Sunday, December 23, 2012

மாயா மாயா எல்லாம் மாயா

Maya-Maske

”இதெல்லாம் பேஸ்லெஸ் ஆர்க்யூமெண்ட்ஸ் கௌதம். யாரோ ஏதோ மொழியில எழுதி வச்சதை இன்னொருத்தன் படிச்சிட்டு அதுதான் அர்த்தம் இதுதான் அர்த்தம்னு சொல்றாங்க. எப்பிடி நம்புறது சொல்லு?”
சொல்லிவிட்டு கையில் வைத்திருந்த நெய் முந்திரியை வாயில் போட்டான் ராம். இடது கையில் ஏந்தியிருந்த கோப்பையில ஸ்காட்ச் ஆடிக்கொண்டிருந்தது. எங்களில் வழக்கமான வீக்கெண்ட் பார்ட்டி. நாங்கள் ஐந்து பேரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். பள்ளிக்குப் பிறகு திசை மாறி வேறு வேறு துறைகளில் எங்கள் முத்திரை பதித்து கடைசியில் வந்து சேர்ந்த இடம் நியூ ஜெர்சி.


நான் கௌதம் ஸ்ரீனிவாசன். மைக்ரோபியல் ஜீன் டெக்னாலஜியில் Ph.D படித்துவிட்டு யார் யார் பரம்பரையில் யார் யாருடைய ஜீன்கள் ஓடுகிறது என்பதை ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறேன். எங்க ஜாதி ரத்தம் சுத்த ரத்தமாக்கும் என்று தொடை தட்டியவர்களின் ஜீனில் ஆப்பிரிக்க பழங்குடியினரின் ஜீன் இருப்பதையும், "we never mix with other communities you know" என்பவர்களின் ஜீனில் கிழக்கு ஐரோப்பியரின் ஜீன் கலந்திருப்பதையும் காட்டி வாயடைக்க செய்திருக்கிறேன்.


எனக்கு எதிரில் உட்கார்ந்து மாயன் கேலண்டர் உண்மையா பொய்யா என்பதைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருப்பவன் ராம். ராமச்சந்திரமூர்த்தி. பி.இ எலெக்ட்ரானிக்ஸில் தொடங்கி, ஐஐஎம்மில் எம்பிஏ படித்துவிட்டு இப்போது இங்கே ஒரு பெரிய ஃபைனான்ஸ் நிறுவனத்தில் வைஸ் ப்ரெசிடெண்டாக இருக்கிறான்.


கிச்சனில் இரவு உணவை சமைத்துக் கொண்டிருப்பவன் வினோத். அவன் வீடுதான் இது. அவன் பி.எஸ்.சி ஃபிஸிக்ஸ், ஐஐடியில் எம்.எஸ்.சி ஃபிஸிக்ஸ், கார்னெல்லில் பி.எச்.டி என்று படித்துவிட்டு ப்ரின்ஸ்டனில் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறான்.


அந்தப் பக்கம் டிவிக்கு முன்பு உட்கார்ந்து ஃபுட்பால் பார்த்துக்கொண்டிருக்கும் மூர்த்தியும் சுந்தரும் சாஃப்ட்வேர் பார்ட்டிகள்.


ஐந்து பேரும் இங்கே சந்தித்த பிறகு வாரா வாரம் சனிக்கிழமை யாராவது ஒருவர் வீட்டில் சந்தித்து சரக்கடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில் எங்கள் மனைவிகள் பிள்ளைகளும் எங்காவது சந்தித்து அளவளாவிக்கொண்டிருப்பார்கள். கடந்த 11 வருடங்களாக இதுவே எங்கள் வழக்கமாகப் போய்விட்டது. அப்படி ஒரு சனிக்கிழமையில் அடுத்த வெள்ளிக்கிழமை வரப்போகும் 12-21-2012ஐப் பற்றி நானும் ராமும் கதைத்துக் கொண்டிருந்தோம்.


“ராம், நீ சொல்றது ஒரு பக்கம் சரின்னாலும், மாயன்ஸ் ஒண்ணும் கற்பனை இனமில்லையே? தே லிவ்ட் இன் திஸ் ஸேம் எர்த அ ஃப்யூ ஹண்ட்ரட் இயர்ஸ் அகோ”


“சோ வாட்டா? இப்ப அந்த ரேஸ்தான் அழிஞ்சி போச்சே?”


“அழிஞ்சி போச்சின்னு சொல்ல முடியாதுடா. அந்த ரேஸோட டிசண்டண்ட்ஸ் இன்னமும் இருக்காங்களே? பல மில்லியன் மக்கள் செண்ட்ரல் அமெரிக்கால இன்னமும் மாயன் லேங்குவேஜஸ்ல சிலதைப் பேசிட்டுத்தானே இருக்காங்க?”


“டேய் அந்த ரேஸ்ல டாமினண்ட் ஜீன் ஒண்ணு கூட கிடைக்கலைன்னு நீதான சொல்லிட்டு இருந்த?” சமைத்து முடித்திருந்த வினோத்தும் எங்களுடன் கலந்து கொண்டான்.


“ஆமாண்டா. பட் வீ ஃபவுண்ட் எ லாட் ஆஃப் ரெசெஸ்ஸிவ் ஜீன்ஸ். இன்னமும் ரிசர்ச் கண்டினியூ ஆவுது. எங்கயாச்சும் ஒரு ஜீன் கிடைக்காமலா போவப்போவுது?” கிளாஸில் இருந்த கடைசி சரக்கை வாய்க்குள் சரித்துக் கொண்டு ப்ளாட்டரை எம்ப்டி செய்ய எழுந்தேன். திரும்பிய போது மற்ற இருவரும் டேபிளில் அமர்ந்திருந்தார்கள்.


“என்னவோப்பா நம்மோட அடுத்த வீக்கெண்ட் பார்ட்டி இங்கயா சொர்க்கத்துலயான்னு மாயண்ணே தான் முடிவு பண்ணனும்” மூர்த்தி சிரித்துக்கொண்டே சொல்லிக்கொண்டிருந்தான்.


“மவனே நீ இது வரைக்கும் கிளையண்ட்ஸ் கிட்ட சொன்ன பொய்க்கு உனக்கெல்லாம் நரகம்தாண்டி” சுந்தர் கலாய்த்துக் கொண்டிருந்தான்.


சிரித்துக்கொண்டே அவர்களுடன் இணைந்து கொண்டேன்.


*****************************************************
திங்கட்கிழமை காலை. லேப் வழக்கம்போல டல்லாக இருந்தது. எதிரில் பட்டவர்கள் எல்லாம் ஹேப்பி ஹாலிடேய்ஸ் சொல்லிக்கொண்டு போனார்கள். மாயனைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. மெயில் பாக்ஸை ஓப்பன் செய்தேன். 5 டே வெதர் ரிப்போர்ட் என்று ஈமெயில் வெள்ளிக்கிழமை 1440 ஃபாரன்ஹீட் என்று காமடி செய்தது. அடுத்த மெயில் என் கவனத்தை ஈர்த்தது.


Dear Dr. Srinivasan,


We have a patient admitted in our hospital tonight, who was attacked by a predator in the jungle. He is unconscious, but a tattoo on his body resembles the signs from Native Americans, but does not match any of the local signs. We have shipped a sample of his blood to your lab overnight and should reach you by Tuesday. I guess this would be some useful information for you in your search of Races.


Thanks & Regards,
Dr. Rodriguez,


மெயிலை எனது அஸிஸ்டண்டுக்கு ஃபார்வர்ட் செய்து காலையில் ரத்தம் வந்ததும் முதல் வேலையாக டி.என்.ஏ அனாலிஸிஸ் செய்ய உத்தரவிட்டுவிட்டு வேலைகளில் மூழ்கினேன்.

****************************************************************
அடுத்த நான்கு நாட்கள் எப்படி போயின என்றே தெரியவில்லை. அடுத்த நாள் உலகம் முடிந்துவிடுமா என்ற எண்ணமும் விவாதங்களும் கேலிகளும் கொஞ்சம் வலுப்பெறத் துவங்கியிருந்தது. நியூஜெர்சி நேரப்படி காலை 6:11க்கு முடிகிறது என்று கவுண்ட் டவுன் க்ளாக் எல்லாம் துவக்கியிருந்தார்கள். என் மனைவி மதுமிதாவும் மகள் ஸ்வேதாவும் அதிசயமாக டைனிங் டேபிளில் என்னோடு அமர்ந்து உணவருந்தினார்கள். அடுத்த நாள் காலை 6:11க்கு மூவரும் ஹாலில் சந்திப்பது என்றெல்லாம் பேசிக்கொண்டு தூங்கப் போனோம்.


ஊரில் இருந்து அப்பா அழைத்துப் பேசினார். எதுவும் நேராது என்று ஆறுதல் சொல்லிவிட்டு தூங்கிப் போனேன்.


காலை 5:00 மணிக்கு வழக்கம்போல எழுந்து ட்ரெட் மில்லிலும் எலிப்டிக்கலிலும் ஒரு மணி நேரத்தை செலவு செய்துவிட்டு காஃபி மேக்கரில் இருந்து காஃபியை ஊற்றிக் கொண்டு ஹாலுக்கு வந்தேன். மதுவும் ஸ்வேதாவும் சோஃபாவில் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.


“ஹேய், வாட்ஸ் திஸ்? நத்திங் வில் ஹேப்பன்” என்றேன்.


“அதெல்லாம் தெரியாதுங்க. கொஞ்ச நேரம் எங்க கூட உக்காருங்க. மணி 6:11ஐத் தாண்டட்டும். அப்புறம் நம்புறோம்” சிரித்துக்கொண்டே டிவியைப் போட்டுவிட்டு சோஃபாவை நோக்கிப் போனேன். இரண்டு பேரும் விலகி என்னை நடுவில் உட்கார வைத்து ஆளுக்கொரு தோளில் சாய்ந்து கொண்டார்கள். டிவியிலும் இதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். மணி 6:20 ஆனது.


“ஓக்கே, கேர்ள்ஸ். இன்னும் உலகம் அழியலை. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் மாயன்” என்று சொல்லிவிட்டு எழுந்தேன். இருவரின் முகத்திலும் ஒரு நிம்மதி தெரிந்தது. “ஸ்கூலுக்கு லேட்டாயிடிச்சி. கிளம்பு. ஐ வில் ட்ராப் யு டுடே”


ஸ்வேதாவை பள்ளியில் விட்டு விட்டு லேபுக்கு வந்து சேர்ந்தேன். ஈமெயில் செக் செய்துவிட்டு மேஜை மேல் இருந்த ப்ரவுன் கவரைப் பிரித்தேன். செவ்வாய்க்கிழமை வந்திருந்த ப்ளட் சேம்பிளின் டி.என்.ஏ ரிப்போர்ட். படிக்கப் படிக்க என் கண்களில் ஒளி. எதிரில் இருந்த ஃபோன் புக்கில் டாக்டர் ரோட்ரிகஸின் நம்பரைத் தேடினேன். கிடைத்ததும் வேக வேகமாக டயல் செய்தேன்.


“டாக்டர் ரோட்ரிகஸ்”


“ஹாய் டாக்டர். திஸ் இஸ் டாக்டர் ஸ்ரீனிவாசன்”


“ஹல்லோ டாக்டர். ஸ்ரீனிவசான். ஹவ் ஆர் யூ?”


“நான் நல்லா இருக்கேன் டாக்டர். நீங்க போன மண்டே ஒரு ப்ளட் சேம்பிள் அனுப்பி வச்சீங்களே? அந்த பேஷண்ட் இப்போ என்ன கண்டிஷன்?”


“தட் ப்ரிடேட்டர் அட்டாக் பேஷண்ட்? ஹீ பாஸ்ட் அவே”


“ஓ நோ. அவருக்கு யாரும் வாரிசுகள், சொந்தங்கள்?”


“யாரும் இல்லை. அவரோட பேரண்ட்ஸ் ரொம்ப நாள் முன்னாடியே இறந்துட்டாங்க. சிப்ளிங்க்ஸ் யாரும் இல்லை. இந்தாளும் கல்யாணமே செஞ்சிக்கலை. சோ ஹி இஸ் அன் ஆர்ஃபன். யாரும் பாடி க்ளெயிம் பண்ணக் கூட இன்னும் வரலை. ஆட் குடுத்துருக்கோம்”


எனக்குள் சோகம் அப்பிக்கொண்டது. என் எதிரில் இருந்த ரிப்போர்ட்டை மறுபடி மேய்ந்தேன். MATCHING MAYA GENE - DOMINANT என்ற கொட்டை எழுத்துகள் என் முகத்தில் அறைந்தன.


“அவர் எப்போ இறந்தார்னு சொல்ல முடியுமா?”


“டுடே மார்னிங். எக்ஸாக்ட் டைம் ஆஃப் டெத் - 6:11 AM"