Saturday, March 21, 2009

எச்சை சோறு - சிறு கதை முயற்சி

பிரிட்டிஷ் ஏற்வேய்ஸ்இன் அலுமினியப் பறவை தன் மூக்கைத் தாழ்த்தி கால்களை சென்னை விமான நிலையத்தின் ஓடு தளத்தில் இறக்கியது. முதல் வகுப்புப் பயணிகள் இறங்கியதும் முதல் ஆளாக தோளில் பையோடு இறங்கினான் வெங்கட். விமானத்தில் இருந்து இறங்கியதும் மூச்சை ஆழமாக இழுத்து இந்தியக் காற்றை நுரையீரல் முழுக்க நிரப்பினான்.

ஸ்ரீரங்கம் திருமண தீ விபத்தில் அப்பா அம்மா இருவரையும் பறிகொடுத்தபின் இந்தியா வருவதையே தவிர்த்து வந்த
வெங்கட், ஐந்து வருடம் கழித்து இந்தியா வந்திருக்கிறான் என்றால் காரணம் இல்லாமல் இல்லை. அவன் உயிர் நண்பன் பாலாவின் திருமணம் நடப்பது தான். பாலாவும் இவனும் சிறு வயது முதல் நண்பர்கள். முதல் வகுப்பில் இருந்து எம்.சி.ஏ வரை ஒரே பள்ளி, கல்லூரியில் படித்தவர்கள் என்பதால், பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கும் என்பதால், மனைவி குழ்ந்தையை நியூ ஜெர்சியில் விட்டு விட்டு, இதோ சென்னை மண்ணில் பாதம் பதித்து விட்டான்.

பேக்கஜ் கிளைமில் தனது ஒரே பெட்டியை எடுத்துக் கொண்டு, கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் முடித்து, கையில் இருந்த டாலர்களை ரூபாய் நோட்டுகளாக மாற்றி, ஜெட் ஏற்வய்ஸ் விமானம் பிடிக்க உள்நாட்டு முனையம் நோக்கி செல்லும் பொது காபி டே காபி குடிக்கலாம் என்று அருகில் இருந்த கடையை நோக்கி திரும்பினான்.

"ஹலோ ஒரு காபி குடுங்க" என்றவாறு பையிலிருந்து நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து நீட்டினான்.

"என்ன சார் காலங்காத்தால சில்லறையா இருந்தா குடு சார்" என்று கடைக்காரன் சலித்துக்கொண்டே வெங்கட்டின் முகத்தை ஏறிட்டான். "டேய் வெங்கட். எப்பிடிடா இருக்க? எப்போ வந்த?" என்ற சந்தோஷமான குரலைக் கேட்டு கடைக்காரனின் முகத்தை பார்த்தான் வெங்கட்.

"டேய் மாரிமுத்து. என்னடா, இங்க என்ன பண்ற?"

"இங்க தாண்டா வேலை பாக்குறேன். நீ எப்போ அமெரிக்கால இருந்து வந்த?"

"நான் இப்போ தாண்டா வர்றேன். பாலா கல்யாணத்துக்காக வந்தேன். நீ வருவில?"

"வேற நாள்ல வச்சிருந்தா வந்திருக்க முடியாது. அன்னிக்கு சாயங்காலம் என் தங்கச்சிக்கு வளைகாப்பு. அதுக்காவ ஊருக்கு போவனும். நான் கண்டிப்பா வருவேன். அப்புறம், வீட்டுல எல்லாரும் சௌக்கியமா?"

"ம்ம் நல்லா இருக்காங்கடா. உனக்கு எத்தனை பிள்ளைங்க?"

"இன்னும் இல்லைடா. எங்க நான் சம்பாதிக்கிறது எங்க ரெண்டு பெருக்கே கைக்கும் வாய்க்கும் போதல. இதுல இன்னொன்னு வந்தா கஷ்டம். வாழ்க்கைல செட்டில் ஆயிட்டு தாண்டா மத்ததெல்லாம். உனக்கு எத்தன?"

"ஒரே பொண்ணு தான். சரிடா, பேசிட்டே இருந்துட்டோம். நேரம் ஆகுது. நிஜமாவே சில்லறை இல்லையா? எனக்கு மதுரை பிளைட்டுக்கு நேரம் ஆச்சு."

"இந்தாடா. தொன்னூதஞ்சு ரூபா இருக்கு. பாலா கல்யாணத்துல பாப்போம்".

"சரிடா நான் வர்றேன்".

காப்பியை சப்பிக்கொண்டே உள்ளே வந்து போர்டிங் பாஸ் வாங்கி பேகை செக் இன் செய்து பரப்பிஇருந்த சேர்களில் ஒன்றில் சென்று அமர்ந்தான். மனம் வேக வேகமாக இருபது வருடங்கள் பின்னால் சென்றது.

மாரிமுத்து இவர்கள் வகுப்பிலேயே முதல் மாணவன். ஏழை குடும்பத்தில் பிறந்தாலும் படிப்பு மட்டும் அவனுக்கு இயல்பாக வந்தது. இவ்வளவுக்கும் அவன் பள்ளி முடிந்ததும் ஒரு ஓட்டலில் வேலை செய்தான். வேலை முடிந்து வீட்டுக்கு போக இரவு பத்து மணி ஆகிவிடும். எப்போது படிப்பான் எப்போது படுப்பான் என்று தெரியாது. நாங்களெல்லாம் இவனை பார்த்து பொறாமை படுவோம். கணக்கில் புலி. வாத்தியார் போர்டில் எழுதிக்கொண்டிருக்கும்போதே இவன் நோட்டில் முடித்து வைத்திருப்பான். சில நேரங்களில் வாத்தியார் இவன் நோட்டை பார்த்து தன் கணக்கை சரி செய்ததெல்லாம் நடந்திருக்கிறது.

பத்தாவது படிக்கும் போது இடி மாதிரியான அந்த செய்தி வந்திறங்கியது. பாடம் நடத்திக்கொண்டிருந்த கணக்கு வாத்தியாரை வெளியே அழைத்து பியூன் அவர் காதில் எதோ ஓதினார். கணக்கு வாத்தியார் உள்ளே வந்து, "மாரி உங்கம்மா வந்திருக்கங்கலாம். ஹெட் மாஸ்டர் ரூம்ல இருக்காங்க. போய் பாரு" என்று அனுப்பி வைத்தார். எங்களுக்கு எல்லாம் அன்று மாலை தான் தெரியும். ரோடு வேலை செய்யும் அவன் அப்பா லாரி மோதி இறந்து விட்டார் என்று. அன்று வகுப்பை விட்டு போனவன் தான். திரும்ப வரவே இல்லை. சின்ன சின்ன வேலைகள் செய்து தன் குடும்ப பாரத்தை சுமப்பதில் அம்மாவுக்கு உதவி வந்தான். அவனுக்கு மூன்று தங்கைகள். இவன் ஒருவன் சம்பாதித்து அவர்கள் மூவருக்கும் திருமணம் செய்து வைத்தான். படித்திருந்தால் ஒரு அப்துல் கலாமாக வந்திருக்க வேண்டியவன். இப்போது காபி டே யில் காபி பிடித்து கொடுத்துக்கொண்டிருக்கிறான்.

மதுரை செல்லும் விமானத்திற்கான அறிவிப்பை கேட்டதும் நினைவு கலந்து எழுந்தான். ஏ.டி.ஆர் விமானத்தில் மதுரை வந்து இறங்கினான். விமான நிலையத்தில் மாமனார் வரவேற்க வந்திருந்தார். காரில் மாமனார் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.

குசலங்கள், விசாரிப்புகள் முடிந்து மனைவிக்கு தொலை பேசியில் வந்து சேர்ந்த தகவல் சொல்லி விட்டு பிரயாண களைப்பில் கண்ணயர்ந்தான்.

அடுத்த மூன்று தினங்கள் சுற்றங்களை பார்த்து வாங்கி வந்திருந்த பொருட்களையும் சாக்லேட்களை விநியோகம் செய்வதில் கழிந்தது. இந்த மூன்று தினங்களில் ஜெட் லாகும் தணிந்திருந்தது.

மூன்று நாட்கள் முன்னதாகவே பாலாவின் வீட்டுக்கு சென்று சேர்ந்தான். பாலாவுக்கு இவனை பார்த்தும் தனக்கு இன்னொரு உயிர் வந்ததைபோல மகிழ்ச்சி அடைந்தான். இருவருமாக சேர்ந்து திருமண வேலைகளை இழுத்து போட்டு செய்தார்கள். லேட்டாக திருமணம் செய்து கொள்வதால் இருந்த ஒரு வித்தியாசமான உணர்வை வெங்கட்டின் அண்மையால் மறந்திருந்தான் பாலா.

திருமண நாள் நெருங்கவும் மற்ற நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து சேர ஆரம்பித்தார்கள். நாளொரு கேலியும் பொழுதொரு கிண்டலுமாக நேரம் போனதே தெரியவில்லை.

திருமண நாள் பாலாவை விசேஷமாக அலங்கரித்தார்கள். மாரி முத்துவும் வந்திருந்தான். வந்திருந்த நண்பர்களிலேயே அவன் தான் கஷ்ட ஜீவனம் நடத்துபவன் என்பது அவன் தோற்றத்திலேயே தெளிவாக தெரிந்தது. கேலிகளுக்கு நடுவில் பாலா தாலி கட்டினான். மணமக்களோடு சேர்ந்து அதனை நண்பர்களும் உணவருந்த சென்றார்கள்.

மாரிமுத்துவின் பக்கத்தில் உக்கார்ந்து கொண்டான் வெங்கட்.

"அப்புறம் சொல்லு மாரி. எப்படி இருக்க? எப்போ சென்னை போன?" என்று பேச்சை ஆரம்பித்தான் வெங்கட்.

"கொஞ்ச கொஞ்சமா பணம் சேத்து ஒரு பொட்டிக்கடை ஆரம்பிச்சேண்டா வெங்கட்டு. ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லயே முனிசிபாலிடிக்காரங்க கடை அனுமதியில்லாம இருக்குன்னு சொல்லி கடையை தூக்கிட்டாங்க. அதுல போட்டு இருந்த முதல் எல்லாம் போச்சு. அதுக்கப்புறம் தான் என் தங்கச்சி மாபிள்ளை என்னை மெட்ராஸ் ஏற்போர்ட்ல இருக்குற அந்த கடையில சேத்து விட்டார். அப்பிடி வேலைநம்மூர்ல பாத்தா மாசம் இருநூறு முன்னூறு கூட தேறாது. மெட்ராஸ் அப்பிடிங்கிறதால, கைல ஆயிரத்தைந்நூறுல இருந்து ரெண்டாயிரம் வரைக்கும் கூட தேருது. மறுபடி காசு சேத்து வைக்கிறேன். தேவையான அளவு சேந்ததும் மறுபடியும் ஒரு பொட்டிக்கடை வைக்கணும்"

"ஏதாவது உதவி வேணும்னா கேளுடா. யோசிக்காத" என்று வெங்கட் சொன்னாலும்,மாரி முத்துவைப்பற்றி அவனுக்கு தெரியும். யாரிடமும் உதவி என்று போய் கை ஏந்துபவன் இல்லை என்று.

"பரவாயில்லைடா. நம்ம வாழ்க்கையை நாம தாண்டா பாத்துக்கணும். அதுக்கெல்லாம் மத்தவங்க உதவியை எதிர் பாக்க கூடாது. ஆனா நினைச்சு பாத்தா கேவலாமா இருக்குடா. நல்ல சாப்பாடுகூட கல்யாண வீட்டுல சாப்பிட்டாதான் உண்டு."

வெங்கட் பேச்சை மாற்றி வேறு பக்கம் கொண்டு சென்றான். சாப்பாடு மிகவும் பிரமாதமாக இருந்தது. வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிட்டுவிட்டான். இலையை மூட போகும்போது கவனித்தான். மாரி முத்து கிட்டத்தட்ட ஒரு ஆள் சாப்பாட்டை இலையிலே வைத்து மூடுவதை. வெங்கட்டுக்கு சட்டென கோபம் வந்துவிட்டது. சாப்பாட்டுக்கு கஷ்டமா இருக்குற இந்த நேரத்துல இவ்வளவு சாப்பாட்டை வேஸ்ட் செய்கிறானே என்று. யோசிக்காமல் மாரி முத்துவையே கேட்டு விட்டான்.

"ஏண்டா இவ்வளவு சாப்பாட்டை வேஸ்ட் பண்ற? இப்பிடி ஒரு சாப்பாடு கிடைக்காம எத்தன பேரு - ஏன் நீயே கஷ்டப்படலையா? இப்பிடி வேஸ்ட் பண்ணினா உனக்கு இந்த ஜென்மத்துல இல்லை, அடுத்த ஜென்மத்துல கூட இப்பிடி தான் இருக்கும் வாழ்க்கை" என்று பட படவென பொரிந்து விட்டான்.

மாரி முத்துவின் கண்களில் நீர் கோர்த்து விட்டது.

"இல்லடா வெங்கட். நான் இந்த மண்டபத்துக்கு வரும்போது வெளிய அஞ்சு ஆறு பிச்சைக்காரங்க குப்பை தொட்டி பக்கத்துல உக்காந்திருந்தாங்க. அவங்க இங்க போடுற எச்சை இலைல இருந்து எடுத்து சாப்புடுவாங்க. எனக்கு அவங்களுக்கு சாப்பாடு வாங்கி தர அளவுக்கு வசதி இல்லை. கொஞ்சம் அதிகமா மிச்சம் வச்சா நிறைய இலையை தேடுற கஷ்டம் இல்லை பாரு. அதுனால தான் அப்பிடி செஞ்சேன். தப்பா இருந்தா மன்னிச்சிடு" என்று சொல்லி விட்டு வெங்கட்டின் முகத்தை ஏறிட்டு பார்க்காமல் கை கழுவ சென்றான்.

மற்ற நண்பர்களிடம் பேசிவிட்டு, பாலாவிடம் விடை பெற்றுக்கொண்டு மாரி முத்து மண்டபத்துக்கு வெளியே வந்தான். அங்கே, வெங்கட் கை நிறைய சாப்பாடு பொட்டலங்களோடு அந்த பிச்சைக்காரகளை நோக்கி நடந்து கொண்டிருந்தான். மாரி முத்துவை பார்த்தும் வெங்கட்டின் முத்தில் ஒரு புன்னகை பூத்தது.

Tuesday, March 17, 2009

சிறீலங்காவில் தமிழ் யூனியன் கிரிக்கெட் அண்ட் அத்லெடிக் கிளப்

நான் வழைமையாக மேயும் கிரிக்இன்போ தளத்தில் ஒரு போட்டியின் ஓட்ட அட்டவணையை பார்க்க நேர்ந்தது. போட்டியிடும் இரு அணிகளில் ஒரு அணியின் பெயரைப பார்த்ததும் எனக்கு ஒரே சந்தோசம் - தமிழ் யூனியன் கிரிக்கெட் கிளப். அப்போ ஒரு வேளை இவங்க சொல்றதெல்லாம் சும்மாவோ? உண்மையிலயே ஸ்ரீலங்காவில தமிழ்ர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவது இல்லையோ என்று ஒரு சந்தேகமே வந்து விட்டது. பின் உள்ளே போய் பார்த்தால் தான் தெரிகிறது, பெயரில் மட்டும் தன் தமிழ் யூனியன். உள்ளே இருப்பது எல்லாருமே சிங்களர்கள் - முரளிதரனை தவிர. என்ன ஒரு வில்லத்தனம்?
உங்கள் பார்வைக்கு இங்கே

அஜந்த மேன்டிசும் லசித் மலிங்காவும் எப்போது தமிழ்ர்கள் ஆனார்கள் என்று தெரியவில்லை??

Wednesday, March 11, 2009

உயர்ந்து வரும் தமிழ்த் திரைப் படங்களின் தரம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த வலைப் பூவில் பதிப்பிக்க விழைந்துள்ளேன். (என்னவோ இதுக்கு முன்னாடி ஒரு நாலாயிரம் பதிப்பு வெளியிட்ட மாதிரி, அடங்குடா - மனசாட்சி).

சமீப காலமாக தமிழ்த் திரைப்படங்களின் தரம் உயர்ந்து வருவதாக எனக்கு தோன்றுகிறது. உலகத் தரத்தில் சினிமா எடுக்கும் கலையை தமிழ் இயக்குனர்கள் இப்போது கை கொண்டு விட்டதாகத் தெரிகிறது. உதாரணமாக சமீபத்தில் வந்த சில படங்களைப் பார்ப்போம்.

சரோஜா
கிட்டத்தட்ட ஒரே இரவில் நடக்கும் கதை. நாலு நண்பர்கள் கிரிக்கெட் மாட்ச் பார்க்க காரவேனில் (?!) சென்னையிலிருந்து ஹைதராபாத் போகிறார்கள். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மகள் காணாமல் போகிறாள். ஒரிஸ்ஸாவிலிருந்து வரும் ஒரு கெமிக்கல் லாரி விபத்தில் சிக்குகிறது. இந்த மூன்று சம்பவங்களையும் முடிச்சு போட்டு கதையை நகர்த்துகிறார் இயக்குனர். இதில் சிறப்பு அம்சம் நகைச்சுவை. படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் நாகரீகமான நகைச்சுவை வழிந்தோடுவது படத்தை போரடிக்காமல் கொண்டு செல்ல உதவுகிறது. இரவுக் காட்சிகளில் கொஞ்சம் வெளிச்சமாக படம் பிடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
இந்தப் படம் ஆங்கிலப் படம் ஒன்றின் காப்பி என்று பலர் சல்லியடித்துக்(நன்றி: சுஜாதா) கொண்டு இருக்கின்றனர். இருக்கட்டுமே. ஒரு ஆங்கிலப் படத்தை இதை விட சிறப்பாக தமிழ்ப் படுத்த முடியாது என்பது என் கருத்து.

சுப்பிரமணியபுரம்

யதார்த்தமான தமிழ் சினிமாக்களின் வரிசையில் மற்றுமொரு படம். எண்பதுகளில் இருந்த மதுரை சுப்பிரமணியபுரம் தான் கதைக்களம். எண்பதுகளில் மதுரை எப்படி இருந்ததோ அதை அப்படியே காட்ட இயக்குனர் மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். ஸ்டெப் கட்டிங், தாடி, சில்வர் கலர் பஸ், வீடுகளின் வடிவம், பாவடை தாவணி, இளையராஜாவின் பாடல்கள்.. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
நண்பனுக்காக உயிர் கொடுக்கும் நட்பையும், உதட்டில் முத்தமிட்டு விட்டு மரணத்தை முத்தமிடும் காதலர்களையும் பார்த்து பழக்கப் பட்ட நம் கண்களுக்கு, நட்பு-காதல் இவ்விரண்டின் மற்றொரு பக்கமான துரோகத்தை முகத்திலறைந்தாற்போல சொல்லி இருக்கிறார்கள். அதிலும் கவுன்சிலரின் தம்பியாக வரும் அந்த பாத்திரப் படைப்பு மிகவும் அருமை. "உங்களுக்கு எவ்வளவோ செய்யனும்னு சொல்லிட்டே இருப்பார்டா! எல்லாம் போச்சு! அவன் இருக்கிற வரைக்கும் அண்ணனால மாவட்ட தலைவர் ஆக முடியாது" என்று பேசிப் பேசி உரு ஏற்றுகிற அந்த பாத்திரமும் அதை மிகையில்லாமல் செய்திருக்கிற சமுத்திரக்கனியும் சூப்பர்.

இன்னும் வெண்ணிலா கபடிக் குழு, நான் கடவுள் போன்ற திரைப்படங்களோடு சந்திக்கிறேன்.