Friday, July 13, 2012

பரமபதம் - 7

இந்தத் தொடர் பல மாதங்களுக்கு முன்பு கூகுள் பஸ்ஸில் எழுதியது. ப்ளாகிலும் பதியத் துவங்கினேன். ஏனோ விட்டுப் போனது. அதனால் என்ன இப்போது பகிர்ந்தால் படிக்க மாட்டீர்களா என்ன? புதிதாகப் படிப்பவர்கள் முதல் ஆறு பாகங்களையும் படித்துவிட்டு வருவது நல்லது.

பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6




இரவு 11:10 மணி
பாருக்குள் பதட்டம் தணிந்து அவரவர் இருக்கைக்குப் போனதும் முத்து திரைக்குப் பின்னாலிருந்து சூட்கேஸை மெதுவாக உருட்டிக் கொண்டு பின் கதவு வழியாக வெளியே வந்தான். பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்த சிவப்பு ஆல்டோவை நெருங்கினான். ஒரு நொடி யோசித்தான். கதவைத் திறக்காமல் பார்க்கிங்கின் இருட்டான இன்னொரு மூலைக்கு சூட்கேஸோடு நகர்ந்தான். பையில் இருந்து செல்ஃபோனை எடுத்து கார்த்திக்கின் எண்ணைத் தேடினான்.
ஒரு மரத்தின் நிழலில் ஒளிந்திருந்த பாலா, முத்து பின்பக்கத்திலிருந்து கையில் சூட்கேஸோடு வருவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். காருக்கு அருகில் வந்துவிட்டு சூட்கேஸை வைக்காமல் நகர்வதைப் பார்த்ததும் சந்தேகம் வந்தது. பூனைப் பாதம் எடுத்து வைத்து முத்துவைப் பின் தொடர்ந்தான்.
முத்து மறுமுனை எடுக்கப்பட்டதும், “ஹலோ கார்த்திக் சார். நான் முத்து பேசுறேன். போலீஸோட வர்றேன்னு சொன்னீங்க? அவங்க எல்லாம் கிளம்பிட்டாங்க. நீங்க வரவே இல்லையே சார்?
இதைக் கேட்ட பாலா சட்டென்று கடுப்பானான். ‘இவன் டபுள் கேம் ஆடுறானாஎன்ற கோபத்தில் இடுப்பில் இருந்து கத்தியை எடுத்து,  பின்னாலிருந்தவாறே முத்துவின் வாயைப் பொத்தினான்.
திடீரென்று யாரோ வாயைப் பொத்திய அதிர்ச்சியில் முத்து செல்ஃபோனைக் கீழே போட்டான். திரும்பி யாரென்றுப் பார்க்கக் கூட நேரம் தராமல் ஒரு கத்தி அவன் கழுத்தை அறுத்தது.
ஆழமான வெட்டு. வெட்டிய வேகத்தில் ரத்தம் முத்துவின் சட்டையை நனைத்தது. முத்துவின் உயிரிழந்த உடலை அருகே மண்டியிருந்த புதரில் தள்ளிவிட்டு சூட்கேஸை எடுத்துக் கொண்டு, ரோட்டுக்கு வந்தான். அங்கே நின்றிருந்த ஒரு ஆட்டோவில் ஏறி, “பெசண்ட் நகர் போப்பாஎன்றான்.

இரவு 11:15 மணி
அந்த இன்னோவா மிதமான வேகத்தில் ஈசிஆரை அளந்து கொண்டிருந்தது. உள்ளே இருந்த பவுடர் ரவியும் அவன் சகாக்களும் அதீத மகிழ்ச்சியில் இருந்தனர்.
“பைசா செலவில்லாம பவுடர் கிடைச்சது இந்த வாட்டிதாம்லே. ஒரு மாசத்துக்கு நம்ம வீட்ல பார்ட்டிதான்
“ஆமா அண்ணாச்சி
“எவளோ மானான்னு ஒருத்தி புதுசா வந்திருக்காளாம்லே? அவளை ஒரு வாரத்துக்கு புக் பண்ணுலே
ரவியின் ஒவ்வொரு வார்த்தையிலும் உற்சாகம் தெறித்தது. அப்போது ரவியின் செல்ஃபோன் ஒலிக்க, “ஹலோ
“அண்ணாச்சி நான் பாலா
“சொல்லுலே
“அண்ணாச்சி அந்த சர்வர் பய போலீஸுக்குத் தகவல் குடுத்துட்டு இருந்தான்
“அய்யோ
“ஆனா அவன் கழுத்தை அறுத்துட்டு, பணப்பெட்டியோட கிளம்பிட்டேன்
“சபாஷ்லே! நீதாம்லே என் சிங்க்குட்டி. நேரா வீட்டுக்கு வந்திருலே
“ஆமா அண்ணாச்சி. ஆட்டோவுல வந்துட்டே இருக்கேன்
“சூப்பர்லேஎன்று ஃபோனை அணைத்துவிட்டு பின்னால் சகாக்களிடம் இந்த விவரத்தைப் பகிர்ந்து கொண்டான். அப்போது நேரெதிரே ஒரு அம்பாஸிடர் இன்னோவாவை மறிப்பது போல வந்தது. டிரைவர் சடன் பிரேக் போட்டான். அம்பாசிடரின் கதவைத் திறந்து நான்கு பேர் இறங்கினர். அனைவரின் கையிலும் துப்பாக்கி.
“ரிவர்ஸ் போலே. நார்க்காடிக்ஸ் கண்ட்ரோல் போர்டுக்காரய்ங்க. இவனுங்கக்கிட்ட மாட்டக்கூடாது. ஓடுலே
“டிரைவர் காரை ரிவர்ஸ் எடுக்க, இன்னொரு வாகனத்தில் முட்டியது. அந்த ஜீப் முகப்பில் NCB என்று எழுதியிருந்த்து.
ரவி இடுப்பிலிருந்த துப்பாக்கியை எடுக்க, ட்ரிக்கரை சுண்டுவதற்குள் முன்னாலிருந்த நால்வரின் துப்பாக்கிகளிலிருந்து தோட்டாக்கள் சரமாரியாக பறந்தது. நால்வரின் உடலும் குண்டுகளால் துளைக்கப்பட்டு அடங்கியதும், அதிகாரிகளில் ஒருவர் இன்னோவாவின் பின் கதவைத் திறந்து, உள்ளே இருந்த பெட்டியைக் காட்டி, “Its there” என்று கூவினார். இன்னொரு அதிகாரி பெட்டியைத் திறந்து, உள்ளே இருந்த பொட்டலங்களில் ஒன்றை உடைத்து பவுடரை சுண்டுவிரலால் தொட்டு நக்கிப் பார்த்து, “கோக்கெயின்என்றார். அத்தனை அதிகாரிகளும் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டனர்.
“சுகுமார், கார்த்திக் சஸ்பெண்ட் ஆகியிருந்தாலும் நமக்கு கரெக்ட் இன்ஃபர்மேஷன் தான் குடுத்துருக்கான்
“அவன் என்ன லஞ்சம் வாங்கியா சஸ்பெண்ட் ஆனான்? என்கவுண்டரப்போ சிவிலியன் ஒருத்தனை சுட்டுட்டான்னு தானே சஸ்பெண்ட் பண்ணாங்க?சுகுமார்.
“யா யா. சரி அடுத்து என்ன?என்றார் இன்னொரு அதிகாரி.
சுகுமார் ரவியின் கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து இரண்டு அதிகாரிகளை தோள் பட்டையில் சுட்டார். ரவியின் கையிலேயே துப்பாக்கியை இருத்திவிட்டு ஆம்புலன்ஸை அழைத்தார்.
இரவு 11:45 மணி
ஹம்மர் திருவான்மியூரை நெருங்கிக் கொண்டிருந்தது. திருவான்மியூர் செக்போஸ்ட் நெருங்கவே குறுக்கே போடப்பட்டிருந்த தடையைப் பார்த்து காரை ஸ்லோ செய்தார் கணேசன். “சுரேஷ்! போலீஸ்என்றார்.
“நிறுத்துங்கண்ணே. பெருசைக் காட்டி தப்பிச்சிரலாம். தேவையில்லாம பிரச்சனையில மாட்டிக்க வேண்டாம்சுரேஷ் சொல்லவும் காரை நிறுத்தினார்.
எஸ்.ஐ ஒருவர் வந்து, “வண்டி எங்கருந்து வருது?என்றார்.
கணேசனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த தடியன், “சார் ஈசிஆர்ல ஹைடெக் பார்ல இருந்து வர்றோம். எங்க கூட வந்தவருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருச்சி. அவரை ஹாஸ்பிட்டல்ல சேக்கணும்என்றான்.
“பார்ல இருந்தா? எறங்கு. ஊதிக்காட்டுஎன்றார் கணேசனைப் பார்த்து. கணேசன் கீழே இறங்காமல், “சார் கூட வந்தவருக்கு உயிருக்கு ஆபத்துன்னு சொல்றோம். நீங்க என்ன? நாங்க யாரு தெரியும்ல? பெருசோட ஆளுங்க
“பெருசா? என்றவாறு பின்னால் பார்த்தார். கான்ஸ்டபிள் ஒருவர் கதவைத் திறந்து பார்க்க, பெருசு தடியனின் மடியில் தலை சாய்த்துக் கிடந்தான். கான்ஸ்டபிள் மூக்குக்கடியில் கை வைத்துப் பார்த்துவிட்டு, “உசுரு போயிருச்சி போலயே சார்என்றார்.
நால்வரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாயினர். தடியன், வேகமாக பெருசுவின் நெஞ்சில் காதை வைத்தான், இதயம் துடிக்கவில்லை. “சார் வேகமா ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனா காப்பாத்திரலாம் சார். ப்ளீஸ் சார்என்றான்.
“பெருசே போயிட்டான். அப்புறம் எந்த மசுருக்குப் பயப்படணும்? இந்தப் பக்கமா வெடிமருந்து கடத்திட்டு வர்றதா இன்ஃபர்மேஷன் வந்திருக்கு. நாங்க காரை செக் பண்ணனும்என்றார் எஸ்.ஐ பிடிவாதமாய்.
தடியனும், கணேசனும் போலீஸோடு வாக்குவாதம் செய்யத் துவங்கினர். இதுவரை பின்னால் மறைந்து ஒளிந்திருந்த சுரேஷ் தலையைத் தூக்கி பின் கதவுக்கு அருகே நின்றிருந்த கான்ஸ்டபிளைச் சுட்டான். கான்ஸ்டபிள் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே விழவே, எஸ்.ஐ வேகமாக இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து முன் சீட்டில் இருந்த தடியனைச் சுட்டார். பின் சீட்டிலிருந்த தடியனும் துப்பாக்கியை எடுத்து எஸ்.ஐயைச் சுட அவர் இடது கையில் குண்டு பாய்ந்தது. துப்பாக்கியைக் கீழே விடாமல் பின் சீட்டில் இருந்த தடியனை சரியாக நெற்றிப் பொட்டில் சுட்டார் எஸ்.ஐ. துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் செக்போஸ்டில் இருந்த கான்ஸ்டபிள் ஓடி வந்தார். கையில் இருந்த ஸ்டென் கன்னால் காரை நோக்கி சரமாரியாகச் சுட ஆரம்பித்தார். டிரைவர் சீட்டில் உட்கார்ந்திருந்த கணேசன் உடம்பெங்கும் குண்டுகள் சல்லடை போட சீட்டிலேயே அவர் உடல் துடித்து அடங்கியது.
ஸ்டென் கன் வைத்திருந்த கான்ஸ்டபிள் விடாமல் ஹம்மரை குண்டுகளால் துளைத்துக் கொண்டிருந்தார். சுரேஷின் தலைக்கு மேல் பல குண்டுகள் சீறிப்பாய்ந்து கொண்டிருக்க, இடத்தை விட்டு அசையாமல் படுத்துக் கொண்டான்.

இரவு 11:50 மணி
ஆட்டோவில் வந்து கொண்டிருந்த பாலா, தூரத்தில் இன்னோவா நிற்பதையும் அதன் அருகே இரண்டு வாகனங்களும் பார்த்ததும், பதட்டமானான். ‘அண்ணாச்சி இன்னோவால்ல அதுஎன்ற யோசனையுடன், “டிரைவர் வண்டிய அந்த இன்னோவா பக்கத்துல நிறுத்து என்றான். ஆட்டோ நின்றதும், கையில் துப்பாக்கிகளோடு நின்றிருந்த என்.சி.பி அதிகாரிகளையும், இறந்து கிடந்த ரவியின் ஆட்களின் உடல்களையும் பார்த்த பாலா இறங்கி ஓட எத்தனித்தான். தாவிப் பிடித்த ஒரு அதிகாரி அவனைப் பிடித்து, “ஏண்டா ஓடுறஎன்று கைகளை முதுகுக்குப் பின்னால் வளைத்துப் பிடித்தார். “நீ ரவியோட ஆளு பாலா தான?என்றவாறு சுகுமார் ஆட்டோவுக்குள் இருந்த பெட்டியைத் திறந்து பார்த்தார். உள்ளே கஞ்சாப் பொட்டலங்கள் பெட்டியை நிறைத்திருந்தன.
இரவு 11:50 மணி
ரோட்டில் பறந்து வந்த ஹோண்டா சிட்டியில் இருந்து இறங்கிய கார்த்திக்கின் கையில் முளைத்திருந்த துப்பாக்கி இரண்டு முறை வெடித்தது. முதல் குண்டுக்கு எஸ்.ஐயும், இரண்டாவது குண்டுக்கு ஸ்டென் கன் வைத்திருந்த கான்ஸ்டபிளும் மடங்கி விழுந்தனர். ஸ்டென் கன் சுடுவது நின்றதும், தலையை உயர்த்திய சுரேஷ் எஸ்.ஐயும் கான்ஸ்டபிளும் செத்துக் கிடந்ததைப் பார்த்தான். துப்பாக்கியை நீட்டிக்கொண்டே ஹம்மரின் கதவைத் திறந்து இறங்கியவன், கையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்த கார்த்திக்கைப் பார்த்தான். இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேராகப் பார்த்ததும் இரண்டு நொடி தாமதித்துவிட்டு கடகடவென சிரிக்கத் துவங்கினர். துப்பாக்கிகளை இடுப்பில் சொருகிக் கொண்டு இருவரும் கட்டியணைத்துக் கொண்டனர்.
“பெட்டி?என்றான் சுரேஷ் கேள்வியாய்.
“இங்கஎன்று ஹோண்டா சிட்டியின் டிக்கியைச் சுட்டினான். இருவரும் சிரித்துக் கொண்டே காரில் ஏறினர்.

(தொடரும்)

இங்கேயே முற்றும் போட்டுவிடலாம். ஆனால் நிரப்பப்படாமலிருக்கும் புதிரின் சில துண்டுகளை நிரப்பும் பொருட்டு அடுத்த பாகம் இங்கே

1 comment:

நாடோடி இலக்கியன் said...

பர பரன்னு போகுது. ஏகப்பட்ட கேரக்டர்களால் இந்த பார்ட்டில் கொஞ்சம் குழப்பம்.

கதையும் இங்கேயே முடிஞ்சிட்ட மாதிரியும் இருக்கு. ஆனா தொடரும்னு போட்டுருக்கீங்க, படிப்போம், சுரேஷ் காலியாகரவரைக்கும்.
:-)