Thursday, April 29, 2010

களவு

முஸ்கி: பிரபலமாகணும்னா மீள் பதிவு போடணுமாமே? நானும் போடுறேன் ஒரு மீள் பதிவு.

நான்காவது அடகுக் கடையிலிருந்து வெளியே வந்தான் அவன். அவன் கையில் பாதுகாப்பாக சுருட்டப்பட்ட ஒரு மஞ்சள் பை. அவன் முகத்தில் கலக்கமும் களைப்பும் கூடிக் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தன.

சேகரின் கண்கள் அவனையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தன். கையில் வைத்திருந்த டீக் கோப்பையை உதடுகள் உறிஞ்சினாலும் எண்ணம் மஞ்சப் பைக்காரனை சுற்றியே வந்தது.

களைத்துப் போன அவன் டீக்கடைக்கு வந்தான்.

"ஒரு டீ போடுங்கண்ணே" என்று சொல்லிவிட்டு மஞ்சப்பையை கக்கத்தில் இடுக்கிக்கொண்டு சேகருக்கு அருகில் இருந்த மர பெஞ்சில் அமர்ந்தான்.

"என்னப்பா! நகைய அடகு வாங்க மாட்டேங்குறாங்களா?"

திடுக்கிட்டு திரும்பினான். "ஆமா. உங்களுக்கு எப்பிடி தெரியும்?"

"நான் அப்போலருந்து உன்னப் பாக்குறேன். சுத்தி சுத்தி வர்ற. அடகு வாங்கியிருந்தாத்தான் ஊருக்குப் போயிருப்பியே?" குரலைத் தாழ்த்தி, "என்ன திருட்டு நகையா?"

"அதெல்லாம் இல்ல. என் முதலாளியம்மா குடுத்து வுட்டாக"

"சரி நம்புறேன். நம்ம கிட்ட ஒருத்தரு இருக்காரு. அவரு எந்த நகைன்னாலும் வாங்குவாரு.என்ன கொஞ்சம் காசு கொறச்சுத்தான் குடுப்பாரு. உன்ன அங்க கூட்டிட்டு போகவா?"

அவன் சற்றே யோசித்தான்.

"யோசிக்கிறாப்புல இருக்கு. அது சரி. நம்ம ஊருக்காரன் மாதிரி இருக்கேன்னு ஹெல்ப்பு பண்ணலாமுன்னு பாத்தேன். உனக்கு இஷ்டம் இல்லைன்னா போ"

சேகர் கடைசி வாய் டீயை சர்ரென்று உறிஞ்சிவிட்டு காலி கிளாசை டேபிளின் மேல் வைத்தான். "ஆனா ஒண்ணு. நீ எத்தன கடை ஏறினாலும் உன் நகையை ஒருத்தனும் அடகு வாங்க மாட்டானுங்க" சொல்லிவிட்டு நடையைக் கட்டினான்.

இவனுக்கு லேசாக பயம் வந்துவிட்டது. டீயைக் குடித்து விட்டு அடுத்த சேட்டுக் கடையை நோக்கி சென்றான். இவன் உருவத்தைப் பார்த்துவிட்டு யாரும் நகையை வாங்க மறுக்கிறார்கள். இன்னும் இரண்டு கடைகளிலும் அதே பதில். தானாக வந்த அந்த புரோக்கரையும் விட்டு விட்டோம். இனி என்ன செய்வது? பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. மறுபடியும் அதே டீக்கடை.

"இன்னாபா நகையை ஒர்த்தனும் அடகு வாங்க மாட்டேன்றானா?"

கைலி கட்டிக் கொண்டு ஒரு கோடு போட்ட டி ஷர்ட் போட்டவன் அருகே அமர்ந்திருந்தான். அவன் கையில் பீடி புகைந்தது.

"ஆமாங்க"

"என் கைல ஒருத்தன்கீறான். அவன் அல்லா நகையும் வாங்குவான். கூட்டிட்டுப் போகவா?"

இவனையும் விட்டால் அப்புறம் ஒரு பைசா தேறாது என்று தோணியது.

"சரிங்க. எம்புட்டு தருவாக?"

"ஆறு வட்டி. கிராமுக்கு ஆறு நூறு. எனக்கு அம்பது கமிசன். சரியா?"

மனதுக்குள் கணக்குப் போட்டான். "சரிங்க. மொத்தமா விக்கிறதுன்னா?"

"கிராமுக்கு எட்டு நூறு. என் கமிசன் அதே தான்"

"சரி கூட்டிட்டுப் போங்க"

எழுந்தான். ஒரு ஆட்டோ கூப்பிட்டான்.

"உக்காரு"

இருவரும் உட்கார்ந்ததும் ஆட்டோ கிளம்பியது. "எம்பேரு அமீரு. உன் பேரு என்ன?"

"சம்முவம்"

"ஏது நகை. திருட்டா?"

"அதெல்லாம் இல்ல"

"பொய் சொல்லாத. உண்மைய சொல்லு. பொய் சொன்னா ஒண்ணும் கிடைக்காது"

சம்முவம் எச்சில் விழுங்கினான். "அது வந்து..."

"அட சொம்மா சொல்லும்மா. ரோசனை பண்ணாத"

"ஆமாங்க. வேல செய்யிற வீட்டுல கை வச்சுட்டேன். காசு கைக்கு வந்ததும் வட நாட்டு பக்கம் போயிடலாமுன்னு இருக்கேன்"

"நான் வாங்கித் தர்றேன்"

ஆட்டோ நின்றது. இருவரும் இறங்கினார்கள். அமீர் ஆட்டோவுக்கு பணம் கொடுத்து அனுப்பினான்.

அது ஒரு பழைய ஓட்டல் மாதிரி இருந்தது. வெளியே வாகனங்கள் எதுவும் இல்லை. ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லாத தெரு. சம்முவத்துக்கு லேசாக பயம் எட்டிப் பார்த்தது.

"வா உள்ள போலாம்" இருவரும் உள்ளே நுழையும் முன் ஒரு உருவம் அவர்களை மறித்தது.

"யேய். இவன நாந்தான் முதல்ல பாத்தேன். நீ கமிசன் அடிக்கப் பாக்குறியா?" சேகர் அவர்கள் இருவருக்கும் குறுக்காக கையை வைத்துக் கொண்டு நின்றிருந்தான்.

"இத்த வேற யார் கைலயாவது போய் சொல்லு. நான் பேசி இட்டாந்திருக்கேன்"

"அவன்கிட்ட வேணும்னா கேளு. நான் தான் முதல்ல பேசினேன். நீ நகந்துக்கோ. அது என் கிராக்கி"

சம்முவம் சும்மா இருந்திருக்கலாம். "ஆமாங்க அவர் தான் பேசுனாரு. நான் அப்போ அவர பெருசா எடுத்துக்கல. நீங்களும் சொல்லவுந்தான்.."

சேகர் அமீரைப் பிடித்து தள்ளினான். "அதான் சொல்லிட்டான்ல. நீ வழியப் பாத்துட்டுப் போ"
பையிலிருந்து ஒரு ஐம்பது ரூபாய்த்தாளை அமீரிடம் விசிறினான்.

"ஆட்டோவுக்கு குடுத்ததுக்கு வச்சிக்கோ". சம்முவத்தின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

அது ஒரு பழைய ஓட்டல் தான். மர பெஞ்சிகள் போடப்பட்டிருந்தன. ஒரு மூலையில் ஒருவன் பரோட்டா தின்று கொண்டிருந்தான். முண்டா பனியன் போட்ட ஒருவன் அடுப்புக்கு அந்தப் பக்கம் இருந்து தோசை ஊற்றிக் கொண்டிருந்தான். வேறு யாரும் இல்லை.

"சகா. தம்பி கொஞ்சம் நகை வச்சிருக்காப்ல.." சம்முவத்திடம் திரும்பி "அடகா, விக்கணுமா?"

"விக்கனுமுங்க" சம்முவம் பயந்த குரலில் சொன்னான்.

"எத்தினி கிராமு?" சகா கேட்டான்.

"தெரியலிங்க"

"திருட்டு நகையா? நீதான் திருடினன்னு தெரியுமா?"

"தெரியாதுய்யா. நகை காணாம போனத இன்னும் பாத்திருக்க மாட்டாய்ங்க"

"சரி குடு. பாப்போம்." பையை வாங்கினான். தோசையை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவனின் இலையில் வைத்துவிட்டு வந்து, பையைத் தூக்கி கையால் எடை பார்த்தான்.

"அம்பது அறுவது சவரன் தேறும்போல இருக்கே? ஒரிஜினல் தங்கமான்னு பாக்கனும்"

பைக்குள் கை விட்டு ஒரு நகையை உருவினான்."பாத்துட்டு வர்றேன்" பையை பின்னாலிருந்த ஜன்னலின் மேல் வைத்து விட்டு உள்ளே போனான்.

அமீர் உள்ளே வந்தான். "தோ பாரு சேகரு. இது என்னோட கிராக்கி. நீ வந்த வழியா போயிரு"

"போடாங்க.. நாந்தான் முதல்ல பேசினேன்னு சொல்றேன். நீ என்ன? போ போ"

"சேகரு நீ அடிக்கடி என் வழியில குறுக்க வர்ற. நா அல்லா நேரமும் போயிக்கினே இருக்க மாட்டேன் ஆமா"

"யேய் என்னடா செய்வ? ரொம்ப மிரட்டுர"

"சேகரு" அமீரின் குரல் தடித்திருந்தது. அமீரின் கையில் இப்போது ஒரு கத்தி மின்னியது.

"தோடா. போடாங்க. நான் அருவாளே பாத்திருக்கேன். இவரு கத்தி காட்டுறாரு"

"சேகரு உன்ன விட்டேனா பாரு" என்றவாறு சேகரின் மீது பாய்ந்தான் அமீர். அமீரை எதிர்பார்க்கவில்லை சேகர். ஆனாலும் லாவகமாக விலகினான். பாய்ந்து வந்த அமீரின் கையைப் பிடித்தான். அமீர் பலவந்தமாக கையை உதறினான். அமீரின் வேகத்தை எதிர்பார்க்காத சேகரின் பிடியிலிருந்து அமீரின் கை வழுகியது. கையை ஓங்கி சேகரின் வயிற்றை நோக்கி கத்தியைப் பாய்ச்சினான். மறுபடியும் ஒரு பயிற்சி பெற்ற சண்டைக்காரனின் லாவகத்துடன் அமீரின் கையைப் பற்றினான் சேகர். இப்போது இருவரும் ஒருவர் மீது ஒருவர் விழுந்து புரண்டனர். சம்முவம் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இருவருக்கும் குறுக்கே பாய்ந்தான். "சண்ட போடாதீங்க. ரெண்டு பேருக்கும் கமிசன் குடுக்குறேன்" என்று கத்தினான். அங்கே ஒரே களேபரமாக இருந்தது. யார் மீது யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

"அம்மாஆஆஆஆஆஆஆ" என்று அமீர் பெரிதாகக் கத்தினான். சேகரும் சம்முவமும் விலகினர். அமீரின் நெஞ்சில் ஒரு கத்திக் குத்து இருந்தது. ரத்தம் வெள்ளமாக வந்தது. சம்முவத்தின் கையில் இருந்த கத்தியில் ரத்தம். "அய்யோ" என்று அலறி சம்முவம் கத்தியைக் கீழே போட்டான்.

"அடப்பாவி. குத்திட்டியேடா?" சேகரின் கண்களில் அதிர்ச்சி. அமீர் துடித்து அடங்கினான்.

"அய்யோ கொலை கொலை" ஓரமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் கத்தியபடி வெளியே ஓடினான்.

"நகை விக்க வந்த எடத்துல இப்பிடி ஒரு கொலை பண்ணிப்புட்டியே? வா இங்கருந்து ஓடிடுவோம்"

"என்ன அங்க ஒரே சத்தம்?" உள்ளே இருந்து சகாவின் குரல் கேட்டது.

"சகா வந்தா உன்ன சும்மா விடமாட்டான். ஓடு ஓடு" என்று சேகர் சம்முவத்தை இழுத்துக் கொண்டு வெளியே ஓடினான்

"நக" என்று சம்முவம் ஓடிக்கொண்டே கேட்டான்.

"ஒனக்கு உயிர் முக்கியமா? நக முக்கியமா? நக வேணுமுன்னா நீயே உள்ளார போயி எடுத்துக்க" என்று அவன் கையை உதறி விட்டு சேகர் ஒரு சந்துக்குள் ஓடி மறைந்தான்.

சம்முவத்துக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரு நிமிடம் அந்த ஓட்டலுக்கு வெளியே நின்றிருந்தான். 'உள்ளே போய் நகையை எடுக்கலாமா' என்று அவன் மனதில் லேசாக ஒரு சபலம்.

"அய்யய்யோ அய்யய்யோ! என் ஓட்டல்ல வந்து ஒரு கொல பண்ணிட்டாங்களே? நான் என்ன செய்வேன்" என்று உள்ளே சகா கத்துவது வெளியே கேட்டது. 'இனி உள்ளே போனால் சகா தன்னை கண்டிப்பாக போலிஸில் மாட்டிவிடுவான். நகையும் கிடைக்காது, ஜெயிலுக்கும் போக வேண்டும். பேசாமல் இப்படியே ஓடி விட்டால் உயிராவது மிஞ்சும்' சேகர் போன அதே சந்துக்குள் புகுந்து ஓடினான், எதிர்காலம் இனி எப்படி இருக்கும் என்று தெரியாமல்.


கை கூட கழுவாமல் ஓடிய அவன் நின்றான். ஒரு டீக்கடையில் தண்ணீர் எடுத்து கை கழுவினான். லுங்கியில் கையைத் துடைத்து விட்டு பக்கத்து பெட்டிக் கடையில் சிகரெட் வாங்கிப் பற்றவைத்தான். யாருக்காகவோ காத்திருந்தான்.
ஆட்டோ வந்து அவனருகில் நின்றது. சேகர் ஆட்டோவிலிருந்து இறங்கி இவன் கையிலிருந்த சிகரெட்டை வாங்கி ஒரு பப் இழுத்தான். "எப்போ வந்த?"

"இப்போ தான். பட்டிக்காட்டான் போயிட்டானா?"

"பின்னங்கால் பிடதியில பட ஓடிட்டான். இன்னேரம் எங்க போயி நிக்கிறானோ?"

"சரி வா. சகா கடைக்குப் போகலாம்"

இருவரும் சகா கடைக்குள் நுழைந்தார்கள். அங்கே சகாவும் அமீரும் ஆளுக்கு ஒரு க்ளாஸ் கையிலேந்தி உட்கார்ந்திருந்தார்கள்.

"வாங்கடா. இன்னிக்கு நல்ல வேட்டை"


பின் குறிப்பு: இந்தக் கதை எந்த ஆங்கிலப் படத்தின் Inspiration என்று சரியாகச் சொல்பவர்களுக்கு தமிழிஷ் மற்றும் தமிழ் மணத்தில் பத்து ஓட்டுகள் போடப்படும்.

Wednesday, April 28, 2010

நாளை வெளியீடுநம் தங்கத் தலைவி தமன்னா நடிப்பில் மின்னும் 

சுறா 

திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியிடப் படுகிறது.


நம் மன்ற ரசிகக் கண்மணிகள் திரைப்படத்தை முதல் காட்சி பார்த்து தலைவி திரையில் தோன்றும் போது கைதட்டி விசிலடித்து ஆரவாரம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். மற்றபடி, கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம், பீராபிஷேகம் போன்றவைகளோ, திரைக்கு தீபாராதனை காட்டுவது போன்ற மடத்தனங்கள் செய்வது தலைவிக்குப் பிடிக்காது என்பதையும் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.


ஆமா படத்துல யாரோ விஜய்னு ஒரு டாக்டர் நடிச்சிருக்காராம்ல? அவரு மனுச டாக்டரா இல்ல மாட்டு டாக்டரா?

கனவு தேசம் - 3

பாகம் - 1
பாகம் - 2

அமெரிக்காவுக்கு வர என்ன என்ன விதமான விசாக்கள் இருக்கின்றன என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம்.

இப்போது விசாவை உங்கள் பாஸ்போர்ட்டில் பதிய அமெரிக்க தூதரகத்துக்குப் போகும்போது என்ன என்ன முன்னேற்பாடுகளோடு செல்ல வேண்டும் என்பதை பார்ப்போம்.

விருந்தினர் விசா, படிப்பு விசாவுக்கு செல்பவர்கள் தங்கள் பயணம் முடிந்ததும் இந்தியா திரும்பிவிடுவோம் என்ற எண்ணத்தை விசா வழங்கும் அதிகாரிக்கு உறுதிப்படுத்துமாறு ஆவணங்களை சமர்ப்பிப்பது மிகவும் முக்கியம். அதே போல விருந்தினர் விசாவில் அமெரிக்கா செல்ல இருப்பவர்கள் தங்கள் பிரயாணத்துக்கான செலவுகளுக்கு போதிய பணம் இருப்பதைக் காட்ட வேண்டும். நீங்கள் அமெரிக்கா சென்று அங்கேயே தங்கி விடுவீர்கள் என்ற எண்ணம் விசா அதிகாரிக்குத் தோன்றி விட்டால் உங்களுக்கு விசா வழங்க விசா கணேஷை விட்டால் வேறு வழியே இல்லை.

விருந்தினர் விசாவில் செல்பவர்கள் கையில் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள்
1. அமெரிக்காவில் இருக்கும் தங்கள் மகன்/மகள் வேலை பார்ப்பதற்கான அத்தாட்சிக் கடிதம் - அவர்களின் மாத வருமானத்துடன்
2. அவர்களின் வங்கி மூன்று மாத ஸ்டேட்மெண்ட்
3. பே ஸ்லிப்
4. உங்கள் சொத்து விபரம் - யாராவது ஆடிட்டரைப் பிடித்தால் நெட் வொர்த் சர்டிஃபிகேட் என்று ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளலாம்
5. நீங்கள் அரசு/தனியார் பணியில் இருப்பீர்களானால் அதற்கான அத்தாட்சி

ரிட்டயர்ட் ஆனவர்களை விட பணியில் இருப்பவர்களுக்கு விசா கிடைப்பது எளிது. உங்களுக்கு ஆங்கிலம் புரிந்து கொள்வீர்கள் ஆனால் பதில் பேசுவது கொஞ்சம் சிரமம் என்றால் கௌரவம் பார்க்காமல் தமிழில் அப்பாயிண்ட்மெண்ட் எடுத்துக்கொள்வது நல்லது. ஏனென்றால் சில கேள்விகளுக்கு பதில் தெரியாமல் விசாவை இழப்பது தவிர்க்க முடியாததாகிவிடும். உதாரணத்திற்கு, ஒருவரிடம் விசா ஆஃபிசர் கேட்டது - What is your daughter's immigration status? - இந்தக் கேள்விக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் இம்மிக்ரேசன் என்பதன் அர்த்தம் விளங்காவிட்டால் முழித்துக் கொண்டு நிற்க வேண்டியதுதான்.

உங்கள் மகன்/மகள் என்ன விசா ஸ்டேட்டஸில் இருக்கிறார்கள் என்பதை அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

வேலைக்கான விசா பதிய செல்பவர்கள் முக்கியமாக தங்கள் படிப்பு சம்மந்தமான அத்தனை ஆவணங்களையும் ஒரிஜினல் + 2 காப்பி எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். சில நேரம் அவர்கள் ஒரு செட் கேட்பார்கள். தங்கள் எம்ப்ளாயர் பற்றிய அத்தனை விபரங்களையும் தெளிவாகத் தெரிந்து கொண்டு செல்வது நல்லது.

தங்களின் தற்போதைய வேலையின் மூன்று மாத பே ஸ்லிப், கடந்த இரண்டு வருட வருமான வரி பதிந்த அத்தாட்சி - சரல் ஃபார்ம், கடந்த ஐந்து ஆண்டு வேலை பார்த்த எக்ஸ்பீரியன்ஸ் லெட்டர், ஆகியவற்றை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும்.

முதல் முறை விசா பதிய செல்பவர்களை சில நேரங்களில் டெக்னிக்கல் கேள்விகள் கேட்பதைப் பார்த்திருக்கிறேன்.

Dependent விசா பெறச் செல்பவர்கள் - மனைவி/கணவன் - தங்களின் திருமணப் பதிவு பத்திரம், திருமண அழைப்பிதழ், திருமண ஆல்பம் இவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். குழந்தைகள் - பிறப்புச் சான்றிதழ் எடுத்துச் செல்ல வேண்டும்.

இத்தனை ஆவணங்களை எடுத்துச் சென்றாலும், அத்தனை ஆவணங்களையும் சரி பார்ப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எந்த ஆவணத்தையும் பார்க்காமல் விசா அளிக்கவும் செய்யலாம், எல்லா ஆவணங்களையும் பார்த்தும் விசா அளிக்காமல் போகலாம். ஆக விசா கிடைப்பது அன்று அந்த விசா ஆஃபிசர் எந்த மூடில் இருக்கிறாரோ அதைப் பொறுத்ததே.

பொதுவாக தூதரகத்தில் எந்தக் கேள்வி கேட்டாலும் தயங்காமல் பதில் சொல்லுங்கள். தெளிவாகவும் சத்தமாகவும் தைரியமாகவும் பேசுங்கள். மென்று முழுங்கிப் பேசினால் வீண் சந்தேகங்கள் வந்து உங்கள் விசாவை பாதிக்கக் கூடும்.

சரி விசா வாங்கியாயிற்று. அடுத்தது பயணம்.

உங்கள் பெட்டிகளை செக்-இன் செய்த பின்பு எமிக்ரேஷன் க்ளியரன்ஸ் செய்ய வேண்டும். இந்திய அரசின் படிவம் ஒன்று இருக்கிறது. அதை நிரப்பி, அங்கே இருக்கும் அதிகாரிகளிடம் உங்கள் பாஸ்போர்ட்டையும் படிவத்தையும் ஒப்படைத்தால் அவர்கள் பாஸ்போர்ட்டில் நீங்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் நாளை ஸ்டாம்ப் செய்து விடுவார்கள். உங்கள் பாஸ்போர்ட் முடக்கப் பட்டதாகவோ இல்லை மார்க் செய்யப்பட்டதாகவோ இருந்தால் இந்த சோதனையை மீறி நீங்கள் வெளியேற முடியாது.

முட்டி வலி இருந்து நடக்க சிரமப் படுபவர்கள் கூச்சப்படாமல் சக்கர நாற்காலி உதவியை டிக்கெட் பெறும்போதே கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். ஏனென்றால் நடுவில் நீங்கள் ஐரோப்பா அல்லது மத்திய ஆசிய நாடுகளில் மாற்றம் செய்யும் போது கிட்டத்தட்ட 2 கி.மீ நடக்க வேண்டி இருக்கும். இரண்டு விமானங்களுக்கு இடையிலான நேரம் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஓட வேண்டியதிருக்கும்.

நீங்கள் அமெரிக்காவில் இறங்க வேண்டிய விமானத்தில் தரை இறங்க ஒரு மணி நேரம் இருக்கும் போது இரண்டு படிவங்களை உங்களுக்குத் தருவார்கள்
1. ஐ-94 படிவம்
2. கஸ்டம்ஸ் படிவம் (ஒரு குடும்பத்திற்கு ஒன்று)

இவற்றை எப்படி நிரப்புவது என்பதைத் தெரிந்து கொள்வது மிக மிக முக்கியம்.

அதில் அமெரிக்காவில் தங்கப் போகும் முகவரி என்ற இடத்தில் தெளிவான முகவரி முக்கியம். நீங்கள் ஏதாவது ஓட்டலில் தங்கப் போகிறீர்கள் என்றால் அந்த ஓட்டலின் முழு முகவரியையும் எழுத வேண்டும் - any good hotel - என்பது செல்லாது.

விசா வாங்கி, விமானத்தில் ஏறி விட்டால் அமெரிக்கா வந்து விடலாம் என்று நினைக்காதீர்கள். இங்கே இம்மிக்ரேசன் தான் மூன்றாவது மற்றும் மிக மிக முக்கியமான கண்டம். இதைத் தாண்டினால் தான் நீங்கள் அமெரிக்க மண்ணில் கால் பதிக்க முடியும்.

(பஞ்சதந்திரம் பட ஷூட்டிங்கிற்காக வந்த கமல்ஹாசனை உள்ளே விட மாட்டென் என்று சொன்னவர்களும், சமீபத்தில் ஷாருக்கானை ஒரு மணி நேரம் நிறுத்தி விசாரணை செய்தவர்களும் இதே இமிக்ரேஷன் ஆட்கள் தான்)

இங்கேயும் இம்மிக்ரேசன் அதிகாரி எந்த மூடில் இருக்கிறாரோ அதைப் பொறுத்தே உங்களுக்கு அனுமதி கிடைக்கும்.

பொதுவாக விருந்தினர் விசாவில் வருபவர்களுக்கு ஆறு மாதம் தங்கியிருக்க அனுமதி கிடைக்கும். (நீங்கள் கடந்த முறை வந்து திரும்பி ஒரு மாதத்துக்குள் வருவீர்களேயானால் ஒரு மாதமோ இரண்டு மாதமோ மட்டுமே கிடைக்கலாம். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் மறுபடியும் 6 மாதம் கிடைக்கலாம்).

படிப்பு விசாவில் வருபவர்கள் படிப்பு முடியும் வரை இருக்க அனுமதி வழங்கப்படும்.

வேலை விசாவில் வருபவர்களின் பெட்டிஷனில் என்ன முடிவு தேதி இருக்கிறதோ அது வரை தங்க அனுமதிக்கப் படுவர் (விசா எக்ஸ்பயரி தேதி அதற்கு முன்னமே இருந்தாலும்).

மறுபடியும் இம்மிக்ரேஷன் அதிகாரி கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் அளியுங்கள். சத்தமாகவும் தெளிவாகவும் தைரியமாகவும் பேசுங்கள். இங்கே நீங்கள் தமிழில் பேச வாய்ப்பில்லை. ஆங்கிலத்தில் தான் உரையாடியாக வேண்டும்.

உங்கள் பதில்கள் அதிகாரியைத் திருப்திப் படுத்தினால் பாஸ்போர்ட்டில் நீங்கள் நிரப்பிய ஐ-94 படிவத்தை தேதியிட்டு பின் செய்து தருவார் இம்மிக்ரேசன் அதிகாரி. அந்த படிவத்தில் இருக்கும் தேதி வரை நீங்கள் அமெரிக்காவில் இருக்க அனுமதி உண்டு. ஒரு வேளை அதற்கு மேல் இருக்க வேண்டியிருந்தால் எக்ஸ்டென்ஷனுக்கு விண்ணப்பிக்க வேண்டும். எக்ஸ்டென்ஷன் பெறாமல் நீங்கள் அதிக நாள் இருந்து இந்தியா திரும்பியிருந்தால் மறுபடி அமெரிக்கா வருவது கடினமாகிவிடும்.

இந்தப் படிவத்தைப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அமெரிக்காவை விட்டு வெளியேறும்போது அதை ஏர்வேஸ் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். நீங்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறிவிட்டீர்கள் என்பதற்கு அதுவே அத்தாட்சி. இதை ஒப்படைக்கத் தவறினால் அடுத்த முறை அமெரிக்கா வருவது சிரமமாகிவிடும்.

அடுத்த பதிவில் அமெரிக்காவில் இறங்கிய பின் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சொல்கிறேன்.

Monday, April 19, 2010

யார் காரணம்?

நம்ம வீட்டுக் குழாயத் திறந்தா தண்ணி சாக்கடைக் கலர்ல புழுவோட வருதுன்னா அதுக்கு யார் காரணம்? நம்ம வீட்டுக் குழாயா?

இல்ல...

ஊருக்கு வெளிய உயரத்துல ரெண்டு டேங்க் இருக்குது பாருங்க? வாட்டர் டேங்க். அதுதான் காரணம். அது சுத்தமா இல்ல. அதுனாலதான் நம்ம வீட்டுக் குழாயில சாக்கடையும் புழுவும் வருது.

அதுக்கு இப்போ நாம என்ன செய்யணும்?

எல்லாருமாச் சேந்து, விளக்கமாத்த எடுத்துக்கிட்டு மேல போயி, நல்லா அடி அடி அடி அடி அடின்னு அடிச்சி....

நான் டேங்க்க சுத்தம் பண்றதப் பத்தி சொல்றேன்..

அடிச்சி சுத்தம் பண்ணோம்னா, நம்ம குழாயில சாக்கடை வர்றது நின்னுடும்

செய்வோமா நாம?

(நன்றி: பாரதி கிருஷ்ணகுமார் - எப்போதோ மதுரை தமுக்கம் மைதானத்தில் த.மு.எ.ச கலை இரவில் பேசியது)

Friday, April 16, 2010

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்!

எண்பது வயதுக்கு மேற்பட்ட தனியொரு மூதாட்டியால் என்ன செய்துவிட முடியும்?

தீவிரவாதத்தைத் தூண்டிவிடுவாரா?

தன் கணவரின் மர்மமான மரணத்திற்கு ஒரு இனத்தையே பழிவாங்கிவிடுவாரா?

தேர்தலில் போட்டியிட்டு எம்.பி., எம்.எல்.ஏ ஆகிவிடுவாரா?

இவர் வருகையால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விடுமா?

மாநகரப் போக்குவரத்து ஸ்தம்பித்துவிடுமா?

போங்கய்யா நீங்களும் உங்க இறையாண்மையும்..

*********************

லீனா மணிமேகலை - நான் அவர் எழுதிய உலகின் அழகிய முதல் பெண் புத்தகம் படிக்கவில்லை. அந்த சர்ச்சைக்குரிய இரண்டு கவிதைகளை மட்டும் படித்தேன்.

அந்தக் கவிதைகளோடு எனக்கிருந்த கருத்து வேறுபாடு பற்றி இங்கே கதைக்க வரவில்லை.

ஒரு படைப்பாளியின் படைப்புச் சுதந்திரத்தை நேற்று முளைத்த ஒரு அமைப்பின் பெயரால் முடக்கிவிட முனையும் போது, சக படைப்பாளர்களாய் அந்த அடக்குறைக்கு எதிராக நம் எதிர்ப்புகளைப் பதிவு செய்ய வேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது.

அதற்காக ஏற்பாடு செய்யப் பட்ட ஒரு மேடையில் அந்தக் கவிதை குறித்தான விமர்சனங்களையும் விவாதங்களையும் எந்த முறையில் எடுத்து வைத்திருந்தாலும், அது அந்த மேடையின் நோக்கத்தை சிதைப்பதாகவே அமையும்.

ஒரு கருத்துக்காக குரல் கொடுக்கும் போது மக்கள் உங்கள் பக்கம் நிற்க வேண்டுமானால், அந்தக் கருத்து நியாயமானதாகவும் இருக்க வேண்டும், நீங்கள் குரல் கொடுக்கும் முறை மக்கள் முகம் சுளிக்குமளவுக்கு இல்லாமலும் இருத்தல் வேண்டும். இந்த இரண்டில் எதாவது ஒன்று இல்லாவிடினும் உங்கள் உழைப்பு வீண்.

மக்களைப் பின்னால் திரட்ட இயலாத எந்த ஒரு அமைப்பின் போராட்டமும் வீண் தான். இது அவர்களுக்குப் புரியாதா என்ன? இருந்தும் அப்படித்தான் இருப்பேன் என்றால் தீவிரவாதி முத்திரையைக் குத்தி விட்டு போய்க்கொண்டே இருப்பார்கள் உங்கள் எதிரிகள்.

Thursday, April 15, 2010

ஷங்கரின் கொலை வெறி..

ஒரே கரு பல முட்டைகள் அப்பிடின்னு நம்ம பலா பட்டறை ஷங்கர் ஒரு பதிவு போட்டுட்டு, அது மாதிரி தொடர வேற செய்யச் சொல்லிட்டாரு. என்னா ஒரு கொலை வெறி.

இதுல அவரே பல மாதிரி எழுதிட்டாரு. மிச்ச சொச்சம் இருக்கிறத மத்தவங்க எழுதனுமாம். அதுலயும் கொறஞ்சது மூணு மாதிரி எழுதனுமாம். நம்ம ஸ்டைல்ல இருக்கவே கூடாதாம்.

சரி முயற்சி செஞ்சி பாப்போமேன்னு ஆரம்பிச்சிட்டேன்..

கரு: ராணின்னு ஒரு பொண்ணு பிள்ளையார் கோவிலுக்குப்போய் சாமி கும்பிட்டுவிட்டு சூரத் தேங்காய் உடைச்சிட்டு குழந்தை பிறக்கனுமேன்னு வேண்டிகிட்டு, திரும்பி வீட்டுக்கு போறா


***


ABMமிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு திரும்பும் போது ராணி மேடம் கண்ணை மூடிக் கொண்டு எதோ முணுமுணுப்பது கேட்டது. அவர்களுக்குத் தெரியாமல் அருகில் சென்று கேட்ட போது ஏதோ சுலோகம் போல இருந்தது. 


என் முகத்தில் தெரிந்த ஆச்சரியத்தைப் பார்த்த பக்கத்து சீட் கல்பனா நான் நினைப்பதைப் புரிந்து கொண்டார்கள். “அது ஒண்ணுமில்ல அகிலா. அவங்களுக்கு கல்யாணம் ஆகி அஞ்சு வருசமாச்சி. இன்னும் குழந்தை இல்லை. அதான் எதாவது விரதம் இருக்கிறது, சுலோகம் சொல்றதுன்னு செஞ்சிக்கிட்டே இருப்பாங்க” என்றாள்.


குழந்தை இல்லாமலிருப்பது பெரும் குறைதான். மனதால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதை அறியாமல் சுற்றுப் புறமும் சொந்தங்களும் காயப்படுத்திப் பார்க்கும். குழந்தை இல்லாமல் போனதற்கு என்ன காரணமாய் இருக்கும்? டாக்டர் யாரையாவது பார்த்தார்களா தெரியவில்லை.


வேலைப் பளுவில் அதை மறந்தே போனேன்.


வெள்ளிக்கிழமை வேலை முடிந்ததும் ஹாஸ்டலுக்கு நடந்து போய்க் கொண்டிருந்தோம். அப்போது ராணி மேடம் கோவில் வாசலில் இருந்த கடையில் தேங்காய் வாங்கிக் கொண்டு நின்றிருந்தார்கள். கல்பனாவிடம் சொல்லிவிட்டு ஓட்டமும் நடையுமாகப் போய் ராணி மேடத்தின் முன்னால் நின்றேன். 


“ஹலோ மேடம். என்ன இந்தப் பக்கம்?”


“ஓ.. அகிலா. கோவிலுக்குப் போகலாம்னு..” என்று இழுத்தார். என் வரவை இடைஞ்சலாக நினைத்தாரோ என்னவோ. ஆனாலும், நான் விடவில்லை.


“நானும் கோவிலுக்குத் தான் வந்தேன் மேடம்” என்று அவரோடு சேர்ந்து நடந்தேன். இருவரும் சன்னிதி சுற்றி விட்டு அந்தக் கோவிலின் மூலையில் இருந்த பிள்ளையார் சன்னிதி முன் நின்றோம். கிட்டத்தட்ட பத்து நிமிடம் கண் மூடி வணங்கி விட்டு கையில் இருந்த தேங்காயை சிதறுகாய் போடும் தொட்டியில் அடித்து சிதறடித்தார். 


கோவில் மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்தோம். 


“என்ன மேடம். ஒரே பக்தியா இருக்கு?” என்று நான் கேட்டதுதான் தாமதம், மடை திறந்த வெள்ளம் போல என் தோளில் சாய்ந்து அழுது கொண்டே அத்தனைத் துயரத்தையும் கொட்டினார். நான் உம் கொட்டிக்கொண்டே இருந்தேன்.


கண்களைத் துடைத்துக் கொண்டு “சரி நேரமாயிருச்சி. பஸ் போயிரும்” என்ற அவரோடு நானும் பஸ் ஸ்டாப் வரை நடந்தேன்.


“மேடம் உங்க ஹஸ்பெண்டை டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போனீங்களா?” என்றேன். 


அதற்குள் அவர் பஸ் தூரத்தில் வந்து விட “இல்லை அகிலா. அவர் பாண்டிச்சேரியில வொர்க் பண்றார். வீட்டுக்கு வர்றதே மாசத்துல ரெண்டு நாள். இதுல எங்கருந்து டாக்டர் கிட்ட போறது?” என்று பஸ்ஸில் ஏற ஓடினார்.


நான் அவர் முதுகையே பார்த்துக் கொண்டிருந்தேன்.


****


“எலேய் கருப்பா.. நீ சொன்ன டீ வந்துருச்சிலே. இந்தா பிடி” என்று என்னிடம் டீயை நீட்டினான். என் கண்ணோ அங்கோ பஸ்ஸில் அமர்ந்திருந்த அவளையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தது. வடக்கூர்காரிகள் போல நல்ல நிறம். பார்துக்கிட்டெ இருக்கலாம் பொல. 


“டேய் டீயப் பிடிடா” சுயநினைவு வந்து டீயை வாங்கினேன். அதர்க்குள் பஸ் போய்விட்டது.


“என்னடா? நானும் போன வாரத்துல இருந்து பாக்குறென். நீ அந்த ஃபிகரயே பாக்க்குற”


“ஆமாண்டா மாப்ள. எனக்கு அந்தப் பொண்ணை ரொம்பப் பிடிசிருக்கு”


“அப்ப துண்டு போட்ற வேண்டியதுதன?”


போட்றவேண்டியதுதான்னு மனசுக்குள் நினைத்துக் கொண்டேன். இதுவரைக்கும் பல பெண்ட்களுக்கு துண்டு போட்டுஇருக்கிறேன். யரும் சீண்டியது கூட இல்லை. பத்தோடு பதினொன்னாக இதற்கும் போட்டுவிட வேண்டியதுதான்.


இன்னும் ரெண்டு மூனு நாலைக்கு அந்த பஸ்ல அவ டெய்லி வராளான்னு நோட்டம் விட்டேன். சில நாள் சுடிதார்ல வரா. சில நாள் சேலைல. ஆனா எதுல பாத்தாலும் வடக்கூர்க்காரி மாதிரிதான் தெரியிறா. ஒரு வேள வடக்கூர்க்காரியாவே இருந்து அவ பெசுற இந்தி நமக்குப் புரியாம நாம பேசுற தமிழ் அவளுக்குப் புரியாமப் போச்சின்னா? என்ன செய்யறதுன்னு ஒரு தயக்கமா இருந்தது.


அடுத்த நாள் காலேசுக்கு கட்டடிச்சிட்டு அவ போற பஸ்ல ஏறிட்டேன். அவ உக்காந்திருந்த சீட்டுக்கு பக்கத்துல போயி நின்னேன். அவலுக்குப் பக்கத்துல உக்காந்திருந்தவக் கிட்ட அவ பேசிக்கிட்டிருந்தா. நல்ல வேலை. தமிழ்லதான் பேசினா. 


அடுத்த ஸ்டாப்ல அவ இறங்கின. நானும் துண்டு போட்ரலாம்னு அவ பின்னாடியே இறங்கினேன். அவ நேரா அங்கிருந்த ஒரு கோவில் வாசல்ல இருக்கிற கடைல தேங்காப்பழம் வங்கினா. கோவிலுக்குள்ள போயி அங்கிருந்த பிள்ளயார் சன்னிதியை 21 தடவ சுத்தி வந்தா. அப்புறம் சுரத்தேங்காய் உடச்சா. 


அய்யர் உள்ள இருந்து கையில தீபாரதனைத் தடோட வந்தாரு. நான் போய் அவளுக்கு எதிர நின்னுக்கிட்டேன். 


“வாம்மா ரானி. ஆத்துல எல்லாரும் சௌக்கியமா?” அப்பிடின்னு அய்யர் கேட்டாரு. ஆகா அப்ப இவ பேரு ராணியா? 


அய்யர் குங்குமம் குடுக்கவும் அவ ஜாக்கெட்டுக்குள்ள இருந்து தாலிய எடுத்து அதுல குங்குமத்த வச்சிக்கிட்டா. எனக்குள்ள எதோ வெடிக்கிற சத்தம் கேட்டுச்சி.


கடைசியில் இவளும் என் துண்டை தாண்டிப் போனாள்..


****


தோழி பிள்ளையார் முன் தேங்காயை உடைத்தாள். “சுமக்க முடியவில்லையா?” என்றேன். “சுமக்கத்தான் உடைத்தேன்” என்றாள்.


****


அப்பாடி. ஒரு வழியா மூணு மாதிரி எழுதிட்டேன். இந்த சவாலுக்கு அடுத்ததா நான் அழைக்கிறது - சாரு சங்கர்.

Saturday, April 10, 2010

எனக்குப் பிடித்த 10 தமிழ்ப் படங்கள்

நண்பர் கார்த்திகைப் பாண்டியன் பிடித்த 10 தமிழ்ப் படங்கள் என்று எழுத அழைத்திருந்தார்.


விதி: 
1. தமிழ்ப் படங்கள் மட்டுமே
2. குறைந்த பட்சம் எடுத்த வரைக்கும் திருட்டி டிவிடியாவது வந்திருக்க வேண்டும்.
3. அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் அனுமதி இல்லை (நியூ உட்பட)


நான் ரஜினி ரசிகன். கிட்டத்தட்ட ரஜினி நடித்த அத்தனைப் படங்களையும் பிடிக்கும். கமல் நடித்ததிலும் ஒன்றிரண்டு தேறும். பாலா இயக்கிய படங்களையும் எனக்குப் பிடிக்கும். இதில் 10 படங்கள் மட்டும் எப்படித் தேர்வு செய்வது என்று கடந்த இரண்டு நாட்களாக மூளையைக்(??!!) கசக்கிப் பிழிந்து ஒரு வழியாக தேர்வு செய்துவிட்டேன்.


ரஜினி "நடித்ததில்" பிடித்தது:
1. முள்ளும் மலரும்


பொதுவாக நம் தமிழ்நாட்டில் ஒரு கலாச்சாரம் இருக்கிறது. ராஜா ரசிகர்களைப் பொறுத்தவரை ஏ.ஆர்.ரகுமானுக்கு இசை அமைக்கவே தெரியாது, தாதா ரசிகர்களுக்கு சச்சின் சுயநலமாக ஆடுபவர், விஜய் ரசிகர்களுக்கு அஜித் படமெல்லாம் ஃப்ளாப், இந்த வரிசையில் கமல் ரசிகர்களுக்கு ரஜினிக்கு நடிக்கவே தெரியாது.


ரஜினி தான் எவ்வளவு சிறந்த குணசித்திர(இந்த வார்த்தைக்கு என்னாதுங்க அர்த்தம்) என்று நிரூபித்தத் திரைப்படம் இது.


மகேந்திரன் ஒரு வகையில் தமிழ் சினிமாவில் ட்ரெண்ட் செட்டெர். இவர் சினிமா எடுக்கும் வரை தமிழ் சினிமாவில் வசனம் என்பது மிகவும் முக்கியமான சாதனம். வசனத்தின் மூலமாக மட்டுமே காட்சியின் சூழலை விளக்கிக் கொண்டிருப்பார்கள். காரணம் பல இயக்குநர்களும் (ஸ்ரீதர், பாலச்சந்தர்) பல நடிகர்களும் (சிவாஜி, எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா, கமல்) நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர்கள். நாடகத்தில் முகத்தில் காட்டும் உணர்ச்சிகள் கடைசி வரிசையில் அமர்ந்து பார்க்கும் ரசிகனுக்குத் தெரியாது. ஆகவே ஏற்ற இறக்கமான வசனங்கள் மூலம் காட்சியை விளக்க வேண்டிய கட்டாயம். ஆனால் சினிமா என்ற “மூவி”யில் வசனம் இல்லாமலே காட்சியை விளக்கலாம் என்பதை தமிழில் முதலில் உபயோகித்தவர் மகேந்திரன் எனலாம்.


வசனமே இல்லாமல் இந்தப் படத்தில் இவர் வைத்த கிளைமேக்ஸ் காட்சியும், அந்தக் காட்சியில் இளையராஜாவின் இசையும்.. திருமணத்துக்காக சரத்பாபு குழுவினரோடு நடக்க ஆரம்பிக்கும் ஷோபா திரும்பி ஓடி வந்து அண்ணனைக் கட்டிக் கொண்டு அழவும், ஷோபாவின் தோளில் கை போட்டுக் கொண்டு ரஜினி சரத்தைப் பார்ப்பார் பாருங்கள் ஒரு பார்வை.


எனக்கு இந்தப் படத்தில் பிடித்த காட்சி:
எஞ்சினியர் சரத் பாபு ரஜினியின் ஒரு கை போனதால் இனி வேலை பார்க்க முடியாது என்று சொல்லும் காட்சி.
“ரெண்டு கை ரெண்டு காலு போனாலும் இந்தக் காளி பொழச்சுக்குவான் சார். கெட்ட பய சார் இவன்” என்று தெனாவட்டாகச் சொல்லிவிட்டு, மோட்டு வளையைப் பார்ப்பார். அந்தப் பார்வையில் இனி எப்படி பிழைக்கப் போகிறோம்? தங்கையை எப்படி பட்டினி போடாமல் காப்பாற்றப் போகிறோம் என்ற கவலை வருத்தம் என உணர்ச்சிகள் தாண்டவமாடும். ரஜினி இஸ் கிரேட்.


கமல் நடித்ததில் பிடித்தது:
2. அன்பே சிவம்


எனக்குக் கமல் என்ற நடிகனின் மீது பல விமர்சனங்கள் உண்டு. எந்த ஒரு திரைப்படத்திலும் கமல் அந்தப் பாத்திரமாக மாறுவதே இல்லை. எங்காவது கமல் என்ற மனிதர் வெளியே தெரிந்து விடுவார். ஒரு சில படங்களே இதற்கு விதிவிலக்கு. அதில் எனக்குப் பிடித்த படம் அன்பே சிவம்.


சாதாரணமாக கமல் தன் படங்களில் மற்ற நடிகர்களை டாமினேட் செய்வதில் வல்லவர். இந்தப் படத்தில் மாதவன் பல காட்சிகளில் கமலை டாமினேட் செய்திருப்பார்.


எனக்குப் பிடித்த காட்சி:
ஹோட்டல் அறையில் தங்கியிருக்கும் காட்சியில் கமல் தரையில் படுத்திருப்பார். மாதவன் மெத்தையில் படுத்திருப்பார். இருவரும் சுனாமி பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். அந்தக் காட்சியில் கமலின் வலது கால் இடது காலை விட குட்டையாக இருக்கும் வண்ணம் காலை இழுத்து வைத்து நடித்திருப்பார். படத்தில் தன் கால் குட்டை என்பதை பின்னால் ஒரு காட்சியில் தான் கமல் சொல்வார். இந்த சிரத்தை கமலிடம் எனக்குப் பிடித்தது.
எனக்குப் பிடித்த “ரஜினி” படம்.
3. பாட்சா


ரஜினி சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற பிறகு மசாலா/ஸ்டைலிஷ் படங்களில் மட்டுமே நடிப்பதை செய்ய ஆரம்பித்து விட்டார். அப்படி வந்த ஸ்டைலிஷ் படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது பாட்சா. இந்தப் படத்தை ரஜினியைத் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் படம் ஓடியிருக்காது.


எனக்குப் பிடித்த காட்சி:
ரஜினியின் தங்கையை மானபங்கப் படுத்த ரவுடி ஆனந்தராஜ் இழுத்து வருவார். ரஜினி குறுக்கே சென்று தங்கையை பிடிப்பார். அப்போது ஆனந்தராஜின் ஆட்களில் ஒருவர் ரஜினியைத் தாக்க ஓடி வருவார். அப்போது ரஜினி அவரை அடித்ததும் அவர் பறந்து போய் மின் கம்பத்தில் விழ அந்தக் கம்பத்திலிருந்து தீப்பொறி தெறித்து விழும். இது 100% நம்பவே முடியாத நிகழ்வு என்ற போதிலும் அந்தக் காட்சியைத் திரையில் பார்க்கும்போது புல்லரிப்பதை என்னால் தடுக்கவே முடியாது.


எனக்குப் பிடித்த காமெடி படம்
4. பஞ்சதந்திரம்


இதுவரை நான் பார்த்த படங்களில் முழு நீள நகைச்சுவைப் படம் எது என்று கேட்டால் நான் இந்தப் படத்தைத்தான் சொல்வேன். படத்தில் ஆரம்பம் முதல் கடைசி வரை ஒவ்வொரு வசனத்துக்கும் சிரித்துக் கொண்டே இருக்கலாம். கிரேசி மோகன் தன் வார்த்தை விளையாட்டால் கலக்கியிருப்பார். சிரித்துக் கொண்டே இருப்பதால் அடுத்தடுத்த வரிகளில் வரும் நகைச்சுவையை தவற விட்டுவிடுவோம். 


இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி 
பெங்களூரில் இருந்து திரும்பி வரும்போது செக் போஸ்டில் போலீஸ் இவர்களின் காரை மறிக்கும் காட்சி. பின்னாடி, முன்னாடி என்று விளையாடியிருப்பார்கள். கொஞ்சம் கடி ஜோக் மாதிரி தெரிந்தாலும் இதுதான் எனக்கு மிகவும் பிடித்த காட்சி. 


என்னைக் கலங்கடித்த படம்
5. சேது


மதுரையில் படித்துக் கொண்டிருந்த போது வெளிவந்த படம். சினிப்பிரியா தியேட்டரில் இரவுக் காட்சிக்கு டிக்கெட் கிடைக்காமல் ப்ளாக்கில் வாங்கி நானும் என் நண்பன் ஒருவனும் பார்த்தோம். 


வழக்கமாக படம் முடிந்து கூட்டம் கலையும்போது சளசளவென பேசிக் கொண்டே செல்வார்கள். இந்தப் படம் முடிந்து வரும் போது எனக்கு மனம் கனத்துப் போயிருந்தது. என்னைப் போலவே யாருமே பேசிக் கொள்ளாமல் கலைந்து போய்க் கொண்டிருந்தனர். நானும் என் நண்பனும் டூ வீலரில் சினிப்ரியாவில் இருந்து காமராஜர் யுனிவர்சிட்டி ஹாஸ்டல் வந்து சேரும் வரை ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை. 


எனக்கு மிகவும் பிடித்த காட்சி:
ஹால் டிக்கெட் தொலைந்து போனதால் பரிச்சை எழுத விட மாட்டார்கள் என்று சீயானிடம் வந்து அபியும் அவள் தோழியும் புகார் செய்யும் காட்சி. அதில் விக்ரம் பேசும் தத்துபித்து இங்க்லீஷும் அதை பெருமையுடன் பார்க்கும் அண்ணியும் கலக்கியெடுத்திருப்பார்கள்.


எனக்குப் பிடித்த திகில் படம்
6. யாவரும் நலம்


தமிழில் பல திகில்/பேய் படங்கள் பார்த்துள்ளேன். சிறு வயதில் மை டியர் லிசா பார்த்து பல நாள் தூங்காமல் இருந்திருக்கிறேன். ஆனால் அது எல்லாம் செய்யாத ஒன்றை இந்தப் படம் செய்தது. பேய் என்ற ஒன்றை விகாரமான உருவங்களின் மூலம் காட்டாமல் வெறும் டிவி, பல்பு எரிவது, சாமி படத்துக்கு ஆணி அடிக்க முடியாமல் போவது ஆகியவற்றை வைத்தே படம் காட்டியிருப்பார்கள். அதே போல திடுதிப்பென்று நம்ப முடியாமல் ஒரு திருப்பத்தைக் கொண்டு வந்தோ இல்லை சம்மந்தமில்லாமல் முடிச்சை அவிழ்க்கவோ செய்யாமல் சின்னச் சின்ன க்ளூவாக கொடுத்துக் கொண்டே வந்து கடைசியில் முடிச்சை அவிழ்ப்பது அருமையாக இருக்கும். நீங்கள் படத்தை ஒரு முறை பார்த்தவராக இருந்தால் மறுபடி ஒரு முறை பாருங்கள். அவர்கள் விட்டு வரும் க்ளூக்கள் உங்களுக்கு தெளிவாகத் தெரியும். நீங்களே ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று சேர்க்க முடியும்.


எனக்குப் பிடித்த காட்சி: 
தன்னால்தான் தன் குடும்பத்துக்கு ஆபத்து என்று பயந்து டாக்டர் வீட்டில் ஒரு அறையில் பூட்டிக் கொண்டு இருக்கும் மாதவன் டாக்டர் தான் குற்றவாளியாக இருக்கலாம் என்பதைக் கண்டுபிடிக்கும் காட்சி.


எனக்குப் பிடித்த “காதல்” படம்
7. காதல்


இந்தப் படம் தமிழில் இன்னொரு மைல் கல். இந்தப் படத்திற்குப் பிறகு மதுரைத் தமிழில் படம் எடுத்தால் ஓடி விடும் என்று எண்ணி மதுரைத் தமிழ் பேசும் படங்களாக வரிசைக் கட்டி வந்தது. 


சிறு வயதில் ஏற்படும் காதலுக்கு மறுப்பு வந்தால் மதத்தையும் குடும்பத்தையும் விட்டு விட்டு ஓடி போங்கள் என்று அலைகள் ஓய்வதில்லையில் பாரதிராஜா(மணிவண்ணன்?) சொன்னார். அப்படி ஓடிப்போனால் என்ன என்ன சிரமங்கள் நேரும் என்பதை பாலாஜி சக்திவேல் இந்தப் படத்தில் எடுத்துக் காட்டினார். 


அந்த ஜோடிகள் மேன்சனில் தங்கியிருக்கும் நண்பனை நம்பி வந்து நடுத் தெருவில் நிற்பதும். இரவு தங்க இடம் இல்லாமல் நைட் ஷோ படம் பார்த்து விட்டு திண்டிவனம் வரை பஸ்ஸில் சென்று திரும்புவதும், ஒவ்வொரு காட்சியிலும் அய்யோ இந்த ஜோடிக்கு ஒன்றும் நேர்ந்துவிடக்கூடாதே என்று பார்ப்பவர்களைப் பதைபதைக்க வைக்கும் படம். 


எனக்குப் பிடித்த காட்சி:
இருவரையும் சுமோவில் அழைத்து வரும்போது சித்தப்பா முருகனிடம் கேள்வி கேட்கும் காட்சி. ஆரம்பத்தில் இருந்து நல்லவர் போல வரும் இந்தச் சித்தப்பா, ஒவ்வொருவரிடமும் தகுந்த முறையில் பேசி விசயத்தை வாங்கும் இந்தச் சித்தப்பா மதுரை நெருங்க நெருங்க அவர் கேள்வி கேட்கும் தொனி மாறி முருகனை அடிக்க ஆரம்பிக்கும் போது பார்க்கும் நமக்கு அடி வயிற்றில் எதோ கலக்கம் ஏற்படும்.


எனக்குப் பிடித்த “குழந்தைகள்” படம்
8. பசங்க


அஞ்சலி படத்துக்குப் பிறகு தமிழில் சிறுவர்களுக்கான ஒரு படம் இல்லாமலேயிருந்தது. பெரியவர்களுக்கான படங்களையே நெளிந்துகொண்டே சிறுவர்களுக்கும் போட்டுக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். சிறுவர்களைக் கொண்டே பெரியவர்களுக்கும் மெசேஜ் வைத்திருந்தார் பாண்டியராஜ். 


ஒரு சில சினிமாட்டிக் க்ளீஷேக்களைத் தவிர்த்துப் பார்த்தால் இந்தப் படம் தமிழில் ஒரு ஆகச் சிறந்த படம். 


எனக்குப் பிடித்த காட்சி:
கணக்கு வாத்தியாரும் அன்புக்கரசுவின் அப்பாவும் படிக்கட்டில் அமர்ந்து பேசும் காட்சி. இந்தக் காட்சியின் ஒவ்வொரு வசனமும் பெற்றோர்களுக்குப் பாடம்.


எனக்குப் பிடித்த பீரியட் படம்
9. சுப்பிரமணியபுரம்


காதலுக்காக உயிரையே தியாகம் செய்யும் காதலர்களையும், நட்புக்காக எதையும் கொடுக்கும் நண்பர்களையும் பார்த்து வந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு காதலி செய்யும் துரோகமும், நண்பன் செய்யும் துரோகமும் பளிச்சென்று முகத்தில் அறையும் படம். 


1980களில் நடந்ததாகக் காட்டுவதற்காக சில்வர் கலர் பெயிண்ட் அடித்த பஸ்ஸிலிருந்து வீடுகளில் மாடல், இளையராஜா பாட்டு, வயர் பின்னிய சோபா செட், வீடியோவில் பாட்டு என்று மெனக்கிட்டிருப்பார்கள். 


ஜில்லென்று ஒரு காதல் படத்தில் ஜோதிகா சூர்யாவின் டைரியைப் படிப்பார். ஆறு வருடத்துக்கு முன்பு தன் கணவன் காதலித்த பெண்ணைப் பற்றி அதில் இருக்கும். உடனே ஃப்ளாஷ் பேக். ஆறு வருடத்துக்கு முன்னால் கோவையில் எஞ்சினியரிங் படிக்கும் சூர்யா ஓட்டுவது டி.வி.எஸ் ஸ்டார் சிட்டி மோட்டார் பைக். இப்படி லாஜிக்கில் ஓட்டை என்பதை விட லாஜிக்கையே ஓட்டையாகக் கொண்டு படம் எடுக்கும் தமிழ் சினிமா உலகில் பீரியட் படத்துக்காக மெனக்கெட்டிருந்த காரணத்துக்காகவே எனக்கு இந்தப் படம் மிகவும் பிடித்த படம்.


எனக்குப் பிடித்த காட்சி:
காதலியைப் பார்க்க சென்று விட்டுத் திரும்பும் ஜெய்யையும் கஞ்சா கருப்புவையும் எதிரிகள் விரட்டும் போது ஒரு வீட்டுக்குள் ஒளிந்து கொண்டு அங்கே இருக்கும் பெண்ணின் காலில் விழுந்து கெஞ்சும் காட்சி. அப்போது ஜெய்யின் கண்களில் மரண பயத்தைப் பார்க்கலாம்.


எனக்குப் பிடித்த “தோல்வி”ப் படம்
10. வெயில்


இந்தப் படம் விருதுநகரைச் சுற்றி வந்ததாலோ என்னவோ எனக்கு மிகவும் பிடிக்கும். வெற்றி பெற்ற மனிதர்களையே படங்களில் பார்த்து வந்த நமக்கு தோல்வியை மட்டுமே பார்த்த ஒரு மனிதனின் வாழ்க்கையைப் படமாக்கித் தந்திருப்பார் வசந்த பாலன். 


வெயிலோடு விளையாடி பாடல் விருதுநகர் மாவட்டத்தில் கழித்த என் சிறுவயது நினைவுகளை தாலாட்டிச் சென்றது. ஆனாலும் படத்தில் வன்முறை சற்றே அதிகம் தான். அம்மாவே தான் திருடியிருப்பேன் என்று சந்தேகப் பட்டதும் வெளியேறும் முருகேசன், “அண்ணே எங்கம்மா?” என்று பரத் கேட்கவும் “இங்க தாம்பா இருந்துச்சி” என்று அம்மா பதில் சொல்லும்போது மாலை வெயில் முகத்தில் அடிக்க கையில் மஞ்சப் பையோடு முருகேசன் நடந்து செல்லும் போதே எ ஃபில்ம் பை வசந்த பாலன் என்று போட்டிருக்கலாம் (நன்றி: தர்ஷன்). அதற்குப் பிறகும் சண்டையை இழுத்து முருகேசனை சாகடித்து தியாகியாக்கியிருக்கத் தேவையில்லை.


எனக்குப் பிடித்த காட்சி:
விருதுநகர் பஸ்டாண்ட் அருகில் இருக்கும் டீக்கடையில் நின்று கொண்டிருப்பார் முருகேசன். அப்போது தன் சொந்தத் தம்பி பரத் அந்தப் பக்கம் பைக்கில் வருவார். அவரது நண்பன் பரத்தை நிறுத்தி பேசிக் கொண்டிருப்பார். தம்பி என்று தெரிந்ததும் அவரிடம் சென்று அவரைப் பற்றி விசாரிப்பார். “நீங்க யாருண்ணே?” என்று பரத் திரும்பத் திரும்பக் கேட்டதும், தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பது போல திக்கித் திணறி “அண்ணன்டா” என்று முருகேசன் சொல்லும் அந்தக் காட்சி. 


தொடர நான் அழைப்பது


1. வானம்பாடிகள்
2. சிங்கை சிங்கம் பிரபாகர்
3. விசா பக்கங்கள் 
4. பலா பட்டறை ஷங்கர்
5. நர்சிம் (தொடர் பதிவுகளை தொடர மாட்டார் என்று கேள்வி, இருந்தாலும்...)
6. கேபிள் சங்கர் 
7. ஜெய்லானி

Thursday, April 8, 2010

சங்கம் / மன்றம்

அப்பல்லாம் காலேஜ் காலைல 8:50க்குத் தொடங்கி மதியம் 1:35ஓட முடிஞ்சிரும். அன்னிக்கி மதியம் ஸ்பெஷல் க்ளாஸ் எதுவும் இல்லை. அதுனால அவசரம் அவசரமா மத்தியான சோத்தைக் கொட்டிக்கிட்டு வேக வேகமா சைக்கிள் மிதிச்சி கோமதி தியேட்டர் வாசல்ல நிக்கும் போதே மணி 2:30 ஆகிடுச்சி. வார நாள்ல மத்தியான காட்சிங்கிறதால கூட்டமே இல்லை. டிக்கெட் வாங்கிக்கிட்டு உள்ள போய் இருட்டுல தடவித் தடவி சேர்ல உக்காந்தா, படம் போட்டுட்டாங்க.

கொஞ்ச நேரம் விஜயையும் புதுப்பையன் சூர்யாவையும் கிண்டல்வுட்டுக்கிட்டே பாத்துக்கிட்டிருந்தோம். அப்ப வந்துச்சிங்க அந்தப் பாட்டு.. “மனம் விரும்புதே உன்னை.. உன்னை..” அந்த வரி முடிஞ்சதும்  இடுப்பை ஒரு வெட்டு வெட்டினாங்க பாருங்க.. 

அப்பவே எழுந்து போயி தியேட்டர் ஓனர்கிட்ட இன்னொரு பத்து ரூபா குடுத்துட்டு வரலாம் போல இருந்தது. பின்ன என்னங்க? குடுத்த டிக்கெட் காசெல்லாம் அந்த இடுப்பு வெட்டுக்கே சரியாப் போச்சி. மீதி படத்த ஓசியில பாக்க மனசு வரல. 

அப்ப இருந்து நாம சிம்ரன் ஃபேன் தானுங்க. சிம்ரன் நடிச்ச படம் ஒண்ணு விடாம பாத்துருவோம்ங்க. சிம்ரன் நடிச்சாங்கங்கிற ஒரே காரணத்துக்காக டைம் அப்பிடிங்கிற மொக்கைப் படத்தையெல்லாம் பொறுமையா பாத்தோம்ங்க. 

நம்ம தங்கமணிக்கு இந்த காரணத்தாலயே சிம்ரனைப் பிடிக்காதுங்க. எப்பப்பாரு நெட்டி முறிக்கிற மாதிரி ரெண்டு கையயும் தூக்கி இடுப்பை ஆட்டிக்கிட்டே ஆடுது. கேட்டா டான்ஸுங்குதுன்னு கேலி செஞ்சிட்டே இருப்பாங்க. தங்கமணியை விட்டுத் தள்ளுங்க. 

தலைவிக்கு திடுதிப்புன்னு கல்யாணம் ஆனதும் அவங்க ஃபீல்ட் அவுட்டானதும் ரொம்ப கவலையாப் போச்சி. அன்னிக்கி இருந்து நம்ம மனசுல தலைவி குடி இருந்த இடம் காலியாவே இருந்ததுங்க.

அயன் பாத்தப்போவே தோணிச்சிங்க. கண்டேன் காதலை பாத்ததுமே செஞ்சிருக்கணுமுங்க. இப்ப பையா பாத்தப்புறமும் நான் செய்யலைன்னா அப்புறம் செத்துப்போன ஷோபா, சிலுக்கு, விஜி, மோனல் ஆவியெல்லாம் நம்மளச் சும்மா வுடாதுங்க. 

முடிவு பண்ணிட்டேங்க. சிம்ரன் விட்டுட்டுப் போன இடத்தை தமன்னாவுக்குக் குடுக்கலாம்னு. அதோட மட்டும் இல்லாம ஒரு படி மேலயே போயிட்டேனுங்க. அது என்னான்னு கேக்குறீங்களா? கீழ பாருங்க.

அகில உலக தமன்னா ரசிகர் மன்றம்

சர்வதேசக் கிளை

தலைவர், செயலாளர், பொருளாளர்: இப்போதைக்கு நாம மட்டுந்தாங்க. பின்னால நம்ம மக்கள் யாராவது சேர்றதப் பொறுத்து பங்கு பிரிச்சிக்குவோமுங்க.
கண்டிப்பா கிரிக்கெட்டுக்கு தனி வலைப்பூ ஆரம்பிச்ச மாதிரி இவங்களுக்கு ஆரம்பிக்க மாட்டேங்க. இங்கயே தான் அப்பப்ப எழுதி உங்களை எல்லாம் தொல்லை பண்ணுவேனுங்க.

பின் குறிப்பு: சங்கத்துல.. ச்சீ மன்றத்துல இணைய விரும்புறவங்க எல்லாம் பின்னூட்டுங்க.

ஷாப்பிங் போலாம் வர்றீங்களா?

சென்னையில் நான் மிகக் குறுகிய காலமே வாசம் புரிந்திருக்கிறேன்.

என் தங்கமணி அப்போது எனக்கு நெருங்கிய நண்பர்(நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர். அப்போது காதலி ஆகவில்லை). அவரும் நானும் சென்னையில் இறுதிவருட ப்ராஜெக்ட் செய்வதற்காக வந்திருந்தோம். ஒரு முறை தங்கமணியின் பெற்றோர் அவரைப் பார்ப்பதற்காக சென்னை வந்திருந்தனர். 

சென்னை வந்த பின் என்ன செய்வார்கள்? மகளை அழைத்துக் கொண்டு ஷாப்பிங் செய்யலாம் என்று கிளம்பினர். என் கெட்ட நேரம் நானும் அவர்களோடு அழைத்து, மன்னிக்கவும் இழுத்துச் செல்லப்பட்டேன். 

மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கி நடைப்பாலம் ஏறி அந்தப் பக்கம் வந்து இறங்கினால் ரங்கநாதன் தெரு. பாலத்திலிருந்து படிகளில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்களுக்கு காசு எதுவும் போடாமல் கீழே இறங்கி வந்தால் நேராக ஒரு ஓட்டல் இருக்கும். அந்த ஓட்டலின் வாசலில் கோன் ஐஸ் விற்பார்கள். அதிலிருந்து நான்கு கடைகள் தள்ளி இருந்த ஒரு ஜவுளிக் கடையில் ஆரம்பித்தார்கள்.

அந்தச் சுடிதார் எடுத்துப் போடுங்க. இந்தச் சுடிதார் எடுத்துப் போடுங்க, என்று கிட்டத்தட்ட கடையில் இருக்கும் அத்தனை சுடிதார்களும் எங்கள் முன் பரப்பப்பட்டு இருந்தன. ஒரு சுடிதாரை எடுத்து மகளின் மீது வைத்து அழகு பார்ப்பார். “இது நல்லாருக்குல்ல அத்தான்?” என்று கணவரிடம் ஒரு கேள்வி. அவர் மையமாகத் தலையசைப்பார். “சரி இருக்கட்டும்”. 

மேலே சொன்னது கிட்டத்தட்ட அனைத்துக் கடைகளிலும். இப்படி அங்கே ஆரம்பித்து ஒரு ஜவுளிக்கடை விடாமல் புகுந்து வெளியேறி கடைசியாக நாங்கள் நிலை கொண்டது போத்தீஸ். இதுவரை ஒரு கர்ச்சீஃப் கூட வாங்கவில்லை.

கடைசியாக போத்தீஸ்ஸில் துணி வகைகள் எடுத்துக் கொண்டு திரும்பினோம். நான் தங்கமணியிடம் கேட்ட கேள்வி - “இதுக்கு முதல்லயே போத்தீஸ் வந்திருக்கலாமே?”. அவர் பதில் “அதெப்படி? வேற எங்கயாவது நல்ல சுடிதார் இருந்து அதை மிஸ் பண்ணியிருந்தா?”

இதில் நாங்கள் அந்த ஒரு கடைக்குள் மட்டும் நுழையவில்லை. என் இப்போதைய மாமனாருக்கு அங்கே போகாதது ஒரு பெரிய குறை. என் இன்னாள் மாமியாருக்கோ அங்கு இருக்கும் கூட்டத்தைப் பார்த்தாலே அலர்ஜி. அதோடு அவர்கள் மிகவும் குறைந்த விலையில் பொருட்களை விற்பதால் அந்தப் பொருட்களின் தரத்தின் மீதும் சந்தேகம். அதனால் அவர் அந்தக் கடைக்குள் நுழையவில்லை.

என் மாமனார் அந்தக் கடை உரிமையாளருடன் தனக்கிருந்த நட்பைப் பற்றியும் அவர் எவ்வளவு சிறிய கடையாக ஆரம்பித்து பெரிய ஸ்தாபனமாக வளரச் செய்தார் என்பதைப் பற்றியும் சிலாகித்துக் கொண்டே வந்தார். 

என்னதான் முயற்சி செய்தாலும் குறுகிய காலத்தில் இப்படி ஒரு அசுர வளர்ச்சி என்பது என்னை ஆச்சரியப்படுத்தும் ஒரு விசயம். பொருட்களின் தரத்திலோ இல்லை வேறு எதாவது கோல்மாலோ இல்லாமல் எப்படி இவர்களால் இப்படி ஒரு வளர்ச்சியை எட்ட முடியும்?

நான் சில முறை அந்தக் கடைக்குள் நுழைந்திருக்கிறேன். அந்தக் கடை தவிர வேறு கடைகளில் வியாபாரம் செய்யும் அளவுக்கு என்னிடம் பணமில்லாத பொழுது. குறைந்த விலைக்காக அங்கு கிடைக்கும் மட்டமான கஸ்டமர் சர்வீஸை சகித்துக் கொண்டிருந்திருக்கிறேன். எனக்கொன்றும் ஓசியில் கொடுக்கவில்லையே? குறைந்த விலையேயானாலும் என் கைக்காசைப் போட்டுத்தானே வாங்குகிறேன். பின் எதற்கு இப்படி ஒரு கேவலமான பார்வை? சுள்ளென்று எரிந்து விழும் பணியாளர்கள்? 

போத்தீஸிலும் ஆர்.எம்.கே.வியிலும் வாங்கும் அளவுக்கு என் நிலை உயர்ந்ததும் கஸ்டமர் சர்வீஸ் என்ற ஒரே காரணத்துக்காக சரவணா ஸ்டோர்ஸுக்குள் நுழைவதை தவிர்த்திருக்கிறேன். 

மேலே சொன்ன கேள்விகள் அனைத்துக்கும் விடை சொன்னது அங்காடித்தெரு.

சில பல மிகைப் படுத்தப்பட்ட காட்சிகள் இருந்தாலும் அந்தக் கடைகளில் கஷ்டப்படும் தென் தமிழக இளைஞர்களின் வாழ்க்கை முறையை படம் எடுத்துக் காட்டிய வசந்த பாலனுக்கு நன்றி. இனி அந்தக் கடைகளின் பக்கம் செல்லும் யாருக்கும் அங்காடித்தெரு நினைவுக்கு வராமல் போகாது.


இது மாதிரி படங்களுக்கு குறைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு நம் முழு ஆதரவையும் அளிக்க வேண்டும்.

அனைவரும் இந்தப் படத்தை ஒரு முறையாவது பாருங்கள். 


அடுத்த முறை நான் ரங்கநாதன் தெருவுக்குப் போனாலும் அந்தக் கடைக்குள் நுழைய மாட்டேன். இந்த முறை காரணம் மட்டமான கஸ்டமர் சர்வீஸ் இல்லை. அந்தக் கடைகளை புறக்கணிப்பதன் மூலம் அவர்களுக்கு ஒரு விடிவு காலம் வராதா என்ற ஒரு குருட்டு நம்பிக்கை தான்.