Tuesday, July 31, 2012

ரீபஸ் - புதிர்கள்

இதுபோல புதிர்கள் சின்ன வயசுல நிறைய விளையாடியதுண்டு. கடந்த வருடம் டெர்ரர் கும்மி குரூப் நடத்திய புதிர் போட்டியிலும் நீண்ட நாள் கழித்து விளையாடி மகிழ்ந்தேன். பின்னர் நண்பர் ஜீவ்ஸ் ஐயப்பன் அதே போல ஒரு புதிர் போட்டி ஒன்றை நடத்தலாமே என்று கேட்டதால் ஆர்வத்தோடு சில சுற்றுகள் தயார் செய்தோம். ஆனால் இறுதி வரை அதை வெளிக்கொணர முடியவில்லை.

ஆனால், அப்போதுதான் இந்த மாதிரி படங்களை வைத்துப் போடும் புதிர்களுக்கு ரீபஸ் என்று பெயர் என்பது தெரிய வந்தது. அதற்காக நண்பர் ஜீவ்ஸ்க்கு நன்றி.

சமீபத்தில் ஸ்ரீதர் நாராயணன் அவர்களும் ஒரு பதிவு எழுதியிருந்தார், ரீபஸ் புதிர்களைப் பற்றி. யோசிப்பவர் தனது தளத்தில் அடிக்கடி இது போல போட்டிகளை வைக்கிறார். 

நாமும் இது போல ஏதாவது செய்தால் என்ன என்று யோசித்ததன் (பதிவு போட வேற மேட்டரில்லைன்னு சொல்ல ஈகோ இடம் குடுக்க மாட்டேங்குது பாஸ்) விளைவு இதோ.

எல்லாமே சினிமாப் பெயர்கள் தான். முதல் முயற்சி என்பதால் மிகவும் எளிதாக இருக்கும். ப்பூ இவ்வளவுதானா என்று நினைத்தால் சவாலைத் தீர்த்துவைப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். துப்புவதை (தயவு செய்து) வேறு எங்காவது வைத்துக்கொள்ளவும் (என்று கெஞ்சிக் கதறிக் கேட்டுக் கொள்கிறேன்).

இனி புதிர்கள்.

1.


2.
3.

4.

5.


6.

எல்லாமே தமிழ்ப் படங்கள் தான். விடைகளைப் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படுகின்றன.

விடைகள் சொல்லும் நேரம் வந்துவிட்டது:


1. இதயத்தைத் திருடாதே - பெரும்பாலானவர்கள் சரியாகச் சொல்லிவிட்டார்கள்.
2. இணைந்த துருவங்கள் - பனிக்கரடி வடதுருவத்திலும், பென்குயின் தென் துருவத்திலும் வசிக்கும் விலங்குகள். இரண்டும் இணைந்திருப்பதால் சுலபமாக சொல்லிவிடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.
3. சாவித்ரி 
4. கண்ணாடி
5. வெற்றிவிழா - பார்ன் ஐடெண்டிட்டி புத்தகத்தை வைத்து கமல் எழுதிய திரைக்கதை
6. தர்மம் வெல்லும்.

Wednesday, July 25, 2012

Dolphin Tale (2011) - என் பார்வை


2009ம் ஆண்டு காய்கறி வெட்டும் போது சுண்டுவிரலில் வெட்டி tendon அறுந்து போனது. அதற்காக சர்ஜரி செய்ய வேண்டியும் நேர்ந்தது. அந்த நேரத்தில் இரண்டு வாரங்கள் வலது கையை உபயோகப் படுத்த முடியாமல் இருந்தது. அந்த நேரத்தில் தான் மாற்றுத்திறனாளிகள் எவ்வளவு பெரிய சவாலை சந்தித்து வருகிறார்கள் என்பதை உணர முடிந்தது. பிறவியிலேயே குறை இருப்பவர்களை விட இடையில் கையையோ காலையோ இழந்தவர்களுக்குக் கஷ்டம் அதிகம். எங்கே வலிக்கிறது, எப்படி வலிக்கிறது, என்று வாய் விட்டு சொல்லக் கூடிய மனிதர்களுக்கே இது இவ்வளவு கஷ்டத்தை அளிக்கும்போது வாய் திறந்து சொல்ல முடியாத விலங்குகளுக்கு இது போல நிகழ்ந்தால்? அதுவும் ஒரு டால்ஃபினுக்கு நீந்த மிகவும் அத்தியாவசியான வாலே துண்டாகிப் போனால்? அப்படி ஒரு விபத்தில் வாலை இழந்த டால்ஃபினின் கதை தான் Dolphin Tale.
க்ளியர் வாட்டர் ஃப்ளோரிடாவில் வசிக்கும் Sawyer என்ற 11 வயது சிறுவன், அவன் தந்தை ஐந்து வருடங்களுக்கு முன்பு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போனதிலிருந்து தனிமையிலேயே பொழுதைக் கழிக்கிறான். படிப்பிலும் நாட்டமில்லாமல் இருக்கிறான். அவனை பழைய நிலைக்குக் கொண்டு வர அவனது கசின், நீச்சல் வீரன், Kyle, முயற்சி செய்கிறான்.

ஒரு நாள் கோடைக்கால பள்ளிக்கூடத்துக்கு போகும் வழியில் கடற்கரையில் நண்டு பிடிக்க விரித்த வலையில் சிக்கிய டால்ஃபின் ஒன்று கரையில் ஒதுங்கி இருப்பதைப் பார்க்கிறான். ClearWater Marine Hospitalலில் அந்த டால்ஃபினுக்கு  சிகிச்சை அளிக்கும் டாக்டர் க்ளேயின் 11 வயது மகள் Hazelலுடன் நட்பு ஏற்படுகிறது. ஹேசல் சாயரை அந்த டால்ஃபினைப் பார்க்க அழைத்துச் செல்கிறாள். டால்ஃபினுக்கு விண்டர் என்று பெயர் சூட்டுகிறாள். தன்னைக் காப்பாற்றிய சாயரை விண்டர் அடையாளம் கண்டுகொள்கிறது. வாலில் ரத்த ஓட்டம் இல்லாமல் இன்ஃபெக்‌ஷன் அதிகமானதால் சர்ஜரி செய்து வாலை நீக்கிவிடுகிறார் க்ளே. வால் நீக்கப்பட்ட விண்டரால் நீந்த முடியாததால் எப்போதும் இரண்டு பேர் தண்ணீருக்குள் அதைத் தாங்கி நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எதையும் சாப்பிட மறுக்கும் விண்டர் சாயர் கொடுக்கும் உணவை விரும்பிச் சாப்பிடுகிறது. இதனால் டாக்டர் க்ளே, சாயரை விண்டரின் சிகிச்சைக்கு உதவி செய்யச் சொல்கிறார்.

கோடைப் பள்ளிக்குப் போகாமல் மட்டமடித்து ஹாஸ்பிட்டலிலேயே நேரத்தை சாயர் கழிப்பது அவன் அம்மாவிற்குத் தெரிய வருகிறது. ஆனால், இந்த டால்ஃபினோடு பழக ஆரம்பித்த பின்னர் தன் மகனின் போக்கில் ஏற்படும் நல்ல விதமான மாற்றத்தை உணர்ந்த அம்மா ஆசிரியரிடம் பேசி அந்த ஹாஸ்பிட்டலிலேயே உதவி செய்ய அனுமதிக்கிறார். விண்டரும் மேலும் கீழுமாக வாலை ஆட்டாமல் இடவலமாக ஆட்டி நீந்தப் பழகுகிறது. இடையில் ராணுவத்திற்குச் சென்ற Kyle, ஒரு வெடிவிபத்தில் காலை இழந்து ஊர் திரும்புகிறான். ஆரம்பத்தில் உறவினர் யாரையும் சந்திக்க விரும்பாத கைல் ஊனமுற்ற டால்ஃபினைப் பார்த்து மனம் மாறி பெற்றொருடன் சென்று தங்குகிறான்.

வழக்கத்துக்கு மாறாக இடவலமாக வாலை ஆட்டுவதால் விண்டரின் முதுகெலும்பு பாதிக்கப் படுவதை அறிந்த டாக்டர் க்ளே, இதனால் விண்டர் பாரலஸிஸால் பாதிக்கலாம் என கணிக்கிறார். அப்போது,  ராணுவ மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை கால் (prosthetic) செய்யும் நிபுணர் டாக்டர்.மெக்கார்த்தி டால்ஃபினுக்கு செயற்கை வால் செய்ய உடன்படுகிறார். மருத்துவமனையை பராமரிக்கவே நிதி இல்லாமல் திணறும் போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ், இந்த செயற்கை வாலுக்கு செலவிட முடியாது என்று சொல்லிவிடுகின்றனர். டாக்டர் மெக்கார்த்தி இலவசமாகவே வால் செய்து தர சம்மதிக்கிறார். அவர் செய்து தரும் வாலை விண்டர் நிராகரிக்கிறது.

அப்போது ஃப்ளோரிடா மாநிலத்தைத் தாக்கும் leRoy புயலால் மருத்துவமனைக்கு அரை மில்லியன் டாலர் நஷ்டமாகிறது. இதற்கு மேல் மருத்துவமனையை நடத்துவது சிரமம் என்று ஒரு தொழிலதிபருக்கு ஹோட்டல் கட்ட இடத்தை விற்க முடிவு செய்கிறார்கள். எல்லா விலங்குகளுக்கும் வேறு இடம் கிடைத்துவிட, வாலில்லாத விண்டரை வாங்க ஆள் இல்லை. டாக்டர் மெக்கார்த்தியையும் வால் செய்வதை நிறுத்தச் சொல்லிவிடுகிறார் டாக்டர் க்லே. இந்த செய்தி சாயரையும், ஹேசலையும் கவலைக்குள் ஆழ்த்துகிறது.

இறுதியில் என்ன நடந்தது? விண்டருக்கு வால் கிடைத்ததா? மருத்துவமனை ஹோட்டலாகாமல் பிழைத்ததா? என்பதை நெகிழ்வாக சொல்லியிருக்கிறார்கள்.

இந்தப் படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. 2005ல் ஃப்ளோரிடாவின் க்ளியர் வாட்டர் நகரில் கடற்கரையில் நண்டு வலையில் சிக்கி வாலை இழந்த இரண்டு மாதக் குழந்தையான டால்ஃபின் விண்டர் இன்றும் க்ளியர் வாட்டர் மெரைன் ஹாஸ்பிட்டலில் இருக்கிறது. இந்தப் படத்தில் விண்டராகவே நடித்தும் உள்ளது. நிஜ டால்ஃபினை நீங்கள் பார்க்க www.seewinter.com போகலாம்.

சாயராக நடித்த சிறுவன் போலார் எக்ஸ்பிரஸில் வரும் அனிமேஷன் பாத்திரத்தை நினைவு படுத்துகிறான். டாக்டர் மெக்கார்த்தியாக வரும் Morgan Freeman, படத்தில் சில காட்சிகளே வந்தாலும் ஒரு கையைத் தாங்கிக் கொண்டே நடிக்கும் டாக்டர் பாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். விண்டர், தான் டிசைன் செய்த வாலை ரிஜெக்ட் செய்யும் காட்சியில் கண்களின் ஏமாற்றத்தை அருமையாக பிரதிபலிக்கிறார். 


http://www.imdb.com/title/tt1564349/Monday, July 16, 2012

Confidence (2003) - என் பார்வை


இன்னுமொரு ஹீய்ஸ்ட் படம். இந்தப் படத்தின் ஆரம்பத்தில் வரும் கதாநாயகன் Con எப்படி செய்ய வேண்டும் என்று விளக்குவதை வைத்து நான் எழுதிய கதைதான் களவு ஹீய்ஸ்ட் படங்களின் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு வந்ததற்குக் காரணம் இந்தப் படம் தான் என்றுகூட சொல்லலாம்.படம் கான் ஆர்ட்டிஸ்ட்கள் பற்றி என்பதால் நேரடியாக கதைக்கே போய்விடலாம். நான்கு நண்பர்கள், இரண்டு LAPD போலீஸ்காரர்களுடன் சேர்ந்து மற்றவர்களை ஏமாற்றி சம்பாதித்து வருகின்றனர். அப்படி ஒரு முறை ஒரு ஆளை ஏமாற்றி அடித்த பணத்தை செலவு செய்துகொண்டிருக்கும்போது, நான்குபேரில் ஒருவன் அவனது அப்பார்ட்மெண்டில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறான். அப்போதுதான் தாங்கள் கை வைத்தது ஒரு பெரிய டான் - த கிங் (Dustin Hoffman)- கின் ஆட்களில் ஒருவனை என்பதும் அந்தப் பணம் கிங்குக்குப் போய் சேர வேண்டிய பணம் என்பது தெரிய வருகிறது.

சமாதானம் பேச கிங்கை சந்திக்கும் கதாநாயகன் ஜேக் விக் (Ed Burns), கிங்கிடம் அடித்த பணத்தை வட்டியோடு சேர்த்து வேறு யாரிடமாவது திருடிக் கொடுப்பதாக வாக்களிக்கிறான். யாரிடம் திருட வேண்டும் என்பதை த கிங்கே முடிவு செய்து, அவனது எதிரியான பேங்கர் மார்கன் ப்ரைஸ்ஸிடமிருந்து ஐந்து மில்லியன் டாலர்களை அடித்துக் கொடுக்குமாறு கூறுகிறான். ஜேக்கும் ஒத்துக்கொண்டு வருகிறான். கிங் தன்னுடைய ஆள் ஒருவனையும் இவர்களோடு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறான்.

Shill role எடுத்துக்கொள்ளும் நண்பன் இறந்து போனதால் அந்த இடத்தை நிரப்ப, தன் பர்ஸை பிக்பாக்கெட் அடிக்கும் பெண் லிலி (Rachel Weisz, The Mummy நாயகி)யை டீமில் சேர்த்துக் கொள்கிறான். திட்டம் இதுதான். ஜேக், கோர்டோ (Paul Giamatti, Sideways படத்தின் நாயகன்), மைல்ஸ், லிலி மற்றும் கிங்கின் ஆள் லுபஸ் ஐந்து பேரும் ஒரு நிறுவனம் துவக்க ஐடியா வைத்திருப்பதாகவும், அதற்கு ஐந்து மில்லியன் நிதி தேவைப்படுவதாக மோர்கன் ப்ரைஸ் நிறுவனத்தில் லோனுக்கு அப்ளை செய்வது. பின்னர் வங்கியின் விபி ஒருவருக்கு லஞ்சம் கொடுத்து லோனை அப்ரூவ் செய்ய வைத்து பணத்தை ஆஃப்ஷோர் பேங்க் ஒன்றுக்கு அனுப்பி வைப்பது. பின்னர் ஜேக் அந்த ஆஃப்ஷோர் வங்கிக்குப் போய் பணத்தை வித்ட்ரா செய்துகொண்டு ட்ராஃபிக் அதிகமில்லாத ontario ஏர்ப்போர்ட்டில் வந்திறங்குவது என நீட்டாக ஓட்டை உடைசல் இல்லாமல் திட்டம் போடுகின்றனர். இதில் வி.பிக்குக் கொடுக்க வேண்டிய லஞ்சப் பணத்தையும் த கிங்கையே ஸ்பான்ஸர் செய்யச் சொல்கின்றனர்.

இடையில் கந்தர் பூடான் என்ற ஒரு ஸ்பெஷல் ஏஜெண்ட் இந்தக் கூட்டணியின் நண்பர்களான LAPD போலீஸ்காரர்கள் இருவரையும் மடக்கி, தான் நீண்ட நாட்களாக ஜேக்கைப் பிடிக்க பின் தொடர்ந்து வருவதாகவும், ஜேக்குக்கும் இவர்களுக்கும் இருக்கும் நட்பையும் சொல்லி ஜேக்கைப் பிடிக்க தனக்கு உதவி செய்யுமாறு மிரட்டுகிறான். போலீஸ்காரர்களும் வேறு வழியில்லாமல் ஒத்துக் கொள்கின்றனர்.

விபி ஒருவரை மடக்கி லோன் அப்ரூவ் செய்யும் அளவுக்கு திட்டம் வளர்ந்துவிட்ட நிலையில், பூடான் தன்னைத் தொடர்வது தெரிந்ததும், திட்டத்தைக் கைவிட முனைகிறான் ஜேக். இதனால் வரும் வாய்ச்சண்டையில் லிலியைத் திட்டிவிட அவள் கோபித்துக் கொண்டு கிளம்பிவிடுகிறாள். லுபஸ், திட்டத்தைக் கைவிட்டால் கிங் அனைவரையும் டார்ச்சர் செய்து கொன்றுவிடுவான் என்று சொல்லி திட்டத்தைத் தொடரச் செய்கிறான். சின்ன மாற்றத்தோடு திட்டம் தொடர்கிறது.

இடையில் அணியிலிருந்து விலகிய லிலி, மோர்கன் ப்ரைஸைப் பார்த்து இவர்களின் திட்டத்தை விளக்குகிறாள். திட்டம் எப்படி போட்டார்கள், யார் யார் உடந்தை என்பதை முழுதும் தெரிந்துகொண்டு ஜேக்கைக் கொன்று விட்டு வருமாறு ஒரு அடியாளை லிலியுடன் அனுப்புகிறான் மோர்கன்.

பணத்தை எடுத்துக்கொண்டு வரும்போது ஏர்ப்போர்ட்டிலேயே மடக்கி அடித்துவிட வேண்டும் என கிங் திட்டமிடுகிறான். அதே ஏர்ப்போர்ட்டிலேயே வைத்து ஜேக்கைக் கைது செய்ய வேண்டும் என்று பூடான் திட்டப்படி LAPD போலீஸ்காரர்களும் காத்திருக்கிறார்கள். மோர்கன் பிரைஸின் அடியாளோடு ஜேக்கைத் தேடிப் போகிறாள் லிலி.

இறுதியில் என்ன நடந்தது? பணம் யார் கைக்குப் போனது, ஜேக் உயிர்பிழைத்தானா? கிங் திட்டம் பலித்ததா என்பதை கிளைமாக்ஸ் சொல்கிறது.

முதல் காட்சியில் ஜேக் விக் சுடப்பட்டு கீழே கிடப்பதோடு படம் துவங்குகிறது. மோர்கன் பிரைஸின் ஆள் ஜேக்கை நாற்காலியில் கட்டி வைத்து துப்பாக்கி முனையில் முழு கதையையும் சொல்ல வைப்பதாக மொத்த படமும் ஃப்ளாஷ் பேக்காக விரிகிறது. அதிக காட்சிகளில் வராவிட்டாலும் வந்த சில காட்சிகளிலும் தன் தனி முத்திரையைப் பதிக்கிறார் டஸ்டின் ஹாஃப்மன். ADHD இருக்கும் நபராக அட்டகாசமான நடிப்பு. சொல்லும் வகையில் நடித்திருக்கும் இன்னொரு நபர் பால் கியாமட்டி.

Con, ஹீய்ஸ்ட் பட ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்.

இதுவும் ஒரு காதல் கதை - 11

பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 


கதவை யாரோ தட்டும் சத்தம். முதலில் டிவியிலோ என்று நினைத்தேன். அறைக்கதவு தான் என்று உறுதியானதும் எழுந்தேன். கண்ணைக் கசக்கிக் கொண்டு மணி பார்த்தேன். மூன்று மணி. மாலை மூன்று மணிக்கு யார் வருகிறார்கள்? ரீனா அப்படி எல்லாம் டிஸ்டர்ப் செய்யும் பழக்கம் உடையவள் அல்லவே என்று யோசித்துக் கொண்டே கதவைத் திறந்தேன்.

மாலா.

என்னால் என்னையே நம்ப முடியவில்லை. இவள் எப்படி இங்கே? நான் தங்கியிருக்கும் இடம் இவளுக்கு எப்படித் தெரியும்? குழப்பத்தில் அவளை உள்ளே வரக்கூடச் சொல்லவில்லை. அவளாக உள்ளே நுழைந்து என் கையில் பலமாகக் கிள்ளினாள்.

“ஆ...”

“வலிக்குதா? கனவில்லடா. நிஜமாத்தான் வந்திருக்கேன்”

“மா..மாலா.. நீ எப்பிடி இங்க?”

“நல்ல வேளை எதுக்கு வந்தன்னு கேக்கலையே. ஏண்டா நீ என்ன பெரிய இவனா? உன் லவ்வை ஏத்துக்கலைன்னா பேசாமவே இருந்திருவியோ? அஃபிஷியலாக்கூட பேசுறதைக் கொறச்சிட்ட? என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல?”

“அது.. அது.. அதான் சொன்னேனே மாலா. எப்ப உன்னை வெறும் ஃப்ரண்டா மட்டும் ஏத்துக்க எனக்குப் பக்குவம் வருதோ அப்ப பேசுறேன்னு. இன்னும் அந்தப் பக்குவம் வரலை”

“அப்ப நான் போயிரவா??? இவ்வளவு தூரம் உன்னையப் பாக்க வந்திருக்கேன். என்னைய தொரத்தப் போறியா?” அவள் முகம் சூம்பிப் போனது. பார்க்கவே பாவமாய் இருந்தது.

“ச்சேச்சே. அவ்வளவு கல் நெஞ்சக்காரன் இல்லப்பா நான்”

“அதானே பார்த்தேன்” அவளின் ட்ரேட் மார்க்கான தலையைச் சாய்த்து கண்ணைச் சிமிட்டிச் சிரித்தாள். ஐயோ இப்படிக் கொல்கிறாளே. மூன்று மாதமில்லை. மூன்று ஜென்மம் எடுத்தாலும் இவளை மறக்க முடியாது போலிருக்கிறதே.

அறையை சுற்றும் முற்றும் பார்த்தாள். “பரவாயில்லை. சுத்தமாத்தான் வச்சிருக்க. சாப்புட ஏதாவது இருக்கா?” என்றவாறு கட்டிலில் அமர்ந்தாள்.

நானும் அவளை இப்போதுதான் முழுமையாகப் பார்க்கிறேன். முகத்தில் பிரயாணக் களைப்பு அப்பியிருந்தது. ஆகாய வண்ணத்தில் எங்கள் கம்பெனி லோகோ போட்ட டீ ஷர்ட்டும் கரும் நீல வண்ண ஜீன்ஸும் அணிந்திருந்தாள். டிஷர்ட்டின் காலரில் படிந்திருந்த அழுக்கு, பிரயாண உடையை இன்னமும் மாற்றவில்லை என்பதைச் சொல்லியது. ஆனால் பெட்டி எதுவும் எடுத்து வரவில்லையே. ஒருவேளை வெளியேவே வைத்திருக்கிறாளோ?

“என்னடா. பசிக்குதுன்னு சொல்றேன். என்னையவே பார்த்துட்டு இருக்க”

“ஒரு நிமிசம் இரு வர்றேன். ஃபிரிட்ஜைத் திறந்து பார்த்தேன். ஒன்றும் இல்லை. ஷெல்ஃபில் மேகி நூடுல்ஸ் ஒரு பாக்கெட் இருந்தது. “மேகி சாப்புடுறியா”

“சரி”

“டூ மினிட்ஸ்” மேகியை தயாரித்துக் கொண்டு பார்த்தால் என் கட்டில் படுத்திருந்தாள். தூங்கிவிட்டாளா தெரியவில்லை.

”மாலா”

“ம்.. ரெடியாயிருச்சா?” எழுந்து வேறு எதுவும் பேசாமல் என் கையில் இருந்த நூடில்ஸை வாங்கி சாப்பிட்டாள். சாப்பிட்டு விட்டு எழுந்து சின்க்கில் பாத்திரத்தைப் போட்டுவிட்டு கை கழுவி தண்ணீர் குடித்தாள்.

”சரி நீ எப்பிடி இங்கன்னு கேட்டேனே. இன்னும் பதில் சொல்லலையே?”

“இரு சொல்றேன். பாத்ரூம் எங்கருக்கு?”

காட்டினேன். கைப்பையைத் திறந்து, “அங்கிட்டுத் திரும்புடா” என மிரட்டி, திரும்பியதும் எதையே எடுத்துக் கொண்டு, “டவல் எங்க?” என்றாள். துவைத்து வைத்திருந்த டவல் ஒன்றை எடுத்துக் கொடுத்தேன்.

“ஃபைவ் மினிட்ஸ் குளிச்சிட்டு வந்துர்றேன்” என பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.

இதுதான் இவளிடம் பிடிக்காத விசயம். அநியாயத்துக்கு சஸ்பென்ஸ் வைப்பாள். கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்தேன். அவள் பெட்டி எதுவும் இல்லை. ஒன்றும் புரியாமல் உள்ளே வந்து சின்க்கில் இருந்த பாத்திரங்களைக் கழுவி வைத்தேன்.

குளித்து முடித்து ஃப்ரெஷாக வந்தாள். பழைய உடையையே அணிந்திருந்தாள். ”டேய் உன் டி ஷர்ட் எதாவது குடேன். வேற ட்ரெஸ் எடுத்துக்காம வந்துட்டேன்.”

ஷெல்ஃபைக் காட்டினேன். அவளே திறந்து பல உடைகளுக்குப் பின் ஒரு டி ஷர்ட்டை எடுத்துக் கொண்டாள். போட்டிருந்த டிஷர்ட்டை கழட்ட வந்தவள், என்னை ஒரு முறை முறைத்தாள். அர்த்தம் தெரிந்து வெளியே வந்தேன். “உள்ள வா” என்ற குரலுக்கு உள்ளே போனேன். என் டிஷர்ட் அவளுக்கு கொஞ்சம் நீளமாக இருந்தது. மோசமில்லை.

“மேடம் இப்பவாவது சொல்லுவீங்களா?”

“புதன் கிழமை இயர்லி மீட்டிங் இருக்கில்ல”

“ஆமா”

“அதுக்கு ஆஃப்ஷோர்ல இருந்து மேனேஜர், டீம் லீட்ஸ் எல்லாம் வந்திருக்கோம். மாட்யூல் லீடர்ல நான் மட்டும். ஸ்பெஷல் இன்விட்டேஷன் ஃப்ரம் ரீனா”

“ஓ.. என் கிட்ட யாருமே சொல்லலியே”

“ரெண்டு நாள் முன்னாடி தான் எல்லாருக்கும் தெரியும். உன் கிட்ட சொல்ல வேண்டாம்னு நான் தான் நம்ம டீம்ல சொல்லி வச்சிருந்தேன்”

“அடிப்பாவி” எனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க என்னவெல்லாம் செய்திருக்கிறாள். “சரி இங்க எப்பிடி வந்த? நான் இருக்கிற அட்ரஸ் உனக்கு எப்பிடி தெரியும்?”

“வேற யாரு? ரீனா ஏர்ப்போர்ட் வந்திருந்தா ரிசீவ் பண்ண”

“அவ கூட சொல்லலையே என்கிட்ட”

“அவ கிட்டயும் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டேன்”

”இருக்கட்டும். அவளை ஆஃபிஸ் போய் வச்சிக்கிறேன்”

”சரி அதெல்லாம் இருக்கட்டும். எல்லாரும் ஹில்டன்ல தான் ரூம் போட்டிருக்கோம். செக் இன் பண்ணி என் லக்கேஜை அங்க வச்சிட்டு உன்னையப் பாக்க ஓடி வந்துட்டேன். இப்ப என்னைய அங்க கொண்டு போய் விடு”

“எவ்வளவு நாள் இங்க இருப்பீங்க?”

“டூ வீக்ஸ். வர்ற ஃப்ரைடே இல்லாம அடுத்த ஃப்ரைடே திரும்பப் போறோம். எனக்கு எல்லா இடமும் சுத்திக் காட்ட வேண்டியது உன் பொறுப்பு. சேத்து வச்ச காசை எல்லாம் கரைக்கப் போறேன்”

செய்தாலும் செய்வாள். இந்த இரண்டு வாரம் இன்னும் எத்தனை வருடங்களுக்கு என்னை வதைத்துக் கொண்டிருக்கப் போகிறதோ தெரியவில்லை.

நானும் ரெஃப்ரெஷ் செய்து கொண்டு உடை மாற்றி கிளம்பினேன். சப்வே ஸ்டேஷன் வரை நடந்து போய் அவளுக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்து சப்வேயில் ஏறி உட்கார்ந்தோம். அவள் சொந்தக்காரர்கள் 15 பேர் அவளை பெங்களூரு விமான நிலையத்தில் விமானம் ஏற்றிவிட வந்தது, விமானத்தில் பார்த்த படங்கள், சாப்பிட்ட சாப்பாடு, லே ஓவரில் அவள் என்ன செய்தாள் என ஒன்று விடாமல் சொல்லிக்கொண்டே வந்தாள். நான் அவள் வாய் பார்த்துக் கொண்டு மட்டும் வந்தேன்.

ஹில்டன் போய் சேர்ந்ததும் மேனேஜரையும் மற்ற டீம் லீட்களையும் பார்த்து நலம் விசாரித்தேன். பிரயாணக் களைப்பிலும் ஜெட் லேகிலும் எல்லோரும் தூங்கப் போகிறோம் என்று ஆறு மணிக்கெல்லாம் அவரவர் அறைக்குப் போய்விட்டார்கள். மாலாவைப் பார்த்தேன்.

“சரவணபவனுக்குக் கூட்டிட்டுப் போ” என்றாள்.

வெளியே வந்து டாக்ஸி பிடித்தோம். லெக்ஸிங்க்டன் அவென்யூவும் 26வது ஸ்ட்ரீட்டும் சந்திக்கும் முனையில் இருந்தது. நியூயார்க் நகரில் இருக்கும் சரவணபவன் எப்போதும் கூட்டம் அம்மும். காத்திருந்துதான் சாப்பிட வேண்டும். ஆறு மணிக்குத்தான் திறப்பார்கள். ஆனால் ஐந்தரை மணியிலிருந்து வெளியே கூட்டம் காத்திருக்கும். நாங்கள் போன நேரம் வரிசை அதிகமாக இல்லை. ஐந்து நிமிட காத்திருப்பிலேயே அமர இடம் கிடைத்தது. தனிமையாக ஒரு இடம் பிடித்தோம்.

பேரரிடம் ஆர்டர் கொடுத்துவிட்டு, மாலாவின் முகத்தைப் பார்த்தேன்.

“சொல்லு மாலா. என்ன ப்ளான்?”

“ப்ளான் கிடக்குது. உன் கிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லணும்னு தான் உன்னைய இப்பிடி தனியா கூட்டிட்டு வந்தேன்”

“என்ன?”

“நாம முன்னாடி ஒரு தடவை செக்ஸ் டிப்ரைவ்ட் பத்தி பேசியிருக்கோம் நினைவிருக்கா?”

“ஆமா” எதுக்கு இவ இதைப்பத்தி இப்ப இழுக்கிறா?

“I was wrong then"

(தொடரும்)


அடுத்த பாகம் இங்கே

Saturday, July 14, 2012

பரமபதம் - 8ஃப்ளாஷ் பேக் #1
மழை. உலகத்தின் அதிசயங்களில் ஒன்று. சில நேரம் மெல்லிய ஓடை போல சலசலக்கும். சில நேரம் கொட்டுகின்ற பேரருவியாய் ஓங்காரமிடும். இன்றைய மழை இரண்டாம் வகை. இரண்டு நொடி நனைந்தால் தலை முதல் பாதம் வரை ஒரு மிமீ விடாமல் நனைத்துவிடும் பேய் மழை. பெருசிடம் கடைசி வசூலைக் கொடுத்துவிட்டு சுல்தான் டூவீலரில் வீட்டை நோக்கிக் கிளம்பினான். பேய் மழை பெய்து கொண்டிருந்ததால் ரோட்டில் யாருமே இல்லை. தூரத்தில் ஒரு பிச்சைக்காரன் ஏற்கனவே நைந்து போயிருந்த சாக்கை தலையில் ஒப்புக்குக் கவிழ்த்துக்கொண்டு ப்ளாட்ஃபாரத்தில் ஒதுங்கி உட்கார்ந்திருந்தான். சுல்தானின் டூவீலர் பிச்சைக்காரன் உட்கார்ந்திருந்த இடத்தை நெருங்கியபோது வீலில் ஏதோ சிக்க, டூவீலரோடு சேர்ந்து உருண்டான். சிரமப்பட்டு எழுந்து டூவீலரை தூக்கி ஸ்டார்ட் செய்ய முயற்சித்தான். பின்னால் யாரோ வந்து நிற்பதை உணர்ந்து திரும்பினான்.

ஃப்ளாஷ் பேக் #2
பெருசு உடைந்து போயிருந்தான். சுல்தான் போனது, தன் வலது கையையே இழந்தது போல நொந்து போயிருந்தான். சுல்தானின் சவ அடக்கத்திலிருந்து, அவன் குடும்பத்தாருக்கு தேவையான உதவி செய்வது வரை சுரேஷ்தான் முன்னால் இருந்து பார்த்துக்கொண்டான்.

“சுரேஷ், சுல்தான் தான் எனக்கு எல்லாம். நீ அவன் இடத்துல இருந்து வசூல் பணமெல்லாம் சரியா கலெக்ட் பண்ணிட்டு வந்துருவியா?”

“அண்ணே, என்னண்ணே இப்பிடிக் கேக்குறீங்க? நாளையில இருந்து பாருங்க, வசூல் பணம் பைசா குறையாம கொண்டுவந்து சேக்குறேனா இல்லையான்னு”

“சரி. எங்கல்லாம் வியாபாரம் நடக்குதுன்னு தெரியும்ல?”

“நல்லாத் தெரியும்ணே. சுல்தான் பாய் கூட போயிருக்கேனே?”

எப்படியே சுல்தானுக்கு சுரேஷ் நல்ல மாற்றாக இருந்தால் சந்தோசமே என்ற நினைவுடன் முன்னால் இருந்த சூப்பை ஒரே மூச்சில் குடித்தான் பெருசு.

ஃப்ளாஷ் பேக் #3
மாநகர வாழ்க்கை. பல நேரங்களில் மாநரக வாழ்க்கை. என்னதான் உள்கட்டமைப்பும், போக்குவரத்து வசதிகளும் சிறு நகரங்களை விட அதிகப்படியாக இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் விரும்பிய இடத்துக்கு விரும்பிய நேரத்துக்குப் போக முடியாமல் போய்விடுவது சகஜம். காரணம் போக்குவரத்து நெரிசல். அந்தச் சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் இருந்து உட்பிரிந்த சாலை. அவன், சாலையின் சந்திப்பில் தள்ளுவண்டியில் கடலை விற்றுக் கொண்டிருந்தான். வண்டியின் நடுவில் புதைக்கப்பட்டிருந்த அடுப்பின் மீதிருந்த பெரிய வடைச்சட்டியில் வெறும் மணலைப் போட்டு நீளமான கண்கரண்டியால் கிளறிக் கொண்டிருந்தான். அந்த சாலையின் இன்னொரு மூலையின் நின்றிருந்த ஹோண்டா சிட்டி காரின் முன்னிருக்கையில் ஒரே சிகரெட்டை மாறி மாறி இழுத்துக் கொண்டிருந்த சுரேஷும், கார்த்திக்கும் கடலைக்காரனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“கார்த்தி, அவன் பேரு சூரி. அவன் பெருசோட ஆளுன்னு ஒரு பயலுக்கும் தெரியாது. கடலை விக்கிற மாதிரி கஞ்சா விக்கிறது அவனுக்கு சைடு தொழில்தான். சுல்தான் பாய் போனப்பறம், பெருசுக்கு ரைட் ஹேண்ட் இவன் தான். இவனையும் போட்டாத்தான் நான் ரைட் ஹேண்ட் ஆக முடியும்”

“சுல்தானைப் போட்டா மாதிரி இவனைப் போட முடியாது. அப்புறம் பெருசுக்கு டவுட் வந்துரும். அதுக்கொரு வழி இருக்கு”

“என்ன?”

“பொறுத்திருந்து பார்”

ஃப்ளாஷ் பேக் #4
டி.ஐ.ஜி அலுவலகம். அகலமாக முகத்தை மறைக்கும் மீசையுடன் சினிமாவில் பார்க்கும் டிஐஜிகளைப் போல யூனிஃபார்ம் அணிந்திருக்காமல், சாதாரண பேண்ட் சட்டையில் நின்றிருந்தார். வெளிர் நீல நிற சட்டை, அடர் நீல பேண்டில், பல்லவன் டிரைவர் என்று சொன்னால் நம்பிவிடலாம் போல இருந்தார். ஆனால் வாய் திறந்து பேசும்போது, சிங்கம் கர்ஜிப்பதைப் போன்ற ஒரு குரல்.

“மிஸ்டர் கார்த்திக்! என்கவுண்டர் பண்றதே தப்புன்னு மனித உரிமைக்காரனுக கொடி பிடிச்சிட்டுத் திரியிறானுங்க. இதுல நீங்க ஒரு சிவிலியனைக் கொன்னுட்டு ஆக்சிடெண்டலா நடந்துருச்சின்னு சொல்றீங்க?”

“சாரி சார். அவன் அந்தப் பக்கம் ஓடுவான்னு நான் எதிர்பார்க்கவே இல்லை சார். ரெஸ்பான்ஸிபிளிட்டி நானே ஏத்துக்கிறேன் சார்”

“ஓக்கே மிஸ்டர் கார்த்திக். என்கொயரி ஒண்ணு ஃபார்மாலிட்டிக்காக ஏற்பாடு பண்றேன். உங்களை மாதிரி ஒரு அதிகாரி டிபார்ட்மெண்டுக்குத் தேவை அதுனால உங்களை 6 மன்த்ஸ் சஸ்பெண்ட் பண்றேன். ஒரு வெக்கேஷன் மாதிரி கன்சிடர் பண்ணிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு ஃபுல் ஃபோர்ஸோட திரும்பி வாங்க. ஓக்கே?”

“ஓக்கே சார்” டி.ஐ.ஜியின் முன்னால் விறைப்பாக சல்யூட் அடித்தான்.

ஃப்ளாஷ் பேக் #5
“உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. வச்சிரு” என்று சொல்லிவிட்டு ஃபோனை அணைத்த கார்த்திக், மீண்டும் ஒரு நம்பரை அழுத்தினான்.

“ஹலோ சுகுமார்?”

“சொல்லுங்க கார்த்திக். ஃபுல் டீட்டெயில்ஸ் இன்னைக்கு சொல்றேன்னு சொன்னீங்களே?”
“ஆமாம் சுகுமார். பவுடர் ரவி நாளைக்கு பல்க்கா சரக்கு, கிட்டத்தட்ட நூறு கோடி மதிப்புள்ளது, கொண்டு வரப் போறான். கடல் வழியா வந்து எங்கயோ ஒரு ப்ரைவேட் மரைன்ல இவன் கைக்கு வரப் போவுது. அதை எடுத்துட்டு  ஈசிஆர் வழியாத்தான் வரப் போறான். நீங்க நான் சொல்ற இடத்துல சொல்ற டைம்ல நின்னீங்கன்னா வசமா பிடிக்கலாம்.”

“நம்பகமான இன்ஃபர்மேஷனா கார்த்திக்”

“என்னைய நம்புங்க சார். எங்க என்ன டைமுக்குங்கிறதை நாளைக்கு காலையில சொல்றேன். நீங்க ரெடியா இருங்க”

“தேங்க்யூ கார்த்திக். இந்த இன்ஃபர்மேஷன் கரெக்டா இருந்து சரக்கைப் பிடிச்சா மதிப்புல 20% உங்களுக்குக் கிடைக்க ஏற்பாடு பண்றேன்.”

“தேங்க்யூ சார். நாளைக்கு ஃபோன் பண்றேன்” அணைத்து விட்டு, விசிலில் விளையாடு மங்காத்தா மெட்டை ஒலித்துக்கொண்டே நடந்தான்.

ஃப்ளாஷ் பேக் #6
சூட்கேஸைத் திறந்து பார்த்தான். அத்தனையும் நூறு டாலர் நோட்டுகள். பல நோட்டுகள் அழுக்கடைந்து இருந்தன. 10X10X10ஆக 1000 கட்டுகள் அடுக்கப்பட்டிருந்தன. மனதுக்குள் கணக்குப் போட்டான். ஐம்பது கோடி ரூபாய்க்கு சமமான டாலர் மதிப்பு. ஒரு முறை ஆழ முகர்ந்தான். கரன்சியின் மணமும் அதன் மீது படிந்த அழுக்கின் மணமும் அவன் நாசியைத் துளைத்தது.

பெட்டியை மூடினான். அவன் உட்கார்ந்திருந்த டாய்லெட்டையும் பக்கத்து டாய்லெட்டையும் பிரித்திருந்த ப்ளைவுட் சுவற்றை மூன்று முறை தட்டினான். அந்தப் பக்கமிருந்து இரண்டு முறை தட்டிய சத்தம் கேட்டது. எழுந்து கதவைத் திறந்தான். அந்தப் பக்கமும் கதவு திறந்தது. வேறு யாரும் பாத்ரூமுக்குள் இல்லாததை உறுதி செய்து கொண்டு பக்கத்து டாய்லெட்டில் இருந்து வெளியே வந்த கார்த்திக்கிடம் இருந்த சூட்கேஸை கையில் வாங்கிக் கொண்டான். இருவரும் கை முஷ்டியை மடக்கிக் குத்திக் கொண்டனர். மெதுவாக சூட்கேஸைத் தரையில் இழுத்துக் கொண்டு டேபிளை நோக்கி நடந்தான்.

(முற்றும்)

Friday, July 13, 2012

பரமபதம் - 7

இந்தத் தொடர் பல மாதங்களுக்கு முன்பு கூகுள் பஸ்ஸில் எழுதியது. ப்ளாகிலும் பதியத் துவங்கினேன். ஏனோ விட்டுப் போனது. அதனால் என்ன இப்போது பகிர்ந்தால் படிக்க மாட்டீர்களா என்ன? புதிதாகப் படிப்பவர்கள் முதல் ஆறு பாகங்களையும் படித்துவிட்டு வருவது நல்லது.

பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6
இரவு 11:10 மணி
பாருக்குள் பதட்டம் தணிந்து அவரவர் இருக்கைக்குப் போனதும் முத்து திரைக்குப் பின்னாலிருந்து சூட்கேஸை மெதுவாக உருட்டிக் கொண்டு பின் கதவு வழியாக வெளியே வந்தான். பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்த சிவப்பு ஆல்டோவை நெருங்கினான். ஒரு நொடி யோசித்தான். கதவைத் திறக்காமல் பார்க்கிங்கின் இருட்டான இன்னொரு மூலைக்கு சூட்கேஸோடு நகர்ந்தான். பையில் இருந்து செல்ஃபோனை எடுத்து கார்த்திக்கின் எண்ணைத் தேடினான்.
ஒரு மரத்தின் நிழலில் ஒளிந்திருந்த பாலா, முத்து பின்பக்கத்திலிருந்து கையில் சூட்கேஸோடு வருவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். காருக்கு அருகில் வந்துவிட்டு சூட்கேஸை வைக்காமல் நகர்வதைப் பார்த்ததும் சந்தேகம் வந்தது. பூனைப் பாதம் எடுத்து வைத்து முத்துவைப் பின் தொடர்ந்தான்.
முத்து மறுமுனை எடுக்கப்பட்டதும், “ஹலோ கார்த்திக் சார். நான் முத்து பேசுறேன். போலீஸோட வர்றேன்னு சொன்னீங்க? அவங்க எல்லாம் கிளம்பிட்டாங்க. நீங்க வரவே இல்லையே சார்?
இதைக் கேட்ட பாலா சட்டென்று கடுப்பானான். ‘இவன் டபுள் கேம் ஆடுறானாஎன்ற கோபத்தில் இடுப்பில் இருந்து கத்தியை எடுத்து,  பின்னாலிருந்தவாறே முத்துவின் வாயைப் பொத்தினான்.
திடீரென்று யாரோ வாயைப் பொத்திய அதிர்ச்சியில் முத்து செல்ஃபோனைக் கீழே போட்டான். திரும்பி யாரென்றுப் பார்க்கக் கூட நேரம் தராமல் ஒரு கத்தி அவன் கழுத்தை அறுத்தது.
ஆழமான வெட்டு. வெட்டிய வேகத்தில் ரத்தம் முத்துவின் சட்டையை நனைத்தது. முத்துவின் உயிரிழந்த உடலை அருகே மண்டியிருந்த புதரில் தள்ளிவிட்டு சூட்கேஸை எடுத்துக் கொண்டு, ரோட்டுக்கு வந்தான். அங்கே நின்றிருந்த ஒரு ஆட்டோவில் ஏறி, “பெசண்ட் நகர் போப்பாஎன்றான்.

இரவு 11:15 மணி
அந்த இன்னோவா மிதமான வேகத்தில் ஈசிஆரை அளந்து கொண்டிருந்தது. உள்ளே இருந்த பவுடர் ரவியும் அவன் சகாக்களும் அதீத மகிழ்ச்சியில் இருந்தனர்.
“பைசா செலவில்லாம பவுடர் கிடைச்சது இந்த வாட்டிதாம்லே. ஒரு மாசத்துக்கு நம்ம வீட்ல பார்ட்டிதான்
“ஆமா அண்ணாச்சி
“எவளோ மானான்னு ஒருத்தி புதுசா வந்திருக்காளாம்லே? அவளை ஒரு வாரத்துக்கு புக் பண்ணுலே
ரவியின் ஒவ்வொரு வார்த்தையிலும் உற்சாகம் தெறித்தது. அப்போது ரவியின் செல்ஃபோன் ஒலிக்க, “ஹலோ
“அண்ணாச்சி நான் பாலா
“சொல்லுலே
“அண்ணாச்சி அந்த சர்வர் பய போலீஸுக்குத் தகவல் குடுத்துட்டு இருந்தான்
“அய்யோ
“ஆனா அவன் கழுத்தை அறுத்துட்டு, பணப்பெட்டியோட கிளம்பிட்டேன்
“சபாஷ்லே! நீதாம்லே என் சிங்க்குட்டி. நேரா வீட்டுக்கு வந்திருலே
“ஆமா அண்ணாச்சி. ஆட்டோவுல வந்துட்டே இருக்கேன்
“சூப்பர்லேஎன்று ஃபோனை அணைத்துவிட்டு பின்னால் சகாக்களிடம் இந்த விவரத்தைப் பகிர்ந்து கொண்டான். அப்போது நேரெதிரே ஒரு அம்பாஸிடர் இன்னோவாவை மறிப்பது போல வந்தது. டிரைவர் சடன் பிரேக் போட்டான். அம்பாசிடரின் கதவைத் திறந்து நான்கு பேர் இறங்கினர். அனைவரின் கையிலும் துப்பாக்கி.
“ரிவர்ஸ் போலே. நார்க்காடிக்ஸ் கண்ட்ரோல் போர்டுக்காரய்ங்க. இவனுங்கக்கிட்ட மாட்டக்கூடாது. ஓடுலே
“டிரைவர் காரை ரிவர்ஸ் எடுக்க, இன்னொரு வாகனத்தில் முட்டியது. அந்த ஜீப் முகப்பில் NCB என்று எழுதியிருந்த்து.
ரவி இடுப்பிலிருந்த துப்பாக்கியை எடுக்க, ட்ரிக்கரை சுண்டுவதற்குள் முன்னாலிருந்த நால்வரின் துப்பாக்கிகளிலிருந்து தோட்டாக்கள் சரமாரியாக பறந்தது. நால்வரின் உடலும் குண்டுகளால் துளைக்கப்பட்டு அடங்கியதும், அதிகாரிகளில் ஒருவர் இன்னோவாவின் பின் கதவைத் திறந்து, உள்ளே இருந்த பெட்டியைக் காட்டி, “Its there” என்று கூவினார். இன்னொரு அதிகாரி பெட்டியைத் திறந்து, உள்ளே இருந்த பொட்டலங்களில் ஒன்றை உடைத்து பவுடரை சுண்டுவிரலால் தொட்டு நக்கிப் பார்த்து, “கோக்கெயின்என்றார். அத்தனை அதிகாரிகளும் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டனர்.
“சுகுமார், கார்த்திக் சஸ்பெண்ட் ஆகியிருந்தாலும் நமக்கு கரெக்ட் இன்ஃபர்மேஷன் தான் குடுத்துருக்கான்
“அவன் என்ன லஞ்சம் வாங்கியா சஸ்பெண்ட் ஆனான்? என்கவுண்டரப்போ சிவிலியன் ஒருத்தனை சுட்டுட்டான்னு தானே சஸ்பெண்ட் பண்ணாங்க?சுகுமார்.
“யா யா. சரி அடுத்து என்ன?என்றார் இன்னொரு அதிகாரி.
சுகுமார் ரவியின் கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து இரண்டு அதிகாரிகளை தோள் பட்டையில் சுட்டார். ரவியின் கையிலேயே துப்பாக்கியை இருத்திவிட்டு ஆம்புலன்ஸை அழைத்தார்.
இரவு 11:45 மணி
ஹம்மர் திருவான்மியூரை நெருங்கிக் கொண்டிருந்தது. திருவான்மியூர் செக்போஸ்ட் நெருங்கவே குறுக்கே போடப்பட்டிருந்த தடையைப் பார்த்து காரை ஸ்லோ செய்தார் கணேசன். “சுரேஷ்! போலீஸ்என்றார்.
“நிறுத்துங்கண்ணே. பெருசைக் காட்டி தப்பிச்சிரலாம். தேவையில்லாம பிரச்சனையில மாட்டிக்க வேண்டாம்சுரேஷ் சொல்லவும் காரை நிறுத்தினார்.
எஸ்.ஐ ஒருவர் வந்து, “வண்டி எங்கருந்து வருது?என்றார்.
கணேசனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த தடியன், “சார் ஈசிஆர்ல ஹைடெக் பார்ல இருந்து வர்றோம். எங்க கூட வந்தவருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருச்சி. அவரை ஹாஸ்பிட்டல்ல சேக்கணும்என்றான்.
“பார்ல இருந்தா? எறங்கு. ஊதிக்காட்டுஎன்றார் கணேசனைப் பார்த்து. கணேசன் கீழே இறங்காமல், “சார் கூட வந்தவருக்கு உயிருக்கு ஆபத்துன்னு சொல்றோம். நீங்க என்ன? நாங்க யாரு தெரியும்ல? பெருசோட ஆளுங்க
“பெருசா? என்றவாறு பின்னால் பார்த்தார். கான்ஸ்டபிள் ஒருவர் கதவைத் திறந்து பார்க்க, பெருசு தடியனின் மடியில் தலை சாய்த்துக் கிடந்தான். கான்ஸ்டபிள் மூக்குக்கடியில் கை வைத்துப் பார்த்துவிட்டு, “உசுரு போயிருச்சி போலயே சார்என்றார்.
நால்வரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாயினர். தடியன், வேகமாக பெருசுவின் நெஞ்சில் காதை வைத்தான், இதயம் துடிக்கவில்லை. “சார் வேகமா ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனா காப்பாத்திரலாம் சார். ப்ளீஸ் சார்என்றான்.
“பெருசே போயிட்டான். அப்புறம் எந்த மசுருக்குப் பயப்படணும்? இந்தப் பக்கமா வெடிமருந்து கடத்திட்டு வர்றதா இன்ஃபர்மேஷன் வந்திருக்கு. நாங்க காரை செக் பண்ணனும்என்றார் எஸ்.ஐ பிடிவாதமாய்.
தடியனும், கணேசனும் போலீஸோடு வாக்குவாதம் செய்யத் துவங்கினர். இதுவரை பின்னால் மறைந்து ஒளிந்திருந்த சுரேஷ் தலையைத் தூக்கி பின் கதவுக்கு அருகே நின்றிருந்த கான்ஸ்டபிளைச் சுட்டான். கான்ஸ்டபிள் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே விழவே, எஸ்.ஐ வேகமாக இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து முன் சீட்டில் இருந்த தடியனைச் சுட்டார். பின் சீட்டிலிருந்த தடியனும் துப்பாக்கியை எடுத்து எஸ்.ஐயைச் சுட அவர் இடது கையில் குண்டு பாய்ந்தது. துப்பாக்கியைக் கீழே விடாமல் பின் சீட்டில் இருந்த தடியனை சரியாக நெற்றிப் பொட்டில் சுட்டார் எஸ்.ஐ. துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் செக்போஸ்டில் இருந்த கான்ஸ்டபிள் ஓடி வந்தார். கையில் இருந்த ஸ்டென் கன்னால் காரை நோக்கி சரமாரியாகச் சுட ஆரம்பித்தார். டிரைவர் சீட்டில் உட்கார்ந்திருந்த கணேசன் உடம்பெங்கும் குண்டுகள் சல்லடை போட சீட்டிலேயே அவர் உடல் துடித்து அடங்கியது.
ஸ்டென் கன் வைத்திருந்த கான்ஸ்டபிள் விடாமல் ஹம்மரை குண்டுகளால் துளைத்துக் கொண்டிருந்தார். சுரேஷின் தலைக்கு மேல் பல குண்டுகள் சீறிப்பாய்ந்து கொண்டிருக்க, இடத்தை விட்டு அசையாமல் படுத்துக் கொண்டான்.

இரவு 11:50 மணி
ஆட்டோவில் வந்து கொண்டிருந்த பாலா, தூரத்தில் இன்னோவா நிற்பதையும் அதன் அருகே இரண்டு வாகனங்களும் பார்த்ததும், பதட்டமானான். ‘அண்ணாச்சி இன்னோவால்ல அதுஎன்ற யோசனையுடன், “டிரைவர் வண்டிய அந்த இன்னோவா பக்கத்துல நிறுத்து என்றான். ஆட்டோ நின்றதும், கையில் துப்பாக்கிகளோடு நின்றிருந்த என்.சி.பி அதிகாரிகளையும், இறந்து கிடந்த ரவியின் ஆட்களின் உடல்களையும் பார்த்த பாலா இறங்கி ஓட எத்தனித்தான். தாவிப் பிடித்த ஒரு அதிகாரி அவனைப் பிடித்து, “ஏண்டா ஓடுறஎன்று கைகளை முதுகுக்குப் பின்னால் வளைத்துப் பிடித்தார். “நீ ரவியோட ஆளு பாலா தான?என்றவாறு சுகுமார் ஆட்டோவுக்குள் இருந்த பெட்டியைத் திறந்து பார்த்தார். உள்ளே கஞ்சாப் பொட்டலங்கள் பெட்டியை நிறைத்திருந்தன.
இரவு 11:50 மணி
ரோட்டில் பறந்து வந்த ஹோண்டா சிட்டியில் இருந்து இறங்கிய கார்த்திக்கின் கையில் முளைத்திருந்த துப்பாக்கி இரண்டு முறை வெடித்தது. முதல் குண்டுக்கு எஸ்.ஐயும், இரண்டாவது குண்டுக்கு ஸ்டென் கன் வைத்திருந்த கான்ஸ்டபிளும் மடங்கி விழுந்தனர். ஸ்டென் கன் சுடுவது நின்றதும், தலையை உயர்த்திய சுரேஷ் எஸ்.ஐயும் கான்ஸ்டபிளும் செத்துக் கிடந்ததைப் பார்த்தான். துப்பாக்கியை நீட்டிக்கொண்டே ஹம்மரின் கதவைத் திறந்து இறங்கியவன், கையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்த கார்த்திக்கைப் பார்த்தான். இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேராகப் பார்த்ததும் இரண்டு நொடி தாமதித்துவிட்டு கடகடவென சிரிக்கத் துவங்கினர். துப்பாக்கிகளை இடுப்பில் சொருகிக் கொண்டு இருவரும் கட்டியணைத்துக் கொண்டனர்.
“பெட்டி?என்றான் சுரேஷ் கேள்வியாய்.
“இங்கஎன்று ஹோண்டா சிட்டியின் டிக்கியைச் சுட்டினான். இருவரும் சிரித்துக் கொண்டே காரில் ஏறினர்.

(தொடரும்)

இங்கேயே முற்றும் போட்டுவிடலாம். ஆனால் நிரப்பப்படாமலிருக்கும் புதிரின் சில துண்டுகளை நிரப்பும் பொருட்டு அடுத்த பாகம் இங்கே

Thursday, July 12, 2012

நெடுஞ்சாலை (சிறுகதை)


M24 ன் டெலஸ்கோப்பிக் சைட்டில் இருந்து கண்ணை எடுத்தேன். ட்ரிக்கரில் இருந்து விரலை எடுத்து கண்ணைக் கசக்கி விட்டுக் கொண்டேன். இடது கையைத் திருப்பி மணி பார்த்தேன். 3:00. இன்னும் ஒரு மணி நேரம். அதன் பிறகு மைக் வந்து டேக் ஓவர் செய்து கொள்வான். அதே வாட்சில் தெரிந்த தேதி 23 என்றது. இன்னும் ஏழே நாள். முப்பதாம் தேதி ஐராக்கில் இருந்து கிளம்பிவிடலாம். ஐந்து வருடங்களுக்குப் பிறகு ரஷ். மிஷேலும் ஜானும் என் வரவிற்காக ஏர்போர்ட்டிற்கே வந்துவிடுவார்கள்.கண்ணை மீண்டும் டெலஸ்கோப்பில் பொருத்தினேன். ஐந்து வருடங்களாக இதுதான் பிழைப்பு. நான் ஜான். அமெரிக்கப் படையின் 25th infantry divisionன் ஸ்னைப்பர். 2006 அக்டோபரில் ஐராக்கில் டிப்ளாய் செய்யப்பட்டேன். மூன்று வருடங்களில் திரும்பிப் போயிருக்க வேண்டியவன், ஸ்டீவ் அவசரமாக ஊருக்குப் போகவேண்டும் என்று கேட்டதால் அவனது இரண்டு வருடங்களையும் சேர்த்து நான் தீர்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த கேம்பிலிருந்து யு.எஸ்ஸுக்குப் பேச வசதியில்லை என்பதால் மிஷேலிடமும் ஜானிடமும் பேசி 11 மாதங்களாகிவிட்டது. 330 நாட்கள் பொறுத்தாகிவிட்டது. இன்னும் ஏழோ எட்டோ நாட்கள் தான்.

சிறுவனாக இருந்த போது நடந்த கல்ஃப் வாரில் சண்டையிட்டு திரும்பிய அங்கிள் பில்லுக்கு லூயிஸ்டன் ஊரே திரண்டு கொடுத்த வரவேற்பு இன்னமும் கண் முன்னால் நிற்கிறது. மரத்தில் ஏறி பேனர் கட்டியது, அனைவருக்கும் சாக்லேட் கொடுத்தது. ஏர்ப்போர்ட்டில் அவர் வெளியே வந்ததும் ஆண்ட் மேரியை கட்டியணைத்தது எல்லாம் நேற்று நடந்தது போல இருக்கிறது. அங்கிள் பில் எங்கள் ஊரின் ஹீரோ. அவரைத் தொடர்ந்தே நான் ஸ்டீவ் எல்லாம் ராணுவத்தில் சேர்ந்தோம். குறி தவறாமல் சுடும் திறமை இருந்ததால் ஸ்நைப்பரானேன். ஸ்டீவும்.

மிஷேலைச் சந்தித்தது  நார்த் கரோலினா ட்ரெயினிங் கேம்பில் இருந்தபோது. ஆர்மி ஜாயிண்டின் ரெஸ்டாரண்டில் வெயிட்டராக வேலை பார்த்து வந்தாள்.  தொடர்ந்த டேட்டிங்கில் பிடித்துப் போய் விட மூன்றாவது மாதத்தில் ஜான் பிறந்தான். எங்கள் குடும்பத்தில் முதல் குழந்தைக்கு ஜான் என்றே பெயரிடுவது வழக்கம். ஜான் பிறந்ததும் ரிசர்வ் பிரிவில் மாற்றல் கேட்டு ரஷ்ஷுக்கு வந்தோம். மிஷேல் அங்கேயே ஒரு ரெஸ்டாரண்ட்டில் வேலைக்குப் போனாள். நான் ஸ்ட்ராங் ஹாஸ்பிட்டலில் செக்யூரிட்டி.

2001ல் ஆஃப்கனுக்கு டிப்ளாய் செய்யப்பட்டு அங்கே இரண்டு வருடங்கள். அதன் பிறகு வந்த நான்கு வருடங்கள் மிகவும் இனிமையாகக் கழிந்தன. தன் குழந்தைகளின் வளர்ச்சியை அருகில் இருந்து பார்ப்பதை விட ஒரு தகப்பனுக்கு வேறு என்ன மகிழ்ச்சி. மிஷேல் ஏனோ இன்னொரு குழந்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். ஜான் இப்போது மிடில் ஸ்கூலில் இருப்பான். பர்கர் மிடில் ஸ்கூலாகத்தான் இருக்கும். நன்றாகப் படிப்பதாகக் கடைசியாகப் பேசும்போது சொன்னான்.

வயர்லெஸ் கரகரத்தது. “ஹாக்கிங் ஐ. தூரத்தில் எதோ ஒரு வாகனம் வருகிறது. ராணுவ வாகனம் போலத் தெரியவில்லை. அதன் மீது ஒரு கண் வைத்துக் கொள்ளவும்”

”ரோஜர் தட்” என்று பாதையில் கவனமானேன். தூரத்தில் ஒரு ஜீப் வழக்கத்தை விட வேகமாக வந்தது. முழுதும் மூடப்பட்டிருந்த அதில் யார் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. என் ஃபயரிங் ரேஞ்சுக்குள் ஜீப் வரவும், என் பார்வைக்கு நன்றாகத் தெரிந்த முன் சக்கரத்தை நோக்கி சுட்டேன்.

டயர் சுடப்பட்ட ஜீப் ரோட்டை விட்டு இறங்கியது. ஜீப்பை ஓட்டியவன் டயர் சுடப்படும் என்பதை எதிர்பார்த்தே வந்திருக்க வேண்டும். மிகவும் திறமையாக டயர் இல்லாத ஜீப்பை மீண்டும் ரோட்டில் ஏற்றி கேம்பை நோக்கி வந்தான்.

இப்போது டிரைவரின் இருக்கையை குறி வைத்து இரண்டு முறை சுட்டேன். ஜீப்பின் வேகம் குறைந்ததாகத் தெரியவில்லை. அடுத்த கட்டமாக FGM-148 anti-tank மிசைலை அடித்தான் டேவ். ஜீப் எதிர்பார்த்ததை விட சத்தமாக வெடித்துச் சிதறியது. என் இடது கையில் எதோ குத்தியது, குத்திய அடுத்த விநாடி வலி உயிர் போனது. என்ன என்று பார்த்தேன். ஆணிகள். Nail Bomb. அடுத்த நொடி மயங்கினேன்.

************

விழித்த போது மெடிக்கல் டெண்டில் இருந்தேன். பக்கத்து படுக்கையில் ப்ரூனோ. கண்ணில் கட்டுப் போட்டுப் படுத்திருந்தான்.

“முழிச்சிட்டியா?” சிரித்த படி உள்ளே வந்தான் மைக்.

“என்னாச்சி”

Insurgents. ஜீப் முழுக்க நெயில் பாம் ஏத்திட்டு வந்திருக்கான். ராக்கெட் லாஞ்சர் அடிச்சதும் வெடிச்சி சிதறிடுச்சி. உனக்கு கையிலதான் காயம். ப்ரூனோவுக்கு கண் போயிருச்சி.”

“வேற யாருக்கும்?”

“எல்லாருக்கும் சின்னச் சின்ன காயம் தான். உயிரிழப்பு எதுவும் இல்லை.”

“தேங்க் காட்”

மருந்தின் ஆதிக்கம் குறைந்திருக்க வேண்டும். இடது கையில் வலி எடுக்கத் துவங்க, கண்ணை மூடிக் கொண்டேன்.

கைக் காயம் ஆறியிருந்தது. யு.எஸ் கிளம்ப வேண்டிய நேரமும் வந்தது. அங்கே போய் தெரபியை தொடர வேண்டும் என்று டாக்டர் சொன்ன இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் காதில் விழுந்து கொண்டிருந்தாலும், மனம் ஏரோபிளேன் ஏறாமலே ரஷ் போய்ச் சேர்ந்திருந்தது.

பாக்தாத் வந்து சேர்ந்ததும், மூன்று முறை மிஷேலுக்கு அழைத்து விட்டேன். மூன்று முறையும் அவளைப் பிடிக்க முடியவில்லை. வாய்ஸ் மெசேஜ் விட்டு விட்டு, இதோ விமானத்தில் உட்கார்ந்து விட்டேன். 12 மணி நேரத்தில் பால்டிமோர் போய்விடும். அங்கிருந்து ராச்சஸ்டர் ஒன்றரை மணி நேரம்தான். பால்டிமோரில் இறங்கியதும் மிஷேலுக்கு தொடர்பு கொள்ள வேண்டும். சீட்டுக்கு முன்னால் இருந்த டிவியில் எதோ ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது.  அதில் ஆர்வமில்லை. கண்ணை மூடித் தூங்கினேன்.

பால்டிமோரில் இறங்கியதும் அடுத்த ஃப்ளைட்டுக்கு 30 நிமிடம் மட்டுமே இருந்ததைப் பார்த்தேன். வேக வேகமாக ஓடினேன். எதிரில் வந்தவர்கள் சொன்ன வெல்கம் ஹோம் காதில் விழுந்தும் விழாமல் ஓடி செக்யூரிட்டி செக்கின்னில் நின்றேன். என்னைப் பார்த்த்தும் வரிசையில் இருந்தவர்கள் என்னை முன்னால் போகச் சொன்னார்கள். மறக்காமல் வெல்கம் ஹோமும்.

செக்யூரிட்டி செக்கின் முடித்து கேட்டுக்கு ஓடினேன். எனக்காகவே காத்திருந்த மாதிரி நான் விமானத்தினுள் நுழைந்ததும் கேட் மூடப்பட்டது. அருகில் உட்கார்ந்திருந்தவரிடம் “ஹலோ” சொல்லிவிட்டு உட்கார்ந்தேன்.

மிஷேல் மெசேஜ் பார்த்திருப்பாள். ஏர்ப்போர்ட்டில் பேனர் கட்டியிருப்பார்களா? அங்கிள் பில்லுக்கு “Welcome Home our Hometown Hero!” என்று கட்டிய பேனர் கண்களுக்கு முன் ஆடியது. பலூன்களாவது வாங்கி வந்திருப்பாள். ஒரு பொக்கே. இன்று பள்ளிக்கு வெக்கேஷன் போட்டுவிட்டு ஜான், பலூன்களைக் கையில் வைத்துக் கொண்டு வாய் நிறைய பல்லோடு நிற்பான். நினைவுகள் மனதில் இனிமையாக ஓட அந்த சந்தோசம் என் முகத்தில் சிரிப்பாக பூத்தது.

பக்கத்தில் உட்கார்ந்திருந்தவரும் அர்த்தத்துடன் என்னைப் பார்த்துச் சிரித்தார்.

விமானம் ராச்சஸ்டரில் தரை இறங்கியது. எல்லோருக்கும் முன்னால் இறங்கி வெளியே ஓடி வந்தேன். விசிட்டர்ஸ் லவுஞ்சில் ஜானின் முகத்தையும், மிஷேலின் முகத்தையும் தேடினேன். காணவில்லை. பலூன் பேனர் பொக்கே. எதுவுமே கண்ணுக்குத் தெரியவில்லை. பேனரை எதிர்பார்த்து வந்த எனக்கு கோபம் தலைக்கு மேல் பேனர் கட்டியது. பேக்கேஜ் கலெக்ட் செய்தேன்.

“டாக்ஸி” அருகில் வந்து நின்ற டாக்ஸியில் பேக்கேஜைப் போட்டுவிட்டு சாய்ந்து உட்கார்ந்தேன்.

“எங்க போகணும்?”

எங்கே போவது? மிஷேலுக்கு என்ன ஆனது? ஏன் வரவில்லை. குழப்பத்துடன் டாக்ஸியை அப்பார்ட்மெண்டுக்கு விடச் சொன்னேன். டாக்ஸியை கட் செய்யாமல், அக்சஸ் போர்டில் அப்பார்ட்மெண்ட் நம்பருக்கு எதிரில் இருந்த பஸ்ஸரை அழுத்தினேன். மூன்று முறை அழுத்தியும் கதவு திறக்கவில்லை. ஷிட். கதவை உதைத்து விட்டு வெளியே வந்தேன்.

அடுத்தது என்ன?? மிஷேலை அவள் வேலை செய்யும் ரெஸ்டாரண்டில் போய் பார்க்கலாமா? வேண்டாம். இருக்கும் கோபத்துக்கு பொது இடம் என்று பார்க்காமல் எதையாவது செய்துவிட்டால் எனக்குத்தான் அசிங்கம். பேசாமல்  ஜானை ஸ்கூலுக்குப் போய் பார்த்தால் என்ன?

“பர்கர் மிடில் ஸ்கூலுக்குப் போ” என்று டாக்ஸி டிரைவருக்கு உத்தரவிட்டுவிட்டு ஜன்னல் வழி வெளியே பார்த்தேன். என் மனதின் வெறுமையை குளிர்கால மரங்கள் பிரதிபலித்தன.

வரவேற்பறையில் கம்ப்யூட்டருக்குப் பின்னால் உட்கார்ந்திருந்தவளிடம், “ஜான் ஸ்டாக்கர், செவன்த் க்ரேட்” என்றேன். எதையோ தட்டிப் பார்த்துவிட்டு, “அவன் வேறு பள்ளிக்கு மாற்றலாகிப் போய்விட்டானே” என்றாள்.

எனக்குள் சுடுநீரில் வைத்த தெர்மாமீட்டரின் பாதரச மட்டத்தைப் போல பதட்டம் அதிகமாகியது. “எந்தப் பள்ளி?”

“ஸ்ப்ரை மிடில் ஸ்கூல்”

“அது வெப்ஸ்டர்ல இருக்கே?”

“அதே ஸ்கூல்தான் மிஸ்டர்.”

What the fuck? யாரைக் கேட்டு ஜானை வேறு பள்ளிக்கு மாற்றினாள்? ரஷ்ஷில் இருப்பவன் எதற்காக வெப்ஸ்டர் ஸ்கூலில் சேர வேண்டும்? என்ன விளையாட்டு இது? எனக்கு ஃபோன் செய்யத்தான் முடியாது. ஒரு லெட்டர் போட்டிருக்கலாமே? என் கோபத்தை டாக்ஸியின் கதவில் காட்டினேன். ஸ்ப்ரை ஸ்கூலுக்கு விடச் சொல்லி அமர்ந்தேன்.

ஸ்ப்ரை ஸ்கூல். வரவேற்பறையில் கேட்டதில் ஜான் அங்கே படிப்பது உறுதியானது. அவனை வரச்சொல்லிவிட்டு, அங்கே இருந்த சோஃபாவில் உட்கார்ந்தேன். இப்போது கோபம் ஒரு மூலைக்குப் போய் 5 வருடம் பிரிச்த மகனை சந்திக்கப் போகும் உற்சாகம் முகத்தின் மேல் உட்கார்ந்த்து. ஜான் வந்தான். “டாடீ” என்று ஓடி வந்து கட்டிக் கொள்வான் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். வந்து எதிரில் நின்று “ஹாய் டாட்” என்றான். உற்சாகம் வடிந்த நிலையில் அவனைப் பார்த்தேன்.

வளர்ந்து விட்டான். 13 வயதாகிவிட்டது. டீனேஜர். இப்போதும் ஓடிவந்து கட்டிக்கொள்வான் என்று எதிர்பார்த்தது என் தவறு என்று சமாதானம் சொல்லிக்கொண்டு, “எப்படி இருக்கிறாய்?” என்றேன்.

“எப்ப வந்தீங்க டாட்?” சோஃபாவில் என் அருகே அமர்ந்தான்.

“இப்போதான் ஜான். ஏர்ப்போர்டில் இறங்கி பர்கர் மிடில் ஸ்கூல் போனேன். நீ இங்கே ட்ரான்ஸ்ஃபராகி வந்துட்டதா சொன்னாங்க. அதான் இங்க வந்தேன். ஏன் ஸ்கூல் மாத்தினீங்க?”

“நீங்க ஏன்ப்பா வரப்போறீங்கன்னு சொல்லலை?”

“நான் அம்மாவுக்கு கால் பண்ணினேன். வாய்ஸ் மெசேஜ் போனது. வாய்ஸ் மெயில் விட்டேனே? அம்மா சொல்லலையா?” கோபம், அதிர்ச்சி. ஆச்சரியம். குழப்பம். என் மனம் என்ன நிலையில் இருக்கிறது என்பதை என்னாலே உணர முடியவில்லை.

“சொல்லலை. சொல்லவும் மாட்டாங்க”

“என்ன சொல்ற?”

“அம்மா இப்போ ஜோ கூட இருக்காங்க. She is pregnant too”

ஒரு டீனேஜ் மகனிடம் இருந்து தன் குடும்ப வாழ்க்கையின் இன்றைய நிலையைத் தெரிந்து கொள்ளும் முதல் தகப்பன் நானாகத்தான் இருப்பேன். உடைந்து போனேன். என் முகம் என் மனநிலையைப் பிரதிபலித்திருக்க வேண்டும்.  மடியில் இருந்த என் கையின் மீது அவன் கையை வைத்து அழுத்தினான். “டாட். நீங்க எப்பிடி ஃபீல் பண்றீங்கன்னு என்னால புரிஞ்சிக்க முடியுது”

”நோ சன். உன்னால புரிஞ்சிக்க முடியாது. எனி வே, நான் மேரியாட்ல தங்கப் போறேன். நாளைக்கு லீவ் தானே? என்னைப் பார்க்க ஹோட்டலுக்கு வர்றியா?”

“சரிப்பா”

எப்படி ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தேன் என்று தெரியவில்லை. அறையில் சென்று பெட்டியை எறிந்துவிட்டு நேராக ஓட்டலின் பாரில் சென்று விழுந்தேன்.

You have had enough sir. Please go to your room” என்று பார் டெண்டர் அடுத்த லார்ஜை மறுத்தான்.

“நீ யாருடா மறுக்க” என்று எம்பி அவன் சட்டையைப் பிடித்தேன். என் ஆத்திரத்தை யார் மீதாவது காட்ட வேண்டும் என்று வெறி கிளம்பியது. பக்கத்தில் உட்கார்ந்திருந்தவன் குடித்துவிட்டு மேஜை மீது வைத்திருந்த பியர் பாட்டிலை எடுத்து அவன் தலையில் உடைக்க ஓங்கினேன். பின்னால் இருந்து பவுன்சர்ஸ் இருவர் என்னைப் பிடித்து இழுத்தனர். அதீத போதையிலும் பார் டென்டரை அடிக்க எழுந்து குதிகாலால் எம்பி நின்றதாலும் பேலன்ஸ் தவறி கீழே விழுந்தேன். என் சட்டைக் காலரைப் பிடித்து எழுப்பி நிறுத்தினான் ஒருவன். கிட்டத்தட்ட என் மூக்கின் மேல் அவன் மூக்கை வைத்து, “சார். நீங்கள் உங்க ரூமுக்குப் போறதுதான் உங்களுக்கு நல்லது. இல்லைன்னா போலீஸ்ல பிடிச்சிக் குடுக்க வேண்டியிருக்கும்”

“உன் பேரென்ன?” என்றேன்.

“ஜோ” என்றான். என் கையில் இருந்த பியர் பாட்டிலை அவன் தலையில் இறக்கினேன்.

அந்த பத்துக்குப் பத்து அறையின் தரையில் மல்லாக்கக் கிடந்தேன்.  அறையின் ஒரு பக்கம் கான்க்ரீட் சுவரும் மூன்று பக்கங்களிலும் இரும்புக் கம்பிகளாலான சுவர்களும் இருந்தன. சுவற்றை ஒட்டி ஒரு பெஞ்ச் போடப்பட்டு இருந்த்து. அந்த பெஞ்சின் குஷன் அழுந்தி மரத்தோடு ஒட்டியிருக்கும் அளவுக்கு கனமான ஒருவன் அதன் மீது படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான்ணவன் குறட்டைச் சத்தம் கம்பிகளில் பட்டு எதிரொலித்தது. கம்பிகளுக்கு அந்தப் பக்கம் யுனிஃபார்ம் அணிந்த ரிட்டயராகும் வயதிலிருந்த் அதிகாரி ஒருவர் கால்களைத் தூக்கி மேஜை மீது போட்டுக் கொண்டு போர்ட்டபிள் டிவியில் ஓடும் பேஸ்கட் பாலில் லயித்திருந்தார்.

என்னைத் தவிர்த்து உலகமே கவலை இல்லாமல் இருக்கிறது. எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும்? இதோ இந்த போலீஸ்காரனை விட அதிக ஆபத்தான பணியில் நாட்டைக் காப்பாற்றிவிட்டு வந்திருக்கிறேன். இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட…

அந்த நெயில் பாம் என் நெஞ்சில் வெடித்திருக்கலாம். மிஷேல் என் நினைவாக அமெரிக்கக் கொடியையாவது வைத்துக் கொண்டிருந்திருப்பாள். எல்லாம் போச்சு. நாட்டுக்காக பாலைவனத்தில் சூட்டிலும், குளிரிலும் போராளிகளை வேட்டையாடியது இதற்குத் தானா? இதுதான் மிஞ்சும் என்று தெரிந்தால் ஒரு பயலும் ராணுவத்துக்குப் போக மாட்டானே. ஏண்டா எனக்கு மட்டும் இது நடக்குது?

கடைசி வரி வாயை விட்டு வெளியே தெரித்து விட்டது, சற்று அதிகப் படியாகவே. படுத்துக் கொன்டிருந்த தடியன் கண்களைத் திறந்து தலையை மட்டும் திருப்பி என்னைப் பார்த்தான். போலிஸ்காரர் டிவியின் சத்தத்தைக் குறைத்துவிட்டு எழுந்து லாக்கப் நோக்கி வந்தார்.
“மிஸ்டர் ஜான். ஹோட்டல் மேனேஜர் உம்மேல கேஸ் எதும் போட வேண்டாம். நைட் மட்டும் லாக்கப்ல வச்சிருந்து காலைல விடச் சொல்லிட்டாங்க. இல்லைன்னா மூணு வருசம் ஜெயில்ல கிடக்க வேண்டியிருந்திருக்கும். ஆமா ,உனக்கென்ன பிரச்சனை? கேர்ள் ஃப்ரன்ட் விட்டுட்டுப் போயிட்டாளா?”

“இல்லை”

“வேற என்ன? வேலை போயிருச்சா?”

“இல்லை”

“இது ரெண்டுக்கு தானப்பா இந்த வயசுப் பசங்க முதலிடம் குடுக்குறீங்க? அப்பா அம்மா மகன் மகள் எல்லாம் அதுக்கப்புறம் தானே?” திரும்பி நாற்காலியை நோக்கி நடக்கத் துவங்கினார்.

நான் அவர் முதுகையே கூர்மையாகப் பார்த்தேன். “உன் மனைவி நீ வேலைக்கு வெளியூர் போயிருக்கிற சமயம் இன்னொருத்தன் கூடப் போயிட்டா இதைத்தான் சொல்லுவியா? இடுப்புல இருக்கிற துப்பாக்கியால சுட்டுப் போட்டுர மாட்டியா?”

போய்க் கொண்டிருந்தவர் திரும்பினார். “அதான் உன் பிரச்சனையா? என்னாச்சி. என் கிட்ட சொல்லாம்னா சொல்லு.”

எனக்கும் யாரிடமாவது சொல்ல வேண்டும் போல இருந்தது. லாக்கப் கதவைத் திறந்து இரண்டு நாற்காலிகளை உள்ளே கொண்டு வந்து போட்டார். அவளைச் சந்தித்ததில் ஆரம்பித்து, நேற்று இரவு பாரில் நடந்த்து வரை சொல்லி முடிக்கும் போது அவரது கைகளில் முகத்தைப் புதைத்து அழுது கொண்டிருந்தேன்.

அழுது அடங்கும் வரை காத்திருந்தார். “இப்ப உனக்கு உன் மனைவி, அவளோட புது பாய் ஃப்ரண்ட் இவங்க மேல கோபமா, இல்லை உனக்கு ஏன் இப்பிடி நடக்குதுங்கிற சுயபச்சாதாபமா? ரெண்டுல எது?”

பதில் தெரியவில்லை. சுயபச்சாதாபம் தான் கோபமாக வெளிப்படுகிறது போல. அவரிடம் அதையே சொன்னேன்.

“நீ சின்ன வயசுல ஆசையா வச்சிருந்த பொருள் எதாவது இருக்கா?”

யோசித்தேன். ஸ்விஸ் வாட்ச். “எங்கப்பா எனக்கு முதல் முதலா யுரோப் டூர் போயிட்டு வந்தப்ப  வாங்கிட்டு வந்த ஸ்விஸ் ஆர்மி வாட்ச் ஒண்ணு ரொம்ப நாள் வச்சிருந்தேன்”

“இப்ப எங்க அது?”

“அது.. அது.. ஸ்ட்ராப் பிஞ்சிருச்சி. கொஞ்ச நாள் பைக்குள்ளயே வச்சிட்டு திரிஞ்சேன். அப்புறம் கைல கட்டுற மாதிரி வேற ஒரு வாட்ச் வாங்கினதும் அதத் தூக்கிப் போட்டுட்டேன்.”

“ஏன்?”

“கைல கட்ட முடியலை”

“கைல கட்ட முடியலைன்ன என்ன? பைல வச்சிருக்கலாமே?”

அந்தாள் முட்டாள்தனமாகப் பேசுவது போல தோன்றியது. அவரை லேசாக முறைத்தேன். “கைல கட்டியிருக்கிற வாட்ச்ல டைம் பார்க்கிறது ஈஸியா, இல்லை பைல இருந்து எடுத்து எடுத்து பார்க்கிறது ஈஸியா?”

“ம்ம்ம்.. சாதாரண வாட்சே ஈஸியா எடுத்துப் பார்க்கிற தூரத்துல இருக்கணும்னு எதிர்பாக்கிறோம். கட்டிக்கிட்ட கணவன் தூரமாவே இருந்தா எப்பிடி ?”

“யோவ் வாட்சும் கணவனும் ஒண்ணாய்யா? தன்னைத் தூக்கிப் போட்டுட்டான்னு வாட்சுக்குத் தெரியாது. ஆனா மனுசனுக்குத் தெரியுமேய்யா?”

“அதே தான் ஜான். வாட்ச் உனக்கு மணி காட்டுது. நீ அதை லவ் பண்ற. உனக்கு உபயோகமாகாத தூரத்துக்கு வாட்ச் போயிருச்சி. நீ அதைத் தூக்கிப் போட்டுட்ட. கணவன் மனைவியோட பரஸ்பர அன்பும் அப்பிடித்தான்பா. அன்புங்கிறது குடுத்து வாங்குறதுதானே? குடுத்து வாங்க முடியிற தூரத்துல, அட்லீஸ்ட் ஃபோன்லயோ, இப்ப வந்திருக்கே, இன்டர்நெட், அதுலயோ பார்த்து பகிர்ந்துக்கிட்டே இருந்தாத்தானே ஊறும். தானே ஊறிக்கிட்டு இருக்க அது என்ன ஊத்தா?”

நான் பதில் சொல்லாமல் அவரையே பார்த்தேன்.

“நீ அவள்ல ஆரம்பிக்கலை. அவளோட ஏன் முடிச்சிக்கணும். அவ எப்பிடி தனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்குன்னு அதைப் பாத்துக்கிட்டுப் போறாளோ, அது மாதிரி உனக்குன்னும் ஒரு வாழ்க்கை இருக்கே. அதை நோக்கிப் போ. ஏன் இந்த மேகத்து நிழல்கிட்டயே நிக்கிற?”

இவர் சொல்வதிலும் பாயின்ட் இருக்கிறது. நான் பார்க்காத ஏமாற்றமா? என்ன என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு செய்திருக்கலாம். நாளை போய் நான் அவள் முன்னால் நின்றால் அவள் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்? உள்ளுக்குள் புழுங்கி என்னிடம் முகம் காட்ட முடியாமல், வாயில் வார்த்தை எதுவும் வராமல் நாக்கு உலர்ந்து விக்கித்து நிற்பாள் அல்லவா? மனசுக்குள் அவளை அப்படிப் பார்க்க வேண்டும் என்ற குரூரம் எட்டிப் பார்த்தது.

காலையில் போலிஸ் ஸ்டேஷனில் இருந்து ஹோட்டலுக்குப் போனதும் குளித்து விட்டு உடை மாற்றிக் கொண்டு டாக்ஸி எடுத்தேன். ஜோ நடத்தும் அந்த ரெஸ்டாரன்ட் நகரின் மையத்தில் இருக்கிறது. எதிரே இருந்த டங்கின் டோனட்ஸில் ஒரு காபியையும் டோனட்டையும் எடுத்துக்கொண்டு ஜன்னலை ஒட்டியிருந்த ஒரு டேபிளில் அமர்ந்தேன். ரெஸ்டாரன்ட் இன்னும் திறக்கப்படவில்லை.

பத்து மணிக்கெல்லாம் ஒரு ஓட்டை ஹோன்டா அக்கார்ட் வந்து நின்றது. அடையாளமே தெரியாத அளவுக்குக் கார் மட்டுமல்ல, அதிலிருந்து இறங்கிய மிஷேலும் மாறிப் போயிருந்தாள். காலம் இவ்வளவு மாற்றத்தையா கொண்டு வரும்? கண்கள் இடுங்கி, கன்னம் ஒட்டி மண்டையோட்டின் மீது தோல் போர்த்தியது போல மாறிப் போயிருந்தது மிஷேலின் முகம். உருவத்தில் இளைத்திருந்தாள். இளைத்து என்றால் நல்ல விதமாக அல்ல. நோயாளியைப் போல. ஆனாலும் அந்த உதட்டில் ஒரு புன்னகை ஒட்டியிருந்தது. கண்கள் தெரியவில்லையென்றாலும், மிஷேல் புன்னகைக்கும் போதெல்லாம் கண்கள் சிரிக்கும். சந்தோசமாக இல்லாவிட்டால் அவள் முகத்தில் புன்னகை தோன்றாது. கடைசியாக அவளைப் பார்த்த போது அவள் முகத்தில் இந்த சந்தோசம் இல்லை. இப்போது இருக்கிறது. என்னைப் பார்த்தால் அந்த சந்தோசம் எங்கே போகும்? என்ன ஆவாள்? ஏற்கனவே இடுங்கிய கண்கள் இன்னமும் சிறியதாகிப் போகும். புன்னகைக்கும் வாய் கோணிக் கொள்ளும். அதைப் பார்க்க எனக்கு மனமில்லை. சத்தம் காட்டாமல், டங்கின் டோனட்ஸின் இன்னொரு வாசல் வழியாக வெளியேறினேன்.

ஹோட்டலில் ஜான் காத்திருந்தான். இரவு நடந்த களேபரத்தில் ஜானை வரச்சொன்னதையே மறந்து போனேன். அன்றைய பொழுதை ஜானுடன் கழித்தேன். அவன் கேட்ட்தையெல்லாம் வாங்கிக் கொடுத்தேன். அவனும் அதிகம் கேட்கவில்லை. அம்மாவைப் பற்றி பேசுவதைத் தவிர்த்தான். நானும் கேட்கவில்லை.

அந்த இரவும் எனக்குத் தூக்கம் வரவேயில்லை. ஆனால் முந்தைய இரவுக்கும் இந்த இரவுக்கும் பெருத்த வித்தியாசம் இருந்த்து.

திங்கட்கிழமை. ஓட்டலை செக் அவுட் செய்துவிட்டு ரெண்டல் கார் எடுத்தேன். ஸ்ப்ரை மிடில் ஸ்கூல்.

“ஜான்!! அப்பா லூயிஸ்டனுக்கே மூவ் பண்ணப் போறேன். அங்க ஒரு வேலை கிடைச்சதும், நீ அப்பாக்கூடவே வந்து இருப்பியா?”

“இருக்கேன் பா”

“தேங்க்ஸ். லூயிஸ்டன் போயிட்டு உனக்குக் கூப்புடுறேன். ஓக்கே”

“ஓக்கே”

த்ரூவே ஆச்சரியமாக காலியாக இருந்தது. சாலையில் கண்கள் இருந்தாலும் நினைவு மிஷேலைச் சுற்றியது. வாழ்க்கையும் இந்த த்ருவே போலத் தான். தடங்கல் ஏதும் இல்லாமல் இருந்தால் வாழ்க்கைப் பயணமும் தடை இல்லாமல் போய்க் கொண்டே இருக்கும். பக்கத்தில் வேகமக நகரும் மரங்களைப் போல மனிதர்களும் கடந்து போய் விடுவார்கள். 

(அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரின் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை வைத்து புனையப்பட்டது)