Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts

Wednesday, December 1, 2010

சாகுற நாள் தெரிஞ்சா...

காராஜில் காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தேன். என் முகத்தைப் பார்த்ததும் கவிதாவுக்குப் புரிந்து விட்டது போலும்.

“என்ன மறுபடியும் டிப்ளாய்மெண்ட் ஃபெயில்டா?”

“ஆமா. எப்பிடிக் கண்டுபிடிச்ச?”

“அதான் மூஞ்சியிலயே எழுதி ஒட்டியிருக்கே”

கூடுதல் சோகத்தை முகத்தில் அப்பிக்கொண்டு காஃபி மேக்கரில் காஃபிப் பொடியைத்தட்டி காஃபி போட ஆரம்பித்தேன்.

“முதல்லயே இப்பிடி ஆகும்னு தெரிஞ்சிருந்தா இப்பிடி லேட்டா ஆஃபீஸ்ல ஸ்டே பண்ணியிருக்க மாட்டியில்ல?” முகிலனுக்கு இட்டிலியைத் திணித்துக் கொண்டு கேள்வியை எனக்குத் திணித்த கவிதாவின் கடைவாயில் ஒரு ஏளனப் புன்னகை.

வெறுமையாகப் பார்த்தேன். டிவியில் கோபி மலர் மேடத்திடம் வழக்கம்போல சோகமாக எதையோ பேசிக்கொண்டிருந்தார்.

“சாகுற நாள் தெரிஞ்சிட்டா வாழுற நாள் நரகமாயிடும்னு தலைவர் சொல்லியிருக்கார்” நிகழ்வில் ரஜினியைத் துணைக்கழைத்தேன்.

“ம்க்கும்.. ரஜினி என்ன சொந்தமாவா சொன்னாரு. ஏற்கனவே மகாபாரதத்துல கண்ணன் சகாதேவன் கிட்ட சொன்னதுதான?”

“என்னது சகாதேவன்கிட்டயா இது என்ன புதுக்கதையா இருக்கு?” காபியின் பாலையும் சர்க்கரையையும் கலந்து கொண்டு கதை கேட்கும் ஆர்வத்தில் டைனிங் டேபிளில் அமர்ந்தேன்.

“ஆமா.. முதல்ல சகாதேவன் யாருன்னு தெரியுமா?”

“தெரியுமே.. பஞ்ச பாண்டவர்கள்ல ஒருத்தர்”

“கரெக்ட். அவர் ஒரு பெரிய ஜோசியக்காரன்ங்கிற விசயம் தெரியுமா?”

“ஓ.. டிவியில எல்லாம் ராசிபலன் சொல்வாரா?”

“ஜோசியக்காரங்கன்னாலே டிவியில ராசிபலன் சொல்றவங்கதானா?”

இடுப்பில் கை வைத்து முறைத்த கவிதாவைப் பார்த்தால் மிஷ்கினை முறைக்கும் டகேஷி கிட்டானோவைப் போல இருந்தது.

“சரி சரி முறைக்காத மேல சொல்லு”

“இந்த பாண்டு இருக்காரே..”

"யாரு இந்த மூஞ்சிய அஷ்டகோணலாக்கிக்கிட்டு ஆங்க்னு கத்துவாரே அவரா?”

“அவரு உனக்குத்தெரிஞ்ச பாண்டு. நான் சொல்றது பாண்டவர்களோட அப்பா பாண்டு”

“ஓ அவர் பேரும் பாண்டுதானா? ரைட்டு..”

மறுபடியும் முறைத்த கவிதாவை கண்டுகொள்ளாத மாதிரி முகத்தைத் திருப்பிக் கொண்டு, “மேல சொல்லு..”

“அவரு சாகுற தருவாயில தன்னோட புள்ளைங்களைக் கூப்பிட்டு ‘நான் செத்தப்புறம் என்னை எரிக்கவோ புதைக்கவோ செஞ்சிடாதீங்க. அதுக்கு பதிலா என் உடம்பை நீங்க அஞ்சு பேரும் தின்னுடுங்க’ன்னு கேட்டுக்கிட்டாரு”

“அடங்கொக்க மக்கா.. அந்தக் காலத்துல மனுசக்கறியெல்லாம் சாப்ட்டவிங்க தானா?”

“அது தெரியலை. ஆனா இது ஸ்பெசல் மீல்ஸ்”

“ம்ஹ்ம்.. இருக்கலாம். அப்புறம்?”

“அப்புறமென்ன, அவர் செத்ததும் வழக்கம்போல கண்ணன் வந்து ஏய் என்னப்பா எங்கயும் இல்லாத வழக்கமா பெத்த அப்பன் உடம்பையே திங்கிறது. அது தப்பு. பெத்த அப்பாவுக்கு இறுதிக்கடன்கள் செய்யறதுதான் பிள்ளைங்களோட கடமை அப்பிடின்னு சொல்லி அவங்களை இறுதிச் சடங்குகள் செய்ய ஏற்பாடு பண்ண சொன்னான்”

காபி குடித்த கப்பைக் கழுவிக்கொண்டே, “வந்துடுவானே இந்தக் கண்ணன். அவன் தடுக்கிறான்னா வேற எதோ மேட்டர் இருக்கு போலயே”

“இதே டவுட்டுதான் சகாதேவனுக்கும் வந்துச்சி. எல்லா ப்ரதர்ஸும் ஆளுக்கு ஒரு வேலையா போயிட, அப்பாவோட பிணத்தைக் காவல் காக்குற பொறுப்பு சகாதேவனுக்கு. தனியா இருந்த சகாதேவனுக்கு பெரிய டவுட். அப்பாவே தன் உடம்பை சாப்பிடச் சொன்ன பிற்பாடும் இந்த கண்ணன் வந்து தடுக்கிறான்னா அதுல ஏதோ பெரிய விசயம் இருக்குதுன்னு யாருக்கும் தெரியாம பாண்டுவோட கால் கட்டை விரலை மட்டும் கடிச்சித் தின்னுட்டான்”

சின்க்கில் இருந்த மற்றப் பாத்திரங்களையும் என்னை அறியாமல் கழுவிக்கொண்டே, “அடங்கொன்னியா? கட்டை விரலையா? அதுல அவ்வளவா சதை இருக்காதே? எப்பிடி தின்னான்?”

“ரொம்ப முக்கியமான கவலை பாரு..எப்பிடியோ தின்னுட்டான். தின்னதும் அவனுக்கு முக்காலமும் உணர்ற ஞானம் வந்திடுச்சி. பாண்டவர்களுக்கு வரப்போற ஆபத்தைத் தெரிஞ்சிக்கிட்டான்”

“சோழியன் குடுமி சும்மா ஆடுமா? அதுனால தான் கண்ணன் தடுக்கப் பாத்திருக்கான்”

“திரும்பி வந்ததும் கட்டை விரல் மிஸ்ஸானதைப் பார்த்து என்ன நடந்திருக்கும்னு புரிஞ்சிக்கிட்டான் கண்ணன். சகாதேவனைத் தனியா கூட்டிக்கிட்டுப் போயி, இங்க பாரு நீ கட்டை விரலைத் தின்னுட்டன்னு தெரியுது. உனக்கு என்ன நடக்கப் போவுதுங்கிறதும் தெரிஞ்சிருக்கும். ஆனா வெளிய சொல்லாத. எல்லாம் விதிப்படி நடக்கத்தான் வேணும். நீ இதையும் மீறி வெளிய சொன்னா உன் தலை வெடிச்சிரும் அப்பிடின்னு சொல்லிட்டான். சகாதேவனும் பதிலுக்கு, எனக்கும் என் சகோதரங்களுக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாம நீ காப்பாத்தனும். இல்லைன்னா உன் தலை வெடிச்சிரும் அப்பிடின்னு பதிலுக்கு சாபம் விட்டுட்டான்”

“ஓஹோ.. இதைத்தான் தலைவர் ஸ்லைட்டா மாத்தி சாகிற நாள் தெரிஞ்சான்னு பஞ்ச் அடிச்சிட்டாரா?”

“ஆமா”

பாத்திரம் எல்லாம் கழுவி முடிந்ததும், “ஆமா வழக்கமா இந்த மாதிரி கதை சொல்லும்போது நீ தான மெசேஜ் சொல்லுவ? ஆனா இந்தத் தடவை நான் தான மெசேஜ் சொன்னேன்? அப்புறம் எதுக்கு இந்தக் கதை?”

சின்க்குக்கு முன்னால் நின்றிருந்த என்னை லேசாக இடித்துத் தள்ளிவிட்டு கையைக் கழுவிய கவிதா, “அது ஒண்ணுமில்லை. கொஞ்ச நாளா, ப்ளாக்ல எழுத சரக்கில்லாம பஸ்ல எழுதினதையெல்லாம் கூட்டிப் பெருக்கிப் போட்டு கல்லாக்கட்டிக்கிட்டு இருந்தியில்ல, அதான் எழுதுறதுக்கு எதையாவது குடுக்கலாம்னு சொன்னேன்” என்று சொல்லிவிட்டு நடந்தார்.

“யேய்... அப்பிடியெல்லாம் இல்லை. ஆஃபீஸ்ல ஒரே ஆணி. அதான் ப்ளாக் பக்கம் போக நேரமேயில்ல..” என்று காற்றுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன்.

Friday, October 22, 2010

கம்பரும் மல்டி டாஸ்கிங்கும்

தலையில் கை வைத்து உக்கார்ந்திருந்தேன். முன்னால் இருந்த கம்ப்யூட்டரில் நான் திறந்து வைத்திருந்த காலண்டரின் 27 ஆம் தேதி என்னைப் பார்த்துப் பரிகசித்தது. தலை முடியைப் பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது.

முகத்தில் கையை வைத்து அழுத்திக் கொண்டு கண்களை மறைத்துக் கொண்டிருந்த விரல்களிடையே ஸ்க்ரீனைப் பார்த்தேன். அப்படியாவது போய் விடாதா என்று. என் இம்சையைப் புரிந்திருப்பார் போல. தங்கமணி என் அருகே வந்தார்.

"ஹேய் என்னப்பா ஆச்சு. பேயறஞ்ச மாதிரி உக்காந்துருக்க?"

"அதை ஏன் கேக்கற. 27 ந்தேதி டெட்லைன். இன்னும் இவனுங்க கோடிங் முடிக்கலை. எல்லாம் என் தலைல வந்து விடிஞ்சிடும் போல"

"விடிஞ்சா என்ன நீயே கோடிங் எழுதிட வேண்டியதுதான. டெவெலப்பரா இருந்து தான ப்ராஜக்ட் மானேஜர் ஆன?"

நான் மானிட்டரிலிருந்து கண்ணை எடுத்து தங்கமணியை முறைத்தேன். "ஏன் சொல்ல மாட்ட? இந்த ப்ராஜக்ட்ல ஒரு மாட்யூல் வெப் டெக்னாலஜி, இன்னொரு மாட்யூல் மெயின்பிரேம். இன்னொரு மாட்யூல் டேட்டா வேர்ஹவுசிங்"

"அதுனால என்ன. கம்பர் ஒரே ராத்திரியில கம்ப ராமாயணத்தை எழுதின மாதிரி நீயும் கோட் பண்ணிட வேண்டியதுதான?"

"என்னது கம்பர் ஒரே ராத்திரியில ராமாயணம் எழுதுனாரா? இன்ரஸ்டிங்கா இருக்கே” லேப்டாப்பை மூடினேன்.

"அதான. கதைன்னா கேக்க வந்துடுவியே. உனக்கு ஓட்டக் கூத்தர் தெரியுமா?"

"ஓ தெரியுமே. அம்பிகாபதி படத்துல நம்பியார் நடிச்சிருப்பாரே. அந்த காரக்டர் தான?" முகிலன் என் ஷார்ட்சைப் பிடித்து இழுத்து 'அப்பா ஃபோனி எந்திமா' என்று சொல்ல ஐ-ஃபோனை அவனிடம் கொடுத்து விட்டு தங்கமணியின் முகத்தையே பார்த்தேன்.

சோபாவில் நன்றாக சாய்ந்து கொண்ட தங்கமணி, போர்வையால் நன்றாக சுற்றிக் கொண்டு, "அவருக்கு ஏன் ஓட்டக் கூத்தன்னு பேர் வந்துச்சு தெரியுமா?"

"தெரியாதே?"

"ஒட்டம்னா பெட். அவரு எதுக்கெடுத்தாலும் பெட் கட்டிட்டே இருப்பாராம். அதான் அவருக்கு அந்தப் பேர்"

"அப்பா அவரு சீக்கிரமாவே 'ஓட்ட'க்கூத்தர் ஆயிருப்பாருன்னு சொல்லு"

என்னை முறைத்த தங்கமணி "அவருக்கும் கம்பருக்கும் ஒரு பெட். யாரு முதல்ல ராமாயணத்தைத் தமிழ்ல எழுதுறதுன்னு”

“ஓக்கே. என்ன பெட்?”

“அதெல்லாம் ராஜா முடிவு பண்ணுவாருன்னு விட்டுட்டாங்க. ஒட்டக்கூத்தர் சின்சியரா எழுதிட்டு இருந்தாரு. கம்பரோ ஓ.பி அடிச்சிட்டு இருந்தாரு”

“ப்ளாக் எழுதாத சாஃப்ட்வேர் எஞ்சினியரும் ப்ளாக்கரான சாஃப்ட்வேர் எஞ்சினியரும் மாதிரின்னு சொல்லு”

மீண்டும் முறைத்த பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அரிமா அரிமா பாட்டுக்கு ஆடிக் கொண்டிருந்த முகிலனைப் பார்த்தேன்.

தங்கமணி தொடர்ந்தார். “அப்ப ஒரு நாள் ஒட்டக்கூத்தர் கம்பர்கிட்ட என்னப்பா ராமாயணம் எவ்வளவு தூரத்துல இருக்குனு கேக்க, கம்பர் நான் இன்னும் எழுதவே ஆரம்பிக்கலைன்னு உண்மையச் சொல்லிட்டார்”

“அடப் பாவமே? ஒட்டக் கூத்தர் ராஜாக்கிட்ட பத்த வச்சிருப்பாரே?”

“ஒட்டக்கூத்தர் மாதிரியே யோசிக்கிறியே?? ஆமா. அவர் ராஜாகிட்ட போய், ராஜா ராஜா ராமாயணத்தை உங்க முன்னாடி படைக்கிறது இருக்கட்டும். எதுவரைக்கும் எழுதியிருக்கோம்னு பாக்கலாம்னு சொன்னார். ராஜாவும் ரெண்டு பேர்கிட்ட கேக்கவும், ஒட்டக்கூத்தர் நான் கடல்ல அணை கட்டுற வரைக்கு வந்துட்டேன்னு சொன்னார். உடனே கம்பரும் நான் அதையும் தாண்டி போர்க்காட்சிகள் வரைக்கும் வந்துட்டேன்னு சொன்னார்”

“அய்யய்ய பொய்யா சொல்லிட்டார்? எனக்கு இந்த பொய் சொல்றவங்களைக் கண்டாலே பிடிக்காது”, மறுபடியும் தங்கமணி முறைக்க. “சரி சரி மேல சொல்லு”

“உடனே ஒட்டக்கூத்தர் வேகமா. ‘அப்பிடின்னா அதுல ஒரு பாட்டை சொல்லு’ன்னு கேக்க, கம்பரும் இந்தப் பாட்டை எடுத்து விடுறாரு”

“செம் புனல் சோரிச் செக்கர் திசை உறச் செறிகையாலும்
அம்பு என உற்ற கொற்றத்து ஆயிரம் கதிர்களாலும்
வெம்பு பொன் தேரில் தோன்றும் சிறப்பினும், அரக்கன் மெய்யோடு
உம்பரில் செல்கிறான் ஒத்து உதித்தனன் அருக்கன் உப்பால். ”

“அப்பிடின்னா என்னான்னு தமிழ்ல கொஞ்சம் சொல்லேன்” கெஞ்சலாக தங்கமணியைப் பார்த்தேன்.

பட் பட் என்று தலையில் அடித்துக் கொண்டு “இந்திரஜித்தையும் சூரியனையும் ஒண்ணாப் பாக்குறார் கம்பர் இதுல. அதாவது போரால இந்திரஜித் உடம்பெல்லாம் ரத்தம் சொரிந்து சிவப்பா இருக்கிறது மாதிரி கீழ் வானம் சிவந்து இருக்கறதாலயும், இந்திரஜித் உடம்பெல்லாம் லட்சுமணன் விட்ட அம்பு குத்தியிருக்கிறது மாதிரி சூரியனோட ஆயிரம் கதிர்கள் இருக்கறதாலயும், ரெண்டு பேரும் வெம்புகின்ற தங்கத் தேரில வர்றதாலயும், இந்திரஜித் உடம்போட மேலோகம் போற மாதிரி சூரியன் கிழக்கில இருந்து உதிக்கிறானாம்.”

“ஓ, இதுக்கு இப்பிடி அர்த்தமா?”

‘ரோபோ’ என்று சொன்ன ரஜினியைப் போல வாயைச் சுழித்து “ஆமா” என்றார் தங்கமணி.

“சரி மேல சொல்லு”

“இதைக் கேட்டதும் ஒட்டக்கூத்தர் வாயடைச்சுப் போயிட்டாரு. என்னடா வில்லனொட மகனையே சூரியனோட கம்பேர் பண்ணி வர்ணிக்கிறாரே? அப்பிடின்னா ராமனை எப்பிடியெல்லாம் வர்ணிச்சிருப்பாரு? இது கூட சேத்து வச்சிப் பாக்கும்போது நாம எழுதுறதெல்லாம் பாட்டே இல்லையேன்னு நொந்து போய் வீட்டுல தான் எழுதி வச்சிருந்த ஓலைச் சுவடிய எல்லாம் நெருப்புல போட்டுட்டார்”

“அய்யய்யோ அப்புறம்?”

“அந்த வழியா வந்த கம்பர் அதைப் பாத்துட்டு ஓடி வந்து அவரைத் தடுத்து தான் ஒன்னும் எழுதலை சும்மா கதையடிச்சேன்னு சொன்னார். மறுபடியும் முருங்கை மரத்துல ஏறிட்டாரு ஒட்டக் கூத்தர்”

“அவரு எதுக்கு முருங்கை மரத்துல எல்லாம் ஏறுனாரு?”

“டேய்ய்ய்ய்ய்.. வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சின்னா என்னான்னு தெரியுமா?”

“தெரியுமே. ராத்திரியெல்லாம் இனிமே புளிக் குழம்பு வைக்க மாட்டேன்னு சொல்லிட்டு காலைல எழுந்ததும் புளியை ஊறப்போடுவியே அதுதான?”

‘நங்’

தலையைத் தடவிக்கொண்டே கேட்டேன், “சரி மேல சொல்லு”

“ராஜா ராஜா, கம்பர் தான் யுத்த காண்டம் வந்துட்டாரே. பேசாம அவரை நாளைக்கே சபையில ராமாயணத்தை அரங்கேற்றச் சொல்லுங்கன்னு சொல்லிட்டார். ராஜாவும் ஆமா கம்பரே உங்க தமிழை கேட்க நானும் காத்திருக்க முடியாது, நாளைக்கே செய்யுங்கன்னு சொல்லிட்டார்”

“ஆஹா டெட்லைனை ப்ரிப்போன் செஞ்சிட்டாய்ங்களா? என்ன செஞ்சாரு கம்பர்”

“கம்பர் என்ன பண்ணாருன்னா, தன்னோட சிஷ்யப் புள்ளைங்க ஆறு பேரை உட்கார வச்சி அவங்க கையில சுவடியையும் எழுதாணியையும் குடுத்துட்டு ஆளுக்கொரு காண்டத்தில இருந்து ஒவ்வொரு பாட்டா parallel ஆ சொல்லிட்டே வர விடியிறதுக்குள்ள கம்பராமாயணம் ரெடி”

“அடேங்கப்பா. கம்பர் பெரியாளா இருந்திருப்பார் போல. ஆறு பேருக்கும் ஆளுக்கொரு பாட்டு சொல்லிட்டே முழுக் கதையையும் முடிக்கணும்னா சான்ஸே இல்லை”

“பாத்தியா அந்தக் காலத்துலயே எப்பிடி மல்டி ப்ராசஸிங் செஞ்சிருக்காருன்னு?”

“ஆமா”

“நீ ஏன் அது மாதிரி மூணு லேப்டாப் வச்சிக்கிட்டு ஒண்ணுல மெயின்ஃப்ரேம் கோடிங், ஒண்ணுல ஜாவா இன்னொண்ணுல டேட்டா வேர்ஹவுசிங்க்னு செய்யக் கூடாது?”

“ம்ஹ்ம். கம்பருக்கு ஆறு சிஷ்யப்புள்ளைங்க இருந்தாங்க. நானே எல்லாத்தையும் செய்ய முடியுமா? அதோட அவருக்கு பாட்டு எழுதத் தெரியும் செஞ்சிட்டாரு. எனக்கு கோடிங் செய்யத் தெரியாதே?”

“அது சரி. சட்டியில இருக்கிறது தான அகப்பையில வரும்” என்று சொல்லிவிட்டு ஆடிக் கொண்டிருந்த முகிலனைத் தூக்கிக் கொண்டு மாடி ஏற படியை நோக்கிப் போனார்.

என் கண்களில் ஒளி மின்ன நான் லேப்டாப்பைத் திறந்தேன்.

“என்ன கண்ணு பளிச்னு எரியுது? கோடிங் செய்யப் போறியா?”

“ம்ஹூம். நீ சொன்னதை ப்ளாக்ல ஏத்தப் போறேன்”

தங்கமணி தலையில் அடிக்கும் சத்தம் மட்டும் கேட்க, www.blogger.com என்று டைப்ப ஆரம்பித்தேன்.

Tuesday, August 10, 2010

செட்டி நாட்டு ஓட்டலும் ஆயா கடை இட்டிலியும்

அது இந்த ஊரிலேயே மிகப்பெரிய செட்டி நாட்டு அசைவ உணவகம். மொத்த உணவகமும் ஏசிக்குளிரோடும். கொடுத்த காசுக்கு முழு திருப்தியான உணவும் கிடைக்கும். ஒரு முழு மட்டன் பிரியாணியையும் சிக்கன் சிக்ஸ்டிஃபைவையும் உள்ளே தள்ளிவிட்டு ஏறிப்போன வயிற்றைத் தடவிக்கொண்டே வெளியே வந்தேன். பில் ரூ.150/-. 

அனைவரும் இப்படி அளவுக்கதிகமாக சாப்பிட்டுவிட்டு மலைப்பாம்பைப் போல் சீரணமாகமல் தவிப்பார்கள் என்பதை எதிர்பார்த்தோ என்னவோ அங்கே ஒரு பீடாக் கடையும் இருந்தது. பீடா ஒன்றை வாங்கி வாயில் உதப்பியபடி அங்கேயே நின்று ஒரு சிகரெட்டையும் பற்ற வைத்தேன். 

தூரத்தில் யாரோ ஒருவனை கூடி நின்று கும்மிக் கொண்டிருந்தார்கள். திருடினானா இல்லை திருட முயற்சித்தானா தெரியவில்லை. அந்தக் கூட்டத்திலிருந்து இருவர் நான் நின்றிருந்த மர நிழலுக்கு இடம்பெயர்ந்தார்கள். கொஞ்சம் வழுக்கையுடன் இருந்தவரை இன்னொருவர் அண்ணே என்று விளித்தார். 

“ஏண்ணே இந்த அடி அடிச்சீங்க” காதுக்குப் பின்னால் இருந்து ஒரு பீடியை எடுத்து பற்ற வைத்துக்கொண்டே அவரைப் பார்த்துக் கேட்டார். 

“அப்புறம் இப்பிடி ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமாடா அவனை மாத்த? எத்தினி நாளு காத்துக்கினு இருந்திருப்பேன்?” லேசாகக் கலைந்திருந்த சட்டையையும் மேல் துண்டையும் நீவி விட்டுக்கொண்டு சொன்னார்.

“அப்பிடி என்னண்ணே அவன் மேல உங்களுக்கு காண்டு?”

“சும்மாவாடா. அந்த ஏரியாவுல நாந்தா இம்புட்டு நாளா பெரியாளா இருந்தேன். நேத்து வந்த பய, என்னவோ செஞ்சிட்டான்னு ஏரியாக்காரனுக எல்லாம் தலையில தூக்கி வச்சிகினு ஆடினானுக. இப்பப் பாரு பய யாரோ ஒரு பிள்ளைக்கிட்ட தப்பா நடந்துக்கிட்டான்னு பஸ்ஸுல ஒருத்தன் கைய வச்சான். கிடைச்சது சாக்குனு நானும் மாத்திட்டேன்ல” பெருமையாக மீசையைத் தடவி விட்டுக்கொண்டார். 

கேட்டுக்கொண்டு நின்றிருந்த நான் கடைசி பஃபை இழுத்துவிட்டு சிகரெட்டைக் கீழே போட்டு மிதித்தேன். 

சட்டென்று என்னை திரும்பிப்பார்த்த வழுக்கை, “தம்பி ஒரு சிகரெட் குடேன்” என்றார். நானும் சிகரெட் பாக்கெட்டை எடுத்து அவருக்கு ஒன்று கொடுத்து விட்டு இன்னொன்றைப் பற்ற வைத்துக் கொண்டேன். முதல் பஃபை இழுத்துவிட்டு வெளியே விடும்போது புகையோடு சேர்ந்து ஒரு பெரிய ஏப்பமும் வந்தது. 

“என்ன தம்பி நல்ல சாப்பாடா?” வழுக்கை.

“ஆமாங்க” என்று அசடு வழிந்தேன். 

“இந்த ஓட்டல்லயா?”

“ஆமாங்க”

“பில் எம்புட்டு ஆச்சி”

‘என்னடா இதையெல்லாம் கேட்கிறார்’ என்று யோசித்துக்கொண்டே “அதை எதுக்குன்னே கேக்குறீங்க?”

“சும்மா சொல்லுங்க தம்பி”

“150 ரூவா ஆச்சி”

“ஹ்ம்ம்.. அங்க பாருங்க அந்த மரத்தடியில ஒரு ஆயா இட்லி சுட்டுக்கிட்டு இருக்குது. ஒரு இட்லி ஒரு ரூவா தான். அங்க போய் சாப்புட மாட்டீங்களோ?”

“சாப்புடுவேங்க. இன்னைக்கி எனக்கு பிரியாணி சாப்புடனும் போல இருந்திச்சி. அதுனால சாப்டேன்.”

“இந்த ஓட்டல் கட்ட ஒரு ரெண்டு மூணு கோடி செலவாயிருக்குமா?”

“இருக்கலாங்க”

“தினத்துக்கும் ஏசிக்கி கரண்டு பில்லு மட்டும் பத்தாயிரம் ரூவா கட்டுவானுக போலருக்கு”

“இருக்கலாங்க”

ஏந்தம்பி கொஞ்சம் யோசிச்சிப் பாத்தீங்களா? நம்ம நாட்டுல எத்தனை தொழிலாளர்கள் ஒரு வேளை கஞ்சிக்குக் கூட வழியில்லாம கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காங்க. எத்தனை மாணவர்கள் படிக்க வழியில்லாம இருக்காங்க. அப்பிடியிருக்கும்போது, இப்பிடி மூணு கோடி ரூவா செலவு பண்ணி ஒரு ஹோட்டலு, அங்க ஏசியப் போட்டு கரண்டு பில்லு பத்தாயிர ரூவா கட்டணுமா? அதுக்கு அங்கன இருக்கிற ஆயாக்கடையிலயே எல்லாரும் சாப்டுட்டுப் போலாம்ல? அதை விட்டுட்டு இந்த பணக்காரப் பரதேசி கடையில சாப்புடுறது நம்ம வாந்திய நாமளே காசு குடுத்துத் திங்கிறது மாதிரி”

“ஒவ்வொருத்தர் டேஸ்டுங்க அது. உங்களுக்கு ஆயா கடையில சாப்புடப் பிடிக்கிது. எனக்கு இந்தக் கடையில சாப்புடப் பிடிக்கிது. அதுக்காக உங்க டேஸ்ட் பெட்டர். என் டேஸ்டு பெட்டர்னு சொல்லமுடியுமா?”

“சொல்லணுந்தம்பி. ஆயாக்கடை இட்லிதான் டேஸ்டு. மத்ததெல்லாம் வேஸ்டு” 

“சரிங்க அப்பிடியே இருக்கட்டும். ஆனா அதுக்காக சொந்தக்காச போட்டு ஓட்டல் கட்டி வியாபரம் பண்றவங்களையும், கைக்காசக் குடுத்து சாப்டுட்டு வர்றவங்களையும் இப்பிடிப் பேசலாமா?”

“அப்பிடித்தான் தம்பி பேசணும். அப்பத்தான் இந்த வர்க்க பேதம் போய் எல்லாரும் ஒண்ணாக முடியும்”

“எல்லாரும் சமமா ஆகணும்னா, எல்லாரும் முன்னேற என்ன வழின்னு பாக்கணும். அதை விட்டுட்டு பணக்காரனை எல்லாம் ஏழையாக்கிட்டா எல்லாரும் சமமாயிருவோமுன்னு சொன்னா எப்பிடி?”

“நீங்க முதலாளித்துவ மனப்பான்மையோட பேசுறீங்க. எதுவும் சொந்தமா தொழில் செய்றீங்களா?”

“இல்லைங்க. நான் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில வேலை பாக்குறேன்”

“அதான். முதலாளிகளோட அடிவருடியா மாறீட்டீங்க”

‘இவருடன் பேசி பிரயோசனமில்லை என்று தோன்றியது’ சிகரெட்டை இழுத்து அந்தப்பக்கம் விடுவது போல முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.

சாலையின் மறுபுறம் ஒரு திருமண ஊர்வலம் போய்க்கொண்டிருந்தது. வட இந்தியத் திருமணம். பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்பது அந்த ஊர்வலத்தில் வந்தவர்களின் உடையிலும், நகையிலும் பகட்டிலும் தெளிவாகத் தெரிந்தது. விலை உயர்ந்த உடையணிந்த மாப்பிள்ளை ஒரு வெள்ளைக் குதிரையில் மேல் பவனி வந்து கொண்டிருந்தார்.

அப்போது ஒரு நாய் எங்கிருந்தோ ஓடி வந்தது. அந்த ஊர்வலத்தைப் பார்த்து தூரமாக நின்று குலைத்தது. ஊர்வலத்தில் போனவர்கள் யாரும் அதைக் கண்டுகொண்டதைப் போலவே தெரியவில்லை. ஆனாலும் விடாமல் குரைத்துக் கொண்டே இருந்தது. அடித்தொண்டையிலிருந்து கத்திக் கத்திக் குரைத்தது. 

நான் அந்த நிகழ்வைப் பார்த்து ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு சிகரெட்டைக் கீழே போட்டுவிட்டு விலகி நடந்தேன். .

Monday, August 2, 2010

செஷல்ஸ் தீவில் பல்பு

பலா பட்டறை ஷங்கர் நானும் அவரும் படிச்ச கலஹாரி இலக்கியத்துல ஒண்ணை அவுத்துவுட கூப்பிட்டுருந்தாரு. சரி நாங்க அந்த இலக்கியத்தப் படிச்ச காலத்துல நடந்த ஒரு சம்பவத்தையே இங்க பகிர்ந்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டு அதையே ஒரு புனைவு மாதிரி (புனைவு பிடிக்காதவுக சொற்சித்திரம்னு வாசிச்சுக்குங்க) எழுதிருவோம்னு முடிவு பண்ணிட்டேன்.

நானும் ஷங்கரும் செஷல்ஸ்ல ஆறு மாசம் தங்கியிருந்து கலஹாரி இலக்கியம் படிச்சோம். அப்பல்லாம் நாங்க வாரக் கடைசியானா பீச்ல உக்காந்து பீஃப் ஃப்ரை சாப்டுக்கிட்டே பியர் சப்புறது வழக்கம். எப்பயாவது நம்ம பிரபா எங்கக்கூட சேந்துக்குவாரு. அவர் பியரு குடிக்க மாட்டாரு. ஆனா நாங்க சாப்புடுறதுல ரெண்டு பங்கு பீஃப் ஃப்ரை மட்டும் சாப்புடுவாரு.

அவரு அங்கதான் கவிதை இலக்கியம் படிச்சிக்கிட்டு இருந்தாரு. நாங்க மூணு பேரும் உக்காந்து உலகக் கதை பேசுவோம். பிரபா பேசும்போதே கவிதையாத்தான் பேசுவாப்ல. ஒரு நாளு நாங்க அப்பிடி உக்காந்து பேசிட்டு இருக்கும்போது சரசரன்னு ஒரு சத்தம். என்னடான்னு பாத்தா ஒரு அனகோண்டா எங்கருந்தோ தப்பிச்சி பீச் பக்கம் வந்திருச்சு. எனக்குன்னா ஒரே பயம். தடாருன்னு கையில இருந்த பீர் பாட்டிலைக் கீழ போட்டுட்டு அது மேல ஏறி நின்னுக்கிட்டு ஷங்கரைப் பாத்தேன். ஷங்கரைக் காணோம். பாத்தா மனுசன் என் மேல ஏறி நின்னுட்டு இருக்காரு.

ஆனா நம்ம பிரபா அந்த அனகோண்டா வாலைப் பிடிச்சித் தூக்கு தலைக்கு மேல நாலு சுத்து சுத்தி வீசுனாரு பாருங்க, அனகோண்டா கன்னா பின்னான்னு கதறிக்கிட்டு ஓடிருச்சி. அப்பல்லருந்து நாங்க அவர ஸ்நேக் பிரபா ஸ்நேக் பிரபான்னு கூப்புடுவோம்.

நாங்க மூணு பேரும் சேந்து செஞ்ச இன்னோரு விசயம் அங்க வர்ற பொண்ணுகளை பாக்குறது. சில நேரம் அரவிந்தும் எங்க கூட சேந்துக்குவாப்ல. அரவிந்தைத் தெரியுமா உங்களுக்கு. அரவிந்து ஒரு இரும்புக்கடை வச்சிருக்காப்ல. திருநெல்வேலி, சென்னை, பாம்பே, மலேசியால எல்லாம் அதுக்கு பிராஞ்ச் இருக்கு. அரவிந்துக்கும் சிவப்புச் சட்டைக்காரங்களுக்கும் ஆகவே ஆவாது. டெய்லி அவிங்கள எதாவது கிண்டல் பண்ணி கடை வாசல்ல போர்டு வச்சிருப்பாப்ல. அவிங்களும் கூட்டமா வந்து அவரு கடை வாசல்ல நின்னு கோஷம் போட்டுட்டுப் போயிருவாய்ங்க.

அரவிந்துக்கும் பொண்ணுகளுக்கும் ராசியே இல்லை. இப்பிடித்தான் பாருங்க ஒரு தாய்லாந்து பொண்ணை ரொம்ப நாள் ரூட்டு விட்டுக்கிட்டு இருந்தாப்ல. அந்தப் பொண்ணு போறப்ப வர்றப்ப எல்லாம் எதாவது கவிதை எழுதி அவ மேல் தூக்கி எறிவாப்ல. அதுவும் பொறுக்கிக்கிட்டு போயிரும். ஆனா ஒரு பதிலும் சொல்லாது.

ஒரு நா அந்தப்பொண்ணு ஜான்சி அக்காவைக் கூட்டிக்கிட்டு வந்திருச்சி. எனக்கும் ஷங்கருக்கும் அல்லு விட்டிருச்சி. ஏன்னா ஜான்சி அக்கா பயங்கரமான ஆளு. ஜான்சி அக்கா கையில அரவிந்து இது வரைக்கும் எழுதுன கவிதைத் துண்டு எல்லாம் இருக்கு. வந்தவுக அரவிந்த விட்டு லெஃப்டு ரைட்டு வாங்கிட்டாங்க. நான் என்.சி.சியில இருந்தவ. துப்பாக்கி சுடுறதுல ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கியிருக்கேன். அது மட்டுமில்ல எனக்கு காவல்துறையிலயும் நீதித் துறையிலயும் ஆளுங்க நிறைய இருக்காங்கன்னு சொல்லி அரவிந்தை உண்டு இல்லைன்னு ஆக்கிட்டாங்க.

நான் இதை கேட்டுட்டு சும்மா இருந்திருக்கலாம். ஜான்சி அக்காவுக்கு சாரு ஜெ.மோவை விட சுய சொறிதல் ஜாஸ்தியா இருக்கும் போலன்னு பின்னூட்டம் போட்டுட்டேன்.

உடனே என்னை ஒரு மொற மொறச்சிட்டு அக்கா போயிட்டாங்க. நாங்க எங்க சைட் அடிக்கிறதைக் கண்டினியூ பண்ணோம்.

எனக்கு அங்க வர்ற பிலிப்பைன்ஸ் பொண்ணு மேல ஒரு கண்ணு. ஆனா அரவிந்து மாதிரி கவிதை எழுதி எறியிற அளவுக்கு எனக்கு தெகிரியம் இல்லை. கவிதை எழுதவும் வராது. சும்மா பாத்துக்கிட்டே இருப்பேன். அது என்னை பாக்குதா இல்லைன்னே தெரியாது. ஏன்னா அது எப்பவும் ஒரு கூலிங்க்ளாஸ் போட்டுட்டேத்தான் திரியும்.

நானும் பதிலுக்கு ஒரு கூலிங்க்ளாஸ் வாங்கி மாட்டுனேன். அப்ப அங்க நம்ம தம்பி பிரதாப் வந்தாப்ல. “என்னண்ணே என்னைக்கும் இல்லாத திருநாளா கூலிங் கிளாஸ் எல்லாம் போட்டுட்டு இருக்கீங்கன்னு கேட்டாப்ல.

நானும் இந்த மாதிரி இந்த மாதிரின்னு பிலிப்பைன்ஸ் மேட்டரைச் சொன்னேன். அவரு உடனே அண்ணே பிலிப்பினோவை நம்பாதிங்கண்ணே. கவுத்திருவாளுகன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு.

அவரு யோசனையக் கேட்டிருக்கணும். கேக்காமப் போயிட்டேன். அப்பத்தான் நம்ம எழுத்தாளர் அந்தப் பக்கம் வந்தாரு. எழுத்தாளர்னா தெரியும் தான? நம்ம விசா. அவருக்குத்தான் பெண் தோழிகள் அதிகமாச்சே. அவர்கிட்ட எதுனா யோசனை கேட்டு அந்த பிலிப்பினோவை மடக்கலாம்னு அவர்கிட்ட மெதுவா பேச்சக் குடுத்தேன். அவரு கைல ஒரு நைட்டி பார்சல் வச்சிருந்தாரு. “என்ன தலைவா? நைட்டி வச்சிருக்கிங்க. பப்ளிக் ப்ளேஸ்ல நைட்டில வரலாமான்னு கேட்டேன்.

அதுக்கு அவரு, நைட்டியில பப்ளிக்ல வர்றது தப்பான்னு கேட்டு ஒரு மூணு பக்கக்கதை சொன்னாரு. இவருக்கிட்ட கேட்டது தப்பாப் போச்சேன்னு. சரி பாஸு நைட்டியை விடுங்க, நாம எங்கயாவது போய் சாப்புடலாம்னு, அந்த பிலிப்பினோ சாப்புடுற ஸுஷி பாருக்குக் கூட்டிட்டுப் போனேன். என் கெட்ட நேரம் அந்தப் புள்ள அங்க வரலை. அதப் பாக்காத ஏக்கத்துல எனக்கும் சாப்பாடு எறங்கலை. மீதிய அப்பிடியே வச்சிட்டு வர வேணாமின்னு, சர்வர்கிட்ட அதக் கட்டிக் குடுக்கச் சொன்னேன். விசாவுக்கு ஒடனே கோவம் வந்திருச்சி. நம் சமூகத்தில் நம்மை விட மெலியவர்களிடம் நம் பணத்திமிரையோ உடல் வலிமையையோ அவசியமில்லாமல் பிரயோகிப்பது கொடுமையானதுன்னு சொல்லிட்டு கோவிச்சிட்டு எந்திரிச்சிப் போயிட்டார். இந்த ஓட்டல்ல இது வழக்கம்தாண்ணேன்னு நான் கத்திக்கிட்டே பின்னாடி ஓடுனேன். ஆனா பாருங்க அவரு பஸ் ஏறிப் போயிட்டாரு.

என்னடா பண்ணலாம்னு நான் ஷேவ் பண்ணி ரெண்டு நாளான என் தாடியைச் சொறிஞ்சிக்கிட்டே நின்னேன். அப்போ வேகமா ஒரு கார் என் முன்னால் வந்து சட்டுன்னு பிரேக் போட்டு - “இது கூட சுயசொறிதல் தானப்பா”ன்னு சொல்லிட்டு அடுத்த செகண்ட் வேகமாப் போயிருச்சி. பறந்து வந்து என் காலடியில விழுந்த ஆரஞ்சுப் பழத்தோலைப் பாத்ததும்தான் வந்துட்டுப் போனது ஜான்சி அக்கான்னு தெரிஞ்சிக்கிட்டேன்.

அவ்வளவு நேரம் பளீர்னு எரிஞ்சிக்கிட்டு இருந்த பல்பு பட்டுனு ஃபீஸ் போயிருச்சி.

Saturday, February 13, 2010

கம்பராமாயணத்தில் ரெயின்-செக்

வீட்டுல இருக்குற பேனசானிக் கார்ட்லெஸ் ஃபோன் வாங்கி ரொம்ப நாளாயிடுச்சி. அது பல்லக் காட்ட ஆரம்பிச்சிருச்சி. சரி இப்போ தான் DECT 6.0ன்னு புது டெக்னாலஜியெல்லாம் வந்திருக்கே, ஒன்ன வாங்கிப் போட்றலாம்னு முடிவு செஞ்சோம். வழக்கமா எந்த மாடல் வாங்குறது அப்பிடிங்கிறத ஆராய்ஞ்சி முடிவு செய்யறது நம்ம கடமை. அந்த மாடல் ஃபோனை எங்க சீப்பா வாங்குறது அப்பிடிங்கிறத முடிவு செய்யறது நிதிஅமைச்சர் கடமை.


நானும் பல சைட்டுல தேடி கடைசியா ஒரு மாடல தங்கமணிக்கிட்ட குடுத்துட்டேன். அவங்க பங்குக்கு தேடி ஆஃபிஸ் மேக்ஸ்ல எதோ ஆஃபர் போட்டிருக்கான்னு சொன்னாங்க. சரி, அத வாங்கிப் போட்டுடலாம்னு ரெண்டரை பேரும் ஆஃபிஸ் மேக்ஸ் போனோம்.


அங்க போனா எங்க நேரம் அந்த மாடல் ஸ்டாக் இல்ல. என்ன பண்றது இப்போ அப்பிடின்னு நொந்துக்கிட்டு கிளம்பலாமா அப்பிடின்னு தங்கமணிகிட்ட கேட்டேன். அவங்க, “ஒரு நிமிசம் இரு” அப்பிடின்னு சொல்லிட்டு நேரா அந்த சேல்ஸ் கேர்ள் கிட்ட போயி


“ஐ டோண்ட் சீ திஸ் மாடல் இன் ஸ்டாக். கேன் ஐ ஹாவ் எ ரெயின் செக்?” அப்பிடின்னு கேட்டாங்க.


“ஓ. வீ ஆர் வெரி சாரி அபவ்ட் தட். ஷ்யூர். யூ கேன் ஹாவ் ஒன்” அப்பிடின்னு சொல்லிட்டு ஒரு பேப்பர் எடுத்து சர சரன்னு மாடல் பேரு ஆஃபர் போட்ட விலை எல்லாத்தயும் நோட் பண்ணி குடுத்தாங்க.


நமக்கு ஒண்ணுமே புரியல. தங்கமணிக்கிட்ட “என்னாது இது?” அப்பிடின்னு கேட்டேன்.


“ரெயின் செக்”


“அது கேட்டுச்சி. அப்பிடின்னா என்ன?”


“ஓ அதுவா. இன்னும் ஆஃபர் இருக்கு, ஆனா ஸ்டாகில்ல இல்லயா? அதுனால ஸ்டாக் வந்ததும் இதே ஆஃபருக்கு வாங்கிக்கலாம்னு சொல்லி குடுக்குறதுக்குப் பேருதான் ரெயின் செக்”


“ச்சே. நல்ல சமாச்சாரமா இருக்கே? நம்ம ஊர்லயெல்லாம் இது இல்லயே. இந்த மாரி நல்ல விசயத்தயெல்லாம் கொண்டு போக மாட்டாய்ங்க. அத விட்டுட்டு லிவிங் டுகெதர் மாதிரி தேவையில்லாத கழிசடையெல்லாம் கொண்டு போவாய்ங்க”


“அப்பிடியெல்லாம் இல்லப்பா. இது ராமாயணக் காலத்துலயே இருந்திருக்கு?”


“என்னது ராமாயணக் காலத்துலயேவா?”


“ஆமா. உனக்குத் தெரியாதா?”


“தெரியாதே. கொஞ்சம் விளக்கமா சொல்லேன்?”


கார் கிட்ட வந்துட்டோம். ஜூனியரை கார் சீட்ல கட்டிட்டு கார் முன்கதவைத் திறந்து டிரைவர் சீட்டுல உக்காந்தேன். தங்கமணி ஜூனியர் பக்கத்துல பின் சீட்டுலயே உக்காந்துக்கிட்டாங்க.


பார்க்கிங்க்ல இருந்து காரை எடுத்து ரோட்டுக்கு வந்து ட்ராஃபிக் இல்லாத அந்த ரோட்டுல 40 மைல் வேகத்துல விட்டேன்.


"சரி கதைய கன்ட்டினியூ பண்ணு"


"எங்க விட்டேன்?"


"இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. கம்பராமாயணத்துல ரெயின் செக்"


"ஓ ஓக்கே. நம்ம ராமனோட அப்பா தசரதன் இருக்காரே, அவருக்கு அந்தப் பேரு எப்பிடி வந்ததுன்னு தெரியுமா?"


"அவங்க அப்பா அம்மா வச்சிருப்பாங்க."


"லொள்ளு பண்ணாத. சொல்றதக் கேளு. முந்தி சம்பராசுரன் அப்பிடின்னு ஒரு அசுரன் இருந்தான்”


“அதாவது ஒரு திராவிடன் அப்பிடித்தான?”


“அப்பிடியும் வச்சிக்கலாம். ஆனா இப்போதைக்கு அசுரன்”


“ஓக்கே. மேல சொல்லு”


“நீ எங்க சொல்ல விடுற. குறுக்க குறுக்கக் கேள்வி கேட்டுக்கிட்டு. அவன் என்ன பண்ணான், தேவர்களோட தலைவன் இந்திரனை தோற்கடிச்சி விரட்டி விட்டுட்டு இந்திரலோகத்தைக் கைப்பத்திக்கிட்டான். இந்திரன் பூலோகத்துக்கு ஓடி வந்து தசரதன் கிட்ட ஹெல்ப் கேட்டான்”


“இந்திரன் ஹெல்ப் கேக்குற அளவுக்கு தசரதன் பெரிய ஆளா?”


“அப்பிடித்தான் போல. தசரதனும் இந்திரனுக்கு ஆதரவா சம்பராசுரனோட போருக்குப் போனார். இந்த சம்பராசுரன் பத்து தேரோட போருக்கு வந்தான். தசரதன் கடுமையான போருக்கப்புறம் அந்த அசுரனை ஜெயிச்சிட்டாரு”


“பரவாயில்லையே”


“என் கதை கேக்குற சுவாரசியத்துல நீ க்ரீன் விழுந்த்ததை கவனிக்காம நிக்கிற பாரு. பின்னாடி வர்றவன் ஹாங்க் பண்றான்”


“அய்யோ சாரி சாரி” கையைத் தூக்கி பின்னால் நின்றிருந்த காருக்கு சாரியை சிக்னலாக் குடுத்துட்டு காரை முன்னாடி விட்டேன்.


“இண்ட்ரஸ்டிங்கா இருக்கு. மேல சொல்லு”


“அப்பிடிப் பத்து தேர் கொண்ட அசுரனை வீழ்த்தினதால தான் தசரதனோட பேரு - தச ரதன் ஆச்சு”


“ஓ. அப்போ அதுக்கு முன்னாடி அவர் பேரு என்ன?”


“எனக்குத் தெரியலை. நீ எப்பிடியும் இதை ப்ளாக்ல எழுததான போற. தெரிஞ்சவங்க யாராவது சொல்வாங்க”


“அதுவும் சரிதான்.”


“இந்த போர்ல, தசரதனோட தேர்ச்சக்கரம் கழண்டு விழுக இருந்தப்போ, கைகய நாட்டு இளவரசி கைகேயி, தன் விரலை தேருக்கு அச்சாணியா குடுத்து தசரதனோட வெற்றிக்குத் துணையா இருந்தா.”


“இரு இரு. கிட்டத்தட்ட கிருஷ்ணன் -சத்யபாமாவுக்கும் இதே மாதிரி ஒரு கதை இருக்குல்ல?”


“ஆமா. வியாசர் ஒருவேளை ராமாயணத்தைப் படிச்சிட்டு அதோட இன்ஸ்பிரேஷன்ல கிருஷ்ணர் கதைய எழுதியிருப்பாரோ என்னவோ எனக்குத் தெரியலை. இப்போதைக்கு நம்ம கதைக்கு வா”


“சரி சரி சொல்லு”


“அப்பிடி தன் வெற்றிக்குத் துணையா இருந்ததுக்காக, அவளையே கல்யாணம் பண்ணிக்கிட்டாரு தசரதன். அதோட அவளுக்கு ரெண்டு வரத்தையும் குடுத்தாரு”


“ஹ்ம்”


“ஆனா கைகேயி, அப்போதைக்கு அந்த வரத்தை வாங்கிக்காம, ரெயின் - செக் எடுத்துக்கிட்டா. அதே ரெண்டு வரத்தை தான் ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய தசரதன் முடிவு செய்யும் போது கேட்டு வாங்கி ராமனை காட்டுக்கு அனுப்பிட்டா”


“அடடா இப்பிடியா விசயம்? அப்போ கம்பராமாயணத்தைப் படிச்சித்தான் இந்த ரெயின் - செக்கை அமெரிக்காக்காரனுங்க கண்டுபிடிச்சிருப்பாங்கன்னு சொல்ற?”


“அப்பிடியும் சொல்லலாம். இப்போ தான் வியட்நாம் காலனி படத்தைக் காப்பியடிச்சி அவதார் படம் எடுத்திருக்காரு ஜேம்ஸ் காமரூன் அப்பிடின்னு சொல்லிட்டுத் திரியுறாங்களே?”


அதற்குள் வீடு வந்திருச்சி. ஜூனியரை சீட்டுல இருந்து இறக்கி, வீட்டுக்குள்ள தூக்கிக்கிட்டு போனேன். 

Sunday, January 31, 2010

திரௌபதியின் அட்சய பாத்திரம்

“முகிலன் சாப்பாடு ரெடி. சாப்புட வரலாம்” - வலையுலகில் இருந்த என்னை தங்கமணியின் குரல் பூவுலகுக்கு அழைத்து வந்தது.


படியிறங்கி வரும்போதே வறுத்த உருளைக்கிழங்கு வாசம் மூக்கைத் துளைத்தது. 


"என்ன சாப்பாடுமா?”


“சாம்பாரும் உருளைக்கிழங்கு வறுவலும்” தங்கமணி ஜூனியர் முகிலனுக்கு பருப்பு சாதம் பிசைந்து கொண்டே பதில் சொன்னார்.


நான் போய் கழுவி அடுக்கியிருந்ததில் ஒரு தட்டை எடுத்து அதில் சோறையும் சாம்பாரையும் சரி பங்கு ஊற்றி, அதில் பாதி அளவுக்கு உருளைக்கிழங்கு வறுவலை வைத்துக்கொண்டு டைனிங் டேபிளில் உட்கார்ந்தேன்.


எதிரே தங்கமணி ஜூ.முகிலனுக்கு சோறை ஊட்டிக்கொண்டே, “முகிலன், உனக்கு மகாபாரதம் தெரியுமா?” 


“தெரியுமான்னா? பாத்திருக்கேன். டிவில மஹாஆஆஆஆஅபாரதம்னு.. போடுவாங்களே?”


“அதுல ஒரு கிளைக்கதையிருக்கு. கேள்விப் பட்டிருக்கியா?”


சுவாரசியமாகி பிசைய ஆரம்பித்த கையை எடுத்து ஒவ்வொரு விரலாக சப்பிக் கொண்டே “என்ன கதை?”


“கௌரவர்கள்கிட்ட சூதாட்டத்துல தோத்துப் போன பாண்டவர்கள், 12 வருசம் காட்டுல இருந்தாங்களா?”


“ஆமா. அது சரி, இந்த மகாபாரதமும் ராமாயணமும் ஆரிய-திராவிட போரையும், ஆரியர்கள் இந்தியாவுல பரவுனதையும் தான் சொல்லுதுன்னு ஒரு ப்ளாக்ல படிச்சேனே? அது உண்மையா?”


“உண்மையா இருக்கலாம். ஆரியர்களை எல்லாம் தேவர்களாவும், திராவிடர்களையெல்லாம் ராட்சசர்களாவும் காட்டியிருக்காங்கன்னு சில பேர் சொல்லி கேட்டிருக்கேன். ஆனா இப்போ அது நம்ம கதைக்குத் தேவையில்லை”


“ஓ யெஸ். ஓக்கே. மேல சொல்லு”


“அப்பிடி அவங்க காட்டுல இருந்தப்போ அவங்க கிட்ட ஒரு அட்சயப்பாத்திரம் இருந்திச்சி. திரௌபதி அதில இருந்து அறுசுவை உணவையும் வரவழச்சி பாண்டியர்கள் ச்சீ, பாண்டவர்கள் எல்லாம் சாப்புட்டு வந்தாங்க. அதோட இல்லாதவங்களுக்கும் அன்னதானம் குடுத்துட்டு வந்தாங்க”


“இங்க பாத்தியா? ஆரியப்பசங்களுக்கு மட்டும் காட்டுல இருந்தாலும் அறுசுவை உணவு கேக்குது. நான் திராவிடனா பொறந்துட்டதால, அமெரிக்கால இருந்தாக்கூட ரெண்டு சுவைக்கு மேல தேற மாட்டேங்குது”


“மறுபடியும் ட்ராக் மாத்துற”


“ஓ சாரி சாரி. நீ சொல்லு”


“அந்த அட்சயப் பாத்திரத்துல ஒரே ஒரு லிமிட்டேஷன்”


“என்ன?”

“ஒரு தடவை கழுவி கவுத்தியாச்சின்னா அடுத்த நாள் தான் அதை யூஸ் பண்ண முடியும். நடுவுல அது வெறும் பாத்திரமா தான் இருக்கும்”



“அதான சும்மா வருவாளா சுகுமாரி?”


“இப்பிடி இவங்க காட்டுக்குப் போனப்பறமும் சுகமா சாப்புடுறதக் கேள்விப்பட்ட துரியோதனன், இதைக் கவுக்க எதாவது செய்யணும்னு முடிவு பண்ணான்”


“அடப்பாவி. என்ன பண்ணான்?” தட்டில் சாப்பாடு இருப்பதையே மறந்து போனேன். 


“ஒரு நாள் துர்வாச முனிவரைக் கூப்புட்டு, நல்லா விருந்து வச்சான். அவரு சிஷ்ய கோடிகளோட சாப்புட்டு முடிஞ்சதும் அவர் கிட்ட பாண்டவர்கள் வீட்டுக்கும் நீங்க போய் சாப்புடணும் அப்பிடின்னு கோரிக்கை வச்சான். அவரும் சரின்னு எல்லா சிஷ்யர்களையும் கூப்பிட்டுக்கிட்டு கிளம்பி பாண்டவர்கள் குடிலுக்குப் போனாரு”


“நம்ம சாமியார்களுக்கு அப்ப இருந்தே சோறு கண்ட இடம் சொர்க்கம் போல”


“அய்யோ பாவம், அவரு அங்க ரீச் ஆறதுக்கு கொஞ்ச நேரம் முன்னால தான் திரௌபதி அட்சயப் பாத்திரத்த கழுவி கவுத்திட்டா?”


“அய்யோ.. துர்வாசர் தான மூக்கு மேல கோவம் வர்ற முனிவர்?”


“அட கரெக்டா சொல்ற? இதெல்லாம் எப்பிடித் தெரியும்?”


“அதான் எனக்கு கோவம் வர்றப்ப எல்லாம் நீ சொல்லி சொல்லி காட்டுறியே. மேல சொல்லு?” ஜூனியர் முகிலன், சாப்பிட்டு முடித்துவிட்டு என் தட்டில் இருக்கும் சோறை எடுக்க வந்தவனை, மடக்கி மடியில் உட்கார வைத்தேன்.


“அவரு வந்து நானும் என் சிஷ்யர்களும் சாப்புட வந்திருக்கோம். போய் குளிச்சிட்டு வர்றோம் நல்ல விருந்து ரெடி பண்ணுன்னு சொல்லிட்டு போயிட்டார். பாண்டவர்களுக்கோ என்ன பண்றதுன்னு தெரியலை. திரௌபதி டக்குன்னு கிருஷ்ணா அப்பிடின்னு கூப்பிட்டா. அவ குரல் கேட்டதும் ஓடோடி வந்தாரு கிருஷ்ணர்”


“தினம் தினம் கோடிக்கணக்கானவுங்க சாப்புட எதுவும் இல்லாம கஷ்டப்படுறாங்க. அவங்க கூப்புடுறதெல்லாம் இந்தக் கிருஷ்ணன் காதுல விழாது. இது மட்டும் விழுந்திருச்சா?”


“என்ன விஷயம்னு கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டு திரௌபதியக் கூப்பிட்டு, அந்த அட்சயப் பாத்திரத்தை எடுத்துட்டு வர சொன்னாரு. திரௌபதியும் எடுத்துட்டு வந்தா”


“எதோ மேஜிக் பண்ணி அதை வொர்க் பண்ண வச்சிட்டாராக்கும்?”


“குறுக்க குறுக்க பேசாம கதையக் கேளு”


“சரி சரி. சொல்லு”


“அந்தப் பாத்திரத்தை திரௌபதி சரியாக் கழுவாம உள்ள ஒரே ஒரு பருக்கை மட்டும் ஒட்டியிருந்தது. கிருஷ்ணர் அதை எடுத்து அவர் வாயில போட்டுக்கிட்டாரு”


“அப்புறம்?”


“அவர்தான் உலகையே ரட்சிக்கிறவர் ஆச்சே”


“ரட்சிக்கிறவர் இயேசு இல்லையா?”


“அய்யோ, இவரும் தான்”


“சரி. ஓக்கே. மேல சொல்லு”


“அதுனால அவரு அந்தப் பருக்கைய சாப்புட்டதும் உலகத்துல உள்ள எல்லா ஜீவராசிகளோட பசியும் அடங்கிருச்சி.”


“இப்பல்லாம் வைகுண்டத்துலயே அரிசிப் பஞ்சமோ? கிருஷ்ணர் அரிசியே சாப்புடுறது இல்ல போல”


“இந்த பின்னூட்டம் போடுறதையெல்லாம் ப்ளாகோட நிறுத்திக்கோ. எனக்குப் போடாத”


“சரி சரி. நீ சொல்லு”


“உலகத்துல துர்வாசரும் அவரோட சிஷ்யப்புள்ளைங்களும் அடக்கம் தான?”


“ஆமா”


“சோ அவங்களுக்கும் பசி அடங்கிருச்சி. அவங்க சாப்புடாமலே போயிட்டாங்க. பாண்டவர்களும் சாபத்துல இருந்து தப்பிச்சிட்டாங்க”


“ம்ஹ்ம்”


“இந்தக் கதையில இருந்து உனக்கு என்ன தெரியுது?”


“பாண்டவர்களுக்கு என்ன கஷ்டம்னாலும் உதவறதுக்கு கிருஷ்ணன் இருந்திருக்கான். இப்ப நமக்கு யாருமே இல்லைன்னு தெரியுது”


“அய்யோ மண்டு. சில நேரங்கள்ல பாத்திரத்தை சரியா கழுவலைன்னா கூட நன்மைதான் விளையும்னு தெரியுதா?”


“அட ஆமால்ல. அது கூட ஒரு பாயிண்ட் தான். ஆமா இந்தக் கதைய இப்ப எதுக்கு சொன்ன?”


“நீ சாப்புடுற தட்டு சரியாக் கழுவாம ஒரு ஓரத்துல ஒரு பருக்கை ஒட்டியிருக்கு பாரு அதை எடுத்து போட்டுட்டு சாப்புடு” என்று சொல்லிவிட்டு என் பதிலுக்குக் காத்திராமல் நடந்தார் தங்கமணி.


‘அடப் பாவிங்களா. புராணத்தை எதுக்கெல்லாம் துணைக்கிக் கூப்புடுறாய்ங்க’ என்று நினைத்துக் கொண்டு (அப்புறம் சத்தமாவ சொல்ல முடியும்) அந்தக் பருக்கையை எடுத்து சைட் ப்ளேட்டில் வைத்து விட்டு சாப்பிட ஆரம்பித்தேன்.


கை கழுவும்போது திடீரென தோன்றியது அந்த யோசனை. பக்கத்தில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த தங்கமணியைப் பார்த்து - “இன்னிக்கி நீ சொன்ன கதையால எனக்கு ஒரே ஒரு நன்மை தான்”


“என்னது?”


“இன்னிக்கி ப்ளாக்ல ஒரு பதிவுக்கு மேட்டர் தேத்திட்டேன். தேங்க்ஸ்”