Friday, May 14, 2010

கேரக்டர் - கோபால்

தாராளமாக எண்ணெய் தேய்த்து நேர் வகிடெடுத்து வழித்து சீவப்பட்ட தலை. விபூதியும், விபூதிப் பட்டையின் நடுமத்தியில் அளவெடுத்து வைத்தது போல மிளிரும் குங்குமமும் நிறைந்த நெற்றி. கத்தி போல மடித்துத் தேய்க்கப்பட்ட காக்கி சீருடை. சைக்கிளில் ஏறி அமர்ந்து பட்டுவாடா செய்ய வேண்டிய தபால்களை ஹாண்டில் பாரின் மேல் பொருத்தப்பட்ட ஸ்டாண்டில் கிளிப் போட்டு இருத்தி புறப்பட்டார் என்றால், “சிங்கம் ஒன்று புறப்பட்டதே” எனப் பின்னணியில் குரல் ஒலிக்கிறதோ என்று எண்ணத் தோன்றும்.

அவர்தான் போஸ்ட் மேன் கோபால். சிறிய ஊரென்பதாலும் பல வருடங்களாக அங்கேயே பணி புரிவதாலும் கிட்டத்தட்ட ஊரில் உள்ள அத்தனை பேரின் பெயரும் அத்துப்படி. வாசலில் நின்று “சார் போஸ்ட்” என்று குரல் கொடுப்பதோ, பெல்லடிப்பதோ, தபால்களை விசிறியடித்துவிட்டு செல்வதோ இவருக்குக் கொஞ்சம் கூட பிடிக்காது. சைக்கிளை நிறுத்தி, ஸ்டாண்ட் போட்டு, சைக்கிளின் பின்னால் திரும்பி நின்று இடது காலால் ஸ்டைலாக ஸ்டாண்டின் க்ளிப்பை உதைத்து விட்டு வீட்டின் கதவைத் தட்டி யார் கையிலாவது பொறுப்பாகக் கொடுத்து விட்டுத்தான் அடுத்த வீட்டுக்குச் செல்வார்.

வீட்டில் யாரும் இல்லை என்றாலோ, பொடிசுகள் மட்டும் இருந்தாலோ, தபாலைக் கொடுத்து விட மாட்டார். முழு சுற்றும் முடிந்த பின் மறுபடி அந்த வீட்டுக்குச் சென்று பெரியவர்கள் திரும்பிவிட்டார்களா என்று பார்த்து அவர்கள் கையில் தான் கொடுப்பார். அப்போதும் யாரும் இல்லையென்றால் மாலை ட்யூட்டி முடிந்ததும் வீட்டிற்குப் போகுமுன் கொடுத்துவிட்டுச் செல்வார். “ஏண்ணே இப்பிடி சிரமப் படுறீங்க? கதவுக்கு அடியில தள்ளி விட்டுட்டு வரலாமில்லை” என்று கேட்டால் “தபால்ல என்ன முக்கியமான விசயம் இருக்கோ, நாம கதவுக்கடியில தள்ளிவிட அது அவங்க கண்ணுல படாம போயிட்டா?” என்று நம்மையே திருப்பிக் கேட்பார்.

தபால் பட்டுவாடா செய்வது மட்டுமல்ல. நாம் போஸ்ட் செய்ய வேண்டிய தபால்கள் ஏதும் இருக்கிறதா என்று கேட்டு அதையும் சேகரித்துக் கொண்டுதான் தபாலாபீஸ் திரும்புவார். எனக்குத் தெரிந்து எங்கள் ஊரில் யாரும் தபால் பெட்டியை உபயோகப் படுத்தியதாக நினைவே இல்லை.

யாருக்காவது மணியார்டர் வந்தால் பணத்தை சில்லறை சுத்தமாக எண்ணி அவர்கள் கையில் கொடுத்து விட்டு ஒரு நிமிடம் நிற்பார். மோரோ காப்பியோ நேரத்தைப் பொறுத்து எதையாவது (கொடுக்காவிட்டாலும் கேட்டு வாங்கி) குடித்துவிட்டுத் தான் அந்த இடத்தை காலி செய்வார். கொடுத்தால் கூட கமிஷன் வாங்க மாட்டார்.

தந்தி கொடுக்கச் செல்லும்போது கெட்ட சேதியாக இருந்தால் வீட்டில் இருக்கும் நிலையைப் பார்த்து விட்டு, அவர்களை வேறு ஏதாவது பேசி ஆசுவாசப் படுத்தி விட்டுத்தான் விஷயத்தைச் சொல்வார். நல்ல சேதியாக இருந்தால் முதலில் சர்க்கரை கேட்டு வாங்கி அவர்கள் வாயில் போட்டு விட்டுத்தான் தந்தியைக் கையில் கொடுப்பார். தங்கள் வீட்டுத் தந்தியைப் படித்து விட்டாரே என்று யாரும் கோவித்ததில்லை.

மனைவி இறந்ததும் மறு கல்யாணம் செய்து கொள்ளாமல் ஒரே மகனை தன் சகோதரியின் வீட்டில் விட்டு வளர்த்து வந்தார். ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வாரக் கடைசியில் கோபாலை ஊரில் பார்க்க முடியாது. தன் மகனைப் பார்க்க சகோதரி ஊருக்கு வண்டியேறியிருப்பார். ஒரு மாதம் கூட தவறியதாக நினைவில்லை.

நல்ல நாள் திருநாள் என்றால் காசு கேட்டு தலையைச் சொறிந்து கொண்டு நிற்க மாட்டார். ஆனால் யாராவது வீட்டில் விருந்து சாப்பிடக் கூப்பிட்டால் மறுக்காமல் வந்து நன்றாகக் கட்டி விட்டுப் போவார். மறக்காமல் வீட்டில் உள்ள நண்டு சிண்டுகளுக்கு எதாவது - தின்பண்டமோ, பொம்மையோ - வாங்கிக் கொடுக்காமல் இருக்க மாட்டார்.

ஊரில் உள்ள சிறுவர்கள் அனைவருக்கும் அவர் தபாலண்ணே. பெருசுகளுக்கு கோவாலு. தெருவில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கும்போது வந்தால் பந்து வீசிக் கொண்டிருந்தால் அந்த ஓவர் முடியும் வரை பொறுமையாகக் காத்திருப்பார். சில பல கிரிக்கெட் டிப்ஸும் கொடுப்பார். எங்கள் பெயர்கள் கூட அவருக்கு அத்துப்படி.

நவம்பர் 14 - குழந்தைகள் தினம் தான் அவருக்கும் பிறந்தநாள். அந்த நாள் கை நிறைய சாக்லெட்டோடு எங்களைத் தேடித் தேடிக் கொடுத்து மகிழ்வார். சாக்லெட்டைக்கொடுத்து விட்டுப் போக மாட்டார். நாங்கள் அதைப் பிரித்து வாயில் போட்டு அது கரைகையில் எங்கள் முக பாவங்களை ரசித்துப் பார்த்து விட்டே செல்வார்.

எங்கள் ஊரின் அத்தனை பேரின் மதிப்பையும் பெற்றவர்.. பொடிசுகளுக்கு அவர் மீது மரியாதை. பெருசுகளுக்கு இப்படி ஒரு தபால்காரர் இருப்பது ஒரு பெருமை. அவரைத் தங்கள் குடும்பத்தின் அங்கமாக நினைக்காத குடும்பமே எங்கள் ஊரில் இல்லை எனலாம்.

அப்படி இருந்த தபாலண்ணே நடுத்தெரு ரங்கநாயகியக்காவுடன் ஏன் ஓடிப் போனார் என்று எங்கள் யாருக்கும் தெரியவில்லை.

பின் குறிப்பு: உண்மையிலயே இப்பிடி ஒரு கேரக்டர் இருந்தா நல்லாத்தான் இருக்கும். என்ன சொல்றீங்க?

27 comments:

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஹாஹ்ஹா.. படிக்கும் போதே நினைச்சேன் - இப்படி ஒரு ஆளான்னு :௦௦O

கடைசில போட்டுத் தாக்கிடீங்க போங்க (பொறுமையா படிச்சு முடிச்ச எங்களைத் தான் :) ) ஆனாலும், ஒரு பாரதிராஜா படம் பார்த்த பீலிங் இன்னமும் மனசுல நிக்குது :))))

Paleo God said...

லொள்ளு LOL :))

--
அமெரிக்க கேரக்டர் பத்தி எழுதலாமே முகிலன் :)

Anonymous said...

என்ன முகிலன் சார், இப்பிடி முடிசிங்களே...ஹும்...எங்கேயாவது இந்த மாதிரி ஆளுங்க நிஜமா இருப்பாங்க இல்லே?

க.பாலாசி said...

அடக்கொடுமையே... ரொம்ப நேரமா உண்மைன்னு நம்ம்ம்ம்ம்பி படிச்சிட்டேனே...

எதிர் கவுஜ மாதிரி இது எதிர் கேரக்டரா????

ஜெய்லானி said...

ரங்க நாயகிபாட்டியை பத்தி ஒன்னுமே சொல்லலியே !!!
:-))

ஜெய்லானி said...

கடைசில ஏமாத்துவதே உங்க பழக்கமா போச்சி அதனால நா மொதல்லயே கடைசிய படிச்சிட்டேனே!! இப்ப என்னா செய்வீங்க.. இப்ப என்னா செய்வீங்க..

vasu balaji said...
This comment has been removed by the author.
vasu balaji said...

கற்பனையானாலும் அருமையான கேரக்டர்.

/அப்படி இருந்த தபாலண்ணே நடுத்தெரு ரங்கநாயகியக்காவுடன் ஏன் ஓடிப் போனார் என்று எங்கள் யாருக்கும் தெரியவில்லை./

சொல்லாம சொன்ன இந்த வெகுஜன கேரக்டர்தான் நிஜம். இத தெரிஞ்சிக்காம மண்ட வெடிச்சிடும் :)))

Anonymous said...

//அப்படி இருந்த தபாலண்ணே நடுத்தெரு ரங்கநாயகியக்காவுடன் ஏன் ஓடிப் போனார் என்று எங்கள் யாருக்கும் தெரியவில்லை.//

இப்படி தடார்னு போட்டு கேரக்டரையே மாத்தீட்டீங்களே!!!!

பிரபாகர் said...

நல்லதொரு திருப்பத்துடம் கேரக்டர்! ரசித்துப்படித்தேன் நண்பா! உங்களுக்கு சரளமாய் எழுத வருகிறது!

அந்த கேரக்டர் உண்மையா இருந்தா அவரு சொல்ற மாதிரி 'என் கேரக்டரயே யாரும் புரிஞ்சிக்ககலையே'....

பிரபாகர்...

ராஜ நடராஜன் said...

//“ஏண்ணே இப்பிடி சிரமப் படுறீங்க? கதவுக்கு அடியில தள்ளி விட்டுட்டு வரலாமில்லை” என்று கேட்டால் “தபால்ல என்ன முக்கியமான விசயம் இருக்கோ, நாம கதவுக்கடியில தள்ளிவிட அது அவங்க கண்ணுல படாம போயிட்டா?” என்று நம்மையே திருப்பிக் கேட்பார்.//

A big salute!

செந்தில்குமார் said...

அமெரிக்கா போனாலும்
அழியாது
அந்த நாள் ஞாபகம்
போஸ்ட் மேன்
கோபால் போல இல்லையே
போஸ்ட் மேன் இன்று
மாற்றங்கள்.....

எல்லாம் அடக்கம் உங்கள் கற்பனை கடலில்...........
இ்றந்தகால அமெரிக்கவாசி
செந்தில்குமார்.அ.வெ

ராஜ நடராஜன் said...

//கொடுத்தால் கூட கமிஷன் வாங்க மாட்டார்.//

இந்த மாதிரி மனிதர்களை பொதுவில் அறிமுகப்படுத்துவதே எதிர்மறை மனிதர்களை சமுதாயத்திலிருந்து பின் தள்ளும்.

Radhakrishnan said...

ம்ம்.. அருமை. கடைசி வரிகள் கோவாலு...

ராஜ நடராஜன் said...

ஏபரல் முடிஞ்சும் இப்படியா?காலை வாரி விட்டுட்டீங்களே!அவ்வ்வ்வ்வ்

இருங்க நசரேயன்கிட்ட சொல்லி வைக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

வானம்பாடிகள் பாலா நேத்து என்னோட ஆட்டத்த போங்காட்டமின்னுட்டார்.

நீங்க போங்காட்டுமின்னு தெரிஞ்சும் வாசகர் பரிந்துரைக்கு இது எப்படி போச்சு?

உடனே டெல்லிக்கு ஒரு கடிதம் எழுதணும்.

VISA said...

பிழிதல்....மற்றும் பிழிதல் சார்ந்து...

நாடோடி said...

ந‌ல்லா தான் ப‌டிச்சுட்டு வ‌ந்தேன்... க‌டைசியில் ந‌ல்ல‌ டைச்..

க ரா said...

நல்லா இருக்குங்க.

நசரேயன் said...

// உண்மையிலயே இப்பிடி ஒரு கேரக்டர் இருந்தா நல்லாத்தான் இருக்கும். என்ன சொல்றீங்க?
//
ஆட்டோ வராத வரைக்கும் நல்லாத்தான் இருக்கும்

அது சரி(18185106603874041862) said...

//
பின் குறிப்பு: உண்மையிலயே இப்பிடி ஒரு கேரக்டர் இருந்தா நல்லாத்தான் இருக்கும். என்ன சொல்றீங்க?
//

என்னா அக்கிரமம்...வானம்பாடிகளுக்கு எதிர் பதிவுன்னு லேபிள் போட்டிருக்கலாம் :)))

Unknown said...

@எல் போர்ட்.. பீ சீரியஸ்.. - ஹி ஹி ஹி

@ஷங்கர் - அப்பிடி அப்சர்வ் செஞ்சிப் பாக்குறதில்லை ஷங்கர்.

@சந்தியா - இருக்கணும்னு தான் எனக்கும் ஆசை

@ஜெய்லானி - பாட்டியா?

@ஜெய்லானி - எவ்வளவு அடிச்சாலும் வலிக்காத மாதிரியே இருக்கீங்களே..

@வானம்பாடிகள் - நீங்க டெலிட் செஞ்சாலும் நாங்க படிச்சிட்டோம்ல.

@வானம்பாடிகள் - நன்றி சார்

@சின்ன அம்மிணி - ஹி ஹி

@பிரபாகர் - நன்றி பிரபா

@ராஜ நடராஜன் - முழுசாப் படிக்காம முத ரெண்டு பின்னூட்டம் போட்டுட்டீங்களோ?

@வி.ராதாகிருஷ்ணன் - ஹி ஹி

@ராஜ நடராஜன் - நசரா.. அய்யோ

@விசா - அப்பிடின்னா?

@நாடோடி - நன்றி..

@இராமசாமி கண்ணன் - நன்றிங்க

@நசரேயன் - சரியாச் சொன்னீங்க தளபதி

@அது சரி - அப்பிடிப் போட்டா தெரிஞ்சிக்குவீங்கள்ல.. :))

Cable சங்கர் said...

ranganayaki matter nallarukku..:)

அன்புடன் அருணா said...

கடைசியில் இப்புடிக் காரக்டர் அசாசினேஷன் செஞ்சுட்டீங்களே!

கொங்கு நாடோடி said...

அன்பரே,
பாராட்டுகள், ஆனாலும் அகஸ்தியன் அவர்களின் கேரக்டர்களில் ஒன்றை மாற்றி எழுதி இருகிறிர்கள்.
அகஸ்தியன், கடுகு என்ற பெயர்களிலும், வேறு பல புனைப் பெயர்களிலும் 40 ப்ளஸ் வருஷங்களாக குமுதம், கல்கி, தினமணி கதிர், குங்குமம், சாவி என்று பல பத்திரிகைகளில் அகஸ்தியன், கடுகு என்ற பெயர்களிலும், வேறு பல புனைப் பெயர்களிலும் 40 ப்ளஸ் வருஷங்களாக எழுதி வருகிறார்.

அடுத்தமுறை சொந்த முயற்சிக்கு முயற்சிக்கவும், 1000blog எழுத்தாளர்கள் இருக்கிறார்கள், அவர்கள் வெற்றிபெறுவது தனது சொந்த எழுத்துகளால், அடுத்தவரின் எழுத்துகளை மாற்றி எழுதுவதில் இல்லை.
http://kadugu-agasthian.blogspot.com/ சென்று கேரக்டர்களை படியும், இதுபோலே 33 கேரக்டர்கள் எழுதி இருக்கிறார், தயவு செய்து அவற்றை காப்பியடிக்க வேண்டாம்.

கொங்கு நாடோடி said...

முப்பது வருஷமாக அதே "பீட்'டில் தபால் வினியோகம் செய்து வரும் தபால்காரர் அல்லா பக் ஷ்.. அந்தப் பகுதி மக்களின் ஒரு பிரியமான நபர்; நண்பர். எல்லாக் குடும்பங்களின் நல்லவைக் கெட்டவைகளைத் தெரிந்து வைத்துக் கொண்டு, தேவையான (பல சமயம் தேவையற்ற) இலோசனைகளையும் தருவார்.அவருக்கு வினியோக நேரம் என்கிற ஒழுங்கெல்லாம் கிடையாது. அவர் கொண்டு வந்து கொடுக்கிற நேரம் தான் டெலிவரி டைம் என்று நாம் வைத்துக் கொள்ள வேண்டும்.

வயதுக்கு மீறிய வயோதிகத் தனம். கவனிப்பாரற்ற தோட்டத்தில் வளரும் புல் மாதிரி வளர்ந் திருக்கும் தாடி, மீசை. காக்கி நிற யூனிபாரம். தலையில் குல்லாய். பளபளக்கும் பேட்ஜ். தோளில் பை. காதில் பென்ஸில். நடையில் ஒரு விந்தல்.தெருக்கோடிக்கு வரும் போதே சிலர் "என்ன போஸ்ட் மேன், லெட்டர் இருக்குதா?'' என்று அவரை அணுகிக் கேட்பார்கள்.
அருகில் உள்ள வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தால் அரை மணிக்கு நகர மாட்டார். அங்கேயே போகிறவர்கள் வருகிறவர்களைக் கூப்பிட்டு வினியோகம் பண்ணிவிடுவார்!
"எலே... ஜிப்பிரமணி... இப்படி வா... இந்தக் கடிதாசியை உங்க வூட்டு மாடியிலே இருக்கிறவங்ககிட்ட கொடுத்துடு... போவச்சே டீக்கடைக்காரரை இங்கே வரச் சொல்லு... அட சொல்லுடான்னா... மணியார்டர் வந்திருக்குதுன்னு சொல்லு, உய்ந்து அடிச்சிக்கினு ஓடி வருவான்... இங்கே வந்தாதானே தெரியும் வக்கீல் நோட்டீஸ்னு... யாரு... ஜானகி அம்மாவா... கோவிலுக்கு போயிட்டுப் போவறியா... இப்படி அந்த வாழைப்பழத்தைக் கொடுத்துட்டுப் போ... லெட்டரா?... நேத்துதானே கொடுத்தேன். மருமவளுக்கு மூணு மாசம்னு சம்பத்து எழுதியிருந்ததே. இன்னிக்கு என்ன நாலு மாசம்னு கடிதாசி வருமா..?.''
"அடப்பாவி. எல்லா லெட்டரையும் படிச்சுட்டுத்தான் கொடுக்கறையா?.. உன் பேரில் கம்பளைண்ட் கொடுக்கணுமடா...''
"கொடேன்... போஸ்டல் சூப்ரண்ட் நான் பார்த்து வளர்ந்த புள்ளை.
அவருக்கு. அப்பாயின்ட்மென்ட் ஆர்டரே நான்தானே டெலிவரி பண்ணேன் அரை நிஜார் போட்ட புள்ளாண்டானா அந்த வூட்லே இருக்கறப்ப புடிச்சியே தெரியுமே... கம்பளைண்ட் கொடுக்கிறாங்களாமில்லை...என்ன வக்கீல் ஜகன்னாதன் சார்... இப்படி வாங்க... ஏழு ரிஜிஸ்தர் லெட்டர் இருக்குது. நீங்க கட்சிக்காரன் செலவிலே நோட்டீஸ் விடறீங்க... அல்லாம் ’ரிஃப்யூஸ்ட்' போட்டு திரும்ப வரது... நான்தானே டெலிவரி பண்ண வேண்டியிருக்குது... உங்க வூட்டு மாடி ஏறி வர்றதுக்குள்ளேயே உசிர் போய் உசிர் வர்றது... எனக்குத்தான் கால், சாய்காலாச்சே. ஆமாம் சார்... உங்களை நானே கேக்கணும்னு இருந்தேன்... எனக்காக ஒரு நோட்டீஸ் கொடுக்கணும். நம்ப திம்மாவரம் நிலத்திலே வேலி போட்டிருந்தேன். பக்கத்து நிலத்துக்காரன்......''
"அல்லா பக் ஷ், நீங்க கோர்ட்டுலே வந்து பாருங்க... இப்படி நடு ரோடுலே, அதுவும் நீங்க டூட்டி பார்த்துக் கொண்டிருக்கறப்போ நோட்டீஸ் விவகாரம் எல்லாம் எதுக்கு?''
வக்கீல் போனதும், "அல்லா பக் ஷ் பீஸ் கொடுக்கமாட்டானோன்னு நழுவிப் போவறார் வக்கீல்... யோவ்... யோவ்... சைக்கிள்ளே போற சபாபதி... இப்படி வா... இந்த பார்சலை கோடியிலே இருக்கிற புஸ்தக் கடையிலேலே இறக்கிட்டுப்போ... நான் அப்பாலே போய் கையெழுத்து வாங்கிக்கிடறேன்... சைக்கிள்தானே தூக்கிப்போவுது. கெடந்து அளுவறயே... இல்லாக்காட்டி நான்தான் சுமக்கணும்'' என்று கூறி நாலு கனமான பார்சலை அனுப்பி வைப்பார்.
"யாரு அத்தையம்மாவா?... ஒரே வெய்யில்... ஜில்லுன்னு தூத்தம் கொடுங்கோ... ஆத்திலே என்ன விசேஷம்... அமாவாசை கூட இல்லையே... ஆமாம், காஞ்சீவரம் போய் அத்திவரதரை சேவிச்சுட்டு வந்தேளா? திவ்யமாய்ப் பெருமாளைச் சேவிக்காமல் தளிகை உள்ளிலேயே இருக்கறீங்களே?'' - சுத்தமாகப் பிராமண பரிபாஷையில் அல்லா பக் ஷ் பேசுவார்.
"அல்லா பக் ஷு... ஒனக்கு என்னமாடா இவ்வளவு நன்னா எங்க பாஷை வந்துடுத்து! இரு, மோர் கொடுக்கறேன்'' என்பாள் ஒருவிதப் பரிவுடன்.
சிலர் வீட்டில் கவரைக் கொடுத்துவிட்டு அங்கே நின்று கொண்டிருப்பார். கவரைப் பிரித்து அவர்கள் கடிதத்தைப் படித்த பிறகு, "என்ன சேதி' என்று கேட்டறிந்து கொண்டுதான் போவார். "எப்போ வருது பார்த்தசாரதி அமெரிக்காவிலிருந்து? ஆச்சே, போய் மூணு வருஷம் ஆவலை?'' என்பார்.
தீபாவளி, பொங்கல் என்றால் அல்லா பக் ஷ் யார் வீட்டிலும் போய் இனாம் என்று கேட்க மாட்டார். அவர்களாகவே ஐந்து, பத்து என்று கொடுத்துவிடுவார்கள். இல்லாவிட்டால் அவர்களுக்குப் பண்டிகை பூர்த்தியான திருப்தியே இருக்காது!
Posted by கடுகு....... at 4:55 A

கொங்கு நாடோடி said...

அகஸ்தியர் எழுதிய அல்லா பக் ஷ் கேரக்டர் இருந்து சில துளிகள் உங்கள் கவனத்திற்கு ....
எப்படி ள்ளோம் அடுத்தவரின் சிந்தனையை சுடுரன்கப்பா ...

******
முப்பது வருஷமாக அதே "பீட்'டில் தபால் வினியோகம் செய்து வரும் தபால்காரர் அல்லா பக் ஷ்.. அந்தப் பகுதி மக்களின் ஒரு பிரியமான நபர்; நண்பர். எல்லாக் குடும்பங்களின் நல்லவைக் கெட்டவைகளைத் தெரிந்து வைத்துக் கொண்டு, தேவையான (பல சமயம் தேவையற்ற) இலோசனைகளையும் தருவார்.அவருக்கு வினியோக நேரம் என்கிற ஒழுங்கெல்லாம் கிடையாது. அவர் கொண்டு வந்து கொடுக்கிற நேரம் தான் டெலிவரி டைம் என்று நாம் வைத்துக் கொள்ள வேண்டும். யாரு அத்தையம்மாவா?... ஒரே வெய்யில்... ஜில்லுன்னு தூத்தம் கொடுங்கோ... ஆத்திலே என்ன விசேஷம்... அமாவாசை கூட இல்லையே... ஆமாம், காஞ்சீவரம் போய் அத்திவரதரை சேவிச்சுட்டு வந்தேளா? திவ்யமாய்ப் பெருமாளைச் சேவிக்காமல் தளிகை உள்ளிலேயே இருக்கறீங்களே?'' - சுத்தமாகப் பிராமண பரிபாஷையில் அல்லா பக் ஷ் பேசுவார்.
"அல்லா பக் ஷு... ஒனக்கு என்னமாடா இவ்வளவு நன்னா எங்க பாஷை வந்துடுத்து! இரு, மோர் கொடுக்கறேன்'' என்பாள் ஒருவிதப் பரிவுடன்.
சிலர் வீட்டில் கவரைக் கொடுத்துவிட்டு அங்கே நின்று கொண்டிருப்பார். கவரைப் பிரித்து அவர்கள் கடிதத்தைப் படித்த பிறகு, "என்ன சேதி' என்று கேட்டறிந்து கொண்டுதான் போவார். "எப்போ வருது பார்த்தசாரதி அமெரிக்காவிலிருந்து? ஆச்சே, போய் மூணு வருஷம் ஆவலை?'' என்பார்.
தீபாவளி, பொங்கல் என்றால் அல்லா பக் ஷ் யார் வீட்டிலும் போய் இனாம் என்று கேட்க மாட்டார். அவர்களாகவே ஐந்து, பத்து என்று கொடுத்துவிடுவார்கள். இல்லாவிட்டால் அவர்களுக்குப் பண்டிகை பூர்த்தியான திருப்தியே இருக்காது!
Posted by கடுகு....... at 4:55 A