“ஸ்கூட்டியா ஹோண்டாவா?”
என்னை எரிப்பது போல
ஒரு பார்வை பார்த்தாள். “பல்சர் 150சிசி”
"பல்சரா??"
என் கட்டுப்பாடில்லாமல் கீழ் தாடை கீழே இறங்கியது.
“ரொம்ப வாய்பபொளக்காத”
என் தாடையைப் பிடித்து மேலேற்றியவாறு சொன்னாள். “ஆக்சுவலா, யமஹா ஆர்.எக்ஸ் 100 தான்
வாங்கணும்னு ஆசை. ஆனா அது ப்ரொடக்ஷன் நிறுத்திட்டாங்க. அதனால தான் பல்சர்”
“அது சரி” என்றவாறு
சென்றுகொண்டிருந்த ஆட்டோ ஒன்றைக் கையைக் காட்டி நிறுத்தினேன்.
அந்த வார வெள்ளிக்கிழமை
எங்களுக்கு ட்ரெயினிங்கின் கடைசி நாள். அன்று காலை செஷனோடு வகுப்பு முடிவடைந்தது. ட்ரெயினிங்
முடிவைக் கொண்டாட ரெஸ்டாரண்ட் போகலாம் என்றார்கள் சிலர். முப்பது பேரும் படை திரண்டு
கோரமங்களா நந்தினிக்கு வந்தோம். பெருஞ்சத்தத்துடன் அரட்டைக் கச்சேரி சாப்பிட்ட இரண்டு
மணி நேரமும் நந்தினியையே கலகலக்கச் செய்தது. பேரர்களைப் படாத பாடு படுத்தினோம்.
வீட்டுக்குப் போனதும்
இரவு பயணத்துக்குத் தேவையான உடைகளை எடுத்து வைத்தேன். பக்கத்தில் இருந்த ஏ.டி.எம் போய்
கைச் செலவுக்குப் பணமும், அப்பாவுக்குக் கொடுக்க ஒரு பெருந்தொகையையும் எடுத்துக் கொண்டேன்.
சிறிது நேரம் கண்ணசந்தேன்.
“எந்திரி நாயே. பஸ்ஸுக்கு
லேட்டாயிரும்” தலையணையை வைத்து என் தலையில் மொத்திக் கொண்டிருந்தாள் மாலா. மணியைப்
பார்த்தேன் 7:30.
“பத்து மணிக்குத் தான
பஸ்ஸு. அதுக்குள்ள ஏன் நாயே எழுப்புற?” என்றேன்.
“கொட்டிக்க வேணாமா?
என்ன ரயில்லயா போறோம். போற வழியில எங்கயாச்சும் தின்னுக்கலாம்னு இருக்க?”
“அதுவும் சரிதான்”
எழுந்து முகம் கழுவிக் கொண்டு பையை எடுத்துக் கொண்டேன். “சாப்பிட எங்க வெளியவா?”
“ஆமா. சர்ஜாப்பூர்
பார்பக்யூ நேஷன்” இதுவரை சாப்பிட்டிராத இடம். எப்படி இருக்கிறது என்று பார்த்துவிடுவோம்.
ஆட்டோவில் போகும்போது
பஸ் டிக்கெட்டுக்கான பணத்தை அவளிடம் கொடுத்தேன்.
“நீயே வச்சிக்கோ. நெக்ஸ்ட்
டைம் ஊருக்குப் போகும்போது எனக்கு டிக்கெட் எடு” அதுவும் சரிதான்.
“ஆனா எனக்குத் திருநெல்வேலி
வரைக்கும் டிக்கெட் எடுத்திருக்க. உனக்கு திண்டுக்கல் வரைக்கும் தானே?” நியாயமான கேள்விதானே
இது? ஆனாலும் அவள் கைப்பையைத் தூக்கி என்னை அடித்தாள்.
“பெரிய இவரு. கணக்கு
பாக்குறியோ? அப்ப ஹோட்டல்ல எனக்கும் சேர்த்து நீ பணம் குடுத்துரு”
பார்பக்யூ நேஷனில்
எங்கள் டேபிளுக்கு நடுவில் ஒரு அடுப்பைக் கொண்டு வந்து வைத்தார்கள். எல்லாவிதமான நான்
வெஜ் ஐட்டங்களும் துண்டு துண்டாக குச்சியில் குத்தப்பட்டு நெருப்பில் வாட்டப்பட்டிருந்தன.
சும்மா சொல்லக் கூடாது வித்தியாசமான சுவையாக நன்றாகவே இருந்தது. போதும் போதும் என்று
கொடியை இறக்கும் வரைக்கும் கொண்டு வந்து அடுக்கிக் கொண்டே இருந்தார்கள். இருவரும் பேய்த்
தீனி தின்றுவிட்டு, இரண்டு ஸ்கூப் ஐஸ்க்ரீமும் மொக்கி விட்டு பில்லைப் பார்த்தால் திருநெல்வேலிக்கு
ரெண்டு முறை போய் வந்துவிடும் தொகை. இதழோரம் சிரிப்புடன் கண்டுகொள்ளாததைப் போல இருந்தாள்
மாலா.
பொம்மனஹள்ளி கேபிஎன்னில்
வெளியே படியில் உட்கார்ந்திருந்தோம். அங்கங்கே சில பல பெண்கள் பஸ்ஸுக்காகக் காத்திருந்தார்கள்.
இவர்களில் யார் எங்கள் பஸ்ஸில் வரப்போகிறார்களோ? அப்படியே வந்தாலும் இருட்டின் என்ன
பார்க்கப் போகிறேன் என்று கூடிய மட்டும் அந்த அரைகுறை வெளிச்சத்தில் அவர்களின் அழகை
அள்ளிப்பருகிக் கொண்டிருந்தேன். மாலா வளவளவென எதையோ பேசிக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு
பஸ்ஸாக வர வர பெண்களின் எண்ணிக்கைக் குறைந்துகொண்டே வந்தது. ஒருவழியாக 11 மணிக்கு எங்கள்
பஸ் வந்து சேர்ந்தது. பஸ்ஸில் என்னையும் மாலாவையும் தவிர வேறு யாருமே இல்லை.
ஜன்னல் சீட்டைப் பிடித்துக்
கொண்டாள் மாலா. என் பையையும் அவள் பையையும் தலைக்கு மேலே வைத்துவிட்டு உட்கார்ந்தேன்.
ஒரு பெருமூச்சை வெளியேற்றினேன்.
“என்ன பெருமூச்சு விடுற?”
“என் பேட் லக்கை நினைச்சேன்
மாலா”
“உனக்கு என்ன பேட்
லக்?”
“நான் எப்ப பஸ் ஏறினாலும்
எந்த ஃபிகருமே கூட வராது. எல்லாம் ஆம்பளைங்களா வருவாங்க”
நங்கென்று தலையில்
குட்டொன்றை இறக்கினாள். “ஓ சாருக்கு எங்களையெல்லாம் பார்த்தா ஃபிகரா தெரியலையோ?”
“ம்க்கும். நீ ஃப்ரண்டு.
உன்னைய சைட் அடிக்க முடியுமா? என் சோகம் எனக்கு. உனக்கெல்லாம் புரியாது” டிவியில் ஓடிய
தமிழ்ப் படத்தில் லயிக்க ஆரம்பித்தேன்.
************
எடுத்துப் போயிருந்த
உடைகளைக் கொடுத்ததும் அம்மா, ஆத்தாவின் முகத்தில் பெருஞ்சிரிப்பு. பெங்களூர்ல இருந்து
எங்க அண்ணன் வாங்கிட்டு வந்துச்சி என்று பக்கத்து வீடுகளுக்கு சொல்லிவர வேண்டும் என்று
அப்போதே சுடிதாரை அணிந்து கொண்டு கிளம்பிவிட்டாள் தங்கை. அப்பாதான் எந்த உணர்ச்சியையுமே
காட்டாமல் சட்டையையும் பணத்தையும் வாங்கிக் கொண்டார்.
“எப்பேர்ப்பட்ட வனத்துல
போய் மேஞ்சாலும், கடைசியா இனத்துல தாம்லே வந்து அடையணும். இதை மட்டும் நெஞ்சுல நிறுத்திக்கோ.
சாதிப் பேர் கெடுக்கிற மாதிரி எதுவும் செஞ்சிட்டு வந்துராத” என்று சொல்லிவிட்டு பீடியைப்
பற்ற வைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். வாங்கிய கடனைத் திருப்பி அடைக்கப் போவாராக இருக்கும்.
மாலா மனதில் வந்து போனாள்.
************
திங்கட்கிழமை ஆஃபிஸ்
திரும்பியதும் எல்லோரையும் மூன்று மாதம் OJTயில் போட்டார்கள். நாங்கள் நான்கு பேரும்
வேறு வேறு ப்ராஜக்ட். நானும் மாலாவும் ஒரே டெக்னாலஜி. ஒரு மாத ட்ரெயினிங் வெறும் ஏட்டுச்
சுரைக்காய் என்பது இரண்டாம் நாளே புரிபட்டு விட்டது. சீனியர் ப்ரோக்ராம்மர்கள் கொடுத்த
ஒன்றிரண்டு சின்னச் சின்ன வேலைகளை அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் செய்து கொடுத்தேன்.
ப்ராஜக்ட் லீடிடம் நல்ல பெயர் எடுத்தேன்.
சொல்ல மறந்துவிட்டேனே.
அந்த புதன் கிழமையே பஜாஜ் ஷோ ரூம் போய் பல்சர் ஒன்றை புக் செய்துவிட்டு வந்துவிட்டாள்
மாலா. இரண்டு வாரங்களில் டெலிவரியும் எடுத்தாகிவிட்டது. அதன் பிறகு அதுவே எனக்கும்
அவளுக்கும் வாகனமாகிப் போனது. காலையில் அவள் ஓட்டி வந்தாள் மாலையில் நான். வார இறுதிகளில்
எம்.ஜி ரோடு,பிரிகேட் ரோடு. பெரும்பாலும் அவள் தான் ஓட்டுவாள். எங்கள் அலுவலகத்தில்
மிகவும் பாப்புலராகிவிட்டாள். பல்சர் மாலா என்றே பெயர் வைத்து அழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.
மூன்று மாதங்கள் கழிந்தது.
இரண்டு முறை ஊருக்கும் போய் வந்திருந்தோம். எனக்கு முன்பே அவள் ஒரு ப்ராஜக்டில் சேர்ந்திருந்தாள்.
எனக்கும் ஓ.ஜே.டி முடிந்ததும், மாலாவின் ப்ராஜக்டிலேயே இடம் கிடைத்தது.
அந்த ப்ராஜெக்ட் மேனேஜர்,
கௌசல்யா, கொஞ்சம் முசுடு. தமிழ்ப் பெண்மணி தான். பருத்த சரீரம். வட்ட முகம். பழைய படங்களில்
சுமித்ரா போட்டு வருவதைப் போன்ற கருப்பு நிறக் கண்ணாடி ஒன்று எப்போதும் அவர் மூக்கின்
மேலே ஒட்டியே இருக்கும். எப்போதும் கோபத்தில் இருப்பதைப் போல இடுங்கிய புருவங்கள்.
மூக்கின் நுனியில் அந்த ஏசியிலும் இரண்டு மூன்று வியர்வை முத்துகளாவது இருக்கும். ஆண்களைக்
கண்டாலே பிடிக்காது. அதுவும் பெண்களோடு பேசிக் கொண்டிருக்கும் ஆண்களைக் கண்டால் சிடுசிடுவென்று
முகத்தை வைத்து, தேவையில்லாத ஸ்டேட்டஸ் எதையாவது கேட்டு, இரண்டு திட்டு திட்டி அந்த
ஆணின் மூடையே மாற்றிவிட்டுத்தான் போவார். ஏற்கனவே இரண்டு முறை அப்படித் திட்டு வாங்கியிருக்கிறேன்.
அன்றும் அப்படித்தான்.
மேலே காண்டீனில் சாப்பிட்டுவிட்டு வந்து உண்ட களைப்புத் தீர மாலாவின் க்யூபிக்கிள்
அருகே நின்று கதையடித்துக் கொண்டிருந்தேன். கௌசல்யா அந்தப் பக்கமாக வந்தார். லஞ்ச்
டைம் என்பதால் நான் கண்டுகொள்ளவில்லை. என்னையும் எனக்கு எதிரில் சிரித்துக் கொண்டிருந்த
மாலாவையும் பார்த்ததும், ஏற்கனவே இடுங்கிய புருவங்கள் இன்னும் இடுங்கின. மூக்கின் நுனியில்
புதியதாக ஒரு வேர்வை முத்து முளைத்தது.
“வாட் இஸ் த ஸ்டேட்டஸ்
ஆன் தட் வீக்லி பேட்ச் ப்ராஸஸ் ஸிஸ்டம் டெஸ்டிங்”
“கோயிங் ஆன். ஐ ஹோப்
ஐ வில் ஃபினிஷ் இட் பை எண்ட் ஆஃப் திஸ் வீக்”
“ஏன் அவ்ளோ நாள் ஆகுது?
தீபன் வஷி எல்லாம் எந்த டாஸ்க் குடுத்தாலும் மூணு நாள்ல முடிச்சிர்றான். நீயும் அவனை
மாதிரி வெட்டி அரட்டை அடிக்காம ஒழுங்கா வேலை பார்த்தா சீக்கிரம் முடிக்கலாம்”
“கௌசல்யா, தீபன் ஒர்க்
பண்றது ஆன்லைன் ப்ரொக்ராம்ஸ். சட்டு சட்டுனு டெஸ்ட் பண்ணலாம். எனக்கு பேட்ச் ஜாப்ஸ்.
ஒவ்வொண்ணும் 2 ஹவர்ஸ் த்ரீ ஹவர்ஸ் எடுக்குது. ஒண்ணொண்ணா தானே வெரிஃபை பண்ணனும்”
“ஐ டோண்ட் வாண்ட் யுர்
சில்லி ரீசன்ஸ். ட்ரை டு ஃபினிஷ் இட் ஆஃப் எர்லி” சொல்லிவிட்டு வெடுக் வெடுக்கென்று
நடந்து போனாள்.
“என்னாச்சி இவங்களுக்கு?
ஏன் இப்பிடி இருக்காங்க? வீக்லி பேட்ச் ஜாப்ஸும், ஆன்லைனும் ஒண்ணா?” நடந்ததை எல்லாம்
பார்த்துக் கொண்டிருந்த மாலாவை என் பக்கம் சேர்த்துக்கொள்ளும் பாவனையோடு கேட்டேன்.
“விடு தேவா. அவங்க
பிரச்சனை வேற”
“என்ன பிரச்சனை?”
“She is
sex-deprived"
1 comment:
கதை சுவாரசியமாக போகிறது.
Post a Comment