Thursday, January 10, 2013

இதுவும் ஒரு காதல் கதை - 20


“மச்சி இங்க உன்னைப் பார்க்க மாலாவோட அப்பா வந்திருக்காருடா. கூட ரெண்டு பேரும்”

“என்னது?”

“மாலாவோட அப்பாடா. உன்னோட வருங்கால மாமனார்”

அவர் எதற்கு அங்கே வந்திருக்கிறார். அதுவும் இரண்டு பேரோடு? “அவர் எதுக்குடா அங்க வந்துருக்காரு? நான் ஆஃபிஸ் போயிருப்பேன்னு தெரியாதா?”

“நான் கேக்கலைடா. வந்து விசாரிச்சாங்க. ஆஃபிஸ் போயிருக்கிறதா சொன்னேன். ஃபோன் பண்ணிக் கூப்புட்டு விட முடியுமான்னு கேட்டாங்க. உனக்குக் கால் பண்ணிட்டேன். என்ன சொல்லட்டும்?”

நான் ஆஃபிஸ் வந்தது மாலாவின் பைக்கில். அதிலேயே போக முடியாது. மாலாவைப் பிடித்து அவர்களிடம் என்ன சொல்லவேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டுத்தான் போக வேண்டும். நான் பாட்டுக்கு எதையாவது உளறி வைத்துவிடக் கூடாது. “அவங்க பக்கத்துலயா நிக்கிற?”

“இல்லடா. அவங்க ஹால்ல உக்காந்திருக்காங்க. நான் பால்கனியில இருந்து பேசுறேன்”

“நான் ஒரு மீட்டிங்க்ல இருக்கேன். இன்னும் ஒன் அவர்ல கிளம்பி அங்க வர்றேன்னு சொல்லு. நான் வந்துர்றேன்”

“சரிடா”

ஃபோனை வைத்துவிட்டு இன்ஸ்டன்ட் மெசெஞ்சரில் மாலாவைத் தேடினேன். அன் அவைலபிளாக இருந்தாள். லாகின் பண்ணவில்லையோ என்னவோ. எக்ஸ்டென்ஷனுக்குக் கூப்பிட்டேன். வாய்ஸ் மெயில் போனது. அவள் காலண்டரை ஓப்பன் செய்து பார்த்தேன். ஏதோ மீட்டிங். செல்ஃபோனுக்கு அழைத்தேன். கட் செய்தாள். சரி பிசியாக இருக்கிறாள் போலும். டீட்டெயில்டாக ஒரு மெயில் அடித்துவிட்டு வெளியே வந்து தம்மடித்தேன். சிறிதுநேரம் ரோட்டில் போகும் பெண்களை சைட்டடித்துவிட்டு அவள் பில்டிங்குக்குப் போனேன்.

மாலா சீட்டில் இல்லை. பக்கத்து சீட்காரன் சினேகமாகப் புன்னகைத்தான். “மாலா இஸ் இன் அ மீட்டிங். டோண்ட் நோ வென் ஷி வில் பி பேக்” என் கேள்வியை ஊகித்தவனாக பதிலினான்.

“ஓக்கே. திஸ் இஸ் ஹர் பைக் கீ. ப்ளீஸ் டெல் ஹர்” பைக் கீயை அவள் கம்ப்யூட்டர் மேல் வைத்துவிட்டு வெளியேறினேன்.

என்ன செய்வதென்று தெரியவில்லை. இன்னும் இரண்டு சிகரெட்டுகளைக் கரைத்தேன். பாஸ் பாஸ் வாங்கிப் போட்டுக் கொண்டு கையை சோப்புப் போட்டுக் கழுவினேன். ரோட்டுக்கு வந்து அந்த வழியே போன ஆட்டோ ஒன்றை மடக்கி வீட்டுக்கு விடச் சொன்னேன்.

*************************************

அப்பார்ட்மெண்ட் வாசலில் இறங்கிய போது ரிசப்ஷனிலேயே செந்தில் காத்திருந்தான்.

ஆட்டோவைக் கட் செய்துவிட்டு “அவங்க எங்கடா?”

“அவர் கூட வந்த ரெண்டு பேரும் மாலாவோட மாமாஸாம். ஒருத்தர் இங்க ஏதோ பிஸினஸ் விஷயமாவும் வந்திருக்காராம். மினிஸ்ட்டர மீட் பண்ணனுமாம். நீ வர லேட்டானதால மினிஸ்ட்டரப் பாக்கப் போறோம்னு கிளம்பிட்டாங்க.”

“சரி. அவங்க கிளம்பின ஒடனே எனக்கு ஃபோன் பண்றதுக்கு என்னடா? தேவையில்லாம நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேனே?”

“எப்பிடியும் லஞ்ச் டைம் ஆகிடுச்சி. தனியா சாப்புடணுமே, நீயும் வந்தா கம்பெனியாச்சேன்னு சொல்லல”

“அடப் பாவி. சரி வா சாப்புடப் போகலாம்”

பக்கத்தில் இருந்த ப்ளாண்டைன் லீஃபில் சாப்பிட்டு விட்டு செந்திலை வீட்டில் விட்டுவிட்டு ஆஃபிஸ் திரும்பினேன். மாலாவிடம் இருந்து பதில் வந்திருந்தது. படித்துக் கொண்டிருந்த போதே அழைத்தாள். ஐஎம்மில் அவைலபிள் ஸ்டேட்டஸ் பார்த்திருப்பாள் போல.

“என்ன மாலா. உங்கப்பா திடீர்னு வீட்டுக்குப் போய் நின்னிருக்காரு?”

“ஆமாண்டா. எனக்கும் ஆச்சரியமாப் போச்சி. காலைல என்கிட்ட ஒண்ணுமே சொல்லலை. இப்பத்தான் கேட்டேன். உன்கிட்ட பேசணும்னு வந்தாங்களாம். என்கிட்ட சொல்லிட்டு வந்தா உன்னை வார்ன் பண்ணிடுவேனாம்?”

“அது சரி. ஆமா உங்க மாமா மினிஸ்ட்டரப் பாக்கப் போறார்னு போய்ட்டாங்க. என்னை மீட் பண்ணப் போறாங்களா இல்லையா?”

“இன்னைக்கு சாயந்திரம் உன்னை ஹோட்டலுக்கு வரச் சொல்லியிருக்காங்க. அங்கயே வச்சிப் பேசிடலாம்னு இருக்காங்க. அந்த மாமா சென்னை கிளம்பிட்டாரு. அதான் கவலையா இருக்கு”

“ஏன்? என்னாச்சு?”

“இல்லடா அவர்தான் நாலு மாமாஸ்லயே நல்லா படிச்சவரு. கொஞ்சமாச்சும் சென்சிபிளா பேசுவாரு. இன்னொரு மாமா ஒரு காட்டான். ஆனா என் மேல பாசமானவரு. அவர் எப்பிடிப் பேசுனாலும் நீ கோவப்படாம பேசு என்ன?”

“சரி டி. நீயும் இருப்பல்ல?”

“அப்பிடித்தான் நினைக்கிறேன். சரி சாப்புடப் போலாமா?”

“நான் இப்பத்தானே செந்தில் கூட சாப்டுட்டு வந்தேன்”

“நாயே நாயே. உனக்காக நான் சாப்புடாமக் காத்திருப்பேன்னு தெரியாதா உனக்கு. பன்னி கழுத”

“சரி நான் வர்றேன். சாப்புடலைன்னாலும் கம்பெனி குடுக்குறேன்” கிளம்பி காஃபடேரியாவுக்குப் போனேன்.

******************************************
மாலை செந்திலிடம் பைக்கை வாங்கிக் கொண்டு லீ மெரிடியன் போய் இறங்கினேன். பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, கதவைத் திறந்து சல்யூட் வைத்தவருக்கு நட்பாக ஒரு புன்னகையைக் கொடுத்துவிட்டு உள்ளே வந்தேன். உள்ளே நுழைந்ததும் கண்ணைக் கவர்வது மேலும் கீழும் ஏறி இறங்கும் இரண்டு லிஃப்டுகள். லிஃப்டுக்குப் போகும். நடுவில் இறங்கும் படிகள் கீழ் தளத்தில் இருக்கும் ஃபவுண்டெயினுக்குச் சென்றன. படிகளுக்கு இரண்டு பக்கமும் பாதை போய் லிஃப்ட் ஏறும் இடத்தில் முடிந்தது. லிஃப்டுக்கு எதிரே ஒரு ரெஸ்டாரண்ட். பஃபே சிஸ்டம். போகும் பாதையில் சோஃபாக்கள் - விசிட்டர்ஸ்க்காக - போடப்பட்டு எதிரே மேஜைமேல் அன்றைய நாளிதழ்கள் அனைத்தும் பரப்பப் பட்டிருந்தன. அதில் ஒன்றில் உட்கார்ந்து மாலாவுக்கு டெக்ஸ்ட் அனுப்பினேன்.

சிறிது நேரத்தில் மாலா இன்னும் இரண்டு பேரோடு லிஃப்டில் தெரிந்தாள். என்னைப் பார்த்து கண் சிமிட்டுவது போலத் தெரிந்தது. மூன்று பேரும் நேராக நான் உட்கார்ந்திருந்த சோஃபாவுக்கு வந்தார்கள். வரவேற்பது போல எழுந்தேன். மாலாவின் முகத்தில் சிரிப்பு இருந்தாலும் மற்ற இருவரும் ஒரு மிமீ கூட புன்னகைக்கவில்லை. கொஞ்சம் பட்டிக்காடாகத் தெரிந்த - மாலாவின் சித்தப்பாவாக இருக்க வேண்டும் - வரின் கண்களுக்கு மட்டும் சுடும் சக்தியிருந்தால் நான் சாம்பலாக உதிர்ந்திருப்பேன்.

மாலாவின் அப்பா - என்று நான் நம்புபவர் கொஞ்சம் ஒல்லியாக இருந்தார். பாதி தலை ஃபுட் பால் கிரவுண்ட். தலைக்கு மேலே தொங்கிய சாண்ட்லியர் வெளிச்சத்தில் அவர் தலை டாலடித்தது. கண்ணாடி போட்டுத்தான் படிப்பார் என்பது சைட் பர்னில் அழுத்தமாகப் பதிந்திருந்த கோடுகளில் தெரிந்தது. லேசாக பூக்க ஆரம்பித்திருந்த தாடியில் தெரிந்த வெள்ளை முடிகள் தலையில் இருந்த கொஞ்சம் முடியில் சுத்தமாக இல்லை. டை அடிப்பார் போல. மாலாவைப் போல நிறம் இல்லை என்றாலும் கொஞ்சம் மங்கிய நிறத்தில்தான் இருந்தார். முழுக்கை சட்டை போட்டு, சட்டையை பேண்டில் இன் செய்திருந்தார். கறுப்பு பெல்ட். பெல்ட்டுக்கு மேட்ச்சக லெதர் ஷூ. சட்டைப் பையில் இரண்டு பேனாக்கள். அதில் ஒன்று கண்டிப்பாக பச்சை நிறமாகத்தான் இருக்க வேண்டும் (கெஜட்டட் ஆஃபிசர்).

பக்கத்தில் இருந்த மாலாவின் மாமா நெடு நெடுவென்று உயராமாக இருந்தார். கண்களில் நிரந்தரமாகக் கண்ணாடி. இறுக்கிய தாடையில் அவரின் கோபம் தெரிந்தது. கோடு போட்ட அரைக்கை சட்டை போட்டு இன் செய்யாமல் வெளியே விட்டிருந்தார். வெளுத்த நிறத்தில் பேண்ட். காலில் லெதர் செருப்பு.

மாலா கையில் பிஸ்கட்டுகள் கொஞ்சம் வைத்திருந்தாள். எனக்கு எதிரே இருந்த டேபிளின் மீது வைத்துவிட்டு நான் உட்கார்ந்திருந்த சோஃபாவிலேயே அமர்ந்து கொண்டாள் - அஃப்கோர்ஸ் கொஞ்சம் இடம் விட்டுத்தான். அவள் அப்பாவும் மாமாவும் அவளை முறைத்துவிட்டு எதிரே அமர்ந்தார்கள்.

நானும் அமர்ந்தேன். மாமா ஆரம்பித்தார்.

“தம்பி எந்த ஊரு?”

“திருநெல்வேலி பக்கத்துல கயத்தார்”

“என்ன ஆளுக?”

சொன்னேன்.

“நல்ல வசதியான குடும்பத்துப் பொண்ணாப் பாத்து வலைய விரிக்கிறதுதான் உங்க குல வழக்கமோ?” கோபமூட்டப் பார்க்கிறார். அமைதியாக இருந்தேன்.

“...”

“உன்னைய மாதிரி எத்தன பேருகளப் பாத்திருப்பேன். எங்கருந்துடா வர்றீங்க? என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல..” நிறுத்தாமல் பேசிக் கொண்டே போனார். பதில் பேசாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் மாலாவின் அப்பா அவரைத் தடுத்து நிறுத்தினார்.

“இங்க பாருங்க தம்பி. நாங்கள்லாம் நல்ல குடும்பத்துல இருந்து வந்தவுங்க. படிச்சவங்களா இருந்தாலும் எங்களால சாதி குடும்பம் விட்டு எல்லாம் வெளிய வரமுடியாது. நீங்களும் மாலாவும் நினைச்சிட்டு இருக்கிறது நடக்காது. படிக்கிற காலத்துல சின்ன வயசுல காதல் வர்றதுதான். எல்லாக் காதலும் நிறைவேறுறது இல்லையே? அது மாதிரி உங்க காதல்னு நினைச்சிக்கிடுங்க. நீங்களாப் பிரிஞ்சிருங்க. மாலாவை எங்களால சமாதானப் படுத்த முடியல. நீங்கதான் மாலாவுக்கு எடுத்துச் சொல்லிட்டுப் போங்க. இனிமே சந்திக்கிறது, ஃபோன்ல பேசுறது இதெல்லாம் வேண்டாம். உங்க குடும்பமும் எங்க குடும்பமும் சேர்ந்து எந்த குடும்ப விழாவுலயாவது கலந்துக்க முடியுமா? மாமன் மச்சான்னு சொந்தம் கொண்டாடத்தான் முடியுமா? யோசிச்சுப் பாருங்க”

“அத்தான், என்னத்தான் நீங்க இவங்கிட்டப் போய் கெஞ்சிக்கிட்டு. நம்ம பரஞ்சோதி சொன்ன மாதிரி ரெண்டு தட்டு தட்டுனா இருக்க எடந்தெரியாம ஓடிப் போயிருவான்.”

“நீங்க கொஞ்ச நேரம் சும்மாருங்க செல்வம். முதல்ல இறங்கிப் பேசுவோம். அதுக்குப் பிறகும் அடம்புடிச்சாங்கன்னா அப்புறம் இருக்கு மத்ததெல்லாம்”

பயமுறுத்துகிறார்கள். கைகளில் ஏந்திய அருவாளோடு ஒரு கும்பலே துரத்த மூன்று பேரில் ஒருவனாய் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு முள்ளுக்காட்டைக் கடந்து ஓடி வந்திருக்கிறோம். அதற்கு முன் இதெல்லாம் துச்சம்.

இருவரும் இப்போது என்னைப் பார்த்தார்கள்.

“அங்கிள், ஆண்ட்டிக்கிட்ட சொன்னதுதான் உங்கக்கிட்டயும். நான் மாலாவைப் பிடிச்சி வைக்கலை. சொக்குப் பொடி போட்டு மயக்கிடலை. விருப்பமில்லாத ஆளை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டா என் வாழ்க்கை ருசிக்கும்னு நான் நினைக்கலை. மாலாவுக்கு இப்ப இதுல விருப்பம் இல்லைன்னா, நீங்க தாராளமா அவளுக்கு, உங்களுக்குப் பிடிச்ச மாதிரி வாழ்க்கையைக் குடுக்கலாம். நான் குறுக்க நிக்க மாட்டேன். ஆனா அவளுக்கு விருப்பமில்லாம நீங்க கட்டாயப் படுத்தினா அதைப் பாத்துக்கிட்டும் சும்மா இருக்க மாட்டேன். இது கம்ப்யூட்டர் தட்டுற கை மட்டுமில்லை. அருவாளைப் பிடிச்ச கையும் தான். அதெல்லாம் எனக்கு வேண்டாம்னு தான் நான் ஊரை விட்டு பெங்களூரு அமெரிக்கான்னு சுத்திட்டு இருக்கேன். நீங்க அந்த லெவலுக்குத்தான் கீழ இறங்குவீங்கன்னா அதையும் ஒருகை பாக்கத் தயாராத்தான் இருக்கேன். அதுக்குப் பிறகு உங்க இஷ்டம்”

“டேய் என்னடா ஜாதி புத்தியக் காட்டுறீயா? நாங்களும் அருவா பிடிச்ச கை தாண்டியேய். நொங்கு சீவுற மாதிரி சீவிட்டுப் போயிட்டே இருப்போம். ஆமா”

மாமா குரலை உயர்த்தவும் லாபியில் இருந்த சிலர் எங்களையே பார்த்தார்கள். செக்யூரிட்டிகளில் ஒருவர் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தார். நிலவரம் கலவரம் ஆவதைப் போலத் தென்பட்டதால் மாலாவின் அப்பா, மாமாவை சமாதானப் படுத்தினார்.

“இருங்க செல்வம். அதான் சொல்லிட்டான்ல. நம்ம புள்ளைய நாம சமாதானப் படுத்துவோம். அவளையே இவனை வெட்டி விட்டுட்டு வரச் சொல்லுவோம். நாம சொன்னா மாலா மாட்டேன்னா சொல்லப் போறா? அப்புறம் இவன் குறுக்க வரமாட்டான்ல”

“ஏதோ நீங்க சொல்றதால சும்மாருக்கேன் அத்தான். பொடிப்பய என்ன பேச்சு பேசுறான்? டேய் மாலாவே உன்கிட்ட வந்து என்னை விட்டுப்போன்னு உன்னைய சொல்லுவா. அதுக்கப்புறம் உன்னைய வச்சிக்கிறேண்டா” சொல்லிவிட்டு இருவரும் எழுந்து லிஃப்டை நோக்கிச் சென்றனர். மாலா தொடராததை உணர்ந்து அவள் அப்பா திரும்பினார். மாலாவைக் கேள்வியாகப் பார்த்தார்.

“தேவாவை வழியனுப்பிவிட்டு வந்துர்றேன்பா”

கோபத்தில் நெற்றி அவர் நெற்றி சுருங்கியது. மாமா எங்களை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தார். மாலாவின் அப்பா என்ன நினைத்தாரோ மாமாவை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார். மாலா பார்க்கிங் வரை வந்தாள். பைக்கில் ஏறியதும் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து. “குட் பாய்” என்றாள். சிரித்துவிட்டுக் கிளம்பினேன்.

***********************************

வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு டிவியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தபோது மாலா அழைத்தாள்.

“யேய் என்ன. நைட் நேரத்துல எல்லாம் கூப்புடுற?”

“நாளைக்கு அப்பாவும் அம்மாவும் ஊருக்குக் கிளம்புறாங்க. நானும் வீடு பார்த்து வரணும்”

“அதான் இங்க நீ ஏற்கனவே இருந்த அப்பார்ட்மெண்டே காலியா இருக்கே. புக் பண்ணிடலாமே?”

“அதெல்லாம் சரி. இப்ப நம்ம கல்யாணத்துக்கு என்ன செய்யறதுன்னு யோசிச்சேன்.”

“என்ன செய்யறது?”

“உங்கப்பா அம்மாவை எங்க வீட்டுக்குப் போய் பொண்ணு கேக்கச் சொல்லு”

“என்னது?”

(தொடரும்)

அடுத்த பாகம் இங்கே

No comments: