Monday, May 17, 2010

ஈழத்தமிழர்கள் - ஒரு புலம்பெயர்ந்த இந்தியத் தமிழனின் பார்வை

இலங்கைப் பிரச்சனை சூடு பிடித்த காலம், நான் சிறுவனாக தென் தமிழகத்தில் வசித்து வந்த காலம். இலங்கைப்பிரச்சனை, விடுதலைப் புலிகள், பிரபாகரன், ஜெய்வர்த்தனே போன்ற பெயர்களை என் அப்பா அவர்தம் நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கையில் கேட்டிருக்கிறேன். கொடும்பாவி ஒன்றை பாடைகட்டித் தூக்கிக்கொண்டு போன ஊர்வலங்களில் “ஜெயவர்த்தனே பொண்டாட்டி எங்களுக்கு வப்பாட்டி” என்று அர்த்தம் புரியாமலே கோஷம் போட்டுப் போயிருக்கிறேன்.

பருவ வயதுச் சிறுவனாக, இந்திய அமைதிப் படையில் போன ஒரு தமிழ் ராணுவ வீரர், வட இந்திய வீரர்கள் அங்கே செய்த அட்டூழியங்களைப் பட்டியல் இட்ட போது கதறி அழுதிருக்கிறேன். ராஜிவ் காந்தி கொல்லப்பட்டு ஒற்றைக்கண் சிவராசனையும் சுபாவையும் சி.பி.ஐ தெருத்தெருவாக போஸ்டர் ஒட்டி தேடிக்கொண்டிருந்த போது அவர்கள் மாட்டிவிடக்கூடாது என்று உள்ளூர ஆசைப்பட்டிருக்கிறேன். அவர்கள் போலீஸால் சுற்றி வளைக்கப்பட்டு வீர மரணம் அடைந்த போது அவர்களுக்காக சில துளி கண்ணீர் சிந்தியிருக்கிறேன்.

பிறிதொரு நாளில் ஒரு என்.எஸ்.எஸ் கேம்பின் போது ஒரு இலங்கை அகதிகள் முகாமில் நான் சந்தித்தவர்கள் இந்தியாவில் படும் கஷ்டங்களைக் கேட்டு நானும் கஷ்டப்பட்டிருக்கிறேன். என்னால் ஏதும் செய்ய இயலாத போதும் அவர்கள் சாய்ந்து அழுது தங்கள் பாரத்தை இறக்கிவைக்க ஒரு தோளாக உதவியிருக்கிறேன்.

2004ம் ஆண்டு அமெரிக்காவுக்கு வந்தேன். பல இலங்கைத் தமிழர்களுடன் நேரடியாகப் பழக வாய்ப்புக்கிடைத்தது. பலர் இனிமையாகப் பழகினார்கள். சிலர் பட்டும் படாமலும். பட்டும் படாமலும் பழகியவர்களைக் குறை சொல்ல முடியாது. அவர்களுக்கு இந்தியர்களால் எதாவது கசப்பான அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். எனக்கு இங்கே புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களைப் பார்க்கும்போது ஒரு பரிதாபமும் குற்ற உணர்ச்சியும் இருக்கும்.

பின்னாளில் தெரிந்து கொண்டேன் நான் பழகிய பல தமிழர்கள் இலங்கைப் பிரச்சனை தீவிரமாகுமுன் புலம்பெயர்ந்தவர்கள். ஆனாலும் பலர் அங்கே கஷ்டப்பட்டிருக்கிறார்கள். கொழும்புவில் இருந்து வெள்ளவத்தைக்கு ரயிலில் போகும்போது தமிழில் பேசினால் அடி விழுமாம். அப்படி கஷ்டங்களையும் இவர்கள் அனுபவித்து வந்திருக்கிறார்கள்.

நான் சந்தித்த பழகியவர்களில் பெரும்பாலானோர் பிரபாகரனைப் பிடித்தே இருந்தது. ஒரு சிலருக்கு தங்களுக்கென்று ஒரு தேசம் அமையும் பட்சத்தில் திரும்பிப் போக வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. பெரும்பாலானோர் அமெரிக்க வாழ்க்கைக்கு மாறியிருந்தனர். அவர்களுக்குத் திரும்பிப் போக விருப்பமும் இல்லை.

அதுவரை இலங்கைத் தமிழர்கள் அனைவரும் தனி ஈழம் விரும்புபவர்கள் என்றும் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்றும் எண்ணிக்கொண்டிருந்தேன். என் மனதில் இருந்த பிம்பம் உடையும் நாள் வந்தது.

ஒபாமா ஜனாதிபதியான பின்னர் ஒருநாளில் ஒபாமாவின் வெற்றிக்காக உழைத்த ஒரு தமிழரைப் பார்க்க நேரிட்டது. அவரும் மற்ற தமிழர்களும் சூடான விவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஈழத்தில் போர் உச்சக் கட்டத்தில் இருந்தது.  அந்த நபர் ஒபாமாவின் அரசு இலங்கைப் போரை நிறுத்த எந்த முயற்சியும் எடுக்காது. எடுக்கவும் கூடாது என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் பிரபாகரனையும் கடும் சொற்களால் சாடிக்கொண்டிருந்தார். பிரபாகரனால் தான் இலங்கைப் பிரச்சனை இவ்வளவு மோசமானதாகவும், சிங்களவர்களுடன் இயைந்து போயிருந்தால் எப்போதோ சமரசம் வந்திருக்கும் இரண்டு இனங்களும் சேர்ந்து வாழ்ந்திருக்கலாம் என்பதும் அவரது வாதங்கள். எனக்கு அவருடைய வாதத்தில் உடன்பாடு இல்லை.

அவரிடன் நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன். “உங்களாலேயே இலங்கையை விட்டு வெளியேறி அமெரிக்காவில் நல்ல வாழ்க்கை நடத்த முடியும்போது எதற்காக பிரபாகரன் போர் முனையில் மொத்த குடும்பத்தையும் இருத்திக்கொண்டு போரிட்டுக்கொண்டிருக்க வேண்டும்? அவர் நினைத்தால் வெளியேறியிருக்கலாமே? லத்தீன் அமெரிக்காவில் பல குட்டி நாடுகளில் காசை விட்டெறிந்தால் முழு ராணுவ பாதுகாப்புடன் வசதியாக வாழ வைத்திருப்பார்களே” என்ற என் கேள்விக்குக்கு அவரிடம் பதில் இல்லை.

அதன் பின்னர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தற்காலிகத் தேக்கநிலை உருவானதும் சிங்களவர்கள் கை ஓங்கியதும் அனைவருக்கும் தெரியும்.

இந்தக் காலகட்டம் வரை எனக்குப் பதிவுலகம் அறிமுகமாகவில்லை. பின்னர் மெதுவாக பதிவுகள் பல படிக்கும் வழக்கமும் பதிவுகள் என்ற பெயரில் மொக்கைகள் எழுதும் பழக்கமும் எனக்குள் வந்தது. இப்போது இந்தப் பதிவை நான் எழுதிக் கொண்டிருக்கவும் இந்தப் பதிவுலகமே காரணம்.

நான் படித்த பதிவுகளில் வந்த பின்னூட்டங்களில் சில புலம்பெயர்ந்த தமிழர்களை வன்மையாகத்தாக்கி இருந்தன. வன்னியில் தமிழினம் கஷ்டப்படும்போது அவர்களில் பார்ட்டிகள் வைத்துக் கொண்டாடி மகிழ்ந்ததாக. அதே போல சில புலம்பெயர்ந்த தமிழர்கள் கொழும்பில் வசித்து வரும் பதிவர்களை சிங்களவனிடம் பிச்சையெடுத்து வாழ்ந்து வருவதாகத் திட்டியும் எழுதியிருந்தார்கள்.

இன்னும் சில பதிவுகளில் முஸ்லிம் தமிழர்களுக்கும், இந்துத் தமிழர்களுக்கும் இடையில் நிகழ்ந்த சில நடக்கக்கூடாத சம்பவங்களைப் பற்றிய விவாதங்களையும் கண்டேன். சிங்களவனின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு நம்மவர்கள் பலியானதைக் கண்டு நொந்து நூலானேன்.

என்னைப்போன்ற இந்தியத் தமிழர்கள் பலர் இந்த ஈழப் பிரச்சனையை ஒரு உணர்ச்சி வசப்பட்ட நிலையிலேயே அணுகுகிறோம். அதற்கு நாங்கள் வளர்ந்து வந்த சூழலும் நாங்கள் பார்த்து வளர்ந்த அரசியல்வாதிகளுமே காரணம். தமிழனை என்றுமே ஒரு உணர்ச்சிவசப்பட்ட நிலையில் வைத்திருந்து வைத்திருந்தே அரசியல் நடத்தி வந்திருக்கிறார்கள் எங்கள் அரசியல்வாதிகள்.

நாங்கள் உணர்ச்சிவசப்படும்போது எங்களில் உணர்ச்சிவசப்படாமல் இருப்பவர்களை சுரணையில்லாதவர்கள் என்று நாங்கள் நினைக்கிறோம். புலிகளைத் திட்டிப் பேசுபவர்களை தமிழினத் துரோகிகள் என்று எண்ணுகிறோம்.

எங்களிலும் சிலர் முழுமையான ஈழ வரலாறு தெரியாமல் ராஜிவ் காந்தியின் மரணத்தை மட்டுமே வைத்துக் கொண்டு ஒட்டு மொத்த இலங்கைத் தமிழர்களையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. அப்படி அவர்கள் ஏற்றும் போதெல்லாம் என்னாலான எதிர்ப்பைப் பதிவு செய்துவிட்டே வருகிறேன்.

கிரிக்கெட் என்பது விளையாட்டு அதில் அரசியலைக் கலக்கக்கூடாது என்பது என் எண்ணமாக இருந்து வந்தது. எனக்கு அதில் விழுந்த முதல் அடி, இலங்கை வீரர்களின் மீது பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப்பட்ட போது அதில் விடுதலைப் புலிகளின் கை இருக்கலாம் என்று கூசாமல் சிங்கள அரசு சந்தேகப்பட்ட போது எனக்கு ஆத்திரம் வந்தது. மதத்தின் பேரால் ஆயுதம் ஏந்தி போராடும் ஈனர்களுடன் விடுதலைப் போராட்டம் நிகழ்த்தும் எங்கள் வீரமறவர்களை சம்மந்தப்படுத்துவதா என்று.

மேலும் அந்தச் சம்பவத்தின் போது இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனே தங்கள் நாட்டின் தீவிரவாதிகள் தங்களுக்கு இப்படிப்பட்ட சூழ்நிலைகளுக்காகத் தயார்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று சொன்னபோது எனக்கு கிரிக்கெட் ஒரு அரசியல் விளையாட்டுத்தான் என்ற எண்ண விதை விழுந்தது. அதை உறுதிப்படுத்துவது போல கடந்த ஆண்டுகளில் இந்திய-இலங்கை அணிகள் அளவுக்கு அதிகமாக மோதிக்கொண்டன. இந்த ஆண்டும் இனி வரும் ஆண்டுகளிலும் இது தொடரும்.

இதற்கு முக்கியக் காரணம் இலங்கைத் தமிழர்களில் பலர் இலங்கைச் சிங்கள அணியின் ரசிகர்கள். அவர்களுக்கு இந்திய-இலங்கைப் போட்டிகள் இந்தியர்களின் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் போல உணர்ச்சிவசப்படுத்தக்கூடியவை. இந்தியா இலங்கையுடன் தோற்கும் போதெல்லாம் நான் பழகக் கூடிய இலங்கைத் தமிழர்கள் என்னைக் கேலிசெய்வார்கள். இதை நான் இந்தியா பாகிஸ்தானுடன் தோற்கும் போது அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பாகிஸ்தானியர்களால் கேலி செய்யப்படுவதற்கு ஒத்தான நிகழ்வாகவே பார்க்கிறேன். இப்படி இந்தியர்களையும் இலங்கைத் தமிழர்களையும் கிரிக்கெட் போதையேற்றி மற்ற விசயங்களை மட்டுப்படுத்தி வைப்பதற்காக பாசிச இந்திய அரசும் நாசிச இலங்கை அரசும் மேற்கொள்ளும் மட்டமான உத்திகள். நாமும் போதையேறிப்போய் அலைகிறோம்.

எனக்கு நான் பார்த்த வட அமெரிக்கக் கண்டத்தில் வாழும் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் மீது ஒரு பெரிய வருத்தம் உண்டு.

இவர்களில் 80% தமிழ் பேசுவதில்லை. நான் கவனித்த ஒரு விசயம்.


1. பெற்றோர்களில் யாராவது ஒருவருக்கு ஆங்கிலம் பேச வராதென்றால் பிள்ளைகள் தமிழில் நன்றாகப் பேசுகின்றனர்.
2. அம்மம்மா, அப்பம்மா, அப்பப்பா, அம்மப்பா யாராவது உடன் வசித்தால் பிள்ளைகள் தமிழிலும் பேசுகின்றனர்.
3. பெற்றோர் இருவரும் ஆங்கிலம் நன்றாகப் பேசினால், பிள்ளைகள் தமிழை மறந்து விடுகின்றனர்.

இதில் தமிழ் பேசுவது என்பது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதாக இங்கே எடுத்தாளப்பட்டிருக்கிறது. தங்கள் பிறந்த, வளர்ந்த இடத்தின் எச்சமாக நம்மில் ஒட்டிக் கொண்டிருப்பது மொழி மற்றும் கலாச்சாரமே என்பது என் நம்பிக்கை.

விதையாகத் தூவப்பட்டு வளர்ந்த நாற்றை பிடுங்கி நன்றாக வளர்வதற்காக மாற்று இடத்தில் நடுவது போன்றது என்னைப் போல புலம்பெயர்ந்த இந்தியர்கள். 

முன் கடவாய்ப் பற்கள்.. மிகவும் சீராக... முளை விட்டுப் பளிச்சிடும் போது.. பாதியிலேயே குறடு கொண்டு வெடுக்கென்று பிடுங்கிப் போட்டால் எப்படி இருக்கும்? (நன்றி கலகலப்ரியா) - இது புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள்.

இப்படிப் பிடுங்கிப் போட்டவர்கள் தங்கள் நாட்டை நினைவுபடுத்தும் விசயங்களைச் செய்து/தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவன் நான்.  அப்படிப் பெரும்பாலானவர்கள் இல்லாததை நினைக்கும்போது எனக்கு வருத்தமாகத்தான் இருக்கும். இப்படியே போனால் மூன்றாவது தலைமுறைக்குத் தங்களது பூர்வீகமும் வீரம் செறிந்த வரலாறும் தெரியாமல் போய்விடும். தங்கள் பெயரால் மட்டுமே இந்தியப் பரம்பரையாக அடையாளம் காணப்படும் மேற்கிந்தியத் தீவின் இந்தியர்களைப் போலாகி விடுவோம். 

வாருங்கள். யூதர்களைப் பார்த்து கற்றுக்கொள்வோம். 

35 comments:

Paleo God said...

//வாருங்கள். யூதர்களைப் பார்த்து கற்றுக்கொள்வோம்.//

Great!!

நசரேயன் said...

//யூதர்களைப் பார்த்து கற்றுக்கொள்வோம்.//

ம்ம்ம்

கலகலப்ரியா said...

||எனக்கு இங்கே புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களைப் பார்க்கும்போது ஒரு பரிதாபமும் குற்ற உணர்ச்சியும் இருக்கும்.||

எதுக்கு பரிதாபம்.. :)

||அவரிடன் நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன். “உங்களாலேயே இலங்கையை விட்டு வெளியேறி அமெரிக்காவில் நல்ல வாழ்க்கை நடத்த முடியும்போது எதற்காக பிரபாகரன் போர் முனையில் மொத்த குடும்பத்தையும் இருத்திக்கொண்டு போரிட்டுக்கொண்டிருக்க வேண்டும்? அவர் நினைத்தால் வெளியேறியிருக்கலாமே? லத்தீன் அமெரிக்காவில் பல குட்டி நாடுகளில் காசை விட்டெறிந்தால் முழு ராணுவ பாதுகாப்புடன் வசதியாக வாழ வைத்திருப்பார்களே” என்ற என் கேள்விக்குக்கு அவரிடம் பதில் இல்லை.||

ம்ம்... இது பற்றி இன்றைக்கு கூட ஒரு பேச்சு வந்தது... எழுத வேண்டுமென்று நினைத்தேன்... பார்க்கலாம்...

||இதில் தமிழ் பேசுவது என்பது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதாக இங்கே எடுத்தாளப்பட்டிருக்கிறது. தங்கள் பிறந்த, வளர்ந்த இடத்தின் எச்சமாக நம்மில் ஒட்டிக் கொண்டிருப்பது மொழி மற்றும் கலாச்சாரமே என்பது என் நம்பிக்கை.||

தமிழ் நாட்டிலேயே தமிழ் பேசக் கஷ்டப்படும்போது.. இது இன்னும் சிரமம்தான்... முடிந்த அளவு முயற்சிக்கலாம்..

மொத்தத்தில் நல்ல இடுகை... அப்போவே ஊர்வலம்... போராட்டம் என்று நடந்ததென்று நினைக்கிறப்போ சந்தோஷமா இருக்கு...

||சிலர் பட்டும் படாமலும். பட்டும் படாமலும் பழகியவர்களைக் குறை சொல்ல முடியாது. ||

ம்ம்.. கண்டிப்பாக ஏதாவது காரணம் இருக்குமென்றே நம்புகிறேன்... லண்டன் விமான நிலையத்தில் எனக்கேற்பட்ட சில கசப்பான அனுபவங்கள்... இத்யாதி பற்றிக் குறிப்பிட்டால் என் நட்புகள் காயப்படலாம்... என்னுடன் நட்புடன் இருந்தவர்களே.. வேறு ஈழத் தமிழர்களை ஏதோ வாக்குவாதத்தில்.. அகதி என்றழைத்து எள்ளுவதாகக் கேள்விப்பட்டு வருத்தமடைந்திருக்கிறேன்.. அவர்களை நேரில் பார்த்த பொழுது காட்டிக்கொள்ளாது புன்னகைக்க மட்டுமே முடிந்தது...

vasu balaji said...

ஜெயவர்த்தன காலத்தில் மக்களுக்கு தகவல் போய்ச் சேர்ந்தது. அமைதிப்படையின் அத்துமீறல்களை வெளியிட்டதும் இதே ஊடகங்களே. இந்த அவலத்துக்கு ஊடகங்கள் ஊமையாகிப் போனது மாறாக் கறை. இத்தனைக்கு அப்போதெல்லாம் இத்தனைத் தொலைக்காட்சி கூட இல்லை. இன்றைய நிலமை சக நிருபர் தாக்கப்பட்டால் கூட மௌனியாகி நிற்பது சர்வாதிகாரத்தை விட கொடியது.

/இப்படியே போனால் மூன்றாவது தலைமுறைக்குத் தங்களது பூர்வீகமும் வீரம் செறிந்த வரலாறும் தெரியாமல் போய்விடும். தங்கள் பெயரால் மட்டுமே இந்தியப் பரம்பரையாக அடையாளம் காணப்படும் மேற்கிந்தியத் தீவின் இந்தியர்களைப் போலாகி விடுவோம்.

வாருங்கள். யூதர்களைப் பார்த்து கற்றுக்கொள்வோம். /

மாற்றுக் கருத்தேயில்லை.

INNOVATOR said...

முகிலன் சார்..... முதலில் உங்க பதிவ பார்த்த பொது என்ன இவரு இவ்வளவு எழுதிருக்காறு என்று தோன்றியது, ஆனால் படிக்க படிக்க ஆர்வமாக இருந்தது....... நிறைய விசயங்களை தொகுத்து எழுதி இருக்கீங்க.......... என்னோடைய பாராட்டுகள்

Thekkikattan|தெகா said...

ம்ம்ம்... நல்ல கட்டுரை, முகிலன்!

அயலகங்களில் வாழ்பவர்கள் தமிழை எடுத்துச் சென்றுச் சேர்ப்பதில் பெரும் பங்காற்றி வருவதாகவே அறிகிறேன்...

ராஜ நடராஜன் said...

அழகான பதிவு முகிலன்!பகிர்வுக்கு நன்றி.

பனித்துளி சங்கர் said...

நாட்கள் பல கடந்துபோனாலும் இன்னும் எந்த மாற்றமும் இன்றி அப்படியேதான் இருக்கிறது அந்த வலி இன்னும் பலரின் இதயங்களிலும் .சிறப்பான பதிவு !

Chitra said...

////தமிழனை என்றுமே ஒரு உணர்ச்சிவசப்பட்ட நிலையில் வைத்திருந்து வைத்திருந்தே அரசியல் நடத்தி வந்திருக்கிறார்கள் எங்கள் அரசியல்வாதிகள்.///


.....நிறைய யோசித்து - பல விஷயங்களை ஆராய்ந்து பார்த்து - வேறு கோணங்களில் கண்டு - தொகுத்து தந்த பகிர்வுக்கு நன்றி. பாராட்டுக்கள்!

அது சரி(18185106603874041862) said...

முகிலன்,

இடுகையில் பாதி ஒப்புதல். ராஜீவ் காந்தியின் மரணத்திற்காக ஒட்டு மொத்த இலங்கை தமிழர்களையும், ஏன் சிவராசன் தனுவையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுபவர்கள், ராஜீவ் காந்தி யார், அவரது இந்திய ராணுவம் ஈழத்தில் என்ன செய்தது, பிரபாகரனை உயிருடனோ பிணமாகவோ பிடிக்க இந்திய அரசும் ராஜீவ்காந்தியும் எத்தனை தூரம் முயன்றார்கள் என்பதை மறைப்பவர்கள். இந்தியாவின் பக்கம் அரசியல் பலம் இருப்பதால் அவர்கள் எழுதிய கட்டுக் கதை மட்டுமே நிற்கிறது, இல்லையேல் பல்வேறு கற்பழிப்புகளுக்காகவும்,படுகொலைகளுக்காகவும், பிரபாகரனை கொலை செய்ய முயன்றதற்கும் ராஜீவ்காந்தியும் இந்திய அரசும் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டியதிருக்கும். ஜே.என்.தீக்ஷித்தும், ரொமேஷ் பண்டாரியும் அனேகமாக மனித இனத்திற்கு எதிரான குற்றங்களுக்காக தூக்கு தண்டனை பெற வேண்டியிருக்கும்.

ராஜீவ்காந்தி ஒன்றும் கறை படியாத புனிதர் அல்ல. இன்றைக்கும் போஃபர்ஸ் வழக்கின் மூலம் யார் என்று எல்லாருக்கும் தெரிந்து தான் இருக்கிறது. ஆனால், யாரும் எதுவும் செய்வதில்லை. இலங்கைப் பிரச்சினையில் அவரது நடவடிக்கைகள் அரசு ரீதியான, அரசுகளுக்கு இடையான நடவடிக்கை மட்டுமல்ல, தனிப்பட்ட முறையிலான காரணங்களும் உண்டு.

யாரை யார் முதலில் முடிப்பது என்ற போட்டியில் அன்றைக்கு பிரபாகரன் முந்திக் கொண்டார் என்றே நான் நினைக்கிறேன்.

ஹேமா said...

முகிலன்...நீங்கள் சொன்ன விஷயங்களில் சில வலித்தாலும் வெட்கமாயிருந்தாலும் உண்மை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

நாட்டில் இன்று என்ன நடந்திருக்கிறது என்றே தெரியாது சிலருக்கு.தங்கள் பிள்ளைகளுக்கு வெள்ளைக்காரனின் பெயரை வைத்துவிட்டு தாங்களும் அப்படி ஒரு நினைவில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

//வாருங்கள். யூதர்களைப் பார்த்து கற்றுக்கொள்வோம்.//

நீங்கள் முத்தாய்ப்பாய் முடித்த வசனம் நன்றாகவே உறைக்கிறது.
உணர்வுள்ளவர்களுக்கு மட்டும்.

ஜெய்லானி said...

உங்க கோவம் நியாயமானதே!!

அது சரி(18185106603874041862) said...

பிரபாகரனை பேச்சு வார்த்தைக்கு அழைத்து, குடும்பத்துடன் அழித்து விடுவோம் என்று இந்திய ராணுவம் மிரட்டியதற்கு வீடியோ ஆதாரம் இருக்கிறது. யூ ட்யூபில் தேடிப் பாருங்கள்.

Here is the link: http://www.youtube.com/watch?v=kVZKvTpL7k8

thuva said...

" இப்படியே போனால் மூன்றாவது தலைமுறைக்குத் தங்களது பூர்வீகமும் வீரம் செறிந்த வரலாறும் தெரியாமல் போய்விடும்."
ஒரு புலம்பெயர் ஈழ தமிழனான எனக்கும் அதே கவலைதான்.
சிலர் தாம் வெளியே தெரிய வேண்டும் என்பதரகாகவும், சிலர் தம்மை அறிவாளிகள் என்று காட்டிகொளவும் புலிகளைத் திட்டிப் பேசுவார்கள். இவர்களை இப்போது பாதிக்கபட்ட உதவ சொன்னால் 1௦ வருடத்துக்கு முன்னால் புலிகள் அது செய்தார்கள் இது செய்தார்கள் என்று சொல்வார்கள். புலிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமது இருப்பை காட்டிகொள்ள இவர்களுக்கு புலிகள் வேண்டும். வீரபாண்டிய கட்டபொம்மன் எப்படி எமக்கு சொந்தமோ அதே போன்று எட்டப்பனும் உறவு தான் இருவருமே தமிழர் தான் ஒருவர் வீரன் மற்றயது துரோகி. இது எல்லா கால கட்டத்திலும் உள்ளது.

அது சரி(18185106603874041862) said...

அடுத்து ஒப்புதல் இல்லாத பகுதி.

//
எனக்கு நான் பார்த்த வட அமெரிக்கக் கண்டத்தில் வாழும் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் மீது ஒரு பெரிய வருத்தம் உண்டு.

இவர்களில் 80% தமிழ் பேசுவதில்லை. நான் கவனித்த ஒரு விசயம்.
//

இது இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்ல, இந்தியத் தமிழர்களும் அப்படித் தான். ஆனால், அது குறித்து எனக்கு பெரிய வருத்தமில்லை. ஏனெனில் அவர்கள் இருக்கும் இடத்தில் என்ன மொழியோ அந்த மொழி தான் பேசி ஆக வேண்டும். தவிர, புலம் பெயர்ந்தவர்களுக்கு, அதுவும் கட்டாயத்தின் பேரில் புலம் பெயர்ந்தவர்களுக்கு தங்களது பழைய சூழல் மேல் மிகப் பெரும் காதல் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

நீங்களே சொல்வது போல, புலம் பெயர்ந்தவர்களுக்கு (நான் இலங்கையிலிருந்து பெயர்ந்தவர்களை மட்டும் குறிக்கவில்லை, எல்லோரையுமே சுட்டுகிறேன், நான் உட்பட), தமிழ் எச்சமாகிறது. எச்சமான எதுவும் அழியும் முகிலன். அது தான் இயற்கையின் விதி. அவர்களின் வாழ்க்கை சூழலுக்கு தமிழ் தேவையில்லை என்ற நிலை வரும்போது அது மெல்ல விலக்கப்படும். மூன்றாம் தலைமுறை தமிழ் என்பதை கேள்விப்பட்டு மட்டுமே இருக்கும். இது தவிர்க்க முடியாது. நான் தூங்கும் போது முகத்தில் தண்ணீர் ஊற்றினால் What the fuck ....என்று தான் கத்த வருகிறது.

தவிர, ஒரு மொழியின் பலம் என்பது அதன் அழகும், ஆழ நீளமும் அல்ல. உண்மையில் ஒரு மொழியின் வெற்றி என்பது அந்த இனத்தின் அரசியல், பொருளாதார வெற்றியை சார்ந்தே இருக்கிறது. ஆங்கிலத்தின் பலம் அதன் அழகல்ல, பிரிட்டனின் அரசியல் வெற்றி காரணமாகவே ஜெர்மன், ஃப்ரன்ச் மொழிகளின் கலப்பாக வந்த ஆங்கிலம் அந்த மொழிகளையும் வென்று உலகின் முதன் மொழியாகியது. இன்றைக்கும் ஆங்கிலம் பரவுவதற்கு காரணம் அமெரிக்கா. ஒரு வேளை சீனா முக்கிய சக்தியாகும் போது மந்தரின் முக்கிய மொழியாகலாம்.

அரசியல், பொருளாதார பலமற்ற எந்த ஒரு இனத்தின் தட‌யங்களும், மொழி உட்பட காலப் போக்கில் அழிக்கப்படும். ஒரு காலத்தில் மிகப் பலமாக இருந்த சன்ஸ்க்ரிட் இன்று வழக்கொழிந்து போனது போல, ஒரு நாள் தமிழும் ஆகலாம். அதற்கு நீண்ட காலம் ஆகும், ஆனால் அரசியல் பலமும் பொருளாதார பலமும் இல்லாத ஒரு இனம் அதன் அடையாளத்தை நிலை நிறுத்துவது கடினம். மெல்லத் தமிழினி சாகும் அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும் என்று கவலைப்பட்ட பாரதியின் ஞாபகம் வருகிறது. ஆனால், உண்மையை மறுக்க முடியாது முகிலன். அது கசப்பானது. தோற்றுப் போனவர்களுக்கு என்ன கொடியும் பதாகையும்?? நாம் இன்று தோற்கவில்லை, தோற்று வெகு காலமாகிறது. வெட்டுண்ட புண்ணை அறுத்து பார்க்கும் அளவுக்கு சூழல் இல்லை. கருணாநிதி, ஜெயலலிதா போன்ற தலைவர்கள் இருக்கும் ஒரு இனம் இன்னமும் உயிருடன் இருப்பதே பெரிய ஆச்சரியம்!

யூதர்களுடன் தமிழர்களை ஒப்பிட முடியாது. யூதர்களுக்கு இணைக்கும் புள்ளியாக இஸ்ரேல் இருந்தது. அதை நோக்கி வழிநடத்த தலைவர்களும் இருந்தார்கள். ஆனால் தமிழர்களுக்கு???? தமிழனத்தின் தலைவர்கள் என்று அல்லைக்கைகளால் கால் நக்கப்படுபவர்கள் நமீதாவின் முலையில் முடங்கி இருக்கிறார்கள். தினம் ஒரு விழா என்று திருவிழா கொண்டாடுகிறார்கள்.

என்னிடம் இரவு மட்டுமே இருக்கிறது...வெளிச்சம் இல்லை!

Unknown said...

அண்ணை ரொம்ப அமெரிக்காவிலை புலம் பெயர் ஈழ தமிழர்கள் தமிழை மறந்திட்டு ஆங்கிலம் பேசுகிறார்கள் என்று கூறியுள்ளீர்கள்..நீங்களும் நீங்க பார்த்த ஆட்கள் எல்லாம் வைற் காலர்ஸ்ங்க ..இங்கை லண்டனிலை இங்கீலீஸ் நாட்டிலை இருக்கிறம் என்று பேரு ..நாம படித்தது தமிழ் மூலமுங்க ..பத்து பதினிஞ்சு வருசமாக இங்க இருக்கிறமுங்க உங்களைப்போல நுனி நாக்கிலை இங்கீனீஸ் பேச விரும்பினாலும் வர மாட்டெங்குதுங்க ...லண்டனிலை எங்கும் தமிழ் தாங்க ..உங்கட குற்றச்சாட்டை மட்டும் அமெரிக்க வைற் காலர் தமிழர் மட்டும் என்று வைச்சுங்குங்க

Unknown said...

@ஷங்கர் - நன்றி

@நசரேயன் - நன்றி

Unknown said...

//கலகலப்ரியா said...
||எனக்கு இங்கே புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களைப் பார்க்கும்போது ஒரு பரிதாபமும் குற்ற உணர்ச்சியும் இருக்கும்.||

எதுக்கு பரிதாபம்.. :)//

தெரியாமப் பரிதாபப்பட்டேன் மன்னிச்சிடுங்க தாயி

//ம்ம்... இது பற்றி இன்றைக்கு கூட ஒரு பேச்சு வந்தது... எழுத வேண்டுமென்று நினைத்தேன்... பார்க்கலாம்...
//
எழுதுங்க எழுதுங்க

//தமிழ் நாட்டிலேயே தமிழ் பேசக் கஷ்டப்படும்போது.. இது இன்னும் சிரமம்தான்... முடிந்த அளவு முயற்சிக்கலாம்..

மொத்தத்தில் நல்ல இடுகை... அப்போவே ஊர்வலம்... போராட்டம் என்று நடந்ததென்று நினைக்கிறப்போ சந்தோஷமா இருக்கு..//

அப்போ போராட வேண்டிய தேவை இல்லை. ஏன்னா இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர் ரெண்டு பேரும் தமிழர் ஆதரவு நிலை எடுத்திருந்தாங்க. எங்க ஊர்வலம் கண்டன ஊர்வலம் மட்டுமே.

//ம்ம்.. கண்டிப்பாக ஏதாவது காரணம் இருக்குமென்றே நம்புகிறேன்... லண்டன் விமான நிலையத்தில் எனக்கேற்பட்ட சில கசப்பான அனுபவங்கள்... இத்யாதி பற்றிக் குறிப்பிட்டால் என் நட்புகள் காயப்படலாம்... என்னுடன் நட்புடன் இருந்தவர்களே.. வேறு ஈழத் தமிழர்களை ஏதோ வாக்குவாதத்தில்.. அகதி என்றழைத்து எள்ளுவதாகக் கேள்விப்பட்டு வருத்தமடைந்திருக்கிறேன்.. அவர்களை நேரில் பார்த்த பொழுது காட்டிக்கொள்ளாது புன்னகைக்க மட்டுமே முடிந்தது.//

நானும் சில Chat சைட்களில் பார்த்திருக்கிறேன்.

Unknown said...

//வானம்பாடிகள் said...
ஜெயவர்த்தன காலத்தில் மக்களுக்கு தகவல் போய்ச் சேர்ந்தது. அமைதிப்படையின் அத்துமீறல்களை வெளியிட்டதும் இதே ஊடகங்களே. இந்த அவலத்துக்கு ஊடகங்கள் ஊமையாகிப் போனது மாறாக் கறை. இத்தனைக்கு அப்போதெல்லாம் இத்தனைத் தொலைக்காட்சி கூட இல்லை. இன்றைய நிலமை சக நிருபர் தாக்கப்பட்டால் கூட மௌனியாகி நிற்பது சர்வாதிகாரத்தை விட கொடியது.

//

சரியாச் சொன்னீங்க சார்.

Unknown said...

@இன்னொவேட்டர் - நன்றி

@பனித்துளி சங்கர் - நன்றி

@சித்ரா - நன்றி

@ஹேமா - நன்றி

@ஜெய்லானி - நன்றி

Unknown said...

//Thekkikattan|தெகா said...
ம்ம்ம்... நல்ல கட்டுரை, முகிலன்!

அயலகங்களில் வாழ்பவர்கள் தமிழை எடுத்துச் சென்றுச் சேர்ப்பதில் பெரும் பங்காற்றி வருவதாகவே அறிகிறேன்...//

நன்றி தெக்கிக்காட்டான்.

அயலகங்களில் இருக்கும் எல்லாத் தமிழரும் இல்லை சார். 10% தமிழர்கள் மட்டுமே அப்படி நினைக்கிறார்கள்.

Unknown said...

ராஜ நடராஜன் - நன்றி.

Unknown said...

துவா - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Unknown said...

அதுசரி..

ம்ம்ம்...

நீங்கள் இரவு மட்டுமே இருக்கிறது என்று நின்று விட்டீர்கள். நான் எப்படி இருளை விரட்டலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

Unknown said...

//sinnakuddy said...
அண்ணை ரொம்ப அமெரிக்காவிலை புலம் பெயர் ஈழ தமிழர்கள் தமிழை மறந்திட்டு ஆங்கிலம் பேசுகிறார்கள் என்று கூறியுள்ளீர்கள்..நீங்களும் நீங்க பார்த்த ஆட்கள் எல்லாம் வைற் காலர்ஸ்ங்க ..இங்கை லண்டனிலை இங்கீலீஸ் நாட்டிலை இருக்கிறம் என்று பேரு ..நாம படித்தது தமிழ் மூலமுங்க ..பத்து பதினிஞ்சு வருசமாக இங்க இருக்கிறமுங்க உங்களைப்போல நுனி நாக்கிலை இங்கீனீஸ் பேச விரும்பினாலும் வர மாட்டெங்குதுங்க ...லண்டனிலை எங்கும் தமிழ் தாங்க ..உங்கட குற்றச்சாட்டை மட்டும் அமெரிக்க வைற் காலர் தமிழர் மட்டும் என்று வைச்சுங்குங்க//

நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் சின்னக்குட்டி. ஐரோப்பாவில் வாழும் தமிழர்கள் இன்னும் தமிழ் பேசுவதாக, படிப்பதாக. நான் பார்த்தது அமெரிக்கா மட்டும்தான் என்பதை நான் தெளிவாகவே சொல்லியிருக்கிறேன்.

சைவகொத்துப்பரோட்டா said...

வாழ்த்துக்கள் முகிலன்.

ஜோ/Joe said...

கிட்டதட்ட முழுவதும் ஒத்துப் போகக்கூடிய எண்ணப்பதிவு.

குடுகுடுப்பை said...

யூதனிடம் விற்கும் சக்தியும் வாங்கும் சக்தியும் இருந்தது, ஈழததமிழர்கள் இழப்பின் வலி அவர்களை வலிமையாக்கட்டும்

நாடோடி said...

அருமையான‌ இடுகை முகில‌ன் சார்... "அதுச‌ரி" அவ‌ர்க‌ள் குறிப்பிட்ட‌து போல் வ‌ழிகாட்ட ச‌ரியான‌ த‌லைவ‌ர்க‌ள் இல்லாத‌து பெரிய‌ இழ‌ப்பு தான்..

Angel said...

nalla padhivu .ningal ennai romba yosikka vaithu vitteergal.

ippadikku innoru vayilla poochi indhiya thamizacchi

Vidhoosh said...

முகிலன்: மிகவும் நேர்த்தியாக இருக்கிறது இந்தக் கட்டுரை. நன்றிகள்.

அது சரி- டபுள் சபாஷ் உங்களுக்கு.

ஆனால் இழப்புக்களையோ (எதுவாக இருப்பினும், எல்லாமாக இருப்பினும்) அதைப் பற்றி ஏதும் செய்யமுடியாத கையாலாகதத்தனம் மீதான குற்றவுணர்வின் வலி, சாகவும் முடியாமல் வாழவும் முடியாமல், மரண வாசலில் நின்று கொண்டே இருப்பததை விட கொடுமையானது. தமிழைப் பற்றியும் தமிழரைப் பற்றியும் வேறென்ன சொல்ல? செம்மொழிதான்.. தமிழ் மாநாடுதான்.. ஹும்ம்..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நல்ல இடுகை முகிலன்... எனக்கு வேறு மாதிரியாக அமைந்துவிட்டது புலம்பெயர்ந்த இலங்கையர்களுடனான அனுபவங்கள்.. நான் பதிவுலகில் பழகும் எல்லோரும் தமிழை நேசிப்பவர்களே.. வெளிநாட்டில் இருந்தாலும் தமிழில் விரும்பிக் கதைப்பவர்களே..

என்றாலும், இரண்டாம் தலைமுறை என்று வரும் பொழுது, தற்போது வாழும் சூழலுக்கேற்பவே பிள்ளைகள் வளர்வார்கள்.. இங்கு பிறந்து இங்கேயே வளரும் எல்லா இந்தியக் குழந்தைகளுக்கும் (ஏன் சைனீஸ் குழந்தைகளுக்கும்) இது பொருந்தும்..

அதுசரி - ரொம்பவே நன்றாக அலசியிருக்கீங்க.. கசக்கிறது என்றாலும், உண்மை அதுவே... கூடவே இன்னொன்றும் - மொழியால் அறிவியல் பயன்பாடும் இருக்க வேண்டும்.. உதாரணத்துக்கு - லத்தீன், கிரேக்க மொழிகள் - இவைகளின் ஆதிக்கம் இன்று குறைந்து போனாலும், இன்னமும் இந்த மொழிகளிலான அறிவியல் பயன்பாட்டு சொற்கள் (nouns) ஆங்கிலத்தில் உபயோகப்படுத்தப்படுகின்றன..

முகிலன் - வீட்டுக்கு வீடு தமிழில் பேசி, பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்தாலே தமிழ் வாழும்.. தமிழ்நாட்டிலே நடக்கனும் இது முதல்ல.. ம்ம்.. அங்கயே தாய்மொழியில் (மட்டும்) எழுதப் படிக்கத் தெரியாத மக்களை பார்த்திருக்கிறேன்.. :((

Jabar said...

தமிழ் செம்மொழியாகி மாநாடு நடக்கும் இந்த நேரத்திலும் - நீங்கள் சொன்ன உண்மைகளை வெட்கத்தோடும் வருத்ததோடும் ஒப்புகொள்ளவேண்டிய விஷயம்... நல்ல பதிவு.... வருத்ததோடும் வெட்கத்தோடும் வாழ்த்தும்... ஒன்றும் இயலாத தமிழன்...

Anonymous said...

நிறைய விஷயங்களை எழுதி இருக்குறீர்கள். Wow.

இந்திய இராணுவம், ராஜீவ் பற்றி எழுதிய போது நிறைய பேர் திட்டி பின்னூட்டம் போட்டார்கள். அதற்கு பதில் சொல்வதே வேஸ்ட் என்று விட்டுவிட்டேன். உங்களுக்காவது கொஞ்சம் ஈழ வரலாறு தெரிஞ்சிருக்கே எனும் போது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது.

ராஜீவ் கொல்லப்பாட்டார் என்ற ஒரே காரணத்துக்காக அவரை மகாத்மா மாதிரி தூக்கிப்பிடித்து எழுதுபவர்களைக் கண்டால் எனக்கு தலையில் அடித்துக்கொள்ளத் தோன்றும்.

ஜெயசூரியாவைக் குறை சொல்லமுடியாது. அவரின் பொய்யும் எங்களை உலகமே கண்டு கொள்ளாமல் இருக்க ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. ஆனாலும், ஒன்று சொல்லவேண்டும். அவர் தங்களுக்காக பிரச்சாரம் செய்யாவிட்டால் கொன்றுவிடுவோம் என்று ராஜபக்சேயின் மகன் அவரை பயமுறுத்தியது பற்றி மக்களுக்குத் தெரியும். You have to do what Rajpakse says. That's it.

இங்கே ஆஸ்ரேலியாவில் பிறந்து வளர்ந்த சிங்களவர்கள் (இவர்கள் குடும்பத்தில் ஒருவர் கூட இலங்கையில் இல்லை என்பதை கவனிக்க) நாங்கள் ப்ரொட்டெஸ்ட் செய்யும் போது, கற்கள் எரிந்தும் போத்தல்கள் எரிந்தும் தாக்கினார்கள். அவர்களுக்கு இருந்த துவேசத்தைப் பார்த்த போது பூமியே தலைகீழாக சுற்றுவது போல இருந்தது.

ஆனாலும், இலங்கையில் இருந்து வந்த ஓரிரு சிங்களவர்கள், எங்களுக்கு ஆறுதல் சொல்லி தோள் கொடுத்தார்கள்.

வெளி நாட்டிற்கு போனபின்னர், அமெரிக்கனாக கனேடியனாகா நடந்து கொண்டு, ப்ரொட்டெஸ்ட் செய்த மக்களைத் திட்டி ஃபேஸ் புக்கிலும் எம் எஸ் என்னிலும் எழுதிய இலங்கைத்தமிழர்களும் இருக்கிறார்கள். அதைப் பார்த்த போது, நாண்டுகொண்டு சாகலாம் போல இருந்தது. சை. அப்பாவி மக்கள் சாகும் போது கூட எப்படி இவர்களால் இப்படி பேச முடிந்தது என்று இன்னும் வியப்பாக இருக்கிறது.

24 வயதில் சால்ஸ் அண்ணாவுக்கு சாகிற வயதா? அவனைப்பற்றி நேற்று எழுதினேன். ஆனால், போடவில்லை. முடியவில்லை. கொஞ்ச நாட்கள் போகட்டும். துவாரகா அக்காவும் களத்தில் தானே நின்றவராம். இரு பிள்ளைகளையும் தன்னுடன் களத்தில் நிறுத்திய தலைவரைப்பற்றி பேச எப்படி இவர்களால் முடிகிறது. தலைவரின் கால் பட்ட இடத்தின் தூசைக் கூட தொட அருகதை அற்ற பனாதைகள்.

தமிழில் பேசுவது பற்றி எனது பார்வையை நான் கூட எழுதி இருக்கிறேன், முடிந்தால் எட்டிப்பாருங்கள். விளக்கம் இருக்கிறது.

வீடியோ லிங்க்குக்கு நன்றி அது சரி.

YUVARAJ S said...

Good job muhilan!

One of the best neutral article on Tamil Eelam i have seen.