2009ம்
ஆண்டு காய்கறி வெட்டும் போது சுண்டுவிரலில் வெட்டி tendon அறுந்து போனது. அதற்காக சர்ஜரி
செய்ய வேண்டியும் நேர்ந்தது. அந்த நேரத்தில் இரண்டு வாரங்கள் வலது கையை உபயோகப் படுத்த
முடியாமல் இருந்தது. அந்த நேரத்தில் தான் மாற்றுத்திறனாளிகள் எவ்வளவு பெரிய சவாலை சந்தித்து
வருகிறார்கள் என்பதை உணர முடிந்தது. பிறவியிலேயே குறை இருப்பவர்களை விட இடையில் கையையோ
காலையோ இழந்தவர்களுக்குக் கஷ்டம் அதிகம். எங்கே வலிக்கிறது, எப்படி வலிக்கிறது, என்று
வாய் விட்டு சொல்லக் கூடிய மனிதர்களுக்கே இது இவ்வளவு கஷ்டத்தை அளிக்கும்போது வாய்
திறந்து சொல்ல முடியாத விலங்குகளுக்கு இது போல நிகழ்ந்தால்? அதுவும் ஒரு டால்ஃபினுக்கு
நீந்த மிகவும் அத்தியாவசியான வாலே துண்டாகிப் போனால்? அப்படி ஒரு விபத்தில் வாலை இழந்த
டால்ஃபினின் கதை தான் Dolphin Tale.
க்ளியர்
வாட்டர் ஃப்ளோரிடாவில் வசிக்கும் Sawyer என்ற 11 வயது சிறுவன், அவன் தந்தை ஐந்து வருடங்களுக்கு
முன்பு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போனதிலிருந்து தனிமையிலேயே பொழுதைக் கழிக்கிறான்.
படிப்பிலும் நாட்டமில்லாமல் இருக்கிறான். அவனை பழைய நிலைக்குக் கொண்டு வர அவனது கசின்,
நீச்சல் வீரன், Kyle, முயற்சி செய்கிறான்.
ஒரு
நாள் கோடைக்கால பள்ளிக்கூடத்துக்கு போகும் வழியில் கடற்கரையில் நண்டு பிடிக்க விரித்த
வலையில் சிக்கிய டால்ஃபின் ஒன்று கரையில் ஒதுங்கி இருப்பதைப் பார்க்கிறான்.
ClearWater Marine Hospitalலில் அந்த டால்ஃபினுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் க்ளேயின் 11 வயது மகள்
Hazelலுடன் நட்பு ஏற்படுகிறது. ஹேசல் சாயரை அந்த டால்ஃபினைப் பார்க்க அழைத்துச் செல்கிறாள்.
டால்ஃபினுக்கு விண்டர் என்று பெயர் சூட்டுகிறாள். தன்னைக் காப்பாற்றிய சாயரை விண்டர்
அடையாளம் கண்டுகொள்கிறது. வாலில் ரத்த ஓட்டம் இல்லாமல் இன்ஃபெக்ஷன் அதிகமானதால் சர்ஜரி
செய்து வாலை நீக்கிவிடுகிறார் க்ளே. வால் நீக்கப்பட்ட விண்டரால் நீந்த முடியாததால்
எப்போதும் இரண்டு பேர் தண்ணீருக்குள் அதைத் தாங்கி நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
எதையும் சாப்பிட மறுக்கும் விண்டர் சாயர் கொடுக்கும் உணவை விரும்பிச் சாப்பிடுகிறது.
இதனால் டாக்டர் க்ளே, சாயரை விண்டரின் சிகிச்சைக்கு உதவி செய்யச் சொல்கிறார்.
கோடைப்
பள்ளிக்குப் போகாமல் மட்டமடித்து ஹாஸ்பிட்டலிலேயே நேரத்தை சாயர் கழிப்பது அவன் அம்மாவிற்குத்
தெரிய வருகிறது. ஆனால், இந்த டால்ஃபினோடு பழக ஆரம்பித்த பின்னர் தன் மகனின் போக்கில்
ஏற்படும் நல்ல விதமான மாற்றத்தை உணர்ந்த அம்மா ஆசிரியரிடம் பேசி அந்த ஹாஸ்பிட்டலிலேயே
உதவி செய்ய அனுமதிக்கிறார். விண்டரும் மேலும் கீழுமாக வாலை ஆட்டாமல் இடவலமாக ஆட்டி
நீந்தப் பழகுகிறது. இடையில் ராணுவத்திற்குச் சென்ற Kyle, ஒரு வெடிவிபத்தில் காலை இழந்து
ஊர் திரும்புகிறான். ஆரம்பத்தில் உறவினர் யாரையும் சந்திக்க விரும்பாத கைல் ஊனமுற்ற
டால்ஃபினைப் பார்த்து மனம் மாறி பெற்றொருடன் சென்று தங்குகிறான்.
வழக்கத்துக்கு
மாறாக இடவலமாக வாலை ஆட்டுவதால் விண்டரின் முதுகெலும்பு பாதிக்கப் படுவதை அறிந்த டாக்டர்
க்ளே, இதனால் விண்டர் பாரலஸிஸால் பாதிக்கலாம் என கணிக்கிறார். அப்போது, ராணுவ
மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை கால் (prosthetic) செய்யும் நிபுணர்
டாக்டர்.மெக்கார்த்தி டால்ஃபினுக்கு செயற்கை வால் செய்ய உடன்படுகிறார். மருத்துவமனையை
பராமரிக்கவே நிதி இல்லாமல் திணறும் போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ், இந்த செயற்கை வாலுக்கு
செலவிட முடியாது என்று சொல்லிவிடுகின்றனர். டாக்டர் மெக்கார்த்தி இலவசமாகவே வால் செய்து
தர சம்மதிக்கிறார். அவர் செய்து தரும் வாலை விண்டர் நிராகரிக்கிறது.
அப்போது
ஃப்ளோரிடா மாநிலத்தைத் தாக்கும் leRoy புயலால் மருத்துவமனைக்கு அரை மில்லியன் டாலர்
நஷ்டமாகிறது. இதற்கு மேல் மருத்துவமனையை நடத்துவது சிரமம் என்று ஒரு தொழிலதிபருக்கு
ஹோட்டல் கட்ட இடத்தை விற்க முடிவு செய்கிறார்கள். எல்லா விலங்குகளுக்கும் வேறு இடம்
கிடைத்துவிட, வாலில்லாத விண்டரை வாங்க ஆள் இல்லை. டாக்டர் மெக்கார்த்தியையும் வால்
செய்வதை நிறுத்தச் சொல்லிவிடுகிறார் டாக்டர் க்லே. இந்த செய்தி சாயரையும், ஹேசலையும்
கவலைக்குள் ஆழ்த்துகிறது.
இறுதியில்
என்ன நடந்தது? விண்டருக்கு வால் கிடைத்ததா? மருத்துவமனை ஹோட்டலாகாமல் பிழைத்ததா? என்பதை
நெகிழ்வாக சொல்லியிருக்கிறார்கள்.
இந்தப்
படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. 2005ல் ஃப்ளோரிடாவின் க்ளியர்
வாட்டர் நகரில் கடற்கரையில் நண்டு வலையில் சிக்கி வாலை இழந்த இரண்டு மாதக் குழந்தையான
டால்ஃபின் விண்டர் இன்றும் க்ளியர் வாட்டர் மெரைன் ஹாஸ்பிட்டலில் இருக்கிறது. இந்தப்
படத்தில் விண்டராகவே நடித்தும் உள்ளது. நிஜ டால்ஃபினை நீங்கள் பார்க்க www.seewinter.com போகலாம்.
சாயராக
நடித்த சிறுவன் போலார் எக்ஸ்பிரஸில் வரும் அனிமேஷன் பாத்திரத்தை நினைவு படுத்துகிறான்.
டாக்டர் மெக்கார்த்தியாக வரும் Morgan Freeman, படத்தில் சில காட்சிகளே வந்தாலும் ஒரு
கையைத் தாங்கிக் கொண்டே நடிக்கும் டாக்டர் பாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். விண்டர், தான் டிசைன் செய்த வாலை ரிஜெக்ட் செய்யும் காட்சியில் கண்களின் ஏமாற்றத்தை அருமையாக பிரதிபலிக்கிறார்.
http://www.imdb.com/title/tt1564349/
http://www.imdb.com/title/tt1564349/
3 comments:
Nice review
நல்ல விமர்சனம் தினேஷ்! அனைத்து உயிர்களுக்கும் வலி ஒன்றே என்று செய்தி சொல்லும் நல்ல கதை. கதை படித்திருக்கிறேன், படம் இன்னும் பார்க்கவில்லை.
நன்றி விஜயகுமார் & கிரேஸ்.
Post a Comment