Thursday, November 12, 2009

முட்டுச் சந்து (தொடர் பாகம் இரண்டு)

அத்தியாயம் - 1

ஒரு பேப்பர் பேனாவை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தான் அருண். கணினியில் பார்த்த இந்தக் கொலை பற்றிய செய்திகளைக் கீழ்க்கண்டவாறு பேப்பரில் எழுதினான்.

1. பெண்ணின் பிணத்தைப் பார்த்தது மூன்று நாட்களுக்கு முன் அதிகாலை 4:00 மணி
2. பெண்ணின் கைப்பை பிணம் கிடந்த இடத்துக்கு சற்று தள்ளி கிடந்தது.
3. அதில் இருந்த பணம், செல்ஃபோன் ஆகியவை காணக்கிடைக்கவில்லை
4. பிணத்திலும் நகைகள் எதுவுமில்லை - தோடு தவிர
5. பிரேதப் பரிசோதனையின் படி கொலை சுமார் இரவு 11:00 மணிக்கு நடந்திருக்கலாம்.
6. போலிஸ் முதலில் இது பணத்துக்காக செய்யப்பட்ட கொலையாக இருக்கலாம் என்று சந்தேகம்.

7. பின் பெண்ணின் - பெயர் சுஷ்மா -  நண்பிகளிடம் விசாரித்ததன் பேரில் முன்னாள் காதலன் ரமேஷ் மீது சந்தேகம்.
8. ரமேஷை அழைத்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணான பதில்களால் சந்தேகம் வலுவடைகிறது.
9. ரமேஷை போலிஸ் சந்தேகத்தின் பேரில் கைது

பதில் தெரியாத கேள்விகள்
1. அந்தப் பெண் இரவு 11:00 மணிக்கு எதற்காக அங்கே வந்தாள்?
2. ரமேஷுக்கும் அவளுக்கும் உறவு முறிந்த பின், (ஒரு வேளை ரமேஷ் அழைத்திருந்தால்)ரமேஷ் அழைத்து அங்கே வர வேண்டிய காரணம் என்ன?
3. இல்லை வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு பின் பிணம் இங்கே வீசப்பட்டிருந்தால், வாகனம் எதுவுமில்லாமல் நடந்திருக்காது. அப்படி (வாடகை அல்லது சொந்த) வாகனம் எதுவும் பயன்படுத்தப்பட்டிருப்பது பதியப்பட்டிருக்கிறதா?
4. ரமேஷ் அந்த நேரத்தில் என்ன செய்து கொண்டிருந்தான்?
5. ரமேஷ் தவிர இந்தக் கொலையில் ஈடுபட்டிருக்கக் கூடிய மோட்டிவ் உள்ள ஆட்கள் வேறு யார் யார்?

இந்தக் கேள்விகளுக்கு விடை தெரிந்தால் ஓரளவுக்கு இந்தக் கேஸில் தீர்வை நெருங்கிவிட முடியும் என்று அருண் நம்பினான்.

ஒரு முடிவுக்கு வந்து விட்டவனாக பாத்ரூமுக்குள் நுழைந்தான்.

*********************************************************************************************

அருணின் ஸ்விஃப்ட் வேளச்சேரியிலிருந்து தாம்பரம் செல்லும் சாலையில் வழுக்கிக் கொண்டு இருந்தது. சுஷ்மாவின் பிணம் இருந்த இடத்துக்கு அருகில் வந்ததும் காரை நிறுத்தி இறங்கினான்.

சற்றுத் தள்ளி ஒரு பெட்டிக் கடை இருந்தது. அருண் பிணம் கிடந்த இடத்தை சுற்றி கண்களால் துழாவினான். போலிஸ் இந்த இடத்தை சல்லடை போட்டுத் தேடியிருப்பார்கள். அவர்கள் கண்களுக்குத் தென்படாத எதாவது க்ளூ கிடைக்கலாம். பிணம் கிடந்த இடத்துக்கு பத்து மீட்டர் தள்ளி ஒரு பொருளில் சூரிய ஒளி பட்டு பிரகாசித்தது. பக்கத்தில் போய் பார்த்தான். யாரோ குடித்துவிட்டு உடைத்துப் போட்ட குவாட்டர் பாட்டிலின் துண்டு. ஷூக்காலால் வெறுப்புடன் அதை உதைத்தான். அது சற்றுத் தள்ளிப் போய் விழுந்தது.

ரோட்டோரமாக நடந்து அந்தப் பெட்டிக் கடையை நெருங்கினான். ஒரு சிகரெட் வாங்கிப் பற்ற வைத்துக் கொண்டே, அந்தப் பெட்டிக்கடைக்காரனிடம், “ஏம்ப்பா, மூணு நாளைக்கு முன்னாடி இந்த இடத்துல ஒரு பொணம் கிடந்ததாமே. உனக்கு எதுவும் தெரியுமா?”

அய்யோ ஆமா சார். அந்தப் பொணத்தால அன்னிக்கி எனக்கு யாவாரமே ஆவல. யாரோ சின்னப் பொண்ணு சார். இருவது இருவத்தஞ்சி வயசுதான் இருக்கும். எவனோ கழுத்த அறுத்துப் போட்டுட்டுப் போயிட்டான் சார்.”

நீ பொணத்தப் பாத்தியா?”

பாத்தேனேவா? நாந்தா சார் போலீசுக்கு சொன்னதே?”

பொணம் எந்த எடத்துல இருந்ததுன்னு காட்ட முடியுமா?”

“இன்னாத்துக்கு நீ இத்தயெல்லாம் கேக்குற? நீ போலீசா?”

“போலீசு மாதிரி தான்.”

“ஓ தனியார் துப்பறியும் போலீசா?”

“ஆமான்னு வச்சுக்கயேன். அந்த இடத்த காட்டு வா”

“இந்த இங்க தான் சார் கிடந்தது பொணம். கையில கழுத்துல எல்லாம் ஒண்ணுமே இல்ல சார். பக்கத்துல கூட ஒண்ணியும் இல்ல. போலீசு வந்து கைப்பையை கொஞ்சம் தொலவுல கண்டுபிடிச்சாக”

அருண் அவனை சந்தேகமாகப் பார்த்தான். “வேற எதாச்சும் பாத்தியா?”

“சேச்சே அதெல்லாம் இல்ல சார்.”

“இங்க பாரு.. உம்பேரு என்ன?”

“மாரி சார்”.

“ம்ஹ்ம், மாரி. நீ வேற எதயோ பாத்திருக்க. உண்மைய சொல்லிட்டின்னா விட்டிர்றேன். இல்லன்ன போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டியிருக்கும். என்ன சொல்ற?

அருணின் குரலில் இருந்த போலீஸ் மிடுக்கு மாரியை மிரட்டி இருக்க வேண்டும்.

என்ன சார் சொல்ற?”

“நீ எதயோ பாத்துருக்க இல்லன்ன எடுத்திருக்க. எதுக்காக என்கிட்ட கைல கழுத்துல எல்லாம் ஒண்ணுமில்லன்னு சொல்ற? நான் கேக்கவேயில்லயே?”

அய்யோ சார். என்ன மன்னிச்சிரு சார். பொணத்துக்கு பக்கத்தால ஒரு மோதிரம் இருந்திச்சி சார். நான் தான் காசுக்கு ஆசப்பட்டு எடுத்து வச்சுக்கிட்டேன் சார். குடுத்துடுறேன் சார்”

இங்க வச்சிருக்கியா இல்ல வீட்டுலயா?”

இங்க தான் சார் வச்சிருக்கேன். ஒரு மாசம் கழிச்சி என் பொண்டாட்டிக்கு குடுக்கலாம்னு இருக்கேன் சார்”

பணம் வாங்கிப் போட வைத்திருக்கும் பெட்டியில் துழாவி ஒரு மோதிரத்தை எடுத்து நீட்டினான்.

"R" என்று பொறிக்கப்பட்ட ஆண்கள் அணியும் மோதிரம் அது. கையில் வாங்கிப் பார்த்த அருண் பைக்குள் இருந்து ஒரு ziplock பையை எடுத்து அதற்குள் மோதிரத்தைப் போட்டு பைக்குள் வைத்துக் கொண்டான்.

போலீஸ் வேற என்ன விசாரிச்சாங்க?”

அதுக்கு முந்துன நாளு ஒரு பையன் சுமார் பத்து மணி சுமாருக்கு அந்த எடத்துக்குக் கிட்ட மோட்டார் பைக்க நிறுத்திட்டு மேல உக்காந்திருந்தான் சார். யாருக்கோ காத்துட்டு இருந்த மாதிரி. நான் கடை அடைக்கிற வரைக்கும் நின்னுட்டிருந்தான். அத்த போலீஸ்ல சொன்னேன். அவன போட்டோ கொண்டு வந்து இவனான்னு கேட்டாங்க. நானும் ஆமான்னு சொன்னேன். பின்னாடி கோர்ட்டுக்கு வந்து சாச்சி சொல்லனும்னு சொல்லியிருக்காங்க.”

வேற எதயாவது போலீஸ்ல சொல்லாம விட்டுட்டியா?”

வேற எதுவுமில்ல சார். இந்த மோதரத்த தவுர

அருணின் போலீஸ் மூளைக்கு மாரி பொய் சொல்லவில்லை என்றே தோணியது.

சரி உன்ன நம்புறேன். வேற எதாவது நினவுக்கு வந்தா இந்த நம்பருக்கு போன் பண்ணு” தனது செல் நம்பரை ஒரு சிகரெட் அட்டையின் பின் எழுதி மாரியிடம் கொடுத்து விட்டு காரை நோக்கி நடந்தான்.

*******************************************************************************************

அருண் அவனது காரை மடிப்பாக்கம் S7 காவல் நிலையத்துக்கு வெளியே பார்க் செய்தான். நீண்ட நாள் கழித்து ஒரு கேஸில் ஈடுபடும் உற்சாகம் அவன் விசிலில் தெரிந்தது.

வெளியே நின்றிருந்த கான்ஸ்டபிள் அருணைப் பார்த்ததும் ஒரு சல்யூட் அடித்தார்.

சார் எப்பிடி இருக்கிங்க? சொந்த ஊருக்கே போயிட்டதா சொன்னாங்க. இப்ப இங்க தான் சார் இருக்கேன்

பாண்டியன். நல்லா இருக்கிங்களா? இங்க கொஞ்ச நாள் ஊருல கொஞ்ச நாளுன்னு இருக்கேன். பையன் என்ன படிக்கிறான்?”

சார் நல்லா நியாபகம் வச்சிருக்கிங்களே? அஞ்சாவது படிக்கிறான் சார். இன்னமும் நீங்க வாங்கிக் குடுத்த சைக்கிள் வச்சிருக்கான் சார்.”

நல்லது பாண்டியன். எஸ்.ஐ இல்லன்னா இன்ஸ்பெக்டர் இருக்காரா?”

இருக்காரு சார். நம்ம கருப்பையா சார் தான் இன்ஸ்பெக்டர். என்ன சார் விசயம்?”

எனக்கு தெரியும் பாண்டியன். பெருசா ஒண்ணுமில்ல. உங்கள அப்புறம் பாக்குறேன்.

தொப்பியைக் கழற்றி கையில் வைத்துக் கொண்டு சொட்டைத்தலையைச் சொறிந்து கொண்டிருந்த கருப்பையா அருண் அறைக்குள் நுழைவதைப் பார்த்ததும் எழுந்து,
வாங்க அருண் சார். எப்பிடி இருக்கிங்க? ” என்றார்.

நல்லா இருக்கேன் சார். நீங்க எப்பிடி இருக்கிங்க?”

எதோ போகுது சார். அப்புறம் என்ன இவ்வளவு தூரம்?”

கான்ஸ்டபிள் ஒருவர் உள்ளே வந்தார். “சார் அந்தப் பொண்ணு மாயா வந்திருக்கு. ரமேஷைப் பாக்கணுமாம்.”

வெயிட் பண்ணச் சொல்லுய்யா. சார் கூட பேசிட்டு இருக்கேன்ல

நானும் அந்த விசயமாத்தான் வந்துருக்கேன். அந்தப் பொண்ணு காலைல என்ன வந்து பாத்துச்சு. இந்த கேஸ்ல ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுமான்னு கேட்டுச்சு. ரெண்டு வருசமா சும்மா இருந்து மூளை துருப்பிடிச்ச மாதிரி ஆயிருச்சு. சரி என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்கலாம்னு வந்தேன்

சட்டென அலெர்ட்டான கருப்பையா  “இந்தக் கேஸ் வேண்டாம் அருண்”

சம்திங்க் ஃபிஷி’ என்று நினைத்த அருண், “என்னாச்சு கருப்பையா? ஏன் இப்படி சொல்றீங்க?” என்றான் கண் நிறைய ஆச்சரியத்தைத் தேக்கியபடி.

வரவழைத்துக் கொண்ட சாந்தத்தோடு “இல்ல அருண். நல்லா விசாரிச்சாச்சு. எந்தப் பக்கமாப் போய் பாத்தாலும் ரமேஷ் கிட்டத்தான் கொண்டு வந்து விடுது. இது ஒரு டெட் எண்ட்

அருண் கருப்பையாவின் கண்களையே ஊடுருவிப் பார்த்தான்.

(தொடரும்)

பி.கு: டெட் எண்ட் என்பதற்கு முட்டுச் சந்து என்பது சரியான தமிழாக்கமா? யாராவது சொல்லுங்களேன்?

3 comments:

கலகலப்ரியா said...

ம்ம்.. :-??... அப்புறம் என்னாச்சு.. =))

கலகலப்ரியா said...

dead end - translation serinnuthaan ninaikkiren.. :-? yaravathu bathil sonnaa enakkum sollunga.. =))

Unknown said...

வருகைக்கு நன்றி, ப்ரியா.

யார் பதில் சொன்னாலும் கண்டிப்பா சொல்றேன்.