Thursday, August 30, 2012

சில்வியா



Detectives don't see different things. They see things differently


A5 கேட் வழியாக வெளியே வந்த அருண் தூரத்தில் சௌமியாவின் தலை தெரிந்ததும் கையசைத்தான். சௌமியாவின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் விளக்கு போட்டது போல ஒரு மகிழ்ச்சி. வெளியே வந்ததும் அருணின் கையில் தொங்கிய கோட்டைப் பார்த்து,
“அடப்பாவி. நல்ல ஜூலை மாசத்துல வந்து இறங்கிட்டு கைல கோட்டு வேறயா? கொளுத்துற வெயில்ல மூளையே ஆவியாகப் போவுது பாரு?”

“நாட்டி” என்று அவன் தலையில் கொட்டிய அருண், “அமெரிக்கா ரொம்ப குளுரும்னு பொய் சொல்லிட்டாய்ங்க போலருக்கே” என்று சிரித்தபடி அவளுடன் நடந்தான்.

சௌமியா, அருணின் அத்தை பெண். அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவள். 30 வயது. ஒரு லோக்கல் பள்ளியில் டீச்சராக இருக்கிறாள். இன்னும் திருமணம் ஆகவில்லை. சிறுவயதில் இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் அருணுடனே சுற்றிக் கொண்டிருப்பாள். 8 வயது சிறியவள் ஆனாலும் பெயர் சொல்லி அழைக்க அமெரிக்கா கற்றுக் கொடுத்திருக்கிறது. தமிழ் அரைகுறை. அமெரிக்க ஆங்கிலம் கரை புரண்டு ஓடும். இவளுக்கு ஒரு அண்ணன் இருக்கிறான். சௌந்தர். அருணை விட இரண்டு வயது இளையவன். ராச்சஸ்டர் போலீஸ் டிப்பார்மெண்டில் டிடெக்டிவாக இருக்கிறான். அத்தையும் மாமாவும் அமெரிக்காவுக்கு வரச் சொல்லி பல முறை அழைத்தும் இப்போதுதான் அருணுக்கு நேரம் வாய்த்திருக்கிறது.

லக்கேஜை எடுத்துக்கொண்டு காரில் ஏறி பத்தாவது நிமிடத்தில் வீட்டு காராஜில் நிறுத்தினாள். கதவைத் திறந்து இறங்கியதும் அத்தை அணைத்துக் கொண்டாள்.

“ஏண்டா அருண். அங்க தனியா இருந்துட்டு எதுக்குடா கஷ்டப்படற. நாங்கள்லாம் இங்க இருக்கோமே இங்க வந்துடலாமே?”

“எங்க அத்தை. ஆறு மாசத்துக்கு மேல இருக்க விடமாட்டேன்னு பாஸ்போர்ட்லயே எக்ஸ்பயரி டேட் குத்தி தானே அனுப்புறாங்க. அப்புறம் எப்பிடி இங்கயே வந்து தங்கறது?”

“வேணும்னா என்னையக் கல்யாணம் பண்ணிக்கோ. க்ரீன் கார்ட் உடனே கிடைச்சிடும்” கண்ணடித்தாள் சௌமியா.

“அய்யோ, அதுக்கு நான் இந்தியாவுலயே இருந்துருவேன்” சொன்ன அருணினின் புஜத்தில் செல்லமாக குத்திவிட்டு, “நான் போய் ட்ரெஸ் மாத்திட்டு வந்துடுறேன்” என்று எழுந்தாள் சௌமியா.

“ஹேய், இன்னுமா பேரண்ட்ஸ் வீட்டுலயே இருக்க? ஏன் அத்தை, இவளை பதினெட்டு வயசானதும் வெளிய தள்ளி விட்டுடலையா?”

“நான் அப்பார்ட்மெண்ட்ல தனியா தான் தங்கியிருக்கேன். இப்ப ஏதோ நீ வந்திருக்க, உனக்குக் கம்பெனி குடுக்கலாம்னு தான் டெம்பரரியா வீட்டுக்கு ஷிஃப்ட் ஆகியிருக்கேன்.” படி ஏறிக்கொண்டே பதில் சொன்னாள்.

“சரிடா நீயும் ரெஃப்ரஷ் பண்ணிக்கோ. மாமா ஆஃபிஸ்ல இருந்து வர்ற நேரமாச்சு”

மாமா வந்து நல விசாரிப்பு சம்பிரதாயங்களோடு இரவு உணவும் முடிந்து பயணக் களைப்பில் சீக்கிரமே தூங்கிப் போனான்.

=======================================================================


காலையில் கொஞ்சம் லேட்டாக எழுந்து, குளித்து விட்டுக் கீழே வந்து பார்த்த போது ஹாலில் சௌந்தர் உட்கார்ந்திருந்தான்.

“வா மாமா. நல்லா தூங்கினியா?” எழுந்து வந்து கை கொடுத்தான்.

“ம்ம்.. போலீஸ் வேலை எல்லாம் எப்பிடி போகுது?”

“செம இண்டரஸ்டிங் மாமா. உனக்கெல்லாம் வேலைய விட எப்பிடி மனசு வந்திச்சோ?”

“அந்தக் கதை தான் உனக்குத் தெரியுமே. உன் வீடு எங்க இருக்கு?”

“இங்கருந்து 15 மைல். டின்னர் எங்க வீட்லதான் ஓக்கே?”

“சரிடா”

பேசிக்கொண்டிருக்கும்போதே சௌந்தரின் செல்ஃபோன் ஒலித்தது. “ஒரு நிமிஷம்” என்று எழுந்து சென்று பேசிவிட்டு வந்தான்.

“மாமா ஈவினிங் வந்து உன்னை கூட்டிட்டிப் போறேன். இப்ப எனக்கு வேலை வந்திடுச்சி.”

“என்ன வேலை?”

“ஒரு சூசைட். க்ரைம் சீனுக்கு வரச் சொல்றாங்க போய் பார்த்துட்டு வந்திர்றேன்”

“ம்ம்.. நானும் வரலாமா? உங்க ஊர்ல கிரைம் சீன் இன்வெஸ்டிகேஷன் எப்பிடி இருக்குதுன்னு பார்க்கலாம்னு ஆசை”

ஒரு நொடி யோசித்தவன், “சரி வா” என்றான்.

சௌந்தரின் அன்மார்க்ட் போலிஸ் காரில் ஏறி கிரைம் சீனுக்கு விரைந்தார்கள். அது ஒரு அப்பார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸ். பார்க்கிங் லாட்டில் ஒரு ஆம்புலன்ஸ், ஒரு பயர் ட்ரக், ஒரு சி.எஸ்.ஐ வேன், மூன்று போலிஸ் கார்கள் நின்று கொண்டிருந்தன. சௌந்தர் இறங்கியதும் ஷெரீஃப் வந்து கை கொடுத்தார்.

“சௌ. த கேஸ் இஸ் சிம்பிள். சூசைட். நீ வந்து பார்த்து கன்ஃபர்ம் மட்டும் செஞ்சிடு” காரின் இன்னொரு பக்கம் இருந்து இறங்கிய என்னைப் பார்த்ததும் கேள்வியாகப் புருவத்தை உயர்த்தினார்.

“ஷ்யூர் ஷெரிஃப்.” அவர் பார்வையில் இருந்த கேள்வியை உணர்ந்த சௌந்தர், “இது அருண். என்னோட கசின். இந்தியாவுல இருந்து வந்திருக்கார். அங்க இவர் ஒரு எக்ஸ் டிடெக்டிவ்”

“ஓ அப்பிடியா? வெல்கம் டு ராச்சஸ்டர் அருண்” கையைப் பிடித்து குலுக்கினான்.

“அருணும் கிரைம் சீனுக்குள்ள வர்றதுல உங்களுக்கு ஆட்சேபனை எதுவும் இல்லைல்ல?”

“ஓ நோ ப்ராப்ளம்”

மூவரும் உள்ளே நுழைந்தனர். ஒற்றை பெட்ரூம் அப்பார்ட்மெண்ட். உள்ளே நுழைந்ததும் வலது பக்கம் கிச்சன். கிச்சனுக்கு வலது பக்கம் ஒரு டைனிங் டேபிள். டேபிளின் இரண்டு பக்கமும் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. டேபிளுக்கு மேலே ஒரு கட்டிங் போர்ட், அதன் மீது பாதி வெட்டப்பட்ட கேரட்டும் ஒரு கத்தியும் இருந்தது. மேலும் சில காய்கறிகள், வெட்டப்பட காத்திருந்தன. டைனிங் டேபிளுக்கு நேராக அந்தப் பக்கம் ஒரு டேபிள் போடப்பட்டு அதற்கு மேல் ஒரு கம்ப்யூட்டர் ஃப்ளாட் ஸ்க்ரீன் மானிட்டரோடு இருந்தது. ஒரு ஃபோட்டோ ஃப்ரேம். அந்த டேபிளுக்குப் பின்னால் ஒரு எக்ஸிக்யூட்டிவ் சேரில் அவள், அது என்று சொல்லவேண்டும், சரிந்து செத்துப் போயிருந்தாள். இடது பக்கம் சரிந்து கிடந்தாள். இரவு உடை. வலது நெற்றிப் பொட்டு வழியாக நுழைந்து மூளையச் சிதறடித்த தோட்டாவுக்குச் சொந்தமான துப்பாக்கி அவள் வலது கையில் தொங்கிக் கொண்டு இருந்தது. ஃபோட்டோகிராஃபர் பல கோணங்களில் படம் எடுத்துக் கொண்டிருந்தார். ஏனைய சி.எஸ்.ஐ டீம் ஓரமாக நின்று நாளை நடக்கப் போகும் பேஸ் பால் மேட்ச் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்தனர்.

கையில் ஒரு நோட் பேடோடு குறிப்பெடுத்துக் கொண்டிருந்த ஒரு ப்ளூ யூனிஃபார்ம் போலீஸ்காரரைப் பார்த்து, “சார்ஜண்ட், குட் யூ ப்ளீஸ் ஃபில் இன் சௌ?” என ஷெரீஃப் கேட்டார்.

“யெஸ் சார். ஹல்லோ டிடெக்டிவ்” என்று கை கொடுத்துவிட்டு “இந்தப் பொண்ணு பேரு சில்வியா ரயான். பக்கத்துல இருக்கிற கம்யூனிட்டி காலேஜ்ல வேலை பார்த்துட்டு இருக்கா. போன மாசம் இவ பாய் ஃப்ரண்ட் ஜான் ப்ரொடியோட ப்ரேக் அப் ஆகியிருக்கு. அதிலருந்து அழுதிட்டே இருந்திருப்பா போல. பாய் ஃப்ரண்டைப் பிரிஞ்சி இருக்கிறதைத் தாங்கிக்க முடியலைன்னு லெட்டர் எழுதி வச்சிட்டு சுட்டுக்கிட்டா. இந்தக் காலத்துப் பொண்ணுங்க எதுக்கு எடுத்தாலும் செத்துப் போறாங்க”

“கன்?” சௌந்தர் கேள்வியாகக் கேட்க, “இவளோட அப்பாவோடது. ரெண்டு வாரத்துக்கு முன்னாடி யாரோ இவளை ஸ்டாக் பண்ணாங்கன்னு பாதுகாப்புக்கு வேணும்னு சொல்லி போன சண்டே தான் வாங்கி வச்சிருக்கா. இவங்கப்பா கூட இவ பேர்ல பிஸ்டல் லைசன்ஸ் ஒண்ணு அப்ளை பண்ணியிருக்கார். சூசைட் செஞ்சிக்கத்தான் வாங்கிருக்கான்னு தெரியாமலே அவங்கப்பா குடுத்துருக்காரு.”

“அவர் எங்க?” அவர் ஃபிலடெல்ஃபியால இருக்கார். அவரும் அவர் மனைவியும் கிளம்பி வந்துட்டு இருக்காங்க”

“ம்ம்”

“டிடெக்டிவ். உங்களுக்குப் பெருசா வேலை எதுவும் இருக்காதுன்னு நினைக்கிறேன். திஸ் இஸ் அ ஸ்ட்ரெயிட் ஃபார்வர்ட் ஸ்யூசைட்”

அருணும், சௌந்தரும் சுற்றி வந்து பார்த்தனர். மானிட்டரில் அவள் எழுதிய தற்கொலைக் கடிதம் எம்.எஸ் வேர்டில் ஒளிர்ந்துகொண்டிருந்தது.

அந்த அறையை இரண்டு மூன்று முறை சுற்றிப் பார்த்துவிட்டு சௌந்தர், ஷெரீஃபைப் பார்த்து, “இவர் சொன்ன மாதிரி, இட்ஸ் அ ஸ்ட்ரெயிட் ஃபார்வர்ட் ஸ்யூசைட் ஷெரீஃப். யூ மே க்ளோஸ் த ஃபைல்”

அருண் அதிர்ந்து சௌந்தரைப் பார்த்தான். “என்ன சௌந்தர். நீயும் சூசைட்னு சொல்ற? இது மர்டர். உங்க பாஷையில ஹோமிசைட்”

(தொடரும்)

அடுத்த பாகம் இங்கே

No comments: