Monday, January 30, 2012

பரமபதம் - 3

பாகம்-1 பாகம்-2


ஈசிஆர், சென்னையின் சமீபத்திய யூத் ஜாயிண்ட். ரோடு முழுக்க தாபாக்களும் ரெஸ்டாரண்டுகளும் சிதறியிருக்கின்றன. அப்படி ஒரு தாபாவில் முத்துவும், சுரேஷும் எதிரெதிராக உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுக்கு நடுவில் ஒரு கோழி செத்து தந்தூரியாகக் கிடந்தது.
“சரி திட்டத்தைச் சொல்லு
“ம். டெக்கோலிக் ஆசிட் பத்தி கேள்விப்பட்டிருக்கியா?
“டெக்கோலிக் ஆசிடா? அது என்ன
“அதோட கெமிக்கல் ஃபார்முலாவெல்லாம் சொல்லவரலை நான். அதை தக்காளி சூப்ல கலந்தா தக்காளியோட அசிடிட்டியோட சேர்ந்து அது ஹார்ட் பேஷண்ட்ஸ்க்கு ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஹார்ட் பர்ன் மாதிரின்னு வச்சிக்கோயேன். ஆனா, அந்த அசௌகரியம், அவங்களுக்கு ஹார்ட் அட்டாக் மாதிரி ஃபீலாகும். உயிருக்கு ஒண்ணும் ஆபத்து வந்திராது
“சரி. அதை வச்சி என்ன செய்யப் போறோம்?
“பெருசுக்கு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி பைபாஸ் சர்ஜரி செஞ்சிருக்கு. அதிலருந்து பெருசு ட்ரிங்க்ஸ் தொடுறதையே விட்டுருச்சி. எங்க போனாலும் டொமட்டோ சூப் மட்டும் தான். உங்க பாருக்கு சரக்கை கைமாத்த வரும்போதும், அதைத்தான் ஆர்டர் பண்ணும். அந்த டொமட்டோ சூப்ல, டெக்கோலிக் ஆசிடை நீ கலக்கணும்
“அய்யோ நானா?
“நீ செய்யாம? அதுக்குத்தாண்டா உனக்கு ரெண்டு கோடி
“இல்லடா. நான் பார்ல நிக்கிறேன். நான் எப்பிடி சூப்ல கலக்க முடியும்?
“எப்பிடி செய்யன்னு என்கிட்ட கேக்காத. அதையும் நானே சொல்லிக் குடுத்து ரெண்டு கோடியையும் சொளையா குடுக்க நான் என்ன கேணையனா? எப்பிடிச் செய்யப்போறங்கிறதை நீயே முடிவு பண்ணிக்கோ. ஆனா, கலந்துரணும். அதுல ஏதாவது சொதப்புன? மவனே நீ எங்க போனாலும் விடமாட்டேன். தேடி வந்து வெட்டுவேன்
“ஏய் என்ன? இப்பிடிப் பேசுற? எப்பிடியாவது செய்யறேன். ஆனா நீ முதல்ல மொத்த ப்ளானையும் என் கிட்ட சொல்லு
“சரி. இதான் ப்ளான்ஒரு நாப்கினை எடுத்து பேனாவால் ஒரு செவ்வகம் வரைந்தான். இரண்டு பக்கமும் இரண்டிரண்டு வட்டம் வரைந்தான். செவ்வகத்தின் ஒரு பக்கம் அலை போல வரைந்தான்.
“இதுதான் டேபிள். நாங்க நாலு பேரும் இப்பிடித்தான் உக்காந்திருப்போம். நான் உன்கிட்ட அன்னைக்கிக் காலையிலயே ஒரு பெட்டியைக் குடுத்து வச்சிருவேன். நாங்க உள்ள வர்றதுக்கு முன்னாடி நாங்க உக்காரப் போற டேபிளுக்குப் பக்கத்துல இருக்கிற இந்த ஸ்கீரினுக்குப் பின்னாடி ஒளிச்சி வச்சிடணும். நானும் பெருசும் சரக்கோட வருவோம். பவுடர் ரவியும் அவனோட ஆளும் பெட்டியில பணத்தோட வருவாங்க. பெட்டிகளை மாத்தினதும், நான் பாத்ரூமுக்குள்ள போய் பணம் சரியா இருக்கான்னு செக் பண்ணிட்டு வருவேன். அடுத்து அவங்க ஆள் சரக்கு சரியா இருக்கான்னு பாத்துட்டு வருவான். அப்புறம் பெருசும் ரவியும் ஏரியா பிரச்சனைகள் பத்தி பேசுவாங்க. அப்ப பெருசுக்கு உன் சூப்பைக் குடுச்சதால ஹார்ட் அட்டாக் வரும்
“திடீர்னு ஹார்ட் அட்டாக் வந்தா சந்தேகம் வராதா?
“சந்தேகம் வரும். சந்தேகம் வராம இருக்க ஒரு ஏற்பாடு செஞ்சிருக்கேன்
“என்ன ஏற்பாடு?
“அது எதுக்கு உனக்கு?”
“ஏய் என்னப்பா. நானும் உன்னோட பார்ட்னர்தானே? அதோட முழு திட்டத்தையும் சொன்னா அதுல ஏதாவது லூப்ஹோல் இருந்தா சொல்லுவேன்ல?
சுரேஷ் முத்துவை முறைத்தான். “சூப் குடிச்சதும் எஃபெக்ட் வராது. அந்த எஃபெக்ட் வரப்போற சிம்ப்டம்ஸ் தெரிஞ்சதும், ரவியோட ஆள் ஒருத்தன் வந்து போலீஸ் வர்றாங்கன்னு சொல்லுவான். எடத்தைக் காலிசெஞ்சாவணுங்கிற பதட்டத்துலதான் ஹார்ட் அட்டாக் வந்துட்டதா நினைப்பாரு பெருசு. போலிஸ் வருதுங்கிற பதட்டமும் ஹார்ட் அட்டாக் மாதிரி நெஞ்சு வலிக்கிற பதட்டமும் சேர்ந்து குழப்பம் வந்துரும். அந்தக் குழப்பத்துல நான் ஸ்க்ரீனுக்குப் பின்னாடி இருக்கிற பெட்டியோட பணப்பெட்டியை மாத்தி வச்சிட்டு பெருசை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுக் கிளம்பிருவேன். நீ ஸ்க்ரீனுக்குப் பின்னாடி இருக்கிற பெட்டியை எடுத்து பார்க்கிங்க்ல நான் ஏற்கனவே நிறுத்தியிருக்கிற காரோட டிக்கியில வச்சிரு. பெருசை ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணிட்டு, நேரா இங்க வந்து காரை எடுத்துக்கிட்டு ஜூட் தான். பெருசு ஆஸ்பத்திரியில இருந்து திரும்பி வந்து பணம் காணோம்னு தெரிஞ்சிக்கிறதுக்குள்ள நான் எஸ்கேப் ஆகியிருப்பேன்.
முத்து ஒன்றும் சொல்லாமல் சுரேஷைப் பார்த்தான்.
“என்ன பாக்குற? எதுவும் லூப் ஹோல் தெரியுதா?
“போலிஸ் வருதுன்னு சொல்லப்போற அந்த ஆள் யாரு? அவனும் உன்னோட திட்டத்துல பார்ட்னரா?
“இல்லை. அவன் ஒரு அள்ளக்கையி. அவன் கிட்ட நான் எந்தத் திட்டத்தையும் சொல்ல மாட்டேன். சும்மா ஒரு இருவதாயிரம் ரூவா குடுத்து இந்த நேரத்துல இப்பிடி வந்து சொல்லுன்னு மட்டும் சொல்லிருவேன். அவனும் காசுக்காக வந்து சொல்லுவான். அவனுக்கு அதுல என்ன லாஸ்?
“ஆளை ஏற்கனவே பிடிச்சிட்டியா?
“இன்னும் இல்லை. உன் கூட பேசிட்டு அடுத்ததா அவனைத்தான் பார்க்கப் போறேன்
முத்து மௌனமாக சுரேஷைப் பார்த்தான்.
“வேற எதாவது கேள்வி இருக்கா?
“ஒரு வேளை போலீஸ் வந்திருச்சின்னா என்ன செய்வ?”
“ஏண்டா அபசகுனமா பேசுற? திட்டம் உன்னையும் என்னையும் தவிர எவனுக்கும் தெரியாது. நீ போலீஸ் கிட்ட சொன்னாத்தான் உண்டு
“டேய். நான் ஏன் போலீஸ்கிட்ட போகப் போறேன். உன் திட்டம் யாருக்கும் தெரியாது. ஆனா சரக்கு கை மாத்தப் போறீங்கங்கிற விசயம் போலீஸ்க்குத் தெரிஞ்சா?
“போலீஸ் வந்தா என்ன செய்ய முடியும்? பெருசும் சரி நானும் சரி, போலீஸ் கிட்டருந்து தப்பிக்கத்தான் முயற்சி பண்ணுவோம். அங்கயே அரெஸ்ட் ஆவ மாட்டோம். சோ, துப்பாக்கி சண்டை போட வேண்டியிருக்கும். பெட்டியை ஸ்க்ரீனுக்குப் பின்னாடி மாத்தி வச்சிருந்து, போலீஸ் துப்பாக்கிக் குண்டுக்குத் தப்பி உயிர் பிழைச்சிருந்தா ரெண்டு கோடி. இல்லைன்னா ஜெயில்ல களி திங்க வேண்டியதுதான். ஆனா உசிர் போனாலும் பெருசை ஏமாத்தத் திட்டம் போட்டது வெளிய தெரியாமப் பாத்துக்குவேன். ஏன்னா பெருசு கையால கிடைக்கிற சாவு கொடூரமா இருக்கும்.
“ஒரு ஐடியாவுக்குத்தான் கேட்டேன்
“சரிடா. நான் கிளம்பறேன். உன்னைய பார்ல விட்டுறவா?
“வேணாம். நான் ஆட்டோ பிடிச்சி போய்க்கிறேன். நீ போ
ஈ.சி.ஆரின் வெயிலில் ஐ-10 மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ஃபோனில் கார்த்திக்கின் நம்பரை ஒத்தினான். கார்த்திக் சார். முத்து. சுரேஷ் முழு ப்ளானையும் என்கிட்ட சொல்லிட்டான்
...
“சரி சார். ஈசிஆர்ல இருக்கிற தாபா.
...
“அதேதான் சார். வாங்க நான் இங்கயே இருக்கேன்
ஃபோனை வைத்துவிட்டு தட்டில் இருந்த தந்தூரி சிக்கனை எடுத்துக் கடித்தான்.
சிட்டி செண்டர் மால். மூன்றாவது மாடியில் இருக்கும் FruitPunchல் சாத்துக்குடி ஜூஸ் ஒன்றை வாங்கிக்கொண்டு ஃபுட் கோர்ட்டில் இருந்த சேர் ஒன்றில் உட்கார்ந்தான். பக்கத்து சேரில் உட்கார்ந்திருந்தவன் கே.எஃப்.சியின் சிக்கனை வறுத்த கோழியை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தான்.
“ரொம்ப நேரமா வெயிட் பண்றியா?
“இவ்வ இவ்வவ்வான் வவ்வேன்வாயில் சிக்கனோடு பேசினான்.
“தின்னுட்டுப் பேசு. ஒண்ணும் புரியலை
கோக்கைக் குடித்துவிட்டு ‘ஏவ்வ்வ்வ்சத்தமாக ஏப்பம் ஒன்றை வெளியேற்றினான்.
“சொல்லு. இன்னா மேட்டரு?”
“உனக்கு இருவத்தாஞ்சியிரம் சம்பாதிக்க ஆசையா?
“நீ இன்னாத்துக்கு எனக்கு இருவத்தாஞ்சியரம் குடுக்குற
“ஒரு சின்ன வேலை செய்யணும்
“என்ன வேலை?
“நாளைக்கழிச்சி என்ன நடக்கப் போவுதுன்னு உனக்குத் தெரியும்னு நினைக்கிறேன்
“தெரியும். அதுக்கென்னா இப்போ?”
“அதுல பெட்டி கை மாறினவுடனே நான் ஒரு மிஸ்டு கால் குடுப்பேன். நீ பாருக்குள்ள வந்து உங்க தல ரவிக்கிட்ட போலீஸ் வருதுன்னு மட்டும் சொல்லணும்
“இன்னாத்துக்கு சொல்லணும்?
“சரி விடு நான் வேற ஆளைப் பாத்துக்குறேன். எச்சிக்கைய உதறுனா ஆயிரம் காக்கா
“யேய் இருமா. முணுக்குங்கிற. சரி சொல்றேன். ஆனா 25 பத்தாது. 45ஆக் குடுத்துரு
“அது என்ன 30?
“என் டாவு ரொம்ப நாளா ஐஃபோன் ஒண்ணு கேட்டுட்டு இருக்கு. அதுக்குத்தான்
“சரி போ. 45 ஆயிரமா வச்சிக்கோ. இந்தா இதுல பத்தாயிரம் இருக்கு. அட்வான்ஸ்ஒரு கவரை மேஜையில் சிக்கன் ப்ளேட்டுக்குப் பக்கத்தில் வைத்து விட்டு எழுந்தான். ஜூஸின் கடைசி சொட்டை உறிஞ்சி கப்பைக் குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டு வெளியேறினான்.
தான் அவன் ப்ளானா?
“ஆமா சார்
கார்த்திக்கின் கார் தாபாவிலிருந்து பாரை நோக்கிப் போய்க்கொண்டிருந்த்து.
“ம்ம். எங்களுக்கும் நார்க்காட்டிக்ஸுக்கும் நல்ல வேட்டைதான் அன்னைக்கி. நான் பாத்துக்குறேன்
“சார் என்னய மட்டும்..
“அட என்ன முத்து நீ. கீறல் விழுந்த ரிக்கார்ட் மாதிரி அதையே சொல்லிக்கிட்டுருக்க. உன்னைக் காப்பாத்த வேண்டியது என் பொறுப்பு. போதுமா?
“சரி சார்
பாரில் முத்துவை இறக்கிவிட்டுவிட்டு செல்ஃபோனை எடுத்து,
“சுகுமார்
“சொல்லுங்க கார்த்திக். என்ன விஷயம்
“உங்களுக்கு ஒரு பெரிய வேட்டை காத்துக்கிட்டிருக்கு
த்து மணி வசூலை முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தான் சுரேஷ். காரில் பெட்ரோல் சிவப்பைத் தொட்டுக்கொண்டிருந்தது. வழியில் இருந்த அந்த பெட்ரோல் பங்கில் திருப்பி நிறுத்தினான். அவனைத் தொடர்ந்து ஒரு டூவீலரும் உள்ளே நுழைந்த்து. காரை விட்டு இறங்கிய சுரேஷ், ஃபுல் டேங்க் என்று சொல்லிவிட்டு சிகரெட் பிடிப்பதற்காக பங்கை விட்டு வெளியே வந்தான்.
திட்டத்தை மனசுக்குள் அசை போட்டுக்கொண்டே சிகரெட்டை முடித்துவிட்டு உள்ளே போனான். பில்லை வாங்கி பணத்தை எண்ணிக் கொடுத்துவிட்டு காரில் ஏறினான். பங்கை விட்டு வெளியே வந்து ரோட்டைத் தொட்டதும்,
“அப்பிடியே ஓரமா நிறுத்து. இல்லைன்னா மூளை சிதறிடும்
தலையில் பிஸ்டல் முனையின் சில்லிப்பை உணர முடிந்தது. காரை ஓரமாக நிறுத்தியதும், பிஸ்டலின் பின்பக்கத்தால் தலையில் அடிபட்டு மயங்கினான்.
(தொடரும்)

அடுத்த பாகம் இங்கே

பரமபதம் - 2

பாகம் - 1


ஹேங் ஓவர் தலைவலி சுரேஷுக்கு மண்டையைப் பிளந்தது. டிவியில் தல இனிமே தண்ணியே அடிக்கக் கூடாதுடா சாமிஎன்று சொல்லிக் கொண்டிருந்தார். அவன் ரூம் மேட், அஜித் ரசிகன், டிவியில் வைத்த கண்ணை மாற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவிழ்ந்திருந்த லுங்கியை இறுக்கிக் கட்டிக் கொண்டு, “என்னடா ஆஃபீஸ் போகலையா?” என்று அவனைப் பார்த்து கேட்டுவிட்டு தலையணைக்குக் கீழிருந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்து ஒன்றை உருவிப் பற்ற வைத்தான்.
இன்னைலருந்து செகண்ட் ஷிஃப்ட்வாய் மட்டும் பதில் சொன்னது, கண் டிவியிலேயே.
திருட்டு டிவிடியா?? போனவாரம் தானடா தியேட்டருக்குப் போய் பார்த்த?”
நேத்து நைட் ஷோ கூடத்தான் போனேன்
டேய்!!. அப்பிடி என்னடா இருக்கு இதுல?” என்றவாறே எழுந்து கையில் பேப்பரை எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான். கண்ணாடிக்குப் பின்னால் சொருகியிருந்த பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு வெஸ்டர்ன் டாய்லெட்டில் உட்கார்ந்தான். பேப்பரில் ஒன்றன்கீழ் ஒன்றாக எழுதியிருந்ததில் முதல் வரியை அடித்தான். சிறிது நேரம் யோசித்து விட்டு இன்னும் இரண்டு வரிகள் எழுதினான். மற்ற வேலைகளை முடித்துவிட்டு வெளியேறி ஆட்டோ பிடித்தான்.
 “வணக்கம்ணே!! பெருசு எந்திரிச்சிட்டாரா??” வாசலில் நின்றிருந்த பென்ஸைத் துடைத்துக் கொண்டிருந்த கணேசனைப் பார்த்துக் கேட்டான்.
ஹாங். அதெல்லாம் அரை மணி நேரத்துக்கு முந்தியே எந்திரிச்சிட்டாரு. உன்னையத்தான் எதிர்பார்த்துட்டு இருக்காரு போ
கணேசன் பெருசுவின் ஆஸ்தான ட்ரைவர். எங்கே போவதென்றாலும் கணேசன் இல்லாமல் போகமாட்டார். கணேசனும் பெருசுவின் வீட்டிலேயே ஒரு அறையில் தங்கியிருக்கிறார். அவரது குடும்பம் குழந்தை குட்டி பற்றி யாரிடமும் பகிர்ந்து கொண்டதே இல்லை. பெருசுவிடம் கூட சொல்லியிருக்கிறாரோ என்னவோ.
பெருசு உள்ளே சோஃபாவில் உட்கார்ந்திருந்தார். முன்னால் இருந்த டீப்பாயின் மேல் தக்காளி சூப் ஆவி பறக்க வைக்கப்பட்டிருந்தது.
வாடா!! இன்னைலருந்து வசூலை மட்டும் வாங்கிட்டு வா. சரக்கு கொண்டு போகவேண்டாம். இருக்கிற சரக்கை வித்தா போதும்
சரிங்கண்ணே
நாளைக்கழிச்சி சரக்கைக் கைமாத்தப் போறோம் யாவகம் இருக்குல்ல?”
இருக்குண்ணே
நீதாண்டா பக்கத்துல இருக்கணும். சூரியை போலிஸ் என்கவுண்டர்ல போட்டுட்டாய்ங்க. தெரியும்ல?”
அண்ணே சூரி கேஸ் ஆக்சிடெண்டுன்னு போலீஸ் சொல்லுது?..
என்னடா ஆக்சிடண்டு. திட்டம் போட்டுத்தாண்டா போலிஸ்காரப்பயலுவ செஞ்சிருக்காய்ங்க. சூரி நம்மாளுன்னு ஒரு பயலுக்கும் தெரியாம வச்சிருந்தேனே. எப்பிடி மோப்பம் புடிச்சானுங்கன்னுதான் தெரியலை. அந்தப் போலீஸ்காரனை என் கையால...சரி அத விடு. சூரியோட எடத்துல உன்னையத்தான் வைக்கலாம்னு இருக்கேன்
சரிண்ணே
சரி. நாளைக்கி சாயந்தரமா அந்த பாருக்குப் போய் நோட்டம் விட்டுட்டு வந்துரு. கூட ஒரே ஒருத்தனைத்தான் கூட்டிட்டு வரணுன்னு கண்டிசன் போட்டுருக்கான். நீ எதுக்கும் நம்ம பயலுக ரெண்டு பேரை தயாரா வெளிய நிக்கச்சொல்லு. சரியா??”
சரிண்ணே. நான் வசூலுக்குப் போயிட்டு வந்துர்றேன்
ம்
தக்காளி சூப்பை கோப்பையோடு எடுத்து ஒரே மூச்சில் குடித்து முடித்தார் பெருசு. பெருசுக்கு பைபாஸ் சர்ஜரி செய்ததில் இருந்து சரக்கு பக்கம் மூக்கைக் கூட வைப்பதில்லை. சிகரெட், பான்பராக் என அத்தனை கெட்டபழக்கங்களையும் விட்டுவிட்டு ஆரோக்ய வாழ்வினைக் காப்பது முக்கியம் என்று திருந்தி விட்டது. சரக்கு விற்கும் தொழிலை விட்டொழிக்க வேண்டும் என்று நினைத்ததற்கும் அதுதான் காரணம்.
இன்னோவாவில் தாவி ஏறிய சுரேஷ் ப்ளூடூத் ஹெட்செட்டை எடுத்து காதில் மாட்டிக்கொண்டான்.
கோடம்பாக்கம் பிரிட்ஜில் ஏறிக்கொண்டிருந்த போது கால் வந்தது. ஹலோ
“சுரேஷ் எனக்கு ரொம்ப பயமா இருக்கு. மாட்டிக்க மாட்டேனே
முத்து நாந்தான் சொன்னேன்ல. உனக்கு எந்தப் பிரச்சனையும் வராதுன்னு. சரி நீ இப்ப எங்கருக்க?”
வீட்ல
லன்சுக்கு மீட் பண்ணுவோமா?? அப்ப உன்கிட்ட முழு திட்டத்தையும் சொல்றேன். அதுக்கப்புறம் உனக்குப் பிரச்சனை வருதா இல்லையான்னு சொல்லு. சரியா?”
சரி. எங்க மீட் பண்ணுவோம்?”
நீ பார்லயே இரு. நான் வந்து கூட்டிட்டுப் போறேன்
சரி
முத்து ஃபோனை அணைத்து விட்டு சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே வந்து பைக்கில் ஏறி கிளம்பினான். பாருக்கு வெளியே பார்க் செய்துவிட்டு சிகரெட் எடுத்து பற்ற வைக்கும்போது அவன் வந்தான். நெடு நெடுவென்று ஆறடிக்கும் மேல் உயரம். ஒட்ட வெட்டிய முடி. கண்ணை மறைக்கும் கருப்பு கூலிங் க்ளாஸ். உடலை இறுகப் பிடித்த ரவுண்ட் நெக் டி ஷர்ட். பெல் பாட்டம் ஜீன்ஸ். தீப்பெட்டி இருக்கா?”
பதில் சொல்லாமல் சிகரெட் லைட்டரை நீட்டியதும் வாங்கி சிகரெட்டைப் பற்றை வைத்துக் கொண்டே, “முத்துதானே?”
ஆமா. உங்களுக்கெப்பிடி என் பேரு?”
உங்க பேரு மட்டுமில்லை. உங்க ஜாதகமே இன் கையில இருக்கு. வர்றீங்களா அப்பிடி கார்ல உக்காந்து பேசுவோம்?”
என்ன பேச? நீங்க யாருன்னே தெரியாது சார். உங்கக்கிட்ட பேச எனக்கு ஒண்ணுமில்லை
சரி! பேச வேண்டாம். நீங்க பார்க்குறது ஒண்ணு காட்டுறேன். அதைப் பாருங்கஎன்றவாரு பைக்குள்ளிருந்த ஐ ஃபோனை எடுத்து ஒரு வீடியோவை முத்து முன் ஓட்டிக் காட்டினான். முத்துவின் முகம் டாப் ஆங்கிளில் தெள்ளத் தெளிவாகப் பதிந்திருந்தது அந்த வீடியோவில். சுரேஷின் தலை மட்டுமே பதிவாகியிருந்தது. சுரேஷும் முத்துவும் தனலட்சுமி மெஸ்ஸில் பேசிக்கொண்டிருந்த காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தன.
என்ன முத்து? இப்பவவாவது கார்ல ஏறுறியா?” ஒருமைக்குத் தாவிவிட்டு திரும்பிப் பார்க்காமல் காரை நோக்கி நடந்தான். முத்து காரின் பேசஞ்சர் சீட்டில் ஏறியதும் என் பேர் கார்த்திக். கிரைம் ப்ராஞ்ச். ஸ்பெஷல் ஸ்குவாட் என்று கையை நீட்டினான்.
முத்து போலீஸா??” என்று அதிர்ச்சியை முகம் முழுக்கக் காட்டினான். மாட்டிக்க மாட்டேன்னு சொன்னானே. இப்பிடி விசயத்தை ஆரம்பிக்கிறதுக்குள்ள மாட்டிக்கிட்டேனே? அய்யோ! தங்கச்சிங்க கல்யாணம், அப்பா அம்மாவுக்கு வீடு எல்லாம் அம்போவா??’ என்று மனம் பலதையும் எண்ணிக் குழம்பிக் கொண்டிருந்தது.
சார் எனக்கு ஒண்ணும் தெரியாது சார். இந்த சுரேஷ் எனக்கு ஃப்ரண்ட்லாம் கிடையாது சார். சின்ன வயசுல ஒண்ணாப் படிச்சிருக்கோம். பாருக்கு வந்தப்போ திரும்ப பழகிக்கிட்டோம். அவ்வளவு தான் சார். தயவு செஞ்சி என்னைய விட்டுருங்க சார்
எல்லாம் தெரியும் முத்து. நீ நாங்க சொல்றதுக்கு ஒத்துழைச்சா உன்னைய இந்தக் கேஸ்ல மாட்டிக்காம தப்பிக்க வச்சிடுறேன். ஓக்கேவா??”
நீங்க என்ன சொன்னாலும் செய்யிறேன் சார். என்னையக் காப்பாத்துங்க சார். எனக்கு ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க சார். அவங்களுக்குக் கல்யாணம் செஞ்சி வைக்கணும். எங்கப்பாம்மா வீட்டை கடன்ல இருந்து மீட்டணும். நிறைய வேலை இருக்கு சார். ப்ளீஸ் சார். என்னைய காப்பாத்துங்க சார்
முத்து அழாத. நிறுத்து. நான் சொல்றதை கேளு
ம்ம்
உன் ஃப்ரண்டு சுரேஷ், அவன் தொடுப்போட புருசனை மூணு மாசத்துக்கு முன்னாடி குத்திக் கொன்னுருக்கான்னு சந்தேகப் படுறோம். வேற எவனாச்சுமா இருந்தா லாக்கப்புக்குத் தூக்கிட்டுப் போய் நாலு குடு குடுத்தா உண்மைய எல்லாம் கக்கிருவானுங்க. ஆனா இவன் பெருசு கேங். அதுனால இவன் மேல கை வைக்க முடியலை. அவனைத் தொடர்ந்து ஃபாலோ பண்ணதுல நீயும் அவனும் பேசுன இந்த மேட்டர் சிக்கிச்சி. நீ இதுல செய்ய வேண்டியது ஒண்ணே ஒண்ணுதான். அவன் சொல்றபடியெல்லாம் செய்யி. எப்ப என்னைக்கி எப்பிடி நடக்குதுங்கிற தகவலை அப்பப்ப எனக்குக் குடுத்துட்டே இரு. இந்தக் கைமாத்தலப்போ அவனை கையும் களவுமா பிடிச்சிட்டா, ரெண்டு கேஸ்லயும் சேத்து உள்ள தள்ளிருவோம். என்ன செய்யிறியா? சொல்லு
நீங்க இப்ப எனக்குக் காட்டின வீடியோவை வச்சி அவனை அரெஸ்ட் பண்ண முடியாதா சார்?”
நீயே பாத்தில்ல? இதுல சுரேஷோட தலை மட்டும் தான் தெரியுது. அவன் குரலும் ஒரு மாதிரி கம்மலா இருக்கு. அவனோட குரல்தானான்னே கண்டுபிடிக்க முடியலை. இதை வச்சிக்கிட்டு நான் ஒண்ணும் செய்ய முடியாது. பெருசுக்கிட்ட போட்டுக் குடுக்கலாம். ஆனா அந்தாளு அவனையும் போட்டுத் தள்ளிருவாரு. உன்னையும் போட்டுத் தள்ளிருவாரு. எனக்கு அதுல ஒரு பிரயோசனமும் இல்லை. அதான் இந்தத் திட்டம். உன்னால செய்ய முடியுமா முடியாதா? முடியாதுன்னா சொல்லிடு நான் வேற வழி பார்த்துட்டுப் போயிருவேன். ஆனா சுரேஷ் வேற வழி தேட முன்னாடி எல்லா மேட்டரும் தெரிஞ்ச உன்னையப் போட்டுட்டுத்தான் ஆரம்பிப்பான். சொல்லிட்டேன்.
முத்துவின் முகத்தில் போலீஸ் பயத்தோடு மரண பயமும் சேர்ந்து கொண்டது. சார். நீங்க என்ன சொன்னாலும் செய்யறேன் சார். என் உசுரக் காப்பாத்திருங்க சார். ப்ளீஸ் சார்
(தொடரும்)

அடுத்த பாகம் இங்கே

Sunday, January 29, 2012

பரமபதம் - 1


மழை. உலகத்தின் அதிசயங்களில் ஒன்று. சில நேரம் மெல்லிய ஓடை போல சலசலக்கும். சில நேரம் கொட்டுகின்ற பேரருவியாய் ஓங்காரமிடும். இன்றைய மழை இரண்டாம் வகை. இரண்டு நொடி நனைந்தால் தலை முதல் பாதம் வரை ஒரு மிமீ விடாமல் நனைத்துவிடும் பேய் மழை. மழையில் ஒதுங்க இடமில்லாமல் ஏற்கனவே நனைந்து நைந்து போயிருந்த சாக்கை தலைமேல் கவிழ்த்துக் கொண்டு ப்ளாட்ஃபாரத்தில் ஒதுங்கியிருந்தான் அந்தப் பிச்சைக்காரன். மழையின் வேகத்தால் வேகமெடுக்க முடியாமல் மெதுவாக வந்த அந்த டூவீலரின் மேலிருந்தவன் ரெயின் கோட்டுப் போட்டிருந்தும் முழுக்க நனைந்து போயிருந்தான். பிச்சைக்காரன் ஒதுங்கியிருந்த இடத்தின் அருகில் வந்த அந்த பைக்கின் சக்கரத்தில் ஏதோ சிக்க, பைக்கும் மேலிருந்தவனும் உருண்டனர். சிரமப்பட்டு எழுந்தவன் பைக்கையும் தூக்கினான். நின்று போயிருந்த பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்ய முயற்சித்தான். 

மெதுவாக எழுந்த பிச்சைக்காரன் சாக்கை பின்னால் நழுவவிட்டுவிட்டு பைக்காரனை நெருங்கினான். யாரோ முதுகுக்குப் பின்னால் வருவதை உணர்ந்த பைக்காரன் திரும்பினான். திரும்பி வேகத்தில் ‘அம்மா’ என்று அலறிக்கொண்டு பின்னால் விழுந்தான். பிச்சைக்காரனின் கையில் முளைத்திருந்த கத்தியில் படிந்திருந்த ரத்தத்தை மழை கழுவிக்கொண்டிருந்தது..

*********************************************************************************

மாநகர வாழ்க்கை. பல நேரங்களில் மாநரக வாழ்க்கை. என்னதான் உள்கட்டமைப்பும் போக்குவரத்து வசதிகளும் சிறு நகரங்களை விட அதிகப்படியாக இருந்தாலும் பெரும்பாலான நேரங்களில் விரும்பிய இடத்துக்கு விரும்பிய நேரத்துக்குப் போக முடியாமல் போய்விடுவது சகஜம். காரணம் போக்குவரத்து நெரிசல். அந்தச் சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் இருந்து உட்பிரிந்த சாலை. அவன், சாலையின் சந்திப்பில் தள்ளுவண்டியில் கடலை விற்றுக் கொண்டிருந்தான். வண்டியின் நடுவில் புதைக்கப்பட்டிருந்த அடுப்பின் மீதிருந்த பெரிய வடைச்சட்டியில் வெறும் மணலைப் போட்டு நீளமான கண்கரண்டியால் கிளறிக் கொண்டிருந்தான். பள்ளி மாணவன் போல இருந்தவன் கடைக்கருகில் வந்து தலையைச் சொறிய, இருவரும் வார்த்தை எதுவும் பேசாமலே பையன் கொடுத்த பணத்தை கல்லாவில் எறிந்து விட்டு கட்டி வைக்கப்பட்டிருந்த கடலைப் பொட்டலங்களில் ஒன்றை எடுத்து மத்தியில் லேசாக நசுக்கிப் பார்த்துவிட்டுப் பையனின் கையில் கொடுத்தான். பையன் சட்டைக்குள் பொட்டலத்தைப் போட்டுக்கொண்டு அகன்றான்.

காவல் என்றெழுதிய குவாலிஸ் வண்டி போக்குவரத்து மிகுந்த முக்கிய சாலையில் இருந்து பிரிந்து இந்த சாலைக்குள் வந்து நின்றது. முன் சீட்டில் டிரைவருக்கருகில் உட்கார்ந்திருந்த இன்ஸ்பெக்டர், இடுப்பில் இருந்த பிஸ்டலின் மீது கையை வைத்துக் கொண்டு, பின்னால் திரும்பி இரண்டு கான்ஸ்டபிள்களுக்கு நடுவில் உட்கார்ந்திருந்தவனைப் பார்த்தார். ஒரு கான்ஸ்டபிள் கதவைத் திறக்க, “ஓட்றா” என்ற இன்ஸ்பெக்டரின் குரலுக்காகக் காத்திருந்தவன் போல கான்ஸ்டபிளைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்து விழுந்தான். விழுந்தவன் எழுமுன்பே எந்தப் பக்கம் ஓடினால் தப்பிக்கலாம் என்ற முடிவை எடுத்திருந்தான். போக்குவரத்து மிகுந்த முக்கிய சாலையை நோக்கி ஓட ஆரம்பிக்க, இன்ஸ்பெக்டர் நிதானமாக கதவைத் திறந்தி இறங்கியதும் ஓடுகின்றவனை நோக்கி சுட ஆரம்பித்தான். மூன்றாவது குண்டுக்கு அம்மா என்றலறியபடி கடலைக்காரன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே விழுந்தான். 

*********************************************************************************

அது ஒரு உயர்தர சைவ உணவ... இருங்கள். உயர்தர என்று ஆரம்பித்தாலே சைவ உணவகம் என்று முடிக்கத்தான் தோன்றுகிறது. அது ஒரு உயர்ரக பார். முழுக்கவே அரையிருட்டில் டேபிளின் மேல் வைக்கப்பட்டிருக்கும் மெழுகுவர்த்தி போன்ற எல்.ஈ.டியின் ஒளியில் எதிரில் இருப்பவர் முகம் தெரிந்தும் தெரியாமலே ஊற்றிக் கொடுக்கப்படும் சரக்கை சரித்துவிட்டு வருமிடம். மூலையில் எப்போதும் யாராவது மூன்று பேர் உட்கார்ந்து கிடாரைத் தட்டிக்கொண்டோ பியானோவைத் தடவிக் கொண்டோ இருப்பார்கள். 

சுரேஷ் சிகரெட்டைக் கீழே போட்டு ஷூக்காலால் மிதித்து நசுக்கிவிட்டு பாரின் உள்ளே நுழைந்தான். டேபிளில் உட்காராமல் பாருக்கு முன்னாலிருந்த உயரமான பார் ஸ்டூலில் உட்கார்ந்தான். நேர்த்தியாக சீருடை அணிந்த பார் டெண்டர் அவன் முன்னால் வந்து நின்று, “சுரேஷ்” 

ஆமோதிப்பது போல தலையை ஒரு வெட்டு வெட்டி, “முத்து”. 

“யூசுவல்?” என்றான் கேள்வியாய்.

“ஆமா”

வழக்கமான லார்ஜை விட 50% அதிகமாக ஊற்றப்பட்ட கிளாஸை சுரேஷின் முன்னால் வைத்து பக்கத்தில் இன்னொரு பவுலில் வறுத்த கடலையையும் வைத்துவிட்டு, “எப்பிடியிருக்க?” என்றான் முத்து.

“அப்பிடியேதான் இருக்கேன். உனக்கு ட்யூட்டி எப்ப முடியும்?” 

“11:00 மணிக்கு. ஏன் கேக்கற?”

“பார்லயே இரு. நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்.” 

”சரி” என்று அடுத்த கஸ்டமரைப் பார்க்க நகர்ந்தான் முத்து. முத்துவும் சுரேஷும் ஒரே சேரியில் வளர்ந்தவர்கள். ஒரே பள்ளியில் படித்து, ஒரே தெருவில் விளையாடியவர்கள். காலம் இருவரையும் வேறு வேறு திசைகளில்அடித்துச் சென்று விட்டது. சுரேஷ் பத்தாவதில் ஃபெயிலாகி தெருவில் சின்னச் சின்னப் பொறுக்கித்தனம் செய்துகொண்டிருந்துவிட்டு பெருசுவிடம் அடியாளாக செட்டிலாகிவிட்டான். பொட்டலம் விற்க, பொடி விற்க அபின் விற்க என்று சிறு சிறு குழுக்கள் நகரமெங்கும் பெருசுவுக்காக வேலை பார்த்து வந்தது. காலை 9 மணியிலிருந்து இரவு இரண்டு மணி வரை தொழில் நடக்கும். 11 மணியில் ஆரம்பித்து ஒவ்வொரு மணி நேரத்துக்கும் அந்தக் குழுக்களிடம் போய் வசூலை வாங்கிக் கொண்டு சரக்கை ரெஃப்ரஷ் செய்துவரும் வேலை சுரேஷுக்கு. டிவிஎஸ் ஃபிஃப்டியிலிருந்து பெருசின் ஹம்மர் வரை எந்த வண்டியையும் எடுத்துச் செல்வான். பேட்டர்ன் இருக்கக்கூடாது என்பதற்காக. இப்போது கூட வசூலுக்குப் போய்விட்டுத்தான் வந்திருக்கிறான். மூன்றாவது எக்ஸ்ட்ரா லார்ஜையும் உள்ளே இறக்கிய பிறகு வெளியேறினான்.

*************
ட்யூட்டி முடிந்த நேரம் மழை வலுத்திருந்தது. முத்து கையிலிருந்த ரெயின் கோட்டை விலக்கி மணி பார்த்தான். 11:15. ‘பதினோரு மணிக்கே வர்றேன்னு சொன்னானே’ என்று நினைத்த நேரம் ஒரு ஐ-10 மழை நீரை சிதற விட்டபடி வந்து நின்றது. எட்டி கதவைத் திறந்து விட்டன் சுரேஷ். முத்து ஏறியதும் கார், கருஞ்சாரையைப் போல நீண்டிருந்த சாலையில் சீறிப் பாய்ந்தது. 

தரமணியிலிருந்து வேளச்சேரி போகும் சாலையில் திரும்பி கொஞ்சம் தூரம் போனதும் ஒரு சந்துக்குள் திருப்பி நிறுத்தினான். “எறங்கு” என்று சொல்லிவிட்டு இறங்கி நடந்தான். முத்துவும் ஆட்டுக்குட்டி போல பின்னாலே போனான். ஷட்டர் போட்டிருந்த “தனலட்சுமி மெஸ்”ஸின் கதவை டொக் டொக் என்று சங்கேதமாகத் தட்டியதும், பாதி திறந்த கதவின் வழியாக எட்டிப் பார்த்த தனலட்சுமி, “நீயா, உள்ள வா. இதாரு ஃப்ரண்டா?” என்று கேள்வியும் நானே பதிலும் நானே என்று உள்ளே போனாள். 

சின்ன மெஸ் அது. பத்துக்குப் பத்து அறையில் கால் பகுதியை கிச்சனாகவும் மீதி இருந்த இடத்தில் மூன்று வட்ட வடிவ ப்ளாஸ்டிக் மேஜையைப் போட்டு அதைச் சுற்றி சில நாற்காலிகளும் இறைந்திருந்தது. 

“துன்ன எத்தாவது வோணுமா?” கிச்சனில் இருந்து குரல் கொடுத்தாள். 

“ஒண்ணும் வேணாம். நீ தூங்கு” என்று சொல்லிவிட்டு சிகரெட் பாக்கெட்டை எடுத்து முத்துவிடம் நீட்டினான். சிகரெட்டை உருவி உதட்டுக்குக் கொடுத்துவிட்டு, “என்னடா மேட்டர். அப்பத்துலருந்து கேக்குறேன். இந்தா சொல்றேன் அந்தா சொல்றேன்னு இங்க கூட்டிட்டு வந்திருக்க?”

லைட்டரைக் கிளிக்கி சிகரெட்டுகளின் முனைகளைச் சிவப்பாக்கி விட்டு,

“உனக்கு 2 கோடி பணம் சம்பாதிக்க ஆசையா?”

உதட்டில் ஒட்டியிருந்த சிகரெட் தவறிக் கீழே விழ மேஜையைத் தொடுமுன் பிடித்த முத்து, “என்னடா சொல்ற?” 

“நிஜமாத்தான் கேக்குறேன். சம்பாதிக்க ஆசையா?”

“பணத்துக்கு மேல ஆசை யாருக்குத்தான் இருக்காது? ஆனா எப்பிடி? எதுவும் கடத்தலா?”

“உனக்கு சம்மதம்னா முழு மனசா சொல்லு. நான் திட்டத்தைச் சொல்றேன்”

“ம்ம்ம்.. சரி சம்மதம் சொல்லு”

“நான் யார்கிட்ட வேலை பார்க்கிறேன்னு தெரியும்ல?”

“சொல்லியிருக்கியே. யாரோ பெருசுன்னு. ரியல் எஸ்டேட் தானே?”

“பெருசு வரைக்கும் சரி. ஆனா ரியல் எஸ்டேட் இல்லை. போதை மருந்து வியாபாரம்”

இந்த முறை சிகரெட் தரையிலே விழுந்தே விட்டது. “என்னடா சொல்ற? இத்தனை நாள் சொன்னதே இல்லை?”

“இதெல்லாம் ஊர்முழுக்க தண்டோரா போடுற வேலையாடா? சொல்றதை மட்டும் கேளு. குறுக்கக் கேள்வி கேக்காத”

“சரி சொல்லு” 

“பெருசுக்குத் தெரிஞ்ச ஒரே வியாபாரம் போதை மருந்து விக்கிறது. நான் விக்கிற குரூப்புங்கக்கிட்ட வசூலான காசை வாங்கிக்கிட்டு வர்ற வேலை செய்யறேன். பெருசுக்கு வயசாயிருச்சின்னு ஃபீல் பண்ணுது. வாரிசுகளும் இல்லாததால இந்தத் தொழிலை விட்டுட்டு ரியல் எஸ்டேட்டு, அரசியல்னு செட்டிலாகிறலாம்னு பாக்குது. அதுனால இருக்கிற சரக்கை எல்லாம் கை மாத்தி விட்ரலாம்னு முடிவெடுத்துருக்கு. எனக்கு இந்த அடியாள் தொழில் போரடிச்சிருச்சி. பெருசு ரியல் எஸ்டேட்டு பண்ணாலும், அரசியலுக்குப் போனாலும் நான் அடியாளாத்தான் இருக்க முடியும். எந்த சேஞ்சும் இருக்காது.”

“அதுனால?”

“அதுனால இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கலாம்னு பாக்குறேன். பெருசு கிட்ட எப்பிடியும் 25லருந்து அம்பது கோடிக்கு சரக்கு இருக்கும். அதைக் கைமாத்தி விடும்போது குறைஞ்சது 20லருந்து நாப்பது கோடி வரைக்கும் காசு கேஷா கை மாறும். அதை அப்பிடியே லவட்டிட்டா பாம்பே பக்கமோ இல்லை வெளிநாட்டுக்கோ போய் செட்டிலாகிறலாம்னு பார்க்கிறேன்”

“நான் இதுல எங்க வர்றேன்? எனக்கு ஏன் ரெண்டு கோடி கிடைக்கும்?”

“ம்ம்.. கை மாறப்போறது உங்க பார்லதான். அதுனால அப்ப உன் உதவி எனக்குக் கண்டிப்பா தேவைப் படும். மொத்த ப்ளானும் என்னன்னு அப்புறம் சொல்றேன். ஆனா உன் உதவி இல்லாம என்னால செய்ய முடியாது. என்ன சொல்ற?”

முத்து கடைசி பஃபை இழுத்துவிட்டு ஆஷ்ட்ரேயைத் தேட, கீழ போடு என்பதாக கண்ணைக் காட்டினான் சுரேஷ். கீழே போட்டு அனிச்சையாய் காலால் நசுக்கிவிட்டு, “என் உதவி இல்லாம செய்ய முடியாதுன்னு சொல்ற. அப்புறம் ஏன் ரெண்டு கோடி மட்டும்? 50-50 பேசுவோமே?”

சுரேஷின் பார்வையில் இப்போது லேசான கோபமும், என் கிட்டயேவா என்ற ஏளனமும் கலந்து ஒலித்தது. “சரி அப்ப பெருசை நீ போடு. கை மாத்த வர்றவனை நான் போடுறேன். 50-50 வச்சிக்குவோம்”. 

“என்னது கொலையா??” 

“கொலைன்னதும் வாயப் பொளக்குற? என்ன மயித்துக்கு 50-50 கேக்குற. உன் வேலை ரொம்ப சிம்பிள். நீ இதுல இருக்கன்னே யாருக்கும் தெரியாது. யாரும் சாகவும் மாட்டாங்க. காசு மட்டும் சுளுவா என்கைல வந்துரும். உன் பங்கு ரெண்டு கோடியை வாங்கிட்டு நீ உன் வழியில போயிரு. நான் என் வழியில போயிர்றேன். அதுக்கப்புறம் நாம சந்திச்சிக்கவே கூடாது”

“ஏன்?”

“ஏன்னா, பெருசுக்கு காசு போனது தெரிஞ்சா என்ல ஆரம்பிச்சி செத்துப் போன என் கொள்ளுத்தாத்தா வரைக்கும் சமாதியைத் தோண்டியாவது கொன்னுரும். அதுனால நீ என்னைப் பாக்கவே பாக்காத. ஒரு வேளை நான் மாட்டிக்கிட்டா உன்னையக் காட்டிக் குடுக்க மாட்டேன். சரியா?”

தயங்கித் தயங்கி “நான் மாட்டிக்க மாட்டேனே?”

“நாந்தான் நீ இருக்கிறதே தெரியாதுன்னு சொன்னேனே? என்னய நம்பு”

முத்துவுக்கு தயக்கமாக இருந்தாலும் ரெண்டு கோடி ஆசையைக் காட்டியது. ’தங்கச்சிகள் கல்யாணத்தை முடித்துவிடலாம். அக்கா கல்யாணத்துக்கு வாங்கிய கடனையும் அடைத்து வீட்டைத் திருப்பிவிடலாம். பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்யாமல் இப்படி கல்யாணச் செலவாக செய்து விட்டால் பணம் வந்ததே யாருக்கும் தெரியாது. இந்த வேலையிலேயே தொடர்ந்தோமென்றால் இதெல்லாம் செய்ய இன்னும் மூன்று ஜென்மங்களுக்கு உழைக்க வேண்டும்’. எல்லாம் யோசித்த பிறகு, “சரிடா. நீ சொல்றபடி செய்யறேன். ஆனா என்னைய மட்டும் காப்பாத்திரு”

“நீ பயப்படவே பயப்படாத. நான் இருக்கேன். எப்பிடி செய்யப் போறோம்ங்கிற ப்ளான இன்னும் ரெண்டு நாளைக்குள்ல உன்கிட்ட சொல்றேன். இப்ப வா நான் உன்னைய உன் வீட்டுல விட்டுர்றேன்”

“வீட்டுல வேண்டாம். பைக் பார் வாசல்ல நிக்குது. திரும்ப அங்கயே கொண்டு போய் விட்டுரு”

கார் சந்துக்குள் இருந்து வெளியேறி சாலையில் கலக்குமிடத்தில் மழையால் ஒரு ஆட்டோ ரிப்பேராகி நின்றிருந்தது. டிரைவர் பின்னால் நோண்டிக் கொண்டிருக்க, படுதா போட்டு மூடப்பட்டிருந்த ஆட்டோவுக்குள் பயணிகள் யாரோ இருந்தார்கள். ரோட்டில் இருந்த மழைத் தண்ணீர் ஆட்டோவின் மேல் பட்டுவிடாமல் கார் மெதுவாகக் கடந்து சாலையை எட்டியதும் வேகம் பிடித்து பறந்தது.

படுதாவுக்குள் உட்கார்ந்திருந்தவன் ஹெட் ஃபோன் அணிந்திருந்தான். கையில் இருந்த சின்ன டிவி போன்ற கருவியில் “சரிடா நீ சொல்றபடி செய்யறேன். ஆனா என்னைய மட்டும் காப்பாத்திரு” என்று பயந்த குரலில் முத்து சொல்லிக் கொண்டிருந்தான். 

(தொடரும்)

பண்புடன் இணைய இதழில் தொடராக வ்ந்து கொண்டு இருக்கிறது

அடுத்த பாகம் இங்கே