Sunday, October 4, 2009

களவு - சர்வேசன்500 - நச்னு ஒரு கதைப் போட்டிக்காக

நான்காவது அடகுக் கடையிலிருந்து வெளியே வந்தான் அவன். அவன் கையில் பாதுகாப்பாக சுருட்டப்பட்ட ஒரு மஞ்சள் பை. அவன் முகத்தில் கலக்கமும் களைப்பும் கூடிக் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தன.

சேகரின் கண்கள் அவனையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தன். கையில் வைத்திருந்த டீக் கோப்பையை உதடுகள் உரிஞ்சினாலும் எண்ணம் மஞ்சப் பைக்காரனை சுற்றியே வந்தது.

களைத்துப் போன அவன் டீக்கடைக்கு வந்தான்.

"ஒரு டீ போடுங்கண்ணே" என்று சொல்லிவிட்டு மஞ்சப்பையை கக்கத்தில் இடுக்கிக்கொண்டு சேகருக்கு அருகில் இருந்த மர பெஞ்சில் அமர்ந்தான்.

"என்னப்பா! நகைய அடகு வாங்க மாட்டேங்குறாங்களா?"

திடுக்கிட்டு திரும்பினான். "ஆமா. உங்களுக்கு எப்பிடி தெரியும்?"

"நான் அப்போலருந்து உன்னப் பாக்குறேன். சுத்தி சுத்தி வர்ற. அடகு வாங்கியிருந்தாத்தான் ஊருக்குப் போயிருப்பியே?" குரலைத் தாழ்த்தி, "என்ன திருட்டு நகையா?"

"அதெல்லாம் இல்ல. என் முதலாளியம்மா குடுத்து வுட்டாக"

"சரி நம்புறேன். நம்ம கிட்ட ஒருத்தரு இருக்காரு. அவரு எந்த நகைன்னாலும் வாங்குவாரு. கொஞ்சம் காசு கொறச்சு குடுப்பாரு. உன்ன அங்க கூட்டிட்டு போகவா?"

அவன் சற்றே யோசித்தான்.

"யோசிக்கிறாப்புல இருக்கு. அது சரி. நம்ம ஊருக்காரன் மாதிரி இருக்கேன்னு ஹெல்ப்பு பண்ணலாமுன்னு பாத்தேன். உனக்கு இஷ்டம் இல்லைன்னா போ"

சேகர் கடைசி வாய் டீயை சர்ரென்று உறிஞ்சிவிட்டு காலி கிளாசை டேபிளின் மேல் வைத்தான். "ஆனா ஒண்ணு. நீ எத்தன கடை ஏறினாலும் உன் நகையை ஒருத்தனும் அடகு வாங்க மாட்டானுங்க" சொல்லிவிட்டு நடையைக் கட்டினான்.

இவனுக்கு லேசாக பயம் வந்துவிட்டது. டீயைக் குடித்து விட்டு அடுத்த சேட்டுக் கடையை நோக்கி சென்றான். இவன் உருவத்தைப் பார்த்துவிட்டு யாரும் நகையை வாங்க மறுக்கிறார்கள். இன்னும் இரண்டு கடைகளிலும் அதே பதில். தானாக வந்த அந்த புரோக்கரையும் விட்டு விட்டோம். இனி என்ன செய்வது? பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. மறுபடியும் அதே டீக்கடை.

"இன்னாபா நகையை ஒர்த்தனும் அடகு வாங்க மாட்டேன்றானா?"

கைலி கட்டிக் கொண்டு ஒரு கோடு போட்ட டி ஷர்ட் போட்டவன் அருகே அமர்ந்திருந்தான். அவன் கையில் பீடி புகைந்தது.

"ஆமாங்க"

"என் கைல ஒருத்தன்கீறான். அவன் அல்லா நகையும் வாங்குவான். கூட்டிட்டுப் போகவா?"

இவனையும் விட்டால் அப்புறம் ஒரு பைசா தேறாது என்று தோணியது.

"சரிங்க. எம்புட்டு தருவாக?"

"ஆறு வட்டி. கிராமுக்கு ஆறு நூறு. எனக்கு அம்பது கமிசன். சரியா?"

மனதுக்குள் கணக்குப் போட்டான். "சரிங்க. மொத்தமா விக்கிறதுன்னா?"

"கிராமுக்கு எட்டு நூறு. என் கமிசன் அதே தான்"

"சரி கூட்டிட்டுப் போங்க"

எழுந்தான். ஒரு ஆட்டோ கூப்பிட்டான்.

"உக்காரு"

இருவரும் உட்கார்ந்ததும் ஆட்டோ கிளம்பியது. "எம்பேரு அமீரு. உன் பேரு என்ன?"

"சம்முவம்"

"ஏது நகை. திருட்டா?"

"அதெல்லாம் இல்ல"

"பொய் சொல்லாத. உண்மைய சொல்லு. பொய் சொன்னா ஒண்ணும் கிடைக்காது"

சம்முவம் எச்சில் விழுங்கினான். "அது வந்து..."

"அட சொம்மா சொல்லும்மா. ரோசனை பண்ணாத"

"ஆமாங்க. வேல செய்யிற வீட்டுல கை வச்சுட்டேன். காசு கைக்கு வந்ததும் வட நாட்டு பக்கம் போயிடலாமுன்னு இருக்கேன்"

"நான் வாங்கித் தர்றேன்"

ஆட்டோ நின்றது. இருவரும் இறங்கினார்கள். அமீர் ஆட்டோவுக்கு பணம் கொடுத்து அனுப்பினான்.

அது ஒரு பழைய ஓட்டல் மாதிரி இருந்தது. வெளியே வாகனங்கள் எதுவும் இல்லை. ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லாத தெரு. சம்முவத்துக்கு லேசாக பயம் எட்டிப் பார்த்தது.

"வா உள்ள போலாம்" இருவரும் உள்ளே நுழையும் முன் ஒரு உருவம் அவர்களை மறித்தது.

"யேய். இவன நாந்தான் முதல்ல பாத்தேன். நீ கமிசன் அடிக்கப் பாக்குறியா?" சேகர் அவர்கள் இருவருக்கும் குறுக்காக கையை வைத்துக் கொண்டு நின்றிருந்தான்.

"இத்த வேற யார் கைலயாவது போய் சொல்லு. நான் பேசி இட்டாந்திருக்கேன்"

"அவன்கிட்ட வேணும்னா கேளு. நான் தான் முதல்ல பேசினேன். நீ நகந்துக்கோ. அது என் கிராக்கி"

சம்முவம் சும்மா இருந்திருக்கலாம். "ஆமாங்க அவர் தான் பேசுனாரு. நான் அப்போ அவர பெருசா எடுத்துக்கல. நீங்களும் சொல்லவுந்தான்.."

சேகர் அமீரைப் பிடித்து தள்ளினான். "அதான் சொல்லிட்டான்ல. நீ வழியப் பாத்துட்டுப் போ"
பையிலிருந்து ஒரு ஐம்பது ரூபாய்த்தாளை அமீரிடம் விசிறினான்.

"ஆட்டோவுக்கு குடுத்ததுக்கு வச்சிக்கோ". சம்முவத்தின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

அது ஒரு பழைய ஓட்டல் தான். மர பெஞ்சிகள் போடப்பட்டிருந்தன. ஒரு மூலையில் ஒருவன் பரோட்டா தின்று கொண்டிருந்தான். முண்டா பனியன் போட்ட ஒருவன் அடுப்புக்கு அந்தப் பக்கம் இருந்து தோசை ஊற்றிக் கொண்டிருந்தான். வேறு யாரும் இல்லை.

"சகா. தம்பி கொஞ்சம் நகை வச்சிருக்காப்ல.." சம்முவத்திடம் திரும்பி "அடகா, விக்கணுமா?"

"விக்கனுமுங்க" சம்முவம் பயந்த குரலில் சொன்னான்.

"எத்தினி கிராமு?" சகா கேட்டான்.

"தெரியலிங்க"

"திருட்டு நகையா? நீதான் திருடினன்னு தெரியுமா?"

"தெரியாதுய்யா. நகை காணாம போனத இன்னும் பாத்திருக்க மாட்டாய்ங்க"

"சரி குடு. பாப்போம்." பையை வாங்கினான். தோசையை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவனின் இலையில் வைத்துவிட்டு பையைத் தூக்கி கையால் எடை பார்த்தான்.

"அம்பது அறுவது சவரன் தேறும்போல இருக்கே? ஒரிஜினல் தங்கமான்னு பாக்கனும்"

பைக்குள் கை விட்டு ஒரு நகையை உருவினான்."பாத்துட்டு வர்றேன்" பையை பின்னாலிருந்த ஜன்னலின் மேல் வைத்து விட்டு உள்ளே போனான்.

அமீர் உள்ளே வந்தான். "தோ பாரு சேகரு. இது என்னோட கிராக்கி. நீ வந்த வழியா போயிரு"

"போடாங்க.. நாந்தான் முதல்ல பேசினேன்னு சொல்றேன். நீ என்ன? போ போ"

"சேகரு நீ அடிக்கடி என் வழியில குறுக்க வர்ற. நா அல்லா நேரமும் போயிக்கினே இருக்க மாட்டேன் ஆமா"

"யேய் என்னடா செய்வ? ரொம்ப மிரட்டுர"

"சேகரு" அமீரின் குரல் தடித்திருந்தது. அமீரின் கையில் இப்போது ஒரு கத்தி மின்னியது.

"தோடா. போடாங்க. நான் அருவாளே பாத்திருக்கேன். இவரு கத்தி காட்டுறாரு"

"சேகரு உன்ன விட்டேனா பாரு" என்றவாறு சேகரின் மீது பாய்ந்தான் அமீர். அமீரை எதிர்பார்க்கவில்லை சேகர். ஆனாலும் லாவகமாக விலகினான். பாய்ந்து வந்த அமீரின் கையைப் பிடித்தான். அமீர் பலவந்தமாக கையை உதறினான். அமீரின் வேகத்தை எதிர்பார்க்காத சேகரின் பிடியிலிருந்து அமீரின் கை வழுகியது. கையை ஓங்கி சேகரின் வயிற்றை நோக்கி கத்தியைப் பாய்ச்சினான். மறுபடியும் ஒரு பயிற்சி பெற்ற சண்டைக்காரனின் லாவகத்துடன் அமீரின் கையைப் பற்றினான் சேகர். இப்போது இருவரும் ஒருவர் மீது ஒருவர் விழுந்து புரண்டனர். சம்முவம் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இருவருக்கும் குறுக்கே பாய்ந்தான். "சண்ட போடாதீங்க. ரெண்டு பேருக்கும் கமிசன் குடுக்குறேன்" என்று கத்தினான். அங்கே ஒரே களேபரமாக இருந்தது. யார் மீது யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

"அம்மாஆஆஆஆஆஆஆ" என்று அமீர் பெரிதாகக் கத்தினான். சேகரும் சம்முவமும் விலகினர். அமீரின் நெஞ்சில் ஒரு கத்திக் குத்து இருந்தது. ரத்தம் வெள்ளமாக வந்தது. சம்முவத்தின் கையில் இருந்த கத்தியில் ரத்தம். "அய்யோ" என்று அலறி சம்முவம் கத்தியைக் கீழே போட்டான்.

"அடப்பாவி. குத்திட்டியேடா?" சேகரின் கண்களில் அதிர்ச்சி. அமீர் துடித்து அடங்கினான்.

"அய்யோ கொலை கொலை" ஓரமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் கத்தியபடி வெளியே ஓடினான்.

"நகை விக்க வந்த எடத்துல இப்பிடி ஒரு கொலை பண்ணிப்புட்டியே? வா இங்கருந்து ஓடிடுவோம்"

"என்ன அங்க ஒரே சத்தம்?" உள்ளே இருந்து சகாவின் குரல் கேட்டது.

"சகா வந்தா உன்ன சும்மா விடமாட்டான். ஓடு ஓடு" என்று சேகர் சம்முவத்தை இழுத்துக் கொண்டு வெளியே ஓடினான்

"நக" என்று சம்முவம் ஓடிக்கொண்டே கேட்டான்.

"ஒனக்கு உயிர் முக்கியமா? நக முக்கியமா? நக வேணுமுன்னா நீயே உள்ளார போயி எடுத்துக்க" என்று அவன் கையை உதறி விட்டு சேகர் ஒரு சந்துக்குள் ஓடி மறைந்தான்.

சம்முவத்துக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரு நிமிடம் அந்த ஓட்டலுக்கு வெளியே நின்றிருந்தான். 'உள்ளே போய் நகையை எடுக்கலாமா' என்று அவன் மனதில் லேசாக ஒரு சபலம்.

"அய்யய்யோ அய்யய்யோ! என் ஓட்டல்ல வந்து ஒரு கொல பண்ணிட்டாங்களே? நான் என்ன செய்வேன்" என்று உள்ளே சகா கத்துவது வெளியே கேட்டது. 'இனி உள்ளே போனால் சகா தன்னை கண்டிப்பாக போலிஸில் மாட்டிவிடுவான். நகையும் கிடைக்காது, ஜெயிலுக்கும் போக வேண்டும். பேசாமல் இப்படியே ஓடி விட்டால் உயிராவது மிஞ்சும்' சேகர் போன அதே சந்துக்குள் புகுந்து ஓடினான், எதிர்காலம் இனி எப்படி இருக்கும் என்று தெரியாமல்.

கை கூட கழுவாமல் ஓடிய அவன் நின்றான். ஒரு டீக்கடையில் தண்ணீர் எடுத்து கை கழுவினான். லுங்கியில் கையைத் துடைத்து விட்டு பக்கத்து பெட்டிக் கடையில் சிகரெட் வாங்கிப் பற்றவைத்தான். யாருக்காகவோ காத்திருந்தான்.
ஆட்டோ வந்து நின்றது. சேகர் ஆட்டோவிலிருந்து இறங்கி இவன் கையிலிருந்த சிகரெட்டை வாங்கி ஒரு பப் இழுத்தான். "எப்போ வந்த?"

"இப்போ தான். பட்டிக்காட்டான் போயிட்டானா?"

"பின்னங்கால் பிடதியில பட ஓடிட்டான். இன்னேரம் எங்க போயி நிக்கிறானோ?"

"சரி வா. சகா கடைக்குப் போகலாம்"

இருவரும் சகா கடைக்குள் நுழைந்தார்கள். அங்கே சகாவும் அமீரும் ஆளுக்கு ஒரு க்ளாஸ் கையிலேந்தி உட்கார்ந்திருந்தார்கள்.

"வாங்கடா. இன்னிக்கு நல்ல வேட்டை"


பின் குறிப்பு: இந்தக் கதை எந்த ஆங்கிலப் படத்தின் Inspiration என்று சரியாகச் சொல்பவர்களுக்கு தமிழிஷ் மற்றும் தமிழ் மணத்தில் பத்து ஓட்டுகள் போடப்படும்.

5 comments:

கலகலப்ரியா said...

தத்ரூபமா எழுதி இருக்கிறீர்கள்.. நீரோட்டம் போல நல்ல நடை.. வாழ்த்துக்கள்..

கலகலப்ரியா said...

என்னுடைய இடுகையில் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி... பதில் பார்த்துக்கோங்க..

Unknown said...

வருகைக்கு நன்றி பிரியா...

உங்கள் தாயாரின் மறைவுக்கு இரங்கல்கள்.

கலகலப்ரியா said...

ty.. ! :-)

பழமைபேசி said...

பயணத்துல இருக்கேன்... மீண்டும் வந்து படிக்கேன்!