சிங்கை சிங்கம் பிரபா கேட்டுக்கொண்டதற்கிணங்க.
காலை மணி 11:00
மேலே விமானம் சத்தமாகப் பறந்தது. சர்வேஷ் தலையைத் தூக்கி விமானத்தைப் பார்த்தான். ஜெட் ஏர்வேஸ். முகத்தை மீண்டும் அழுத்தமாகத் துண்டால் துடைத்துவிட்டு பக்கத்தில் நின்றிருந்தவன் தோளில் போட்டான். கீழே இருந்த கிளவுஸை எடுத்து கையில் மாட்டிக் கொண்டு ஹெல்மெட்டை தலையில் போட்டுக் கொண்டான். வி.வி.எஸ் லக்ஷ்மணின் பேட்டை தன் பேட்டால் ஒரு முறை செல்லமாகத் தட்டி விட்டு பேட்டிங் கீரீஸை நோக்கி நடந்தான்.
டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானம். இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி. ஐந்தாவது நாள். இந்தியா 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு முந்தய நாள் மாலை தனது இரண்டாவது இன்னிங்க்ஸைத் துவக்கியது. நேற்றே கவுதம் கம்பீரை இழந்த இந்தியா இன்று காலை நைட் வாட்ச்மேன் இஷாந்தையும், சொற்ப ரன்னில் ட்ராவிட்டையும், சற்று முன் சேவாக்கையும் இழந்து 75 ரன்களுடன் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
காயம் காரணமாக சச்சின் ஆட வராததால் அவருக்கும் சேர்த்து சர்வேஷ் ஆட வேண்டிய கட்டாயம். வி.வி.எஸ் லக்ஷ்மன் இப்போது தான் கிரீஸுக்கு வந்ததால் அவரும் இன்னும் வழக்கமான ஆட்டத்தை ஆட ஆரம்பிக்கவில்லை. ஏனோ தெரியவில்லை சர்வேஷ் வழக்கத்தை விட சற்று தடுமாற்றமாகவே ஆடுகிறான்.
பேட்டிங் கிரீஸில் நின்று கை கிளவுஸை விலக்கி வாட்ச்சில் மணி பார்த்தான். 11:00. அவன் முகத்தில் ஒரு நிம்மதிக் கீற்று தெரிய அம்பயரைப் பார்த்து இடது காலை தொட்டுக் காட்டினான். அம்பயர் லெக் ஸ்டம்புக்கு கார்ட் கொடுத்ததும் பெயில்ஸை எடுத்து அந்த இடத்தில் வைத்து பேட்டால் அடித்து அடையாளம் செய்தான்.
மறு முனையிலிருந்து ஓடி வர ஆரம்பித்தார் ஜான்சன். ஓடி வந்து அவர் வீசிய பந்து இடது புறம் ஹாஃப் வாலியாக சந்தர்ப்பத்தை சிறிதும் தவற விடாமல் அந்தப் பந்தை கிளான்ஸ் செய்தான் சர்வேஷ். பந்து பவுண்டரியில் இருந்த விளம்பரப் பலகையில் பட்டு நின்றது. ஸ்டேடியம் ஆர்ப்பரித்தது.
ப்ரெஸ் பாக்ஸில் உட்கார்ந்திருந்த அருணும் கூட்டத்தோடு சேர்ந்து கைத்தட்டினான்.
காலை மணி 11:30
அது தலைநகரின் புறநகரில் உள்ள பெரிய லக்சுரி அப்பார்மெண்ட் என்பதை பெரிய காம்பவுண்ட் சுவரும் அதன் வாயிலில் இருந்த பெரிய இரும்புக் கதவுகளும் பறை சாற்றின. FEDEX என்று எழுதப்பட்ட அந்த வேனை நிறுத்தி இறங்கினான் அந்த பழுப்பு நிற சீருடை அணிந்தவன். கேட்டின் ஒரு பக்கம் இருந்த செக்யூரிட்டி டெஸ்கில் இருந்து வேன் வந்து நிற்பதைப் பார்த்துக் கொண்டிருந்த செக்யூரிட்டி தன் முன்னால் இருந்த பொத்தான்களில் பச்சை நிறமாயிருந்ததை அழுத்த பெரிய கதவுகளில் ஒன்று ஒரு ஆள் நுழையும் அளவுக்கு உள்பக்கமாகத் திறந்தது.
கைகள் நிறைய கடிதங்களையும் பார்சல்களையும் ஏந்திய அவன் உள்ளே நுழைந்து செக்யூரிட்டிக்கு செல்லமாக ஒரு சல்யூட் வைத்தான். சில கடிதங்களை செக்யூரிட்டியிடம் கொடுத்து விட்டு இரண்டு பார்சல்களைக் காட்டி - “HAND OVER ONLY TO ADDRESSEE" என்று எழுதியிருந்ததக் காட்டிவிட்டு உள்பக்கமாக நடந்தான்.
முதல் பார்சலை A-4ல் கொடுத்து விட்டு அடுத்த பார்சலைக் கொடுக்க பி-7 நோக்கி நடந்தான். பி-7 வாசலில் இருந்த காலிங் பெல்லை அடித்தான். மூன்று முறை அடித்தும் யாரும் திறக்காததால் ஒரு டோர் டேக்கை கதவில் ஒட்டி விட்டு அந்த இடத்தை விட்டு அகன்றான்.
மாலை 4:30 மணி
இந்தியா ஏழு விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் சர்வேஷின் நிதானமான அதே சமயம் சீரான ரன் குவிப்பினால் இன்னும் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்கை அடைந்திருந்தது. இன்னும் நான்கு ரன் எடுத்தால் சர்வேஷின் 13 வது டெஸ்ட் சதம் பூர்த்தியாகும்.
நாதன் ஹாரிட்ஸ் தனது 23வது ஓவரின் நான்காவது பந்தை சர்வேஷுக்கு வீசினார். டாப் ஸ்பின்னராக வந்த அந்தப் பந்தை ஹாரிட்ஸின் கையிலிருந்து விடுபடுமுன்னரே கணித்தது போல தயாராக நின்ற சர்வேஷ், ஒரு அடி இறங்கி ஆள் இல்லாத லாங் ஆன் திசையை நோக்கி தூக்கி அடித்தான். பந்து ஒன் பவுன்ஸ் ஃபோராக முடிய ஸ்டேடியம் எழுந்து நின்று பாராட்டியது. பேட்டை தலைக்கு மேல் தூக்கி பெவிலியனை நோக்கிக் காட்டி தன் சந்தோசத்தைப் பகிர்ந்து கொண்டான். மறுமுனையில் நின்ற தோனி கட்டிப்பிடித்து பாராட்டைத் தெரிவித்தார்.
அடுத்த இரண்டு பந்துகளில் இரண்டு ஃபோர்களை பறக்கவிட்ட சர்வேஷ் இந்தியாவுக்கு தொடர்ந்த 17வது டெஸ்ட் வெற்றியைத் தேடித்தந்தான். ஃபெரோஸ் ஷா கோட்லா வழக்கம்போல வெற்றிக்களிப்பை வெளிப்படுத்தியது.
ப்ரஸ் பாக்ஸில் இருந்த அருண் எழுந்து தன் பத்திரிக்கை நண்பனை நோக்கி நகர்ந்தான்.
“தேங்க்ஸ்டா.. இப்பிடி ஒரு மேட்சை ப்ரஸ் பாக்ஸ்ல உக்காந்து பாக்க வாய்ப்புக்குடுத்ததுக்கு”
“இதுல என்னடா இருக்கு. நீ எனக்கு அந்தக் கேஸை சால்வ் பண்ணிக் குடுத்தியே. அதுக்கு இதெல்லாம் ஜூஜூபி. சரி மேட்ச் முடிஞ்சிருச்சின்னு போயிராத. ஈவினிங் ப்ளேயர்ஸ் பார்ட்டி இருக்கும். அதிலயும் கலந்துட்டுப் போ”
கரும்பு தின்னக் கசக்குமா. அருணும் சரி என்று சொல்லிவிட்டு வெளியே வந்து ஸ்மோக்கிங் ஜோனில் நின்று ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான்.
வெளியே ப்ரஸண்டேஷன் நடந்து கொண்டிருந்தது. மேன் ஆஃப் த மேட்ச் கோஸ் டு சர்வேஷ் என்று அடித்தொண்டையிலிருந்து கத்திக் கொண்டிருந்தார் ரவி சாஸ்திரி.
இரவு 6:30 மணி
அந்த அப்பார்மெண்ட் காம்பவுண்டுக்குள் ஒரு போலிஸ் ஜீப்பும் ஒரு தீயணைப்பு வண்டியும் ஆம்புலன்ஸும் நின்று கொண்டிருந்தன. வாட்ச்மேன்களில் ஒருவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரித்துக் கொண்டிருந்தார். காற்றில் எல்.பி.ஜி வாயுவின் மணம் கனமாகப் பரவிக் கிடந்தது. மற்ற இரண்டு வாட்ச்மேன்கள் அந்தப் பக்கம் நின்று ‘மேடம் தூங்கிட்டு இருந்திருப்பாங்க போல. கேஸ் லீக்காகி மூச்சுத் திணறி இறந்து போயிட்டாங்க’ என்று பேசிக்கொண்டிருந்தார்கள்
ஆம்புலன்ஸில் அவளை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். முகம் எல்லாம் நீலம்பாரித்திருந்தது. அவள் (அது?) அணிந்திருந்த இரவு உடை அங்கங்கே கலைந்திருந்தது. இன்னொரு ஊழியர் ஒரு வெள்ளைத்துணி எடுத்து தலை முதல் கால் வரை மூடினார்.
இவ்வளவு களேபரம் நடந்தும் பக்கத்து வீடுகளிலிருந்து யாரும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. பணக்காரர்கள் என்றால் இப்படித்தான் போல. ஆம்புலன்ஸ் கிளம்பி திறந்திருந்த கேட் வழியாக வெளியேறி சாலையில் சேர்ந்து சடுதியில் காணாமல் போனது.
இரவு 8:00 மணி
அந்த ஹோட்டலின் டான்ஸ் ஹால் முழுக்க இந்தியக் கிரிக்கெட் வீரர்கள், அவர்களின் குடும்பத்தார் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் நிரம்பி இருந்தார்கள். பெரும்பாலானோர் கைகளில் கண்ணாடிக் கோப்பை. அதில் நிரம்பியிருந்தது நீல நிறத்திரவம்.
அருணின் கையிலும் அது போல ஒரு கோப்பை. ஒரு சிப் எடுத்தவன் அந்த பானத்தின் சுவையை ம்ம்ம் என்று சிலாகித்தான்.
“என்ன ட்ரிங்க்டா இது. இதுவரைக்கும் இப்பிடி குடிச்சதில்லை?” தன் நண்பனைப் பார்த்துக் கேட்டான்.
“இது மார்கரிட்டாவையும் மார்ட்டினியையும் மிக்ஸ் அடிச்சது. நம்ம சர்வேஷ் இல்லை. அவன் கண்டுபிடிச்ச டிரிங்க்”
“ஓ அவர் கிரிக்கெட் தான் நல்லா ஆடுவார்னு நினைச்சேன். காக்டெயில் கூட மிக்ஸ் பண்ணுவாரா? அப்ப கிரிக்கெட்ல ஃபார்ம் போச்சின்னா கைவசம் ஒரு தொழில் இருக்கு”
“ஃபன்னி ஃபன்னி” என்று அவன் தோளில் தட்டியவாறு சிரித்த உருவத்தைத் திரும்பிப் பார்த்தான் அருண். சர்வேஷ்.
பரஸ்பர அறிமுகங்கள், கைகுலுக்கல்கள்.நடந்தன.
இரவு உணவையும் அருந்திய பின் அங்கிருந்து தன் அறைக்குக்கிளம்பினான். பார்ட்டி தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது.
அறைக்கு வந்த அருண், டிவியைப் போட்டான். என்.டி.டி.வியில் பரபரப்புச் செய்தி ஒன்றைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். சைடில் ஒரு அழகு முகம். எங்கோ பார்த்திருக்கிறோமே என்று மூளையை சுரண்டினான் அருண்.
டிவியிலேயே சொல்லிவிட்டார்கள்.
“பிரபல மாடல் நீத்தா ஷர்மா தனது அப்பார்ட்மெண்டில் இன்று மர்மமான முறையில் மரணமடைந்தார். பூட்டப்பட்ட படுக்கை அறைக்குள் எல்.பி.ஜி வாயு கசிந்தததால் மூச்சுத்திணறி மரணமடைந்திருக்கிறார் என்று போலிஸ் தரப்பு சொல்கிறது. இவர் பிரபல கிரிக்கெட் வீரர் சர்வேஷுடன் கிசுகிசுக்கப்பட்டவர்”
செய்தியை சிரத்தையில்லாமல் பார்த்துவிட்டு டி.வியை அணைத்தான். களைப்பில் படுக்கையில் விழுந்ததும் தூங்கிப் போனான்.
**********************
மண்டைக்குள் யாரோ மணியடித்தது போல இருந்தது. எழுந்து பார்த்தான். காலிங் பெல். அருண் கலைந்திருந்த தலையை கைகளால் ஒழுங்கு படுத்திக் கொண்டே வாசலை நோக்கி நடந்தான். கையில் கட்டியிருந்த வாட்சில் மணி 5:30.
‘இந்நேரத்துக்கு யார்’ என்ற யோசனையுடன் கதவைத் திறந்தவன் வாசலில் நின்றிருந்தவளைப் பார்த்ததும் அதிர்ந்து போனான்.
வாசலில் நின்றிருந்தது நீத்தா ஷர்மா.
(தொடரும்)
14 comments:
hi hi! கிரிக்கட் பரபபரப்பு சிங்கை சிங்கத்துக்குன்னு விட்டுட்டு படிச்சா இன்னும் க்ரிஸ்ப். நைஐஐஐஐஐஸ் ஜாப்.
half valleya pulla panna mudiyathu, short pitch vanthathan pulla panna mudium.. maathungaa
மாத்தியாச்சி எல்.கே..
செல்லாது செல்லாது..தொடர் கதைன்னா இடைல விளம்பரம்லாம் வரனும்... ஸ்லோமோஷன் சீன்லாம் வைக்கனும்...
ஒரு வேளை அது நீத்தா சர்மாவோட ஆவியா இருக்குமோ. இது க்ரைம் கதை. ஆவிகதை இல்லை. அப்ப இரட்டைப்பிறவியா இருக்கலாம்.
இல்லைன்னா செத்ததுக்கப்புறம் நீத்தார் ஷர்மாவோ.
nandri dhinesh
இந்தியாவ சர்வேஷால் ஜெயிக்கவைத்து, நீத்தாவை சாகடித்து, வரவழைத்து.... தொடர்ச்சியை இன்றே போட்டுடுங்களேன்! அருமை தினேஷ்!.... பரபரப்பா... த்ரில்லா இருக்கு...
பிரபாகர்...
Nalla irukunga. Adutha episode eapoo?
சூப்பரப்பு.. இன்னொரு திகில் தொடரா.. கலப்பறீங்க :)
I used to read the crime novels during my summer holidays in India when I was studying colleges. After long time I feel the same thing.
Nalla elutharinga..Good.
பரபரன்னு இருக்கு.. நல்ல வேகமா கொண்டு போறீங்க.. நான் என்ன கெஸ் பண்ணுனன்னு சொல்ல மாட்டேனே.. அப்புறம் மாத்திடுவீங்க :)
நாஞ்சில் பிரதாப் said...
செல்லாது செல்லாது..தொடர் கதைன்னா இடைல விளம்பரம்லாம் வரனும்... ஸ்லோமோஷன் சீன்லாம் வைக்கனும்...
....... ஒழுங்கா ஒரு கதை சொல்ல விடமாட்டீங்களா? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...
எல்லா பார்ட்டும் எழுதி முடிச்சப்புறம் படிக்கலாம்னு வெயிட் பன்னிட்டு இருந்தேன் பாஸ்...முதல் பாகமே செம...
Post a Comment