Tuesday, July 27, 2010

பதிவுலகில் நான் (மட்டும்) உத்தமன்

சில தொடர்பதிவுகளுக்கு நம்மை அழைக்க மாட்டார்களா என்று காத்திருப்போம். அதை முதலில் படித்தவுடனே நாம் எழுதினால் இப்படி எழுத வேண்டும் என்று ஒரு கற்பனை செய்து வைப்போம். கிரிக்கெட் தொடர் பதிவு ஆரம்பிக்கப் பட்ட போது அப்படித்தான் நினைத்தேன். இந்தத் தொடர்பதிவையும்.


இப்படி நினைக்கும் போதுதான் நம்மை யாரும் அழைத்துத் தொலைய மாட்டார்கள். கடைசியில் நம்மை அழைக்கும் போது பலர் எழுதியிருப்பார்கள். நான் நினைத்து வைத்திருந்த அத்தனையையும் யாராவது எழுதியிருப்பார்கள். வடை போச்சே என்று உட்கார்ந்திருக்க வேண்டும். வேறு வழி? 


இந்தத் தொடர்பதிவுக்கு என்னை அழைத்த சகோதரி சின்ன அம்மிணிக்கு நன்றி (இவர்தான் என்னை முதல் தொடர்பதிவுக்கு அழைத்தவர்)
1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
முகிலன்.
 
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
இல்லை.

எனக்கு என் பெற்றோர் வைத்த பெயர் வடமொழிப் பெயரான காரணத்தால், ஒரு நல்ல தமிழ்ப் பெயர் வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்தேன். அப்போது, என் மகனுக்கு அவன் தந்தை வைத்த நல்ல தமிழ்ப் பெயரான முகிலன் எனக்குப் பிடித்துப் போகவே அதையே வைத்துக் கொண்டேன்.

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

வில்லு படம் வெளிவந்த நேரம். வலையுலகில் வில்லு பட விமர்சனங்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும்போது குடுகுடுப்பை அவர்கள் எழுதிய விமர்சனத்தைப் பார்க்க நேர்ந்தது. அவரது நகைச்சுவை இழையோடிய எழுத்தைப் படித்ததும் அவருக்கு வாசகனாகிப் போனேன். அப்போது எனக்கு தமிழ்மணம் தமிழிஷ் என்பதெல்லாம் என்ன என்றே தெரியாது. அவரது வலைப்பூவை மட்டும் என் உலவியில் விருப்பமானவைகளில் சேமித்துக் கொண்டு அவர் புதிய பதிவு போடப் போட போய் படிப்பேன். பின்னர், அவருக்குப் பின்னூட்டங்கள் போடத் துவங்கினேன். ஒரு முறை டாக்டர்.சுரேஷுடன் ஒரு விவாதம் கூட செய்தேன். அதன் பின்னர் ப்ளாக்கர் இலவசமாகக் கிடைக்கிறது என்றதும், நானும் ஒரு வலைப்பூவை ஆரம்பித்து அதற்கு பிதற்றல்கள் என்ற பெயரையும் வைத்து பிதற்றி வந்தேன்.  குடுகுடுப்பை அவர்களின் ஆலோசனைப் படி தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்தின் என் வலைப்பதிவைச் சேர்த்தேன்.
 
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
இதுவரை ஒன்றுமே செய்யவில்லை. யாரையும் ஓட்டுப் போடச் சொல்லிக் கூட கேட்டதில்லை

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
சிலவற்றைப் பகிர்ந்திருக்கிறேன். சிலவற்றை புனைவு போல எழுதியிருக்கிறேன். விளைவு சிலமுறை வீட்டில் திட்டு வாங்கி போட்ட பதிவுகளை அழித்தும் இருக்கிறேன். 

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு முகிலன் என்ற ஒரு உயிரி இருந்தது என்பதைச் சொல்லிப் போவதே என் வலைப்பூவின் நோக்கம்.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
இரண்டு. எனக்கிருந்த கிரிக்கெட் ஆர்வக்கோளாறால் இந்தப் பதிவில் பல கிரிக்கெட் இடுகைகளை இட்டு வந்தேன். கிரிக்கெட் பிடிக்காத சில நண்பர்கள் எரிச்சல் அடைவதைக் கண்டு கிரிக்கெட்டுக்கு என்று ஒரு வலைப்பூ துவங்கினேன். 

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

நகோபம் பல முறை பட்டிருக்கிறேன். அப்படிக் கோபம் வரும்போது அவர்களின் இடுகையில் பின்னூட்டங்கள் மூலமாகவோ இல்லை நெகட்டிவ் ஓட்டுக்கள் மூலமாகவோ என் கோபத்தை/எதிர்ப்பைப் பதிவு செய்துவிட்டு வந்திருக்கிறேன். சில நேரங்களில் பின்னூட்டங்களில் விவாதமும் நிகழ்த்தியிருக்கிறேன். எப்போதாவது எதிர்வினையும்.


இந்த இடத்தில் பொறாமை என்பதை விட ஏக்கப் பெருமூச்சு என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். இவர்களைப் போல எழுத முடியவில்லையே என்று நான் ஏங்கும் பதிவர்கள் பலர். நான் பின் தொடரும் அனைவரையும் பார்த்து நான் ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். ஓரிருவரைச் சொல்லி மற்றவர்களைச் சொல்லாமல் விட நான் விரும்பவில்லை.  

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
பின்னூட்டம் எனக்கு முதல் முதலில் இட்டது (நான் தமிழ்மணத்தில் இணைக்கும் முன்பே) குடுகுடுப்பை. அவரே என்னை வலைச்சரத்திலும் அறிமுகப் படுத்தினார். என்னுடன் முதன் முதலில் தொலைபேசியில் உரையாடியதும் அவரே.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...


விருப்பம் இல்லை. 


இத் தொடரைத் தொடர நான் அழைக்கும் ஆட்கள்


1. சகோதரி கலகலப்ரியா
2. நண்பர் அதுசரி
3. சேட்டைக்காரன்
4. மதுரை நண்பர் கார்த்திகைப் பாண்டியன்.
5. பட்டா பட்டி

Tuesday, July 20, 2010

கிசு கிசு

அமெரிக்காவில் ஒரு சில மாகாணங்களே ஒரே பெயரோடு வடக்கு தெற்கு என்று மாறுதல் படுத்தப்பட்டு இருக்கின்றன. மத்திய கிழக்குப் பகுதியில் அப்படிஒரு வடக்கு மாகாணத்தின் முக்கிய நகரில் வசிக்கும் இரு "மூத்த" பதிவர்கள், தங்கள் தங்க"மணி"களை இந்தியாவுக்கு அனுப்பி விட்டு வாரா வாரம் கோப்பையும் கையுமாக வார இறுதியைக் கழிக்கிறார்களாம். இவர்களில் ஒருவருக்கு “ரவளி” என்றால் உயிராம். எப்போதும் வெளியூரில் வேலை செய்யும் இன்னொருவர், தங்கமணி ஊரில் இருக்கும்போது சனிக்கிழமை காலை வீடு திரும்புபவர், இப்போதெல்லாம் வெள்ளிக்கிழமை காலையிலேயே ஊருக்குத் திரும்பி விடுகிறாராம்.

இருவரும் அப்படி என்ன பழமைக் கதைகளைப் பேசித் தீர்ப்பார்களோ தெரியவில்லை.

Monday, July 19, 2010

பிதற்றல்கள் - 07/18/2010

ன்று செய்திகளில் பா.ஜ.க நடத்தும் போராட்டம் பற்றி பார்த்தேன். மத்திய அரசு ஏழை சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குகிறதாம். அதை சிறுபான்மை மாணவர்களுக்கு மட்டும் வழங்குவதால் மாணவர்கள் மத்தியில் மத உணர்வு தூண்டப்படுமாம். ஆகவே எல்லா மத மாணவர்களுக்கும் வழங்க வேண்டுமாம்.

மத உணர்வு தூண்டப்படுவதைப் பற்றி பா.ஜ.க பேசுவதைக் கேட்டால் என்ன என்னவோ பழமொழிகள் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

மாருதி சுசுகியின் கார்களுக்கு வரும் இரண்டு விளம்பரங்களை மிகவும் ரசித்தேன். முதல் விளம்பரத்தில் ஒரு பெரிய யாட்(yatch) ஒன்றில் உள்ள வசதிகளை ஒருவர் விளக்கிக் கொண்டே வருவார். கடைசியில் நம்மூர்க்காரர் அவரிடம் ஒரு கேள்வி கேட்பார். இன்னொரு விளம்பரத்தில் ஸ்பேஸ் கிராஃப்ட் ஒன்றை விஞ்ஞானி ஒருவர் விளக்கிவிட்டு எனி க்வெஸ்டின்ஸ் என்று கேட்பார். அதற்கு நம்மூர்க்காரர் அதே கேள்வியைக் கேட்பார்.

“(லிட்டருக்கு) எவ்வளவு (மைலேஜ்) கொடுக்கும்?”

அடுத்து மாருதியின் பஞ்ச் லைன் - “மைலேஜே குறியாக இருக்கும் நாட்டுக்காக தயாரிக்கப்பட்டது”

அருமையான விளம்பரம்.

மீபத்தில் இந்தியா வந்திருந்த போது நான்கு படங்களை திரையரங்குகளில் கண்டு களிக்க வாய்ப்புக் கிடைத்தது. சிங்கம்(பி.வி.ஆர்), முரட்டு சிங்கம் (சத்யம்), களவாணி (மாயாஜால்) மற்றும் ராவணன் (மதுரை மணி இம்பாலா).

இதில் சத்யம் தவிர மற்ற மூன்று தியேட்டர்களுக்கும் நான் சென்றதே இல்லை.  பிவிஆர் நன்றாக இருந்தது. மாயாஜால் வார நாட்களில் போனதாலோ என்னவோ கூட்டமில்லாமல் இருந்தது. மணி இம்பாலாவைப் பற்றி கடைசியில் சொல்கிறேன்.

சிறப்பம்சம் என்னவென்றால் எல்லா தியேட்டர்களுக்குமே ஆன்லைனில் டிக்கெட் வாங்கப்பட்டது. வாங்கித் தந்தது என் மைத்துனன் செங்குட்டுவன் ராஜா.

நான்கு படங்களில் நான் மிகவும் ரசித்தது களவாணி. என் மைத்துனன் செங்குட்டுவன் - என் பதிவுகளையும் என் வலைப்பூ மூலம் பற்ற பதிவுகளையும் படிப்பவன் - இண்டெர்வெலிலும் படம் முடிந்த பின்னும் விடாமல் ஆற்றாமையால் புலம்பிக் கொண்டே இருந்தான் - ‘இந்த படத்துக்கு ஏன் நல்லா இல்லைன்னு கேபிள் சங்கர் விமர்சனம் எழுதினாரு?’. உடன் இருந்த நண்பர், பதிவர் பிரபாகர் “நான் நாளைக்கே கேபிளுக்கு ஃபோன் போட்டுக் கேக்கப் போறேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தார். கேட்டாரா தெரியவில்லை.

ணி இம்பாலா அவர்களது வெப் சைட்டில் மதுரையின் முதல் மல்டிப்ளெக்ஸ் என்று விளம்பரம் தருகிறார்கள். ப்ரியா காம்ப்ளெக்ஸ், மாப்பிள்ளை விநாயகர்- மாணிக்க விநாயகர், அம்பிகா காம்ப்ளெக்ஸ் எல்லாம் மல்டிப்ளெக்ஸில் வராதா என்று தெரியவில்லை. மேலும் தியேட்டரில் தமிழ்நாட்டின் முதல் ஐ-மேக்ஸ் த்ரி-டி என்று போட்டிருக்கிறார்கள். உள்ளே 70 எம் எம் ஸ்கீரின் கூட இல்லை. இதுவா உங்க ஐமேக்ஸ்? மற்றபடி வழக்கமான மதுரை தியேட்டர்கள் போல பாதியில் ஏ.சியை ஆஃப் செய்யாமல் கடைசிவரை போட்டிருந்தார்கள் என்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

ந்தியா வந்த போது நான்கு பதிவர்களை சந்தித்தேன் - பாலா சார், பலாபட்டறை சங்கர், எறும்பு ராஜகோபால் மற்றும் சிங்கை சிங்கம் பிரபாகர். ஒருவரோடு தொலைபேசியில் கதைத்தேன் - விதூஷ் வித்யா.

பாலா சாரை அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். அவரது அலுவலகத்தின் வரலாறையும் மற்ற சிறப்புகளையும் பற்றி ஒரு தொடர் எழுதும் அளவுக்கு பேசிக் கொண்டே இருந்தார். நானும் பலா பட்டறையும் திறந்த வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருந்தோம். அங்கே கழித்த 2 மணி நேரங்களில் நிறைய தெரிந்து கொண்டேன். மீண்டும் ஒரு முறை அவரை அதே அலுவலகத்தில் தங்கமணியுடன் சந்தித்தேன். அப்போது பல இந்திய கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்துப் போட்ட பேட் ஒன்றை பாலா சார் எனக்குக் கொடுத்தார். நன்றி பாலா சார். நெக்ஸ்ட் டைம் சச்சின் ஆட்டோகிராஃப். :)

பலா பட்டறை சங்கரையும், எறும்பு ராஜகோபாலையும் அடையார்-இந்திரா நகர் தோஸா காலிங்க் ரெஸ்டாரண்டில் சந்தித்தேன். மழையோடு நடந்த அந்த சந்திப்பும் மகிழ்ச்சியாகவே நிகழ்ந்தது. எறும்பு விதூஷை தொலைபேசியில் அழைத்துக் கொடுத்தார். பேசினேன்.

பிரபாகரோடு மாயா ஜாலுக்கு திரைப்படம் பார்க்கச் சென்றோம். அங்கே சாப்பிட்டது, படம் பார்த்தது, என்று நான்கு மணி நேரம் மிகவும் மகிழ்ச்சியாகக் கழிந்தது. சோகத்தில் இருந்த பிரபாகருக்கு ஒரு மாற்றாக அந்த சந்திப்பு இருந்திருக்கும் என்று நம்புகிறேன். (எடுத்த ஃபோட்டோவை பப்ளிஷ் செய்யுங்க பிரபா).Tuesday, July 13, 2010

ஆயுதம்

ணேசன் தனது கீறல் விழுந்த கண்ணாடியை மறுபடியும் துடைத்தார். அது என்ன அழுக்கா துடைத்தும் போவதற்கு. கீறல் அல்லவா? கணேசன் கடைசியாக கண்ணாடியை எப்போது மாற்றினோம் என்று யோசித்து பார்த்தார். நினைவுக்கே வரவில்லை.

அரசு அலுவலகம் ஒன்றில் தலைமை கணக்கராக இருந்து ஓய்வு பெற்ற பின் இப்போது ஒரே மகனின் குடும்பத்துடன் சொந்த வீட்டிலேயே அனாதை போலக்குடித்தனம். அவர் மனைவி தனம் கொடுத்து வைத்தவள் இவர் பணியில் இருக்கும் போதே சுமங்கலியாக போய் சேர்ந்து விட்டாள். இவர் தான் தனியாக மகனிடமும் மருமகளிடமும் பேச்சு வாங்கிக்கொண்டு காலம் தள்ள வேண்டி இருக்கிறது.

"தாத்தா டிக்கெட் வாங்கியாச்சா?" கண்டக்டர் குரல் கேட்டு நிமிர்ந்தார். பையை துழாவி ஒரு இரண்டு ரூபாய் நாணயத்தையும் ஒரு ஐம்பத்து பைசா நாணயத்தையும் எடுத்து கண்டக்டர் இடம் கொடுத்தார். கண்டக்டர் டிக்கெட் கிழித்து கொடுத்து விட்டு அந்தப்பக்கம் சென்றார்.

இன்று பென்ஷன் வாங்கும் நாள். மகன் சரியாக ஒரு வழிக்கு மட்டும் டிக்கெட் காசு தந்து விடுவான். பென்ஷன் ஆயிரத்து நானூற்று ஐந்து ரூபாய். அதில் இருநூறு ரூபாயை பென்ஷன் பட்டுவாடா செய்யும் கணக்கன் எடுத்துக்கொண்டு விடுவான். கொசுறு ஐந்து ரூபாயில் பாய் கடையில் ஒரு டீ குடித்தால் சரியாக திரும்ப வருவதற்கு தான் காசு இருக்கும். அந்த கணக்கனுக்கு லஞ்சம் கொடுக்காவிட்டால் ஆள் உயிரோடு இல்லை என்று பென்ஷன் பைல் மூடி விடுவான்.

இவர் தந்தை பெரிய காந்தியவாதி. சுதந்திர போராட்ட தியாகி. அவர் தனது அஹிம்சை கொள்கைகளைத் தன் மகனுக்கு போதித்து வந்ததன் பலனாக இவரும் 1940களிலேயே இருக்கிறார். இவர் மகன் இந்த நூற்றைண்டை சேர்ந்தவன். அப்பா பிழைக்க தெரியாத ஆள் என்பதை உணர்ந்து கொண்டவன். மருமகளோ இவரை தண்டசோறு என்று காது படவே அழைப்பவள். பென்ஷன் பணத்தை அப்படியே மகனிடம் கொடுத்து விடுவதால் தான் இவர் பிழைப்பு அங்கே ஓடுகிறது. இல்லை என்றால் என்றோ வெளியே துரத்தப்பட்டிருப்பார்.

மூக்கு கண்ணாடியில் கீறல் விழுந்திருப்பது மட்டும் அல்ல, கண்ணும் மங்கலாக தெரிய ஆரம்பித்து இருக்கிறது. இந்த முறை லஞ்சம் கொடுப்பதை தவிர்த்தால் கண்ணாடி மாற்றிக்கொள் என்று மகன் சொல்லி இருக்கிறான். அந்த கணக்கனிடம் கெஞ்சிப் பார்க்க வேண்டும்.

"தாத்தா கலெக்டர் ஆபீஸ் வந்துடிச்சி. இறங்குங்க" என்று கண்டக்டர் குரல் கொடுக்கவும், இருக்கையிலிருந்து எழுந்து கொண்டார். கைத்தடியை மறக்காமல் எடுத்துக்கொண்டார். பஸ்சிலிருந்து இறங்கி மெதுவாக அரசுக் கருவூலம் என்ற பெயர்ப் பலகை மாட்டி இருந்த அலுவலகம் நோக்கி நடை போட்டார்.

"கணேசன் சார், நல்ல இருக்கீயளா?" பாய், டீக்கடை கல்லாவில் இருந்து குரல் கொடுத்தார்.

"ம்ம் ம்ம் " என்று ஒப்புதலாக தலை அசைத்தார்.

கால் கடுக்க வரிசையில் நின்று கொண்டிருந்து விட்டு இவர் முறை வரும் போது உள்ளே போனார்.

பான்பராக்கை குதப்பிக் கொண்டிருந்த அந்த கணக்கன் இவரைப் பார்த்ததும் முன்னால் இருந்த ஃபைலை மூடிவிட்டு எழுந்து வெளியே போய் எச்சிலைத் துப்பி விட்டு வந்தான்.

“என்ன பெருசு. பென்சன் வாங்க சரியா வந்துட்டீரு போலருக்கு” என்று கேட்டுக் கொண்டே பணத்தை எண்ணி அவருக்கு முன்னால் அந்த லெட்ஜரை நீட்டினான்.

இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்துக் கொண்டு அவரிடம் மீதியைக் கொடுக்க, கணேசன் கெஞ்சலாக ஆரம்பித்தார், “தம்பி. கண்ணாடில கீறல் விழுந்துரிச்சி. இந்த தடவை இந்த இருநூறு ரூவாயைக் குடுக்கலைன்னா கண்ணாடி மாத்திக்கன்னு மகன் சொல்லிட்டான். நீங்க கொஞ்சம் பெரிய மனசு பண்ணி..” என்று இழுத்தார்.

“என்ன தாத்தா இப்பிடி சொல்றீங்க?” என்று கொஞ்ச நேரம் யோசித்தான்.

"தாத்தா உங்க நிலைமையை கேட்டா பாவமாத்தேன் இருக்கு. ஆனா என் பொழைப்பையும் பாக்கணும்லா. அதுனால நான் இந்த வாட்டி நூறு ரூவா மட்டும் எடுத்துக்கிடுதேன். இதுல கண்ணாடி போட முடியுதான்னு பாருங்க. இல்லாட்டி அடுத்த மாசமும் நூறு ரூவா தர்றேன். அடுத்த மாசம் கண்ணாடி போட்டுக்குங்க. என்ன சொல்லுதிய?" தன் பணத்தை தருவதற்கே தன்னிடம் பேரம் பேசும் கொடுமையை எண்ணி நொந்துகொண்டு தலை அசைத்து வைத்தார் கணேசன். பணத்தை எண்ணி வாங்கிக் கொண்டு வெளியே வந்தார்.

"ஏலே கணேசன் சாருக்கு ஸ்பெஷல் டீ போடுல" என்று டீ ஆற்றுபவனை பார்த்து குரல் கொடுத்து விட்டு, "என்ன கணேசன் சார் எப்பிடி போகுது?" என்று கரிசனமாக கேட்கும் பாயை பார்த்தார். "போவுது பாய். என்னைய எப்ப கூப்பிட்டுக்குவான்னு கெடக்கேன்" என்றார்.

"என்ன இப்பிடி அலுத்துக்குதீய? நீங்களாவது ரிடயர் ஆனப்பரமும் சம்பளம் வாங்குரவரு. நானெல்லாம் முடியாம படுத்தா எம்மவனுங்க என்னையத் தூக்கி வெளிய கடாசிருவானுங்கள்ள"

"என் நிலைமையும் கிட்டத்தட்ட அதே மாதிரி தான் பாய்" என்றவாறு பையிலிருந்த ஐந்து ரூபாயை எடுத்து கொடுத்தார். பாய் கொடுத்த சில்லறையை பையில் போட்டுக்கொண்டு "நான் வர்றேன் பாய்" என்று சொல்லிவிட்டு பஸ் ஸ்டாப் நோக்கி நடந்தார்.

இவர் பஸ் ஸ்டாப் வருவதற்கும் பஸ் வருவதற்கும் சரியாக இருந்தது. பஸ்சில் ஏறி கூட்டத்தில் புகுந்து நடுவில் ஒரு கம்பியில் சாய்ந்து நின்று கொண்டார். பஸ் புற நகர் பகுதியை நோக்கி செல்ல செல்ல கூட்டம் குறைந்தது. இவர் ஒரு சீட்டில் உக்காருவதற்கும் கண்டக்டர் வருவதற்கும் சரியாக இருந்தது.

"யோவ் பெருசு, டிக்கெட் எடுத்தியா?"

"இன்னும் இல்லை தம்பி"

"அப்பத்தில இருந்து கழுதை மாதிரி கத்திக்கிட்டு இருக்கேன் யாரு டிக்கெட் எடுக்கலைன்னு. நீ என்ன தூங்கிக்கிட்டு இருந்தியா? காசை குடு" என்று கத்தினான்.

கணேசன் பையிலிருந்த சில்லறைகளை எடுத்து கண்டக்டர் கையில் கொடுத்து "என்.ஜி.ஒ காலனி குடுங்க தம்பி" என்று சொன்னார்.

"எங்க ஏறுன"

"கலெக்டர் ஆபீஸ்"

"கலெக்டர் ஆபீஸ்ல ஏறுனா டிக்கெட் ரெண்டு அம்பதுன்னு தெரியாதா? ரெண்டு ரூவா தான் குடுக்குற? எங்க இருந்திய்யா வர்ரிங்க காலங்காத்தால எங்க தாலி அறுக்குரதுக்கு? இன்னொரு அம்பது பைசா குடு."

கணேசன் பதட்டத்தில் பைக்குள் கை விட்டு துழாவினார். எதுவும் தட்டுப்படவில்லை. 'அய்யய்யோ பாய் சரியா சில்லறை குடுக்கலை போல இருக்கே. அங்கயே சரி பாத்து வாங்கி இருக்கணுமோ?'

"தம்பி சில்லறை இல்லப்பா நூறு ரூவா நோட்டா தான் இருக்கு"

"ஆமாய்யா உனக்கு சில்லறை குடுக்கத்தான் நாங்க பைய தூக்கிகிட்டு வந்திருக்கோம்" விசிலை வாயில் வைத்து பலமாக ஊதினான். பஸ் டிரைவர் உடனடியாக பிரேக்கில் காலை வைத்து அழுத்தவும் பஸ் நின்றது.

"இறங்குயா கீழ. உன்னை எல்லாம் யாருயா பஸ்ல வர சொன்னது. போய் சேர வேண்டிய வயசுல எங்க உயிரை எடுக்குறதுக்கு வந்துட்ட"

"தம்பி இங்க இறங்குனா ரெண்டு கிலோ மீட்டர் நடக்கணுமே"

"நீ குடுத்த ரெண்டு ரூவாய்க்கு இங்க தான் இறங்கனும்" என்று சொல்லி கிட்டத் தட்ட அவரை பஸ்ஸில் இருந்து கீழே தள்ளி விட்டான்.

கணேசன் தட்டு தடுமாறி கீழே இறங்கி நிற்க, டபுள் விசில் கொடுத்து பஸ் போயே விட்டது. அடுத்த பஸ் ஏறினால் மினிமம் சார்ஜ் ஒன்னைம்பது கொடுக்க வேண்டும். பேசாமல் ஒன்னரை கிலோ மீட்டர் நடக்க வேண்டியது தான் என்று மெதுவாக நடக்க ஆரம்பித்தார்.

இந்த பகுதி புற நகர் பகுதி. இன்னும் சரியாக முன்னேற்றம் அடையாத பகுதி. இங்கே ஒரு கல்லூரி வரப் போவதாக பேச்சு அடிபடுகிறது. எப்போது வரும் என்று தெரியவில்லை. இந்த ஒன்னரை கிலோ மீட்டர்க்கு ஆள் நடமாட்டமே இருக்காது.

நடந்து வரும்போது இருபது வருடங்களுக்கு முன்னாள் தன்னுடன் வேலை பார்த்த நண்பர்களுடன் இந்த பகுதியில் நிலம் வாங்க வந்தது, பார்த்து பார்த்து வீடு கட்டியது, வீட்டு கிரகப்பிரவேசம், மகனின் திருமணம், மனைவியின் மரணம் ஆகியவை ஒரு சினிமா போல அவர் மனத்திரையில் ஓடியது..

"என்ன விட்டுடு, என்ன விட்டுடு" என்று யாரோ கத்துவது கேட்டு அவர் நினைவு கலைந்தார்.

சற்று தொலைவில் ஒரு பெண் ஓடுவதும், அவளை ஒருவன் துரத்துவதையும் பார்த்தார். இவர் மனம் படபடத்தது. நடையை எட்டி போட்டு அவர்கள் பக்கம் நடந்தார்.

இப்போது அந்த இளைஞன் அந்த பெண்ணை பிடித்து விட்டான். அவளைக் கீழே தள்ளி அவள் மீது படர்ந்தான். கணேசன் அவர்களை நெருங்கி விட்டார்.

"டேய் அவளை விடுடா" என்று கத்தினார்.

அவன் தலை மட்டும் திருப்பி அவரைப் பார்த்தான்.

"யோவ் கிழடு போயிரு. உனக்கு தேவை இல்லாதது. பாக்காத மாறி போய்ட்டே இரு" என்றான்.

"தாத்தா தாத்தா காப்பாத்துங்க தாத்தா. லவ் பன்றேனு சொல்லி இங்க கூப்பிட்டு வந்து தப்பா நடந்துக்குறான். என்னை காப்பாத்துங்க தாத்தா" என்று கதறினாள் அந்தப் பெண்.

கணேசனுக்கு எங்கிருந்து பலம் வந்ததென்றே தெரியவில்லை. கையிலிருந்த கைத் தடியை ஓங்கி அவன் தலையில் அடித்தார். விடாமல் மாறி மாறி அவன் முதுகில் தடியால் அடித்தார். அவன் வலி தாங்காமல் கத்தினான். எழுந்து நின்றான். கணேசன் விடாமல் அடித்தார். அவன் அடி தாங்க முடியாமல் ஓட ஆரம்பித்தான். அவன் ஓடவும் கீழே இருந்து கல் எடுத்து அவன் மீது எறிந்தார். அவன் திரும்பி பார்க்காமல் ஓடி ஒரு மரத்தடியில் நிறுத்தி இருந்த பைக் எடுத்துக்கொண்டு பறந்தான்.

"இப்பிடிப் பசங்கள எல்லாம் நம்பி வரலாமாம்மா? என் கூட வா நான் அடுத்த பஸ் ஸ்டாப்ல பஸ் ஏத்தி விடுதேன்" என்று அந்த பெண்ணுக்கு எழ கை கொடுத்தார்.

சுட்டெரித்துக் கொண்டிருந்த சூரியன் ஒரு மேகத்துக்கு பின்னால் சென்று ஒளிய வெயிலின் கடுமை சற்றே குறைந்தது.

நீதி: நீ என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை உன் எதிரியே தீர்மானிக்கிறான்

Friday, July 9, 2010

புறக்கணிப்பு - பகுதி 2

நேற்றைய இடுகைக்கு வந்த பின்னூட்டங்களுக்கான பதிலாக இந்தப் பதிவு.

பெரும்பாலான நபர்களின் கருத்து என்னவென்றால், இலங்கையில் முள்வேலிக்குப் பின்னே வாடும் தமிழருக்கு இப்போதைய தேவை தனி நாடோ, சுயாட்சியோ, சம உரிமையோ இல்லை. உண்ண உணவு, உடுக்க உடை, வசிக்க இருப்பிடம் ஆகியவைதான். ஏற்கனவே போரில் நலிந்து போயிருக்கும் பொருளாதாரத்தை இலங்கையை பொருளாதார ரீதியில் தனிமைப் படுத்துகிறோம் என்று இன்னும் கஷ்டப்படுத்தி இப்போது கிடைக்கும் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் செய்துவிடாதீர்கள். வெளியே இருந்து கிறுக்குத் தனமான போராட்டங்களை நடத்துவதை விட உள்ளே வந்து உதவிகள் செய்யுங்கள். அல்லது செய்ய முன்வரும் விவேக் ஓபராய் போன்ற நடிகர்களையாவது போராட்டம் என்ற பெயரில் கஷ்டப்படுத்தாதீர்கள்.

மேலோட்டமாக இந்தக் கருத்தைப் பார்த்தோமென்றால், அட ஆமாம். இவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறதே. கஷ்டப்படுபவர்களுக்கு இப்போதைய தேவையைப் பூர்த்தி செய்து விட்டு அதன்பிறகு நிரந்தரத் தீர்வுக்கு வழி செய்யலாமே என்று தோன்றும். ஆனால் உணமை நிலை என்ன?

முள்வேலியில் வாழும் எங்கள் சகோதரர்களுக்கு உணவும் உடையும் கொடுக்க நாங்கள் தயாராயில்லையா? போர் நடந்து கொண்டிருந்த காலத்திலேயே உணவும் மருந்தும் ஒரு கப்பல் நிறைய அனுப்பி வைத்தோமே? என்ன செய்தார்கள் சிங்களப் பேரினவாத அரசும் ராஜபக்‌ஷே சகோதரர்களும்? அந்தக் கப்பலை அங்கேயும் இங்கேயும் அலைக்கழித்து கடைசியில் திருப்பி அனுப்பிவிட்டார்களே.

இப்போதும் அங்கே நலப்பணிகளைச் செய்ய அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் பல முன்வருகின்றனவே? ஆனால் இலங்கை அரசு என்ன செய்கிறது? பணம் கொடுங்கள். நாங்களே அவர்களுக்கு எல்லாம் செய்வோம் என்று சொல்கிறது. நாங்கள் பணம் கொடுத்தால் அது எம்மக்களுக்கு உதவியாகவா போகும்? ஆயுதங்களாகவும் ராஜபக்சே குடும்பச் சொத்துக்களாகவும் மாறிவிடாதா?

வரிசைகட்டி நிற்கும் தொண்டு நிறுவனங்களை உள்ளே விடாமல் விவேக் ஓபராயை பாடசாலை கட்டித்தரச் சொல்லும் செயலின் பின்னால் என்ன அரசியல் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? நடிகனை அழைத்து வந்து நான்கு பேருடன் பேசச் செய்து சிங்கள அரசு தமிழர்களை மிகவும் நன்றாக நடத்துகிறது என்று உலகுக்குப் பொய் பிரச்சாரம் செய்யத்தானே முயல்கிறது? அசினையும் சல்மான் கானையும் படப்பிடிப்பு நடத்த விட்டு இலங்கையில் மனித உரிமை மீறலே இல்லை என்று சொல்லி விளம்பரம் செய்துகொள்ளத்தானே ஆசைப்படுகிறது.

ஐ.எஃப்.எஃப்.ஏ விழாவை சிறப்பாக நடத்தி ஏற்கனவே சினிமா மோகம் பிடித்து அலையும் தமிழனை ஈழத்தைப் பற்றி யோசிக்க விடாமல் செய்யத்தானே முயற்சி எடுக்கிறது. இந்தியக் கிரிக்கெட் அணியுடன் அடுத்தடுத்து போட்டிகள் நடத்துவதன் மூலம் கிரிக்கெட் போதையில் வெறியேற்றி இலங்கைத் தமிழனையும் இந்தியத் தமிழனையும் மனித உரிமை மீறலை மறக்கடிச்செய்ய சிங்கள அரசு செய்யும் சூழ்ச்சி என்று தெரியவில்லையா?

உலகம் முள்வேலிக்குப் பின்னால் கஷ்டப்படும் தமிழ்ச் சகோதரர்களுக்கு செய்ய நினைக்கும் உதவி அவர்களுக்குப் போய்ச் சேர வேண்டுமென்றால் இப்போதைக்கு இலங்கையை ஆளும் சிங்களப் பேரினவாத அரசை தலையில் குட்டி அமைதியாக ஒரு ஓரத்தில் இருக்க வைக்க வேண்டுமல்லவா? இல்லையென்றால் நாங்கள் கஷ்டப்பட்டு அனுப்பி வைக்கும் பணமெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிடாதா?

இப்போது இலங்கை வாழ் தமிழ்ச் சகோதரர்களை ஒன்று கேட்கிறேன். ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனத்தை உருவாக்கி, நிதி திரட்டி, வன்னிக்கு வந்து அங்கே வாடும் என் இன மக்களுக்கு வாழ வீடுகளும், படிக்க பாடசாலைகளும் கட்டித் தர நான் தயாராய் இருக்கிறேன். என்னையும் என் குழுவையும் உள்ளே விட உங்கள் அரசு தயாராக உள்ளதா? அப்படி எமக்கு அனுமதி மறுக்கும் பட்சத்தில் எம்மை உள்ளே விடக்கோரி போராட்டம் நடத்த நீங்கள் தயாரா? விமல் வீரவன்ஸ ஐ.நா குழுவை உள்ளே நுழையக் கூடாதென்று சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பது போல் எங்கள் குழுவை உள்ளே விடக்கோரி நீங்கள் உண்ணாவிரதம் இருப்பீர்களா?

பதில் சொல்லுங்கள்.

(முதல் வெற்றி: பிரிட்டனைச் சேர்ந்த நெக்ஸ்ட் நிறுவனம் இலங்கையில் மனித உரிமை பாதுகாக்கப்படும் வரை அங்கே தயாராகும் ஆடைகளை இறக்குமதி செய்யப்போவதில்லை என்று அறிவித்துள்ளது. இது நமக்குக் கிடைத்த முதல் வெற்றி. இனி எல்லா நாட்டு நிறுவனங்களும் இப்படி அறிவிக்க வேண்டும். நம் போராட்டத்தை தொடர்வோம்).

பல நல்ல கருத்துக்களைச் சொல்லிச் சென்ற சகோதரி அனாமிகா துவாரகன் உணர்ச்சி வசத்தால் பேசிவிட்ட அந்த வார்த்தை(கள்) உங்கள் யாரையாவது காயப்படுத்தியிருப்பின் அந்தச் சகோதரியின் சார்பிலும் அந்த வார்த்தையை மட்டும் நீக்க முடியாததாலும் மற்ற கருத்துகள் விடுபட்டுப் போய்விடும் என்பதால் அவரது பின்னூட்டத்தை விட்டுவைத்திருப்பதற்காகவும் இலங்கைப் பதிவர்/வாசக சகோதரர்களிடம் சிரம் தாழ்த்தி மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். 

Wednesday, July 7, 2010

புறக்கணிப்பு

குழந்தை பிறப்பு என்பது ஒரு நெடிய ப்ராசெஸ். கர்ப்பமான முதல் மூன்று மாதங்களில் வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வரும். எதை வாயில் போட்டாலும் குமட்டிக் கொண்டு வெளியே வந்து விடும். தலை சுற்றலும் மயக்கமும் காலையிலும் மாலையிலும் வாட்டி எடுத்து விடும். பிடித்த உணவுகள் பிடிக்காமல் போய் விடும். சிலருக்கு தலை வலியும் வருத்தி எடுக்கும்.

அடுத்த ஆறு மாதங்களில் வாய்க்கு ருசியாகச் சாப்பிட நாக்கு ஏங்கும். தன் சமையலே தனக்குப் பிடிக்காமல் போய் விடும். குழந்தை வயிற்றுக்குள் அசைய ஆரம்பித்தவுடன் தூக்கம் போய் விடும். குழந்தைக்காக ஒருக்களித்தே படுக்க வேண்டி இருக்கும். நின்று கொண்டே இருந்தால் கால் நரம்புகளில் ரத்தம் அதிகம் பாய்ந்து வெரிகோஸ் வெயின்ஸ் வரும். நடந்தால் மூச்சு வாங்கும். ஹார்மோன்களின் உள்ளே வெளியே விளையாட்டால் எரிச்சலும் கோபமும் கும்மாளம் போடும்.

கடைசியாக பிரசவ நேரத்தின் வேதனையையும் வலியையும் பற்றி சொல்லவே வேண்டாம். அதை மறு பிறப்பு என்றே சொல்வார்கள்.

இத்தன வேதனைகளையும் பொறுத்துக் கொண்டால், இறுதியாக நம் கையில் தவழும் அழகுக் குழந்தை இத்தனை நாள் பட்ட வேதனைகள் அத்துனையையும் மறக்கடிக்கும்.

சில சோகமான தருணங்களில் குழந்தை இறந்தே பிறந்து விடுவதோ, அல்லது தாய் பிரசவத்தில் மரணிப்பதோ, பிறந்த குழந்தை ஏதோ குறை பாட்டுடன் பிறந்து விடுவதோ தவிர்க்க முடியாதது.

இந்த வேதனைகளையும், தவிர்க்க முடியாத எதிர் நிகழ்வுகளையும் பார்த்து விட்டு ஆணியே புடுங்க வேண்டாம் என்று யாரும் இருந்து விடுவோமா?

பவனின் இந்தப் பதிவுக்கு வந்த சில பின்னூட்டங்களின் சாரம் அப்படித்தான் இருந்தது.

எந்த ஒரு போரோ போராட்டமோ பக்க விளைவுகள் இல்லாமல் வந்திடாது. அந்தப் பக்க விளைவுகளுக்குப் பயந்து அந்த போரையோ போராட்டத்தையோ நிறுத்தி விட்டால் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு எப்படிக் கிடைக்கும்? மேலே சொன்னது போல சில சமயங்களில் நிரந்தரத் தீர்வு கிட்டாமலேக் கூடப் போகலாம். அல்லது நாம் எதிர்ப்பார்த்த நிரந்தரத் தீர்வு குறை பாட்டுடன் இருந்து விடலாம். அதற்காக போராடாமல் இருக்க முடியுமா? இருந்து விடுங்கள் என்று சொல்கிறார்கள் ஒரு சாரார். போராட்டத்தையே கேலி செய்கிறார்கள் ஒரு சாரர்.

முள்வேலிக்குப் பின் நிற்கும் தமிழ்ச் சகோதரர்களின் படத்தை நடுவில் போட்டு, ஒரு பக்கத்தில் அசின் படத்தையும் இன்னொரு பக்கத்தில் போராட்டம் நடத்துவோர் படத்தையும் போட்டு, “அசின் ஷூட்டிங்குக்கு வந்தா அவ கூட ஒரு படம் எடுக்கலாமெண்டு நெனச்சா விடமாட்டாங்க போலருக்கே இந்தப் பொடியள்” என்று ஒரு கமெண்டையும் போட்டால் அது எந்த அளவுக்கு அவர்களின் வேதனையை கேலி செய்வதாக இருக்குமோ அப்படி இருந்தது பவனின் இந்தப் பதிவு.

இலங்கை சிங்களப் பேரினவாத அரசு புலிகளை ஒழிக்கத் தீவிரமாக போரில் ஈடுபட்டு நாட்டின் பொருளாதாரத்தையும் பத்திரிக்கை சுதந்திரத்தையும் ஒரு சேர நசுக்கிக் கொண்டிருந்த போது வெள்ளை வேனுக்குப் பயந்து மூச்சுக் காட்டாமல் இருந்தவர்கள் எல்லாம், இன்று இலங்கையைப் புறக்கணிப்போம் என்ற போராட்டத்தை முன் வைக்கும் போது, அதனால் பொருளாதாரம் பாதிக்கிறதென்றும், அப்பாவி தமிழன் தலையில் அந்தப் பொருளாதாரச் சுமை விழுகிறதென்றும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இதன் பின்னணியில் இருக்கும் இந்திய உளவுத்துறையின் வேலையைப் பற்றி அறியாமல் பவனைப் போல இளைஞர்களும் அந்த வலையில் விழுந்து விட்டார்கள்.

என் நாட்டின் பேரைச் சொல்லி அரசியல் ஆதாயம் தேடுவதா என்று கோபப் படுகிறீர்கள் பவன். நீங்கள் முதலில் ஒன்று தெரிந்துகொள்ளுங்கள். இந்தியாவில் இலங்கைத் தமிழரின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்தி ஆட்சியைப் பிடித்து விடவோ, ஆயிரம் வீடு கட்டவோ முடியாது. செலவு செய்யாமல் போடக் கூடிய ஓட்டையே போட பெரும்பாலான தமிழர்கள் தயாராய் இல்லாத போது, இலங்கையின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்தி முன்னேறுவதாவது? காமெடி செய்கிறீர்கள் பவன் (முன்பாவது விடுதலைப் புலிகள் காசு கொடுக்கிறார்கள் என்று பகடி செய்து கொண்டிருந்தார்கள். இப்போது அவர்களும் இல்லையே?)

பவன், apartheid என்ற வார்த்தை பாப்புலராக இருந்த காலத்தில் நீங்கள் பிறந்திருக்கவே மாட்டீர்கள். கறுப்பின மக்களை தனிமைப் படுத்தி சட்டம் இயற்றியது தென்னாப்பிரிக்க அரசு. இதனைக் கடுமையாக எதிர்த்த நெல்சன் மண்டேலாவை சிறையில் தள்ளியது. நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்தன. தென்னாப்பிரிக்காவுடன் வணிகத் தொடர்பு வைத்திருந்த நிறுவனங்களை அவர்களின் நாட்டு குடிமக்கள் தொடர்புகளைத் துண்டிக்குமாறு வற்புறுத்தினார்கள். தென்னாப்பிரிக்க விளையாட்டு அணிகள் ஒலிம்பிக் முதலாக அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொள்ள தடை விதிக்கப் பட்டன. தென்னாப்பிரிக்காவின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப் பட்டது. இதனால் தென்னாப்பிரிக்காவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப் பட்டது. வேறு வழியில்லாமல் வெள்ளைப் பேரினவாத அரசு இறங்கி வந்தது. 27 வருடங்கள் சிறையில் பூட்டப் பட்டிருந்த நெல்சன் மண்டேலா விடுதலை செய்யப் பட்டார். கறுப்பின மக்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு ஐ.நாவின் மேற்பார்வையில் தேர்தல் நடத்தப்பட்டது. பெரு வாரியான வாக்கு வித்தியாசத்தில் நெல்சன் மண்டேலா ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.

அந்தக் கால கட்டத்தில் தென்னாப்பிரிக்காவை பொருளாதார நெருக்கடிக்குள் ஆளாக்கினால் அங்கிருக்கும் கறுப்பின மக்களும் பாதிக்கப் படுவார்களே என்று நினைத்திருந்தால் இன்றும் தென்னாப்பிரிக்கா இனவாத அரசாகவே இருந்திருக்கும். நெல்சன் மண்டேலாவும் சிறையிலேயே மரணித்திருப்பார்.

இலங்கையையும் இப்படி ஒரு நெருக்கடிக்குள் உள்ளாக்க வேண்டும். இந்திய அரசும் சீன அரசும் மட்டுமே இலங்கையின் பக்கம் இருக்கின்றன. ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே இலங்கையை போர்க்குற்றவாளி ஆக்கிவிட்டது. அமெரிக்காவும் வாய்ப்பை எதிர்பார்த்தே இருக்கிறது. இலங்கைப் பொருட்களை வாங்காமல் தவிர்த்தும், இலங்கையோடு வணிகத் தொடர்பு வைத்திருக்கும் நிறுவனங்களை தொடர்புகளை நிறுத்த வற்புறுத்தியும் வந்தோமானால் தென்னாப்பிரிக்காவின் நிலைக்கு இலங்கை தள்ளப்படும். அதன் மூலம் தமிழனுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு - தனி நாடோ, சுயாட்சியோ - கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. என் போலவே இதை குறிக்கோளாகக் கொண்டு போராடும் பலருக்கும் இருக்கிறது.

இது கொஞ்சம் மெதுவான ப்ராசஸ் தான். இன்று கர்ப்பமாகி நாளைக் காலையே குழந்தை பெற்றுவிட முடியாது. அதே போல இன்றைய கர்ப்பத்தின் பக்க விளைவுகளுக்குப் பயந்து கர்ப்பத்தைக் கலைத்துவிட்டால் குழந்தை கிடைக்காமலே போய்விடும்.

உங்கள் பதிவின் பின்னூட்டங்களின் மூலம் பல சிங்களர்களுக்கும் இதே மனப்பாங்கு இருக்கிறதென்று தெரிகிறது. அவர்களைத் திரட்ட கல்லூரி மாணவராகளாகிய நீங்கள் ஏன் முன்வரக் கூடாது? உள்ளுக்குள் இருந்து போராடுங்கள். வெளியிலிருந்து சர்வதேசத்தின் கவனத்தை உங்கள் நாட்டின் மீது திருப்ப நாங்கள் எங்களால் ஆனதை முயற்சிக்கிறோம்.

உடனே, வெளிய இருந்து என்ன வேணும்னா சொல்லலாம். உள்ள வந்து பாரு என்று சொல்லக் கூடாது. தென்னாப்பிரிக்காவின் போராட்ட வரலாற்றைப் படித்துப் பாருங்கள். அதிலிருந்து ஒன்றிரண்டு இலைகளை உருவிக் கொள்ளலாம்.

இன்று வரை சாமானிய ஈழத் தமிழன் சிங்களப் பேரினவாத அரசை எதிர்த்துப் போராட ஒன்று திரளவில்லை என்பதே ஈழப் போராட்டத்தின் பின்னடைவுக்கு ஒரு முக்கியக் காரணம்.