Friday, September 5, 2014

ப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - கடைசி பகுதி

அருண் நேராக அவன் எதிரே நின்று வலது கையை அவன் முன்னால் நீட்டினான். ”ஹலோ ரவிச்சந்திரன். ஐ அம் அருண்.”

ரவிச்சந்திரன் தயக்கத்துடன் அருகில் அமர்ந்திருந்த லாயரைப் பார்த்தான். அவர் கண்ணசைக்கவும், அருணின் கையைப் பற்றிக் குலுக்கினான்.

“மிஸ்டர் ரவி. நான் இந்தக் கேஸ்ல போலீஸ்க்குக் கன்சல்டண்டா ஒர்க் பண்றேன். உங்க மேல நாலு கொலை ஒரு திருட்டு கேஸ் எஃப்.ஐ.ஆர் போட்டிருக்குதுன்னு உங்களுக்குத் தெரியும் இல்லையா?”

லாயர் குறுக்கிட்டார். “தெரியும் மிஸ்டர் அருண். அந்தக் கேஸ்ல சரண்டர் ஆகிட்டாரு என் க்ளையன்ட். என்ன கேக்கணும்னாலும் ஆஃப்டர்னூன் ஜட்ஜ் கஸ்டடி ஆர்டர் குடுத்தார்னா கஸ்டடியில வச்சி விசாரிச்சிக்கோங்க. பட் உங்க சைட்ல கேஸ் ஸ்டிராங்கா இல்லை. கஸ்டடி கிடைக்குமாங்கிறதே சந்தேகம் தான்”

“தெரியும் மிஸ்டர்…”

“அன்பழகன். கிரிமினல் லாயர்”

“நல்லது மிஸ்டர் அன்பழகன். அது சம்மந்தமா பேசத்தான் வந்திருக்கேன். உங்க ரூம்ல போய் பேசலாமா?”

“நீங்க என் கிளையண்ட் கிட்ட எந்தக் கேள்வியும் கேக்கக் கூடாது. என் அனுமதி இல்லாம அவர் எதையுமே பேச மாட்டாரு. இந்த ரெண்டு கண்டிஷனுக்கும் ஒத்துக்கிட்டீங்கன்னா பேசலாம்”

“அக்ரீட். சிவா நீங்க இங்கயே வெயிட் பண்ணுங்க. நான் வந்துடறேன்”

சிவா தலையசைக்க, அன்பழகன், ரவிச்சந்திரன் மற்றும் அருண் மூவரும் நடந்து ஹாலின் ஒரு மூலையில் இருந்த அறைக்குள் நுழைந்தனர். அங்கே இருந்த இரண்டு ஜூனியர்கள் அவர்களின் சீனியரைப் பார்த்ததும் எழுந்து நின்றனர். 

“நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க. நாளைக்கு 9க்கு வந்தாப் போதும்”

அவர்கள் இருவரும் வெளியேறியதும், அன்பழகன் அவருடைய நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார். எதிரில் இருந்த சேர்களில் ஒன்றை இழுத்து அன்பழகனின் அருகில் போட்டு அதில் ரவிச்சந்திரன் உட்கார்ந்து கொண்டான். இன்னொரு சேரில் அருண் உட்கார்ந்து அறையைச் சுற்றிப் பார்த்தான்.

பல சினிமாக்களில் பார்த்தது போல பின்னால் லைப்ரரி போல சட்டப் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டாமல் சாதாரண அரசு அலுவலரின் அறை போல இருந்தது. மேஜை மேல் கேஸ் கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 

“சொல்லுங்க மிஸ்டர் அருண். என்ன பேசணும்?”

“ரவி, நீங்க எடுத்த பேரர் பாண்ட்ஸ் யாரோடதுன்னு உங்களுக்கு ஐடியா இருக்கா?”

“எடுத்ததா குற்றம் சாட்டப்பட்டிருக்கிறன்னு சொல்லுங்க அருண். அவர் எடுத்ததா உங்களால நிரூபிக்க முடியுமா? என் க்ளையண்டோட தாத்தா எப்பவோ வாங்கின இந்த பேரர் பாண்ட்ஸை பரண் மேல போட்டு வச்சிருந்திருக்காரு. ரீசண்டா வீடு க்ளீன் பண்ணும்போது கிடைச்சதுன்னு எங்களால ப்ரூவ் பண்ண முடியும்”

“இங்க பாருங்க அன்பழகன். எல்லாம் எனக்குத் தெரியும். கொலைக் கேஸ்ல போலீஸ்க்கு ஹோல்ட் கம்மின்னும் தெரியும். ஈஸியா ஒடச்சி உங்க கிளையண்டை வெளிய கொண்டு வந்துடுவீங்கன்னும் தெரியும். ஆனா உங்களுக்குத் தெரியாதது ஒண்ணு இருக்கு”

“என்ன?”

“இந்த பேரர் பாண்ட்ஸ் எல்லாம் ம.மு.க கட்சியோட வட்டச் செயலாளர் சொக்கலிங்கத்துக்குச் சொந்தமானது. அவர் குடுத்த கேஸ் தான் திருட்டுக் கேஸ். அவருக்கு போலிஸ்ல இருக்கிற இன்ஃப்ளுயென்ஸ் யூஸ் பண்ணி பழைய தேதியில கேஸ் குடுத்துருக்காரு. அவரோட கம்ப்ளெயிண்ட்ல சீரியல் நம்பரோட குடுத்துருக்காரு. அதுல கொஞ்சம் பாண்ட்ஸை ரவி எக்ஸேஞ்ச் செஞ்சிருக்காரு. இந்த ஆதாரத்தை வச்சி அவரை 5 வருசம் உள்ள தள்ள முடியும்"

ரவி அன்பழகனின் தோளைப் பிடித்துத் திருப்பினான். “சார், இவர் சொல்றது நிஜமா?”

“ம்ம். திருடினதுக்கு ஆதாரம் இருக்குதுன்னா அஞ்சி வருசம் கிடைக்கலாம். மூணு வருசமாக் கூடக் கொறச்சிடலாம்"

அருண் இடைமறித்தான். “ஒரு நாள் கூட ஜெயில்ல இல்லாம வெளிய வர்றதுக்கு நான் ஒரு வழி சொன்னா செய்வீங்களா?”

அன்பழகனும் ரவிச்சந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். 

“சி.எம்.சி ஆஸ்பிட்டல்ல செத்துப் போனானே கணேசன். அவன் தான் இந்த பேரர் பாண்ட்ஸைக் கொண்டு போயிட்டு இருந்தவன். அவன்கிட்ட இருந்துதான் நீங்க எடுத்தீங்க இல்லையா?”

“அ..அ.. ஆமா”

“அவன் ரயில்ல இருந்து தவறி விழுந்ததாதான் வாக்குமூலம் குடுத்துருக்கான். ஆனா நீங்க சொக்கலிங்கம் தான் தள்ளி விட்டதா வாக்குமூலம் குடுக்கணும். நாங்க, நான் இன்ஸ்பெக்டரா இருந்த காலத்துல இருந்து, ஏதாவது கேஸ்ல வசமா சிக்க வச்சிரணும்னு காத்துக்கிட்டு இருந்தோம். சாட்சியமே இருக்காது. இல்ல இருக்கிற சாட்சியத்தைக் கலைச்சிருவாங்க. இப்ப இது ஒரு நல்ல வாய்ப்பு"

“ம். சொல்லுங்க"

“இப்ப ஜட்ஜ்கிட்டப் போய் பேசலாம். ரவி இன்-காமிரா டெஸ்டிமோனி குடுத்துரட்டும். போலீஸ் எல்லாக் கேஸ்ல இருந்தும் அவர் பேரை எடுத்துடுறோம். ஒரு 5 லேக்ஸ் ஒர்த் பாண்ட்ஸ் மட்டும் அந்த டைம்ல தவறீ விழுந்ததை நீங்க எடுத்து வச்சதா சொல்லி கோர்ட்ல ஒப்படைச்சிருங்க. அது போதும் எல்லாக் கேஸ்ல இருந்தும் வெளிய வந்துடலாம். சொக்கலிங்கத்தை அரஸ்ட் பண்ணினதும் ரவி ப்ளான் பண்ணின படி வெளிநாட்டுக்குப் போயிரட்டும். அவர்கிட்ட இருந்தும் தப்பிச்சிரலாம். ஓக்கேவா?”

“மிஸ்டர் அருண். நாங்க ரெண்டு பேரும் இதைப் பத்திப் பேசிட்டு வர்றோம். நீங்க கொஞ்சம் வெளிய இருங்க"

“ஓக்கே” வெளியே வந்த அருண் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு சிகரெட்களைக் கரைத்து முடித்தான். அன்பழகன் வெளியே வந்தார். 

“மிஸ்டர் அருண். உங்க ப்ரொபோசலை ஏத்துக்கலாம்னு இருக்கோம். ஜட்ஜ் இப்ப அவைலபிளா இருப்பார். நாம போய் பேசலாமா?”

“ஷ்யூர் அன்பழகன். என் ஃப்ரண்ட் கமிஷனர் கார்த்திகைப் பாண்டியனும் வந்துட்டாரு. பிபியையும் கூட்டிக்கிட்டு ஜட்ஜைப் போய்ப் பார்ப்போம் வாங்க"

கதவைத் திறந்து வெளியே வர முயன்ற ரவியிடம் அன்பழகன், “ரவி நீங்க இங்க என் ரூம்லையே உக்காருங்க. ஜட்ஜ்கிட்டப் பேசிட்டு டெஸ்டிமோனிக்கு ரெடியானதும் உங்களைக் கூப்புட்டு விடுறேன். ஓக்கேவா?”

ரவி தயக்கத்துடன் தலையசைத்து விட்டு உள்ளே சென்றான்.

ஜட்ஜ் அறைக்குப் போகும் வழியில் சிவாவைப் பார்த்து வலது கையில் கட்டை விரலையும் சுண்டுவிரலையும் நீட்டி மற்ற மூன்று விரல்களையும் மடக்கி காதின் அருகில் வைத்து ‘கால் பண்ணு' என்று வாயசைத்தான் அருண்.

ஜட்ஜ் ஏதோ வேலையாக இருக்க அரை மணி நேரக் காத்திருப்புக்குப் பின் உள்ளே அழைக்கப்பட்டனர். உள்ளே நுழையும் போது அருணின் ஃபோன் மெசேஜ் டோன் அடித்தது. எடுத்து மெசேஜ் பார்த்ததும் அவன் முகம் மலர்ந்தது.

கார்த்திகைப் பாண்டியனும் வக்கீலும் நிலவரத்தை விளக்கிக் கொண்டிருந்தார்கள். ஜட்ஜ் கேட்கும் குறுக்குக் கேள்விகளுக்கெல்லாம் விளக்கத்தைச் சொல்லிக்கொண்டிருந்தனர். அருண் செல்ஃபோனில் மணி பார்த்தான். மனதுக்குள் எண்ண ஆரம்பித்தான்.

பத்து
ஒன்பது
எட்டு
ஏழு
ஆறு 
ஐந்து
நான்கு
மூன்று 
ரெண்டு 
ஒன்று
சாத்தியிருந்தக் கதவைக் கிட்டத் தட்ட உடைத்துத் திறந்துகொண்டு வந்தான் ரவி. மூச்சு வாங்கியதைப் பார்க்கும்போது முழு ஹாலையும் ஓடிக் கடந்திருப்பான் போல. 

ஜட்ஜ் திடுக்கிட்டு எழுந்து, “யாரு மேன் நீ?” என்றார்.

அன்பழகனும் திடுக்கிட்டு, “என்னாச்சு ரவி? உங்களை என் ரூம்ல தானே உக்காந்திருக்கச் சொன்னேன்? ஏன் வந்தீங்க?”

ரவி இருவரையும் கண்டு கொள்ளாமல் அருணின் கைகளைப் பிடித்துக்கொண்டு கதறினான்.

“சார், நான் தான் அந்த நாலு கொலையையும் பண்ணேன். ரெண்டு கொலையை நானே செஞ்சேன். ரெண்டு கொலையை ஆள் வச்சி செஞ்சேன். பேரர் பாண்ட்ஸ்க்காக தான் இந்தக் கொலைகளைச் செஞ்சேன். என்னை உடனே ஜெயில்ல போடுங்க. என்னைக் காப்பாத்துங்க. ப்ளீஸ்" 

திரும்பத் திரும்ப அதையே சொல்லி அழ ஆரம்பித்தான். 

“ரவி என்ன நீங்க, எதுக்கு இதையெல்லாம் சொல்றீங்க. கொஞ்சம் சும்மா இருங்க" என்றெல்லாம் அன்பழகன் சொன்ன ஆறுதல்கள் எதையும் கண்டுகொள்ளாமல் அருண் கைகளையும் கார்த்திகைப் பாண்டியனின் கைகளையும் பிடித்துக் கொண்டு அழுதுகொண்டிருந்தான் ரவி.

ஜட்ஜ் என்ன நடக்கிறது என்று புரியாமல் முழித்தார். அருண் நிதானமாக அவரிடன் எடுத்துச் சொல்லி ரவியின் வாக்குமூலத்தைப் பதியச் செய்தான். சிவா உள்ளே வந்து ரவியின் கையில் விலங்கு பூட்டி வெளியே கூட்டிக்கொண்டு சென்றார். 

ஜட்ஜிடம் நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தான் அருண். 

தூரத்தில் வைத்தியால் கொடி கட்டப்பட்ட சுமோவில் ஏற்றிவிடப்பட்டுக் கொண்டிருந்த சொக்கலிங்கம் அருணின் தலை தெரிந்ததும் பற்கள் தெரியச் சிரித்தார். வலது கை மடக்கி கட்டை விரலை உயர்த்திக் காட்டினார். அருண் இரண்டு விரல்களை நெற்றியில் வைத்து ஒரு சல்யூட்டை வைத்துவிட்டு அவன் காரை நோக்கி நடந்தான்.

(முற்றும்).

Friday, August 29, 2014

ப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - 11

சி.எம்.சி மருத்துவமனை.

அதிகாலை 4:00 மணி. ஜெனரல் வார்டில் கட்டில்கள் வரிசையாகப் போடப்பட்டு கொசுவலை போன்ற திரையால் தடுக்கப்பட்டிருந்தன. நோயாளிகளுக்குத் துணையாக வந்தவர்கள் கட்டில்களுக்கு நடுவில் நியூஸ் பேப்பரையோ பழைய பெட்ஷீட்டையோ விரித்துப் படுத்துக்கொண்டிருந்தனர். ஒரு சிலரிடம் இருந்து குறட்டை ஒலி சீராக வந்து கொண்டிருந்தது. ஓரமாகப் போட்டிருந்த மேஜையின் மீது தலை வைத்துப் படுத்துக்கொண்டிருந்தார் டியூட்டி நர்ஸ். அந்த உருவம் மெதுவாக உள்ளே நுழைந்தது. ஒவ்வொரு கட்டிலாகப் பார்த்துக்கொண்டே வந்து கணேசன் படுத்திருந்த கட்டிலின் அருகே வந்ததும் நின்றது. கணேசனின் மனைவியை இன்னும் கண்டுபிடிக்கவில்லை போலும். அவன் பக்கத்தில் யாரும் இல்லை.

அந்த உருவம் பையில் இருந்த சிரிஞ்சை எடுத்து அதனுள் ஒரு மருந்தை ஏற்றியது. அதை ஏறிக்கொண்டிருந்த கணேசனின் சலைன் பாட்டிலில் ஏற்றியது. சலைன் ஏறும் அளவை அட்ஜஸ்ட் செய்யும் சக்கரத்தை மேலே ஏற்றி உட்செல்லும் அளவை அதிகப்படுத்தியது. சில விநாடிகள் நின்று பார்த்துவிட்டு வேக வேகமாக வெளியேறியது.

*************************************************

கமிஷனர் அலுவலகம்.

அருணும் சிவாவும் கமிஷனர் கார்த்தியின் எதிரில் உட்கார்ந்திருந்தார்கள். அருண் விவரம் அனைத்தையும் விளக்கினான்.

“சாரி கார்த்தி. உன்கிட்ட கேக்காம டீல் பேசிட்டு வந்துட்டேன்.”

“நோ பிராப்ளம் அருண். நாம மொத்த டாகுமெண்ட்ஸையும் கைப்பத்தியிருந்தாலும் சொக்கலிங்கம் எப்பிடியாவது பூந்து அதை வாங்கிட்டுப் போயிருப்பான். டீல்னால ரவியை சீக்கிரம் நெருங்க முடியும்ங்கிறதால சந்தோசம் தான். சரி நெக்ஸ்ட் ஸ்டெப்ஸ் என்ன?”

“பெரிய அளவுல பேரர் பாண்ட்ஸ் டீல் நடக்கணும்னா கண்டிப்பா யாராச்சும் ப்ரோக்கர் இல்லாம நடக்காது. இந்த மாதிரி டீலிங்க்ல இறங்கற ஆட்கள் எல்லாருக்கும் ஒரு நோட்டிஃபிகேஷன் அனுப்புவோம். ஆறு கோடியையும் இங்கயே மாத்துவான்னு எனக்கு நம்பிக்கை இல்லை. கொஞ்சம் பணத்தை இந்தியாவுல மாத்திட்டு எங்கயாச்சும் வெளிநாடு போய் அங்க தான் மீதியை மாத்துவான்னு எதிர்பார்க்கிறேன். சோ, அவன் பாஸ்போர்ட்டை ஃப்ளாக் பண்ணிடுவோம். ஏற்கனவே சிவா அவன் கிரெடிட் கார்ட் எல்லாத்தையும் ஃப்ளாக் பண்ணியிருக்காரு. எப்பிடியாச்சும் அவனைப் பிடிச்சிரலாம்”

சிவாவின் செல்லுக்கு ஒரு கால் வந்தது. எடுத்துப் பேசினார்.

“ஓ அப்பிடியா? எப்ப?”

..

“ஓ. ஓக்கே சார். நான் அருண் சார்ட்ட பேசிட்டுக் கூப்புடுறேன்”

“சார் ஒரு அன்ஃபார்ச்சுனேட் இன்சிடெண்ட்.”

“என்ன ஆச்சி?”

“ஹாஸ்பிட்டல்ல இருந்த கணேசன் திடீர்னு செத்துப் போயிட்டானாம் சார்.”

“வாட்? நல்லா இருந்தான்னு சொன்னீங்களே? சொக்கலிங்கம் கூட அவன் நல்லாப் பேசினதா தானே சொன்னாரு?”

“ஆமா சார். என்னான்னு தெரியல. போஸ்ட் மார்ட்டம் முடிஞ்சதும் ரிப்போர்ட் அனுப்பி வைக்கிறதா சொல்லியிருக்காரு சார்”

“ம்ஹ்ம். கார்த்தி, திஸ் த்ரோஸ் அஸ் இன் வாட்டர். ஒரு வேளை ரவியை வளைச்சிட்டாலும், நம்மளால கேஸை ஸ்ட்ராங்கா ப்ரொட்யூஸ் பண்ண முடியுமான்னு தெரியலை. வாட் டு டூ நவ்?”

“முதல்ல ரவியை மடக்குவோம். அதுக்குப் பிறகு என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்.”

“ஓக்கே”

*********************************************

சொக்கலிங்கம் சொல்படி தவறி விழுந்ததாகவே கணேசனும் வாக்குமூலம் கொடுத்திருந்தான். ரவியைப் பிடிப்பதற்கு எல்லா இடங்களிலும் பொறி வைத்தாகிவிட்டது. எலி சிக்கும் வரை காத்திருக்க வேண்டும். இடைப்பட்ட நேரத்தில், சிக்கிய பின் ரவியை தகுந்த சாட்சியங்களுடன் சிறையில் அடைப்பது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்திருந்தான்.

சிவா வேகமாக உள்ளே வந்தான். “சார் பய ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கான். எங்கயுமே டிரேஸ் விடாம இருக்கான். இன்னமும் கிரெடிட் கார்ட் எதையும் யூஸ் பண்ணலை. ஏ.டி.எம்ல பணமும் வித்டிரா பண்ணலை”

“அவன் கம்பெனி பிசியை கான்ஃபிஸ்கேட் செஞ்சிங்களே அதுல எதுவும் மேட்டர் சிக்கிச்சா?”

“இல்ல சார். அதுவும் டெட் எண்ட் தான்”

“ம்ம்.. லெட்ஸ் வெயிட் அண்ட் சீ”

அருண் மேஜையின் மீதிருந்த ஃபோன் ஒலித்தது. எடுத்துப் பேசினான்.

“சிவா. ஒரு ப்ரேக்த்ரு கிடைச்சிருக்கு. 25 லட்சம் மதிப்புள்ள பேரர் பாண்ட்ஸை ரெண்டு வாரம் முன்னாடி என்கேஷ் பண்ணியிருக்கான். ஹவாலால இன்வால்வ் ஆகிற ஒரு ஏஜெண்ட் மூலமா இந்தப் பரிமாற்றம் நடந்திருக்கு. நம்பகமான காண்டாக்ட் மூலமா இந்த நியூஸ் கிடைச்சது. பணம் கிடைச்சும் பய எஸ்கேப் ஆகாம இருக்கான்னா, ஒண்ணு அவன் போலி பாஸ்போர்ட் விசா ஏற்பாடு செஞ்சிட்டு இருக்கணும். அல்லது அவன் லின்க் எதையாவது மிஸ் பண்ணியிருக்கணும். அதை அடைச்சிட்டு எஸ்கேப்பாவலாம்னு இருக்கணும். எது எப்பிடியோ அவன் இந்தியாவுக்குள்ள தான் இருக்கணும்”

“சார் தென் கணேசனோட போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்திருச்சி. He was poisoned. சயனைடை சலைன் பாட்டில்ல ஏத்தியிருக்காங்க. லேப் ரிப்போர்ட்ஸ் கன்ஃபர்ம் பண்ணிட்டாங்க. சொக்கலிங்கத்துக்கும் விசயம் போயிடுச்சி. கொதிச்சிப் போய் இருக்காரு. உங்களுக்கும் பேசலாம்”

“சிவா, ஐ சஸ்பெக்ட் இந்தக் கொலையையும் ரவியே செஞ்சிருக்கலாம். அவனோட மிஸ்ஸிங் லிங்க் கணேசன் மட்டும் தான்.”

“கணேசன் அங்க அட்மிட் ஆகியிருக்கிறது அவனுக்கு எப்பிடி சார் லீக் ஆகியிருக்கும்?”

“அவன் தானே தள்ளிவிட்டது. வாட்ச் பண்ணிட்டே இருந்திருப்பான். இத்தனை நாள் ஐசியுல இருந்ததால அவனால உள்ள போக முடிஞ்சிருக்காது. கோமால இருந்து முழிச்சதும் ஜெனரல் வார்டுக்கு மாத்தியிருப்பாங்க. ஈஸியா உள்ள நுழைஞ்சிட்டான். எனிவே வி ஷுட் இன்ஃபார்ம் சொக்கலிங்கம்”

“சார் சொக்கலிங்கம் ஏற்கனவே பாண்ட்ஸை எடுத்துட்டுப் போயிட்டான்னு காண்டுல இருப்பார். இதுல கணேசனைக் கொன்னதும் ரவிதான்னு தெரிஞ்சா”

“தெரிஞ்சா?”

“நமக்கு முன்னாடி ரவி அவர் கையில மாட்டினா சின்னா பின்னமாகிருவான் சார்”


“ம்ம்.. நாம அதுக்கு முன்னாடி அவனைப் பிடிக்கணும்”***************************************************சொக்கலிங்கம் அருண் முன்னால் உட்கார்ந்திருந்தார்.

“அருண் சார், நீங்க சொன்னதால சும்மா இருந்தேன். இப்ப அவன் ஆஸ்பத்திரியேறி வந்து என் ஆளைக் கொன்னுட்டுப்போயிருக்கான். அவன் ரொம்ப விசுவாசமானவன் சார். பணத்தை எடுத்துக்கிட்டு போயிட்டான்னு நினைச்சி  அந்தத் தேவிடியாப் பய மட்டும் என் கையில கெடச்சான் இந்தக் கையாலயே அவனை நசுக்கிக் கொன்னுருவேன்”

“கூல் டவுன் சொக்கலிங்கம். டிப்பார்ட்மெண்ட் அவனைத் தீவிரமாத் தேடிக்கிட்டு இருக்கு. அரெஸ்ட் வாரண்ட் வாங்கி வச்சிருக்கோம். பாஸ்போர்ட் ஃப்ளாக் பண்ணியிருக்கு. அவன் எங்கயும் தப்பிக்க முடியாது. பிடிச்சிரலாம். கவலைப் படாதீங்க. அப்புறம் 25 லட்சத்தை அவன் ஏற்கனவே மாத்திட்டான்.”

”அவன் சிக்கினாப் போதும் அருண் சார். 25 லட்சத்தை எப்பிடி வாங்கிறதுன்னு எனக்குத் தெரியும். ரெண்டு வாரம் டைம் தர்றேன். அதுக்குள்ள நீங்க அவனைப் பிடிக்கலைன்னா நம்ம டீல் ஓவர். புரிஞ்சதா?”

“புரிஞ்சது சொக்கலிங்கம். தூண்டில் போட்டிருக்கோம். மீன் முள்ளைக் கடிக்கிற வரைக்கும் காத்திருக்கத்தான் வேணும்”

“ஏதோ சொல்றீங்க. சரி வர்றேன்” சொக்கலிங்கம் அந்தப் பக்கம் போனதும் அருணின் செல்ஃபோன் ஒலித்தது.

“ஹலொ”

...

“வாட்?”

...

“ஓக்கே நான் உடனே வர்றேன்”

அருண் அவனது ஐ20ஐ சைதாப்பேட்டை கோர்ட் வாசலில் நிறுத்தினான். பதட்டத்துடன் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த சிவா அருணின் தலையைப் பார்த்ததும் சிகரெட்டைக் கீழே போட்டு நசுக்கிவிட்டு ஓடி வந்தான்.

“எங்க இருக்கான் சிவா?”

“உள்ள தான் சார். லாயர்ஸ் கூட இருக்கான்”

”ஜட்ஜ் என்ன சொன்னாரு?”

“பிபி 15 டேய்ஸ் கஸ்டடி கேட்டிருக்காரு. கிடைச்சுடும்னு நினைக்கிறேன்”

“வாங்க உள்ள போகலாம்”

இருவரும் உள்ளே நுழைந்தனர். இரண்டு வக்கீல்கள் இரண்டு பக்கமும் உட்கார்ந்திருக்க, நடுவில் நீலக் கலர் சூட் போட்டு உட்கார்ந்திருந்தான். சமீபத்தில் பணமாக்கியிருந்த 25 லட்ச ரூபாய் தந்ததா இல்லை இயல்பாகவே இருப்பதா என்று தெரியாமல் ஒரு பணக்காரக் களை அவன் முகத்தில் ஒட்டியிருந்தது. சிவாவின் காக்கி யூனிஃபார்மைப் பார்த்ததும் ஒரு சங்கடம் அவன் உடல்மொழியில் வெளிப்பட்டது. லாயரைப் பார்த்தான். அவர் ஆறுதலாகத் தலையசைத்து அவனை அமைதிப்படுத்தினார்.

அருண் நேராக அவன் எதிரே நின்று வலது கையை அவன் முன்னால் நீட்டினான். ”ஹலோ ரவிச்சந்திரன். ஐ அம் அருண்.”

(தொடரும்)

Friday, March 7, 2014

ப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - 10

கணேசன் சொல்லச் சொல்ல சொக்கலிங்கத்தின் முகம் கறுத்தது.

ஒன்றரை மாதமாக கோமாவில் இருக்கிறான். முழித்ததும் மனைவியைக் கூடக் கேட்காமல் சொக்கலிங்கத்தின் பெயர் சொல்லி கேட்கிறான். இவனை எப்படி நம்பாமல் இருப்பது?

“அவன் பேர் என்னன்னு நினைவு இருக்கா?”

“இருக்குதுண்ணே, ரவி”

“எந்தக் கோச்?”

“அண்ணே?” புரியாமல் முழித்தான் கணேசன்.

“ட்ரெயின்ல எந்தப் பொட்டியில வந்தான், எஸ்1 எஸ்2 இப்பிடி”

“ஓ, அதுவாண்ணே, எஸ்4ண்ணே. சீட் நம்பர் 64. எனக்குப் பக்கத்து சீட் தாண்ணே. அந்த விவரம் சாகுற வரைக்கும் மறக்காதுண்ணே”

“பரவாயில்லடா, தலையில அடிபட்டு கோமாவுல கிடந்தாலும் இதை எல்லாம் நினைவுல வச்சிருக்க. உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்டா”

“என்னண்ணே?”

“நீ காணாமப் போயிட்டன்னதும், பாண்ட் பேப்பரை எல்லாம் எடுத்துக்கிட்டு நீதான் ஓடிப் போயிட்டியோன்னு நினைச்சி உன் பொண்டாட்டியை ரொம்பக் கொடுமைப் படுத்திட்டேண்டா. என்னை மன்னிச்சிடுடா”

“அய்யோ அண்ணே என்னண்ணே பெரிய வார்த்தை எல்லாம் பேசிக்கிட்டு. உங்க நிலமையில நான் இருந்தாலும் அப்பிடித்தாண்ணே நினைச்சிருப்பேன். காசு ஒர்ருவா ரெண்டுர்ரூவாயா? ஆறு கோடியிலண்ணே. அப்பிடி நினைக்கிறதுல என்னண்ணே தப்பு? இப்ப எம்பொண்டாட்டி எங்கண்ணே இருக்கா?”

“தெரியலைடா, ஆனா தேடிக் கண்டுபிடிச்சி இங்கக் கூட்டிட்டு வரச் சொல்றேன். இப்ப நான் அந்த ரவியைத் தேடப் போகோணும். போலீஸ் வருவாங்க. வந்து கேட்டா ரயில்ல இருந்து தவறி விழுந்துட்டன்னு சொல்லிடு. நம்ம பேப்பர் பத்தியோ அந்த ரவியைப் பத்தியோ மூச்சு விடவேண்டாம். என்ன?”

“சரிண்ணே” கணேசன் தொடர்ந்து பேசிய களைப்பில் கண்ணை மூடினான்.

சொக்கலிங்கம் கண்ணைக் காட்டியதும் வைத்தி செல்ஃபோனில் ஸ்டேஷன் நம்பரை அழைத்தான்.

************************************************

சுமோ சென்னை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. சொக்கலிங்கம் ஃபோனில் யாரிடமோ படபடத்துக் கொண்டிருந்தார். “இந்தா பாரு, நான் இப்ப சென்னைக்கு வந்துட்டே இருக்கேன். நான் வந்து ஆஃபிஸ்ல நுழையிறதுக்குள்ள அந்த ரவியோட அட்ரஸ் என் டேபிள்ல இருக்கணும். யாரைப் பிடிப்பியோ, எவன மெரட்டுவியோ தெரியாது. எனக்கு அட்ரஸ் வேணும். ஒன்னால முடியுமா முடியாதா?”

“....”

“சரி. ஒன்னைய நம்புறேன்”

போனை வைத்துவிட்டு, வைத்தியைப் பார்த்து, “மணிகண்டண்ட்ட சொல்லிட்டேண்டா. அவன் எப்பிடியும் ரயில்வேய்ஸ்ல ரிசர்வேஷன் ஃபார்ம் பாத்து ரவியோட அட்ரஸ் எடுத்துக் குடுத்துருவான். அந்த ரவி மட்டும் கையில கிடைக்கட்டும், அவன் கொட்டைய நசுக்கிடுறேன். என்ன நினைச்சிட்டு இருக்கான்? யார் கையில வெளையாடுறோம்னு தெரிய வேண்டாம்?”

“கவலைப் படாதண்ணே, கண்டிப்பா அவனைப் பிடிச்சிரலாம்”

*****************************************************

சப்வேயில் வாங்கி வந்திருந்த ஃபுட் லாங் வெஜிட்டேரியன் சப் சாண்ட்விட்ச்சைக் கடித்துக் கொண்டே டிவியில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்த அருணின் செல்ஃபோன் ஒலித்தது.

“ம்ம். சொல்லுங்க சிவா”

“சார் நீங்க சொன்ன மாதிரி மீனாகிட்ட விசாரிச்சேன். ஒன் அண்ட் எ ஹாஃப் மாசத்துக்கு முன்னாடி ஏதோ தப்பு செஞ்சதுக்காக சிவகுருவை காலேஜ்ல இருந்து ஒரு வாரம் சஸ்பெண்ட் செஞ்சிருக்காங்க. லெட்டர் வீட்டுக்குப் போறதுக்குள்ள போய் அதைப் பிடிக்கணும்னு அன்னைக்கு நைட்டே கிளம்பி ஊருக்குப் போயிருக்கான் சிவா. மீனாவுக்கு என்ன டேட்னு கன்ஃபர்ம்டா தெரியலை. நான் காலேஜ் ரெக்கார்ட்ஸ்ல பாத்து கன்ஃபர்ம் செஞ்சிக்கிட்டேன். நமச்சிவாயம் சென்னையில இருந்து திரும்பிப் போன அதே நாள், சதாசிவம் டி.டி.ஈயா போன அதே நாள். ஸோ மூணு பேரும் ஒரே நாள்ல ஒரே ட்ரெயின்ல பிரயாணம் செஞ்சிருக்காங்க சார்.”

“குட். சோ கோ இன்சிடன்ஸ், வெறும் இன்சிடெண்டா ஆகியிருக்கிறதுக்கான வாய்ப்பு இருக்குன்னு சொல்றீங்க?”

“எஸ் சார். ஆனா ஒரே ஒரு பிராப்ளம் என்னண்ணா, நம்ம சதாசிவம் எப்பவும் அன் ரிசர்வ்ட்ல போறவர். திடீர் ட்ராவல்ங்கிறதால சிவகுருவுக்கும் டிக்கெட் கிடைக்காம அவனும் அன்ரிசர்வ்ட்ல போனதா மீனா சொல்றா. பட் சதாசிவம், ரிசர்வ்ட் கோச்க்கு டி.டி.ஈ. அவங்க எப்பிடி மீட் பண்ணியிருப்பாங்கன்னு டவுட்டா இருக்கு”

“சிம்பிள் சிவா. நீங்க அன்ரிசர்வ்ட் டிக்கெட் எடுத்து டி.டி.இ கிட்ட காசு குடுத்து ரிசர்வ்ட் டிக்கெட் வாங்கிப் போனதே இல்லையா?”

“ம்ம். அப்போ சதாசிவம் சிவகுருவுக்கும், நமச்சிவாயத்துக்கும் ரிசர்வ்ட் கோச்ல சீட் குடுத்துருக்கலாம்னு சொல்றீங்களா?”

“எக்ஸாக்ட்லி”

“பாஸிபிள் சார். ஆனா அதைக் கன்ஃபர்ம் பண்ண இவங்க மூணு பேருமே உயிரோட இல்லையே சார்?”

“நோ பிராப்ளம் சிவா. அந்த டேட்ல எஸ்-4 கோச்சோட ரிசர்வேஷன் சார்ட் வாங்கிட்டீங்களா?”

“இன்னும் இல்லை சார். காலைல முதல் வேலையா செஞ்சிடுறேன்”

“தென் அந்த டேட்ல ட்ரெயின் ஆக்ஸிடெண்ட் எதுவும் ரிக்கார்ட் ஆகியிருக்கான்னு விசாரிச்சீங்களா?”

“ப்ளூ மவுண்ட்டென் ரூட்ல இருக்கிற எல்லா ஸ்டேஷன்ஸ்க்கும் தகவல் குடுத்துருக்கேன் சார். ரயில்வே போலீஸ்க்கும் நோட்டிஃபிக்கேஷன் அனுப்பியிருக்கேன். நாளைக்குத் தெரிஞ்சிரும்”

“குட். நாளைக்குக் காலைல ஆஃபிஸ்ல மீட் பண்ணுவோம்”

“ஷ்யூர் சார் குட் நைட்”

ஃபோனை அணைத்துவிட்டு சாண்ட்விட்ச்சில் கவனத்தைத் திருப்பினான். இதுவரை இருட்டு அறையில் கருப்புப் பூனையைத் தேடிக் கொண்டிருந்ததுபோல இருந்த கேஸில் நாளை ஒரு டைரக்‌ஷன் கிடைக்கும் என்ற நம்பிக்கை அருணுக்கு வந்தது.

*************************************************
மக்கள் முன்னேற்றக் கழக வட்ட அலுவலகம். மேஜை மேல் வைத்த டீ ஆறிப்போயிருந்தது. அடிக்காத செல்ஃபோனை வெறித்தவாறு அமர்ந்திருந்தார் சொக்கலிங்கம். “என்னடா இந்த நீலகண்டன் இன்னும் கூப்புட மாட்டேங்கிறான்?”

வாசலில் நிழலாடியது. “இந்தா நேர்லயே வந்துட்டானே”

“வணக்கம் சார். நல்லா இருக்கீங்களா?” சிரித்த முகத்துடன் உள்ளே நுழைந்தான் நீலகண்டன். சோடாபுட்டி கண்ணாடி அணிந்திருந்தான். லேசாகச் சாயம் போன வெளிர் நீல வண்ண சட்டையும் கறுப்புப் பேண்டும் அணிந்திருந்தான். நெற்றியில் கீற்றாக திருநீர் வைத்திருந்தான். கையில ஒரு பேப்பரைச் சுருட்டி வைத்திருந்தான்.

“நல்லா இருக்கிறதெல்லாம் இருக்கட்டும்யா. நான் கேட்ட விசயம் என்னாச்சி?”

“இந்தா கையோட கொண்டாந்திருக்கேனே சார். பேரு அட்ரஸ் எல்லாம் இருக்கு. கொஞ்சம் கஷ்டமாயிடுச்சி சார் இந்த விவரம் தேடிக் கண்டுபிடிக்க” தலையச் சொறிந்தான்.

சொக்கலிங்கம் பேப்பரை வாங்கிக் கொண்டு வைத்தியைப் பார்க்க, வைத்தி நீலகண்டனின் தோளில் கை போட்டு திருப்பிக் கொண்டு வாசலை நோக்கி நடந்தான். நீலகண்டன் நின்று திரும்பிப் பார்த்தான், “சரி சார், எதுக்கு இதைக் கேட்டீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?”

“தெரிஞ்சிக்கக் கூடாது” சொக்கலிங்கத்தின் குரலில் கடுமை இருந்தது.

“இல்ல போலீஸ்ல இருந்து யாரோ வந்து இதே தேதிக்கு எஸ்.4 கோச்சோட ரிசர்வேஷன் சார்ட் கேட்டுட்டு இருந்தாங்க அதான் கேட்டேன்”

சொக்கலிங்கத்தின் முகத்தில் எந்த உணர்ச்சி மாற்றமும் இல்லை. ஆனால் கண்களில் ஒரு ஒளி வந்து மறைந்தது. “அதுக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை. நீ வைத்தி குடுக்குற காசை வாங்கிட்டு நடையைக் கட்டு”

அவனை அனுப்பி விட்டுத் திரும்பி வந்த வைத்தியைப் பார்த்து சொக்கலிங்கம் குரலை உயர்த்தினார். “என்னடா நடக்குது இங்க. போலீஸ் எதுக்கு மோப்பம் புடிச்சிட்டு வர்றாய்ங்க? கணேசன் எதுவும் உளறிட்டானா?”

“அப்பிடியெல்லாம் இருக்காதுண்ணே. போலீஸ் வேற எதுக்காகவாது தேடியிருக்கும். கணேசன் அப்பிடிப்பட்டவன் இல்லை”

“ம்ம்.. நம்புவோம். எதுக்கும் கமிஷனர் ஆஃபிஸ் பக்கம் ஒரு காதைப் போட்டு வையி”

“சரிண்ணே”

பேப்பரை மேஜை மீது போட்டான். ”அந்த ரவிங்கிறவன் அட்ரஸ் இதுல இருக்கு. நம்ம பயக ரெண்டு பேரை அனுப்பி விசாரிக்க சொல்லு. கண்டிப்பா அவன் இங்க இப்ப இருக்க மாட்டான். ஆனா வீட்டுல இருக்கிறவிங்க பக்கத்து வீட்டுக்காரங்ககிட்ட விசாரிச்சி அவன் எங்க வேலை பாக்குறான், சொந்த ஊர் எது, முடிஞ்சா அவன் சொந்த ஊர் அட்ரஸ் எல்லாம் விசாரிச்சிட்டு வரச் சொல்லு. சாயந்திரத்துக்குள்ள எனக்கு எல்லா விவரமும் வரணும். சரியா?”

“சரிண்ணே.” பேப்பரை எடுத்துக் கொண்டு அகன்றான்.

*************************************************
கமிஷனர் அலுவலகம். ரிசர்வேஷன் சார்ட் மேஜை மீது கிடந்தது.

சிவா ப்ரீஃப் செய்து கொண்டிருந்தார். “எஸ்-4 கோச்ல ரவிங்கிற பேர் வர்ற பேசஞ்சர்ஸ் ரெண்டு பேர் அன்னைக்கு ட்ராவல் பண்ணியிருக்காங்க சார். ரவிக்குமார் 14, ரவிச்சந்திரன் 64. ரெண்டு பேருமே ஆன்லைன்ல ரிசர்வ் பண்ணியிருக்காங்க. ரவிச்சந்திரன் குடுத்த ஃபோன் நம்பர் நம்ம டிடீஇ ஃபோன்ல இருந்த எஸ்-4 நம்பர். அட்ரஸ்ல விசாரிக்க ஆள் அனுப்பியிருக்கேன்.”

அருண் இடைமறித்தான். “யூஸ் இல்ல சிவா. அவன் கண்டிப்பா அங்க இருக்க மாட்டான். ஆனா அவன் கிரெடிட் கார்டை flag பண்ண ஏற்பாடு பண்ணுங்க. அவன் எங்க கிரெடிட் கார்ட் யூஸ் பண்ணாலும் நமக்கு உடனே தகவல் வரணும்”

“குட் ஐடியா சார். இப்பவே பேங்குக்குக் கால் பண்ணிடுறேன்.”

போன சிவா அரைமணி நேரத்தில் திரும்பி வந்தார். “சார் ரவிச்சந்திரன் பேர்ல இருக்கிற பேங்க் அக்கவுண்ட், ஏடிஎம் கார்ட், கிரெடிட் கார்ட் எல்லாத்தையுமே ஃப்ளாக் பண்ணியாச்சு. அவன் எங்க யூஸ் பண்ணாலும் உடனே நமக்குத் தெரிஞ்சிரும்”

“குட். அவனோட வெஹிக்கிள் ஏதாவது?”

“அவன் பேர்ல ஒரு பல்சர் ரெஜிஸ்டர் ஆகியிருக்கு. அது அவன் வீட்டுல தான் இருக்காம். நீங்க சொன்ன மாதிரி அவன் வீட்டுல இல்லை. அவன் சொந்த ஊர் கோயமுத்தூர் பக்கத்துல ஒரு கிராமம். அங்கயும் விசாரிக்க லோக்கல் போலீஸ் அனுப்பியாச்சு”

“குட் சிவா. எக்ஸ்பெக்ட் பண்ணினதை விட ஃபாஸ்ட்டா இருக்கீங்க”

“சார் இன்னொரு முக்கியமான விசயம். மக்கள் முன்னேற்றக் கழகத்தோட வட்டச் செயலாளர் சொக்கலிங்கத்தோட ஆளுங்க ரெண்டு பேரு ரவியைப் பத்தி விசாரிச்சிட்டுப் போயிருக்காங்க. என்ன காரணம்னு தெரியலை”

“விசாரிங்க. ஒரு வேளை நாம தேடிட்டு இருக்கிற ஃபைனான்ஸியல் டாக்குமெண்ட்ஸ்க்கு சொக்கலிங்கம் ஓனரா இருந்தாலும் இருப்பாரு”

“ஓக்கே சார் விசாரிக்க சொல்றேன்.”

“சிவா, ஆக்ஸிடெண்ட்ஸ் பத்தி விசாரிக்க சொன்னேனே. விசாரிச்சீங்களா?”

“யெஸ் சார். விசாரிச்சேன். வேலூர்ல ஒரு ஆக்ஸிடெண்ட் ரிப்போர்ட் ஆகியிருக்கு. கொஞ்ச நேரத்துல வேலூர் ஸ்டேஷனுக்குக் கால் பண்ணி கேட்டுட்டு உங்களுக்கு அப்டேட் பண்றேன் சார்.”

காலையில் போன சிவாவை மதியம் முழுக்கக் காணவில்லை. மேஜை மீது கிடந்த மற்ற கேஸ் கோப்புகளில் சிலவற்றை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தான். ஆனாலும் மனதில் இந்தக் கேஸே ஓடிக் கொண்டிருந்தது. ரவிச்சந்திரன் தான் குற்றவாளியாக இருக்க வேண்டும் என்று ஓரளவுக்கு ஒரு முடிவுக்கு வந்தாயிற்று. காரணமும் காணாமல் போன ஃபைனான்ஸியல் டாகுமெண்ட்ஸாக இருக்கலாம். ஒரு வேளை ரவிச்சந்திரன் அந்த டாகுமெண்ட்ஸைப் பணமாக மாற்றியிருந்தானென்றால் இந்நேரம் வெளிநாட்டுக்குத் தப்பியிருப்பான். அட்லீஸ்ட் வெளிமாநிலத்துக்காவது. மாற்றவில்லை என்ற பட்சத்தில் அவனைப் பிடிக்க ஒரு வாய்ப்பு இருக்கிறது. முதலில் அது என்ன டாகுமெண்ட்ஸ் என்று தெரிய வேண்டும்.

குழப்பத்தில் ஒரு பாக்கெட் சிகரெட்டைக் காலி செய்திருந்த வேளையில் சிவா வந்தார். “சார் எ ப்ரேக் த்ரு”.

“ரவிச்சந்திரன் வேலை பார்க்கிற இடம் ஒரு பெரிய இன்வெஸ்ட்மெண்ட் கம்பெனி. அந்த டாகுமெண்ட்ஸ் பத்தி யாருக்கு விவரம் தெரியலைன்னாலும் ரவிக்குத் தெரியாம இருக்காது. அவன் லாஸ்ட் ஃபோர் டேய்ஸா ஆஃபிஸ்க்கு வரலை. அவனோட ஆஃபிஸ் பிசியை நம்ம எவிடென்ஸாக் கொண்டு வர வாரண்ட் வாங்க ஏற்பாடு செஞ்சிருக்கேன். அதை நோண்டினா கண்டிப்பா விவரம் தெரியலாம்”

“குட் சிவா”

“தென் சார், அந்த வேலூர் ஆக்ஸிடெண்ட் கேஸ் ரயில்ல இருந்து தவறி விழுந்துட்டதா ஃபைல் ஆகியிருக்கு. ஆனா ஒரு விசயம். அந்த விக்டிம் பேரு கணேசன். அவனுக்கும் வட்டச் செயலாளர் சொக்கலிங்கத்துக்கும் ஏதோ தொடர்பு இருக்கு. நேத்துக் காலையில சொக்கலிங்கம் போய் அவனைப் பாத்துட்டு வந்திருக்கார்”

“சிவா, அந்த கணேசனுக்கும் ரவிக்கும் ஏதோ கனெக்‌ஷன் இருக்கு. இல்லைன்னா சொக்கலிங்கம் ரவியை எதுக்குத் தேடணும்? நான் சொக்கலிங்கத்தைப் பார்க்கணுமே. ஏற்பாடு செய்ங்க.”

“ஓக்கே சார்”

***************************************************************************************************

சொக்கலிங்கத்தின் முன்னால் இருந்த சேரில் சாய்ந்து கால் மேல் கால் போட்டு அமர்ந்து கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டியவாறு சொக்கலிங்கத்தின் முகத்தை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் அருண். சொக்கலிங்கம் எதுவும் பேசாமல் உணர்ச்சிகளை முகத்தில் காட்டாமல் அமர்ந்திருந்தார்.

“சொல்லுங்க சொக்கலிங்கம் சார். நீங்க எதுக்காக ரவிச்சந்திரனைத் தேடுறீங்க?”

“யார் ரவிச்சந்திரன்?”

“மறுபடி மறுபடி அதையே சொல்லாதீங்க சொக்கலிங்கம். நான் போலீஸா வரலை. போலீஸும் இல்லை. ஜஸ்ட அ கன்சல்டண்ட். நீங்க சொல்ற எந்த விவரமும் போலிஸ் ரெக்கார்ட்ல போகாமப் பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு. இன் ஃபேக்ட் நீங்களும் ரவி வச்சிருக்கிற அந்த டாகுமெண்ட்ஸைத்தான் தேடுறீங்கன்னு கூட எனக்குத் தெரியும்” சொல்லிவிட்டு சொக்கலிங்கத்தின் கண்களையே உற்றுப் பார்த்தான். அதில் தெரிந்த அதிர்ச்சியை சரியாகக் கண்டுகொண்டான்.

“நீங்க என்ன சொல்றீங்கன்னே எனக்குப் புரியலைங்க அருண். நீங்க ட்யூட்டில இருக்கும்போது நாம ரெண்டு பேரும் கொஞ்சம் உரசியிருக்கோம். உண்மைதான். இப்ப எங்க ஆட்சியில்லைங்கிறதால என்னைப் பழிவாங்க நினைக்கிறீங்க. இதுக்கு மேல என்னால எதுவும் பேச முடியாது. நீங்க என்னோட லாயரைப் பாருங்க”

“பாருங்க மிஸ்டர் சொக்கலிங்கம். உங்களை என்னால நேரடியா எதுவும் செய்யமுடியாது. ஆனா உங்க ஆள் கணேசனைக் கஸ்டடியில எடுத்து விசாரிச்சேன்னா, அவன் உண்மையச் சொல்லிடுவான். அவ்வளவு தூரம் போகவேண்டாமேன்னு பார்க்கிறேன். எனக்கு ரவியைப் பிடிக்க ஹெல்ப் பண்ணுங்க. உங்க டாகுமெண்ட்ஸ் உங்களுக்குக் கிடைக்க நான் ஹெல்ப் பண்றேன்” சொக்கலிங்கம் யோசிக்க ஆரம்பித்துவிட்டது தெரிந்தது. அடுத்த வலையை வீசினான்.

“போலிஸ் டிப்பார்ட்மெண்ட்க்கு அந்த டாகுமெண்ட்ஸ் அவ்வளவு முக்கியமில்லை. ரவி மூணு கொலை கேஸ்ல பிரைம் சஸ்பெக்ட். அதுக்காகத்தான் போலிஸ் அவனைத் தேடுது. மோட்டிவ்க்கான எவிடென்ஸ் தான் அந்த டாகுமெண்ட்ஸ். அதோட மொத்த மதிப்பு 4ல இருந்து 6 கோடி வரைக்கும் இருக்கலாம்ங்கிறது எங்க எஸ்டிமேட். ஆனா எதுவுமே இன்னும் ரெக்கார்ட்ல ஏறலை. நீங்க அந்த டாகுமெண்ட்ஸ் பத்தி போலிஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணாம ப்ரைவேட்டா தேடுறதுல இருந்து அது செகண்ட் அக்கவுண்ட்னு புரியுது. டாகுமெண்ட்ஸைக் கைல வாங்கினதும் அதுல ஒரு 5 அல்லது 10 லட்சம் மதிப்புள்ளதை மட்டும் கோர்ட் கணக்குல காட்டி ரவிக்கு தண்டனை வாங்கிக் குடுத்துட்டு அதை உங்கக்கிட்டக் குடுத்துரலாம். மீதியை நீங்க செகண்ட் அக்கவுண்டாவே வச்சிக்கலாம். உங்களால மட்டும் ரவியைக் கண்டுபிடிக்க முடியாது. டீல் ஓக்கேன்னா சொல்லுங்க. சேர்ந்து தேடலாம்” மீன் கொக்கியைக் கடித்துவிட்டது என்பதை சொக்கலிங்கத்தின் விரிந்த கண்களின் மூலமாகத் தெரிந்து கொண்டான்.

“ஓக்கே அருண். நீங்க ஜெண்டில்மேன். சொன்ன வார்த்தையக் காப்பாத்திடுவீங்கங்கிற நம்பிக்கை இருக்கு. ஆனா நான் ஜெண்டில்மேன் இல்லை. நீங்க சொன்ன வார்த்தையைக் காப்பாத்தலைன்னா நான் என்ன செய்வேன்னு உங்களுக்குத் தெரியும்”

அருண் மையமாகத் தலையை ஆட்டினான்.

“இப்ப நான் என்ன செய்யணும்?”

“முதல்ல அது என்ன டாகுமெண்ட்னு தெரியணும். அப்போதான் அது சம்மந்தமான ட்ரான்ஸாக்‌ஷன் எதாவது நடந்தா உடனே எங்களுக்குத் தகவல் தெரிய வரும். அதை வச்சித் தான் ரவியைப் பிடிக்கணும்”

சொக்கலிங்கம் மேஜையைத் திறந்து ஒரு ஜெராக்ஸ் காப்பியை எடுத்து அருணின் முன்னால் போட்டார். அருண் அதை எடுத்துப் பார்த்தான். “ பேரர் பாண்ட். யார் பெயரும் போடாத இந்த பாண்டைப் பணமாக்குவது எளிது. ஆனாலும் பிடித்துவிடலாம்.

“தேங்க்ஸ் சொக்கலிங்கம். நீங்க உங்க இன்ஃப்ளுயென்ஸ் வச்சி பணம் காணாமப் போன அன்னைக்கே போலிஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணின மாதிரி ஏற்பாடு செஞ்சிக்கோங்க. உங்க கம்ப்ளெயிண்ட்ல இருக்கிற மதிப்புப் போக மீதி உங்கக் கைக்கு வர வைக்க வேண்டியது என் பொறுப்பு. ரவி கிடைச்சதும் உங்களுக்குத் தகவல் சொல்றேன்.”

“அருண் உங்களை நம்பித்தான் சொல்லியிருக்கேன். விசயம் வெளிய வந்தாலோ இல்லை அந்த ரவி தப்பிச்சிட்டாலோ நீங்கதான் பதில் சொல்லணும். அப்பக் கேள்வியை நான் இப்பிடி உக்காந்துட்டுக் கேக்க மாட்டேன். தெரிஞ்சிக்கோங்க”

“கண்டிப்பா சொக்கலிங்கம். நான் குடுத்த வாக்கை மீற மாட்டேன்”

அந்த ஃபோட்டோகாப்பியோடு வெளியே வந்தான் அருண். இதை வைத்துப் பிடித்துவிடலாம். வெளியே ஜீப்பில் சிவா காத்திருந்தான். சொக்கலிங்கத்துக்கும் தனக்கும் நடுவில் நடந்த டீலை சிவாவுக்கு ப்ரீஃப் செய்ய ஆரம்பித்தான்.

(தொடரும்)

Thursday, January 23, 2014

குறுக்கெழுத்து

குறுக்கெழுத்து - 1

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.கரும்பாலை வனமாகியதின் இடையில் ஒட்டகம் மேய்ப்பதா?
4.திரும்பி நிற்கும் ஆயிலிய நாள்.
6.படம் பாதியில் வெட்டி குறத்தியின் தலையில் ஏறினால் பசு.
7.ஒரு இச்சோடு வண்ணமடித்தால் சாப்பிடலாம்.
8.ஆ! தாரம் சேர்ந்துக் கொடுத்தால் தானா தாபரம்?
9.மரத்தை உரித்து தலைகளைக் கட்டினால் ராமன் அணிந்தது.
12. சர்க்கார் காலம் அறிந்து நடுவிலேயே சரி செய்து விட்டால் சாலைகள் பழுதுபடாது இந்தப் பருவத்தில்.
14.பல் துலக்கினால் செய்வதையும் துலக்கலாம்.
16.மாது மெய்யோடு தங்கத்தின் தரம்
17.வடிவாய் வடு ஒன்றிருந்தால் தலைபோன பூச்சி கடித்த தழும்பொன்றை வைத்திருக்கும்.

நெடுக்காக:
1.நீண்ட பக்கு வைத்தால் வாய் சிவக்கும்.
2.தாவரம் தரமணியின் உள்ளே அருள் அளிக்க!
3.நெஞ்சில் தடியால் அடித்தால் குளிர் மாதம்.
4.புரிந்து நடுவிழந்து சாலையின் துவக்கத்தில் சேர்ந்தால் நவீனமா?
5.நளபாகம் பிரியமுடன் நடுவில் படைத்தால் கூறு போடு.
8.ஆலங்காடு, தரமான ஊரில் ஒளிந்திருப்பது அகங்காரமா?
10.மராமத்து செய்ய உள்ளே போட்ட ஒப்பந்தத்தை தள்ளுபடி பண்ணு.
11.படிதம் கலைத்துப் போட்டால் சல்லிக் காசு.
13.காப்பாத்து, இடையில் போனால் வாயு.
15.குட்டுத் தலையில் பத்துப் போட்டால் சாப்பிடும் பண்டம்.
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Thursday, January 16, 2014

ப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - 9

முந்தைய பாகம்

கமிஷனர் அலுவலகம். 

அருணின் சீட்டின் எதிரில் சிவா உட்கார்ந்திருந்தார். 

"சார் நீங்க சொன்ன மாதிரி டி.டி.இயோட ட்யூட்டி ரோஸ்டர், நமச்சிவாயத்தோட ட்ராவல் டீட்டெயில்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணிட்டு வந்துட்டேன். சிவகுருவோட பேரண்ட்ஸ் பையனோட அஸ்தியைக் கரைக்க காசிக்குப் போயிருக்காங்க. அவங்களைப் பிடிக்க முடியலை. சோ, சிவகுரு ஆன்லைன்ல ரிசர்வ் பண்ணி ட்ராவல் பண்ண டேட்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துட்டேன்.

"நமச்சிவாயம் ரொம்ப ரேரா ட்ராவல் பண்றவர். அவர் கொள்முதல் பண்ற சரக்கை லாரியில போட்டுவிட லேட்டாயிருச்சின்னா அவரே ரயில்ல போட்டுக்கிட்டு சென்னை போறவர். கடைசி நிமிஷத்த்துல தான் பிரயாணம் உறுதியாகுங்கிறதால எப்பவுமே அன் ரிசர்வ்ட் தான். அவர் சென்னை வந்துட்டுத் திரும்பிப் போன நாள்ல எஸ்-1, 2, 3, 4 இந்த கோச்சஸ்ல சதாசிவம் டி.டி.ஈயா போயிருக்காரு. பட் அந்த டேட்ல சிவகுரு பிரயாணம் பண்ணலை. அதோட அது வீக் டே வேற. சிவகுரு வீக் எண்ட்ல தான் ட்ராவல் பண்றவன். சோ, இந்த ஆங்கிள் ஒர்க் அவுட் ஆகும்னு தோணலை சார்"

"சிவகுரு பேரண்ட்ஸ் இல்லைன்னா பரவாயில்லை. அவன் கேர்ள் ஃப்ரண்ட் மீனா இருக்காளே? அந்தப் பொண்ணுகிட்ட கேளுங்க. அன் யூசுவலா வீக் டேய்ஸ்ல ட்ராவல் பண்ணியிருந்தான்னா கண்டிப்பா நினைவுல இருக்கும்."

"ஓக்கே சார் விசாரிக்கிறேன்"

"அதோட எனக்கு அந்த டேட்ல எஸ்-4 கோச்சோட ரிசர்வேஷன் சார்ட் வேணும். ஏற்பாடு பண்ணுங்க. அப்புறம் அந்த டேட்ல இந்த ரூட்ல ஏதாச்சும் ஆக்ஸிடண்ட்ஸ் ஆர் இன்ஸிடெண்ட்ஸ் நம்ம போலீஸ் அல்லது ரயில்வே போலீஸ்ல ரெஜிஸ்டர் ஆகியிருக்கான்னும் விசாரிங்க. ஜஸ்ட் அ ஹன்ச்"

"ஷ்யூர் சார். ஈவினிங் எல்லா டீட்டெயில்ஸோடவும் உங்களை மீட் பண்றேன்"

********************************************* 

வேலூர் அரசு மருத்துவமனை. மரத்தடியில் நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த முத்து தூரத்தில் கொடி கட்டிய சுமோ வந்ததைப் பார்த்ததும் சிகரெட்டைக் கீழே போட்டு காலால் அணைத்தான். சுமோ நிழலாகப் பார்த்து பார்க் செய்த உடன், சுமோவை நோக்கி நகர்ந்து கதவைத் திறந்தான்.

டிரைவர் சீட்டில் உட்கார்ந்திருந்த சொக்கலிங்கத்தைப் பார்த்ததும் "வணக்கம் தல. ட்ராவல் கஷ்டமா இல்லையே?"

"அதான் நம்ம ஆட்சியில நாலு ரோடு போட்டு வச்சிருக்கோமே. கார் வெண்ணை மாதிரி வழுக்கிக்கிட்டு வந்திருச்சி"

அதற்குள் வைத்தி வீல் சேரை விரித்து வைத்திருக்க, முத்து இரண்டு கைகளையும் நீட்டி சொக்கலிங்கத்தை வீல் சேரில் இறக்கி வைத்தான். மருத்துவமனையின் மருந்தும் பினாயிலும் கலந்த நெடி மூக்கைத் துளைத்தது. ஹால்வேயில் ஒரு புறம் அவுட் பேஷண்டுக்கு வந்தவர்கள் வரிசையாக அமர்ந்திருந்தனர்.

"எங்கடா இருக்கான் கணேசன்?"

"ஐ சி யுல தல. ஒன்ர மாசமா கோமால இருக்கான். இன்னும் முழிக்கலை. நேத்துத்தான் கண்டு பிடிச்சேன். ரயில்வே ட்ராக் பக்கத்துல கிடந்தானாம். போலிஸ் கேஸ் ரெஜிஸ்டர் பண்ணியிருக்காங்க. இவன் முழிக்காததால இன்னும் க்ளோஸ் பண்ணாம வச்சிருக்காங்க. லோக்கல் பேப்பர்ல விளம்பரம் குடுத்துருக்காங்க. சென்னை பதிப்புல விளம்பரம் வரலை. இங்க நம்ம சகா ஒருத்தன் பேப்பர் பாத்துட்டுக் கூப்புட்டான். வந்து பார்த்து கன்ஃபர்ம் பண்ணதும் உங்களுக்கு சொல்லி விட்டுட்டேன்."

"எந்த போலீஸ் ஸ்டேஷன்னு விசாரிச்சியா? இவன் விழுந்து கிடந்தப்போ பக்கத்துல எதுனா இருந்துச்சான்னு கேட்டியா?"

"கேட்டேன் தல. நர்ஸ் வார்ட் பாய்க்கு ஒண்ணும் தெரியலை. போலீஸ் ஸ்டேஷன்ல தான் விசாரிக்கணும்."

ஐசியு வின் ஜன்னல் வழியாகப் பார்த்தார்கள். தலையைச் சுற்றி கட்டு போடப்பட்டு மூக்கில் மேல் பொருத்தப்பட்டிருந்த ட்யூபின் மூலமாக சுவாசித்துக் கொண்டிருந்தான். உயிர் இருக்கிறது என்பதை பக்கதில் பச்சை நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்த ஹார்ட் மானிட்டரில் அலையலையாக ஏறி இறங்கிக் கொண்டிருந்த இதயத் துடிப்பை வைத்துத்தான் கண்டுகொள்ள வேண்டியிருந்தது. 

"நல்லா அடி பட்டிருக்கும் போல. ரயில்ல தான போயிட்டு இருந்தான். இவனா விழுந்துட்டானா இல்லை வேற எவனும் தள்ளி விட்டுட்டானான்னு தெரியலையே. சரி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போவோம்"

போகும் வழியிலேயே லோக்கல் கட்சிப் பிரமுகர்களிடம் சொல்லி போலீஸ் ஸ்டேஷனில் தேவையான மரியாதை கிடைக்க வழி செய்துவிட்டு போய் இறங்கினார்கள். உள்ளே நுழைந்ததும் ரைட்டர் சீட்டிலிருந்து எழுந்து வந்து கும்பிடு போட்டார். "எஸ் ஐ உள்ளதான் இருக்காரு சார். போய்ப் பாருங்க". 

எஸ்ஐ எழுந்து கை கொடுத்தார். "அந்தப் பேஷண்ட் பேர் என்ன சொன்னீங்க சார்?" 

"கணேசன்"

"ம் கணேசன். நீங்க சொல்லித்தான் அந்தாளோட பேரே தெரியும். ஒன்ர மாசத்துக்கு முன்னாடி ரயில்வே ட்ராக் பக்கத்துல கிடந்ததா அங்க இருக்கிற ஸ்லம் ஆட்கள் 108 ஃபோன் பண்ணி ஹாஸ்பிட்டல்ல அட்மிட் செஞ்சிருந்தாங்க. நாங்களும் ஒரு பேருக்கு கேஸ் ஃபைல் பண்ணிட்டு லோக்கல் பேப்பர்ல விளம்பரம் குடுத்து தேடுனோம். அவன் கண் முழிக்கிற வரைக்கும் இந்த கேஸ்ல ஒரு இம்ப்ரூவ்மெண்டும் இல்லன்னு நினைச்சிட்டு இருந்தோம். நல்ல வேளையா நீங்க ஒரு லின்க் குடுத்திருக்கீங்க. அவனைப் பத்திச் சொல்லுங்க"

"அவன் என் கிட்ட வேலை பாக்குறான். ஒரு விசயமா அவனை கோயமுத்தூருக்கு அனுப்பி வைச்சேன். அவன் அங்கயும் போய்ச் சேரலை. இத்தனை நாளா எங்க எங்கயோ தேடுனோம். இப்பத்தான் இங்க இருக்கான்னு விசயம் தெரிஞ்சி வந்தோம்"

"எந்த ட்ரெயின்ல வந்தாருன்னு தெரியுமா?"

"ப்ளூ மவுண்டன். சார் அவன் விழுந்து கிடந்த எடத்துல எதுவும் பெட்டி பைன்னு கிடைச்சதா?"

"எதுவும் கிடைக்கலை. அதான் இவர் ட்ரெயின்ல வந்திருப்பாருன்னு நாங்க கெஸ் பண்ணவே இல்லை"

பேசிக் கொண்டிருந்த போதே ரைட்டர் உள்ளே வந்தார். 

"சார் ஹாஸ்பிட்டல்ல இருந்து ஃபோன் வந்திருக்கு. அந்த பேஷண்ட் கண் முழிச்சிட்டானாம். விசாரிக்க வரணும்னா வரலாம்னு சொன்னாங்க"

"ஓ கிரேட்." மேஜை மீதிருந்த தொப்பியையும் லட்டியையும் எடுத்துக் கொண்டு எழுந்தார்.

சொக்கலிங்கம் இடை மறித்தார். "எஸ். ஐ சார் நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா நாங்க முதல்ல பாத்து விசாரிச்சிட்டு வர்றோம். அதுக்குப் பிறகு நீங்க வர்றீங்களா?"

"ம்ம்… ஓக்கே சார். உங்களுக்காக இது கூட செய்யலைன்னா எப்பிடி? நீங்க பேசிட்டு எனக்குக் கூப்புடுங்க அதுக்குப் பிறகு வர்றேன்"

சுமோ மீண்டும் ஜி.எச்க்குப் போனது. 

ஐ.சி.யுவுக்கு வெளியே நர்ஸிடம் விசாரித்தார்கள். 

"ஆமாங்க கண்ணு முழிச்சிட்டாரு. முழிச்சதும் வட்டம், சொக்கலிங்கம்னு கேட்டாரு. உங்கள்ல யாரு சொக்கலிங்கம் அவரு மட்டும் உள்ள போய்ப் பாருங்க"

சொக்கலிங்கத்திற்கு மனதைப் பிசைந்தது. 'இவனைப் போய் தப்பா நினைச்சிட்டோமே' என்ற எண்ணம் தலை தூக்கியது. 

வைத்தி வீல் சேரை உருட்டிக் கொண்டு போய் உள்ளே வைத்துவிட்டு வெளியே போனான். 

கணேசனின் காதருகே குனிந்து, "கணேசா.. கணேசா.." என்று அழைத்தார் சொக்கலிங்கம்.

குரல் கேட்டதும் கண் திறந்த கணேசன், ஒரு முறை நன்றாக சொக்கலிங்கத்தைப் பார்த்துவிட்டு, "அண்ணே.. வந்துட்டீங்களா?"

"என்னடா ஆச்சி? ஏன் இப்பிடிக் கிடக்க?"

"அண்ணே நீங்க சொன்னாமேரி ரயில்ல ஏறி வந்திட்டு இருந்தேன், அப்ப…"

*************************************

ப்ளூ மவுண்டன் எக்ஸ்பிரஸ் சென்ட்ரல் ஸ்டேஷனின் பத்தாவது ப்ளாட்ஃபார்மில் புறப்படத் தயாராக நின்று கொண்டிருந்தது. கையில் ஹெல்மெட், தோளில் தொங்கிய பையுடன் ஓடி வந்தான் சிவகுரு. இடது கையில் ஒரு அன்ரிசர்வ்ட் டிக்கெட். எஸ்-1 அருகில் வரும்போது ஓரமாக நின்றுகொண்டிருந்த டி.டி.இ.ஐயைப் பார்ததும் நின்றான். ஒரு சில விநாடி தயக்கத்திற்குப் பிறகு மெதுவாக அவரை நெருங்கினான். 

"சார், அவைலபிளிட்டி ஏதாச்சும் இருக்குமா சார்? லாஸ்ட் மினிட் ப்ளன் பண்ணதால அன் ரிசர்வ்ட் தான் எடுக்க முடிஞ்சது. கொஞ்சம் பாருங்களேன். எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல சார்"

கையில் வைத்திருந்த சார்ட்டில் பார்வையைப் பதித்திருந்த சதாசிவம் குரல் வந்த திசையை நோக்கித் தலையைத் திருப்பினார். இளைஞன். கழுத்தில் திக்கான செயின், கையில் விலையுயர்ந்த வாட்ச், ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் துருத்திக்கொண்டு தெரிந்த செல்ஃபோன் இதையெல்லாம் பார்க்கும் போது இவனுக்கு ஏசிக்குக் குறைந்து எதிலும் பயணம் செய்து பழக்கமே இருந்திருக்காது என்று தோன்றியது. 

சார்ட்டை மீண்டும் ஒருமுறை மேலும் கீழுமாகப் பார்த்தவர், 

"கேன்சலேஷன் எதுவும் இல்லை. நோ ஷோ இருந்தாக்கூட ரெண்டு ஆர்.ஏ.சி இருக்கு. அவங்களுக்குத்தான் பெர்த் தரவேண்டியிருக்கும். ஒண்ணும் பண்ண முடியாதுப்பா"

"சார் சார் அப்பிடிச் சொல்லாதீங்க சார். அன் ரிசர்வ்ட்ல போனதே இல்லை. பஸ்ல போறது ஒத்துக்காது. அதான் இங்கயே வந்துட்டேன். கொஞ்சம் பாருங்க சார்" இப்போது சிவகுருவின் கையில் ஒரு ஐநூறு ரூபாய் முளைத்திருந்தது. 

ஐநூறு ரூபாயைப் பார்த்ததும் சுற்றும் முற்றும் பார்த்தார். கையை நீட்டி நோட்டைப் பிடுங்கிக் கொண்டு, "சரி எஸ்3, 51ல உக்காருங்க. அரக்கோணம் வர்றதுக்குள்ள மாத்தி விடுறேன்" கோட்டுக்குள் பணத்தைத் திணித்துக் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார். 

சிவகுரு திரும்பி நடக்கவும் இருட்டில் நின்று கொண்டிருந்த நமச்சிவாயம் சதாசிவத்தை நெருங்கினார். தலையைச் சொறிந்துகொண்டே "சார் அப்புடியே நமக்கும் கொஞ்சம் பாருங் சார்" 

"ஐநூறு ஆவும், பரவாயில்லயா؟"

"சார் அவ்ளோ இல்லீங்க். பாத்து சொல்லுங்க்"

"எவ்வளவு வச்சிருக்க؟'

"முந்நூறு இருக்குதுங்க்"

"முந்நூறெல்லாம் பத்தாது. கெளம்பு கெளம்பு"

"காலைல எறங்கின பிற்பாடு பஸ் டிக்கெட்டுக்கு ஒரு அம்பது இருக்குதுங்க். அத வேண்னாலும் வாங்கிக்ங். கக்கூச வாசம் புடிச்சிட்டே போய் வெறுத்துப்போச்சிங்க். ஒரு தரமாட்டு படுத்துட்டே போகோணொம்னு கொள்ள ஆசைங்க். பாத்து செய்யுங்க்" 

கிட்டத்தட்ட கெஞ்சும் குரலில் சொல்லவும், சதாசிவம் மனமிறங்கினார். 

"சரி சரி. காசை எடு". வாங்கிப்பையில் வைத்துக்கொண்டு, "எஸ் 3ல 52ல உக்காரு. வந்து பெர்த் குடுக்குறேன்". 

சொன்னது போலவே அரக்கோணம் வருவதற்குள் இருவருக்கும் எஸ்3யிலேயே பெர்த் ஒதுக்கிக் கொடுத்தார் சதாசிவம். சிறிது நேரம் மீனாவுடன் எஸ்.எம்.எஸ்ஸில் உரையாடிவிட்டு பாத்ரூம் போவதற்காக எழுந்தான் சிவகுரு. பாத்ரூம் போகும் வழியில் டி.டி.ஈக்கு ஒதுக்கப்பட்ட அறையில் சத்தம் கேட்கவே எட்டிப்பார்த்தான். அங்கே சதாசிவம், நமச்சிவாயம் இன்னும் இருவர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். பாத்ரூம் போய்விட்டு தானும் உள்ளே நுழைந்தான். 

அவனைப் பார்த்ததும் சதாசிவம் புன்னகைத்தார். 

நமச்சிவாயம், "வாங்க தம்பி. சீட்டு விளையாடுவீங்களா?"

ஆம் என்பதாகத் தலையசைக்கவும், "அப்ப உக்காருங்க ஒரு கை குறையுது" என்று சதாசிவம் சொன்னார்.

மற்ற இருவரில் ஒருவன் வேட்டி சட்டையில் இருந்தான். அதிகமாகப் படித்திருக்க மாட்டான் என்பது அவன் முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது. இன்னொருவன் ஜீன்ஸ் பேண்ட் ஏரோபோஸ்ட்ல் சட்டை போட்டு மாடர்னாக இருந்தான். அவன் அருகில் சிவகுரு அமர்ந்ததும் கையை நீட்டி "ரவி" என்றான். 

"சிவா. __ காலேஜ்ல பிஇ படிக்கிறேன்"

"நான் ____ல வேலை பார்க்கிறேன்"

மற்றவர்கள் சீட்டு விளையாட்டில் மும்முரமாக இருந்தார்கள். 

"அடிச்சாண்டா கணேசன் டிக்கு" என்று ஒரு சீட்டைக் கவிழ்த்துப் போட்டு மீதி சீட்டை மற்றவர்கள் முன்னால் ஷோ வைத்து விட்டு வலது கை ஆட்காட்டி விரலாலும் நடுவிரலாலும் மீசையை நீவி விட்டுக்கொண்டான். 

சிவா பொதுவாக, "240ஆ 320ஆ" கேட்டான்.

"ரெண்டும் இல்ல தம்பி. ஆட்டத்துக்கு 10 ரூவா. ஜெயிக்கிறவன் முழுக்க எடுத்துக்கலாம். என்ன சரியா?"

ஒரு விநாடி யோசித்துவிட்டு, "ம்ம் சரி" 

நமச்சிவாயம் சீட்டுக்களைப் பொறுக்கி கலைத்து ஆளுக்கொரு சீட்டாக ஒரே சீரான வேகத்தில் போட்டார். சிவாவும் எடுத்து விளையாட ஆரம்பித்தான். அடுத்தடுத்த ஆட்டங்களில் சிவா, ரவி, சதாசிவம், நமச்சிவாயம், மாறி மாறி ஜெயிக்க சதாசிவமும் கணேசனும் தொடர்ந்து பணத்தை இழந்து கொண்டே வந்தார்கள். 

கையில் வைத்திருந்த பணம் எல்லாம் தீர்ந்து போகவும் பக்கத்தில் வைத்திருந்த நகைக்கடைப் பையைத் திறந்து பணம் தேடினான் கணேசன். உள்ளே இருந்த சில பேப்பர்களை வெளியே எடுத்து வைத்தான். 
அந்தப் பேப்பர் ரவியின் கவனத்தை இழுக்கவே, ஒரு பேப்பரை எடுத்துப் பார்த்தான். அவன் உதடுகள் அன்னிச்சையாக வாவ் என்றது. 

"கணேசன் இது உங்களோடதா?” கணேசனைப் பார்த்துக் கேட்டான்.

“இல்லண்ணே, இது எங்க முதலாளியோடது. இதை எடுத்துக் கொண்டுபோய் கோயமுத்தூர்ல ஒரு எடத்துல குடுக்கச் சொல்லி அனுப்பி விட்டாரு”

“இது என்னன்னு தெரியாமலே கொண்டு போறீங்க. அப்பிடித்தான?”

கணேசன் பதில் சொல்லாமல் ரவியின் முகத்தையே பார்த்தான்.

“இதோட மதிப்பு எவ்வளவு தெரியுமா கணேசன்?”

“எவ்வளவா இருந்தா என்னண்ணே. முதலாளி கொண்டு போய் குடுக்கச் சொன்னாரு. கொண்டு போறேன். அவ்வளவுதான்”

கையில் இருந்த காகிதங்கள் அத்தனையையும் எண்ணினான். “பேக்ல இன்னும் ஏதாச்சும் இருக்கா?” 

இல்லை என்பதாகத் தலையாட்டினான் கணேசன்.

“மொத்தம் ஆறுகோடி. கமிஷன் போக எப்பிடியும் 5 3/4 கோடியாவது வரும்”

“இந்தப் பேப்பருக்கு அவ்ளோ மதிப்பா?” நமச்சிவாயம் வாய் திறந்தார்.

“ஆமாங்க. இதுக்குப் பேரு பேரர் பாண்ட்ஸ்னு (Bearer Bonds) சொல்லுவாங்க. இதுல ஒருத்தர் பேரும் இருக்காது. யாரு கையில இது இருக்கோ அவங்க இதைப் பணமாக்கிக்கலாம். கேள்வி கேக்காம காசு வந்துரும். வெளி நாட்டுல இது ரொம்ப ஃபேமஸ். இங்க இப்பத்தான் நான் பார்க்கிறேன்”

கணேசன் சட்டென்று காகிதங்களைப் பிடுங்கி பைக்குள் வைத்தான். “எத்தன கோடியா வேணும்னா இருக்கட்டும். உங்களுக்கென்ன. சீட்டாடுனோமா போனமான்னு இருங்க”

பையைப் பத்திரமாக தொடைக்கடியில் சொருகி வைத்துக் கொண்ட கணேசன் ஆட்டத்தைத் தொடர்ந்தான். மூன்று ஆட்டங்களுக்குப் பிறகு பாத்ரூம் போவதற்காக எழுந்த கணேசன் வாசல் வரை போய்விட்டுத் திரும்பி வந்து அந்தப் பையை எடுத்து கக்கத்தில் இடுக்கிக் கொண்டு திரும்பி நடந்தான்.

கணேசன் தலை மறைந்ததும், சீட்டுக் கடை முன்னால் போட்ட நமச்சிவாயம், ரவியைப் பார்த்து, “ஏந்தம்பி நெசமாலுமே அந்தக் காகிதத்துக்கு அம்புட்டு மதிப்பா?”

“ஆமாங்க”

“யார் கொண்டு போய் குடுத்தாலும் கேள்வி கேக்காம பணத்தைக் குடுத்துருவாளா?” சதாசிவம்.

“ஆமா சார். உண்மைதான்.”

சீட்டுக்கட்டை எடுக்க இருந்தவன் ஒரு விநாடி யோசித்தான். “டி.டி.இ சார். இப்பப் போனானே கணேசன், அவன் ரிசர்வ்ட் டிக்கெட்டா அன் ரிசர்வ்டா?”

“அன் ரிசர்வ்ட் தான். இந்தா இவா ரெண்டு பேருக்கு போட்ட மாதிரிதான் அவனுக்கும் சீட் போட்டேன்”

“குட். எனக்கு ஒரு யோசனை. இங்க இருக்கிற நாலு பேரும் அதுக்கு சம்மதிச்சாதான் செய்யமுடியும். இல்லைன்னா முடியாது. சம்மதம்னா சொல்லுங்க”

“என்ன யோசனைன்னே சொல்லாம சம்மதமான்னு கேட்டா எப்பிடி?” சிவகுரு.

“அந்த பேகை நாம எடுத்துக்கிட்டா 6 கோடி ரூபா நாலு பங்கு. ஆளுக்கு 1 1/2 கோடி. சம்மதமா?”


மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். “நாம எடுத்திக்கிறதுன்னா, அவன் சும்மா விட்ருவானா? ஆளைப் பாக்க ரவுடி மாதிரி இருக்கான். நம்ம நாலு பேரையும் அவன் ஒருத்தனே அடிச்சிருவான் மாதிரி இருக்கானே?”

“அவனை கஷ்டப்பட்டு அமுக்கி ரயில்ல இருந்து தூக்கிப் போட்டுட்டா யாருக்குத் தெரியும்? அவன் அன்ரிசர்வ்ட்ல வந்ததால எந்த ரிகார்ட்லயும் இருக்காது. அவன் ட்ரெயின்ல வந்தவனா இல்லை வேற எங்கருந்தாவது கொன்னு தூக்கிப் போட்டாங்களான்னு கூட போலீஸால கண்டு பிடிக்க முடியாது”

“ம்ம்.. கொஞ்சம் சொதப்புனாலும் நாம தொலைஞ்சோம்.”

“கவலைப் படாதீங்க. எல்லாம் நான் பார்த்துக்கிறேன். அடுத்த ஸ்டேஷன் வர இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு சார்?”

வாட்சைப் பார்த்த சதாசிவம், “அட்லீஸ்ட் அரைமணி நேரம் இருக்கு”

“ஓக்கே” சொல்லிவிட்டு எழுந்தான் ரவி. ஓரமாக மடித்து வைக்கப்பட்டிருந்த போர்வைகளில் ஒன்றை கையில் எடுத்துக் கொண்டான். “சிவா நீயும் என் கூட வா”

இருவரும் பாத்ரூமை நோக்கி நடந்தனர். ரயில் கதவைத் திறந்தான் ரவி. காற்று பலமாக முகத்தில் அறைந்தது. வெளியில் கும்மிருட்டு. “இங்க நின்னுக்கோ” என்று வாஷ்பேசினுக்கும் கதவுக்கும் இடையில் இருந்த இடததைக் காட்டினான். கையில் போர்வையைக் கொடுத்தான். 

பாத்ரூமில் இருந்து பெர்த்துக்குப் போகும் வழியை மறைத்துக் கொண்டு நின்றுகொண்டான் ரவி. பாத்ரூமில் தண்ணீர் பைப்பைத் திறக்கும் சத்தம் கேட்டது. தண்ணீர் சத்தம் நின்றதும் சிவாவிடம் சைகை காட்டினான். சிவா போர்வையை விரித்து இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டான். தாழ்ப்பாள் விலகும் ஓசை கேட்டது. கதவைத் திறந்து கொண்டு கைகளை வேட்டியில் துடைத்தபடி வந்தான் கணேசன். பெர்த்தை நோக்கி நடக்கத் திரும்பியவன் எதிரே நின்ற ரவியைப் பார்த்ததும் திகைத்து நின்றான்.

“என்னண்ணே இங்க நிக்கிறீங்க”

“எல்லாம் உங்களுக்காகத்தான் கணேசன்” பேசிக் கொண்டே முஷ்டியை மடக்கி கணேசனின் வயிற்றில் குத்து ஒன்றை இறக்கினான். எதிர்பாராமல் வந்து விழுந்த குத்தினால் லேசாக நிலை குலைந்த கணேசன் கக்கத்தில் இறுக்கிப் பிடித்திருந்த பை நெகிழ்தது. இடதுகையால் அந்தப் பையைப் பிடித்துக் கொண்டு முன்னால் லேசாக சாய்ந்திருந்த கணேசனின் தாடையில் வலதுகையால் இன்னொரு குத்தை இறக்கினான். தன்னிச்சையாக அவன் கையைப் பிடிக்க இரண்டுகைகளையும் நீட்டியவாறே பின்னால் சாய்ந்தான் கணேசன். பை இலகுவாக ரவியின் கைக்கு மாறியது. பின்னால் சாய்ந்த கணேசனின் முகத்தின் மீது விரித்துப் பிடித்த போர்வையால் மூடி இறுக்கிப் பிடித்துக் கொண்டான் சிவா.

முகத்தை மூடினாலும் பையைப் பறிகொடுத்த ஆத்திரத்தில் இரண்டு கைகளையும் காற்றில் வீசியவாறு வெறிகொண்ட மாதிரி திமிர ஆரம்பித்தான் கணேசன். 

“சிவா ஓரமா ஒதுங்கிக்கோ, போர்வையை இறுக்கமா பிடிச்சிக்கோ. விட்ராத” சொல்லிவிட்டு வலது காலை ஓங்கி கணேசனின் நெஞ்சில் உதைத்தான் ரவி. உதையின் வேகம் தாங்காமல் தள்ளாடி இரண்டடி பின்னால் போன கணேசன் கண் தெரியாமல் வாசல் பக்கம் திரும்பினான். 

“போர்வையை விட்றாத சிவா” குரலை உயர்த்தி கத்தி மறுபடியும் காலை உயர்த்தி கணேசனின் முதுகில் உதைத்தான். வாசல் வழியாக வெளியே விழுந்த கணேசன் வெளியே இருந்த போஸ்ட் மரத்தில் மோதி கீழே விழுந்தான். கணேசனைச் சுற்றியிருந்த போர்வை உருவிக் கொண்டு சிவாவின் கைக்கே வந்தது. கீழே விழுந்தவன் இழுத்த விசையில் சிவாவும் விழப் போக ரவி தாவி சிவாவின் கைகளைப் பிடித்து இழுத்தான். கதவை மூடிவிட்டு இருவரும் டி.டிஆரின் அறைக்குத் திரும்பினார்கள். 

ரவியின் கையில் இருந்த பையைப் பார்த்ததும் சதாசிவம் வேகமா எழுந்தார். கதவைச் சாத்திவிட்டு, “கணேசன் எங்க?”

“இந்நேரம் போய்ச் சேர்ந்திருப்பான். நாலு பேரும் செத்தாக்கூட யார்கிட்டயும் சொல்லக் கூடாது. சரியா?”

“இந்த பேப்பரை என்ன செய்யறது?”

“ஆறு கோடி ரூவா. ஒரே நேரத்துல வித்தோம்னா கவர்ன்மெண்டு மோப்பம் பிடிச்சிருவாங்க. எனக்குத் தெரிஞ்ச சிலர் இருக்காங்க. ஹவாலால எல்லாம் விளையாடுறவங்க. இந்த பேப்பர் எல்லாம் நான் எடுத்துட்டுப் போறேன். காசாக்கினதும் உங்க பங்கை உங்களைத் தேடி வந்து தர்றேன்”

”நோ நோ. நீங்க எடுத்துட்டுப் போயிட்டீங்கன்னா? இதுல இருக்கிற பாண்ட்ஸ் எல்லாம் நாலா பிரிச்சிருவோம் அவங்க அவங்க பங்கை அவங்கவங்க எடுத்துட்டுப் போகட்டும். உங்க காண்டாக்ட்ஸ் மூலமா பாண்ட்ஸ் விக்க ஏற்பாடு செஞ்சதும் எல்லாருக்கும் தகவல் குடுங்க. மீட் பண்ணி வித்துக் காசாக்கிட்டு அவங்க அவங்க டைரக்‌ஷன்ல போயிடலாம். எப்பிடி ஐடியா?”

“என்னை நம்பலையா நீ?”

“ஆமா. நம்பலை”

ரவியின் முகம் இறுகியது. ”ஓக்கே. உன் ஐடியாவையே ஃபாலோ பண்ணுவம்”

நான்கு கூறாகப் பிரித்தான் ஒவ்வொருவரும் அவர்களுக்குரிய பங்கை எடுத்துக் கொண்டார்கள்.

“எல்லாரும் எல்லார் ஃபோன் நம்பரையும் வாங்கிப்போம். பாண்ட்ஸ் விக்க ஆள் கிடைச்சதும் காண்டாக்ட் பண்ணலாம்” சிவா சொன்னான்.

“வேண்டாம். ஒருத்தர் மாட்டினாலும் மீதி மூணு பேரும் மாட்டிக்குவோம். அதனால சிவா நம்பர் என்கிட்ட, நமச்சிவாயம் நம்பர் சிவாக்கிட்ட, சதாசிவம் சார் நம்பர் நமச்சிவாயம்கிட்ட, என் நம்பர்  சதாசிவம் சார்கிட்ட. வேற யாரும் மத்தவங்களோட நம்பரை உங்க ஃபோன்ல ஸ்டோர் செய்யாதீங்க. இவ்வளவு ஏன் டயல்கூட செய்யாதீங்க. ஒருத்தர் போலீஸ்ல மாட்டினா அவங்களோட போயிடணும் ஓக்கே?”

“நல்ல ஐடியாதான். ஓக்கே”

அனைவரும் ஃபோன் நம்பர்களை ஷேர் செய்து கொண்டார்கள். 

(தொடரும்)