Monday, June 18, 2012

இதுவும் ஒரு காதல் கதை - 9



“மாலா..”

“ம்”

“ஃப்ளைட் ஏற்ரதுக்கு முன்னாடி நான் ஒண்ணு சொன்னேனே”

“லூசு. மொதல்ல தூங்கி ரெஸ்ட் எடு. அதைப் பத்தி அப்புறம் பேசலாம்”

நான் பதில் சொல்வதற்குள் வைத்து விட்டாள். ஏமாற்றமாகிப் போனது. எழுந்து ஜன்னலை லேசாகத் திறந்து வைத்து சிகரெட்டைப் பற்ற வைத்தேன். கட்டிலின் அருகே இருந்த எலெக்ட்ரானிக் டைம்பீஸ் மணி 1:00 என்றது. ஜன்னல் வழியே 42வது தெரு தெரிந்தது. கண்ணுக்குத் தெரியும் இடமெல்லாம் விளக்குகள். சாலைகளில் ஆட்களின் நடமாட்டம் மாலை 8:00 மணியைப் போல இருந்தது. இறங்கிப் போகலாமா என்று ஒரு நப்பாசை. ஆனாலும், பலர் பலவிதமாக சொல்லியதால் இரவு இந்த நேரத்துக்குப் பிறகு தனியாக சாலைகளில் நடமாட ஒரு தயக்கம் வந்தது. சிகரெட் பிடித்துக் கொண்டே நியூயார்க்கின் ஸ்கைலைன்களை இருட்டில் வேடிக்கை பார்த்தேன். விடிந்ததும் ஆஃபிஸ் செல்ல வேண்டும். வாய் கொப்புளித்துவிட்டு வந்து படுத்தேன். தூக்கம் வரவே இல்லை. டிவியைப் போட்டு சேனல் சர்ஃப் செய்து எச்.பி.ஓவில் நிறுத்தினேன். ஏதோ ஒரு மொக்கை படம் ஓடிக்கொண்டிருந்தது.

*************************

பாத்ரூமில் பல் விளக்கிக் கொண்டிருந்த போது ஃபோன் அடித்தது. நல்ல வேளை பாத்ரூமிலேயே ஒரு இண்டர்காம் வைத்திருக்கிறார்கள். வாயில் இருந்த எச்சிலை வாஷ் பேசினில் துப்பி விட்டு, ரிசீவரை காதுக்குக் கொடுத்து, “ஹலோ” என்றேன்.

“ஹேய் தேவா.. ஹவ் வாஸ் த ட்ரிப்?” பல முறை கான்ஃப்ரன்ஸ் காலில் கேட்ட குரல்தான் என்றாலும், இப்படி ரிசீவரில் கேட்கும் போது வேறு மாதிரி ஒலித்தது.

“ரீனா? ட்ரிப் வாஸ் ஓக்கே. பட் ஐ குட்ண்ட் ஸ்லீப் லாஸ்ட் நைட். ஜெட் லேக்”

இதர நல விசாரிப்புகளுக்குப் பிறகு சொன்னாள், “ஐ வில் பி இன் யுர் ஹோட்டல் அட் 7:45. வில் டேக் யு டு ஒர்க் மைசெல்ஃப்” கையில் கட்டியிருந்த வாட்சைப் பார்த்தேன். இன்னமும் இந்திய நேரம் தான் காட்டியது. வெளியே வந்து டைம்பீஸில் நேரம் பார்த்து வாட்சை சரி செய்தேன். இன்னும் அரை மணி இருக்கிறது. அதற்குள் குளித்து ரெடி ஆக வேண்டும். மள மளவென வேலைகளை முடித்து இருப்பதிலேயே நல்ல உடை ஒன்றை அணிந்தேன். ப்ருட்டை விசிறிக்கொண்டிருக்கும் போது கதவு தட்டும் சத்தம் கேட்டது. மூடி பெட்டிக்குள் வைத்துவிட்டு கதவைத் திறந்தேன்.

கருப்பு நிற டாப், அதே நிற ஸ்கர்ட் அணிந்து தோள் வரை வெட்டப்பட்ட ப்ரவுன் நிற முடியை சீராக வாரி முகத்தில் ஒட்ட வைத்த புன்னகையோடு நின்றிருந்தாள் ரீனா. “ஹாய்” என்றவாறு கையை நீட்டினாள். பிடித்துக் குலுக்கினேன்.

ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் என்றாலும், குடும்பத்தில் எங்கோ கலப்படம் இருந்திருக்க வேண்டும். கொஞ்சம் வெளுப்பாகவே இருந்தாள். பற்கள் சீராகவும் வெண்மையாகவும் இருந்தன. படிக்கும்போது மூக்குக்கண்ணாடி அணிவாள் போலும், மூக்கின் நடுவில் கண்ணாடி உட்கார்ந்த தடம் தெரிந்தது. நாற்பதைத் தொட்ட வயதாக இருந்தாலும், மேக்கப் மூலம் முகத்தின் சுருக்கங்களை மறைக்கப் பிரயத்தனம் செய்திருந்தாள். அணிந்திருந்த லிப் ஸ்டிக் பெருத்த உதடுகளை சற்றே மெல்லியதாக்கிக் காட்டியது. பரந்த மார்புகள் இருந்தாலும் அணிந்திருந்த உடையில் கண்ணியம் தவறாமல் இருந்தன. கால்களின் மேல் தோல் நிறத்துக்கு ஏற்ப ஸ்டாக்கிங் அணிந்திருந்தது தெரிந்தது.

“கம் லெட்ஸ் கோ” என்றவாரு திரும்பி நடந்தாள். பசுவைத் தொடரும் கன்றுக்குட்டி போல பின்னாலே போனேன். வழியில் Dunkin Donuts என்ற கடையில் காபியும் ப்ரேக்ஃபாஸ்டும் - Egg and cheese on a croissannt- வாங்கிக்கொண்டு ஆஃபிஸ் பில்டிங் போய்ச் சேர்ந்தோம். நான் தங்கியிருந்த 42வது தெருவிலேயே நான்கு ப்ளாக்குகள் தள்ளி இருந்தது அந்த கட்டிடம். 60 மாடி கட்டிடத்தில் 30-35 மாடிகள் எங்கள் அலுவலகம். செக்யூரிட்டியிடம் என்னை அறிமுகப் படுத்தி எனக்கொரு ஐடி கார்ட் வாங்கித் தந்து, எங்கள் அலுவலக தளத்துக்குக் கூட்டிப் போய், க்ளையண்ட் டீமை அறிமுகப் படுத்தி, நான் அமரும் இடம், பாத்ரூம், சாப்பாடு சாப்பிடும் இடம் என ஒன்று விடாமல் காட்டி கடைசியில் நான் லேப்டாப்பைத் திறக்கும்போது மணி ஒன்பதை நெருங்கியிருந்தது. திங்கள், புதன், வெள்ளி நியூயார்க் நேரம் 9:00 மணிக்கு ஆஃப்ஷோர் மீட்டிங் இருப்பது நினைவுக்கு வந்தது. ரீனா அறையிலிருந்து எட்டிப் பார்த்து, “ப்ளானிங் டு ஜாயின்?” என்றாள். ஒரு நோட்டையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு அவள் அறைக்குள் நுழைந்தேன்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம், ரீனா என்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறாள், ஆஃப்ஷோர் டீமிடம் இருந்து நான் என்ன எதிர்பார்க்கிறேன், ஆஃப்ஷோர் டீம் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை அலசிக் காயப் போட்டு விட்டு சீட்டுக்குத் திரும்பினேன். அடுத்தடுத்த மீட்டிங்குகள் இவ்வளவு நேரம் எடுக்காது என்று சொல்லி வயிற்றில் பாலை வார்த்தாள்.

சீட்டுக்கு வந்ததும், லேப்டாப் பேகில் இருந்த காலிங் கார்டை எடுத்தேன். அட்டையின் பின்னாலிருந்த வழிகாட்டுதல்களின் படி நம்பரை ஒற்றினேன். முதலில் அப்பாவின் செல்ஃபோன். அது எப்போதும் அம்மாவிடம் தான் இருக்கும். மூன்று நாட்கள் பிரயாணவிபரம் சொல்லி முடித்தேன். தங்கை இப்போதே திரும்ப வரும்போது என்ன என்ன வேண்டும் என்பதை பட்டியலிட ஆரம்பித்திருந்தாள். “த சும்மாரு கழுத. அண்ணன் இப்பத்தான் அங்க போயிருக்கு” என்று ஆத்தா அதட்டினாள்.

அடுத்ததாக செந்தில் நம்பர். அவனிடமும் ஓமனாவிடமும் பேசி முடித்துவிட்டுக் கடைசியாக மாலாவின் செல்லை அழைத்தேன். “ஹேய், என்னடா மீட்டிங் முடிஞ்சி இவ்வளவு நேரமாச்சி. இன்னமும் கூப்புடலையேன்னு நினைச்சென். கூப்டுட்ட”

“இல்லை மாலா. உன்கிட்ட ரொம்ப நேரம் பேசவேண்டியிருக்குமேன்னு முதல்ல அம்மா அப்பா கிட்ட பேசினேன். அப்புறம் செந்தில் ஓமனா”

“ஓ அப்ப நான் கடைசிதானா”

“ஏய் அதான் சொன்னேனே. உன்கிட்ட ரொம்ப நேரம் பேச வேண்டியிருக்கும் அதால அவங்களுக்கு முதல்ல கூப்டேன்னு”

“சரி சரி மன்னிச்சிட்டேன். ஆமா, ஆஃபிஸ் எப்பிடி? ஃபிகருங்க எல்லாம் சம்மர் காஸ்ட்யூம்ல கலக்கறாளுங்களா?”

“அடப்போடி. எல்லாம் நாப்பது அம்பதுன்னு இருக்காங்க. ஒவ்வொருத்தருக்கும் எக்ஸ்பீரியன்ஸ் என் வயசு இருக்கும் போல”

“ஹாஹாஹா”

“மாலா, நல்ல மூட்ல இருக்கியா?”

“...”

“சொல்லு”

“ம்ம்”

“நான் ஏர்ப்போர்ட்ல வச்சி உன்கிட்ட ஒரு விசயம் சொன்னேனே. நீ அதுக்கு பதில் சொல்லலையே இன்னமும்?”

“தேவா, எனக்குக் கொஞ்சம் டைம் வேணும்”

அமைதியானேன். எதிர்முனையிலும் அமைதி. கிட்டத்தட்ட அரை நிமிடத்துக்குப் பிறகு, “ஹலோ”

“இந்த டைம் போதும்ல. இப்ப சொல்லு”

“டேய்..”

“ப்ளீஸ் மாலா. காக்க வைக்காத”

“சரி ரெண்டு நிமிசமோ ரெண்டு நாளோ இதேதான் என்னோட பதிலா இருக்கப் போவுது”

“என்ன என்ன என்ன”

“தேவா, நீ எனக்கு ஒரு நல்ல ஃப்ரண்ட். ஓமனாவை விட, செந்திலை விட, உன்னை எனக்கு ரொம்ப க்ளோஸா நான் நினைக்கிறேன்.”

“சரி”

“ஆனா..”

“ஆனா?”

“ஆனா உன்னை என்னோட காதலனாவோ கணவனாவோ ஏத்துக்க எனக்கு எதுவோ தடுக்குது. சாரிப்பா”

ட்வின் டவர் மேல் ஏரோப்ளேனை வைத்து இடித்துவிட்டு சாதாரணமாக சாரி என்கிறாள். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் தான் தப்பாக நினைத்துவிட்டேனோ? ஆனால் செந்தில் கூட சொன்னானே? அப்படித்தான் இருக்கும் என்று? திடீரெண்டு நாக்கு வரண்டு போனது. டீஹட்ரேட் ஆனது போல நாக்கு மேலண்ணத்தோடு ஒட்டிக் கொண்டது.

“இதுதான் உன் முடிவா?”

(தொடரும்)


அடுத்த பாகம் இங்கே

2 comments:

நாடோடி இலக்கியன் said...

//இன்னமும் இந்திய நேரம் தான் காட்டியது.//
லாஜிக்.ம்ம்ம்ம்.

இதுவரையிலான பாகங்களில் இது வள வள இல்லாமல் க்ரிஸ்ப்பா(ஆதி அடிக்கடி இந்த வார்த்தையை சொல்லுவார்) எழுதின மாதிரி எனக்கு தோணுது.

Robert said...

பாஸ்.. எல்லா தொடர்களும் அருமை.. ஒரு தேர்ந்த எழுத்தாளரின் படைப்பு போல் உள்ளது தங்களின் எழுத்து நடை...வாழ்த்துக்கள்.