Thursday, July 12, 2012

நெடுஞ்சாலை (சிறுகதை)


M24 ன் டெலஸ்கோப்பிக் சைட்டில் இருந்து கண்ணை எடுத்தேன். ட்ரிக்கரில் இருந்து விரலை எடுத்து கண்ணைக் கசக்கி விட்டுக் கொண்டேன். இடது கையைத் திருப்பி மணி பார்த்தேன். 3:00. இன்னும் ஒரு மணி நேரம். அதன் பிறகு மைக் வந்து டேக் ஓவர் செய்து கொள்வான். அதே வாட்சில் தெரிந்த தேதி 23 என்றது. இன்னும் ஏழே நாள். முப்பதாம் தேதி ஐராக்கில் இருந்து கிளம்பிவிடலாம். ஐந்து வருடங்களுக்குப் பிறகு ரஷ். மிஷேலும் ஜானும் என் வரவிற்காக ஏர்போர்ட்டிற்கே வந்துவிடுவார்கள்.



கண்ணை மீண்டும் டெலஸ்கோப்பில் பொருத்தினேன். ஐந்து வருடங்களாக இதுதான் பிழைப்பு. நான் ஜான். அமெரிக்கப் படையின் 25th infantry divisionன் ஸ்னைப்பர். 2006 அக்டோபரில் ஐராக்கில் டிப்ளாய் செய்யப்பட்டேன். மூன்று வருடங்களில் திரும்பிப் போயிருக்க வேண்டியவன், ஸ்டீவ் அவசரமாக ஊருக்குப் போகவேண்டும் என்று கேட்டதால் அவனது இரண்டு வருடங்களையும் சேர்த்து நான் தீர்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த கேம்பிலிருந்து யு.எஸ்ஸுக்குப் பேச வசதியில்லை என்பதால் மிஷேலிடமும் ஜானிடமும் பேசி 11 மாதங்களாகிவிட்டது. 330 நாட்கள் பொறுத்தாகிவிட்டது. இன்னும் ஏழோ எட்டோ நாட்கள் தான்.

சிறுவனாக இருந்த போது நடந்த கல்ஃப் வாரில் சண்டையிட்டு திரும்பிய அங்கிள் பில்லுக்கு லூயிஸ்டன் ஊரே திரண்டு கொடுத்த வரவேற்பு இன்னமும் கண் முன்னால் நிற்கிறது. மரத்தில் ஏறி பேனர் கட்டியது, அனைவருக்கும் சாக்லேட் கொடுத்தது. ஏர்ப்போர்ட்டில் அவர் வெளியே வந்ததும் ஆண்ட் மேரியை கட்டியணைத்தது எல்லாம் நேற்று நடந்தது போல இருக்கிறது. அங்கிள் பில் எங்கள் ஊரின் ஹீரோ. அவரைத் தொடர்ந்தே நான் ஸ்டீவ் எல்லாம் ராணுவத்தில் சேர்ந்தோம். குறி தவறாமல் சுடும் திறமை இருந்ததால் ஸ்நைப்பரானேன். ஸ்டீவும்.

மிஷேலைச் சந்தித்தது  நார்த் கரோலினா ட்ரெயினிங் கேம்பில் இருந்தபோது. ஆர்மி ஜாயிண்டின் ரெஸ்டாரண்டில் வெயிட்டராக வேலை பார்த்து வந்தாள்.  தொடர்ந்த டேட்டிங்கில் பிடித்துப் போய் விட மூன்றாவது மாதத்தில் ஜான் பிறந்தான். எங்கள் குடும்பத்தில் முதல் குழந்தைக்கு ஜான் என்றே பெயரிடுவது வழக்கம். ஜான் பிறந்ததும் ரிசர்வ் பிரிவில் மாற்றல் கேட்டு ரஷ்ஷுக்கு வந்தோம். மிஷேல் அங்கேயே ஒரு ரெஸ்டாரண்ட்டில் வேலைக்குப் போனாள். நான் ஸ்ட்ராங் ஹாஸ்பிட்டலில் செக்யூரிட்டி.

2001ல் ஆஃப்கனுக்கு டிப்ளாய் செய்யப்பட்டு அங்கே இரண்டு வருடங்கள். அதன் பிறகு வந்த நான்கு வருடங்கள் மிகவும் இனிமையாகக் கழிந்தன. தன் குழந்தைகளின் வளர்ச்சியை அருகில் இருந்து பார்ப்பதை விட ஒரு தகப்பனுக்கு வேறு என்ன மகிழ்ச்சி. மிஷேல் ஏனோ இன்னொரு குழந்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். ஜான் இப்போது மிடில் ஸ்கூலில் இருப்பான். பர்கர் மிடில் ஸ்கூலாகத்தான் இருக்கும். நன்றாகப் படிப்பதாகக் கடைசியாகப் பேசும்போது சொன்னான்.

வயர்லெஸ் கரகரத்தது. “ஹாக்கிங் ஐ. தூரத்தில் எதோ ஒரு வாகனம் வருகிறது. ராணுவ வாகனம் போலத் தெரியவில்லை. அதன் மீது ஒரு கண் வைத்துக் கொள்ளவும்”

”ரோஜர் தட்” என்று பாதையில் கவனமானேன். தூரத்தில் ஒரு ஜீப் வழக்கத்தை விட வேகமாக வந்தது. முழுதும் மூடப்பட்டிருந்த அதில் யார் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. என் ஃபயரிங் ரேஞ்சுக்குள் ஜீப் வரவும், என் பார்வைக்கு நன்றாகத் தெரிந்த முன் சக்கரத்தை நோக்கி சுட்டேன்.

டயர் சுடப்பட்ட ஜீப் ரோட்டை விட்டு இறங்கியது. ஜீப்பை ஓட்டியவன் டயர் சுடப்படும் என்பதை எதிர்பார்த்தே வந்திருக்க வேண்டும். மிகவும் திறமையாக டயர் இல்லாத ஜீப்பை மீண்டும் ரோட்டில் ஏற்றி கேம்பை நோக்கி வந்தான்.

இப்போது டிரைவரின் இருக்கையை குறி வைத்து இரண்டு முறை சுட்டேன். ஜீப்பின் வேகம் குறைந்ததாகத் தெரியவில்லை. அடுத்த கட்டமாக FGM-148 anti-tank மிசைலை அடித்தான் டேவ். ஜீப் எதிர்பார்த்ததை விட சத்தமாக வெடித்துச் சிதறியது. என் இடது கையில் எதோ குத்தியது, குத்திய அடுத்த விநாடி வலி உயிர் போனது. என்ன என்று பார்த்தேன். ஆணிகள். Nail Bomb. அடுத்த நொடி மயங்கினேன்.

************

விழித்த போது மெடிக்கல் டெண்டில் இருந்தேன். பக்கத்து படுக்கையில் ப்ரூனோ. கண்ணில் கட்டுப் போட்டுப் படுத்திருந்தான்.

“முழிச்சிட்டியா?” சிரித்த படி உள்ளே வந்தான் மைக்.

“என்னாச்சி”

Insurgents. ஜீப் முழுக்க நெயில் பாம் ஏத்திட்டு வந்திருக்கான். ராக்கெட் லாஞ்சர் அடிச்சதும் வெடிச்சி சிதறிடுச்சி. உனக்கு கையிலதான் காயம். ப்ரூனோவுக்கு கண் போயிருச்சி.”

“வேற யாருக்கும்?”

“எல்லாருக்கும் சின்னச் சின்ன காயம் தான். உயிரிழப்பு எதுவும் இல்லை.”

“தேங்க் காட்”

மருந்தின் ஆதிக்கம் குறைந்திருக்க வேண்டும். இடது கையில் வலி எடுக்கத் துவங்க, கண்ணை மூடிக் கொண்டேன்.

கைக் காயம் ஆறியிருந்தது. யு.எஸ் கிளம்ப வேண்டிய நேரமும் வந்தது. அங்கே போய் தெரபியை தொடர வேண்டும் என்று டாக்டர் சொன்ன இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் காதில் விழுந்து கொண்டிருந்தாலும், மனம் ஏரோபிளேன் ஏறாமலே ரஷ் போய்ச் சேர்ந்திருந்தது.

பாக்தாத் வந்து சேர்ந்ததும், மூன்று முறை மிஷேலுக்கு அழைத்து விட்டேன். மூன்று முறையும் அவளைப் பிடிக்க முடியவில்லை. வாய்ஸ் மெசேஜ் விட்டு விட்டு, இதோ விமானத்தில் உட்கார்ந்து விட்டேன். 12 மணி நேரத்தில் பால்டிமோர் போய்விடும். அங்கிருந்து ராச்சஸ்டர் ஒன்றரை மணி நேரம்தான். பால்டிமோரில் இறங்கியதும் மிஷேலுக்கு தொடர்பு கொள்ள வேண்டும். சீட்டுக்கு முன்னால் இருந்த டிவியில் எதோ ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது.  அதில் ஆர்வமில்லை. கண்ணை மூடித் தூங்கினேன்.

பால்டிமோரில் இறங்கியதும் அடுத்த ஃப்ளைட்டுக்கு 30 நிமிடம் மட்டுமே இருந்ததைப் பார்த்தேன். வேக வேகமாக ஓடினேன். எதிரில் வந்தவர்கள் சொன்ன வெல்கம் ஹோம் காதில் விழுந்தும் விழாமல் ஓடி செக்யூரிட்டி செக்கின்னில் நின்றேன். என்னைப் பார்த்த்தும் வரிசையில் இருந்தவர்கள் என்னை முன்னால் போகச் சொன்னார்கள். மறக்காமல் வெல்கம் ஹோமும்.

செக்யூரிட்டி செக்கின் முடித்து கேட்டுக்கு ஓடினேன். எனக்காகவே காத்திருந்த மாதிரி நான் விமானத்தினுள் நுழைந்ததும் கேட் மூடப்பட்டது. அருகில் உட்கார்ந்திருந்தவரிடம் “ஹலோ” சொல்லிவிட்டு உட்கார்ந்தேன்.

மிஷேல் மெசேஜ் பார்த்திருப்பாள். ஏர்ப்போர்ட்டில் பேனர் கட்டியிருப்பார்களா? அங்கிள் பில்லுக்கு “Welcome Home our Hometown Hero!” என்று கட்டிய பேனர் கண்களுக்கு முன் ஆடியது. பலூன்களாவது வாங்கி வந்திருப்பாள். ஒரு பொக்கே. இன்று பள்ளிக்கு வெக்கேஷன் போட்டுவிட்டு ஜான், பலூன்களைக் கையில் வைத்துக் கொண்டு வாய் நிறைய பல்லோடு நிற்பான். நினைவுகள் மனதில் இனிமையாக ஓட அந்த சந்தோசம் என் முகத்தில் சிரிப்பாக பூத்தது.

பக்கத்தில் உட்கார்ந்திருந்தவரும் அர்த்தத்துடன் என்னைப் பார்த்துச் சிரித்தார்.

விமானம் ராச்சஸ்டரில் தரை இறங்கியது. எல்லோருக்கும் முன்னால் இறங்கி வெளியே ஓடி வந்தேன். விசிட்டர்ஸ் லவுஞ்சில் ஜானின் முகத்தையும், மிஷேலின் முகத்தையும் தேடினேன். காணவில்லை. பலூன் பேனர் பொக்கே. எதுவுமே கண்ணுக்குத் தெரியவில்லை. பேனரை எதிர்பார்த்து வந்த எனக்கு கோபம் தலைக்கு மேல் பேனர் கட்டியது. பேக்கேஜ் கலெக்ட் செய்தேன்.

“டாக்ஸி” அருகில் வந்து நின்ற டாக்ஸியில் பேக்கேஜைப் போட்டுவிட்டு சாய்ந்து உட்கார்ந்தேன்.

“எங்க போகணும்?”

எங்கே போவது? மிஷேலுக்கு என்ன ஆனது? ஏன் வரவில்லை. குழப்பத்துடன் டாக்ஸியை அப்பார்ட்மெண்டுக்கு விடச் சொன்னேன். டாக்ஸியை கட் செய்யாமல், அக்சஸ் போர்டில் அப்பார்ட்மெண்ட் நம்பருக்கு எதிரில் இருந்த பஸ்ஸரை அழுத்தினேன். மூன்று முறை அழுத்தியும் கதவு திறக்கவில்லை. ஷிட். கதவை உதைத்து விட்டு வெளியே வந்தேன்.

அடுத்தது என்ன?? மிஷேலை அவள் வேலை செய்யும் ரெஸ்டாரண்டில் போய் பார்க்கலாமா? வேண்டாம். இருக்கும் கோபத்துக்கு பொது இடம் என்று பார்க்காமல் எதையாவது செய்துவிட்டால் எனக்குத்தான் அசிங்கம். பேசாமல்  ஜானை ஸ்கூலுக்குப் போய் பார்த்தால் என்ன?

“பர்கர் மிடில் ஸ்கூலுக்குப் போ” என்று டாக்ஸி டிரைவருக்கு உத்தரவிட்டுவிட்டு ஜன்னல் வழி வெளியே பார்த்தேன். என் மனதின் வெறுமையை குளிர்கால மரங்கள் பிரதிபலித்தன.

வரவேற்பறையில் கம்ப்யூட்டருக்குப் பின்னால் உட்கார்ந்திருந்தவளிடம், “ஜான் ஸ்டாக்கர், செவன்த் க்ரேட்” என்றேன். எதையோ தட்டிப் பார்த்துவிட்டு, “அவன் வேறு பள்ளிக்கு மாற்றலாகிப் போய்விட்டானே” என்றாள்.

எனக்குள் சுடுநீரில் வைத்த தெர்மாமீட்டரின் பாதரச மட்டத்தைப் போல பதட்டம் அதிகமாகியது. “எந்தப் பள்ளி?”

“ஸ்ப்ரை மிடில் ஸ்கூல்”

“அது வெப்ஸ்டர்ல இருக்கே?”

“அதே ஸ்கூல்தான் மிஸ்டர்.”

What the fuck? யாரைக் கேட்டு ஜானை வேறு பள்ளிக்கு மாற்றினாள்? ரஷ்ஷில் இருப்பவன் எதற்காக வெப்ஸ்டர் ஸ்கூலில் சேர வேண்டும்? என்ன விளையாட்டு இது? எனக்கு ஃபோன் செய்யத்தான் முடியாது. ஒரு லெட்டர் போட்டிருக்கலாமே? என் கோபத்தை டாக்ஸியின் கதவில் காட்டினேன். ஸ்ப்ரை ஸ்கூலுக்கு விடச் சொல்லி அமர்ந்தேன்.

ஸ்ப்ரை ஸ்கூல். வரவேற்பறையில் கேட்டதில் ஜான் அங்கே படிப்பது உறுதியானது. அவனை வரச்சொல்லிவிட்டு, அங்கே இருந்த சோஃபாவில் உட்கார்ந்தேன். இப்போது கோபம் ஒரு மூலைக்குப் போய் 5 வருடம் பிரிச்த மகனை சந்திக்கப் போகும் உற்சாகம் முகத்தின் மேல் உட்கார்ந்த்து. ஜான் வந்தான். “டாடீ” என்று ஓடி வந்து கட்டிக் கொள்வான் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். வந்து எதிரில் நின்று “ஹாய் டாட்” என்றான். உற்சாகம் வடிந்த நிலையில் அவனைப் பார்த்தேன்.

வளர்ந்து விட்டான். 13 வயதாகிவிட்டது. டீனேஜர். இப்போதும் ஓடிவந்து கட்டிக்கொள்வான் என்று எதிர்பார்த்தது என் தவறு என்று சமாதானம் சொல்லிக்கொண்டு, “எப்படி இருக்கிறாய்?” என்றேன்.

“எப்ப வந்தீங்க டாட்?” சோஃபாவில் என் அருகே அமர்ந்தான்.

“இப்போதான் ஜான். ஏர்ப்போர்டில் இறங்கி பர்கர் மிடில் ஸ்கூல் போனேன். நீ இங்கே ட்ரான்ஸ்ஃபராகி வந்துட்டதா சொன்னாங்க. அதான் இங்க வந்தேன். ஏன் ஸ்கூல் மாத்தினீங்க?”

“நீங்க ஏன்ப்பா வரப்போறீங்கன்னு சொல்லலை?”

“நான் அம்மாவுக்கு கால் பண்ணினேன். வாய்ஸ் மெசேஜ் போனது. வாய்ஸ் மெயில் விட்டேனே? அம்மா சொல்லலையா?” கோபம், அதிர்ச்சி. ஆச்சரியம். குழப்பம். என் மனம் என்ன நிலையில் இருக்கிறது என்பதை என்னாலே உணர முடியவில்லை.

“சொல்லலை. சொல்லவும் மாட்டாங்க”

“என்ன சொல்ற?”

“அம்மா இப்போ ஜோ கூட இருக்காங்க. She is pregnant too”

ஒரு டீனேஜ் மகனிடம் இருந்து தன் குடும்ப வாழ்க்கையின் இன்றைய நிலையைத் தெரிந்து கொள்ளும் முதல் தகப்பன் நானாகத்தான் இருப்பேன். உடைந்து போனேன். என் முகம் என் மனநிலையைப் பிரதிபலித்திருக்க வேண்டும்.  மடியில் இருந்த என் கையின் மீது அவன் கையை வைத்து அழுத்தினான். “டாட். நீங்க எப்பிடி ஃபீல் பண்றீங்கன்னு என்னால புரிஞ்சிக்க முடியுது”

”நோ சன். உன்னால புரிஞ்சிக்க முடியாது. எனி வே, நான் மேரியாட்ல தங்கப் போறேன். நாளைக்கு லீவ் தானே? என்னைப் பார்க்க ஹோட்டலுக்கு வர்றியா?”

“சரிப்பா”

எப்படி ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தேன் என்று தெரியவில்லை. அறையில் சென்று பெட்டியை எறிந்துவிட்டு நேராக ஓட்டலின் பாரில் சென்று விழுந்தேன்.

You have had enough sir. Please go to your room” என்று பார் டெண்டர் அடுத்த லார்ஜை மறுத்தான்.

“நீ யாருடா மறுக்க” என்று எம்பி அவன் சட்டையைப் பிடித்தேன். என் ஆத்திரத்தை யார் மீதாவது காட்ட வேண்டும் என்று வெறி கிளம்பியது. பக்கத்தில் உட்கார்ந்திருந்தவன் குடித்துவிட்டு மேஜை மீது வைத்திருந்த பியர் பாட்டிலை எடுத்து அவன் தலையில் உடைக்க ஓங்கினேன். பின்னால் இருந்து பவுன்சர்ஸ் இருவர் என்னைப் பிடித்து இழுத்தனர். அதீத போதையிலும் பார் டென்டரை அடிக்க எழுந்து குதிகாலால் எம்பி நின்றதாலும் பேலன்ஸ் தவறி கீழே விழுந்தேன். என் சட்டைக் காலரைப் பிடித்து எழுப்பி நிறுத்தினான் ஒருவன். கிட்டத்தட்ட என் மூக்கின் மேல் அவன் மூக்கை வைத்து, “சார். நீங்கள் உங்க ரூமுக்குப் போறதுதான் உங்களுக்கு நல்லது. இல்லைன்னா போலீஸ்ல பிடிச்சிக் குடுக்க வேண்டியிருக்கும்”

“உன் பேரென்ன?” என்றேன்.

“ஜோ” என்றான். என் கையில் இருந்த பியர் பாட்டிலை அவன் தலையில் இறக்கினேன்.

அந்த பத்துக்குப் பத்து அறையின் தரையில் மல்லாக்கக் கிடந்தேன்.  அறையின் ஒரு பக்கம் கான்க்ரீட் சுவரும் மூன்று பக்கங்களிலும் இரும்புக் கம்பிகளாலான சுவர்களும் இருந்தன. சுவற்றை ஒட்டி ஒரு பெஞ்ச் போடப்பட்டு இருந்த்து. அந்த பெஞ்சின் குஷன் அழுந்தி மரத்தோடு ஒட்டியிருக்கும் அளவுக்கு கனமான ஒருவன் அதன் மீது படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான்ணவன் குறட்டைச் சத்தம் கம்பிகளில் பட்டு எதிரொலித்தது. கம்பிகளுக்கு அந்தப் பக்கம் யுனிஃபார்ம் அணிந்த ரிட்டயராகும் வயதிலிருந்த் அதிகாரி ஒருவர் கால்களைத் தூக்கி மேஜை மீது போட்டுக் கொண்டு போர்ட்டபிள் டிவியில் ஓடும் பேஸ்கட் பாலில் லயித்திருந்தார்.

என்னைத் தவிர்த்து உலகமே கவலை இல்லாமல் இருக்கிறது. எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும்? இதோ இந்த போலீஸ்காரனை விட அதிக ஆபத்தான பணியில் நாட்டைக் காப்பாற்றிவிட்டு வந்திருக்கிறேன். இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட…

அந்த நெயில் பாம் என் நெஞ்சில் வெடித்திருக்கலாம். மிஷேல் என் நினைவாக அமெரிக்கக் கொடியையாவது வைத்துக் கொண்டிருந்திருப்பாள். எல்லாம் போச்சு. நாட்டுக்காக பாலைவனத்தில் சூட்டிலும், குளிரிலும் போராளிகளை வேட்டையாடியது இதற்குத் தானா? இதுதான் மிஞ்சும் என்று தெரிந்தால் ஒரு பயலும் ராணுவத்துக்குப் போக மாட்டானே. ஏண்டா எனக்கு மட்டும் இது நடக்குது?

கடைசி வரி வாயை விட்டு வெளியே தெரித்து விட்டது, சற்று அதிகப் படியாகவே. படுத்துக் கொன்டிருந்த தடியன் கண்களைத் திறந்து தலையை மட்டும் திருப்பி என்னைப் பார்த்தான். போலிஸ்காரர் டிவியின் சத்தத்தைக் குறைத்துவிட்டு எழுந்து லாக்கப் நோக்கி வந்தார்.
“மிஸ்டர் ஜான். ஹோட்டல் மேனேஜர் உம்மேல கேஸ் எதும் போட வேண்டாம். நைட் மட்டும் லாக்கப்ல வச்சிருந்து காலைல விடச் சொல்லிட்டாங்க. இல்லைன்னா மூணு வருசம் ஜெயில்ல கிடக்க வேண்டியிருந்திருக்கும். ஆமா ,உனக்கென்ன பிரச்சனை? கேர்ள் ஃப்ரன்ட் விட்டுட்டுப் போயிட்டாளா?”

“இல்லை”

“வேற என்ன? வேலை போயிருச்சா?”

“இல்லை”

“இது ரெண்டுக்கு தானப்பா இந்த வயசுப் பசங்க முதலிடம் குடுக்குறீங்க? அப்பா அம்மா மகன் மகள் எல்லாம் அதுக்கப்புறம் தானே?” திரும்பி நாற்காலியை நோக்கி நடக்கத் துவங்கினார்.

நான் அவர் முதுகையே கூர்மையாகப் பார்த்தேன். “உன் மனைவி நீ வேலைக்கு வெளியூர் போயிருக்கிற சமயம் இன்னொருத்தன் கூடப் போயிட்டா இதைத்தான் சொல்லுவியா? இடுப்புல இருக்கிற துப்பாக்கியால சுட்டுப் போட்டுர மாட்டியா?”

போய்க் கொண்டிருந்தவர் திரும்பினார். “அதான் உன் பிரச்சனையா? என்னாச்சி. என் கிட்ட சொல்லாம்னா சொல்லு.”

எனக்கும் யாரிடமாவது சொல்ல வேண்டும் போல இருந்தது. லாக்கப் கதவைத் திறந்து இரண்டு நாற்காலிகளை உள்ளே கொண்டு வந்து போட்டார். அவளைச் சந்தித்ததில் ஆரம்பித்து, நேற்று இரவு பாரில் நடந்த்து வரை சொல்லி முடிக்கும் போது அவரது கைகளில் முகத்தைப் புதைத்து அழுது கொண்டிருந்தேன்.

அழுது அடங்கும் வரை காத்திருந்தார். “இப்ப உனக்கு உன் மனைவி, அவளோட புது பாய் ஃப்ரண்ட் இவங்க மேல கோபமா, இல்லை உனக்கு ஏன் இப்பிடி நடக்குதுங்கிற சுயபச்சாதாபமா? ரெண்டுல எது?”

பதில் தெரியவில்லை. சுயபச்சாதாபம் தான் கோபமாக வெளிப்படுகிறது போல. அவரிடம் அதையே சொன்னேன்.

“நீ சின்ன வயசுல ஆசையா வச்சிருந்த பொருள் எதாவது இருக்கா?”

யோசித்தேன். ஸ்விஸ் வாட்ச். “எங்கப்பா எனக்கு முதல் முதலா யுரோப் டூர் போயிட்டு வந்தப்ப  வாங்கிட்டு வந்த ஸ்விஸ் ஆர்மி வாட்ச் ஒண்ணு ரொம்ப நாள் வச்சிருந்தேன்”

“இப்ப எங்க அது?”

“அது.. அது.. ஸ்ட்ராப் பிஞ்சிருச்சி. கொஞ்ச நாள் பைக்குள்ளயே வச்சிட்டு திரிஞ்சேன். அப்புறம் கைல கட்டுற மாதிரி வேற ஒரு வாட்ச் வாங்கினதும் அதத் தூக்கிப் போட்டுட்டேன்.”

“ஏன்?”

“கைல கட்ட முடியலை”

“கைல கட்ட முடியலைன்ன என்ன? பைல வச்சிருக்கலாமே?”

அந்தாள் முட்டாள்தனமாகப் பேசுவது போல தோன்றியது. அவரை லேசாக முறைத்தேன். “கைல கட்டியிருக்கிற வாட்ச்ல டைம் பார்க்கிறது ஈஸியா, இல்லை பைல இருந்து எடுத்து எடுத்து பார்க்கிறது ஈஸியா?”

“ம்ம்ம்.. சாதாரண வாட்சே ஈஸியா எடுத்துப் பார்க்கிற தூரத்துல இருக்கணும்னு எதிர்பாக்கிறோம். கட்டிக்கிட்ட கணவன் தூரமாவே இருந்தா எப்பிடி ?”

“யோவ் வாட்சும் கணவனும் ஒண்ணாய்யா? தன்னைத் தூக்கிப் போட்டுட்டான்னு வாட்சுக்குத் தெரியாது. ஆனா மனுசனுக்குத் தெரியுமேய்யா?”

“அதே தான் ஜான். வாட்ச் உனக்கு மணி காட்டுது. நீ அதை லவ் பண்ற. உனக்கு உபயோகமாகாத தூரத்துக்கு வாட்ச் போயிருச்சி. நீ அதைத் தூக்கிப் போட்டுட்ட. கணவன் மனைவியோட பரஸ்பர அன்பும் அப்பிடித்தான்பா. அன்புங்கிறது குடுத்து வாங்குறதுதானே? குடுத்து வாங்க முடியிற தூரத்துல, அட்லீஸ்ட் ஃபோன்லயோ, இப்ப வந்திருக்கே, இன்டர்நெட், அதுலயோ பார்த்து பகிர்ந்துக்கிட்டே இருந்தாத்தானே ஊறும். தானே ஊறிக்கிட்டு இருக்க அது என்ன ஊத்தா?”

நான் பதில் சொல்லாமல் அவரையே பார்த்தேன்.

“நீ அவள்ல ஆரம்பிக்கலை. அவளோட ஏன் முடிச்சிக்கணும். அவ எப்பிடி தனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்குன்னு அதைப் பாத்துக்கிட்டுப் போறாளோ, அது மாதிரி உனக்குன்னும் ஒரு வாழ்க்கை இருக்கே. அதை நோக்கிப் போ. ஏன் இந்த மேகத்து நிழல்கிட்டயே நிக்கிற?”

இவர் சொல்வதிலும் பாயின்ட் இருக்கிறது. நான் பார்க்காத ஏமாற்றமா? என்ன என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு செய்திருக்கலாம். நாளை போய் நான் அவள் முன்னால் நின்றால் அவள் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்? உள்ளுக்குள் புழுங்கி என்னிடம் முகம் காட்ட முடியாமல், வாயில் வார்த்தை எதுவும் வராமல் நாக்கு உலர்ந்து விக்கித்து நிற்பாள் அல்லவா? மனசுக்குள் அவளை அப்படிப் பார்க்க வேண்டும் என்ற குரூரம் எட்டிப் பார்த்தது.

காலையில் போலிஸ் ஸ்டேஷனில் இருந்து ஹோட்டலுக்குப் போனதும் குளித்து விட்டு உடை மாற்றிக் கொண்டு டாக்ஸி எடுத்தேன். ஜோ நடத்தும் அந்த ரெஸ்டாரன்ட் நகரின் மையத்தில் இருக்கிறது. எதிரே இருந்த டங்கின் டோனட்ஸில் ஒரு காபியையும் டோனட்டையும் எடுத்துக்கொண்டு ஜன்னலை ஒட்டியிருந்த ஒரு டேபிளில் அமர்ந்தேன். ரெஸ்டாரன்ட் இன்னும் திறக்கப்படவில்லை.

பத்து மணிக்கெல்லாம் ஒரு ஓட்டை ஹோன்டா அக்கார்ட் வந்து நின்றது. அடையாளமே தெரியாத அளவுக்குக் கார் மட்டுமல்ல, அதிலிருந்து இறங்கிய மிஷேலும் மாறிப் போயிருந்தாள். காலம் இவ்வளவு மாற்றத்தையா கொண்டு வரும்? கண்கள் இடுங்கி, கன்னம் ஒட்டி மண்டையோட்டின் மீது தோல் போர்த்தியது போல மாறிப் போயிருந்தது மிஷேலின் முகம். உருவத்தில் இளைத்திருந்தாள். இளைத்து என்றால் நல்ல விதமாக அல்ல. நோயாளியைப் போல. ஆனாலும் அந்த உதட்டில் ஒரு புன்னகை ஒட்டியிருந்தது. கண்கள் தெரியவில்லையென்றாலும், மிஷேல் புன்னகைக்கும் போதெல்லாம் கண்கள் சிரிக்கும். சந்தோசமாக இல்லாவிட்டால் அவள் முகத்தில் புன்னகை தோன்றாது. கடைசியாக அவளைப் பார்த்த போது அவள் முகத்தில் இந்த சந்தோசம் இல்லை. இப்போது இருக்கிறது. என்னைப் பார்த்தால் அந்த சந்தோசம் எங்கே போகும்? என்ன ஆவாள்? ஏற்கனவே இடுங்கிய கண்கள் இன்னமும் சிறியதாகிப் போகும். புன்னகைக்கும் வாய் கோணிக் கொள்ளும். அதைப் பார்க்க எனக்கு மனமில்லை. சத்தம் காட்டாமல், டங்கின் டோனட்ஸின் இன்னொரு வாசல் வழியாக வெளியேறினேன்.

ஹோட்டலில் ஜான் காத்திருந்தான். இரவு நடந்த களேபரத்தில் ஜானை வரச்சொன்னதையே மறந்து போனேன். அன்றைய பொழுதை ஜானுடன் கழித்தேன். அவன் கேட்ட்தையெல்லாம் வாங்கிக் கொடுத்தேன். அவனும் அதிகம் கேட்கவில்லை. அம்மாவைப் பற்றி பேசுவதைத் தவிர்த்தான். நானும் கேட்கவில்லை.

அந்த இரவும் எனக்குத் தூக்கம் வரவேயில்லை. ஆனால் முந்தைய இரவுக்கும் இந்த இரவுக்கும் பெருத்த வித்தியாசம் இருந்த்து.

திங்கட்கிழமை. ஓட்டலை செக் அவுட் செய்துவிட்டு ரெண்டல் கார் எடுத்தேன். ஸ்ப்ரை மிடில் ஸ்கூல்.

“ஜான்!! அப்பா லூயிஸ்டனுக்கே மூவ் பண்ணப் போறேன். அங்க ஒரு வேலை கிடைச்சதும், நீ அப்பாக்கூடவே வந்து இருப்பியா?”

“இருக்கேன் பா”

“தேங்க்ஸ். லூயிஸ்டன் போயிட்டு உனக்குக் கூப்புடுறேன். ஓக்கே”

“ஓக்கே”

த்ரூவே ஆச்சரியமாக காலியாக இருந்தது. சாலையில் கண்கள் இருந்தாலும் நினைவு மிஷேலைச் சுற்றியது. வாழ்க்கையும் இந்த த்ருவே போலத் தான். தடங்கல் ஏதும் இல்லாமல் இருந்தால் வாழ்க்கைப் பயணமும் தடை இல்லாமல் போய்க் கொண்டே இருக்கும். பக்கத்தில் வேகமக நகரும் மரங்களைப் போல மனிதர்களும் கடந்து போய் விடுவார்கள். 

(அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரின் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை வைத்து புனையப்பட்டது)

5 comments:

Unknown said...

Nalla irukku

muthukumaran said...

அமெரிக்கன் கதை. இருந்தாலும் இந்தியன் டச் இருக்கு :-))

bandhu said...

மிக வித்யாசமான களம். அழகாக கண்முன்னே கொண்டு வந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

ANaND said...

really super

Unknown said...

நன்றி விஜயகுமார்

நன்றி முத்து

நன்றி பந்து

நன்றி ஆனந்த்