Saturday, June 26, 2010

லீகல் அட்வைஸ் ப்ளீஸ்...

மதுரையை மையமா வச்சி எடுக்கிற தமிழ்ப் படங்கள்ல, அருவாள், ரத்தம், ரவுடி, கொலை, திருவிழா - இதையெல்லாம் காட்டக்கூடாதுன்னு ஸ்டே வாங்க சட்டத்தில இடம் இருக்கா? சட்டம் தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்க ப்ளீஸ்..

(உண்மைத்தமிழன் அண்ணன் பதிவை நேத்தே படிச்சிருக்கக்கூடாதா?)

Saturday, June 19, 2010

நியூட்டனின் மூன்றாம் விதி

தங்க்லீஷ்/இங்க்லீஷ்

இணையத்தையும் ப்ளாக்கரையும் கண்டுபிடித்தவன் வெள்ளைக்காரன். அதனால் தான் உரலிகள் எல்லாம் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. ஆனால் நாம் என்ன செய்கிறோம். அந்த ஆங்கில உரலிகளையும் நம் வலைப்பூவின் தலைப்புகளையும் தங்கிலீஷில் வைக்கிறோம். அது சரியா? அது ஆங்கிலத்துக்கு சரியான மரியாதை கொடுப்பதாக இருக்குமா? அதனால் என்னால் முடிந்த அளவுக்கு சில பிரபலப் பதிவர்களின் பதிவுகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளேன்.

பிரியமுடன் வசந்த் - வசந்த் - With Love Sprin by Sprin

கசியும் மௌனம் - கதிர் - Leaking Silence by Ray

பாமரன் பக்கங்கள் - வானம்பாடிகள் - Simpleman's Pages by SkySingers


முகிலனின் பிதற்றல்கள் - முகிலன் - Cloudman's blabbering by Cloudman


கலகலப்ரியா - ப்ரியா - Jovial Lovely by Lovely


மணியின் பக்கங்கள் (எழிலாய்ப் பழமைபேச) - பழமைபேசி - Bell's Pages (To beautifully speak about past) PastSpeaker


குமரன் குடில் - சரவணக்குமரன் - Son's Hut - The Son of the Handsome


பொன்னியின் செல்வன் - கார்த்திகைப் பாண்டியன் - Goldie's Son - August Tamilan

அடுத்த செட் மொழிபெயர்ப்பு அடுத்தடுத்த பதிவுகளில்


தீவிரவாதப் பன்னாடைகள்

வணக்கம் தோழர்களே! நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் பதிவை எழுதுகிறேன். இந்தியப் பயணம் இரவுபகலாகச் செனறதால் கடந்த பல நாட்களாக செய்தித்தாள் எதையும் படிக்கவில்லை. அதனால் இந்தியாவில் நடந்த பிரச்சனைகள் எனக்குத் தெரியவில்லை. நேற்று என் மைத்துனன் மூலம் “காந்தி” பிரச்சனை தெரியவந்தது. அது குறித்த பதிவுகள் பல இடங்களில் இருந்தாலும் ஒரு படம் பார்த்து அதைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.

இந்தியாவும் மற்ற மேலை நாடுகளைப்போலவே சாக்கடையாக்த்தான் மாறிக்கொண்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. ஒரு பெண்ணைப் பழிவாங்கும் நோக்கிலேயே தீவிரவாதிகள் இந்த செயலை செய்திருக்கிறார்கள் என்பது வெள்ளிடை மலை. ஆனால் இது ஒரு பெண்ணைப் பழிவாங்கும் செயல் மட்டுமல்ல. ஒரு இயக்கத்தையே அவமானப்படுத்தும் நிகழ்வு.

அவரின் பாதுகாப்பாளன் என்ற ஒரு மிருகம் ஒரு புண்ணிய ஆத்மாவைக் கொலைசெய்திருக்கிறது. இதுவே என் பார்வை. இதை ஒரு கட்சியின் பிரச்சனை என்று கறை பூசாதீர்கள். நம் அனைவருக்கும் நேர்ந்த இழப்பு என்று எண்ணுங்கள். அவர்கள் தனிப்பட்ட விரோதம் தனி இடத்தில் தாக்கிக் கொண்டார்கள் என்றால் அது பற்றி நாம் கவலை கொள்ளப் போவதில்லை.

ஆனால் இந்தப் பிரச்சினை நடந்திருப்பது நம் நாட்டில் தலைநகரில் ஒரு பொது இடத்தில். அதுவும் சக இந்தியனுக்கு சக இந்தியனால் நிகழ்ந்திருக்கிறது. இதை வெறும் செய்தி போல பாவித்து பலர் தங்கள் அனுதாபங்களையும், எதிர்ப்புகளையும் அரசியல் கட்சிகள் போலவேக் காட்டியிருந்தனர். நன்றாக இருக்கிறது உங்கள் அரசியல்.

இந்திய நாட்டு மக்களாகிய நாமும் நம் தெரு டீக்கடையில் இதைப் பற்றி ஒரு வாரத்துக்குப் பேசிவிட்டு பின் அதைப் பற்றி மறந்து போகிறோம். இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு யார் தீர்வு காண்பது? என்று யாரும் யோசிப்பதில்லை.

இதற்கு உடனடியாக ஒரு தீர்வு கொண்டு வர வேண்டும். ஒரு பெண்ணின் மரணத்திற்குப் பதில் வேண்டும்.

Sunday, June 13, 2010

நன்றி

இந்த நட்சத்திர வாரம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. என்னை இந்த வார நட்சத்திரமாக தேர்ந்தெடுத்த தமிழ்மணத்திற்கு என் முதல் நன்றி.

இந்த வாரத்தில் எதிர்பாராமல் நேர்ந்த சில சொந்தப் பிரச்சனைகளால் என்னால் அதிக இடுகைகள் போட முடியவில்லை. இருந்தும் நான் போட்ட சில இடுகைகளைப் படித்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி.

நட்சத்திர வாரத்தில் முதல் இடுகையாக நான் போட்ட இந்திய மருத்துவர்களே ஏன் இப்படி? க்கு இன்னும் பின்னூட்டங்கள் வந்தவாறே உள்ளன. நான் ஒரு இடத்தில் செட்டில் ஆகி தடையின்றி இண்டர்நெட் தொடர்பு கிடைத்தது அத்தனைக்கும் பதில் சொல்கிறேன்.

சென்னை விசிட்டில் சில பல புகைப்படங்கள் எடுத்தும் அதைப் பகிர்ந்து கொள்ள முடியாதபடி technically challenged ஆகியிருக்கிறேன். தகுந்த உபகரணங்கள் கிடைத்ததும் கேமிராவிலும் செல்போனிலும் சிறைப்பட்டிருக்கும் அந்த புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

மீண்டும் தமிழ்மணத்துக்கும் நண்பர்களுக்கும் நன்றி.

Thursday, June 10, 2010

சென்னையில் ஒரு மழைக்காலம்

இந்த விடுமுறையில் இந்தியா வருகை கோடை காலத்தில் இருக்கிறதே எப்படி இருக்குமோ என்று எண்ணி பயந்து கொண்டே வந்தேன். மதுரைக்குப் போனால் மழை, பெங்களூர் போனால் மழை, சென்னைக்கு வந்தால் மழை என்று வானம் குளிர்ந்து போயிருந்தது.

என்ன செய்வது ஔவையே சொல்லிவிட்டாரே -

நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் 
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் - 
தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு 
எல்லார்க்கும் பெய்யும் மழை

என் பொருட்டு, எஞ்சாய் சென்னை.

இந்த முறை சென்னையில் புதிய தலைமுறை இதழைப் பார்க்க நேர்ந்தது. அந்த இதழின் அமைப்பும் அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களும் நான் இந்தியாவில் வசிக்கும்போது இப்படி ஒரு இதழ் இல்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியது. அதில் ஒரு தமிழறிஞரின் பேட்டி (ஏய், அந்தப் பேட்டி மாதிரி இல்லப்பா..) இடம்பெற்றிருந்தது. அவரைப் பற்றிய அறிமுகத்தில் அவர் ஒரு தமிழறிஞர் என்றும், இலக்குவனார் அவர்களின் புதல்வர் என்றும், ஆங்கிலப் புலமை பெற்றவர் என்றும், அமெரிக்காவின் பல பல்கலைக்கழகங்களில் விசிட்டிங் புரஃபெசர் என்றும் சொல்லிவிட்டு அவர் பெயர் என்ன என்பதைச் சொல்லாமல் விட்டுவிட்டார்கள். அவர் யார் என்பதை கூகுள் செய்து கண்டுபிடிக்க வேண்டும் போல. புதிய தலைமுறை?

இந்த முறை சென்னையில் ஒரு இரண்டு சக்கர வாகனத்தில் சுற்றித் திரிய வாய்ப்புக் கிடைத்தது. சும்மா சொல்லக்கூடாது. ராயல் என்ஃபீல்டின் மாச்சிஸ்மோ கம்பீரமாகத்தான் இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு கார் ஓட்டுவது போல. பல ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சாலையில் புல்லட்டில் சுற்றியது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி. கிண்டியிலிருந்து பாதி ஃப்ரீஸ் ஆன நிலையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு நானும் என் மைத்துனனும் கோயம்பேட்டுக்குப் போனோம். அங்கே கே.பி.என் பஸ் நிறுத்துமிடத்திற்கு அருகில் இறங்கிய போது அந்த தண்ணீர் வெதுவெதுப்பாக மாறியிருந்தது. சென்னை வெயில்?

நீண்ட நாட்களாக நிறைவேறாத ஆசையாக இருந்த பறக்கும் ரயில் பயணத்தையும் இந்த முறை நிறைவேற்றினேன். கஸ்தூரிபா நகர் நிலையத்திலிருந்து பூங்கா வரை சென்று செண்ட்ரல் ரயில் நிலையம் அருகே இரண்டு முக்கிய பிரபலப் பதிவர்களைச் சந்தித்தேன். (அதைப் பற்றி பின்னால்). திரும்பி வரும்போது கோட்டூர்புரம் நிலையத்திலிருந்து கஸ்தூரிபா நகர் நிலையம் வரும் வழியில் ஒரு சாக்கடை (அடையார் கால்வாய்??) ஓடுகிறது. அதன் கரையில் ஐந்தாறு புள்ளிமான்களைப் பார்த்தேன். சல்மான் கான்கள் வேட்டையாடுகிறார்கள், அழிந்துவரும் இனம் என்று கூப்பாடு போடுகிறார்கள். அந்தச் சாக்கடைத் தண்ணீரைக் குடித்து அருகில் உள்ள குப்பையை மேய்ந்து வரும் இந்த மான்களை யார் காப்பாற்றுவது?

ஹோட்டல் சவேராவில் உள்ள மால்குடி ரெஸ்ட்டாரண்டில் ஒரு இரவு உணவு அருந்தினோம். 12 பேர் போயிருந்தோம். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என்று நான்கு ஸ்டைலிலும் மெனு (நன்றாகப் படியுங்கள் மெனு மட்டும்) வைத்திருக்கிறார்கள். மற்றபடி எல்லா ஸ்டைலும் ஒரே மாதிரிதான் இருந்தது. பெரிய பிழை எதுவும் இல்லை என்றாலும் சாப்பாடு ஒன்றும் பிரமாதமில்லை. ஆனால் கடைசியில் வந்தது பாருங்கள் பில் - கிட்டத்தட்ட Rs.12,000/- ஒரு த்ரீ ஸ்டார் ஓட்டலுக்கு இந்த பில் தொகை டூ மச். அந்தச் சாப்பாட்டுத் தரத்திற்கு இந்த பில் தொகை த்ரீ மச். விலைவாசி?

ரிச்சி ஸ்ட்ரீட் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்றேன். அதே போலத்தான் இருக்கிறது. என்ன இப்போது லேப்டாப்கள், ஆப்பிள் ஐபாடுகள், வி கன்சோல்கள் என்று எல்லாமே கிடைக்கிறது. அமெரிக்காவில் பழுதடைந்த என் எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்கில் உள்ள டேட்டாவை பாதுகாப்பாக வெளியே எடுக்க அமெரிக்காவில் $1200/- கேட்டார்கள். இங்கே ரூ.1200/- க்கு முடித்துவிடலாம். கொடுத்திருக்கிறேன். வந்தபின் எவ்வளவானது என்று சொல்கிறேன். உழைப்புக்குக் கூலி?

புதிதாகக் கட்டியெழுப்பியிருக்கும் ஸ்கை வாக் மாலுக்குப் போய் அங்கே இருந்த பி.வி.ஆர் சினிமாவில் “சிங்கம்” படம் பார்த்தேன். தியேட்டருக்குள் நுழையும் முன்பு பெருங்கூட்டம் நின்றுகொண்டிருந்தது. ஆடி-3இல் சிங்கம் என்று எங்கள் டிக்கெட் சொன்னது. தியேட்டர் அருகில் இருந்த திரையில் பார்த்தால் ஆடி-1ல் சிங்கம். குழப்பத்துடன் அருகில் சென்ற உடன் நல்ல வேளை ஆடி-1ல் நுழையவில்லை என்று எண்ணிக் கொண்டேன். அங்கே ஓடிக்கொண்டிருந்தது “பெண் சிங்கம்” (ஆணாதிக்கவாதி என்று கம்பு தூக்கிக்கொண்டு வந்துவிடாதீர்கள்). சும்மா சொல்லக் கூடாது. தியேட்டர் நல்ல வசதி. எச் வரிசையில் அமர்ந்திருந்த போதிலும் கழுத்து வலிக்காமல் பார்க்க முடிந்தது. சீட்டும் நல்ல சாய்மானத்தோடு வசதியாக இருந்தது. இடைவேளையில் என் இன்னொரு மைத்துனன் ஒரு ஆனியன் ரிங், ஒரு ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ், மூன்று ஐஸ்க்ரீம் வாங்கினான். என் பர்ஸில் இருந்த நூறு ரூபாயை எடுத்து நான் கொடுக்கட்டுமா என்று கேட்டேன். இருக்கட்டும் பாவா என்று காசைக் கொடுத்துவிட்டு என் கையில் பில்லைக்கொடுத்தான். ரூ.347/- நூறு ரூபாயை வைத்து குடும்பத்துக்கு ஒன்றுமே வாங்க முடியாதா என்று கேட்டேன். சிரிப்பை மட்டுமே அவனால் பதிலாகத் தரமுடிந்தது. மறுபடியும் விலைவாசி.

இன்னும் நான்கு நாட்கள் சென்னையில் தான். பார்க்க வேண்டிய இடங்கள் பல இருக்கின்றன. அவற்றை பற்றி பிறகு.

Tuesday, June 8, 2010

கனவு தேசம் - 5

இதுவரை பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4


இன்ஸ்யூரன்ஷுக்கு அடுத்தபடியாக படிக்க அல்லது வேலை பார்க்க வந்த அனைவருக்கும் அமெரிக்காவில் கட்டாயத் தேவை சோசியல் செக்யூரிட்டி எண். பேங்கில் அக்கவுண்ட் ஆரம்பிப்பதில் ஆரம்பித்து வருமான வரி கட்டுவது வரை இந்த எண் தேவை.

ஒருவருடைய பொருளாதார செயல்பாடுகள் அனைத்தும் இந்த எஸ்.எஸ்.என்-னோடு சேர்த்து ஆவணப்படுத்தப் படும். மேலும் அவர் செய்யும் குற்றங்கள் - ட்ராஃபிக் டிக்கெட்ஸ், ஃபைன் கட்டியது போன்றவை - கூட இந்த எஸ்.எஸ்.என்-னோடு கோர்க்கப்பட்டிருக்கும். ஆக அவரது எஸ்.எஸ்.என் - ஐ சொன்னால் உங்கள் வரலாறையே எடுத்துவிடலாம்.

வழக்கமாக அமெரிக்கா வருபவர்களை வந்த உடன் எஸ்.எஸ்.என் விண்ணப்பிக்கச் சொல்லுவார்கள். ஆனால் நீங்கள் உடனே விண்ணப்பிக்கப் போனால் உங்கள் அமெரிக்க வருகை எஸ்.எஸ்.என் அலுவலக டேட்டா பேஸில் ஏறியிருக்காது. அதனால் அவர்கள் தபால் மூலம் யூ.எஸ்.சி.ஐ.எஸ் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உங்கள் வருகையை சரிபார்க்கச் சொல்வார்கள். யூ.எஸ்.சி.ஐ.எஸ் பதில் அனுப்பிய ஒரு வாரத்திற்குள் உங்கள் எஸ்.எஸ்.என் வீட்டுக்கு வந்து சேரும். மொத்தமாக எஸ்.எஸ்.என் வந்து சேர 3 முதல் 6 வாரம் வரை ஆகிவிடும்.

அதனால் நான் என் நண்பர்களுக்கு தரும் ஆலோசனை என்னவென்றால், அமெரிக்காவில் வந்திறங்கி ஒரு வாரம் கழித்துப் போய் எஸ்.எஸ்.என் விண்ணப்பித்தால் டேட்டா பேஸ் அப்டேட் ஆகியிருக்கும். உங்களுக்கு ஒரே வாரத்தில் எஸ்.எஸ்.என் வந்துவிடும். 1 முதல் 4 வாரம் வரை மிச்சம்.

எஸ்.எஸ்.என் வந்த பிறகே உங்களால் டிரைவிங் லைசன்சு கூட விண்ணப்பிக்க முடியும்.

எஸ்.எஸ்.என் பற்றி இன்னும் விளக்கமாகப் பின்னால் சொல்கிறேன். இப்போது டிரைவிங்க் லைசன்சு பற்றி பார்ப்போம்.

ஓவர்சீஸ் லைசன்ஸ் - இப்படி ஒரு பொருள் எங்கும் இல்லை, குறிப்பாக இந்தியாவில். இண்டர்நேஷனல் டிரைவர்ஸ் பெர்மிட்(ஐ.டி.பி) என்று ஒன்று உள்ளது. ஆனால் அது தனியாக ஒரு ஆவணம் இல்லை. அதுவும் உங்களின் இந்திய லைசன்ஸும் சேர்ந்தால்தான் அதற்கு மரியாதை. ஐ.டி.பி உங்களுக்கு கார் ஓட்ட லைசன்ஸ் இருக்கிறது என்பதை உலகில் உள்ள பல மொழிகளில் விளக்கியிருப்பார்கள். ஆக உங்கள் இந்திய லைசன்ஸ் இல்லாமல் ஐ.டி.பி மட்டும் வைத்து ஓட்ட முடியாது.

அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்துக்கும் டிரைவிங் லைசன்ஸ் எடுக்கும் விதிகள் வேறுபடும். உதாரணத்திற்கு நியூ ஜெர்சி மாகாணத்தில் உங்கள் இந்திய லைசன்ஸைக் கொடுத்து ஒரு எழுத்துத் தேர்வை பாஸ் செய்தால் போதும் நியூ ஜெர்சி லைசன்ஸ் பெற்று விடலாம். நீங்கள் ஓட்டிக் காட்டத் தேவை இல்லை. நியூ யார்க் மாகாணத்தில் அமெரிக்கா வந்து 3 மாதங்கள் உங்களின் இந்திய டிரைவிங் லைசன்ஸை வைத்தே ஓட்டலாம், அந்த லைசன்ஸ் ஆங்கிலத்தில் இருந்தால் ஐ.டி.பி தேவையே இல்லை. ஆனால் 3 மாதங்களுக்கு மேல் டூரிஸ்ட் விசா தவிர வேறு ஏதாவது விசாவில் இருந்தால் நீங்கள் கண்டிப்பாக நியூ யார்க் லைசென்ஸ் எடுத்தேத் தீரவேண்டும்.

நியூ யார்க் மாகாணத்தில் லைசன்ஸ் எடுக்க முதலில் எழுத்துத் தேர்வு ஒன்றை பாஸ் செய்ய வேண்டும். அதைப் பாஸ் செய்த உடன் லேர்னர்ஸ் பெர்மிட் கிடைக்கும் (நம் ஊர் எல்.எல்.ஆர் போல). அதன் பின் ஒரு ஐந்து மணி நேர வகுப்பறைப் படிப்பு - எதாவது ஒரு டிரைவிங் ஸ்கூலில் சொல்லித் தருவார்கள் - முடிக்க வேண்டும். அதன் பின்னரே டிரைவிங் தேர்வுக்குச் செல்ல முடியும்.

டிரைவிங் தேர்வும் மாகாணத்துக்கு மாகாணம் மாறும். நியூ யார்க்கில் வழக்கமான டிராஃபிக் உள்ள தெருக்களிலேயே ஒட்டச் சொல்வார்கள். பேரலல் பார்க்கிங் (parallel parking), 3 பாயிண்ட் டர்ன் ஆகியவற்றைச் செய்யச் சொல்வார்கள். நீங்கள் இந்தியாவில் ஓட்டி பழக்கம் இருந்தாலும் டிரைவிங் டெஸ்டுக்கு முன் ஒரு 2 மணி நேரமாவது ஒரு டிரைவிங் ஸ்கூலின் பயிற்சியாளரிடம் பயிற்சி எடுப்பது நல்லது.

பல பெண்கள் தங்கள் கணவரை ஓட்டச் சொல்லிக்கொடுக்கச் சொல்வார்கள். அதில் என்ன சிக்கல் என்றால், கணவர்கள் தொழில்முறை பயிற்சியாளர்கள் இல்லை. அதோடு அவர்களின் சொந்தக் காரிலேயே பயிற்றுவிக்கும்போது எங்காவது இடித்து விடுமோ என்ற பயம் கணவர்களுக்கு இருக்கும். அதனால் மனைவிகள் தப்பு செய்யும்போது கோபம் வரலாம். அவர்கள் கோபத்தில் ஏதாவது கத்திவிட்டால் மனைவிகளுக்கு பதட்டம் வந்து மேலும் தவறிழைக்கலாம். அதனால் அடிப்படைப் பயிற்சியை ஒரு டிரைவிங் ஸ்கூலின் தொழில்முறை பயிற்றுவிப்பாளரிடம் பயின்ற பின்னர் அதிக பரிச்சயம் செய்துகொள்ள உங்கள் கணவரோடு செல்லலாம். அதோடு டிரைவிங் ஸ்கூலின் காரில் பயிற்றுவிப்பாளரின் பக்கமும் ஒரு ப்ரேக் இருக்கும் என்பதால் விபத்தைப் பற்றி கவலைப் படாமல் பழகலாம்.

அடுத்தது கார் வாங்குவது. அமெரிக்காவில் பெரிய நகரங்களைத் தவிர மற்ற நகரங்களில் வசிப்பவர்கள் கார் இல்லாமல் இருக்க முடியாது. அப்படி இருக்க முடியாத நிலையை கார் தயாரிப்பு நிறுவனங்களே ஏற்படுத்திவிடுகின்றன. உதாரணத்திற்கு நான் வசிக்கும் ராச்செஸ்டர் நகரில் ஒரு காலத்தில் சப்-வே எனப்படும் பாதாள ரயில் வசதி இருந்ததாம். அந்த வசதியினால் மக்கள் பலர் கார் வாங்காமலே இருந்து வந்தனர். ஃபோர்ட் நிறுவனம் அந்த பாதாள ரயில் நிறுவனத்தை மாநகராட்சி நிர்வாகத்திடம் இருந்து வாங்கி இரண்டு வருடங்களில் அதை மூடிவிட்டார்களாம். எது எப்படியோ கார் இல்லாமல் இருந்தால் எந்த இடத்துக்குப் போவதற்கும் யாரையாவது எதிர்பார்த்தே இருக்க வேண்டிய நிலை தவிர்க்கமுடியாதது.

பழைய கார் வாங்கும்போது அமெரிக்கக் கார்கள் - ஃபோர்ட், ஜி.எம், க்ரைஸ்லர் போன்ற - வாங்குவதாக இருந்தால், 100,000 மைல்களுக்கு மேல் கார் போயிருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்தக் கார்கள் 100,000 மைல்களுக்கு மேல் பல பிரச்சனைகளைத் தரும். ஜப்பானியக் கார்களான ஹோண்டா, டொயாட்டா போன்ற கார்கள் வாங்கினால் தைரியமாக வாங்கலாம். அவை 200,000 மைல்கள் வரை பிரச்சனை இல்லாமல் போகக் கூடியவை.

பழைய கார்களை தேர்ட் பார்ட்டி என்று சொல்லக் கூடிய காரின் சொந்தக்காரர்களிடம் நேரடியாக வாங்கும்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனென்றால் இப்படிப் பட்ட பரிமாற்றத்தை as-is என்று அழைப்பார்கள். அதாவது காரை நீங்கள் வாங்கும்போது கார் எப்படி இருக்கிறதோ அந்த நிலையிலேயே பெற்றுக் கொள்கிறேன் என்ற ஒப்பந்தத்தில் நீங்கள் கையெழுத்து போட்டிருப்பீர்கள். அதனால் அதன் பின்னர் வரும் எல்லாப் பிரச்சனைகளையும் நீங்களே ஏற்றுக் கொண்டாக வேண்டும். எந்தச் சட்டமும் உங்களுக்கு உதவாது. பல நேரங்களில் காரை ட்ரயல் பார்த்து, பணம் கொடுத்து வாங்கிக் கொண்டு அடுத்த தெரு வருவதற்குள் கார் நின்று போன கொடுமையையெல்லாம் பார்த்திருக்கிறேன்.

அதனால் தேர்ட் பார்ட்டியிடம் கார் வாங்கும்போது விற்பனை செய்பவரின் செலவிலேயே ஒரு வொர்க் ஷாப்பிற்கு சென்று பரிசோதனை செய்துவிடுவது நல்லது. $100 டாலருக்குள் காரில் உள்ள அத்தனை குறைகளையும் காட்டித் தரும். அவற்றைக் களைந்து தர விற்பவர் தயாராக இருந்தால் மட்டுமே காரை நீங்கள் வாங்கலாம்.

கார் டீலரிடமே பழைய கார் வாங்குவது பாதுகாப்பானது. சில நேரங்களில் வாரண்டியும் கிடைக்கும். ஆனால் கொஞ்சம் விலை அதிகமாக இருக்கும்.

புது காராக வாங்குவதும் சாதாரண விசயம் இல்லை. அது ஒரு கலை என்றே சொல்லலாம். முதலில் எந்தக் கார் வாங்குவது என்பதை முடிவு செய்துவிட்டு அந்தக் காரைப் பற்றிய முழு விவரங்களையும் - காரின் பல மாடல்கள், அவற்றின் அடிப்படை வசதிகள், அதிகப்படியான வசதிகள் ஆகியவற்றை - தெரிந்து கொண்ட பின்னே கார் டீலரிடம் செல்ல வேண்டும். அங்கே போகும் போது உங்கள் பட்ஜெட் என்ன என்பதை நீங்கள் அவர்களிடம் சொல்லி விடக்கூடாது. அதே நேரத்தில் உங்களின் கார் வாங்கும் ஆர்வத்தையும் அவர்களிடம் வெளிக்காட்டிவிடக் கூடாது. இந்த உணர்வுகளை அந்த விற்பனைப் பிரதிநிதி கண்டுபிடித்துவிட்டால் டிஸ்கவுண்ட் அதிகம் கொடுக்க மாட்டார்.

ஒரு காரின் குறைந்த பட்ச விற்பனை விலை ஒன்று வைத்திருப்பார்கள். அதன் மேல் எவ்வளவு வந்தாலும் அவர்களுக்கு அதிகப்படி லாபம் தான். உதாரணமாக ஒரு காரின் விலை $24,000/- என்று சொல்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதன் குறைந்த பட்ச விற்பனை விலை 20,000/- என்றிருக்கும். ஆகவே அவர் காரின் விலை சொல்லும்போது குறைத்துக் கேட்க வேண்டும். நீங்கள் 21,000/- என்று கேட்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், அவர் உடனே “நான் போய் மேனேஜரிடம் பேசிவிட்டு வருகிறேன்” என்று உள்ளே போவார். அவரிடம் எதையாவது பேசிவிட்டு திரும்பி வந்து, 21,000/- கொடுக்க முடியாது 23,500/- என்றால் கொடுக்கலாம் என்று சொல்வார். நீங்கள் இல்லை என்று தயங்கினால் “நான் உங்களுக்கு ஒரு யோசனை சொல்கிறேன், 22,000/- என்று கேட்போம். அவர் 23,000/-க்கு வருவார். என்ன சொல்கிறீர்கள் என்று கேட்பார். நீங்கள் ஒத்துக்கொண்டுவிட்டால் போச்சு. 23,000/-க்கு உங்கள் தலையில் காரைக் கட்டி விடுவார்கள். சில நேரங்களில் நீங்கள் காரை இன்றே வாங்கிக் கொள்வதாக இருந்தால் 22,500/-க்குக் கொடுக்கிறேன் என்று “இறங்கி” வருவார்கள். ஒத்துக் கொள்ளாதீர்கள். எப்போது போன அன்றே காரை வாங்கும் எண்ணத்தை வைத்துக் கொள்ளாதீர்கள்.

மனைவியிடம் பேசிவிட்டு வருகிறேன், நண்பர்களுடன் ஆலோசிக்க வேண்டும் என்று எதாவது காரணத்தை வைத்து திரும்பி விடுங்கள். மற்ற டீலர்களிடமும் விசாரித்துவிட்டு எது நல்ல டீல் என்று பார்த்து முடிவு செய்யுங்கள். சில நேரம் ஒரு டீலரிடம் சர்வீஸ் நன்றாக இருக்கும். இன்னொரு டீலரிடம் நல்ல டீல் இருக்கும். சர்வீஸ் நன்றாக இருக்கும் டீலரிடம் மற்ற டீலரிடம் இருக்கும் டீல் அல்லது ஆஃபரைச் சொல்லி அதையே இங்கேயும் தரச் சொல்லுங்கள். இல்லாவிட்டால் வாக்-அவுட் செய்யப் போவதாக மிரட்டலாம். பணத்தைக் குறைக்க தயக்கம் காட்டினால் வேறு அதிகப்படி வசதிகளில் ஏதாவது ஒன்றைக் கேளுங்கள். சமயோசிதமாக நடந்து கொள்வதன் மூலம் நல்ல விலைக்கு புதுக் கார்கள் வாங்கிவிடலாம்.

நீங்கள் காரில் அதிகம் ஊர் சுற்றாதவராக மூன்று வருடங்களுக்கு ஒரு முறை காரை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவராக இருந்தால் உங்களுக்கு லீசிங் (leasing) என்ற ஒரு வழி இருக்கிறது. அதாவது காரை விலைக்கு வாங்காமல் வாடகைக்கு எடுப்பது போல. இதில் வழக்கமாக மூன்று வருடம் - 36,000 மைல் என்ற ஒப்பந்தம் போடுவார்கள். 36,000 மைல்களுக்கு மேல் போனால் மைலுக்கு இவ்வளவு என்று பணம் அதிகமாகக் கட்ட வேண்டியிருக்கும். மூன்று வருடங்களுக்குப் பிறகு அந்தக் காரை திருப்பிக் கொடுத்துவிட்டு வேறு கார் லீஸ் செய்து அல்லது வாங்கிக் கொள்ளலாம்.

Leasing Vs Buying
=================
காரை வாங்கினால் நீங்கள் மாதா மாதம் கட்டும் பணத்திற்கு உங்களுக்கு ஒரு சொத்து (கார்) இருக்கிறது. அதுவே உங்களின் பணத்திற்கான ரிட்டர்ன். லீசிங்கில் நீங்கள் கட்டும் பணம் வாடகையைப் போன்றது. அதனால் அதற்கு ரிட்டர்ன் இல்லை.
காரை வாங்கும்போது நீங்கள் காரின் மொத்த விலைக்கும் வரி கட்ட வேண்டும். காரை லீஸ் செய்யும்போது லீஸ் காலத்துக்கான தேய்மானத் தொகை (depreciation amount)க்கு மட்டும் வரி கட்டினால் போதும். அதோடு மாத ஈ.எம்.ஐ கார் வாங்குவதில் லீசை விட அதிகமாக இருக்கும். வழக்கமாக புது காருக்கு முதல் மூன்று வருடங்களுக்கு மட்டுமே வாரண்டி இருக்கும். அதற்கு மேல் ஃபேக்டரி வாரண்டி இல்லாமல் மற்ற வாரண்டி வாங்க வேண்டியிருக்கும். லீசில் அந்த பிரச்சனை இல்லை. மூன்று வருடங்களில் அந்தக் காரை நீங்கள் திருப்பிக் கொடுத்துவிடுவீர்கள். லீசில் எடுத்த காரையே மூன்று வருடங்களுக்குப் பிறகு நீங்களே வாங்கிக் கொள்ளும் ஒரு வழிமுறையும் இருக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட எண்ணத்துடன் நீங்கள் காரை லீஸ் செய்வதால் உங்களுக்குச் சில ஆயிரங்கள் நஷ்டம் ஏற்படலாம். ஆகவே மூன்று வருடங்களுக்குப் பிறகு வேறு கார் வாங்கும் பழக்கம் உடையவராக இருந்தால் மட்டுமே நீங்கள் லீஸ் ஆப்ஷனுக்குச் செல்லுங்கள்.

அடுத்த பகுதியில் விசா எக்ஸ்டென்ஷன், க்ரீன் கார்ட் ஆகிய விவரங்களைப் பார்ப்போம்.

108 - இந்தியாவின் 911

ஞாயிற்றுக்கிழமை சென்னையிலிருந்து திருவண்ணாமலை போகலாம் என்று முடிவெடுத்து ஒரு இன்னோவாவை வாடகைக்கு எடுத்துக்கொண்டு நான், தங்கமணி, முகிலன், தங்கமணியின் பெற்றோர், மைத்துனன் மற்றும் என் உடன்பிறவா சகோதரன் ஆகியோர் கிளம்பினோம்.

காலையிலேயே கிளம்பி இருக்க வேண்டிய பயணம் சில பல காரணங்களால் தாமதமாகி மதியத்துக்கு மேல் தான் புறப்பட்டோம். வழியிலும் சில இடங்களில் நிறுத்தி நிறுத்திப் போய்க்கொண்டிருந்ததால் செஞ்சிக் கோட்டையை அடையும்போது மணி மாலை 4:00 மணியாகிவிட்டது.

வண்டி செஞ்சியைத் தாண்டி இரண்டு கிலோ மீட்டர்கள் வந்திருக்கும். எங்களுக்கு முன்னால் போன ஒரு அரசுப் பேருந்து கிட்டத்தட்ட நின்று, ரோட்டிலிருந்து விலகி மீண்டும் ரோட்டில் சேர்ந்தது. அந்தப் பேருந்து விலகியதும்தான் ரோட்டில் கிடந்த அந்த இரண்டு சக்கர வாகனத்தையும் அதன் அருகில் மல்லாந்து கிடந்த ஒரு ஆளையும் எங்களால் பார்க்க முடிந்தது. அவரது மார்பில் ரத்தம். நாங்கள் ஏற்கனவே தாமதமாகப் போய்க் கொண்டிருந்ததால் எங்களால் நிறுத்தி என்ன ஆனது என்று பார்க்க முடியவில்லை. சரி குறைந்த பட்சம் 108க்கு அழைத்துத் தகவல் தரலாம் என்று செல்ஃபோனில் நான் டயல் செய்ய முற்பட, என்னை வேண்டாம், வேண்டாம் என்று தடுத்தனர் என் குடும்பத்தார். நான் மீறி 108ஐ அழைத்து தகவல் கொடுத்தேன். எந்த இடத்தில் விபத்து என்பதைக் கேட்டுக்கொண்டு மொபைல் நம்பரையும் பெற்றுக் கொண்டனர்.

என் குடும்பத்தார், குறிப்பாக என் மாமியார், எதற்காக தகவல் கொடுத்தாய், கடைசியில் ஏன் செல்ஃபோன் நம்பரைக் கொடுத்தாய் என்று என்னைக் கடிந்து கொண்டனர். போலீஸ் நாம் தான் இந்த விபத்தை செய்திருப்போம் என்று நம்மை சிக்கலில் மாட்டி விடப் போகிறார்கள் என்று புலம்பினர். நான் 108 என்பது ஆம்புலன்ஸ் சேவை மட்டும்தான். அதனை வைத்துக் கொண்டு போலீஸ் நம்மைத் தொடர்பு கொள்ள மாட்டார்கள் என்று அவர்களுக்கு விளக்கிய பின்னரே அவர்கள் அமைதியானார்கள். நாங்கள் திரும்பி வரும்போது அந்த வாகனமும் அந்த ஆளும் அந்த இடத்தில் இல்லை. இதன் மூலம் ஆம்புலன்ஸ் வந்து சென்றதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அந்த நபர் என்ன நிலையில் இருந்தார், இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை.

முதலில் இப்படி ஒரு அருமையான சேவையை அறிமுகம் செய்த தமிழக அரசுக்கு நன்றி. இதன் மூலமாக விலைமதிக்க முடியாத பல உயிர்களைக் காப்பாற்ற முடிகிறது. கிட்டத்தட்ட அமெரிக்காவின் 911 சேவையைப் போல இந்த 108 விரைவாக விபத்து நடந்த இடத்துக்கு வந்து சேர்கிறது.

ஆனாலும் மக்களுக்கு இந்த சேவைக்கு தொடர்பு கொள்ள என் குடும்பத்தாரைப் போல பல தயக்கங்கள் இருக்கிறது. காரணம், காவல்துறை. காவல்துறை அதிகாரிகள் சாட்சி சொல்ல வருபவர்களை அலைக்கழிப்பது பிரசித்தி பெற்றது. அதற்குப் பயந்தே பலர் எனக்கென்ன என்று போய்விடுகிறார்கள்.

பெரும்பாலான மக்களின் இந்தத் தயக்கத்தைப் போக்க வேண்டியது காவல்துறையின் கடமை. அதோடு 108க்கு அனானிமஸ் கால் செய்யும் வசதியும் இருக்கவேண்டும். அப்படி 108க்கு அழைத்து ஒரு விபத்தைப் பற்றிய தகவல் கொடுப்பவர்களை அந்த விபத்தின் சாட்சியாக, அவர் விருப்பமின்றி சேர்க்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தையும் அளிக்க வேண்டும். செய்வார்களா?

இப்படிச் செய்தால்தான் 108 சேவையை பொதுமக்கள் முழுவதுமாக அனுபவிக்க முடியும்.

Sunday, June 6, 2010

இந்திய மருத்துவர்களே!!! ஏன் இப்படி?

நான் சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றுகிறேன். என் பணி எனக்குக்கீழ் உள்ள அப்ளிகேஷன்களின் நலம் பேணுவது. அந்த சிஸ்டம்ஸை உபயோகிக்கும் பயனாளர்கள் (users) அவை எதிர்பார்த்த முறையில் வேலை செய்யாத போது எங்களிடம் புகார் தெரிவிப்பார்கள். நாங்களும் அந்தக் குறைபாட்டிற்கான காரணத்தை ஆராய்ந்து, அக் குறையை நீக்குவதற்கு உள்ள வழிமுறைகளை(solution)க் கண்டறிவோம். சில வேளைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட வழிமுறைகள் இருக்கும். அந்த வழிமுறைகளின் சாதக பாதகங்களை ஆவணப்படுத்தி (documentation) பயனாளர்களிடம் படைப்போம். அந்த வழிமுறையை செயல்படுத்துவதற்கான நேரம், செலவு ஆகிய காரணிகளைக் கொண்டு ஆராய்ந்து, சிறந்ததாக அவர்கள் தெரிவு செய்யும் வழிமுறையை பயனுக்குக் கொண்டுவருவோம்.

சாஃப்ட்வேர் துறை மட்டுமல்லாது அனைத்துத் துறைகளிலும் நான் மேலே சொன்ன மாடல்தான் பின்பற்றப்படும்.

அமெரிக்காவில் மருத்துவச் செலவு அதிகமாக இருக்கும். இன்ஷூரன்ஸ் இல்லாமல் வாழ்க்கை நகர்த்துவது கடினம். ஆனாலும், கொடுக்கும் காசுக்கு வஞ்சகம் இல்லாமல் மருத்துவச் சேவை இருக்கும். நம் நோயின் காரணியை ஆராய்ந்து, அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை நம்மிடம் விளக்கிச் சொல்வார் மருத்துவர். ஒன்றுக்கு மேற்பட்ட வழிமுறைகள் இருப்பின், அவற்றையும் விளக்கி அதன் சாதக பாதகங்கள் (side effects), செலவு, நேரம் ஆகியவற்றையும் விளக்குவார். அதன் பின் எந்த முறையில் நமக்கு மருத்துவம் செய்யப்பட வேண்டும் என்பது முழுக்க முழுக்க நம் கட்டுப்பாட்டில் இருக்கும். ஒரு வேளை இந்த மருத்துவர் சொல்லும் விஷயங்களில் நமக்கு நம்பிக்கை வரவில்லை என்றால் நான் இன்னொரு மருத்துவரிடம் செகண்ட் ஒப்பீனியன் கேட்கலாம்.

ஆனால் இந்தியாவில்?

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, என் மனைவியின் பாட்டிக்கு குடல்வால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. மதுரையின் பெரிய மருத்துவமனைகளில் ஒன்றில் அவரை அட்மிட் செய்திருந்தோம். அவருக்கு சர்க்கரை 250 இருந்த படியால் அவரை டிஸ்சார்ஜ் செய்துவிட்டு தினமும் மூன்று வேளை இன்சுலின் போட்டு அந்த சர்க்கரையின் அளவைக் குறைத்த பின் மீண்டும் அட்மிட் ஆகச் சொன்னார் அந்த சர்ஜன். இன்சுலின் இதுவரை போடாத அவருக்கு இன்சுலின் கொடுத்தால் அதுவே பழக்கமாகிவிடுமோ என்ற பயத்தை டாக்டரிடம் சொல்லி தெளிவடையலாம் என்ற எண்ணத்தில் நான் அந்த டாக்டரிடம் “சார் இன்சுலின் போடாதவங்களுக்குப் போட்டுப் பழக்கக்கூடாதுன்னு சொல்றாங்களே?” என்று கேட்டேன். அதற்கு அந்த டாக்டர் சொன்ன பதில் “நான் டாக்டரா நீங்க டாக்டரா?”

சமீபத்தில் என் மகனுக்கு வயிற்றுப் போக்கு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவனுக்கு இரத்தப் பரிசோதனையோ இல்லை மலப்பரிசோதனையோ செய்யாமல் இன்ஃபெக்‌ஷன் என்ற முடிவுக்கு வந்து குளுக்கோஸோடு பல ஆண்டி-பயாடிக்ஸ் மருந்துகளை என் மனைவி உட்பட அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு கொடுத்திருக்கின்றனர். என் மனைவி ஏன் இப்படி என்று கேட்டதற்கு “you should trust us" என்று பதில் சொல்லியிருக்கிறார் அந்த டாக்டர். (இதன் விளைவாக வழக்கமாக அனைவரிடமும் சகஜமாகப் பழகும் என் மகன், இப்போது ஒரு அறைக்குள் குடும்பத்தினரல்லாத மூன்றாம் நபர் யார் வந்தாலும் நெர்வஸ் ஆகிவிடுகிறான். சிறிது நேரத்துக்கு மேல் அவர் இருப்பாராயின் அழத் துவங்கிவிடுகிறான்). சரி என்ன மருந்து கொடுக்கிறீர்கள் என்பதையாவது சொல்லுங்கள் என்று கேட்டதற்கு இப்போது சொல்ல முடியாது, டிஸ்சார்ஜ் ஆகிச் செல்லும்போது டிஸ்சார்ஜ் ஷீட்டில் எல்லாம் எழுதித் தருவோம் என்று பதில் சொல்லியிருக்கிறார்கள். (இன்று வரை டிஸ்சார்ஜ் ஷீட் கையில் வரவில்லை). அந்த டாக்டர் தனது அனுபவத்தினால் சரியாகவே கணித்திருந்து, சரியான மருந்துகளையே கொடுத்திருக்கக் கூடும். ஆனால் அதை எங்களிடம் சொல்வதற்கு ஏன் தயக்கம்?

என் தொழிலிலாவது நான் உயிரற்ற கணினியோடும் அதன் பயன்பாட்டோடும் விளையாடுகிறேன். ஆனால் டாக்டர்கள் கையாளுவது ஒரு உயிர். அந்த உயிருக்கோ அல்லது அதன் உறவினர்களுக்கோ என்ன நடக்கிறது என்பதை அவ்வப்போது தெரிவிக்க வேண்டுமல்லவா? மாற்றுச் சிகிச்சைக்கு வழி இருந்தால் அதையும் விளக்க வேண்டுமல்லவா? எந்த சிகிச்சை நமக்கு நல்லது என்ற முடிவில் நம் தெரிவும் இருக்க வேண்டுமல்லவா?

இந்தியாவில் செகண்ட் ஒப்பீனியனுக்குப் போகிறோம் என்று டாக்டர்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிட்டுப் போக முடியுமா? அவர்களின் ஈகோ அதை அனுமதிக்காது. அப்படி செகண்ட் ஒப்பீனியனுக்கு வேறு ஒரு டாக்டரிடம் போவதென்றால் இந்த டாக்டருக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாகத்தான் செல்ல வேண்டும். அதுவும் அந்த இன்னொரு டாக்டர் நமக்குத் தெரிந்தவராய் முதல் டாக்டருக்குத் தெரியாதவராய் இருக்க வேண்டும். ஒரு வேளை இன்னொரு டாக்டருக்கும் முதல் டாக்டருக்கும் ஏதாவது சொந்தப் பிரச்சனைகள் இருப்பின் இரண்டாவது டாக்டர் சொல்லும் ஒப்பீனியன் நம்பகத்தன்மையுடன் இருக்கும் என்று ஏற்றுக்கொள்ள முடியுமா?

ஏன் இந்தியாவில் மருத்துவம் ஒரு தொழிலாகப் பார்க்கப் படுகிறது? அதை சேவையாக எண்ணி செய்பவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியக் குழந்தைகள் பலர் மருத்துவம் படிப்பது என்பதை ஆசையாக, குறிக்கோளாகக் கொண்டிருப்பர். நான் பல குழந்தைகளிடம் ஏன் என்று கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்களின் பதில் - “அப்போது தான் நிறைய சம்பாதிக்க முடியும்” என்பதாகவே இருக்கும். இது அவர்களாக சொல்வதில்லை. அவர்களுக்குப் பெற்றோர்களால் ஊட்டப்பட்டிருக்கும் விசயம். இப்படிப் பிஞ்சிலேயே மருத்துவம் என்பது பணம் சம்பாதிக்க என்று பதிக்கப்படும் குழந்தைகள் அதைச் சேவையாகச் செய்வார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்?

இந்திய மருத்துவர்கள் எப்போது திருந்துவார்கள்? அல்லது என் பெர்செப்ஷன் தவறா? பதிவுலகத்தில் இருக்கும் மருத்துவர்கள் பதில் சொல்லவும்.

டிஸ்கி: நான் அனைத்து மருத்துவர்களையும் குறை சொல்லவில்லை. பெரும்பாலான மருத்துவர்கள் நான் மேலே சொன்ன attitude உடன் நடந்து கொள்கிறார்கள்.