Tuesday, October 18, 2011

முதலாளித்துவ முட்டாள்தனம்

காவேரிப் பிரச்சனைக்கும், முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கும் தீர்வு சொல்கிறார்களாமாம். விவசாயத்தை நிறுத்திவிட்டால் தண்ணீரே தேவையில்லையாம். காவேரிக்கரைகளையும் காய்ந்து போன வயல்களையும் சுற்றுலாத் தளமாக்கி வெளிநாட்டுக்காரர்களை வரவழைத்து அந்நியச் செலாவணியைப் பெருக்குவார்களாம். 

இப்படிப்பட்ட முதலாளித்துவ சிந்தனையாளர்கள் வருவார்கள் என்பதை அன்றே கண்டறிந்து சொல்லிப் போயிருக்கிறான் எங்கள் தாடிக்கார டி.ராஜேந்த்.. மன்னிக்கவும் திருவள்ளுவர். 

“துப்பார்க்குத் துப்பாயத் துப்பாக்கித் துப்பார்க்குத்
                                  துப்பாய தூஉம் மழை”

இதற்கு என்ன அர்த்தம்??? மழை பொய்க்குங்கால் விவசாயிகளின் வாழ்க்கைத் தூர்த்துப் போய்விடும். விவசாயம் தூர்த்துப் போனால், நாடே பிறநாடுகள் தூ என்று துப்பும் அளவுக்குத் துப்புகெட்டுப் போய்விடும். அதன் பின்னர் இப்படித் துப்புக் கேட்ட துருப்பிடித்த சிந்தனையாளர்கள் துன்னது செரிக்காமல் எதையாவது துப்பிவிட்டுப் போவார்கள். அவர்களை எதிர்க்கத் துப்பாக்கி எடுப்பது தவிற வேற துப்பே கிடையாது. ஆக, துப்பாக்கி முனையில் தான் ஜனநாயகம் பிறக்கிறது என்பதை மாவோவுக்கு முன்பே துப்பிச் சென்றவன் எங்கள் வள்ளுவன். 

நாங்களெல்லாம் இந்த வள்ளுவனின் வழி வந்தவர்கள் என்பதை உங்கள் சிந்தனைச் செருப்புகளை எங்கள் வீட்டு வாசலில் விடும் முன்னரே உங்கள் சட்டைப் பைக்குள் விட்டுக் கொண்டீர்களானால் இப்படி ஒரு சிந்தனை உங்கள் மூளையில் உதிக்கும் முன்னரே முளையிலே கிள்ளியிருக்கும்.

காவேரிப் பிரச்சனையை இந்தியாவின் இரண்டு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனை. அதனைத் தீர்த்து வைக்க அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு என்ன அக்கறை? ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம். காவேரிப் பிரச்சனையைப் பற்றி நாங்கள் கவலைப் பட்டுக் கொள்கிறோம். உங்கள் கோமணத்தை “Occupy Wall Street" என்று எங்கள் உழைக்கும் வர்க்கம் கிழித்துக் கொண்டிருக்கிறார்கள். முடிந்தால் அதைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். 

முதலாளித்துவ முதலைகளைத் திட்டியது போதும். காவேரிப் பிரச்சனைக்கு என்ன செய்யலாம்? 

இப்போதுதான் கர்நாடக (முன்னாள்) முதல்வர் ஒருவரை ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்திருக்கிறார்கள். அவர் மீதான வழக்குகளை தமிழ்நாட்டின் நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைப்போம். அவர் தமிழ்நாட்டுக்கு வாய்தாவுக்கு வரும்போது பிடித்து வைத்துக் கொண்டு, “காவேரியைத் தமிழ்நாட்டுக்கு திறந்துவிடாவிட்டால் எடியூரப்பாவை திறந்து விட்டு விடுவோம்” என்று மிரட்டலாம். மிரட்டலுக்கு அடி பணிந்து அவர்கள் கண்டிப்பாக காவேரியைத் திறந்துவிட்டுவிடுவார்கள். எல்லாவற்றிலும் எடக்குக் கேள்வி கேட்பவர்கள், நம் மாநிலத்தின் முதல்வரும் ஊழல் வழக்குக்காக கர்நாடக நீதிமன்றத்துக்குப் போகவேண்டியிருக்கிறதே, அவரை கர்நாடக நீதிவான்களான வட்டாள் நாகராஜ் போன்றோர் பிடித்து வைத்துக் கொண்டு இதே போல மிரட்ட வாய்ப்பிருக்கிறதே என்று கேட்கலாம். அதைக் குறித்து சந்தோசப் பட வேண்டியதில்லை. ஏனென்றால் நம் மாநில முதல்வர் அங்கே போகப் போவதே இல்லை. 

முல்லைப் பெரியாறுப் பிரச்சனைக்கும் இதே போல தீர்வு காணவேண்டிய நாள் விரைவில் வந்தே தீரும் என்ற நம்பிக்கை அரசியல்வாதிகளின் மேல் இருக்கிறது.

Tuesday, September 27, 2011

இங்கிலீஷ் வாத்தியார்


நானும் செகண்ட் இயர் காலேஜ் போயிட்டு வந்திட்டு இருந்தப்போ நடந்த விசயம்:


எங்க காலேஜுக்கு புதுசா ஒரு இங்க்லீஷ் வாத்தியார் வந்தாரு. நமக்கெல்லாம் இங்க்லீஷ் வாத்தின்னாலே அலர்ஜிதான். ஏன்னா அவங்களோட இங்க்லீஷ் புலமையை எல்லாம் நம்ம கிட்டத்தான் காட்டுவாங்க. அந்த வாத்தி வந்த முதல் நாள், எல்லாரையும் (எங்கக் கூட கெமிஸ்ட்ரி டிபார்ட்மெண்டும் கம்பைண்ட் க்ளாஸ் வருவாய்ங்க) உக்கார வச்சி, “What do you expect from your English Teacher" உங்கள் ஆங்கில ஆசிரியரிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்னு இங்க்லீஷ்லயே ஒரு கட்டுரை எழுதச் சொனனாரு. எல்லாரும் சும்மா உக்காந்திட்டு இருக்கும்போது நான் எனக்குத் தெரிஞ்ச அரைகுறை இங்க்லீஷ்ல எழுதிக் குடுத்தேன். 1. நாங்கல்லாம் கிராமத்துப் பக்கமிருந்து வந்த பயலுகங்கிறதை இங்கிலீஷ் வாத்தி மனசுல வச்சிக்கணும்.
2. எங்களுக்கெலலாம் இங்க்லீஷ் தெரியாதுங்கிறதால இங்க்லீஷ் பாடத்தை தமிழ்ல விளக்கி நடத்தணும்.
3. உங்க இங்க்லீஷ் பேசுற இஸ்டைலை எல்லாம் எங்கக் கிட்டக் காட்டக்கூடாது.
4. கடைசியா, இங்க்லீஷ் வாத்தின்னா வேற்றுக்கிரகவாசி மாதிரி நாங்க பார்க்கக் கூடாதுஇங்கிலீஷ் வாத்தியார் அதை எல்லார் முன்னாடியும் படிச்சிக் காட்டினாரு. தமிழ்லயும் மொழி பெயர்த்துச் சொன்னாரு. சரி படிச்செல்லாம் காட்டுறாரு இவரு நல்லவரா இருப்பார் போலன்னு நினைச்சா..இவரும் புது மொந்தையில பழைய கள்ளுதான். அதே அலட்டல், அதே அல்டாப்பு. அதே இஸ்டைலு. வீட்டுலயே எஸ்ஸேவை எழுதிட்டு க்ளாஸ்க்கு வந்து டிக்டேட் பண்ணுவாரு. அவரு சொல்லச் சொல்ல நாங்க எழுதிக்கணும். கஷ்டமான வார்த்தைக்கு ஸ்பெல்லிங் சொல்லுவாரு. What - இதை “வாட்”னு சொன்னா தப்பும்பாரு. Wவை உய் சவுண்டுலதான் சொல்லணும்பாரு. ”உவாட்” அப்பின்னுதான் சொல்லணும். why - வொய் இல்லை ஒய். இப்பிடி.


ஒரு நாளு டோக்ட் அப்பிடின்னு சொன்னாரு. ஒண்ணும் புரியலை. பக்கத்துல உக்காந்துட்டு இருந்தவன் மூஞ்சியப் பாத்தேன். அவனும் முழிச்சான். பக்கத்து பெஞ்சுல உக்காந்திருந்த எங்க கிளாஸ் ஃபர்ஸ்ட் ரேங்க் ஹோல்டரோட நோட்டை எட்டிப் பார்த்தேன். அவ toact னு எழுதியிருந்தா. இது என்னடா புது வார்த்தையா இருக்கு, அர்த்தம் கேட்ரலாம்னு வாத்தியை நிறுத்தி, “சார் டோக்ட்க்கு ஸ்பெல்லிங் சொல்லுங்க சார்”னு கேட்டேன். நாம எப்பவாவது சமைக்கிறேன்னு கெத்து விட்டுட்டு, தங்கமணிக்கிட்ட “ஏம்மா, இந்த அடுப்பை எப்பிடிப் பத்த வைக்கிறது?”ன்னு கேக்கும்போது உடுவாங்க பாருங்க ஒரு லுக்கு, அதே லுக்கை என்பக்கமா விட்டுட்டு சாக்பீஸை எடுத்தாரு. ஃபர்ஸ்ட் ரேங்க் ஹோல்டர் கேவலமா ஒரு லுக்கு விட்டா. அவரு போர்ட் பக்கம் திரும்பி ஒவ்வொரு எழுத்தா எழுதினாரு T
A
L
K
E
D”ஏன் சார், talked ஐ டாக்டுதானே சொல்லுவோம், நீங்க டோக்ட்னு சொல்றீங்களே?” அப்பிடின்னு வேதாளத்தை விடாத விக்ரமாதித்தன் மாதிரி கேட்டேன். அதுக்கு அவரு, “al வரும்போது ஓ சவுண்டுதான் வரும்” அப்பிடின்னு சொல்லிட்டு கெத்தா க்ளாஸ் மொத்தத்தையும், பொம்பளப் புள்ளைங்க பக்கம் ரெண்டு செகண்ட் பாஸ் பண்ணி, ஒரு லுக்கு வுட்டாரு. 


நாம விடுவோமா? அப்ப “walked இதை எப்பிடி சார் சொல்லுவீங்க?” அப்பிடின்னு மடக்குனோம்ல??ஒரு வழியா அந்த செமஸ்டரை ஒப்பேத்திட்டு அடுத்த செமஸ்டருக்கு வந்தோம். அவரோட போறாத காலம், இந்தத் தடவையும் அவரு எங்க க்ளாஸுக்கு வந்தாரு. இந்தவாட்டி அவருக்கு Prose - Merchant of venice. அந்தப் புத்தகத்தை கட்டாயமா எல்லாரும் வாங்கணும் அப்பிடின்னு சொல்லி ஒரு வாரம் டைம் குடுத்தாரு. எப்பிடியும், அவரு டிக்டேட் பண்ணப் போற எஸ்ஸேவைப் படிச்சிட்டுத்தான் எக்ஸாமுக்குப் போவப் போறோம். இதுல எதுக்கு புக்குக்கு காசை வேஸ்ட் பண்ணனும்னு நாங்க 7 பேரும்(எங்க க்ளாஸ்ல பசங்க மொத்தமே ஏழு பேருதான்ல். எல்லாரும் ஜெலுசில் கைல வச்சிக்கோங்க, பொண்ணுங்க 14 பேரு) புக் வாங்கவே இல்லை.


ஒரு வாரம் போச்சி. அடுத்த வாரம் வந்து புக் எங்கன்னு கேட்டாரு. வாங்கலை சார்னு சொன்னோம். இன்னொரு வாரம் டைம் தர்றேன். வாங்கிட்டு வரலைன்னா க்ளாஸை விட்டு வெளியேத்திருவேன்னு சொன்னாரு. அந்த வாரமும் போச்சி.எங்க கிளாஸ்ல ஒரு பையன் மட்டும் கொஞ்சம் பயந்தவன். அவன் போய் ஒரு புக் வாங்கிட்டு வந்துட்டான். இங்க்லீஷ் வாத்தி வந்து பாத்தாரு, ஏன் புக் வாங்கலைன்னு கேட்டாரு, “வீட்ல கஷ்டம் சார். சாப்பாட்டுக்கே வழி இல்லை. இதுல புக் எல்லாம் புதுசா வாங்க முடியாது”ன்னு சிரிக்காமத்தான் சொன்னேன். பயபுள்ளைக சிரிச்சிக் கெடுத்துருச்சிக. அவரும் சிரிச்சிட்டு, “போனாப் போவுது நாளைல இருந்து பெஞ்சுக்கு ஒரு புக்காவது கொண்டு வாங்க”ன்னு சொன்னாரு.நல்ல புள்ளைங்களா “சரி சார்”னு சொன்னோம். அடுத்த நாளும் வந்திச்சி.(இப்பத் தொடரும் போட்டா நல்லாருக்கும். ஆனா குடுகுடு ஃபோன்லயே என்னையக் கொன்னுருவாருங்கிறதால)இன்னைக்கி நாங்க ஏழு பசங்களும் இடிச்சிப் பிடிச்சி ஒரே பெஞ்ச்ல உக்காந்திருந்தோம். நடுவால வேல்முருகன் வாங்கின புக் மட்டும். வாத்தியார் எங்களைப் பாத்து வெறுத்துட்டாரு.“நீங்க வேணும்னே வெளாடுறீங்க. இப்பிடியே போச்சின்னா உங்க எச்.ஓ.டிக்கிட்ட கம்ப்ளெயிண்ட் பண்ணிருவேன்” அப்பிடின்னு மிரட்டினாரு.அடுத்த நாள் எல்லாரும் புக் வாங்கிட்டு வந்துட்டாய்ங்க. என்னையத் தவிர. வாத்தியார் என்னைய வெளிய போகச் சொன்னாரு. நான் “அட்டெண்டன்ஸ் போடுவீங்களா சார்”னு கேட்டேன்.“வெளிய போறதுக்கெல்லாம் அட்டெண்டன்ஸ் கிடையாது” அப்பிடின்னார். ”சார் நானா வெளிய போகலை. நான் கிளாஸ்ல உக்காந்திருக்க தயாரா இருக்கேன். நீங்கதான் என்னைய வெளிய போகச் சொல்றீங்க. அப்ப அட்டெண்டன்ஸ் போடணும்ல?” அப்பிடின்னேன். (இந்த இடத்துல ஒரு குறிப்பு. இந்த டயலாக் இங்க்லீஷ்லயே நடக்குது)“நான் குடுக்குறது பனிஷ்மெண்ட். அதுனால அட்டெண்டன்ஸ் கிடையாது” அவரு.“எதுக்கு பனிஷ்மெண்ட்?”“நீ புக் வாங்கிட்டு வராததுக்கு”“புக் வாங்குறதும் வாங்காததும் எங்க பிறப்புரிமை (birth right). நீங்க கேள்வி கேக்க முடியாது. பாடம் நடத்தும்போது நான் பாடத்தைக் கவனிக்காம இருந்தாலோ இல்லை கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லலைன்னாலோதான் பனிஷ் பண்ணலாம்” அப்பிடின்னு சொன்னேன்.வாத்தி கடுப்பாகி வெளிய போயிட்டாரு.

Sunday, June 19, 2011

Get up, Stand up! Stand up for the right!

Google Buzzக்கு ஒரு வாரம் விடுமுறை கொடுத்திருந்தேன். அந்த இடைவெளியில் சில பல படங்கள் பார்க்க நேர்ந்தது. அதில் ஒன்றுதான் Fire in Babylon (2010) documentary. மேற்கிந்தியத் தீவுகள் அணியில் வெற்றிச் சரித்திரத்தை எடுத்துச் சொல்லும் ஆவணப்படம்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி ஒரு தனி நாடல்ல. பல தனித்தனி நாடுகள் கூட்டாகச் சேர்ந்த அணி. ஒவ்வொரு நாடும் கலாச்சாரம், மொழி, உணவுப் பழக்கம் என தனித் தன்மை வாய்ந்தவை. இவை அனைத்தும் கூட்டாகச் சேர்ந்து ஒரு அணியாக கிரிக்கெட் (மட்டும்) விளையாட என்ன காரணம்? இவர்களை ஒன்றிணைப்பது எது? இந்த ஆவணப்படம் அதைச் சொல்லவும் முற்படுகிறது.

இந்த மேற்கிந்தியத் தீவுகள் 1960களின் இறுதி வரை ஐரோப்பிய சக்திகளின் ஆதிக்கத்தில் இருந்து வந்தவை (குறிப்பாக இங்கிலாந்து). 1960களின் இறுதியில்  சுதந்திரம் பெற்றன. இவர்களை ஆண்ட இங்கிலாந்து இவர்களுக்கு தந்துவிட்டுப் போனவற்றில் ஒன்று கிரிக்கெட். இந்தியாவைப் போன்றே இவர்களும் ஆரம்பத்தில் அதிக வெள்ளையர்களுடன் குறைந்த எண்ணிக்கையில் கறுப்பினத்தவர் இணைந்து ஆட ஆரம்பித்துப் பின்னர் அதிக கறுப்பினத்தவர் குறைந்த வெள்ளையர்கள் என்று மாறியது. பல நாடுகள் சுதந்திரம் பெற்றதும் முழுக்க முழுக்கக் கறுப்பினத்தவர் மட்டுமே இருந்தனர்.

ஆரம்பத்தில் மேறிகிந்தியத் தீவுகள் அணி கலிப்ஸோ அணி என்றழைக்கப்பட்டது. ஒரு நாள் சேம்பியன்கள் போல ஆடுவார்கள். அடுத்த நாள் பள்ளிச் சிறுவர்கள் போல. ஒரு ஸ்திரத்தன்மை இல்லாத அணியாகவே இருந்து வந்தது.

அப்போது அணிக்குத் தலைமை தாங்க வந்தார் க்ளைவ் லாயிட். இவரது தலைமையில் 1975ம் ஆண்டு நடந்த முதல் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்த அணி அதே ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் சென்றது. அன்றைய ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் டென்னிஸ் லில்லி, ஜெஃப் தாம்சன் (லில்லி-தாம்மோ என்றழைக்கப்பட்டனர்). இருவரும் படு வேகமாகப் பந்து வீசக்கூடியவர்கள். கடைசி வரிசை பேட்ஸ்மென்களுக்கு பவுன்சர் போடுவதில் வல்லவர்கள். இவர்களின் நோக்கம் எதிர் பேட்ஸ்மேனை அவுட்டாக்க வேண்டும் அல்லது அடிவாங்க வைக்கவேண்டும் என்பதாகவே இருக்கும். பந்து வீச்சினால் வீழ்த்த முடியாதவர்களை வம்பிழுத்து வீழ்த்துவார்கள். இவர்களுக்கு முன்னால் நிற்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் 5-1 என்ற கணக்கில் அந்தத் தொடரை இழந்தது. இந்தத் தொடரின் போது வெஸ்ட் இண்டீஸின் கிரிக்கெட் மட்டும் சோதனைக்குள்ளாக்கப்படவில்லை. அவர்களின் மீது இனவெறி கமெண்டுகளும் ஏவி விடப்பட்டன. ப்ளாக் பாஸ்டர்ட், Go back to the trees where you come from என்றெல்லாம் ஆஸ்திரேலிய வீரர்களும், பார்வையாளர்களும் இவர்களை எள்ளி நகையாடினார்கள். லில்லி-தாம்மோவின் பந்துவீச்சால் உடலிலும், வீரர்களின் இனவெறி கமெண்டுகளால் மனதிலும் அடி வாங்கித் திரும்பிய லாயிட் திருப்பிக் கொடுக்க முடிவு செய்தார். Give a taste of their own madicine - என்று சொல்வார்களே அதைச் செய்ய முடிவு செய்தார்.

ஆண்டி ராபர்ட்ஸையும், மைக்கேல் ஹோல்டிங்கையும் பவுன்ஸர் வீசப் பயிற்சி எடுக்கச் செய்தார். அவரது யுத்தியைச் சோதித்துப் பார்க்கும் வண்ணம் வந்து சேர்ந்தது இந்திய அணி. வெஸ்ட் இண்டீஸ் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. ஒரு கட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் கவாஸ்கர் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர்களின் உடம்பைப் பதம் பார்க்கும் பவுன்ஸர் பந்து வீச்சை வெளிப்படையாகக் குறை சொன்னதும் நடந்தது.

தங்கள் திட்டம் வேலை செய்வதைப் புரிந்துகொண்டு உத்வேகத்துடன் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்ததாகச் சுற்றுப்பயணம் செய்தது இங்கிலாந்துக்கு. எரிகிற தீயில் எண்ணை ஊற்றுவதுபோல, இங்கிலாந்து கேப்டன் டோனி க்ரெய்க், “நாங்கள் அவர்களை மண்டியிடச் செய்வோம்” என்று டிவியில் பேட்டி கொடுத்தார். க்ளைவ் லாயிட் முதல் போட்டிக்கு முன்னால் ட்ரெஸ்ஸிங் ரூமில் சொன்னது - நான் கொடுக்க வேண்டிய பெப் டாக்கை எதிரணி கேப்டன் டிவியில் கொடுத்துவிட்டார். விளைவு, 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் தொடரைக் கைப்பற்றியது.

வெஸ்ட் இண்டீஸின் வீரர்கள் நன்றாக ஆடினாலும், அவர்களுக்கு சரியான சம்பளம் கொடுக்க வெஸ்ட் இண்டீஸ் போர்ட் தயங்கியது. இதனால் நொந்து போயிருந்த வீரர்களுக்குக் கை கொடுக்க வந்ததுதான் கெர்ரி பேக்கரின் வேர்ல்ட் சீரிஸ். இது நம் நாட்டில் ஜீ டிவி உரிமையாளர் துவங்கிய ஐ.சி.எல் போல, ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்ட் தர மறுத்த டிவி உரிமைக்காக டிவி உரிமையாளரான கெர்ரி பேக்கர் துவங்கிய கிரிக்கெட் போட்டிகள் இவை. ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், ரெஸ்ட் ஆஃப் த வேர்ல்ட் என மூன்று அணிகள். இந்தத் தொடர் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு பணம் மட்டும் கொண்டு வரவில்லை. அடுத்தடுத்து இருந்த போட்டிகளால் ஃபிட்னெஸ்ஸும் வந்தது.

இத்தனை ஆண்டுகளாக மதிக்கப்படாமல், அல்லது மட்டம் தட்டப்பட்டு வரப்பட்ட ஆப்ரிக்க இசை, கலாச்சாரம் வெஸ்ட் இண்டீஸ் அணியில் வெற்றியால் உலகத்தால் கவனிக்கப்படலாயிற்று. பாப் மார்லி போன்ற பாப் இசைப் பாடகர்கள் கறுப்பின சுதந்திரத்துக்காக குரல் கொடுக்கலாயினர். பாப் மார்லியின் புகழ்பெற்ற பாடல் தான் இந்த இடுகையில் தலைப்பு. விவியன் ரிச்சர்ட்ஸுக்குப் பிடித்த பாடல் வரிகள்.

விவியன் ரிச்சர்ட்ஸ் கறுப்பின மக்களின் கலாச்சாரத்தைப் பறை சாற்றுபவராகப் பார்க்கப்பட்டார். தென்னாப்ரிக்காவின் இனவாதத்தால் அந்த நாட்டு கிரிக்கெட் அணி தடை செய்யப்பட்டிருந்த காலத்தில், கெர்ரி பேக்கரின் வெற்றியைப் பார்த்த தென்னாப்பிரிக்க அரசு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சிலரை விலை பேசி கிரிக்கெட் விளையாட அழைத்துச் சென்றனர். அவர்களின் முக்கிய குறி விவியன் ரிச்சர்ட்ஸாக இருந்தது. ஒரு மில்லியனுக்கும் மேல் பணம் கொடுக்கத் தயாராக இருந்தும், ரிச்சர்ட்ஸ் அதை நிராகரித்தார் (நாட்டுக்குக் கட்ட வேண்டிய வரியைக் குறைக்க தன்னை நடிகராகவும் கருதச் சொல்லி கேஸ் போடுபவர்களையே நாம் பார்த்திருக்கிறோம்). வியட்நாம் மீது அமெரிக்கா தொடுத்த போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து படையில் சேர மாட்டேன் என்று மறுத்த முகமது அலியின் வீரத்துக்கு நிகராகப் பேசப்பட்டது. விவியன் ரிச்சர்ட்ஸ், தனது கையில் மூவண்ண பட்டை ஒன்றை கட்டியிருப்பார். அதன் வண்ணங்கள் பச்சை - ஆப்ரிக்காவின் வளமையைக் குறிப்பது, தங்க வண்ணம் - கொள்ளையடிக்கப்பட்ட ஆப்ரிக்காவின் வளத்தைக் குறிப்பது, சிவப்பு - முன்னோர்கள் சிந்திய ரத்தத்தைக் குறிப்பது. லாயிடுக்குப் பிறகு கேப்டன் பதவியை ஏற்றுக் கொண்ட ரிச்சர்ட்ஸும் தங்களது ஆதிக்கம் குறையாமல் பார்த்துக் கொண்டார்.

1976ல் ஆரம்பித்த ஆதிக்கம் 1991 வரை நீடித்தது. 15 வருடங்கள் எந்தத் தொடரையும் இழக்காத சாதனை இதுவரை உடைக்கப்படவில்லை. ஆஸ்திரேலியாவும் ஆதிக்கம் காட்டியிருக்கிறது. ஆனால், மேற்கிந்தியத் தீவுகளின் ஆதிக்கத்தை அத்தனை பேரும் விரும்பினார்கள்.

இன அவமதிப்பு செய்யப்பட்டதற்கு வார்த்தைகளால் பதில் அளிக்காமல் விளையாட்டால் பதில் அளித்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஒரு ராயல் சல்யூட் இந்த ஆவணப் படம்.

கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமில்லாமல், அத்தனை பேரும் பார்க்க வேண்டிய ஒரு ஆவணப்படம்.

Sunday, April 10, 2011

கனவு தேசம் - 6

கார் வாங்குவது வரை பார்த்தாயிற்று. அதை விட அத்தியாவசியமான ஒன்று இருக்கிறது. அதுதான் செல்ஃபோன். செல்ஃபோன் பற்றி பார்க்கும் முன்பு க்ரெடிட் ஹிஸ்டரி என்ற வஸ்துவைப் பார்த்துவிடலாம்.

அமெரிக்காவில் வசித்து வருபவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கக் கூடிய ஒன்று இருக்கிறதென்றால் அது க்ரெடிட் ஹிஸ்டரி. அமெரிக்காவில் இதை க்ரெடிட் ஸ்கோர் என்ற எண்ணின் மூலமாகச் சொல்வார்கள்.

க்ரெடிட் ஸ்கோர் என்பது என்ன? ஒரு நபரின் Credit Worthiness - கடன் வாங்கும் தகுதியை நிர்ணயம் செய்வது இந்த க்ரெடிட் ஸ்கோர். கடன் அட்டை அல்லது கடன் (கார், வீடு முதலிய) வழங்கும் வங்கிகள், தொலைபேசி நிறுவனங்கள், செல்பேசி நிறுவனங்கள், மின்சாரம் வினியோகம் செய்யும் நிறுவனங்கள், கார் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனங்கள் இவை அனைத்தும் தங்கள் சேவையை ஒருவருக்கு வழங்கும் முன்பு அவரது க்ரெடிட் ஸ்கோரைப் பார்த்துவிட்டு அதற்கு ஏற்ற மாதிரிதான் சேவையை வழங்கும். நல்ல க்ரெடிட் ஸ்கோர் இருந்தால் குறைந்த வட்டிக்கு கடன் கிடைக்கும், அதிக க்ரெடிட் லிமிட்டோடு கடன் அட்டை கிடைக்கும், டெபாசிட் இல்லாமல் செல்ஃபோன் மற்றும் தொலைபேசி நிறுவனங்கள் தங்கள் சேவையை வழங்கும், குறைந்த ப்ரீமியத்தில் இன்ஷ்யூரன்ஸ் கிடைக்கும். ஆக ஒருவர் நல்ல க்ரெடிட் ஹிஸ்டரியை வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகிறது.

இந்த கிரெடிட் ஹிஸ்டரியை யார் பராமரிக்கிறார்கள்? அமெரிக்காவில் இருக்கும் அத்தனை பேரின் பொருளாதார பரிமாற்றங்கள் அனைத்தையும் அவர்கள் சேமித்து வைக்க வேண்டுமே? இதைச் செய்பவர்கள் தான் கிரெடிட் பீரோக்கள். அமெரிக்காவில் இருக்கும் அத்தனை சோசியல் செக்யூரிட்டி எண் உள்ளவர்களின் க்ரெடிட் நிலவரத்தை சேமித்து வைத்து வருவார்கள். இவர்களிடமிருந்தே கிரெடிட் ஸ்கோர் பெறப்படும்.

சரி, கிரெடிட் ஹிஸ்டரி எப்படி கட்டியமைப்பது?

நல்ல க்ரெடிட் ஹிஸ்டரி என்பதை, கடன் வாங்காமலே இருந்தால் கட்டமைக்க முடியாது. வாங்கிய கடனை சரியான நேரத்தில் திருப்பிக் கட்டியிருந்தாலே நல்ல ஹிஸ்டரி கட்டமைக்க முடியும்.

அமெரிக்காவில் சென்று இறங்கிய பட்சத்தில் கடன் கொடுக்க யார் தயாராக இருப்பார்கள்? கடன் வாங்காமல் கட்டமைக்க முடியாதென்றால் புதிதாக அமெரிக்கா செல்பவர் எப்படி க்ரெடிட் ஹிஸ்டரி உருவாக்குவது? இப்படிப்பட்டவர்களுக்காகவும், அதல பாதாளத்தில் விழுந்து போன க்ரெடிட் ஸ்கோரை சீரமைக்க முயற்சிப்பவர்களுக்காகவும் வங்கிகள் கொண்டு வந்ததுதான் Secured Credit Card. இது வழக்கமான க்ரெடிட் அட்டை போல எல்லா இடங்களிலும் உபயோகிக்க முடியும். மற்ற அட்டைகளுக்கும் இதற்கும் இருக்கும் ஒரு வித்தியாசம், இந்த அட்டை பெறுவதற்கு ஒரு செக்யூரிட்டி டெபாசிட் வங்கியில் ஏற்படுத்த வேண்டும். அந்த டெபாசிட் தொகையைப் பொறுத்து க்ரெடிட் லிமிட் வழங்கப்படும். அந்த அட்டையில் உங்கள் நடவடிக்கைகள் மாதாமாதம் க்ரெடிட் பீரோக்களுக்கு அனுப்பி வைக்கப்படும். சிறிது காலம் க்ரெடிட் ஹிஸ்டரி கட்டமைத்த பின்னர் அடுத்த கட்டமாக unsecured credit card - எதாவது ஒரு வங்கியில் விண்ணப்பிக்க வேண்டும். ஒருவேளை எதாவது ஒரு வங்கி உங்கள் விண்ணப்பத்தை நிராகரித்து விட்டால், அடுத்தடுத்து பல வங்கிகளில் முயற்சிக்காதீர்கள். அது உங்கள் கிரெடிட் ஸ்கோரை இன்னும் நாசப்படுத்தும். நிராகரிக்கப் பட்டால் இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்கு உங்கள் செக்யூர்ட் க்ரெடிட் கார்டை உபயோகப் படுத்துங்கள். அதன் பிறகு இன்னொரு வங்கியில் முயற்சி செய்யுங்கள்.

Digital Credit Unit - DCU என்று ஒரு வங்கி இருக்கிறது. இதை Desi Credit Union என்று கேலியாகச் சொல்வார்கள். இந்த வங்கியில் கணக்கு துவங்கினால், $3000 டாலர் கிரெடிட் லிமிட்டோடு ஃப்ரீ கிரெடிட் கார்டு தருவார்கள். குறைந்த வட்டியில் $25000 வரை கார் லோனும் தருவார்கள். இந்த வங்கியின் மூலம் பயனடைந்த தேசிகள் அதிகம்.

 கிரெடிட் ஸ்கோரை பாதிக்கக் கூடிய பரிமாற்றங்கள் என்ன என்ன? அவற்றை எப்படி சரி செய்வது?

கிரெடிட் ஸ்கோரை FICO Score என்று சொல்வார்கள். கீழ்க்கண்ட பகுதிகள் கிரெடிட் ஸ்கோரைத் தீர்மானிக்கின்றன.

35% - Payment History - அதாவது கிரெடிட் கார்ட் பில், செல்ஃபோன் பில், தொலைபேசி பில், மெடிக்கல் பில் - போன்றவற்றை நேரத்துக்கு கட்டி வருவது. எதாவது பில் ட்யூ டேட் தவற விட்டால் அது கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். நேரா நேரத்துக்கு பில் கட்டுவது, கிரெடிட் ஸ்கோரை உயர்த்தும்.
30% - Credit Utilization - அதாவது, உங்கள் ரிவால்விங் கிரெடிட்டில் எந்த சதவீதத்தை நீங்கள் உபயோகப் படுத்தி உள்ளீர்கள் என்பது. உதாரணமாக உங்கள் கிரெடிட் கார்டின் லிமிட் $1000 என்று வைத்துக்கொள்வோம். ஒரு மாதத்துக்கு நீங்கள் $800 க்கு அந்த அட்டையை உபயோகிக்கிறீர்கள் என்றால் 80% உங்கள் ரிவால்விங் கிரெடிட்டை உபயோகிக்கிறீர்கள் என்று அர்த்தம். இது டேஞ்சர். இந்த சதவீதத்தை 50%க்குக் கீழ் வைத்திருப்பது நலம்.
15% - Length of Credit History - எத்தனை வருடங்களுக்கு உங்கள் கிரெடிட் ஹிஸ்டரி இருக்கிறது என்பது. அதிகமாக இருப்பது நல்லது.
10% - Types of Credits used - என்ன வகையான கடன்கள் வைத்திருக்கிறீர்கள் என்பது. பலவகையான கடன்கள் வைத்திருப்பது கிரெடிட் ஸ்கோரை உயர்த்த உதவும்
10% - Recent Search for credit - உங்கள் கிரெடிட் ஹிஸ்டரியைப் பற்றிய விசாரணைகள். நீங்கள் புது கடனுக்கு விண்ணப்பிக்கும்போதெல்லாம் இங்கே வந்து எண்ட்ரிகள் விழும். அதிக விசாரணைகள் இருப்பது கேடு. நீங்களே உங்கள் கிரெடிட் ஸ்கோரை விசாரிப்பது இதில் வராது.

ஆக மேலே உள்ளவற்றை சரியாகக் கண்ட்ரோல் செய்தால் நல்ல க்ரெடிட் ஸ்கோரோடு பிழைக்கலாம்.

அமெரிக்க வாழ்க்கை கிரெடிட் ஸ்கோரோடு பின்னி பிணைக்கப்பட்டது. ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு $250 மெடிக்கல் பில் கட்ட விட்டுவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்போது வீடு வாங்கலாம் என்று லோன் அப்ளை செய்தால், நீங்க அஞ்சு வருசத்துக்கு முன்னாடி $250 கட்டலை, அதைக் கட்டிட்டு வாங்க லோன் தர்றோம் என்று சொல்வார்கள். அதனால் இதில் தப்பெதுவும் செய்யாமலிருப்பது நலம்.

இப்போது செல்ஃபோன் வாங்கும் விசயத்துக்கு வருவோம். செல்ஃபோன் ப்ளான் வாங்க வேண்டுமென்றால் நல்ல கிரெடிட் ஹிஸ்டரி தேவை. கிரெடிட் ஹிஸ்டரி இல்லையென்றால் டெபாசிட் கட்டச் சொல்வார்கள். பெரும்பாலான இந்தியர்கள் வந்து இறங்கியதும் டெபாசிட் கட்டி செல்ஃபோன் வாங்கிவிடுவார்கள். (நான் 6 மாதங்கள் வரை ப்ரிபெய்ட் ஃபோன் வைத்திருந்தேன்).

செல்ஃபோன்கள் அமெரிக்காவில் மிகவும் சல்லிசாகக் கிடைப்பதை வெளிநாட்டில் இருப்பவர்கள் பார்த்திருக்கலாம். ஐஃபோன் 4 $200க்கு, HTC HD7 $0க்கு என்றெல்லாம் கிடைக்கும். பெரும்பாலான ஃபோன்கள் இலவசமாகவே கிடைக்கும். ஆனால் அதற்குப் பின்னால் இருக்கும் கேட்ச் தான் முக்கியம். பெரும்பாலான ஃபோன்கள் நெட்வொர்க் ப்ரொவைடர்களோடு பிணைக்கப் பட்டிருக்கும். அந்த ஃபோன்களை Locked Phones என்று அழைப்பார்கள். உதாரணமாக ஐஃபோனை AT&T நிறுவனத்துடன் மட்டுமே உபயோகிக்க முடியும். (இப்போது Verizon நிறுவனத்தோடும் உபயோகிக்கும் வண்ணம் கொண்டு வந்துள்ளார்கள்). இந்த ஃபோன்களை குறைந்த விலையில் வாங்குவதற்கு நெட்வொர்க் நிறுவனங்களோடு காண்ட்ராக்ட் போடவேண்டும். குறைந்த பட்சம் ஒரு வருடத்திலிருந்து 2 வருடங்கள் வரை அந்த கம்பெனியுடனே இருப்பேன் என்று ஒப்பந்தம் போடவேண்டும். இந்த ஒப்பந்தத்தை முறித்தால் பெனால்டி கட்ட வேண்டியதோடு கிரெடிட் ஹிஸ்டரியையும் பாதிக்கும்.

$200 க்கு ஐஃபோன் வாங்கி இந்தியாவுக்குக் கடத்த இயலாது. அப்படியே கடத்திக் கொண்டு வந்தாலும், ஃபோனை அன்லாக் செய்து உபயோகிக்க வேண்டும். அன்லாக் செய்து உபயோகிப்பதில் இருக்கும் வம்பு என்னவென்றால், சாஃப்ட்வேர் அப்டேட் செய்ய முடியாது. செய்தால் மறுபடியும் லாக் ஆகிவிடும். சாம்சங் கேலக்ஸி என்ற ஆண்ட்ராய்ட் ஃபோனும் வைத்திருக்கிறேன். அதை அப்க்ரேட் செய்யவே முடியவில்லை. சாம்சங்கைக் கேட்டால் AT&Tயைக் கேள் என்கிறார்கள். AT&Tயைக் கேட்டால் சாம்சங்க் இன்னும் அப்ட்டேட்ட OS அனுப்பவில்லை என்கிறார்கள்.  

இரண்டு வருடங்கள் மாதம் வாய்ஸ் ப்ளான் குறைந்த பட்சம் $40ம், டேட்டா ப்ளான் $15ம் கட்ட வேண்டும். அதில் செல்ஃபோனுக்குக் குறைத்த காசைப் பிடித்துவிடுவார்கள்.

மேலும் பார்ப்போம்

Wednesday, March 9, 2011

கூகுள் 2-Step Verification

இப்போது இணையத்தில் மற்றவர்களின் பாஸ்வேர்டைத் திருடுவது, திருடி ஈமெயில்களை அழிப்பது, அல்லது திருடப்பட்ட ஈமெயிலில் இருந்து அவரது நண்பர்களுக்கு தப்புத் தப்பான ஈமெயில்கள் அனுப்புவது என்பது பரவலாகி வருகிறது.

நம்மில் பலர் தொழில்நிமித்தமான மடல்களைக் கூட ஜிமெயில் மூலம் பரிமாற்றம் செய்துகொள்கிறோம். அப்படி இருக்கும்போது நம் பாஸ்வேர்டை ஒருவர் திருடி விட்டால் அது என்னமாதிரியான பின் விளைவுகளைக் கொண்டு வரும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

நம் ஜிமெயில் அக்கவுண்டை வேறு யாராவது Access செய்ய முயன்றால் அதைக் கண்டு பிடிக்க ஜிமெயில் வழிகள் பல வைத்திருக்கிறது. உங்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலமாக எச்சரிக்கை வழங்கவும் முடியும். இப்போது அதன் அடுத்தக் கட்டமாக தடுப்பதற்கான வழிமுறையே இந்த 2-Step Verification.

எப்படி இதை நம் ஜிமெயில் அக்கவுண்டில் ஏற்றுவது? ஸ்டெப்-பை-ஸ்டெப்பாகப் பார்ப்போம்.

1. முதலில் உங்கள் ஜிமெயில் பக்கத்தில் வலது மேல் மூலையில் உள்ள பல் சக்கரம் போன்ற ஐகானை அழுத்துங்கள்.


அழுத்தியவுடன் வரும் பாப்-அப் மெனுவில் Account Settings ஐத் தேர்ந்தெடுக்கவும். இப்போது ஜிமெயில் தனி டேபில் உங்கள் அக்கவுண்ட் பக்கத்தைத் திறக்கும்.


Security என்ற பிரிவின் கீழ் Using 2-Step Verification என்ற link-ஐ Click செய்யவும்.

இந்தப் பக்கத்தில் கீழே உள்ள Setup 2-Step Verification என்ற பட்டனை அழுத்தவும்.


இந்தப் பக்கத்தில் நீங்கள் ஏதாவது ஒரு ஃபோனைத் தெரிவு செய்ய வேண்டும். உங்களிடம், ஆண்ட்ராய்ட், ஐ-ஃபோன் அல்லது ப்ளாக்பெர்ரி இருக்கும் பட்சத்தில் Google Authentication என்னும் APP ஒன்றை நிறுவி அதன் மூலம் Verification செய்துகொள்ளலாம். பெரும்பான்மையானவர்கள் மற்ற ஃபோன்களை வைத்திருப்பதால், அந்த முறையைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

மேலே தெரியும் ட்ராப் டவுன் பாக்ஸில் Other - Use other phones என்பதைத் தெரிவு செய்யவும்.


Countryஇல் உங்கள் நாட்டைத் தேர்ந்தெடுத்துவிட்டு ஃபோன் நம்பரில் உங்கள் செல்ஃபோன் நம்பரைத் தரவும். நீங்கள் எஸ்.எம்.எஸ்ஸாக அல்லது ஆட்டோமேட்டட் வாய்ஸ் காலாக உங்கள் வெரிஃபிகேஷன் கோடைப் பெறலாம்.

உங்கள் ஃபோன் நம்பரை உள்ளிட்டதும் Send Code என்றுள்ள அந்த பட்டனை அழுத்தவும். இப்போது உங்களுக்கு எஸ்.எம்.எஸ்ஸாக ஒரு நம்பரை கூகுள் அனுப்பி வைக்கும். அந்த நம்பரை Code என்ற பெட்டியில் உள்ளிட்டு வெரிஃபை பட்டனை அழுத்தவும்.


கூகுள் நீங்கள் உள்ளிட்ட எண்ணை சரி பார்த்ததும் Next என்ற பட்டன் Enable ஆகும்.


இப்போது Next பட்டனை அழுத்தவும்.இப்போது கூகுள் உங்களுக்கு Back-up வசதி ஒன்றை (ஒரு வேளை நீங்கள் உங்கள் ஃபோனைத் தொலைத்துவிட்டால் அல்லது திருடு போய்விட்டால் என்ன செய்வது? அதற்காகவே இந்த back-up. Next பட்டனை அழுத்தவும்.

அடுத்த பக்கத்தில் கூகுள் சில எண்களைத் தரும். அந்த எண்களைப் பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள ஒரு பட்டனும் இருக்கும். பிரிண்ட அவுட் எடுத்து வைத்துக் கொண்ட பிறகு Next பட்டனைத் தட்டவும்.


இனி அடுத்த பக்கத்தில் Application Specific Password - ஃபோனில் கூகுள் மெயிலைப் பெறுபவர் என்றாலோ இல்லை ஜி-டாக் உபயோகிப்பவர் என்றாலோ - செட் செய்ய வேண்டியதன் அவசியத்தை விளக்கும்.


இந்தப் பக்கத்திலும் Next பட்டனை அழுத்திய பிறகு,  கீழே உள்ள பக்கத்தைக் காட்டும்.


இந்தப் பக்கத்தில் உள்ள Turn On 2-Step Verification என்ற பட்டனை அழுத்தினால் உங்கள் அத்தனை கூகுள் சார்ந்த பக்கங்களும் log-out ஆகிவிடும். இந்த முறை நீங்கள் உங்கள் பயனர் பெயர், பாஸ்வேர்டை உள்ளிட்டதும், உங்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் மூலம் ஒரு Code-ஐ அனுப்பும். அந்த Code-ஐ அடுத்த பக்கத்தில் உள்ள ஒரு பெட்டியில் இட்டதும் உங்கள் ஜிமெயில் திறக்கும்.

நீங்களே உபயோகப் படுத்தும் கணினி என்ற பட்சத்தில் 30 நாட்களுக்கு இந்த Code-ஐ நினைவில் வைத்துக் கொள் என்ற ஆப்ஷனைத் தெரிவு செய்தால் அடுத்த முப்பது நாட்களுக்கு உங்களிடன் கோட் நம்பரைக் கேட்காது. அப்படித் தெரிவு செய்யாத பட்சத்தில் ஒவ்வொரு முறை ஜிமெயிலில் லாகின் செய்யும் போதும், ஒரு எஸ்.எம்.எஸ் வரும், ஒரு புது கோட் நம்பர் இருக்கும்.

இதன் மூலம் உங்கள் பாஸ்வேர்ட் தெரிந்தால் மட்டும் ஒருவரால் உங்கள் கணக்கில் லாகின் செய்ய முடிவதைத் தடுக்க முடியும்.

Safe Browsing....

Monday, February 7, 2011

என் பேரை மாத்த நீ யாரு மேன்?

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் வாழும் என்னைப் போன்றோர் பலருக்கு இருக்கும் ஒரு சொல்லவொணாத் துயரம் பெயரை உச்சரிக்கச் சிரமப்படும் வெளிநாட்டினர். ரவியை ராவி என்றும், ஹரியை ஹேரி என்றும் கூசாமல் உச்சரிப்பார்கள்.

இதில் நம் ஆட்களையும் சொல்லவேண்டும். தன் அப்பா அம்மா வைத்த ஒரு பெயரைக் கொலை செய்கிறார்களே என்ற எண்ணம் இல்லாமல் திருஞானசம்மந்தம் என்ற அருமையான பெயரை திரு என்று சுருக்கி அழைக்க வைக்கக் கூட முயற்சிக்காமல் க்ரிஸ் என்று அழைத்தாலும் சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருப்பவர்களை என்னவென்று சொல்வது?

என் நண்பர் ஒருவர் அவர் மகனின் விக்னேஷ் என்ற பெயரை vignesh என்று ஸ்பெல்லாமல் viknesh என்று ஸ்பெல்லியிருந்தார். ந்யூமராலஜியா என்று கேட்டதற்கு, இல்லை, இங்கெ பெயரைச் சுருக்கி அழைப்பது இவர்களின் வழக்கம். vig என்று அழைத்தால் நன்றாக இருக்காது, vik என்று அழைத்தால் பரவாயில்லை அல்லவா, அதான் என்றார். இன்னொரு குடும்பம் ஸ்ரீஹரி என்ற பெயரை பையனே ஸ்ரீஹாரி என்று சொல்லவும், ரிதன்யா என்ற பெயரைப் பெண்ணே ரிடான்யா என்று சொல்லவும் பழக்கிக் கொடுத்திருக்கின்றனர்.

நானெல்லாம் என் பெயரை சொல்லத் திணரும் போது பத்து நிமிடம் செலவழித்தாவது தினேஷ் என்று சொல்லவைத்துவிடுவேன். ஓரிருவர் உன்னை டின் என்று அழைக்கலாமா என்று கேட்கும்போதும் இல்லை தினேஷ் என்றே அழையுங்கள் என்று கட்டாயப்படுத்தியிருக்கிறேன்.

எனக்குத் தெரிந்தவர் ஒருவர். அவர் பெயர் விஜயஹரன். புதிதாகச் சேர்ந்த அவரது மேனேஜர் ஒரு வெள்ளைக்காரன். அவன் பெயர் ஜான். அவன் இவரது பெயரை அழைக்க சிரமப் பட்டுக் கொண்டு “ஐ ஏம் கோயிங் டு ரீனேம் யு டு ஜோ டு மை கன்வீனியன்ஸ்” என்று சிரித்துக் கொண்டே சொல்லியிருக்கிறான். இவரும் ஒன்றும் சொல்லாமல் இருந்திருக்கிறார்.

அடுத்த நாள் காலை அவன் இவரிடம் வந்து “குட் மார்னிங் ஜோ” என்று நமுட்டுச் சிரிப்பு சிரிக்கவும், இவர் பதிலுக்கு “குட் மார்னிங் சுப்ரமணியம்” என்று சொல்லியிருக்கிறார். அவன் பேஸ்தடித்து “நோ நோ மை நேம் இஸ் ஜான்” என்று சொல்ல, அதற்கு இவர் “யா ஐ நோ. பட் ஐ ரீனேம்ட் இட் டு மை கன்வீனியன்ஸ்” என்று சிரிக்காமல் சொல்லியிருக்கிறார். அதன்பிறகு, அவன் கஷ்டப்பட்டு அவரது பெயரை ப்ராக்டீஸ் செய்து விஜயஹரன் என்றே அழைத்திருக்கிறான்.

டிஸ்கி 1: வெள்ளைக்காரனை அவன் என்றும் நம்மாளை இவர் என்றும் அழைத்தது குழப்பம் வராமலிருக்கவேயன்றி ரேஸிசம் எதுவும் இல்லை என்று அறிக.

டிஸ்கி 2: இது கால் செண்டர் போன்ற வேலை நிமித்தம் பெயர் மாற்றியே ஆகவேண்டியவர்களுக்கானது இல்லை என்றும் அறிக. 

Saturday, January 29, 2011

இலங்கையைப் புறக்கணிப்போம் #tnfisherman

விளையாட்டு வேறு, அரசியல் வேறு என்று நம்பிக்கொண்டிருந்தவன்தான் நான்.

என்னைச் சுற்றி நடக்கும் விடயங்களைப் பார்த்துப் பதைத்து, கவலை கொண்டு, கண்கள் கலங்கி, கண்ணீர் விட்டு அழுது அதன் பின் அதனை மறந்தும் போனவன் நான்.

2010 ஐ.பி.எல் போட்டிகளுக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி இலங்கை வீரர்கள் திலன் துஷாரவையும், பெரேரவையும் ஏலத்தில் எடுத்துக் கொண்டு வந்ததைக் கண்டித்து சென்னை அணியின் வலைமனையில் நம் எதிர்ப்பைப் பதிவோம் என்று மின்னஞ்சல் மூலம் கோரிக்கை விடுத்த நண்பர்களிடம் விளையாட்டையும் அரசியலையும் சேர்க்காதீர்கள் என்று சண்டை போட்டவன் நான்.

இயக்குநர் ராமின் எழுதும் காட்சி வலைப்பூவில் சக்தி எழுதிய இந்தக்கட்டுரையை வாசித்த பின்னும் தொடர்ந்து ஐ.பி.எல் பற்றி எழுதியவன் நான்.

நவம்பர் 27, 2008. பாகிஸ்தானில் இருந்து வந்ததாக நம்பப்படும் தீவிரவாதிகள் 14 பேர் மும்பை நகரத்தை சில நாட்கள் ஸ்தம்பிக்கச் செய்தனர். உயிர், பொருள் இழப்புகள் ஏற்பட்டன. பொங்கி எழுந்தது இந்தியா. பாகிஸ்தானைக் குற்றம் சொல்லி உலக நாடுகளிடம் ஒப்பாரி வைத்தது, இந்நிகழ்வில் பாகிஸ்தான் அரசாங்கம் எந்த அளவுக்கு ஈடுபட்டது என்பதற்கு சான்றுகள் இல்லாத போதிலும். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் விளையாட்டு வீரர்களுக்கான விசா வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தியது. பாகிஸ்தான் செல்ல இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் சுற்றுப் பயணத்தை ரத்து செய்தது.

2010 ஐ.பி.எல் துவங்குமும் ஏலத்தில் பாகிஸ்தான் அணி வீரர்களை சேர்த்தும் எந்த அணி முதலாளிகளும் அவர்களில் ஒருவரைக் கூட எடுக்காமல் அவர்களைக் கேவலப்படுத்தினர். உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஐ.பி.எல் நிர்வாகத்தைக் கண் துடைப்புக்காகக் கண்டித்தார்.

ஆனால், இலங்கை அரசின் சம்பளம் பெறும், இலங்கையின் பாதுகாப்புக்கு பணி புரியும் இலங்கைக் கடற்படை என் மீனவச் சகோதரர்களை தினம் தினம் சித்ரவதை செய்தும் கொல்லாமல் கொன்றும், கொன்றே கொன்றும் வந்தும், அவற்றைப் பற்றி ஒரு கண்டனம் கூடத் தெரிவிக்காமல் கை கட்டி வேடிக்கைப் பார்க்கிறது அதே இந்திய ஏகாதிபத்ய அரசு.

இரண்டு வாரங்களில் இரண்டு மீனவர்களை சுட்டும் கழுத்தை நெறித்தும் கொன்று வெறியாட்டம் போட்டிருக்கிறது ஃபாசிச சிங்கள கடற்படை.
பெரும்பாலான கொலைகள் நம் எல்லைக்குள் வந்தே செய்திருக்கிறது சிங்கள் கடற்படை. அப்படி எல்லை மீறுபவர்களையும் சுடும் உரிமையை இந்த நாய்களுக்கு யார் கொடுத்தது? மற்ற நாடுகளில் இதைத்தான் செய்கிறார்களா? நம் எதிரி நாடு என்று அரசியல்வாதிகள் முதல் பொதுமக்கள் வரை வெளிப்படையாகக் கூறிக்கொள்ளும் பாகிஸ்தான் கூட மீனவர்களை எச்சரித்து விட்டுவிடுகிறதே? பாகிஸ்தான் எதிரி நாடா இல்லை இலங்கை எதிரி நாடா? 

சென்னையில் சிங்கள புத்த விகாரம் ஒன்று தாக்கப்பட்டவுடன், இனி மீனவர்கள் மேல் தாக்குதல் நடக்காது என்று சொல்லியிருக்கிறது சிங்கள அரசு. ஆக இதுவரை நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் மற்றும் தாக்குதல்களுக்கு என்ன பதில்?
இலங்கை அரசின் பிரதிநிதிகளை அலறியடித்துக் கொண்டு ஓடிவரச் செய்ய வேண்டிய இந்திய அரசு பிரதிநிதியை அனுப்பி வைக்கிறதாம். அவர் போய் மன்னிப்புக்கடித்தத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு வருவாரா? இலங்கைக்கான இந்தியத் தூதரை திரும்பப் பெற்றிருக்க வேண்டாமா? இலங்கையுடனான நட்பை முறித்துக் கொண்டிருக்க வேண்டாமா? முதுகெலும்பில்லாத அரசாகிவிட்டதே மன்மோகன் அரசு?

அமைச்சர் பதவிகள் எத்தனை வேண்டும் என்று பேச தனிவிமானம் ஏறிப் போவாராம். கூட்டணி பற்றிப் பேசவும் விமானம் பிடிப்பாராம். மீனவன் செத்தால் தந்தி அடிப்பாராம். கடிதம் எழுதுவாராம். இவரெல்லாம் தமிழினத் தலைவராம்? இனத்தையே அழித்துவிட்டால் பிறகு எங்கிருந்து தலைவராக முடியும்? 

இந்திய ஊடகங்கள் இந்த விவகாரத்தைப் பற்றி பேசவே மாட்டேன் என்கின்றன. இந்து பத்திரிகை ஒரு படி மேலே போய் சிங்கள அரசுக்கு பலத்த ஜால்ரா அடிக்கிறது. 

மத்திய மாநில அரசின் மெத்தனத்தைக் கண்டிக்கவும், இருட்டடிப்பு செய்யும் ஊடகங்களின் முகத்தில் கரியைப் பூசவும், இந்த விவாகரத்துக்கு வெளிச்சம் கொண்டு வரவும் தமிழ் வலையாளர்கள் டிவிட்டர் தளத்தில் ஒரு புதுமைப் போராட்டம் ஒன்றைக் கையெடுத்திருக்கிறார்கள். #tnfisherman என்ற டேகுடன் ட்விட் புரட்சி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். வலைத் தொடர்பு கொண்ட தமிழர்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டும். எனக்குப் பிரச்சனை இல்லாதவரை கவலையில்லை என்ற மனப்போக்கை கை விட்டு அனைவரும் நம் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ய வேண்டும். 

ட்விட்டர் போராட்டத்தோடு நிறுத்திவிடாமல் அதற்கு வெளியேயும் நம் போராட்டத்தைத் தொடர்வோம். 

இலங்கைப் பொருட்களை புறக்கணிப்போம். வெளிநாடுகளில் வாழ்வோர் கடைகளில் இலங்கைப் பொருட்களை வாங்கி பின்னர் அதை இலங்கைப் பொருட்கள் என்பதால் திருப்பித் தருவதாகச் சொல்லி திருப்பித் தருவோம். (இந்தியாவில் வாங்கிய பின் திருப்பித் தருவதென்பது நடக்காத காரியம் அதனால் தான் வெளிநாட்டுத் தமிழர்கள்).

கிரிக்கெட் போட்டிகளைப் புறக்கணிப்போம். நேரிலோ டிவியிலோ பார்க்காமல் புறக்கணிப்போம். ஒரு வேளை ஏற்கனவே டிக்கெட் வாங்கிவிட்டீர்கள் என்றால் ஸ்டேடியத்துக்குள் டிவி கேமிராவுக்குத் தெரியும் வண்ணம் மீனவர்களுக்கு நடக்கும் கொடுமைகளை போஸ்டர்களாகவும் பேனர்களாகவும் ஏந்திப் பிடிப்போம். 

இலங்கையில் நடக்கும், இலங்கை அணி பங்குபெறும் அனைத்து விளையாட்டுகளையும் புறக்கணிப்போம். இலங்கை அணியைத் தடை செய்யாத ஐசிசி நடத்தும் அத்தனைப் போட்டிகளையும் புறக்கணிப்போம். 

இரண்டு இலங்கை வீரர்களைத் தேர்ந்தெடுத்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியையும் புறக்கணிப்போம். அவர்களை நீக்கும் வரை சென்னை சூப்பர் கிங்க்ஸின் போட்டிகளைப் புறக்கணிப்போம். 

இலங்கையில் தொழில் நடத்தும் ஏர்டெல் போன்ற இந்திய நிறுவனங்களைப் புறக்கணிப்போம். இப்போது மொபைல் நம்பர் போர்ட்டபிளிட்டி வந்துவிட்டதால் ஏர்டெல் தொடர்புகளைத் துண்டிப்போம். 

இலங்கை இனவாத அரசு பகிரங்க மன்னிப்புக் கேட்கும் வரை, கட்சத்தீவை இந்தியா திரும்பப் பெறும் வரை நம் போராட்டம் தொடரவேண்டும். 

Tuesday, January 18, 2011

தமிழ்மணம் விருது 2010

நண்பர்கள் பலருக்குத் தெரிந்திருக்கும். எனது கிரிக்கெட் கற்றுக் கொள்ளலாம் வாருங்கள் இடுகைக்கு தமிழ்மணம் விருதுகள் 2010ல் பிரிவு-16ல் முதல் பரிசு கிடைத்துள்ளது. ஆனால், எனக்கு தமிழ்மணம் தெரிவு செய்த நடுவர் குழுவில் உடன்பாடில்லை. அதற்கு எனது எதிர்ப்பைப் பதிவு செய்யும் வண்ணம் நான் என் விருதைத் திருப்பிக் கொடுத்துவிட்டேன். தமிழ்மண நிர்வாகிகளுக்கு நான் அனுப்பிய மடல் கீழே:

தமிழ்மண நிர்வாகிகளுக்கு,

முதலில் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன். இலாப நோக்கமில்லாமல் ஒரு திரட்டியை நிர்வாகம் செய்வது எவ்வளவு கடினமானது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதுவும் பதிவுலகில் அடிக்கடி நடக்கும் சண்டை சச்சரவுகளில் எந்தப் பக்கமும் சாராது நடு நிலைமை வகித்து தமிழ் வலைப்பூக்களை தொகுத்து வழங்குவது என்பதே சிரமமான காரியம். அதிலும் ஆண்டுதோறும் சிறந்த வலைப்பதிவுகளைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு விருது வழங்குவதும் எளிய காரியம் அல்ல. அதைத் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வழங்கி வரும் தமிழ் மண நிர்வாகக் குழுவுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.

இரண்டாவது முறையாக நான் இந்த ஆண்டும் விருதுக்கு எனது இடுகைகள் மூன்றை சமர்ப்பித்து இருந்தேன். முதல் சுற்றில் இரண்டு இடுகைகளும் இரண்டாவது சுற்றில் ஒரு இடுகையும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. இறுதிச் சுற்று முடிவில் என் கிரிக்கெட் கற்றுக்கொள்ளலாம் வாருங்கள் இடுகைக்கு பிரிவு-16ல் முதல் பரிசு வழங்கியிருந்தீர்கள். எனக்கு வாக்களித்த நண்பர்கள், சக பதிவர்கள் மற்றும் வாசகர்களுக்கு என் நன்றிகள்.

அதே சமயம், நீங்கள் முடிவுகளோடு வெளியிட்டிருந்த நடுவர்கள் பட்டியல் எனக்கு பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது. அந்த நடுவர்களில் சிலர் தங்கள் இடுகைகளை விருதுக்குப் பரிந்துரை செய்திருந்தனர். அவர்களில் சிலர் விருதை வென்றும் இருந்தனர். நடுவர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் தாங்கள் படைப்புகளைச் சமர்ப்பித்த பிரிவுகளுக்கு நடுவராக செயல்பட்டிருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருந்தாலும், இரண்டு பட்டியல்களையும் பார்க்கும்போது கொஞ்சம் இடறத்தான் செய்கிறது. இன்னும் சில நடுவர்கள் ஒரு பக்கச் சார்பு (இடது சாரி சிந்தனை) கொண்டவர்கள். இவர்கள் எப்படி நேர்மையாக விருதுக்கு இடுகைகளைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள் என்ற சந்தேகமும் உள்ளது. இது எனக்கு மட்டுமல்ல,  என் போன்ற பலருக்கும் வந்துள்ளது. கூகுள் பஸ்ஸிலும் இடுகைகளிலும் அவர்கள் தங்கள் சந்தேகங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். பல விடயங்களில் நடுநிலைமையைப் பேணும் தமிழ்மணம் இந்த விடயத்தில் நழுவி விட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஃபிப்ரவரி மாதம் முதல் இந்தியாவில் துவங்குகின்றது. இதில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கு இலங்கை அணியில் தலைவரை அம்பயராகப் போட்டால் நன்றாகவா இருக்கும்? (நன்றி ஜானகிராமன்.என்)

தமிழ்மணத்தின் நியமித்த இந்த நடுவர் குழுவிற்கு என் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வண்ணம் எனக்கு வழங்கப்பட்ட விருதை நான் பெற்றுக் கொள்ள விரும்பவில்லை. 

அதே நேரம், உங்களின் அயராத பணியைப் பாராடும் முகத்தான் என் இடுகைகளைத் தொடர்ந்து தமிழ்மணத்தில் பகிர்வேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த ஆண்டுகளில் இது போன்ற குறைகளை தமிழ்மணம் களையும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.

என்றும் இனிய தமிழ் உணர்வுடன்,

Dhinesh Kumar (முகிலன்)

நண்பர்களே என் எதிர்ப்பு இடுகைகளையும் பகிர்ந்து நடுவர்களாகவும் பணி புரிந்தவர்களுக்கும் ஒரு பக்கச் சார்பு கொண்டவர்களுக்கும் மட்டுமே. மற்றவர்கள் இதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.