பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5
“வீக் எண்ட் என்ன ப்ளான்
உனக்கு?”
“எனக்கென்ன ப்ளான்.
ஒண்ணுமில்லை. வீட்டுல தான்”
“கிளம்பி இங்க வா.
அம்மா உன்னைப் பார்க்கணும்னு சொல்றாங்க”
“உங்கம்மாவா?? என்னய
எதுக்கு?”
“ம்ம்.. தன் பொண்ணை
லவ் பண்றவன் எப்பிடியிருக்கான்னு பாக்க.”
“மாலா. கெதக்குன்னு
இருக்கு. என்ன பேசுவாங்கன்னு ஏதாச்சும் ஐடியா இருக்கா?”
“தெரியாதுடா. நீ கிளம்பி
வா”
ஃபோனை வைத்ததிலிருந்து
எனக்கு எதுவுமே தோன்றவில்லை. மாலாவின் அம்மா என்ன கேட்பார், எப்படி பதில் சொல்வது என்று
விதவிதமாக மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இரண்டு நாள் லீவ் போட்டு வீட்டில் படுத்துக்கொண்டு
எல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன்.
கிறிஸ்துமஸுக்கு முதல்
நாள் அழைத்தாள். “எப்படா கிளம்புற?”
“நாளைக்குக் காலையில”
“லேட் பண்ணாத. நைட்டே
வந்துடு. அடுத்த ஸ்ட்ரீட்ல இருக்கிற ஹாலிடே இன்ல ஸ்டே பண்ணிக்கோ. ப்ரேக்ஃபாஸ்டுக்கே
வீட்டுக்கு வந்துடு. சரியா?”
“ம்ம்.. இன்னைக்கு
நைட்னா ரூம் கிடைக்குமா?”
“ஏற்கனவே புக் பண்ணிட்டேன்.
போய் உன் பேர் சொல்லி செக் இன் பண்ணிக்கோ”
“ஓக்கே” தயாராக இருப்பாள்
போல.
“அப்புறம்?”
“வீட்டுக்கு வரும்போது
எதுவும் வாங்கிட்டு வரணுமா? ஜஸ்ட் டு இம்ப்ரெஸ் யுர் மாம்”
“அதெல்லாம் ஒண்ணும்
வேண்டாம். சும்மா வந்தா போதும்”
“ஓக்கே. நான் மதியமே
கிளம்பிடுறேன்”
*******************
ஹோட்டலில் செக் இன்
செய்துவிட்டு மாலாவுக்கு டெக்ஸ்ட் அனுப்பினேன்.
குட் என பதில் வந்தது. எச்.பி.ஓவில் ஏதோ ஒரு படத்தைப் பார்த்துக்கொண்டே தூங்கிப்
போனேன்.
********************
காலை எழுந்து குளித்துவிட்டு
நல்ல பிள்ளை போலத் தெரிவதற்காக தயாராக எடுத்து வந்திருந்த பவுடரை விபூதி போல வைத்துக்கொண்டு
கிளம்பினேன்.
பார்க்கிங் லாட்டில்
காரை நிறுத்திவிட்டு படியேறி அப்பார்ட்மெண்ட் கதவின் முன்னால் நின்றேன். கதவைத் தட்டலாமா
என்று என்று யோசித்துக்கொண்டு நின்று கொண்டே இருந்தேன். முதல்முறை வருவது போல நடிக்க
வேண்டும். கதவுக்கு மேல் கையை வைத்தேன். கதவு திறந்தது. மாலா.
“உள்ள வா”
முதல் முறை வருவது
போலத்தான் இருந்தது. வீடே மாறியிருந்தது. மாலா அம்மாவின் வேலையாக இருக்க வேண்டும்.
புதிதாக ஒரு டைனிங் டேபிள், ஹாலில் ஃபூட்டான், சுத்தமான கிச்சன், இதையெல்லாம் விட என்ன
அதிர்ச்சிக்குள் ஆக்கியது ஹால் சுவற்றில் நடுநாயகமாக இரண்டு கைகளையும் விரித்து கருணைப்
பார்வை பார்த்துக்கொண்டு, ஜீஸஸ் ஹரால்ட் க்ரைஸ்ட்.
ஃபூட்டானில் உட்கார்ந்தேன்.
“காஃபியா டீயா?”
“நீங்க கிறிஸ்டியனா?”
“அம்மா கிறிஸ்டியன்.
காஃபியா டீயா?”
“காஃபி”
கிச்சனுக்குள் போய்விட்டாள்.
மாலாவின் அம்மா வருவதற்கு ஒரு வாரம் முன்னாள் கழித்த இரவு நினைவுக்கு வந்தது. எழுந்து
மாலாவின் பின்னால் போகலாமா என்று நினைத்த போது மாலாவின் அம்மா வந்தார்.
மரியாதைக்காக எழுந்தேன்.
அவர் பார்வை என் நெற்றியில் ஆணி அடித்தாற்போல நின்றது. நல்ல பிள்ளை வேஷம் போட நினைத்த
என் புத்தியில் மானசீகமாக செருப்பால் அடித்துக் கொண்டேன்.
“நீ தான் தேவாவா?.
உன் ஃபுல் நேம் என்ன?”
“நல்லுத் தேவன்”
“இங்க பாரு தம்பி.
நான் சுத்தி வளைச்சிப் பேச விரும்பலை. எங்க ஃபேமிலி பெரிய ஃபேமிலி. எங்க குடும்பத்துக்கு
மூத்த பொண்ணு மாலா தான். எங்க பிரதர்ஸ் எல்லாருக்கும் மாலா தான் பெட். செல்லம்
குடுத்து வளர்த்த பொண்ணு. என்னோட ப்ரதர்ஸ் குழந்தைங்க எல்லாம் இவளைத்தான் ரோல் மாடலா
எடுத்துட்டு இருக்காங்க. இவதான் அவங்களுக்கெல்லாம் முன் மாதிரியா இருக்கணும். எங்க
ஃபேமிலியில லவ் மேரேஜ், இண்டர்-காஸ்ட் மேரேஜ் எல்லாம் இதுவரைக்கும் நடந்ததில்லை. எங்க
ஃபேமிலியில யாருக்கும் இது பிடிக்கவும் இல்லை. நான் ஒரு டீச்சர். உங்க வயசுப்
பசங்களுக்குப் பாடம் எடுக்குறவ. இந்த வயசுல இது மாதிரி வர்றது சகஜம் தான். யோசிச்சிப்
பார்த்தீங்கன்னா இது பிராக்டிக்கலி பாசிபிள் இல்லைங்கிறது உங்களுக்குப் புரிய வரும்.
நீங்க நல்லா படிச்சிருக்கீங்க. நல்ல வேலை பாக்குறீங்க. அமெரிக்கால டாலர்ல சம்பாதிக்கிறீங்க.
உங்களுக்கு உங்க கம்யூனிட்டியிலயே மாலாவ விட நல்ல பொண்ணு கிடைக்கும். இதுவரைக்கும் உங்களுக்கும்
மாலாவுக்கும் நடுவுல இருந்ததை ஒரு நல்ல ஃப்ரண்ட்ஷிப்பா மட்டும் நினைச்சிட்டு ரெண்டு
பேரும் பிரிஞ்சிடுங்க. அதுதான் உங்க ரெண்டு பேருக்கும், ரெண்டு குடும்பத்துக்கும் நல்லது”
நிறுத்தாமல் பேசிவிட்டு
என் முகத்தைப் பார்த்தார்.
“ஆண்ட்டி - இப்பிடி
கூப்புடலாம்னு நினைக்கிறேன். நான் மாலாவைப் பிடிச்சி வைக்கலை. நீங்க மாலா மனசை மாத்தி
உங்க இஷ்டப்படி கல்யாணம் செஞ்சி வைக்கணும்னு ஆசைப்பட்டீங்கன்னா, அதுக்கு மாலா சம்மதிச்சா, அதுக்குக் குறுக்க நிக்க மாட்டேன். ஆனா.. மாலாவுக்கு விருப்பமில்லாம நீங்க இதைச் செய்யணும்னு
நினைச்சா அதைப் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன். எனக்கு வாழ்க்கையில கல்யாணம்னு
நடந்தா அது மாலாவோட தான். மாலாவைத் தவிர வேற யாருக்கும் என்னோட வாழ்க்கையில இடம் இல்லை.
இதுக்கு மேல உங்க இஷ்டம்”
என்று சொல்லிவிட்டு
எழுந்தேன். காஃபி கப்பை கையில் வைத்துக்கொண்டு இந்த உரையாடலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த
மாலாவை அர்த்தத்தோடு பார்த்து விட்டு விறுவிறுவென வெளியேறினேன்.
No comments:
Post a Comment