அதீதம் இதழில் வெளிவந்து கொண்டிருக்கும் தொடர் கதை.
பஸ்
கோவில்பட்டியைத் தாண்டிக் கொண்டிருந்தது. ஏசி போட்ட கே.பி.என் பஸ். இதுவரைக்கும் அரசுப்
பேருந்துகளில் மட்டுமே பிரயாணித்துக் கொண்டிருந்தவன் முதல் முறையாக ஏசி பஸ்ஸில். நான்,
தேவா. என் முழுப்பெயரைக் கேட்டீர்களானால் என் ஜாதி குலம் கோத்திரம் எல்லாம் சொல்லிவிடுவீர்கள்.
அதனால் இப்போதைக்கு தேவா மட்டுமே. கட்ட பொம்மன் தெரியுமா உங்களுக்கு? பார்க்க அசப்பில்
நம் நடிகர் திலகம் சிவாஜியைப் போலவே இருப்பார். அந்தக் காலத்தில் வெள்ளைத் துரைகளை
சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்டிருக்கிறாராம். அந்த கட்ட பொம்மனை எங்கள் ஊரில் தான்
தூக்கில் போட்டார்கள். கட்ட பொம்மன் படம் பார்த்த
பெருசுகளுக்கெல்லாம் புரிந்திருக்கும். கயத்தாறே தான். ஆனால், எங்கள் ஊர் காலக் கொடுமையால் அதை விட வேறு விசயங்களுக்குப் புகழடைந்து விட்டது.
அது எதற்கு இப்போது. அதை விடுங்கள்.
இந்த
ஊரில் பிறந்து, ஓரளவுக்கு நன்றாகப் படித்த காரணத்தால் பி.இ படித்து முடிக்கும் முன்னரே
பெங்களூரில் ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்து
இதோ பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஊருக்குள் அதிக நண்பர்கள் இல்லை. அதிக என்ன
அதிக, நண்பர்களே இல்லை. நண்பர்கள் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதில் நான் குறியாக இருந்தேன்.
இந்த ஊருக்கான அடையாளங்களை அடியோடு தலை முழுகுவதே என் தலையாய குறிக்கோள்.
பஸ்ஸை
நோட்டம் விட்டேன். இன்னமும் சூரியன் மறையாத காரணத்தால் மக்கள் எல்லாம் திரையிலோடும்
படத்தில் ஆழ்ந்திருந்தார்கள். பஸ் நிறையவில்லை.
வேப்ப மரத்தின் கீழே வேப்பம்பழம் விழுந்திருப்பதைப் போல இங்கொன்றும் அங்கொன்றுமாகவே
தலைகள் தெரிந்தன. மருந்துக்குக் கூட ஒரு இளம் பெண் இல்லை. என்ன செய்ய என் அதிர்ஷ்டம்
அப்படி. என் பெயரைப் பார்த்து பயந்தோ என்னவோ பெண்கள் என்னிடம் நெருங்கிப் பழகியதில்லை.
தாத்தன் பேர் என்ற எனக்கு இந்தப் பேரை வைத்த பெரியப்பாவை நினைத்தான் பற்றிக் கொண்டு
வந்தது. மறுபடியும் ஊர்க்கதைக்குப் போய் விட்டேன்.
பள்ளியில்
படிக்கும்போது மலர்விழியை எனக்கு மிகவும் பிடிக்கும். மற்ற முகங்கள் ஒன்று எண்ணை வடிந்து
கொண்டிருக்கும், அல்லது மஞ்சள் அப்பிப் போய் இருக்கும். மலர்விழியின் முகமோ இவைகளுக்கு
நடுவில் பளிச்சென்று அலம்பி லேசான மஞ்சள் பூச்சோடு பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல
இருக்கும். அளவெடுத்து செதுக்கியதைப் போன்ற மூக்கைச் சுருக்கி, அந்தப் பெரிய கண்களைச் சிமிட்டும் போது வார்த்தைகள் வராமல் நா
வரண்டு போய் பலமுறை நின்றிருந்திருக்கிறேன். தோழிகளுடன் பேசிக் கொண்டிருக்கும்போது
கேலி செய்வதாக உதட்டைச் சுழித்து வக்கனை காட்டுவதைப் பார்த்து நான் பேசிக்கொண்டிருப்பதை
மறந்து போயிருக்கிறேன்.
எட்டு
வருடங்கள் அவளுடன் படித்ததில் அவள் என்னிடம் பேசிய வார்த்தைகள் 7. எங்கள் ஊரில் சொந்தக்
காரப் பெண்கள் கூட வெளியிடங்களில் பேச மாட்டார்கள். இவள் வேறு சாதி. எங்கிருந்து பேச?
பார்த்துக் கொண்டே இருந்ததில் பனிரெண்டாம் வகுப்பும் முடிந்து போயிருந்தது. கல்லூரியில்
எந்தப் பெண்ணும் என்னிடம் பேசியதே இல்லை. நானும் டிஸ்ட்ராக்ஷன் இல்லாது படித்து முடித்துவிட்டேன்.
கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும்போது திருமணமாகிப் போன மலர்விழி, நான்காம் ஆண்டு
முடிப்பதற்குள் கையில் ஒன்றும் வயிற்றில் ஒன்றுமாக நின்றாள். நான்கு வருடங்களில் நான்
மேலே சொன்ன அத்தனை அழகும் எங்கே போனதென்றே தெரியாமல் ஓடிப் போய் விட்டது. கிளியை வளர்த்து
குரங்கு கையில் கொடுக்கும் அப்பன்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு அரபு நாடுகளில் கொடுக்கும்
தண்டனையைக் கொடுத்தாலும் தகும்.
திருமணம்
முடிப்பது என்றால் அது காதலித்துத்தான் என்ற முடிவை எடுத்திருந்தேன். அதுவும், வேறு
சாதி, முடிந்தால் வேறு மதம், அதிர்ஷ்டமிருந்தால் வேறு மொழி. பார்ப்போம் என் தலையில்
எவளை எழுதி வைத்திருக்கிறது என்று.
பஸ்
மதுரையில் சிறிது நேரம் நின்று ஆட்களை ஏற்றிக் கொண்டு தங்க நாற்கர சாலையில் பறந்தது.
இப்போது பஸ் ஏறக்குறைய ஃபுல்லாகி விட்டது. மணியும் ஒன்பதைத் தொட்டுவிட்டதால் கண்களை
மூடித் தூங்க ஆரம்பித்தேன்.
கண்
விழித்த போது பஸ் ஓசூரில் நின்று கொண்டிருந்தது. கழுத்து வரை போர்த்தியிருந்த போர்வையை
சற்றே கீழிறக்கி விட்டேன். ஏசியின் குளிர் இப்போது இதமாக இல்லை. ஒரு தம்மடித்தால் தேவலாம்
போல இருந்தது. கீழே இறங்கும் வழியில் க்ளீனரிடம் “அண்ணே எவ்ளோ நேரம் நிக்கும்ணே” என்றேன்.
“இன்னொரு
அஞ்சி நிமிசம் நிக்கும்”
‘”தம்மடிச்சிக்கலாமா?”
“இங்க
வாசல் பக்கத்துலயே நின்னுக்கோங்க. பஸ் எடுத்தாத் தெரியும்” என்று அறிவுறுத்தினான்.
பையிலிருந்த கோல்ட் ஃப்ளேக் கிங்க்ஸ் ஒன்றை கரைத்து என் வாழ்நாளில் ஆறைக் குறைத்துவிட்டு,
பஸ்ஸில் ஏறினேன்.
எல்லோரும்
இன்னமும் தூக்கத்தில் தான் இருந்தார்கள். கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்தவரின் குறட்டை
சீராக பஸ்ஸின் கண்ணாடிகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. என் சீட்டுக்கு அந்தப் பக்கம்
ஒரு வரிசை முன்னால் யாரோ தலை முழுக்க இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்திருந்தார்கள்.
அந்த சீட்டை நான் தாண்டும் போது போர்வைக்குள் அசைவதை என்னால் உணர முடிந்தது. நான் என்
சீட்டில் உட்கார்ந்தேன். அந்த உருவம், போர்வையை விலக்கி மூக்குக்கு முன்னால் கையை வைத்து
விசிறியது. எனக்கு அப்போதுதான் உறைத்தது, ஏசி பஸ்ஸில் என் மூச்சில் சிகரெட் வாசம் கரையாமல்
அப்பிக் கிடப்பதை. அவள் திரும்பி என்னைப் பார்த்து
முறைத்தாள்.
ஸ்டன்னிங் ப்யூட்டி என்று கதைகளில் எழுதுவார்கள். அதை
நான் நேரில் பார்த்தேன். பெரிய கண்கள். அந்தக் கண்களைச் சுற்றி எழுதியிருந்த மை, இரவு
தூக்கத்திலும் கரையாமல் இன்னமும் கண்களை அழகு படுத்திக் கொண்டிருந்தது. கடல் போன்ற
அகலமானக் கண்கள். அந்தக் கருவிழிகள் இரண்டும், துளி கூட கோபத்தைக் காட்டவில்லை. ஆரஞ்சுச்
சுளை போன்ற உதடுகளை கீழ் நோக்கிய யு போல வளைத்துத்தான் கோபமாக இருப்பதாகக் காட்டிக்
கொண்டிருந்தாள். உதடுகளில் மெல்லிய லிப்ஸ்டிக். உதட்டையும், கண்களையும் இணைக்கும் பாலமாய்
மூக்கு. கொஞ்சமே கொஞ்சம் பெரிய காது. காது மடலின் அகலத்தைக் குறைத்துக் காட்டுவதற்காக
கொஞ்சம் பெரிய சைஸ் தோடு போட்டிருந்தாள். அந்த தோடில் இருந்து மூன்று குண்டுகள் தோள்
வரை தொங்கிக் கொண்டிருந்தன. அவள் வேகமாகத் திரும்பியதால் அந்தக் குண்டுகள் சற்று அதிகமாகவே
ஆடிக் கொண்டிருந்தன. சட்டெனப் பார்த்தால் ஒற்றை
நாடி நாசியைப் போலத் தோன்றிவிடும். ஆனால் மிக மிகச் சிறியதாக ஒரு குழி நாசியின் மையத்தில்
அழகுக்கு அழகு சேர்த்துக் கொண்டிருந்தது. பார்த்ததும் கிள்ளச் சொல்லும் குண்டுக் கன்னங்கள்.
சிரித்தால் கண்டிப்பாகக் குழி விழும் என்று தோன்றியது.
அவள் கோபம் என் மீதுதான் என்று ஏனக்கு வெளிப்படையாகவே
தெரிந்தது. கண்களைக் கெஞ்சுவது போல சுருக்கி மூக்கை உயர்த்தி, உதடுகளை மட்டும் அசைத்து
சத்தம் வராமல் “சாரி” என்றேன். அவளும் கண்களைச் சுருக்கி உக்கிரமாகப் பார்ப்பது போல
பாவனை செய்தாள். சாஷ்டாங்கமாக காலில் விழுவதைப்
போல சீட்டிலேயே குனிந்து இரன்டு கைகளையும் தலைக்கு மேல் சேர்த்து கும்பிட்டேன். கலகலவென
லைலா சிரிப்பதைப் போல ஒரு வெள்ளைச் சிரிப்பை சிதற விட்டாள். நானும் புன்னகைத்தேன்.
சொன்னேன் அல்லவா, சிரித்ததும் அவள் கன்னத்தில் குழி விழுந்தது. திரும்பி சீட்டில் சாய்ந்து
கொண்டாள்.
எனக்கு அவள் காதும் கன்னமும் மட்டுமே தெரிந்தது. மடிவாலா
வரை அவள் காதுகளையே பார்த்துக் கொண்டு வந்தேன். ஓரிருமுறை அவள் திரும்பிய போது நான்
பார்வையைத் திருப்பிக் கொண்டேன்.
மடிவாலா. என் கம்பெனியின் கெஸ்ட் அவுஸ் பக்கத்தில் தான்
இருக்கிறது. இங்கே தான் இறங்கச் சொன்னார்கள். பையைத் தூக்கிக் கொண்டு இறங்கினேன். கிட்டத்தட்ட
மொத்த பஸ்ஸும் காலியாகிவிட்டிருந்தது. கீழே இறங்கியதும் ஆட்டோ டிரைவர்கள் மொய்த்து
விட்டார்கள். ஒரு தம் போட்டு விட்டு போகலாம் என்று எண்ணி அந்தக் கூட்டத்தை விட்டு வெளியே
வந்தேன். சிகரெட் பாக்கெட்டைக் கையில் எடுக்கும் போது யாரோ முறைப்பது போலத் தோன்றவே
திரும்பினேன். அவள் எனக்கு முதுகு காட்டி ஒரு ஆட்டோவில் ஏறிக் கொண்டிருந்தாள். என்
கைகள் அனிச்சையாக சிகரெட்டை மீண்டும் பாக்கெட்டுக்குள் வைத்தன.
ஓர் ஆட்டோவை மடக்கி கெஸ்ட் அவுஸ் இருக்கும் அப்பார்ட்மென்ட்
பெயரைச் சொல்லி உட்கார்ந்தேன். பெங்களூர் ஆட்டோக்காரர்கள் நல்லவர்கள். ஆட்டோவுக்கு
மீட்டர் போட்டே ஓட்டுவார்கள். அப்பார்மென்ட் வாசலில் ஆட்டோவை கட் செய்து விட்டு வாட்ச்மேனிடம்
விவரம் சொல்லி சைட் கேட்டின் வழியாக உள்ளே நுழைந்தேன். கையில் இருந்த சீட்டில் இருந்த
அப்பார்மென்ட் எண்ணையும் அங்கே தெரிந்த கட்டிடங்களின் எண்ணையும் சரி பார்த்துக் கொண்டே
நடந்தேன்.
“நீங்களும் இங்க தான் வர்றீங்கன்னு தெரிஞ்சிருந்தா ஆட்டோவை
ஷேர் செஞ்சிருக்கலாம். காசு மிச்சமாகியிருக்கும்” குரல் கேட்டதும் திடுக்கிட்டுத் திரும்பினேன்.
“மாலா” என்று வலது கையை நீட்டினாள்.
1 comment:
// சொன்னேன் அல்லவா, சிரித்ததும் அவள் கன்னத்தில் குழி விழுந்தது//
ரசித்தேன்.
மொத்தமாய் சுவாரஸ்யமா நகர்த்தியிருக்கீங்க.
சில இடங்களில் கொஞ்சமே கொஞ்சம் வள வளன்னு இழுக்கறீங்களோன்னும் இருந்தது.
எல்லா பார்ட்டையும் படிச்சிட்டு நாளைக்கு வறேன்.
Post a Comment