Sunday, April 10, 2011

கனவு தேசம் - 6

கார் வாங்குவது வரை பார்த்தாயிற்று. அதை விட அத்தியாவசியமான ஒன்று இருக்கிறது. அதுதான் செல்ஃபோன். செல்ஃபோன் பற்றி பார்க்கும் முன்பு க்ரெடிட் ஹிஸ்டரி என்ற வஸ்துவைப் பார்த்துவிடலாம்.

அமெரிக்காவில் வசித்து வருபவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கக் கூடிய ஒன்று இருக்கிறதென்றால் அது க்ரெடிட் ஹிஸ்டரி. அமெரிக்காவில் இதை க்ரெடிட் ஸ்கோர் என்ற எண்ணின் மூலமாகச் சொல்வார்கள்.

க்ரெடிட் ஸ்கோர் என்பது என்ன? ஒரு நபரின் Credit Worthiness - கடன் வாங்கும் தகுதியை நிர்ணயம் செய்வது இந்த க்ரெடிட் ஸ்கோர். கடன் அட்டை அல்லது கடன் (கார், வீடு முதலிய) வழங்கும் வங்கிகள், தொலைபேசி நிறுவனங்கள், செல்பேசி நிறுவனங்கள், மின்சாரம் வினியோகம் செய்யும் நிறுவனங்கள், கார் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனங்கள் இவை அனைத்தும் தங்கள் சேவையை ஒருவருக்கு வழங்கும் முன்பு அவரது க்ரெடிட் ஸ்கோரைப் பார்த்துவிட்டு அதற்கு ஏற்ற மாதிரிதான் சேவையை வழங்கும். நல்ல க்ரெடிட் ஸ்கோர் இருந்தால் குறைந்த வட்டிக்கு கடன் கிடைக்கும், அதிக க்ரெடிட் லிமிட்டோடு கடன் அட்டை கிடைக்கும், டெபாசிட் இல்லாமல் செல்ஃபோன் மற்றும் தொலைபேசி நிறுவனங்கள் தங்கள் சேவையை வழங்கும், குறைந்த ப்ரீமியத்தில் இன்ஷ்யூரன்ஸ் கிடைக்கும். ஆக ஒருவர் நல்ல க்ரெடிட் ஹிஸ்டரியை வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகிறது.

இந்த கிரெடிட் ஹிஸ்டரியை யார் பராமரிக்கிறார்கள்? அமெரிக்காவில் இருக்கும் அத்தனை பேரின் பொருளாதார பரிமாற்றங்கள் அனைத்தையும் அவர்கள் சேமித்து வைக்க வேண்டுமே? இதைச் செய்பவர்கள் தான் கிரெடிட் பீரோக்கள். அமெரிக்காவில் இருக்கும் அத்தனை சோசியல் செக்யூரிட்டி எண் உள்ளவர்களின் க்ரெடிட் நிலவரத்தை சேமித்து வைத்து வருவார்கள். இவர்களிடமிருந்தே கிரெடிட் ஸ்கோர் பெறப்படும்.

சரி, கிரெடிட் ஹிஸ்டரி எப்படி கட்டியமைப்பது?

நல்ல க்ரெடிட் ஹிஸ்டரி என்பதை, கடன் வாங்காமலே இருந்தால் கட்டமைக்க முடியாது. வாங்கிய கடனை சரியான நேரத்தில் திருப்பிக் கட்டியிருந்தாலே நல்ல ஹிஸ்டரி கட்டமைக்க முடியும்.

அமெரிக்காவில் சென்று இறங்கிய பட்சத்தில் கடன் கொடுக்க யார் தயாராக இருப்பார்கள்? கடன் வாங்காமல் கட்டமைக்க முடியாதென்றால் புதிதாக அமெரிக்கா செல்பவர் எப்படி க்ரெடிட் ஹிஸ்டரி உருவாக்குவது? இப்படிப்பட்டவர்களுக்காகவும், அதல பாதாளத்தில் விழுந்து போன க்ரெடிட் ஸ்கோரை சீரமைக்க முயற்சிப்பவர்களுக்காகவும் வங்கிகள் கொண்டு வந்ததுதான் Secured Credit Card. இது வழக்கமான க்ரெடிட் அட்டை போல எல்லா இடங்களிலும் உபயோகிக்க முடியும். மற்ற அட்டைகளுக்கும் இதற்கும் இருக்கும் ஒரு வித்தியாசம், இந்த அட்டை பெறுவதற்கு ஒரு செக்யூரிட்டி டெபாசிட் வங்கியில் ஏற்படுத்த வேண்டும். அந்த டெபாசிட் தொகையைப் பொறுத்து க்ரெடிட் லிமிட் வழங்கப்படும். அந்த அட்டையில் உங்கள் நடவடிக்கைகள் மாதாமாதம் க்ரெடிட் பீரோக்களுக்கு அனுப்பி வைக்கப்படும். சிறிது காலம் க்ரெடிட் ஹிஸ்டரி கட்டமைத்த பின்னர் அடுத்த கட்டமாக unsecured credit card - எதாவது ஒரு வங்கியில் விண்ணப்பிக்க வேண்டும். ஒருவேளை எதாவது ஒரு வங்கி உங்கள் விண்ணப்பத்தை நிராகரித்து விட்டால், அடுத்தடுத்து பல வங்கிகளில் முயற்சிக்காதீர்கள். அது உங்கள் கிரெடிட் ஸ்கோரை இன்னும் நாசப்படுத்தும். நிராகரிக்கப் பட்டால் இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்கு உங்கள் செக்யூர்ட் க்ரெடிட் கார்டை உபயோகப் படுத்துங்கள். அதன் பிறகு இன்னொரு வங்கியில் முயற்சி செய்யுங்கள்.

Digital Credit Unit - DCU என்று ஒரு வங்கி இருக்கிறது. இதை Desi Credit Union என்று கேலியாகச் சொல்வார்கள். இந்த வங்கியில் கணக்கு துவங்கினால், $3000 டாலர் கிரெடிட் லிமிட்டோடு ஃப்ரீ கிரெடிட் கார்டு தருவார்கள். குறைந்த வட்டியில் $25000 வரை கார் லோனும் தருவார்கள். இந்த வங்கியின் மூலம் பயனடைந்த தேசிகள் அதிகம்.

 கிரெடிட் ஸ்கோரை பாதிக்கக் கூடிய பரிமாற்றங்கள் என்ன என்ன? அவற்றை எப்படி சரி செய்வது?

கிரெடிட் ஸ்கோரை FICO Score என்று சொல்வார்கள். கீழ்க்கண்ட பகுதிகள் கிரெடிட் ஸ்கோரைத் தீர்மானிக்கின்றன.

35% - Payment History - அதாவது கிரெடிட் கார்ட் பில், செல்ஃபோன் பில், தொலைபேசி பில், மெடிக்கல் பில் - போன்றவற்றை நேரத்துக்கு கட்டி வருவது. எதாவது பில் ட்யூ டேட் தவற விட்டால் அது கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். நேரா நேரத்துக்கு பில் கட்டுவது, கிரெடிட் ஸ்கோரை உயர்த்தும்.
30% - Credit Utilization - அதாவது, உங்கள் ரிவால்விங் கிரெடிட்டில் எந்த சதவீதத்தை நீங்கள் உபயோகப் படுத்தி உள்ளீர்கள் என்பது. உதாரணமாக உங்கள் கிரெடிட் கார்டின் லிமிட் $1000 என்று வைத்துக்கொள்வோம். ஒரு மாதத்துக்கு நீங்கள் $800 க்கு அந்த அட்டையை உபயோகிக்கிறீர்கள் என்றால் 80% உங்கள் ரிவால்விங் கிரெடிட்டை உபயோகிக்கிறீர்கள் என்று அர்த்தம். இது டேஞ்சர். இந்த சதவீதத்தை 50%க்குக் கீழ் வைத்திருப்பது நலம்.
15% - Length of Credit History - எத்தனை வருடங்களுக்கு உங்கள் கிரெடிட் ஹிஸ்டரி இருக்கிறது என்பது. அதிகமாக இருப்பது நல்லது.
10% - Types of Credits used - என்ன வகையான கடன்கள் வைத்திருக்கிறீர்கள் என்பது. பலவகையான கடன்கள் வைத்திருப்பது கிரெடிட் ஸ்கோரை உயர்த்த உதவும்
10% - Recent Search for credit - உங்கள் கிரெடிட் ஹிஸ்டரியைப் பற்றிய விசாரணைகள். நீங்கள் புது கடனுக்கு விண்ணப்பிக்கும்போதெல்லாம் இங்கே வந்து எண்ட்ரிகள் விழும். அதிக விசாரணைகள் இருப்பது கேடு. நீங்களே உங்கள் கிரெடிட் ஸ்கோரை விசாரிப்பது இதில் வராது.

ஆக மேலே உள்ளவற்றை சரியாகக் கண்ட்ரோல் செய்தால் நல்ல க்ரெடிட் ஸ்கோரோடு பிழைக்கலாம்.

அமெரிக்க வாழ்க்கை கிரெடிட் ஸ்கோரோடு பின்னி பிணைக்கப்பட்டது. ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு $250 மெடிக்கல் பில் கட்ட விட்டுவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்போது வீடு வாங்கலாம் என்று லோன் அப்ளை செய்தால், நீங்க அஞ்சு வருசத்துக்கு முன்னாடி $250 கட்டலை, அதைக் கட்டிட்டு வாங்க லோன் தர்றோம் என்று சொல்வார்கள். அதனால் இதில் தப்பெதுவும் செய்யாமலிருப்பது நலம்.

இப்போது செல்ஃபோன் வாங்கும் விசயத்துக்கு வருவோம். செல்ஃபோன் ப்ளான் வாங்க வேண்டுமென்றால் நல்ல கிரெடிட் ஹிஸ்டரி தேவை. கிரெடிட் ஹிஸ்டரி இல்லையென்றால் டெபாசிட் கட்டச் சொல்வார்கள். பெரும்பாலான இந்தியர்கள் வந்து இறங்கியதும் டெபாசிட் கட்டி செல்ஃபோன் வாங்கிவிடுவார்கள். (நான் 6 மாதங்கள் வரை ப்ரிபெய்ட் ஃபோன் வைத்திருந்தேன்).

செல்ஃபோன்கள் அமெரிக்காவில் மிகவும் சல்லிசாகக் கிடைப்பதை வெளிநாட்டில் இருப்பவர்கள் பார்த்திருக்கலாம். ஐஃபோன் 4 $200க்கு, HTC HD7 $0க்கு என்றெல்லாம் கிடைக்கும். பெரும்பாலான ஃபோன்கள் இலவசமாகவே கிடைக்கும். ஆனால் அதற்குப் பின்னால் இருக்கும் கேட்ச் தான் முக்கியம். பெரும்பாலான ஃபோன்கள் நெட்வொர்க் ப்ரொவைடர்களோடு பிணைக்கப் பட்டிருக்கும். அந்த ஃபோன்களை Locked Phones என்று அழைப்பார்கள். உதாரணமாக ஐஃபோனை AT&T நிறுவனத்துடன் மட்டுமே உபயோகிக்க முடியும். (இப்போது Verizon நிறுவனத்தோடும் உபயோகிக்கும் வண்ணம் கொண்டு வந்துள்ளார்கள்). இந்த ஃபோன்களை குறைந்த விலையில் வாங்குவதற்கு நெட்வொர்க் நிறுவனங்களோடு காண்ட்ராக்ட் போடவேண்டும். குறைந்த பட்சம் ஒரு வருடத்திலிருந்து 2 வருடங்கள் வரை அந்த கம்பெனியுடனே இருப்பேன் என்று ஒப்பந்தம் போடவேண்டும். இந்த ஒப்பந்தத்தை முறித்தால் பெனால்டி கட்ட வேண்டியதோடு கிரெடிட் ஹிஸ்டரியையும் பாதிக்கும்.

$200 க்கு ஐஃபோன் வாங்கி இந்தியாவுக்குக் கடத்த இயலாது. அப்படியே கடத்திக் கொண்டு வந்தாலும், ஃபோனை அன்லாக் செய்து உபயோகிக்க வேண்டும். அன்லாக் செய்து உபயோகிப்பதில் இருக்கும் வம்பு என்னவென்றால், சாஃப்ட்வேர் அப்டேட் செய்ய முடியாது. செய்தால் மறுபடியும் லாக் ஆகிவிடும். சாம்சங் கேலக்ஸி என்ற ஆண்ட்ராய்ட் ஃபோனும் வைத்திருக்கிறேன். அதை அப்க்ரேட் செய்யவே முடியவில்லை. சாம்சங்கைக் கேட்டால் AT&Tயைக் கேள் என்கிறார்கள். AT&Tயைக் கேட்டால் சாம்சங்க் இன்னும் அப்ட்டேட்ட OS அனுப்பவில்லை என்கிறார்கள்.  

இரண்டு வருடங்கள் மாதம் வாய்ஸ் ப்ளான் குறைந்த பட்சம் $40ம், டேட்டா ப்ளான் $15ம் கட்ட வேண்டும். அதில் செல்ஃபோனுக்குக் குறைத்த காசைப் பிடித்துவிடுவார்கள்.

மேலும் பார்ப்போம்

6 comments:

bandhu said...

நல்ல விளக்கம். கிரெடிட் ஹிஸ்டரி பற்றி அதிக டீடைல்ஸ் தெரிந்து கொண்டேன்!

அமுதா கிருஷ்ணா said...

புது தகவல்களுக்கு நன்றி

Unknown said...

நல்ல விளக்கம்!!

//Digital Credit Unit - DCU என்று ஒரு வங்கி இருக்கிறது. இதை Desi Credit Union என்று கேலியாகச் சொல்வார்கள். இந்த வங்கியில் கணக்கு துவங்கினால், $3000 டாலர் கிரெடிட் லிமிட்டோடு ஃப்ரீ கிரெடிட் கார்டு தருவார்கள். குறைந்த வட்டியில் $25000 வரை கார் லோனும் தருவார்கள். இந்த வங்கியின் மூலம் பயனடைந்த தேசிகள் அதிகம்.//

இந்த க்ரெடிட் யூனியன்தான் என்ன நம்பி, வந்த ஆறு மாசத்துல 25,000 கார் லோன் குடுத்தாங்க ;))

ம.தி.சுதா said...

கனவு தேசத்தில் இருந்து உணர்வுப் பதிவு அருமை...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)

angel said...

uravugal nu oru kathai eluthuningale atha mudikra idea.........

ANaND said...

$200 க்கு ஐஃபோன் வாங்கி இந்தியாவுக்குக் கடத்த இயலாது. அப்படியே கடத்திக் கொண்டு வந்தாலும், ஃபோனை அன்லாக் செய்து உபயோகிக்க வேண்டும். அன்லாக் செய்து உபயோகிப்பதில் இருக்கும் வம்பு என்னவென்றால், சாஃப்ட்வேர் அப்டேட் செய்ய முடியாது..... அப்படினா நான் குறைந்த விலையில் iphone வாங்கவே முடியாதா நண்பா ...?