Sunday, May 30, 2010

தமிழ்ப் பதிவுலகம் உங்களை வரவேற்கிறது

இந்தியா வந்திறங்கியாகிவிட்டது. என் வாழ்க்கையின் மிக அழுத்தம் தரக்கூடிய 13 மணி நேரப் பயணமாக ஜே.எஃப்.கே முதல் அபுதாபி வரையிலான விமானப் பயணம் அமைந்து விட்டிருந்தது.

நான் அமெரிக்காவிலிருந்து கிளம்பும் நாள் இந்தியாவில் ஜூனியர் முகிலனை கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்கள். தொலைபேசியில் அழுத என் மனைவியின் குரலில் மகனின் நிலையை எண்ணிய வருத்தத்தை விட சாய்ந்து அழ என் தோள் அணுகும் தூரத்தில் இல்லையே என்ற ஆதங்கமே ஓங்கி ஒலித்தது.

நான் ஜே.எஃப்.கேவில் விமானம் ஏறும்போது நான் பஸ்ஸில் இட்ட கமெண்ட் இந்தியாவுக்குப் போய் என் மகனைப் பார்க்கவேண்டும் என்ற என் அவசரத்துக்கு இடிஹாத் ஏர்வேய்ஸ் தடை போடுகிறார்களே என்ற ஆதங்கத்தில்.

அந்த 13மணி நேரம், இந்தியாவில் பகல் நேரம். என்னவெல்லாமோ நேர்ந்து கொண்டிருக்கும். ஆனால் என்ன நிகழ்கிறது என்று தெரியாமல் இருப்பது, வெளி உலகத்தோடு தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பது கொடுமை. அந்தக் கொடுமையை அனுபவித்தேன். (இந்த விமானங்களில் இருக்கும் சாட்டிலைட் ஃபோன் எப்படி வேலை செய்கிறது என்று யாராவது இடிஹாத் விமானப் பணியாளர்களுக்குச் சொல்லிக் கொடுங்களேன்? உபயோகப்படுத்த முயன்று தோல்வியே).

அபுதாபியில் இறங்கி மனைவியுடன் பேசி மகன் ஆரோக்கியமாக இருக்கிறான், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகப்போகிறோம் என்ற செய்தியைக் கேட்டதும்தான் நிம்மதி. அபுதாபி விமானநிலையத்தில் பஸ்ஸில் ஏறினால் 100+ பின்னூட்டக் கும்மி. என் மகனின் நிலை பற்றிய செய்தி ஏற்கனவே என்னை ஆசுவாசப்படுத்தி இருந்தமையால் அந்தக் கும்மி என்னைக் காயப்படுத்தவில்லை. மாறாக என் பதிமூன்று மணி நேர அழுத்தத்தை பஞ்சாய்ப் பறக்க வைத்து குஷிப்படுத்தியது. இதற்குத்தான் இருக்கிறார்கள் நண்பர்கள். (சத்தியமாக என் அப்போதைய மனநிலையை அறிந்திருந்தால் அப்படிக் கும்மியிருக்க மாட்டார்கள். மாறாக ஆறுதல் வார்த்தைகள் வெள்ளமாக வந்திருக்கும். ஆனால் அவ்வார்த்தைகளை விட இந்தக்கும்மி என்னை மிகவும் ஆசுவாசப்படுத்தியது என்பது மறுக்க முடியாத உண்மை).

இப்போது கூகிளாண்டவர் என்னைப் பார்த்து இந்த இடுகையின் தலைப்பைப் பெருமிதத்துடன் சொல்வதாக எண்ணுகிறேன்.

இந்தக் கும்மியில் நர்சிம் பற்றி அது சரி எழுதிய கமெண்ட்டைப் படித்தேன். அது என்ன என்று கேட்டுத் தெரிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நேரம் இல்லை.

இந்தியாவில் வந்திறங்கியதும் வலையில் மேய அதிக நேரம் இருக்கவில்லை. சென்னையில் ஐந்து மணி நேரத்தைக் கழித்து விட்டு, மதியம் 11:55 மணி பாரமவுண்டில் மதுரையை நோக்கிப் பயணித்தேன். (அருமையான சேவை. வெறும் ஐம்பது நிமிடப் பயணத்திற்குள் அந்த விமானப் பணியாளர்கள் வழங்கிய உணவும் பானங்களும் அருமை. பாரமவுண்ட் மூடப்படலாம் என்று அரசல் புரசலாகச் செய்தி வழிகிறது. தமிழன் ஒருவன் துவக்கிய விமான சேவை. நம்மால் முடிந்த அளவுக்கு - விமானப் பயணம் செய்யும், செய்கின்ற, செய்யப்போகும் அனைவரும் பாரமவுண்ட் விமானம் உங்கள் சேருமிடத்திற்கு சேவை புரியுமானால் அதை உபயோகப் படுத்துங்கள் என்று வேண்டுகிறேன்)

மகனைப் பார்த்து அவனைச் சமாதானப் படுத்தி என்னுடன் விளையாட விட்டு இதிலேயே என் நேற்றைய பொழுது போய்விட்டது. ஜெட் லாகினால் அதி காலையிலேயே விழிப்பு வந்ததும் விட்டுப்போன பதிவுகளைப் படிக்கத் துவங்கினேன்.

நான் வலையுலகிற்கு அறிமுகமாகி வெறும் ஒன்பது மாதங்களேயாகியிருக்கின்றன. அதனால் இந்த வலையுலகப் பஞ்சாயத்துகள் எனக்கு அவ்வளவாகப் பரிச்சயமாகவில்லை.

ஆதிமூலக்கிருஷ்ணன் நர்சிம்மின் பேட்டி ஒன்றை வெளியிட்டார். நான் நட்சத்திர வாரத்தில் எழுத வேண்டிய பதிவுகளில் ஒன்றாய் நான் நினைத்திருந்தது நான் பிரபலம் என்று எண்ணும் பதிவர்கள் சிலரிடம் சில கேள்விகளை வைத்து அவர்களின் பதிலைப் பெற்றுப் போடலாம் என்று (இப்பப் போய் யாருகிட்டயாவது பேட்டினு கேட்டா என் போட்டிய எடுத்துர மாட்டாங்க?). இதை நான் அந்தப் பதிவின் இரண்டாவது பின்னூட்டமாய் சொல்லியிருந்தேன். (ஆதியும் நல்லா வேணும் என்று சொல்லியிருந்தார்).

அதன் பிறகு மயில் எழுதிய ஹி ஹி நாங்களும் பேட்டி குடுப்போமில்ல என்ற பதிவையும் படித்தேன். மேலோட்டமாகப் படிக்கும் போது அது வழக்கமான பதிவுலகக் குசும்பு என்றுதான் நினைத்தேன். பின்னூட்டமும் இட்டுவிட்டு வந்தேன்.

இன்று காலை அண்ணன் மாதவராஜின் பதிவைப் படிக்கும்போது இந்தப் பதிவிற்கு நர்சிம் எதிர்வினை எழுதியிருப்பதும் கார்க்கி அங்கே ஏதோ சர்ச்சைக்குரிய பின்னூட்டமிட்டதாகவும் அறிய வந்தது. நர்சிம்மின் ப்ளாகில் அந்தப் பதிவைக் காணக்கிடைக்கவில்லை. ஆனால் என் ரீடரில் இருந்தது. (ரீடரில் பின்னூட்டங்களை நான் சப்ஸ்க்ரைப் செய்யாததால் அவற்றைப் படிக்க முடியவில்லை). படித்தேன். மீண்டும் மயிலின் பதிவைப் படித்தேன். மீண்டும் நர்சிம். அதிர்ந்தேன்.

இருவரும் இரண்டு பதிவுகளிலும் வைத்திருக்கும் உள்குத்துகள் ஒன்றல்ல இரண்டல்ல. வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் திட்டி அல்லது கேலி செய்துகொள்வதோடு அவர்களின் ரசிகர்களாய், பின்னுட்டமிடுபவர்களாய் இருக்கும் சில பல வாசகர்களையும் இதில் இழுத்து விட்டது அநாகரீகத்தின் உச்சக்கட்டம். இதில் என்னை அதிகம் பாதித்தது நர்சிம்மின் பதிவே.

முதல் பதிவை எழுதியது மயிலாக இருந்தாலும் பின்னூட்டம் இட்டக் காரணத்திற்காக மட்டும் சந்தனமுல்லையைத் தாக்கியிருக்க மாட்டார் நர்சிம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அந்தப் பதிவின் பின்னணியிலும் முல்லை இருந்திருப்பார் என்று நினைக்கிறேன். ஆனாலும் முல்லை உங்களின் இந்தக் கேலி உள் மனதில் இருக்கும் ஒரு அசிங்கமானப் பேயை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. உங்களுக்கும் நர்சிமுக்கும் என்ன பிரச்சனை வேண்டுமானாலும் இருக்கட்டும். அதை நீங்கள் இப்படி பொது இடத்தில் வைத்து, வாய்ப்புக் கிடைத்ததும் எள்ளி நகையாடியதை என்னக் காரணம் சொல்லப்பட்டாலும் என்னால் நாகரீகமானதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நர்சிம், உங்களுக்கு 500க்கும் மேற்பட்ட வாசகர்கள் இருக்கிறார்கள். உங்களின் இலக்கியம் தோய்ந்த எழுத்துகளையும், மெல்லிய நகைச்சுவை இழையோடும் எழுத்துக்கும் வாசகர்களானவர்கள் இவர்கள். நீங்கள் சந்தனமுல்லையால் எவ்வளவுதான் காயப்பட்டிருக்கட்டும். நீங்கள் அந்தக் காயத்துக்கு மருந்து போட்டுக்கொள்வதாக உங்கள் மீதே சாக்கடையை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறீர்கள். எத்தனையோ குறள்களுக்கும், சங்கப்பாடலுக்கும் எளிமையாக விளக்கம் எழுதும் நீங்கள் இன்னா செய்தாரை ஒறுத்தல் என்ற அந்தத் தங்கக் குறளுக்கு விளக்கம் தெரியாதவரா என்ன? அல்லது இதுவும் என் ஸ்டைலே என்று எங்களிடம் சொல்ல விரும்புகிறீர்களா? சத்தியமாக நீங்கள் பேட்டியில் சொன்ன “புதிதாய் எழுத வருபவர்கள் எவரும் ஒரு வருடத்திற்கு முன்னர் எழுதிக் கொண்டிருப்பவர்களின் பார்வை, கருத்து, அரசியல் நிலைப்பாடு என எது குறித்தும் தெரிந்துகொள்ள விருப்பமோ, முயற்சியோ எதுவும் எடுப்பதில்லை என்பது என் தாழ்மையான கருத்து.” நினைவுக்கு வந்து தொலைக்கிறது. உங்கள் பார்வை கருத்து நிலைப்பாடு ஆகியவற்றைத் தெரிந்து கொண்டிருப்பேனோ என்று எண்ணுகிறேன்.


நான் மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருக்கும் போது நிகழ்ந்த சம்பவம் இது. எங்கள் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு வைத்து அவர்களை அறிமுகப் படுத்துவது என்ற பெயரில் மாஸ் ராக்கிங் செய்வது என்பது மரபாக இருந்து வந்தது. நாங்கள் சீனியர்களாக மாறிய அந்த ஆண்டிலிருந்து இந்த அறிமுகப்படலத்திற்கு தடா விழுந்தது. ஆத்திரம் வந்த நானும் என் நண்பனும் ஆசிரியர்களிடம் பெரும் விவாதம் செய்தோம். ஆனால் எங்கள் வாதங்கள் எடுபடவில்லை. ஆசிரியர்கள் நினைத்ததே நடந்தது. பின்னாளில் நான் என் பேராசிரியர் ஒருவரிடம் இதைப் பற்றி பேசியபோது அவர் என்னிடம் சொன்னது - “நீ அன்னிக்குப் பேசினதெல்லாம் நியாயமாத்தான் இருந்திச்சி. ஆனா நீ அதையெல்லாம் தண்ணியடிச்சிட்டுப் பேசின பாரு. அதுனால தான் அதை ஏத்துக்க எங்களால முடியலை. நீ என்ன நல்ல விசயம் பேசினாலும் சரி, அதுக்கு நடுவுல ஒரு சின்ன அநாகரீகமான வார்த்தையோ இல்லை யாரையும் புண்படுத்துற மாதிரி விசயமோ சொல்லிட்டினா, நீ சொன்ன அத்தனை நல்ல விசயங்களும் அடிபட்டுப் போயிடும்” பொட்டில் அறைந்தாற்போல் உறைத்தது.


அண்ணன் மாதவராஜின் பதிவைப் படித்த போது எனக்கு என் பேராசிரியரின் அறிவுரையை அவரிடம் சொல்ல வேண்டுமென்று ஆசைப்பட்டேன். நீங்கள் உங்கள் பதிவில் சொல்லியிருந்தது அத்தனையும் நியாயம். ஆனால் உங்கள் தலைப்பும் நர்சிம்மையும் கார்க்கியையும் அவன் இவன் என்று விளித்ததும் கண்டிப்பாக அந்தத் தரப்பை உங்கள் வார்த்தைகளில் இருந்த நியாயத்தைப் பின்னுக்குத் தள்ளக்கூடிய, தள்ள வேண்டிய நிலைக்குக் கொண்டு செல்லும்.

என்னவோ.. இந்தப் பதிவுகளும் நிகழ்வுகளும் என்னை பரிகாசத்துடன் பார்த்து இந்த இடுகையின் தலைப்பைச் சொல்வது போல எண்ணுகிறேன்.

Thursday, May 27, 2010

ரயில் பயணங்களில்ஒரு பயணத்தில் நீங்கள் பார்த்த, ஒரு வார்த்தை கூட பேசாத, பெயர்தெரியாத ஒருவர், சில/பல நாட்களுக்குப் பிறகு உங்களை தொடர்பு கொண்ட அனுபவம் உங்களுக்கிருக்கிறதா? எனக்கிருக்கிறது. 

நாங்கள் நான்கு நண்பர்கள் மார்த்தாண்டத்தில் இருக்கும் ஐந்தாவது நண்பனின் வீட்டுக்கு விடுமுறையைக் கழிக்கலாம் என்று திட்டம் போட்டோம்.

நாங்கள் யார்? 
முதலில் நான். ரமேஷ். கந்தக பூமியான விருதுநகர்க்காரன். 
அடுத்தவன் மகேஷ் - மாற்றுத் திறனாளி. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகர இன்னொருவரின் உதவி வேண்டும். ஆனால் தன்னம்பிக்கைக்கு மறுபெயர் அவன் தான். பல்கலைக்கழகத்தில் பியூனிலிருந்து துணைவேந்தர் வரை அவனைப் பார்த்தால் “ஹாய் மகேஷ்” என்று விஷ் செய்யாமல் போக மாட்டார்கள். அந்த அளவுக்கு அனைவரிடமும் நட்பு பாராட்டுபவன்.
அடுத்தவன் அபிஷேக். அப்பா ஏர்ஃபோர்ஸில் இருப்பதால் இந்தியாவின் அத்தனை நகரங்களிலும் படித்திருக்கிறான். தமிழ் பேச மட்டுமே தெரியும். எழுதப் படிக்கத் தெரியாது.
கடைசி ஆள் விக்டர். இவன் அப்பாவும் ஏர்ஃபோர்ஸ். பல பள்ளிகள். தமிழ் பேச மட்டும். ஆனால் இவனிடம் தூத்துக்குடி தமிழ் விளையாடும். 
நாங்கள் பார்க்கப் போவது எட்வர்ட். மார்த்தாண்டத்தில் பிறந்து வளர்ந்தவன். கொஞ்சம் மலையாளம் கலந்த தமிழும், ஆங்கிலமும் பேசுவான்.

எங்கள் நால்வரில் ஏற்கனவே எட்வர்ட் வீட்டுக்குப் போனது நான் மட்டுமே. அதனால் அனைவரும் வழிக்கு என்னையே நம்பியிருந்தனர். மதுரையிலிருந்து இரவு கிளம்பும் கொல்லம் பாஸஞ்சரில் அன் ரிசர்வ்டில் போகலாம் என்று முடிவெடுத்து மதுரை ஜங்க்‌ஷனுக்குப் போனோம். 
அன் ரிசர்வ்டில் கூட்டமாக இருந்ததால் டி.டி.ஆர் ஒருவரைப் பார்த்து சீட் ரிசர்வேசன் பெற்றுக் கொண்டு அதில் மகேஷை ஏற்றி நாங்களும் ஏறிக்கொண்டோம். 

நாகர்கோவில் ஜங்க்சன் தாண்டியதும் அடுத்த ஸ்டேஷன் குழித்துறை. அதில் இறங்கினால் பஸ் ஸ்டேண்டுக்கு நடந்தோ ஆட்டோ பிடித்தோ போனோமென்றால் புதுக்கடை பஸ்ஸைப் பிடித்தால் பஸ் ஸ்டாப்பில் எட்வர்ட் காத்திருப்பான். இதுதான் திட்டம்.

பேச்சும் விளையாட்டுமாக பொழுது கழிந்தது. திருநெல்வேலி ஜங்க்சன் வரும் வரை முழித்திருந்த நானும் மகேஷும் சீட்டிலேயே படுத்துத் தூங்கிவிட்டோம். 

தூக்கம் கலைந்து எழுந்தேன். மகேஷ் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தான். அபிஷேக்கும் விக்டரும் கதவருகில் நின்றுகொண்டிருந்தனர். ரயில் எந்த இடத்தில் போய்க்கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. முகம் கழுவி வரலாம் என்று போனேன். விக்டரும் அபிஷேக்கும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“டேய்! ரோடு வீடெல்லாம் பாக்கும்போது கேரளாவுக்குள்ள வந்துட்டோம் போலடா” விக்டர் வெளியே மலையும் மலை சார்ந்ததுமாக இருந்த பரப்பைப் பார்த்த அதிர்ச்சியில் சொன்னான்.
“ச்சே ச்சே. அப்பிடியெல்லாம் இருக்காதுடா. இது தமிழ்நாடுதான்” ஆணித்தரமாக அபிஷேக்.
“எப்பிடிடா சொல்ற?”
“ஒரு தமிழ்ப்பட போஸ்டர் பாத்தேண்டா”
“டேய் ங்கொய்யால, உனக்கு கைல வச்சிப் பாத்தாலே தமிழ் எழுத்து எதுன்னு சொல்லத்தெரியாதேடா. தூரத்துல இருக்கிற போஸ்டரை எப்பிடிடா பாத்த? ” இடையில் பதட்டத்துடன் புகுந்தேன். 
“தமிழ் மாதிரி இருந்திச்சி”
“அடப்பாவி. மலையாளமும் தமிழ் மாதிரி தாண்டா இருக்கும். மணி என்னாச்சிடா?”
“6:30”
“அய்யய்யோ. இன்னுமா குழித்துறை வராம இருக்கும்?”
“குழித்துறையா? அந்த ஸ்டேஷன் அப்பவே போயிருச்சேடா? நாம மார்த்தாண்டத்துலயில்ல எறங்கணும்?”
“நாசமாப் போச்சி. அனேகமா அடுத்த ஸ்டேஷன் திருவனந்தபுரம் தான்” நான் சொல்லி வாய் மூடவில்லை. ரயில் ஒரு ஸ்டேஷனுக்குள் நுழைந்தது. திருவனந்தபுரம் ஜங்க்‌ஷன். தலையில் கை வைத்துக்கொண்டே போய் மகேஷை எழுப்பினேன். அரை குறை தூக்கத்துடன் அவனை தூக்கி ப்ளாட்ஃபார்மில் இருந்த ஒரு பெஞ்சில் உட்கார வைத்தேன்.

“என்னடா மாப்ள. நாகர்கோவில் வந்துரிச்சா? நாகர்கோவில்லயே மலையாளத்துல அனவுன்ஸ்மெண்ட் ஆரம்பிச்சிட்டாய்ங்களா?”

“மவனே. விட்டேனா தெரியுமா? திருவனந்தபுரம் வந்துட்டோம்டா.”

“திருவனந்தபுரமா? சரி. ஒரு டீ சொல்லு” 

“வாயில கெட்ட கெட்ட வார்த்தையா வந்துரும். நானே எம்புட்டு ஃபைன் கட்ட வேண்டியிருக்குமோன்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்”

“மாமு. நான் ஒரு ஐடியா குடுக்கட்டா?”

“என்னடா?”

“கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க. நான் மட்டும் போய் எப்பிடியாவது நாலு ப்ளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்கிட்டு வந்துடறேன். அப்பிடியே நாலு பேரும் வெளிய போயிடலாம்” விக்டர் சொல்லும் யோசனை சரியாகப் பட்டது. காத்திருந்தோம். விக்டர் வேகவேகமாக திரும்பி வந்தான். 

“டேய் காசு மிச்சம்டா. அங்க டிக்கெட் வாங்க யாரும் இல்லை” 

நல்ல வேளை காசு மிச்சம் என்று போனோம். நாங்கள் போகும் நேரம் ஒருவர் வந்து டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் டிக்கெட்டைப் பார்க்காமல் வாங்கி வாங்கி வைத்துக்கொண்டுதான் இருந்தார். தைரியமாகப் போய் கொடுத்தோம். எங்கள் டிக்கெட்டுகளையும் ஒன்றும் சொல்லாமல் வாங்கிக் கொண்டார்.  ஓட்டமும் நடையுமாக வெளியே வந்தோம். நேராக அங்கே நின்றிருந்த ஒரு ஆட்டோவில் மகேஷை உட்கார வைத்து விட்டு, அவரை கெத்தாகப் பார்த்து, “பஸ்ஸ்டாண்ட் போகணும்” என்றேன். மேலேயும் கீழேயும் வடக்கூர்க்காரர்கள் தென்னாட்டுக்காரர்களைப் பார்ப்பது போல ஒரு பார்வை பார்த்தார் ஆட்டோ டிரைவர். அப்படியே ஸ்லோ மோஷனில் தலையைத் திருப்பி கையை உயர்த்தி “இவிடதான் உண்டு” என்று எதிர்க்கட்டடத்தைக் காட்டினார். அசடு வழிந்து விட்டு மறுபடியும் ரோட்டைக் கடந்து பஸ் ஸ்டேண்டுக்குப் போனோம். மார்த்தாண்டம் என்று தமிழில் எழுதியிருந்த - கேரளாக்கராவிங்க ரொம்ப நல்லவிங்க - கேரள அரசுப்பேருந்தில் ஏறி கடைசி சீட்டில் உட்கார்ந்தோம். வாசலுக்கு அருகே விக்டர் உட்கார்ந்திருந்தான். இந்தப் பக்க ஜன்னலில் மகேஷும் அவனுக்கு அருகில் நானும்.

வரிசையாக பலர் வந்தார்கள். விக்டரிடம் என்னவோ கேட்டார்கள். அவன் ஏதோ பதில் சொன்னான். அவர்கள் பஸ்ஸில் ஏறாமல் போய் விட்டார்கள்.

“என்னடா என்ன நடக்குது அங்க?”

“என்னவோ வந்து கேட்டாங்கடா. நான் ‘அது இல்லா’ னு சொன்னேன். போயிட்டாங்க”

“அது இல்லான்னா” 
“மலையாளம் தெரியாதுன்னு சொல்றதுக்கு அதுதானடா?”
“அதுக்கு அறியில்லானு சொல்லனும்டா” - மகேஷ் தலையில் அடித்துக்கொண்டான். அவனுக்கு மலையாளம் கொஞ்சம் தெரியும். இப்போது மகேஷ் வாசலுக்கருகில் அமர்ந்து கொண்டான். அடுத்து ஒரு மலையாள ஃபிகர் வந்தது. “ஈ பஸ் மார்த்தாண்டாம் போயா?” 
“பூவாம்” என்று சொல்லிவிட்டு விக்டரை அவன் பார்த்த பார்வையின் அர்த்தத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த ஃபிகர் பஸ்ஸில் ஏறி என் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டது, என்று எழுதத்தான் ஆசை...

ஒருவழியாக மார்த்தாண்டம் போய், அங்கிருந்து புதுக்கடை செல்லும் நகரப் பேருந்தில் ஏறி எட்வர்ட் வீட்டுக்குப் போய் விட்டோம். இதற்குள் எட்வர்ட் நாங்கள் வரவில்லை என்று எங்களைத் தேடி மார்த்தாண்டம் போயிருந்தான்.

நான்கு நாட்கள் அங்கே தங்கியிருந்து அருகிலிருந்த அத்தனை இடங்களையும் சுற்றிப்பார்த்தோம். 

கடைசியாகக் கன்னியாக்குமரிக்குப் போய்விட்டு அங்கே சூரிய அஸ்தமனத்தைப் பார்த்துவிட்டு நாகர்கோவில் போய் அதே கொல்லம் பேஸஞ்சரில் மதுரை திரும்புவது என்ற திட்டத்துடன் விவேகானந்தர் பாறை, சூரிய அஸ்தமனம் பார்த்துவிட்டு வந்து நாகர்கோவில் சந்திப்புக்கு வந்தோம் ரயிலில் நாங்கள் சந்திக்கப்போகும் அனுபவத்தைப் பற்றி அறியாமல்.

ரயில் வந்தது. ஒரு பெட்டியில் ஏறி உட்கார இடம் இருக்கிறதா என்று தேடினோம். ஒரு கேபினில் சிங்கிள் சீட்டில் ஒரு இடமும், இன்னொரு கேபினில் எதிரெதிராக இருக்கும் இரண்டு சீட்டுகளும் கிடைத்தன. மகேஷும் விக்டரும் ஒரு சீட்டைப் பகிர்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு எதிரில் எட்வர்ட் உட்கார்ந்து கொண்டான். இன்னொரு சீட்டில் அபிஷேக். எனக்கு மட்டும் இடம் இல்லை. 

ஒரு கேபினில் இந்தப்பக்க பெஞ்சில் ஒரு ஃபிகரும், அந்தப்பக்க பெஞ்சில் இரண்டு ஃபிகர்களும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் நடுவில் தரையில் ஒரு ஆள், அவர்களின் தந்தையாக இருக்கலாம், படுத்திருந்தான். ‘ஒரு டிக்கெட் வாங்கிட்டு மூணு பேர் உக்கார்ற எடத்துல படுத்துட்டு வராளுங்க’ என்று மனதில் நினைத்துக்கொண்டே எட்வர்டின் அருகில் போய் சிரமப்பட்டு உட்கார்ந்து கொண்டேன். வழக்கம்போல விளையாட்டும் கேலியுமாக வந்தோம்.

தனியாக உட்கார்ந்திருந்த அபிஷேக் அசந்து தூங்கிவிட்டான். விக்டரும் எட்வர்டும் அவன் மடியில் ஒரு துண்டை விரித்து அதில் 25 பைசா 50 பைசா நாணயங்கள் சிலவற்றையும் போட்டுவிட்டு வந்தனர். அந்த வழியாக பாத்ரூம் போன புண்ணியவான் ஒருவர் என்ன நினைத்தாரோ பையில் கையை விட்டு ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை அந்தத் துண்டில் போட்டுவிட்டுப் போனார். நாங்கள் அதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தோம். கொஞ்ச நேரத்தில் எதற்காகவோ கண்விழித்த அபிஷேக் துண்டைப்பார்த்து விட்டான். எங்கள் வேலை என்பதையும் புரிந்து கொண்டு துண்டை எடுத்துக்கொண்டு வேகமாக வந்து விக்டரிடம் ஹிந்தியில் கோபமாக ஏதோ சொன்னான். உடனே நானும் மகேஷும், எங்களுக்குத் தெரிந்த ஹிந்திப்படப் பெயர்களைச் சொல்லி சண்டை போட்டுக்கொள்வது போல நடித்தோம். சிறிது நேரத்தில் சகஜமாகி எங்களுடன் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தான். 

இப்போது நான் அந்த தனி சீட்டிற்குத் தள்ளப்பட்டேன். அப்போது ஒரு பாட்டி கதவருகில் கீழே உட்கார்ந்து வந்ததைப் பார்த்தேன். இந்தப் பக்கம் அந்தப் பெண்கள் மூன்று பேரும் வசதியாகத் தூங்கி வருவதையும் பார்த்தேன். எனக்குக் கோபம் வந்தது. எழுந்து நேராக அந்தப் பாட்டியிடம் போய், “பாட்டி நீங்க ஏன் கீழ உக்காந்து வர்றீங்க. வாங்க என்னோட. நான் உங்கள உக்கார வைக்கிறேன்” என்று சொல்லி அழைத்தேன்.

அந்தப் பெண்களில் தனியாகப் படுத்திருந்த பெண்ணின் காலைச் சுரண்டி எழுப்பினேன். எழுந்தவள் “யெஸ்” என்றாள். எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் “நாங்கள்லாம் சீட்டு இல்லாம வர்றோம். நீ இன்னா உக்கார்ற எடத்துல தூங்கிக்கினு வர்ற” என்று வழிந்துகொண்டே சொல்லவும். அவள் எழுந்து உட்கார்ந்தாள். நான் பாட்டியைப் பார்த்து, “பாட்டி நீங்க உக்காந்துக்குங்க” என்று நான் உட்கார்ந்து வந்த தனி சீட்டைக் கொடுத்துவிட்டு நான் அந்த ஃபிகரின் பக்கத்தில் உட்கார்ந்தேன். 

இப்போது தான் பார்த்தேன். மேலே இருந்த லக்கேஜ் வைக்கும் இடத்தில் இன்னும் இரண்டு பெண்கள் படுத்து வந்தார்கள். என்னருகில் இருந்த ஃபிகர் அவர்களை எழுப்பவும் அவர்கள் கீழே இறங்கி என் அருகில் ஒருத்தியும் எதிர் சீட்டில் இன்னொருத்தியுமாக அமர்ந்தார்கள். 

இப்போது விக்டர் ஓடோடி வந்து என்னருகில் உட்கார்ந்து கொண்டான். நானும் விக்டரும் எங்களுக்குள் பேசிக்கொண்டே வந்தோம்.

“டேய் போதுண்டா. நாங்கள்லாம் காலைக் கீழ வக்க முடியல. உங்க ஜொள்ளு ஆறா ஓடுது” என்று பின்னாலிருந்து கமெண்ட் கேட்டது. அந்தப் பெண்களும் அவர்களுக்குள் சிரித்துக்கொண்டே வந்தார்கள். 

திருநெல்வேலி ஜங்க்‌ஷன் வந்தது. எட்வர்ட் கீழே இறங்கி எங்களுக்கு காபி வாங்கப் போனான். எங்கள் அதிர்ஷ்டம் (எட்வர்ட் அதிர்ஷ்டம்?!) பாருங்கள், ப்ளாட்ஃபார்ம் அந்தப் பெண்கள் உட்கார்ந்திருந்த ஜன்னல் பக்கம் இருந்தது. எட்வர்ட் காபியை வாங்கி ஜன்னல் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண்ணின் கையில் கொடுத்து, “ப்ளீஸ் பாஸ் இட்” என்றான். அவளும் வாங்கி என்னிடம் நீட்டினாள். நான் அதுவரை பெண்களிடம் பேசிப் பழக்கம் இல்லாததால் வாங்கும் போது விரல் உரசவும் உணர்ச்சிவசப்பட்டு காப்பி கப்பை லேசாக நசுக்கி விட்டேன். காபி கொஞ்சமே கொஞ்சம் இடையில் தரையில் தூங்கிக்கொண்டிருந்த அந்த ஆளின் மீது விழுந்து விட்டது. பாதி கப் காப்பியை வேகமாக விக்டரிடம் பாஸ் செய்துவிட்டு திடுக்கிட்டு எழுந்த அந்த நபரிடம் மன்னிப்புக் கேட்டேன். ஃபிகர்களோடு வந்தவனாதலால் மறுபடி மறுபடி கேட்டேன். ஆனால் அந்தப் பெண்கள் களுக்கென்று சிரித்துக்கொண்டிருந்தனர். எழுந்த ஆள் நேராக பாத்ரூம் போய் முகத்தைக்கழுவி விட்டு திரும்ப வந்தார். வந்தவர் எனக்கும் அந்த ஃபிகருக்கும் இடையில் உட்கார்ந்து கொண்டார். 

வண்டி கோவில்பட்டியை நெருங்கவும் என்னிடம் பேச ஆரம்பித்தார். என்ன பண்றீங்க, எங்க படிக்கிறீங்க, என்ன படிக்கிறீங்க, எங்க தங்கியிருக்கீங்க என்று கேள்விகள் கேள்விகள் கேள்விகள். நான் பெரியவர்களை மதிப்பவன் என்பதால் அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டே வந்தார். அவர் காடாத்துணி ஹோல்சேலில் வாங்கி விற்கிறாராம். அதை பற்றியும் எங்கள் பல்கலைக்கழகத்தின் கெமிஸ்ட்ரி லேபுக்கு முன்பு காடாத்துணி விற்றதாகவும் சொல்லிக்கொண்டே வந்தார். ‘எப்படா மதுரை வரும்’ என்றிருந்தது. நல்ல வேளையாக வந்து சேர்ந்தது. நாங்கள் வேகமாக இறங்கி யுனிவர்சிட்டிக்கு செல்லும் பஸ் பிடிக்க பெரியார் பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடந்தோம்.

இந்த சம்பவம் நடந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு, எங்கள் ஹாஸ்டலுக்கு ஒரு கடிதம் வந்தது - “ரமேஷ் குமார், ஃபர்ஸ்ட் இயர் எம்.சி.ஏ, பாய்ஸ் ஹாஸ்டல், மதுரை காமாராஜ் யுனிவர்சிட்டி” என்று அரைகுறை முகவரியுடன். ஃப்ரம் அட்ரஸில், “மதர் தெரசா விமன்ஸ் யூனிவர்சிட்டி, கொடைக்கானல்” என்றிருந்தது.

Wednesday, May 26, 2010

தமிழ் வலி(?!)க் கல்வி"As long as we have the language, we have the culture.
As long as we have the culture, we can hold on to the land"

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் அந்த மொழியை முதலில் அழிக்க வேண்டும். இனம் தானாய் அழிந்து விடும்.


இது 100% உண்மை. ஏற்கனவே சொன்னது போல கரீபியன் தீவுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் இன்று இந்திய வம்சாவளியினர் என்று சொல்லப்பட்டாலும் அதற்கான அடையாளம் தொலைந்து போய்விட்டது. பெயரை வைத்து மட்டுமே அறிந்து கொள்ளக்கூடிய நிலையில் இருக்கிறார்கள். இன்னும் வரும் காலத்தில் அதுவும் அழிந்து போய்விடும். 


தாய்மொழியைப் பேசிக்கொண்டிருந்து அதை உயிரோடு வைத்திருப்பது எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கியம் அந்த மொழியிலேயே கல்வி பயிலவும் வாய்ப்பு அளிப்பது. 


நம் நாட்டின் மக்கள் தொகைக்கும், நம் மக்களின் புத்திசாலித்தனத்துக்கும் எத்தனைக் கண்டுபிடிப்புகள் வந்திருக்க வேண்டும்? எத்தனை ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்பித்திருக்க வேண்டும்? நம் தமிழ்நாட்டின் மக்கள்தொகையை விட சற்றே கூடிய ஜெர்மனி போன்ற நாடுகள் பல விஞ்ஞானிகளையும் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வெளியிடுகின்றன. ஏன், தமிழனாலோ இல்லை இந்தியர்களாலோ முடிவதில்லை?


நம் நாட்டின் கல்வித்திட்டம் வெள்ளைக்காரத் துரை மெக்காலே அறிமுகப்படுத்தியது. அது இந்தியர்களை உடலால் இந்தியர்களாகவும் உள்ளத்தால் வெள்ளையர்களாகவும் வைத்திருக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது. நம்மை முழுக்க முழுக்க சேவைத்துறை(Services Industry)க்கே தயார்படுத்தும் வண்ணமே வடிவமைக்கப்பட்டது. இன்னும் பச்சையாகச் சொல்லப்போனால் அவனுக்கு அடிமைப் பிழைப்பு நடத்த மட்டுமே நம்மைத் தயார்ப்படுத்தக் கூடியது.


நம் நாட்டில் பனிரெண்டாம் வகுப்பு வரை தாய்மொழி வழியில் படிக்க முடியும். அதன் பிறகு பாலிடெக்னிக் படித்தாலும் சரி, கலை-இளைஞர், அறிவியல்-இளைஞர் பட்டம் பயின்றாலும் சரி, தொழில்கல்வி பயின்றாலும் சரி, ஆங்கில வழியில் பயின்றாக வேண்டிய கட்டாயம். 


இது தமிழ் வழியில் பயின்று வரும் மாணவர்களுக்கு துவக்கத்தில் மிகவும் கடினமாக இருக்கிறது. பின்னர் ஒரு வழியாகச் சமாளித்து பட்டம் பெற்று விடுகின்றனர். ஆனால், பெரும்பாலானவர்களுக்கு பட்டம் பெறுவது என்பதே ஒரு குறிக்கோளாக மாறி விடுகிறது. அதையும் மீறி ஆராய்ச்சிப் படிப்புக்கு செல்பவர்கள் மிகவும் குறைந்தவர்களே. ஒரு வேளை இவர்களுக்கு மேற்படிப்பையும் ஆராய்ச்சிப் படிப்பையும் அவர்களின் தாய்மொழியில் கற்க வசதி செய்து தரப்பட்டிருந்தால் இந்தியாவும் பல “தமிழ்” விஞ்ஞானிகளை உலகுக்குத் தந்திருக்கலாம்.


இந்த நிலையில் தமிழக அரசின் முயற்சியால் பொறியியல் பட்டப் படிப்பை தமிழ்வழியில் அளிக்க அண்ணா பல்கலைக்கழகம் முன் வந்துள்ளது. இதை நாம் இருகரம் நீட்டி வரவேற்கும் முன், தமிழ் வழியில் சொல்லிக்கொடுக்க தமிழகத்தில் ஏதுவான உள்கட்டமைப்பு இருக்கிறதா? 


1. பாடங்கள் சொல்லித்தரத் துவங்கும்முன், அதற்கான பாடப்புத்தகங்கள் தமிழில் இருக்கின்றனவா?
2. தமிழில் சொல்லித்தர தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இருக்கிறார்களா?
3. தனித்தமிழில் அனைத்து பொறியியல் பதங்களை மொழிபெயர்க்கப் போகிறார்களா? இல்லை சில பதங்களை ஆங்கிலத்திலேயே பயன்படுத்துவார்களா?
4. இருக்கின்ற கல்லூரிகளிலேயே தமிழ்வழி வகுப்புகள் தனியாகத் துவக்கப் போகிறார்களா? இல்லை தமிழ்வழிக்காகத் தனிக்கல்லூரி துவக்கப்போகிறார்களா?
5. மாணவர்களுக்கு படிப்பு முடிந்ததும் பிழைக்கச் செல்லும் இடங்களில் தொடர்புக்கான மொழியாக இருக்கும் ஆங்கிலத்தைக் கற்றுத் தர ஏற்பாடுகள் இருக்கின்றனவா?


இந்தக் கேள்விகளுக்குத் தெளிவான பதில் இல்லாத கட்டத்தில் தமிழ்வழிப் பொறியியல் படிப்பை வரவேற்கத் தயக்கமாகத்தான் இருக்கிறது. 


ஆனால், தமிழ்வழிக் கல்வியை எதிர்க்கும் சிலர் முன்வைக்கும் வாதங்கள் சில நேரங்களில் சிரிப்பையும் சில நேரங்களில் வேதனையையும் வரவழைக்கின்றன.


1. இப்படித்தான் இந்தி எதிர்ப்பு என்று போராட்டம் நடத்தி எங்களை இந்தி படிக்க விடாமல் வைத்து வெளிமாநிலங்களில் பிழைக்கச் செல்லும்போது கஷ்டப்பட வைக்கிறார்கள். 


தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்த போது நான் பிறக்கவேயில்லை. ஆனாலும் நான் படித்துத் தெரிந்து கொண்டவரை, இந்தி எதிர்ப்புப் போராட்டம் இந்தித் திணிப்பை எதிர்த்ததே ஒழிய இந்தியையே எதிர்க்கவில்லை. இன்றும் தமிழ்நாட்டில் தமிழ் (First Language) Optional ஆகத்தான் இருக்கிறது. தமிழுக்குப் பதிலாக, இந்தியையோ, சமஸ்கிருதத்தையோ, ஃப்ரெஞ்சையோ எடுத்துப் படித்து தமிழ் வாசமே இல்லாமல் பி.எச்.டி வரை படித்துவிட முடியும். 


ஒரு மொழியைப் படிப்பதும் படிக்காததும் என் விருப்பமாக இருக்க வேண்டுமே ஒழிய இன்னொருவன் என்னிடம் அந்த மொழியைத் திணிக்கக் கூடாது. ஏற்கனவே ஆங்கில மோகத்தால் நகரங்களில் வசிக்கும் பிள்ளைகள் டமில் பேசித் திரிகின்றன. இதில் இந்தியும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால் சொல்லவே வேண்டாம்.


2. பனிரெண்டு வருடங்கள் ஆங்கிலம் ஒரு மொழியாகப் படித்தும், 4 வருடங்கள் ஆங்கில வழியில் படித்தும் தொழில் புரியும் இடத்தில் ஆங்கிலம் பேசுவது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. இந்த நிலையில் அந்த நான்கு வருடத்தையும் தமிழ்வழியிலேயே படித்தால் கேட்கவே வேண்டாம். சுத்தமாக பிழைக்க முடியாமல் போய்விடும்.


இதுவும் தவறான வாதமாகவே படுகிறது. நான்கு வருட பொறியியல் படிப்பில் படித்த அனைத்தையும் நாம் பணிபுரியும் இடத்தில் உபயோகப் படுத்துகிறோமா என்று பார்த்தால் இல்லை என்றே சொல்லவேண்டும். சில அடிப்படை விசயங்களை மட்டுமே உபயோகப் படுத்துகிறோம். அந்த அடிப்படை விசயங்களையும் பனிரெண்டாம் வகுப்புக்குள் படித்து முடித்திருப்போம். அப்படியிருக்க நான்கு வருடங்களை தாய்மொழியில் பயின்றால் நன்கு புரிந்து ஆழமாகப் படிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்து நம் அறிவு இன்னும் அதிகமாகுமே ஒழிய குறையவோ மற்ற ஆங்கில வழியில் படித்த மாணவர்களைவிட தாழ்ந்தோ போய்விட வாய்ப்பே இல்லை. 


இதில் இரண்டு வாதங்களையும் சொல்பவர்கள் அவர்களை அறியாமலே அவர்களை மறுதலித்துக் கொள்கிறார்கள். 12 வருடம் ஆங்கிலமொழியைப் படித்தும், நான்கு வருடம் ஆங்கில வழியில் படித்தும் சரிவர ஆங்கிலம் பேச வராத போது, 12 வருடங்கள் இந்தி மொழியை மட்டும் படித்திருந்தாலே இவர்கள் சரளமாக இந்தி பேசிவிடுவார்களாம். 


இந்த வாதங்களை எடுத்து வைப்பவர்கள் பெரும்பாலும் மற்ற மாநிலங்களில் பணிபுரியச் சென்று அங்கே இந்தி பேசுபவர்களால் கேலி செய்யப்பட்டோ, மட்டம் தட்டப்பட்டோ, பணியைத் தொடரமுடியாமலோ கஷ்டப்பட்டவர்களாக இருந்திருப்பார்கள். இவர்கள் வெளிமாநிலத்தில் பணி புரிய ஏதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக எல்லோரையும் எதற்காக இந்தி படிக்கச் சொல்ல வேண்டும்? 


இன்னும் சிலர் பேசுவது என்னவோ தமிழ்நாடு பிழைக்க வழியில்லாமல் போய்விடுவதாகவும், மற்ற இந்தி பேசும் மாநிலங்கள் செல்வச்செழிப்புடன் இருப்பது போலவும் இருக்கிறது. பீகாரில் இருக்கும் அத்தனை பேரும் இந்தி பேசுவார்கள். 


சரி தமிழ்நாட்டுக்கு பிழைக்க வரும் பீகாரியும், சேட்ஜியும், கன்னடனும், தமிழ் கற்றுக்கொண்டா வருகிறான்? 


மொத்தத்தில் தொடர்பு மொழி என்பது பேசுவதற்கு மட்டும் தான். அதைப் பேசக் கற்றுக் கொள்வதற்கு அதன் இலக்கண இலக்கியத்தைப் பள்ளியில் படித்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பிழைக்கப்போன இடத்தில் மூன்று மாதத்திலோ ஆறு மாதத்திலோ எளிதில் கற்றுக் கொள்ளலாம். ஆங்கிலமும் அதைப் போலத்தான்.


இப்போது உலகமெங்கும் குளோபலைசேசனின் புண்ணியத்தில் அனைத்து மொழி பேசுபவர்களும் கலந்து வேலை செய்ய, வசிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. அப்படி பல இனங்கள் கலக்கும் பள்ளிகளில் பிள்ளைகளைத் தாய்மொழி கற்க வேண்டியது கட்டாயம் என்று உலகமெங்கும் இருக்கும் மொழிவல்லுநர்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். நாம் தமிழ்நாட்டிலேயே பிள்ளைக்கு ஆங்கிலம் பேசச் சொல்லிக்கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்று பள்ளியை மாற்றிக்கொண்டு இருக்கிறோம். 


இப்படியே போனால், நார்வேயில் வேலை பார்க்கும் செந்தழல் ரவி நார்வேஜியன் மொழி தெரியாமல் கஷ்டமாக இருக்கிறது இனி அந்த மொழியையும் தமிழ்நாட்டில் கட்டாயம் கற்றுத்தர வேண்டும் என்று கொடிபிடிக்கப் போகிறார். 

Sunday, May 23, 2010

சவாலே சமாளி - கடைசிப் பகுதி

சம்பவத்தன்று மாலை 4:30 மணிக்கு

ப்பார்ட்மெண்டுக்கு நான்கு வீடுகள் முன்பாகவே பைக்கை நிறுத்தினான். தலையில் மாட்டியிருந்த ஹெல்மெட்டை கழட்டி பைக்கின் ஹெல்மெட் ஸ்டாண்டில் பொருத்தினான். சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு நடையை எட்டிப் போட்டான். தூரத்தில் இருந்து பார்க்கும்போது அந்த அப்பார்ட்மெண்ட் பில்டிங்கின் கேட்டில் யாரும் இல்லாதது போல இருந்தது. இரண்டு இரண்டு எட்டாக எடுத்து வைத்து கேட்டை நெருங்கினான். கேட்டில் கை வைத்துத் தள்ளித் திறந்து உள்ளே நுழைந்தான்.

“வாங்க சார்.. முரளி சார் இன்னும் வரலயே?” குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினான். வாட்ச்மேன் அசட்டுச் சிரிப்புடன் நின்றிருந்தார். இவன் முகத்தில் பதட்டத்தில் சட்டென்று வியர்த்தது.

“இல்ல... தெரியும்..” வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக்கொண்டு வரமாட்டேன் என்று முரண்டு பிடித்தன.

வாட்ச்மேன் அவன் வாயில் வார்த்தைகள் வந்து விழக் காத்திருப்பது போன்ற ஒரு உணர்ச்சியை முகத்தில் நெற்றி சுருங்கக் காட்டினார்.

“ஒரு சின்ன வேலை இருக்கு. அதான் வந்தேன்” என்று சமாளித்து விட்டு கட்டிடத்தின் கதவைத் தள்ளித் திறந்து உள்ளே நுழைந்தான்.

********************************************

முரளியின் அப்பார்ட்மெண்ட் ஒரு பேச்சிலரின் அப்பார்ட்மெண்ட் போல இல்லாமல் மிகவும் சுத்தமாக இருந்தது. தரையெல்லாம் வெள்ளை மார்பிள் மின்னியது. ஹாலில் அளவாக மூன்று பேர் உக்காரக்கூடிய ஒரு சோஃபாவும் அதற்கு சைடில் ஒரு ஆள் உட்காரக்கூடிய சோஃபாவும் இருந்தது. நேர் எதிரே ஒரு 32 இன்ச் டிவி. சோஃபாவின் முன்னால் இருந்த டீப்பாயில் ஆனந்த விகடனும் குமுதமும் இருந்தது. பெட் ரூமில் ஒரு டபுள் பெட் போடப்பட்டு படுக்கை சுத்தமாக விரிக்கப்பட்டிருந்தது. பெட் ரூமில் இருந்த கப்போர்டில் உடைகள் அயர்ன் செய்யப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அனைத்தும் ஒரு ஒழுங்காய் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தது.

மாடுலர் கிச்சனின் தரையில் முரளி விழுந்து கிடந்த இடம் சாக்பீஸால் மார்க் செய்யப்பட்டிருந்தது. கிச்சன் மேடைக்கும் நடுவில் இருந்த ஐ-லேண்ட்க்கும் நடுவில் விழுந்திருந்த கோணம் சற்று சங்கடமான கோணமாக இருந்தது. விழுந்து கிடந்த கோணத்தை வைத்துப் பார்த்தால் கேஸ் ஸ்டவுக்கும் ஐ-லேண்டுக்கும் இடையில் நின்றிருந்த முரளியை யாரோ அவனுக்கு எதிரில் இருந்து குத்தி யிருக்கிறார்கள். கீழே விழுந்து உடனே உயிர் போயிருக்கிறது என்று ஊகிக்க முடிந்தது.

கிச்சனின் தரையில் ரத்தம் காய்ந்து போயிருந்தது. கிச்சனின் நடுவில் இருந்த மேடையின் ஓரத்தில் ஒரு சிறு ரத்தக் கறை தெரிந்தது.

“நாராயணன். இதை நோட்டிஸ் பண்ணீங்களா?”

நாராயணனும் அதைப் பார்த்தார். “இல்லை சார். தலை இடிச்ச மாதிரி இருக்கு சார். இப்பிடி நின்னு குத்துப்பட்டிருந்தா தலை ஐலேண்ட் மேல இடிச்சிருக்க வாய்ப்பே இல்லையே சார்? முந்தி ஏற்பட்டதா இருக்குமோ?”

“போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல தலைல அடிபட்டிருக்கானு பாருங்க” என்று அருண் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அலாரம் கிளாக் அடிக்கும் சத்தம் கேட்டது. சுற்றும் முற்றும் பார்த்த போது கிச்சனுக்குள் இருந்துதான் கேட்டது. அதன் சத்தம் சினிமாக்களில் டைம் பாம் என்று காட்டும்போது கேட்கும் ஓசையை ஒத்திருந்தது.

“எங்கருந்து சத்தம் வருது சார்?” என்று நாராயணனும் அந்த டைம்பீஸைத் தேடத் தலைப்பட்டார். கிச்சன் மேடையின் மேலிருந்த கப்போர்டில் இருந்து அந்த சத்தம் வந்தது. கப்போர்டைத் திறந்தான் அருண். உள்ளே ஒரு சிறிய அலாரம் டைம்பீஸ் இருந்தது. மணி எட்டைக் காட்டிக்கொண்டிருந்தது.

“நாராயணன், கொலை செய்ய பயன்படுத்துன ஆயுதத்தைப் நான் பாக்கணுமே”

“ஸ்டேஷன்ல இருக்கு சார்”

“ஓக்கே நாராயணன். நாம கிளம்பலாம். இந்த டைம்பீஸை எடுத்து ஃபாரன்ஸிக் டிப்பார்ட்மெண்டுக்கு அனுப்பி கை ரேகைகளை எடுத்து வைக்கச் சொல்லுங்க” நாராயணன் கைக்குட்டையைப் போட்டு அந்த டைம்பீஸை எடுத்து பத்திரப்படுத்தினார்.

*******************************************

சம்பவத்தன்று இரவு 7:00 மணிக்கு

வன் டாஸ்மாக்கிலிருந்து வெளியே வந்தான். முகத்தில் இனம்புரியாத சந்தோசமும் பயமும் கவலையும் கலவையாகத் தெரிந்தது. பிடித்துக் கொண்டிருந்த சிகரெட்டை கீழே போட்டுவிட்டு “ஆட்டோ” என்று சத்தம் போட்டு போய்க்கொண்டிருந்த ஆட்டோவை அழைத்தான்.

“எங்க சார் போவணும்?” ஆட்டோ டிரைவர் பதில் தேடி அவன் முகத்தைப் பார்த்தார்.

“சரவணபவன் போப்பா” பின் சீட்டில் சாய்ந்து ஒரு நிம்மதிப் பெருமூச்சை விட்டான். வெளியே கடைகள் இரவை வண்ண விளக்குகள் போட்டு வரவேற்றுக்கொண்டிருந்தன. முரளி ஃபேன்ஸி ஸ்டோர் என்ற கடைப் பெயரைப் பார்த்ததும் தொண்டையில் கசந்தது. எச்சில் கூட்டி விழுங்கினான்.

ஆட்டோ சரவணபவன் வாசலில் நின்றது. திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு வந்தாயிற்று. சரவணபவன் வாசலில் நின்றிருந்த வாட்ச்மேன் இவனைப் பார்த்து ஒரு சல்யூட் ஒன்றைப் வைத்து விட்டு அசிங்கமாக வழிந்தார். இரண்டு கதவுகளையும் ஒரு சேரத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான்.

ஏ.சி. ஹால் செல்லும் வழி என்ற போர்ட் மாடிப்படிகளைக்காட்டிக் கொண்டிருந்தது. படிகளை நோக்கிக் காலை வைத்தவன், ஏதோ யோசனை செய்துவிட்டு, கூட்டமாக இருந்த நான்-ஏசி ஹாலுக்குள் நுழைந்தான். சாப்பிட்டு முடித்துவிடுவார் போல இருந்த ஒருவரின் பின்னால் போய் நின்று கொண்டான்.

******************************************

ஜீப் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நின்றது. நாராயணனும் அருணும் உள்ளே நுழைந்தனர். எஸ்.ஐ இவர்களுக்காகக் காத்திருந்தது போல இவர்கள் உள்ளே நுழைந்ததும் எழுந்தார்.

“என்ன முத்துவடிவு. சரவணபவன்ல விசாரிச்சீங்களா?”

“சார் சுந்தரம் ஃபோட்டோவை டிராவல்ஸ் ஆஃபீஸ்ல வாங்கிக்கிட்டு சரவணபவன் போய் விசாரிச்சேன் சார். கல்லாவுல உக்காந்திருந்த ஆள்கிட்ட ஃபோட்டோவைக் காட்டின உடனே அடையாளம் கண்டுக்கிட்டாரு சார். அன்னிக்கு சுந்தரம் மேல யாரோ காப்பியைக் கொட்டிட்டாங்கன்னு அடிச்சி கலாட்டா பண்ணிட்டானாம் சார். அங்க இருந்தது ஸ்ட்ராங் சாட்சி இருக்கு சார்”

“ஓக்கே முத்துவடிவு நீங்க போலாம். நாராயணன் அந்த கொலை செய்த கத்தி..”

“உள்ள இருக்கு சார் வாங்க” நாராயணன் நீட்டிய சிகரெட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை உருவி லைட்டரைக் கிளிக்கிப் பற்ற வைத்துக்கொண்டு நாராயணனுக்கும் லைட்டரை நீட்டினான்.

“சுந்தரம் ஒருத்தனுக்குத் தான் மோட்டிவ் இருந்த மாதிரி இருந்தது. இப்போ அவனும் இல்லைன்னா வேற யாரா இருக்கும் சார்? ஒரு வேளை அந்த இன்னொரு டிரைவரா இருக்குமா?”

“இல்ல நாராயணன். இன்னொரு டிரைவரா இருக்காது. அந்த இன்னொரு டிரைவர் தான் முரளிக்கிட்ட சுந்தரத்தைப் பத்தி சொல்லியிருக்கணும். அதுனால முரளி அவரை மன்னிச்சி விட்டுருப்பான். அந்த ட்ரைவர் கொலை செய்திருக்க மோட்டிவ் இல்லை. இருந்தாலும் அவனையும் விசாரிக்க சொல்லுங்க”

மேஜையின் உள்ளிருந்து கத்தியை எடுத்துக் கொடுத்தார் நாராயணன். நல்ல வேலைப்பாடுள்ள கத்தி. ஒன்றரை அடி நீளமாவது இருக்கும். அதில் படிந்திருந்த ரத்தக்கறை 4 1/2 இன்ச் அளவிற்கு குத்தியிருக்க வேண்டும் என்று பட்டது. மேஜை மேலிருந்த க்ரைம் சீன் ஃபோட்டோக்களைப் பார்த்தான். சட்டை போடாமலிருந்த முரளியின் இதயத்தில் கத்தி குத்தப்பட்டு இருந்தது. இதயத்தில் குத்தியதால் உடனே உயிர் போய் விட்டது. வேறு எங்காவது பட்டிருந்தால் பிழைத்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

கத்தியின் கைப்பிடியில் சீன எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தன. கைப்பிடியின் முனையில் ஒரு ட்ராகனும் பாம்பும் பின்னிப் பிணைந்திருப்பது போல உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த டிராகனின் உடல் கைப்பிடி முழுவதும் பரவியிருந்தது.

டிராகனின் வாலுக்குச் சற்று கீழே வட்டமாக ஒரு புள்ளி இருந்தது. சட்டென பார்க்க அது கத்தியில் பொறிக்கப்பட்டதாகத் தெரிந்தாலும் நன்கு உற்றுப் பார்த்தால் அது ஒரு பட்டன் போலத் தெரிந்தது.

“குச்சி மாதிரி எதாவது இருக்கா நாராயணன்?”. மேஜையின் மீதிருந்த டூத் பிக் டிஸ்பென்சரில் இருந்து ஒரு டூத் பிக் எடுத்து “இது போதுமா பாருங்க சார்”

குச்சியை வாங்கிய அருண் அந்த புள்ளியின் மீது வைத்து தள்ளினான். சிறிது உள்ளே போனதுபோல இருந்தது. ஆனால் வேறு ஒன்றும் நடக்கவில்லை.

கத்தியையே பார்த்துக்கொண்டு அந்த புள்ளியை அழுத்தி அழுத்திப் பார்த்தான். ஒன்றும் நடக்கவில்லை.

“நான் பாக்கறேன் சார்” என்று வாங்கிய நாராயணன் அந்தப் புள்ளியை அவரும் தள்ளிப்பார்த்தார். சிறிது தூரத்துக்கு மேல் அவராலும் தள்ள முடியவில்லை. கத்தியை நெட்டுக்குத்தலாக மேஜையின் மீது வைத்து இடது கையால் கைப்பிடியின் மேல் பாகத்தை அழுத்திக்கொண்டு புள்ளியை பலம் கொண்ட மட்டும் தள்ளிப் பார்த்தார். புள்ளி சிறிது உள்ளே போனதும் கத்தியின் உலோகப் பகுதி சட்டென்று கைப்பிடிக்குள் போனது. என்னவோ எதோவென்று கத்தியில் இருந்து இரண்டு கைகளையும் எடுத்தார் நாராயணன். கத்தி சட்டென்று எம்பிக் குதித்து மேஜையின் மீது விழுந்தது.

ஆச்சரியம் கலந்த ஆர்வத்துடன் அந்தக் கத்தியை எடுத்த அருண் இடது கையால் கைப்பிடியைப் பிடித்து கத்தியை மேஜையின் மீது அழுத்திக்கொண்டு அந்தப் புள்ளியை அமுக்கினான். கத்தியின் பிளேட் ஸ்பிரிங் போல கைப்பிடிக்குள் போனது. ஸ்பிரிங் மிகுந்த அழுத்தத்துடன் இருந்ததால் விட்டால் பல அடிக்கு எழும்பும் போல இருந்தது.

அருணின் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது. நாராயணனைப் பார்த்து ஒரு மந்தகாசப் புன்னகையை வெளியிட்டான். “நாராயணன். கேஸ் க்ளோஸ்ட். அந்த சுந்தரத்தை அள்ளிப் போட்டுட்டு வரச் சொல்லுங்க. அவன் தான் கொலைகாரன்”

**********************************
சம்பவம்

ரவணபவன் அன்று வழக்கத்தை விட கூட்டமாக இருந்தது. சாப்பிட வருபவர்களை டேபிளுக்கு அழைத்துச் சென்று அமர வைக்க ஆட்கள் யாரும் இல்லை. அதனால் ஒவ்வொரு டேபிளையும் நான்கு பேராவது சுற்றி “எப்படா எந்திரிப்பாய்ங்க” என்ற பார்வையுடன் நின்று கொண்டிருந்தார்கள்.

அவன் தட்டில் இருந்த மசாலா தோசையின் கடைசி விள்ளலை மிச்சமிருந்த மசாலாவோடு வாய்க்குள் தள்ளினான். சர்வர் எதிரில் இருந்தவருக்கு பூரியையும் இவன் முன் ஒரு காப்பி டபராவையும் வைத்துவிட்டு விலகினார். சைடில் இருந்த டிஷ்யூ பேப்பரில் கையைத் துடைத்து விட்டு டம்ப்ளரில் இருந்த காப்பியை டபராவில் ஊற்றி ஆற்ற ஆரம்பித்தான்.

பின்னால் நின்றிருந்த அவன் கழுத்தில் வைத்திருந்த கைக்குட்டையை எடுத்து முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டான். ‘அப்பாடா. காப்பி வந்திருச்சி. குடிச்சிட்டு எந்திருச்சிருவாப்ல’ என்று நினைத்துக்கொண்டு கர்சீப்பை சுருட்டி மீண்டும் காலருக்கு கழுத்துக்கும் இடையில் சொருகி வைத்துக் கொண்டான்.

இடது கக்கத்தில் இருந்த பையை வலது கக்கத்துக்கு மாற்றிக் கொண்டு தாடையச் சொறிந்து கொண்டான்.

அவன் கிச்சனில் இருந்து பனிரெண்டாம் நம்பர் டேபிளில் ஆர்டர் செய்திருந்த பொங்கலையும் வடையையும் பெரிய தட்டில் எடுத்துக் கொண்டு கிளம்பினான். கூட்டத்தைப் பார்க்க அவனுக்கு எரிச்சலாக வந்தது. ஓரமாகவும் நிற்க மாட்டார்கள். சர்வரும் மனுசன் தான் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை. கேவலமாகப் பார்க்கிறார்கள். அடிமையைப் போல நடத்துகிறார்கள். நல்ல ஒரு வேலை கிடைத்தால் இதை விட்டுவிட்டுப் போய்விட வேண்டும்.

எதை எதையோ யோசித்துக்கொண்டே நடந்தவன் அங்கே நின்றுகொண்டிருந்தவன் மீது இடித்தான்.

பெரிய தட்டைக் கையில் கொண்டு போன அந்த சர்வர் இடித்ததும் நிலைகொள்ளாமல் முன்னால் அமர்ந்து காபி குடித்துக்கொண்டிருந்தன் மீது தடுமாறி விழுந்தான். அவன் கக்கத்தில் இருந்த கைப்பை தவறி முன்னால் இருந்தவன் மீது விழுந்தது.

திடீரென்று மேலே வந்து விழுந்தவுடன் அதிர்ச்சியில் கையில் இருந்த காப்பி டம்ப்ளரை நழுவ விட்டான். காபி மொத்தமும் மடியில் கொட்டியது. சட்டென்று கோபம் வர எழுந்து மேலே வந்து விழுந்தவனை இடது கையால் ஒதுக்கி வலது கையால் அவன் கன்னத்தில் பலமாக ஒரு அறை விட்டான். “ஏண்டா ஒழுங்கா மனுசன சாப்புட விடமாட்டீங்க? பின்னாடியே வந்து வந்து நின்னுக்கிட்டு”

கன்னத்தில் அறை வாங்கியவன் அதிர்ச்சியில் பேச வார்த்தையின்றி இருந்தான். கன்னத்தில் கை விரல்கள் அச்சாகப் பதிந்துவிட்டிருந்தன. கீழே விழுந்த கைப்பையை எடுக்கக் கூட தோன்றாமல் நின்றுகொண்டிருந்தான்.

அடுத்த அடி அடிக்கக் கையை ஓங்கினான் அவன். குறுக்கில் பாய்ந்து தடுத்தான் சர்வர். “சார் அவர் மேல தப்பில்ல சார். நான் தான் சார் அவர்மேல இடிச்சிட்டேன். மன்னிச்சிருங்க சார்” என்று கத்திக்கொண்டே இருவருக்கும் இடையில் புகுந்தான்.

“நீ மட்டும் ஒழுங்கா?” என்று ஓங்கியக் கையை சர்வரின் முகத்தில் இறக்கினான். அவன் கையில் வைத்திருந்த பொங்கலும் வடையும் தரையில் சிதறியது. ஆட்கள் வேடிக்கைப் பார்க்கத் துவங்கிவிட்டனர்.

கல்லாவிலிருந்தவர் ஓடி வந்தார். “சார் சார் என்ன பிரச்சனை?”

“காப்பியத் தட்டி விட்டுட்டானுங்க. என்னான்னு கேளுங்க.” மேஜையின் மீதிருந்த டிஷ்யூவை எடுத்து சட்டையில் கொட்டியிருந்த காபியைத் துடைக்க ஆரம்பித்தான்.

“சார் நீங்க பாத்ரூம்ல போய் தண்ணி ஊத்தி க்ளீன் பண்ணுங்க சார். காப்பிக் கறை போவாது” யாரோ ஒருவர் யோசனை சொன்னார்.

அலுத்துக்கொண்டே பாத்ரூமை நோக்கி நடந்தான்.

கல்லாவில் உட்கார்ந்திருந்தவர் சர்வரை நோக்கித் திரும்பினார். “டேய் நீ எப்பப்பாரு இப்பிடி எதயாவது இழுத்து வச்சிக்கிட்டே இருக்க. நீ வேலை முடிஞ்சதும் முதலாளியப் போயி பாரு. இன்னியோட உன் வேலைக்கு வேட்டு வைக்கிறேன் பாரு” என்று சொல்லிவிட்டு கல்லாவை நோக்கி நடந்தார்.

அவன் போகிறவரின் முதுகையே வெறித்தான். முதலில் அடிவாங்கியவரைப் பார்த்துத் திரும்பினான். “சார் மன்னிச்சுக்குங்க சார். நான் செஞ்சத் தப்புக்கு உங்கள அடிச்சிட்டாரு அந்த படிச்ச முட்டாள். தயவு செஞ்சு மன்னிச்சுக்குங்க சார்”

“பரவாயில்லப்பா. மன்னிப்புக்கேக்க வேண்டிய ஆளு அங்க போயிட்டாரு. இதால உனக்கு வேலை போயிருமேன்னு நினைச்சாக் கஷ்டமா இருக்கு”

“பரவாயில்ல சார். நான் முதலாளி கையில கால்ல விழுந்து கேட்டுப் பாக்கிறேன். இல்லைன்னா வேற வேலை தேடிட்டுப் போறேன். வர்றேன் சார்” என்று கீழே கிடந்த பொங்கலையும் வடையையும் சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.

*************************************************

ப்பிடி சார் சொல்றீங்க?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் நாராயணன்.

“இந்த கத்தியைப் பாருங்க. இதோட கைப்பிடிக்குள்ள ஒரு ஹை டென்ஷன் ஸ்பிரிங் இருக்கு. கத்தியோட பிளேடை அதுக்குள்ள கஷ்டப்பட்டுத் திணிச்சி கப்போர்ட் கதவுல முட்டுக்குடுத்து வச்சிட்டா, கதவைத் திறந்ததும் ஸ்பிரிங் டென்ஷன் ரிலீஸாகி ஒரு புல்லட் மாதிரி பாயும். அப்பிடித்தான் முரளி நெஞ்சுல குத்தியிருக்கு.”

“சார் ஆனா முரளி கப்போர்டுக்கு சைட்லல்ல விழுந்து கிடந்தான்?”

“பின்னாடி விழுந்து ஐ லேண்ட் மேல இடிச்சி சைட்ல மடங்கி விழுந்திருக்கான். அதுனாலதான் அவன் ஒரு மாதிரி வித்தியாசமான ஆங்கிள்ல விழுந்து கிடந்தான்”

“இதை எப்பிடி சுந்தரம் தான் செஞ்சிருப்பான்னு சொல்றீங்க?”

“முரளி வீட்டுல இல்லாத சமயம் சுந்த்ரம் தான் முரளி வீட்டுக்குள்ள போய் கத்தியை செட் பண்ணியிருக்கான். ஒரு வேளை முரளி கதவைத் திறக்காமப் போயிரக்கூடாதுன்னு உள்ள ஒரு அலாரத்தை 8 மணிக்கு செட் பண்ணி வச்சிருக்கான். முரளி வீட்டைப் பாத்தீங்கள்ல. எல்லாத்தையும் ஒழுங்கா வைக்க வேண்டிய இடத்துல வச்சிருந்தார். அவரு எதுக்காக கிச்சன் கப்போர்டுக்குள்ள வைக்கணும் சொல்லுங்க? அப்பிடி எட்டு மணிக்கு வச்சிட்டு அலிபிக்காக சரவணபவனுக்குப் போய் சீன் கிரியேட் பண்ணியிருக்கான். குற்றப்புலனாய்வுல ஃபர்ஸ்ட் லெஸ்ஸன், டவுட் த பெர்சன் வித் எ ஸ்ட்ராங் அலிபி”

“லாஜிக் ஒர்க் அவுட்டாகுது சார்.”

“அந்த அப்பார்ட்மெண்ட் ஃப்ரண்ட் எண்ட்ரன்ஸ்ல ஒரு CC கேமிரா வச்சிருந்தாங்க. அந்தக் கேசட்டையும் வாங்கிப் பாருங்க. டைம்பீஸ்லயும் அவன் கை ரேகை இருக்க வழியிருக்கு. அதையும் பாருங்க”

“சார் ப்யூட்டிஃபுல் சார். இப்பவே அந்த சுந்தரத்தை இழுத்துப்போட்டு விசாரிக்கிற மாதிரி விசாரிச்சா அவனே கக்கிருவான். கேஸை நான் பாத்துக்கிறேன் சார்”

“ஓக்கே நாராயணன். நான் வித்யாதரன் சாருக்கு ஃபோன் பண்ணி விசயத்தைச் சொல்லிடுறேன். அந்த டிரைவருங்க மேல எந்த நடவடிக்கையும் எடுக்காமப் பாத்துக்குங்க.”

“ஓக்கே சார்”

அருண் எழுந்து தன் கார் சாவியை விரலில் சுற்றிக்கொண்டே வெளியேறினான். “அடுத்த கேஸ்ல பாக்கலாம் சார்” நாராயணனின் வார்த்தைகள் அவன் முதுகில் பட்டுத் தெறித்தன.

(முற்றும்)

Saturday, May 22, 2010

சவாலே சமாளி - தொடர் பதிவுக்கதை

இன்னைக்கு நர்சிம் அவரோட என்ணங்கள்ல - “இனி பழையபடி நிறைய எழுத வேண்டும். இல்லை என்றால் நட்சத்திரம் ஆகிவிடும் அபாயம் இருக்கிறது”-னு எழுதியிருந்தார். இன்னைக்குக் காலையில தான் தமிழ் மணம் அட்மின்ஸ் கிட்ட இருந்து நட்சத்திர அழைப்பு வந்தது. கலக்கமா இருக்கு.


முன்னாடி அமீரகப் பதிவர்கள் தமிழ் மண நட்சத்திர இன்விடேஷன் மாதிரியே ஈ-மெயில் அனுப்பி ‘குசும்பு’ பண்ணுவாங்களாம். அது மாதிரி இருக்குமோ அப்பிடின்னு ஒரு டவுட்டு இன்னும் இருக்கு. அப்பிடியில்லைன்னா, நான் ஐநூறு பதிவு (இடுகை?) எழுதிட்டேன்னு லுல்லலாயிக்கி சொன்னதை தமிழ்மணமும் நம்பிட்டாங்களோ என்னவோ? இல்ல இப்பல்லாம் அடிக்கடி எழுதறதில்லைன்னு ஒரு வாரம் தொடர்ந்து எழுத வைக்கிறதுக்காக நட்சத்திரமாக்கக் கூப்பிடுறாங்களான்னு தெரியலை.


இந்த ஒரு குழப்பம் போதாதுன்னு கவிஞர் ராஜசுந்தரராஜன் முந்தின பதிவுக்கு பின்னூட்டம் போட்டுட்டுப் போயிருக்காரு. இதுவும் அவரே தானா இல்லை அவர மாதிரி யாரு விளையாடுறாங்களான்னு தெரியலை.


பாருங்க, வர வர வாழ்க்கையில நம்பகத்தன்மையே போயிருச்சி. உண்மையா உதவி செய்ய வர்றவங்களைக் கூட சந்தேகக்கண்ணோடயே பாக்குறோம். நம்ம கதிர் ஒரு தடவை எழுதியிருந்த மாதிரி.

சரி அதை விடுவோம். போன பதிவுல நான் விட்டிருந்த சவாலை ஃப்ரடரிக் ஃபோர்சித் ஏத்துக்க முடியாதுன்னு சொல்லிட்டாரு. தன்னோட மறுப்புக்குக் காரணமா கீழ உள்ள காரணங்களைச் சொல்லி இருக்காரு
1. இது மாதிரி இந்தியாவை வச்சி கதை எழுதிற அளவுக்கு இந்தியாவை அறிமுகம் இல்லை
2. வழக்கமா மிலிட்டரி பேஸ்ட் கதையோ இல்லை கே.ஜி.பி, சி.ஐ.ஏ வராமலோ கதை எழுதி ரொம்ப நாளாச்சின்னு சொல்லிட்டாரு.
3. கடைசியா தனக்குத் தமிழ் தெரியாதுன்னு சொல்லிட்டாரு.

வேற வழியில்லாம, நானே எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன். உங்க தலையெழுத்து இப்பிடியிருந்தா நான் என்ன செய்ய முடியும்?

*******************************************************************


சம்பவத்தன்று மதியம் 2:00 மணி

கையிலிருந்த கிளாஸில் தங்கத் திரவம் ஆடிக்கொண்டிருந்தது. கிளாஸைக் கீழே வைத்தான். கையை முகத்துக்கு முன்னால் நீட்டிப்பார்த்தான். கை நடுங்குவது தெளிவாகத் தெரிந்தது. கண்டிப்பாக இது

உள்ளே போன திரவத்தினால் நடுங்குவதில்லை. எத்தனை கிளாஸ் உள்ளே போனாலும் ஸ்டெடியாக இருப்பவன் சுந்தரம். கை நடுங்குவதற்கு வேறு காரணம் இருக்கிறது. கிளாஸை எடுத்து அதில் இருந்த திரவத்தை ஒரே மூச்சில் விழுங்கினான்.

தொண்டை எரிந்தது. தட்டில் இருந்த சிக்கன் துண்டை எடுத்து வாயில் போட்டு மென்றான்.

‘முரளி கண்டுபிடித்து விட்டான். சும்மா விடமாட்டான் எமகாதகன்’ கையில் இருக்கும் சிக்கனை முரளியை நினைத்துக் கொண்டு கசக்கினான். கறையான கையை டிஷ்யூ பேப்பரில் துடைத்துக் கொண்டான்.

சுந்தரமும் முரளியும் ஒரு ட்ராவல்ஸில் வேலை செய்கிறார்கள். முதலாளி இவர்களை நம்பி பிசினஸைக் கொடுத்து விட்டு அமெரிக்காவில் தன் மகளுடன் வசிக்கிறார். சுந்தரம் முரளிக்குத் தெரியாமல் சில பல சித்து வேலைகளுக்கு ட்ராவல்ஸ் கார்களை உபயோகித்து கொஞ்சம் காசு பார்த்தான். இத்தனை நாள் தெரியாமல் இருந்தது இன்று கையும் களவுமாகப் பிடித்து விட்டான் முரளி. நாளைக் காலை 8:00 மணி வரை டயம் கொடுத்திருக்கிறான். அதற்குள் சுந்தரம் முதலாளிக்கு ஃபோன் போட்டு விசயத்தை சொல்லி தப்பை ஒத்துக் கொண்டு முதலாளி தரும் தண்டனையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாம். இல்லையென்றால் அவன் முதலாளியிடம் சொல்லிவிடுவதோடு போலிஸிலும் போட்டுக் கொடுத்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறான்.

முதலாளி கண்டிப்பானவர். சுந்தரம் தானே ஒத்துக் கொண்டாலும் தகுந்த தண்டனை தராமல் விடமாட்டார். ரிட்டயர்ட் போலீஸ் அதிகாரி வேறு.

‘என்ன செய்யலாம் இந்த முரளியை? அவன் தனிக்கட்டை. சொந்தம் பந்தம் செலவு கிலவு எதுவுமில்லை. ஆனால் நான்? இரண்டு பெண்குழந்தைகள். பள்ளிக்கூடங்கள் பகல் கொள்ளை அடிக்கின்றனர். பள்ளி ஃபீஸ் கட்ட மட்டும் இன்னொரு சம்பளம் தேவைப்படுகிறது. முரளி என்னை வாழவிடமாட்டான். வேறு வழியில்லை’

குவாட்டர் பாட்டிலில் மிச்சமிருந்த சரக்கை மிக்ஸிங் இல்லாமல் பாட்டிலோடு குடித்துவிட்டு மேஜையில் டிப்ஸ் வைத்து விட்டு வெளியேறினான்.

***************************************

ருண் சிகரெட் புகையை விட்டத்தை நோக்கி விட்டான். எதிரில் இருந்த இன்ஸ்பெக்டர் அருணின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். அடுத்த பஃப் இழுத்து விட்டு சிகரெட்டை மேஜையின் மீதிருந்த ஆஷ்ட்ரேயின் மேல் நசுக்கினான்.

“சொல்லுங்க நாராயணன். முரளிக்கு எதிரிகள் யாரும் இருக்காங்களா?”

“எதிரிகள்னு பெரிசா யாரும் இல்லை சார். ஆள் தனிக்கட்டை. சொந்தம் பந்தம் யாரும் இல்லை. நம்ம ரிட்டயர்ட் போலீஸ் கமிஷனர் வித்யாதரனோட ட்ராவல் ஏஜென்சிய முரளியும் சுந்தரமும்தான் பாத்துக்குறாங்க”

“தெரியும் நாராயணன். வித்யாதரன் சார் அமெரிக்காவுல இருந்து என்னைக் கூப்பிட்டு இந்தக் கேஸை ஸ்பெஷலாப் பாக்கச் சொன்னார். முரளிக்கும் சுந்தரத்துக்கும் தகறாரு எதாவது?”

“அப்படியெல்லாம் இல்லை சார். ரெண்டு பேரு நல்ல ஃப்ரெண்ட்ஸ்னு ட்ராவல்ஸ் டிரைவர்ஸ் எல்லாம் சொல்றாங்க”

“அப்படியா? சுந்தரத்தை விசாரிச்சிங்களா?”

“விசாரிச்சோம் சார். அவனும் முரளியப் பத்தி நல்லவிதமாத்தான் சொன்னான். ஆனா முரளிக்கும் யாரோ ஒரு லேடிக்கும் தொடர்பு இருக்கலாம்னு அவன் சந்தேகப்படுறதா சொன்னான் சார்”

“ஹ்ம். இண்ட்ரஸ்டிங். வேற யாராவது இது பத்தி ஹிண்ட் எதாவது குடுத்தாங்களா?”

“இல்ல சார். சுந்தரம் மட்டும் தான் அப்பிடி சொல்லியிருக்கான்”

“ஓக்கே நாராயணன். நாம முதல்ல போய் க்ரைம் சீன் பாத்துட்டு வரலாம். எதுவும் கலைக்கலை தான?”

“இல்ல சார். அப்பிடியே இருக்கு”

“ஓக்கே” என்று சொல்லிக்கொண்டே எழுந்து மேஜைமேல் இருந்த தன் ஐ ஃபோனை எடுத்துக்கொண்டான். இருவரும் இன்ஸ்பெக்டரின் அறையை விட்டு வெளியே வந்தனர்.

“டிப்பார்ட்மெண்ட் ஜீப்லயே போயிடலாம் சார்” என்றவாறு ஜீப் டிரைவரைப் பார்த்தார் நாராயணன். பார்வையில் இருந்த அர்த்தத்தைப் புரிந்து கொண்ட டிரைவர் சாவியை இன்ஸ்பெக்டரிடம் கொடுத்தார்.

இருவரும் வெளியே வந்தனர்.

“அய்யாவை இப்ப பாக்க முடியாதுய்யா.. அய்யா முக்கியமான கேஸ் விசயமா டிஸ்கஷன்ல இருக்காரு” யாரிடமோ வாசலில் இருந்த கான்ஸ்டபிள் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது.

“என்ன மாணிக்கம். என்ன பிரச்சனை?” இன்ஸ்பெக்டரைப் பார்த்ததும் கான்ஸ்டபிள் அனிச்சையாக விரைப்பை உடலுக்குக் கொண்டுவந்து சல்யூட் ஒன்றைப் பிரயோகித்தார்.

“சார் உங்களப் பாக்கணும்னு அரை மணி நேரமா தொணத்திக்கிட்டே இருக்கான் சார் இந்தாளு”

அருண் அந்தாளைப் பார்த்தான். ஒடிசலான, உயரமான உருவம். ஒரு கண்ணாடியைப் போட்டு விட்டால் சினிமா நடிகர் மனோபாலாவைப்போல இருப்பான். கருப்பு உதடுகள் சிகரெட் சிகரெட் என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன. வெள்ளை சட்டை வெள்ளை பேண்ட் போட்டிருந்தான். சட்டைப் பையில் பச்சை எம்ப்ராய்டரி எழுத்துக்கள் வித்யா ட்ராவல்ஸ் என்று சொல்லின.

“யாருப்பா நீயி?” இன்ஸ்பெக்டர் அவனைத் தலை முதல் கால் வரை பார்வையால் அளந்து கொண்டே கேட்டார்.

“நான் வித்யா ட்ராவல்ஸ்ல ட்ரைவரா இருக்கேன் சார். முரளி சார் கொலை சம்மந்தமா உங்கக்கிட்ட ஒரு விசயம் சொல்லணும் சார்”

அருணும் நாராயணனும் பார்வையைப் பரிமாறிக்கொண்டனர். எதோ சொல்ல வந்த நாராயணனை மறித்த அருண் “வாங்க உள்ள போய் பேசலாம்” என்று உள்ளே செல்ல திரும்பினான்.

***********************************************************


சம்பவத்துக்கு இரு நாட்களுக்கு முன்

வித்யா ட்ராவல்ஸ் என்ற எழுத்துக்கள் பொன் நிறத்தில் மின்னிக்கொண்டிருந்தன. பெரிய கண்ணாடிக் கதவுகள் உள்ளே ஏசி இருப்பதை பறை சாற்றிக்கொண்டிருந்தன. கட்டிடத்துக்கு முன்னால் இருந்த இடத்தில் ஐந்து கார்களும் இரண்டு வேன்களும் வெள்ளை நிறத்தில் நின்று கொண்டிருந்தன.

ஒரு கையை அம்பாசிடர் காரின் மேல் ஊன்றி சாய்ந்து நின்று கொண்டு சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தான் சுந்தரம். வெயில் உச்சியைப் பிளந்துகொண்டிருந்தது. அவன் நெற்றியில் பூத்திருந்த வேர்வைத்துளிகளில் வித்யா ட்ராவல்ஸ் எழுத்துக்களின் பொன் நிறம் பிரதிபலித்து அவன் நெற்றி ஜொலித்தது.

அந்த மாருதி ஆம்னி உள்ளே நுழைந்தது. அதைப் பார்த்ததும் கையில் இருந்த சிகரெட்டை கீழே போட்டு மிதித்து விட்டு காரை ஓட்டி வந்த டிரைவர் கீழே இறங்குவதை ஆர்வத்துடன் பார்த்தான்.

காரில் இருந்து இறங்கியவர் வெள்ளைச் சட்டை, வெள்ளை பேண்ட் போட்டிருந்தார். அவர் சட்டைப் பையின் மேல் பச்சை எழுத்துக்களில் வித்யா டிராவல்ஸ் என்ற எழுத்துகள் எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தன.

“வாங்க பாபு. பிரச்சனை எதுவுமில்லையே?”

“இல்ல சார். ஆனா சீட்டுத்தான் கொஞ்சம் கறையா..”

“சரி சரி. சீட் கவரை சீக்கிரமா கழட்டி வாஷிங்குக்குப் போட்டுடுங்க. பணம் சரியாக் குடுத்தாங்கள்ல?”

“குடுத்துட்டாங்க சார். இந்தாங்க” பையில் இருந்து சில ரூபாய் நோட்டுகளை எடுத்து நீட்டினார். கண்கள் விரிய அந்தப் பணத்தைக் கை நீட்டி வாங்கினான். நாக்கை நீட்டி விரலால் தொட்டு எச்சி செய்துகொண்டு அந்தப் பணத்தை எண்ணி சரி பார்த்தான். அதில் இருந்து சில நோட்டுகளை டிரைவரிடம் நீட்டினான்.

“வச்சிக்குங்க. அடுத்த சவாரி வந்தா சொல்றேன்”

“சார். ஒரு ஐநூறு ரூவா கூடக் கிடைக்குமா?”

சுந்தரத்தின் வாயில் ஒட்டியிருந்த சிரிப்பு ஓடிப்போனது. “எதுக்கு?”

“மூத்த பொண்ணு உக்காந்திருச்சி சார். சேலைத் துணி வாங்கணும்”

“ஏன், முரளிகிட்ட கேக்கலாமே?”

“சார் அவர்கிட்ட கேட்டா அட்வான்ஸாத்தான் குடுப்பாரு. அப்புறம் சம்பளத்துல பிடிச்சிக்குவாரு. நீங்கன்னா...”

கண்களை இடுக்கி முகத்தில் கடுமையைக் கூட்டி, “அப்ப நான் மட்டும் இளிச்சவாயனா? நீ ஓட்டுற வேலை மட்டுந்தான்யா செய்யிற. கஸ்டமர் பிடிக்க கஷ்டப்படுறது நான். சும்மா ஓசியில தூக்கிக் குடுக்க நான் என்ன தர்ம சத்திரமா நடத்துறேன். போய்யா. வேணும்னா அடுத்த ரெண்டு மூணு சவாரி உனக்கே குடுக்குறேன். அதைத் தவிர வேற ஒண்ணும் என்னால குடுக்க முடியாது”

“சார்..”

“அவ்வளவுதான்யா என்னால செய்ய முடியும். போ போ” என்றவாறு திரும்பி கண்ணாடிக் கதவை நோக்கி நடந்தான்.

வேனுக்குப் பின்னால் நின்று நடந்த அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த அந்த உருவம் டிரைவர் பாபுவை நோக்கி நகர்ந்தது.

**************************************

“உங்க பேரென்ன சொன்னீங்க?” அருண் எதிரில் உட்கார்ந்திருந்த அந்த டிரைவரைப் பார்த்து கேட்டான்.

“இன்னும் சொல்லல்லீங்க அய்யா. என் பேரு ராமராஜ்”

“சொல்லுங்க ராமராஜ். உங்களுக்கு என்ன தெரியும்?”

“சார் நேத்து காலைல ஆஃபீஸ்ல முரளி சாருக்கும் சுந்தரம் சாருக்கும் நடுவுல கொஞ்சம் பிரச்சனைங்க அய்யா. அதுல நானும் சம்மந்தப்பட்டதால நான் கொஞ்சம் ஆர்வக்கோளாறுல என்ன நடந்ததுன்னு ஒட்டுக்கேட்டேன் சார்”

“என்ன பிரச்சனை?”

“சுந்தரம் சார் டிராவல்ஸ் காரை இல்லீகல் விசயத்துக்கு வாடகைக்கு விடுவாருங்கய்யா”

“இல்லீகல் விசயம்னா?”

ஒரு நொடி தயங்கினார். “விபச்சாரத்துக்கு...”

“ஹ்ம்ம். உங்களுக்கு இந்த விசயம் எப்பிடித் தெரியும்?”

“நானே சில நேரம் கார் ஓட்டிட்டுப் போயிருக்கேன் சார். எங்கயாவது ஊருக்கு ஒதுக்குப்புறமாப் போயிட்டு நான் காரை விட்டு எறங்கிப் போயிருவேன்யா. காருக்குள்ளயே எல்லாத்தையும் முடிச்சிட்டு செல்ஃபோன்ல கூப்புடுவாங்க. நான் திரும்ப சிட்டிக்குள்ள ட்ராப் பண்ணிட்டு வந்துருவேன். சாதாரணமா கார் வாடகைய விட இந்த டிரிப்புக்கு மூணு மடங்கு சார்ஜ் பண்ணுவம் சார். ஒரு பங்கு மட்டும் கணக்கு காட்டிட்டு மீதிய சுந்தரம் சார் எடுத்துக்குவார். எனக்கு டபுள் பேட்டா குடுத்துருவாரு”

“நீங்க ஒருத்தரு தான் இப்பிடி ஓட்டுவீங்களா? இல்லை வேற டிரைவர்களும் ஓட்டுவாங்களா?”

“நானும் இன்னொருத்தரும் தாங்கய்யா. எங்களுக்குக் கொஞ்சம் பெரிய குடும்பம். பணக்கஷ்டம். இதைக் காரணமா வச்சே எங்களை இந்தத் தப்பு செய்ய வச்சிட்டாரு சுந்தரம் சார். இந்த விசயம் எப்பிடியோ முரளி சாருக்குத் தெரிஞ்சிருச்சி போல. அவரு சுந்தரம் சாரைத்திட்டிப் பேசிட்டு இருந்தாருங்கய்யா. சுந்தரம் சார் கொஞ்ச நேரத்துல ஆஃபீஸ்ல இருந்து வெளிய போயிட்டாரு. நான் முரளி சார்கிட்ட எல்லாத்தையும் சொல்லி கால்ல விழுந்து கெஞ்சினேன். அவரும் என்னை மன்னிச்சிட்டாரு. அவரை சுந்தரம் சார் எதாவது செஞ்சிருக்கலாம்னு நான் சந்தேகப் படுறேனுங்க அய்யா”

“ராமராஜ். இதை கோர்ட்ல வந்து சொல்லுவீங்களா?”

“சொல்றேனுங்கய்யா”

முன்னால் இருந்த நோட்டை மூடிவைத்து விட்டு மூக்குப்பொடியை உறிஞ்சிக் கொண்டிருந்த ரைட்டரை அழைத்து ராமராஜிடம் ஸ்டேட்மெண்ட் வாங்கிக்கொள்ளச் சொன்னார் நாராயணன்.

“நாராயணன். கொலை நடந்த நேரம் சுந்தரம் எங்கெருந்தான்னு சொன்னானா?”

“ஹோட்டல் சரவணபவன்ல சாப்புட்டுட்டு இருந்ததா சொன்னான் சார்”

“சுந்தரம் ஃபோட்டோவைக் காட்டி ஹோட்டல்ல விசாரிக்கச் சொல்லுங்க. சர்வர் யாராவது பாத்தாங்களான்னு. நாம கிரைம் சீன் பாத்துட்டு வந்துரலாம்”

“சரி சார்” நாராயணன் சப் இன்ஸ்பெக்டரை அழைத்து உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டு ஜீப்பைக் கிளப்பினார்.(மர்மம் தொடரும்)

பலா பட்டறை ஷங்கர் - யாரு நல்லா எழுதறாங்கன்னு சொல்றவங்களுக்கு பாரிஸ்/பர்மா பஜார் இன்பச்சுற்றுலா பரிசாத் தர்றேன்னு சொல்லியிருக்கார். நான் என் பங்குக்கு இந்தக் கதைக்கு நல்ல தலைப்பு வைக்கிறவங்களுக்கு என் செலவுல தாஜ்மகால் பாக்க ஏற்பாடு பண்றேன்.

(டி.வி.டியா, சி.டி.யாங்கிறது ஜெயிக்கிறவங்க சாய்ஸ்)

சவாலே சமாளி..

இது என்னுடைய ஐநூறாவது பதிவு. பதிவுலகத்துக்கு வந்து 9 மாதங்களுக்குள் ஐநூறு பதிவுகள் எழுதிவிட்டேனா என்று எண்ணிப்பார்க்கும் போது மலைப்பாகத்தான் இருக்கிறது. உங்களின் பேராதரவு இல்லாவிட்டால் நான் இப்படி எழுதித்தள்ளியிருக்க முடியாது என்பது தான் உண்மை. உங்களின் ஆதரவைத் தொடர்ந்து எனக்கு அள்ளித்தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நிற்க. இப்ப மேட்டருக்கு வருவோம். நமக்கு பதிவுலகத்துல ரெண்டு தோஸ்த்துங்க இருக்காங்க (ரெண்டு பேருதானான்னு கேக்கக் கூடாது). ஒரு நாள் சும்மா இல்லாம அவங்களை ஒரு சவாலுக்குக் கூப்பிட்டேன். அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க.

என்ன சவாலா? வேற என்ன. கதை எழுதுறதுதான். கொஞ்ச நாளைக்கு முன்னால நம்ம விசா குடுத்த ஐடியால ஒரு பத்து பேரு ஒரு கதைய எழுதிக் கிழிச்சோம். இப்ப வெறும் மூணு பேருதான். இந்தத் தடவை இஷ்டத்துக்கு எழுதாம நான் குடுக்குற சிச்சுவேசனுக்கு எழுதணும்னு ஒரு கண்டிஷன். மேட்டரைப் பாருங்க இப்ப.

கேரக்டர் 1


ஹோட்டல் சரவண பவன்” என்ற பெயர்ப்பலகைக்குக் கீழ் அவன் நின்றிருந்தான். சற்றே பழுப்பு நிறமாயிருந்த வேட்டி. கக்கத்தில் பானு ஜுவல்லர்ஸ் என்று எழுத்துகள் நிறைந்த உப்பிய பிரவுன் நிறப் பை.

வெள்ளைச்சட்டையின் காலரில் அழுக்குப் படிந்து விடாமலிருக்க கழுத்தில் சுருட்டி வைக்கப் பட்டிருந்த கைக்குட்டை. சட்டைப்பையில் ஓரிரண்டு ரூபாய் நோட்டுக்கள் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தன. அவன் மாநிறக் கன்னத்தில் சற்றே அழுத்தமாகத் தெரிந்த விரல் அச்சுக்கள். இடது கை அனிச்சையாக கன்னத்தைத் தடவிக் கொண்டது.

“இந்தா சார் பீடா” பீடாக் கடைக்காரர் நீட்டிய பீடாவை வாங்கி கடைவாயில் உதப்பிக் கொண்டு வலது காலை ஸ்டைலாக பின்னால் தூக்கி வேட்டியின் ஒரு முனையை வலது கையால் பிடித்து நடக்க ஆரம்பித்தான். பேருந்து நிறுத்தம் வந்ததும் ரோட்டின் ஓரத்தில் இருந்த குப்பைத் தொட்டியில் புளிச்சென்று பீடாச்சாற்றைத் துப்பினான். கடைவாயோரத்தில் வழிந்த சாறை புறங்கையால் வழித்தான்.

அவன் ஏற வேண்டிய பேருந்து நிலையத்தினுள் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தது. ஓடிச்சென்று ஏறினான்.

“எங்க போவனும்?” என்று கேட்ட நடத்துனரிடம் இடத்தைச் சொல்லி பயணச்சீட்டைப் பெற்றுக் கொண்டான். பேருந்தில் நிற்க மட்டுமே இடம் இருந்தது. ஒரு இருக்கையின் சாய்மானத்தில் சாய்ந்து நின்று கொண்டான். ஹோட்டலில் நடந்ததை நினைத்துக் கொண்டான். அடித் தொண்டையில் ஏதோ கசந்தது.

அடுத்தடுத்த நிறுத்தங்களில் கூட்டம் மண்டியது. டிரைவர் திடீரென சடன் ப்ரேக் போட்டு விட்டு “சாவு கிராக்கி” என்று யாரையோ பார்த்து சன்னல் வழியே திட்டினார். சட்டென நிமிர்ந்தவன் தன் மீது வந்து விழுந்த அந்த மஞ்சள் சட்டைக்காரனின் சட்டையைக் கொத்தாகப் பிடித்து ‘ரப்’என்று அவன் கன்னத்தில் அறைந்தான்.

அவனைச் சுற்றி நின்றிருந்தவர்களும் உட்கார்ந்திருந்தவர்களும் அவனை ஆச்சர்யம் கலந்த ஆர்வத்துடன் பார்த்தார்கள். யாரோ ஒருவன் “இன்னாபா மேட்டரு?” என்று கேட்டான். இன்னொரு அறை விட்டு “பிளேடு போடுறான் சார். பிக்பாக்கெட் பன்னாட” என்றவாறு கூட்டத்தைப் பார்த்தான். அவன் முகத்தில் ஒரு பெருமிதம் மின்னியது.

கேரக்டர் - 2


அவளுக்காக அந்த பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தான் அவன். இது மூன்றாவது நாள் அவள் இந்த பஸ்ஸ்டாப்புக்கு வருவதை நிறுத்தி. காரணம்? மூன்று நாட்களுக்கு முன் நடந்த அந்தச் சம்பவம். அதை நினைத்தால் அவனுக்கு அவன் மீதே கோபம் கோபமாக வந்தது.

“ஹாய் ஸ்வாதி”

“ஷான், எத்தன தடவ உன்கிட்ட சொல்றது. என்னை ஸ்வானு கூப்புடுனு?”

“எங்கப்பாம்மா எனக்கு அழகா சண்முகம்னு பேரு வச்சிருக்காங்க. நீ என்னடான்னா அத ஷான்னு ஸ்டைலா கூப்புடுற. இந்த கால் செண்டர்ல வேலைக்குச் சேந்ததுல இருந்து உன் போக்கே சரியில்ல”

“அமெரிக்கன்ஸ் எல்லாம் அப்பிடித்தான் ஷான். பேரைச் சுருக்கிக் கூப்புடுவாங்க. நாமும் அப்பிடிக் கூப்புடலாமே?”

“அது இருக்கட்டும். நான் உங்கிட்ட ஒன்னு கேக்கனும் ஸ்வாதி.. சாரி ஸ்வா”

“கேளு ஷான்” என்று இவன் கண்களை ஊடுருவிப் பார்த்தாள். இவன் அதைக் கேட்டிருந்திருக்கக்கூடாது. கேட்டு விட்டான்.

இப்போது மூன்று நாட்களாக இவனைப் பார்ப்பதைத் தவிர்க்கிறாள். செல்லில் கூப்பிட்டாலும் எடுப்பதேயில்லை.

தூரத்தில் கடலை விற்கும் வண்டி மணியடித்துக் கொண்டே போனது. சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் பேட்டுகளோடு இன்று ஆடப் போகும் போட்டிக்கு ஸ்ட்ராட்டஜி டிஸ்கஷன் செய்து கொண்டிருந்தனர். காய்கறி வாங்கிக் கொண்டு செல்லும் மாமிகள் சலசலவென பேசிக்கொண்டே செனறனர். இவை எதுவும் அவனைப் பாதிக்கவில்லை. ஸ்வா ஸ்வா ஸ்வா. அவன் சுவாசம் முழுவதும் அவள் மட்டுமே நிரம்பியிருந்தாள்.

சட்டென நினைவுக்கு வந்தவனாகக் கலைந்தான். கையில் கட்டியிருந்த வாட்சில் மணி பார்த்தான். ட்யூட்டிக்கு செல்ல நேரமாகிவிட்டது. திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தான்.

அவன் வேலை செய்யும் இடம் வந்ததும் ஒரு நொடி நின்று நிமிர்ந்து பார்த்தான். “ஹோட்டல் சரவணபவன்” என்ற பலகையைப் பார்த்து ஒரு பெருமூச்சை வெளியிட்டு விட்டு உள்ளே நுழைந்தான்.

கேரக்டர் - 3


ஓரமாகப் போடப்பட்டிருந்த பெஞ்சில் இரண்டு பெண்கள் அமர்ந்திருந்தார்கள். இருவரின் அதீத மேக்கப்பும் தலை நிறைய மல்லிகையும் அவர்கள் பாலியல் தொழில் செய்பவர்கள் என்று சொல்லாமல் சொல்லின. “பட்டப்பகல்லயே தொழில் செய்ய வந்துட்டாளுவ” என்று சலித்தபடி எதோ எழுதிக்கொண்டிருந்தார் ரைட்டர். டீக்கடைப் பையன் ஒவ்வொரு போலீஸ்காரருக்கும் டீ கொடுத்துக்கொண்டிருந்தான்.

சுவற்றை ஒட்டிப் போடப்பட்டிருந்த மேஜைகளில் ஹெட் கான்ஸ்டபிளும் ரைட்டரும் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு நேர் எதிராகப் போடப்பட்டிருந்த மேஜையில் சப் இன்ஸ்பெக்டர். வெளியே ஒரு கான்ஸ்டபிள் யாரோ ஒருவரிடம் பேரம் பேசிக்கொண்டிருந்தார்.

சப் இன்ஸ்பெக்டர் தொப்பியக் கழற்றி வியர்த்திருந்த வழுக்கையை கர்ச்சீப்பால் துடைத்துக்கொண்டார். “யோவ் ஏட்டு. இன்ஸ்பெக்டர் எப்பயா வர்றேன்னு சொன்னாரு”

“கிளம்பிட்டார் சார். எப்ப வேணும்னாலும் வந்திடுவாரு”

“சரி அந்த கொலைக் கேஸ் விசயமா ஒருத்தனக் கூப்பிட்டு விட்டுருந்தோமே வந்துட்டானா?”

“வந்துட்டான் சார். வெளிய உக்கார வச்சிருக்கேன்”

வாசலில் ஜீப் நிற்கும் சத்தம் கேட்டது. ஸ்டேஷனில் சட்டென்று அனைவருக்கும் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது. சப் இன்ஸ்பெக்டர் தொப்பியை மாட்டிக்கொண்டு எழுந்து நின்றார்.

இன்ஸ்பெக்டர் ஒரு சிகரெட்டை வாயில் பொறுத்திப் பற்ற வைத்துக்கொண்டே உள்ளே நுழைந்தார். மூவரும் அவருக்கு சல்யூட் வைத்தனர்.

“ம்ம்ம்.. அந்த மர்டர் ரிலேட்டடா...”

“வந்துட்டான் சார். வெளிய உக்கார வச்சிருக்கேன்”

“என் ரூமுக்குள்ள வரச்சொல்லு. விசாரிப்போம்”

வெளியே அமர்ந்திருந்த அவன் முகம் லேசாக வெளிறியிருந்தது. அவன் அமர்ந்திருந்த அசவுகரியமான நிலை அவனுக்கு இந்த போலீஸ் ஸ்டேசன் சூழல் புதியது என்று படம் போட்டுக்காட்டியது.

எத்தனையாவது முறையாகவோ கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டான். இன்ஸ்பெக்டர் வந்து விட்டார். அவன் பார்த்த பல சினிமாக்களின் போலீஸ் விசாரணைக் காட்சிகள் நினைவுக்கு வந்து அவன் வயிற்றில் பட்டாம்பூச்சிகளைப் பறக்க விட்டன.

“சார். உங்களை இன்ஸ்பெக்டர் கூப்புடுறாரு” கான்ஸ்டபிள் வந்து சொல்லவும் எழுந்தான்.

இன்ஸ்பெக்டர் தனது நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அவருக்கு எதிரே இருந்த டேபிள் கொஞ்சம் சுத்தமாக இருந்தது. கோப்புகள் எல்லாம் வலது கை ஓரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இடது கை ஓரத்தில் இரண்டு தொலைபேசிகளும் ஒரு வயர்லெஸ் செட்டும் இருந்தனர். அவரது நோக்கியா N63 அவருக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்தது. அவருக்குப் பின்னால் இருந்த படத்தில் காந்தி பொக்கை வாய்ச் சிரிப்புடன் இருந்தார்.

“சொல்லுங்க மிஸ்டர் சுந்தரம். உங்களை எதுக்காகக் கூப்பிட்டு வந்திருக்காங்கன்னு தெரியுமா?”

“தெரியும் சார்”

“நேத்து ராத்திரி 8:00 மணிக்கு எங்க இருந்தீங்க?”

சரவணபவன்ல சாப்பிட்டுட்டு இருந்தேன் சார்”சம்பவம்

சரவணபவன் அன்று வழக்கத்தை விட கூட்டமாக இருந்தது. சாப்பிட வருபவர்களை டேபிளுக்கு அழைத்துச் சென்று அமர வைக்க ஆட்கள் யாரும் இல்லை. அதனால் ஒவ்வொரு டேபிளையும் நான்கு பேராவது சுற்றி “எப்படா எந்திரிப்பாய்ங்க” என்ற பார்வையுடன் நின்று கொண்டிருந்தார்கள்.

அவன் தட்டில் இருந்த மசாலா தோசையின் கடைசி விள்ளலை மிச்சமிருந்த மசாலாவோடு வாய்க்குள் தள்ளினான். சர்வர் எதிரில் இருந்தவருக்கு பூரியையும் இவன் முன் ஒரு காப்பி டபராவையும் வைத்துவிட்டு விலகினார். சைடில் இருந்த டிஷ்யூ பேப்பரில் கையைத் துடைத்து விட்டு டம்ப்ளரில் இருந்த காப்பியை டபராவில் ஊற்றி ஆற்ற ஆரம்பித்தான்.

பின்னால் நின்றிருந்த அவன் கழுத்தில் வைத்திருந்த கைக்குட்டையை எடுத்து முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டான். ‘அப்பாடா. காப்பி வந்திருச்சி. குடிச்சிட்டு எந்திருச்சிருவாப்ல’ என்று நினைத்துக்கொண்டு கர்சீப்பை சுருட்டி மீண்டும் காலருக்கு கழுத்துக்கும் இடையில் சொருகி வைத்துக் கொண்டான்.

இடது கக்கத்தில் இருந்த பையை வலது கக்கத்துக்கு மாற்றிக் கொண்டு தாடையச் சொறிந்து கொண்டான்.

அவன் கிச்சனில் இருந்து பனிரெண்டாம் நம்பர் டேபிளில் ஆர்டர் செய்திருந்த பொங்கலையும் வடையையும் பெரிய தட்டில் எடுத்துக் கொண்டு கிளம்பினான். கூட்டத்தைப் பார்க்க அவனுக்கு எரிச்சலாக வந்தது. ஓரமாகவும் நிற்க மாட்டார்கள். சர்வரும் மனுசன் தான் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை. கேவலமாகப் பார்க்கிறார்கள். அடிமையைப் போல நடத்துகிறார்கள். நல்ல ஒரு வேலை கிடைத்தால் இதை விட்டுவிட்டுப் போய்விட வேண்டும்.

எதை எதையோ யோசித்துக்கொண்டே நடந்தவன் அங்கே நின்றுகொண்டிருந்தவன் மீது இடித்தான்.

பெரிய தட்டைக் கையில் கொண்டு போன அந்த சர்வர் இடித்ததும் நிலைகொள்ளாமல் முன்னால் அமர்ந்து காபி குடித்துக்கொண்டிருந்தன் மீது தடுமாறி விழுந்தான். அவன் கக்கத்தில் இருந்த கைப்பை தவறி முன்னால் இருந்தவன் மீது விழுந்தது.

திடீரென்று மேலே வந்து விழுந்தவுடன் அதிர்ச்சியில் கையில் இருந்த காப்பி டம்ப்ளரை நழுவ விட்டான். காபி மொத்தமும் மடியில் கொட்டியது. சட்டென்று கோபம் வர எழுந்து மேலே வந்து விழுந்தவனை இடது கையால் ஒதுக்கி வலது கையால் அவன் கன்னத்தில் பலமாக ஒரு அறை விட்டான். “ஏண்டா ஒழுங்கா மனுசன சாப்புட விடமாட்டீங்க? பின்னாடியே வந்து வந்து நின்னுக்கிட்டு”

கன்னத்தில் அறை வாங்கியவன் அதிர்ச்சியில் பேச வார்த்தையின்றி இருந்தான். கன்னத்தில் கை விரல்கள் அச்சாகப் பதிந்துவிட்டிருந்தன. கீழே விழுந்த கைப்பையை எடுக்கக் கூட தோன்றாமல் நின்றுகொண்டிருந்தான்.

அடுத்த அடி அடிக்கக் கையை ஓங்கினான் அவன். குறுக்கில் பாய்ந்து தடுத்தான் சர்வர். “சார் அவர் மேல தப்பில்ல சார். நான் தான் சார் அவர்மேல இடிச்சிட்டேன். மன்னிச்சிருங்க சார்” என்று கத்திக்கொண்டே இருவருக்கும் இடையில் புகுந்தான்.

“நீ மட்டும் ஒழுங்கா?” என்று ஓங்கியக் கையை சர்வரின் முகத்தில் இறக்கினான். அவன் கையில் வைத்திருந்த பொங்கலும் வடையும் தரையில் சிதறியது. ஆட்கள் வேடிக்கைப் பார்க்கத் துவங்கிவிட்டனர்.

கல்லாவிலிருந்தவர் ஓடி வந்தார். “சார் சார் என்ன பிரச்சனை?”

“காப்பியத் தட்டி விட்டுட்டானுங்க. என்னான்னு கேளுங்க.” மேஜையின் மீதிருந்த டிஷ்யூவை எடுத்து சட்டையில் கொட்டியிருந்த காபியைத் துடைக்க ஆரம்பித்தான்.

“சார் நீங்க பாத்ரூம்ல போய் தண்ணி ஊத்தி க்ளீன் பண்ணுங்க சார். காப்பிக் கறை போவாது” யாரோ ஒருவர் யோசனை சொன்னார்.

அலுத்துக்கொண்டே பாத்ரூமை நோக்கி நடந்தான்.

கல்லாவில் உட்கார்ந்திருந்தவர் சர்வரை நோக்கித் திரும்பினார். “டேய் நீ எப்பப்பாரு இப்பிடி எதயாவது இழுத்து வச்சிக்கிட்டே இருக்க. நீ வேலை முடிஞ்சதும் முதலாளியப் போயி பாரு. இன்னியோட உன் வேலைக்கு வேட்டு வைக்கிறேன் பாரு” என்று சொல்லிவிட்டு கல்லாவை நோக்கி நடந்தார்.

அவன் போகிறவரின் முதுகையே வெறித்தான். முதலில் அடிவாங்கியவரைப் பார்த்துத் திரும்பினான். “சார் மன்னிச்சுக்குங்க சார். நான் செஞ்சத் தப்புக்கு உங்கள அடிச்சிட்டாரு அந்த படிச்ச முட்டாள். தயவு செஞ்சு மன்னிச்சுக்குங்க சார்”

“பரவாயில்லப்பா. மன்னிப்புக்கேக்க வேண்டிய ஆளு அங்க போயிட்டாரு. இதால உனக்கு வேலை போயிருமேன்னு நினைச்சாக் கஷ்டமா இருக்கு”

“பரவாயில்ல சார். நான் முதலாளி கையில கால்ல விழுந்து கேட்டுப் பாக்கிறேன். இல்லைன்னா வேற வேலை தேடிட்டுப் போறேன். வர்றேன் சார்” என்று கீழே கிடந்த பொங்கலையும் வடையையும் சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.

********************************************

இப்ப என்ன சவால்.

முதல் கேரக்டரை வச்சி சிங்கை சிங்கம் பிரபாகரும், இரண்டாவது கேரக்டரை வச்சி போதிமரத்தடி ஷங்கரும், மூணாவது கேரக்டரை வச்சி ஃப்ரடரிக் ஃபோர்சித்தும் எழுதப்போறாங்க.

அது எப்பிடி இருக்குன்னு அவுங்க அவுங்க கடைக்குப் போயிப் பாருங்க பாஸ்.

(அது சரி, நான் ஐநூறு பதிவு எழுதியிருக்கேனான்னு எண்ணி சரி பாக்குற அளவுக்கா வேலை வெட்டி இல்லாம இருக்கீங்க?)

Monday, May 17, 2010

ராபின் ஹூட் (2010)

ராபின் ஹூட் என்று சொன்னதும் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது?

பின்னிரவில், சென்னை நகரத் தெருக்களில் கையில் துப்பாக்கியோடு தவறு செய்பவர்களையும் ரவுடிகளையும் வேட்டையாடுவது நினைவுக்கு வந்தால், நீங்கள் தீவிர ரஜினி ரசிகர், கொஞ்சம் ஓரமாக உட்காருங்கள்.

இருப்பவர்களிடம் திருடி இல்லாதவர்களுக்குக் கொடுப்பவர் என்று நினைவுக்கு வந்தால் நீங்கள் பல தமிழ்ப்படங்களைப் பார்த்தவர்.

ராபின் ஹூட் இங்கிலாந்தின் Fairy Tale Hero. வில் வித்தையில் நம் அர்ஜூனனுக்கு ஈடானவன். ஒரு கூட்டத்தைக் கூட்டிக்கொண்டு பணக்காரர்களிடம் திருடி ஏழைகளுக்குக் கொடுத்த ஏழைப் பங்காளி. இது தான் நமக்குத் தெரிந்த கதை.

ஆனால் ராபின் ஹூட் எப்படி உருவானான்? இதைத்தான் ரிட்லி ஸ்காட் இயக்கி ஆஸ்கார் ஜெயித்த ரஸல் க்ரோவ் நடிப்பில் வெளிவந்த ராபின் ஹூட் திரைப்படம் சொல்கிறது.பனிரெண்டாம் நூற்றாண்டின் இறுதியில் மூன்றாம் சிலுவைப்போரில் ஈடுபட்டு வந்த இங்கிலாந்துப் படையில் ஒரு சாதாரண வில் வீரன் ராபின் லாங்க்ஸ்ட்ரைட். அதே போரில் ஈடுபட்டு வந்த இங்கிலாந்து அரசர் ரிச்சர்ட் தி லயன்ஹார்ட் இறந்து போய்விட ராபினும் அவனது மூன்று நண்பர்களும் நாடு திரும்பலாம் என்ற முடிவுக்கு வருகிறார்கள். அவர்கள் செல்லும் வழியில் ஃப்ரெஞ்சு அரசரின் கையாளான காட்ஃப்ரே அரசரைக் கொல்வதாக நினைத்து சில Knightகளைக் கொல்வதைப் பார்த்துவிடுகிறார்கள். அந்த கொலைகாரக் கும்பலை விரட்டியடிக்கிறார்கள்.

நாடு திரும்பும்போது கை நிறைய பணத்தோடு செல்லலாம் என்று அந்த நைட்களிடம் இருந்த பணத்தையும் அவர்களின் உடைகளையும் எடுத்துக் கொண்டு அவர்களுக்கான அவர்களைப் போல வேடமிட்டுக்கொண்டு கப்பலிலேயே நாடு திரும்பலாம் என்று முடிவெடுக்கிறார்கள். அப்போது இறந்து கொண்டிருக்கும் நைட் தனது வாளை தன் தந்தையிடம் கொடுக்கச் சொல்கிறார்.

லண்டனுக்குத் திரும்பும் ராபின் அரசர் இறந்த தகவலை அறிவிக்கும் பொறுப்பை ஏற்கவேண்டியாகிறது. அதோடு அரசரின் தம்பி ஜான் அடுத்த அரசராகப் பதவி ஏற்பதையும் பார்த்துவிட்டு வாளை ஒப்படைப்பதற்காக நண்பர்களுடன் நாட்டிங்காம் செல்கிறான்.

அங்கே தன் மகன் இறந்தது தெரிந்தால் நிலத்தை அரசு பிடுங்கிக் கொள்ளும் என்ற பயத்தில் அந்த கிழவர் ராபினை தன் மகனாக நடிக்கச் சொல்கிறார். ராபினும் சம்மதிக்கிறான். முதலில் அவனை அங்கீகரிக்காத கிழவரின் மருமகள் ராபின் வரிக்காக எடுத்துச் செல்லப்பட்ட விதை மணிகளை அவர்களிடம் இருந்து பறித்து வந்தபின் அவனை நம்ப ஆரம்பிக்கிறாள்.

இதே நேரத்தில் அரசன் ஜான் பொறுப்பில்லாமல் போரில் செல்வான பணத்தை மக்களுக்கு அதிக வரி விதிப்பதன் மூலம் வசூல் செய்ய நினக்கிறான். அவன் கட்டளையின் பேரில், புதிய சான்சலராகப் பொறுப்பேற்கும் காட்ஃப்ரே மக்களிடம் வரி வசூல் செய்யப் புறப்படுகிறான். ஆனால் அவன் ப்ரெஞ்சு மன்னனின் உத்தரவின் பேரில் நூறு ஃப்ரெஞ்சுப் படைவீரர்களைச் சேர்த்துக் கொண்டு மக்களை தாக்கியும் கொலை செய்தும் நாட்டில் குழப்பம் விளைவிக்கிறான். நாட்டில் உள்நாட்டுப் போர் நடக்கும் சூழல் வருகிறது.

மன்னனின் நடவடிக்கையால் கோபமுற்ற மற்ற நைட்கள் பாரோனில் சந்தித்து கொதித்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் காட்ஃப்ரேயின் துரோகத்தைத் தெரிந்து கொண்ட மன்னன் நாட்டைக்காப்பாற்ற மக்களை ஒன்று திரட்ட வேண்டியதன் கட்டாயத்தைப் புரிந்து கொள்கிறான். பாரோனில் இருக்கும் அனைத்து நைட்டுகளையும் சந்தித்து தன்னுடன் சேர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறான். சேர்ந்து கொள்ள வேண்டுமென்றால் நில உரிமை வேண்டும் என்று கோரிக்கையை ராபின் முன்வைக்கிறான். வேறு வழியின்றி மன்னனும் ஒத்துக் கொள்கிறான்.

பாரோனில் கலந்து கொண்ட அத்தனை பேரும் திரண்டு நாட்டிங்காமில் கும்மாளமிட்டுக்கொண்டிருக்கும் காட்ஃப்ரேயின் படையை அடித்து விரட்டுகின்றனர்.

இந்த நேரத்தில் ஃப்ரெஞ்சுப் படை ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பல கப்பல்களில் இங்கிலாந்தின் கடற்கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை வரவேற்க காட்ஃப்ரேயும் அங்கே காத்திருக்கிறான்.

நாட்டிங்காமிலிருந்து ஆங்கிலப் படைகள் ஃப்ரெஞ்சுப் படை வந்திறங்க இருக்கும் கடற்கரைக்குச் சென்று அவர்களை எதிர்கொள்கின்றனர். ஒரு சிறிய போருக்குப் பிறகு ஃப்ரெஞ்சு பின்வாங்குகிறது. ராபின் அம்பால் காட்ஃப்ரேயைக் கொல்கிறான்.

ஃப்ரெஞ்சை துரத்தியதும் மன்னன் தான் கொடுத்த வாக்குறுதியை நம் நாட்டு அரசியல்வாதிகளைப் போல காற்றில் பறக்க விட்டுவிடுகிறான். அதோடு ராபினை வழிப்பறிக் கொள்ளைக்காரன் என்று அறிவித்து விடுகிறான்.

ஷெர்வுட் காட்டில் சென்று ஒளிந்து கொள்ளும் ராபின், இங்கிலாந்தின் மிகவும் பிரபலாமான நாட்டுப்புற நாயகனாகிறான்.

(அப்பாடா உண்மைத்தமிழன் மாதிரி கதைய சொல்லியாச்சி)

க்ளாடியேட்டர் படத்தில் க்ளாடியேட்டராக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ஆஸ்கரை வென்ற ரஸ்ஸல் குரோவ் இந்தப் படத்தில் பெறும் ஏமாற்றத்தைத் தருகிறார். க்ளாடியேட்டரில் நடித்ததில் 25%கூட இந்தப் படத்தில் நடிக்கவில்லை. மரியானாக (கிழவரின் மருமகள்) நடித்த நடிகை கேட் ப்ளான்செட்டும் ஏமாற்றம் தரும் அளவிலே நடித்திருக்கிறார்.

கிங் ஜானாக நடித்தவரும், அவரது அன்னையாக நடித்தவரும், கிழவர் லாக்ஸ்லியாக நடித்தவரும் அற்புதமாக நடித்திருக்கின்றனர். அது இன்னும் ரஸ்ஸலின் நடிப்பை மங்கச் செய்கிறது.

செட்டிங்க்ஸும் உடை அலங்காரமும் நம்மை 12ம் நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்கிறது. முதல் போர்க்காட்சியும் கடைசிப் போர் காட்சியும் போர்ப் பட விரும்பிகளைக் கண்டிப்பாக ஏமாற்றாது. கேமராவும் பல இடங்களில் அற்புதமாக இருக்கிறது.

மொத்தத்தில் கிளாடியேட்டர் பார்த்து ரஸ்ஸலின் ரசிகர்களான  என்னைப் போன்றவர்களுக்கு இந்தப் படம் பெருத்த ஏமாற்றம்.

ஈழத்தமிழர்கள் - ஒரு புலம்பெயர்ந்த இந்தியத் தமிழனின் பார்வை

இலங்கைப் பிரச்சனை சூடு பிடித்த காலம், நான் சிறுவனாக தென் தமிழகத்தில் வசித்து வந்த காலம். இலங்கைப்பிரச்சனை, விடுதலைப் புலிகள், பிரபாகரன், ஜெய்வர்த்தனே போன்ற பெயர்களை என் அப்பா அவர்தம் நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கையில் கேட்டிருக்கிறேன். கொடும்பாவி ஒன்றை பாடைகட்டித் தூக்கிக்கொண்டு போன ஊர்வலங்களில் “ஜெயவர்த்தனே பொண்டாட்டி எங்களுக்கு வப்பாட்டி” என்று அர்த்தம் புரியாமலே கோஷம் போட்டுப் போயிருக்கிறேன்.

பருவ வயதுச் சிறுவனாக, இந்திய அமைதிப் படையில் போன ஒரு தமிழ் ராணுவ வீரர், வட இந்திய வீரர்கள் அங்கே செய்த அட்டூழியங்களைப் பட்டியல் இட்ட போது கதறி அழுதிருக்கிறேன். ராஜிவ் காந்தி கொல்லப்பட்டு ஒற்றைக்கண் சிவராசனையும் சுபாவையும் சி.பி.ஐ தெருத்தெருவாக போஸ்டர் ஒட்டி தேடிக்கொண்டிருந்த போது அவர்கள் மாட்டிவிடக்கூடாது என்று உள்ளூர ஆசைப்பட்டிருக்கிறேன். அவர்கள் போலீஸால் சுற்றி வளைக்கப்பட்டு வீர மரணம் அடைந்த போது அவர்களுக்காக சில துளி கண்ணீர் சிந்தியிருக்கிறேன்.

பிறிதொரு நாளில் ஒரு என்.எஸ்.எஸ் கேம்பின் போது ஒரு இலங்கை அகதிகள் முகாமில் நான் சந்தித்தவர்கள் இந்தியாவில் படும் கஷ்டங்களைக் கேட்டு நானும் கஷ்டப்பட்டிருக்கிறேன். என்னால் ஏதும் செய்ய இயலாத போதும் அவர்கள் சாய்ந்து அழுது தங்கள் பாரத்தை இறக்கிவைக்க ஒரு தோளாக உதவியிருக்கிறேன்.

2004ம் ஆண்டு அமெரிக்காவுக்கு வந்தேன். பல இலங்கைத் தமிழர்களுடன் நேரடியாகப் பழக வாய்ப்புக்கிடைத்தது. பலர் இனிமையாகப் பழகினார்கள். சிலர் பட்டும் படாமலும். பட்டும் படாமலும் பழகியவர்களைக் குறை சொல்ல முடியாது. அவர்களுக்கு இந்தியர்களால் எதாவது கசப்பான அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். எனக்கு இங்கே புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களைப் பார்க்கும்போது ஒரு பரிதாபமும் குற்ற உணர்ச்சியும் இருக்கும்.

பின்னாளில் தெரிந்து கொண்டேன் நான் பழகிய பல தமிழர்கள் இலங்கைப் பிரச்சனை தீவிரமாகுமுன் புலம்பெயர்ந்தவர்கள். ஆனாலும் பலர் அங்கே கஷ்டப்பட்டிருக்கிறார்கள். கொழும்புவில் இருந்து வெள்ளவத்தைக்கு ரயிலில் போகும்போது தமிழில் பேசினால் அடி விழுமாம். அப்படி கஷ்டங்களையும் இவர்கள் அனுபவித்து வந்திருக்கிறார்கள்.

நான் சந்தித்த பழகியவர்களில் பெரும்பாலானோர் பிரபாகரனைப் பிடித்தே இருந்தது. ஒரு சிலருக்கு தங்களுக்கென்று ஒரு தேசம் அமையும் பட்சத்தில் திரும்பிப் போக வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. பெரும்பாலானோர் அமெரிக்க வாழ்க்கைக்கு மாறியிருந்தனர். அவர்களுக்குத் திரும்பிப் போக விருப்பமும் இல்லை.

அதுவரை இலங்கைத் தமிழர்கள் அனைவரும் தனி ஈழம் விரும்புபவர்கள் என்றும் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்றும் எண்ணிக்கொண்டிருந்தேன். என் மனதில் இருந்த பிம்பம் உடையும் நாள் வந்தது.

ஒபாமா ஜனாதிபதியான பின்னர் ஒருநாளில் ஒபாமாவின் வெற்றிக்காக உழைத்த ஒரு தமிழரைப் பார்க்க நேரிட்டது. அவரும் மற்ற தமிழர்களும் சூடான விவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஈழத்தில் போர் உச்சக் கட்டத்தில் இருந்தது.  அந்த நபர் ஒபாமாவின் அரசு இலங்கைப் போரை நிறுத்த எந்த முயற்சியும் எடுக்காது. எடுக்கவும் கூடாது என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் பிரபாகரனையும் கடும் சொற்களால் சாடிக்கொண்டிருந்தார். பிரபாகரனால் தான் இலங்கைப் பிரச்சனை இவ்வளவு மோசமானதாகவும், சிங்களவர்களுடன் இயைந்து போயிருந்தால் எப்போதோ சமரசம் வந்திருக்கும் இரண்டு இனங்களும் சேர்ந்து வாழ்ந்திருக்கலாம் என்பதும் அவரது வாதங்கள். எனக்கு அவருடைய வாதத்தில் உடன்பாடு இல்லை.

அவரிடன் நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன். “உங்களாலேயே இலங்கையை விட்டு வெளியேறி அமெரிக்காவில் நல்ல வாழ்க்கை நடத்த முடியும்போது எதற்காக பிரபாகரன் போர் முனையில் மொத்த குடும்பத்தையும் இருத்திக்கொண்டு போரிட்டுக்கொண்டிருக்க வேண்டும்? அவர் நினைத்தால் வெளியேறியிருக்கலாமே? லத்தீன் அமெரிக்காவில் பல குட்டி நாடுகளில் காசை விட்டெறிந்தால் முழு ராணுவ பாதுகாப்புடன் வசதியாக வாழ வைத்திருப்பார்களே” என்ற என் கேள்விக்குக்கு அவரிடம் பதில் இல்லை.

அதன் பின்னர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தற்காலிகத் தேக்கநிலை உருவானதும் சிங்களவர்கள் கை ஓங்கியதும் அனைவருக்கும் தெரியும்.

இந்தக் காலகட்டம் வரை எனக்குப் பதிவுலகம் அறிமுகமாகவில்லை. பின்னர் மெதுவாக பதிவுகள் பல படிக்கும் வழக்கமும் பதிவுகள் என்ற பெயரில் மொக்கைகள் எழுதும் பழக்கமும் எனக்குள் வந்தது. இப்போது இந்தப் பதிவை நான் எழுதிக் கொண்டிருக்கவும் இந்தப் பதிவுலகமே காரணம்.

நான் படித்த பதிவுகளில் வந்த பின்னூட்டங்களில் சில புலம்பெயர்ந்த தமிழர்களை வன்மையாகத்தாக்கி இருந்தன. வன்னியில் தமிழினம் கஷ்டப்படும்போது அவர்களில் பார்ட்டிகள் வைத்துக் கொண்டாடி மகிழ்ந்ததாக. அதே போல சில புலம்பெயர்ந்த தமிழர்கள் கொழும்பில் வசித்து வரும் பதிவர்களை சிங்களவனிடம் பிச்சையெடுத்து வாழ்ந்து வருவதாகத் திட்டியும் எழுதியிருந்தார்கள்.

இன்னும் சில பதிவுகளில் முஸ்லிம் தமிழர்களுக்கும், இந்துத் தமிழர்களுக்கும் இடையில் நிகழ்ந்த சில நடக்கக்கூடாத சம்பவங்களைப் பற்றிய விவாதங்களையும் கண்டேன். சிங்களவனின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு நம்மவர்கள் பலியானதைக் கண்டு நொந்து நூலானேன்.

என்னைப்போன்ற இந்தியத் தமிழர்கள் பலர் இந்த ஈழப் பிரச்சனையை ஒரு உணர்ச்சி வசப்பட்ட நிலையிலேயே அணுகுகிறோம். அதற்கு நாங்கள் வளர்ந்து வந்த சூழலும் நாங்கள் பார்த்து வளர்ந்த அரசியல்வாதிகளுமே காரணம். தமிழனை என்றுமே ஒரு உணர்ச்சிவசப்பட்ட நிலையில் வைத்திருந்து வைத்திருந்தே அரசியல் நடத்தி வந்திருக்கிறார்கள் எங்கள் அரசியல்வாதிகள்.

நாங்கள் உணர்ச்சிவசப்படும்போது எங்களில் உணர்ச்சிவசப்படாமல் இருப்பவர்களை சுரணையில்லாதவர்கள் என்று நாங்கள் நினைக்கிறோம். புலிகளைத் திட்டிப் பேசுபவர்களை தமிழினத் துரோகிகள் என்று எண்ணுகிறோம்.

எங்களிலும் சிலர் முழுமையான ஈழ வரலாறு தெரியாமல் ராஜிவ் காந்தியின் மரணத்தை மட்டுமே வைத்துக் கொண்டு ஒட்டு மொத்த இலங்கைத் தமிழர்களையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. அப்படி அவர்கள் ஏற்றும் போதெல்லாம் என்னாலான எதிர்ப்பைப் பதிவு செய்துவிட்டே வருகிறேன்.

கிரிக்கெட் என்பது விளையாட்டு அதில் அரசியலைக் கலக்கக்கூடாது என்பது என் எண்ணமாக இருந்து வந்தது. எனக்கு அதில் விழுந்த முதல் அடி, இலங்கை வீரர்களின் மீது பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப்பட்ட போது அதில் விடுதலைப் புலிகளின் கை இருக்கலாம் என்று கூசாமல் சிங்கள அரசு சந்தேகப்பட்ட போது எனக்கு ஆத்திரம் வந்தது. மதத்தின் பேரால் ஆயுதம் ஏந்தி போராடும் ஈனர்களுடன் விடுதலைப் போராட்டம் நிகழ்த்தும் எங்கள் வீரமறவர்களை சம்மந்தப்படுத்துவதா என்று.

மேலும் அந்தச் சம்பவத்தின் போது இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனே தங்கள் நாட்டின் தீவிரவாதிகள் தங்களுக்கு இப்படிப்பட்ட சூழ்நிலைகளுக்காகத் தயார்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று சொன்னபோது எனக்கு கிரிக்கெட் ஒரு அரசியல் விளையாட்டுத்தான் என்ற எண்ண விதை விழுந்தது. அதை உறுதிப்படுத்துவது போல கடந்த ஆண்டுகளில் இந்திய-இலங்கை அணிகள் அளவுக்கு அதிகமாக மோதிக்கொண்டன. இந்த ஆண்டும் இனி வரும் ஆண்டுகளிலும் இது தொடரும்.

இதற்கு முக்கியக் காரணம் இலங்கைத் தமிழர்களில் பலர் இலங்கைச் சிங்கள அணியின் ரசிகர்கள். அவர்களுக்கு இந்திய-இலங்கைப் போட்டிகள் இந்தியர்களின் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் போல உணர்ச்சிவசப்படுத்தக்கூடியவை. இந்தியா இலங்கையுடன் தோற்கும் போதெல்லாம் நான் பழகக் கூடிய இலங்கைத் தமிழர்கள் என்னைக் கேலிசெய்வார்கள். இதை நான் இந்தியா பாகிஸ்தானுடன் தோற்கும் போது அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பாகிஸ்தானியர்களால் கேலி செய்யப்படுவதற்கு ஒத்தான நிகழ்வாகவே பார்க்கிறேன். இப்படி இந்தியர்களையும் இலங்கைத் தமிழர்களையும் கிரிக்கெட் போதையேற்றி மற்ற விசயங்களை மட்டுப்படுத்தி வைப்பதற்காக பாசிச இந்திய அரசும் நாசிச இலங்கை அரசும் மேற்கொள்ளும் மட்டமான உத்திகள். நாமும் போதையேறிப்போய் அலைகிறோம்.

எனக்கு நான் பார்த்த வட அமெரிக்கக் கண்டத்தில் வாழும் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் மீது ஒரு பெரிய வருத்தம் உண்டு.

இவர்களில் 80% தமிழ் பேசுவதில்லை. நான் கவனித்த ஒரு விசயம்.


1. பெற்றோர்களில் யாராவது ஒருவருக்கு ஆங்கிலம் பேச வராதென்றால் பிள்ளைகள் தமிழில் நன்றாகப் பேசுகின்றனர்.
2. அம்மம்மா, அப்பம்மா, அப்பப்பா, அம்மப்பா யாராவது உடன் வசித்தால் பிள்ளைகள் தமிழிலும் பேசுகின்றனர்.
3. பெற்றோர் இருவரும் ஆங்கிலம் நன்றாகப் பேசினால், பிள்ளைகள் தமிழை மறந்து விடுகின்றனர்.

இதில் தமிழ் பேசுவது என்பது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதாக இங்கே எடுத்தாளப்பட்டிருக்கிறது. தங்கள் பிறந்த, வளர்ந்த இடத்தின் எச்சமாக நம்மில் ஒட்டிக் கொண்டிருப்பது மொழி மற்றும் கலாச்சாரமே என்பது என் நம்பிக்கை.

விதையாகத் தூவப்பட்டு வளர்ந்த நாற்றை பிடுங்கி நன்றாக வளர்வதற்காக மாற்று இடத்தில் நடுவது போன்றது என்னைப் போல புலம்பெயர்ந்த இந்தியர்கள். 

முன் கடவாய்ப் பற்கள்.. மிகவும் சீராக... முளை விட்டுப் பளிச்சிடும் போது.. பாதியிலேயே குறடு கொண்டு வெடுக்கென்று பிடுங்கிப் போட்டால் எப்படி இருக்கும்? (நன்றி கலகலப்ரியா) - இது புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள்.

இப்படிப் பிடுங்கிப் போட்டவர்கள் தங்கள் நாட்டை நினைவுபடுத்தும் விசயங்களைச் செய்து/தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவன் நான்.  அப்படிப் பெரும்பாலானவர்கள் இல்லாததை நினைக்கும்போது எனக்கு வருத்தமாகத்தான் இருக்கும். இப்படியே போனால் மூன்றாவது தலைமுறைக்குத் தங்களது பூர்வீகமும் வீரம் செறிந்த வரலாறும் தெரியாமல் போய்விடும். தங்கள் பெயரால் மட்டுமே இந்தியப் பரம்பரையாக அடையாளம் காணப்படும் மேற்கிந்தியத் தீவின் இந்தியர்களைப் போலாகி விடுவோம். 

வாருங்கள். யூதர்களைப் பார்த்து கற்றுக்கொள்வோம். 

Sunday, May 16, 2010

பிதற்றல்கள் 5/16/2010

இன்று நடந்த ஐ.சி.சி 20-20 உலகக் கோப்பைப்..

ஹலோ இருங்க இருங்க கல்லெடுக்காதீங்க. நான் சொல்ல வர்றது கிரிக்கெட் மேட்டர் இல்லை. ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்ப்பா..

உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வெற்றி எஃப்.எம்-இல் தனித் தமிழில் நேரடி வர்ணனை செய்யப்படப் போவதாக அதில் பணி புரியும் அண்ணன் லோஷன் சொல்லியிருந்தார். அவரும் அதில் பங்குபெறப் போவதாகவும் சொன்னார்.

தனித் தமிழ் என்று சொன்னதால் சிறிது பயமாக இருந்தது. “டெயிட் கால் திசையில் எறிந்த ஊஞ்சல் பந்தை குட்டைக்கால் திசையில் அடிக்க முற்பட்ட கெவின் பீட்ட்ர்சனின் துடுப்பின் தலைமை ஓரத்தில் பட்டு பந்து மூன்றாம் மனிதனின் திசையில் பிடிக்குச் செல்வது போல பறந்தது. ஆழப் புள்ளி நிலையில் நின்று கொண்டிருந்த டேவிட் ஹஸ்ஸி ஓடிச் சென்று அந்தப் பந்தை பிடிக்கக் கரணம் அடித்தார் ஆனால் பந்து அவருக்குப் பிடிபடாமல் எல்லைக் கோட்டை எட்டிப் பிடித்தது” - இப்படி வர்ணனை செய்து விடுவார்களோ என்று பயமாக இருந்தது.

இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வெற்றி எஃப்.எம்மின் வலைத் தளத்துக்குச் சென்று கேட்டேன். பரவாயில்லை நான் எதிர்பார்த்தது போல இல்லாமல் கிரிக்கெட் சொல்லாடல்களை ஆங்கிலத்திலேயே சொன்னார்கள்.

முதலில் இப்படி ஒரு முயற்சிக்குப் பிடியுங்கள் பாராட்டுகளை. நான் இந்த வர்ணனையை ரசித்துக் கேட்டேன். என் டிவியின் வால்யூமைக் குறைத்துவிட்டு இவர்கள் அளித்த வர்ணனையையேக் கேட்டேன்.

இடையில் பாட்டுகள், நகைச்சுவைத் துணுக்குகள் போன்றவற்றையும் நேயர்கள் அனுப்பிய குறுஞ்செய்திகளையும் வாசித்தார்கள். ஆஸ்திரேலிய வீரர் வாட்சன் இங்கிலாந்து வீரரை தகாத வார்த்தைகளால் திட்டியதை நடுவர் கண்டும் காணாமல் இருந்ததைப் பற்றி ஒருவர் அடித்த கமெண்ட் - ஐ.சி.சி நடுவர்களுக்கு தமிழ், இந்தி, உருது, சிங்களம் தவிர வேறு பாஷை தெரியாது. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள். ரசித்தேன்.

இன்னொரு கமெண்ட் ஷான் டெயிட் வீசிய பந்து க்யீஸ்வெட்டரின் தலைக்கும் தோளுக்கும் இடையில் பறந்தது. வர்ணனையாளர் ஒருவர் கேட்டர். அந்த பந்து க்யீஸ்வெட்டரின் தலையில் பட்டிருந்தால் என்னவாகியிருக்கும்? அவர் தலை தேர்ட் மேனிடம் போய்ச் சேர்ந்திருக்கும்.

நான் கேட்ட வரை எனக்குப் பட்ட ஒரு சில குறைகள்.

1. வர்ணனை செய்த இரண்டு பேரில் ஒருவர் ஆஸ்திரேலிய ரசிகராகவும்(லோஷன்?), இன்னொருவர் இங்கிலாந்து ரசிகராகவும் இருந்ததாகப் பட்டது. அதானால் கமெண்டரியில் ஒருமுகமாக சில இடங்களில் கமெண்ட் செய்ததாக எனக்குப் (எனக்கு மட்டும் !?) பட்டது.

2. பெரும்பாலான இடங்களில் விகாரமாகத் தமிழ்ப் படுத்தாமல் நல்ல முறையில் தமிழ்ப்படுத்தியும், ஃபீல்டிங் பொசிசன்ஸ் எல்லாம் ஆங்கிலத்திலேயும் சொன்னார்கள். ஆனால் ஒருவர் அடுத்ததாக முகம் கொடுக்க வருவது <பேட்ஸ்மென் பெயர்> என்று அடிக்கடி சொன்னார். அது is going to face the next ball என்பதன் தமிழாக்கம் என்று நினைக்கிறேன். முகம் கொடுக்க என்பதை விட எதிர்கொள்ள என்பது கேட்க நன்றாக இருக்கிறது.

தொடருங்கள் உங்கள் பணியை.

************************

தமிழ்ப் படுத்துகிறேன் என்று படுத்தி எடுக்கிறார்கள் சில நேரங்களில். உதாரணமாக சென்னை விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளருக்கான கழிவறையை - மெய்ப்புல அறைகூவலர் ஒப்பனை அறை என்று போட்டிருப்பார்கள். Physically Challenged ஐத் தமிழ்ப்படுத்தி இருக்கிறார்களாமாம்.

முன்பொருமுறை எதோ ஒரு பதிவில் சைபர் கிரைம் என்பதை சுழிய குற்றம் என்று மக்கள் தொலைக்காட்சியில் சொல்வதாகப் (நான் மக்கள் தொலைக்காட்சி பார்த்ததில்லை) படித்தேன். சுழியம் என்றால் ZERO. சைபர் - என்றால் zeroவா? Cipher - என்றால் zero. Cyber Crime அல்லவா? Cipher Crime இல்லையே?

அதே போல பலர் பரவலாக ஃபேஸ்புக்கை மூஞ்சிப்புத்தகம் என்று அழைப்பதைப் பார்க்கிறேன். ஃபேஸ்புக் என்பது ஒரு பெயர்ச்சொல். அதைத் தமிழ்ப்படுத்துவது சரியா? விண்டோஸ்-7ஐ சன்னல்கள் என்று அழைப்பீர்களா? பில் கேட்ஸை விலைப்பட்டியல் வாசல்கள் என்று அழைப்பீர்களா?

ஃபேஸ்புக் என்பது ஒரு Social Networking கான சாதனம். Social Networkingஐத் தமிழ்ப் படுத்துங்கள். ஃபேஸ்புக்கை இல்லை.

இதையெல்லாம் பார்க்கும் போது முண்டக்கூவி என்று Trunk Call - ஐ யாரோ மொழிபெயர்த்தது நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

******************************

குஷ்பு திமுகவில் சேர்ந்துவிட்டார். குஷ்புவுக்குத் தமிழகத்தில் கோவில் கட்டினார்கள். அதை வைத்துப் பார்க்கும் போது குஷ்பு கடவுளாகிறார். கடவுள் மறுப்பை முதல் கொள்கையாகக் கொண்ட திமுக எப்படி குஷ்புவை ஏற்றுக் கொண்டது?

ஒரு வேளை வல்லமை தாராயோ பட ஒலித்தட்டு வெளியீட்டு விழாவில் செருப்புக் காலை சாமி படங்களின் முன்னால் போட்டிருந்ததால் அவரையும் கடவுள் மறுப்பாளாராகப் பார்க்கின்றார்களோ?

எது எப்படியோ? ஜாக்பாட் நிகழ்ச்சியில் இனி குஷ்புவின் ஜாக்கெட்டைப் பார்க்க முடியாது.

*******************************
அண்ணன் அழகிரி பாராளுமன்றத்துக்குப் போகாமல் நாடு சுற்றிப் பார்ப்பது இப்போது பெரும் பிரச்சனையாகியிருக்கிறது. அழகிரி செய்வது ஒரு புறம் இருக்கட்டும்.

18 மொழிகள் அதிகாரப்பூர்வ மொழிகளாக இருக்கும் ஒரு நாட்டில் அமைச்சர் ஒருவர் தன் தாய்மொழியில் பேச பாராளுமன்ற நடைமுறைகள் அனுமதிப்பதில்லை என்பது எந்த விதத்தில் நியாயம்? அவர் பேசுவதை On-the-Fly  மொழிபெயர்க்க நம்மிடம் தொழில்நுட்பம் இல்லையா என்ன?

கேள்விகளுக்குப் பயந்து ஒரு அமைச்சர் ஓடி ஒளிகிறார் என்றால் அது அமைச்சரின் தவறு. இந்தியிலோ ஆங்கிலத்திலோ பேச முடியாததால் ஓடி ஒளிகிறார் என்றார் அது பாராளுமன்றத்தின் தவறு.

*******************************

1996ம் வருடம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுக்காக பிரச்சாரம் செய்த நடிகை மனோரமா, திமுக-தமாகா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த ரஜினியை பொதுக்கூட்ட மேடைகளில் மெண்டல் என்றும் பைத்தியம் என்றும் (முன்பொரு காலத்தில் பத்திரிக்கைகள் எழுதியதை வைத்து) கேலி செய்து பேசினார். பின்னாளில் அவர் அதற்கு வருத்தம் தெரிவித்ததும் ரஜினி பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டதும் வரலாறு.

ஆனால் இப்போது அதே அம்பு அவருக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது. உலகம் உருண்டைதான்.

ஆனாலும் ஒரு வயது முதிர்ந்த சீனியர் நடிகையைப் பற்றி இப்படி ஆதாரம் இல்லாமல் எழுதும் பத்திரிகைகளின் மீதான் எனது கண்டனத்தை இங்கே பதிவு செய்கிறேன்.

Friday, May 14, 2010

கேரக்டர் - கோபால்

தாராளமாக எண்ணெய் தேய்த்து நேர் வகிடெடுத்து வழித்து சீவப்பட்ட தலை. விபூதியும், விபூதிப் பட்டையின் நடுமத்தியில் அளவெடுத்து வைத்தது போல மிளிரும் குங்குமமும் நிறைந்த நெற்றி. கத்தி போல மடித்துத் தேய்க்கப்பட்ட காக்கி சீருடை. சைக்கிளில் ஏறி அமர்ந்து பட்டுவாடா செய்ய வேண்டிய தபால்களை ஹாண்டில் பாரின் மேல் பொருத்தப்பட்ட ஸ்டாண்டில் கிளிப் போட்டு இருத்தி புறப்பட்டார் என்றால், “சிங்கம் ஒன்று புறப்பட்டதே” எனப் பின்னணியில் குரல் ஒலிக்கிறதோ என்று எண்ணத் தோன்றும்.

அவர்தான் போஸ்ட் மேன் கோபால். சிறிய ஊரென்பதாலும் பல வருடங்களாக அங்கேயே பணி புரிவதாலும் கிட்டத்தட்ட ஊரில் உள்ள அத்தனை பேரின் பெயரும் அத்துப்படி. வாசலில் நின்று “சார் போஸ்ட்” என்று குரல் கொடுப்பதோ, பெல்லடிப்பதோ, தபால்களை விசிறியடித்துவிட்டு செல்வதோ இவருக்குக் கொஞ்சம் கூட பிடிக்காது. சைக்கிளை நிறுத்தி, ஸ்டாண்ட் போட்டு, சைக்கிளின் பின்னால் திரும்பி நின்று இடது காலால் ஸ்டைலாக ஸ்டாண்டின் க்ளிப்பை உதைத்து விட்டு வீட்டின் கதவைத் தட்டி யார் கையிலாவது பொறுப்பாகக் கொடுத்து விட்டுத்தான் அடுத்த வீட்டுக்குச் செல்வார்.

வீட்டில் யாரும் இல்லை என்றாலோ, பொடிசுகள் மட்டும் இருந்தாலோ, தபாலைக் கொடுத்து விட மாட்டார். முழு சுற்றும் முடிந்த பின் மறுபடி அந்த வீட்டுக்குச் சென்று பெரியவர்கள் திரும்பிவிட்டார்களா என்று பார்த்து அவர்கள் கையில் தான் கொடுப்பார். அப்போதும் யாரும் இல்லையென்றால் மாலை ட்யூட்டி முடிந்ததும் வீட்டிற்குப் போகுமுன் கொடுத்துவிட்டுச் செல்வார். “ஏண்ணே இப்பிடி சிரமப் படுறீங்க? கதவுக்கு அடியில தள்ளி விட்டுட்டு வரலாமில்லை” என்று கேட்டால் “தபால்ல என்ன முக்கியமான விசயம் இருக்கோ, நாம கதவுக்கடியில தள்ளிவிட அது அவங்க கண்ணுல படாம போயிட்டா?” என்று நம்மையே திருப்பிக் கேட்பார்.

தபால் பட்டுவாடா செய்வது மட்டுமல்ல. நாம் போஸ்ட் செய்ய வேண்டிய தபால்கள் ஏதும் இருக்கிறதா என்று கேட்டு அதையும் சேகரித்துக் கொண்டுதான் தபாலாபீஸ் திரும்புவார். எனக்குத் தெரிந்து எங்கள் ஊரில் யாரும் தபால் பெட்டியை உபயோகப் படுத்தியதாக நினைவே இல்லை.

யாருக்காவது மணியார்டர் வந்தால் பணத்தை சில்லறை சுத்தமாக எண்ணி அவர்கள் கையில் கொடுத்து விட்டு ஒரு நிமிடம் நிற்பார். மோரோ காப்பியோ நேரத்தைப் பொறுத்து எதையாவது (கொடுக்காவிட்டாலும் கேட்டு வாங்கி) குடித்துவிட்டுத் தான் அந்த இடத்தை காலி செய்வார். கொடுத்தால் கூட கமிஷன் வாங்க மாட்டார்.

தந்தி கொடுக்கச் செல்லும்போது கெட்ட சேதியாக இருந்தால் வீட்டில் இருக்கும் நிலையைப் பார்த்து விட்டு, அவர்களை வேறு ஏதாவது பேசி ஆசுவாசப் படுத்தி விட்டுத்தான் விஷயத்தைச் சொல்வார். நல்ல சேதியாக இருந்தால் முதலில் சர்க்கரை கேட்டு வாங்கி அவர்கள் வாயில் போட்டு விட்டுத்தான் தந்தியைக் கையில் கொடுப்பார். தங்கள் வீட்டுத் தந்தியைப் படித்து விட்டாரே என்று யாரும் கோவித்ததில்லை.

மனைவி இறந்ததும் மறு கல்யாணம் செய்து கொள்ளாமல் ஒரே மகனை தன் சகோதரியின் வீட்டில் விட்டு வளர்த்து வந்தார். ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வாரக் கடைசியில் கோபாலை ஊரில் பார்க்க முடியாது. தன் மகனைப் பார்க்க சகோதரி ஊருக்கு வண்டியேறியிருப்பார். ஒரு மாதம் கூட தவறியதாக நினைவில்லை.

நல்ல நாள் திருநாள் என்றால் காசு கேட்டு தலையைச் சொறிந்து கொண்டு நிற்க மாட்டார். ஆனால் யாராவது வீட்டில் விருந்து சாப்பிடக் கூப்பிட்டால் மறுக்காமல் வந்து நன்றாகக் கட்டி விட்டுப் போவார். மறக்காமல் வீட்டில் உள்ள நண்டு சிண்டுகளுக்கு எதாவது - தின்பண்டமோ, பொம்மையோ - வாங்கிக் கொடுக்காமல் இருக்க மாட்டார்.

ஊரில் உள்ள சிறுவர்கள் அனைவருக்கும் அவர் தபாலண்ணே. பெருசுகளுக்கு கோவாலு. தெருவில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கும்போது வந்தால் பந்து வீசிக் கொண்டிருந்தால் அந்த ஓவர் முடியும் வரை பொறுமையாகக் காத்திருப்பார். சில பல கிரிக்கெட் டிப்ஸும் கொடுப்பார். எங்கள் பெயர்கள் கூட அவருக்கு அத்துப்படி.

நவம்பர் 14 - குழந்தைகள் தினம் தான் அவருக்கும் பிறந்தநாள். அந்த நாள் கை நிறைய சாக்லெட்டோடு எங்களைத் தேடித் தேடிக் கொடுத்து மகிழ்வார். சாக்லெட்டைக்கொடுத்து விட்டுப் போக மாட்டார். நாங்கள் அதைப் பிரித்து வாயில் போட்டு அது கரைகையில் எங்கள் முக பாவங்களை ரசித்துப் பார்த்து விட்டே செல்வார்.

எங்கள் ஊரின் அத்தனை பேரின் மதிப்பையும் பெற்றவர்.. பொடிசுகளுக்கு அவர் மீது மரியாதை. பெருசுகளுக்கு இப்படி ஒரு தபால்காரர் இருப்பது ஒரு பெருமை. அவரைத் தங்கள் குடும்பத்தின் அங்கமாக நினைக்காத குடும்பமே எங்கள் ஊரில் இல்லை எனலாம்.

அப்படி இருந்த தபாலண்ணே நடுத்தெரு ரங்கநாயகியக்காவுடன் ஏன் ஓடிப் போனார் என்று எங்கள் யாருக்கும் தெரியவில்லை.

பின் குறிப்பு: உண்மையிலயே இப்பிடி ஒரு கேரக்டர் இருந்தா நல்லாத்தான் இருக்கும். என்ன சொல்றீங்க?

Friday, May 7, 2010

உளவு“இது நம் திருமண நாளுக்காக” என்றவாறு தன் கையிலிருந்த ஷாம்பெயின் கோப்பையை உயர்த்தி பிடித்துவிட்டு, கோப்பையிலுருந்த ஷாம்பெயினை ஒரு சீப்பு சீப்பினார்.


எதிரே அவர் மனைவி ஒரு புன்னகையுடன் தன் கோப்பையைக் கீழிறக்கினாள்.

இரண்டாவது ஸிப் எடுக்கும்போது புரை ஏறியது.. நெஞ்சைப் பிடித்துகொண்டு இருமினார்.

மனைவி புன்னகை விலகாமல் அவரையே பார்த்தாள்.

இருமல் அடைப்பாகி கையிலிருந்த கோப்பையை கீழே போட்டு விட்டு மேஜை மேலேயே விழுந்தார்.

மனைவி இயல்பாக எழுந்து, அவர் கழுத்தில் விரல் வைத்துப் பார்த்தாள். மேஜை மீதிருந்த செல்பேசியை எடுத்து நம்பர்களை அழுத்தினாள்.

ஐந்து நிமிடங்களுக்கு முன்

“டியர்! ஐ யாம் ஹோம்” என்றவாறு உள்ளே நுழைந்த அவர் யாரையோ தேடினார். ஒவ்வொரு அறையாக தேடி விட்டு, கடைசியாக சமையலறைக்குள் வந்தார். பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த அவளைப் பின்னால் இருந்து கட்டியணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டார்.

“வேலைக்காரி எங்கே? நீ ஏன் இதையெல்லாம் செய்கிறாய்?”

“இன்றைய தினத்தை நாம் தனியாக கழிப்பதற்காக அவளை சீக்கிரமே வீட்டுக்கு அனுப்பி விட்டு என் கையால் சமைத்திருக்கிறேன்.”

“வாவ் க்ரேட். கோழியின் வாசம் என்னை இப்போதே சாப்பிட சொல்கிறது”

“சாப்பாடு ரெடி. மேஜை மீது பரப்பி இருக்கிறேன். சாப்பிடலாம்”

“நான் போய் ஷாம்பெயின் எடுத்து வருகிறேன்”

ஷாம்பெயினைத் திறந்து க்ளாஸ் ஹொல்டரில் இருந்த கோப்பைகளில் ஒன்றை எடுத்து ஒரு கை தேர்ந்த பட்லரின் திறமையோடு ஊற்றி மனைவியிடம் கொடுத்தார். இன்னொரு கோப்பையை எடுத்து அதிலும் ஊற்றி ஷாம்பெயின் பாட்டிலைக் கீழே வைத்தார்.

“இது நம் திருமண நாளுக்காக”

ஒரு மணி நேரத்துக்கு முன்னால்

கையிலிருந்த அந்தக் கடிதத்தை மீண்டும் ஒருமுறை படித்தாள். லைட்டரைக் கொளுத்தி காகிதத்தைப் பற்ற வைத்தாள். எரிந்து முடிந்ததும் அந்தக் காகிதத்தை டாய்லட்டில் போட்டு ஃப்ளஷ் செய்தாள். இரண்டாம் முறையும் ஃப்ளஷ் செய்து விட்டு வெளியே வந்தாள்.

சமையலறைக்கு வந்து ஷாம்பெயின் கோப்பைகளை எடுத்து துணியால் துடைத்தாள். மேஜை இழுப்பறையைத் திறந்து உள்ளே இருந்து “PEANUT OIL” என்று எழுதப்பட்ட பாட்டிலை வெளியே எடுத்தாள். குக்கிங்க் ப்ரஷ்ஷால் அந்த எண்ணையை தொட்டு 6 ஷாம்பெயின் கோப்பைகளின் உள்ளேயும் தடவினாள்.

ரெஃப்ரிஜிரேட்டரில் இருந்து கோழிக் கறியை எடுத்து சமைக்கத் தொடங்கினாள்.

இரண்டு மணி நேரத்துக்கு முன்னால்

உடற்பயிற்சி அறையில் வழக்கமான அரைமணி நேர உடற்பயிற்சியை முடித்தாள். வெளியே வந்து வீட்டிற்குள் கட்டப்பட்டிருந்த நீச்சல் குளத்தில் சிறிது நேரம் நீந்தினாள். பின்னர் குளியலறையில் குளித்துவிட்டு உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்து ஹாலில் அமர்ந்தாள்.

வேலைக்காரி கையில் ஜூஸ் கிளாசையு அவளிடம் நீட்டி விட்டு, கையிலிருந்த அன்றைய தபால்களை அவள் முன்னால் இருந்த மேசையின் மீது வைத்தாள்.
ஜூஸை சீப்பிக் கொண்டே தபால்களை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வந்தாள்.

XXX முக்கியம் XXX
என்று எழுதப்பட்ட தபால் நிலைய முத்திரை குத்தப்படாத அந்தக் கடிதம் அவளை ஈர்த்தது. ஜூஸைக் குடித்து விட்டு அந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.

கவரைக் கிழித்து உள்ளே இருந்த கடிதத்தை எடுத்தாள்.

“சந்தேக விதை விழுந்துவிட்டது. முடித்துவிடு” என்று எழுதியிருந்ததைப் படித்தாள். கையிலிருந்த லைட்டரால் கடிதத்தின் கவரைக் கொளுத்தி சாம்பலை டாய்லட்டுக்குள் போட்டாள்.

செல் பேசியை உயிர்ப்பித்தாள்.

“ஹனி. இன்றைய தினத்தை நாம் வீட்டிலேயே கொண்டாடலாமே? ரெஸ்டாரண்ட் பிளான் வேண்டாமே?”

மறுமுனை சொன்னதை மௌனமாக கேட்டாள்.

“தேங்க் யூ ஹனி”

செல்பேசியை அணைத்து விட்டு வெளியே வந்தாள்.

“மார்சி. நீ வீட்டுக்கு போகலாம். ஜோவையும் போகச் சொல்லிவிடு. இன்றைய மாலையை நானும் அவரும் தனியாகக் கழிக்க விரும்புகிறோம்”

“சரி அம்மா. நாளை காலை வருகிறேன்” என்று சொல்லிவிட்டு மார்சி வெளியேறினாள்.
மீண்டும் பாத்ரூமுக்குள் நுழைந்தாள். கையிலிருந்த அந்தக் கடிதத்தை மீண்டும் ஒரு முறை படித்தாள்.

இரண்டரை மணி நேரத்துக்கு முன்

அந்த உருவம் புதருக்கு அருகில் மறைந்திருந்தது. பையில் வைத்திருந்த கைக்கடிகாரத்தை எடுத்து ஒருமுறை பார்த்துக் கொண்டது. தபால்காரர் அந்த வீட்டின் தபால் பெட்டியில் கடிதங்களைப் போட்டுவிட்டு நகர்ந்தார். அவர் அந்தப்பக்கம் நகர்ந்ததும், வேகமாக அந்தப்பெட்டியை நெருங்கி கையில் இருந்த கடிதத்தை எடுத்து அதற்குள் போட்டு விட்டு விரைந்தது.

வாட்ச்மேன் போஸ்ட்மேன் அந்தப்பக்கம் போனதைப் பார்த்ததும் தபால் பெட்டியைத் திறந்து தபால்களை வெளியே எடுத்தான்.

வீட்டுக் கதவின் அருகில் இருந்த காலிங்க் பெல்லை அடித்தான்.

மார்சி வந்து கதவைத்திறந்து அவன் கையில் இருந்த கடிதங்களை வாங்கிச் சென்றாள்.
உள்ளே வந்த மார்சி கடிதங்களை மேஜை மீது வைத்து விட்டு, மணியைப் பார்த்தாள்.
‘அம்மா உடற்பயிற்சி முடித்து வரும் நேரம்’ - என்று நினைத்துக் கொண்டு ஜூஸ் கலக்க சென்றாள்.

அவள் உடற்பயிற்சி அறையில் வழக்கமான உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தாள்.

எட்டு மணி நேரத்துக்கு முன்

அவரது அலுவலக அறையில் உட்கார்ந்திருந்தார். அவர் முன் ஒரு பெரிய காகிதத்தில் ஒரு வருட கேலண்டர் இருந்தது. அதில் சில நாட்கள் சிவப்பு மையில் வட்டமிடப் பட்டிருந்தன. சில நாட்கள் ஆரஞ்சு வண்ணத்தில், சில நீல வண்ணத்தில்.

தலையில் கை வைத்தவாறு இருந்தார்.

அவர் முன்னால் உட்கார்ந்திருந்தவன் தன் பையில் இருந்து கைக்கடிகாரத்தை எடுத்து மணியைப் பார்த்துக்கொண்டான்.

“பீட், நம் அலுவலக ரகசியங்கள் வெளியே செல்கின்றன என்று 6 மாதங்களுக்கு முன் எஃ.பி.ஐயிடம் இருந்து தகவல் வந்த உடனே நம் அலுவலகத்தில் இருக்கும் அந்த கறுப்பு ஆட்டைக் கண்டுபிடிக்க ஆவன செய்து விட்டேன். ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தை அணுகி நம் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒவ்வொருவரைப் பற்றியும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க சொன்னேன். அவர்கள் அனுப்பிய அறிக்கைப்படி அனைவரும் சுத்தமானவர்கள்.”

“அப்படியென்றால் நம் ரகசியங்கள் எப்படி வெளியேறுகின்றன?”

“அதை மேலும் ஆராய நான் சில தேதிகளைப் எஃப்.பி.ஐ யிடம் இருந்து பெற்றேன். அந்தத் தேதிகளில் தான் நம் ரகசியங்கள் வெளியே சென்றிருக்கின்றன. அந்த நாட்களில் நான் என் மனைவியுடன் வெளியூரில் விடுமுறையில் இருந்திருக்கிறேன் அல்லது ஏதாவது காரணம் சொல்லி என் மனைவி அலுவலக நேரத்தில் என்னை வீட்டுக்கு அழைத்திருக்கிறாள்.”

“உங்கள் மனைவியை சந்தேகப் படுகிறீர்களா?”

“என் மனைவி வைரம். என்னுடன் இருபது வருடங்களாக குடும்பம் நடத்துகிறாள். ஆனால் யாரவது வெளி நபர்கள் அல்லது ஏஜென்சிகள் அவளை மிரட்டலாம் என்று சந்தேகப்படுகிறேன்”

“இதில் நான் என்ன செய்ய வேண்டும்?”

“இந்த அலுவலகத்தில் எனக்கு அடுத்து நீதான். என் நம்பகமானவனும் கூட. அதனால் தான் உன்னிடம் சொல்கிறேன். எஃப்.பி.ஐக்கு நான் ரிப்போர்ட் அனுப்புமுன் இதை உறுதிப்படுத்த விரும்புகிறேன். அந்தப் பொறுப்பை உன்னிடம் கொடுக்கிறேன்”

“என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பொறுப்பை கொடுத்ததற்கு நன்றி. உங்கள் குடும்ப வாழ்க்கைக்கு பாதிப்பு வராமல் நான் இந்த விசாரணையை முடிக்கிறேன்”

“நீயே இதில் பெர்சனலாக செயல்படு. வேறு யாரையும் பயன்படுத்த வேண்டாம்”

“உறுதியாக”

“நீ. போகலாம்”

“வருகிறேன் சர். விசாரணை முடியும் வரை உங்கள் மனைவியுடன் வழக்கமாக இருங்கள். அவரை அலர்ட் செய்துவிட வேண்டாம்”

“இதை நீ சொல்லி நான் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை”

அவன் வெளியேறியதும் தனது பைப்பை எடுத்து புகையிலையை நிரப்பி பற்ற வைத்து புகையை விட்டத்தை நோக்கி வெளியிட்டார். வெளியேறிய புகையை வெறித்து பார்த்தவாறு இருந்தார்.

இரண்டு மாதங்களுக்கு முன்

அதி முக்கியமான அந்த கோப்பை அவர் பார்த்துக் கொண்டிருந்தார். நாட்டின் இராணுவம் சம்மந்தப்பட்ட கோப்பு அது. இவருக்கு நேரடியாக வந்து சேரும் தகவல். இவரைத்தவிர இவரது அலுவலகத்தில் வேறு யாரின் பார்வைக்கும் போகாது. அதில் உள்ள செய்திகளை இவர் மனம் ஆழ ஆராய்ந்து கொண்டிருந்தது.

இவர் அறைக்குள் அந்தக் கோப்பைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த அவன், தன் தொலைபேசியை எடுத்து ஒரு எண்ணைத் தொடர்பு கொண்டான். மூன்று முறை மணி அடித்ததும் தொலை பேசியை வைத்து விட்டான். பையிலிருந்து கடிகாரத்தை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தான். சரியாக இரண்டு நிமிடம் கழிந்ததும் மீண்டும் தொலலபேசியை எடுத்து மற்றொரு எண்ணைத் தொடர்பு கொண்டான். இரண்டு மணி அடித்ததும் மீண்டும் தொடர்பைத் துண்டித்தான். மீண்டும் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். சரியாக ஒரு நிமிடம் ஆனதும் முதலில் தொடர்பு கொண்ட எண்ணைத் தட்டினான். ஒரு மணி அடித்ததும் தொலைபேசியைத் துண்டித்தான்.

சிறிது நேரம் கழித்து உள்ளே அவரது அறையில் தொலைபேசி ஒலித்தது. அவர் பதட்டமாகப் பேசினார். பேசிவிட்டு, கையில் இருந்த கோப்பை, அவரது ஸேஃபுக்குள் வைத்து விட்டு வெளியே வந்தார்.

“பீட். நான் அவசரமாக வெளியே செல்ல வேண்டியிருக்கிறது. நான் பங்கு கொள்ள வேண்டிய மீட்டிங்குகளைப் பார்த்துக் கொள். ஒரு முக்கியமான மீட்டிங்கை நான் கான்சல் செய்து கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.

“அவர் அந்தப்பக்கம் போனதும், இவன் கணிணியில் சில பொத்தான்களைத் தட்டினான். அவரது அறையில் பொருததப்பட்ட CCTV யின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினான். இதுவரை பதிவான காலி அறையின் வீடியோவை திரும்ப திரும்ப பதியுமாறு விட்டு விட்டு அவரது அறைக்குள் நுழைந்தான்.

பையில் இருந்து இரண்டு கையுறைகளை எடுத்து அணிந்தான். இரண்டு கைகளின் கட்டை விரலையும், ஆட்காட்டி விரலையும் அவரது ஸேஃபில் இருந்த கைரேகை அறியும் பட்டியில் வைத்தான். ஸேஃபின் மேலே இருந்த இரும்புப் பட்டை விலகியது. உள்ளே இருந்த சாவித் துவாரத்தில் பையிலிருந்து எடுத்த சாவியை நுழைத்தான். திறந்ததும் ஸேஃப் திறந்து கொண்டது. உள்ளே இருந்த கோப்பை எடுத்து கையிலிருந்த போர்ட்டபிள் ஸ்கேன்னரில் பதிவு எடுத்துக் கொண்டு, கோப்பை இருந்த மாதிரி வைத்து விட்டு ஸேஃபை பூட்டினான்.

திரும்ப தன் அறைக்கு வந்து CCTVயின் கட்டுப்பாட்டை பழைய படிக்கு மாற்றிவிட்டு தன் கையில் இருந்த ஸ்கேன்னரில் இருந்த கோப்பின் பிரதிகளை உடனடியாக ஒரு சிப்புக்கு மாற்றினான். பின் அந்தச் சிப்பை தன் ஷூவில் பொருத்திக் கொண்டான்.

இருபது வருடங்களுக்கு முன்

அந்த சர்ச்சின் வாசலில் கார்கள் குவிந்திருந்தன.

இசை ஒலித்தது. முதலில் ஜான் நடந்து வந்தார். பின்னர் சூசன்.

அவர்களிருவரும் பாதிரியாரின் முன் நின்றனர்.

“மிஸ். சூசன், நீங்கள் உங்கள் வாழ்வின் இறுதிவரை மிஸ்டர். ஜான் அவர்களுடன் உங்கள் சுக துக்கங்களை அவர் மனைவியாகப் பங்கு கொள்ள சம்மதிக்கிறீர்களா?”

“சம்மதிக்கிறேன்”

“மிஸ்டர். ஜான், நீங்கள் உங்கள் வாழ்வின் இறுதிவரை மிஸ் சூசன் அவர்களுடன் உங்கள் சுக துக்கங்களை அவரது கணவனாகப் பங்கு கொள்ள சம்மதிக்கிறீர்களா?”

“சம்மதிக்கிறேன்”

“உங்கள் இருவரையும் கணவன் மனைவி என இறைவனின் பெயரால் அறிவிக்கிறேன்”

இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டார்கள்.

“நீங்கள் இப்போது உங்கள் மனைவியை முத்தமிடலாம்”

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்

பாப் இசை அந்த பாரின் எல்லா ஸ்பீக்கர்களிலிருந்தும் வழிந்து கொண்டிருந்தது. ஜான் தனது இரண்டாவது பியரை சிப்பினான். அங்கே இருந்த அனைவரும் ஜோடி ஜோடியாக நடனம் ஆடிக்கொண்டிருந்தனர்.

‘என்னிடம் என்ன குறை? அழகில்லையா? இல்லை பணமில்லையா? ஒரு செனட்டருக்கு மகனாகப் பிறந்தும் நமக்கு மட்டும் ஏன் எந்தப் பெண்ணும் நிலையாக அமைய மாட்டேன் என்கிறாள்?’ என்று எண்ணிக் கொண்டே அந்த பியரையும் காலி செய்து விட்டு, பார் டெண்டரை நோக்கி “ஒன் மோர்” என்று சொல்லிவிட்டு திரும்பும்போது அவளைப் பார்த்தான்.

கண்டிப்பாக எந்த ஒரு ஆணும் அவளைத் திரும்பிப் பார்க்காமல் போக மாட்டான். அப்படி ஒரு அழகு. உடன் வந்தவனை அவள் நடத்திய விதம் ஒரு அடிமையை ராணி நடத்துவது போல இருந்தது. ஜான் எழுந்து நேராக அவளிடம் சென்றான்.

“ஹாய், என் பெயர் ஜான். மூன்றாம் வருடம். நீ?”

“சூசன் முதல் வருடம்”

“நீ மிகவும் அழகாக இருக்கிறாய். நீ என்னுடன் ஒரு ட்ரிங்க் அருந்துவாயா?”

“பிறகு பார்க்கலாம்” என்று சொல்லி விட்டு நகர்ந்தாள்.

ஜானின் முகம் சுண்டிவிட்டது. மீண்டும் பாருக்கு போய் அமர்ந்து கொண்டு தன் பியரைச் சப்பினான்.

நான்காவது பியரை முடித்துவிட்டு, “ஒன் மோர்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது, “எனக்கும் ஒன்று சொல்வாயா?” என்ற குரல் கேட்டு திரும்பினான்.

சூசன் நின்று கொண்டிருந்தாள். அவள் தோள் சிவந்திருந்தது. யாரோ பிடித்து அழுத்தியது போல.

“என்ன காயம்?”

“அந்த இடியட் அத்து மீறப் பார்த்தான். நான் திமிறினேன். அவன் முரட்டுத்தனமாக நடந்து கொண்டான். விட்டேன் ஒரு அறை ஓடிப் போய்விட்டான்” என்று சிரித்தாள்.

“ரொம்பவும் தைரியசாலிதான். அவன் கத்தி ஏதாவது வைத்திருந்து குத்திவிட்டுப் போயிருந்தால்?”

“செத்துப் போயிருப்பேன். தட்ஸ் ஆல். செத்துபோனாலும் போவேனே தவிர சம்மதமில்லாததை ஏன் செய்ய வேண்டும்?”

“சரியான வாதமாகத்தான் இருக்கிறது”

இப்படித் துவங்கிய பழக்கம் டேட்டிங்கில் முடிந்து ஒரே வீட்டில் குடியேறும் வரை தொடர்ந்தது. ஒரு கூடைப்பந்தாட்டப் போட்டியில் வைத்து சூசனைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டான். அவளும் மறுக்காமல் உடனே சம்மதித்தாள்.

இவன் செனட்டர் தந்தையை சமாதானம் செய்வது தான் கொஞ்சம் கடினமாக இருந்தது. அவர் ஒரு தனியார் துப்பறியும் நிறுவனம் மூலம் சூசனின் முழு பின்னணியையும் ஆராய்ந்த பின்னரே சம்மதித்தார்.

இருபத்தேழு வருடங்களுக்கு முன்பு

அவள் அந்த வரவேற்பரையில் அமர்ந்திருந்தாள். மிகவும் பதட்டத்துடன் இருந்தாள்.

அந்தப் பெண் அதிகாரி வந்தார்.

“அலெக்சாண்ட்ரா நீ இப்போது உள்ளே போகலாம்”

“காம்ரேட் அலெக்சாண்ட்ரா - வயது பதினெட்டு. தாய் தந்தை இல்லை. எட்டு வயதில் செம்படையால் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு கல்வி புகட்டப்பட்டிருக்கிறாய். ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், ஜெர்மன் சரளமாக பேசவும் எழுதவும் தெரியும். அனைத்து தற்காப்பு கலைகளிலும் தேர்ந்திருக்கிறாய். அனைத்து வகை துப்பாக்கிகளையும் கையாளத் தெரியும்”

“உனக்கு இந்தப் பணியை செய்வதில் முழுச் சம்மதம் தானே?”

“சம்மதம் தான் காம்ரேட்”

“இது தான் உன் அசைன்மெண்ட். அலெக்சாண்ட்ரா. நாளை முதல் உன் பெயர் சூசன் ஸ்கின்னர். உன் குடும்பத்தைப் பற்றிய அனைத்து தகவல்களும் இதில் இருக்கிறது. நன்றாக மனனம் செய்து கொள். நீ கொலம்பியா பல்கலைக் கழகத்தில் படிக்கும் ஜான் ஃபோர்டை சந்திக்க வேண்டும். அவனை உன் மீது மையல் கொள்ள வைக்க வேண்டும். அவனை நீ மணக்க வேண்டும். உனக்கு வரும் உத்தரவுப் படி நடந்து கொள்ள வேண்டும். ஏதாவது கேள்விகள் இருக்கிறதா?”

“இல்லை காம்ரேட்”

“நீ போகலாம்.”