இது நான் எழுதிய கவிதை அல்ல. எழுதும் அளவுக்கு புலமை பெற்றவனும் இல்லை. ஆனால் இந்த கவிதையை இங்கே பதிக்க வேண்டும் என்று நினைத்தேன். இதோ உங்கள் பார்வைக்கு.
வீட்டுக்கு மேல் போர் விமானங்கள் பறக்க
குழந்தைகளை இழுத்துக்கொண்டு நீங்கள்
ஓடி ஒளியும்போது...
கண்ணெதிரில் உங்கள் வீட்டுப் பெண்கள் கற்பழிக்கப்படும்போது...
உங்கள் சகோதரன் சுட்டுக் கொல்லப்படும்போது...
பட்டினியால் உங்கள் பெற்றோர் இறக்கும்போது...
அப்போதுதான்
போர் என்பது புரியும் எனில்,
அதுவரைக்கும் தமிழர்களே கிரிக்கெட் பாருங்கள்.
அடுத்த தேர்தல் வந்துவிட்டது
வரிசையில் நின்று வாக்களியுங்கள்.
பயணத்தில் உங்கள் இருக்கையில்
இன்னொருவர் அமர்ந்துகொண்டு
எழ மறுத்தால் என்ன செய்வீர்கள்?
சாலையில் உங்கள் வாகனத்தை
இன்னொரு வாகனம் இடித்துவிட்டால்
என்ன செய்வீர்கள்?
உங்கள் குழந்தையைப் பள்ளி ஆசிரியர்
காயம் வர அடித்துவிட்டால் என்ன செய்வீர்கள்?
பேருந்தில் உங்கள் மகளை இன்னொருவர் உரசுவதைப் பார்த்தால் என்ன செய்வீர்கள்?
உங்கள் வீட்டுக்குள் அத்துமீறி
சில அந்நியர் புகுந்தால்
என்ன செய்வீர்கள் மிஸ்டர் இந்தியன்?
இறையாண்மை பேசுவீர்களோ?
இதற்கெல்லாம்...
எதிர்த்தலே தீவிரவாதம் எனில்
இலங்கையில் நடப்பதும் அஃதே நண்ப!
ஆர்ப்பாட்டம் நடத்தியாச்சு
ஒப்பாரி வெச்சாச்சு
கண்டனக் கூட்டம் முடிஞ்சுது
கவிதை வாசிச்சாச்சு
கட்டுரைகள் எழுதியாச்சு
ஓவியம் வரைஞ்சாச்சு
ஊர்வலம் போயாச்சு
மனிதச் சங்கிலி
அடையாள உண்ணாவிரதம்
வழக்கறிஞர் போராட்டம்
மாணவர் போராட்டம்
திரையுலகப் போராட்டம்
கடையடைப்பு.
தந்தி அடித்து
மெயில் அனுப்பி
எஸ்.எம்.எஸ். விட்டு
வேலைநிறுத்தம் செஞ்சு
பேருந்துகள் கொளுத்தி
தூதரகங்களை நொறுக்கி
ஜெயிலுக்குப் போயி
சாகும் வரை உண்ணாவிரதமும் இருந்து
அட! பதினேழு பேர் தீக்குளிச்சுச் செத்தும்போயாச்சு.
.....க்காளி... என்னதான்யா செய்யறது இனி!
No comments:
Post a Comment