Saturday, July 14, 2012

பரமபதம் - 8



ஃப்ளாஷ் பேக் #1
மழை. உலகத்தின் அதிசயங்களில் ஒன்று. சில நேரம் மெல்லிய ஓடை போல சலசலக்கும். சில நேரம் கொட்டுகின்ற பேரருவியாய் ஓங்காரமிடும். இன்றைய மழை இரண்டாம் வகை. இரண்டு நொடி நனைந்தால் தலை முதல் பாதம் வரை ஒரு மிமீ விடாமல் நனைத்துவிடும் பேய் மழை. பெருசிடம் கடைசி வசூலைக் கொடுத்துவிட்டு சுல்தான் டூவீலரில் வீட்டை நோக்கிக் கிளம்பினான். பேய் மழை பெய்து கொண்டிருந்ததால் ரோட்டில் யாருமே இல்லை. தூரத்தில் ஒரு பிச்சைக்காரன் ஏற்கனவே நைந்து போயிருந்த சாக்கை தலையில் ஒப்புக்குக் கவிழ்த்துக்கொண்டு ப்ளாட்ஃபாரத்தில் ஒதுங்கி உட்கார்ந்திருந்தான். சுல்தானின் டூவீலர் பிச்சைக்காரன் உட்கார்ந்திருந்த இடத்தை நெருங்கியபோது வீலில் ஏதோ சிக்க, டூவீலரோடு சேர்ந்து உருண்டான். சிரமப்பட்டு எழுந்து டூவீலரை தூக்கி ஸ்டார்ட் செய்ய முயற்சித்தான். பின்னால் யாரோ வந்து நிற்பதை உணர்ந்து திரும்பினான்.

ஃப்ளாஷ் பேக் #2
பெருசு உடைந்து போயிருந்தான். சுல்தான் போனது, தன் வலது கையையே இழந்தது போல நொந்து போயிருந்தான். சுல்தானின் சவ அடக்கத்திலிருந்து, அவன் குடும்பத்தாருக்கு தேவையான உதவி செய்வது வரை சுரேஷ்தான் முன்னால் இருந்து பார்த்துக்கொண்டான்.

“சுரேஷ், சுல்தான் தான் எனக்கு எல்லாம். நீ அவன் இடத்துல இருந்து வசூல் பணமெல்லாம் சரியா கலெக்ட் பண்ணிட்டு வந்துருவியா?”

“அண்ணே, என்னண்ணே இப்பிடிக் கேக்குறீங்க? நாளையில இருந்து பாருங்க, வசூல் பணம் பைசா குறையாம கொண்டுவந்து சேக்குறேனா இல்லையான்னு”

“சரி. எங்கல்லாம் வியாபாரம் நடக்குதுன்னு தெரியும்ல?”

“நல்லாத் தெரியும்ணே. சுல்தான் பாய் கூட போயிருக்கேனே?”

எப்படியே சுல்தானுக்கு சுரேஷ் நல்ல மாற்றாக இருந்தால் சந்தோசமே என்ற நினைவுடன் முன்னால் இருந்த சூப்பை ஒரே மூச்சில் குடித்தான் பெருசு.

ஃப்ளாஷ் பேக் #3
மாநகர வாழ்க்கை. பல நேரங்களில் மாநரக வாழ்க்கை. என்னதான் உள்கட்டமைப்பும், போக்குவரத்து வசதிகளும் சிறு நகரங்களை விட அதிகப்படியாக இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் விரும்பிய இடத்துக்கு விரும்பிய நேரத்துக்குப் போக முடியாமல் போய்விடுவது சகஜம். காரணம் போக்குவரத்து நெரிசல். அந்தச் சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் இருந்து உட்பிரிந்த சாலை. அவன், சாலையின் சந்திப்பில் தள்ளுவண்டியில் கடலை விற்றுக் கொண்டிருந்தான். வண்டியின் நடுவில் புதைக்கப்பட்டிருந்த அடுப்பின் மீதிருந்த பெரிய வடைச்சட்டியில் வெறும் மணலைப் போட்டு நீளமான கண்கரண்டியால் கிளறிக் கொண்டிருந்தான். அந்த சாலையின் இன்னொரு மூலையின் நின்றிருந்த ஹோண்டா சிட்டி காரின் முன்னிருக்கையில் ஒரே சிகரெட்டை மாறி மாறி இழுத்துக் கொண்டிருந்த சுரேஷும், கார்த்திக்கும் கடலைக்காரனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“கார்த்தி, அவன் பேரு சூரி. அவன் பெருசோட ஆளுன்னு ஒரு பயலுக்கும் தெரியாது. கடலை விக்கிற மாதிரி கஞ்சா விக்கிறது அவனுக்கு சைடு தொழில்தான். சுல்தான் பாய் போனப்பறம், பெருசுக்கு ரைட் ஹேண்ட் இவன் தான். இவனையும் போட்டாத்தான் நான் ரைட் ஹேண்ட் ஆக முடியும்”

“சுல்தானைப் போட்டா மாதிரி இவனைப் போட முடியாது. அப்புறம் பெருசுக்கு டவுட் வந்துரும். அதுக்கொரு வழி இருக்கு”

“என்ன?”

“பொறுத்திருந்து பார்”

ஃப்ளாஷ் பேக் #4
டி.ஐ.ஜி அலுவலகம். அகலமாக முகத்தை மறைக்கும் மீசையுடன் சினிமாவில் பார்க்கும் டிஐஜிகளைப் போல யூனிஃபார்ம் அணிந்திருக்காமல், சாதாரண பேண்ட் சட்டையில் நின்றிருந்தார். வெளிர் நீல நிற சட்டை, அடர் நீல பேண்டில், பல்லவன் டிரைவர் என்று சொன்னால் நம்பிவிடலாம் போல இருந்தார். ஆனால் வாய் திறந்து பேசும்போது, சிங்கம் கர்ஜிப்பதைப் போன்ற ஒரு குரல்.

“மிஸ்டர் கார்த்திக்! என்கவுண்டர் பண்றதே தப்புன்னு மனித உரிமைக்காரனுக கொடி பிடிச்சிட்டுத் திரியிறானுங்க. இதுல நீங்க ஒரு சிவிலியனைக் கொன்னுட்டு ஆக்சிடெண்டலா நடந்துருச்சின்னு சொல்றீங்க?”

“சாரி சார். அவன் அந்தப் பக்கம் ஓடுவான்னு நான் எதிர்பார்க்கவே இல்லை சார். ரெஸ்பான்ஸிபிளிட்டி நானே ஏத்துக்கிறேன் சார்”

“ஓக்கே மிஸ்டர் கார்த்திக். என்கொயரி ஒண்ணு ஃபார்மாலிட்டிக்காக ஏற்பாடு பண்றேன். உங்களை மாதிரி ஒரு அதிகாரி டிபார்ட்மெண்டுக்குத் தேவை அதுனால உங்களை 6 மன்த்ஸ் சஸ்பெண்ட் பண்றேன். ஒரு வெக்கேஷன் மாதிரி கன்சிடர் பண்ணிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு ஃபுல் ஃபோர்ஸோட திரும்பி வாங்க. ஓக்கே?”

“ஓக்கே சார்” டி.ஐ.ஜியின் முன்னால் விறைப்பாக சல்யூட் அடித்தான்.

ஃப்ளாஷ் பேக் #5
“உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. வச்சிரு” என்று சொல்லிவிட்டு ஃபோனை அணைத்த கார்த்திக், மீண்டும் ஒரு நம்பரை அழுத்தினான்.

“ஹலோ சுகுமார்?”

“சொல்லுங்க கார்த்திக். ஃபுல் டீட்டெயில்ஸ் இன்னைக்கு சொல்றேன்னு சொன்னீங்களே?”
“ஆமாம் சுகுமார். பவுடர் ரவி நாளைக்கு பல்க்கா சரக்கு, கிட்டத்தட்ட நூறு கோடி மதிப்புள்ளது, கொண்டு வரப் போறான். கடல் வழியா வந்து எங்கயோ ஒரு ப்ரைவேட் மரைன்ல இவன் கைக்கு வரப் போவுது. அதை எடுத்துட்டு  ஈசிஆர் வழியாத்தான் வரப் போறான். நீங்க நான் சொல்ற இடத்துல சொல்ற டைம்ல நின்னீங்கன்னா வசமா பிடிக்கலாம்.”

“நம்பகமான இன்ஃபர்மேஷனா கார்த்திக்”

“என்னைய நம்புங்க சார். எங்க என்ன டைமுக்குங்கிறதை நாளைக்கு காலையில சொல்றேன். நீங்க ரெடியா இருங்க”

“தேங்க்யூ கார்த்திக். இந்த இன்ஃபர்மேஷன் கரெக்டா இருந்து சரக்கைப் பிடிச்சா மதிப்புல 20% உங்களுக்குக் கிடைக்க ஏற்பாடு பண்றேன்.”

“தேங்க்யூ சார். நாளைக்கு ஃபோன் பண்றேன்” அணைத்து விட்டு, விசிலில் விளையாடு மங்காத்தா மெட்டை ஒலித்துக்கொண்டே நடந்தான்.

ஃப்ளாஷ் பேக் #6
சூட்கேஸைத் திறந்து பார்த்தான். அத்தனையும் நூறு டாலர் நோட்டுகள். பல நோட்டுகள் அழுக்கடைந்து இருந்தன. 10X10X10ஆக 1000 கட்டுகள் அடுக்கப்பட்டிருந்தன. மனதுக்குள் கணக்குப் போட்டான். ஐம்பது கோடி ரூபாய்க்கு சமமான டாலர் மதிப்பு. ஒரு முறை ஆழ முகர்ந்தான். கரன்சியின் மணமும் அதன் மீது படிந்த அழுக்கின் மணமும் அவன் நாசியைத் துளைத்தது.

பெட்டியை மூடினான். அவன் உட்கார்ந்திருந்த டாய்லெட்டையும் பக்கத்து டாய்லெட்டையும் பிரித்திருந்த ப்ளைவுட் சுவற்றை மூன்று முறை தட்டினான். அந்தப் பக்கமிருந்து இரண்டு முறை தட்டிய சத்தம் கேட்டது. எழுந்து கதவைத் திறந்தான். அந்தப் பக்கமும் கதவு திறந்தது. வேறு யாரும் பாத்ரூமுக்குள் இல்லாததை உறுதி செய்து கொண்டு பக்கத்து டாய்லெட்டில் இருந்து வெளியே வந்த கார்த்திக்கிடம் இருந்த சூட்கேஸை கையில் வாங்கிக் கொண்டான். இருவரும் கை முஷ்டியை மடக்கிக் குத்திக் கொண்டனர். மெதுவாக சூட்கேஸைத் தரையில் இழுத்துக் கொண்டு டேபிளை நோக்கி நடந்தான்.

(முற்றும்)

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

பரமபதம் பதிவுகள் அருமை...
உங்கள் தளத்திற்கு முதல் வருகை !
பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்... (த.ம. 2)