி: சுஜாதா) கொண்டு இருக்கின்றனர். இருக்கட்டுமே. ஒரு ஆங்கிலப் படத்தை இதை விட சிறப்பாக தமிழ்ப் படுத்த முடியாது என்பது என் கருத்து.

சுப்பிரமணியபுரம்

யதார்த்தமான தமிழ் சினிமாக்களின் வரிசையில் மற்றுமொரு படம். எண்பதுகளில் இருந்த மதுரை சுப்பிரமணியபுரம் தான் கதைக்களம். எண்பதுகளில் மதுரை எப்படி இருந்ததோ அதை அப்படியே காட்ட இயக்குனர் மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். ஸ்டெப் கட்டிங், தாடி, சில்வர் கலர் பஸ், வீடுகளின் வடிவம், பாவடை தாவணி, இளையராஜாவின் பாடல்கள்.. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
நண்பனுக்காக உயிர் கொடுக்கும் நட்பையும், உதட்டில் முத்தமிட்டு விட்டு மரணத்தை முத்தமிடும் காதலர்களையும் பார்த்து பழக்கப் பட்ட நம் கண்களுக்கு, நட்பு-காதல் இவ்விரண்டின் மற்றொரு பக்கமான துரோகத்தை முகத்திலறைந்தாற்போல சொல்லி இருக்கிறார்கள். அதிலும் கவுன்சிலரின் தம்பியாக வரும் அந்த பாத்திரப் படைப்பு மிகவும் அருமை. "உங்களுக்கு எவ்வளவோ செய்யனும்னு சொல்லிட்டே இருப்பார்டா! எல்லாம் போச்சு! அவன் இருக்கிற வரைக்கும் அண்ணனால மாவட்ட தலைவர் ஆக முடியாது" என்று பேசிப் பேசி உரு ஏற்றுகிற அந்த பாத்திரமும் அதை மிகையில்லாமல் செய்திருக்கிற சமுத்திரக்கனியும் சூப்பர்.

இன்னும் வெண்ணிலா கபடிக் குழு, நான் கடவுள் போன்ற திரைப்படங்களோடு சந்திக்கிறேன்.

No comments: