Friday, August 14, 2009

ஆனைப்பட்டி அனுபவம்

கல்லூரியில் படிக்கிற காலத்தில் உடன் படித்த நண்பன் ஆனைப்பட்டியான் விரும்பி வருந்தி அழைத்ததை தட்ட முடியாமல் நண்பர்கள் நாலு பேர் சேர்ந்து ஆனைப்பட்டிக்கு கிளம்பினோம்.

"டேய் ஆனைப்பட்டியான். உங்க ஊருக்கு பஸ் எல்லாம் இருக்கா? " - இது தர்மபுரியான்.

"டேய் என்ன இப்பிடி கேட்டுப்புட்ட. கமுதியில இருந்து எங்க ஊருக்கு பதினஞ்சி நிமிசத்துக்கு ஒரு பஸ் இருக்கு"

"எலேய். உங்க ஊருல சிகரெட் எல்லாம் கிடைக்குமால? இல்ல இங்கயிருந்து வாங்கிட்டு போயுருவமா?" இது கயத்தார்க்காரன்.

"அதெல்லாம் கிடைக்கும் மாப்ள. கமுதி பஸ் வந்திருச்சி வாங்க போலாம்."

கமுதி பஸ் எங்கள் மீது ஏறுவது போல நெருங்கி வந்தது. ஏறி இடம்பிடித்து உட்கார்ந்தோம். எனக்கு பஸ்ஸில் டிரைவர் சீட்டுக்கு இந்தப்பக்கம் இருக்கும் ஒற்றை சீட்டில் அமர்ந்து செல்வதென்றால் மிகவும் பிடிக்கும். போய் உட்கார்ந்தேன்.

"டேய் பங்காளி. அங்க உக்காரதடா. இங்க வா"

"ஏண்டா? எனக்கு இங்க உக்காரத்தாண்டா பிடிக்கும்"

"டேய் அங்க முன்னாடி கண்ணாடி இல்லடா. தூசி வந்து கண்ணுல விழும்."

அப்போது தான் பார்த்தேன். டிரைவருக்கு முன்னால் மட்டும் தான் கண்ணாடி இருந்தது. டிரைவரைத் திரும்பி பார்த்தேன். என் பார்வையின் அர்த்தம் புரிந்தவர் போல "ஆமாந்தம்பி. கண்ணாடியைப் போட்டா மட்டும். போன வாரம் சாதிக்கலவரத்துல கண்ணாடியை உடச்சுப்புட்டானுங்க. போய் பின்னுக்க உட்காருங்க" என்றார்.

போய் பின்னால் உட்கார்ந்தோம். பஸ் ரெட்டியபட்டி அருகில் வந்திருக்கும். பின் பக்கமிருந்து "டபடபடபடப" என்று ஒரே சத்தம். டிரைவர் பஸ்ஸை ஓரமாக நிறுத்தினார். பஸ்ஸில் இருந்த ஆண்கள் அனைவரும் கீழே இறங்கி பின் டயரைச் சுற்றி கூடினார்கள்.

"தள்ளுங்கப்பா, தள்ளுங்கப்பா" என்று கூறியவாறு கூட்டத்தை விலக்கி உள்ளே நுழைந்தார் டிரைவர். டயரிலிருந்து ஒரு பிசிறு விட்டு பஸ்ஸின் தகரத்தில் அடித்துக் கொண்டே வந்திருக்கிறது.

"யாராச்சும் கத்தி வச்சிருக்கிங்களாப்பா?" என்று ஒரு பெரிசு குரல் கொடுக்கவும் ஒரு பத்து பேர் இடுப்பில் இருந்து கத்தியை எடுத்தனர். எல்லா கத்தியையும் சோதித்துப்பார்த்த பெரிசு. உதட்டைப் பிதுக்கினார். "எல்லாம் மொட்டக்கத்தியா இருக்கே". இன்னொருவர் கக்கத்தில் சுருட்டி வைத்திருந்த மஞ்சப்பையை பிரித்து உள்ளே இருந்து ஒரு கத்தி எடுத்தார். பளபள என்று இருந்தது.

"கத்தி இன்னும் ரத்தம் பாக்கல பெருசு. இத வெட்டுனா துரு பிடிச்சிடும். அதான் எடுக்கல" என்றார் அந்த ஆள்.

"அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுப்பா. என்று சொல்லி அந்தக் கத்தியை வாங்கி டயரின் பிசிரை வெட்டி விட்டார் பெரிசு.

எல்லாரும் பஸ்ஸில் ஏறி கமுதி பஸ்ஸ்டாண்ட் வந்து சேர்ந்தோம்.

"டேய் என்னடா? இந்த ஊருல எல்லாரும் இடுப்புல கத்தியோட அலையிரனுங்க? "ஆச்சரியத்துடன் கேட்டான் தர்மபுரியான்.

"இந்தப்பக்கம் கத்திதாண்டா. இன்னும் உள்ள போனா முதுகுல அருவாவோடதான் வருவாய்ங்க.."

"டேய் அங்கன ஒரு முதுகுளத்தூர் பஸ் நிக்குதுடா"

"அது எங்க ஊருக்குப் போகாதுடா"

இப்படியே ஒரு ஐந்து பஸ்களை விட்டபின் ஆறாவதாக வந்த பஸ்ஸில் ஏறச் சொன்னான்.

"ஏண்டா பதினஞ்சி நிமிசத்துக்கு ஒரு பஸ்ஸுன்னு சொன்ன, கடைசியில ரெண்டு மணி நேரம் காத்திட்டு இருந்தோமேடா?"

"அந்த பஸ்காரனுக எல்லாம் எங்க ஊர்ல நிருத்தமாட்டானுக. இந்த பஸ்தான் நிக்கும்".

நிக்கும்போல தோன்றினாலும், ஓடுமா என்ற சந்தேகம் எழுந்ததை தவிர்க்க முடியவில்லை.

"அஞ்சி ஆனப்பட்டி விலக்கு" என்று டிக்கட்டும் எடுத்தாயிற்று. இனி தவிர்க்க முடியாது.

ஒரு அரை மணி நேரம் பயணம் போனது. பஸ் ஒரு ஒற்றைப் பனை மரத்தின் அருகில் நின்றது.

"டே எரங்குங்கடா"

"எங்கடா ஊரு?"

"இந்தா இந்தப் பாதையில கொஞ்ச தூரம் போனா வந்திடும்டா?"

"வெரும் பா தாண்டா இருக்கு. தய காணோமே?"

"கிண்டல் பண்ணாதிங்கடா. வாங்க நடப்போம்".

நடந்து கொண்டே இருந்தோம்.

"டேய் இன்னும் கொஞ்ச தூரம் நடந்தா முதுகுளத்தூரே வந்திடும் போல"

"அதெல்லாம் இல்லடா, அந்தா அங்கன தெரியுது பாருங்க. அதுதான் ஊரு"

ஒருவழியாக ஒரு மூன்று கிலோ மீட்டர் நடந்து ஊருக்கு வந்தோம்.

"என்னடா ஊருன்னு சொன்ன இங்க ஒரு தெரு மட்டும் தான் இருக்கு".

"ஏய் எங்க ஊரு கொஞ்சம் சின்ன ஊருதாண்டா. ஆனா மூணு தெரு இருக்கு".

அங்கே மொத்தமாக ஒரு இருபது வீடுகள் தான் இருந்தன..

"எங்கடா? "

"அந்தா கருப்பசாமித்தேவர் வீட்டுல - ஒரு மச்சு வீடு இருக்குல, அங்கன்
இருந்து இங்கன வரைக்கும் மேலத்தெரு. இங்கன இருந்து அந்த கூரை வீட்டு வரைக்கும் நடுத்தெரு"

"மூணாவது கீழத்தெருவா? அது எங்கன இருக்கு?"

"வர்ர வழியில ஒரு காலனி இருந்துச்சில்ல"

"எது அந்த ரெண்டு வீடு மட்டும் தனியா இருந்துச்சே? அதுவா?"

"ஆமா அந்தக் காலனி தான் கீழத்தெரு".

"இதுக்கு ஒண்ணியும் குறச்சல் இல்ல. பத்து வீடு இருந்தாக்கூட அதுல ரெண்டு வீட்டை தனியா பிரிச்சி காலனின்னு ஆக்கிடுவிங்க"

"சரிடா, சிகரெட்டு வாங்கனும். பெட்டிக்கடை இருக்குன்னு சொன்னியே?"

"அந்தா அந்தப் புளியமரத்தடியில ஓலப்பெட்டிய வச்சிக்கிட்டு உக்காந்து இருக்காரே பச்சமுத்து மச்சான். அதுதான் எங்க ஊர் பெட்டிக்கடை."

"அடப்பாவிகளா, பெட்டிக்கடைன்னா 'பெட்டி' கடையேவா?"

பச்சமுத்துவிடம் போய் கோல்ட் ஃப்ளேக் கிங்க்ஸ் ரெண்டு குடுங்க.. என்று கேட்டான் தர்மபுரியான்.

"அப்புடின்னா என்ன தம்பி?"

"சிகரெட்".

"அப்புடி கேளுங்க அதை விட்டுப்புட்டு என்னவோ தஸ்ஸு புஸ்ஸுன்னுட்டு"

"என்னங்க, சிசர்ஸ் தர்ரிங்க?"

"சிசர்ஸ் இல்ல, கத்திரி சிகரெட்டு. எங்க ஊர்ல இது மட்டுந்தான் கிடைக்கும். அது கூட கருப்பசாமித்தேவர் பையன் மட்டுந்தான் வாங்குவாப்புல.
மத்தவிங்கல்லாம் பீடியும் சுருட்டும்தான்"..

நாங்கள் அனனவரும் ஆனப்பட்டியயனனப் பார்க்க - "எனக்கு சிகரெட்டு பேரெல்லாம் எப்பிடீடா தெரியும். நாந்தான் சிகரெட்டு பிடிக்க மாட்டேனே?"

தர்மபுரியான் ஆனைப்பட்டியானைப் பார்த்த பார்வையில், கத்திரி சிகரெட்டு பத்த வைக்காமலே புகைந்தது..

ஒருவழியாக அந்த ஊரில் இரண்டு நாட்களைக் கடத்தி ஊர் வந்து சேர்ந்தோம்.

அடுத்த வருடம், ஆனைப் பட்டியானின் தங்கைக்கு திருமணம். ஆனைப் பட்டியான் விரும்பி, வேண்டி, மிரட்டி, கெஞ்சி, கதறிக் கேட்டுக் கொண்டதால் மீண்டும் கிளம்பினோம். கமுதியில் வந்து எங்களை அழைத்துக் கொண்டு போவதாக திட்டம்.

கமுதி வந்தாயிற்று. நிஜ சட்டை போட்ட காமராசர் சிலைக்கு அருகில் நிற்பதாகவும், அங்கே வந்து சந்திப்பதாகவும் சொன்னபடி (அரை மணி நேரம் காத்திருந்த பின்) ஆனைப்பட்டியான் வந்து சேர்ந்தான்.

"டேய் என்ன சிகரெட் வேணுமோ இங்கயே வாங்கிக்குங்க. எங்க ஊர்ல கிடைக்கலைன்னு புகார் வாசிக்க கூடாது"

"சரிடா தங்கச்சி கல்யாணம். சரக்கெல்லாம் இருக்குமா?"

"ஏய் ஆமாண்டா, இங்கயே வாங்கிட்டு போயிடலாம்டா"

"அதெல்லாம் எங்க ஊரில இருக்கும்டா"

தர்மபுரியான் - "இவன நம்ப முடியாதுடா. இங்கயே வாங்கிட்டு போயிடலாம்".

போடிக்காரன் - "இல்லடா மாப்ள, கல்யாணம்ங்கிறப்ப ஊர்ல
இருக்குறவனுவல்லாம் தண்ணி அடிப்பானுங்க. அதுனால இருக்கும்."

"ஆமாண்டா. நானும் காசு ரொம்ப கொண்டு வரல. இங்க வாங்கணும்னா கூட வாங்க முடியாது"

தர்மபுரியான் அரை மனதுடன் ஒத்துக்கொள்ள மறுபடியும் ஓடுமோ ஓடாதோ என்ற பஸ்ஸில் ஏறி, ஆனைப்பட்டி விலக்கில் இறங்கினோம்.

"இந்த தடவ நாம ஷார்ட் கட்ல போகமுடியாதுடா. கொஞ்சம் சுத்திதான் போகணும்"

"என்னது போன தடவ நாம போனது ஷார்ட் கட்டா? சொல்லவேயில்ல?"

இந்த முறை பாதை இன்னும் குறுகலாக இருந்த்து. அதிசயமான ஊர், நெருஞ்சி முள்ளிலேயே பாதை. நெருஞ்சி முள்ளும் செருப்புக்கு மேலே குத்தியது.

பாதை ஒரு கண்மாயில் வந்து முடிந்தது. அதிசயமாக கண்மாயில் தண்ணீர் இருந்தது..

"எப்பிடிடா இதை தாண்டுறது?" என்று கேட்டுக் கொண்டே திரும்பிப் பார்த்தால், ஆனைப்பட்டியான் வெறும் ஜட்டியோடு நின்றுகொண்டிருந்தான்.

"டே? என்னடா? எப்படா கழட்டுன? எதுக்குடா கழட்டுன?"

"தண்ணில எறங்கித்தாண்டா போகணும். பேண்ட் நனஞ்சிடக்கூடாதென்னு தான் கழட்டிட்டேன். நீங்களும் கழட்டுங்கடா"

நாங்களும் பேண்டை கழட்டி கிட்டத்தட்ட நீச்சல் அடித்து கண்மாயைக் கடந்து கரையேறினோம்.

நாங்கள் எல்லாம் பேண்டை போட்டுக்கொள்ள, ஆனப்பட்டியான் மட்டும் தோளிலேயே போட்டிருந்தான்.

"என்னடா? இப்பிடியே வர்ற?"

"உடம்புல ஈரம் காயட்டும் பங்காளி. அப்புரம் போட்டுக்கலாம்."

"டேய் இங்க பொம்பளக எல்லாம் வர்றாங்கடா"

"பரவாயில்லடா".

வந்தவர்களில் ஒரு பெண், "என்னா சம்முவம் மவனா? தங்கச்சி கல்யானத்துக்கு சேக்காளிகள கூட்டிட்ட்டு வந்திகளாக்கும்?"

"ஆமாத்தா" என்று சொல்லிவிட்டு ஜட்டியோடு நடக்கிறோமே என்ற சங்கோஜமே இல்லாமல் நடந்தான்.

ஒருவழியாக ஊருக்குள் நுழையுமுன் பேண்டைப் போட்டுக் கொண்டான்.
இந்த தூரம் வருவதற்குள், தர்மபுரியானும் கயத்தார்க்காரனும் தலா மூன்று சிகரெட்டை முடித்திருந்தார்கள்.

(தொடரும்)

4 comments:

குடுகுடுப்பை said...

தமிழ்மண இணைப்புக்கு வாழ்த்துக்கள்.

பதிவு அருமையா வந்திருக்கு.

word verfication எடுத்துருங்க

யாத்ரீகன் said...

:-))))))) chancey illa.. attakaasam :-))))

Unknown said...

>>
குடுகுடுப்பை said...
தமிழ்மண இணைப்புக்கு வாழ்த்துக்கள்.

பதிவு அருமையா வந்திருக்கு.

word verfication எடுத்துருங்க

>>
வருகைக்கு நன்றி. நீங்கள் சொன்னபடி word verification எடுத்துவிட்டேன்.

Unknown said...

யாத்ரீகன், வருகைக்கு நன்றி