எனக்கு அனிமேஷன் படங்கள், கார்ட்டூன் படங்கள் பார்ப்பது மிகவும் பிடிக்கும். 2 டைமென்ஷன் படங்களாக வந்து கொண்டிருந்த காலத்தில் டாய் ஸ்டோரி என்ற முப்பரிமாண அனிமேஷன் படம் வந்தது. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது. அந்தக் காலத்தில் கார்ட்டூன் படம் பார்ப்பது சின்னப்பசங்க செய்வது என்று கேலி செய்வார்கள் என்பதையும் பொருட்படுத்தாது பார்த்து வியந்த படம். நண்பர்கள் யாரும் அனிமேஷன் படங்கள் பார்க்க வர மாட்டார்கள். தனியாய்ப் போய்ப் பார்க்க சோம்பேறித்தனப்பட்டுக்கொண்டு பல படங்கள் பார்க்காமலே இருந்திருக்கிறேன். பின்னர், ஏதாவது ஒரு டிவியில் எப்போதாவது போட்டால் பார்ப்பேன். அப்போதெல்லாம் படத்தை ஒரு பொழுதுபோக்கு என்ற பார்வையில் பார்த்து ரசித்திருக்கிறேனே ஒழிய, அதன் பின்னால் இருக்கும் தொழில்நுட்ப உழைப்பை வியந்தோதியதில்லை. அந்த அளவுக்கு தொழில்நுட்ப அறிவு இல்லாததும் ஒரு காரணம்.
பதிவுலகம் வந்த பிறகு ஹாலிவுட் பாலா எழுதிய பிக்ஸார் தொடர் படித்த பிறகு பிக்ஸார் கம்பெனி மேல் ஒரு தனி மரியாதை வந்துவிட்டது. விளைவு இது வரை ரிலீஸ் ஆன எல்லா பிக்ஸார் படங்களையும் தேடித் தேடி பார்த்தேன். ஒவ்வொரு படத்திலும் சின்னச் சின்ன டீட்டெயில்ஸ்க்கும் அவர்கள் உழைக்கிற உழைப்பு பிரம்மிக்க வைக்கிறது. 25 வருடங்களில் 12 படங்கள் தான் எடுத்திருக்கிறார்கள். ஆனால் 12 படங்களும் 12 ரத்தினங்கள்.
அவர்களின் சமீபத்திய வெளியீடு Brave. அமெரிக்கா வந்து 7 வருடங்கள் ஆனாலும் இதுவரை எந்த ஹாலிவுட் படத்தையும் முதல் நாள் முதல் ஷோ பார்த்ததில்லை. அந்தப் பெருமையும் Brave படத்துக்கே.
பாட்டிமார் நமக்குச் சொல்லும் கதைகளில் ஒரு ராஜா, ஒரு ராணி, இளவரசன், இளவரசி எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சூனியக்காரி என்ற கதாபாத்திரங்கள் இல்லாமல் இருக்காது. நம் கலாச்சாரத்தில் மட்டுமல்ல, மேற்கத்திய கலாச்சாரத்திலும் அப்படியே. பிக்ஸார் இதுவரைக்கும் எடுத்த 12 படங்களில் வெவ்வேறு உலகங்களைக் காட்டியிருந்தாலும், இதுவரைக்கும் அவர்களும் தொடாத ஒரு சப்ஜெக்ட் மேலே சொன்ன ஃபேண்டஸி உலகம். அதை இந்த திரைப்படத்தில் தொட்டிருக்கிறார்கள். அதே போல இது வரை 5 டைரக்டர்களை அறிமுகப் படுத்தியிருந்தும் முதல் முறை ஒரு பெண் இயக்குநரை களமிறக்கியிருக்கிறார்கள் பிக்ஸார். அப்பா-மகன், அம்மா-மகன், அப்பா-மகள், தாத்தா-பேரன் என பல உறவுகளின் நெருக்கத்தை இது வரை அனிமேஷன் படங்கள் வெளிப்படுத்தியிருந்தாலும் அம்மா-மகள் உறவை வெளிப்படுத்திய கதைகள் இல்லை. இந்தப் படம் அந்தக் கதையையே சொல்கிறது.
டன்ப்ரோச் என்ற நாட்டின் ராஜா ஃபெர்கஸ். அவர் மனைவி எலினார். அவர்களுக்கு மெரிடா என்ற மகளும் மூன்று மகன்களும் இருக்கின்றனர். ஃபெர்கஸ், மோர்டு என்ற கரடியுடன் சண்டை போடும்போது தனது காலை இழந்துவிடுகிறார். அதற்குப் பழி வாங்க சந்தர்ப்பம் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டு இருக்கிறார். மெரிடாவுக்கு வில்வித்தையில் ஆர்வம் அதிகம். திறமைசாலியாகவும் விளங்குகிறாள். ஆனால் எலினாருக்கோ தன் மகள் ஒரு நல்ல அரசியாக வரவேண்டும் என்பதிலே நாட்டம். அதனால் மெரிடாவுக்கு எப்போது பார்த்தாலும் நல்ல இளவரசியாக, நல்ல பெண்ணாக, நல்ல அரசியாக இருக்க என்ன என்ன செய்யவேண்டும் என்ற பாடம் நடத்துவதிலேயே குறியாக இருக்கிறார். மகளுக்குத் திருமணம் செய்து வைக்க மூன்று குறுநில மன்னர்களின் மகன்களை சுயம்வரத்திற்கு அழைக்கிறார். எந்த முறையில் சுயம்வரம் நடக்க வேண்டும் என்பதை மணப்பெண்ணே -மெரிடா- தேர்ந்தெடுக்கலாம் என்றதும் தனது ஸ்பெஷாலிட்டியான வில்வித்தையைத் தெரிவு செய்கிறாள் மெரிடா.
மூன்று மாப்பிள்ளைகளிலேயே சோப்ளாங்கியான இளவரசன் தற்செயலாக ஜெயித்துவிட, அவனை மணக்க விரும்பாத மெரிடா, தானே போட்டியில் குதித்து மூன்று இளவரசர்களையும் தோற்கடிக்கிறார். அது பிடிக்காத எலினார் மெரிடாவைக் கண்டபடி திட்ட, மெரிடா கோபத்தில் குடும்ப படம் பின்னப்பட்ட சால்வை ஒன்றை கத்தியால் அறுத்துவிட்டு குதிரையில் ஏறி போகிறாள். அங்கே ஒரு சூனியக்காரியை சந்தித்து, தன் அம்மாவின் மனதை மாற்ற மந்திரம் ஒன்றைத் தருமாறு கேட்க, சூனியக்காரியும் ஒரு மந்திர கேக் ஒன்றைத் தருகிறாள். அதை எலினாரிடம் கொடுக்க, சாப்பிட்ட எலினார் கரடியாக மாறிவிடுகிறார். அம்மாவை மீண்டும் பெண்ணாக மாற்ற சூனியக்காரியைத் தேடிப் போகும் மெரிடாவுக்கு, இரண்டாம் சூரிய உதயத்துக்கு முன்னர் உடைந்த உறவை ஒட்டாவிட்டால் எலினார் நிரந்தரமாக கரடியாக இருக்க வேண்டும் என்ற புதிர் ஒன்று மட்டுமே கிடைக்கிறது.
மெரிடா என்ன செய்தாள்? எலினார் பெண்ணாக மாறினாரா? ஃபெர்கஸ் மோர்டுவைப் பழி தீர்த்தாரா? வெற்றி பெற்ற சோப்ளாங்கி இளவரசனை மெரிடா மணந்தாளா? என்ற கேள்விகளுக்கு கடைசி அரை மணி நேரம் பதில் சொல்கிறது.
ஸ்காட்டிஷ் கேஸ்ல், அதன் சுற்றுப்புறம் ஆகியவற்றை தத்ரூபமாக அனிமேஷனில் கொண்டுவந்திருக்கிறார்கள். பிக்ஸார் படங்களில் வழக்கமாக இருக்கும் சேஸிங் சீக்வென்ஸ் இந்தப் படத்தில் நீளமாக இல்லை. அதற்குப் பதிலாக குதிரையில் சென்று கொண்டே அம்பு விடும் காட்சியும், கரடியை படை வீரர்கள் துரத்தும் காட்சியும் ஈடு செய்கிறது. ஒரு பெரிய அருவியையும் அதை ஒட்டிய ஒரு மலையையும் கிராஃபிக்ஸ் செய்வதற்காக ஏஞ்செல்ஸ் நீர்வீழ்ச்சியை நேரில் சென்று பார்த்துவிட்டு வந்ததாம் பிக்ஸார் குழு. அதே போல ஸ்காட்லாந்தில் இருக்கும் பல கோட்டைகளையும் பார்வையிட்டுவிட்டு வந்தார்கள். வழக்கம்போல கல், மண், செடி கொடியெல்லாம் பொறுக்கிக் கொண்டு வந்திருப்பார்கள்.
நகைச்சுவைக்கு மெரிடாவின் மூன்று இளைய சகோதரர்கள் உத்திரவாதம் கொடுக்கிறார்கள். மோர்டு என்ற ஆண் கரடிக்கும், எலினார் கரடியாக மாறியதும் வரும் பெண் கரடிக்கும் நளினம் முக வெட்டு என அழகாக வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள். கரடியாக மாறிய எலினார் மனிதர்களைப் போல சாப்பிட முயற்சி செய்வது, மெரிடா கரடிக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுத்ததும் மீன்கள் பல சாப்பிட்டு உள் மனதிலும் தான் ஒரு கரடி என்ற எண்ணம் வந்ததும் முரட்டுத் தனமாக நடக்க முயற்சி செய்வது, பின் தான் எலினார் என்பதை உணர்ந்து வருத்தப்படுவது என கரடிக்கு உணர்ச்சிகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். ரோபோவுக்கு, ஒற்றை விளக்குக்குமே உணர்ச்சிகள் கொடுக்க முடிந்த பிக்ஸாருக்கு இதெல்லாம் ஒரு தூசி.
மேக்கிங் ஆஃப் ப்ரேவ் மற்றும் டிவிடி வெளிவந்ததும் இன்னும் பல தொழில்நுட்ப நுணுக்கங்கள் வெளிவரலாம்.
ஆரம்பத்தில் விறுவிறுப்பாகப் போகும் கதை, எலினார் கரடியாக மாறியதும் கொஞ்சம் இழுவையாகி பின்னர் இறுதிக் கட்டத்தில் மீண்டும் வேகமெடுக்கிறது. ஆனால் வழக்கமான சினிமா க்ளீஷே முடிவால் எதிர்பார்த்தது கிடைக்காத ஒரு ஏமாற்றம் கடைசியில் மிஞ்சுகிறது. நீங்கள் ஃபேண்டஸி கதை + அனிமேஷன் ரசிகராக இருந்தால் கண்டிப்பாக படத்தை ரசிப்பீர்கள்.
ஃபைண்டிங் நீமோ ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. செப்டம்பரில் ஃபைண்டிங் நீமோ 3Dயில் வெளிவருகிறது. அடுத்த மார்ச்சில் Monsters Universityயும் வெளி வருகிறது.
வழக்கமாக முழுநீளப் படங்களோடு பிக்ஸார் வெளியிடும் குறும்படங்களில் இந்த முறை LaLuna. மூன்றே கதாபாத்திரங்கள் தான். அந்த மூன்று கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு ஐந்து நிமிடங்களில் பிக்ஸார் நிகழ்த்திக்காட்டும் அற்புதத்தைத் தவற விடாதீர்கள்.
http://www.imdb.com/title/tt1217209/
1 comment:
படம் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் பிக்ஸாரின் வழக்கமான அளவிற்கு படம் இல்லை என்று கேள்விப்பட்டேன். இருந்தாலும் அனிமேஷனாச்சே? தவறாமல் பார்த்துவிடுகிறேன்.
Post a Comment