Sunday, January 31, 2010

திரௌபதியின் அட்சய பாத்திரம்

“முகிலன் சாப்பாடு ரெடி. சாப்புட வரலாம்” - வலையுலகில் இருந்த என்னை தங்கமணியின் குரல் பூவுலகுக்கு அழைத்து வந்தது.


படியிறங்கி வரும்போதே வறுத்த உருளைக்கிழங்கு வாசம் மூக்கைத் துளைத்தது. 


"என்ன சாப்பாடுமா?”


“சாம்பாரும் உருளைக்கிழங்கு வறுவலும்” தங்கமணி ஜூனியர் முகிலனுக்கு பருப்பு சாதம் பிசைந்து கொண்டே பதில் சொன்னார்.


நான் போய் கழுவி அடுக்கியிருந்ததில் ஒரு தட்டை எடுத்து அதில் சோறையும் சாம்பாரையும் சரி பங்கு ஊற்றி, அதில் பாதி அளவுக்கு உருளைக்கிழங்கு வறுவலை வைத்துக்கொண்டு டைனிங் டேபிளில் உட்கார்ந்தேன்.


எதிரே தங்கமணி ஜூ.முகிலனுக்கு சோறை ஊட்டிக்கொண்டே, “முகிலன், உனக்கு மகாபாரதம் தெரியுமா?” 


“தெரியுமான்னா? பாத்திருக்கேன். டிவில மஹாஆஆஆஆஅபாரதம்னு.. போடுவாங்களே?”


“அதுல ஒரு கிளைக்கதையிருக்கு. கேள்விப் பட்டிருக்கியா?”


சுவாரசியமாகி பிசைய ஆரம்பித்த கையை எடுத்து ஒவ்வொரு விரலாக சப்பிக் கொண்டே “என்ன கதை?”


“கௌரவர்கள்கிட்ட சூதாட்டத்துல தோத்துப் போன பாண்டவர்கள், 12 வருசம் காட்டுல இருந்தாங்களா?”


“ஆமா. அது சரி, இந்த மகாபாரதமும் ராமாயணமும் ஆரிய-திராவிட போரையும், ஆரியர்கள் இந்தியாவுல பரவுனதையும் தான் சொல்லுதுன்னு ஒரு ப்ளாக்ல படிச்சேனே? அது உண்மையா?”


“உண்மையா இருக்கலாம். ஆரியர்களை எல்லாம் தேவர்களாவும், திராவிடர்களையெல்லாம் ராட்சசர்களாவும் காட்டியிருக்காங்கன்னு சில பேர் சொல்லி கேட்டிருக்கேன். ஆனா இப்போ அது நம்ம கதைக்குத் தேவையில்லை”


“ஓ யெஸ். ஓக்கே. மேல சொல்லு”


“அப்பிடி அவங்க காட்டுல இருந்தப்போ அவங்க கிட்ட ஒரு அட்சயப்பாத்திரம் இருந்திச்சி. திரௌபதி அதில இருந்து அறுசுவை உணவையும் வரவழச்சி பாண்டியர்கள் ச்சீ, பாண்டவர்கள் எல்லாம் சாப்புட்டு வந்தாங்க. அதோட இல்லாதவங்களுக்கும் அன்னதானம் குடுத்துட்டு வந்தாங்க”


“இங்க பாத்தியா? ஆரியப்பசங்களுக்கு மட்டும் காட்டுல இருந்தாலும் அறுசுவை உணவு கேக்குது. நான் திராவிடனா பொறந்துட்டதால, அமெரிக்கால இருந்தாக்கூட ரெண்டு சுவைக்கு மேல தேற மாட்டேங்குது”


“மறுபடியும் ட்ராக் மாத்துற”


“ஓ சாரி சாரி. நீ சொல்லு”


“அந்த அட்சயப் பாத்திரத்துல ஒரே ஒரு லிமிட்டேஷன்”


“என்ன?”

“ஒரு தடவை கழுவி கவுத்தியாச்சின்னா அடுத்த நாள் தான் அதை யூஸ் பண்ண முடியும். நடுவுல அது வெறும் பாத்திரமா தான் இருக்கும்”



“அதான சும்மா வருவாளா சுகுமாரி?”


“இப்பிடி இவங்க காட்டுக்குப் போனப்பறமும் சுகமா சாப்புடுறதக் கேள்விப்பட்ட துரியோதனன், இதைக் கவுக்க எதாவது செய்யணும்னு முடிவு பண்ணான்”


“அடப்பாவி. என்ன பண்ணான்?” தட்டில் சாப்பாடு இருப்பதையே மறந்து போனேன். 


“ஒரு நாள் துர்வாச முனிவரைக் கூப்புட்டு, நல்லா விருந்து வச்சான். அவரு சிஷ்ய கோடிகளோட சாப்புட்டு முடிஞ்சதும் அவர் கிட்ட பாண்டவர்கள் வீட்டுக்கும் நீங்க போய் சாப்புடணும் அப்பிடின்னு கோரிக்கை வச்சான். அவரும் சரின்னு எல்லா சிஷ்யர்களையும் கூப்பிட்டுக்கிட்டு கிளம்பி பாண்டவர்கள் குடிலுக்குப் போனாரு”


“நம்ம சாமியார்களுக்கு அப்ப இருந்தே சோறு கண்ட இடம் சொர்க்கம் போல”


“அய்யோ பாவம், அவரு அங்க ரீச் ஆறதுக்கு கொஞ்ச நேரம் முன்னால தான் திரௌபதி அட்சயப் பாத்திரத்த கழுவி கவுத்திட்டா?”


“அய்யோ.. துர்வாசர் தான மூக்கு மேல கோவம் வர்ற முனிவர்?”


“அட கரெக்டா சொல்ற? இதெல்லாம் எப்பிடித் தெரியும்?”


“அதான் எனக்கு கோவம் வர்றப்ப எல்லாம் நீ சொல்லி சொல்லி காட்டுறியே. மேல சொல்லு?” ஜூனியர் முகிலன், சாப்பிட்டு முடித்துவிட்டு என் தட்டில் இருக்கும் சோறை எடுக்க வந்தவனை, மடக்கி மடியில் உட்கார வைத்தேன்.


“அவரு வந்து நானும் என் சிஷ்யர்களும் சாப்புட வந்திருக்கோம். போய் குளிச்சிட்டு வர்றோம் நல்ல விருந்து ரெடி பண்ணுன்னு சொல்லிட்டு போயிட்டார். பாண்டவர்களுக்கோ என்ன பண்றதுன்னு தெரியலை. திரௌபதி டக்குன்னு கிருஷ்ணா அப்பிடின்னு கூப்பிட்டா. அவ குரல் கேட்டதும் ஓடோடி வந்தாரு கிருஷ்ணர்”


“தினம் தினம் கோடிக்கணக்கானவுங்க சாப்புட எதுவும் இல்லாம கஷ்டப்படுறாங்க. அவங்க கூப்புடுறதெல்லாம் இந்தக் கிருஷ்ணன் காதுல விழாது. இது மட்டும் விழுந்திருச்சா?”


“என்ன விஷயம்னு கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டு திரௌபதியக் கூப்பிட்டு, அந்த அட்சயப் பாத்திரத்தை எடுத்துட்டு வர சொன்னாரு. திரௌபதியும் எடுத்துட்டு வந்தா”


“எதோ மேஜிக் பண்ணி அதை வொர்க் பண்ண வச்சிட்டாராக்கும்?”


“குறுக்க குறுக்க பேசாம கதையக் கேளு”


“சரி சரி. சொல்லு”


“அந்தப் பாத்திரத்தை திரௌபதி சரியாக் கழுவாம உள்ள ஒரே ஒரு பருக்கை மட்டும் ஒட்டியிருந்தது. கிருஷ்ணர் அதை எடுத்து அவர் வாயில போட்டுக்கிட்டாரு”


“அப்புறம்?”


“அவர்தான் உலகையே ரட்சிக்கிறவர் ஆச்சே”


“ரட்சிக்கிறவர் இயேசு இல்லையா?”


“அய்யோ, இவரும் தான்”


“சரி. ஓக்கே. மேல சொல்லு”


“அதுனால அவரு அந்தப் பருக்கைய சாப்புட்டதும் உலகத்துல உள்ள எல்லா ஜீவராசிகளோட பசியும் அடங்கிருச்சி.”


“இப்பல்லாம் வைகுண்டத்துலயே அரிசிப் பஞ்சமோ? கிருஷ்ணர் அரிசியே சாப்புடுறது இல்ல போல”


“இந்த பின்னூட்டம் போடுறதையெல்லாம் ப்ளாகோட நிறுத்திக்கோ. எனக்குப் போடாத”


“சரி சரி. நீ சொல்லு”


“உலகத்துல துர்வாசரும் அவரோட சிஷ்யப்புள்ளைங்களும் அடக்கம் தான?”


“ஆமா”


“சோ அவங்களுக்கும் பசி அடங்கிருச்சி. அவங்க சாப்புடாமலே போயிட்டாங்க. பாண்டவர்களும் சாபத்துல இருந்து தப்பிச்சிட்டாங்க”


“ம்ஹ்ம்”


“இந்தக் கதையில இருந்து உனக்கு என்ன தெரியுது?”


“பாண்டவர்களுக்கு என்ன கஷ்டம்னாலும் உதவறதுக்கு கிருஷ்ணன் இருந்திருக்கான். இப்ப நமக்கு யாருமே இல்லைன்னு தெரியுது”


“அய்யோ மண்டு. சில நேரங்கள்ல பாத்திரத்தை சரியா கழுவலைன்னா கூட நன்மைதான் விளையும்னு தெரியுதா?”


“அட ஆமால்ல. அது கூட ஒரு பாயிண்ட் தான். ஆமா இந்தக் கதைய இப்ப எதுக்கு சொன்ன?”


“நீ சாப்புடுற தட்டு சரியாக் கழுவாம ஒரு ஓரத்துல ஒரு பருக்கை ஒட்டியிருக்கு பாரு அதை எடுத்து போட்டுட்டு சாப்புடு” என்று சொல்லிவிட்டு என் பதிலுக்குக் காத்திராமல் நடந்தார் தங்கமணி.


‘அடப் பாவிங்களா. புராணத்தை எதுக்கெல்லாம் துணைக்கிக் கூப்புடுறாய்ங்க’ என்று நினைத்துக் கொண்டு (அப்புறம் சத்தமாவ சொல்ல முடியும்) அந்தக் பருக்கையை எடுத்து சைட் ப்ளேட்டில் வைத்து விட்டு சாப்பிட ஆரம்பித்தேன்.


கை கழுவும்போது திடீரென தோன்றியது அந்த யோசனை. பக்கத்தில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த தங்கமணியைப் பார்த்து - “இன்னிக்கி நீ சொன்ன கதையால எனக்கு ஒரே ஒரு நன்மை தான்”


“என்னது?”


“இன்னிக்கி ப்ளாக்ல ஒரு பதிவுக்கு மேட்டர் தேத்திட்டேன். தேங்க்ஸ்”

Wednesday, January 27, 2010

துபாயில எங்க? ஜார்ஜாவா? அபிதாபியா? துபாயா?

டண்டட்டாய்ங்க்..

அது கி.பி.2002ம் வருசம். செப்டம்பர் மாசம்.

ஒரு வருசமா நாம என்ன டார்ச்சர் குடுத்தாலும் சிரிச்சிக்கிட்டே வேலை பாக்குறாண்டா இவன் ரொம்ப நல்லவன்டா அப்பிடின்னு என் டேமேஜர் நினைச்சிட்டு அமெரிக்கால இருக்குற அவர் கூட்டாளிக்கு ஃபோனப் போட்டாரு. போட்டு,  “டேய் இங்க ஒரு இளிச்சவாயன் மாட்டி இருக்கான். நீ இங்க வா அவன நல்லா டார்ச்சர் பண்ணலாம்”னு கூப்பிட்டாரு. அவனோ, “இல்லடா எனக்கு நெறய வேல இருக்கு, அதுனால அவன இங்க அனுப்பி வையி”ன்னு சொன்னான்.

எங்க டேமேஜரும் என்னைக் கூப்பிட்டு “தம்பி இத்தன நாளு இங்க எனக்கு முதுகு சொறிஞ்சது போதும். அமெரிக்காவுல நம்ம நண்பன் ஒருத்தன் இருக்கான். அவனுக்கு ஒரு ரெண்டு மாசம் சொறிஞ்சிட்டு வா” அப்பிடின்னு சொல்லி, விசா (அட கதை எழுதுற பதிவர் இல்லங்க) எடுக்க என் பாஸ்போர்ட்டை சென்னைக்கு அனுப்பி வச்சாரு.

நானும் ரொம்ப சந்தோசப்பட்டு ஊரெல்லாம் தண்டோரா (இங்கயும் பதிவர் இல்ல) போட்டு சொல்லிட்டேன். எங்கப்பாவும் மவன் வெளிநாடு போகப் போறான்னு ஊர்முழுக்க சொல்லிட்டு என்ன வழியனுப்புறதுக்காக பெங்களூரு வந்துட்டாரு. ஆனா சென்னைக்கு அனுப்பி வச்ச பாஸ்போர்ட் மட்டும் வரவே இல்லை.

கடைசியில அந்த வாரம் போக முடியாம என்னை வழியனுப்ப வந்த எங்கப்பாவ நான் வழியனுப்பிட்டு பாஸ்போர்ட்டுக்காகக் காத்திருந்தேன். ஒரு வழியா வந்து சேந்து ஃப்ளைட் டிக்கெட் எடுத்து குடுத்துட்டாங்க. அப்பல்லாம் பெங்களூர்ல இருந்து நேரடி ஃப்ளைட் கிடையாது (அப்பிடியே இருந்தாலும் அதிலெல்லாம் எங்க கம்பெனி டிக்கெட் எடுத்துக் குடுக்க மாட்டாய்ங்க) அதுனால முதல்ல பாம்பேக்கு ஜெட் ஏர்வேஸ்ல பயணம்.

அப்பத்தான் முதல் முதலா ஃப்ளைட் ஏறுரேன். அதுனால எல்லா சாமியையும் கும்பிட்டுக்கிட்டு ஜன்னல் ஓர சீட் கேட்டு வாங்கி உள்ள போனேன். நமக்கு இந்தப்பக்கம் சன்னலு அந்தப்பக்கம் ரெண்டு பேரு. எனக்கும் முன் சீட்டுக்கும் இடையில மூணு இன்சு இடைவெளி. பாத்ரூம் போகணும்னா கூட இந்தப் பக்கம் உக்காந்து இருக்குற ரெண்டு தடிப்பசங்களும் எந்திரிச்சாத்தேன் நான் போக முடியும். கஷ்டம்ங்கறது நமக்கு தெரியுது. நம்ம உடம்புக்குத் தெரியலையே. ஃப்ளைட்ல குளிரா இருக்கவும் முட்டிக்கிட்டு வந்திரிச்சி. நமக்கு சும்மாவே கூச்ச சுபாவங்கிறதால கேக்கக்கூட கூச்சப்பட்டுக்கிட்டு அடக்கிக்கிட்டே பாம்பே வரைக்கும் வந்துட்டேன்.

அங்க உள்நாட்டு விமான நிலையத்துல இருந்து ஒரு ஆம்னி பஸ்ல பன்னாட்டு விமான நிலையத்துக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அங்க போய் இறங்கி, நம்ம பெட்டிய எல்லாம் செக்-இன் பண்ணிட்டு போர்டிங் பாஸ் வாங்கி எமிக்ரேசனுக்குப் போனேன்.

“கிவ் மி யுவர் பாஸ்போர்ட்”னு கேட்ட அந்த ஆபிசரு, என் பாஸ்போர்ட்டைப் பாத்ததும் ஏதோ இந்தில கேட்டான். நான் மேலயும் கீழயும் மண்டைய ஆட்டுனேன். மறுபடி அதையே கேட்ட மாதிரி இருந்தது. அதுல கஹாங் அப்பிடிங்கிற வார்த்தை மட்டும் புரிஞ்சதும் “USA" அப்பிடின்னு சொன்னேன். மறுபடி என்னவோ கேட்டான். அதுல கப் அப்பிடிங்கிற வார்த்தக் கேட்டதும் “டுடே” அப்பிடின்னு சொன்னேன். என்ன ஒரு முறை முறைச்சான். “ஆஹா தப்பு பண்ணிட்டோம் போலடா” அப்பிடின்னு நினைச்சிக்கிட்டு “குட் யூ ப்ளீஸ் ரிப்பீட் யுர் கொஸ்டின்?” அப்பிடின்னு கேட்டேன். அவன் நீளமா ஹிந்தில ஏதோ சொல்லிட்டு (மதராஸி அப்பிடிங்கிறது மட்டும் தான் புரிஞ்சது) “வென் வில் யூ பி பேக்” அப்பிடின்னு கேட்டான். ‘இத மொதல்லயே கேட்டுத் தொலையறதுக்கு என்ன?’ அப்பிடின்னு நினைக்க மட்டும் செஞ்சிட்டு “2 மன்த்ஸ்”னு சொன்னேன். மறுபடியும் முறைச்சிக்கிட்டே போனா போவுதுன்னு சீல் குத்தி பாஸ்போர்ட்டைக் கையில குடுத்துட்டான்.

நேரா டைனர்ஸ் க்ளப் லவுஞ்ச்க்குப் போய் உக்காந்தேன். நம்ம பய புள்ளைக முதல்லயே சொல்லிவிட்டு இருந்ததால அங்க குடுத்த ஃப்ரீ பீர் ஒண்ணையும் ஒரு அண்டா ஸ்னாக்சையும் காலி பண்ணி அதோட என் டின்னரை முடிச்சிக்கிட்டேன். அங்க இருந்த சோஃபால லேசா கண்ணசந்தேன்.  காலங்காத்தால 2:00 மணிக்குத்தான் ஃப்ளைட்டு. போர்டிங் அனவுன்ஸ் பண்ணதும் என்ன வந்து எழுப்பி விட்டான் அங்க இருந்த ஆளு.

போர்டிங்குக்குக் கூப்பிட்டதும் போய் முதல் ஆளா நின்னா, “தம்பி, டீ இன்னும் வரல” அப்பிடின்னு சொன்னான். நான் போர்டிங் கார்ட நீட்டவும் “நாங்க கூப்பிடும்போது வந்தாப் போதும்”னு சொல்லி அனுப்பிட்டான். சீட்டு நம்பர் சொல்லி சொல்லிக் கூப்பிட்டாய்ங்க. நம்ம முறை வந்ததும் அந்த ஆளை ஒரு முறை முறைச்சிட்டு போர்டிங் கார்டைக் காட்டினேன். வாங்கி அதுல பாதிய பிச்சி வச்சிக்கிட்டு ஃப்ளைட்டுக்கு அனுப்பிட்டான்.

அந்த ஃப்ளைட்டோ ஜெட் ஏர்வேஸே பரவாயில்லங்கற மாதிரி இருந்தது. நானே கஷ்டப்பட்டுத்தான் என் சீட்டுக்குப் போகணும். (ஏன் ஃப்ளைட்ல கே.பி.என் மாதிரி லெக் ஸ்பேஸ் இல்ல?) நல்ல வேளையா எனக்கு இந்தப் பக்கம் யாருமே இல்லை. அஞ்சி சீட்டுக்கு ஒரு டிவி வச்சி படம் போட்டாய்ங்க. நம்ம பய புள்ளைக இண்டர்நேசனல் ஃப்ளைட்ல சரக்கு எல்லாம் ஃப்ரீ மச்சின்னு சொன்னதுனால எப்ப எப்பன்னு உக்காந்து இருந்தேன்.

ஃப்ளைட் டேக் ஆஃப் ஆகி அரை மணி நேரம் கழிச்சி ஏர் ஹோஸ்டஸ் வந்தா. குடிக்க என்ன வேணும்னு கேட்டா.

“என்ன இருக்கு?”

“கோக், பெப்ஸி, ஆரஞ்ச் ஜூஸ், லெமனேட்”

“சரக்கு எதுவும் இல்லையா?”

“இருக்கு. உனக்கு என்ன வேணும்?”

“இந்தக் காச்சுனது இருக்கா?”

“இருக்கு. அஞ்சு டாலர் குடு?”

பகீர்னு ஆயிடுச்சி. என்னடா, நம்ம பய புள்ளைக வேற மாதிரி சொன்னாய்ங்களே? அப்பிடின்னு யோசிச்சிட்டு, “எதுக்குக்கா காசு கேக்குற” அப்பிடின்னு கேட்டேன்.

“எங்க ஃப்ளைட்டுல காசு குடுத்தாத்தான் சரக்கு”னு சொல்லிட்டா. ஏமாத்தத்த அடக்கிக்கிட்டு ஒரு அஞ்சு டாலர் குடுத்தேன். நம்ம ஊரு கட்டிங் குவாட்டர (இப்பயும் இருக்கா?) விட சின்னதா ஒரு பாட்டில் குடுத்தா. “இதுவா அஞ்சி டாலரு?” அப்பிடின்னு அவள ஒரு லுக்கு விட்டேன். அவ திருப்பி என்ன விட்ட லுக்குல “அவனா நீயி”ன்னு கேட்ட மாதிரி இருந்தது. அதோட இந்தப் பக்கம் திரும்பிக்கிட்டேன். என்னோட நிலைமைய எண்ணி நொந்துக்கிட்டே அந்த ஸ்காட்சைக் குடிச்சேன். போதை ஏறுச்சோ இல்லையோ வயித்தெரிச்சல் வந்திரிச்சி.

ஒரு வழியா சார்ல்ஸ்-டி-கால் ஏர்போர்ட்ல கொண்டு போய் சேத்தாய்ங்க. அங்க இருந்து சின்சினாட்டிக்கு ஃப்ளைட்டு. இந்த ஃப்ளைட்டுல இருந்த ஒரே ஒரு இந்தியன் நான் தான். எனக்கு வழக்கம்போல ஜன்னல் சீட்டு. எனக்கு எடது பக்கம் ஒரு வெள்ளக்காரக்கா வந்து உக்காந்தாங்க. அவங்களுக்கு எப்பிடி எக்ஸ்ட்ரா லக்கேஜ் போடாம டிக்கெட் மட்டும் போட்டாய்ங்கன்னு நெனக்கிற அளவுக்கு என் சீட்டுல பாதிக்கும் சேத்து உக்காந்தாங்க. அவங்கள மீறி நான் எங்க எந்திரிச்சி வெளிய போறது. மறுபடியும் சீட்டுலயே கிடந்தேன்.

ஒருவழியா சின்சினாட்டி வந்து அமெரிக்கன் இமிக்ரேசன் (இதப் பத்தி தனிப் பதிவே போடலாம்), கஸ்டம்ஸ் (ஜீன்ஸ் படத்துல காட்டுற மாதிரி என் ஊறுகா பாட்டில எல்லாம் கீழ போடல) கிளியர் பண்ணி வெளிய வந்து என் அடுத்த ஃப்ளைட் பிடிக்க கேட்டுக்குப் போனேன்.

நம்ம ஊரு பாம்பே ஏர்போர்ட் மாதிரி இல்லை. இங்க இருந்து நெறய ஃப்ளைட் போகுது. அதுனால கையில இருந்த போர்டிங் பாஸையும் அங்க இருந்த டிவியில ஃப்ளைட் டிப்பார்ச்சர் ஸ்கெட்யூலையும் பாத்துக்கிட்டே இருந்தேன். மொத மொத நம்ம நாட்ட விட்டு வெளிய வந்த புரியாத அந்த உணர்ச்சியில திருவிழால காணாமப் போன சின்னப்பையன் மாதிரி உக்காந்திருந்தேன். அப்ப ஒரு பொம்பளப் போலீசு என் கிட்ட வந்து “தம்பி என் கூட வா” அப்பிடின்னு கூட்டிட்டுப் போனா. போயி ஒரு துணி மறைவுல வச்சி ஒரு ஆளு என் உடம்பெல்லாம் தடவித தடவிப் பாத்தான். ஷூவை பெல்ட்டை எல்லாம் கழட்டி (ட்ரெஸ்ஸக் கழட்ட சொல்லலைன்னா நீங்க நம்பவாப் போறீங்க) செக் பண்ணிப் பாத்துட்டு “தேங்க்ஸ் ஃபர் கோ-ஆப்பரேட்டிங்க்” அப்பிடின்னு சொல்லி அனுப்பிட்டான்.

ஏர்ப்போர்ட்ல அத்தன பேரு இருக்கும்போது நம்மள எதுக்குக் கூப்பிட்டு செக்கப் பண்ணான்னு நான் இன்னும் யோசிச்சிக்கிட்டு தான் இருக்கேன். ஆனா ஒண்ணு அதுக்கப்புறம் ஃப்ளைட்டுல ஜன்னல் சீட்டு கேக்குறதே இல்ல.

பின் குறிப்பு: மே மாசம் இந்தியா போறது உறுதியாயிடுச்சி. இதிஹாட் ஏர்வேய்ஸ்ல தான் வரலாம்னு இருக்கோம். அபுதாபில ரெண்டு நாள் தங்கி ஷாப்பிங் பண்ணிட்டுப் போலாம்னு ப்ளான்.

அபுதாபில ஹோட்டல் எல்லாம் எப்பிடி ரேட்? அங்க சுத்திப் பாக்குறதுக்கு என்ன இடமெல்லாம் இருக்கு (ரெண்டு நாளைக்குள்ள), தங்கம் எல்லாம் சுத்தமா கிடைக்கும்னு சொல்றாங்களே? தங்கம் வாங்க சேல்ஸ் டேக்ஸ் இருக்கா? யாராவது கொஞ்சம் சொல்லுங்கப்பு....(ஆதவன் பேச்சைக் கேட்டு கொஞ்சம் மாத்திட்டேன்).

Tuesday, January 26, 2010

’என்’.சி.சி - குடியரசு தின சிறப்புப் பதிவு

ஸ்கூல் என்.சி.சில சேர எனக்கு ரொம்ப ஆசை. அந்த காக்கி ட்ரவுசரும் காலுல போட்டுட்டு இருக்குற கருப்பு பூட்டும் காரணமான்னு தெரியலை. ஆனா ஸ்கூல் முடிஞ்சி கிரவுண்ட்ல வெளையாடிக்கிட்டு இருக்கும்போது பரேட் பண்ற அந்த க்ரூப்பை வேடிக்கை பாத்துட்டு இருப்பேன்.

எட்டாவது படிக்கும் போது செலக்‌ஷனுக்குப் போனேன். சும்மா மிலிட்டரி செலக்சன் மாதிரி இருந்தது. கடைசியில உயரம் பத்தாது தம்பின்னு வீட்டுக்குப் போகச் சொல்லிட்டாங்க. அப்புறம் அவங்க பரேட் முடிஞ்சதும் சாப்புடுற பரோட்டாவ ஏக்கத்தோட பாக்குறதோட ஸ்கூல் வாழ்க்கை முடிஞ்சி போச்சி.

அப்புறம் காலேஜ் வந்ததும் இங்க உயரம் குறையில்லாம இருந்ததால என்.சி.சில சேத்துக் கிட்டாங்க. அப்புறம் தான் தெரிஞ்சது பரோட்டாவுக்கு ஆசப்பட்டு தந்தூரி அடுப்புல விழுந்துட்டேன்னு.

சாதாரணமா சீனியர் ஆஃபிசர் கிட்டயோ இல்ல வாத்தியார் கிட்டயோ இல்ல தங்கமணிக்கிட்டயோ வாங்கிக் கட்டிக்கிட்டு வரவங்களப் பாத்து, “என்ன செம பரேடா?” அப்பிடின்னு எதுக்குக் கேக்குறாங்கன்னு தெரியவச்சாங்க.

முதல் நாள் ஸ்டோர் ரூம்ல போய் கிட்டத் தட்ட பொருத்தமா இருக்குற சட்டை பேண்ட் எடுத்துக்க சொன்னாங்க. நல்லா இருக்குற ஷூவ எல்லாம் சீனியர் எடுத்துக்குவாங்க. நமக்கு பிஞ்சி போன ஷூவக் குடுத்து தச்சிக்கச் சொல்லுவாங்க. நாமளும் போய் தச்சி லாடம் எல்லாம் அடிச்சிக்கிட்டு அடுத்த நாள் பரேடுக்கு மிடுக்கா வந்து நின்னோம்.

சீனியர் ஒருத்தன் எல்லாரையும் வரிசையா நிக்க வச்சி ஒவ்வொருத்தர் முன்னாடியும் தலையக் குனிஞ்சிக்கிட்டே வந்தான். எதுக்குடா இப்பிடி வர்றான்னு பாத்தேன். என் கிட்ட வந்ததும் விசயம் தெரிஞ்சிரிச்சி. “ஷூவுக்கு ஏண்டா பாலீஷ் போடலை” அப்பிடின்னு கேட்டான். “நீங்க பாலீஷ் குடுக்கலையே?” அப்பிடின்னு நியாயமா பதில் சொன்னதுக்கு கிரவுண்ட அஞ்சி தடவை சுத்தி வரச் சொல்லிட்டான். சரின்னு நானும் சுத்திட்டு பரோட்டா திங்க வந்தேன்.

அங்க பாத்தா எல்லாரும் ஷூவக் கழட்டிப் போட்டு வச்சிருந்தாங்க. சரின்னு நானும் அங்க என் ஷூவக் கழட்டிப் போட்டுட்டு சாப்பாட்டு வரிசைல போய் உக்காந்தேன். முதல்ல ஷூ பாலீஷ செக் பண்ணின சீனியர் வந்தான். “என்ன வந்து முதல் ஆளா உக்காந்துட்ட? போய் அந்த ஷூவ எல்லாம் பாலீஷ் போடு” அப்பிடின்னு சொன்னான். நான் என்.சி.சி மாஸ்டரைப் பரிதாபமா பாத்தேன். அவரு “சீனியர் சொல்றதக் கேளு” அப்பிடின்னு சொல்லிட்டுப் போயிட்டாரு. இப்பிடிச் சொல்றதுக்குத் தானா அவரு எனக்கு சொந்தக்காரரா இருக்காரு?

அப்புறம், விருதுநகர்ல இருந்து ஒரு வட நாட்டு ஆஃபிசர் பரேடுக்கு வந்தான். செம பரேட். அவன் தமிழ் தப்புத்தப்பா பேசினாலும், தமிழ் கெட்ட வார்த்தையெல்லாம் தப்பில்லாம தெரிஞ்சி வச்சிருந்தான். அதுனால அவன் பேசுற 10 வார்த்தைல 11 வார்த்தை கெட்ட வார்த்தை தான் வரும். காலேஜ் படிக்கிற பசங்கன்னு பாக்காம கைல வச்சிருக்கிற குச்சியால அடிச்சிட்டே இருந்தான். நான் நேரா போய் எங்க ஒன்னு விட்ட சித்தப்பா (அதாங்க என்.சி.சி மாஸ்டர்) க்கிட்ட போய் சொல்லிட்டேன். அவரும் சரின்னு சொல்லிட்டாரு. (என்ன சொல்லிட்டேனா? இனிமே என்.சி.சிக்கு வரலைன்னு தான்).

அதோட என் என்.சி.சி கனவு முடிஞ்சிருச்சி.

ஆனா எங்க செட்டுல ஒருத்தன் இருந்தான் ஆனைப்பட்டிக்காரன். அவன் என்.சி.சில சேந்து சீனியர் ஆகிட்டான். அவன் ஹாஸ்டல்ல ரொம்ப ஃபேமஸ். வேற எதுல சாப்புடுறதுலதான். அவன என்.சி.சில இருந்து உத்தரப்ரதேசத்துல எங்கயோ ஒரு கேம்புக்கு அனுப்புனாங்க. அதுல செலக்ட் ஆனா ஜனவரி 26 குடியரசு தின விழாப் பேரணில கலந்துக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்னு (அப்பா தலைப்பு வந்திரிச்சி) சொல்லிக்கிட்டே போனான்.

போயிட்டு ஒரு மாசம் கழிச்சி திரும்பி வந்தான். வந்தவன் போனப்ப இருந்தத விட பாதியாகி இருந்தான்.

“என்னடா மச்சி? என்னாச்சி? ஏன் இப்பிடி இளைச்சிப் போயிட்ட?”

“அத ஏண்டா கேக்குறீங்க. காலைல 4 மணிக்கு எழுப்பி விடுவானுங்க. 10 கி.மீ தூரம் ஓடணும். அப்புறம் பரேட் முடிச்சி காலைச் சாப்பாடு 2 சப்பாத்தி. அப்புறம் மறுபடி பரேடு. அப்புறம் மதியச்சாப்பாடு 3 சப்பாத்தி. அப்புறம் காடு சுத்தம் பண்றது முள்ளு வெட்டுறதுன்னு இடுப்பொடிய வேலை, அப்புறம் சாயந்தரம் பரேடு. நைட் சாப்பாடுக்கு 2 சப்பாத்தி. எப்பிடிடா நமக்கு தாங்கும்?”

“சரி சரி. இன்னிக்கு ஹாஸ்டல்ல மட்டன் போடுறாங்க. போய் சாப்புடு”

மெஸ் திறந்ததும் உள்ள போனவன், எல்லாரும் சாப்டுட்டு (மெஸ்ல வேல பாக்குறவங்க உட்பட) சாப்டுட்டுப் போனப்பறம் தான் வெளிய வந்தான். நாங்க எல்லாம் அவன் உக்காந்து சாப்புட்ட இடத்தப் பாத்தோம். அது சாதாரண மனுசன் சாப்புட்ட இடமே இல்லை. நாடி, நரம்பு, ரத்தம், சதை, புத்தி எல்லாத்துலயும் பசி வெறி ஊறி இருக்கிறவன் சாப்புட்ட இடம். அந்த இடத்தப் பாத்ததுக்கே என்னால ரெண்டு நாளைக்கி எதுவுமே சாப்பிட முடியலை.

இன்னிக்கி குடியரசு தினம் (இந்தியால இதப் படிக்கும் போது அடுத்த நாள் ஆகியிருக்கும். ஆனா என்ன பண்றது 11:30 மணி நேரம் பின்னாடி இருந்தா இதுதான் நடக்கும்). அதுனால எல்லாருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.

Monday, January 25, 2010

இந்தி, போலி டாக்டர் மற்றும் பல்புஸ்ரீ

2001ம் வருசம் எம்.சி.ஏ முடிச்சிட்டு ஒரு எம்.என்.சில வேலைக்குச் சேந்த்தேன். வேற என்ன வேலை எல்லாம் பொட்டி தட்டுறது தான். அதான் இந்த சாஃப்ட்வேரு கம்பெனி எல்லாம் சமத்துவம் உலாவும் எடமாச்சே. நம்ம டீமுல கன்னியாகுமரில இருந்து காஷ்மீர் வரைக்கும் இருந்தாய்ங்க.

வட இந்தியால இருந்து வந்தவன் எல்லாம் நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நம்மளப் பாத்ததும் இந்தியில தான் பேசுவான். நாம பணிவா - “ஐ டோண்ட் நோ ஹிந்தி” அப்பிடின்னு சொன்னா, தண்ணியடிச்சுட்டு நடுத்தெருவுல வாந்தி எடுக்குறவன அந்தப்பக்கமா போற ஃபிகரு பாக்குற மாதிரி நம்மள ஒரு லுக்கு விடுவாம்பாருங்க.. பத்திக்கிட்டு வரும் எனக்கு.

எங்க டீம்ல நாலு தமிழ்நாட்டுக்காரங்க. அதுனால பேசிக்கும்போது தமிழ்லதான் பேசிக்குவோம் (இங்க்லிப்பிசு பேச வராதுங்கறது வேற கதை). அதுவே அவிங்களுக்குப் பொறுக்காது. ஒரு தடவ மேனேசருக்கிட்ட கம்ப்ளெயிண்ட் பண்ற அளவுக்குப் போயிட்டாய்ங்க. ஆனா அவனுக மட்டும் ஹிங்க்லீஷ்ல பேசுவானுங்க.

மாசத்துக்கு ஒருதடவ ஏதாவது காரணத்த வச்சி வெளிய டீம் லன்ச்சுக்குப் போவோம். ஒவ்வொருதடவையும் அங்க தமிழ்க்காரங்க தமிழ்ல பேசுனா சண்டைக்கி வருவானுங்க. அவனுங்க ஹிந்தில பேசினா நாம கேக்கக்கூடாது. கேட்டா, இந்தி நம்ம தேசிய மொழி. நீ அதக் கத்துக்கிட்டு இருக்கணும்னு சண்டை போடுவாய்ங்க. சூடா விவாதம் நடக்கும்.

ஒரு தடவ “இந்திய எதுக்கு தேசிய மொழின்னு சொல்றீங்க?” அப்பிடின்னு கேட்டேன்.
அதுக்கு ஒருத்தன் “ஏன்னா அதத்தான் நெறைய பேரு பேசுறாங்க”
“அப்ப ஏன் காக்காவ தேசிய பறவையாக்கல? அதுதான நம்ம நாட்டுல நிறைய இருக்கு?” அப்பிடின்னு நான் கேட்டேன். அவனால பதில் சொல்ல முடியல.

இந்த மாதிரி விவாதத்துல நம்ம பக்கம் நிக்கிற ஒரே வேற மாநிலத்தவங்கன்னா அது கேரளாக்காரங்க தான். கன்னடத்தானும் தெலுங்கனும் ஹிந்தில பேசிட்டு கிட்டத்தட்ட ஹிந்திக்காரனாவே ஆயிடுவாய்ங்க (ஆனாலும் அவிங்க இவிங்கள மதராசின்னு தான் கூப்பிடுவானுங்கங்கறது வேற விசயம்).

இப்ப எதுக்கு இதையெல்லாம் சொல்றேன்னா, அகமதாபாத் ஹை கோர்ட்டு, இன்னிக்கு குடுத்துருக்கு ஒரு தீர்ப்பு - இந்திக்கு வச்சிருச்சி ஆப்பு.

அப்புறம் எம்.ஜி.ஆர் யுனிவர்சிட்டிக்கு அங்கீகாரத்த ரத்து பண்ணிட்டாங்களாமே? அப்போ அங்க டாக்டர் பட்டம் வாங்கின நம்ம விஜய் இனிமே போலி டாக்டரா?

பத்மஸ்ரீ பட்டம் கிடைக்கும்னு விஜயோட ரசிகர் ஒருத்தர் ரொம்ப ஆசைப்பட்டுக்கிட்டு இருந்தாரு. கடைசில லிஸ்ட்ல பேரு வரலயாமே? அப்ப வட போச்சா? சரி, பரிந்துரை லிஸ்ட்லயாவது இருந்ததுனு சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான்.

தமிழ்நாட்டின் பாவப்பட்ட ஜென்மம்

தமிழ்நாட்டுல இப்போதைக்கு எத்தனையோ பேருக்கு இந்த பாவப்பட்ட ஜென்மம் அப்பிடிங்கிற பட்டத்தைக் குடுக்கலாம். ஆனா அத வாங்குற ஆளுங்க நாளுக்கு நாள் மாறிட்டே இருப்பாங்க.

உதாரணத்துக்கு ஒவ்வொரு இடைத்தேர்தல் வரும்போதும் பாவப்பட்ட ஜென்மங்கள் தொகுதியில இருந்தும் வாக்குரிமை இல்லாதவங்க. சுத்தி இருக்குறவங்க எல்லாம் பிரியாணி சாப்டுக்கிட்டு கை நிறைய காசு வச்சிருக்கும்போது இவங்க மட்டும் அவங்கள பாத்து பெருமூச்சு விட்டுக்கிட்டே இருக்கணும்.

அப்புறம், பரிட்சை ரிசல்ட் வரும்போது ஃபர்ஸ்ட் மார்க் எடுத்தவன் பக்கத்து வீட்டுல இருக்கும் ஃபெயிலாப் போன பையன். பக்கத்து வீட்டுப் பையனைக் காட்டியே தினம் தினம் அடி விழும். அதுலயும் ஃபர்ஸ்ட் மார்க் எடுத்தது பக்கத்து வீடு பொண்ணா இருந்துட்டா அதுக்கே நாலு அடி சேத்து விழும்.

இப்பிடி பாவப்பட்ட ஜென்மம் பட்டம் நாளுக்கு நாள் ஒவ்வொருத்தர் கைல இருந்தும் மாறி மாறி போய்க்கிட்டே இருந்தாலும், ஒரே ஒருத்தர் கிட்ட மட்டும் சம்மணங்கால் போட்டு உக்காந்துக்கிட்டு இருக்கு.

ஆமாங்க, அவர் பேசலைனாலும் குத்தம், பேசிட்டாலும் குத்தம். போராட்டத்துக்கு வரலைன்னாலும் குத்தம், வந்துட்டாலும் குத்தம். சரி, பொது போராட்டத்துக்கு வரல, நான் தனியா ஒரு போராட்டம் நடத்துறேன்னு நடத்தினாலும் குத்தம். வாய்ஸ் குடுத்தாலும் குத்தம், குடுக்கலைன்னாலும் குத்தம். எதுத்துப் பேசுனாலும் குத்தம், பாராட்டிப் பேசுனாலும் குத்தம். ஒரு சினிமாவைப் பாத்து பாராட்டினாலும் குத்தம், பாராட்டலைன்னாலும் குத்தம்.

அவரை வச்சு தயாரிப்பாளர்கள் பொழச்சாங்களோ இல்லையோ மீடியா நல்லா பொழச்சிருக்கு. அவரைத் திட்டி எழுதுனாலும் பத்திரிக்கை விக்கிது, பாராட்டி எழுதினாலும் பத்திரிக்கை விக்கிது. அவர் படம் வர்றதுக்கு முன்னாடி, அந்தப் படத்தப் பத்தி எழுதியே யாவாரம் பண்ணுவாங்க. படம் வந்தப்புறம் அதத் திட்டி எழுதி வியாபாரம் பண்ணுவாங்க.

சமீபத்துல அவரு ஜக்குபாய் பட சிடி வெளியாயிடுச்சின்னு ராதிகாவும் சரத்தும் ஒப்பாரி வச்சி அழுத ப்ரஸ் மீட்ல கலந்துக்கிட்டு உருப்படியா பேசினாரு. என்ன பேசினாருன்னா - “திருட்டு விசிடி வெளிய போறதுக்குக் காரணம் நமக்குள்ள இருக்குறவங்கதான். எந்த லேப்ல இருந்து வெளிய போகுதுன்னு பாருங்க. அந்த லேபை தடை பண்ணுங்க. எந்த தியேட்டர்ல ஷூட் பண்றாங்கன்னு பாருங்க, அந்த தியேட்டருக்கு படம் குடுக்காதீங்க” இப்பிடியெல்லாம் பேசினாரு. அதோட சேத்து “ஜக்குபாய் படம் நான் பண்றதா இருந்தது. இது ஒரு ஃப்ரெஞ்ச் படத்தோட தழுவல். கொஞ்சம் வயசான வேசத்துல நடிக்க வேண்டியிருந்தது” இப்பிடியெல்லாம் படத்தப் பத்தி சில விசயங்களையும் சொன்னாரு.

சும்மா இருப்பாங்களா நம்ம ஆளுங்க. ஒருத்தர் என்னன்னா “தியேட்டர்ல டிக்கெட் காசுக்கு மேல வாங்குறாங்களே அந்த தியேட்டரை புறக்கணிக்க சொல்லுவாரா?” அப்பிடின்னு கேள்வி கேக்குறாரு. அந்தத் துறையிலயே இருக்குற இன்னொருத்தரோ - “இப்பிடி கதையச் சொன்னதுக்கு, திருட்டு டிவிடி வெளிய வந்ததே பரவாயில்ல”ன்னு சொல்றாரு.

அதே நபர், ரெண்டு நாளைக்கு முன்னால அந்த ஒரிஜினல் ஃப்ரெஞ்ச் படத்துக்கு விமர்சனம் எழுதி மீதிக் கதைக்கு ஜக்குபாய் படத்தப் பாருங்கன்னு சொல்றாரு. இது மட்டும் சரியா? என்ன கொடுமை சங்கர் சார்?

இவ்வளத்துக்கும் அப்புறம் அந்தப் படம் வெளிய வரப்போகுதுனு டிவியில விளம்பரம் போடுறாங்க. என்ன விளம்பரம்? இதே ஆள் அதே ப்ரஸ் மீட்டுல பேசுனத கட் பண்ணி கட் பண்ணிப் போட்டு விளம்பரம் தேடுறாங்க? எதுக்கு அப்பிடிப் போடணும்?


இவங்களுக்கு விளம்பரம் வேணும்னா அவரு வேணும். அவருக்கு ஒரு பிரச்சனைன்னா இவங்க என்னன்னு கேக்க மாட்டாங்க. அதை அவரே பாத்துக்கணும்.

இன்னொருத்தர் பெரிய லிஸ்ட் குடுத்துருக்கார். இந்த மனுசன் நடிச்சி வெற்றி பெற்ற படமெல்லாம் ரீ-மேக் படமாம். ஆஹா என்ன ஒரு கண்டுபிடிப்பு. அந்தப் படம் ரீ-மேக்னு சொல்லிட்டு, காசு குடுத்து ரைட்ஸ் வாங்கிட்டுத்தானப்பா அவரு அந்தப் படத்துல நடிக்கிறாரு? சில உல்டா நாயகன்களெல்லாம் இங்க்லீஷ் படத்துல இருந்து உருவிட்டு தன் கதைன்னு கூசாம பேர் போட்டுக்கிறாங்களே, அதுக்கு இது பரவாயில்லையே?

ஆனா ஒண்ணு, இந்த மனுசன் இதையும் கடந்து போவார் - தன்னைத் தூற்றியவர்களுக்கும் தேவையான நேரத்தில் தேவையான உதவியைக் கேட்காமலே செய்து..

உன் ரசிகன் நான் என்று சொல்லிக் கொள்வதில் எனக்குப் பெருமையே.

பின் குறிப்பு: கேபிளார் ரஜினி ரசிகன் இல்லை என்பது எனக்குத் தெரிந்தாலும் அவரது பழைய பதிவுகளை நான் கடவுள் பட விமர்சனத்திற்காகத் தேடிய போது இதைப் பார்க்க நேர்ந்தது. ஏதாவது சொல்லவேண்டுமே என்று நினைத்ததால் இந்தப் பதிவு.

Sunday, January 24, 2010

பிதற்றல்கள் - 1/23/2010

இந்த தொடர்பதிவுக் கதை யோசனையை முதலில் வைத்தது நண்பர் விசா. ஆரம்பத்தில் நான், விசா, கலகலப்ரியா மற்றும் அதுசரி மட்டுமே எழுதுவதாக இருந்தது (வேற யாரும் முன்வரலைங்கறதுதான் உண்மை). ஆகவே பெரிதாக விதிமுறைகள் எல்லாம் வகுக்கவில்லை.

ஆனால், நான் முதல் பாகத்தை போட்ட வேகத்தில் பலா பட்டறை, பிரபாகர் இரண்டாவது மூன்றாவது பாகத்தை வேகமாக எழுதிவிட்டனர். ஆகவே விதிமுறைகள் வகுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுவிட்டோம்.

எப்படியோ இது சுவாரசியமாக செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதைத் தட்டிச் சென்று விமர்சகர்களின் (முகத்தில் அறைந்த என்று எழுதலாம் என்று தான் நினைத்தேன், ஆனால் நான் இன்னும் பின்னவீனத்துவவாதி ஆகாத காரணத்தால்) விமர்சனங்களுக்கு பதில் சொன்ன பாலாவுக்கு பாராட்டுகள்.

சேது படத்திலேயேவோ இல்லை பிதாமகன் படத்திலாவது வந்திருக்க வேண்டிய விருது இது. கொஞ்சம் லேட்டாக வந்தாலும் நான் கடவுளுக்குக் கிடைத்திருப்பதும் நல்லதே.

பாலாவின் அடுத்த படம் என்ன என்பதை விட எப்போது என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நான் கடவுள் படத்தின் மேக்கப் மேன் மூர்த்திக்கும் விருது கிடைத்துள்ளது. அவருக்கும் வாழ்த்துகள்.

தமிழுக்குக் கிடைத்த மூன்றாவது விருது வாரணம் ஆயிரம் படத்துக்கு. இதில் ஏதாவது அரசியல் இருக்கிறதா என்று தெரியவில்லை. இந்நேரம் மதுரையில் என்ன என்ன போஸ்டர் ஒட்டியிருப்பார்கள் என்று நினைக்கையிலேயே சிரிப்பு வருகிறது.

சேவாக் சொன்ன “பங்களாதேஷ் ஒரு ஆர்டினரி டீம். அவர்களால் 20 இந்திய விக்கெட்டுகளை எடுக்க முடியாது” என்று சொன்னது பெரும் சர்ச்சைக்குள்ளாகும் என்று எதிர்பார்க்கப்பட்டதே. முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய மாதிரி ஆனது. எல்லா ஊடகவியலாளர்களும் இந்திய அணியில் யாரைப் பார்த்தாலும் இதைப் பற்றியே கேட்டுக் கொண்டிருந்தனர். ஒரு வேளை இந்தியா அதிக ரன்களை எடுத்திருந்தால் யாரும் இதைப் பற்றி பேசியே இருக்கமாட்டார்கள். நல்ல வேளை இந்தியா வெற்றி பெற்றது.

தோனி இரண்டாவது போட்டிக்கு முன் கொடுத்த பேட்டியில் மிகவும் நாகரீகமாகப் பேசியிருக்கிறார். இந்தியா என்ன கிழிக்கிறது என்று பார்ப்போம்.

சன் டிவியில் இன்று மாலை ஒளிபரப்பிய அதே நேரம் அதே இடம் பார்த்தேன். இந்தப் படம் ஓடாது என்று கதாநாயகன் ஜெய் பேட்டியில் சொன்னதாக பரபரப்பைக் கிளப்பிய படம். பெரும்பாலான காட்சிகளில் நடிகர்கள் எழுதி ஒப்பித்தது போல வசனம் பேசியது எரிச்சலாக இருந்தது. எப்படா முடியும் என்றிருந்தேன். (நம்ம தங்கமணிக்கு ஒரு கெட்ட பழக்கம், படம் பாக்க ஆரம்பிச்சிட்டா அது எவ்வளவு மொக்கையா இருந்தாலும் படம் முடியாம எந்திரிக்க மாட்டாங்க. கட்டிக்கிட்ட பாவத்துக்கு நாமும் பாத்து தொலையனும்).

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் இன்று சன் செய்திகளில் தமிழ்நாட்டுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தேவை இல்லை என்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதாகத் தெரிவித்தார். அங்கிருந்தெல்லாம் சரியாகக் கமிஷன் வருவதில்லை போலும்.

மே மாதத்தின் இடையில் இந்தியா வருவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போலத் தெரிகிறது. முடிந்தால் சக பதிவர்களை சந்திக்க விருப்பம். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

Friday, January 22, 2010

எங்கே செல்லும்....

முன் குறிப்பு: கலைஞரின் ஓய்வு அறிக்கையைப் போல இழுத்துக் கொண்டே இருக்காமல், விசா அவர்கள் கொடுத்த யோசனையின் படி ஒரே கதையை ஆளுக்கொரு பகுதியாக எழுத ஒரு முயற்சி. நான் துவங்குகிறேன் அடுத்து தொடர நினைப்பவர்கள் கையைத் தூக்கிவிட்டு தொடரலாம்.

************************************************************************************
RULES:
1. தொடர விரும்புபவர்கள் கடைசியாக யார் எழுதியிருக்கிறார்களோ அந்தப் பதிவில் சென்று பின்னூட்டம் இடுங்கள்.
2. கடைசியாகப் பதிவை எழுதியவர் யார் தொடரலாம் என்பதை தேர்ந்தெடுப்பார்.
3. முந்தைய பாகங்களுக்கான சுட்டியையும், அடுத்த பாகத்தின் சுட்டியையும் (யாரவது தொடர்ந்த பின்னர்) பதிவில் கட்டாயமாக இட வேண்டும்.
4. ஒரு எச்.டி.எம்.எல் கேட்ஜட் உருவாக்கத்தில் இருக்கிறது. உருவான பின் அதையும் உங்கள் வலைப்பூவில் கட்டாயம் சேர்க்க வேண்டும்
5. மேலே உள்ள விதிகள் அனைத்தும் தொடர் பாகத்தை ஒருவருக்கு மேற்பட்டவர்
எழுதிவிடக்கூடாது என்பதற்காகவே.

***************************************************************************************

ஸ்டேடியத்தில் ரசிகர்களின் ஆரவாரம் பெரும் சத்தமாக இருந்தது. ஒரு சீராக அவன் பேட்டை ஸ்டம்புக்கு முன் அடிக்கும் சத்தமும் இதயத் துடிப்பும் ஒத்திருப்பது போல இதயம் சிறிது மெதுவாகவே துடித்தது. இன்னும் ஒன்பது ரன்கள் எடுக்க வேண்டும். இருப்பதோ இரண்டே பந்துகள். பின்னால் விக்கெட் கீப்பர் என்னவோ சொல்வது தூரத்தில் இருந்ததால் சரியாகக் காதில் விழவில்லை.

சோஹைப் அக்தர் கிட்டத்தட்ட ஃபோர் லைனில் இருந்து ஓடி வந்து கொண்டிருந்தான். அவன் கீழுதட்டைக் கடித்துக் கொண்டிருப்பதிலேயே தெரிந்து விட்டது யாக்கர் தான் போடப் போகிறான். அவன் தயாரானான்.

க்ரீஸுக்கு அருகில் வந்துவிட்டான் அக்தர். கையைச் சுற்றி பந்தை வீசப் போகிறான். வீசி விட்டான். அந்தோ பரிதாபம் யாக்கர் லெங்க்த்தில் இல்லாமல் ஃபுல் டாஸாகிவிட்டது. காலை க்ளியர் செய்து பேட்டை வீசினான்.

அதே சமயம் அம்பயரின் “நோ” என்ற குரல் கேட்டது.

பேட்டின் மத்தியில் பந்து பட்டு விர்ரென்று கிளம்பியது. பந்து எங்கே போகிறது என்பதைப் பார்க்காமல் ஓடத்துவங்கினான். பந்து லாங்க்-ஆன் திசையில் பவுண்டரியைத் தாண்டி ஸ்டாண்டில் அமர்ந்திருந்த ரசிகர்களின் மத்தியில் விழுந்தது. டெல்லி ரசிகர்கள் கத்தித் தீர்த்து விட்டனர். நோ பாலின் புண்ணியத்தில் ஏழு ரன்கள். இனி இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி.

அடுத்த பந்தை அக்தர் ஷார்ட்டாகப் பிச் செய்து நெஞ்சுயரத்திற்கு எழும்பும் ஒரு பவுன்சராகப் போட்டான். அவன் புல் செய்ய முயன்று மிஸ்ஸாகி கீப்பரின் கையில் தஞ்சம் புகுந்தது பந்து.

ஒரு பந்து, ஒரு ரன்.

என்ன பந்து போடப் போகிறான் என்று தெரியவில்லை. நெஞ்சு அடித்துக் கொள்வது தெளிவாகக் கேட்டது. ஓடி வந்த அக்தர் கையைச் சுற்றி வீசினான். ஷார்ட் பிச். பேட்டை மறுபடி வீசினான்.

அய்யோ, அது ஸ்லோ டெலிவரி. பேட்டை அவசரப் பட்டு சுற்றியதால் விளிம்பில் பட்டு பந்து இரண்டு பனை மர உயரத்திற்கு மேலே போனது. கண்ணை மூடிக்கொண்டு ஓடினான். இரண்டாவது ரன்னுக்கும் திரும்பி ஓடினான்.

பந்து விழுமிடத்தில் மூன்று பேர் சூழ்ந்தனர். அஃப்ரிடி லீவிட் கேட்டு கடைசியில் கையிடுக்கில் தவற விட்டான். மறுபடி ஸ்டேடியம் திடீரென்று உயிர் பெற்ற மாதிரி கதறியது. தவற விட்ட பந்தை சல்மான் பட் எடுத்து கீப்பரை நோக்கி வீசினான்.

அங்கே பந்தை கலெக்ட் செய்ய யாரும் இல்லை. ஸ்டம்பை 1 செ.மீ இடைவெளியில் மிஸ் செய்த பந்து ஓடியது. இரண்டாவது ரன்னையும் பூர்த்தி செய்த அவன் தரையிலிருந்து மூன்றடிக்கு எம்பிக் குதித்தான். ஸ்டம்புகளில் ஒன்றை உருவிக் கொண்டு அவன் பார்ட்னரைக் கட்டிப் பிடித்தான்.

ரசிகர்கள் நிறுத்தாமல் அடித்தொண்டையில் கத்திக் கொண்டிருந்தனர். பாகிஸ்தான் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் கை கொடுத்துக்கொண்டே இருவரும் பெவிலியன் நோக்கி நடந்தனர். பாகிஸ்தான் கேப்டனுக்கு நாடு திரும்பியதும் விசாரணைக் கமிசன் உறுதி.

பெவிலியன் வாசலில் மொத்த இந்திய அணியும் இவர்களை வரவேற்க நின்றிருந்தது.

செல்போன் ஒலித்தது. 

“ஹலோ?”

“டேய் பாஸ்கர், மேட்ச் பாத்தியா? லாஸ்ட் மினிட்ல ஜெயிச்சிட்டானுங்கடா. நான் எதிர்பார்க்கவே இல்லை. ஒரு செகண்ட் ஹார்ட்டே நின்னு போச்சி. மச்சி”

“ஹலோ நீங்க யாரு? என்ன வேணும் உங்களுக்கு?”

“சாரி சார். நீங்க பாஸ்கர் இல்லையா?”

“இல்ல சார். ராங் நம்பர்”

“சாரி சார். சாரி ஃபர் த டிஸ்டர்பன்ஸ்”

செல் போனை மறுபடி பையில் வைத்து விட்டு, சூப்பர் மார்க்கெட்டின் டி.வியில் இருந்து கண்ணை அகற்றிய அவன் முன்னாலிருந்த ஷாப்பிங் கார்ட்டைத் தள்ளிக் கொண்டு பில் கவுண்டரை நோக்கி நடந்தான்.

ஒவ்வொரு பொருளாக எடுத்து ஸ்கேன் செய்த அவள் கடைசியில் சொன்ன பில் பணத்துக்கு தன் பர்ஸில் இருந்து ஒரு க்ரடிட் கார்டை எடுத்து நீட்டினான். அவள் க்ரடிட் கார்டு மெசினில் தேய்த்து ப்ரிண்ட் செய்து கொடுத்த துண்டுச் சீட்டில் கையெழுத்துப் போட்டு விட்டு மறுபடியும் கார்ட்டைத் தள்ளிக் கொண்டு நடந்தான்.

“சார், ஆர் யூ இண்ட்ரஸ்டட் இன் சிட்டி பேங்க் கிரடிட் கார்ட் சார்” என்று துரத்திய க்ரடிட் கார்ட் சேல்ஸ்மேனை பொருட்படுத்தாமல் காரை நோக்கி நடந்தான்.

கார்ட்டில் முன்னால் உட்கார்ந்திருந்த குழந்தை அழத் தொடங்கியது.

“ஜோ ஜோ ஜோ.. எதுக்கும்மா அழற.. என்ன வேணும் பாப்பாக்கு?” என்று சமாதானம் செய்தான். குழந்தை விடாமல் அழுதது.

“என்ன கண்ணு எதுக்கு அழுகுற?” என்று குழந்தையை கார்ட்டில் இருந்து தூக்கினான்.

“அழக்கூடாதும்மா..” குழந்தையின் பேர் என்ன? யோசித்தான். எவ்வளவு யோசித்தாலும் பெயர் நினைவுக்கு வரவில்லை.

மறுபடி குழந்தையின் முகத்தைப் பார்த்தான். ‘யார் இந்தக் குழந்தை? இதுவரை பார்த்ததே இல்லையே?’ இப்போது சுற்றியும் பார்த்தான்.

‘எங்கே நிற்கிறேன்? என்ன இடம் இது? என் முன்னால் இருக்கும் ஷாப்பிங் கார்ட் யாருடையது? என் கார் எங்கே?’ அவனுக்குள் ஆயிரம் கேள்விகள். கையில் இருக்கும் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருந்தது.

பின்னால் ஆட்கள் ஓடி வரும் சத்தம் அதிகமாகிக் கொண்டே வருவதில் இவனை நோக்கி வருவதாகப் பட்டது. பின்னால் திரும்பினான்.

“என் குழந்தை, என் குழந்தை” என்று அழுது கொண்டே வந்த அந்தப் பெண் இவன் கையில் இருந்த குழந்தையை பிடுங்கினாள். அவளுக்குப் பின்னால் மூச்சு வாங்க ஓடி வந்த சற்று பருமனான ஆள் கையை வீசி இவன் தாடையில் வெடித்தான்.

“பரதேசி நாயே. பாக்க டீசண்டா இருக்க. புள்ள பிடிக்க வந்திருக்கியா?”

“இல்ல. நீங்..” பேச விடாமல் அடுத்த அடி விழுந்தது. அதற்குள் சிறிய கூட்டம் கூடி இருந்தது.

“இவங்களயெல்லாம் சும்மா விடக்கூடாது சார். நாலு மொத்து மொத்துனா தான் அடுத்து இப்பிடி செய்ய மாட்டானுங்க..” யாரோ ஒரு பிரகஸ்பதி கூட்டத்தில்.

“அய்யோ என்னத் தப்பா புரிஞ்..” 

கூட்டம் கூடி தர்ம அடி கொடுக்கத் துவங்கியது. யாரோ தொலைபேசியில் காவல்துறையை அழைத்துக் கொண்டிருந்தார்கள்.

(தொடரும்)


பின் குறிப்பு: இதன் தொடர்ச்சியை பலா பட்டறை சங்கர் இங்கே தொடர்கிறார்.


யார் தொடரப்போகிறீர்கள் என்பதை முந்தய பாகத்தில் கைதூக்குங்கள். அதே மாதிரி முந்தைய பாகத்தை எழுதியவர் அதை உங்கள் போஸ்ட்டில் அப்டேட் செய்யுங்கள். ஒரு HTML Gadgetம் போட ஏற்பாடு செய்வோம். (நன்றி ஹாலிவுட் பாலா)

எல்லாப் பதிவுகளையும் ஒரே இடத்தில் படிக்க இங்கே சுட்டவும். (நன்றி பலா பட்டறை)

Thursday, January 21, 2010

ஐபிஎல்லும் தமிழீழ அரசியலும்

டிஸ்கி: இது கிரிக்கெட் பதிவு அல்ல. ஐபிஎல் லுக்கு நான் ஆதரவாளனும் அல்ல. நான் ஒரு கிரிக்கெட் ரசிகன் என்பது அந்தப் பக்கமிருந்தாலும் ஐபிஎல் உண்மையான கிரிக்கெட் அல்ல என்று நினைப்பவன். 

சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல் ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் ஒருவரையும் எந்த முதலாளியும் எடுக்கவில்லை. பாகிஸ்தான் கடந்த வருடம் T20 உலக சாம்பியன்கள். இது அந்த நாட்டின் வீரர்களையும் அரசியல்வாதிகளையும் வெகுவாகப் பாதித்திருக்கிறது போல. வழக்கம்போல ரசிகர்கள் ஐபிஎல்லின் கொடும்பாவியை எரித்திருக்கிறார்கள்.


சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி இந்த ஏலத்தில் இலங்கை வீரர் திஸ்ஸரா பெரேராவை $50,000/-க்கும் தென்னாப்பிரிக்க வீரர் ஜஸ்டின் கெம்ப்-ஐ $100,000/- க்கும் எடுத்துள்ளது.

நாம் தமிழர் பேரியக்கம் திஸ்ஸரா பெரேராவை சென்னை அணி வாங்கியதை கண்டித்து அவர்களது வலைதளத்தில் எதிர்ப்பைப் பதிவு செய்ய கோரியிருக்கிறார்கள். அவர்களது கோரிக்கை கீழே:

Vanakkam Uravugalae,


While we are actively participating in boycott srilanka campaign, our Chennai people have invited our enemy to treat them. Yes, the Chennai Super Kings cricket team has enrolled a new srilankan cricketer to play for their team. They already have quite a few srilankan cricketers signed for Chennai team. Is this not a shame to our people? Is this not a disgrace to our Tamil society? The srilankan people who fired crackers on the fall of Tamil freedom fighters are now invited to share the business in Tamil Nadu.

If you want to show your anger, Tamils please sign up and send in your feedback to Chennai Super Kings stating that Tamils do not like Srilankans here. We can stick to same format given below. Click the link to post.
 
என் கேள்வி இதில் என்ன என்றால், சென்னை சூப்பர் கிங்க்ஸ் என்பது இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் கம்பெனி. அதற்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்மந்தம்? அதை தமிழர்களின் அணி என்று எப்படி சொல்ல முடியும்? அணியில் மொத்தம் இருக்கும் தமிழர்களே 5 பேர்தான். அதிலும் விளையாடும் 11 பேரில் இரண்டு தமிழர் வந்தால் பெரிய விசயம். அப்படி இருக்க அங்கே போய் சிங்களவனை எடுக்காதே என்று கோரிக்கை வைத்து என்ன பயன்? 
 
இரண்டாவது, 14 சிங்களவர்கள் விளையாடும் அணி ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணி. அந்த அணியையே புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களும் யாழ்-கொழும்பு வாழ் தமிழர்களும் ரசிக்கிறார்கள் என்றால் விளையாட்டையும் அரசியலையும் வேறு வேறாக அவர்கள் கருதுகிறார்கள் என்று தானே அர்த்தம்? அவர்களே அப்படி இருக்கும் போது நாம் விளையாட்டை அரசியலாகப் பார்ப்பதில் என்ன பயன்? 
 
தமிழர்கள் நமக்குள்ளே இருக்கும் களைகளை களைவதை விட்டு விட்டு இதற்கெல்லாம் போய் நம் சக்தியை விரயம் செய்ய வேண்டுமா? கொஞ்சம் யோசியுங்கள்.
 
பேசாமல் பால் தாக்கரேயைப் போல இலங்கை வீரர்கள் இந்தியாவில் (தமிழ்நாட்டில்) கிரிக்கெட் விளையாட விடமாட்டோம் என்று ஒரு மிரட்டல் அறிக்கை விட்டாலாவது நாடு திரும்பிப் பார்க்கும். வழக்கம் போல என்.டி.டி.வி தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எல்லாம் காட்டு மிராண்டிகள் என்பது போல ஒரு மாயையை ஒளிபரப்பும்.

ஆயிரத்தில் ஒருவன் - செல்வராகவன் சதி

கலவையான விமர்சனங்கள் வந்தாலும், ஆயிரத்தில் ஒருவனை பார்த்தே தீருவது என்று முடிவெடுத்திருந்தேன். பார்த்தும் விட்டேன்.

படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, ஆங்காங்கே பல லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும். இடைவேளைக்கு முந்தைய பகுதி  பரபர என்று ஓடியது. இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனமான ட்ராப் (trap) களை செட் செய்திருக்கலாம். ஆனாலும் மோசமில்லை. இரண்டாம் பகுதி பிரமிப்பு. ஆங்கிலப் படங்களில் மட்டுமே பார்த்து அதிசயித்த பல காட்சிகளை படமாக்கியிருந்த விதம் அருமை. 2000 நடிகர்களை கட்டி மேய்ப்பது சாமானிய காரியம் இல்லை. இவ்வளவுக்கும் பட்ஜெட் 32 கோடிதான் என்றால் ஆச்சரியம்தான். படத்தில் ஆங்காங்கே செல்வராகவன் “டச்” இருக்கிறது.

ஆதித் தமிழன் கருப்புதான். அதற்காக இவ்வளவு கருப்பாகக் காட்டியிருக்க வேண்டாம் என்று என் அலுவலக நண்பர் சொன்னார். எனக்கு அது கூட அவ்வளவு தப்பாகத் தெரியவில்லை.

லாஜிக் ஓட்டைகளை சுலபமாக அடைத்திருக்கலாம். ஏன் செல்வா உக்காந்து யோசிக்கவில்லை என்று தெரியவில்லை.

ரீமா சென் படம் முழுக்க வியாபித்திருக்கிறார். ஹாட்ஸ் ஆஃப் ரீமா. இந்த பாத்திரத்துக்கு சரியான தேர்வு. பல முறை யோசித்துப் பார்த்தும் வேறு யாரையும் அந்த இடத்தில் நினைத்துப் பார்க்க முடியவில்லை. ரீமாவுக்கு இந்தப் படம் ஒரு மைல் கல்.

பார்த்திபனின் பாத்திரம் சஸ்பென்ஸாகவே வைக்கப்பட்டிருந்தது. சில இடங்களில் வழக்கமான பார்த்திபனை பார்க்க நேர்ந்தாலும் ரீமாவுடன் சண்டை போடும் காட்சியிலும், ரீமாவின் துரோகத்தை எண்ணி உயிர் விடும் காட்சியிலும் கலக்கியிருக்கிறார் மனுசன்.

கார்த்தி அண்டர்ப்ளே செய்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் இவர் ஏதாவது ஹீரோயிசம் செய்வார் என்று எதிர்பார்க்க வைத்து ஏமாற வைக்கிறார். முக்கியத்துவம் குறைவாக இருந்தும் இந்தப் படத்துக்காக இவர் காத்திருந்ததற்காக இவரைப் பாராட்டலாம்.

ஆண்ட்ரியா முதல் பகுதியில் ஆங்காங்கே தெரிகிறார். இரண்டாம் பகுதியில் காணாமல் போகிறார்.

படம் முழுக்க வியாபித்திருந்தது ஒருவர் தான். அவர் செல்வா. நல்ல முயற்சி செல்வா. மூன்று வருட உழைப்பு படம் முழுக்கத் தெரிகிறது. இன்னும் கொஞ்சம் யாராவது காசு கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக செய்திருப்பார் என்று உறுதியாக நம்புகிறேன். இரண்டாம் பாகத்தை இன்னும் சிறப்பாக செய்யுங்கள்.

ஆமாம், தலைப்புக்கும் இந்தப் பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா?

சோழ மண்டலத்தைச் சேர்ந்த சோழர் குடுகுடுப்பைக்கும் பாண்டிய மண்டலத்தைச் சேர்ந்த பாண்டியன் முகிலனுக்கும் சண்டை முடிய செல்வா செய்த சதியே இந்தத் திரைப்படம் என்று வெளியில் பேசிக் கொள்கிறார்கள். அது உண்மையா தெரியவில்லை.

Wednesday, January 20, 2010

உறவுகள் - 06

05
04
03
02
01

சுசீலா ரமேஷும் மஞ்சுவும் பேசிக்கொண்டு இருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தாள். யாரோ வீட்டுக்கு வருவதைப் பற்றி ரமேஷும் மஞ்சுவும் பேசிக் கொண்டிருந்தனர்.

“யாருப்பா வர்றா?”

“சுகுமார்மா”

சுகுமார் என்று சொன்னதுமே சுசிலாவுக்கு யார் என்று தெரிந்துவிட்டது. இதில் அவர் வேறு விருதுநகர் பையனா என்று கேட்டு உறுதி செய்துகொண்டார்.

சுகுமாரும் ரமேஷும் காலேஜ் படிக்கும்போது ஃப்ரண்ட்ஸ். இவர்கள் இருவருக்கும் மஞ்சுவும் விஜியும் ஃப்ரண்ட்ஸ். மூவரும் இவர்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். விஜி, மஞ்சுவை விட நல்ல பெண். இவன் விஜியைக் கூட லவ் பண்ணியிருக்கலாம். ஒரே ஜாதியாகவாவது இருந்திருக்கும். இப்படிப்போய் மஞ்சுவை லவ் பண்ணித்தொலைந்து விட்டான்.

விஜியின் அப்பா அம்மா வருகிறார்களாம். மதியம் குழம்பு நன்றாக இருந்ததால் மிஞ்சவில்லை. அதனால் இரவுக்கு சோறு வைக்காமல், ரமேஷும் மஞ்சுவும் சமைத்துக்கொள்ளும் கோதுமை தோசை சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தார்கள். ரமேஷ் கரைத்து வைத்த கோதுமை மாவும் போதுமான அளவுக்கு இருந்தது. ரமேஷிடமும் கேட்டு உறுதி செய்து வைத்திருந்தாள். இப்போது இன்னும் நான்கு பேர் வந்தார்களானால் அவர்களுக்கு பத்துமா தெரியாது. எதையாவது சமைக்க சொல்லிவிடுவானோ என்று நினைத்தாள். அதனால் ரமேஷிடமே கேட்டும் விட்டாள்.

“ஏம்பா ரமேஷ் அவங்க சாப்புடுற மாதிரி வருவாங்களா?”

“தெரியலைமா. அரை மணி நேரத்துல வருவோம்னு சொன்னான்”

அரை மணி நேரத்துல என்றால்? மணி பார்த்தாள். 6:00 மணி. அரை மணி நேரத்தில் வந்தால் சாப்பிடுவது போல வருவார்கள். ஆனால் வந்த பிறகு கூட ஏதாவது செய்து விடலாம். அதனால் கொஞ்சம் நிம்மதியாக இருந்தாள். ஆனால் எட்டு மணி வரை அவர்கள் வரவில்லை.

எட்டு மணிக்கு வெளியே கார் நிற்கும் சத்தம் கேட்டது. ரமேஷும் மஞ்சுவும் கதவுக்குப் போனார்கள். சிறிது நேரத்தில் சுகுமார், விஜி, விஜியின் அம்மா அப்பாவோடு வந்தார்கள்.

மரியாதைக்காக டைனிங் டேபிள் சேரிலிருந்து எழுந்து “வாங்க” என்று சொன்னாள் சுசிலா. நால்வரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க ரமேஷும், சுகுமாரும் வெளியே போனார்கள்.

விஜி, விஜியின் அம்மா, மஞ்சு மூன்று பேரும் என்னவோ பேசிக் கொண்டே இருந்தார்கள். சிறிது நேரத்தில் சுகுமாரும் விஜியும் கிளம்பிப் போய் விட்டார்கள்.

ரமேஷ் “எல்லோரும் உக்காருங்க, நான் தோசை ஊத்தித் தர்றேன்” என்று சொல்லி அடுப்பைப் பற்ற வைத்து தோசைக் கல்லை போட்டான்.

ராகவன், மஞ்சு, விஜியின் அப்பா, அம்மா நாலு பேரும் டைனிங் டேபிளில் உட்கார்ந்து கொண்டார்கள். சுசிலா ரமேஷின் அருகில் நின்று கொண்டாள். அவள் தோசை சுடாலாம்தான். ஆனால் நின்று கொண்டே ஐந்து பேருக்கு சுடுவது கால் வலியோடு கஷ்டம். அதனால், ரமேஷ் சுடுவதைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

ராகவன், கொஞ்ச நேரம் கழித்து, “நீயும் சாப்புடும்மா” என்று சொல்ல, சுசிலா ஒரு தட்டை எடுத்துக் கொண்டு வந்தாள்.

ரமேஷ் “அம்மா நீங்க வெயிட் பண்ணுங்க. அவங்க சாப்பிட்டு முடிச்சதும் நாம ரெண்டு பேரும் சாப்பிடலாம்” என்று சொல்லிவிட்டு தோசையை மஞ்சுவுக்கு வைத்தான்.

சுசிலா பார்த்தாள், தோசை மாவு அதிகம் இல்லை. இரண்டு பேருக்கு வருமா என்றும் தெரியவில்லை. சட்னி வேறு காலியாகிக் கொண்டே வருகிறது. இவன் இப்படி இவர்களுக்கே வைத்துக் கொண்டு வந்தால், தனக்கு இருக்குமா என்று நினைத்தாள்.

அப்போது விஜியின் அம்மா - “எனக்குப் போதும். நீங்க சாப்புடுங்க” என்று சுசிலாவைப் பார்த்து சொன்னார். மஞ்சு அதற்கு - “பரவாயில்ல. நீங்க சாப்டுங்க ஆண்ட்டி, அவங்க ரமேஷோட சேந்து சாப்புடுவாங்க” என்று சொன்னாள். “அப்படியா” கேட்ட விஜியின் அம்மா, “அப்ப நீ சாப்புடு” என்று மஞ்சுவின் தட்டில் போட்டாள்.

பார்த்த சுசிலாவுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. விடுவிடுவென்று படி ஏறி மேலே போனாள்.

ராகவன் சிறிது நேரம் கழித்து மேலே வந்தார். சுசிலா படுக்கையில் படுத்துக்கொண்டு அழுது கொண்டிருந்தாள்.

“என்னம்மா. எதுக்கு இப்பிடி மேல வந்துட்ட? எதுக்கு அழுகுற?”

“அப்புறம் என்னங்க அந்தம்மாவே தோசைய எனக்கு குடுக்குறாங்க. இவ வேணாம்னு சொல்றா. அவன் என்னடான்னா பொண்டாட்டிக்கு தோச சுட்டு சுட்டு போடுறான். என்ன சாப்புடச் சொல்ல மாட்டேங்குறான். என்ன நினைச்சிக்கிட்டிருக்கான். எல்லாத்துக்கும் அப்புறம் சாப்புட நான் வேலைக்காரியா?”

“அப்பிடி நெனச்சிருக்க மாட்டான். அப்பிடியே நெனச்சிருந்தாலும், நீ மத்தவங்க முன்னால இப்பிடி கோவிச்சிக்கிட்டு வர்றது சரியா? அவங்க என்ன நெனப்பாங்க?”

“என்ன நெனச்சா என்ன. அவளும் அவங்களும் அப்பதெ குசுகுசுன்னு பேசிக்கிட்டே இருந்தாங்க என்னயப் பத்தித் தான பேசியிருப்பாங்க?”

“சரி ரமேஷ் வர்ற சத்தம் கேக்குது. அவன் வந்தா சாப்பாட்டுக்காக எந்திரிச்சி வந்தேன்னு சொல்லாத. வேற எதாவது சொல்லு?”

ரமேஷ் ஒரு தட்டில் நான்கைந்து தோசை வைத்து சட்னி ஊற்றிக் கொண்டுவந்தான்.

“ஏம்மா, தோசை மாவு கொஞ்சமா இருக்கு வந்த கெஸ்ட் சாப்டப்பறம் மிச்சமிருக்கறத நாம சாப்டுக்கலாம்னுதான நான் லேட்டா சாப்டலாம்னு சொன்னேன். நீங்க அவங்க முன்னாடி கோவிச்சிக்கிட்டு வர்றது கொஞ்சமாவது நல்லா இருக்கா? அவங்க என்ன நெனப்பாங்க?”

“நான் ஒன்னும் அதுக்காக வரல?”

“அப்புறம்? அவளும் விஜியோட அம்மாவும் என்னப் பத்தி எதோ குசு குசுன்னு பேசுறாங்க. என்னப் பத்தி குறை தான சொல்லிட்டு இருப்பா? ஒரு மருமகளே மாமியாரப் பத்தி தப்பா பேசுனா, அவங்க என்ன மதிப்பாங்களா?”

“அப்பிடியெல்லாம் பேசி இருக்க மாட்டாம்மா?”

“இல்ல நான் கேட்டேன். இல்லைன்னா நான் எதுக்கு கோவிக்கப் போறேன்? தோச மாவு கொஞ்சமா இருக்குன்னு எனக்குத் தெரியாதா?”

“நீங்க அதுக்குத் தான் வந்திருக்கிங்க. தோச காலியாயிடுச்சின்னா என்ன பண்றதுன்னு.”

“அப்பிடியெல்லாம் இல்லப்பா. உங்கம்மா அப்பிடி வருவாளா? “ ராகவன்.

“அப்பா இங்க பாருங்க. உங்கள இங்க நான் வர வழைச்சதே மஞ்சுவுக்கும் எனக்கும் இந்த டைம்ல ஹெல்ப்பா இருப்பிங்கன்னு தான். ஆனா நீங்க என்னடான்னா உங்கள கவனிக்க சொல்றீங்க. உங்களப் பத்தி நல்லா தெரிஞ்சிருந்தும் நான் கூப்பிட்டுட்டு வந்தது என்னோட தப்பு”

“என்னடா நாங்க உங்கள கவனிக்கலை?”

“மஞ்சுவுக்கு என்னம்மா தர்றீங்க? நேரா நேரத்துக்கு சாப்பாடு தர்றீங்களா?”

”நான் தான் சாப்பாடு சமைக்கிரேன்ல?”

“அது மட்டும் போதுமா? ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை ஏதாவது சாப்புட குடுக்க வேணாமா? ஜூஸோ இல்லை சூப்போ?”

ராகவன் “இங்க பாருப்பா. வேணும்னா கேக்கணும். கேட்டா போட்டுத் தருவோம்.”

“அப்பா. அவ எப்பிடி கேப்பா? உங்களுக்குத் தெரியாதா? இந்த நேரத்துல சாப்புட அப்பப்ப எதாவது குடுக்கணும்னு?”

“தெரியாதுப்பா”

“என்னம்மா இப்பிடி சொல்றீங்க? அக்கா நம்ம வீட்டுல இருந்து தான புள்ள பெத்துக்கிட்டா? அவளுக்குக் கூடவா நீங்க செய்யலை?”

“செய்யலப்பா. நாங்க என்ன சாப்டோமோ அதைத் தான் அவளுக்கும் செஞ்சோம்”

“சரி. அவளுக்கு அப்பிடி செஞ்சிட்டிங்க. மஞ்சு ரொம்ப வீக்கா இருக்குறதுனால, நீங்க அப்பப்ப எதாவது குடுங்க.”

“என்ன செய்யனும்னு சொல்லிட்டா நான் செஞ்சி குடுப்பேன்”

”சூப் வைக்கத் தெரியுமா?”

“தெரியாது.”

“சரி. நான் மொத்தமா வச்சிடுறேன். அப்பப்ப சூடு பண்ணி அவளுக்குக் குடுங்க.”

“சரி”

“இப்ப சாப்டுங்க. நீங்க கீழ வர வேணாம். நான் சமாளிச்சிக்கிறேன்.”

“சரி”

“அப்புறம். இந்த மத்தியான நேரத்துல சன் டிவி பாக்காதீங்க. அழுகாச்சி நாடகம் பாத்தா இந்த டைம்ல நல்லா இருக்காது.”

“அது தவிர எங்களுக்கு வேற பொழுது போக்கு இல்லயே?”

“கே டிவி பாருங்க”

“அதுல எப்பப்பாத்தாலும் படம் தான போடுரான். அதுவும் போட்ட படத்தையே?”

“இங்க பாருங்க. பொழுது போக்கத்தான் டிவி. பொழுதன்னிக்கும் அழுதுதீக்க இல்லை. நீங்க திருந்தலைன்னா நான் சன் டிவி-கே டிவியை டிஸ்கனெக்ட் பண்ணிடுவேன்”

தீர்க்கமாகச் சொல்லிவிட்டு கீழே போனான். அவன் முதுகையே பார்த்துக் கொண்டிருந்தாள் சுசிலா.

Monday, January 18, 2010

ஒரு கொலை, ஒரு புதிர் - முடிவு

முன்கதை இங்கே

இப்போ மூணு பேருதான் சந்தேக லிஸ்ட்ல இருக்காங்க. இதுல மூணு பேருக்குமே மோட்டிவும் இருக்கு அலிபியும் இருக்கு. யாரு பண்ணியிருப்பாங்கன்னு நீ நினைக்கிற?”

கேட்ட கார்த்தி அருணை தீர்க்கமாகப் பார்த்தார்.

அடுத்த சிகரெட்டைப் பற்ற வைத்த அருண் எழுந்து மெல்ல தன் நடையால் அந்த அறையை அளந்தான்.

“இந்தக் கொலை கண்டிப்பாக திட்டமிட்டக் கொலை கிடையாது. திட்டம் போட்டவன் வெப்பனோட தான் வருவான்.  கூலிக்கு கொலை செய்றவனும் வெப்பன் இல்லாம வர மாட்டான். சோ, பழைய பார்ட்னரை இந்த லிஸ்ட்ல இருந்து எடுத்துடலாம்”

“ஓக்கே. அப்போ வாட்ச் மேனா, மதியா?”

“கொஞ்சம் வெயிட் பண்ணுடா. சொல்லிட்டுதான வர்றேன்?”

“சரி சரி. நான் குறுக்க பேசல, சொல்லு”

“வந்தவன் கண்டிப்பா சாந்தினிக்கு தெரிஞ்சவன். அதுனால தான் அவங்க அவன ட்ராயிங் ரூம் வரைக்கும் விட்டுருக்காங்க. இந்த கேட்டகரில வாட்ச்மேன், மதி ரெண்டு பேரும் வர்றாங்க”

“ஆமா”

“வந்த எடத்துல அவங்க ரெண்டு பேருக்கும் ஏதோ வாக்குவாதம் நடந்திருக்கு. ஆத்திரத்துல அடிச்சிருக்கான். அவங்க கீழ விழுந்ததும் செத்துட்டாங்கன்னு பயந்து ஓடியிருக்கான்”

“ஆமா”

“வாட்ச்மேன் பீச்சுல தண்ணியடிச்சிட்டு கிடந்திருக்கான். அவன் கொலை பண்ணிட்டுக் கூட தண்ணியடிச்சிட்டு விழுந்திருக்கலாம். ஆனா வாட்ச்மேன் மாதிரி ஆளுங்க, கொலை பண்ணிட்டோம்னு பயந்தா ஊர விட்டு ஓடியிருப்பாங்க. இப்பிடி தண்ணியடிச்சிட்டு பீச்சுல கிடக்க மாட்டான்”

“ஆனா அதை மட்டும் வச்சிக்கிட்டு..”

“சரிதான். அதை மட்டும் வச்சி அவன லிஸ்ட்ல இருந்து எடுத்துட முடியாது. அவங்க செத்துக் கிடந்தது அந்த டீப்பாய் பக்கத்துல. அந்த சிலை கைக்கு அடக்கமா எடுத்து அடிக்கிற மாதிரி இருக்குது. ஆனா அதை எடுத்து அடிக்காம தூரத்துல இருந்த கோல்ஃப் க்ளப் எடுத்து அடிச்சிருக்கான். வாட்ச்மேனா இருந்தா அந்த சிலையத்தான் எடுத்து அடிச்சிருப்பான். அந்த சிலையோட வேல்யூ தெரிஞ்சவன் தான் அத யூஸ் பண்ணாம இருந்திருக்கனும். வாட்ச்மேனுக்கு அது தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்லை”

“கரெக்டு”

“இதுதான் நடந்திருக்கு. மதி சம்பவத்தன்னிக்கு அத்தை வீட்டுக்கு எதுக்கோ வந்திருக்கான். அவனுக்கும் சாந்தினிக்கும் ஏதோ ஒரு விசயத்துல - மே பி சொத்து விவகாரத்துல சண்டை வந்திருக்கு. கோவம் வந்த அவன் சிலைய எடுக்காம கோல்ஃப் க்ளப் எடுத்து அவங்களை அடிச்சிருக்கான். செத்துட்டாங்கன்னு தெரிஞ்சதும் வீட்ட விட்டு ஓடிப்போய் தியேட்டர்ல வேட்டைக்காரன் - அந்தப் படத்துக்குதான் கூட்டம் இருந்திருக்காது, சோ லேட்டாப்போனாலும் டிக்கெட் கிடைச்சிருக்கும் - படம் பாத்துட்டு டிக்கெட்டைப் பத்திரப் படுத்தி வச்சிருக்கான், போலிஸ் விசாரணை வந்தா அலிபியா உபயோகப்படும்னு.”

கார்த்தி எழுந்து வந்து அருணைக் கட்டிக்கொண்டார். “சூப்பர்டா. லாஜிக் ஒர்க் ஆவுது”

“போ. போய் அவன கஸ்டடிக்கு கொண்டு வந்து ரெண்டு தட்டு தட்டு, எல்லாத்தையும் கக்கிடுவான்” சிகரெட்டை ஆஷ்ட்ரேயில் நசுக்கிவிட்டு “என்னை மறுபடி வீட்டுல விடச் சொல்லுடா” தன் கூலரை எடுத்து அணிந்து கொண்டான்.

(மீண்டும் அடுத்த சாகசத்தில் சந்திக்கிறேன்)

பின்னூட்டங்கள் எல்லாம் வெளியிட்டுவிட்டேன். மொத்தம் வந்த பின்னூட்டங்கள் 9, வானம்பாடிகள் சார் இரண்டு பின்னூட்டம் போட்டதால், குற்றவாளியை கண்டுபிடிக்க முயற்சி செய்தவர்கள் 8 பேர்தான். அதில் 7 பேர் மதிவாணன் தான் என்று சரியாகக் கண்டு பிடித்திருந்தனர். ஆனாலும் அவர்கள் மதிவாணனை குற்றம் சாட்டுவதற்கான காரணத்தை விளக்கமாக எழுதவில்லை. வானம்பாடிகள் சார் தான் மிக அருகில் வந்திருந்தார். ஆதலால், அவருக்கே பரிசு.

வாழ்த்துக்கள் பாலா (வானம்பாடிகள்) சார். ரூ. 200/- பட்ஜெட்டில் நீங்கள் வாங்க நினைத்த, இன்னும் வாங்காத புத்தகம் என்று ஏதாவது இருந்தால் அதை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

பி.கு: கவனமாகப் படிக்கவும் இரண்டுக்குப் பிறகு இரண்டு பூஜ்யங்கள் தான் போட்டிருக்கிறேன். :))))))

Sunday, January 17, 2010

பிதற்றல்கள் 01/17/2010

சமீபத்தில் 3 இடியட்ஸ் படம் பார்த்தேன். அமீர் கலக்கியிருக்கிறார். மார்ச் மாதம் 45 வயதை கடக்கப் போகிறவர் மாதிரியே இல்லை. ஒரு கல்லூரி மாணவனின் உடல்மொழி அனாயாசமாய் வருகிறது. ஒரு சில காட்சிகளில் கரீனா கபூர் அமீர்கானை விட வயதானவராகத் தெரியும் அளவுக்கு அநியாயத்துக்கு இளமையாயிருக்கிறார். 

மூன்று இளைஞர்களின் கல்லூரி வாழ்வை சொல்வதன் மூலம் இந்திய கல்வி முறையில் இருக்கும் ஓட்டைகளை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.  பல லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் மனதாரப் பாராட்டலாம்.

படத்தின் உள்குத்து தென்னிந்தியர்களைக் கிண்டல் அடித்திருப்பது. இன்னொரு - ஃபர்ஹான், சதுர், ராஜூ மூவரும் சிம்லாவுக்குள் நுழையும் - காட்சியில் ஒரு 5 முஸ்லிம் பெண்கள் கண்கள் மட்டும் தெரியும் அளவுக்கு பர்தா அணிந்து கொண்டு ஒரு டூரிஸ்ட் அட்ராக்‌ஷன் முன் புகைப்படம் எடுத்துக்கொள்வது போல வருகிறது. இது உள்குத்தா தெரியவில்லை.

இந்தப் படத்தை தமிழில் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். எடுத்தால் நடிகர்களுக்கு என் சாய்ஸ் - சூர்யா (அமிர்), மாதவன் (மாதவன்), பாய்ஸ்-சித்தார்த் (ராஜூ).

இந்தியா-பங்களாதேஷ் இடையே முதல் டெஸ்ட் போட்டி துவங்கிவிட்டது. போட்டிக்கு முந்தைய நாள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சேவாக் பங்களாதேஷின் பந்து வீச்சு சாதாரணமானது. அவர்களால் இந்திய அணியின் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடியாது என்று சொன்னார். அதற்கு பதிலடி தருவது போல ஒரே நாளில் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி விட்டது பங்களாதேஷ், வெறும் 218 ரன்கள் மட்டும் கொடுத்து.

கிரிக்கெட் கடவுள் சச்சின் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார். இன்று அவர் சதமடிக்கக் கூடும். அப்படி அடித்தால் அவரது விமர்சகர்கள் பங்களாதேஷுக்கு எதிராகத்தான் சச்சினால் சதம் அடிக்க முடியும் என்று பே(ஏ)சுவார்கள். எப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த சதம் என்பதை வசதியாக மறந்து விடுவார்கள்.

வேட்டைக்காரன் நியூஸ் போடாமல் நான் இந்தப் பிதற்றல்களை முடித்தால் உம்மாச்சி கண்ணைக் குத்திவிடுமாதலால், இந்த இரண்டு படங்களை (நோ ஜிம்மிக்ஸ், எல்லாம் ஒரிஜினல்) மட்டும் போட்டுவிடுகிறேன்.



படம் வெளியானது டிசம்பர் 18, இன்று ஜனவரி 18, ஆனால் இவர்களுக்கு மட்டும் 40 நாள் ஆகிவிட்டதாம்?!!!

கீழே உள்ள படம் அதை விட கொடுமை. இப்படியெல்லாம் படத்தை ஓட்டவேண்டுமென்று என்ன கட்டாயம்?




நேற்று எழுதிய கதைப்புதிருக்கு நான் எதிர்பார்த்த அளவு பதில்கள் வரவில்லை. பல மக்கள் அலுவலகத்தில் தான் ப்ளாக்குகளைப் படிப்பதாலும் நேற்று ஞாயிறு என்பதாலும் இன்னொரு நாள் விட்டுப் பார்க்கலாம் என்று இருக்கிறேன். முடிவை நான் ஏற்கனவே எழுதிவிட்டேன். நாளை கண்டிப்பாக வெளியிடுவேன்.

இதுவரை பதில் பின்னூட்டமிட்டவர்களில் பலர் சரியான பதிலை சொல்லியிருந்தாலும் அவர்கள் ஏன் அந்த நபர் கொலை செய்திருக்கலாம் என்று தான் நினைப்பதற்கான காரணத்தை எழுதவில்லை. யாராவது சொல்வார்கள் என்று நினைக்கிறேன். அப்படி யாரும் சொல்லவில்லை என்றால் யார் கிட்டத்தட்ட சொல்கிறார்களோ அவர்களுக்கு புத்தகம் நிச்சயம்.

ஒரு கொலை, ஒரு புதிர் - அருணின் அடுத்த கேஸ்

அருண் வழக்கமான காலை உடற்பயிற்சியை முடித்துக் கொண்டு தன் ஸ்விஃப்டில் வீட்டிற்கு விரைந்து கொண்டிருந்தான். அவன் பையில் இருந்த செல்ஃபோன் சிணுங்கியது. காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தி செல்லை எடுத்து காதுக்குக் கொடுத்தான்.

“ஹலோ அருண் ஹியர்”

“அருண் நான் கார்த்தி பேசுறேண்டா.”

“சொல்டா. என்ன காலங்காத்தால?”

“ஒரு கேஸ் விஷயமா உன் ஹெல்ப் தேவைப் படுது. கொஞ்சம் வர முடியுமா?”

“ஷ்யூர் டா. எங்க வரணும்?”

“நீ வீட்டுக்கு வா. அங்க டிபார்ட்மெண்ட் வெஹிக்கிள் வெயிட் பண்ணுது.”

“ஓ. ஓக்கேடா. ஒரு பாத் எடுத்துட்டு வரலாமா?”

“நோ ப்ராப்ளம்டா”

செல்லை அணைத்துவிட்டு காரை வீட்டிற்கு விரட்டினான். வாசலில் நின்றிருந்த க்வாலிஸின் ட்ரைவர் இவன் காரைப் பார்த்ததும் விரைப்பாக ஒரு சல்யூட் வைத்தார்.

சட்டையின் பேட்ஜில் பேரைப் பார்த்த அருண் “மாணிக்கம். ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க. நான் குளிச்சிட்டு வந்திடுறேன்”

“சரி சார்”

“உள்ள வந்து வெயிட் பண்ணுங்க”

சரியாக ஒன்பதரையாவது நிமிடம் கோடு போட்ட இளம்பச்சை டி-ஷர்ட் ஜீன்ஸில் அருண் வெளியே வரும்போது ஹாலில் மாணிக்கத்துடன் சிவாவும் உட்கார்ந்திருந்தான். அருணைப் பார்த்ததும் இருவரும் எழுந்தனர்.

“வாங்க சிவா. நீங்க எப்ப வந்திங்க?”

“நீங்க உள்ள போனதும் வந்துட்டேன் சர்”

“வாங்க போலாம். போகும் போது இந்தக் கேஸ் பத்தி சொல்லிட்டே வாங்க”

க்வாலிஸ் பிரதான சாலையில் சேர்ந்து காலை நேர ட்ராஃபிக்கில் கிட்டத்தட்ட ஊர்ந்தது.

“மாணிக்கம், சைரன் யூஸ் பண்ணுங்க. சீக்கிரமா போகணும்”

“சிவா. கேஸ் பத்தி சொல்லுங்க”

“சர். இறந்தது ஃபேமஸ் ஜட்ஜ் ராமாமிர்தத்தோட விடோ சாந்தினி சார். ஷி இஸ் 57. அவங்க வீட்டு ட்ராயிங் ரூம்லயே தலைல பலமா தாக்கப்பட்டு ஸ்பாட்லயே இறந்திருக்காங்க. மூணு பேர் மேல சந்தேகம் இருக்கு சர். மூணு பேருக்குமே மோட்டிவ் இருக்கு. அதான் உங்க எக்ஸ்பெர்ட் அட்வைஸ் கேக்கலாம்னு கமிஷனர் கூட்டிட்டு வர சொன்னாரு சர்”

“ஓக்கே. இப்ப நாம எங்க போறோம்?”

“க்ரைம் சைட்டுக்கு தான் சர்”

“ஓக்கே”

க்வாலிஸ் அந்த பெரிய காம்பவுண்ட் கேட்டைத்தாண்டி கட்டப்பட்டிருந்த ப்ரம்மாண்டமான பங்களாவின் போர்ட்டிகோவில் நின்றது. கதவைத் திறந்து இறங்கிய அருணை வரவேற்க அங்கே கார்த்திகைப் பாண்டியன் நின்றிருந்தார்.

“வா அருண். சிவா கேஸ் பத்தி உன்கிட்ட சொல்லியிருப்பார்னு நினைக்கிறேன்”

“ஆமா கார்த்தி. க்ரைம் சீன் பாக்கலாமா?”

“ஷ்யூர். வா”

உள்ளே நுழைந்ததும் அவர்களை வரவேற்றது ஒரு பெரிய ஹால். ஜட்ஜ் ராமாமிர்தம் வக்கீலாக இருக்கும் போது நிறைய சம்பாதித்து இருப்பார் போல. வீட்டின் ஒவ்வொரு செண்டிமீட்டரிலும் வேலைப்பாடு இழைந்திருந்தது. சுவர்களில் ராஜா ரவிவர்மனின் ஓவியங்கள். ஆங்காங்கே சிறிய மேஜைகள் வைத்து அவற்றின் மேல் சிறிய சிறிய சிற்பங்கள். ராமாமிர்தம் பெரிய கலா ரசிகராக இருக்கவேண்டும்.

வீட்டின் வரவேற்பரைக்கு சென்றார்கள். அங்கே அறையின் மத்தியில் ஒரு சிறிய டீப்பாய். அதன் மேல் வீட்டின் வழக்கத்தைப் போல கையில்லாத ஒரு அரை நிர்வாணப் பெண்ணின் சிலை. டீப்பாயின் எதிரில் ஒரு சோஃபா. ஒரு பத்து பதினைந்து அடி தூரத்தில் டிவியின் அருகில் ஒரு கோல்ஃப் பை.

“சம்பவத்தன்னிக்கு அதாவது முந்தா நாள் ராத்திரி பத்து மணி போல சாந்தினிக்கும் கொலைகாரனுக்கும் இந்த இடத்துல” - டீப்பாய்க்கும் சோஃபாவுக்கும் இடையில் உள்ள இடத்தைக் காட்டுகிறார் - “வாக்குவாதம் நடந்திருக்கு. வாக்குவாதத்தின் உச்சக்கட்டமா கோபம் வந்த கொலைகாரன் அந்த கோல்ஃப் பேக்ல இருந்து ஒரு கோல்ஃப் ஸ்டிக் எடுத்து அவங்க தலைல அடிச்சிட்டு ஓடியிருக்கான். அடிச்ச வேகத்துல அவங்க மயங்கி பின்னாடி ரத்தம் நிறைய வெளியேறினதால் இறந்தும் போயிருக்காங்க”

“வீட்டுல வேற யாரும் வேலக்காரங்க இல்லையா?”

“இல்ல. ராமாமிர்தம் இறந்ததுல இருந்து சாந்தினி தனியா இருந்துவர்றதத்தான் விரும்பியிருக்காங்க. ஒரு வேலைக்காரி மட்டும் காலைல வந்துட்டு சாப்பாடு சமைச்சி எடுத்து வச்சிட்டு போயிருவா. வாட்ச்மேன் ஒருத்தன் இருந்திருக்கான். அவன ரீசண்டா டிசிப்ளினரி கன்செர்ன்ல வேலைய விட்டு நிறுத்தியிருக்காங்க. மத்தபடி இவங்க தனியா தான் இருந்திருக்கிறாங்க.”

அந்த மேஜை மேல் இருந்த சிலையை கையில் எடுத்துப் பார்த்தான் அருண்.

“இது வீனஸ் டி மிலோ. ஹென்றி மூர் அவர் கையால கார்வ் பண்ணினது” சொன்ன இளைஞனை அப்போதுதான் பார்த்தான் அருண்.

அவன் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட கார்த்தி - “ஓ, இவரை இண்ட்ரட்யூஸ் பண்ண மறந்துட்டேன். இவர் மதிவாணன். சாந்தினியோட நெஃப்யூ. குழந்தையில்லாத ராமாமிர்தம்-சாந்தினி வீட்டுல தான் வளர்ந்திருக்காரு. ஆனாலும் என்ன காரணத்தினாலேயோ ராமாமிர்தம் இவரை அஃபிஷியலா தத்தெடுத்துக்கலை. ராமாமிர்தத்தோட கலை ஆர்வம் இவருக்கும் இருக்கு”

“நீங்க என்ன பண்றீங்க மிஸ்டர் மதிவாணன்?”

“ப்ளீஸ் கால் மீ மதி. நான் antique dealer ஆ இருக்கேன்”

”எங்க ஸ்டே பண்ணியிருக்கிங்க?”

“நான் அடையார்ல ஒரு ஃப்ளாட்ல தங்கியிருக்கேன்”

“ஹென்றி மூர் அப்ஸ்ட்ராக் ஸ்டேச்சுஸ் தான டிஸைன் பண்ணுவாரு? அவரு எப்பிடி வீனஸ் டி மிலோவை ரெப்ளிக்கேட் பண்ணார்?”

“ஓ ஹென்றி எங்க அங்கிளோட குட் ஃப்ரண்ட். எங்க அங்கிள் ரெக்வெஸ்ட் பண்ணிக் கேட்டதனால அவர் செஞ்சிக் குடுத்தார். இது ஒண்ணுதான் அவர் செஞ்ச ஒரே நான் அப்ஸ்ட்ராக்ட் ஸ்டேச்சு. இப்போ இதை வித்தாலும் லட்சக் கணக்குல போகும்”

“ஐ சீ. கார்த்தி, ஐ யம் டன். நாம உன் ஆஃபிஸ்க்கு போய் மேல பேசலாம்”

“ஓக்கே. பை மதி.”

***********************************************************************************

அருண் சிகரெட்டை கார்த்தியின் மேஜை மேல் இருந்த ஆஷ்ட்ரேயில் தட்டினான்.

“சொல்லு கார்த்தி. யாரெல்லாம் அக்யூஸ்டு? என்ன மோட்டிவ்?”

“முதல்ல அந்த வாட்ச்மேன். அவன் குடிச்சிட்டு ட்யூட்டி பாத்ததுனால அவன ரெண்டு நாளைக்கி முன்னால வேலைய விட்டு விலக்கியிருக்காங்க. அவன் அப்போவே கோவத்துல கத்திட்டுப் போயிருக்கான். அவன் மறுபடி வந்து சண்டை போட்டிருந்திருக்கலாம். அப்போ ஆத்திரம் வந்து அவன் இவங்களை அடிச்சிட்டு ஓடிப் போயிருக்கலாம்.”

“ஓக்கே. அவனக் கொண்டு வந்து விசாரிக்கலையா?”

“அவன் இப்போ லாக்க்ப்ல தான் இருக்கான். அவன் சம்பவத்தன்னிக்கு மூக்கு முட்ட குடிச்சிட்டு பீச்சுல கிடந்தேன்னு சொல்றான். அவன பதினோறு மணி போல ரோந்து போன கான்ஸ்டபிள்தான் வெரட்டி விட்டிருந்திருக்கார். அவரும் அவன் நல்ல போதைல இருந்ததா க்ன்ஃபர்ம் பண்றார். ஆனா கொலை பண்ணிட்டு வந்து கூட படுத்திருந்திருக்கலாம்.”

“அடுத்த சந்தேகம் யார் மேல?”

“ராமாமிர்தத்தோட பழைய பிசினஸ் பார்ட்னர் ஒருத்தர். அவர் கம்பெனி பிரச்சனைல சாந்தினி தலையிட்டது பிடிக்காம கோல்ஃப் கோர்ஸ்ல பாத்து சாந்த்தினிக்கிட்ட கத்தியிருக்கார். உயிரோட இருக்கமுடியாதுன்னு மிரட்டலா பேசியிருக்கார். அவர் சம்பவத்தன்னிக்கு பிசினஸ் விசயமா பெங்களூர் போயிருக்கார். ஆனா அவர் ஆள் வச்சி செஞ்சிருக்கலாம்”

“சரி மூணாவது ஆள்?”

“கடைசி ஆள். மதிவாணன். மோட்டிவ் வழக்கமானதுதான். சாந்தினியும் இறந்துட்டா அந்த சொத்தையெல்லாம் அனுபவிக்கலாம்னு அவனே செஞ்சிருக்கலாம். ஆனா அவன் சம்பவத்தன்னிக்கு நைட் ஷோ வேட்டைக்காரன் படத்துக்கு போயிருக்கான். டிக்கெட் கூட பத்திரமா வச்சிருக்கான். அதுனால அவன் லிஸ்ட்ல கடைசிதான்”

“ஹ்ம்ம்..”

“இன்னொரு கோணம் என்னான்னா, யாராவது திருடன் செஞ்சிருக்கலாம். ஆனா எதுவும் திருடு போகவும் இல்லை”

“இப்போ மூணு பேருதான் ஃபைனல் சந்தேக லிஸ்ட்ல இருக்காங்க. இதுல மூணு பேருக்குமே மோட்டிவும் இருக்கு, அலிபியும் இருக்கு. யாரு பண்ணியிருப்பாங்கன்னு நீ நினைக்கிற?”

அருண் அதற்கு பதில் சொல்வது இருக்கட்டும் நண்பர்களே. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். பின்னூட்டங்களில் சரியான பதில் அளியுங்கள். குற்றவாளியும், காரணமும் சரியாக சொல்லும் முதல் நபருக்கு  ஒரு புத்தகம் பரிசாக வீடு தேடி வரும்.

சுவாரசியத்திற்காக, பின்னூட்டங்கள் மட்டுறுத்தப் படுகின்றன.

நாளை பின்னூட்டங்களையும் கதையின் முடிவும் வெளியிடப்படும்

Saturday, January 16, 2010

ஃபோட்டோ வித் கமெண்ட்ஸ்

டிஸ்கி: சும்மா நாமளும் ட்ரை பண்ணலாமேன்னு.. ஹி ஹி ஹி







Friday, January 15, 2010

பிதற்றல்கள் 1/15/2009

அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்

வருடாந்திர கணக்கு முடிக்கவேண்டியிருப்பதால் எங்கள் அலுவலகத்தின் ஃபைனான்ஸ் பிரிவு அவர்கள் க்யூபிக்கிளின் வெளியே ஒரு நோட்டிஸ் - YEAR END IN PROGRESS. PLEASE BE QUIET - ஒட்டியிருந்தார்கள். அதைப் பார்த்து கடுப்பான எங்கள் நெட்வொர்க் ஸ்பெஷலிஸ்ட் அவர் க்யூபிக்கிளின் வெளியே இப்படி ஒரு நோட்டிஸ் ஒட்டி விட்டார் - Shh.. QUIET PLEASE. INFORMATION TECHNOLOGY WORKS ALL YEAR -

(நன்றி: ரீடர்ஸ் டைஜஸ்ட்)
**********************************************************************************
போன வருடம் தமிழக அரசு தை ஒண்ணாம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என்று உத்தரவு போட்டிருந்தார்கள். எத்தனை பேர் அதை பின்பற்றுகிறார்கள் என்று தெரியவில்லை. அப்படிப் பின்பற்றுபவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்.

எல்லோரும் பொங்கல் வைத்தோ, கரும்பு சாப்பிட்டோ, மாட்டைக் குளிப்பாட்டி, அலங்காரம் செய்து அதற்கு பொங்கல் ஊட்டியோ, ஜல்லிக்கட்டில் மாட்டை அடக்கியோ, அதை வேடிக்கைப் பார்த்தோ, முட்டாள் பெட்டியின் முன் உட்கார்ந்தோ, திரையரங்கிற்குப் போய் படம் பார்த்தோ பொங்கல் கொண்டாடி முடித்திருப்பீர்கள். நாங்களும் குக்கரில் பொங்கல் வைத்து சாப்பிட்டும் சாப்பிடாமலும் அலுவலகம் போய் அங்கு நண்பர்களுடன் பொங்கலைப் பகிர்ந்து கொண்டாடிவிட்டோம்.
***************************************************************************************
சமீபத்தில் படித்த இரண்டு விஷயங்கள் மனதை மிகவும் பாதித்தது.  மதுரையில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு அரசு மருத்துவமனையிலேயே பிரசவம் பார்க்க மறுத்திருக்கிறார்கள். கடைசியில் அந்தப் பெண்ணுக்கு சுயபிரசவம் (ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை) ஆகியிருக்கிறது. அதன் பின் வந்து குழந்தையை எடுத்துக் கொண்டு போய் குளிப்பாட்டி குழந்தையைக் கொடுப்பதற்கு ரூ.1500/- கேட்டிருக்கிறார்கள். கொடுக்க காசில்லை என்று சொன்னதற்கு தரக்குறைவாகப் பேசியிருக்கிறார்கள். மருத்துவத் தொழில் புனிதமானது. அதை சேவை என்று நினைத்து செய்யக்கூடியவர்கள் அதிகமானால் தான் இப்படிப்பட்ட மனிதத்தன்மையற்ற செயல்கள் தொடராது.

இன்னொரு கொடுமையான சம்பவம் - மனநிலை சரியில்லாததால் எண்ணை என்று நினைத்து விஷத்தை ஊற்றி தோசை சுட்டு மரணமடைந்த சம்பவம். வேதாரண்யம் அருகில் ஒரு கிராமத்தில் ஒரே வீட்டில் நான்கு குழந்தைகளுக்கும் பிறவியிலிருந்தே மன நிலை சரியில்லையாம் - அநேகமாக ஆட்டிஸம்? - நான்கு பேரும் வாலிப வயதை எட்டினாலும் மனதால் குழந்தையாகவே இருந்திருக்கிறார்கள். அவர்களின் அம்மாவும் மறைந்த பின்னர் அப்பா மட்டுமே அவர்களை பாதுகாத்து வளர்த்து வந்திருக்கிறார்.

சம்பவ தினத்தன்று அவர் ஏதோ வேலையாகச் சென்று விட்டிருக்கிறார். மூத்த மகள் உடன் பிறந்தவர்களுக்கு தோசை சுட்டுத்தர எண்ணெய் என்று நினைத்து பயிருக்கு அடிக்க வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை உபயோகப் படுத்தி இருக்கிறார். இதனால் அவரும் இன்னொரு சகோதரரும் மரணம் அடைந்த்துவிட்டார்கள். மற்ற இருவரையும் மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றி விட்டார்கள். இதில் கொடுமை என்னவென்றால் இவர்களின் உடலை போஸ்ட் மார்ட்டத்துக்குப் பிறகு பேக் செய்து தர ஆயிரம் ரூபாய் பேரம் பேசியிருக்கிறார்கள் பிணவறை ஊழியர்கள். ஊர்க்காரர்கள் சேர்ந்து அந்தக் காசைக் கொடுத்தபின் தான் உடல்களைப் பெற முடிந்திருக்கிறது

இவர்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது.
*************************************************************************************
ஃபாலோ-அப்: தினமலர் வீடியோ உண்மையா இல்லையா என்று கண்டுபிடித்துச் சொல்லவேண்டிய தார்மீகப் பொறுப்பு எனக்கு இருப்பதாக வானம்பாடிகள் சொல்லிவிட்டதால் இந்த ஃபாலோ-அப். அமைச்சர்கள் மற்றும் அங்கே இருந்த காவல்துறை அதிகாரிகள் சொல்வது என்னவென்றால் - ஆம்புலன்ஸ் வந்தால் அதில் முதலுதவிக்கான வசதிகள் இருக்கும் என்பதால் ஆம்புலன்ஸுக்காகக் காத்திருந்தார்களாம். அதுவர லேட்டாகும் என்று தெரிந்ததும் அமைச்சரின் காவலுக்கு வந்திருந்த ஒரு வேனில் ஏற்றி அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அம்பாசமுத்திரம் மருத்துவமனையில் முதலுதவி செய்துவிட்டு பாளையங்கோட்டை ஜி.எச்சுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். 4:00 மணி சுமாருக்கு உயிர் பிரிந்திருக்கிறது.

இதன் மூலம் என்ன தெரிகிறது என்றால், அமைச்சர்கள் மற்றும் அங்கே கூடியிருந்தவர்களின் மேல் தவறு இருக்கிறது என்றாலும், அதை மீடியா ஊதிப் பெரிதாக்கிவிட்டிருக்கிறது. அதிலும் வட இந்திய மீடியாக்களுக்கு - வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கிடைத்த மாதிரியாகிவிட்டது. கோவை அருகே ராணுவ வாகனத்தைத் தாக்கிய சம்பவத்தை கவர் செய்த என்.டி.டி.வி செய்தியை நினைவில் கொள்ளுங்கள். இதில் கொடுமை என்னவென்றால், வளைத்து வளைத்து படமாக்கிய அந்த கேமராமேன் உதவி செய்யாததைப் பற்றி ஒருவரும் வாய் திறக்க மாட்டேன் என்கிறார்கள். அவரும் தானே குற்றவாளியாகிறார்?
*********************************************************************************
நான் இந்தியாவில் லைப்ரரிக்கு அவ்வளவாகப் போனதே இல்லை. சிறு வயதில் ஆர்வக் கோளாரில் ஸ்கூல் லைப்ரரியில் டின் டின் காமிக் புக் எடுத்து ஒரு வருடமாகத் திருப்பி தராமல் போனதால் கட்டிய ஃபைன் காரணமோ தெரியவில்லை. கல்லூரியில் ஒவ்வொரு வருடக் கடைசியிலும் லைப்ரரியனிடம் நோ ட்யூ சர்டிஃபிக்கேட் பெற போயிருக்கிறேன். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது எக்ஸாம் எழுதப் போயிருக்கிறேன். மற்ற படி லைப்ரரி பக்கம் போனதில்லை.

அமெரிக்கா வந்த பின் என்னுடன் வேலை பார்த்த அக்கட பூமிக்காரன் லைப்ரரியில் டி.வி.டி ஃப்ரீயாக ரெண்ட் எடுக்கலாம் என்று சொன்னதால் போய்ப் பார்த்தேன். என் தாத்தா காலப் படங்களாக இருந்ததால் வெறும் கார்டு மட்டும் விண்ணப்பித்துவிட்டு வந்துவிட்டேன். ஆனால் ஒரு வருடம் தினமும் காலையில் 90 மைல் மாலையில் 90 மைல் பயணம் செய்ய வேண்டி இருந்த போது ஆடியோ-புக் லைப்ரரியில் எடுத்து கேட்டுக் கொண்டே செல்வது வழக்கமாகிப் போன போது லைப்ரரி போகும் பழக்கம் அதிகமானது. அந்தப் பயணம் தேவை இல்லாமல் ஆனபோது லைப்ரரிக்கு வழியும் மறந்து போனது.

ஆனால் இந்த புதன்கிழமை இங்கே லோக்கல் லைப்ரரியில் குழந்தைகளுக்கு ஸ்டோரி டெல்லிங்க் என்று ஒரு (ஃப்ரீ தான்) ப்ரொக்ராம் இருப்பதாகத் தெரிய வந்ததும் தங்கமணி படுத்தியதால் போனோம். உள்ளே நுழைந்ததும் ஆனந்த அதிர்ச்சி. ஒரு பலகையில் பல மொழிகளில் எழுதி வைத்திருந்தார்கள். அதில் தமிழும் இருந்தது. இனி அடிக்கடி அந்த லைப்ரரிக்குப் போக வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன்.




Thursday, January 14, 2010

வறுத்தலும் புசித்தலும்

சிவக்க சிவக்க வறுக்க வேண்டுமாம் கோழி
சொல்கிறாள் அம்மா
தொண்டை வரை நிறைந்திருந்தது
பல்லுக்கு இடையிருந்த துணுக்குகள்
உறுத்தியபடி.
மூணு துண்டுதான் அப்புறம் மீன்
வறுத்துக்கலாம்
இம்முறையும் அம்மாதான்
வாசலில் எதையோ கொத்தியபடி
கொக்கரித்துக் கொண்டிருக்கும்
சேவலைப் பார்க்கிறேன்
காலில் படபடத்தது கட்டிய கயிறு
இனிமே தயிரு தானே அண்ணே?
திசை திருப்பியது மூத்த தங்கையின் குரல்
தயிர்சோத்துல உப்பு போடாம
இருக்கக்கூடாது
மனைவியின் கவலை நாக்கில் கரித்தது
கோழி வெட்டியவனை வீட்டுக்கு அனுப்பி
எனை அடுப்பெரிக்க வைத்த
நல்லதொரு நாளில்
வறுத்துப் பொரிக்கப் பட்டது கோழி
விரால் மீனுடன்
சாப்பிட வந்தவர்களை
வழியனுப்பித் திரும்புகையில்
சேவலின்
கண்களின் திசையறிந்து மௌனமாய்
கேட்டுக்கொள்கிறேன்
இந்த சேவலை வறுத்துப் புசிப்பது
யார்??

அசல் இங்கே
நகல் 1
நகல் 2

உறவுகள் - 05

04
03
02
01


ரமேஷ் லோட்டஸ் நோட்ஸை மூன்றாவது முறையாக ரெஃப்ரெஷ் செய்தான். முக்கியமான ஈ-மெயிலுக்காக வெயிட்டிங். அனுப்பிவிட்டேன் என்றான் மார்க் ஆனால் இன்னும் வரவில்லை. அது வந்து விட்டால் ப்ரசண்டேஷனை முடித்து பார்ட்டிசிபண்ட்ஸ்க்கு அனுப்பி விடலாம்.

பொறுமையிழந்து மார்க்கை ஃபோனில் பிடித்தான்.

“வாஸ்ஸப் மேன்”
...
“ஐ டோண்ட் ஹாவ் இட் யெட்”
...
“செண்ட் டு ராங் ரமேஷ்?”
...
“இட்ஸ் ராகவன் மேன்”
...
“ஐ சீ இட் நவ். தேங்க் யூ”

ரிசீவரை வைத்து விட்டு ஈ-மெயிலை திறந்தான். உள்ளே சேர்க்கப்பட்டிருந்த எக்ஸெல் ஃபைலைத் திறந்து காப்பி பேஸ்ட் செய்ய ஆரம்பித்தான்.

செல்ஃபோன் கூப்பிட்டது. அழைக்கும் எண்ணைப் பார்த்தான். மஞ்சு.

“ஹலோ மஞ்சு”
...
மறுமுனையில் மஞ்சு அவளுக்கும் ரமேஷின் அம்மாவுக்கும் இடையே நடந்த உரையாடலைப் பற்றி அழுகையினூடே சொல்லிக் கொண்டிருந்தாள். பொறுமையாக உம் கொட்டிக் கேட்டுக் கொண்டிருந்த ரமேஷின் கைகள் காப்பி-பேஸ்ட்டைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தன.

“இங்க பாரு மஞ்சு. அவங்க வயசானவங்க. இதுவரைக்கும் கிராமத்துலயே கட்டுப்பெட்டியா வளந்துட்டாங்க. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோம்மா. ரொம்ப ஓவராப் போச்சின்னா நான் அவங்க கிட்ட பேசறேன். சரியா?”

“எனக்கு இங்க வேலை நெறைய இருக்கு. நைட் பேசுவோம். ஓக்கே? வச்சிடறேன்.”

ஃபோனை வைத்துவிட்டு வேலையில் ஆழ்ந்தான். மனம் வீட்டில் இருந்தது. இதுவரை அவன் பெற்றோர்களும் மஞ்சுவும் சேர்ந்தார்போல இரண்டு நாட்களுக்கு மேல் இருந்தது இல்லை. இதுதான் முதல் முறை. அவர்கள் மருமகளிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். மஞ்சு இந்த சமயத்தில் அவர்களிடம் நிறைய எதிர்பார்க்கிறாள். எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது ஏமாற்றமாகிறது. இது மஞ்சுவுக்கும் அம்மாவுக்கும் மட்டுமல்ல எல்லோருக்கும் பொருந்தும்.

வேலையை முடித்து கிளம்பினான். சடுதியில் காரைக் கிளப்பி ட்ராஃபிக்கில் கலந்தான்.

வீடு வந்து சேர்ந்தான். கீழே யாரும் இல்லை. காஃபி மேக்கரில் காஃபி போட்டு விட்டு மேலே ஏறிச் சென்றான்.

“மஞ்சும்மா. தூங்கறியா?”

“இல்ல ரமேஷ். தூக்கமே வரலை. கவலையா இருக்கு.”

“கவலைப் படாதடா. சரியாயிடும். வா கீழ போலாம்”

இருவரும் கீழே வந்தனர். டி.பி.எஸ் சேனலைத் திருப்பி எவ்ரிபடி லவ்ஸ் ரேமண்ட் போட்டான். இருவரும் காஃபியைச் சிப்பிக் கொண்டே டிவியைப் பார்த்து அவ்வப்போது சிரித்துக் கொண்டு ரசித்தனர்.

அம்மாவும் அப்பாவும் கீழே இறங்கி வரும் சத்தம் கேட்டது.

“என்னப்பா எப்ப வந்த?”

“நான் வந்து அரை மணி நேரமாச்சும்மா”

“காப்பி போட்டுட்டியா?”

“டிக்காக்‌ஷன் போட்ருக்கு. நீங்க கலந்துக்குங்க”

“சரிப்பா”

“ரமேஷ் நைட்டுக்கு என்ன செய்யப் போற?” - மஞ்சு

“நேத்து கரைச்ச கோதுமை மாவு இருக்கு. அதையே செஞ்சுடலாம்”

“ரமேசு, கோதுமை மாவு எம்புட்டு இருக்கு? நாலு பேருக்கு வருமா?”

“ஏம்மா கேக்குறீங்க?”

“இல்லப்பா மத்தியானம் வச்ச கொளம்பு காலியாயிருச்சி. வேற எதாவது கொளம்பு வக்கிறதுக்கு கோதுமை தோசை மாவு இருந்திச்சின்னா அதை இன்னிக்கி அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்னு”

“நாலு பேருக்கு வரும்னு நினைக்கிறேன்மா. அப்பிடி பத்தலைன்னா கொஞ்சூண்டு தோசை மாவு கூட இருக்கு”

ரமேஷின் செல்ஃபோன் ஒலித்தது. எடுத்து எண்ணைப் பார்த்தான். சுகுமார்.

“டேய் மாமா, எப்பிடிடா இருக்க?”
...
“ஆமாண்டா அம்மாவும் அப்பாவும் வந்திருக்காங்க”
...
“இஸிட்? என்ன திடீர்னு இந்தப் பக்கம்?”
...
“ஓக்கே, நோ ப்ராப்ளம்டா. வாங்க”

“யாரு ரமேஷ்?”

“நம்ம சுகு”

“என்ன திடீர்னு? எப்பிடி இருக்கானாம்?”

“இன்னும் அரை மணி நேரத்துல வீட்டுக்கு வந்திடுவான். அவன்கிட்டயே கேளு”

“வாட்?”

“ஆமாம்மா. விஜியோட அம்மா அப்பா வந்திருக்காங்க. அவங்களக் கூட்டிக்கிட்டு அவன் விஜியோட சிஸ்டர் வீட்டுக்கு போயிட்டு இருக்கான். ரொம்ப லேட் ஆயிட்டதால நம்ம வீட்டுல நைட் ஸ்டே பண்ணிட்டு போகப் போறாங்க”

“இப்பிடி நம்ம வீட்டுக்கு வந்தாத்தான் உண்டு. ஆமா விஜியும் வராளா?”

“அவ வராமலா?”

இருவர் பேசுவைதையும் கேட்டுக் கொண்டே இருந்த அம்மா ரமேஷிடம் - “யாருப்பா வர்றாங்க?”

“சுகுமார்மா?”

“யாரு விருதுநகர் பையனா?”

“ஆமாப்பா”

“இந்த மதுரைக்காரப் பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கிட்டானே? அவனா?”

“ஆமாப்பா”

“அவனும் லவ் மேரேஜ் தான? உங்க ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் லவ் மேரேஜா?”

“முக்காவாசி..”

“ஏம்பா ரமேஷ். அவங்க சாப்புடுற மாதிரி வருவாங்களா?”

“தெரியலம்மா. அரை மணி நேரத்துல வர்றேன்னு சொன்னான்”

மணி எட்டு. வெளியே கார் வரும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் காலிங் பெல் அழைத்தது. கதவைத் திறந்தான் ரமேஷ்.

“வாடா சுகு. எப்பிடிடா இருக்க?”

சுகுமார், அவன் மனைவி விஜயலக்‌ஷ்மி மற்றும் விஜியின் அம்மா அப்பா ஆகியோர் நுழைந்தனர்.

விஜி மஞ்சுவைக் கட்டி அணைத்து அன்பை வெளிப்படுத்தினாள்.

சுகுமார், விஜி, ரமேஷ், மஞ்சு - நால்வரும் ஒன்றாகப் படித்தவர்கள். படிக்கும் போது இவர்கள் நால்வரும் தான் ஒன்றாகச் சுற்றுவார்கள். நால்வரின் வீட்டுக்கும் இவர்கள் நால்வரையும் அவர்கள் நட்பையும் தெரியும். படிப்பு முடிந்து வேலைக்குச் சென்ற போது மஞ்சுவும் ரமேஷும் சென்னையிலும், சுகுமார்-விஜி பெங்களூரிலும் சென்று ஒரே நிறுவனத்தில் சேர்ந்தார்கள். மஞ்சு-ரமேஷின் நட்பு காதலாக மாறிய வண்ணமே சுகுமார்-விஜியின் நட்பும். ஆனால் சுகுமார்-விஜி திருமணத்திற்கு அவர்கள் பெற்றோர்கள் மத்தியில் எதிர்ப்பு இல்லை. சுமூகமாக திருமணம் நடந்தது. போன வருடம் தான் இருவரும் இங்கே வந்தார்கள். நியூ ஜெர்சியில் க்ளையண்ட் ப்ளேசில் வேலை செய்கிறார்கள் இருவரும்.

“என்னம்மா மஞ்சு. நல்லா சாப்புடுறியா? இந்த நேரத்துல வாய்க்கு ருசியா நல்லா சாப்புடணும் போல இருக்குமே?” - விஜியின் அம்மா.

“ஆமா ஆண்ட்டி. அத்தை, மாமா ரமேஷ் எல்லாம் நல்லா கவனிச்சிக்கிறாங்க. அத்தை மாமா வர்ற முன்னாடி வரைக்கும் ரமேஷோட போர் சாப்பாடு சாப்டுட்டு இருந்தேன். இப்போ நல்லா வாய்க்கு ருசியா சாப்புடுறேன்”

“நல்லதும்மா”

அவர்கள் பேசிக் கொண்டிருக்க சுகுமார் ரமேஷை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.

ஒரு சிகரெட்டை உருவிப் பற்ற வைத்துக் கொண்டே “மச்சி ஒரு முக்கியமான மேட்டர்”

“நீ இந்தச் சனியன இன்னும் விடலயா?”

“நீ மனோதிடமிக்கவனப்பா விட்டுட்ட. நாமெல்லாம் சாதாரண மனுசய்ங்க, விட லேட்டாவும்”

“சரி என்ன முக்கியமான மேட்டர்?”

“ஆக்சுவலி நாங்க இன்னேரம் கொலம்பஸ்ல இருந்திருக்கனும். வர்ற வழியில் கார் ப்ரேக் டவுன். அதான் டீவியேட் ஆகி இங்க நின்னுட்டோம். நாலு பேரு தங்க உங்க வீட்டுல எடம் இருக்காதுன்னு நினைக்கிறேன்.”

“ஏய் அப்பிடியெல்லாம் இல்லடா. தங்கிக்கலாம்.”

“இருக்கட்டும்டா. உங்கம்மாப்பா வேற வந்திருக்காங்க. அதுனால, விஜியோட அம்மாப்பா மட்டும் இங்க தங்கிக்கட்டும். நான் வர்ற வழியில ஒரு ஹாலிடே இன் பாத்தேன். அதில நானும் விஜியும் போய் தங்கிக்கிறோம். காலைல வந்து பிக்கப் பண்ணிட்டு போயிடறேன்”

“ஓக்கேடா. உனக்கு எது வசதியோ அப்பிடி பண்ணு.”

“அப்புறம் வர்ற வழியில நானும் விஜியும் சாப்டுட்டோம். அவங்கப்பா அம்மா வழியில எதுவும் வேணாம்னு சொல்லிட்டு சாப்புடலை. சோ அவங்களுக்கு டின்னர் மட்டும் எதாவது..”

“டேய் நாயே. இது கூட செய்ய மாட்டேனாடா?”

“தேங்க்ஸ்டா”

“தேங்க்ஸ் சொல்லி பெரிய மனுசனாகாத. வா உள்ள போலாம்”

கடைசி பஃபை இழுத்து கீழே போட்டு மிதித்தான். பையில் இருந்து ஸ்பியர்மிண்ட் எடுத்து வாயில் போட்டு மென்றான்.

“மவனே ஒழுங்க கை கழுவிட்டு ஹாலுக்கு வா. இல்ல மஞ்சு உன்னக் கொண்டே போட்டுடுவா”

உள்ளே வந்து சிறிது நேரம் கதைத்து விட்டு சுகுமாரும் விஜியும் ஹோட்டலுக்குச் சென்றனர்.

“எல்லாரும் உக்காருங்க. நான் தோசை ஊத்தித் தர்றேன்.”

“இருப்பா ரமேஷ். நீ எதுக்கு? நான் செய்யறேன்” - விஜியின் அம்மா.

“அய்யோ ஆண்ட்டி. நீங்க கெஸ்ட். அப்பிடி டைனிங் டேபிள்ல உக்காருங்க. நான் சுட்டுத் தர்றேன்”

ரமேஷின் அப்பா, மஞ்சு, விஜியின் பெற்றோர் டைனிங் டேபிளில் அமர்ந்தனர். ரமேஷின் அம்மா ரமேஷின் அருகில் நின்று கொண்டிருந்தார்.

ரமேஷ் முதல் தோசையை சுட்டு விஜியின் அப்பாவுக்கு வைத்தான். அடுத்த தோசை ரமேஷின் அப்பாவுக்கு. அடுத்த தோசையை விஜியின் அம்மாவுக்கு வைத்தான். அவர் “புள்ளத்தாச்சி பொண்ணுக்கு முதல்ல குடுப்பா” என்று மஞ்சுவின் தட்டில் வைத்தார்.

அடுத்தடுத்து தோசை சுட்டு போட்டுக் கொண்டே இருந்தான். ரமேஷின் அம்மா தோசை மாவின் அளவில் ஒரு கண்ணும் மற்றவர்கள் சாப்பிடும் தோசை எண்ணிக்கையில் ஒரு கண்ணும் வைத்திருந்தார்.

ரமேஷின் அப்பா, அம்மாவைப் பார்த்து - “நீயும் சாப்புடும்மா” என்றார். உடனே ஒரு தட்டை எடுத்துக் கொண்டு வந்தார்.

ரமேஷ் “அம்மா, நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. அவங்க சாப்டு முடிச்சப்புறமா, நாம ரெண்டு பேரும் சாப்பிடலாம்” என்று சொல்லி சுட்டெடுத்த தோசையை மஞ்சுவின் தட்டில் வைத்தான்.

அடுத்த தோசையையும் விஜியின் அம்மா மஞ்சுவின் தட்டிலேயே வைத்தார்.

பார்த்துக் கொண்டே இருந்த சுசீலா விடுவிடுவென்று படி ஏறி மேலே சென்றாள்.

(தொடரும்)

Tuesday, January 12, 2010

கனவு

விஜய் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

அலாரம் அடித்த சத்தம் கேட்டதும் எழுந்த விஜய் மணியைப் பார்த்தான். 6:30. இன்று எட்டு மணிக்கெல்லாம் அலுவலகத்தில் இருக்க வேண்டும். பர பரவென கிளம்பி தூங்கிக் கொண்டிருந்த ஹரிக்கும் ஹரியின் அம்மாவுக்கும் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு சாண்ட்விச்சைக் கடித்துக் கொண்டே காரைக் கிளப்பினான்.

சடுதியில் மெயின்ரோட்டை அடைந்து காரை வேகப் படுத்தினான்.

ரெட் சிக்னல்.

வேறு வழியின்றி காரை நிறுத்தினான். ஆற்றாமையால் காரின் ஸ்டிரியங்கைக் கையால் குத்தினான்.

“அய்யா சாமீ பிச்ச போடுங்கய்யா...”

குரல் கேட்டு கோபத்துடன் திரும்பினான். அழுக்கு பிச்சைக்காரி இடுப்பில் குழந்தையுடன் கையில் இருந்த நசுங்கிய அலுமினியத்தட்டை அவன் முகம் நோக்கி நீட்டினாள்.

வெறுப்புடன் “ச்சீ போ அந்தாண்ட. வந்துட்டா காலங்காத்தால” என்று சொல்லி கார்க்கண்ணாடியை ஏற்றினான். கண்ணாடி முழுதும் மூடும் கடைசி விநாடியில் அந்தப் பிச்சைக்காரியின் கையில் இருந்த குழந்தையின் முகத்தைப் பார்த்தான் -

ஹரி...

அதிர்ச்சியில் திடுக்கிட்டு எழுந்தான்..

முகமெல்லாம் குப்பென்று வேர்த்திருந்தது. பக்கத்தில் பார்த்தான். ஹரி அவன் அம்மாவைக் கட்டிக் கொண்டு தூங்கிக்கொண்டிருந்தான். மனம் மெதுவாக நிஜத்திற்கு வந்து கொண்டிருந்தது. எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு மறுபடி வந்து படுத்துக் கொண்டான். எப்போது தூங்கினான் என்றே தெரியாமல் தூங்கிப் போனான்.

***************************************************************

ஹரி அம்மாவின் இடுப்பில் இருந்து டாடா காட்டினான். கையை அசைத்துக் கொண்டே காரை ரிவர்ஸில் எடுத்தான் விஜய். கார் கண்ணில் இருந்து மறையும் வரை கையசைத்துக் கொண்டே இருந்த ஹரியை ரியர்வ்யூ மிரர்ரில் பார்த்துக்கொண்டே காரை செலுத்தினான்.

ரெட் சிக்னல். கார் நின்றது.

“அய்யா சாமீ பிச்ச போடுங்கய்யா”

முன்னால் நின்றிருந்த பைக்காரனிடம் தட்டேந்திக் கொண்டிருந்தாள் அந்த அழுக்குப் பிச்சைக்காரி. அவன் அவளை விரட்டிக் கொண்டிருந்தான்.

பர்ஸில் இருந்து ஒரு பத்து ரூபாய்த் தாளை உருவி, “இந்தாம்மா இங்க வா” என்று அவளை அழைத்தான் விஜய்.

Sunday, January 10, 2010

உறவுகள் - 04

03
02
01

மஞ்சு படுக்கையறையில் அமர்ந்து கொண்டிருந்தாள். கீழே சன் டிவியில் மெட்டி ஒலி மறு ஒலிபரப்பு மட்ட மத்தியானத்தில் ஓடிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. மஞ்சுவுக்கு சாதாரணமாகவே டிவி சீரியல்கள் பிடிக்காது. அதுவும் கர்ப்பமான பிறகு அந்த அழுகாச்சி சீரியல்கள் பக்கமே போவதில்லை. ஆனால் ரமேஷின் அம்மா வந்த பிறகு எந்நேரமும் டிவியில் சீரியல் தான் ஓடுகிறது. அதனால் மதிய நேரங்களில் அவள் உலகம் படுக்கை அறைக்குள்ளேயே அடைந்து விடுகிறது.

மதிய சமையலுக்கு இவளால் ஆன - காய்கறி நறுக்குவது, அரிசி களைவது போன்ற - உதவி செய்வாள்.  உணவு தயாரான பின் பனிரெண்டு மணிக்கு சாப்பிட்டு விடுவாள். ரமேஷின் அப்பாவும் அம்மாவும் அவளுடன் சாப்பிட மாட்டார்கள். கேட்டால் பனிரெண்டு மணிக்கெல்லாம் சாப்பிட்டு பழக்கம் இல்லை என்று சொல்லிவிடுவார்கள். சாப்பிட்ட அடுத்த நிமிடம் மேலே அவர்களது பெட்ரூமுக்கு வந்து விடுவாள். பின்னர் ஒரு மூன்று மணியளவில் அவர்கள் இருவரும் மதியத் தூக்கத்துக்காக அவர்களது அறைக்குச் சென்ற பின் இவன் டிவி இருக்கும் ஹாலுக்குப் போய் எதாவது நகைச்சுவை நிகழ்ச்சியோ இல்லை திரைப்படத்தையோ பார்ப்பாள். மாலை 4:30 மணிக்கெல்லாம் ரமேஷ் வந்து நான்கு பேருக்கும் டீ போடுவான். அவன் பெற்றோர்களும் 6:00 மணிக்குக் கீழே வந்து டீ குடித்து விட்டு மறுபடியும் டி.வியில் சீரியல் போட்டுவிடுவார்கள். இதுவே கடந்த இரண்டு வாரங்களாக மஞ்சுவின் வழக்கமாகிவிட்டது.

அந்த வீக் எண்ட் நயகரா சென்றார்கள். ரமேஷின் அம்மாவுக்கு ஆர்த்ரட்டிஸ் இருப்பதால் நீண்ட தூரம் நடக்க முடியவில்லை. அப்படியே நடந்தாலும் வேகமாக நடக்க முடியவில்லை. அமெரிக்காவுக்கு சுற்றுலா வரும் அனைவரும் தவறாமல் பார்க்கும் இடம் நயகரா. அதை தன் பெற்றோருக்குக் காட்டிவிட வேண்டும் என்ற ரமேஷின் ஆர்வம் அவன் ஒவ்வொரு இடத்தையும் விவரிப்பதில் தெரிந்தது. ஆனால் ரமேஷின் பெற்றோர் அதில் ஆர்வம் காட்டியது போலத் தெரியவில்லை. அதிலும் ரமேஷ், அவன் அம்மாவை வீல் சேரில் வைத்து எல்லா இடங்களுக்கும் தள்ளிக் கொண்டே சென்றான். அதைக் கூட அவர்கள் அப்ரிசியேட் செய்ததாகத் தெரியவில்லை. எப்படா வீட்டுக்குப் போவோம் என்பது போலத்தான் அவர்கள் அங்கிருந்தார்கள். ரமேஷுக்கு அது ஏமாற்றமோ இல்லையோ, மஞ்சுவுக்குப் பெரிய ஏமாற்றம். அவள் அம்மாவுக்கு ஃபோன் செய்து இதைச் சொல்லி அவள் ஏக்கத்தைத் தணித்துக் கொண்டாள். ரமேஷிடம் அதைப் பற்றிப் பேசி - ஒருவேளை அவன் வேதனையில் இருந்தால் - அதை அதிகமாக்க விரும்பவில்லை.

அன்று இரவு ரமேஷ் அலுவலக வேலை சிறிது இருந்ததால் முடித்துவிட்டு கொஞ்சம் லேட்டாகப் படுக்கைக்கு வந்தான். மஞ்சு தூங்காமல் அவனுக்காகக் காத்திருந்தாள்.

“ஹேய் குட்டி. இன்னுமா தூங்கல?”

“இல்ல ரமேஷ். உங்கிட்ட பேசணும். அதுக்காக வெயிட்டிங்”

“என்னம்மா பேசணும்?”

“இன்னிக்கு நான் டாக்டர்கிட்ட செக்கப் போயிட்டு வந்தேனே அதப்பத்தி கேட்டியா?”

“சாரிம்மா. வேலை பிஸியில மறந்துட்டேன். என்ன ஆச்சி?”

“போ உனக்கு எம்மேலயும் என் பையன் மேலயும் அக்கறையே இல்ல. அதான் நீ மறந்துட்ட”

“அப்பிடியில்லடா. கழுத்து வரைக்கும் வேலை. அதுனால கொஞ்சம் மறந்துட்டேன். ரொம்ப சாரிடா.”

“என்கிட்ட சாரி கேட்டா மட்டும் பத்தாது. உன் பையன் கிட்டயும் கேளு.”

“சரி கேட்டுடுறேன்” குனிந்து வயிற்றில் காதை வைத்தான். “மன்னிச்சுருங்க சார். தெரியாமப் பண்ணிட்டேன். அம்மா...” என்று கன்னத்தைப் பிடித்துக் கொண்டு எழுந்தான்.

“என்னாச்சு”

“உம்பையன் என்ன ஒதக்கிறான்”

“ஹ்ம்ம் நாந்தான் ஒதக்கச் சொன்னேன்.”

“சரிம்மா. டாக்டர் என்ன சொன்னாங்க?”

“ஜெஸ்டேஷனல் டயபடிஸ் இருக்கறதால வொயிட்ஸ் குறைக்கச் சொல்லியிருக்காங்க”

“இதுதான் பழைய நியூஸ் ஆச்சே”

“ஆமா. ஆனா உங்கப்பாம்மா வந்ததுல இருந்து டெய்லி டின்னருக்கு சோறு தான் செய்றாங்க?”

“அட ஆமாம். நான் கூட கவனிக்கலை பாரு. நாளைக்கே அம்மாக்கிட்ட பேசிடுறேன்”

“பாத்து சொல்லு ரமேஷ். அவங்க கோச்சிக்கப் போறாங்க”

“சேச்சே எங்கம்மா அப்பிடியெல்லாம் செய்ய மாட்டாங்க. புரிஞ்சிப்பாங்க. சரி இப்ப தூங்கு. இவ்வளவு நேரமெல்லாம் முழிச்சிருக்கக் கூடாது. குட் நைட்” அவள் நெற்றியில் மெலிதாக ஒரு முத்தமிட்டான்.

மஞ்சுவும் அவனைக் கட்டிக் கொண்டு கொஞ்ச நேரத்தில் தூங்கிப் போனாள்.

********************************************************************************
அன்று சன் டிவியில் ஏதோ நல்ல படம் போட்டதால் இருவரும் தூங்கப் போகாமல் கீழே இருந்து படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அது மஞ்சுவுக்குப் பிடிக்காத படம் என்பதால் அவள் மேலே தூங்கப் போய் விட்டாள்.
அன்று மாலை அலுவலகத்தில் இருந்து வந்த ரமேஷ் - “இன்னிக்கு என்னம்மா சமையல்?”

“தட்டாம்பயறுக் கொளம்புடா”

“என்னம்மா மத்தியானமும் சோறு ராத்திரியும் சோறா?”

“இப்பிடித்தானட வீட்டுல இருக்கும்போது சாப்புடுவ?”

“அது இந்தியாம்மா. வெயில்ல நடந்தாலே அதெல்லாம் ஜீரணம் ஆகிடும். இது அமெரிக்கா. இப்பிடி மூணு வேளையும் அரிசி சாப்புட்டா கொழுப்பு வச்சிடும். அதோட மஞ்சுவுக்கு ஜெஸ்டேஷனல் டயபட்டீஸ் இருக்குரதால அரிசி கொறச்சிக்கனும்னு டாக்டர் சொல்லியிருக்காங்க”

“அப்ப ராத்திரிக்கு என்ன செய்யச் சொல்ற?”

“சப்பாத்தி, கோதும தோச, ராகி தோசன்னு எதாவது பண்ணும்மா”

“அப்பாக்கு கோதும ஆகாதுல்லடா”

“உங்களுக்கு மட்டும் ரைஸ் வச்சிக்குங்க”

“எத்தன சமையல் செய்ய?”

“சரிம்மா. நீங்க உங்களுக்கு சமைச்சுங்குங்க. ராத்திரிக்கு மட்டும் நான் மஞ்சுவுக்கு எதாவது செஞ்சி குடுத்துக்குறேன்”

“சரி டா”

சட்டை பட்டன்களை கழற்றிக் கொண்டே பெட்ரூம் செல்ல படி ஏறினான் ரமேஷ்.

"மஞ்சு இன்னுமா தூங்கிக்கிட்டு இருக்க?”

“வா ரமேஷ். இல்ல முழிச்சிட்டுத்தான் இருக்கேன். நீ கீழ உங்கம்மாக்கிட்ட பேசுனது கேட்டுச்சி.”

“சரிம்மா. நான் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டுக் கீழ போயி உனக்கு சப்பாத்தி செய்யறேன்”

“நான் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா ரமேஷ்?”

“பரவாயில்லடா. நான் சமாளிச்சிக்குறேன்”

இருந்தாலும் மனசு கேட்காமல் கீழே வந்த மஞ்சு ரமேஷுக்கு காய்கறி நறுக்கிக் கொடுத்தாள். ரமேஷ் பம்பரமாகச் சுழன்று சப்பாத்தியும் குருமாவும் செய்தான். ரமேஷின் அம்மா அவன் வேலை செய்ததைப் பார்த்த பார்வை மஞ்சுவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அன்று இரவு ரமேஷிடம் அதைச் சொல்லி வருத்தப் பட்டாள்.

****************************************************************************

அடுத்த நாள் சமையலுக்கு உதவி செய்துவிட்டு பனிரெண்டு மணியானதும் வழக்கம் போல சாப்பாடு போட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் மஞ்சு.

“ஏம்மா. எப்பவும் ரமேஷ் தான் சமைப்பானா?”

“அப்பிடியில்லத்தே. நான் ப்ரக்னண்ட் ஆனதுல இருந்துதான் சமைக்கிறாப்ல. அதுக்கு முன்னாடி நாந்தான் சமைப்பேன்”

“அப்பிடித்தெரியலையே?”

“அய்யோ அப்பிடியெல்லாம் இல்லத்தே. எனக்கு சமைக்கிற வாசம் ஒத்துக்கல. அதுனாலதான் ரமேஷ் சமைக்கிறாப்ல. வேலைக்குப் போகும்போது கூட ரமேஷ்தான் சமைக்கும்”

“என்னவோப்பா. ஆமா எதுக்கும்மா நீ சாப்டதும் மேல போயிடுற?”

“இல்லத்த, நீங்க சீரியல் பாக்குறீங்க. எனக்கு அழுகை சீரியல் பாக்கப் பிடிக்கிறதுல்ல. அதுனால மேல போயிடுறேன்”

“நாங்க ஒன்னப் பாத்துக்குறதுக்காக அங்கிருந்து வந்துருக்கோமே. நாங்க சாப்டோமா கொண்டோமான்னு கேக்குறதில்லையா? பக்கத்துல இருந்து பரிமாறக் கிரிமாற செஞ்சாதான எங்களுக்கும் சந்தோசமா இருக்கும்?”

“பரிமாறக்கூடாதுன்னு எல்லாம் இல்லத்தே. சாப்டதும் கொஞ்ச நேரம் அப்பிடியே கண்ணசரணும் போல இருக்கும். நீங்க என்கூட சாப்டிங்கன்னா, நான் பரிமாறுவேன்”

“அதுக்காக உங்கூட சீக்கிரமாவே சாப்புடனுமாக்கும்? நீ காத்திருந்து எங்கக்கூட சாப்புடக்கூடாது?”

“இல்லத்தே, நேரத்துக்கு சாப்டணும். பன்னெண்டு மணிக்கு சாப்டாத்தான் மூணு மணிக்கு ஜூஸ் எதாவது குடிக்க சரியா இருக்கும்?”

“எதாவது காரணஞ்சொல்லுங்க ரெண்டு பேரும். எங்கள யாரும் கண்டுக்கிட்டதாவேத் தெரியலை. நாங்க பாத்து வச்சிருந்தா இப்பிடியெல்லாம் நடந்திருக்குமா? உலகத்துல இல்லாதது என்னத்தக் கண்டானோ உங்கிட்ட”

அதற்கு மேல் மஞ்சுவுக்கு அங்கே நிற்கப் பிடிக்கவில்லை. விடுவிடுவென்று மேலே ஏறி வந்தாள். படுக்கையில் விழுந்து அழுதாள். ஃபோனை எடுத்து ரமேஷிடம் இதைப் பற்றிக் கதைத்தாள். அவன் “விட்டுத்தள்ளும்மா. வயசானவங்க அப்பிடித்தான் பேசுவாங்க. ரொம்ப ஓவராச்சுன்னா நான் அவங்கக்கிட்ட பேசுறேன்” என்று சொல்லி ஆறுதல் படுத்தினான். ஆதங்கம் கொஞ்சம் தணிந்தாலும் தன் அம்மா வந்திருந்தால் இது நடந்திருக்குமா? என்ற எண்ணம் அவள் மன அழுத்தத்தை அதிகரிக்கவே செய்தது.

(தொடரும்)