Friday, November 27, 2009

கண்ணியம் - சிறுகதை

பல வருடங்களுக்கு முன்:


நிலவின் ஒளி அந்த அடர்ந்த காட்டினுள் ஆங்காங்கே திட்டுத்திட்டாகப் பரவியிருந்தது. தூரத்தில் கத்தும் ஆந்தையின் அலறல் அந்த சூழலை அமானுஷ்யமாக்கிக் கொண்டிருந்தது. லேசான குளிர்தான் என்ற போதிலும் அவளின் முதுகெலும்பு வரை ஊடுறுவிக் குத்தியது. சேலையை இன்னும் இறுக்கமாகப் போர்த்திக் கொண்டாள். அந்த செயலால் அவள் நடையின் வேகம் சற்றே மட்டுப் பட்டது.


ம்ம்ம். வேகம். நாம் விடிவதற்குள் இன்னும் ஆறு மைல்கள் உள்ளே செல்ல வேண்டும். விடிந்து விட்டால் உங்கள் ராணுவத்திடம் இருந்து தப்ப முடியாது


கிசுகிசுப்பான குரலில் அவன் சொன்னாலும் அந்தக் குரலின் தீவிரம் அவளுக்குப் புரியாமல் இல்லை. நடையை எட்டிப் போட்டாள். கடந்த ஆறு வாரங்களாக யார் யாரையோப் பிடித்துக் கெஞ்சி, சில பல சோதனைகளுக்கு உட்பட்டு இப்போதுதான் அவர்களின் தலைவரைப் பார்க்க அவளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. அவளின் தாயைத் தவிர வேறு யாருக்கும் அவள் இப்படி ஒரு காரியம் செய்யப் போகிறாள் என்பது தெரியாது. அவள் தாய் தந்த ஊக்கம் தான் இப்படி ஒரு செயலைச் செய்து பார்க்க அவளுக்கு ஒரு தைரியத்தை அளித்தது என்று கூட சொல்லலாம். 


நீண்ட நேரம் நடந்த பின்னர் “எங்கள் எல்லைக்குள் நுழைந்து விட்டோம். இனி நமக்குப் பயமில்லை.” நடை சற்றுத் தளர்ந்தது. 


நிலா வெளிச்சத்தில் அவன் இவளைப் பார்த்து புன்னகைப்பது தெரிந்தது. “எதற்காக இவ்வளவு பெரிய ஆபத்தைத் தாண்டி எங்கள் தலைவரை நீ சந்திக்க வேண்டும் என்று துடிக்கிறாய் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?


அந்தத் தகவல் உங்கள் தலைவருக்குத் தெரிவித்தாகி விட்டது. வேறு யாரிடமும் பகிரக் கூடாது என்று உத்தரவு


சரி. தலைவனின் கட்டளை அது என்றால் எனக்கு தெரிய வேண்டியதில்லை


இன்னும் சிறிது தூரம் நடந்ததும் ஒரு சிறிய குடில் தெரிந்தது. இரண்டு பெண்கள் சீருடையில் கையில் துப்பாக்கிகளோடு நின்று கொண்டிருந்தனர். அவர்கள் கண்ணுக்குத் தெரிந்ததும், “இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் கொள்” என்று சொல்லிவிட்டு அவனும் அவ்வாறே செய்தான். 


அந்தக் குடிலை நெருங்கியதும் இருவரும் கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அவன் கையில் இருந்த ஒரு கடிதத்தை அவர்களிடம் கொடுத்தான். அவர்கள் அதைப் படித்துப் பார்த்துவிட்டு கையிலிருந்த ஒரு கோப்பில் எதையொ சரி பார்த்தனர்.


நீங்கள் வருவதாக எங்களுக்குத் தகவல் வந்து விட்டது. நீங்கள் இங்கேயே தங்கிக் கொள்ளலாம். இதற்கு மேல் செல்ல உங்களுக்கு அனுமதி இல்லை. அவளை மட்டுமே அழைத்துச் செல்ல முடியும்.


அவன் ஆமோதிக்கும் வண்ணம் தலையசைத்தான்.


சிறிது ஓய்வுக்குப் பின் இன்னொரு போராளியோடு கண்கள் கட்டப்பட்ட நிலையில்அவள் பயணம்  தொடர்ந்தது. இன்னும் சில கை மாற்றல்களுக்குப் பிறகு அவள் அங்கே வந்து சேர்ந்தாள். மீண்டும் கடுமையான சோதனைகளுக்க்குப் பின் அவள் ஒரு அறையில் அமர வைக்கப் பட்டாள்.


அவர் உள்ளே நுழைந்தார். அவருடன் அவரது பாதுகாவலர்களும் இன்னும் இரண்டு பேரும் வந்தனர். 


அவரைப் பார்த்ததும் அவள் தானாக எழுது கொண்டாள்.


வணக்கம் அம்மா. உன் தைரியத்தையும் மன உறுதியையும் பாராட்டுகின்றேன். கணவனைப் பார்க்க வேண்டும் என்பதற்காக நீ பல ஆபத்துகளைத் தாண்டி வந்திருக்கிறாய். உன் கணவன் மீது நீ வைத்திருக்கும் அன்பையே இது காட்டுகிறது.


திருமணம் ஆன மூன்றாம் நாளே அவர் என்னைப் பிரிய நேரிட்டு விட்டது. அவர் துரதிருஷ்டம், உங்களிடம் மாட்டிக் கொண்டார்


அது துரதிருஷ்டமா இல்லை அதிர்ஷ்டமா என்பதை உன் கணவனிடமே கேட்டுக் கொள். இன்னும் பதினைந்து நிமிடத்தில் அவன் இங்கே இருப்பான். பாதுகாப்பு காரணங்களுக்காக உங்கள் இருவரையும் தனியே சந்திக்க என்னால் அனுமதிக்க முடியாது. இவர்கள் இருவரும் உடன் இருப்பார்கள்


அவள் சம்மதம் என்பதைப் போன்று தலையசைக்கவும் அவரும் அவரது பாதுகாவலர்களும் வெளியேறினர். சூடான தேநீர் ஒரு கோப்பையில் அவளிடம் நீட்டப் பட்டது. இரவு முழுக்க செய்த பிரயாணக் களைப்பு தேநீர் குடிக்கச் சொன்னாலும், கணவனைப் பார்த்து விட்டுதான் தொண்டையை நனைப்பது என்ற குறிக்கோள் மறுக்கச் சொன்னது.


அவள் கணவன் உள்ளே நுழைந்தான். தன்னை விட்டுப் பிரிந்த சமயத்தைக் காட்டிலும் இப்போது சற்று மெலிந்திருந்தான். அவனைப் பார்த்ததும் அவள் கண்கள் குளமாயின. பிரிந்தவர்கள் கூடும் போது மௌனம் தானே பெரிய மொழி. அவள் ஓடிச் சென்று அவனைக் கட்டிக் கொண்டாள்.


நலம் பறிமாறலும், அளவளாவல்களும் முடிந்த பின்னர் “எங்கிருந்து உனக்கு இப்படி ஒரு துணிவு வந்தது?


என் நண்பர்களும் அம்மாவும் கொடுத்த தைரியம் தான். எங்கே கடைசி வரை உங்களைப் பார்க்காமலே போய் விடுமோ என்று பயந்தேன். இனி நான் நிம்மதியாக செத்துப் போவேன்


அதற்கு அவசியம் இல்லை” என்றவாறு அந்தக் குடிலுக்குள் மறுபடியும் நுழைந்தார் தலைவர். “உன்னை விட்டு விடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டேன். நீ இனி உன் மனைவியுடன் சந்தோசமாக இருக்கலாம்


இருவருக்கும் மகிழ்ச்சியில் வார்த்தைகள் வராமல் அவரைப் பார்த்தவாறே நின்றிருந்தனர்.


நீ” என்று அந்தப் பெண்ணைப் பார்த்து “எப்படி வந்தாயோ அதே முறையில் ஊருக்கு திருப்பி அனுப்பப் படுவாய். நீ” என்று அந்த ராணுவ வீரனைப் பார்த்து “எங்களிடம் இருந்து தப்பியவன் போல உங்கள் ராணுவம் இருக்கும் இடத்தின் அருகில் விடப்படுவாய். அவர்களிடம் ஏதாவது கதை சொல்லி அவர்களை நம்ப வைத்து உன் மனைவியிடம் போய் சேர்வது உன் சாமர்த்தியம்


எனக்கு இது போதும். நான் எந்தக் கதையையாவது சொல்லி சமாளித்து விடுவேன். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை


உன் மனைவிக்கு சொல்”. உடனிருந்தவர்களுக்கு சில உத்தரவுகளை வழங்கி விட்டு அவர் வெளியேறினார். இருவரும் அவர் போன திசையையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களின் கண்கள் முழுக்க கண்ணீருடன் நன்றியும் கலந்திருந்தது.


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


சில மாதங்களுக்கு முன்


அந்த ஜீப் ராணுவ முகாமுக்குள் நுழைந்த போதே அந்த அலறல் அவர் காதுகளுக்கு எட்டியது. முகாமின் வாயிலில் காவலுக்கு இருந்த அந்த ராணுவ வீரன் அவரது ஜீப்பைப் பார்ததும் விறைப்பாக ஒரு சல்யூட் வைத்தான். ஜீப் அவனுக்கு அருகில் வந்ததும் நின்றது.


அவன் குனிந்து “மூன்று ” என்றான். ஜீப் கிளம்பி உள்ளே சென்று மூன்று என்று பெரிதாக எழுதிய அந்த சிறிய கூடாரத்தின் முன் நின்றது. 


அந்தக் கூடாரத்துக்கு உள்ளே இருந்து தொடர்ந்து அலறல்கள் கேட்டுக் கொண்டே இருந்தது. ஜீப்பிலிருந்து இறங்கிய அவர் தனது பெல்ட்டை சரி செய்து கொண்டார். அவர் இறங்கியதும் ஜீப் கிளம்பி மறைந்தது. 


மெதுவாக அடி மேல் அடி எடுத்து அந்தக் கூடாரத்திற்குள் நுழைந்தார். உள்ளே என்ன மாதிரியான அதிர்ச்சியை சந்திக்க வேண்டி இருக்குமோ என்ற எண்ணம் அவர் அடி வயிற்றில் எதுவோ செய்தது. 


உள்ளே, எதை நினைத்து அவர் பயந்தாரோ அதை விட பல மடங்கு கொடூரமாக இருந்தது. பதிமூன்று வயதான அந்தப் பாலகனை நிர்வாணமாக்கி, கைகள் இரண்டையும் பின்னால் கட்டி மண்டியிடச் செய்திருந்தனர். அவன் உடல் முழுவதும் சிகரெட் சுட்ட காயங்கள். அவனைச் சுற்றி ராணுவ அதிகாரிகள் சிலர் சிரித்துக் கொண்டு கைகளில் மது அல்லது சிகரெட்டோடு நின்றிருந்தனர். சில அண்டை நாட்டு ராணுவ அதிகாரிகளும் அடக்கம்.


இவர் உள்ளே நுழைந்ததைப் பார்த்த ராணுவத் தளபதி “ஹே வா வா. நீ ஒருவன் தான் பாக்கி. மற்ற எல்லாரும் தங்கள் மரியாதையைச் செலுத்தி விட்டனர். நீயும் செலுத்தி விடு.” என்று ஏதோ பெரிய நகைச்சுவையை சொன்னதை போல உரத்த குரலில் சிரித்தான். மற்றவர்களும் பலமாக சிரித்தனர்.


என்ன மரியாதை


என்ன மரியாதையா... ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா. இதோ அடுத்த தலைவன் ஆகியிருக்க வேண்டியவன். அவனுக்குத் தக்க மரியாதை செலுத்த வேண்டாமா” என்று தன் கையில் இருந்த சுருட்டை பலமாக இழுத்து அந்தச் சிறுவனின் மார்பில் அழுத்தினான் தளபதி. 


அம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆ” என்ற அந்தச் சிறுவனின் அலறல் எங்கும் எதிரொலித்தது.


அவர் திரும்பி நடந்தார். 


ஹே எங்கே போகிறாய்?” 


நான் சிறுநீர் கழிக்க வேண்டும்


அதற்கெதற்கு வெளியே போக வேண்டும். இதோ இப்படிப் போகலாமே” என்று அண்டை நாட்டு அதிகாரி ஒருவன் ஜிப்பைத் திறந்து அந்தச் சிறுவனின் முகத்தின் மீது சிறுநீர் கழித்தான். 


அதற்கு மேல் காணச் சகிக்காமல் திரும்பி நடந்தார். “ஹே! என்ன?” என்ற குரல் பின்னால் கேட்டது. “எனக்கு விருப்பமில்லை” என்று திரும்பிப் பார்க்காமல் சொல்லிவிட்டு கூடாரத்தை விட்டு வெளியே நடந்தார். 


போகட்டும் விடு. இவனை அவன் குடும்பத்தாரோடு சேர்த்து விடலாம்” என்று யாரோ பின்னால் சொல்வது கேட்டது.


மெதுவாக நடந்து ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தார். அவர் கண்களுக்கு முன் பல வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவங்கள் நிழலோவியமாக ஓடின. இடுப்பில் பொருத்தியிருந்த துப்பாக்கியைக் கையில் எடுத்தார். 


ட்டுமீல்” 


இரண்டு துப்பாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்தன.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

8 comments:

Anonymous said...

ஹூம். ராணுவ அதிகாரிகள் எப்படி எல்லாம் இருந்திருக்கவேண்டும். எப்படி கேவலமாக...

நல்ல கதைக்கரு

குடுகுடுப்பை said...

இது பெருங்கதை அப்புறமா படிக்கறேன்.

vasu balaji said...

அருமை முகிலன்.

கலகலப்ரியா said...

முதலாவது... நடந்த கதை...! ம்ம்... அருமையா கதை சொல்றீங்க...

Unknown said...

சின்ன அம்மணி - வருகைக்கு நன்றி..

ஆம்.. நடந்த, நடக்கின்ற கொடுமைகளைப் பற்றி கேட்கும் போதும் படிக்கும் போதும் நெஞ்சு பொறுக்குதில்லை

Unknown said...

குடுகுடுப்பை - என்ன பண்றது சிறுகதையா தட்ட நினைக்கிறேன் ஆனால் எழுத்து இழுத்துக்கிட்டு போயிடுது.

Unknown said...

வானம்பாடிகள் - நன்றி சார்

Unknown said...

கலகலப்ரியா,

ஆம் முதலாவது நிஜம். இரண்டாவதிலும் பாலச்சந்திரனின் சடலம் என்று நான் பார்த்த புகைப்படங்கள் உண்மையாக இருக்குமென்றால் சித்திரவதைப் பட்டிருப்பான் என்பது உண்மை. ஒரு வேளை இரண்டு சம்பவங்களிலும் ஒரே ஆள் சம்மந்தப்பட்டிருப்பின் என்ன நடந்திருக்கும் என்ற கற்பனையே இந்தக் கதை.