Wednesday, March 31, 2010

பிதற்றல்கள் - 03/31/2010

சர்வதேசப் பதிவர் சங்கமம்

நடக்காத/நடக்கப்போகாத ஒன்றை வைத்து நான் இதுவரை இரண்டு மொக்கைப் பதிவுகள் தேற்றிவிட்டேன். இனி இதை உங்கள் கைவசம் விட்டுவிடுகிறேன். இந்தக் கற்பனை சங்கமத்துக்கு வருகை தரும், நிகழ்ச்சியில் பங்கு பெறும் அனைத்துப் பதிவர்களும் நிகழ்வைச் சிலாகித்தோ, திட்டியோ குட்டியோ சில பல பதிவுகளை எழுதுங்கள். பிட் அடிக்க ஈரோடு பதிவர் சங்கமம் பற்றி எழுதிய பதிவுகளை உபயோகப் படுத்திக் கொள்ளுங்கள். (சென்னை வேண்டாம்... நல்லால்ல)

கலக்குங்கள் தோழர்களே..

தமிழ்த்திரையுலக ரசிகர்கள்

இவர்களின் தலைவிதி இப்படியா இருக்கும்.விஜய், உதயநிதி ஸ்டாலின், ஜீவா இவர்களுடன் இணைந்து த்ரீ இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீ-மேக்கில் நடிப்பது உறுதியாகிவிட்டதாம். இனி நாம் வித்தியாசமான விஜயைப் பார்க்கலாமாம்.

அய்யோ சாமி! நினைச்சிப் பாக்கக்கூட முடியலப்பா..

_____ பிதற்றல்கள்

என்னுடைய அந்த இன்னொரு வலைப்பூவில் சமீபத்தில் நடக்கும் அந்தப் போட்டித் தொடரைப் பற்றி இனி எழுத மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். ஆனாலும் ரசிகக் கண்மணிகள் என்னைத் தொடர்ந்து எழுதச் சொல்கிறார்கள். சிலர் வீட்டுக்குமுன் தீக்குளிப்போம் என்று எச்சரிக்கை விடுக்கிறார்கள். பலா பட்டறை ஷங்கர் ஒரு படி மேலே போய் எனக்குக் கொலை மிரட்டல் எல்லாம் விடுக்கிறார். அடுத்த வாரத்திலிருந்து திரும்பவும் என் பிதற்றலைத் தொடரலாம் என்றிருக்கிறேன்.

அங்காடித் தெரு

திரைப்படத்தைப் பற்றி கலவையாக விமர்சனங்கள் வந்து விழுகின்றன. எனக்கு வசந்த பாலனின் இரண்டாவது படம் மிகவும் பிடித்திருந்தது. எங்கள் ஊர்க்காரர் என்ற பாசம் வேறு. நான் வசிக்கும் பாழாய்ப்போன இந்த ஊரில் தியேட்டரில் சென்று பார்க்கும் அதிர்ஷ்டம் கிடைக்காது. ஆகவே டி.வி.டி வரும் வரை காத்திருக்க வேண்டியதுதான். (மே மாதம் இந்தியா வரும் வரை ஓடிக்கொண்டிருந்தால் அங்கேயும் பார்க்கலாம்).

பாஸ்டன்

பழமை பேசியண்ணன் பாணியில் பாசுடன் நகரத்துக்கு நாளை விஜயம். இங்கிருந்து 6 1/2 மணி நேரம் கார் பயணம். இதுவரைக்கும் சுற்றிப் பார்ப்பதற்காகப் போனதேயில்லை. இதுவே முதல் முறை. டக் டூர்ஸ் சிறப்பாக இருக்கும் என்று கேள்வி. அதோடு அக்வேரியமும் நன்றாக இருக்குமாம். போய்ப் பார்த்துவிட்டு வந்து விரிவாக ஒரு பதிவு போட்டுவிடலாம்.
பாஸ்டன் நகரில் என் பதிவர்கள் யாரும் - பாஸ்டன் ஸ்ரீராம் இருக்கிறார் ஆனால் அவருடன் பரிச்சயம் இல்லை - இருந்தால் ஒரு மாலை வேளை காஃபி வித் முகிலன் போடலாம்.

பதிவு

எண்ணிக்கை குறைந்து போனதற்குக் காரணம் நான் அந்தப் வலைப்பூவில் எழுதி வந்ததே. அதை எழுத வேண்டாம் என்று முடிவெடுக்கும் போது அலுவலகத்தில் ஆணி அதிகமாகிவிட்டது. இன்னும் சில நாட்களில் சரியாகிவிடும். மீண்டும் மிரட்டலைத் தொடர்வோம்.

விழா

“ஏய் இந்தாப்பா. மேடை போட்டாச்சா?”

“போட்டாச்சிண்ணே”

“மைக் செட்டு, சோடா?”

“சொல்லியாச்சிண்ணே”

“மாலை?”

“பெங்களூர்லருந்து ஆள் வந்து கட்டிக்கிட்டே இருக்காய்ங்கண்ணே”

“பேச்சாளர்களை டேசன்லருந்து கூட்டியார வண்டி போயிருக்கா?”

“அப்பவே போயிருச்சிண்ணே. நம்ம தங்கராசுதான் ஓட்டிக்கிட்டு போயிருக்கான்”

“சரி கூட்டத்துக்கு ஆளு?”

“நாலு லாரி அனுப்பியிருக்குண்ணே... ஆளுக்கு அம்பது ரூவாயும் கோழி பிரியாணியும் குடுக்கச் சொல்லியிருக்கேன்”

“எலேய் என்னலே அம்பது ரூவாங்குற? எங்கிட்டா எழுவத்தஞ்சின்னு சொன்னான்”

“யாருண்ணே சொன்னது?...”

“சரி விடு. அவன நாம்பாத்துக்குறேன். எந்தக் கொறையும் இருக்கப்படாதுலே.. அப்புறந் தலவருக்கு கோவம் வந்துரும்”

“அதெல்லாம் பிரச்சனையிருக்காதுண்ணே. நான் கூட இருந்து பாத்துக்கறேன்”

“சரி தலவரக் கூப்புட ஏர்ப்போர்ட்டுக்கு நானே போயிருதேன். என் வண்டிக்கிப் பெட்ரோல் போட்டுட்டு வந்துரு”

“சரிண்ணே”

“இங்க பாருப்பா. சும்மா இல்ல. நம்ம தலைவருக்கு விருது கிடைச்சிருக்கு. அதைக் கொண்டாடனும்னா தடபுடலா இருக்கணும் விழா சரியா?”

“சரிண்ணே”

...

...

...

எதற்கு இந்த தடபுடல் விழா? எல்லாம் இதற்குத்தான்..


விருதை வழங்கிய திவ்யா ஹரிக்கு நன்றி..

இந்த விருதை நான் என் நண்பர்கள் சிலரோடு பகிர்ந்து கொள்கிறேன்.

1. சிங்கை சிங்கம் பிரபாகர் - லவ்வுல ஏப்ரல் ஃபூல் ஆனதுக்கு இது ஆறுதல்
2. தன் உயிரையும் துச்சமென மதித்து தமிழ்ப் பதிவர்களைக் காக்கும் ஜெட்லீ
3. பதிவர் சங்கமத்துக்கு விளக்கெண்ணெய் லாரியில் வர இருக்கும் பட்டா பட்டி
4. கிரிக்கெட் பிதற்றல்கள் என்ற வலைப்பூவில் அந்த விளையாட்டைப் பற்றிய அரிய பல தகவல்களை அள்ளி வழங்கும் அந்த வலைப்பதிவருக்கு (கலைஞர் மட்டும் தான் அண்ணா விருது வாங்கிக்குவாரா?)

Friday, March 26, 2010

சர்வதேச பதிவர் சங்கமம் அழைப்பிதழ் நிகழ்ச்சி நிரல்

சர்வதேசப் பதிவர் சங்கமம் நடத்துவது தொடர்பாக சர்வதேசப் பதிவர் சந்தித்து உரையாடியதை நாம் கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் அந்த சந்திப்பு தொடர்பாக பல முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக அறிந்தோம்.

தலைவர் குடுகுடுப்பை, தளபதி நசரேயன் மற்றும் அண்ணன் அதுசரி அவர்களின் சீரிய முயற்சியால் கிட்டத்தட்ட சங்கம நிகழ்ச்சிக்கு அனுசரணையாளர்களை(Sponsors)ப் பிடித்து விட்டதாக அறிகிறோம். அந்நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்/நிகழ்ச்சி நிரல் நம் கையில் சிக்கியது. இங்கே அது உங்கள் பார்வைக்காக.


சர்வதேச பதிவர் சங்கமம் அழைப்பிதழ்

நண்பர்களே, சர்வதேசப் பதிவர்கள் சங்கமம் நடத்துவதென்று தீர்மானம் செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் துவங்கிவிட்டன. இந்த விழாவுக்கு நீங்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த அழைப்பிதழுடன் நிகழ்ச்சி நிரலையும் இணைத்திருக்கிறோம்.


இடம்: டீ-கூ-வாங்க் தீவு, தென் அமெரிக்காவுக்குத் தெற்கே ஒரு தீவு
நாள்: 4/4/2010 ஞாயிறு


பல்வேறு நாடுகளிலிருந்து இந்த விழாவில் கலந்து கொள்ள சிறப்பு விமானங்கள் (நன்றி: டைகர்வுட் ஏர்லைன்ஸ்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலந்து கொள்ள விரும்பும் பதிவர்கள் NOREPLY-COMMENT@BLOGGER.COM என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் விபரங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்தியா: இந்தியப் பதிவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்காக சென்னையிலிருந்து ஒரு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்த விமானம் சென்னை விமான நிலையத்திலிருந்து சனி காலை சரியாக 4:00 மணிக்குப் புறப்படும். இந்த விமானத்தில் பயணம் செய்ய விரும்பும் பதிவர்கள், தங்கள் பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் அல்லது குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை இப்படி எதாவது ஒரு அட்டையைக் கொண்டு வர வேண்டும். அப்படி எந்த அட்டையும் இல்லாதவர்கள், தங்கள் பள்ளிக்கூட ரேங்க் அட்டையையாவது கொண்டு வர வேண்டும். இது எதுவும் இல்லாதவர்கள் ஃபுட் போர்ட் அடிக்கக்கூட அனுமதிக்கப் படமாட்டார்கள்.

அமீரகம்: அமீரகத்தைச் சேர்ந்த பதிவர்களுக்காக, துபாய் விமான நிலையத்திலிருந்து சரியாக காலை 10 மணிக்கு இந்த விமானம் புறப்படும். விமானத்தில் மேலே சர்வதேசப் பதிவர் சங்கமம் என்ற போஸ்டர் ஒட்டியிருப்பது விமானத்தை அடையாளம் கண்டு கொள்ள உதவும். மேலும் இந்த விமானத்தில் ஒரு அண்டா பிரியாணியை முதலில் ஏற்றினால் தான் விமானம் புறப்படுமாறு தொழில்நுட்பம் செய்யப்பட்டுள்ளது. பிரியாணி இல்லாவிட்டால் பதிவர்கள் யாரும் பிரயாணம் செய்ய முடியாது.

சிங்கப்பூர், மலேசியா: சிங்கை மற்றும் மலேசியப் பதிவர்களுக்காக ஒரு கால் டாக்ஸி (உதவி: வரும் ஆனா வராது கால் டாக்ஸி சர்வீசஸ்) ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்த டாக்ஸி பிரபாகர் அண்ணன் அவர்களின் அப்பார்ட்மெண்ட் வாசலில் நிற்கும்.

ஐரோப்பா:ஐரோப்பாவைச் சேர்ந்த பதிவர்களுக்காக லண்டனில் இருந்து ஒரு பாய்மரப் படகு (உதவி: டைட்டானிக் கப்பல் கம்பெனி) மதியம் 12 மணிக்கு புறப்படுகிறது. பதிவர்கள் இப் பாய்மரப் படகில் பாய்ந்து ஏறிக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறார்கள்.

அமெரிக்கா: அமெரிக்கப் பதிவர்களுக்காக ஒரு ஜெட் விமானம் பல்வேறு நகரங்களைத் தொட்டுச் செல்லும். அந்தந்த ஊரைச் சேர்ந்த பதிவர்கள் விமானம் அவர்கள் ஊரைத் தொட்டுச் செல்லும்போது ஒட்டிக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். எந்த நேரம் எந்த ஊருக்கு வரும் என்ற தகவல் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப் படும். (தீவிரவாதிகள் தாக்குதல் இருக்கலாம் என்று உளறல்துறை எச்சரிக்கை இருப்பதால் வெளிப்படையாக அறிவிக்க இயலாது)

மற்ற நாடுகளைச் சேர்ந்த பதிவர்கள் அவரவர் சக்திக்கேற்றவாரு, கால் டாக்ஸியோ, அரை டாக்ஸியோ, ஷேர் ஆட்டோவோ பிடித்து வந்து சேருமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

நிகழ்ச்சி நிரல்:

சனி மாலை 7:30

டீ-கூ-வாங் தீவில் உள்ள வாட் டைகர், நோ டைகர் ரிசார்ட்டில் (நிதி உதவி: ராஜபிச்சை பிரதர்ஸ் கார்ப்பொரேசன்) நடைபெறும் இந்த விழாவுக்கு வருகை தரும் அத்தனைப் பதிவர்களும் சனி மாலை 7:30 மணிக்குள் இந்த ரிசார்ட்டுக்குள் வந்து விட வேண்டும். சரியாக 8:00 மணிக்கு ரிசார்ட்டின் கதவு இழுத்துச் சாத்தப்படும். உள்ளே சென்றவர்கள் விழா முடியும் வரை வெளியே வர முடியாது என்பதை இங்கே அறிவிக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

சனி இரவு 8:30 இரவு உணவு

வழங்குபவர்கள் கேபிள் சங்கரின் கொத்துபரோட்டா - மூடி வச்சி மூணு நாளானாலும் மணம், குணம் குறையாதது

சனி இரவு 10:00 மணி - தூக்கம்

(உங்களுக்கான பாய், போர்வையை வழங்குபவர்கள் - கிழிசல் பாய் & கந்தல் போர்வை இன்கார்பொரேட்டட்)

ஞாயிறு 

காலை 6:00 மணி - துயிலெழும்புதல்

எச்சரிக்கை: இதற்கு மேலும் தூங்கும் பதிவர்கள் நிரந்தரமாகத் தூங்க வைக்கப் படலாம் - (பாதுகாவலர் உதவி - ராஜபிச்சை-பீத்தபாய செக்யூரிட்டி ஃபர்ம்)

காலை 6:01 - 8:30 மணி - பதிவர்கள் அனைவரும் தங்கள் காலைக்கடன்களை முடித்து குளித்து முடித்திருக்க வேண்டும்.
(நன்றி: செங்கக்கட்டி சோப்பு மற்றும் ஷக்கீலா துண்டுகள்)
குளிக்காத பதிவர்களுக்கு அரங்கத்தின் கடைசியில் இருக்கைகள் ஒதுக்கப்படும்.

காலை 8:30 மணி - காலை உணவு
(நன்றி: ஜெராக்ஸ் காப்பி கடை)

காலை 9:30 மணி - தமிழ்த்தாய் வாழ்த்து
(இந்நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவர்கள் சித்தனாதன் விபூதி)

காலை 9:35 மணி - வரவேற்புரை - குடுகுடுப்பை
(இந்நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவர்கள் ஜக்கம்மா ஜமுக்காளம்)

காலை 10:00 மணி - சிறப்புரை - ஓட்டையே இல்லாமால் கசியவிடுவது எப்படி? - சிறப்பு விருந்தினர் ஈரோடு கதிர்
(இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவர்கள் - ஃபெவிகால் - ஓட்டைகளை அடைக்கச் சிறந்த சாதனம்)

காலை 10:30 மணி - சிறப்புரை - கடவுளுக்குக் கத்தி சொறுகுவது எதற்காக? - பிரிட்டன் பேச்சாளர் அதுசரி
(இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவர்கள் - மரங்கொத்தி மார்க் கைக்குட்டைகள்)

காலை 11:30 மணி - சிறப்புரை - தலை முடியும் கைக்கிளிப்பும் - நறுக்குன்னு நாலு வார்த்தை - சிறப்பு விருந்தினர் வானம்பாடிகள்
(இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவர்கள் - கேரக்டர் சீவிளி மற்றும் சிணுக்கொடி)

நண்பகல் 12:30 மணி - மதிய உணவு


இந்த மதிய உணவை உங்களுக்கு வழங்குபவர்கள் பனகல் பார்க் கையேந்தி பவன் உரிமையாளர் சங்கம்


மதிய உணவுக்கு இடையில் சர்வதேச பதிவர் குழுமம் துவங்கி வைக்கப் படும். துவக்கி வைப்பவர்கள் இந்தியாவிலிருந்து வருகை தரும் அத்தனைப் பதிவர்களும்


மதியம் 1:30 மணி - பழகு தமிழில் அழகுதமிழ் - பழமை பேசி
(இந்த நிகழ்ச்சியை வழங்குபவர்கள் குந்தித்தூங்கு நெக் பில்லோ)

(மதிய உணவருந்தி மயக்கத்தில் இருக்கும் பதிவர்கள் இந்த சமயத்தில் கண்ணயரலாம்)

மதியம் 2:00 மணி - கலந்துரையாடல் - தங்கமணியிடம் அடிவாங்காமல் இடுகை தேத்துவது எப்படி? - நெறியாளர் முகிலன்
இந்த கலந்துரையாடலில் திருமணமான ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். ஏனையோர் பார்வையாளர்களாக இருந்து பயன்பெறலாம்.


இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவர்கள் - HardRock பூரிக்கட்டைகள்

மதியம் 2:45 மணி - சிறப்பு நிகழ்ச்சி - துண்டு, துண்டு, துண்டு, ஐ ரோஜா - பதிவர் நசரேயன், பின்னூட்டர் வில்லன் மற்றும் சில வடக்கூர்க்காரிகள் இணைந்து மிரட்டும் ஓரங்க நாடகம்.
இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவர்கள் ஃபேர் அண்ட் ஹேண்ட்சம் க்ரீம்

மதியம் 3:00 மணி - கவிதைப் பட்டறை - நடத்துபவர் கலகலப்ரியா. உடன் உதவி செய்பவர் பலா பட்டறை ஷங்கர்.
இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவர்கள் தெளியும்பித்தம் எலுமிச்சைகள் மற்றும் க்விக்-க்ரோ ஆயுர்வேதிக் ஹேர் க்ரோயிங் க்ரீம்

மாலை 4:00 மணி - எதிர்பட்டறை - நடத்துபவர் குடுகுடுப்பை
இந்த நிகழ்ச்சியை வழங்குபவர்கள் அங்கண்ணன் வயித்தெரிச்சல் மற்றும் வயிற்றுவலி மாத்திரைகள்

மாலை 4:30 மணி - 6:00 மணி - பல நாடுகளில் இருந்து வந்திறங்கும் பதிவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள மேடை வழங்கப்படும்.
நிகழ்ச்சிக்கு இடையில் டீ/காபி/சிற்றுண்டி வழங்கப்படும். (அண்ணன் உண்மைத்தமிழனுக்கு மட்டும் இறுதியாகவே அனுமதி வழங்கப்படும்)


இந்த நிகழ்ச்சியை வழங்குபவர்கள் -  மெரீனா பீச்சில் கடலை/சுண்டல்/மாங்கா விற்கும் பொடியர்கள் சங்கம்

மாலை 6:00 மணி - கேள்வி நேரம் - பதிவர்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு பதிவர் பட்டாபட்டி அவர்கள் பதில் கூறுவார். யாருக்கும் கிடைக்காத இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள்.

இந்நிகழ்ச்சியை வழங்குபவர்கள் ப.மு.க. 

மாலை 6:30 மணி - கதை சொல்லி - நான் எழுதிய இரண்டு கதைகள் - சின்ன அம்மிணி தான் எழுதிய கதைகளில் இரண்டை வாசித்துக் காட்டுவார்

இந்த நிகழ்ச்சியை வழங்க யாரும் முன்வராததால் சின்ன அம்மிணி தன் சொந்த செலவில் ஏற்பாடு செய்கிறார்.

இரவு 7:30 மணி - இரவு உணவு 

(இந்த உணவை உங்களுக்கு வழங்குபவர்கள் மீண்டும் கேபிள்சங்கர் கொத்துபரோட்டா. தாகசாந்தி வேண்டும் பதிவர்களுக்கு கார்க்கியின் காக்டெயிலும் வழங்கப்படும்)

நிகழ்ச்சியின் துவக்கத்திலிருந்து இறுதி வரை ரிசார்ட்டின் கேட்டுகள் அடைத்துச் சாத்தப்படும் என்பதை அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை அறிவித்துக் கொள்கிறோம். மீறி வெளியேறியே ஆக வேண்டும் என்பவர்கள் மூன்றாவது வாசலில் வைக்கப் பட்டிருக்கும் கலகலப்ரியா காபி அண்டாவிலிருந்து ஒரு குவளை காப்பியும், பக்கத்து சட்டியில் இருக்கும் கலகலப்ரியா கருப்பு சாம்பாரில் ஒரு கரண்டியும் குடித்துவிட்டு, அதன் பின்னும் உயிரோடு இருந்தால் வெளியேறலாம்.

நிகழ்ச்சி முடிந்ததும் பதிவர்கள் வீடு திரும்ப வாகன ஏற்பாடுகள் எதுவும் செய்யப் படவில்லை. இதற்கான அனுசரணையாளர்கள் கிடைக்காததே காரணம். ஆல்-இன்-ஆல் அழகுராஜா கடையில் சைக்கிள்கள் கேட்டுள்ளோம். அவர்கள் இன்னும் பதில் அனுப்பவில்லை. அவர்களின் பதில் வரவும் பதிவர்களுக்கு மின்னஞ்சல் முறையில் தகவல் தெரிவிக்கப்படும்.

அனைவரும் வருக ஆதரவு தருக.

Wednesday, March 24, 2010

கனவு தேசம் - 2

முதல் பாகம் இங்கே.

டிஸ்கி: இந்தப் பதிவில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்தும் நான் கடந்துவந்த/பல வலைத்தளங்களில் இருந்து திரட்டிய செய்திகள். இவற்றில் தவறுகள் இருக்கலாம். தவறுகளைக் காண்பவர்கள் தயவுசெய்து பின்னூட்டத்தில் சுட்டுங்கள்.

கடந்த பதிவில் அமெரிக்காவுக்குள் நுழைய என்ன என்ன விசா பிரிவுகள் இருக்கின்றன என்று அடுத்த பகுதியில் பார்க்கலாம் என்று சொல்லியிருந்தேன். அதை இப்போது பார்ப்போம்.

பொதுவாக அமெரிக்க விசாவை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். (நான்கு என்றும் சொல்லலாம், நான்காவதை நேரடியாகப் பெறுவது இந்தியர்களுக்கு சிரமம் என்பதால் அதை விட்டு விடுகிறேன்)

1. விருந்தினர் (Visit)
2. படிப்பு
3. வேலை

  1. விருந்தினர் விசா – B1/B2
விருந்தினர் விசாவை பி1 என்று அழைப்பார்கள். மருத்துவத் தேவைக்காக (ஜீன்ஸ் படத்தில் லட்சுமி வந்தது போல) வருவதற்கு பி2 விசா வழங்குவார்கள்.
பொதுவாக இதை டூரிஸ்ட் விசா அல்லது பிசினஸ் விசா என்று அழைப்பார்கள். சில நிறுவனங்கள் குறுகிய காலத்திற்கு யாரையாவது அமெரிக்காவுக்கு அனுப்ப இந்த விசாவைப் பயன்படுத்துவார்கள். அதை டெக்னிக்கல் ட்ரெயினிங் என்ற பெயரில் அனுமதிப்பார்கள்.

இந்த விசாவைப் பெற உங்களுக்கு அமெரிக்காவில் இருக்கும் யாராவது அழைப்பு அனுப்ப வேண்டும். அவரே உங்களுக்கு அனுசரணையாளராகவும்(Sponsor) இருக்க வேண்டும்.

அமெரிக்காவிலிருப்போரின் பெற்றோர் தங்கள் மகன்/மகளைச் சந்திக்க இந்த விசாவில் செல்வார்கள்.

இந்த விசாவைப் பெற அமெரிக்க கன்சுலேட்டுக்கு செல்பவர்கள் மனதில் வைக்க வேண்டிய விசயங்கள்.

  1. நீங்கள் அமெரிக்காவுக்கு தற்காலிகமாகத்தான் செல்கிறீர்கள். திரும்பி வந்துவிடுவீர்கள் என்று அந்த விசா அதிகாரியை நம்ப வைக்க வேண்டும்.
  2. அமெரிக்காவில் உங்களுக்காகும் செலவை சமாளிக்கும் அளவுக்கு உங்கள் மகன்/மகளுக்கு போதிய நிதிவசதி இருக்கிறது என்று விசா அதிகாரியை நம்ப வைக்க வேண்டும்.

மேலும் நீங்கள் அமெரிக்காவுக்குள் நுழையும்போது மறந்தும் கூட படிக்கவோ, இல்லை வேலை செய்யவோ வருகிறோம் என்று குடியமர்வில் (immigration) சொன்னால் அடுத்த விமானத்தில் திருப்பி அனுப்பி விடுவார்கள்

  1. படிப்பு – Student Visa
அமெரிக்காவில் மேல் படிப்பு செல்பவர்களுக்கான விசா இது. இது F1 என்று அழைக்கப் படும். இந்த விசாவில் செல்பவர்கள் படிப்பு முடிந்ததும் அமெரிக்காவில் ஒரு வருடம் பணி புரிவதற்கு (OPT) என்று ஒரு வாய்ப்பு உள்ளது. மேலும் ஒரு வாரத்திற்கு 20 மணி நேரத்திற்கு மிகாமல் தாங்கள் படிக்கும் கல்லூரிக்குள்ளேயே வேலை செய்யவும் அனுமதி உண்டு.

பணி புரிவதற்கான விசாவுக்கு (H1B) இந்த படிப்பு விசா ஒரு குறுக்கு வழி. அது எப்படி என்பதை அடுத்த பிரிவில் பார்ப்போம்.

இந்த படிப்பு சம்மந்தப்பட்ட இன்னொரு விசா – J1. இதை எக்ஸ்சேஞ்ச் விசா என்று சொல்வார்கள். மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்கக் கலாச்சாரத்தை (!?) பகிர்ந்து கொள்ள வருபவர்கள் இந்த விசாவில் வருவார்கள். சில டாக்டரேட் பெற்றவர்களும் இந்த விசாவில் போஸ்ட் டாக்டரேட்டுக்காக வருவார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன். (இந்தக் கருத்தில் தவறேதும் இருந்தால் தெரிவியுங்கள்)

  1. வேலைக்கான விசா

வேலைக்கான விசா இரண்டு வகைப்படும். (இந்தியர்களுக்கு).

  1. H1-B. இது அமெரிக்க நிறுவனம் தங்கள் நாட்டில் இல்லாத ஒரு திறனுடைய பணியாளை வெளிநாடுகளில் இருந்து பணியமர்த்திக்கொள்ள அமெரிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுத்திருக்கும் வழி. இந்த விசாவுக்கு நீங்களாகவே விண்ணப்பிக்க முடியாது. பணியமர்த்தும் நிறுவனம் உங்களுக்காக விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பிக்கும் முன், தங்கள் நிறுவனத்தால் அந்த நேரத்தில் இந்த திறனுடைய (Skills) ஒருவரை அமெரிக்காவில் கண்டெடுக்க முடியவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். இதைத் தான் LCA என்று சொல்வார்கள். இந்த விசா விண்ணப்பத்தை பெட்டிஷன் என்று சொல்வார்கள்.
இந்த  பெட்டிசனை அந்நிறுவனம் 6 மாதங்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும். அதாவது அக்டோபர் 1, 2010ல் பணியமர்த்த அவர்கள் ஏப்ரல்,1, 2010லேயே விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த பெட்டிசனுக்கு உச்ச வரம்பு இருக்கிறது. ஒரு வருடத்திற்கு 65,000 விசாக்களுக்கு மேல் அனுமதிப்பதில்லை. முன்பு first come, first serve அடிப்படையில் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த விசா வழங்கும் முறை இப்போது லாட்டரி முறையில் நிகழ்த்தப் படுகிறது. அதாவது அத்தனை விசா விண்ணப்பங்களையும் பெற்றுக் கொண்டு அதிலிருந்து 65000 விண்ணப்பங்களை மட்டும் லாட்டரி முறையில் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அனுமதி வழங்குவதே அது.
இந்த 65000 கணக்கில் சில – not for profit – நிறுவனங்கள் விதிவிலக்கு பெற்றவை.
இந்த விசாவுக்கு நிறுவனங்கள் செலவு செய்யும் தொகை $1500 - $5000 வரை.

அமெரிக்காவில் மேற்படிப்பு படித்த மாணவர்கள் (F1 விசா மூலம்) இந்த H1-B விசா பெறுவது எளிது. ஏனென்றால் அவர்கள் இந்த 65000 கோட்டாவில் வர மாட்டார்கள். அவர்களுக்குத் தனியே 20,000 கோட்டா இருக்கிறது. அதோடு அவர்கள் அக்டோபர் வரை காத்திருக்கத் தேவையில்லை. ஏப்பிரலில் விண்ணப்பித்ததும் பணிக்குச் செல்லலாம். இதைத் தான் குறுக்கு வழி என்று மேலே சொன்னேன்.

H1-B விசாவில் ஒருவர் வந்தால் அவர் மட்டுமே வேலை பார்க்க முடியும். அவரது குடும்பத்தினர் (dependents) வேலை பார்க்க முடியாது.

  1. L1B விசா – Intracompany Transfer
இந்த விசா அமெரிக்காவிலும் இந்தியாவிலும் கிளைகள் வைத்திருக்கும் நிறுவனம், தங்கள் இந்தியக் கிளையிலிருந்து அமெரிக்கக் கிளைக்கு தற்காலிகமாகப் பணி புரிய ஆட்களை அனுப்புவதற்கு பயன்படுவது. இந்த விசாவுக்கு உச்ச வரம்பு என்று எதுவும் கிடையாது. அதே போல காத்திருப்புக் காலமும் கிடையாது.
இதில் L1 regular, L1 blanket என்று இரு வகை உண்டு.
    • L1 regular – இந்த விசாவுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர், குறைந்த பட்சம் மூன்று வருடங்கள் அந்தத் துறையிலும் அந்த மூன்றில் ஒரு வருடம் இந்தியக் கிளையிலும் பணி புரிந்திருக்க வேண்டும்.
    • L1 Blanket – இந்த விசா தகவல் தொழில்நுட்பத்துக்கு மட்டுமே பொருந்தும். இந்த விசாவைப் பெற விரும்பும் நபர் கணினித் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் அந்த நிறுவனத்தில் குறைந்தது ஆறுமாதம் பணிபுரிந்திருக்க வேண்டும்.
இப்போது இந்த L1 blanketக்கு அதிகக் கட்டுப்பாடுகள் விதித்திருப்பதாகக் கேள்வி
L1 விசாவில் வருபவருடைய குடும்பத்தார் (18 வயதுக்கு மேற்பட்டவர்) $385 கொடுத்து EAD பெற்றுக் கொண்டு எந்தப் பணி வேண்டுமானாலும் புரியலாம். எந்தக் கட்டுப்பாடும் இல்லை.

  1. L1-A – Executive Visa
இதை மேனேஜெரியல் விசா என்றும் சொல்வார்கள். ஆனால் இது எல்லா மேனேஜர்களுக்கும் செல்லாது. இந்தியாவில் இருக்கும் ஒரு நிறுவனம் தனது அமெரிக்கக் கிளைக்கு executive பொறுப்பில் ஒருவரை பணிக்கு அனுப்புவதற்குப் பயன்படும் விசா.
இந்த விசா இருந்தால் க்ரீன் கார்டு எனப்படும் நிரந்தரக் குடியமர்வு அட்டை பெறுவது மிக எளிது.

வேலைக்கான விசா பெற கன்சுலேட் செல்லும்போது கவனிக்க வேண்டிய விசயங்கள் பற்றியும் பச்சை அட்டை பெறும் நெடிய முறை பற்றியும் அடுத்த பதிவில்.

Friday, March 19, 2010

சர்வதேச பதிவர் சங்கமம் - முன்னேற்பாடு கூட்டம் நேரலை

உலகெங்கிலும் எங்கள் நிகழ்ச்சிகளை கண்டு களிக்கும் நல்ல உள்ளங்களுக்கு சலம்பல் தொலைக்காட்சி சார்பில் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். 


சென்னைப் பதிவர்கள் வாரம் ஒரு முறை பதிவர் சந்திப்பு என்ற பெயரில் கடற்கரையிலோ, இல்லை உலகத் திரைப்படம் என்ற பெயரில் கிழக்கு பதிப்பகத்தின் மாடியிலோ சந்தித்து அளவளாவி வருகின்றனர். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் பதிவர்கள் இப்படி சந்திப்பதில்லை என்ற பெரும் வருத்தம் அவர்களுக்குள் இருக்கிறது. 


இதை எப்படியாவது நீக்கியே தீருவது என்ற நல்லெண்ணத்தில் அயல்நாட்டுப் பதிவர்கள் ஒரு பிரைவேட் பஸ்ஸில் ஏறி கலந்துரையாடினார்கள். அந்த நிகழ்வை நேரலையாக உங்களுக்கு வழங்குவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இது ஒரு சலம்பல் தொலைக்காட்சியின் எக்ஸ்க்ளூசிவ் நிகழ்ச்சி.


அதுசரி: யோவ் யாருய்யா இந்த டெம்போவுக்கு டிரைவரு?


முகிலன்: வாங்க அதுசரி. நானும் யாருன்னு தெரியாமத்தான் உக்காந்திருக்கேன். 


கலகலப்ரியா: நாந்தான் அது. இப்ப சாம்பார் வச்சிட்டிருக்கேன். நீங்க பேசிக்கிட்டிருங்க.


அதுசரி: ஓ மண்ணு லாரியா இது. அப்ப சரக்கடிச்சிட்டு லேசா சரிஞ்சிக்கலாம்.


குடுகுடுப்பை: என்னய்யா இது, என்னவோ பதிவர் சங்கமம்னு பேசிட்டு சரக்கடி, கொசுக்கடின்னு பேத்திக்கிட்டிருக்கீங்க?


முகிலன்: வாங்க தலைவரே. என்ன ரொம்ப நாளா கடைக்கு லீவு விட்டுட்டீங்க?


குடுகுடுப்பை: ஆஃபீஸ்ல வேலை டவுசர் கிளியுது. ஒட்டுப் போடக்கூட நேரமில்லை.


கலகலப்ரியா: ஆமா.. ஒட்டுப் போட நேரமிருக்காது. ஆனா எதிர்க் கவிதை எழுத மட்டும் நேரம் இருக்கும். நடக்கட்டு நடக்கட்டு


குடுகுடுப்பை: எதிர்கவித எழுதுரதுக்கு யோசிக்க வேண்டாம், உங்க கவிதைய படிச்சா தானா வருது


நசரேயன்: எனக்கொரு துண்டு போடுங்க.


குடுகுடுப்பை: நீர்தானய்யா வழக்கமா துண்டு போடுவ. இப்ப உனக்குப் போடச் சொல்ற?


நசரேயன்: அட எடம் போடச் சொன்னேன்யா.


முகிலன்: வாங்க நசரேயன் இங்கிட்டு உக்காருங்க


நசரேயன்: நன்றி பாண்டியரே. பாத்திங்களாய ஒரு பாண்டியருக்கு ஒன்னொரு பாண்டியாரு தான் உதாவி செய்யறாரு


வானம்பாடி: ஒரு வாக்கியத்துல எத்தன எழுத்துப் பிழை. இதைத் திருத்த மாட்டீரா?


சின்ன அம்மிணி: யாருங்க அது எங்க தளபதியத் தாக்குறது?


நசரேயன்: நன்றி சின்ன அம்மிணி. அதான, சர்வதேச பதிவர் சங்கமத்துல இவர எல்லாம் யாருய்யா உள்ள விட்டது?


அதுசரி: சரி வந்தது வந்துட்டீங்க. ஒரு ரவுண்டு ஏத்துறது.


குடுகுடுப்பை: நான் தான் வரச் சொன்னேன். அவரு பல பதிவர் கூட்டம் பாத்திருப்பாரு. அவர்கிட்ட ஐடியா கேக்கலாம்னு.


முகிலன்: ஆமா நம்ம பழமை பேசியண்ணன என்ன இன்னும் காணோம்?


பழமை பேசி: வந்துவிட்டேன். தொழில் நிமித்தமாக பாசுடன் நகரம் வரை செல்ல வேண்டியிருந்தது. விமான நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திரும்பி வரும் விமானம் தாமதமாகிவிட்டது.


அதுசரி: ஆமா இப்ப என்ன சொன்னீங்க? கொஞ்சம் தமிழ்ல ட்ரான்ஸ்லேட் செய்யுங்க?


குடுகுடுப்பை: மப்பு ஏறிட்டா அப்பிடித்தான். 


கலகலப்ரியா: வந்துட்டேன். யாராவது சாம்பார் சாதம் சாப்புடுறீங்களா?


அதுசரி: அதுக்கு நான் விசத்தையே குடிப்பேன்.


முகிலன்: யோவ் எங்கயாவது விசம் ஃப்ரீயா கிடைக்குமா? கிடைக்கும்போது வாங்கி சாத்துரத விட்டுப்புட்டு.


கலகலப்ரியாம்கும். தினம் ஜாவா காஃபின்னு அலட்டிக்கிட்டு குடிக்கறது விசமில்லாம என்ன? இனிமேட்டு நீங்க கேட்டாலும் கிடைக்காது.


பழமை பேசி: சரி தம்பிகளா, நாம இங்க எதுக்குக் கூடியிருக்கோம்?


முகிலன்: அண்ணே, இந்தியாவுல பாத்தீங்கன்னா, சென்னைல தும்முனா பதிவர் சந்திப்பு, இருமுனா பதிவர் சந்திப்புன்னு நடத்துறாங்க. ஈரோட்ல என்னன்னா பதிவர் சங்கமம்னு வச்சி கலக்கிட்டாய்ங்க. நீங்க கூட போய் அமீர்கான் மாதிரி தொப்பி போட்டுட்டு பேசிட்டு வந்தீங்களே?


குடுகுடுப்பை: தொப்பியக் கழட்டிட்டு ஒரு ஃபோட்டோ பப்ளிஷ் பண்ணச் சொன்னா இன்னும் பண்ணலை. நாம எதிர் தொப்பி போட்டுர வேண்டியதுதான்.


நசரேயன்: இந்த அமீரகம், நம்ம நியூ யார்க் சிட்டி சைஸ் இல்ல. அவங்க என்னடான்னா பதிவர் டூர் போராங்க. பிரியாணி சாப்டுராங்க. சினிமா பாக்குறாங்க. நாமும் மீட்டிங் போடலைன்னாலும் பரவாயில்ல பிரியாணியாவது சாப்புடணும்.


கலகலப்ரியா: இந்த சிங்கப்பூர், இத்தனை நாள் இருக்கிற இடம் தெரியாம இருந்தது. இப்ப என்னடான்னா கேபிள் சங்கரக்கூப்பிட்டு பதிவர் சந்திப்பு நடத்திட்டாங்க. என்னை ரௌத்திரப் படுத்தாம சீக்கிரம் ஏதாவது யோசனை சொல்லுங்க.


ஹாலிவுட் பாலா: Steven Speilberg, Jurassic parkla என்ன சொல்றாருன்னா..


நசரேயன்: அந்தப் பார்க்லயே வச்சிக்கலாமே? எனக்குத்தான் லால் பாக்ல வடக்கூர்க்காரிக்கு துண்டு போட முடியாமப் போயிருச்சி. இந்த பார்க்லயாவது எவளாவது வெள்ளக்காரிக்கு துண்டு போட்டுக்கிறேன்


ஹாலிவுட் பாலா: யோவ் நான் சினிமா விமர்சனம் சொல்லிக்கிட்டிருக்கேன்யா.


வானம்பாடிகள்: நம்ம ஈரோடு கதிர் தான் ஈரோடு சங்கமத்த ஏற்பாடு செஞ்சது. அவரக் கூப்பிட்டு யோசனை கேக்கலாமே?


குடுகுடுப்பை: கேளுங்க கேளுங்க. நம்ம சந்திப்பு ஊரெல்லாம் பேசப் படணும். நாம சந்திப்புல சாப்புடுற ஐட்டங்களைப் பாத்து ஊருல இருக்குற எல்லாருக்கும் நாக்குல எச்சி ஊறனும். ஆமா.


பழமை பேசி: நாங்கள் தென்கிழக்கு பதிவர்கள் சந்தித்தோமே? 


குடுகுடுப்பை: இன்னொரு தடவை அத சந்திப்புன்னு சொன்னீங்க கெட்ட கடுப்பாயிரும். நாலு பேரு - வெறும் நாலு பேரு மட்டும் சேந்த்து சரக்கடிச்சிட்டு கோழி பிரியாணி சாப்புடதுக்குப் பேரு சந்திப்பாய்யா?


வில்லன்: யோவ் உமக்கு பிரியாணி குடுக்கலைங்கிற கடுப்புல இப்பிடியெல்லாம் பேசக்கூடாது.


குடுகுடுப்பை: பின்னூட்டம் மட்டும் போடுறவுங்கள எல்லாம் பதிவர் சந்திப்புல சேக்கப்படாது


முகிலன்: அட இருக்கட்டும் தலைவா. கூட்டம் சேக்க வேணாமா?


வானம்பாடிகள்: இந்தா ஈரோடு கதிர் வந்துட்டாரு


ஈரோடு கதிர்: மௌனம் கசிகிற இந்த மாலை வேளையிலே நாம் எதற்காகக் கூடியிருக்கிறோம்?


அதுசரி: என்ன பாலா சார். கூட்டிட்டு வரும்போதே ஊத்தி விட்டுட்டு ச் சீ விளக்கி விட்டு கூட்டிட்டு வந்திருக்கக்கூடாதா?


வானம்பாடிகள்; அதொண்ணுமில்ல கதிர். நீங்க ஈரோட்டுல பதிவர் சங்கமம் நடத்துன மாதிரி இவங்க சர்வதேச பதிவர் சங்கமம் நடத்தணுமாம். அதுக்கு யோசனை கேக்குறாங்க.


ஈரோடு கதிர்: ஓ அப்பிடியா. அதொண்ணுமில்லீங். ஒரு எடம், ஒரு நாளு ரெண்டையும் முதல்ல குறிச்சிக்கணுங். பொறவு ஒரு விழாக்குழுவ நியமிச்சிக்கணுங். அந்தக் குழுவுல இருக்குற ஓவ்வொருத்தரு அவங்க அவங்க வலைப்பூவுல விளம்பரம் போட்டுரணுங்.


அனைவரும்: சரி


ஈரோடு கதிர்: அப்புறம் மைக் செட்டு, எட வாடகை, சாப்பாட்டுக்கெல்லாம் லோக்கல் பதிவர்கள் மட்டும் பங்கெடுத்துக்கனுமுங். யாராவது லாட்ஜ் வச்சிருக்கிற பதிவராப் பாத்துக்கிட்டீங்க்ன்னா லாட்ஜ் வாடகை மிச்சமுங்.


அனைவரும்: சரி


ஈரோடு கதிர்: அப்புறம் இந்தியாவிலருந்து ஒரு பதிவர், ஈரோட்டுல இருந்து ஒரு பதிவர்னு சிறப்பு விருந்தினரா கூப்டுக்கனுங்.


பழமை பேசி: ஏனுங் மாப்பி. ஈரோடு இந்தியாவுல ஒரு அங்கம் தானுங்?


ஈரோடு கதிர்: அட சும்மாருங் மாப்பி. அப்புறம் நாம எப்ப அமெரிக்கா, ஐரோப்பானு சுத்துரதுங். கேபிள் சங்கரெல்லாம் சிங்கப்பூர் போயிட்டு வந்துட்டாரு.


வானம்பாடி: ஓ அப்பிடி வர்றீரா? சரி சரி


குடுகுடுப்பை: இதெல்லாம் செஞ்சிரலாம். ஆனா எப்பிடி இந்த நிகழ்ச்சியை பிரபலப்படுத்துறது?


ஈரோடு கதிர்: அதுக்கென்னங். நம்ம மாப்பி நாலு பேரு கூடுற கூட்டத்துக்கெல்லாம் பிரமாதமா விளம்பரப் படுத்துறாரு. அவர் கிட்ட உட்டுட்டா விளம்பரம் கலக்கிறப்போறாரு.


முகிலன்: சரி அப்பிடியும் பாப்புலராகலைன்னா?


சின்ன அம்மிணி: நான் எழுதுன அம்மாவுக்கு சாமி வந்திருச்சி கதைய ஒரு குறும்படமா எடுத்து இந்த விழாவ ஒட்டி வெளியிட்டுட்டா??


அனைவரும் சின்ன அம்மிணியை ஒரு பார்வை பார்க்கின்றனர்.


சின்ன அம்மிணி: சரி சரி. வேற எதாவது சொல்லுங்க.


ஈரோடு கதிர்: விழா முடியவும் சுடச்சுட விழா நிகழ்வுகளை படத்தோட எல்லாரும் ஆளுக்கொரு பதிவெழுதிடறதுங்


அதுசரி: அதத் தான் இப்போ நாலு பேரு அகஸ்மாத்தா சந்திச்சிக்கிட்டாக் கூட படமெடுத்து போட்டுராங்களே? அதுல என்ன ஸ்பெசலாகப் போவுது?


வானம்பாடி: நான் என்னோட ரெக்கார்டரை எடுத்துக்கிட்டு வந்து எல்லாரும் பேசுறதை பதிவு செஞ்சி என் ப்ளாக்ல போட்டுடறேன்?


அதுசரி: அதையுந்தான் செய்யறாங்க


பழமை பேசி: நான் காணொளி எடுத்து வெளியிட்டா?


அதுசரி: நீங்களே அதை சலிக்கச்சலிக்க செஞ்சிட்டீங்க


முகிலன்: அப்பிடியும் பரபரப்பாவலைன்னா, நம்ம வில்லன சரக்கடிச்சிட்டு விழாவுல சலம்ப வச்சிரலாம். அதக் கண்டிச்சி ஒரு நாலு பேரு ஆதரிச்சி நாலு பேருன்னு பதிவு போட்ரலாம்.


அதுசரி: ஆமா ஆமா அப்பத்தான் அதுக்கு எதிர் பதிவு, எதிர் பதிவுக்கு எதிர் பதிவு, பின்னூட்டக்கும்மின்னு கொஞ்ச நாளைக்கி பதிவுலகம் பத்திக்கிட்டெரியும்


வில்லன்: நம்ம கெட்ட நேரத்துக்கு அதுவும் ஒர்க் அவுட்டாகலைன்னா?


குடுகுடுப்பை: உம்ம வாயில கொள்ளிக்கட்டையத் தேய்க்க..


நசரேயன்: தேச்சி என்ன புண்ணியம் ஒன்னும் வித்தியாசம் தெரியாது


சங்கர்: அப்பிடி எதுவும் ஒர்க் அவுட் ஆகலைன்னா, இந்த ஆடியோ வீடியோ ஃபோட்டோ போடுற பதிவுகளை குப்பைன்னு சொல்லி நான் ஒரு பதிவு எழுதுறேன்..


அனைவரும்: யாருய்யா அது?


முகிலன்: அட நம்ம சாரு சங்கர்.


அதுசரி: ஐடியா.. பேசாம சாருவை சிறப்பு விருந்தினராக் கூப்பிட்டா என்ன? பதிவுலகமே இதைக் கிண்டல் செஞ்சி எழுதித்தீத்துராது?


குடுகுடுப்பை: நல்ல யோசனையாத்தான் இருக்கு. ஆனா அந்தாளுக்குக் கட்டிங் குடுக்க நாம காசு தேத்த முடியாதே...


பலா பட்டறை ஷங்கர்: நான் உங்க சங்கமத்தை விமர்சனம் செஞ்சி ஒரு பதிவு போடுறேன்.


நசரேயன்: ஆமா ஆமா இவரு நல்லா விமர்சனம் போடுவாரு. கேபிள் சங்கர் புக்குக்கு இவர் எழுதின விமர்சனத்தைப் படிச்சிட்டு அவர் மயங்கி விழுந்துட்டாராம். இப்பிடியெல்லாமா நான் எழுதினேன் அப்பிடின்னு..


முகிலன்: சரி சரி. இது வரைக்கும் ப்ளான் பண்ண திட்டங்களை மட்டும் செயலாக்குவோம்.


நசரேயன்: ஆமா எங்க கூட்டம் நடத்துறது?


அதுசரி: ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் பொதுவான இடத்துல நடத்தலாம். 


நசரேயன்: அட்லாண்டிக் பெருங்கடல்ல ஆள் நடமாட்டமில்லாத ஒரு தீவு இருக்கு அங்க வச்சிக்கலாம். வரவேற்புக்கு மட்டும் ரெண்டு வடக்கூர்காரிகளைக் கூப்ட்ரணும். (தனக்குள்) அங்கயாச்சும் ரோஜா குடுக்க முடியுதான்னு பாக்குறேன். 


அனைவருக்கும் இந்த யோசனை பிடிக்கவும், கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் விழாக் குழுவாக தேர்ந்தெடுத்துவிட்டு கலைந்தனர். 


நிகழ்ச்சியைக் கண்டு களித்த நேயர்களுக்கு நன்றி. நம் சலம்பல் தொலைக்காட்சி பதிவர் சங்கமம் நிகழ்வையும் நேரலையாக உங்களுக்குத் தருவோம் என்ற வாக்குறுதியோடு விடை பெறுகிறோம்.வணக்கம் வணக்கம் வணக்கம்.

உறவுகள் - 08

பழையவை - 07 06 05 04 03 02 01

அந்த சம்பவத்திற்குப் பிறகு சுசிலாவுடன் பேச்சை வெகுவாகக் குறைத்துக் கொண்டாள் மஞ்சு. காலையில் வேலைக்குப் போவதற்கு முன் ரமேஷ் அவளுக்கு ப்ரேக் ஃபாஸ்ட் செய்து தந்துவிட்டு செல்வான். மதியம் 12 மணிக்குக் கீழே வந்தால், சாப்பாடு மேஜை மேல் இருக்கும் – வழக்கம்போல சுசிலாவுக்கோ ராகவனுக்கோ பிடித்த சாப்பாடு – அதை இவளே பரிமாறி சாப்பிட்டு விட்டு மறுபடி அவள் படுக்கையறைக்குப் போய்விடுவாள். தன் சொந்த வீட்டிலேயே கைதி மாதிரி இருப்பது மிகுந்த மன அழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

யூ-ட்யூபில் பெரியம்மா பெண்ணின் வளைகாப்பு வீடியோவை நாற்பத்தி நான்காம் தடவையாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் மஞ்சு. அவள் விழிகள் நீர்கோத்திருந்தன. அப்பா அம்மா வந்திருந்தால் தனக்கும் வளைகாப்பு நடத்தியிருப்பார்கள். ரமேஷின் பெற்றோருக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்குமா தெரியவில்லை. ரமேஷுக்கு இப்படி செய்ய வேண்டும் என்று தோன்றுமா என்றும் தெரியவில்லை. வாய் விட்டு கேட்கவும் எதுவோ தடுத்தது. கண்களின் ஓரத்தில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டாள்.

************************************************************************

ராகவனும் சுசிலாவும் L வடிவ சோஃபாவில் ஆளுக்கொரு பக்கம் அமர்ந்து டிவியில் எதோ சிரியல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மஞ்சுவை ஒரு நண்பரின் வீட்டிக்குப் போயிருந்தாள். ஒரு சேஞ்சுக்காக. ரமேஷ் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தான்.

“ட்ரடிஷனலா இருக்கட்டும் சிவா”
“அப்பிடியே செஞ்சிரலாம்”

போனை அணைத்து விட்டு ஃப்ரிட்ஜில் தண்ணீர் பிடித்து குடித்துக் கொண்டே வந்து இருவருக்கும் நடுவில் அமர்ந்தான்.

“அம்மா.. என் ஃப்ரண்ட்ஸ் மஞ்சுவுக்கு பேபி ஷவர் செய்யலாம்னு இருக்காங்க”

“அப்பிடின்னா?” சுசிலாவின் முகத்தில் கேள்விக்குறி.
“நம்ம ஊர்ல வளைகாப்பு மாதிரி. நான் அதை நம்ம வளைகாப்பு மாதிரியே ட்ரடிஷனலா செய்யலாம்னு நினைக்கிறேன்”

“எப்பிடிப்பா? நம்ம வீட்டுல நடத்த முடியுமா?”

“இல்லம்மா பக்கத்துல ஒரு ஹால் புடிச்சி…”

“சரி. செய்யுங்க”

“இல்லம்மா, எப்பிடி நடத்தனும்னு..”

“அவங்க வீட்டுல இருந்து வந்துதான நடத்தனும்?”

“அவங்கம்மா அப்பா வந்திருந்தாங்கன்னா கண்டிப்பா நடத்தியிருப்பாங்க. அவங்கதான் வர முடியலையே. அவங்க இருந்து நடத்தியிருந்தா எப்ப்டியிருக்குமோ அப்பிடியே செய்யணும்”

“5 வகை சாதம் செய்யணும். வளையல் வாங்கனும். 9 அல்லது 5 மாசமா இருக்குறவுங்களக் கூப்பிட்டு அவங்களுக்கும் வளையல் போட்டு சாப்பாடு போட்டுவிடனும்”

“இந்த ஊர்ல எங்கிட்டிருந்து கர்ப்பிணிகளைத் தேடுறது?” ராகவன் குறுக்கிட்டார்.

“அதை மட்டும் விட்டிடலாம்பா. வளையல் 5 வகை சாதம் செஞ்சிரலாம்”

“சரிப்பா”

ரமேஷ் எழுந்து ஃபோனில் நண்பன் ஒருவனை அழைத்து ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தான்.

**********************************************************************

வளைகாப்புக்கான ஏற்பாடுகள் மளமளவென நடந்து கொண்டிருந்தன. சுகுமார் நியூ ஜெர்சியில் இருந்து வளையல், இனிப்புகள் மற்றும் தாம்பூலப் பையில் போட வேண்டிய பொருட்களை வாங்கி அனுப்பியிருந்தான். அவர்களால் வரமுடியாத காரணத்தையும் சொல்லியிருந்தான்.

விழா அன்று காலை உடன் வேலை பார்க்கும் இரு நண்பர்களின் – முத்து, சிவா -  மனைவிகளும் வீட்டில் இருந்தனர். 5 வகை சாத வகைகள் – புளியோதரை, லெமன் சாதம், கற்கண்டு சாதம், தேங்காய் சாதம், சாம்பார் சாதம் – தயாராகிக் கொண்டிருந்தன. மஞ்சு அவர்களுக்கு சமையல் பொருட்கள் இருக்குமிடத்தை சொல்லிக் கொண்டிருந்தாள். ரமேஷ் தாம்புலப் பொருட்களைப் போட்டுத் தருவதற்கான பைகளை வாங்க வால்மார்ட் வரை போயிருந்தான்.

சுசிலாவும் ராகவனும் தங்கள் அறையை விட்டு வெளியே வரவில்லை.

ரமேஷ் மதியமே அந்த ஹாலை அலங்கரிக்க சென்று விட்டான். உடன் அவன் நண்பர்களும்.

அந்த ஹால் ஒரு 200 பேர் நிற்கும் அளவிற்குப் பெரிய ஹால். எப்படி அலங்கரிப்பதென்று மூவருக்குமே தெரியவில்லை. ஹம் ஆப் கே ஹைன் கோன் படத்தில் பார்த்ததை மனதில் வைத்துக் கொண்டு நடுவில் ஒரு சேரைப் போட்டு அதைச் சுற்றி தட்டுகளில் பூ, பழங்கள், புடவை, வளையல்கள், இனிப்புகள் ஆகியவற்றை வைத்தனர்.

அரை வட்ட வடிவில் நாற்காலிகளைச் சுற்றிப் போட்டு விட்டு வீடியோ கேமிராவை நடுவில் வைத்தார்கள். சுவற்றில் பலூன்களையும் கலர் காகிதங்களையும் ஒட்டி விட்டனர்.

விழாவுக்கான நேரம் நெருங்கவும், ரமேஷின் நண்பர்கள் ரமேஷின் பெற்றோரையும், மஞ்சு மற்றும் அவர்களின் மனைவிகளையும் அழைத்து வர ரமேஷின் வீட்டுக்குச் சென்றனர். ரமேஷ் விழாவுக்கு வருபவர்களை வரவேற்க ஹாலிலேயே நின்று விட்டான்.


நண்பர்களாக நடத்திய விழா என்பதால் சிரிப்பும் கேலியுமாக விழா இனிதே நடைபெற்றது. வந்து குவிந்த பரிசுப் பொருட்களை எடுத்துச் செல்லவே தன் கார் பத்தாது என்பதால், சிவா தன் காரில் சுசிலாவையும் ராகவனையும் வீடு வரை வந்து விட்டு விட்டுப் போனான்.

மஞ்சு சில நாட்களாக இருந்த மன அழுத்தம் குறைந்து கொஞ்சம் லேசாகியிருந்தாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு நிம்மதியாக நீண்ட நேரம் உறங்கினாள்.

******************************************************************

அடுத்த நாள் அலுவலகத்தில் ஆணி புடுங்கிக் கொண்டிருந்த போது நிழலாடியது. திரும்பிப் பார்த்தான். சிவா.

“வா சிவா. என்ன மேட்டர்?”

சிவாவின் க்யூபிக்கில்க்குள் வந்த சிவா, “உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் ரமேஷ். இங்க வேணாம். வெளிய போலாமா?”

ரமேஷுக்குள் குழப்ப சுனாமி. எதற்கு அழைக்கிறான்? ஒரு வேளை கஸ்டமர்கள் படுத்துகிறார்களோ?

“ஒரு நிமிசம். சிவா. நான் இந்த ஈ-மெயில் அனுப்பிட்டு வந்துடுறேன்”

குழப்பத்துடனே அந்த ஈ-மெயிலைத் தட்டி send பட்டனை அழுத்தி விட்டு எழுந்தான். Fall jacket எடுத்து அணிந்து கொண்டு சிவாவின் பின்னால் நடந்தான்.

இருவரும் லிஃப்டில் ஏறியதும், ஆர்வம் தாங்காமல் கேட்டான் “என்ன விசயம் சிவா? ஜோ எதுவும் சொன்னானா?”

“இல்ல ரமேஷ். இது அஃபிஷியல் இல்லை. கொஞ்சம் பெர்சனல்”

பேசிக் கொண்டிருக்கும்போதே லிஃப்ட் கீழ்தளத்தில் நின்றது. இருவரும் வெளியே வந்தனர். சிவா பையில் இருந்து ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்தான்.

“ரமேஷ், உங்க பேரண்ட்ஸ்க்கும் மஞ்சுவுக்கும் எதுவும் பிரச்சனையா?”

ரமேஷ் அதிர்ந்தான். இவன் எதற்கு இதைக் கேட்கிறான்?

“என்ன பிரச்சனை? அப்பிடி எதுவும் இல்லையே?”

“இல்ல சிவா. உங்கம்மா ரொம்ப கோவமா இருக்காங்க போல. உங்க மேரேஜ் லவ் மேரேஜ்னு எனக்குத் தெரியும். ஆனா இண்டர் கேஸ்ட் மேரேஜ்னு தெரியாது”

“யார் உங்கிட்ட சொன்னா?”

“உங்கம்மா அப்பா தான். நேத்து நான் தான அவங்கள வீட்டில இருந்து ஹாலுக்கு கூட்டிட்டு வந்தேன். அப்போ பேசினாங்க”

“என்ன சொன்னாங்க?”

“எங்க ரெண்டு பேரப் பத்திக் கேட்டாங்க. சொன்னோம். ஒரே மதமா, ஜாதியா, கல்யாணம் ஆகி எவ்வளவு நாளாச்சி, எத்தன பிள்ளைங்க அப்பிடி இப்பிடியேல்லாம் கேட்டுட்டு எங்க சொந்தத்துலயே நெறய படிச்ச பொண்ணுங்க இருக்கு. அதுகள கல்யாணம் செஞ்சி வச்சிருந்தா இன்னேரம் அஞ்சு வருசத்துல ரெண்டு பிள்ளைகளைப் பெத்துப் போட்டிருப்பாங்க. எங்கிருந்து பிடிச்சானோ இந்த வேற ஜாதிப் பொண்ண, ஒரு பிள்ளைக்கே திக்கித் திணற வேண்டியிருக்கு. அப்பிடின்னு சொன்னாங்க”

”அப்பிடியா சொன்னாங்க”

“ஆமா ரமேஷ். அவங்க பேசினதப் பாத்தா அவங்களுக்கு மஞ்சுவை சுத்தமா பிடிக்கலை மாதிரி இருக்கு. இந்த நேரத்துல ரொம்ப கேர்ஃபுல்லா பாத்துக்கணும். இப்பிடி இருந்தா அது மஞ்சுவுக்கும் நல்லதில்ல பிறக்கிற கொழந்தைக்கும் நல்லதில்ல”

“கரெக்ட்தான் சிவா”

“ஒரு ஃப்ரண்டா சொல்றேன். இந்தப் பிரச்சனைய உடனே தீர்க்கப் பாருங்க. இல்லைன்னா அவங்கள ஊருக்கு அனுப்பிட்டு மஞ்சுவோட அம்மா அப்பாவைக் கூட்டிக்குங்க”

“தேங்க்ஸ் சிவா. உனக்கு ஏற்கனவே எக்ஸ்பீரியென்ஸ் இருக்கிறது எங்களுக்கு ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கு. மஞ்சுவோட பேரண்ட்ஸ் இப்போ தானே வந்துட்டுப் போனாங்க. அதோட என் மாமியாருக்கு லீவ் கிடைக்காது. அதுனாலதான் இவங்கள வரச்சொன்னேன். என்ன செய்யறதுன்னு நான் யோசிக்கிறேன்”

“எது செஞ்சாலும் சீக்கிரம் செய்யுங்க ரமேஷ். நாங்க கூட சொல்லிப் பாத்தோம். நீங்க ரெண்டு பேரும் ரொம்ப அன்பா இருக்கிறத, மஞ்சு உங்கள டேக் கேர் பண்ணிக்கிறதையெல்லாம். ஆனா அவங்க உங்க மேலயும் கோவமா இருக்காங்க. மஞ்சுவை தலைல தூக்கி வச்சிட்ட்டு ஆடுறீங்கன்னு சொல்றாங்க. என்னையும் ராஜியையும் அன்னிக்கித்தான் பாத்தாங்க. அதுக்குள்ளே எங்க கிட்ட இவ்வளவு சொல்றாங்கன்னா அவங்க மனசுல இன்னும் எவ்வளவு இருக்கோ தெரியலை. பாத்துக்குங்க ரமேஷ்”

“தேங்க்ஸ் சிவா. நான் இன்னிக்கே எங்கப்பா அம்மாக்கிட்ட பேசுறேன்”

சிவா சிகரெட்டின் கடைசி இழுப்பை இழுத்து விட்டு கீழே போட்டு நசுக்கினான். நசுங்கிய சிகரெட்டை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருந்தான் ரமேஷ். அந்த சிகரெட் துண்டில் அவன் முகம் பிரதிபலித்தது போல இருந்தது.

(தொடரும்)

Thursday, March 18, 2010

கொடுமை

தப்பு
சரி
சரி
தப்பு
தப்பு தப்பு
சரி சரி
தப்பு சரி
சரி தப்பு
...
...
கருத்தை விட்டுட்டு சொன்னவன்
கோமணத்த உருவு..

Wednesday, March 17, 2010

கனவு தேசம்

இந்தியாவில் என்றில்லை, உலகம் முழுக்கவே அமெரிக்கா ஒரு கனவு தேசம் என்றொரு நினைப்பு பரவலாக இருக்கிறது. அது உண்மையா? இல்லையா? என்பதை எடுத்துக் காட்டுவதே இப்பதிவுத் தொடரின் நோக்கம்.


1970களில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்த இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் தொழில்முறை பட்டப்படிப்பு படித்தவர்கள் – அதாவது டாக்டர்கள், இஞ்சினீயர்கள்.

அந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவில் படித்த இளைஞர்களுக்குத் தட்டுப்பாடு இருந்தது. ஏன் இருந்தது?

1940களில் அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டு வந்தது. அப்போது பெரும்பாலான ஆண்கள் போரில் படை வீரர்களாக பங்கு பெற்றிருந்தனர். அதனால் குழந்தைப் பிறப்பு கிட்டத்தட்ட இல்லவே இல்லை எனலாம். ஆக 1970களில் இளைஞர் தட்டுப்பாடு இருந்தது ஆச்சரியமில்லை தானே?

அப்போது இந்தியா போன்ற நாடுகளில் இருந்து படித்தவர்கள் சென்று அமெரிக்க விமான நிலையங்களில் இறங்கினால் போதும். அவர்களின் படிப்புத் தகுதியை பார்த்துவிட்டு விமான நிலையத்திலேயே க்ரீன் கார்ட் (நிரந்தரக் குடியிருப்பு உரிமை) வழங்குவார்களாம். அப்போது வந்தவர்களுக்கு கண்டிப்பாக அமெரிக்கா ஒரு கனவு தேசம் தான்.

ஏனென்றால் அப்போது இந்தியா வளர்ந்திருக்கவில்லை. டி.வி என்பதைப் பார்க்காத குடும்பங்கள் நிறைய. தொலைபேசி என்பது ஆடம்பரமாகக் கருதப்பட்டு வந்த நாட்கள் அவை. அப்படிப் பட்டவர்களுக்கு அமெரிக்காவில் இறங்கியது கார் வாங்குவது, ஃபோன் வைத்துக் கொள்வது தொலைக்காட்சிப் பெட்டியில் பத்துக்கும் மேற்பட்ட சானல்களைப் பார்ப்பது, எல்லாவற்றிற்கும் மேலாக கை நிறைய சம்பளம் வாங்குவது ஆகியவை பெரிய கனவு நனவானதாகவே இருந்திருக்கும்.

அடுத்த பத்து ஆண்டுகளில் அமெரிக்காவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியது. இந்த இளைஞர்களை Baby Boomers என்று அழைப்பார்கள். காரணம்? அதே உலகப்போர். உலகப்போர் முடிந்து நாடு திரும்பிய இளைஞர்களுக்கு 1950களில் குழந்தை உற்பத்தியைத் தவிர வேறு பெரிய பணி இல்லை போலும். அதனால் அதிகப்படியான இளைஞர்கள் 1980களில் இருந்தார்கள்.

இந்தக் காலகட்டத்தில் அமெரிக்கா வந்தேறிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தன் பிடியை இறுக்கத் துவங்கியது.

விசா கட்டுப்பாடுகள் அதிகமாயின. 1990களின் இறுதியில் மீண்டும் இந்திய மூளை அவர்களுக்குத் தேவைப் பட்டது. இந்த முறை கணினித் துறையினர். ஆம், அனைவரும் கேள்விப்பட்டது தான். Y2K என்றழைக்கப்பட்ட பிரச்சனைக்குத் தீர்வெழுத இந்திய கணிப்பொறி வல்லுனர்கள் தேவைப் பட்டார்கள். மறுபடியும் இருகை விரித்து உள்ளே அழைத்துக் கொண்டது அமெரிக்கா.

அதோடு இந்திய மென்பொருள் நிறுவனங்கள் இப்போது மெதுவாக வளரத் துவங்கியிருந்தன. ஆஃப்ஷோர் மாடல் என்னும் வடிவில் கணினி வேலைகள் இந்தியாவுக்குப் படை எடுக்கத் துவங்கின. அதிலும் லாபம் பார்க்கத் துவங்கின அமெரிக்க கம்பெனிகள். ஆம், அமெரிக்காவில் ஒரு கணினி வல்லுனருக்கு ஒரு மணி நேரத்திற்கு $40-$50 வரை சம்பளம் கொடுக்க வேண்டும். அதோடு அவர்களுக்கான ஒரு இடம், ஒரு கணினி, கார் பார்க்கிங், மற்ற வசதிகள் என்றெல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்தால், ஒரு ஆளுக்கு $50-$60 வரை செலவிட வேண்டியிருக்கும். அதே நேரத்தில் இந்தியாவுக்கு அந்த வேலையை அனுப்பினால் $30-$40 க்குள் மொத்த செலவும் முடிந்து விடும். $20 வரை லாபம். இதெல்லாம் ஒரு மணி நேரத்திற்கு. ஒரு வாரத்துக்கு 40 மணி நேரம். 200 பேர் வேலையை இந்தியாவுக்கு அனுப்பியதாக கணக்கு வைத்துக் கொள்ளுங்க. 200 X 40 X 20 = $160,000 ஒரு வாரத்துக்கு மிச்சம். ஆக, மீண்டும் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு குறையத் துவங்கியது.

2000ம் ஆண்டு. புஷ் பதவி ஏற்றதும் அமெரிக்க பொருளாதாரம் சரியத் துவங்கியது. அதற்கு கிளிண்டனின் பொருளாதாரக் கொள்கை குற்றம் சாட்டப்பட்டது. பல இணைய நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. மீண்டும் வேலையில்லாத் திண்டாட்டம் மெதுவாக தலை எடுக்கத் துவங்கியது.

போதாத குறைக்கு அல் கொயிதா 2001ல் உலக் வர்த்தக மையத்தை விமானங்கள் மூலம் தகர்த்தனர். உடனே வெகுண்டெழுந்த புஷ், ஆஃப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தார். அமெரிக்க பொருளாதாரம் சரியத் துவங்கியது.

2004ம் ஆண்டை ஒட்டி சற்றே நிமிரத் துவங்கிய பொருளாதாரத்தை இராக் மீது போர் தொடுத்து மீண்டும் குழியில் தள்ளத் துவங்கினார் புஷ்.

இது வரை அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியைக் கண்டாலும் அது பொது மக்களை அவ்வளவாகப் பாதிக்கவில்லை. ஆனால் 2008ம் ஆண்டில் நிதி நிறுவனங்கள் அதிகப்படியாகக் கொடுத்த வீட்டுக் கடன்களால் பாதிக்கப்பட்ட போது அது நேரடியாக மக்களைப் பாதிக்க ஆரம்பித்தது. பலர் வேலையை இழந்தனர். பலர் வீட்டை இழந்தனர்.

இப்போது அமெரிக்கப் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது.

இப்போது தங்கள் நாட்டு குடிமக்களின் நலனையும் வேலையையும் பாதுகாக்க அமெரிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கியமாக விசா கட்டுப்பாட்டை அதிகப் படுத்தியிருக்கிறது.

ஒருவர் அமெரிக்காவுக்க வர விரும்பினால என்ன என்ன விசா வகைகள் இருக்கிறது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

Saturday, March 13, 2010

கௌரவக் கொலைகள் - சுஷ்மா திவாரி

முதலில் நண்பர் வெண்ணிற இரவுகள் கார்த்திக்குக்கு என் நன்றி.

இந்தச் செய்தியை எனக்குத் தெரியப் படுத்தியதற்காக.

சுஷ்மா திவாரி - மும்பையைச் சேர்ந்த பிராமண வகுப்பில் பிறந்த பெண். இவர் கேரள ஈழவா சமூகத்தைச் சேர்ந்த பிரபு நோச்சில் என்பவரைக் காதலித்து மணம்புரிந்திருக்கிறார்.

இதைப் பொறுக்காத இவரது அண்ணன் திலிப் திவாரி தன் அடியாட்களுடன் பிரபு நொச்சிலின் வீட்டுக்குச் சென்று பிரபு உட்பட நான்கு பேரை வெறித்தனமாகக் கொன்று தீர்த்திருக்கிறார். இன்னும் இருவருக்கு பலத்தக் காயம். கர்ப்பிணியான சுஷ்மா அப்போது வீட்டில் இல்லாத காரணத்தால் தப்பித்துவிட்டிருக்கிறார். இது நடந்தது 2004ல்.

மும்பை செசன்ஸ் நீதிமன்றமும், மகாராஷ்டிர உயர்நீதிமன்றமும் அந்தக் கொடூரன் திலிப் திவாரிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறது. கடந்த வருடம் உச்ச நீதிமன்றம் அந்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

குற்றவாளி திருந்த வாய்ப்பளிப்பதற்காகத்தான் தண்டனை. அங்கே மரணம் என்பது அவனுக்குத் திருந்த ஒரு வாய்ப்பே இல்லாமல் செய்து விடும் என்பதால் யாருக்கும் மரணம் தண்டனையாக விதிக்கப்படக் கூடாது என்பது என் கட்சியாக இருந்த போதிலும், உச்ச நீதி மன்றம் இந்த தண்டனைக் குறைப்புக்கு சொல்லியிருக்கும் காரணம் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதான் அந்தக் காரணம் - “It is a common experience that when the younger sister commits something unusual and in this case it was an inter-caste, intercommunity marriage out of [a] secret love affair, then in society it is the elder brother who justifiably or otherwise is held responsible for not stopping such [an] affair.”


“தன் இளைய சகோதரி இயல்புக்கு மாறாக - ரகசியக் காதல் காரணமாக நடந்த கலப்புத் திருமணம் - நடந்து கொள்ளும்போது, இந்தச் சமூகத்தில் தன் தங்கையை இந்தச் செயலைச் செய்ய தடுத்து நிறுத்தும் பொறுப்பு மூத்த சகோதரனுக்கே உள்ளது. ”




It added: “If he became the victim of his wrong but genuine caste considerations, it would not justify the death sentence... The vicious grip of the caste, community, religion, though totally unjustified, is a stark reality.”
மேலும், “அவர் அப்படிப்பட்ட முற்றிலும் தவறான அதே சமயத்தில் இயல்பான சாதிச் சூழலுக்கு பலியாகியிருப்பதால், இந்தக் குற்றத்துக்கு மரண தண்டனை நீதியாகாது. சாதி, சமூகம், மதம் ஆகியவற்றின் கொடுமையான பிடி, சரியானதில்லை என்ற போதிலும், மறுக்க முடியாத ஒன்று.”
ஆக உச்ச நீதி மன்றம் இந்தத் தீர்ப்பால் என்ன சொல்ல வருகிறது என்றால் குடும்பத்தில் ஒருவர், குடும்பத்தின் மரியாதையைக் குலைக்கும் வண்ணம் கலப்புத் திருமணம் செய்து விட்டால், அதன் காரணமாக நடைபெறும் கொலைகள் “கௌரவக் கொலைகள்”, அந்தக் குற்றத்திற்கு உச்ச பட்ச தண்டனை அளிக்க வேண்டியதில்லை.
சுஷ்மா திவாரி இந்தத் தீர்ப்பு Prevention of Atrocities - 1989 சட்டப்படி சாதிய ரீதியிலான வன்முறைக்கு அதே சாதிய ரீதியிலான வெறுப்பு / கோபத்தைக் காரணம் காட்டி தண்டனையைக் குறைத்தது அநீதி என்று வழக்குப் போட்டு போராடி வருகிறார். இந்தத் தீர்ப்பு கலப்புத் திருமணம் செய்ய முனையும் பலரை யோசிக்க வைக்கும் என்பது மட்டும் உண்மை.
நம் நாட்டில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிப்பது என்பது நீதி மன்றத்தை அவமதிப்பு செய்ததற்கு சமம். அதனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்காது சுஷ்மாவுக்கு நமது ஆதரவை, இதைப் பற்றி எழுதுவதன் மூலம் தெரிவிப்போம்..
பதிவர்களாகிய நமக்குத் தெரியவந்தால் எந்த அநீதியையும் சாடுவோம், அதை எதிர்த்துப் போராடுபவர்களுக்குத் துணை நிற்போம் என்று இந்த உலகுக்கு நிரூபிப்போம்.
நண்பர்களே, நாம் அஜித் மேடையில் பேசியதையும், சச்சின் 200 அடித்ததையும், நித்யானந்தா-ரஞ்சிதா படுக்கையைப் பகிர்ந்து கொண்டதையும் மட்டுமல்ல, இப்படிப் பட்ட விசயங்களையும் தமிழிஷில் ஹாட் பக்கத்துக்கு கொண்டு வருவோம்.
இந்தப் பதிவைப் படிக்கும் என் சக பதிவர்களுக்கு என் வேண்டுகோள்:
நீங்களும் இதைப் பற்றி எழுதுங்கள். உங்கள் நண்பர்களையும் எழுதச் சொல்லுங்கள். எத்தனை பேருக்கு இந்த விசயத்தைக் கொண்டு செல்ல முடியுமோ அத்தனை பேருக்குக் கொண்டு செல்வோம். 

Friday, March 12, 2010

பிதற்றல்கள் - 03/12/2010

கடந்த ஒரு வாரமாக நித்தியானந்தரும், மகளிர் தினமும் 33% இடஒதுக்கீடு மசோதாவும் பத்திகளை நிரப்பிக் கொண்டிருக்க, தினமணி நாளிதழின் தலையங்கத்தில் நான் பார்த்த அந்த தலையங்கம் என்னை அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியது.

இன்னும் எத்தனை நாளைக்கு அமெரிக்காவுக்கு ஜால்ரா தட்டிக் கொண்டு புதிய பொருளாதாரக் கொள்கை, அந்நிய நாட்டு முதலீடு, இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் என்று சொல்லிக் கொண்டு அப்பாவி மக்களின் உயிருக்கு உத்தரவாதமில்லாத செயலைச் செய்வார்கள் இந்த மன்மோகன்சிங்குகள் என்று தெரியவில்லை. இதே அந்நிய நாட்டு முதலாளிகள் அமெரிக்க/ஐரோப்பிய/ஆஸ்திரேலிய நாடுகளில் இப்படி ஒரு சட்டத்தை எதிர்பார்க்க முடியுமா?

*****************************************************************

சமீபத்தில் நான் எழுதிய பூ-வலி கதையில் பலர் நியாபகம் வைத்துக் கேட்ட கேள்வி, ஏன் உறவுகளை இன்னும் தொடரவில்லை என்று.

நான் உறவுகள் என்ற அந்தக் கதையைத் தொடங்கியது, கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு அந்தக் காலகட்டத்தில் என்ன எதிர்பார்ப்பு இருக்கும், அதை மாமியார் என்ற ஒருவரால் 100% நிறைவேற்ற முடியுமா? அப்படி முடியாத பட்சத்தின் என்ன மாதிரி பிரச்சனைகள் வரும் என்பதைப் பற்றி சொல்லவே. இதில் வரும் பிரச்சனைகள் பல உணவு சம்மந்தமாகவே இருப்பதாக பலர் கடிந்து/சலித்துக் கொண்டனர். ஆனால் என்ன செய்வது, உணவுக்காகத் தானே வாழ்கிறோம்?

அதோடு கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு நாக்குக்கு ருசியாக சாப்பிடவேண்டும் என்பது தானே (குழந்தைக்கும் சேர்த்து) பிரதானமாக இருக்கும்?

ஆனாலும் வேறு பிரச்சனை எதையாவது யோசித்து விட்டே கதையைத் தொடர வேண்டும் என்பதால் தான் இந்த நீஈஈஈஈஈஈண்ட இடைவெளி. விரைவில் தொடர்வேன்.

*******************************************************************

விண்ணைத் தாண்டி வருவாயா நான் பார்க்கவில்லை. மச்சான்ஸ் என்ற இந்த வலைப்பூவில் நான் பார்த்த இந்த வீடியோவில் அருமையாக பண்டோராவையும், வி.தா.வ வையும் மிக்ஸியிருக்கிறார்கள். நீங்களும் பார்த்து ரசியுங்கள்.



********************************************************************
நூறாவது மகளிர் தினத்தன்று முதன்முதலாக சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதைத் தட்டிச் சென்ற கேத்தரின் பிகலோவுக்கு வாழ்த்துகள்.

சினிமாத்துறையில் நடிப்பு, பின்னணி பாடகர் போன்ற துறைகளில் பெண்கள் பெருமளவில் இருந்தாலும், திரைக்குப் பின்னால் அவர்களின் பங்களிப்பு கோலிவுட்டோ ஹாலிவுட்டோ மிகவும் சொற்பமாகவே இருந்து வந்திருக்கிறது. சினிமாத்துறை ஆணாதிக்கத் துறையாக இருந்து வருவது அதற்குக் காரணமாக இருக்கலாம். இந்த ஆஸ்கர் வெற்றி அந்தக் குறையைப் போக்கி பல பெண் இயக்குநர்களையும், மற்ற behind-the-screen கலைகளில் ஈடுபடுபவர்களையும் கொண்டு வரும் என்று நம்புவோம்.

*********************************************************************
வானம்பாடிகள் சார் இங்க சொன்ன மாதிரி புது வருசத்துல இருந்து யார் கவிதைக்கும் உரை எழுதுறத செய்யக்கூடாதுன்னு தீர்மானம் எடுத்திருந்தேன். ஆனாலும் ரசிகப் பெருமக்கள் விரும்பி வேண்டி கேட்டுக்கிட்டதால....

(மன்னிச்சிருங்க யக்காவ்)


பன்னாட.. வெண்பா...

தம்மனத்தை வாங்கும் தடந்தோளான் 
இது தூது போன அன்னப் பறவை தமயந்தியிடம் நளனைப் பற்றி சொன்னது. மங்கையர்கள் தம்மனத்தை வாங்கும் தடந்தோளன்
நளனிடம்
நாற்குணமும் நாற்படையா
ஐம்புலனும் நல்லமைச்சா 

இது அதே அன்னம் தமயந்தியோட குணங்களா நளனிடம் சொன்னது (அச்சம், மடம், பயிர்ப்பு, நாணம் ஆகிய நான்கு குணங்களும் நான்கு படைகளாகவும், பார்த்தல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல், தொடுதல் ஆகிய ஐந்து புலன்களை ஐந்து அமைச்சர்களாகவும் பெற்றிருக்கும் பேரரசி தமயந்தி)
தரகர் வேலைக்கே ஆகிப்போச்சா... இப்பிடி நளனுக்கும் தமயந்திக்கும் தூது(தரகர்) வேலைக்குச் சென்றே உன் புத்தியெல்லாம் தீர்ந்து போச்சா?
வேலை மெனக்கெட்டு பாலைப் பிரிச்சு..
தண்ணியைக் குடிச்சே வீங்கி போச்சு... 
அன்னம் பாலையும் தண்ணீரையும் பிரித்து உண்ணும் என்று சங்ககாலத்தில் ஒரு நம்பிக்கை இருக்கிறது. இந்தக் கவிதையில் சொல்லப்படும் அன்னப் பறவை, வேலை மெனக்கெட்டு பாலைப் பிரிச்சி தண்ணிய மட்டும் குடிச்சிக் குடிச்சி வீங்கி போச்சு
அங்க பாரு... 
குப்பையோட சேர்ந்து...
தன்னையும் எரிச்சு...
சுண்டக் காய்ச்சுது பால.. 

சேரக் கூடாதவுங்களோட சேந்து தன்னையும் எரிச்சி பிரிச்ச பால சுண்டக்காச்சுது.
பன்னாட... பன்னாட...
இது அந்த பறவையைத் திட்டும் வார்த்தை.. அன்னம் ஒரு விசயத்தில் உள்ள நல்லதை எடுத்துக் கொண்டு கெட்டதை விடும் செயலுக்கு உதாரணம்/உருவகம். பன்னாடை என்னும் சல்லடையோ நல்ல விசயங்களை விட்டு விட்டு கசடுகளை மட்டுமே தன்னகத்தே கொள்ளும் செயலுக்கு உ.தா. தன்னியல்பை செய்யாமல் எதிர்மறையாக செய்கிறது.


இந்தக் கவிதை ஒரு அப்ஸ்ட்ராக்ட். படிக்கும் ஒவ்வொருவருக்கும் அவர் மனநிலையைப் பொறுத்து அர்த்தம் தோன்றுகிறது. நான் நான்கு மனநிலையில் இருந்து இதைப் பார்த்தேன்.


1. ஈழத்தமிழர் - நம்மை வேட்டையாடிய கூட்டத்தைச் சேர்ந்தவன் அவன் கூட்டத்தாரோடு பிரச்சனை என்று வந்ததும் அவன் பின்னால் போய் அணி சேர்ந்து நிற்கிறார்களே? என்ற ஆதங்கம்.


2. நித்யானந்தத்தின் பக்தர் - சினிமா நடிகைகளையும் பார்ட்டிகளில் சுற்றித் திரியும் நடிகைகளுடன் சேர்ந்து ஆன்மிகத்தை விட்டு விட்டு இப்படி அசிங்கத்தில் இறங்கிவிட்டாயே நித்யானந்தம்? அந்த நடிகைக்கு இதெல்லாம் சாதாரணமாய் இருக்கலாம். ஆனால் உலகம் உன்னையல்லவா ஏளனம் செய்கிறது? 


3. ரஞ்சிதாவின் ரசிகர் - கட்டிய கணவனை விட்டுப் பிரிந்த துக்கத்தை மறக்க ஆன்மிகம் தான் வழியென்றால் அதற்கு இந்த நித்தியானந்தத்திடம் போய் உறவு கொள்ளும் அளவுக்கா ஆன்மிகத்தில் ஈடுபடுவது? அந்த ஆளின் சாயத்தை வெளுக்க உன் அந்தரங்கத்தை அல்லவா நாறடிக்கிறார்கள்?


4. சாருவின் விசிறி - எத்தனையோ நல்ல விசயங்கள் உலகத்தில் இருக்கும் போது இந்த சாமியாருடன் சேர்ந்து அவருக்குப் போய் சொம்பு தூக்கினீரே? இப்போது அதே சாமியாருடன் சேர்ந்து உன்னையும் தானே இந்த உலகம் கும்முகிறது? 


இதுதான் ஒரு கவிதையின் பலம். எழுதியவர் மேலே உள்ள எந்த நிகழ்வையும், இல்லை வேறு ஏதாவது ஒரு நிகழ்வைக்கூட மனதில் வைத்து எழுதியிருக்கலாம். ஆனால் ஊற்றப்படும் பாத்திரத்துக்கு ஏற்ப வடிவம் மாறும் நீரைப் போல படிப்பவரின் மனநிலைக்கேற்ப அர்த்தம் விளங்கும் இது மாதிரி கவிதைகள் எனக்கு எழுத வரவில்லையே என்ற வருத்தத்தை எனக்குள் தோற்றுவிக்கிறது இக்கவிதை.


சாலையில் ஒரு மரத்துண்டு கிடக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.அதைப் பார்க்கும் 


ஒரு சிற்பிக்கு அந்த மரத்தில் ஒரு நல்ல சிற்பம் வடிக்கத் தோன்றும்.
ஒரு தச்சனுக்கு முக்காலி ஒன்று செய்யத் தோன்றும்
ஒரு விறகு வியாபாரிக்கு உடைத்து அதை விறகாக்கி விற்கத் தோன்றும்
ஒரு கிரிக்கெட் வீரனுக்கு அந்த மரத்தில் மட்டையும் ஸ்டம்புகளும் செய்து விளையாடத் தோன்றும்
ஒரு சுற்றுச் சூழல் பாதுகாவலனுக்கு, ஐயோ எந்த மரத்தை துண்டாக்கினாரோ என்ற வருத்தம் தோன்றும்


ஒரு சிலருக்கு கீழே குப்பை கிடக்கிறது என்றும் தோன்றும்.