Friday, October 30, 2009

பிதற்றல்கள் - 10/29/2009

ஆணி நிறைய சேர்ந்துவிட்டதால் சில நாட்களாக கடைப்பக்கம் வரமுடியவில்லை. ஒருவழியாக பிடுங்க முடிந்த ஆணிகளைப் பிடுங்கிவிட்டு பொட்டிதட்ட உட்கார்ந்துவிட்டேன்.

இடைப்பட்ட நாட்களில் எங்கள் ஊரில் நடந்த கந்த சஷ்டிவிழாவில் பங்கு கொண்டேன். நான் வசிக்கும் ஊரில் ஸ்ரீவித்யா பீடம் ஒன்று உள்ளது. இலங்கைத் தமிழர் ஒருவர் இதன் பீடாதிபதியாக இருந்து வருகிறார். நாங்கள் எல்லாம் அவரை "அய்யா" என்று அன்புடன் விளிப்போம். இந்தக் கோவிலில் சிவன்/தேவி சம்மந்தப்பட்ட விழாக்கள் எல்லாம் வெகு சிறப்புடன் நடக்கும்.

இப்போது கந்த சஷ்டி விழாவிற்கு வருவோம். சின்ன அம்மிணி இங்கே சொல்லியிருக்கும் அளவுக்கு விமரிசையாக நடக்கவில்லை என்றாலும் நன்றாகவே இருந்தது. முருகன் அபிஷேகம் முடிந்ததும் தன் அன்னையிடம் போய் வேல் வாங்கிக் கொண்டு வந்து சூரனை வதம் செய்தார். இங்கே சூரன் நின்ற இடத்திலேயே நின்றான். (ஒரு ஸ்டாண்டில் பூசணிக்காய் ஒன்றை சூரனின் தலை போல அலங்காரம் செய்து வைத்திருந்தனர்). முருகன் ஒரே ஆட்டம் தான். முருகன் கையில் இருந்த வேலால் சூரனின் முகத்தில் குத்திவிட்டு பின் ஒரு கத்தியால் அவனை இரண்டாகப் பிளந்தார்.  அதன் பின் கோயிலுக்குள் வைத்து தெய்வயானையை மணம் வைதீக முறைப்படி மணம் புரிந்தார். அன்னையிடம் ஆசி வாங்கிவிட்டு, தெய்வயானையை கோவிலுக்குள்ளேயே விட்டு விட்டு, வெளியே இருக்கும் பிள்ளையார் சன்னிதி முன் வள்ளிக்குறத்தியை (திருட்டுக்) கல்யாணம் செய்து கொண்டார். அப்போது கோவில், கோவிலின் வெளியே இருக்கும் விளக்குகள் அனைத்தையும் அணைத்து விட்டு சத்தம் இல்லாமல் செய்தனர்.

பின் இத்திருமண செய்தி கேட்டு தெய்வயானை கோபமாக வெளியே வந்து வள்ளியையும் முருகனையும் வழி மறித்தார். கோபித்துக் கொண்டு போன தெய்வயானையை முருகன் கல்கண்டு கொடுத்து சமாதானம் செய்து கொண்டு வந்தார். (இவ்வளவு ஈஸியா சமாதானம் பண்ணலாம்னா நாம கூட ரெண்டாவது கல்யாணம் பண்ணி இருக்கலாமே என்று சற்று சத்தமாக நினைத்ததும் பின் மண்டையில் நங் என்று ஒரு கொட்டு விழுந்தது). பின் வள்ளி தெய்வானையோடு முருகன் காட்சி அளித்தார். மிகவும் சுவாரசியமாக இருந்தது.

இந்தக் கோவிலில் அடுத்த வருடம் ஜூலை மாதம் புனருத்தாரண கும்பாபிஷேகத்தை ஒட்டி அதி ருத்ர ஹோமம் செய்யவிருக்கிறார்கள். துண்டு போட விரும்புபவர்கள் இங்கே சொடுக்கலாம்.

போன வாரம் பா.கிருஷ்ணகுமாரைப் பற்றி சொன்னேன். நான் கல்லூரியில் படிக்கும் போது வந்த ஒவ்வொரு பேச்சாளரும் தனது முத்திரைப் பேச்சாக சில விஷயம் வைத்திருப்பார்கள்.

பா.கிருஷ்ணகுமார் - வாட்டர் டேங்க் சுத்தம் பண்ணுவதைப் பற்றி பேசுவதைப் போல ஜெயலலிதா-சசிகலா அவர்களைப் பற்றி பேசுவார். அவர் எந்தக் கூட்டத்தில் எந்தத் தலைப்பில் பேசினாலும் இதை எப்படியாவது நுழைத்து விடுவார். அது இப்படி போகும் - 'நம்ம வீட்டு குழாயில புழு வருது. அதுக்கு யார் காரணம்? நம்ம வீட்டு குழாயா? இல்ல. ஊருக்கு வெளிய பெருசா உயரத்துல ரெண்டு வாட்டர் டேங்க் இருக்கு பாருங்க அது தான் காரணம். நாம இப்ப என்ன செய்யணும். நல்ல வெளக்கமாரு ஒண்ணு எடுத்துக்கிட்டு நேரா மேல போய் கையில இருக்குற வெளக்கமாத்தால நல்லா அடி அடின்னு அடிச்சி - நான் இப்ப டேங்க சுத்தம் பண்றத பத்தி பேசிட்டு இருக்கேன் - சுத்தம் பண்ணினோம்னா, நம்ம வீட்டு குழாயில் எப்பிடி புழு வரும்?'

மதுக்கூர் இராமலிங்கம் - இவர் தீக்கதிர் பத்திரிக்கையில் இணையாசிரியராக இருந்தார். இவர் வழக்கமாக டிவி விளம்பரங்களைப் பற்றி பேசுவார். 'நம்ம வீட்டுல ஆம்பளயாளுங்க எல்லாம் வெளில கிணத்துலயோ ஆத்துலயோ கம்மாவுலயோ குளிப்பாங்க. பொம்பளையாளுங்க வீட்டுக்குள்ளயே குளிப்பாங்க. ஆனா விளம்பரத்துல பாருங்க. ஆம்பள பாத்ரூமுக்குள்ளயே குளிக்கிறான். பொம்பள ஆறு குளம் அருவின்னு வெளிய குளிக்குது'  - இந்த பேச்சை அவர் புதிய பொருளாதாரக் கொள்கையைப் பற்றி பேசினாலும் சரி, வெளிநாட்டு முதலீடுகள் பற்றி பேசினாலும் சரி, தவறாமல் சேர்த்துவிடுவார்.

கவிஞர் நந்தலாலா  - இவர் திருச்சி இந்தியன் வங்கியில் பணியாற்றினார் என்று நினைவு. இவர் வழக்கமாக ஒரு ஜோக் சொல்வார். 'காந்தித் தாத்தா எதுக்கு கையில குச்சி வச்சிட்டு நிக்கிறாருன்னு உங்களுக்கு யாருக்காவது தெரியுமா? நம்ம நாட்டுல மக்கள் நலத் திட்டம்ங்கிறது குச்சி ஐஸ் மாதிரி. அதை போட்டதும் போட்ட மந்திரி ஒரு சூப்பு. அந்தத் துறைச் செயலர் ஒரு சூப்பு, அப்புறம் மாவட்ட கலெக்டர் ஒரு சூப்பு, ஆர்.டி.ஓ ஒரு சூப்பு, தாசில்தார் ஒரு சூப்பு, வி.ஏ.ஓ ஒரு சூப்பு, பஞ்சாயத்து தலைவர் ஒரு சூப்பு, வார்டு கவுன்சிலர் ஒரு சூப்பு.. இப்பிடி ஆளுக்கு ஒரு சூப்பு சூப்பிட்டு மக்கள் கையில வரும்போது வெறும் குச்சிதான் மிஞ்சும் அப்பிடிங்கிறத சிம்பாலிக்கா சொல்றதுக்கு தான் காந்தித்தாத்தா கையில குச்சி வச்சிட்டு நிக்கிறாரு' இப்படி சொல்லியதும் கண்டிப்பாகக் கை தட்டல் கிடைக்கும். இதையும் பல மேடைகளில் இவர் பேசி நான் கேட்டிருக்கிறேன்.


கல்லூரி காலங்களில் பல விவாதங்கள் நடத்தி இருக்கிறோம். முக்கியமான விவாதம் அப்போது வெளிவந்த இந்தியன் திரைப்படம் பற்றியது. லஞ்சம் வாங்கியவர்களை கொலை செய்வதென்பது சரியான தண்டனையா? என்பது பற்றி பேச்சு போனது. ஒரு கல்லூரி மாணவி முதல்முறையாக இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தார். அவர் இது காந்தி பிறந்த மண் இங்கே வன்முறை கூடாது என்ற ரீதியில் பேசும்போது, லஞ்சம் வாங்கியவருக்கும் மனைவி மக்கள் எல்லாரும் இருப்பார்கள் தானே. அவரைக் கொலை செய்வதன் மூலம் அந்த மனைவியையும் மக்களையும் சேர்ந்து தானே தண்டிக்கிறார் என்று வாதம் செய்தார் அந்த மாணவி. சரியான வாதம் போலத்தான் தோன்றியது.

அதற்கு பதிலடி கொடுத்தார் ஒருவர். 'அவன் லஞ்சப் பணத்துல வாங்குன சேலையைக் கட்டும்போது தப்புன்னு தெரியலைல? அவன் லஞ்சப் பணத்துல நகை வாங்கி கழுத்துல மாட்டும்போது குளு குளுன்னு தான இருந்தது? அப்படின்னா அவங்க எல்லாம் அவன் சாகுறதையும் ஏத்துக்கிட்டு தான் ஆகணும்' அப்பிடின்னு.. நீங்க என்ன சொல்றிங்க?

5 comments:

Anonymous said...

//லஞ்சம் வாங்கியவருக்கும் மனைவி மக்கள் எல்லாரும் இருப்பார்கள் தானே.//

அந்தப்பெண்ணின் வாதம் எனக்கும் தவறு என்றே தோன்றுகிறது. போதை மருந்து கடத்துபவர்கள் நான் உபயோகிப்பதில்லை. ஆனால் மற்றவர்களுக்கு விற்பேன் என்று சொல்வது மாதிரி.

Anonymous said...

//பின் வள்ளி தெய்வானையோடு முருகன் காட்சி அளித்தார். மிகவும் சுவாரசியமாக இருந்தது.//

நானும் கந்த சஷ்டியில் சூரசம்காரம் பார்ப்பது இதுவே முதன்முறை. அதனாலேயே ரொம்பவும் ரசித்தேன்.

பின்னோக்கி said...

சூரசம்ஹாரத்தை கண்முன் நிறுத்தியதற்கு நன்றி. சைக்கிள் கேப்ல வள்ளி-தெய்வானை மேட்டர் :)

3 பேச்சாளர்களின் உதாரணம் அருமை.

அமுதா கிருஷ்ணா said...

அந்த பெண்ணின் வாதத்தை ஒத்துக் கொள்ள முடியாது....

பித்தனின் வாக்கு said...

முருகன் வள்ளி திருமணம் அருமை. தேவயானி கோபம் இப்போதுதான் கோள்விப் படுகின்றேன். தேவயானி கோவித்ததாகவும் அப்போது நாரதர் வந்து அவர்கள் இருவரும் சகோதரிகள் எனவும் பூர்வஜென்மத்தைப் பற்றிக் கூறி சமாதானப் படுத்தினார் என்பது புராணம். கல்கண்டு மேட்டர் ஓகே. இப்படி கூட ஒருவழி இருக்கா. எதுக்கும் பின்னால யூஸ் ஆகும். நன்றி.