Wednesday, May 26, 2010

தமிழ் வலி(?!)க் கல்வி



"As long as we have the language, we have the culture.
As long as we have the culture, we can hold on to the land"

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் அந்த மொழியை முதலில் அழிக்க வேண்டும். இனம் தானாய் அழிந்து விடும்.


இது 100% உண்மை. ஏற்கனவே சொன்னது போல கரீபியன் தீவுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் இன்று இந்திய வம்சாவளியினர் என்று சொல்லப்பட்டாலும் அதற்கான அடையாளம் தொலைந்து போய்விட்டது. பெயரை வைத்து மட்டுமே அறிந்து கொள்ளக்கூடிய நிலையில் இருக்கிறார்கள். இன்னும் வரும் காலத்தில் அதுவும் அழிந்து போய்விடும். 


தாய்மொழியைப் பேசிக்கொண்டிருந்து அதை உயிரோடு வைத்திருப்பது எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கியம் அந்த மொழியிலேயே கல்வி பயிலவும் வாய்ப்பு அளிப்பது. 


நம் நாட்டின் மக்கள் தொகைக்கும், நம் மக்களின் புத்திசாலித்தனத்துக்கும் எத்தனைக் கண்டுபிடிப்புகள் வந்திருக்க வேண்டும்? எத்தனை ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்பித்திருக்க வேண்டும்? நம் தமிழ்நாட்டின் மக்கள்தொகையை விட சற்றே கூடிய ஜெர்மனி போன்ற நாடுகள் பல விஞ்ஞானிகளையும் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வெளியிடுகின்றன. ஏன், தமிழனாலோ இல்லை இந்தியர்களாலோ முடிவதில்லை?


நம் நாட்டின் கல்வித்திட்டம் வெள்ளைக்காரத் துரை மெக்காலே அறிமுகப்படுத்தியது. அது இந்தியர்களை உடலால் இந்தியர்களாகவும் உள்ளத்தால் வெள்ளையர்களாகவும் வைத்திருக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது. நம்மை முழுக்க முழுக்க சேவைத்துறை(Services Industry)க்கே தயார்படுத்தும் வண்ணமே வடிவமைக்கப்பட்டது. இன்னும் பச்சையாகச் சொல்லப்போனால் அவனுக்கு அடிமைப் பிழைப்பு நடத்த மட்டுமே நம்மைத் தயார்ப்படுத்தக் கூடியது.


நம் நாட்டில் பனிரெண்டாம் வகுப்பு வரை தாய்மொழி வழியில் படிக்க முடியும். அதன் பிறகு பாலிடெக்னிக் படித்தாலும் சரி, கலை-இளைஞர், அறிவியல்-இளைஞர் பட்டம் பயின்றாலும் சரி, தொழில்கல்வி பயின்றாலும் சரி, ஆங்கில வழியில் பயின்றாக வேண்டிய கட்டாயம். 


இது தமிழ் வழியில் பயின்று வரும் மாணவர்களுக்கு துவக்கத்தில் மிகவும் கடினமாக இருக்கிறது. பின்னர் ஒரு வழியாகச் சமாளித்து பட்டம் பெற்று விடுகின்றனர். ஆனால், பெரும்பாலானவர்களுக்கு பட்டம் பெறுவது என்பதே ஒரு குறிக்கோளாக மாறி விடுகிறது. அதையும் மீறி ஆராய்ச்சிப் படிப்புக்கு செல்பவர்கள் மிகவும் குறைந்தவர்களே. ஒரு வேளை இவர்களுக்கு மேற்படிப்பையும் ஆராய்ச்சிப் படிப்பையும் அவர்களின் தாய்மொழியில் கற்க வசதி செய்து தரப்பட்டிருந்தால் இந்தியாவும் பல “தமிழ்” விஞ்ஞானிகளை உலகுக்குத் தந்திருக்கலாம்.


இந்த நிலையில் தமிழக அரசின் முயற்சியால் பொறியியல் பட்டப் படிப்பை தமிழ்வழியில் அளிக்க அண்ணா பல்கலைக்கழகம் முன் வந்துள்ளது. இதை நாம் இருகரம் நீட்டி வரவேற்கும் முன், தமிழ் வழியில் சொல்லிக்கொடுக்க தமிழகத்தில் ஏதுவான உள்கட்டமைப்பு இருக்கிறதா? 


1. பாடங்கள் சொல்லித்தரத் துவங்கும்முன், அதற்கான பாடப்புத்தகங்கள் தமிழில் இருக்கின்றனவா?
2. தமிழில் சொல்லித்தர தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இருக்கிறார்களா?
3. தனித்தமிழில் அனைத்து பொறியியல் பதங்களை மொழிபெயர்க்கப் போகிறார்களா? இல்லை சில பதங்களை ஆங்கிலத்திலேயே பயன்படுத்துவார்களா?
4. இருக்கின்ற கல்லூரிகளிலேயே தமிழ்வழி வகுப்புகள் தனியாகத் துவக்கப் போகிறார்களா? இல்லை தமிழ்வழிக்காகத் தனிக்கல்லூரி துவக்கப்போகிறார்களா?
5. மாணவர்களுக்கு படிப்பு முடிந்ததும் பிழைக்கச் செல்லும் இடங்களில் தொடர்புக்கான மொழியாக இருக்கும் ஆங்கிலத்தைக் கற்றுத் தர ஏற்பாடுகள் இருக்கின்றனவா?


இந்தக் கேள்விகளுக்குத் தெளிவான பதில் இல்லாத கட்டத்தில் தமிழ்வழிப் பொறியியல் படிப்பை வரவேற்கத் தயக்கமாகத்தான் இருக்கிறது. 


ஆனால், தமிழ்வழிக் கல்வியை எதிர்க்கும் சிலர் முன்வைக்கும் வாதங்கள் சில நேரங்களில் சிரிப்பையும் சில நேரங்களில் வேதனையையும் வரவழைக்கின்றன.


1. இப்படித்தான் இந்தி எதிர்ப்பு என்று போராட்டம் நடத்தி எங்களை இந்தி படிக்க விடாமல் வைத்து வெளிமாநிலங்களில் பிழைக்கச் செல்லும்போது கஷ்டப்பட வைக்கிறார்கள். 


தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்த போது நான் பிறக்கவேயில்லை. ஆனாலும் நான் படித்துத் தெரிந்து கொண்டவரை, இந்தி எதிர்ப்புப் போராட்டம் இந்தித் திணிப்பை எதிர்த்ததே ஒழிய இந்தியையே எதிர்க்கவில்லை. இன்றும் தமிழ்நாட்டில் தமிழ் (First Language) Optional ஆகத்தான் இருக்கிறது. தமிழுக்குப் பதிலாக, இந்தியையோ, சமஸ்கிருதத்தையோ, ஃப்ரெஞ்சையோ எடுத்துப் படித்து தமிழ் வாசமே இல்லாமல் பி.எச்.டி வரை படித்துவிட முடியும். 


ஒரு மொழியைப் படிப்பதும் படிக்காததும் என் விருப்பமாக இருக்க வேண்டுமே ஒழிய இன்னொருவன் என்னிடம் அந்த மொழியைத் திணிக்கக் கூடாது. ஏற்கனவே ஆங்கில மோகத்தால் நகரங்களில் வசிக்கும் பிள்ளைகள் டமில் பேசித் திரிகின்றன. இதில் இந்தியும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால் சொல்லவே வேண்டாம்.


2. பனிரெண்டு வருடங்கள் ஆங்கிலம் ஒரு மொழியாகப் படித்தும், 4 வருடங்கள் ஆங்கில வழியில் படித்தும் தொழில் புரியும் இடத்தில் ஆங்கிலம் பேசுவது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. இந்த நிலையில் அந்த நான்கு வருடத்தையும் தமிழ்வழியிலேயே படித்தால் கேட்கவே வேண்டாம். சுத்தமாக பிழைக்க முடியாமல் போய்விடும்.


இதுவும் தவறான வாதமாகவே படுகிறது. நான்கு வருட பொறியியல் படிப்பில் படித்த அனைத்தையும் நாம் பணிபுரியும் இடத்தில் உபயோகப் படுத்துகிறோமா என்று பார்த்தால் இல்லை என்றே சொல்லவேண்டும். சில அடிப்படை விசயங்களை மட்டுமே உபயோகப் படுத்துகிறோம். அந்த அடிப்படை விசயங்களையும் பனிரெண்டாம் வகுப்புக்குள் படித்து முடித்திருப்போம். அப்படியிருக்க நான்கு வருடங்களை தாய்மொழியில் பயின்றால் நன்கு புரிந்து ஆழமாகப் படிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்து நம் அறிவு இன்னும் அதிகமாகுமே ஒழிய குறையவோ மற்ற ஆங்கில வழியில் படித்த மாணவர்களைவிட தாழ்ந்தோ போய்விட வாய்ப்பே இல்லை. 


இதில் இரண்டு வாதங்களையும் சொல்பவர்கள் அவர்களை அறியாமலே அவர்களை மறுதலித்துக் கொள்கிறார்கள். 12 வருடம் ஆங்கிலமொழியைப் படித்தும், நான்கு வருடம் ஆங்கில வழியில் படித்தும் சரிவர ஆங்கிலம் பேச வராத போது, 12 வருடங்கள் இந்தி மொழியை மட்டும் படித்திருந்தாலே இவர்கள் சரளமாக இந்தி பேசிவிடுவார்களாம். 


இந்த வாதங்களை எடுத்து வைப்பவர்கள் பெரும்பாலும் மற்ற மாநிலங்களில் பணிபுரியச் சென்று அங்கே இந்தி பேசுபவர்களால் கேலி செய்யப்பட்டோ, மட்டம் தட்டப்பட்டோ, பணியைத் தொடரமுடியாமலோ கஷ்டப்பட்டவர்களாக இருந்திருப்பார்கள். இவர்கள் வெளிமாநிலத்தில் பணி புரிய ஏதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக எல்லோரையும் எதற்காக இந்தி படிக்கச் சொல்ல வேண்டும்? 


இன்னும் சிலர் பேசுவது என்னவோ தமிழ்நாடு பிழைக்க வழியில்லாமல் போய்விடுவதாகவும், மற்ற இந்தி பேசும் மாநிலங்கள் செல்வச்செழிப்புடன் இருப்பது போலவும் இருக்கிறது. பீகாரில் இருக்கும் அத்தனை பேரும் இந்தி பேசுவார்கள். 


சரி தமிழ்நாட்டுக்கு பிழைக்க வரும் பீகாரியும், சேட்ஜியும், கன்னடனும், தமிழ் கற்றுக்கொண்டா வருகிறான்? 


மொத்தத்தில் தொடர்பு மொழி என்பது பேசுவதற்கு மட்டும் தான். அதைப் பேசக் கற்றுக் கொள்வதற்கு அதன் இலக்கண இலக்கியத்தைப் பள்ளியில் படித்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பிழைக்கப்போன இடத்தில் மூன்று மாதத்திலோ ஆறு மாதத்திலோ எளிதில் கற்றுக் கொள்ளலாம். ஆங்கிலமும் அதைப் போலத்தான்.


இப்போது உலகமெங்கும் குளோபலைசேசனின் புண்ணியத்தில் அனைத்து மொழி பேசுபவர்களும் கலந்து வேலை செய்ய, வசிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. அப்படி பல இனங்கள் கலக்கும் பள்ளிகளில் பிள்ளைகளைத் தாய்மொழி கற்க வேண்டியது கட்டாயம் என்று உலகமெங்கும் இருக்கும் மொழிவல்லுநர்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். நாம் தமிழ்நாட்டிலேயே பிள்ளைக்கு ஆங்கிலம் பேசச் சொல்லிக்கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்று பள்ளியை மாற்றிக்கொண்டு இருக்கிறோம். 


இப்படியே போனால், நார்வேயில் வேலை பார்க்கும் செந்தழல் ரவி நார்வேஜியன் மொழி தெரியாமல் கஷ்டமாக இருக்கிறது இனி அந்த மொழியையும் தமிழ்நாட்டில் கட்டாயம் கற்றுத்தர வேண்டும் என்று கொடிபிடிக்கப் போகிறார். 

79 comments:

பத்மா said...

நல்ல ஒரு பதிவு .இது தான் வேண்டும், வேண்டாம் என்ற மனப்பான்மையில் இல்லாமல் எதையும் கற்றுக்கொள்ளும் open mind வேண்டும்.ஆனால் அதன் அடி நாதமாக நம் தாய் மொழி ஒளி வீச வேண்டும்

நசரேயன் said...

follow up

Chitra said...

நிறைய விஷயங்களை அலசி ஆராய்ந்து சொல்லியது மூலம், உங்கள் ஆதங்கமும் தமிழ் பற்றும் தெரிகிறது...... :-)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நல்ல விசயம் தான்...
padma சொல்வதுதான் என் கருத்தும் சார்...

குடுகுடுப்பை said...

என்னுடைய முதல் பதிவே இந்த கூலி சார்புச்சிந்தனை பற்றியதே.

ஜில்தண்ணி said...

தமிழ் வழிக் கல்வி மூலம் மட்டுமே விஞ்ஞானிகளை உருவாக்கிவிட முடியாது,இந்த காலத்தில் அறிவியல் ஆர்வம் எவருக்கு இருக்கிறது,அதை தூண்டி விட்டு தமிழில் கற்போமானால் கண்டிப்பாக பல விஞ்ஞானிகள் நம் தமிழ்நாட்டில் உலவலாம்

// தொடர்பு மொழி என்பது பேசுவதற்கு மட்டும் தான். அதைப் பேசக் கற்றுக் கொள்வதற்கு அதன் இலக்கண இலக்கியத்தைப் பள்ளியில் படித்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை //

உண்மைதான்

தாய் மொழி தாய் மொழியே

Vidhoosh said...

தாய்மொழியைக் கற்காமலே படித்து விட முடிகிறது என்பது வருத்தத்துக்குரியதுதான்.
//// தொடர்பு மொழி என்பது பேசுவதற்கு மட்டும் தான். அதைப் பேசக் கற்றுக் கொள்வதற்கு அதன் இலக்கண இலக்கியத்தைப் பள்ளியில் படித்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை ///

அப்படி இல்லைங்க. மொழியை முழுமையாக ரசிக்கவும், சொல்லப்படும் அல்லது கேட்கப் படும் விஷயத்தை சரியான விதத்தில் புரிந்துகொள்ள முழுமையான மொழியறிவு தேவையாகவே இருக்கிறது.

குறைந்தது முழுமையாக உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் தாய்மொழி தவிர, நான்கு மொழிகளையாவது கற்றுகொள்வது நிச்சயம் நம் எல்லைகளை விரிவு படுத்துகிறது.

உதாரணத்திற்கு, மதிப்பிற்குரிய தமிழாசான் நான் 9 வகுப்பு படிக்கும் போது இறந்து விட்டார். அதற்குப் பின் எனக்கு வழிகாட்ட யாருமில்லை, தமிழ் படிப்பது குறைந்தே போனது, இன்றும் சங்கப் பாடல்களும், பழைய தமிழ் புத்தகங்களும் எனக்கு பெரும் சவாலாகவே இருக்கிறது. இலக்கணம் பயின்று இன்னும் தமிழ் படித்திருந்தால் நல்ல எழுத்துக்களை முழுமையாக புரிந்துகொள்ளும் அதிருஷ்டம் எனக்கும் வைத்திருக்கும் என்ற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு.

ஆங்கிலத்தை ஏற்று கொண்ட அளவு கூட, நம் இந்திய மொழிகளை நாம் ஏற்கவில்லை என்பது பற்றி வேறென்ன சொல்லறது??

க‌ரிச‌ல்கார‌ன் said...

//இன்னும் சிலர் பேசுவது என்னவோ தமிழ்நாடு பிழைக்க வழியில்லாமல் போய்விடுவதாகவும், மற்ற இந்தி பேசும் மாநிலங்கள் செல்வச்செழிப்புடன் இருப்பது போலவும் இருக்கிறது. பீகாரில் இருக்கும் அத்தனை பேரும் இந்தி பேசுவார்கள்//

த‌மிழ்நாட்லேயே பிழைக்க‌ வ‌ழி இருக்குன்னா நாம‌‌ இத்த‌னை பேர் நீங்க‌ளும் நானும் உட்ப‌ட‌ எதுக்கு வெளியில் இருக்கிறோம்?????

Unknown said...

//அப்படி இல்லைங்க. மொழியை முழுமையாக ரசிக்கவும், சொல்லப்படும் அல்லது கேட்கப் படும் விஷயத்தை சரியான விதத்தில் புரிந்துகொள்ள முழுமையான மொழியறிவு தேவையாகவே இருக்கிறது.//

வித்யா - ஒரு மொழி தெரியும் - பேசத் தெரியும் இது ரெண்டுக்கும் இருக்கிற வித்தியாசம்தான் நீங்க சொல்றது. ஆனா இந்தியை தடுத்துட்டாங்க அப்பிடின்னு சொல்ற யாரும் இந்திங்கிற மொழியோட ஆழ அகலத்தைப் புரிஞ்சிக்க விடாம செஞ்சிட்டாங்கன்னு வருத்தப்படுறதில்லை. வெளி மாநிலத்துல போயி வேலை பாக்க இந்தி தெரியணும். அதைத் தெரிஞ்சிக்க விடறதில்லைங்கிற மாதிரி தான் பேசறாங்க.

நம்ம ஊர்ல வட்டிக்கடை நடத்துற சேட்ஜியும், ஹோட்டல்ஸ் வச்சிருக்கிற கன்னடர்களும், பலசரக்குக்கடை, டீக்கடை வச்சிருக்கிற சேட்டன்களும், கூலிவேலை பாக்குற பீகாரிகளும், தமிழைப் பள்ளிக்கூடத்துல கத்துக்கிட்டா வந்து இங்க வேலை பாக்குறாங்க? அவங்களுக்கு தமிழோட தொன்மையைப் பத்தியாவது தெரியுமா?

ஒரு மொழி ஒரு ஊர்ல போய் வேலை பாக்குறதுக்காக மட்டும் தான் தேவைன்னு சொன்னா அதை பள்ளிக்கூடத்துல சொல்லிக்குடுத்துத்தான் படிச்சிருக்கணும்ங்கிற அவசியம் இல்லையேங்க?

//குறைந்தது முழுமையாக உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் தாய்மொழி தவிர, நான்கு மொழிகளையாவது கற்றுகொள்வது நிச்சயம் நம் எல்லைகளை விரிவு படுத்துகிறது.//

இதை நான் முழுமையா ஒத்துக்குறேன். மல்டி-லிங்குவலா இருக்கிற பிள்ளைகள் புத்திசாலியா இருக்காங்கன்னு ஆராய்ச்சிகள் நிரூபிச்சிருக்கு.

ஆனா அதைத் திணிப்பதை எதிர்த்தே ஆகணும் இல்லைங்களா? என்னைப் பொறுத்த வரைக்கும் இந்தியை விட உருது நல்ல மொழின்னு நான் நினைக்கிறேன். ஆனா நான் உருது படிக்கணும்னா என்னோட தாய்மொழியை விட்டுத்தரணும்னா? அது எப்படிங்க?

அப்போ செஞ்சது மும்மொழித் திட்டம். முதல் மொழி - ஆங்கிலம் - கட்டாயம்
இரண்டம் மொழி - இந்தி - கட்டாயம்
மூன்றாம் மொழி - தமிழ் - விருப்ப மொழி.

இப்பிடி இருந்ததாதலத் தான் எதிர்த்தாங்க (அப்பிடின்னு படிச்சிருக்கேன்)

க‌ரிச‌ல்கார‌ன் said...

ப‌திவுக்காக‌வோ அல்ல‌து மேடைக்காக‌வோ த‌மிழ் தான் உயிர் மூச்சு என்று பேசும் த‌லைவ‌ரிலிருந்து தொண்ட‌ர்க‌ள் வ‌ரை ஊருக்கு ம‌ட்டும் தான் உப‌தேச‌ம்.த‌ன‌க்குன்னு வரும் போது மாறி விடுவார்க‌ள்/வோம். ஆங்கில வ‌ழியில் பாட‌ம் ந‌ட‌த்தும், ஹிந்தியை ஒரு பாட‌மாக‌ க‌ற்றுத் த‌ரும் ப‌ள்ளிக‌ளில் தான் வாரிசுக‌ளை சேர்ப்பார்க‌ள்/சேர்க்கிறார்க‌ள்/
சேர்ப்போம்

இல்ல‌ன்னு சொல்ல‌ முடியுமா?? த‌மிழ‌க‌த்தின் சிறு ந‌க‌ர‌ங்க‌ளில் கூட‌ மெட்ரிக்குலேஷ‌ன் ப‌ள்ளிக‌ள் உள்ள‌ன‌.வேன்க‌ளும்,ப‌ஸ்க‌ளும் கிராம‌ங்க‌ள் வ‌ரை சென்று மாண‌வ‌ர்க‌ளை கொண்டு வ‌ருகின்ற‌ன‌.
அடுத்த‌ க‌ல்வியாண்டுக்கு ஆறு மாச‌ம் முன்பே இட‌மில்லை, என்று சொல்லும் அளவுக்கு ந‌ட‌ந்து கொண்டு தானே இருக்கிற‌து.

அரசு பள்ளி என்றாலே வ‌ச‌திய‌ற்ற‌ மக்களுக்கு உரியதுபோல் ஆகிவிட்டது.

Unknown said...

//த‌மிழ்நாட்லேயே பிழைக்க‌ வ‌ழி இருக்குன்னா நாம‌‌ இத்த‌னை பேர் நீங்க‌ளும் நானும் உட்ப‌ட‌ எதுக்கு வெளியில் இருக்கிறோம்????//


பாஸ் மறுபடி மறுபடி நீங்க ஒரு விசயத்தைப் புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்க.

நான் தமிழ்நாட்டுலயே எல்லாருக்கும் வேலை கிடைக்க வழி இருக்குனு சொல்லலை. தமிழ் வழியில படிச்சா தமிழ்நாட்டுல மட்டும் தான் வேலை பாத்தாகணும்ங்கிற கட்டாயம் இல்லைன்னு தான் நான் சொல்றேன்.

தமிழ்வழியில படிச்சி வர இஞ்சினியரால இந்தியையோ இல்லை ஆங்கிலத்தையோ சரளமாப் பேச முடியாதுன்னு ஏன் அவன மட்டம் தட்டறீங்கன்னு கேக்குறேன்?

இப்ப ஆங்கில வழியிலயே படிக்கிறதால, ஆங்கிலம் அப்பிடிங்கிற பேப்பர் கூட இஞ்சினியரிங் இங்க்லீஷ்னு தான் படிக்கிறாங்க.

அதுவே தமிழ்வழியில படிக்கிறவங்களுக்கு, ஸ்போக்கன் இங்க்லீஷ், கம்யூனிக்கேஷன் ஸ்கில்ஸ் போல பாடம் வச்சி அவங்கள வெளிய பழக ஏன் கோச்சிங் குடுக்க முடியாதுன்னு கேக்குறேன்?

நான் எம்.சி.ஏ படிக்கும் போது எங்களுக்கு 2 மாசம் கம்யூனிக்கேசன் ஸ்கில்ஸ் கிளாஸ் எடுத்தாருங்க ஒருத்தர். ரொம்ப அருமையா சொல்லிக் குடுத்தார். தமிழ் வழியில படிச்சு வந்த மாணவர்களுக்குக்கூட ரொம்ப சுலபமா பேசுறது எப்படி, கான்ஃபிடன்ஸ் கொண்டு வர்றது எப்பிடின்னு சொல்லிக் குடுத்தார்.
அது மாதிரி நல்ல சிலபஸ் செட் செஞ்சி சொல்லிக் குடுத்தா ஆங்கில வழியில படிக்கிற மாணவர்களை விட நல்லா ஆங்கிலம் பேச வச்சிரலாம்.

ஆங்கிலம் பேசறப்போ வொக்கபுலரி இல்லைன்னாலும் பரவாயில்லைங்க. சிம்பிள் வேர்ட்ஸ் வச்சி செண்டன்ஸ் ஃபார்ம் செஞ்சிப் வெக்கப்படாம பேசப் பழகிட்டாலே போதும்.

Unknown said...

முடிஞ்சா டாக்டர் மன்னர் ஜவஹர்கிட்ட தமிழ் வழி எஞ்சினியரிங்குக்கு என்ன என்ன திட்டங்கள் அரசுக்கிட்ட இருக்குனு கேட்டு ஒரு பதிவு போடுறேன்..

Unknown said...

//ப‌திவுக்காக‌வோ அல்ல‌து மேடைக்காக‌வோ த‌மிழ் தான் உயிர் மூச்சு என்று பேசும் த‌லைவ‌ரிலிருந்து தொண்ட‌ர்க‌ள் வ‌ரை ஊருக்கு ம‌ட்டும் தான் உப‌தேச‌ம்.த‌ன‌க்குன்னு வரும் போது மாறி விடுவார்க‌ள்/வோம். ஆங்கில வ‌ழியில் பாட‌ம் ந‌ட‌த்தும், ஹிந்தியை ஒரு பாட‌மாக‌ க‌ற்றுத் த‌ரும் ப‌ள்ளிக‌ளில் தான் வாரிசுக‌ளை சேர்ப்பார்க‌ள்/சேர்க்கிறார்க‌ள்/
சேர்ப்போம்

இல்ல‌ன்னு சொல்ல‌ முடியுமா?? த‌மிழ‌க‌த்தின் சிறு ந‌க‌ர‌ங்க‌ளில் கூட‌ மெட்ரிக்குலேஷ‌ன் ப‌ள்ளிக‌ள் உள்ள‌ன‌.வேன்க‌ளும்,ப‌ஸ்க‌ளும் கிராம‌ங்க‌ள் வ‌ரை சென்று மாண‌வ‌ர்க‌ளை கொண்டு வ‌ருகின்ற‌ன‌.
அடுத்த‌ க‌ல்வியாண்டுக்கு ஆறு மாச‌ம் முன்பே இட‌மில்லை, என்று சொல்லும் அளவுக்கு ந‌ட‌ந்து கொண்டு தானே இருக்கிற‌து.

அரசு பள்ளி என்றாலே வ‌ச‌திய‌ற்ற‌ மக்களுக்கு உரியதுபோல் ஆகிவிட்டது.//

இந்த விசயங்களை எல்லாம் உங்களோடு சேர்ந்து நானும் கண்டிக்கிறேன்.

vasu balaji said...

கருத்துப் பரிமாரலுக்கு மொழியென்றால் அதற்குப் படிக்கவே தேவையில்லை. பன்மொழிப் பண்டிதர்கள் சென்னை செண்ட்ரல் ஸ்டேஷனை அடுத்திருக்கும் வால்டாக்ஸ் ரோட் ரிக்‌ஷாக்காரர்களும், ஒரு சில ஆட்டோ ட்ரைவர்களும். கல்யாணி உட்பட ஹிந்தியில் எத்தனை வேறுபாடு உண்டோ அத்தனையும் பேசுவார்கள். இப்போது ஃப்ரெஞ்ச், ஜெர்மன்,ருஷ்ஷிய மொழியும் கூட. கொரமாண்டலில் வருபவர்களிடம் வங்காள மொழியில் பேரம் கண்கொள்ளாக் காட்சி.

அது போக தமிழ் மொழியில் தொழிற்கல்வி என்பது சொன்னாற்போல் அதற்கான அடிப்படை இருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும்.

Proton ஐ ப்ரோட்டான் என எழுதுவதிலும் படிப்பதிலும் என்ன பெரிய மொழி வளர்ச்சி?

இந்த இணைப்பில் பாருங்கள் 12வது வரை தமிழ்மொழிக்கல்வி எப்படியிருக்கிறதென்று? முக்கியமாக தாவரவியல், இரசாயனம், பௌதீகம்
http://www.textbooksonline.tn.nic.in/Std12.htm

Unknown said...

//கருத்துப் பரிமாரலுக்கு மொழியென்றால் அதற்குப் படிக்கவே தேவையில்லை.//

இந்திப் படிக்க விடவில்லை என்று சொல்பவர்களும், இப்போது தமிழ் வழியில் படிப்பதை எதிர்ப்பவர்களும் இப்படித்தான் சொல்கிறார்கள் சார். அவர்களுக்கு வெளிமாநிலத்தில் இந்தி பேச முடியவில்லையே என்றும், வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் ஆங்கிலம் பேச வராமல் போய்விடுமே என்பதுதான் பெருங்கவலையாக இருக்கிறது.

கட்டமைப்பு சரியில்லாத போது அவசரகதியில் தமிழ்வழி எஞ்சினியரிங்கைக் கொண்டு வருவது தற்கொலைக்குச் சமம் என்ற உங்களின் கருத்தோடு 100% ஒத்துப் போகிறேன்.

அப்புறம் ப்ரோட்டான் என்பது லத்தீன் வார்த்தை. அதுபல மொழிகளில் அப்படியேதான் உபயோகப் படுகிறது(ஜெர்மன், ஃப்ரஞ்ச், ரஷ்யன் என). அதைத் தமிழிலும் அப்படியே உபயோகிப்பதில் என்ன தவறு? மெர்க்குரி - பாதரசத்திற்கு ஹைட்ரோ கைரம் என்று லத்தீனில் அழைப்பதால் Hg என்ற குறியீட்டை உபயோகிக்கிறோம். அதை அப்படியே உபயோகிப்பது தானே சரி?

இன்னும் அந்தப் பாடப் புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அது சரி, இந்த சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டால் இந்தப் பாடங்களும் மாறுமா இல்லை இதே தானா?

பருப்பு (a) Phantom Mohan said...

இதில் இரண்டு வாதங்களையும் சொல்பவர்கள் அவர்களை அறியாமலே அவர்களை மறுதலித்துக் கொள்கிறார்கள். 12 வருடம் ஆங்கிலமொழியைப் படித்தும், நான்கு வருடம் ஆங்கில வழியில் படித்தும் சரிவர ஆங்கிலம் பேச வராத போது, 12 வருடங்கள் இந்தி மொழியை மட்டும் படித்திருந்தாலே இவர்கள் சரளமாக இந்தி பேசிவிடுவார்களாம்.

////////////////////////////////////////////////////////////////////////////

நண்பா ஹிந்தி, இங்கிலீஷ் ரெண்டையும் விடுங்க. என்னால் ௧௨ வருடம் ஆங்கிலம் படித்தும் பேச முடியாதவன், வேலைக்கு சேர்ந்த இரண்டே வருடங்களில் ஓரளவுக்கு சரளமாக பேச முடிந்தது.

mech , civil , எத்தனையோ இருக்கு. bio tech எப்படி சார் தமிழ்ல படிப்பீங்க! software programming தமிழ் ல படிச்சு எழுத முடியுமா? அப்டியே நீங்க எல்லாத்தையும் பண்ணாலும் சீனா மாதிரி நம்மால இருக்கு முடியுமா? அங்க software கூட chinese ல இருக்கும். கஷ்டம் சார்.

தமிழ் வழியில் பொறியியல், டெக்னாலஜி படித்தால் வேலை கிடைக்குமா? எவன் வேலை குடுப்பான்? நீங்க ஒரு software கம்பனி ஓனர் ன்னு வச்சிக்கிடுவோம், நீங்க குடுப்பீங்களா? இல்ல நீங்க வேலை பாக்குற கம்பனில refer பண்ண முடியுமா? உங்க கம்பனி அவன வேலைக்கு சேர்ப்பானா?

தமிழ்ல நீங்க படிச்சா எப்படி இருக்கும், நண்பர் கரிசல்காரன் சொன்ன உதாரணம்

"Ohms Law:
At Constant Temperature the current through a conductor is directly proportional to the potential difference applied across its ends.
இதை அப்ப‌டியே த‌மிழ் ப‌டுத்தினா

மாறாத‌ வெப்ப‌ நிலையில் ஒரு மின் க‌ட‌த்தியின் ஊடாக‌ செல்லும் மின்னோட்ட‌மான‌து,அத‌ன் இரு முனைக‌ளில் அளிக்க‌ப்பட்ட‌ மின்ன‌ழுத்த‌ற்கு நேர்விகிதத்தில் இருக்கும்."
/////////////////////////////////////////////////////////////////////////////////////////
இப்படியே போனால், நார்வேயில் வேலை பார்க்கும் செந்தழல் ரவி நார்வேஜியன் மொழி தெரியாமல் கஷ்டமாக இருக்கிறது இனி அந்த மொழியையும் தமிழ்நாட்டில் கட்டாயம் கற்றுத்தர வேண்டும் என்று கொடிபிடிக்கப் போகிறார்.
/////////////////////////////////////////////////////////////////////////////////////

தலைவா, அது ஏற்க்கனவே நடை முறையில் இருக்கு. நீங்க japanese கம்பெனி ல செலக்ட் ஆனா, டெய்லி உங்களுக்கு japanese சொல்லிக் குடுப்பாங்க.. ஜெர்மனி ல வேல பார்க்கணும்னா ஜெர்மனி படிச்சு பாஸ் பண்ணனும். என் நண்பர்கள் இங்கு இருக்கிறார்கள், இதை தவிர்த்து வேறு பல நாடுகளில் வேலை செய்கிறார்கள்..நீங்க என்ன field ல இருக்கேன்களோ அதுக்கேத்த மாதிரி நீங்க வெளிய போய் தான் ஆகணும், for ex . mechanical க்கு பெஸ்ட் ஜெர்மனி, அங்க தான் நெறைய கார் பாக்டரி இருக்கு. நீங்க அங்க போகணும்னா german படிச்சு தான் ஆகனும். மத்தபடி உலகத்துக்கு பொதுவான மொழி இங்கிலீஷ், அது கண்டிப்பா எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கணும்..

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
ஆனால், தமிழ்வழிக் கல்வியை எதிர்க்கும் சிலர் முன்வைக்கும் வாதங்கள் சில நேரங்களில் சிரிப்பையும் சில நேரங்களில் வேதனையையும் வரவழைக்கின்றன.
/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

நண்பரே நாங்கள் பட்ட கஷ்டத்தை சொன்னால் உங்களுக்கு நகைப்புக்கு உரியதாக தோன்றுகிறது. எங்கள் தரப்பு கருத்தை சொல்கிறோம்.

If they implement engineering in tamil, tell me who will join...again the POOR FAMILY or VILLAGE GUYS...
படிச்சவன் எவனும் தன் புள்ளைய தமிழ்ல படிக்க வைக்க மாட்டான்...இது உண்மை! நீங்க உங்க பசங்கள தமிழ் வழி பொறியியல் கல்வியில் சேர்ப்பீர்களா? நீங்கள் ஒரு வீம்புக்கு சேர்த்தாலும், உங்க பையனுக்கு அப்போ நம்மை விட நிறைய விஷயம் தெரிந்து கேள்வி கேட்பான். நான் சேர மாடின்னு சொல்லுவான், கண்டிப்பா!

க‌ரிச‌ல்கார‌ன் said...

//சரி தமிழ்நாட்டுக்கு பிழைக்க வரும் பீகாரியும், சேட்ஜியும், கன்னடனும், தமிழ் கற்றுக்கொண்டா வருகிறான்?
மொத்தத்தில் தொடர்பு மொழி என்பது பேசுவதற்கு மட்டும் தான். அதைப் பேசக் கற்றுக் கொள்வதற்கு அதன் இலக்கண இலக்கியத்தைப் பள்ளியில் படித்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பிழைக்கப்போன இடத்தில் மூன்று மாதத்திலோ ஆறு மாதத்திலோ எளிதில் கற்றுக் கொள்ளலாம். ஆங்கிலமும் அதைப் போலத்தான்.//


ந‌ண்பா முத‌லில் ஒன்றை புரிந்து கொள்ளுங்க‌ள்.என்னைப் போன்ற‌ முத‌ல் த‌லைமுறைப் ப‌ட்ட‌தாரிக‌ள் ப‌டிப்ப‌தே வேலைக்காக‌த்தான்,ச‌ம்பாதித்து குடும்ப‌த் தேவைக‌ளை நிறை வேற்றுவ‌து தான் முக்கியம்.
அது வீடு க‌ட்டுவ‌தாக‌வோ,ச‌கோத‌ர‌னின் க‌ல்வியோ, அல்ல‌து ச‌கோத‌ரியின் திரும‌ணமோக‌வோ இருக்க‌லாம்.

த‌மிழ்நாட்டில் கிடைக்கும் வேலை எங்க‌ள் உட‌ன‌டித் தேவைக‌ளை நிறைவேற்ற‌ப் போதுமான‌தாக‌ இல்லாத‌ போது வெளிநாடு செல்ல‌ வேண்டிய‌ நிர்ப‌ந்த‌ம்.

நாங்க‌ள் சொல்வ‌து இது தான் ஆங்கிலோமோ,இந்தியோ ஒரு வார்த்தை கூட‌ அறியாம‌ல்,பிழைக்க‌ப் போன‌ இட‌த்தில் க‌ற்றுக் கொள்ள‌ முய‌ல்வ‌த‌ற்கும்,ஏற்கென‌வே அடிப்ப‌டைக‌ளை (அறைகுறையாக‌ இருந்தாலும்)க‌ற்றுக் கொண்டு செல்வ‌த‌ற்கும் வித்தியாச‌ம் உள்ள‌து ந‌ண்ப‌ரே.
மேலும் அது என்ன‌ வேலைக்குச் செல்கிறோம் என்ப‌தைப் பொறுத்த‌து.

அஞ்சாநெஞ்ச‌னுக்கு (ம‌றுப‌டியுமா !!)இல்லாத‌ காசா ப‌ண‌மா??தின‌ம் நாலு ஹிந்தி ப‌ண்டிட்க‌ளை கூப்பிட்டு வைத்து க‌ற்றுக் கொண்டு நாடாளும‌ன்ற‌த்தில் க‌ல‌க்க‌ வேண்டிய‌து தானே??
ஒரு வ‌ருட‌ம் ஆகியும் ஒண்ணும் முடிய‌லையே???

வெளிநாட்டுக்கோ,வெளி மாநில‌த்துக்கோ சென்றால் ஆங்கில‌மும்,ஹிந்தியும் தான் பொது மொழிக‌ள்.உட‌னே நீங்க‌ சைனிஸ்ஸையும்,நார்வேஜியன் மொழியையும் இழுக்க‌ வேண்டாம்.
ஏனெனில் ந‌ம் ம‌க்க‌ள் அதிக‌மாக‌ செல்லும் அமெரிக்காவையோ,ம‌த்திய கிழ‌க்கையோ ஒப்பிட்டால் நார்வே,சீனா ஒரு பொருட்ட‌ல்ல‌.

//தமிழ்நாட்டுக்கு பிழைக்க வரும் பீகாரியும், சேட்ஜியும், கன்னடனும், தமிழ் கற்றுக்கொண்டா வருகிறான்? //

ச‌மோசா சுட‌வோ,குழி தோண்ட‌வோ வ‌ந்தால் ஒரு வேளை த‌மிழ் தேவையில்லாம‌ல் இருக்க‌லாம்.ஆனால் நூறு த‌மிழ்த் தொழிலாள‌ர்க‌ளை நேர‌டியாக‌ மேற்பார்வை செய்யும் வேலைக்கு வ‌ந்தால் க‌ட்டாய‌ம் அரை குறையாக‌வாது த‌மிழ் தெரிந்திருக்க‌ வேண்டும்

VISA said...

நான் இதை ஒத்துக்கொள்ள மாட்டேன்.
சும்மா தமிழுக்கு சொம்படிக்கும் பதிவு அன்றி வேறொன்றும் இல்லை பராபரமே. நிகழ்கால ஆராய்ச்சி தேவைப்படுகிறது உங்களுக்கு.

பெருங்காயம் said...

நேற்றைய பின்னு]ட்டத்தை தொடர்ந்து இடுகையாகவே போட்டிருக்கீங்க. நல்லாவே சொல்லியிருங்கீங்க. தாய்மொழிக்குப்பின் அவர், அவருக்கு தேவையான மொழியை தனியாக படித்துக்கொள்ளட்டுமே. இப்பொழுது கான்வென்டில் படிக்கும் சிறுவருக்கு ஒரு பொருளின் விலையை முப்பது, நாற்பது ரு]பாய் என்று தமிழில் கூறினால், எனக்கு புரியல்ல ஆங்கிலத்தில் சொல்லுங்க என்கிறhர்கள். இதைவிட கொடுமை அந்த சிறுவனின் பெற்றேhர் மிகவும் பெருமையாக அவன் படிக்கும் பள்ளியில் முழுவதும் ஆங்கிலம்தான் என்கிறhர்கள். கான்வென்டில் படிக்கும் பல குழந்தைகளிடம் அவர்கள் வயதுக்குரிய அந்த குழந்தைத் தனத்தை காண இயலவில்லை.

க‌ரிச‌ல்கார‌ன் said...

//இதில் இரண்டு வாதங்களையும் சொல்பவர்கள் அவர்களை அறியாமலே அவர்களை மறுதலித்துக் கொள்கிறார்கள். 12 வருடம் ஆங்கிலமொழியைப் படித்தும், நான்கு வருடம் ஆங்கில வழியில் படித்தும் சரிவர ஆங்கிலம் பேச வராத போது, 12 வருடங்கள் இந்தி மொழியை மட்டும் படித்திருந்தாலே இவர்கள் சரளமாக இந்தி பேசிவிடுவார்களாம்.

இந்த வாதங்களை எடுத்து வைப்பவர்கள் பெரும்பாலும் மற்ற மாநிலங்களில் பணிபுரியச் சென்று அங்கே இந்தி பேசுபவர்களால் கேலி செய்யப்பட்டோ, மட்டம் தட்டப்பட்டோ, பணியைத் தொடரமுடியாமலோ கஷ்டப்பட்டவர்களாக இருந்திருப்பார்கள். இவர்கள் வெளிமாநிலத்தில் பணி புரிய ஏதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக எல்லோரையும் எதற்காக இந்தி படிக்கச் சொல்ல வேண்டும்? //

த‌மிழ்நாட்டில் ஆங்கில‌ வ‌ழி பாட‌ங்க‌ள் ந‌ட‌த்தும் ப‌ள்ளிக‌ளில் ஹிந்தியும் ந‌ட‌த்த‌லாம்,ஆனால் ப‌க்க‌த்து தெருவில் இருக்கும் அர‌சு ப‌ள்ளியில் கிடையாது.

வ‌க்குள்ள‌வ‌ர்க‌ளுக்கு ஆங்கில‌ப் ப‌ள்ளிக‌ள்,வ‌க்கில்லாத‌வ‌ர்க‌ளுக்கு அர‌சு ப‌ள்ளிக‌ள்?

ஆங்கில‌ வ‌ழியில் ப‌டிப்ப‌தால் ஒரு ப‌ய‌னும் இல்லையென்றால் எத‌ற்காக‌ "பிள்ளைக‌ளைச் சேர்ப்ப‌த‌ற்கு பெற்றோர்க‌ளுக்கு நேர்காண‌ல்,பெற்றோர்க‌ள் ப‌டித்திருக்க‌ வேண்டும்,எம்பி எம் எல் ஏ சிபாரிசு,டொனேஷ‌ன்" இவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌ப்ப‌ட்டு ஆங்கில‌ வ‌ழி ப‌ள்ளிக‌ளில் சேர்ப்ப‌த‌ற்கு வ‌ரிசையில் நிற்கிறார்க‌ள்?????

//மிகக் குறைந்த மக்கள் தொகைக் கொண்ட ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து வந்த அளவுக்கு ஆராய்ச்சிக் கட்டுரைகள் தமிழ்நாட்டிலோ இந்தியாவிலோ இருந்து வெளிவருவதில்லை. இதற்கு முக்கியக் காரணமாக தாய்மொழிக்கல்வி இல்லை//

க‌டைசியாக‌

த‌மிழ் வ‌ழி பொறியிய‌ல் ப‌டித்தால்

எளிதாக‌ க‌ற்றுக் கொள்ளலாம்

நிறைய‌ விஞ்ஞானிக‌ள் உருவாக்க‌லாம்

புதிய‌ க‌ண்டு பிடிப்புக‌ளை நிக‌ழ்த்த‌லாம்

எல்லாம் ச‌ரி த‌மிழ் வ‌ழி பொறியிய‌ல் க‌ல்வியில் இவ்ளோ பெரிய‌ ந‌ன்மை இருப்ப‌தால்,த‌மிழ் வ‌ழி பொறியிய‌ல் க‌ல்வியை க‌ட்ட‌யாமாக்க‌லாமே??? அப்ப‌டி இல்லாம‌ல் "விருப்ப‌ம் உள்ளவ‌ர்க‌ள் ம‌ட்டும்" என்று பொடி வைப்ப‌தேன்??????

மெட்ரிக்குலேஷ‌ன்,சிபிஎஸஈ,த‌மிழ் வ‌ழிக் க‌ல்வி என்று பிரிந்து இத்த‌னை ஆண்டுக‌ள் க‌ழித்துதான் அர‌சு தூக்க‌த்திலிருந்து எழும்பி "ச‌ம‌ச்சீர்" க‌ல்வி ப‌ற்றி யோசிக்கிற‌து.பொறியிலு‌க்கும் நாளை இதே நிலைமை தானே?????

க‌ரிச‌ல்கார‌ன் said...

/தமிழ் வழியில் பொறியியல், டெக்னாலஜி படித்தால் வேலை கிடைக்குமா? எவன் வேலை குடுப்பான்? நீங்க ஒரு software கம்பனி ஓனர் ன்னு வச்சிக்கிடுவோம், நீங்க குடுப்பீங்களா? இல்ல நீங்க வேலை பாக்குற கம்பனில refer பண்ண முடியுமா? உங்க கம்பனி அவன வேலைக்கு சேர்ப்பானா?//

ந‌ல்ல‌ கேள்வி

Anonymous said...

பதிவும் பின்னூட்ட உரையாடலகளையும் படித்துக்கொண்டிருக்கிறேன். அருமை.

பழமைபேசி said...

முகிலன்...நன்றி!

பழமைபேசி said...

முகிலன்...நன்றி!

நசரேயன் said...

//
த‌மிழ்நாட்லேயே பிழைக்க‌ வ‌ழி இருக்குன்னா நாம‌‌ இத்த‌னை பேர் நீங்க‌ளும் நானும் உட்ப‌ட‌ எதுக்கு வெளியில் இருக்கிறோம்?????
//

கரிசல்காரரே தமிழ் நாட்டுக்காரன் மட்டும் தானா பிழைக்க வழி இல்லாம வேற ஊருக்கு போறானா, யாருமே வடக்கே இருந்து தமிழ் நாட்டுக்கு பிழைக்க வரலையா?

தமிழ் நாட்டுக்கு பிழைக்க வாரவங்க எல்லாம் பத்து வருஷம் ஆனாலும் தமிழே தெரியாம காலத்தை ஓட்டுறாங்க, ஆனா நாம மும்பை எக்ஸ்பிரஸ்ல ஹிந்தி தெரியாம போக முடியலைன்னு வருத்தப் படுறீங்க.

முதல்ல இந்தி படிக்காம பஞ்சாப் முதல்வர் பத்தி கிடைக்காம போச்சி, டெல்லி முதல்வர் வேலை கிடைக்காம போச்சி என்கிற தாழ்வு மனப் பான்மையை விடுங்க.

மதன்செந்தில் said...

ஒரு விசயம் விளங்க மாட்டேங்குது.. தமிழபடிக்கிற அத்தனை பேரும் தமிழ் நாட்டுல வேலை பார்க்கீறாங்களா?? இல்லையே.. நான் தமிழ்லதான் படிச்சேன் தமிழ்லதான் படிச்சேனு குதிச்சுட்டு வெள்ளைகாரனுக்கு சொம்பு தூக்கிறதுதானே சந்தோசமே வருது.

தமிழ் மட்டும் போதும்னு சொல்றது எல்லாம் உங்களை மாதிரி படிச்சவங்க பேசுறது... எஞ்சினியரிங் படிச்சுட்டு எங்க ஊர்ல எருமை மேய்கிரவனை வந்து பாருங்க தெரியும்..


www.narumugai.com

Unknown said...

//தமிழ் வழியில் பொறியியல், டெக்னாலஜி படித்தால் வேலை கிடைக்குமா? எவன் வேலை குடுப்பான்? நீங்க ஒரு software கம்பனி ஓனர் ன்னு வச்சிக்கிடுவோம், நீங்க குடுப்பீங்களா? இல்ல நீங்க வேலை பாக்குற கம்பனில refer பண்ண முடியுமா? உங்க கம்பனி அவன வேலைக்கு சேர்ப்பானா//

கண்டிப்பா குடுப்பேன். கண்டிப்பா ரெஃபர் பண்ணுவேன்.

ஒரு மனிதனை நிறத்தால், மதத்தால், மொழியால், நம் நாடென்றால் ஜாதியால் இழிவு படுத்துவதும், ஒதுக்கி வைப்பதும் Discrimination.

நான் Discriminate செய்யமாட்டேன்

Unknown said...

//தமிழ் மட்டும் போதும்னு சொல்றது எல்லாம் உங்களை மாதிரி படிச்சவங்க பேசுறது... எஞ்சினியரிங் படிச்சுட்டு எங்க ஊர்ல எருமை மேய்கிரவனை வந்து பாருங்க தெரியும்.//

உங்க ஊர்ல எஞ்சினியரிங் படிச்சுட்டு எருமை மேய்க்கிறவன் தமிழ் தவிர வேற மொழி தெரியாததுனாலதான் மேய்க்கிறானா சார்?

அவன் 4 வருச எஞ்சினியரிங் கோர்ஸ்ல இங்கிலீஷ் மீடியத்துல படிச்சதால ஒண்ணும் மண்டைல ஏறாம பார்டர்ல பாஸ் பண்ணதாலதான் மாடு மேய்க்கிறான்னு கூட நானும் சொல்ல முடியும்.

Unknown said...

// மத்தபடி உலகத்துக்கு பொதுவான மொழி இங்கிலீஷ், அது கண்டிப்பா எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கணும்//

ஒன்னு புரிஞ்சுக்குங்க. நான் இந்த ஸ்டேட்மெண்டை மறுதலிக்கவே இல்லை. ஆங்கிலம் உலகப் பொது மொழி. அது எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கணும் அப்பிடிங்கிறதை நானும் ஒத்துக்கிறேன். ஆனா தமிழ் மீடியத்துல படிக்கிறவனுக்கு இங்கிலீஷ் தெரியாமப் போயிரும்னு ஏன் பிரச்சாரம் பண்றீங்க?

மேலே மதன்செந்தில் சொன்ன மாதிரி தமிழ்ல படிச்ச எல்லாரும் வெள்ளைக்கார துரைமாருக்கே செம்பு தூக்க முடியுதுன்னா, நம்ம நாட்டு அம்பானிக்கு குடை பிடிக்க முடியாதுங்களா? என்ன பேசுறீங்கப்பு?

இப்பிடி சொல்லிச் சொல்லியே படிக்கணும்னு ஆர்வத்தோட வர்ற பயபுள்ளைகளையும் தடுத்துருங்க. அப்புறம் இட ஒதுக்கீட்டுல செய்யற மாதிரி தமிழ் வழி வகுப்புக்கு ஆள் சேரலை,அதுனால அந்த வகுப்புகளையே எடுக்குறோம்னு ஒரு நாள் ஊத்தி மூடிடலாம்.

மங்குனி அமைச்சர் said...

சூப்பர் சார் , ஏதாவது கலாயிக்கலாம்னு வந்தேன் , ஆனா சூப்பர் சீரியஸ் பதிவு , இதுல கலாயிக்கமுடியல அடுத்து பாத்துகிறேன்

ஸ்ரீமதன் said...

இந்தியாவில் ஆராய்ச்சிகள் பெருமளவு நடைபெறாமைக்கு மிக முக்கிய காரணம் ஆராய்ச்சிகளுக்கான நிதி ஒதுக்கீடு மிக குறைவு , ஆராய்ச்சியாளர்கள் பற்றாக்குறை , அவர்களுக்கான மிக குறைந்த வருமானம்,வெற்றி பெறும் ஆராய்ச்சிகளின் சந்தைபடுத்தல் மிக மோசமாக இருப்பது,அரசு இயந்திர மெத்தனம் போன்றவையே. இந்தியாவில் கடந்த 40 - 50 ஆண்டுகளாகவே அரசு மற்றும் தனியார் ஆராய்ச்சி நிலையங்களில் ஆங்கிலமே நடைமுறை.இந்தியாவில் எல்லா மாநிலத்திலும் பட்டபடிப்பும் ஆங்கிலத்தில்தான். அப்படி இருந்தும் இதுவரை வெற்றி பெற்ற ஆராய்ச்சிகள் ,சமர்பிக்கப்பட்ட ஆராய்ச்சி ஆவணங்கள் , கருத்தரங்குகள் எல்லாமே மிகவும் குறைவே.தாய்மொழி கல்வி மட்டும் இதை மாற்றி விடும் என்பது சந்தேகமே.ஆராய்ச்சி மாணவர்/ஆராய்ச்சியாளர்களுக்கு வருமான ரீதியிலும் , அங்கீகார ரீதியிலும் பலன் தராத வரை இந்த நிலைமையே நீடிக்கும் என்பது என் எண்ணம்.

vasu balaji said...

/அப்புறம் ப்ரோட்டான் என்பது லத்தீன் வார்த்தை. அதுபல மொழிகளில் அப்படியேதான் உபயோகப் படுகிறது(ஜெர்மன், ஃப்ரஞ்ச், ரஷ்யன் என). அதைத் தமிழிலும் அப்படியே உபயோகிப்பதில் என்ன தவறு? மெர்க்குரி - பாதரசத்திற்கு ஹைட்ரோ கைரம் என்று லத்தீனில் அழைப்பதால் Hg என்ற குறியீட்டை உபயோகிக்கிறோம். அதை அப்படியே உபயோகிப்பது தானே சரி? /

நான் சொல்வதும் அதுதான். ப்ரோடானை ப்ரோடான் என்று சொல்லலாம் எனில், ஆட்டமை அணு என்றும் எலக்ட்ரானை மின்னணு என்றும் ஏன் சொல்லவேண்டும். நான் சொல்ல வருவது இப்படி மாறி மாறி குழப்புவதால் இந்த சொல்லுக்கு தமிழ்ச்சொல் இருக்கிறதா இல்லையா என்பதே பெரிய விசனமாகிறது. எலக்ட்ரானிக்சை இலத்திரியன் என மொழிபெயர்த்ததை நாம் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை?

ஈரோடு கதிர் said...

//ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் அந்த மொழியை முதலில் அழிக்க வேண்டும். இனம் தானாய் அழிந்து விடும்.

//

இது உண்மை...

தமிழைத் தட்டிக் கழிக்க என்ன சொத்தை சமாதானம், யார் சொன்னாலும், மொழி அழியும் போது இனம் அழிந்தே தீரும்... அழியும் போது அதன் வலி புரியும்

அதுவரை வலிக்காத மாதிரியே எல்லோரும் நடிப்போம்

வேறென்ன செய்ய

பாலா said...

இந்தி திணிப்பை எதிர்க்கிறோம் என்று கூறி விட்டு, இன்றைய தலைமுறையில் சாமான்ய மக்கள் இந்தி கற்க முடியாமல் செய்தது மட்டுமே இவர்கள் செய்த நல்ல காரியம்.
நமக்கு முந்தைய தலைமுறையில் இந்தியும் ஓரு பாடமாக பள்ளியில் இருந்தது. அப்போது தமிழ் அழிந்தா போய் விட்டது. இல்லையே.

என்னைப்போல ஓரு மும்பை கம்பெனில வேலை பார்த்தா இந்த வேதனை உங்களுக்கும் புரியும்.

முடிவாக,
தமிழ் மொழி கண் போன்றது. பிற மொழி கண்ணாடி போன்றது.
சில நேரத்தில் கண்ணாடி இல்லாவிடில், கண் இருந்தும் பயனில்லை.
இதுதான் உண்மை.

நசரேயன் said...

//
என்னைப்போல ஓரு மும்பை கம்பெனில வேலை பார்த்தா இந்த வேதனை உங்களுக்கும் புரியும்.
//

மும்பையிலே இருந்து சென்னைக்கு வாரவங்க எல்லாம் தமிழே தெரியாம சந்தோசமா இருக்காங்களே எப்படி?

நீங்க என்ன வாழ்க்கை பூராவுமா கஷ்டப் படப் போறீங்க இந்தி தெரியாம, ஆறு மாதத்திலே கத்துக்கலாம்.

தமிழகத்திலே இந்தி தெரியாதாதாலே மற்ற மாநிலங்களிலே கையேந்த வேண்டிய நிலைமை இருக்கிற மாதிரி தெரியலை.

நசரேயன் said...

//ஆங்கிலத்தை ஏற்று கொண்ட அளவு கூட, நம் இந்திய மொழிகளை நாம் ஏற்கவில்லை என்பது பற்றி வேறென்ன சொல்லறது??//

ஏற்று கொண்டு இருக்கிறோம், ஆனால் திணிப்பதை அல்ல

நசரேயன் said...

//எஞ்சினியரிங் படிச்சுட்டு எங்க ஊர்ல எருமை மேய்கிரவனை வந்து பாருங்க தெரியும்..//

அந்த ஆளுக்கு எவ்வளவு அரியர்?

karthickeyan said...

அருமையான கட்டுரை.
"இந்தி எதிர்ப்பு என்று போராட்டம் நடத்தி எங்களை இந்தி படிக்க விடாமல் வைத்து வெளிமாநிலங்களில் பிழைக்கச் செல்லும்போது கஷ்டப்பட வைக்கிறார்கள்." - இதே மன நிலையில் தான் இன்றைய இளைஞர்கள் பெரும்பாலோர் உள்ளனர்.
யாராவது எடுத்துக் கூறினாலும், அதனை முழுமையாக காது கொடுத்துக் கேட்கும் பொறுமைகூட இல்லை.
''தாய்மொழி''யின் அருமைகூட தெரியாத இவர்கள் எல்லாம் படித்து என்ன பயன்?

க‌ரிச‌ல்கார‌ன் said...

//தமிழ் நாட்டுக்கு பிழைக்க வாரவங்க எல்லாம் பத்து வருஷம் ஆனாலும் தமிழே தெரியாம காலத்தை ஓட்டுறாங்க, ஆனா நாம மும்பை எக்ஸ்பிரஸ்ல ஹிந்தி தெரியாம போக முடியலைன்னு வருத்தப் படுறீங்க. //

ச‌மோசா சுட‌வோ,குழி தோண்ட‌வோ வ‌ந்தால் ஒரு வேளை த‌மிழ் தேவையில்லாம‌ல் இருக்க‌லாம்.ஆனால் நூறு த‌மிழ்த் தொழிலாள‌ர்க‌ளை நேர‌டியாக‌ மேற்பார்வை செய்யும் வேலைக்கு வ‌ந்தால் க‌ட்டாய‌ம் அரை குறையாக‌வாது த‌மிழ் தெரிந்திருக்க‌ வேண்டும்

க‌ரிச‌ல்கார‌ன் said...

//ஆங்கிலம் உலகப் பொது மொழி. அது எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கணும் அப்பிடிங்கிறதை நானும் ஒத்துக்கிறேன். ஆனா தமிழ் மீடியத்துல படிக்கிறவனுக்கு இங்கிலீஷ் தெரியாமப் போயிரும்னு ஏன் பிரச்சாரம் பண்றீங்க? //

அப்புற‌ம் எத‌ற்காக‌ "பிள்ளைக‌ளைச் சேர்ப்ப‌த‌ற்கு பெற்றோர்க‌ளுக்கு நேர்காண‌ல்,பெற்றோர்க‌ள் ப‌டித்திருக்க‌ வேண்டும்,எம்பி எம் எல் ஏ சிபாரிசு,டொனேஷ‌ன்" இவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌ப்ப‌ட்டு ஆங்கில‌ வ‌ழி ப‌ள்ளிக‌ளில் சேர்ப்ப‌த‌ற்கு வ‌ரிசையில் நிற்கிறார்க‌ள்?????


இவ்வ‌ளவு ஏன் இங்க‌‌ பின்னூட்ட‌ங்க‌ளில் த‌மிழ் த‌மிழ்னு சொல்லிக் கொண்டிருப்போரின் குழ‌ந்தைக‌ள் எத்த‌னை பேர் த‌மிழ் வ‌ழி க‌ல்வி க‌ற்கிறார்க‌ள்?????????????

க‌ரிச‌ல்கார‌ன் said...
This comment has been removed by the author.
க‌ரிச‌ல்கார‌ன் said...

//ஆங்கிலத்தை ஏற்று கொண்ட அளவு கூட, நம் இந்திய மொழிகளை நாம் ஏற்கவில்லை என்பது பற்றி வேறென்ன சொல்லறது??//

ஏற்று கொண்டு இருக்கிறோம், ஆனால் திணிப்பதை அல்ல//

ஆம் ஆங்கில‌ வ‌ழிப் ப‌ள்ளிக‌ளில் ப‌ண‌ம் உள்ள‌வ‌னின் பிள்ளைக‌ளுக்கு ஹிந்தி க‌ற்றுக் கொடுப்ப‌தை ஏற்று கொண்டு இருக்கிறோம் ஆனால் அர‌சு ப‌ள்ளிக‌ளில் பிள்ளைக‌ளுக்கு ஹிந்தி திணிப்பதை எதிர்க்கிறோம்

இது தானே ந‌ண்பா யதார்த்தம்

க‌ரிச‌ல்கார‌ன் said...

//நீங்க என்ன வாழ்க்கை பூராவுமா கஷ்டப் படப் போறீங்க இந்தி தெரியாம, ஆறு மாதத்திலே கத்துக்கலாம்.//

அஞ்சாநெஞ்ச‌னுக்கு (ம‌றுப‌டியுமா !!)இல்லாத‌ காசா ப‌ண‌மா??தின‌ம் நாலு ஹிந்தி ப‌ண்டிட்க‌ளை கூப்பிட்டு வைத்து க‌ற்றுக் கொண்டு நாடாளும‌ன்ற‌த்தில் க‌ல‌க்க‌ வேண்டிய‌து தானே??
ஒரு வ‌ருட‌ம் ஆகியும் ஒண்ணும் முடிய‌லையே???

ஆனா அதுக்குள்ள அமைச்சர் அவைக்கு வ‌ருவ‌தில்லை, கேள்விக‌ளுக்கு இணை அமைச்ச‌ர் தான் ப‌தில‌ளிக்கிறார் என விம‌ர்ச‌ன‌ங்க‌ள் வ‌ந்து விட்ட‌தே????

பருப்பு (a) Phantom Mohan said...

கண்டிப்பா குடுப்பேன். கண்டிப்பா ரெஃபர் பண்ணுவேன்.

ஒரு மனிதனை நிறத்தால், மதத்தால், மொழியால், நம் நாடென்றால் ஜாதியால் இழிவு படுத்துவதும், ஒதுக்கி வைப்பதும் Discrimination.

நான் Discriminate செய்யமாட்டேன்
///////////////////////////////


நான் உறுதியாக கூறுகிறேன், இது வீம்புக்கு, வெத்து சீனுக்கு நீங்கள் சொல்லும் பதில்.

உங்கள் வீட்டுப் பிள்ளைகள் தமிழ் வழியில் படிக்கிறார்களா? கண்டிப்பாக இருக்காது. இல்லாத வீட்டுப் பிள்ளைங்க தான் தமிழ் வழியில் படிக்கும், இதை வேதனையோடு சொல்கிறேன்.

இதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க. If they implement engineering in tamil, tell me who will join...again the POOR FAMILY or VILLAGE GUYS...
படிச்சவன் எவனும் தன் புள்ளைய தமிழ்ல படிக்க வைக்க மாட்டான்...இது உண்மை! நீங்க உங்க பசங்கள தமிழ் வழி பொறியியல் கல்வியில் சேர்ப்பீர்களா? நீங்கள் ஒரு வீம்புக்கு சேர்த்தாலும், உங்க பையனுக்கு அப்போ நம்மை விட நிறைய விஷயம் தெரிந்து கேள்வி கேட்பான்.

இன்ஜினியரிங் எவனப்பா தமிழ்ல படிப்பான், நான் படிக்க மாட்டேன்னு சொல்லுவான்! உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் கண்டிப்பாக தமிழ் வழியில் படிப்பதை எதிர்ப்பார்கள்.

இதுக்கும் அப்டி இல்லன்னு பொய் சொல்லாம, உண்மைய சொல்லுங்க.

நசரேயன் said...

//ஆம் ஆங்கில‌ வ‌ழிப் ப‌ள்ளிக‌ளில் ப‌ண‌ம் உள்ள‌வ‌னின் பிள்ளைக‌ளுக்கு ஹிந்தி க‌ற்றுக் கொடுப்ப‌தை ஏற்று கொண்டு இருக்கிறோம் ஆனால் அர‌சு ப‌ள்ளிக‌ளில் பிள்ளைக‌ளுக்கு ஹிந்தி திணிப்பதை எதிர்க்கிறோம்

இது தானே ந‌ண்பா யதார்த்தம்//

உங்களை யாரும் இந்தி மொழி படிக்க வேண்டாமுன்னு சொல்லலை, முதல்ல இந்தி படிக்கதாதாலே வாழ்கையே போய்விட்டது என்ற மனநிலையை கைவிடவும்

நசரேயன் said...

//அஞ்சாநெஞ்ச‌னுக்கு (ம‌றுப‌டியுமா !!)இல்லாத‌ காசா ப‌ண‌மா??தின‌ம் நாலு ஹிந்தி ப‌ண்டிட்க‌ளை கூப்பிட்டு வைத்து க‌ற்றுக் கொண்டு நாடாளும‌ன்ற‌த்தில் க‌ல‌க்க‌ வேண்டிய‌து தானே??
ஒரு வ‌ருட‌ம் ஆகியும் ஒண்ணும் முடிய‌லையே???//

அவரு ஒண்ணும் இந்தி படிக்க பாராளுமன்றம் போகலையே ?

Bruno said...

இது குறித்த என் கருத்து

உதாரணமாக புவிஈர்ப்பு விசை என்பதற்கு பதிலாக “பூமி புட்சு இய்க்கும் போர்ஸ்” என்று தான் அறிவியல் பாட நூல்களில் எழுதப்பட வேண்டும்


அசோகர் ரோட்டுக்கு அந்தாண்ட மரம் நட்டுக்கினா என்று சரித்திரப் பாடப்புத்தகங்களில் எழுதப்பட வேண்டும்

பிருத்வி சம்புக்தாவை இஸ்துகினு பூட்டான் / நூட்டன் பூமி புட்ச்சு இயிக்கும் போர்ச கண்டுக்கினார் - சென்னை தமிழில் பள்ளி பாட நூல்கள் எழுத வேண்டிய அவசியம்

Bruno said...

//ஆங்கிலத்தை ஏற்று கொண்ட அளவு கூட, நம் இந்திய மொழிகளை நாம் ஏற்கவில்லை என்பது பற்றி வேறென்ன சொல்லறது??//

அதே நேரம் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் மற்றொரு இந்திய மொழியையும் கற்பதில்லை, ஆங்கிலத்தையும் கற்பதில்லை என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்

நசரேயன் said...

//இவ்வ‌ளவு ஏன் இங்க‌‌ பின்னூட்ட‌ங்க‌ளில் த‌மிழ் த‌மிழ்னு சொல்லிக் கொண்டிருப்போரின் குழ‌ந்தைக‌ள் எத்த‌னை பேர் த‌மிழ் வ‌ழி க‌ல்வி க‌ற்கிறார்க‌ள்?????????????//

கரிசலாரே,

இங்கே நாம பேசிகிட்டு இருக்கிறது தமிழா , "இந்தி"யா ன்னு, அப்படி உண்மையிலே யாரவது தமிழ் வழி கல்வி வழியா படிக்கிறாங்கன்னு தெரிஞ்சா, நீங்க இந்தி பேசுறதை நிறுத்தி விடுவீங்களா?

Unknown said...

//அப்புற‌ம் எத‌ற்காக‌ "பிள்ளைக‌ளைச் சேர்ப்ப‌த‌ற்கு பெற்றோர்க‌ளுக்கு நேர்காண‌ல்,பெற்றோர்க‌ள் ப‌டித்திருக்க‌ வேண்டும்,எம்பி எம் எல் ஏ சிபாரிசு,டொனேஷ‌ன்" இவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌ப்ப‌ட்டு ஆங்கில‌ வ‌ழி ப‌ள்ளிக‌ளில் சேர்ப்ப‌த‌ற்கு வ‌ரிசையில் நிற்கிறார்க‌ள்?????
//

அப்படி ஒரு மன நிலை தமிழ் நாட்டில் நிலவுவதுதான் காரணம்.

Bruno said...

//ஆம் ஆங்கில‌ வ‌ழிப் ப‌ள்ளிக‌ளில் ப‌ண‌ம் உள்ள‌வ‌னின் பிள்ளைக‌ளுக்கு ஹிந்தி க‌ற்றுக் கொடுப்ப‌தை ஏற்று கொண்டு இருக்கிறோம் ஆனால் அர‌சு ப‌ள்ளிக‌ளில் பிள்ளைக‌ளுக்கு ஹிந்தி திணிப்பதை எதிர்க்கிறோம்
//

கற்றுக்கொடுப்பதை ஏற்கிறோம்
திணிப்பதை எதிர்க்கிறோம் என்று நீங்களே தெளிவாக கூறிவிட்டீர்களே

:) :) :)

க‌ரிச‌ல்கார‌ன் said...

//உங்களை யாரும் இந்தி மொழி படிக்க வேண்டாமுன்னு சொல்லலை//

ம‌றுப‌டியும் முத‌ல்ல‌ இருந்தா?????????

Bruno said...

இந்தியாவில் அனைவரும் தங்கள் தாய்மொழியுடன் உலக பொது மொழியான ஆங்கிலத்தை படித்தால் தகவல் தொடர்பிற்கு இலகுவாக இருக்கும்

அனைவருக்கும் தாய்மொழி + ஒரு மொழி

ஆனால் 1960களில் என்ன நடந்தது

இந்தியை தாய்மொழியாக கொண்டர்வர்கள் ஆங்கிலம் கற்க மறுத்தார்கள்

நம்மை இந்தி கற்க வற்புறுத்தினார்கள்

அதாவது

அவர்கள்
தாய்மொழி மட்டும்
நாமோ
தாய்மொழி + இரு மொழிகள்

இது எந்த விதத்தில் நியாயம்

--

இன்று வட இந்தியாவில் ப்ணிபுரியும் தமிழர்களை விட தமிழகத்தில் பணிபுரியும், கற்கும் வட இந்தியர்கள் அதிகம்

ஆனால் அவர்கள் பள்ளியில் தமிழ் கற்பதும் இல்லை

பள்ளியில் தமிழ் கற்காததால் வீணாய்ப்போனோம் என்ற முட்டாள்தனமான வாதத்தை கூறுவதும் இல்லை

நசரேயன் said...

//ச‌மோசா சுட‌வோ,குழி தோண்ட‌வோ வ‌ந்தால் ஒரு வேளை த‌மிழ் தேவையில்லாம‌ல் இருக்க‌லாம்.ஆனால் நூறு த‌மிழ்த் தொழிலாள‌ர்க‌ளை நேர‌டியாக‌ மேற்பார்வை செய்யும் வேலைக்கு வ‌ந்தால் க‌ட்டாய‌ம் அரை குறையாக‌வாது த‌மிழ் தெரிந்திருக்க‌ வேண்டும்//

நான் சென்னையிலே இருக்கும் போது ஷிப்பிங் கம்பெனில வேலை பார்த்த ஒருத்தர் நாணுறு பேரை மேய்த்தார், ஆனா "தமிழ் தெரியாது" என்ற ஒரு வார்த்தையைத் தவிர வேற எதுவும் தெரியாது. நீங்க சொல்லுற கணக்குப் படி பார்த்தா, தமிழ் நாட்டிலே இருந்து வடக்கே போறவங்க குறைந்த பட்சம் நூறு பேரை மேய்த்தால் தான் இந்தி கத்துக்கணும்.

நசரேயன் said...

////உங்களை யாரும் இந்தி மொழி படிக்க வேண்டாமுன்னு சொல்லலை//

ம‌றுப‌டியும் முத‌ல்ல‌ இருந்தா?????????
//

சங்கத்திலே மனு கொடுத்துருவோமா?

நசரேயன் said...

//இல்லாத வீட்டுப் பிள்ளைங்க தான் தமிழ் வழியில் படிக்கும், இதை வேதனையோடு சொல்கிறேன்.//

தமிழ்ல படிச்சி ஐ.ஏ.எஸ் தெரிவிலே வெற்றி பெருகிறவர்கள் எல்லாம் ஒண்ணும் இல்லாதவங்களா?

நசரேயன் said...

//
பள்ளியில் தமிழ் கற்காததால் வீணாய்ப்போனோம் என்ற முட்டாள்தனமான வாதத்தை கூறுவதும் இல்லை
//

இதே மனப்பான்மை தான் நமக்கு வேண்டும்

பருப்பு (a) Phantom Mohan said...

Blogger நசரேயன் said...

//இல்லாத வீட்டுப் பிள்ளைங்க தான் தமிழ் வழியில் படிக்கும், இதை வேதனையோடு சொல்கிறேன்.//

தமிழ்ல படிச்சி ஐ.ஏ.எஸ் தெரிவிலே வெற்றி பெருகிறவர்கள் எல்லாம் ஒண்ணும் இல்லாதவங்களா?
///////////////////////

வீட்டுக்கு, தெருவுக்கு பத்து பேரா IAS ஆகுறான்? மெஜாரிட்டி பாருங்கய்யா...

சாமர்த்தியமா கேள்வி கேட்டு பதில் சொல்ல முடியாம மடக்கனும்ன்னு ரெண்டு நாளா இதப்பத்தி எழுதல...கண்டிப்பாக இது ஒரு வீண் முயற்சி..இதனால் பயன் அடைபவர் வெகு சிலர்...பலர் கஷ்டப்படுவார்கள்...

பருப்பு (a) Phantom Mohan said...

Blogger நசரேயன் said...

//இல்லாத வீட்டுப் பிள்ளைங்க தான் தமிழ் வழியில் படிக்கும், இதை வேதனையோடு சொல்கிறேன்.//

தமிழ்ல படிச்சி ஐ.ஏ.எஸ் தெரிவிலே வெற்றி பெருகிறவர்கள் எல்லாம் ஒண்ணும் இல்லாதவங்களா?
///////////////////////

வீட்டுக்கு, தெருவுக்கு பத்து பேரா IAS ஆகுறான்? மெஜாரிட்டி பாருங்கய்யா...

சாமர்த்தியமா கேள்வி கேட்டு பதில் சொல்ல முடியாம மடக்கனும்ன்னு ரெண்டு நாளா இதப்பத்தி எழுதல...கண்டிப்பாக இது ஒரு வீண் முயற்சி..இதனால் பயன் அடைபவர் வெகு சிலர்...பலர் கஷ்டப்படுவார்கள்...

பருப்பு (a) Phantom Mohan said...

தமிழ் தமிழ் ன்னு இன்னும் எத்தன நாளைக்கு அரசியல் பண்ணுவது? அவனுங்க போதைக்கு நம்ம அடுத்த சந்ததி ஊறுகாயா ஆகக்கூடாது....

சினிமாக்களுக்கு தமிழில் தலைப்பு வைக்கும் வரை, தமிழ் இந்த ஜென்மத்தில அழியாது, கவலைப் பட வேண்டாம்...

நசரேயன் said...

//வீட்டுக்கு, தெருவுக்கு பத்து பேரா IAS ஆகுறான்? மெஜாரிட்டி பாருங்கய்யா...//

நீங்களும் வீட்டுக்கு, தெருவுக்கு பத்து பேரா வடக்கூர் போறான், அதே பெரும்பான்மையைப் பாருங்க

நசரேயன் said...

//சினிமாக்களுக்கு தமிழில் தலைப்பு வைக்கும் வரை, தமிழ் இந்த ஜென்மத்தில அழியாது, கவலைப் பட வேண்டாம்...//

சினிமாவிலே மட்டும் தமிழ் பேசினா போதுமா?

நடை முறையை எல்லாம் ஹிந்திக்கு மாத்திவிடலாமா?

பருப்பு (a) Phantom Mohan said...

நீங்களும் வீட்டுக்கு, தெருவுக்கு பத்து பேரா வடக்கூர் போறான், அதே பெரும்பான்மையைப் பாருங்க
//////////////////////////


வெளிநாட்ட உடுய்யா என்ன ஒரு ஒரு கோடி NRI இருப்பானா?

தமிழ்ல படிச்சா தமிழ் வளரும்...உன் வாழ்க்கை????????? என்ன மாதிரி வேலை வாய்ப்பு கிடைக்கும்.. கற்றது தமிழ் படத்தில வர்ற மாதிரி, காலேஜ் ப்ரோபச்சரா அவன் படிச்ச அதே காலேஜ் க்கு போகவா?

பருப்பு (a) Phantom Mohan said...

சினிமாவிலே மட்டும் தமிழ் பேசினா போதுமா?

நடை முறையை எல்லாம் ஹிந்திக்கு மாத்திவிடலாமா?
////////////////////////////////////

அய்யா எந்த ஊர்ல இருக்கீங்க? தமிழ் நாட்டுல தமிழ்ல பேசினா அவமானம்...ஸ்கூல் ல தமிழ் பேசினா பைன் போடுவாங்க...தமிழ் நாட்டுல எவன் தமிழா மதிக்கிறான், அத வச்சு காசு பாக்குறான், இல்ல அரசியல் பண்றான்...இப்போ செம்மொழி மாநாடு ரொம்ப முக்கியமா...அதுக்கு 200 , 300 கோடி செலவு பண்ணி..தமிழ் சூப்பர் மொழி, கல் தோன்றி மண் தோன்ற காலத்து ன்னு பழைய சங்கதிய பாடப் போறாங்க...இதால மக்களுக்கு என்ன புண்ணியம்... நாட்டுல எவ்ளோ பிரச்சன இருக்கு, அத சமாளிக்கிறத விட்டு...தமிழ் தமிழ் ன்னு..

பருப்பு (a) Phantom Mohan said...

நசரேயன் நீங்க புளியங்குடியா? கடைசியில விருதுநகர் மாவட்டம் தான் கத்தி களேபரம் பண்ணிட்டு இருக்கோம். நான் ராஜபாளையம், கரிசல் கோவில்பட்டி, முகிலன் அருப்புக்கோட்டை...ரொம்ப சந்தோசம்

நசரேயன் said...

//நசரேயன் நீங்க புளியங்குடியா? கடைசியில விருதுநகர் மாவட்டம் தான் கத்தி களேபரம் பண்ணிட்டு இருக்கோம். நான் ராஜபாளையம், கரிசல் கோவில்பட்டி, முகிலன் அருப்புக்கோட்டை...ரொம்ப சந்தோசம்
//

ஆமா நான் புளியங்குடி தான், எல்லாமே பாசக்கார ஆளுங்க தல...உங்களை சந்திததிலேயும் ரெம்ப சந்தோசம்

Rettaival's Blog said...

தலைவனுங்களா... எனக்கும் சொந்த ஊர் புளியங்குடி தான்! ஆனால் நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் மதுரையில்!

சுசி said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க..

என்னப் பொறுத்த வரைக்கும் வெளிநாட்ல இருக்கிற என் பசங்க தமிழ் பேச, எழுத, படிக்க தெரிஞ்சுக்கணும். படிக்கிறாங்க.

அதுக்குனு பண்டிதர் ரேஞ்சுக்கு வேண்டாம். அவங்க சந்ததிக்கும் கத்துக் குடுக்கிற மனப் பக்குவம், மொழிப் பற்று இருந்தா போதும்.

எக்ஸாம் டைம்ல கொஞ்சம் ஜாஸ்தியாவும், மத்தப்படி அப்பப்போவும் சலிச்சுக்குவாங்க. ஆனா யாராவது தமிழ் நல்லா பேசறிங்கன்னு சொன்னா குஷி ஆய்டுவாங்க.

Rettaival's Blog said...

முகிலன்!

தமிழில் சிந்திப்பது, ஆராய்ச்சி செய்வது எல்லாம் தனி நாடு இருந்தாலே சாத்தியப்படும். தேசிய ஒருமைப்பாட்டுக்குள் சிக்கிக்கொண்டு ஹிந்தியையும் அடித்து துரத்தி விட்டு தமிழ் வழிக்கல்வி பயின்று, நான் இன்ஃபோசிஸிலும் சி.டி.எஸ்ஸிலும் வேலை பார்க்கப் போவேன் என்பதெல்லாம் சுத்தப் பேத்தல்.தமிழுக்கென்று தனி சந்தை உருவானால் மட்டுமே நீங்கள் கனவு காண்பது போல் நடக்கும்.

மேலும் குழந்தைகளுக்கு தமிழில் எழுதவும் பேசவும் இருக்கும் கூச்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கே பொது இடத்தில் தமிழ் பேசினால் நம்மை தரை டிக்கட் என்று நினைத்துவிடுவார்களோ என்கிற பயத்தைப் போக்கினால் போதும்.அதை விட்டு விட்டு தமிழ் மொழியின் அருமை பெருமை மட்டுமே பேசிக்கொண்டிருந்தால் இன்னும் அரை நூற்றாண்டில் எக்மோர் ம்யூசியத்தில் தான் பார்க்க முடியும் தமிழை!

நசரேயன் said...

//ரெட்டைவால் ' ஸ் said...
தலைவனுங்களா... எனக்கும் சொந்த ஊர் புளியங்குடி தான்! ஆனால் நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் மதுரையில்!//

ரெம்ப சந்தோசம் ரெட்டைவால் ' ஸ் .. ஊரு பக்கம் எல்லாம் வருவீங்களா?

கலகலப்ரியா said...

ம்ம்..

பருப்பு (a) Phantom Mohan said...

எங்கே பொது இடத்தில் தமிழ் பேசினால் நம்மை தரை டிக்கட் என்று நினைத்துவிடுவார்களோ என்கிற பயத்தைப் போக்கினால் போதும்.
///////////////////////////

இது பாயிண்ட் ரெட்டைவால், நானும் அதே தான் சொல்றேன்...முதல்ல தமிழ் வழி கல்விக்கு ஒரு சந்தையை உருவாக்கட்டும் (சீனா போல) அதுக்கப்புறம் எல்லாத்தையும் தமிழ்ல மாத்திரலாம்...ஆனா இது நடக்க எத்தனை ஜென்மம் ஆகும்?

தேவையில்லாம எதுக்கெடுத்தாலும் தமிழ், தமிழ் ன்னு.....தமிழ் செம்மொழி, மிகப்பழமையான மொழி, பல அறிய சொற்களை, எழுத்துக்களை கொண்ட மொழி, எதுகை மோனை, இரட்டைக்கிழவி இதெல்லாம் தமிழ் போல் வேறு மொழியில் கையாள முடியுமா என்பது சந்தேகம்..இது உலகத்துக்கே தெரியும், ஒத்துக்குறோம் வேணும்னா விழுந்து கும்பிடுறோம்...

அத வச்சி அரசியல் பண்ண வேண்டாம், மொழியினால் பிரிந்து சண்டை போட வேண்டாம்.

பருப்பு (a) Phantom Mohan said...

எல்லாம் நம்ம ஊருப் பயலுகளா இருக்கீங்க! வாங்க இன்னும் நெறைய பேசுவோம்...

தமிழன் பேசலைன்னா செத்து போயிடுவான்னு தலைவரே சொல்லிருக்காரு

Bruno said...

//தமிழ் தமிழ் ன்னு இன்னும் எத்தன நாளைக்கு அரசியல் பண்ணுவது?//
இந்தி இந்தி என்று இந்திக்காரர்கள் அரசியல் செய்யும் வரை

// அவனுங்க போதைக்கு நம்ம அடுத்த சந்ததி ஊறுகாயா ஆகக்கூடாது....
//

அதே அதே

இந்திக்காரர்களில் மொழிவெறிக்கு நம் மொழி பலியாகக்கூடாது அல்லவா

Bruno said...

//தமிழ்ல படிச்சா தமிழ் வளரும்...உன் வாழ்க்கை????????? என்ன மாதிரி வேலை வாய்ப்பு கிடைக்கும்.. கற்றது தமிழ் படத்தில வர்ற மாதிரி, காலேஜ் ப்ரோபச்சரா அவன் படிச்ச அதே காலேஜ் க்கு போகவா?

//

இந்தியில் படிச்ச வட இந்தியர்களுக்கு கிடைக்கும் அதே வேலை வாய்ப்பு கிடைக்கும்

இந்தியில் படிச்சவங்க எல்லாம் இந்தி பேராசிரியராவா ஆகிறார்கள்

அது சரி
அப்துல் கலாமும்
விஞ்ஞானி எழுத்தாளர் சுஜாதாவும்
தமிழில் படித்தவர்கள் தானே

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஆ.. இதுக்கு பெருசா ஒரு பதில் தட்டச்சு செய்து, முடிக்கும் தருவாயில் கூகிள் சதி பண்ணி எல்லாம் அழிந்து விட்டது :)) இன்னொருக்கா எழுத மனமில்லை.. இந்த விவாதம் மறுபடி வந்தா பார்த்துக்கலாம்..

க‌ரிச‌ல்கார‌ன் said...

புருனோ Bruno said...
//ஆம் ஆங்கில‌ வ‌ழிப் ப‌ள்ளிக‌ளில் ப‌ண‌ம் உள்ள‌வ‌னின் பிள்ளைக‌ளுக்கு ஹிந்தி க‌ற்றுக் கொடுப்ப‌தை ஏற்று கொண்டு இருக்கிறோம் ஆனால் அர‌சு ப‌ள்ளிக‌ளில் பிள்ளைக‌ளுக்கு ஹிந்தி திணிப்பதை எதிர்க்கிறோம்
//

கற்றுக்கொடுப்பதை ஏற்கிறோம்
திணிப்பதை எதிர்க்கிறோம் என்று நீங்களே தெளிவாக கூறிவிட்டீர்களே//

(டேய் க‌ரிச‌ல் திரும்ப‌ திரும்ப‌ பேச‌ற‌ நீ)

நசரேயன் said...
//ஆங்கிலத்தை ஏற்று கொண்ட அளவு கூட, நம் இந்திய மொழிகளை நாம் ஏற்கவில்லை என்பது பற்றி வேறென்ன சொல்லறது??//

ஏற்று கொண்டு இருக்கிறோம், ஆனால் திணிப்பதை அல்ல//

இதுக்கு சொன்ன‌ ப‌தில் தான் அது.

க‌ரிச‌ல்கார‌ன் said...
//ஆங்கிலத்தை ஏற்று கொண்ட அளவு கூட, நம் இந்திய மொழிகளை நாம் ஏற்கவில்லை என்பது பற்றி வேறென்ன சொல்லறது??//

ஏற்று கொண்டு இருக்கிறோம், ஆனால் திணிப்பதை அல்ல//

ஆம் ஆங்கில‌ வ‌ழிப் ப‌ள்ளிக‌ளில் ப‌ண‌ம் உள்ள‌வ‌னின் பிள்ளைக‌ளுக்கு ஹிந்தி க‌ற்றுக் கொடுப்ப‌தை ஏற்று கொண்டு இருக்கிறோம் ஆனால் அர‌சு ப‌ள்ளிக‌ளில் பிள்ளைக‌ளுக்கு ஹிந்தி திணிப்பதை எதிர்க்கிறோம்

இது தானே ந‌ண்பா யதார்த்தம்//

ஆங்கில‌ வ‌ழி பள்ளிக‌ள்னு சொன்ன‌து ல‌ண்ட‌னில் உள்ள ப‌ள்ளிக‌ளை அல்ல‌, ந‌ம்ம‌ த‌மிழ் நாட்டில் த‌லைவ‌ர்க‌ளின் வாரிசுக‌ளும்,வ‌சதி இருக்கிற‌வ‌னின் வாரிசுக‌ளும் ப‌யிலும் ப‌ள்ளிக‌ளைத் தான்.

Rettaival's Blog said...

Blogger நசரேயன் said...

//ரெட்டைவால் ' ஸ் said...
தலைவனுங்களா... எனக்கும் சொந்த ஊர் புளியங்குடி தான்! ஆனால் நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் மதுரையில்!//

ரெம்ப சந்தோசம் ரெட்டைவால் ' ஸ் .. ஊரு பக்கம் எல்லாம் வருவீங்களா?

***********************************
இல்லைங்க நசரேயன்! மதுரைப்பக்கம் போயே ரொம்ப நாளாச்சு... சென்னை வெளியே விட மாட்டேங்குதே!

மழையோன் said...

ஒரு குழந்தையின் மொழி வைத்தே பெற்றோரின் மொழியின்பால் உள்ள அன்பு வெளிப்படுகிறது. குழந்தையின் மொழிக்கான தொடக்கமே பெற்றோருக்கிடையே இயல்பாய் தொடரும் உரையாடல்களே.
அனால் இன்று படித்த மேல் தட்டு மற்றும் உயர் நடுத்தட்டு மக்கள் பேசுகையில் தமிழ்மொழியின் தாக்கம் அறியாமலோ/வலிந்தோ தவிர்க்கப்படுகிறது.
தங்கள் குழந்தை ஆங்கில வழிக்கல்வி கற்பதையே 'ஈன்று புறம் தரும் கடமை' என்று கருதுகின்றனர்.'மம்மி/மாம்/டாடி/டாட்' என்றழைக்கப்படவே உள்ளம் விளைகிறது. அத்துடன் நில்லாமல் தமிழ்வழி பயில்வோரை பார்க்கும் ஏளனம் சொல்லிமாளாது.
என்று கல்லூரியில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஆங்கிலமே அறிவின் அடையாளம் என்ற நிலை மாறுகிறதோ அன்று தான் தமிழ்வழிக் கல்வி அல்லது தாய்மொழி வழிக் கல்வி அதன் பாதங்களை ஊன்ற முடியும் என்று தோன்றுகிறது.

உங்கள் பதிவு நன்றாக உள்ளது.