Tuesday, June 8, 2010

108 - இந்தியாவின் 911

ஞாயிற்றுக்கிழமை சென்னையிலிருந்து திருவண்ணாமலை போகலாம் என்று முடிவெடுத்து ஒரு இன்னோவாவை வாடகைக்கு எடுத்துக்கொண்டு நான், தங்கமணி, முகிலன், தங்கமணியின் பெற்றோர், மைத்துனன் மற்றும் என் உடன்பிறவா சகோதரன் ஆகியோர் கிளம்பினோம்.

காலையிலேயே கிளம்பி இருக்க வேண்டிய பயணம் சில பல காரணங்களால் தாமதமாகி மதியத்துக்கு மேல் தான் புறப்பட்டோம். வழியிலும் சில இடங்களில் நிறுத்தி நிறுத்திப் போய்க்கொண்டிருந்ததால் செஞ்சிக் கோட்டையை அடையும்போது மணி மாலை 4:00 மணியாகிவிட்டது.

வண்டி செஞ்சியைத் தாண்டி இரண்டு கிலோ மீட்டர்கள் வந்திருக்கும். எங்களுக்கு முன்னால் போன ஒரு அரசுப் பேருந்து கிட்டத்தட்ட நின்று, ரோட்டிலிருந்து விலகி மீண்டும் ரோட்டில் சேர்ந்தது. அந்தப் பேருந்து விலகியதும்தான் ரோட்டில் கிடந்த அந்த இரண்டு சக்கர வாகனத்தையும் அதன் அருகில் மல்லாந்து கிடந்த ஒரு ஆளையும் எங்களால் பார்க்க முடிந்தது. அவரது மார்பில் ரத்தம். நாங்கள் ஏற்கனவே தாமதமாகப் போய்க் கொண்டிருந்ததால் எங்களால் நிறுத்தி என்ன ஆனது என்று பார்க்க முடியவில்லை. சரி குறைந்த பட்சம் 108க்கு அழைத்துத் தகவல் தரலாம் என்று செல்ஃபோனில் நான் டயல் செய்ய முற்பட, என்னை வேண்டாம், வேண்டாம் என்று தடுத்தனர் என் குடும்பத்தார். நான் மீறி 108ஐ அழைத்து தகவல் கொடுத்தேன். எந்த இடத்தில் விபத்து என்பதைக் கேட்டுக்கொண்டு மொபைல் நம்பரையும் பெற்றுக் கொண்டனர்.

என் குடும்பத்தார், குறிப்பாக என் மாமியார், எதற்காக தகவல் கொடுத்தாய், கடைசியில் ஏன் செல்ஃபோன் நம்பரைக் கொடுத்தாய் என்று என்னைக் கடிந்து கொண்டனர். போலீஸ் நாம் தான் இந்த விபத்தை செய்திருப்போம் என்று நம்மை சிக்கலில் மாட்டி விடப் போகிறார்கள் என்று புலம்பினர். நான் 108 என்பது ஆம்புலன்ஸ் சேவை மட்டும்தான். அதனை வைத்துக் கொண்டு போலீஸ் நம்மைத் தொடர்பு கொள்ள மாட்டார்கள் என்று அவர்களுக்கு விளக்கிய பின்னரே அவர்கள் அமைதியானார்கள். நாங்கள் திரும்பி வரும்போது அந்த வாகனமும் அந்த ஆளும் அந்த இடத்தில் இல்லை. இதன் மூலம் ஆம்புலன்ஸ் வந்து சென்றதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அந்த நபர் என்ன நிலையில் இருந்தார், இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை.

முதலில் இப்படி ஒரு அருமையான சேவையை அறிமுகம் செய்த தமிழக அரசுக்கு நன்றி. இதன் மூலமாக விலைமதிக்க முடியாத பல உயிர்களைக் காப்பாற்ற முடிகிறது. கிட்டத்தட்ட அமெரிக்காவின் 911 சேவையைப் போல இந்த 108 விரைவாக விபத்து நடந்த இடத்துக்கு வந்து சேர்கிறது.

ஆனாலும் மக்களுக்கு இந்த சேவைக்கு தொடர்பு கொள்ள என் குடும்பத்தாரைப் போல பல தயக்கங்கள் இருக்கிறது. காரணம், காவல்துறை. காவல்துறை அதிகாரிகள் சாட்சி சொல்ல வருபவர்களை அலைக்கழிப்பது பிரசித்தி பெற்றது. அதற்குப் பயந்தே பலர் எனக்கென்ன என்று போய்விடுகிறார்கள்.

பெரும்பாலான மக்களின் இந்தத் தயக்கத்தைப் போக்க வேண்டியது காவல்துறையின் கடமை. அதோடு 108க்கு அனானிமஸ் கால் செய்யும் வசதியும் இருக்கவேண்டும். அப்படி 108க்கு அழைத்து ஒரு விபத்தைப் பற்றிய தகவல் கொடுப்பவர்களை அந்த விபத்தின் சாட்சியாக, அவர் விருப்பமின்றி சேர்க்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தையும் அளிக்க வேண்டும். செய்வார்களா?

இப்படிச் செய்தால்தான் 108 சேவையை பொதுமக்கள் முழுவதுமாக அனுபவிக்க முடியும்.

29 comments:

Chitra said...

உண்மைதான். மக்களிடம் இருக்கும் தயக்கத்தையும் பயத்தையும் போக்கி கொள்ளும் அளவு மாறுதல்கள் வர வேண்டும்.

எல் கே said...

makkalkitta change venum

Robin said...

//கிட்டத்தட்ட அமெரிக்காவின் 911 சேவையைப் போல இந்த 108 விரைவாக விபத்து நடந்த இடத்துக்கு வந்து சேர்கிறது.// உண்மைதான். நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன்.
//அப்படி 108க்கு அழைத்து ஒரு விபத்தைப் பற்றிய தகவல் கொடுப்பவர்களை அந்த விபத்தின் சாட்சியாக, அவர் விருப்பமின்றி சேர்க்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தையும் அளிக்க வேண்டும். // சரியாகச் சொன்னீர்கள்.

கார்க்கிபவா said...

நட்சத்திர வாழ்த்துகள்

க.பாலாசி said...

நல்ல இடுகை.

vasu balaji said...

=)). வழக்கமாக இப்படி விபத்தில் ட்ராஃபிக் போலீஸ் இருந்தால் ஆம்புலன்ஸுக்கு சொல்லிவிட்டு, வேடிக்கை பார்க்கும் கூட்டத்தில் கூலி வேலைக்குப் போகிற ஆட்களாக பிடித்து இழுத்துக் கொண்டு போவார், அட்மிட்
செய்யும் போது சாட்சிக்கு.

ஒரு முறை தலை துண்டான நிலையில் ட்ராக் ஓரம் ஒரு உடல் கிடக்க சக ஊழியர் போலீசில் கம்ளெய்ண்ட் செய்கையில் ஒரு ஆணின் சவம் என எழுத சார் சவம் எல்லாம் போடாதிங்க, உயிர் இருக்கா இல்லையான்னு தெரியாம எப்புடி சவம்னு போட்டீங்கன்னு உங்களுக்கு பிரச்சனை வரும் என்றார். பிறகு, அடிபட்ட நிலையில் ஒரு ஆண் விழுந்திருக்கிறார் என எழுதிக் கொடுத்தது:)

ஈரோடு கதிர் said...

தினேஷ்..
நட்சத்திர வாழ்த்துகள்

108 மிக அருமையானதொரு சேவை
நல்ல பகிர்வு

Anonymous said...

வேடிக்கை பாக்காம உதவி செய்திருக்கீங்க. வாழ்த்துக்கள்

VJR said...

hi, mukil, i had the same experience, but i know very well.

1. they dont ask any one for witness

2. they react very fast and inform u till the end, so y they use to collect our number.

3. so no need to hesitate for informing the accidents.

4. also it becomes the rule,that plice or hospital should not compel the informer, for further investigations.

take care,
ganesh

Bruno said...

//பெரும்பாலான மக்களின் இந்தத் தயக்கத்தைப் போக்க வேண்டியது காவல்துறையின் கடமை. அதோடு 108க்கு அனானிமஸ் கால் செய்யும் வசதியும் இருக்கவேண்டும். அப்படி 108க்கு அழைத்து ஒரு விபத்தைப் பற்றிய தகவல் கொடுப்பவர்களை அந்த விபத்தின் சாட்சியாக, அவர் விருப்பமின்றி சேர்க்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தையும் அளிக்க வேண்டும். செய்வார்களா?//

உத்திரவாதம் உள்ளது
இந்த திட்டம் 2008 செப்டம்பர் முதல் செயல்பட்டு வருகிறது
இது வரை யாராவது சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்களா
எனக்கு தெரிந்து இல்லை

அப்படி இருந்தால் கூறுங்கள்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//they react very fast and inform u till the end, so y they use to collect our number.//

நீங்கள் குறிப்பிட்ட இடத்தை கண்டறிய ஏதேணும் தடங்கலகள், தாமதங்கள் ஏற்பட்டால் உங்களைத் தொடர்பு கொண்டு அந்த இடத்தைத் தெரிந்து கொள்வார்கள். விரைந்து செயல்பட அது உதவும்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தமிழீஷிலும் ஓட்டுப் போட பின்னர் வருகிறேன்

மாதேவி said...

108 மிக நல்ல சேவையாக இருக்கிறது.
வாழ்த்துகள்.

சுசி said...

நல்ல பதிவு முகிலன்.
பாராட்டுக்கள்.

மாதவராஜ் said...

தமிழ்மண நடசத்திரத்திற்கு வாழ்த்துக்கள்!

Paleo God said...

//பெரும்பாலான மக்களின் இந்தத் தயக்கத்தைப் போக்க வேண்டியது காவல்துறையின் கடமை.//

சரிதான்!

அதேபோல் ஆம்புலன்ஸ்களுக்கு வழி விடாத போக்கும், அதைப்பற்றி கவலைப்படாத போக்குவரத்து காவலதிகாரிகளும் இங்கே சகஜம். :-(

தர்ஷன் said...

இனிமையான நட்ச்சத்திர வார அனுபவத்துக்கு வாழ்த்துக்கள்

rajasundararajan said...

நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள். வாழ்க.

நசரேயன் said...

// அவர் விருப்பமின்றி சேர்க்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தையும் அளிக்க வேண்டும். செய்வார்களா?//

2050 ல பார்க்கலாம்

Unknown said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

பிரபாகர் said...

கிராமப்புரங்களிலும் 108-ன் சேவை அற்புதமாயிருக்கிறது தினேஷ்...

இது பற்றி நானும் எழுத இருந்தேன்...

அருமை. நட்சத்திரமாய் மின்னுகிறீர்கள்.... வாழ்த்துக்கள்...

பிரபாகர்...

உடன்பிறப்பு said...

நட்சத்திர வாழ்த்துகள்

சாந்தி மாரியப்பன் said...

//காவல்துறை அதிகாரிகள் சாட்சி சொல்ல வருபவர்களை அலைக்கழிப்பது பிரசித்தி பெற்றது. அதற்குப் பயந்தே பலர் எனக்கென்ன என்று போய்விடுகிறார்கள்.//

சரியாக சொன்னீர்கள். நிறைய விஷயங்களில் மக்கள் கண்டும் காணாமல் போவதற்கு இந்த தயக்கமும் காரணம்.

வருண் said...

இந்த வார பதிவுலக சூப்பர் ஸ்டார் முகிலனுக்கு என் வாழ்த்துக்கள்! :)

vasu balaji said...

'இந்திய மருத்துவர்களே ஏன் இப்படி’ யூத்ஃபுல் விகடனில் சுட்டப்பட்டிருக்கிறது குட் ப்ளாக்ஸில். வாழ்த்துகள்:)
http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp

Anonymous said...

"ஒரு விபத்தைப் பற்றிய தகவல் கொடுப்பவர்களை அந்த விபத்தின் சாட்சியாக, அவர் விருப்பமின்றி சேர்க்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தையும் அளிக்க வேண்டும். செய்வார்களா?"

இது சரியாய் சொன்னிங்க எப்போ அரசு இந்த மாதிரி ஒரு உத்தரவாதம் தருவாங்களோ அப்போ தான் மக்கள் மனதில் இருக்கற அந்த பயம் போயிடும் .

"ஒரு இன்னோவாவை வாடகைக்கு எடுத்துக்கொண்டு நான், தங்கமணி, முகிலன், தங்கமணியின் பெற்றோர், மைத்துனன் மற்றும் என் உடன்பிறவா சகோதரன் ஆகியோர் கிளம்பினோம்."

இதில் நான் என்று சொன்னது யாரு ? அப்போ முகிலன் யாரு .டவுட் கிளியர் பண்ணுங்கப்பா

ராமலக்ஷ்மி said...

நல்ல இடுகை.

நட்சத்திர வாழ்த்துக்கள்!

கிரி said...

முகிலன் தகவலுக்கு நன்றி! கண்டிப்பாக இது பற்றி விளக்க கூற உதவியாக இருக்கும்.

இதைப்போல சிறப்பான சேவையை கொண்டு வந்த தமிழக அரசுக்கு மிக்க நன்றி

கிரி said...

//108 - இந்தியாவின் 911//

இந்த வசதி (இதைப்போல உடனுக்குடன் வசதி) தமிழகத்தில் மட்டுமே இருக்கிறது என்று நினைக்கிறேன். மற்ற மாநிலத்தில் இதைப்போல உள்ளதா!