Tuesday, September 17, 2013

ப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - 8மாநிலத்தின் முந்நாள் ஆளுங்கட்சி இந்நாள் எதிர்க்கட்சி மக்கள் முன்னேற்ற கழகத்தின் வட்ட அலுவலகம். வாசலின் ஐந்தாறு பேர் கரை வேட்டியுடன் வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டு நின்றிருந்தார்கள். காம்பவுண்டுக்குள் நின்றிருந்த வெள்ளை நிற சுமோவை கைலி கட்டியிருந்த ட்ரைவர் ஒருவர் கழுவிக் கொண்டிருந்தார். 

அந்தக் கட்சி அலுவலகத்திற்கு சற்றும் சம்மந்தமில்லாமல் வெள்ளை சட்டை கறுப்புப் பேண்ட் அணிந்து கழுத்தில் நீல நிற டை கட்டியிருந்த அந்த இளைஞன் தயக்கத்தோடு உள்ளே நுழைந்தான்.

உள்ளே நுழைந்ததும் ஒரு பெரிய ஹால். அந்த ஹாலின் இரண்டு பக்கமும் போட்டிருந்த மர பெஞ்சில் நானகைந்து பேர் உட்கார்ந்திருந்தார்கள். இந்த இளைஞனை வித்தியாசமான பிராணீயைப் பார்ப்பது போல பார்த்தார்கள். ஓரமாக ஒரு மூலையில் ஒரு டேபிள் போட்டு அதற்குப் பின்னால் ஒல்லியாக, 50 வயதை ஒத்த ஒருவர் மடக்கு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். வெளிறிய பச்சைச் சட்டை அணிந்து தோளில் கொடிக்கரை போட்ட துண்டைப் போட்டிருந்தார். முகத்தில் ஒரு வார தாடி. 

“என்ன தம்பி? யாரைப் பாக்கணும்?”

“சொக்கலிங்கம் சாரைப் பாக்கணும்?”

“வட்டமா? அவரை எதுக்குப் பாக்கணும்?”

“எக்ஸ் மினிஸ்டர் பழனிச்சாமி பாக்கச் சொன்னாரு”

“பழனிச்சாமி அண்ணனா? சரி இங்க ஒரு நிமிஷம் உக்காரு. வட்டத்துக்கிட்ட கேட்டுட்டு வர்றேன்.”

கதவை இரண்டு முறை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தார். வட்டம் என்றழைக்கப்பட்ட சொக்கலிங்கம் மேஜைக்குப் பின்னால் உட்கார்ந்திருந்தார். கரிய நிறம். முன்னந்தலையில் தொடங்கியிருந்த வழுக்கை. லேசாக முறுக்கி விடப்பட்ட மீசை. மேஜைக்கு எதிரில் இரண்டு பேர் வெள்ளை வேட்டி சட்டை அணிந்து தெவையில்லாமல் சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். முன்னால் இருந்த ப்ளேட்டில் இருந்து நெய்யில் வறுத்த முந்திரியை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் உள்ளே வந்தவரைப் பார்த்ததும்,

“என்ன தலைவரே”

“வட்டம், பழனிச்சாமி அண்ணே அனுப்பி வச்சதா சொல்லிக்கிட்டு ஒரு பய வந்திருக்கான். வரச்சொல்லட்டுமா?”

“வரச்சொல்லுங்க, வரச்சொல்லுங்க. அண்ணன் ஃபோன் பண்ணி சொன்னாரு”

தலைவர் என்றழைக்கப்பட்டவர் வெளியே போனதும் இளைஞன் உள்ளே வந்தான்.

“சொல்லு தம்பி. என்ன பிரச்சனை?”

“வணக்கம் சார். நான் எக்ஸ் மினிஸ்டர் பழனிச்சாமி சாரோட பால் பண்ணைல மார்க்கெடிங் மேனேஜரா வேலை பார்க்குறேன்”

“சொன்னாரு தம்பி. அமைச்சரு கூப்புட்டு சொன்னாரு. பிரச்சனை பண்றவன் யாரு?”

“விஜயபவன் ஹோட்டல்ல பால் வாங்க ஆர்டர் பிடிக்கப் போயிருந்தேன் சார். அவங்க ஏற்கனவே அமுதம் பால் வாங்கறாங்களாம். நம்மக்கிட்ட வாங்க மாட்டேங்கிறாங்க. சார் உங்களைப் பாக்கச் சொன்னாரு”

“அப்புடியா.. எந்த ப்ராஞ்ச்?”

“மவுண்ட்ரோடு ப்ராஞ்ச் சார்.”

முன்னால் இருந்த ஆட்களைப் பார்த்து, “நம்ம சேகரு கார்ப்பரேஷன்ல தான இருக்கான்?”

“எந்த சேகரு? சந்திரசேகரா?”

“அவந்தான்”

“ஆமா. அங்க தான் இருக்கான்”

“அவனுக்கு ஃபோனைப் போடு”

மேஜை மேல் இருந்த செல்ஃபோனை எடுத்து ஃபோன் நம்பரை அடித்தான் ஒருவன். 

“அல்லோ, சந்திரசேகரா?”

“ஆமா, நீங்க யாரு?”

“நம்ம வட்டம் உங்கிட்ட பேசணும்னு சொன்னாரு, ஒரு நிமிசம் இருங்க”

போனை வாங்கிய சொக்கலிங்கம், ”என்ன சேகரு, எப்பிடியிருக்க?”

“நல்லா இருக்கேன் தலைவரே. என்ன மேட்டர் சொல்லுங்க”

“மவுண்ட்ரோடு விஜயா பவன் இருக்குதுல்ல”

“ஆமா”

“அவன் கொஞ்சம் மொரண்டு பிடிக்கிறான். நீ என்ன பண்ணு” என்று ஆரம்பித்து விவரித்தார்.

ஃபோனை அணைத்துவிட்டு, “தம்பி ஒரு ரெண்டு மணி நேரம் நம்ம ஆஃபிஸ்ல இருங்க. அதுக்குள்ள மேட்டரை முடிச்சிரலாம்”

அந்த இளைஞன் சிறிது நேரம் உள் ஹாலில் பெஞ்சில் உட்கார்ந்திருந்தான். வெளியே போய் டீகுடித்தான். அங்கே நடக்கும் பஞ்சாயத்துகளை வேடிக்கப் பார்த்தான். 

சொல்லி வைத்தது போல இரண்டு மணி நேரத்தில் வாசலில் ஒரு அம்பாசிடர் வந்து நின்றது. விஜயபவன் மேனேஜர் ஓட்டமும் நடையுமாக உள்ளே வந்தார். 

“வட்டம் இருக்காரா?”

இளைஞனைக் கவனிக்காமல் சேர் போட்டு உட்கார்ந்திருந்த பெரியவரைப் பார்த்துக் கேட்டார். 

“நீங்க யாரு?”

“மவுண்ட் ரோடு விஜயபவன் மேனேஜர்”

“வட்டம் கொஞ்சம் பிஸியா இருக்கார். இன்னைக்குப் பாக்க முடியாது. நாளைக்குக் காலைல 9 மணிக்கு மேல வாங்க”

“தலைவரே அப்பிடிச் சொல்லாதீங்க. ரொம்ப அர்ஜெண்ட்”

“சரி உள்ள போங்க”

உள்ளே நுழைந்தவரை கண்டுக்காதது போல அல்லக்கைகளுடன் சுவாரசியமாக நடிகைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார் சொக்கலிங்கம்.

“அண்ணே, அண்ணே..”

ஏளனமாக ஒரு பார்வை பார்த்து விட்டு, “வாய்யா, என்ன இவ்வளவு தூரம்?”

“அண்ணே. ஹோட்டல்ல இருந்து போற ட்ரெயினேஜ் பைப்பை அடைச்சிட்டாங்கண்ணே.. கார்ப்பரேஷனுக்கு ஃபோன் போட்டுக் கேட்டா, உங்களப் பாத்துட்டு வரச் சொன்னாங்க. அதான்...”

”வைத்தி, போய் அந்தத் தம்பிய வரச் சொல்லு”

வைத்தி வெளியே போய் இளைஞன் உள்ளே வந்தான். 

“நம்ம ஓட்டலுக்கு இனிமே இந்தத் தம்பிக்கிட்டயே பால் வாங்கிக்கோங்க. சரியா?”

மேனேஜர் தயக்கம் அப்பிய முகத்தோடு அந்த இளைஞனை ஒரு முறை பார்த்துவிட்டு, “சரிங்க”

“தம்பி, சார் கூட ஹோட்டலுக்குப் போய் ஆர்டர் எடுத்துக்கோ. அமைச்சரைக் கேட்டதா சொல்லு. சரியா?”

“சரிங்கண்ணே”

”அண்ணே, அந்த ட்ரெயினேஜ்...”

“அதெல்லாம் நீங்க ஹோட்டலுக்குப் போறதுக்குள்ள சரியாயிடும்” வைத்தியை அர்த்தத்துடன் ஒரு பார்வை பார்த்ததும் ஃபோனை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

சிறிது நேரம் கழித்து அவன் உள்ளே வந்தான். ஒல்லியான உருவம். பீடியும் கஞ்சாவும் இழுத்து இழுத்து ஒடுங்கிய கன்னங்கள். கண்கள் இரண்டும் உள்ளே போயிருந்தன. எண்ணை காணாமல் வறண்ட தலை. கோடு போட்ட பனியனும் உடலை ஒட்டிய வெளுத்த ஜீன்ஸும் அணிந்திருந்தான். அவன் உள்ளே நுழைந்ததும் சொக்கலிங்கம் மற்ற இருவரையும் ஒரு பார்வை பார்த்தார். இருவரும் வெளியெறினர்.

அவன் பல நாள் தாடியைச் சொறிந்தவாறு இருவரும் வெளியேறக் காத்திருந்தான்.

“என்னடா? என்ன விசயம்? அவ வாயத் தொறந்தாளா இல்லையா?”

“இல்லண்ணா, என்ன செஞ்சாலும் தெரியாது தெரியாதுன்னு தான் சொல்றா.. அவ புருசனைத் தேடிப் போன முத்துகிட்ட இருந்து ஒரு தகவலும் இல்லை. இப்ப இன்னா செய்யலாம்னு நீங்கதான் சொல்லணும்”

”நா வந்து பேசிப் பாத்தா எதும் நடக்குமா?”

“ஒரு வாட்டி செஞ்சி பாக்கலாம்ணா”

“சரி வெளிய இருக்கிற வைத்திய வரச் சொல்லு”

பாதிக் கதவைத் திறந்து வைத்தியை வரச் சொல்ல, வைத்தி உள்ளே வந்தான். அறையின் மூலையில் மடக்கி வைத்திருந்த சக்கர நாற்காலியைப் பிரித்தான். மேஜைக்குப் பக்கத்தில் நிறுத்திவிட்டு சொக்கலிங்கம் உட்கார்ந்திருந்த சேரைப் பிடித்து இழுத்து மேஜைக்கும் சேருக்கும் இடைவெளியை அதிகப் படுத்தினான். இரண்டுகைகளால் சொக்கலிங்கத்தை அலேக்காகத் தூக்கி சக்கர நாற்காலியில் உட்கார வைத்தான். இடுப்புக் கீழே சொக்கலிங்கத்தின் கால்கள் இரண்டும் சூம்பித் தொங்கின. சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு வர சுமோ சரியாக வாசலில் நின்றது. சொக்கலிங்கத்தைத் தூக்கி சுமோவில் உட்கார வைத்துவிட்டு நாற்காலியை மடக்கி பின்னால் ஏற்றினான். டிரைவர் சீட்டுக்குப் பக்கத்தில் சொக்கலிங்கம் உட்கார்ந்துகொள்ள வைத்தியும் புதிதாய் வந்தவனும் பின்னால் ஏறிக் கொண்டார்கள்.

***********************************************

பேச்சிலர்ஸ் பேரடைஸ் என்றழைக்கப்படும், மேன்ஷன்களால் நிரம்பி வழியும் திருவல்லிக்கேணியில், ஒரு சுமோ நுழைந்தால் சைக்கிள் கூட எதிரே வர முடியாத ஒரு சந்துக்குள் சொக்கலிங்கத்தின் சுமோ நுழைந்தது. முன்னொரு காலத்தில் பேச்சிலர்கள் சிலர் தங்கியிருந்திர்ப்பார்கள் போல. இப்போது ஒண்டுக் குடித்தனங்களுக்கு அடைக்கலம் கொடுத்துக் கொண்டிருந்தது அந்தக் கட்டிடம். பல இடங்களில் பாதிப் படிக்கட்டுகளாக இருந்த மாடிப் படியில் ஒரு குழந்தையைத் தூக்கி வருவது போல வைத்தி சொக்கலிங்கத்தைத் தூக்கிக்கொண்டு ஏறி வந்தான். முன்னால் ஜீன்ஸ் பேண்ட் நடந்தான். ஒரு கையை வைத்தியைச் சுற்றி வளைத்துப் பிடித்து இன்னொரு கையால் கோர்த்துக் கொண்டு பேலன்ஸ் செய்து வந்தான் சொக்கலிங்கம். மூன்றாவது மாடியான மொட்டை மாடிக்குள் நுழைந்ததும் கதவை அடைத்து ஜீன்ஸ் பேண்ட் ஒரு கம்பியால் வளைத்துப் பூட்டினான். 

மொட்டை மாடி மழையாலும் பலர் நடையாலும் கருப்படைந்து போயிருந்தது. மூலையில் ஒரு சிறிய அறை. இரண்டு பேர் தங்கலாம். சொக்கலிங்கம் தன்னை இறக்கிவிடச் சொல்லிவிட்டு தவழ்ந்தே அந்த அறையை நோக்கி நகர்ந்தார். மற்ற இருவரும் அவருக்குப் பின்னால் மெதுவாக நடந்தார்கள். கதவுக்கு அருகே போய் ஒரு கையால் கதவைத் தள்ளித் திறந்து விட்டு உள்ளே நுழைந்தார். அறைக்குள் ஒரு பெண் கைகள் பின்னால் கட்டப்பட்டு தரையில் உட்கார்ந்திருந்தாள். சித்ரவதை செய்யப்பட்டிருப்பதற்கான காயங்கள் முகம் மற்றும் கைகளில் தெரிந்தது. உதடுகள் உலர்ந்து ஓரிரு வெடிப்புகளில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. கண்கள் இரண்டும் சொருகி இருந்தன. எத்தனை நாட்களாக சாப்பிடவில்லையோ தெரியவில்லை. 

அந்தப் பெண்ணின் அருகில் தவழ்ந்து போன சொக்கலிங்கம் அவள் அருகே அமர்ந்து அவள் முகவாயைத் தூக்கி முகத்தின் அருகில் போய் உற்றுப் பார்த்தார்.

“என்னடா சோறு போடவே இல்லையா நீங்க?”

“இல்லைங்க்ணா. தேவிடியா முண்ட என்ன கேட்டாலும் எனக்குத் தெரியாது தெரியாதுன்ட்டே சொல்றாண்ணா. அதான் சோறு போடாம பட்டினி போட்டாலாச்சும் வாயத்தொறக்குறாளான்னு பாப்போம்னு”

“டேய் சோறு திங்காம செத்துப் போயிட்டான்னா? போய் முக்குல பாய் கடையில ஒரு பிரியாணி வாங்கிட்டு வா”

அவன் பதில் பேசாமல் வெளியேறிப் போனான். 

“வைத்தி, தண்ணி ஒரு கிளாஸ் எடுத்துக் குடு” 

அறையின் மூலையில் ஒரு ப்ளாஸ்டிக் குடத்தின் மூது ஒரு டம்ப்ளர் சாய்வாக உள்ளே விழுந்துவிடாத வண்ணம் வைக்கப் பட்டிருந்தது. அந்த டம்ப்ளரில் நீரை நிரப்பிக் கொண்டு வந்து சொக்கலிங்கத்திடம் நீட்டினான் வைத்தி.

தண்ணீரை வாங்கி கையில் ஊற்றி அவள் முகத்தில் விசிறியடித்தார் சொக்கலிங்கம். தண்ணீரின் குளுமை பட்டதும் சற்றே கண் திறந்து பார்த்தாள். “இந்தா குடி” என்று டம்ப்ளரை வாய்க்கு முன் நீட்டினார். வேகவேகமாக குடித்தாள். 

“உன் பேரு என்ன?”

“பா.. பார்வதி” கழுத்தை இறுக்கிப் பிடித்த பின் பேசினால் கேட்பது போல குரல் நசுங்கிக் கேட்டது. 

“கணேசனுக்கு நீ ஒருத்திதான் பொண்டாட்டியா? இல்ல வேற யாரும் கூத்தியா வச்சிருக்கானா?”

“அதெல்லாம் இல்லீங்க. நான் ஒருத்திதான்”

“அவப் எங்க இருக்கான்னு தெரியுமா?”

“சத்தியமா தெரியாதுங்கயா.. தெரிஞ்சா சொல்லிரமாட்டேனா? உங்க கையில அடி வாங்கணுமா?”

கதவைத் திறந்து கொண்டு ஜீன்ஸ் பேண்ட் உள்ளே நுழைந்தான். கையில் ஒரு பொட்டலம். 

“கட்ட அவுத்து விட்டுட்டு குடு”

கையில் கொடுக்கப்பட்ட பிரியாணி பொட்டலத்தை வாங்கிப் பிரித்து வேக வேகமாக உண்ண ஆரம்பித்தாள். அவள் வேகத்தை தொண்டை ஒத்துக் கொள்ளாததால் விக்கல் எடுத்தது. சொக்கலிங்கம் திரும்பி வைத்தியைப் பார்க்க அவன் ஓடிப்போய் அந்த டம்ப்ளரில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு வந்து நீட்டினான். வாங்கி ஒரு வாய் குடித்தவள் மீண்டும் பிரியாணிக்குத் திரும்பினாள். 

சாப்பிட்டு முடித்து மீதம் இருந்த தண்ணீரில் தரையிலேயே கை கழுவி விட்டாள். அவள் சாப்பிட்டு முடிப்பதற்காகக் காத்திருந்தது போல சொக்கலிங்கம் இடது கையால் அவள் முடியைக் கொத்தாகப் பிடித்து வலது கையால் கன்னத்தில் ஒரு அறை விட்டார்.

அடித்த அடியில் பொறிகலங்கிப் போனாள். கண்களில் கண்ணீர் கட்டியது. "சொல்லுடி பார்வதி. உன் புருசன் கணேசன் இப்ப எங்க?"

"அய்யா அதான் சொன்னேனேய்யா எனக்குத் தெரியாதுய்யா"

"சிறுக்கி முண்ட. உம் புருசன் ஒரூவா ரெண்டுரூவா திருடிட்டு ஓடலடி. ஆறு கோடி ரூவா. முழுசா ஆறு கோடி ரூவாவோட ஓடிப் போயிருக்கான். உலகத்துல எங்க இருந்தாலும் தேடிக் கண்டுபிடிச்சுருவேன். கண்டுபிடிச்சேன். அப்புறம் நீ முண்டச்சிதான். புரியுதா. உன் புருசன் உசுரோட உனக்கு வேணும்னா ஒழுங்கு மரியாதையா சொல்லு. எங்க போகணும்னு திட்டம் போட்டீங்க?"

"அய்யா சத்தியமா சொல்றேனுங்க. அந்த பேப்பருக்கு அம்புட்டு மதிப்புன்னு எனக்கும் தெரியாது அவருக்கும் தெரியாதுங்க. அவரு இம்புட்டு நாளு எவ்வளவு விசுவாசமா இருந்தாரு. உங்களுக்குப் போய் துரோகம் செய்ய மாட்டாருங்கய்யா. நம்புங்கய்யா. அந்த மனுசன் எங்க இருக்காருன்னு எனக்குத் தெரியாதுய்யா?"

தொடர்ந்து தலையை சுவற்றில் முட்டி அவள் அழுது கொண்டிருக்க ஜீன்ஸ் பேண்டில் செல்ஃபோன் ஒலித்தது. எடுத்துப் பேசியவன் முகம் வெளிச்சமானது.

"அண்ணா, கணேசன் கிடைச்சிட்டாண்ணா"

"அப்பிடியா? எங்க இருக்கான்?"

"வேலூர் ஜி.எச்ல"

"கிளம்புங்கடா உடனே போவோம்"

"இவளை?"

"இவ எதுக்கு இனிமே அவுத்து விட்டுரு. பொழச்சிப் போவட்டும்"

வைத்தி தூக்கிக் கொள்ள மூவருமாக கீழே இறங்கினார்கள்