Monday, March 18, 2013

இதுவும் ஒரு காதல் கதை - முடிவு




“இங்க பாருங்க தம்பி. நீங்க ரெண்டு பேரும் இப்பிடிக் கல்யாணம் பண்ணிக்கிறதுல எங்களுக்கு எல்லாம் சம்மதமில்லை. மாலா எங்களுக்கு ஒரே பொண்ணு. அவ இப்பிடி ஓடிப்போய் கல்யாணம் செஞ்சிக்கிட்டா நல்லா இருக்காதுன்னு சொந்தக்காரங்க எல்லாரும் சொல்றாங்க”

ஒத்துக்கொள்வார்களோ? அடி மனதில் சந்தோஷ ஊற்று லேசாக ஊற ஆரம்பித்தது. நான் பதில் பேச வாயெடுத்ததும் அதற்காகவே காத்திருந்தவர் போல என்னை வெட்டிப் பேச ஆரம்பித்தார். “அதனால நீங்க இந்தக் கல்யாண ஏற்பாட்டை நிறுத்துங்க. இன்னும் ஆறு மாசத்துக்குள்ள நாங்களே உங்க கல்யாணத்தை திண்டுக்கல்லயே நடத்தி வைக்கிறோம். என்ன சொல்றீங்க?”

அவர் பார்வை பெண்டுலம் போல என்னையும் மாலாவையும் தொட்டுத் தொட்டு விலகியது.

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவர் சொல்வதை நம்புவதா வேண்டாமா என்று புரியாமல் மாலாவைப் பார்த்தேன்.

“சரிப்பா, நாங்க கல்யாணத்தை கேன்சல் பண்ணிடுறோம். ஆனா ஈவினிங் ரிஷப்ஷன் அப்பிடியே இருக்கட்டும். நம்ம ஃபேமிலியில இருந்து நீங்க எல்லாரும் ரிஷப்ஷனுக்கு வந்து அதை ஒரு எங்கேஜ்மெண்ட் ப்ரொக்ராம் மாதிரி வைச்சிருவோம். கல்யாணத் தேதி கூட முடிவு பண்ண வேண்டாம். என்ன சொல்றீங்க?”

மாலாவின் அப்பா இதை எதிர்பார்த்திருப்பார் போல, உடனடியாக மறுத்தார். “நோ நோ. அதெல்லாம் சரிப்பட்டு வராது. ரெண்டு வாரத்துக்குள்ள சொந்தக்காரங்க எல்லாருக்கும் சொல்லிவிட முடியாது. அவங்கவங்களுக்கு என்ன என்ன வேலை இருக்கோ? அது மட்டுமில்லாம அரண்மனை மாதிரி வீடு திண்டுக்கல்ல இருக்கும்போது ஹோட்டல்ல நிச்சயதார்த்தமா? சரி வராது”

“எல்லாரும் வர வேண்டாம், நீங்களும் அம்மாவும் மட்டும் வாங்க”

“என்னால இன்னும் இந்தக் கல்யாணத்துக்கு நூறு சதவீதம் ஒத்துக்க முடியலை. ரெண்டு வாரத்துக்குள்ள என் மனசு மாறிடாது. ஆறு மாசம்னா ஆறப்போட்டு ஒப்பேத்திடலாம். நான் வராம உங்கம்மா மட்டும் வந்தாலும் நல்லா இருக்காது”

மாலா என்னை அர்த்தமாகப் பார்த்தாள். “நீங்க வர முடியலைன்னா பெரிய மாமாவை வரச் சொல்லுங்க. நம்ம பக்கத்துல நிச்சயத்துக்குத் தாய் மாமா தானே எல்லாம். அவரையும் அத்தையையும் வந்து நிச்சயம் செஞ்சி வைக்கச் சொல்லுங்க”

எல்லா மூவையும் செய்து விட்டார். இதற்கு மேல் நகர இடம் இல்லை. மாலா வசமாக அவரைச் செக் மேட் செய்து விட்டாள். “இங்க பாரு. நாங்க சொல்றதைக் கேளுங்க. எங்களுக்கு உத்தரவு போடாதீங்க. கல்யாணத்தை நிறுத்துங்க. ஆறு மாசத்துல நாங்களே நடத்தி வைக்கிறோம்”

“இல்லப்பா முடியாது. நீங்க ஒரு கேரண்டி குடுக்காம எங்களால சட்டுன்னு கல்யாணத்தை நிறுத்த முடியாது” உட்கார்ந்திருந்த மாலா விருட்டென்று எழுந்து கிச்சனுக்குள் நுழைந்தாள். மாலாவின் அப்பா என்னைப் பார்த்தார்.

“மாலா முடிவு தான் அங்கிள் என் முடிவும்” சுருக்கமாக முடித்துக் கொண்டேன். பக்கத்தில் இருந்த பையை எடுத்து ஒரு உதறு உதறிவிட்டு எழுந்து வெளியே கிளம்பிவிட்டார்.

“அப்பா அப்பா” என்று மாலா பின்னாலே சென்றாள். பால்கனியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். கீழே பார்க்கிங்கில் அவர் காருக்குப் பக்கத்தில் நின்று கொண்டு இரண்டு பேரும் கைகளை ஆட்டி ஆட்டி என்னவோ பேசிக்கொண்டிருந்தனர். பிறகு அவர் காரில் ஏறிக் கிளம்பிவிட்டார்.

மாலா மேலேறி வரும் வரை காத்திருந்தேன். “இவங்க இப்பிடி ஏதாச்சும் கோக்கு மாக்கு பண்ணுவாங்கன்னு எதிர்பார்த்தேன் தேவா. 6 மாசத்துல கல்யாணம் செஞ்சி வைக்கிறோம்னு சொல்றதெல்லாம் சும்மா. இப்போதைக்கு நம்ம கல்யாணத்தை நிறுத்தணும். அதுதான் குறிக்கோள். எங்கம்மாட்ட ஃபோன் பண்ணி அப்பா கிளம்பினதைச் சொன்னேன். அம்மா ஜுவல்ஸ் குடுத்து விட்டிருந்தாங்களாம். இவரு கோவத்துல குடுக்காமலே போயிட்டாரு”

சிரித்துக்கொண்டேன். “அப்போ சீரியஸா கல்யாணம் செஞ்சிக்கத் தான் போறோமா?”

“உத படப்போற படவா. பேங்க் பேலன்ஸ் எல்லாம் கரைச்சு எக்ஸ்ட்ரா லோன் வேற போட்டிருக்கு, இப்ப வந்து சீரியஸா வெளாட்டான்னு கேட்டுட்டு இருக்க?” அடிக்க ஓடிவந்தாள்.

*************************************************************************

கோரமங்களா விநாயகர் கோவிலில் இருவரின் ஏஜ் ப்ரூஃப் அட்ரஸ் ப்ரூஃப் கேட்டிருந்தார்கள். இது வரை அங்கே போனதில்லை என்பதால் இருவரும் சேர்ந்து போய் கொடுத்துவிட்டு வரலாம் என்று போனோம். ஃபோரம் மாலுக்கு எதிரே 80 ஃபீட் ரோட்டில் ஜோதி நிவாஸ் காலேஜ் ஃபிகர்களை சைட் அடித்துக்கொண்டே வண்டியை மெதுவாக விட்டால் வலது பக்கம் வருகிறது கணபதி சேவா சமிதி என்றழைக்கப்படும் அந்த விநாயகர் கோவில் இருக்கிறது. பெரிய கோவிலாகவும் இல்லாமல் சின்னக் கோவிலாகவும் இல்லாமல் நடுத்தரமாக இருந்தது. பெரிய காம்பவுண்டில் ஒரு ஓரமாகக் கோவிலும் மற்ற இடம் சிமிண்ட் தரை போடப்பட்டு காலியாக விடப்பட்டிருந்தது. திருவிழாக்காலங்களில் உபயோகப்படும் போல. கோவிலுக்குள் நுழைந்ததும் முதலில் விநாயகர். கொஞ்சம் ஓரத்தில் அவர் ப்ரதர் முருகன் வள்ளி தேவானையோடு இருக்கிறார். அப்பா சிவனுக்கும் அம்மா பார்வதிக்கும் கூட சந்நிதிகள் இருக்கின்றன. நவகிரகங்களுக்கு எண்கோண வடிவில் சந்நிதி இருக்கிறது.

மாலா ஒவ்வொரு சந்ந்தியிலும் உருகி உருகி வேண்டிக்கொண்டாள். சிறப்பு அர்ச்சனை எல்லாம் செய்து விட்டு, அலுவலகத்தில் டாகுமெண்ட்ஸ் ஒப்படைத்துவிட்டு வந்து மண்டபத்தில் ஓரமாய் உட்கார்ந்தோம்.

“என்ன மாலா பிரார்த்தனையெல்லாம் பலமா இருந்தது?”

“எல்லாம் நம்ம கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு தாண்டா”

அவள் கையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டேன். என் தோளில் லேசாக சாய்ந்து கொண்டாள். “அடுத்த வாரம் இந்நேரம்லாம் நமக்குக் கல்யாணம் ஆகியிருக்கும்லடா”

“ம்ம்”

“கல்யாணத்துக்கு அப்புறம் உன்னை வாடா போடான்னு எல்லாம் கூப்புட மாட்டேன். வாங்க போங்க தான்”

“அய்யே, நீ அப்பிடிக் கூப்புட்டா என்னவோ போல இருக்கும். வழக்கம் போலவே இரு”

“ச்சேச்சே அது நல்லா இருக்காதுடா”

“என் மாலா எப்பவும் என் மாலாவாவே இருக்கணும்”

தலையை எடுத்து என் தோளில் மெலிதாக முத்தமிட்டுவிட்டு மீண்டும் சாய்ந்து கொண்டாள். 

மேலும் சிறிது நேரம் இருந்துவிட்டு யாரோ விநியோகித்துக் கொண்டிருந்த சுண்டலை கொறித்துவிட்டு ஏ2பியில் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்தோம்.

********************************************************************************

ஞாயிற்றுக் கிழமை திருமணம். வெள்ளிக்கிழமை காலையே ஊரில் இருந்து அப்பா அம்மா தங்கை மாப்பிள்ளை எல்லாம் வருவதாக இருந்தது. அவர்கள் தங்குவதற்கு பக்கத்தில் ஒரு ஹோட்டலில் இரண்டு அறைகள் புக் செய்திருந்தான் செந்தில். செந்திலின் பெற்றோர் சனி காலை வருவதாகச் சொல்லியிருந்தார்கள்.

புதன்கிழமை காலை ஓமனா குழந்தையோடு வந்திறங்கினாள். அவளை அழைத்துவர நானும் போயிருந்தேன். ஓமனாவின் அம்மாவும் வந்திருந்தார். குழந்தை ஓமனாவை உரித்து வைத்திருந்தாள். செந்திலின் கண்கள். வீட்டில் மாலா ஆரத்தி கரைத்து வைத்துக்கொண்டு காத்திருந்தாள். ஓமனாவின் அம்மாவுக்கு ஆரத்தி ஏற்பாட்டைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சி. மாலாவை வாய்க்கு வாய் பாராட்டிக்கொண்டே இருந்தார்.

அவர்களை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு காலை உணவுக்கு ஏதாவது வாங்கி வரலாம் என கிளம்பினேன். மாலாவும் சேர்ந்து கொண்டாள். மாலாவின் முகத்தில் ஏதோ சோகம் அப்பியிருப்பது தெரிந்தது.

“என்ன மாலா, பேரண்ட்ஸ் சொந்தக் காரங்க இல்லாம கல்யாணம் செஞ்சிக்கப் போறோமென்னு கவலையா?”

“அது மட்டுமில்லடா”

“அப்புறம்”

“இன்னைக்கு என்னோட ஃப்ரண்ட் ஒருத்தியோட கல்யாணம் திண்டுக்கல்ல. எங்க நெய்பர். சின்ன வயசுல இருந்து ரெண்டு பேரும் ஒண்ணா விளையாடி இருக்கோம்”

“இப்பத்தான் சொல்ற?”

“நான் போக முடியிற கல்யாணமா இருந்தா சொல்லியிருப்பேன். இப்ப மூணு நாள்ல கல்யாணத்தை வச்சிக்கிட்டு ஊருக்கு மட்டும் போனேன்.. என்னைய ரூம்க்குள்ள பூட்டி வச்சிட்டு விடமாட்டாங்க”

“..”

“காலைலயே அவ கிட்ட பேசிட்டேன். அங்க இருக்க முடியலையேன்னு அவளும் வருத்தப்பட்டா”

“சரி விடு மாலா. நம்ம கல்யாணம் முடியட்டும் நாம ரெண்டு பேரும் ஜோடியா போய் அவங்களைப் பாத்துட்டு வந்துடுவோம்”

“அதுவும் சரிதான்”

********************************************************************

எல்லோரும் ஆஃபிஸுக்கு லீவ் போட்டிருந்ததால் வீடே கலகலவென்று கல்யாணக் களையோடு இருந்தது. ஓமனா, அவள் அம்மா, மாலா செந்திலின் அப்பார்ட்மெண்டிலும் நானும் செந்திலும் மாலாவின், எங்கள் ஃப்யூச்சர் அப்பார்ட்மெண்டிலும் தங்குவது என்று முடிவெடுத்திருந்தோம். மதிய உணவுக்குப் பிறகு சிகரெட் பிடிப்பதற்காக மாலாவின் அப்பார்மெண்டுக்கு வந்தேன். செந்திலும் கூட வந்தான்.

“மச்சி, ஃப்ரண்ட்ஸ் எல்லாம் பார்ட்டி குடுக்கணும்னு சொன்னாங்க. கல்யாணத்துக்குப் பிறகு உன் ப்ளான் என்னன்னு தெரியலை. இன்னைக்கு நைட் வச்சிக்கலாமான்னு கேக்குறாங்க. உனக்கு ஓக்கேவா?”

சற்று நேரம் யோசித்தேன். வெள்ளிக்கிழமை காலை அப்பா அம்மா தங்கை மாப்பிள்ளை வருவார்கள். அவர்களை அழைக்கச் செல்ல வேண்டும். இரவு லேட்டாகத் தூங்க முடியாது. இன்று இரவு தான் சரி

“எனக்கு ஓக்கேடா. எதுக்கும் மாலாக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுடலாம்”

“அவகிட்ட எதுக்குடா. அவளா வரப் போறா”

“அவ வர மாட்டாடா. வேற பிளான் எதுவும் வைச்சிக்காம இருக்கணும்ல”

“அதுவும் சரிதான்”

பேசிக் கொண்டிருந்த போதே மாலா கதவைத் திறந்து உள்ளே வந்தாள்.

“கல்யாணம் வரைக்கும் கொஞ்சம் சிகரெட் பிடிக்காம இருக்கக் கூடாதா?”

“கல்யாணத்துக்கு அப்புறம் சிகரெட் விட்டுடுறேன்னு சொல்லியிருக்கேன்ல. மூணு நாள் குடிச்சிக்கிறேனே”

“எப்பிடியோ தொலை”

அவளிடம் இரவு பார்ட்டி ப்ளான் சொன்னேன். எக்கோடோ கெட்டு ஒழிங்க என்று சொல்லிக்கொண்டிருந்த போதே அவள் செல்ஃபோன் ஒலித்தது.

“ஹல்லோ”

“....”

“சொல்லுங்க மாமா”

பால்கனிக்கான கண்ணாடிக் கதவைத் திறந்து பால்கனிக்குள் போய் பேச ஆரம்பித்தாள். கதவு மூடிக்கொண்டதால் அவள் பேசுவது கேட்கவில்லை. கதவைத் திறக்க முயற்சி செய்ததைப் பார்த்துவிட்டு அங்கேயே இரு என்பது போலக் கையைக் காட்டினாள்.

வெளியே வரும்போது முகம் வெளிரியிருந்தது. “என்னாச்சு மாலா? இன்னொரு கடைசி நேர பெர்சுவேஷனா?”

“இல்ல. எங்கப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்காம். ஹாஸ்பிட்டல்ல அட்மிட் செஞ்சிருக்காங்களாம்”

பல நொடி மௌனத்துக்குப் பிறகு, “என்ன பண்ணப் போற?”

“ஊருக்குப் போய் பாத்துட்டு வரலாம்னு இருக்கேன்”

“இங்க பாரு மாலா, உங்க கல்யாணத்தை நிறுத்த இதுவும் ஒரு ட்ராமாவா இருக்கலாம். ரிஸ்க் எடுக்க வேண்டாம்” - செந்தில்.

“இல்ல தேவா. அவங்க சொல்றதப் பார்த்தா உண்மையாவும் இருக்கலாம். இன்னைக்குக் காலைல ராஜி, அதான் என் ஃப்ரண்ட், கல்யாணத்துக்குப் போய்ட்டு வந்ததுல இருந்தே ஒரு மாதிரியா இருந்தாராம். நெஞ்சு வலிக்குதுன்னு சொன்னதால கொண்டு போய் ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்க. டாக்டர்ஸ் ஹார்ட் அட்டாக்தான்னு சொன்னாங்களாம். எனக்கென்னவோ ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துடலாம்னு இருக்கு”

“மாலா காலைல தானே சொன்ன. போனா உன்னை ஒரு ரூம்ல போட்டுப் பூட்டியாவது நம்ம கல்யாணத்தை நிறுத்திடுவாங்கன்னு. இன்னும் மூணு நாள் தான் இருக்கு மாலா”

“ஒரு வேளை உண்மையா இருந்து எங்கப்பாவுக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா அப்புறம் என் வாழ்க்கை பூரா அதை நினைச்சி வருத்தப்பட்டாலும் எங்கப்பா திரும்ப மாட்டாரு தேவா”

“நீ சொல்றதும் சரிதான். ஆனா ஒரு வேளை நம்ம கல்யாணத்தை நிறுத்த அவங்க போடுற திட்டமா இருந்ததுன்னா? நம்ம கை மீறி செலவு செஞ்சிருக்கோம். அவ்வளவும் வேஸ்டாகிடும்”

“எங்கப்பா உயிரை விட எனக்கு காசு பெருசா தெரியலை. உனக்குப் பெருசா தெரியுதா?”

“ஐயோ அப்பிடி சொல்லலை மாலா...”

“நீ என்ன நினைக்கிறன்னு புரியுது தேவா. ஒரு வேளை இது டிராமாவா இருந்தா அவங்க என்ன செஞ்சாலும் என்னை நிறுத்த முடியாது அடுத்த பஸ் பிடிச்சி வந்துட்டே இருப்பேன். ஓக்கேவா?”

“இந்த கேரண்டி போதும் மாலா. கேபிஎன்ல டிக்கெட் போடவா?”

***********************************************************************************

கேபிஎன் ஆஃபிஸ் பொம்மனஹள்ளி. மாலா பேகை மார்போடு அணைத்தவாறு நின்றிருந்தாள்.

“மாலா பயப்படாத. உங்கப்பாவுக்கு ஒண்ணும் ஆகாது. தைரியமாப் போ. என்ன நிலவரம்னாலும் போனதும் ஃபோன் பண்ணு ஓக்கேவா?”

“ம்”

“உங்க மாமாவுக்கு ஃபோன் பண்ணி பஸ் ஸ்டாப்புக்கு வரச் சொல்லிட்டியா?”

“ம். சொல்லிட்டேன்”

“பிரச்சனை ஒண்ணுமில்லைன்னா எப்பிடியாச்சும் கிளம்பி வந்துடு. அப்பிடி முடியலைன்னா கால் பண்ணு நான் வந்து உன்னை தூக்கிட்டு வந்துர்றேன்”

“இவர் பெரிய பிரித்விராஜ். நான் சம்யுக்தை. தூக்கிட்டுப் போவாராம்” மதியத்துக்குப் பிறகு மாலா லேசாகச் சிரித்தாள்.

“இப்பிடியே சிரிச்சிக்கிட்டே போயிட்டு வா”

“நான் போறது இருக்கட்டும். நீ பார்ட்டின்னு போய் மூக்கு முட்டக் குடிச்சிட்டு எங்கயாச்சும் விழுந்து வைக்காத. அளவா குடிச்சிட்டு நேரத்துக்கு வீட்டுக்குப் போ. சரியா?”

“சரிங்க மேடம்”

சிரித்துக்கொண்டே பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தாள். 

ஒன்றும் ஆகாது என அனுப்பி வைக்கிறேன். திரும்பி வந்துவிடுவாளா?? அவள் வீட்டில் ஏதாவது செய்து அவளை நிறுத்திவிடுவார்களா? இல்லை உண்மையிலே அவள் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருந்து வேறு எதுவும் ஆபத்தாகிவிடக்கூடாது என்று அவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு வீட்டிலேயே இருந்துவிடுவாளா?? இத்தனை கேள்விகளுக்கும் விடை சொல்லாமல் கே.பி.என் பஸ் என் முகத்தில் புகை விட்டுவிட்டு கிளம்பியது. பஸ் என் கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்துக்கொண்டே நின்றிருந்தேன்.

*********************************************************************************************
*********************************************************************************************
*********************************************************************************************

ஐந்து வருடங்களுக்குப் பிறகு. நியூ யார்க். டெக்கில் நின்று ஃபோன் பேசிக் கொண்டிருந்தேன். உள்ளே கிச்சனுக்கும் லிவிங் ரூமுக்கும் ஓடிக்கொண்டிருந்தான் தமிழ்மாறன். அவனுக்கு எப்படியாவது சாப்பாடு ஊட்டிவிட வேண்டுமென்ற லட்சியத்தோடு பின்னாலே ஓடிக்கொண்டிருந்தாள் அவள்.

“டேய் நான் தான் சொன்னேன்ல. லவ் சக்ஸஸ் ஆகணும்னா பொண்ணு உறுதியா இருக்கணும். இல்லைன்னா கஷ்டம் தான்”

ஸ்லைடிங் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள். “நாலு வயசாச்சி. இன்னமும் ஊட்டி விட வேண்டியிருக்கு. அரை மணி நேரமா பின்னாடியே ஓடிட்டு இருக்கேன். உன் மகன் சாப்பிடுவேனான்னு அடம் பிடிக்கிறானே. நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணக் கூடாதா?”

“இந்தா வர்றேன்” “மச்சி அப்புறம் கூப்புடுறேண்டா” ஃபோனை அணைத்துவிட்டு நான் தமிழ்மாறன் பின்னால் ஓடத் தயாரானேன். வெளியே அறிவிக்கப்பட்ட ஸ்னோ ஸ்டார்மின் முதல் ஸ்னோ விழத் தொடங்கியிருந்தது.

(முற்றும்)

Wednesday, March 6, 2013

இதுவும் ஒரு காதல் கதை - 24



“கோரமங்களா கணேஷா டெம்பிள். அங்க காலைல கல்யாணத்தை முடிச்சிட்டு, ஈவினிங் ரிசப்ஷன் எங்கயாவது ஒரு ஹோட்டல்ல வச்சிக்கலாம். நம்ம ஆஃபிஸ் கொலீக்ஸ், உன் காலேஜ் ஃப்ரண்ட்ஸ் மாலாவோட ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் கூப்புடுடலாம். இன்விட்டேஷன் அடிக்கணும்னா என் கல்யாணத்துக்கு அடிச்சேனே அதே ப்ரஸ்ல அடிச்சிக்கலாம். இப்ப தேதி முடிவு பண்ணுங்க, பட்ஜெட் முடிவு பண்ணுங்க. முழு ப்ராசஸ்லயும் உங்க கூட நான் இருக்கேன்”

“அப்ராக்ஸிமேட்டா எவ்வளவு ஆகும்னு எஸ்டிமேட் பண்ற?” என் கேள்விக்கு முறைத்தாள் மாலா.

“இல்ல மாலா, எவ்வளவு ஆகும்னு தெரிஞ்சா அந்தப் பணத்தை ரெடி பண்ணலாம்ல? அதான் கேட்டேன்”

“எவ்வளவு ஆனாலும் பரவாயில்லடா. கிராண்டா இருக்கணும். அவ்வளவுதான்”

“சரிடா எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை. இந்த ஐடியா நல்லா இருக்கு. நமக்கு வரப்போற 100, 200 பேருக்காக பெரிய கல்யாண மண்டபம் புக் பண்றது எல்லாம் நல்லாவும் இருக்காதுதான். லே மெரிடியன்ல ஹால் என்ன ஆகும்னு விசாரிக்கலாம்”

லெ மெரிடியன் பெயரைக் கேட்டதும் மாலாவின் முகம் பிரகாசமானது.

“அப்புறம் எனக்கு கொஞ்சம் ஜ்வெல்ஸ் வாங்கணும்”

“உங்க அம்மா வீட்டுல அதெல்லாம் போடமாட்டாங்களா?” குறும்பாகக் கேட்டான் செந்தில். மாலா முறைக்கவே “சும்மாதான்யா கேட்டேன். உடனே முறைக்காத” என்று பம்மினான்.

“இது தை மாசம். இன்னும் மூணு மாசம் கழிச்சின்னா”.. விரல் விட்டு எண்ணினான், “மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி. வைகாசி முகூர்த்தம் அதிகமா இருக்கிற மாசம். கல்யாண சம்மந்தப்பட்ட எல்லா ஐட்டமும் கொஞ்சம் எக்ஸ்பென்சிவாவே இருக்கும். பரவாயில்லையா?”

பரவாயில்லை என்பது போல தலையசைத்தேன். “கல்யாணம்ங்கிறது வாழ்க்கையில ஒருக்கா பண்ணப் போறோம். அது நல்ல முகூர்த்தத்துலயே செஞ்சிக்கலாம். நோ ப்ராப்ளம்” மாலா அங்கீகரிக்கும் பார்வை ஒன்றை பரிசளித்தாள். நீண்ட நேரத்துக்குப் பிறகு அவள் முகத்தில் மெலிதான புன்னகையும் பூத்தது. இரண்டு விரலால் அவள் வாயின் ஓரங்களைப் பிடித்து அகலமாக்கி, “கொஞ்சம் பெருசாத்தான் சிரிச்சா என்ன?” என்றேன்.

அவளின் ட்ரேட் மார்க்கான் தலையைச் சாய்த்து கண்களைச் சுருக்கி சிரித்தாள்.

அன்றைய பொழுது சந்தோஷமாகக் கழிந்தது.

***********************************************************************
அடுத்தடுத்த மாதங்கள் வேக வேகமாக ஓடின. லெ மெரிடியனில் 150 பேர் கொள்ளுமளவுக்கு ஹாலும் உணவும் புக் செய்தோம். மாலாவுக்கு பீமா ஜுவல்லரிஸில் ஒரு நெக்லெஸ், ஒரு ஆரம், தாலிச் செயின், தாலி ஆகியவை வாங்கினோம்.

பட்ஜெட் போட்டதில் இருவரின் பேங்க் பேலன்ஸையும் தாண்டி செலவாகும் போல இருந்தது. பல யோசனைகளுக்குப் பிறகு கூடுதல் தொகைக்கு எச்.டி.எஃப்.சி பேங்கில் பெர்சனல் லோன் போட்டேன். திருமணம் முடிந்த கையோடு நியூயார்க்கில் ஒரு ப்ராஜெக்டில் சேர இருவருக்கும் வாய்ப்பு தேடித் தந்தார் என் மேனேஜர் (அட்வான்ஸ் மேரேஜ் கிஃப்டா வச்சிக்கோப்பா).

திருமணப் பத்திரிகையைப் பார்த்துப் பார்த்து வார்த்தைகள் கோர்த்து மாலாவும் நானும் டிசைன் செய்தோம். இன்விட்டேஷன் கார்ட் செலக்ட் செய்து 300 கார்ட் அடித்தோம். என் நண்பர்கள், மாலாவின் நண்பர்கள் எல்லோரையும் நேரில் பார்த்து பத்திரிகை கொடுத்தோம். திண்டுக்கல்லில் என் கல்லூரி தோழர்கள் இருவர் வீடு இருந்தது. அவர்களுக்குப் பத்திரிகை வைப்பதோடு, மாலாவின் வீட்டுக்கும் பத்திரிகை வைக்கலாம் என்ற ஐடியாவை வைத்தாள் மாலா.

“மாலா இதெல்லாம் சரிப்பட்டு வராது. பொண்ணு கேட்டு உங்க வீட்டுக்கு வந்தப்ப என்ன ஆச்சோ அதேதான் நடக்கும். இதெல்லாம் ரிஸ்க். சொன்னாக்கேளு”

“இல்லடா. ஒரு கல்லு விட்டுப் பாப்போமே.. ப்ளீஸ் எனக்காக...”

“சரி. போலாம். ஆனா பஸ் விட்டு இறங்கினதும் நீ நேரா உங்க வீட்டுக்குப் போ, நான் என் ஃப்ரண்ட் வீட்டுக்குப் போறேன். உங்க வீட்டுல இந்த விசயத்தைச் சொல்லு. அவங்க ரியாக்‌ஷன் பாத்துட்டு ஃபோன் பண்ணு. நான் வர்றேன். தேவையில்லாம பிரச்சனை பண்ண வேண்டாம். ஓக்கே?” என் கண்களையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஓகேடா. அப்பிடியே செஞ்சிக்கலாம்”

கேபிஎன் பஸ். திண்டுக்கல் பைபாஸில் இறங்கினோம். ஆட்டோ பிடித்து மாலா வீட்டு முனையில் இறக்கிவிட்டுவிட்டு என் நண்பன் வீட்டுக்குப் போனேன்.

மதியம் இரண்டு மணி போல மெசேஜ் வந்தது. “DROP THE INVITING PLAN. WE ARE LEAVING TO BANGALORE TONIGHT. MEET YOU @ BUSSTAND" தந்தி போல அனுப்பியிருந்தாள். நான் எதிர்பார்த்தது போலவே குடும்பமே சேரந்து கட்டி ஏறியிருப்பார்கள் போல. ஃபோன் செய்யக் கூட முடியவில்லை.

இரவே இருவரும் திரும்பினோம். பஸ் ஏற்றிவிட அவள் மாமா செல்வம் வந்திருந்தார். அவர் என்னைப் பார்த்த பார்வையில் சினேகம் கொஞ்சம் கூட இல்லை. பஸ்ஸில் போகும் போது “மாமா முறைச்சாரேன்னு தப்பா எடுத்துக்காதடா. அவருக்கு எதையும் மனசுல வச்சிக்கத் தெரியாது”

“அதெல்லாம் பரவாயில்ல மாலா. ஆனா எனக்கு ஒரு விசயம் ஆச்சரியமா இருக்கு”

“என்ன?”

“ஒரு வேளை நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் உங்க வீட்டுல நம்மளை ஏத்துக்கிறாங்கன்னு வச்சிக்கோ, உங்க மாமா என் முகத்துல எப்பிடி முழிப்பாரு?”

“ம்ம்.. உங்கப்பா எப்பிடி என் முகத்துல முழிப்பாரோ அதே மாதிரிதான்” வாயை மூடிக்கொண்டேன்.

*********************************************************************************

திருமணத்துக்கு இரண்டு வாரங்கள் இருக்கும்போது மாலாவிடம் இருந்து மெசேஜ் வந்தது, “Come here ASAP". அவள் சீட்டுக்குப்போய் பார்த்தேன் அங்கே அவள் இல்லை. கால் செய்த போது வீட்டில் இருப்பதாகச் சொன்னாள். செந்திலிடம் பைக்கை ஓசி வாங்கிக் கொண்டு கிளம்பினேன்.

கதவைத் தட்டியதும் மாலா வந்து திறந்தாள். ஹாலில் ஃபர்னிச்சர்கள் எதுவும் இல்லாமல் ஒரு டபுள் மெத்தை விரிக்கப்பட்டு அதன் மீது இரண்டு தலையணைகளும் திண்டுகளும் பரப்பப்பட்டிருக்கும். அந்த மெத்தையின் மீது உட்கார்ந்திருந்தார் மாலாவின் அப்பா.

'இதுக்குத்தான் கூப்புட்டியா’ என்பதான ஒரு பார்வையை மாலாவின் பக்கம் வீசிவிட்டு அவரை ஏறிட்டேன்.

“இங்க பாருங்க தம்பி. நீங்க ரெண்டு பேரும் இப்பிடிக் கல்யாணம் பண்ணிக்கிறதுல எங்களுக்கு எல்லாம் சம்மதமில்லை. மாலா எங்களுக்கு ஒரே பொண்ணு. அவ இப்பிடி ஓடிப்போய் கல்யாணம் செஞ்சிக்கிட்டா நல்லா இருக்காதுன்னு சொந்தக்காரங்க எல்லாரும் சொல்றாங்க”

(அடுத்த பாகத்தில் முடியும்)