Tuesday, February 28, 2012

பரமபதம் - 6


சம்பவ தினம்

காலை 10:00 மணி

போதை ஒழிப்புத் துறை, ராஜாஜி பவன், சென்னை


அது ஒரு கான்ஃபரன்ஸ் ரூம். நீளமான மேஜையின் இரண்டு பக்கங்களிலும் நாற்காலிகள். ஒரு பக்கம் மூன்று பேரும் இன்னொரு பக்கம் இரண்டு பேரும் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு பக்க சுவற்றில் பெரிய வெள்ளைத் திரை. மேஜையின் நடுவிலிருந்த ப்ரொஜெக்டரில் இருந்து ஒளிர்ந்த படம் திரையில் தெரிந்தது. பவுடர் ரவி.

மூன்று பேரில் நடுநாயகமாக உட்கார்ந்திருந்த அதிகாரி எழுந்தார். “பவுடர் ரவியை ரெண்டு தடவை நாம அரெஸ்ட் பண்ணியும் பொலிட்டிகல் பிரஷர்ல வெளிய வந்துட்டான். ஆனா இந்தத் தடவை வந்திருக்கிற இன்ஃபர்மேஷன் ரொம்ப நம்பகமான இடத்துல இருந்து வந்திருக்கு. ரவி பல்க்கா சரக்கு கைமாத்தப் போறான். நாம அவனை இந்த முறை கையும் களவுமா பிடிக்கணும்”

“பிடிச்சி” எதிரே உட்கார்ந்திருந்த அதிகாரி இடை மறித்தார்.

“ஜெயில்ல போடுறதுதான் சார். என்ன கேள்வி இது?”

“சுகுமார், நாம பிடிச்சிப் போட்டாலும் அவன் ப்ரஷர்ல வெளிய வரப் போறான். நாம போதை மருந்தை மட்டும் தான் கைப்பத்துவோம். அவன் வெளிய வந்து மறுபடியும் இதே தொழிலைத்தான் செய்யப் போறான்”

“அப்போ என்ன செய்யலாம்னு சொல்றீங்க சார்?”

“அவன் அந்த இடத்தை விட்டு உயிரோட போகக் கூடாது”

*******************

காலை 11:30 மணி

ஹைடெக் பார்

சுரேஷ் ஐ-10ஐ பின் பக்கம் கொண்டு சென்று நிறுத்தினான். செல்ஃபோனில் ஒரு மிஸ்ட் கால் கொடுத்துவிட்டு இறங்கி டிக்கியைத் திறந்தான். உள்ளே பச்சை நிறத்தில் பெரிய பெட்டி ஒன்று உட்கார்ந்திருந்த்து. அதை வெளியே எடுத்து வைத்தான். 
முத்து கிச்சனின் பின்கதவைத் திறந்து வெளியே வந்தான். “என்னடா இவ்வளவு பெரிய பெட்டியா இருக்கு?” என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தினான்.

“அடப் போடா. நூறு கோடி ரூபா கை மாறப் போவுது. ஒரு பெட்டியில எப்பிடி அடைப்பாங்கன்னு நானே யோசிச்சிட்டு இருக்கேன்”

“என்னது நூறு கோடியா? நாப்பது கோடின்னு சொன்ன?”

“அப்பிடித்தான் கேள்விப்பட்டேன்”

“அப்பவும் எனக்கு ரெண்டு கோடி தானா?? அஞ்சு கோடியாவது குடுக்க்க் கூடாதா?”

“ம்ம்.. குடுத்துட்டாப் போச்சி. சரி இந்தா” பைக்குள் கையை விட்டு ஒரு சிறிய பாட்டிலை எடுத்தான். “இதுதான் டெக்கோலிக் ஆசிட். இந்த மொத்த பாட்டிலையும் அவரோட தக்காளி சூப்ல கவுத்திரு. சரியா?”

“சரி” என்று வாங்கி ஒரு முறை கையில் வைத்து சுற்றியும் பார்த்துவிட்டு பைக்குள் வைத்துக் கொண்டான். பெட்டியை எடுத்துக் கொண்டு, உள்ள ஸ்க்ரீன் பின்னாடி ஒளிச்சி வச்சிர்றேன். அந்த டேபிள் உங்களுக்கு வர்றமாதிரியும் செஞ்சிர்றேன். ஓக்கே?”

“ஓக்கே. சிவப்பு கலர் ஆல்டோ பார்க்கிங்க்ல நிக்கும் நம்பர் TN01 A 19. அதுதான் நீ சூட்கேஸை வைக்க வேண்டிய கார். சரியா?”

பதிலுக்குக் காத்திராமல் காரை ஸ்டார்ட் செய்து காற்றில் கரைந்தான்.

********************************

இரவு 10:00 மணி

புதிதாகப் போட்ட தார் ரோட்டைப் போன்ற கருமையான இருள். இருளைக் கிழித்துக்கொண்டு ஹெட்லைட் வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டு அந்த ஹம்மர் கிழக்குக் கடற்கரைச் சாலையில் சென்று கொண்டிருந்தது. ஹம்மரை கணேசன் ஓட்டிக் கொண்டிருந்தார். பக்கத்தில் பெருசு. பின்சீட்டில் சுரேஷ். அதற்கும் பின்னால் ஒரு பெரிய பெட்டி வைக்கப் பட்டிருந்தது. ஹம்மரை ஒரு சிவப்பு நிற ஆல்டோ இரண்டு தடியன்களுடன் ஃபாலோ செய்து வந்தது. 

“சுரேஷ்! சரக்கை செக் பண்ணிட்டீயில்ல?”

“செக் பண்ணிட்டேண்ணே. எல்லாம் சரியா இருக்கு”

“ஓக்கே. ரவி பணம் குடுத்ததும் நீ பாத்ரூமுக்குள்ள போய் செக் பண்ணிட்டு வந்துரு”

“சரிண்ணே. எவ்வளவு பணம்ணே?”

“அம்பது கோடி. டாலரா இருக்கும். எண்ணிருவல்ல”

“எண்ணிருவேண்ணே.” சுரேஷ் மனதில் ‘அவன் நூறு கோடின்னு சொன்னானே’ என்று ஓடியது.

கார் ஹைடெக் பாரின் பார்க்கிங்கில் திரும்பி நின்றது.

“கணேசா நீ கார்லயே இரு. சுரேஷும் நானும் உள்ள போறோம். அந்தத் தடியனுகளையும் கார்லயே வெயிட் பண்ணச் சொல்லு. ஏதாவது பிரச்சனைன்னா நான் குரல் குடுக்குறேன். சரியா?”

“சரி பெருசு” பெருசுவை பெருசு என்று கூப்பிடும் உரிமை கணேசனுக்கு மட்டுமே உரித்தானது. சுரேஷ் பின்னாலிருந்த பெட்டியை எடுத்துக்கொண்டு பெருசுவைப் பின் தொடர்ந்தான்.

இருவரும் உள்ளே நுழைந்தனர். வாசலில் – “Please wait here to be seated”க்குப் பின்னால் நின்றிருந்த முத்து பெருசுவிடம், “How many sir?” என்றான்.

“ஃபோர்”

“திஸ் வே ப்ளீஸ்” என்று அழைத்துப் போய் ஒரு டேபிளில் உட்கார வைத்தான். மெனு கார்டை அவர்களின் முன்னால் வைத்துவிட்டு சுரேஷ் மட்டும் பார்க்கும் படியாக ஸ்க்ரீனைத் தொட்டுக் காட்டினான்.

“இன்னும் ரெண்டு பேர் வருவாங்க. அவங்க வந்தா இந்த டேபிளுக்குக் கூட்டிட்டு வாங்க” என்றான் சுரேஷ்.

“ஓக்கே சார்” என்று தலையசைத்துவிட்டு அகன்றான்.

“அண்ணே! பாத்ரூம் போயிட்டு வந்துர்றேன்” என்று எழுந்து டேபிளை விட்டு அகன்றான்.

திரும்பி வரும்போது ரவி பெருசுக்கு எதிரே உட்கார்ந்திருந்தான். அவன் ஆள் பக்கத்தில் நின்றிருந்தான். இவன் போய் ரவியைப் பார்த்து, “வணக்கம் அண்ணாச்சி” என்று சொன்னதும் ரவி ஆமோதிப்பது போல தலையசைத்தான்.

பெருசுவின் பக்கத்தில் சுரேஷ் உட்கார்ந்தான். ரவியின் ஆளும் ரவியின் அருகில் உட்கார்ந்தான். முத்து ஆர்டர் எடுக்க வந்தான். பெருசு ஒரு தக்காளி சூப் என்று சொல்ல, சுரேஷ் ஒன்றும் வேண்டாம் என்று தலையசைத்தான். ரவியும் அவன் ஆளும் சிக்கன் கபாப் சொன்னார்கள்.

முத்து ஆர்டர் சொன்ன ஐட்டம்களை எடுத்து வரும் வரை நால்வரும் ஒன்றும் பேசாமலிருந்தார்கள். முத்து ஐட்டங்களை அவரவர் முன்னால் வைத்துவிட்டு அகன்றான்.

“சரக்கு கொண்டு வந்துட்டேன். நீ பணம் கொண்டு வந்துட்டியா?”

“நீ காலையில பேசுன மாதிரி அம்பது இப்ப கொண்டு வந்திருக்கேன். மீதியை அடுத்த மாசம் குடுக்குறேன்” அம்பது என்று சொல்லும்போது சுரேஷின் கண்களை ரவியின் கண்கள் சந்தித்துச் சென்றன.

“சரி பார்த்துரலாமா?”

“அண்ணாச்சி சாப்ட்ரலாமே?” என்றான் ரவியின் அருகில் இருந்த தடியன்.

“நீங்க சாப்புடுங்க. சூப் இன்னும் குடிக்கிற பக்குவத்துக்கு வரலை” என்றான் பெருசு.

இருவரும் சிக்கன் கபாப்களை கபளீகரம் செய்ய ஆரம்பித்தனர். பெருசுவும் ரவியும் முட்டிக்கொண்ட சம்பவங்களைப் பற்றிப் பேசி சிரித்துக் கொண்டனர். பேச்சு சினிமா பக்கமும் சினிமா நடிகைகளின் பக்கமும் சென்றது. ரவி தன்னுடன் படுத்த நடிகைகளின் அங்கங்களைப் பற்றி மோசமாகக் கமெண்ட் அடித்தான். பெருசு சத்தம் போடாமல் சிரித்தான். பைபாஸ் செய்த்தில் இருந்து சத்தம் போட்டு சிரிப்பது கூட இல்லை.

சுரேஷ் எழுந்து அவனுக்கு வலது புறம் வைக்கப்பட்டிருந்த பணப் பெட்டியை இழுத்துக் கொண்டு பாத்ரூம் நோக்கி நடந்தான். அந்த பாத்ரூமுக்கு இரண்டு கதவுகள். ஒரு கதவு ரெஸ்டாரண்ட் பக்கமிருந்தும் இன்னொரு கதவு கிச்சனுக்குள்ளிருந்தும் இருந்தன. மொத்தம் ஆறு யூரினல்களும் இரண்டு டாய்லெட்டுகளும் இருந்தன. ஒரு டாய்லெட்டில் யாரோ இருந்தார்கள். கதவு பூட்டப்பட்டிருந்தது. இன்னொரு டாய்லெட்டுக்குள் நுழைந்து கதவைப் பூட்டினான். வெஸ்டர்ன் டாய்லெட்டை மூடிவிட்டு மூடியின் மேல் அமர்ந்தான். சூட்கேஸைத் தூக்கி மடியில் இருத்தினான். சூட்கேஸின் கனம் தொடைகளை அழுத்தியது. இரண்டு பக்க பூட்டுகளையும் திறந்தான். சூட்கேஸைத் திறந்து பார்த்தான். அத்தனையும் நூறு டாலர் நோட்டுகள். பல நோட்டுகள் அழுக்கடைந்து இருந்தன. 10X10X10ஆக 1000 கட்டுகள் அடுக்கப்பட்டிருந்தன. மனதுக்குள் கணக்குப் போட்டான். ஐம்பது கோடி ரூபாய்க்கு சமமான டாலர் மதிப்பு. ஒரு முறை ஆழ முகர்ந்தான். கரன்சியின் மணமும் அதன் மீது படிந்த அழுக்கின் மணமும் அவன் நாசியைத் துளைத்தது.

*******************************
மாலை 10:45

“என்னப்பா சூப் குடிக்காமலே உக்காந்திருக்க?” ரவியின் பக்கத்தில் இப்போது ஒரு கிளாஸ் ஸ்காட்ச் உட்கார்ந்திருந்தது.

“இன்னும் ஆறனும்பா. ஒரே மூச்சில குடிச்சித்தான் பழக்கம்”

“என்னவோப்பா! பைபாஸ் பண்ணாலும் பண்ணாய்ங்க. நீ இப்பல்லாம் சரக்கே அடிக்கிறதில்லைன்னு சொல்லிட்ட. வயசாச்சின்னா எல்லாருக்கும் கஷ்டந்தான் போல”

“ஆமா”

சுரேஷ் சூட்கேஸை இழுத்துக் கொண்டு வெளியே வந்தான். டேபிளின் சைடில் வைத்தாலும் இப்போது சூட்கேஸ் சுரேஷுக்கு அருகில் இருந்தது. இப்போது ரவியின் ஆள் சூட்கேஸைத் தூக்கிக் கொண்டு பாத்ரூமுக்குப் போனான்.

ரவியின் ஆள் திரும்ப வருவதற்கும், பெருசு ஒரே மூச்சில் சூப்பைக் குடித்து முடித்ததற்கும் சரியாக இருந்தது. பெருசு சூப் பவுலைக் கையில் தூக்கியதுமே சுரேஷ், பாலாவுக்கு மிஸ்ட் கால் கொடுத்திருந்தான்.

சரியாக இரண்டாவது நிமிடம் பாலா உள்ளே வந்தான். அவன் டேபிளை நோக்கி வேகமாக வருவதைப் பார்த்ததும் பெருசு இடுப்பில் சொருகியிருந்த துப்பாக்கியின் மேல் கையை வைத்துக் கொண்டான். அதைப் பார்த்த சுரேஷும் சட்டைக்குள் கையை விட்டு துப்பாக்கியை தொட்டுக்கொண்டான்.

பாலாவின் நடையில் இருந்த வேகம் முகத்தில் பதட்டமாக உருப்பெற்றிருந்தது. வந்த வேகத்தில் ரவியின் முன்னால் குனிந்து அவன் காதில் ஏதோ சொல்ல, ரவி அதிர்ச்சியை முகத்தில் வாங்கினான்.

“என்னப்பா ஆச்சி?” பெருசு ரவியின் அதிர்ச்சியை, குரலில் ஆர்வமாக ஏற்றிக் கேட்டான்.

“போலீஸ் வந்திருச்சாம்பா. உடனே இடத்தைக் காலி பண்ணுவோம். இடப் பிரச்சனை பத்தி அப்புறம் பேசலாம்” பரபரப்பாக ரவி எழ ஆரம்பிக்க, பெருசுவுக்கு நெற்றியெல்லாம் வேர்த்தது.

இடது கையால் நெஞ்சைப் பிடிக்க, சுரேஷ் பதட்டமாக எழுந்தான்.

“என்னாச்சி அண்ணே?” என்று பெருசின் முதுகைச் சுற்றிக் கையைப் போட்டுக் கேட்டான்.

ரவி ஒரு நொடி நிற்க, “அண்ணாச்சி போலாம் அண்ணாச்சி” என்று அவன் ஆள் அவசரப்படுத்தினான். ரவி சுரேஷைப் பார்த்து கண்ணை அசைத்து சிக்னல் கொடுத்துவிட்டு இடத்தைக் காலி செய்தான். சுரேஷ் ஃபோனை எடுத்து வெளியே இருந்த ஆட்களை அழைத்தான். அவர்கள் வருவதற்குள் பெட்டியை ஸ்க்ரீனுக்குப் பின்னால் இருந்த பெட்டியோடு மாற்றி வைத்தான்.

பெருசு பேச்சு மூச்சில்லாமல் கிடந்தான். மின்னலென உள்ளே வந்த தடியன்கள், பெருசு பேச்சு மூச்சில்லாமல் கிடப்பதையும், அழுவது போன்ற முகத்துடன் இருந்த சுரேஷையும் பார்த்ததும் பதட்டமானார்கள். “என்ன ஆச்சி சுரேஷ்?”

“போலீஸ் வந்திருக்காம். ரவியோட ஆள் வந்து சொன்னதும், பெருசுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருச்சிடா. உடனே ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போகணும்”

ஒருவன் அண்ணாச்சியை அலேக்காகத் தூக்க, இன்னொருவனிடம் சூட்கேஸை கொடுத்தான் சுரேஷ். “நீங்க வெளிய போங்க. நான் பில்லை செட்டில் பண்ணிட்டு வந்திடுறேன். போலீஸ் கண்ணுல நீங்க பட்டாலும் சூட்கேஸ் சிக்கிராம. ஜாக்கிரதை”

இரண்டு தடியன்களும் ஓட்டமும் நடையுமாக வெளியே ஓடினார்கள். முத்துவும், பார் மேனேஜரும் இன்னும் சில கஸ்டமர்களும் ஆளை வெளியே தூக்கிச் செல்வதைப் பார்த்து சுரேஷை சூழ்ந்தார்கள்.

“என்ன சார் ஆச்சி?” “என்ன ஆச்சி” “வாட் ஹாப்பண்ட்” குரல்கள் பல திசைகளிலிருந்தும் எதிரொலித்தன.

“ஹார்ட் அட்டாக் சார். பர்ஸிலிருந்து கற்றையாக சில ஐநூறு ரூபாய்த் தாள்களை டேபிளின் மீது எறிந்து விட்டு, முத்துவின் கையைப் பிடித்து அர்த்தத்துடன் ஒரு அழுத்து அழுத்திவிட்டு வெளியேறினான்.

ஹம்மர் கிளம்பத் தயாராக இருந்தது. முன் சீட்டில் ஒரு தடியனும், பின் சீட்டில் பெருசை மடியில் கிடத்திக்கொண்டு இன்னொரு தடியனும் உட்கார்ந்திருக்க கணேசன் டிரைவர் சீட்டில் எந்நேரமும் ஆக்ஸிலேட்டர் மீது ஏறி நிற்கத் தயாராய் இருந்தார்.

பின் கதவைத் திறந்து தாவி ஏறி சூட்கேஸின் மீது உட்கார்ந்தான். கதவை மூடுவதற்கு முன்னால் ஹம்மர் சீறிப் பாய்ந்தது. “பக்கத்துல எங்கப்பா ஹாஸ்பிட்டல் இருக்கு?” ஓட்டிக்கொண்டே சீறினார் கணேசன்.

“திருவான்மியூர் போயிரலாம்ணே” சொல்லிவிட்டு பெருசின் ஆஸ்தான மருத்துவரின் நம்பரை டயல் செய்தான் சுரேஷ்.

(தொடரும்)

அடுத்த பாகம் இங்கே

Thursday, February 23, 2012

கொள்ளைமணி 3:10 PM


வெளியே சட சடவென்ற துப்பாக்கி வெடிக்கும் சத்தமும் ஆட்கள் அலறும் சத்தமும் கேட்டது. ஜிப்பை மூடக் கூட நேரமில்லாமல் சட்டென்று தரையோடு தரையாக விழுந்தேன். என்னதான் ஒரு மணி 
நேரத்துக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்படும் பாத்ரூம் என்றாலும் மூத்திர மணம் போகாது என்பதை அந்த பாத்ரூம் தரை சிறுகச் சிறுகச் சொல்லிக் கொடுத்தது. வெளியே ஃபர்னிச்சர்கள் நகரும் ஓசையும் யாரோ சத்தமாகப் பேசுவதும் தெளிவில்லாமல் கேட்டது. தீவிரவாதிகளாக இருக்கலாமோ?? இருக்கும் இடத்தை விட்டு நகராமல் அப்படியே படுத்திருந்தேன்.மணி 10:30 AM“எப்ப சார் கிரெடிட்டாவும்?” “இம்மீடியட்டா ஆகிடும்” கம்ப்யூட்டர் திரையில் இருந்து கண்ணை விலக்காமல் சொன்னேன். “அப்பிடின்னா அந்த செக்கை ரிலீஸ் பண்ணிடுங்க சார்”“எந்தச் செக்கை சார்” என்று நிமிர்ந்து அந்த கோல்ட் ஃப்ரேம் கண்ணாடி போட்ட பெரியவரைப் பார்த்துக் கேட்டேன்.“ஹோல்ட்ல வச்சிருக்கே சார். சொர்க்கம் ஆட்டோ ஃபைனான்ஸ் செக்”நான்கு கிளிக்குகள், இரண்டு எண்டர்களில் திரையில் ஒளிர்ந்த தொகையைப் பார்த்து, “ரெண்டு லட்சத்துக்கு இருக்கே அதுவா?”“ஆமா சார்.”“ஓக்கே. கிளியரன்ஸுக்கு அனுப்பியாச்சி சார். இன்னைக்கி ஈவினிங்குக்குள்ள அது கிள்யராகிடும். எதுக்கும் நீங்க அவங்களுக்கு ஒரு ஃபோன் போட்டு கன்ஃபர்ம் பண்ணிக்கோங்க”“ஓக்கே சார். தேங்க்யூ வெரி மச்”டேபிளின் ஓரத்தில் இருந்த அந்த நோட்டுக்கட்டின் மீது 200 என்று எழுதி ட்ராவுக்குள் வைத்தேன். செல்ஃபோன் ஒலித்தது. மகேஷ்.“சொல்டா மச்சி. எப்பிடியிருக்க? ராதா எப்பிடியிருக்கா?”எதிர்முனையில் விசும்பலே பதிலாகக் கிடைத்தது.“என்னடா ஆச்சி?”“ராதாவை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்கேண்டா”“என்னடா சொல்ற. என்ன பிரச்சனை?”“பைக்ல போகும்போது ஆக்சிடண்ட்டா. நான் ஹெல்மெட் போட்டுருந்ததால லேசா சிராய்ப்போட தப்பிச்சிட்டேன். அவளுக்கு தலையில அடி பட்டுருச்சி. ப்ரெயின்ல ப்ளட் க்ளாட் இருக்கு உடனே ஆப்பரேஷன் செய்யணுங்கிறாங்கடா”“நான் வரவா?”“வேண்டாம்டா. அவசரமா கொஞ்சம் பணம் தேவைப்படுதுடா?”“எவ்வளவு?”“ரெண்டு லட்சம். உடனே கட்டச் சொல்றாங்க. கட்டுனாத்தான் ஆப்பரேஷன் செய்வாங்களாம்?”டிராவில் வைத்த தொகை நினைவுக்கு வந்தது. “மச்சி என் கையில இல்லை. ஆனா இப்பத்தான் ஒரு கஸ்டமர்கிட்ட கேஷ் டெபாசிட் வாங்கினேன். மூணு மணிக்கு அக்கவுண்ட் முடிக்கணும். அதுக்குள்ள வேற எங்கயாவது பொரட்டிக் குடுத்துடுவன்னா வந்து வாங்கிட்டுப் போ”எதிர்முனையில் மௌனம்.“சரிடா. மூணு மணிக்குள்ள எப்பிடியாவது பொரட்டிரலாம். நான் உடனே அங்க வர்றேன்” போனை வைத்துவிட்டு யோசித்தேன். மூணு மணிக்குள் கொண்டு வந்து கொடுத்து விடுவானா? கொடுக்கவில்லையென்றால் என்ன ஆகும்? வேலை போய்விடுமா? கையில் காலில் விழுந்து அவகாசம் கேட்க வேண்டுமா? மேனேஜரிடம் இப்போதே சொல்லிவிடலாமா? மேனேஜரின் அறையைப் பார்த்தேன். கண்ணாடிக்குள் டெஸ்பாட்ச் கிளார்க்குக்கு எதற்கோ திட்டு விழுந்து கொண்டிருந்தது. மானேஜரின் மூடு சரியில்லை. இப்போது போய் அவரிடம் இதைச் சொல்லி ஒன்றும் இல்லாமல் செய்துவிடவேண்டாம். ஆண்டவன் இருக்கிறான். எதுவும் தப்பாக நடக்காது.அடுத்த இரண்டு கஸ்டமர்களைப் பார்த்து அனுப்பியதும் மகேஷ் வந்தான். ஏற்கனவே கேரி பேகில் போட்டு வைத்திருந்த பணத்தை சட்டைக்குள் வைத்துக் கொண்டு எழுந்தேன். கேள்வியாகப் பார்த்த சூப்பிரண்டெண்டிடம், காப்பி என்பது போல கையைக் காண்பித்துவிட்டு கூண்டை விட்டு வெளியேறினேன். பேங்கை விட்டு வெளியே வந்ததும், பணத்தை அவனிடம் கொடுத்துவிட்டு, “மகேஷ் மூணு மணிக்குள்ள வந்துருடா. இல்லைன்னா வேலை போயிரும். ஜாக்கிரதை” என்று அழுத்தமாக எச்சரித்துவிட்டு, காபி+தம் போட்டுவிட்டு கூண்டுக்குத் திரும்பினேன்.மணி 3:15 PMவெளியே துப்பாக்கி வெடிக்கும் சத்தம் ஒரு முறை கேட்டது. யாரோ ஒரு பெண், டெல்லர் த்ரீயாக இருக்கலாம், வீரிட்ட சத்தமும் கேட்டது. மெதுவாக தரையோடு தரையாக நகர்ந்து கதவுக்கு அருகில் வந்தேன். இப்போது வெளியே பேசிக்கொள்ளும் சத்தம் தெளிவாகக் கேட்டது. எவனோ கேஷியர்களின் ட்ராக்களை க்ளியர் செய்யச் சொல்லிக் கொண்டிருந்தான். 
மணி 2:30 PMகஸ்டமர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருந்தது. என் கவுண்டரில் யாருமே இல்லை. க்ரோமில் ஆங்க்ரி பேர்ட்ஸ் விளையாட ஆரம்பித்தேன். மனசுக்குள் இன்னும் அவன் வரவில்லை என்ற கவலை கார்ப்பெட்டில் கொட்டிய ஒயினாகப் பரவியது. மணி 3:25 PMகதவு திறக்கும் சத்தம் கேட்டது, சுவற்றோடு ஒட்டிக் கொண்டேன். மேனேஜரும் இன்னும் மூன்று ஆண் ஸ்டாஃபுகளும் உள்ளே தள்ளப் பட்டனர். அவர்களைத் தொடர்ந்து முகத்தை முகமூடியால் மறைத்து கையில் துப்பாக்கியை நீட்டிப் பிடித்தவாறு ஒருவன் உள்ளே நுழைந்தான். “இவன் தான் நீங்க சொன்ன இன்னொரு கேஷியரா?”‘ஆமாம்’ என்பது போல தலையை மேலும் கீழும் ஆட்டிய மேனேஜரின் வாயெல்லாம் ரத்தம்.“அவனை மாதிரியே நீங்களும் தரையோட தரையா படுங்க”மறுப்பு சொல்லாமல் நால்வரும் தரையில் படுத்தனர். வெளியேறி கதவை மூடினான். அவன் காலடி ஓய்வது வரை காத்திருந்து விட்டு, மற்றவர்களைப் பார்த்து “என்ன நடக்குது” என்று கிசுகிசுத்தேன்.மேனேஜர் என்னவோ சொல்ல வாயெடுத்து, வலியால் பேச முடியாமல் கர்ச்சீப்பால் வாயை மூடிக் கொண்டார். சூப்பிரண்டெண்டட், “ராப்பரிப்பா. அலார்ம் கூட அடிக்க முடியலை. சுத்தமா பேங்கை தொடச்சிட்டாங்க” என்றார் கவலையாய்.இரண்டு ஐம்பத்தைந்துக்குப் பணத்தைக் கொண்டுவந்து கொடுத்துவிட்ட மகேஷை எண்ணி மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டேன்.பண்புடன் இதழில் செப்டம்பர் மாதம் வெளிவந்த கதை

Tuesday, February 21, 2012

பரமபதம் - 5


சுரேஷ் கண்விழித்த போது நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்தது. அது ஒரு சிறிய அறை. நான்கு பேர் படுக்கலாம். எட்டு பேர் உட்காரலாம். ஒரு மூலையில் 40 வாட்ஸ் பல்பு ஒன்று அழுது வடிந்து கொண்டிருந்தது. ‘யார் கடத்தி வந்திருப்பார்கள், எதற்குக் கடத்தி வந்திருப்பார்கள்’ என்ற எண்ணம் சுரேஷின் மனதை அரித்துக் கொண்டிருந்தது. கதவு திறந்தது. உள்ளே வந்தவனைப் பார்த்ததும் சுரேஷுக்கு பகீரென்றிருந்தது.

“என்னலே சுரேசு. என்ன வேலை செய்யப் போறீக?”

“என்ன கேக்குறீங்க அண்ணாச்சி. என்னைய ஏன் கடத்திட்டு வந்து கட்டிப் போட்டிருக்கீங்க? எனக்கு ஒண்ணும் புரியலை”

“எலே இங்க வாலே” கதவுக்கு வெளியே யாரையோ அழைத்தான் ரவி.

சிட்டி செண்டரில் சுரேஷிடம் வாங்கின பத்தாயிரத்தைக் கையில் ஆட்டிக்கொண்டே உள்ளே வந்தான் பாலா.

“என்னலே தலயத் தொங்கப் போட்டுட்ட? இப்ப அம்புட்டும் புரிஞ்சிருச்சோ?”

“அண்ணாச்சி...”

“சொல்லுல. எதுக்கு இவன போலீஸ் வந்திருக்குன்னு சொல்லச் சொன்னியாம்? எதல ஆட்டயப் போடப்போற?”

“அண்ணாச்சி...”

“சொல்லுலே. என் கிட்ட காசையும் வாங்கிட்டு பவுடரையும் அடிச்சிட்டுப் போயிரலாம்னு ப்ளான் போடுதானா அந்தப் பெருசு?”

“இல்ல அண்ணாச்சி. பெருசுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை”

“பொறவு?”

“நாந்தான் அண்ணாச்சி, பெருசுகிட்ட இருந்து காசை அடிக்கலாம்னு நினைச்சேன்”

“பெருசுக்கிட்டயா?? நம்ப முடியலயே.”

“ஆமா அண்ணாச்சி. பெருசு தொழிலை விட்டுட்டு ரியல் எஸ்டேட்ல எறங்கப் போவுதாம். எனக்கு அடியாள் வேலை போரடிச்சிருச்சி. அதான் லம்பா அடிச்சிட்டு செட்டில் ஆகலாம்னு முடிவெடுத்தேன். இப்ப என்ன, எனக்கு நீங்க ஹெல்ப் பண்ணுங்க. உங்களுக்கொரு பங்கு தர்றேன்”

ரவி கெக்கெக்கே என்று வாயைக் கோணிக்கொண்டு சிரித்தான். “இவுரு எனக்கு பங்கு தர்றாராம்லே.. கேட்டியா?? கோட்டிப் பயலே! இத நான் பெருசுக்கிட்ட போட்டுக் குடுத்தா என்னாவும்னு தெரியுமா? உன் வம்சத்தையே கருவறுத்துருவாம்லே. உன் திட்டம் என்னான்னு சொல்லு”\

“முதல்ல கட்ட அவுத்து விடுங்க. உக்காந்து பேசுவோம்”

“எலேய் கட்டவுத்து விடுறா”

சுரேஷ் எழுந்து நின்று கை கால்களை உதறிக் கொண்டான். விரல்களை வளைத்து சொடுக்கெடுத்தான். அனைவரும் இன்னொரு அறைக்குப் போனார்கள். அங்கே ஒரு வட்ட டேபிள் போட்டு எதிரெதிராக இரண்டு நாற்காலிகள் கிடந்தன. ரவி ஒன்றில் உட்கார்ந்து எதிர் நாற்காலியைக் கைக் காட்டி “உக்கருலே” என்றான்.

சுரேஷ் தனது திட்டத்தை நிதானமாக விவரித்தான். பதட்டம் ஏற்படவேண்டும் என்பதற்காக ரவியின் ஆளை ஏற்பாடு செய்ததாகச் சொன்னான். நிதானமாகக் கேட்ட ரவி, “சரிலே! நீயும் பெருசுகிட்ட இருந்து தப்பிச்சாவணும். அதுனால 5 கோடி ரூவா உனக்குத் தர்றேன். அதை எடுத்துட்டு ஓடிப்போ. மீதிப்பணம் எனக்கு. அது சரி, நீதானே பணத்தை எண்ணிப் பாக்கப் போற? பேயாம நான் பெட்டிக்குள்ள எதாவது பேப்பரை மட்டும் வச்சிக் குடுத்துர்றேன். நீ எண்ணிப் பாத்துட்டு சரியா இருக்குன்னு சொல்லிரு. பெருசை ஆஸ்பத்திரியில சேத்துட்டு என்கிட்ட வந்து காசை வாங்கிட்டு எஸ்கேப் ஆயிரு? என்ன நாஞ்சொல்றது?”

“அண்ணாச்சி. இதுல ரெண்டு பிரச்சனை இருக்கு. ஒண்ணு, பெருசு திடீர்னு தானே போய் எண்ணிப் பாக்கப் போயிருச்சின்னா, நீங்க மாட்டிக்குவீங்க. ரெண்டாவது, நான் பெருசை ஆஸ்பத்திரியில சேத்துட்டு வரும்போது நீங்க எனக்கு நாமம் போட்டு விட்டுட்டீங்கன்னா, நான் நாக்கை வழிச்சிட்டு நிக்கிறதா?? அப்புறம் நான் நேரா போலிஸ் கிட்ட போகவேண்டியதிருக்கும்”

“இங்க பாரு இந்தப் பூச்சாண்டி வேலயெல்லாம் என்கிட்ட நடக்காதுல. ஆனாலும் நீ சொன்ன மாதிரி பெருசே பணத்தை எண்ணப் போனாலும் போவான். அதுனால நான் 100 கோடியையும் கொண்டு வந்துர்றேன்”

‘நூறு கோடியா?? எதிர்பார்த்ததை விட பெரிய வேட்டையாவே இருக்கே’ என்று மனதில் நினைத்துக் கொண்டு, “அதுதான் நல்லது அண்ணாச்சி”

“சரி. இப்ப நீ திரும்ப காரை எடுக்க வரும்போது என் ஆளும் உன் கூட வருவான். உன் பங்கு அஞ்சி கோடியை எடுத்துக்கிட்டு ஓடிப் போயிரு. என்ன?”

“அண்ணாச்சி, 10 கோடியாவது குடுங்க. நான் அந்த சர்வருக்கு வேற ரெண்டு கோடி குடுக்குறேன்னு சொல்லியிருக்கேன்.”

“ம்ம்.. சரி. ஆனா என்கிட்ட டபுள் கிராஸ் பண்ணனும்னு மட்டும் நினைச்ச... பெருசை விட நான் மோசமானவன் தெரிஞ்சிக்கோ”

“தெரியும் அண்ணாச்சி. நான் வார்த்தை மீற மாட்டேன்”

“சரி நீ இப்ப போ. உன் கார் வெளியதான் நிக்கிது”

“சரி வர்றேன். என் கூட வரப்போற உங்க ஆளு யாரு?”

“இவந்தான்”  என்று பாலாவைக் கை காட்டினான் ரவி.

சுரேஷ் கதவைத் திறந்து வெளியேறினான்.

“எலேய், பணம் கைக்கு வந்ததும் அவனைப் போட்டுரு”

“சரிண்ணே” என்று பாலா தலையாட்டினான்.

******************************

ரு கலவையான மனநிலையோடு காரை ஓட்டிக்கொண்டிருந்தான் சுரேஷ். ஃபோன் ஒலித்தது. எடுத்து ஆன் செய்து தலையை லேசாகச் சாய்த்து கழுத்துக்கும் தலைக்கும் இடையில் செல்ஃபோனை வைத்துக் கொண்டு, “ஹலோ” என்றான்.

“என்னடா பத்து மணிக்கு ஃபோன் பண்றேன்னு சொன்ன?” என்றது எதிர் முனை.

“பவுடர் ரவி தூக்கிக்கிட்டுப் போயிட்டான்”

“ஓ.. சரி. அப்புறமென்னாச்சி?”

“தொகை நாம எதிர்பார்த்த்தை விட பெருசு. 100 கோடி?”

எதிர் முனை விசிலடித்தது.

“பத்து கோடி குடுப்பானாம். மிச்சத்தை அவனே எடுத்துக்குவானாம்” சுரேஷின் குரலில் மெல்லிய கேலி ஒன்று ஓடியது

எதிர்முனை பலமாகச் சிரித்தது.

“அவன் ஆள் நான் கார் எடுக்கப் போவும்போது கூட வருவானாம். அவன் எனக்கு 10 கோடி குடுத்துட்டு மீதிப்பணத்தை எடுத்துக்கிட்டுப் போயிருவானாம்”

எதிர்முனை இன்னும் பலமாகச் சிரித்தது. “நீ என்ன சொன்ன?”

“சரின்னு சொல்லிட்டு வந்துட்டேன்”

“மத்ததெல்லாம் ப்ளான் படி போகுதுல்ல?”

“போகுது. எந்தப் பிரச்சனையும் வராது. நீ கவலைப் படாத”

“உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. வச்சிர்றேன்”

ஃபோனை அணைத்து பாக்கெட்டுக்குள் வைத்து விட்டு சாலையில் கவனம் வைத்தான்.

(தொடரும்)

அடுத்த பாகம் இங்கே

பரமபதம் - 4சிஆர், சென்னையின் சமீபத்திய யூத் ஜாயிண்ட். ரோடு முழுக்க தாபாக்களும் ரெஸ்டாரண்டுகளும் சிதறியிருக்கின்றன. அப்படி ஒரு தாபாவில் முத்துவும், சுரேஷும் எதிரெதிராக உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுக்கு நடுவில் ஒரு கோழி செத்து தந்தூரியாகக் கிடந்தது.

“சரி திட்டத்தைச் சொல்லு”

“ம். டெக்கோலிக் ஆசிட் பத்தி கேள்விப்பட்டிருக்கியா?”

“டெக்கோலிக் ஆசிடா? அது என்ன”

“அதோட கெமிக்கல் ஃபார்முலாவெல்லாம் சொல்லவரலை நான். அதை தக்காளி சூப்ல கலந்தா தக்காளியோட அசிடிட்டியோட சேர்ந்து அது ஹார்ட் பேஷண்ட்ஸ்க்கு ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஹார்ட் பர்ன் மாதிரின்னு வச்சிக்கோயேன். ஆனா, அந்த அசௌகரியம், அவங்களுக்கு ஹார்ட் அட்டாக் மாதிரி ஃபீலாகும். உயிருக்கு ஒண்ணும் ஆபத்து வந்திராது”

“சரி. அதை வச்சி என்ன செய்யப் போறோம்?”

“பெருசுக்கு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி பைபாஸ் சர்ஜரி செஞ்சிருக்கு. அதிலருந்து பெருசு ட்ரிங்க்ஸ் தொடுறதையே விட்டுருச்சி. எங்க போனாலும் டொமட்டோ சூப் மட்டும் தான். உங்க பாருக்கு சரக்கை கைமாத்த வரும்போதும், அதைத்தான் ஆர்டர் பண்ணும். அந்த டொமட்டோ சூப்ல, டெக்கோலிக் ஆசிடை நீ கலக்கணும்”

“அய்யோ நானா?”

“நீ செய்யாம? அதுக்குத்தாண்டா உனக்கு ரெண்டு கோடி”

“இல்லடா. நான் பார்ல நிக்கிறேன். நான் எப்பிடி சூப்ல கலக்க முடியும்?”

“எப்பிடி செய்யன்னு என்கிட்ட கேக்காத. அதையும் நானே சொல்லிக் குடுத்து ரெண்டு கோடியையும் சொளையா குடுக்க நான் என்ன கேணையனா? எப்பிடிச் செய்யப்போறங்கிறதை நீயே முடிவு பண்ணிக்கோ. ஆனா, கலந்துரணும். அதுல ஏதாவது சொதப்புன? மவனே நீ எங்க போனாலும் விடமாட்டேன். தேடி வந்து வெட்டுவேன்”

“ஏய் என்ன? இப்பிடிப் பேசுற? எப்பிடியாவது செய்யறேன். ஆனா நீ முதல்ல மொத்த ப்ளானையும் என் கிட்ட சொல்லு”

“சரி. இதான் ப்ளான்” ஒரு நாப்கினை எடுத்து பேனாவால் ஒரு செவ்வகம் வரைந்தான். இரண்டு பக்கமும் இரண்டிரண்டு வட்டம் வரைந்தான். செவ்வகத்தின் ஒரு பக்கம் அலை போல வரைந்தான்.

“இதுதான் டேபிள். நாங்க நாலு பேரும் இப்பிடித்தான் உக்காந்திருப்போம். நான் உன்கிட்ட அன்னைக்கிக் காலையிலயே ஒரு பெட்டியைக் குடுத்து வச்சிருவேன். நாங்க உள்ள வர்றதுக்கு முன்னாடி நாங்க உக்காரப் போற டேபிளுக்குப் பக்கத்துல இருக்கிற இந்த ஸ்கீரினுக்குப் பின்னாடி ஒளிச்சி வச்சிடணும். நானும் பெருசும் சரக்கோட வருவோம். பவுடர் ரவியும் அவனோட ஆளும் பெட்டியில பணத்தோட வருவாங்க. பெட்டிகளை மாத்தினதும், நான் பாத்ரூமுக்குள்ள போய் பணம் சரியா இருக்கான்னு செக் பண்ணிட்டு வருவேன். அடுத்து அவங்க ஆள் சரக்கு சரியா இருக்கான்னு பாத்துட்டு வருவான். அப்புறம் பெருசும் ரவியும் ஏரியா பிரச்சனைகள் பத்தி பேசுவாங்க. அப்ப பெருசுக்கு உன் சூப்பைக் குடுச்சதால ஹார்ட் அட்டாக் வரும்”

“திடீர்னு ஹார்ட் அட்டாக் வந்தா சந்தேகம் வராதா?”

“சந்தேகம் வரும். சந்தேகம் வராம இருக்க ஒரு ஏற்பாடு செஞ்சிருக்கேன்”

“என்ன ஏற்பாடு?”

“அது எதுக்கு உனக்கு?”

“ஏய் என்னப்பா. நானும் உன்னோட பார்ட்னர்தானே? அதோட முழு திட்டத்தையும் சொன்னா அதுல ஏதாவது லூப்ஹோல் இருந்தா சொல்லுவேன்ல?”

சுரேஷ் முத்துவை முறைத்தான். “சூப் குடிச்சதும் எஃபெக்ட் வராது. அந்த எஃபெக்ட் வரப்போற சிம்ப்டம்ஸ் தெரிஞ்சதும், ரவியோட ஆள் ஒருத்தன் வந்து போலீஸ் வர்றாங்கன்னு சொல்லுவான். எடத்தைக் காலிசெஞ்சாவணுங்கிற பதட்டத்துலதான் ஹார்ட் அட்டாக் வந்துட்ட்தா நினைப்பாரு பெருசு. போலிஸ் வருதுங்கிற பதட்டமும் ஹார்ட் அட்டாக் மாதிரி நெஞ்சு வலிக்கிற பதட்டமும் சேர்ந்து குழப்பம் வந்துரும். அந்தக் குழப்பத்துல நான் ஸ்க்ரீனுக்குப் பின்னாடி இருக்கிற பெட்டியோட பணப்பெட்டியை மாத்தி வச்சிட்டு பெருசை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுக் கிளம்பிருவேன். நீ ஸ்க்ரீனுக்குப் பின்னாடி இருக்கிற பெட்டியை எடுத்து பார்க்கிங்க்ல நான் ஏற்கனவே நிறுத்தியிருக்கிற காரோட டிக்கியில வச்சிரு. பெருசை ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணிட்டு, நேரா இங்க வந்து காரை எடுத்துக்கிட்டு ஜூட் தான். பெருசு ஆஸ்பத்திரியில இருந்து திரும்பி வந்து பணம் காணோம்னு தெரிஞ்சிக்கிறதுக்குள்ள நான் எஸ்கேப் ஆகியிருப்பேன்.”

முத்து ஒன்றும் சொல்லாமல் சுரேஷைப் பார்த்தான்.

“என்ன பாக்குற? எதுவும் லூப் ஹோல் தெரியுதா?”

“போலிஸ் வருதுன்னு சொல்லப்போற அந்த ஆள் யாரு? அவனும் உன்னோட திட்டத்துல பார்ட்னரா?”

“இல்லை. அவன் ஒரு அள்ளக்கையி. அவன் கிட்ட நான் எந்தத் திட்டத்தையும் சொல்ல மாட்டேன். சும்மா ஒரு இருவதாயிரம் ரூவா குடுத்து இந்த நேரத்துல இப்பிடி வந்து சொல்லுன்னு மட்டும் சொல்லிருவேன். அவனும் காசுக்காக வந்து சொல்லுவான். அவனுக்கு அதுல என்ன லாஸ்?”

“ஆளை ஏற்கனவே பிடிச்சிட்டியா?”

“இன்னும் இல்லை. உன் கூட பேசிட்டு அடுத்ததா அவனைத்தான் பார்க்கப் போறேன்”

முத்து மௌனமாக சுரேஷைப் பார்த்தான்.

“வேற எதாவது கேள்வி இருக்கா?”

“ஒரு வேளை போலீஸ் வந்திருச்சின்னா என்ன செய்வ?”

“ஏண்டா அபசகுனமா பேசுற? திட்டம் உன்னையும் என்னையும் தவிர எவனுக்கும் தெரியாது. நீ போலீஸ் கிட்ட சொன்னாத்தான் உண்டு”

“டேய். நான் ஏன் போலீஸ்கிட்ட போகப் போறேன். உன் திட்டம் யாருக்கும் தெரியாது. ஆனா சரக்கு கை மாத்தப் போறீங்கங்கிற விசயம் போலீஸ்க்குத் தெரிஞ்சா?”

“போலீஸ் வந்தா என்ன செய்ய முடியும்? பெருசும் சரி நானும் சரி, போலீஸ் கிட்டருந்து தப்பிக்கத்தான் முயற்சி பண்ணுவோம். அங்கயே அரெஸ்ட் ஆவ மாட்டோம். சோ, துப்பாக்கி சண்டை போட வேண்டியிருக்கும். பெட்டியை ஸ்க்ரீனுக்குப் பின்னாடி மாத்தி வச்சிருந்து, போலீஸ் துப்பாக்கிக் குண்டுக்குத் தப்பி உயிர் பிழைச்சிருந்தா ரெண்டு கோடி. இல்லைன்னா ஜெயில்ல களி திங்க வேண்டியதுதான். ஆனா உசிர் போனாலும் பெருசை ஏமாத்தத் திட்டம் போட்டது வெளிய தெரியாமப் பாத்துக்குவேன். ஏன்னா பெருசு கையால கிடைக்கிற சாவு கொடூரமா இருக்கும்.”

“ஒரு ஐடியாவுக்குத்தான் கேட்டேன்”

“சரிடா. நான் கிளம்பறேன். உன்னைய பார்ல விட்டுறவா?”

“வேணாம். நான் ஆட்டோ பிடிச்சி போய்க்கிறேன். நீ போ”

ஈ.சி.ஆரின் வெயிலில் ஐ-10 மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ஃபோனில் கார்த்திக்கின் நம்பரை ஒத்தினான். “கார்த்திக் சார். முத்து. சுரேஷ் முழு ப்ளானையும் என்கிட்ட சொல்லிட்டான்”

...

“சரி சார். ஈசிஆர்ல இருக்கிற தாபா.”

...

“அதேதான் சார். வாங்க நான் இங்கயே இருக்கேன்”

ஃபோனை வைத்துவிட்டு தட்டில் இருந்த தந்தூரி சிக்கனை எடுத்துக் கடித்தான்.
****************************************

சிட்டி செண்டர் மால். மூன்றாவது மாடியில் இருக்கும் FruitPunchல் சாத்துக்குடி ஜூஸ் ஒன்றை வாங்கிக்கொண்டு ஃபுட் கோர்ட்டில் இருந்த சேர் ஒன்றில் உட்கார்ந்தான். பக்கத்து சேரில் உட்கார்ந்திருந்தவன் கே.எஃப்.சியின் சிக்கனை வறுத்த கோழியை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தான்.

“ரொம்ப நேரமா வெயிட் பண்றியா?”

“இவ்வ இவ்வவ்வான் வவ்வேன்” வாயில் சிக்கனோடு பேசினான்.

“தின்னுட்டுப் பேசு. ஒண்ணும் புரியலை”

கோக்கைக் குடித்துவிட்டு ‘ஏவ்வ்வ்வ்’ சத்தமாக ஏப்பம் ஒன்றை வெளியேற்றினான்.

“சொல்லு. இன்னா மேட்டரு?”

“உனக்கு இருவத்தாஞ்சியிரம் சம்பாதிக்க ஆசையா?”

“நீ இன்னாத்துக்கு எனக்கு இருவத்தாஞ்சியரம் குடுக்குற”

“ஒரு சின்ன வேலை செய்யணும்”

“என்ன வேலை?”

“நாளைக்கழிச்சி என்ன நடக்கப் போவுதுன்னு உனக்குத் தெரியும்னு நினைக்கிறேன்”

“தெரியும். அதுக்கென்னா இப்போ?”

“அதுல பெட்டி கை மாறினவுடனே நான் ஒரு மிஸ்டு கால் குடுப்பேன். நீ பாருக்குள்ள வந்து உங்க தல ரவிக்கிட்ட போலீஸ் வருதுன்னு மட்டும் சொல்லணும்”

“இன்னாத்துக்கு சொல்லணும்?”

“சரி விடு நான் வேற ஆளைப் பாத்துக்குறேன். எச்சிக்கைய உதறுனா ஆயிரம் காக்கா”

“யேய் இருமா. முணுக்குங்கிற. சரி சொல்றேன். ஆனா 25 பத்தாது. 30ஆக் குடுத்துரு”

“அது என்ன 30?”

“என் டாவு ரொம்ப நாளா ஒண்ணு கேட்டுட்டு இருக்கு. அதுக்குத்தான்”

“சரி போ. 30 ஆயிரமா வச்சிக்கோ. இந்தா இதுல பத்தாயிரம் இருக்கு. அட்வான்ஸ்” ஒரு கவரை மேஜையில் சிக்கன் ப்ளேட்டுக்குப் பக்கத்தில் வைத்து விட்டு எழுந்தான். ஜூஸின் கடைசி சொட்டை உறிஞ்சி கப்பைக் குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டு வெளியேறினான்.

***********************************************************

தான் அவன் ப்ளானா?”

“ஆமா சார்”

கார்த்திக்கின் கார் தாபாவிலிருந்து பாரை நோக்கிப் போய்க்கொண்டிருந்த்து.

“ம்ம். எங்களுக்கும் நார்க்காட்டிக்ஸுக்கும் நல்ல வேட்டைதான் அன்னைக்கி. நான் பாத்துக்குறேன்”

“சார் என்னய மட்டும்..”

“அட என்ன முத்து நீ. கீறல் விழுந்த ரிக்கார்ட் மாதிரி அதையே சொல்லிக்கிட்டுருக்க. உன்னைக் காப்பாத்த வேண்டியது என் பொறுப்பு. போதுமா?”

“சரி சார்”

பாரில் முத்துவை இறக்கிவிட்டுவிட்டு செல்ஃபோனை எடுத்து,

“சுகுமார்”

“சொல்லுங்க கார்த்திக். என்ன விஷயம்”

“உங்களுக்கு ஒரு பெரிய வேட்டை காத்துக்கிட்டிருக்கு”

பத்து மணி வசூலை முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தான் சுரேஷ். காரில் பெட்ரோல் சிவப்பைத் தொட்டுக்கொண்டிருந்தது. வழியில் இருந்த அந்த பெட்ரோல் பங்கில் திருப்பி நிறுத்தினான். அவனைத் தொடர்ந்து ஒரு டூவீலரும் உள்ளே நுழைந்த்து. காரை விட்டு இறங்கிய சுரேஷ், ஃபுல் டேங்க் என்று சொல்லிவிட்டு சிகரெட் பிடிப்பதற்காக பங்கை விட்டு வெளியே வந்தான்.

திட்டத்தை மனசுக்குள் அசை போட்டுக்கொண்டே சிகரெட்டை முடித்துவிட்டு உள்ளே போனான். பில்லை வாங்கி பணத்தை எண்ணிக் கொடுத்துவிட்டு காரில் ஏறினான். பங்கை விட்டு வெளியே வந்து ரோட்டைத் தொட்டதும்,

“அப்பிடியே ஓரமா நிறுத்து. இல்லைன்னா மூளை சிதறிடும்”

தலையில் பிஸ்டல் முனையின் சில்லிப்பை உணர முடிந்தது. காரை ஓரமாக நிறுத்தியதும், பிஸ்டலின் பின்பக்கத்தால் தலையில் அடிபட்டு மயங்கினான்.

(தொடரும்)

அடுத்த பாகம் இங்கே