Tuesday, August 10, 2010

செட்டி நாட்டு ஓட்டலும் ஆயா கடை இட்டிலியும்

அது இந்த ஊரிலேயே மிகப்பெரிய செட்டி நாட்டு அசைவ உணவகம். மொத்த உணவகமும் ஏசிக்குளிரோடும். கொடுத்த காசுக்கு முழு திருப்தியான உணவும் கிடைக்கும். ஒரு முழு மட்டன் பிரியாணியையும் சிக்கன் சிக்ஸ்டிஃபைவையும் உள்ளே தள்ளிவிட்டு ஏறிப்போன வயிற்றைத் தடவிக்கொண்டே வெளியே வந்தேன். பில் ரூ.150/-. 

அனைவரும் இப்படி அளவுக்கதிகமாக சாப்பிட்டுவிட்டு மலைப்பாம்பைப் போல் சீரணமாகமல் தவிப்பார்கள் என்பதை எதிர்பார்த்தோ என்னவோ அங்கே ஒரு பீடாக் கடையும் இருந்தது. பீடா ஒன்றை வாங்கி வாயில் உதப்பியபடி அங்கேயே நின்று ஒரு சிகரெட்டையும் பற்ற வைத்தேன். 

தூரத்தில் யாரோ ஒருவனை கூடி நின்று கும்மிக் கொண்டிருந்தார்கள். திருடினானா இல்லை திருட முயற்சித்தானா தெரியவில்லை. அந்தக் கூட்டத்திலிருந்து இருவர் நான் நின்றிருந்த மர நிழலுக்கு இடம்பெயர்ந்தார்கள். கொஞ்சம் வழுக்கையுடன் இருந்தவரை இன்னொருவர் அண்ணே என்று விளித்தார். 

“ஏண்ணே இந்த அடி அடிச்சீங்க” காதுக்குப் பின்னால் இருந்து ஒரு பீடியை எடுத்து பற்ற வைத்துக்கொண்டே அவரைப் பார்த்துக் கேட்டார். 

“அப்புறம் இப்பிடி ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமாடா அவனை மாத்த? எத்தினி நாளு காத்துக்கினு இருந்திருப்பேன்?” லேசாகக் கலைந்திருந்த சட்டையையும் மேல் துண்டையும் நீவி விட்டுக்கொண்டு சொன்னார்.

“அப்பிடி என்னண்ணே அவன் மேல உங்களுக்கு காண்டு?”

“சும்மாவாடா. அந்த ஏரியாவுல நாந்தா இம்புட்டு நாளா பெரியாளா இருந்தேன். நேத்து வந்த பய, என்னவோ செஞ்சிட்டான்னு ஏரியாக்காரனுக எல்லாம் தலையில தூக்கி வச்சிகினு ஆடினானுக. இப்பப் பாரு பய யாரோ ஒரு பிள்ளைக்கிட்ட தப்பா நடந்துக்கிட்டான்னு பஸ்ஸுல ஒருத்தன் கைய வச்சான். கிடைச்சது சாக்குனு நானும் மாத்திட்டேன்ல” பெருமையாக மீசையைத் தடவி விட்டுக்கொண்டார். 

கேட்டுக்கொண்டு நின்றிருந்த நான் கடைசி பஃபை இழுத்துவிட்டு சிகரெட்டைக் கீழே போட்டு மிதித்தேன். 

சட்டென்று என்னை திரும்பிப்பார்த்த வழுக்கை, “தம்பி ஒரு சிகரெட் குடேன்” என்றார். நானும் சிகரெட் பாக்கெட்டை எடுத்து அவருக்கு ஒன்று கொடுத்து விட்டு இன்னொன்றைப் பற்ற வைத்துக் கொண்டேன். முதல் பஃபை இழுத்துவிட்டு வெளியே விடும்போது புகையோடு சேர்ந்து ஒரு பெரிய ஏப்பமும் வந்தது. 

“என்ன தம்பி நல்ல சாப்பாடா?” வழுக்கை.

“ஆமாங்க” என்று அசடு வழிந்தேன். 

“இந்த ஓட்டல்லயா?”

“ஆமாங்க”

“பில் எம்புட்டு ஆச்சி”

‘என்னடா இதையெல்லாம் கேட்கிறார்’ என்று யோசித்துக்கொண்டே “அதை எதுக்குன்னே கேக்குறீங்க?”

“சும்மா சொல்லுங்க தம்பி”

“150 ரூவா ஆச்சி”

“ஹ்ம்ம்.. அங்க பாருங்க அந்த மரத்தடியில ஒரு ஆயா இட்லி சுட்டுக்கிட்டு இருக்குது. ஒரு இட்லி ஒரு ரூவா தான். அங்க போய் சாப்புட மாட்டீங்களோ?”

“சாப்புடுவேங்க. இன்னைக்கி எனக்கு பிரியாணி சாப்புடனும் போல இருந்திச்சி. அதுனால சாப்டேன்.”

“இந்த ஓட்டல் கட்ட ஒரு ரெண்டு மூணு கோடி செலவாயிருக்குமா?”

“இருக்கலாங்க”

“தினத்துக்கும் ஏசிக்கி கரண்டு பில்லு மட்டும் பத்தாயிரம் ரூவா கட்டுவானுக போலருக்கு”

“இருக்கலாங்க”

ஏந்தம்பி கொஞ்சம் யோசிச்சிப் பாத்தீங்களா? நம்ம நாட்டுல எத்தனை தொழிலாளர்கள் ஒரு வேளை கஞ்சிக்குக் கூட வழியில்லாம கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காங்க. எத்தனை மாணவர்கள் படிக்க வழியில்லாம இருக்காங்க. அப்பிடியிருக்கும்போது, இப்பிடி மூணு கோடி ரூவா செலவு பண்ணி ஒரு ஹோட்டலு, அங்க ஏசியப் போட்டு கரண்டு பில்லு பத்தாயிர ரூவா கட்டணுமா? அதுக்கு அங்கன இருக்கிற ஆயாக்கடையிலயே எல்லாரும் சாப்டுட்டுப் போலாம்ல? அதை விட்டுட்டு இந்த பணக்காரப் பரதேசி கடையில சாப்புடுறது நம்ம வாந்திய நாமளே காசு குடுத்துத் திங்கிறது மாதிரி”

“ஒவ்வொருத்தர் டேஸ்டுங்க அது. உங்களுக்கு ஆயா கடையில சாப்புடப் பிடிக்கிது. எனக்கு இந்தக் கடையில சாப்புடப் பிடிக்கிது. அதுக்காக உங்க டேஸ்ட் பெட்டர். என் டேஸ்டு பெட்டர்னு சொல்லமுடியுமா?”

“சொல்லணுந்தம்பி. ஆயாக்கடை இட்லிதான் டேஸ்டு. மத்ததெல்லாம் வேஸ்டு” 

“சரிங்க அப்பிடியே இருக்கட்டும். ஆனா அதுக்காக சொந்தக்காச போட்டு ஓட்டல் கட்டி வியாபரம் பண்றவங்களையும், கைக்காசக் குடுத்து சாப்டுட்டு வர்றவங்களையும் இப்பிடிப் பேசலாமா?”

“அப்பிடித்தான் தம்பி பேசணும். அப்பத்தான் இந்த வர்க்க பேதம் போய் எல்லாரும் ஒண்ணாக முடியும்”

“எல்லாரும் சமமா ஆகணும்னா, எல்லாரும் முன்னேற என்ன வழின்னு பாக்கணும். அதை விட்டுட்டு பணக்காரனை எல்லாம் ஏழையாக்கிட்டா எல்லாரும் சமமாயிருவோமுன்னு சொன்னா எப்பிடி?”

“நீங்க முதலாளித்துவ மனப்பான்மையோட பேசுறீங்க. எதுவும் சொந்தமா தொழில் செய்றீங்களா?”

“இல்லைங்க. நான் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில வேலை பாக்குறேன்”

“அதான். முதலாளிகளோட அடிவருடியா மாறீட்டீங்க”

‘இவருடன் பேசி பிரயோசனமில்லை என்று தோன்றியது’ சிகரெட்டை இழுத்து அந்தப்பக்கம் விடுவது போல முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.

சாலையின் மறுபுறம் ஒரு திருமண ஊர்வலம் போய்க்கொண்டிருந்தது. வட இந்தியத் திருமணம். பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்பது அந்த ஊர்வலத்தில் வந்தவர்களின் உடையிலும், நகையிலும் பகட்டிலும் தெளிவாகத் தெரிந்தது. விலை உயர்ந்த உடையணிந்த மாப்பிள்ளை ஒரு வெள்ளைக் குதிரையில் மேல் பவனி வந்து கொண்டிருந்தார்.

அப்போது ஒரு நாய் எங்கிருந்தோ ஓடி வந்தது. அந்த ஊர்வலத்தைப் பார்த்து தூரமாக நின்று குலைத்தது. ஊர்வலத்தில் போனவர்கள் யாரும் அதைக் கண்டுகொண்டதைப் போலவே தெரியவில்லை. ஆனாலும் விடாமல் குரைத்துக் கொண்டே இருந்தது. அடித்தொண்டையிலிருந்து கத்திக் கத்திக் குரைத்தது. 

நான் அந்த நிகழ்வைப் பார்த்து ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு சிகரெட்டைக் கீழே போட்டுவிட்டு விலகி நடந்தேன். .

23 comments:

Unknown said...

பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படுகின்றன.

சிரமத்துக்கு மன்னிக்கவும்.

Muthukumar said...

sooooooooooooper....sema reply :-)

Muthukumar said...

+1

vasu balaji said...

தொடர்கிறேன்..

இரண்டு நாட்கள் கழித்து ஆயாக் கடையில் இட்டிலி சாப்பிடப் போனேன். கிழவி குய்யோ முறையோ என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதது. அவளைச் சுற்றிலும் இட்டிலிகளும் தோசையும் சிதறியிருந்தன. அடுப்பும், தோசைக்கல்லும் ஒரு புறம். இட்டிலிக்குண்டானும், சட்டினிப் பாத்திரமும் நசுங்கியபடி.

அந்த வழுக்கை கையில் ஒரு தடி கொண்டு மிரட்டிக் கொண்டிருந்தான். பெட்ரோல் விலை ஏறிப்போச்சுன்னு பந்த்னு சொல்லியும் கடையா போடுற கடை என்றபடி அடித்தான்.

நாசமாப் போறவனே. பெட்ரோலுக்கும் எனக்கும் என்னடா வந்திச்சி. கார்ல போறவனை விட்டு கடைய உடைக்கிறியேப்பா என்றவளை உனக்காகத்தான் கிழவி, புரிஞ்சிக்கோ என்று அடித்தான்:)

பின்னோக்கி said...

இந்தப் பதிவுல எதோ உட்(கருத்து)(குத்து) இருக்குன்னு மட்டும் புரியுது. என்னன்னு தெரியலை. ஆனா படிக்க நல்லாயிருந்துச்சு.

rajasundararajan said...

வானம்பாடிகள் நீட்டி எழுதிய வேடிக்கையான/ வேதனையான நாட்டுநடப்பில் ஒரு சின்னச் செய்தி இருக்கிறது: அதாவது (ஆயாவுக்குப் புரியவைத்து ஆயாவையே செயல்படச் செய்வதை விடுத்து) ஆயாவுக்காக என்று பொறுப்பெடுத்து, எவனோ ஒருவன், ஆயா பிழைப்பையும் கெடுப்பது.

இருக்க, முகிலனின் analysis போதுமானதாக இல்லை. நாய், அரைவயிறு கால்வயிறு கிடைக்கையில் வெறுமனே குரைக்கும். வயிறு காய்கையில் சேட்டு வீட்டுக்குள் புகுந்து களவாடும். கூர்க்கா காரணம் அதற்கும் வழியில்லாமற் போனால், தடியெடுக்கத் தெரியாத பச்சிளங் குழந்தைகளைக் காவுபோடும். அங்கங்கே சிறிய அளவில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

நம் வீட்டுக் கூரை தூக்கப்படாதவரை வெளியில் வீசுகிற காற்று நமக்குப் புயலாகத் தெரிவதில்லை. வறுமையில் வளர்ந்து ஆளான எங்கள் தலைமுறை அளவுக்கு, செல்வச் செழிப்பால் எல்லாமும் கிடைத்து வளரும் எங்கள் பிள்ளைகளின் texture உருப்படியாக இல்லையோ என்கிற பதற்றம் எனக்கு உண்டு.

வீட்டுக்குள் உட்கார்ந்திருக்கையில் போக்குவரத்து நெரிசலைப்பற்றிய கவலை என்னத்துக்கு என்று, எனதொரு கட்டுரையில், நானும் எழுதியிருக்கிறேன். ஆனால் சாலையில் இறங்கிவிட்டால், முன், பின், சைடு என எல்லாக் கண்ணாடிகளையும் பார்த்துத்தான் ஆகவேண்டும். நான் இடித்தால் என்ன, 'தோழர்' இடித்தால் என்ன, டேமேஜு டேமேஜுதான்.

Paleo God said...

அடிபட்ட கிழவி யோசித்தது.










































































































































































































ச்ச நமக்கும் ஒரு சங்கம் இருந்திருந்தா நல்லா இருந்திருக்குமே!

எறும்பு said...

+1

ப்ரியமுடன் வசந்த் said...

சொற் சித்திரம் ஆளாளுக்குஎழுத ஆரம்பிச்சுட்டீங்க...

நச் ரிப்ளை !

கலகலப்ரியா said...

||செட்டி நாட்டு ஓட்டலும் ஆயா கடை இட்டிலியும்||

ஜாதி பேதம்... வர்க்க பேதம்...

கடுமையாகக் கண்டிக்கிறேன்...

கலகலப்ரியா said...

||ஒரு முழு மட்டன் பிரியாணியையும் சிக்கன் சிக்ஸ்டிஃபைவையும் உள்ளே தள்ளிவிட்டு ஏறிப்போன வயிற்றைத் தடவிக்கொண்டே||

தொப்பைக்கு ஒரு சப்பைக்கட்டு... நல்லா சொல்றாய்ங்கையா கதை...

கலகலப்ரியா said...

||வகைப்படுத்துதல் சொற்சித்திரம்||

என்னங்கடா இது... சொற்சித்திரவதைன்னு வைக்க வேண்டியத சித்திரம்ன்னு சுருக்கிக்கிட்டு... ஓஓஓஓஓ... ஐய்யோ... ப்ரியா உன் மண்டைக்குள்ள சுண்ணாம்பாடி... உசிரக் கைல புடிச்சுக்கிட்டு ஓடிப்போயிடு ஆத்தா... இது முதலாளித்துவக் கோஸ்ட்டி...

சுசி said...

நல்லா இருக்கு.. நீங்க மட்டுமில்ல படிச்ச நானும் சிரிச்சுக்கிட்டேன்.. நாயை நினைச்சு :))

VISA said...

நீங்க ஏதோ புதுசா தொடங்கியிருக்கீங்க. நான் தொடங்க நினைத்து தொடங்காமல் இருக்கும் ஒரு விஷயம் இது தான். சரி பார்ப்போம் எவ்வளவு நாளைக்கு தாக்குபுடிக்கிறீங்கன்னு.

நசரேயன் said...

என்ன உள்குத்து ?

☀நான் ஆதவன்☀ said...

+ 1 நல்லாயிருக்கு தினேஷ் :))

☀நான் ஆதவன்☀ said...

ஆகா உள்குத்து இருக்குதா இந்த பதிவுல. நான் உங்க அனுபவம்ல நினைச்சேன்!

கார்த்திகைப் பாண்டியன் said...

நிறைய பேசப்படவேண்டிய விஷயம்.. சில இடங்களில் உங்களுடன் முரண்படுகிறேன் தல

அது சரி(18185106603874041862) said...

பிரியாணியாவது இட்டிலியாவது. நானெல்லாம் மோர் சாதம் தான் சாப்புடறது. அது டேஸ்ட்டே தனி. அப்படி சாப்பிட்டு அலுத்துப் போய்ட்டா நல்லா மிளகு போட்டு ரசமும் அப்பளமும். சான்ஸே இல்லை.

ஆமா இடுகை எதைப் பத்தி? எப்பிடின்னாலும் பிரியாணியோ இட்டிலியோ புடிச்சதை சாப்பிடறதுல தப்பில்லை. அதனால ஓட்டு.

ஓட்டலு சொந்த காசுல கட்டிருந்தா சரி...ஆனா ஊரைக் கொள்ளையடிச்சி வேற யாரையும் தொழில் பண்ணவிடாம கட்டிருந்தா அங்க சாப்பிட போறவங்களையும் அய்யா கொஞ்சம் இதையும் கேளுங்கய்யான்னு சொல்றதுல தப்பில்லைன்னு நினைக்கிறேன்...

ஆஹா..இப்ப தான் ஞாபகம் வருது. பாலுக்கு புரைகுத்த மறந்து போச்சே....

அது சரி(18185106603874041862) said...

இட்லி இருக்கட்டும். இந்த இன்ட்லிக்கும் தமிழ்மணத்துக்கும் என்ன கேடு வந்துச்சி? கருமம் பிடிச்ச எழவு...

குடுகுடுப்பை said...

அடிவருடித்தனம் தெரிகிறது, அடி வருடித்தனத்தை ஒழிக்க அடியே இல்லாமல் செய்வதுதான் சரியான அனுகுமுறையாக இருக்கமுடியும்.

kashyapan said...

highky contrived situation.u r not clear about what u wanted to cnvey very very pilistine in u r approach....kashyapan

Anonymous said...

சொற்சித்திரமெல்லாம் எழுதறீங்க. இலக்கியவாதி ஆனதுக்கு வாழ்த்துகள் :)