Thursday, December 31, 2009

பை பை 2009

தனிப்பட்ட முறையில் 2009 மகிழ்ச்சியும் சோகமும் கலந்தடித்த வருடம்.

வருடத்தின் மகிழ்ச்சியான கணங்கள் முதலில்

2008ஐ சந்தோசத்தோடு முடித்தும் புது வருடத்தை சந்தோசத்தோடு துவங்கியும் வைத்த புது உறுப்பினர் வருகை.

ஆஸ்கார் மேடையில் தமிழ் கேட்ட கணம் கண்களில் நீர் வழிந்தது தவிர்க்க இயலாதது. ஆனந்தத்திலும் கண்ணீர் வரும்

கிரிக்கெட் வெறியனான எனக்கு இந்தியா டெஸ்ட் தர வரிசையில் முதல் இடத்தை அடைந்தது மகிழ்ச்சியான நிகழ்வே

பதிவுலகில் காலடி எடுத்து வைத்து நானே எழுதி நானே படித்துக் கொண்டிருந்தவனுக்கு குடுகுடுப்பையின் அறிமுகம் கிடைத்து தமிழ் மணம் தமிழிஷ்ல் இணைக்க ஆரம்பித்து பல நல்ல இதயங்களின் அறிமுகமும் நட்பும் கிடைத்து என் எழுத்துக்கும் ஒரு சிறிய அங்கீகாரம் கிடைத்த பல தருணங்கள். பதிவுலகில் பதிவிடும்போதும் பின்னூட்டங்கள் இடும்போதும் என் பதிவுக்கும் பின்னூட்டத்துக்கும் கிடைக்கும் பதில்களைப் படிக்கும்போதும் நான் பெறும் மகிழ்ச்சி அளவில்லாதது. அழுத்தம் நிறைந்த அலுவலகப் பணிக்கிடையில் இப்படி ஒரு வடிகால் தேவையானதே.


இழப்புகளும் அவை தந்த சோகங்களும்


முத்துக்குமார் - தன்னை எரித்து வெளிச்சம் கொடுக்கும் மெழுகினைப் போல தன்னை ஜோதியாக்கி தமிழக மக்கள் மனதில் ஈழப் போருக்கு ஆதரவுச் சுடரை எரிய வைத்த தோழன். இவன் மரணம் பல இரவுகள் என்னை அழ வைத்தது. 


மே மாத மத்தியில் இந்தியாவில் இருக்க நேர்ந்தது. மகிழ்ச்சியாக சென்றிருக்க வேண்டிய இந்தக் கால கட்டத்தில் இடியாய் இறங்கிய ஈழப்போரின் முடிவும் அது தொடர்ந்த செய்திகளும் மனத்தின் கனத்தை அதிகமாக்கிய நிகழ்வுகள். ஈழம் ஒரு நாள் விடியும் என்ற நம்பிக்கை இன்னும் அடி ஆழத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.


இந்தியாவில் இருந்து திரும்பியதும் பொருளாதார சரிவின் பின்விளைவாய் என் நண்பர்கள் சிலரை பணியில் இருந்து நீக்க வேண்டிய பொறுப்பை என் தலையில் சுமந்த இருதலைக் கொள்ளி எறும்பு நாட்கள். 


ஒரு வழியாக 2009 போய்த் தொலைந்தது. இனி வரும் 2010 கூடிய மட்டிலும் மகிழ்ச்சியான நிகழ்வுகளை மட்டும் தாங்கி வரட்டும்.


அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். 

Wednesday, December 30, 2009

சுசிலாம்மாவுக்கு சில கேள்விகள்

முன்குறிப்பு: திருமதி.சுசிலா அவர்களின் வலைப்பூவில் இந்த பின்னூட்டத்தை இட்டு வைத்தேன். பதில் ஏதும் வராததால் என் ஆதங்கத்தை பதியும்பொருட்டே இவ்விடுகை. இதை தமிழ்மணத்திலோ தமிழிஷ்ஷிலோ இணைக்க விரும்பவில்லை.


அன்பின் சுசிலாம்மா,  

முதலில் நான் எல்லா மதங்களிலும் உள்ள நல்ல கருத்துக்களை மதிக்கிறேன். அந்தக் கருத்துக்கள் மற்ற மதத்தவரையோ சக மனிதனையோ பாதிக்காத வரை. முஸ்லிம்கள் பர்தா அணிவதையோ இந்துக்கள் விபூதி அணிவதையோ, கிறித்தவர்கள் சிலுவை அணிவதையோ, சீக்கியர்கள் டர்பன் அணிவதையோ மூட நம்பிக்கை என்றோ காட்டுமிராண்டித்தனம் என்றோ சொல்பவன் நான் இல்லை.  


நீங்கள் சக பதிவர் ஒருவருக்கு வரைந்த மின்மடலை அவர்தன் பதிவில் வெளியிட்டிருந்தார். அதனைப் படித்ததும் எனக்குத் தோன்றிய சில கருத்துக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைத்ததன் வெளிப்பாடே இப்பின்னூட்டம்.  


நீங்கள் இந்தப் பிரச்சனை முழுவதையும் தெரிந்து கொள்ளவில்லையோ என்றே கருதும்படி இருக்கிறது உங்கள் கருத்துக்கள். ஆதலால் உங்களுக்கு இந்தப் பிரச்சனையின் ஆதி மூலத்தை அறியச் செய்ய விரும்புகிறேன். 

சம்மந்தப்பட்ட பதிவர் அவர் ஈரோட்டில் நடந்த பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டதைப் பற்றி வெளியிட்ட பதிவில் "நான் விழாவுக்கு பர்தா அணிந்து சென்றிருந்தேன், கடைசி வரை பர்தாவிலேயே இருந்தேன்" என்று சொல்லியிருந்தார். இவர் பர்தா அணிவதும் அதைப் பற்றி பெருமைப்படுவதும் இவர் விருப்பம். அதில் யாரும் தலையிடவில்லை. அதற்கு பின்னூட்டமிட்ட ஒரு விஷமி - நான் பேண்ட்டில் போயிருந்தேன். கடைசிவரை பேண்ட் போட்டுக்கொண்டே இருந்தேன் - என்று எழுதிவிட்டார். அந்த விஷமியின் பின்னூட்டத்தை நான் வன்மையாகவே கண்டிக்கிறேன். இன்னொருவரின் உடை விருப்பம் குறித்து விமர்சனம் செய்ய யருக்கும் உரிமை இல்லை. அது தாயாகவே இருந்தால் கூட.  

இந்த விஷமப் பின்னுட்டத்திற்கு பதில் தரும் வண்ணம் அவர் எழுதிய பதிவு தான் "பர்தா என்றால் என்ன?" என்பது. அதிலும் அவரது கருத்துக்கள் அனைத்தோடும் நான் முரண்படவில்லை. பர்தா என்பதை திணிக்கப்பட்டது அல்ல அது முஸ்லிம் பெண்களால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ற கருத்தை எடுத்து வைக்கவே அவர் அப்பதிவை உபயோகித்தார். ஆனால் அப்பதிவில் அவர் தெரிவித்த ஒரு கருத்து -  

ஏன் ஒரு சில முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதில்லை?  

அதற்குக் காரணம், அவர்களின் வளர்ப்பு தான். நற்குடியில் பிறந்து, இஸ்லாமிய பாரம்பரியப்படி வளர்க்கப்படும் அனைவரும் நிச்சயமாக பர்தாவை விரும்புவார்கள்.  

இந்தக் கருத்து பர்தா அணிய விரும்பாத இஸ்லாமிய பெண்கள் எல்லாம் நற்குடியில் பிறக்காதவர்கள் என்பதாகப் படுகிறது என்பதை பல நண்பர்கள் - நான் உட்பட - பின்னூட்டங்களில் எடுத்துச் சொன்ன போதும் அவர் தான் செய்தது சரியே என்று சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருந்தார்.  

இதைப் படித்த மற்றொரு பதிவர் தனது அறச்சீற்றத்தை இந்தப் பதிவில் தெரிவித்திருந்தார். அதற்கு பதில் தெரிவிக்கும் விதமாக - உங்கள் வார்த்தைகளில் சொன்னால் - பொறுமையாக, நிதானமாக, அமைதியாக, பொறுப்பாக - விளக்கிக் கவிதை எழுதியிருக்கும் http://sumazla.blogspot.com/2009/12/blog-post_27.html பதிவைப் பாருங்கள்.  

ஒரு பெண் அணிந்திருக்கும் அல்லது அணிய மறுக்கும் உடையை வைத்து அவரது பிறப்பு/வளர்ப்பின் பரிசுத்தத்தை எடை போடுவது பெண் சுதந்திரமா? அதை எதிர்த்துப் பேசுவது ஆண் ஆதிக்கமா?  

// பசுபோட்ட சாணத்தை தலைமேலே ஏற்றி, // 
இது இந்துக்களின் மத நம்பிக்கையை கேலி செய்வதாக இல்லையா?  

//பெண்ணினத்தின் நாணத்தை காலாலே நசுக்கி, // 

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை என்று சொன்ன பாரதியைக் கண்டனம் செய்கிறாரா இவர்? இப்படி சொல்வது பெண்ணடிமைத்தனம் இல்லையா? அதை எதிர்ப்பதுதான் ஆண் ஆதிக்கமா?  

//
மூடிவைத்த பதார்த்தத்தில் 
வாசம் வராதென்று, 
திறந்து வைத்து, 
தேடிவரும் ஈசலுக்கும், 
நாடிவரும் எறும்புக்கும் 
இரையாக்கும் கூட்டம்! 
// 
உடலை மறைக்கும் உடை அணியாதவரெல்லாம் "வேசிகள்" என்று பொருள்படும்படி இல்லையா இந்த வரிகள்? நீங்கள் இவருக்கா வக்காலத்து வாங்குகிறீர்கள்? உங்களில் மின்னஞ்சலை தனது பதிவில் போட்டதன் மூலம் தான் செய்தது சரியே என்ற கருத்தைப் பதிந்துவிட்டுப் போயிருக்கிறாரே அது சரியா?  

நீங்கள் எழுதியதுபோல "செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே சேலை உடுத்தத் தயங்குறியே?" என்று யாரும் இவரிடம் கேட்கவில்லை. இவர்தான் "இஸ்லாமியராகப் பிறந்துவிட்டு பர்தா அணிய மறுப்பது தவறு" என்று பிற்போக்காகப் பேசுகிறார் என்பது உங்களுக்குப் புரியவில்லையா?  

உங்களிடம் இருந்து விளக்கங்கள் எதிர்பார்க்கிறேன்.

சுசிலா அவர்கள் அந்தப் பதிவருக்கு எழுதிய கடிதம் கீழே

‘அன்பின் சுமஜ்லா,
உங்கள் குறிப்பிட்ட பதிவைப்படித்து உங்கள் துணிவையும்,நேர்மையையும்,பொறுமையையும் வியக்கிறேன்.இவ்வாறான சூழலில் எனக்கு அறச்சீற்றம் ஏற்பட்டு நிதானமிழந்திருப்பேன்.நீங்கள் அமைதியாக...நிதானமாக விளக்கியிருக்கிறீர்கள்.
அப்படி ஒரு மோசமான,வக்கிரமான கருத்தை வெளியிட்டவர்கள் உங்கள் பொறுப்பான,கண்ணியமான பதிலுக்குப் பாத்திரமானவர்கள் அல்ல.அவர்கள் விஷமத்தனமான சகதிகளை வாரி இறைப்பதையே பொழுதுபோக்காகக் கொண்டவர்கள்.

தாஙள் மட்டும் கோட்டும்,சூட்டும் போட்டுக் கொண்டு,’’சேலை உடுத்தத் தயங்கறியே’’என்று பாடும் ஆண் வர்க்கத்தின் வேறு வகைப் பிரதிநிதிகள் இவர்கள்.
பெண் எதை எப்படி எழுதினாலும் இந்த ஆணாதிக்க உலகம் அதை எள்ளலாகவே எடைபோடும்.

கட்டுண்டோம்;பொறுத்திருப்போம்;காலம் மாறும்.
வீணர்களுக்குப் பதில் தந்து பொழுதை விரயமாக்க வேண்டாம்- ஆனால் இந்தப் பதில் பதிவும் கூட அர்த்தச் செறிவுடன் தான் இருக்கிறது என்பது வேறு விஷயம்.
அன்பு வாழ்த்துக்களுடன்,’



அவர் போட்ட பின்னூட்டம் கீழே


எம்.ஏ.சுசீலா,http://www.masusila.blogspot.com
புதுதில்லி
அன்பின் சுமஜ்லா,
உங்கள் இந்தப் பதிவில் என் அஞ்சலை வெளிட்டமைக்கு நன்றி.அந்தப் பதிவில் பின்னூட்டம் சரியாக அமையாததாலேயே அஞ்சலில் அனுப்பினேன்.எவர்க்கும் அஞ்சவில்லை.உண்மையைச்சொல்ல ஏன் அச்சம்,ஏன் தயக்கம்.தைரியமாக என் பெயரை வெளிடுக.
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் கண்டு தயங்காமல் இன்று போல் என்றும் உங்கள் பணி எழுச்சியுடன் தொடர்க.
நான் பிறப்பால் இந்துவெனினும்,உங்களைப் போலவே மதம் கடந்த நிலையில் யோசிப்பவள்.அப்படிப்பட்ட வருங்காலம் இளைஞர்களாகிய உங்கள் கைகளில்தான்.
இந்தப்பதிவின் கடைசிப் பகுதி உங்கள் தெளிந்த ஞானச் செருக்கைக் காட்டுகிறது.பாரதி நம்மிடம் எதிர்பார்த்தது அதைத்தான்.சபாஷ் !!
அன்பு வாழ்த்துக்கள்.

கேள்விகள்

பின்னிரவில் வன்பனியின்
கூதல் பொறுக்கா பூனைகள்போல்
அனத்துமந்த ஆதிசேஷன்கள்
விதண்டாவாதத்தில்
வியாக்கியானம் தேடும்
அனாமதேயங்கள்
இங்கே கேள்விகள் மட்டும்
வேள்விகளாய்!

டிஸ்கி-1: கவித சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது
டிஸ்கி -2: நன்றி அண்ணன் விசா

உறவுகள்

மஞ்சுவின் கை மேடிட்டிருந்த வயிற்றை அனிச்சையாகத் தடவிக் கொண்டது. வீட்டின் ஜன்னலுக்கு வெளியே ஒரு கழியில் மாட்டப்பட்டிருந்த பேர்ட் ஃபீடரில் இருந்த தானியங்களைக் கொத்திக் கொண்டிருந்த பறவையை வேடிக்கைப் பார்த்தாள். அந்தப் பறவையின் கூட்டில் இது கொண்டு வரும் உணவுக்காக ஒன்றிரண்டு குஞ்சுகள் காத்திருக்கும் என்ற யோசனையே ஒரு இனம் புரியாத குறுகுறுப்பை ஏற்படுத்தியது.




தாய்மை ஒரு பெண்ணை முழுமைப் படுத்துகிறது என்பது முழுக்க முழுக்க உண்மை. எட்டு மாதம் முன்பு என்ன உணவு உண்கிறோம், எத்தனை மணிக்கு உண்கிறோம் என்பதைப் பற்றி அவள் கவலைப்பட்டதே இல்லை. ஆனால் இப்போது? நேரா நேரத்துக்கு சத்தான உணவை உண்ண வேண்டும் என்ற எண்ணம் எங்கிருந்து வந்தது?


ஒலித்த தொலைபேசியை எடுத்தாள்.


“ஹேய் அபர்ணா. எப்பிடி இருக்க?”
----
“ஆமாண்டி வயிறு தெரிய ஆரம்பிச்சுடுச்சி”
----
“ரமேஷ் தாண்டி ரொம்ப கஷ்டப்படுறாப்ல. காலங்காத்தால எழுந்து ப்ரேக்ஃபாஸ்ட் லன்ச் ரெண்டும் செஞ்சி அவருக்கு பாக்ஸ்ல எடுத்துட்டு, எனக்கும் பேக் பண்ணி ஃப்ரிஜ்ல வச்சிட்டுப் போறாப்ல. அது போக ஜூஸ் வேற எடுத்து வச்சிட்டுப் போறாப்ல”
----
“எங்கம்மாவும் அப்பாவும் இப்போ தான வந்துட்டுப் போனாங்க”
----
“அவங்கப்பாவும் அம்மாவும் இந்த வீக் எண்ட் வர்றாங்க. அவங்கதான் டெலிவரி வரைக்கும் இருப்பாங்க. என்னடி பண்றது. இப்பிடி கண்காணாத தேசத்துல வந்து கஷ்டப்படணும்னு தலைவிதி”
----
“வாஸ்தவம்தான். எங்கம்மா இருந்து செய்யற மாதிரி வராதுதான். ஆனா அவங்க ரமேஷப் பாத்துக்கிட்டா போதும். ரமேஷ் என்னயப் பாத்துக்கிடுவாப்ல”
---
“ஓக்கேடி. அப்புறம் கூப்பிடு”


ரமேஷும் மஞ்சுவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். முதலில் லேசான எதிர்ப்பு இருந்தாலும் பின்னர் இரு வீட்டாரும் இணங்கிவிட்டார்கள். திருமணம் முடிந்து இரண்டு முறை கரு உருவாகி தங்காமல் போய் நான்கு ஆண்டுகள் கழித்து இப்போதுதான் எட்டு மாதம் வரை தாக்குப் பிடித்திருக்கிறது, 


டாக்டர் வேறு இவள் வீக்காக இருப்பதாகவும் நேரத்துக்கு சத்தாக சாப்பிட வேண்டும் என்றும் சொல்லிவிட்டார். இந்தக் காலத்தில் எல்லாப் பெண்களையும் போல மஞ்சுவும் அம்மா மடி தேடி ஏங்கிக் கொண்டிருக்கிறாள். அந்த ஏக்கம் வேறு அவளது ஸ்ட்ரெஸ் லெவலை அதிகமாக்கிக் கொண்டிருக்கிறது. அதையும் பார்த்துக் கொள்ளும் படி டாக்டர் ஆலோசனை சொல்லியிருக்கிறார். 


ரமேஷ் தான் பாவம். இவளுக்கு சமையலையும் செய்துகொண்டு பிரசவ கால ஹார்மோன் மாற்றத்தால் அவளுக்கு ஏற்படும் உடற்கோளாறுகளுக்கும் மனக் கோளாறுகளுக்கும் வைத்தியமும் பார்த்துக் கொண்டு வேலைக்கும் போய் வருகிறான். அவன் பெற்றோர்கள் வந்துவிட்டால் இவன் வேலை பாதியாகிவிடும்.


மஞ்சு டிவிக்கு மேல் ஒளிர்ந்து கொண்டிருந்த எலெக்ட்ரானிக் கடிகாரத்தில் மணி பார்த்தாள். 2:00 மணி. ஃப்ரிட்ஜைத் திறந்து ரமேஷ் பிழிந்து வைத்திருந்த மாதுளை ஜூஸை ஒரு கப்பில் ஊற்றி சிப்பினாள். ரமேஷ் வர இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது, ரிமோட்டால் டிவியை இயக்கினாள். ஏற்கனவே டி.வி.ஆரில் ரெக்கார்ட் செய்திருந்த அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியைத் தெரிவு செய்து சோஃபாவில் அமர்ந்து ரசிக்கத் துவங்கினாள். இது போன்ற சிரிப்பு நிகழ்ச்சிகள் அவள் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்க உதவுகின்றன.


********************************************************************************************


சோஃபாவில் அமர்ந்தபடியே கண்ணசந்துவிட்ட மஞ்சு கராஜ் திறக்கும் ஓசை கேட்டுக் கண் விழித்தாள். கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த ரமேஷைப் பார்த்ததும் அவள் உதட்டில் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது. 


"ஏண்டா லேட்டு?”


“நான் எங்கம்மா லேட்டு. நாலு மணிக்கு வந்திட்டேனே?”


“மணி பாரு. நாலு ரெண்டு. ரெண்டு நிமிஷம் லேட்டா வந்திருக்க”


“அய்யோ. சாரிங்க மேம். லேட்டா வந்ததுக்கு என்ன பனிஷ்மெண்ட்?”


“என்ன மாலுக்குக் கூட்டிட்டுப்போ”


“உடனே போகணுமா இல்ல நான் ஃப்ரெஷ்னப் பண்ணிட்டு வந்துடவா?”


“ஃப்ரெஷ்ஷா வந்து வெள்ளக்காரச்சிகளை சைட்டடிக்கப் போறியா?”


“நான் ஏன் வெள்ளக்காரச்சிகள சைட் அடிக்கணும்? அவளுக வேணுமின்னா என்ன சைட் அடிக்கட்டும்”


“அடி செருப்பால. உன்னால வயித்தத் தள்ளிக்கிட்டு நான் இருக்கிறப்போ உனக்கு வெள்ளக்காரச்சி கேக்குதோ?”



“நீ வயித்தத் தள்ளிக்கிட்டு இருக்குறதுனாலதான் கேக்குது. அவளுகளப் பாரு எக்ஸர்சைஸ் பண்ணி நல்ல டோன் பண்ணி வச்சிருக்காங்க.”


எல்லாப் பெண்களையும் போல சடுதியில் கண்களில் நீர்கோர்த்தாள். “நிஜம்மாவே நான் அசிங்கமாயிட்டேனா ரமேஷ்? குழந்த பெறந்ததும் என்ன வெறுத்துடுவியா?”


தாவி அவளைக் கட்டி அணைத்துத் தோளில் சாய்த்து - “அய்யோ அப்பிடியில்லடா கண்ணம்மா. எனக்கு நீ தாண்டா தேவதை. உன்னப்போய் நான் வெறுப்பேனா?”


அவன் மார்பில் கை வைத்துத் தள்ளினாள். “நீ வெறுத்துடுவ. உள் மனசுல இருக்குறதுதான வெளிய வரும்” சோஃபாவில் அமர்ந்து இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டு விசும்பி விசும்பி அழுதாள்.


அவள் முன் மண்டியிட்டு கைகளை விலக்கி அவள் முகத்தை இரு கைகளால் ஏந்தி கண்ணீரைத் துடைத்தான். “இங்க பாரு மஞ்சு. நீ உங்க குடும்பத்த விட்டு என்ன நம்பி இவ்வளவு தூரம் வரைக்கும் வந்திருக்க. உன்னப் போய் நான் வெறுப்பேனா? சும்மா கிண்டலுக்கு சொன்னேண்டா. ப்ளீஸ் அழாதம்மா. இப்பிடி இருக்கும்போது அழக்கூடாது. அப்புறம் குட்டிப் பையன் அழுமூஞ்சியாப் பொறந்துடுவான்”


“சரி இனிமே வெளாட்டுக்குக் கூட அப்பிடி சொல்லக்கூடாது சரியா?”


“சரிடா”


“எனக்கு மால்ல ஐஸ்க்ரீம் வாங்கித் தருவியா?”


“ஒண்ணே ஒண்ணுதான் வாங்கித்தருவேன்”


“ம்ஹூம் எனக்கு ரெண்டு வேணும்”


“டாக்டர் சாப்பிடக்கூடாதுன்னு சொல்லலயா?”


எனக்கு ரெண்டு வேணும்


“சரி சரி வாங்கித் தர்றேன்”


இருவரும் சேர்ந்து எழுந்தனர்.


********************************************************************************************


ஞாயிறு காலை 5:00 மணி. 


“குட்டிம்மா. நான் ஜே.எஃப்.கே கிளம்புறேன். 6:30க்கு ஃப்ளைட். உனக்கு சாப்பாடு ஃப்ரிட்ஜ்ல வச்சிருக்கேன். நேரத்துக்கு சாப்பிடு சரியா?”


“சரிப்பா. பாத்து போயிட்டு வா. ஆண்ட்டி அங்கிளுக்கு சாப்பாடு எடுத்துட்டுப் போறியா?”


“ஆமா. லெமன் ரைஸ்ஸும் புளியோதரையும் எடுத்துட்டுப் போறேன். நைட் வந்துடுவோம். உனக்கு போர் அடிச்சா சாரதாவக் கூப்பிட்டுக்கோ. ஓக்கே?”


“ஓக்கேடா”


அவன் காரில் ஏறி கார் ட்ரைவ் வேயை விட்டு விலகும் வரைப் பார்த்திருந்துவிட்டு கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்தாள். இன்று இரவு ரமேஷின் அப்பாவும் அம்மாவும் வந்துவிடுவார்கள். அட் லீஸ்ட் சமைக்கும் வேலையாவது ரமேஷுக்கு இனி இருக்காது. அந்த நேரத்தை என்னுடன் செலவிடுவான். இந்த எண்ணமே மஞ்சுவைக் குஷிப் படுத்தியது. 


விசிலடித்துக் கொண்டே பெட்ரூமை நோக்கி நகர்ந்தாள். ஒரு ஓரமாக நின்றிருந்த விதி அவளைப் பார்த்து சிரித்தது


(தொடரும்)

Sunday, December 27, 2009

பிதற்றல்கள் - 12/27/2009

விளையாட்டில் அரசியல்


சிங்களவர்கள் மட்டுமே (முரளி நீங்கலாக) பங்கெடுக்கும் இலங்கைக் கிரிக்கெட் அணியைப் பின்பற்றும் பல புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களை எனக்குத் தெரியும். இலங்கையில் இவ்வளவு நடந்த பின்னும் விடாமல் பின்பற்றுவார்கள். இவர்கள் விளையாட்டையும் அரசியலையும் வெவ்வேறாகப் பார்ப்பவர்கள்.


ஆனால், இலங்கையில் ஒவ்வொரு முறை கிரிக்கெட் போட்டி நடக்கும்போதும் அதில் அரசியலைக் கலக்க சிங்களப் பேரினவாத அரசு தவறுவதே இல்லை. ஒவ்வொரு போட்டியிலும் 100 அல்லது 200 காயமடைந்த - கால் இழந்த. கை இழந்த - ராணுவ வீரர்களுக்கு இலவச பாஸ் வழங்கி, போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது வரிசையாக நடத்தி அழைத்து வந்து அமர வைப்பார்கள். இதன் மூலம் உலகிற்கு விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் எனவும், அவர்களால் இலங்கை பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பது போலவும் காட்டி பரிதாபத்தைத் தேடிக்கொள்ளும் நோக்கமே.


சரி இது கேடு கெட்ட அரசியல்வாதிகளிடம்தான் விளையாட்டு வீரர்கள் அப்படி இருக்கமாட்டார்கள் என்று தான் நம்பியிருந்தேன், பாகிஸ்தானில் தீவிரவாதிகள் இலங்கை அணியின் வாகனத்தைத் தாக்கியது வரை. அப்போதைய இலங்கை அணித்தலைவர் மகேள ஜயவர்த்தனே அந்த தாக்குதலைப் பற்றி சொல்லும்போது - எங்கள் நாட்டிலும் தீவிரவாதிகள் இருப்பதால் அந்த நிலையில் என்ன செய்யவேண்டும் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம் என்று சொன்னார். எத்தனை முறை புலிகள் இலங்கை அணியைத் தாக்க முயற்சி செய்தனரோ அது ஜயவர்த்தனேவுக்கே வெளிச்சம். ஒருவேளை ஜயவர்த்தனே என்ற பெயர் வைத்தவர்களே இப்படித்தானோ?


அதெல்லாம் சரி, இப்போது எதற்கு இதைப் பற்றி பேசுகிறேன்? காரணம் இருக்கிறது. நான் அரசியலையும் விளையாட்டையும் வெவ்வேறாகப் பார்ப்பவனாதலால், சர்வதேச கிரிக்கெட்டில் இருபது வருடங்களைப் பூர்த்தி செய்த சனத் ஜெயசூர்யவுக்கு என் வாழ்த்துக்களை இங்கே பதிவு செய்து கொள்கிறேன். அவர் இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரராக அவர் பேரனுடன் ஜோடி சேர்ந்து ஆட வேண்டும் என்பது என் ஆசை.


அரசியல் விளயாட்டு


நடந்து முடிந்த இடைத்தேர்தலிலும் ஆளுங்கட்சிக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார் அஞ்சா நெஞ்சன் அண்ணன் அழகிரி. பணத்தைக் கொடுத்து வெற்றியை வாங்கி விடலாம் என்ற உண்மையை மீண்டும் நிரூபித்து விட்டார். மக்களும் வாங்கி வாங்கிப் பழகி விட்டனர். காசு கொடுத்து பழக்கமில்லாத கம்யூனிஸ்ட்கள் போன்ற கட்சிகளுக்கு இனி திண்டாட்டம் தான். வாக்குக் கேட்டுப் போகக்கூட முடியாது போல.


பேசாமல் தேர்தல் ஆணையம் செலவு செய்து இப்படித் தேர்தல்கள் நடத்துவதை விட அந்தத் தொகுதிகளை ஏலம் விட்டு அதிக பணம் கொடுத்து ஏலம் எடுக்கும் கட்சிக்குக் கொடுத்துவிடலாம். தேர்தல் செலவும் மிஞ்சும், நல்ல காசும் கிடைக்கும். வேட்பாளர்களும் பயந்து பயந்து பணப்பட்டுவாடாவும், ஏதேதோ பெயர் சொல்லி பிரியாணி போடுவதையும் விட்டுவிடலாம். அப்படி ஏலம் எடுக்கும் பணத்துக்கு வரி விலக்கு கூட அளிக்கலாம். பொதுத் தேர்தல்களில் இம்முறையை அமுல் படுத்த முடியாவிட்டால் கூட இடைத்தேர்தல்களிலாவது இந்த முறையைப் பயன்படுத்தலாம். யோசிப்பார்களா?


விளையாட்டே அரசியல்


(கிரிக்கெட்) விளையாட்டில் அதிக அரசியல் செய்யும் அணி எது என்று கேட்டால் கண்ணை மூடிக் கொண்டு சொல்லிவிடலாம் - ஆஸ்திரேலியா என்று. ஒரு அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் புறப்படும்போதே அங்குள்ள பத்திரிக்கைகள் அரசியலை ஆரம்பித்து விடும். வரும் அணியின் சிறந்த ஆட்டக்காரரைப் பற்றி அவதூறாக எதாவது எழுத ஆரம்பித்துவிடுவார்கள். இது மனோதத்துவ ரீதியான முதல் தாக்குதல்.


பின் அந்த அணி வந்து இறங்கியதும் ஆஸ்திரேலிய அணி ஆட்டக்காரர் - கேப்டன் இல்லை - ஒருவர் எதிரணியின் வீரர் ஒருவரைப் பற்றி எதாவது பற்ற வைப்பார். உதாரணத்திற்கு - டிராவிட்க்கு வயசாகி விட்டது. அவரது ஆட்டத்திறன் குறைந்து வருகிறது. அவர் ஓய்வு பெற்றுவிடுவது உத்தமம் என்று. இது இரண்டாவது தாக்குதல்.


அடுத்து ஆட்டக்களத்தில் - ஸ்லெட்ஜிங் - என்று அழைக்கப் படும் மோசமான தாக்குதல். தனிப்பட்ட முறையில் ஆட்டக்காரர்களைப் பற்றி தரக்குறைவாக அவருக்கு கோபம் வரும் வண்ணம் பேசுதல், லேசாகக் கோபப்படும் பந்துவீச்சாளரை மேலும் கோபமூட்டும்படி எதாவது சொல்லி தூண்டுதல் ஆகியன மூன்றாவதுத் தாக்குதல்.


கடைசியாக யாரையாவது உச்சக்கட்டமாகக் கோபமூட்டி எதாவது கைகலப்பில் ஈடுபட வைத்து அவரை சஸ்பெண்டு ஆக வைப்பது. ஐ.சி.சி விதிகளின் படி தூண்டுபவர்களுக்கு தண்டனை குறைவு. கைகலப்பில் முதலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை. ஒருவர் குற்றத்தை ஒப்புக் கொண்டால் தண்டனை இன்னும் குறைந்துவிடும். ஆக இவ்வளவையும் செய்துவிட்டு தப்பை ஒத்துக் கொண்டு குறைந்த பட்ச தண்டனையோடு தப்பிவிடுவார்கள் ஆஸ்திரேலிய அணியினர்.


அவர்களின் தலைவர் இருக்கிறாரே ரிக்கி பாண்டிங். அவர் இதில் ஆஸ்திரேலிய அழகிரி. ஜெயிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்.


பாவம், மேற்கிந்திய அணி வீரர் பென். ஹாட்டினும் ஜான்சனும் வீசிய தூண்டிலில் மாட்டி பாவம் இரண்டு ஒருநாள் போட்டி விளையாடத் தடை என்னும் தண்டனை அடைந்துள்ளார். அவரது துரதிருஷ்டம் அவர் இந்திய அணியில் இல்லாதது. இந்திய வீரர் யாருக்காவது இது நடந்திருந்தால் பி.சி.சி.ஐ மேட்ச் ரெஃப்ரி க்ரிஸ் ப்ராடை மண்டி போட வைத்திருக்கும்,

Saturday, December 26, 2009

கலகலப்ரியாவின் கவிதைகள் - விளக்கம் - செகண்ட் அட்டெம்ப்ட்

என்னோட கடந்த முயற்சியை திருத்துன எக்ஸாமினர் (வானம்பாடிகள் சார்) நான் பெயில்னு சொல்லிட்டாரு. ஆனா அவருக்கு நல்ல மனசு. அதுனால செகண்ட் அட்டெம்ப்ட் செய்யலாம்னு அனுமதி குடுத்துட்டாரு. அதோட டீச்சரம்மாவும் (கலகலப்ரியா) பிட் பாஸ் பண்ணதால ஒரு உத்வேகத்தோட ஆரம்பிச்சிட்டேன்.


போன பதிவப் பாக்காதவங்க பாத்துட்டு வந்திடுங்க. ஏன்னா நான் அதுல கடைசி பாராவ மட்டும் தான் மாத்தப் போறேன்.


படர்ந்திருந்த..
பாசியுடன்..
அச்சம் விலக்கி..
அடி வரை சென்று..
சிப்பியுடன் சிப்பியாக..
முத்தொன்று..
மேலெழுந்து..
சிலந்தி விழியில்..
விழுந்து தெறித்து..
மேலே மேலே..
மேலே சென்றது..



அந்தப் பாறை மேல படர்ந்திருந்த பாசியோட பயத்தையும் விலக்கி எல்லாத்துக்கும் அடியில போயி சிப்பியோட சிப்பியா செட்டில் ஆகினதும், உள்மன நம்பிக்கை மட்டும் ஒரு முத்து மாதிரி மேல எழுந்து அந்த ஆக்டபஸ்ஸோட கண்ணுல விழுந்து தெரிச்சி மேல மேல போச்சு.


(வானம்பாடி சார் பாத்து திருத்துங்க)


கவிதை - 2:


இந்தக்கவிதைக்கு அவங்க பின்னூட்டத்துல நான் போட்ட விளக்கத்தை இங்க திரும்பப் போட்டிருக்கேன். அதையும் பாத்துடுங்க.


//ஜடத்தின் உயிரோட்டம்
சிலாகிக்கும் மனம்
//
ஜடம்னு ஆனப்புறம் எங்க இருக்கு உயிரோட்டம். அப்படி இல்லாத உயிரோட்டத்தை சிலாகிக்கிற மனமும் அதாவது மொக்கைக் கவிதை எழுதினா கூட அருமை பிரமாதம் அப்பிடின்னு டெம்ப்ளேட் பின்னூட்டம் போடுறவங்களோட செயலும்,


//உயிரின் செயற்கைத்தனம்
வெறுக்கும் செயல்//
உயிர் அப்பிடின்னு சொன்னப்புறம் அது இருக்குறதா ஆகிடுது. அந்த உயிரில இல்லாத செயற்கையை இருக்குறதா எடுத்துக்கிட்டு அதை வெறுக்குற செயல் அதாவது நல்ல ஒரு இடுகைல கூட நுண்ணிய அரசியலை நோண்டிப் பாக்குறவங்களோட செயலும்

//இயற்கைக்கு விரோதம்//
இயற்கைக்கு விரோதமானவை.

//-ஆம்!//
இனிமே இதையெல்லாம் செய்யாதிங்க. இத்தோட நிறுத்திக்குங்க. ஆமா.

//ஞாபகம் தொலைத்த
தொன்மைகள்
இம்மையில் வரலாறு//
நாம எல்லாரும் மறந்து போன பழைய விசயங்கள் இன்னைக்கு வரலாற்றுப் புத்தகத்துல தூங்குது - அதாவது அனுபவத்த எழுதுற எல்லா இடுகைகளும் ஹிஸ்டரி புக் மாதிரி. நாய் கூட சீண்டாது.

//தன்மையறுத்தவர் இம்மை
மறுமையில் எவ்வாறு...?!//
தன்னலம் சிறிதும் இல்லாத (பதிவர் முகிலனைப் போன்றவர்கள்) ஆட்களின் இன்றைய தருணம் நாளை என்னவாகும்? அந்த மாதிரி பதிவர்களின் பதிவு தான் காலாகாலத்துக்கும் நிக்கும்.

இத்தால் நான் அறியத்தருவது யாதெனில் - அருஞ்சொற்பொருள் போடாம புரியாத கவிதை எழுதினா எனக்குப் புரியிறத வச்சி எதையாவது எழுதுவேன்



அடுத்த விளக்கம் அப்புறமா..

Thursday, December 24, 2009

கலகலப்ரியாவின் கவிதைகள் - விளக்கம்

கலகலப்ரியா எனக்கு ஒரு அசைன்மெண்ட் குடுத்தாங்க. அவங்க கவிதைக்கு விளக்கம் எழுதச் சொல்லி. அதை ஒரு பதிவாத் தட்டி விட்டுடலாம்னு தொடங்கிட்டேன். பின் விளைவுகளுக்கு ப்ரியாவே பொறுப்பு 


பிக்காஸோ ஒரு மாடர்ன் ஆர்ட்டிஸ்ட். அவரது அப்ஸ்ட்ராக்டான ஓவியங்கள் அதை ரசிப்பவர்களுக்கு அவரவர் மனநிலைக்கேற்ப புரியும் ஒரு முறை பிக்காஸோவின் ஓவியம் ஒன்றை சுற்றி ஒரு கூட்டம் நின்று கொண்டு அந்த ஓவியம் எதைச் சுட்டுகிறது என்று வாதம் செய்து கொண்டிருந்தது. அங்கே வந்த பிக்காஸோவிடமே விளக்கம் கேட்டார்களாம். அந்த ஓவியத்தை உற்றுப் பார்த்த பிக்காஸோ ஓவியம் தலை கீழாக இருக்கிறது என்று திருப்பி மாட்டினாராம்.


கலகலப்ரியாவோட கவிதைகள் பிக்காஸோ ஓவியங்கள் மாதிரி - நீங்கள் என்ன மனநிலையில் இருந்து அந்தக் கவிதையை வாசிக்கிறீர்களோ அந்த மனநிலைக்கேற்ற படி ஒரு பொருள் விளங்கும்.(சத்தியமா இது பாராட்டுதாங்கோ)


கவிதை - 1
//
சாதாரண விட்டத்தில்..
பாதியே கொண்ட..
மூக்குத் துவாரம் வழியே..
உட்கொண்ட பிராணவாயு..
நுரையீரலில்..
சொற்ப அளவிலேயே..
சேமிக்கப் பட்டிருக்க..

//
நல்லா மூச்சை இழுத்துப் பிடிக்காம கொஞ்சமே கொஞ்சூண்டு மட்டும் நுரையீரல்ல சேத்துக்கிட்டு
//
சமுத்திரத்தின்..
ஆழம் அறியாது..
கால் விட்டு..
முன்னேற்பாடு ஏதுமற்று..
சுழி ஓட ஆரம்பித்து..
//

கடல்னு தெரியாம கம்மான்னு நினச்சி காலவிட்டு ஆக்ஸிஜன் சிலிண்டரோ டைவிங் சூட்டோ இல்லாம் உள்ள போயி
//
முத்துக் குளிப்பதோ..
முரல்கள் பிடிப்பதோ..
குறிக்கோள் ஏதுமின்றி..
நீரின் மூல தாதில்..
மூச்சுக் காற்றை..
மட்டும் பிரித்து உறிஞ்சி..
மேலும் கீழும்..
அளைந்து துழாவி..
//

முத்து எடுக்கவோ மீன் பிடிக்கவோ குறிக்கோள் இல்லாம, H2Oல ஆக்ஸிஜன் மட்டும் பிரிச்சி மேலையும் கீழையும் போய் வந்து
//
பாசிகள் படர்ந்த..
பாறையின் மீது..
கூழாய்க் கிடந்த..
கடற் சிலந்தி கண்களில்..
கருணையே உருவான..
யோகியைக் கண்டு..
கடற்பாசி விலக்கி..
நீந்தி நெருங்கி...
நிமிர்ந்து பார்க்க..
//

பாசி படர்ந்த ஒரு பாறை மேல கூழ் மாதிரி கிடந்த ஆக்டபஸ்ஸோட கண்ணுல கருணையே உருவான யோகி (அமீர் நடிச்ச படம் இல்ல) யப் பாத்து கடல் பாசிய விலக்கி பக்கத்துல நெருஙிப் போய் நிமுந்து பாத்தா
//
அசைந்த கூழில்..
ஆயிரம் கைகள்..
நீண்டு நெளிந்து..
சுருண்டு வளைந்து..
விரிந்து சுருங்கி..
விழுங்க விரைய..
//

அந்த ஆக்டபஸ் அசஞ்சி அதோட கைய நீட்டி நெளிச்சு, சுருண்டு வளஞ்சி, விரிஞ்சி சுருங்கி, என்ன விழுங்க வர,
//
நனவா கனவா..
நம்ப முடியாது..
கீழே பார்க்க..
கடலினடியில்..
இராட்சத பிம்பம்..
//

நடக்குறது கனவா இல்ல நனவான்னு நம்ப முடியாம கீழ பாக்க கடலுக்கடியில பெரிய உருவம்
//
தன்னிச்சையாய்..
உதறி விலகி..
பாறை தொற்றி..
பாசி போர்த்தி..
அருகே நோக்க..
சிலந்தி கையில்..
சர்ப்பமொன்று..
சக்கையாகி..
மாயமானது..
//

தன்னிச்சையா உதறி விலகி பாசிக்குள்ள போய் ஒளிஞ்சிக்கிட்டு பக்கத்துல பாத்தா ஆக்டோபஸ் கைல பாம்பு ஒண்ணு சக்கையாகி மாயமாப் போச்சி.
//
ஆழ் கடலின்..
மணல் மேட்டில்..
இராட்சத நிழற்குடை..
அங்கும் இங்கும்..
கடற் தாவரம்...
சிண்டு நண்டு..
சிப்பி முத்துடன்..
பவளப் பாறைகளும்..
//

கடலோட ஆழத்துல மணல் மேட்டுல அந்த ஆக்டொபஸ் ஒரு ராட்சத நிழல்குடை மாதிரி நிக்க, அங்கயும் இங்கயும் கடல் தாவரம், நண்டு, சிப்பி, பவளப் பாறை இதெல்லாம் இருக்க
//
நாளத்தின் குருதி..
நாடியை நாட..
இதயம் தவித்து..
இறைஞ்சி நிற்க..
சுவாசப் பை..
கையை விரித்தது..
//

ரொம்ப நேரம் தண்ணியிலயே (கடலுக்குள்ளங்க டாஸ்மாக்ல இல்ல) இருந்ததுனால ரத்தத்துல ஆக்ஸிஜன் இல்லாம இதயம் கஷ்டப்பட, நுரையீரல் அம்புட்டுத்தான் என் கிட்ட காத்துன்னு கை விரிச்சிடுச்சி
//

படர்ந்திருந்த..
பாசியுடன்..
அச்சம் விலக்கி..
அடி வரை சென்று..
சிப்பியுடன் சிப்பியாக..
முத்தொன்று..
மேலெழுந்து..
சிலந்தி விழியில்..
விழுந்து தெறித்து..
மேலே மேலே..
மேலே சென்றது..

//
மேல மூடியிருந்த பாசியோட பயத்தையும் விலக்கிட்டு அடி வரைக்கும் போய் சிப்பியோட சிப்பியா செட்டில் ஆகிட (அதாம் மூச்சுத் திணறிடுச்சே) உடம்புல இருந்த உயிர் சிப்பில இருந்து கிளம்புன முத்து மாதிரி மேல மேல போயிடுச்சு.


இவ்வளவு நேரம் வெளிப்படையான அர்த்தம் மட்டும் பார்த்தோம். இப்போ உள்குத்து என்னான்னு பாப்போம்.
டிஸ்கி: பிக்காஸா ஓவியத்துக்கு பாக்குறவங்க அர்த்தம் கண்டு பிடிக்கிற மாதிரி இது. முழுக்க முழுக்க என் பெர்செப்ஷன். கலகலப்ரியா இதைத்தான் சொல்லவந்தாங்களான்னு எனக்குத் தெரியாது.


ஒரு விசயத்தை செய்ய தேவையான அளவு சக்தியைத் திரட்டிக்காம இருந்துட்டு, எதிரியோட பலத்த குறைச்சி மதிப்பிட்டு, ஆழம் தெரியாமக் கால விட்டுட்டு, ஒரு விஷமமான ஆளப் பாத்து அவரு ஒரு யோகி(இனத்தலைவரு), நம்ம காப்பாத்துவாருன்னு நெனச்சி கடைசியில அது ஒரு கசுமாலம்னு தெரிஞ்சி சுதாரிக்கறதுக்குள்ள உயிர் போயிடுச்சி. 

Monday, December 21, 2009

குற்றம் - நடந்தது என்ன?

ஒரு குடும்பம். அம்மா, அப்பா, மூன்று மகன்கள். முதல் இரண்டு மகன்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது. 


மூத்த மகன் அரசியல் கட்சி ஒன்றில் அடிமட்டத் தொண்டன். நிரந்தர வருமானம் இல்லை. மனைவியும் சாதாரண குடும்பத்திலிருந்து நகை நட்டு எதுவுமில்லாமல் வாழ்க்கைப்பட்டு வந்தவள். இவர்களுக்கு நான்கு குழந்தைகள். 


இரண்டாவது மகன் வாத்தியார் வேலை. சொற்ப சம்பளம். மனைவி நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்தவள். ஏதோ கைக்கும் கழுத்துக்கும் நகை போட்டிருக்கிறாள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள்.


மூன்றாவது மகன் சொந்தமாகத் தொழில் செய்கிறான். மற்ற இருவரைக் காட்டிலும் நல்ல வருமானம். இவனுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. இவனுக்கு ஒரு வசதியான குடும்பத்தில் பெண் பார்க்கிறார்கள். அந்தப் பெண்ணுக்குத் தயக்கம். தான் இந்தக் கூட்டுக் குடும்பத்தில் போய் வாழ்ந்தால் தனக்கு உரிய மரியாதை கிடைக்குமா? என்று. இவர்கள் அவளிடம் பேசி சில பல வாக்குறுதிகளை அள்ளி வீசி அந்தப் பெண்ணை மருமகளாக்கி வீட்டுக்குக் கூட்டி வந்து விட்டார்கள்.


வந்த வேகத்தில் கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விட்டு விட்டனர். அந்தப் பெண் கொண்டு வந்த நகைகளை அவள் சம்மதமில்லாமலே மற்ற மருமகள்களும் தாயும் அணியத் துவங்கி விட்டனர். அவள் கணவனின் வருமானமும் மொத்த குடும்பத்தால் பங்கு போடப்பட்டு அவளுக்கு சொற்ப அளவே கிடைத்தது. 


வருமானமே இல்லாத மூத்த மகன் குடும்பத்துக்குக் கிடைத்த வசதிகளை விட இவளுக்குக் குறைவாகக் கிடைப்பதாகவே நினைத்தாள். ஏனென்றால் இவள் பிறந்த வீட்டில் மிகுந்த வசதியுடன் இருந்தவள்.


எனவே அவள் ஒரு முடிவெடுக்கிறாள். தன் கணவனுடன் தனிக்குடித்தனம் போய் விட்டால் தனக்கு வேண்டிய உரிமைகள் கிடைத்துவிடும் என்று நம்புகிறாள். அதற்காக சாம, பேத, தண்ட முறைகளில் போராட்டம் நடத்துகிறாள். 


பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஊர்ப் பெரியவர்கள் அவர்களைத் தனியாகக் குடியமர்த்திவிடலாம் என்று முடிவெடுக்கின்றனர், இப்போது வீட்டில் அடிக்கிறது புயல். மற்ற மகன்களின் குடும்பம் இவர்களைத் தனியே குடியமர்த்தக் கூடாது என்று கொடி பிடிக்கின்றனர். இரண்டாவது மகன், அப்படி அவர்கள் தனியே போனால் நானும் போகிறேன் என்கிறான்.


இதைப் பார்த்த மற்ற வீடுகளிலும் தனிக் குடித்தனம் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது. கொடுமை என்னவென்றால் கணவனும் மனைவியும் மட்டுமே உள்ள வீடுகளில் கூட தனிக்குடித்தனம் - கணவன் தனியாகவும் மனைவி தனியாகவும் - போக வேண்டும் என்றும் அதற்கு ஊர் ஒத்துக்கொள்ள வேண்டும் என்றும் குரல் கொடுக்கின்றனர். ஊர்ப் பெரியவர்கள் அவசரப்பட்டு விட்டோமே என்று கவலை கொள்கின்றனர்.


மேலே சொன்னது வி.சேகர் படக் கதையல்ல. ஆந்திரப் பிரதேசத்திலும் அதைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் நடை பெறும் கூத்துதான். 


இதில் மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்? ஜார்கண்ட்டின் நிலையை தெலுங்கானா மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். ஒரு குறைந்த பட்ச செயல்திட்டத்தை தெலுங்கானாவுக்கு வகுக்க வேண்டும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள் அந்தத் திட்டங்கள் மாநில அரசால் நிறைவேற்றப் படாவிட்டால் தனி மாநிலம் அளிப்பதாக உத்திரவாதம் அளிக்க வேண்டும். இதுதான் இப்போதைக்கு ஒரு சரியான முடிவாக இருக்கும்.


அதோடு தனித் தெலுங்கானா கோருபவர்கள் தங்களின் நியாயங்களை அனைவரும் அறியும்படி பிரசாரம் செய்ய வேண்டும். இல்லையென்றால் என்.டி.டி.வி போன்ற அரை வேக்காட்டு ஊடகங்கள் வெளியிலிருந்து பார்ப்பவர்களின் மனதில் இப்படி தவறான எண்ணத்தை விதைத்துவிடும்.



(குற்றப்பத்திரிக்கை தொடரும்)

Sunday, December 20, 2009

பிதற்றல்கள் - 12/20/2009

கேள்வி: இப்போது இப்படி ஒரு கேள்வி-பதில் பதிவுக்கு என்ன அவசியம்?
பதில்: எத்தனை நாளைக்குத்தான் கலைஞரின் கேள்வி பதில் அறிக்கையையே தமிழ் மக்கள் படித்துக் கொண்டிருப்பார்கள்? ஒரு மாறுதலுக்கு.

கேள்வி: தெலுங்கானா பிரச்சனைக்கு என்ன தீர்வு?
பதில்: இந்தக் கேள்வி மிகவும் சுலபம். தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்கி அதில் ஆந்திராவையும் ராயலசீமாவையும் சேர்த்துவிட்டால் போச்சு. அப்புறம் யாரும் தனித் தெலுங்கானா கேட்க மாட்டார்கள்.

கேள்வி: தோனி இரண்டு ஒரு நாள் போட்டிகள் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளாரே, இது இந்திய அணியின் வெற்றியை எந்த விதத்தில் பாதிக்கும்?
பதில்: இந்திய அணியின் வெற்றியை எந்த விதத்தில் பாதிக்கும் என்று தெரியவில்லை. ஆனால் இலங்கை அணியின் தோல்வியை இது கடுமையாக பாதிக்கப் போவது உண்மை

கேள்வி: தில்ஷன் இந்திய அணிக்குப் பெரும் சவாலாக இருக்கிறாரே, அவரை எப்படி அவுட்டாக்குவது?
பதில்: பந்து வீசித்தான், மற்ற முறையில் அவரை அவுட்டாக்க நினைப்பது ஆட்ட விதிகளின் படி குற்றம்.

கேள்வி: இடைத்தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?
பதில்: முடிவுகள் எப்படி இருந்தாலும் திருச்செந்தூர் வந்தவாசி தொகுதி மக்களுக்கு நல்ல யோகம். காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும். மற்ற தொகுதி வாக்காளர்களும் தங்கள் எம்.எல்.ஏ ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று வருத்தப்படுகின்றனராம்.

கேள்வி: வேட்டைக்காரன் வெற்றிப் படமா?
பதில்: என்னைப் பொருத்தவரை அது வெற்றுப் படம். ஆனால் சன் டிவி அதை வெற்றிப் படமாக்கியே தீருவார்கள். சன் நியூஸ் தயாரிப்பாளருக்கு தினமும் ஒரு செய்தியிலாவது வேட்டைக்காரன் பற்றி சொல்லவேண்டும் என்று அசைன்மெண்ட் கொடுத்திருப்பார்கள் போல. இன்றைய செய்தியில் - கண்டேன் காதலை, வேட்டைக்காரன் போன்ற வெற்றிப் படங்களின் திருட்டு விசிடி அச்சடித்தவர் கைது. நாளை இப்படி செய்தி வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை - வேட்டைக்காரன் திரையிடப்பட்டுள்ள ஜெயந்தி தியேட்டருக்கருகே பூ விற்கும் பொன்னம்மா கணவரிடம் விவாகரத்துக் கேட்டு கோர்ட்டில் மனு.

கேள்வி: புராணங்கள் வெறும் கதையா?
பதில்: அப்படி இருக்கலாம். ஆனால் சில புராணங்களுக்கும் உண்மைக்கும் பல ஒற்றுமைகள் வந்து தொலைத்து விடுகின்றன. உதாரணத்திற்கு - வட இந்திய ராஜா, சில குரங்குகள் துணையோடு தமிழ் மன்னன் ஒருவனை எதிர்த்துப் ப்டை எடுக்கிறார். இதில் ஈடுபடுவது முழுக்க முழுக்க குரங்குகள் படையே. தமிழ் மன்னனின் தம்பிகளில் ஒருவன் எதிரிகளிடம் சரணைடைவதுடன் தமிழ் மன்னனின் ரகசியங்களையும் சொல்லிவிடுகிறான். கடைசியில் நயவஞ்சகமாக தமிழ் மன்னனின் தம்பிகளையும் மகனையும் கொன்று பின் தமிழ் மன்னனையும் கொன்று விடுகிறான். புராணத்தில் தமிழ் மன்னன் செய்த தவறாகக் கூறப்படுவது - அந்த வட இந்திய ராஜாவின் மனைவியைக் கவர்ந்தது. இதில் வட இந்திய ராணியின் கணவனைக் கொன்றது. புராணத்தில் தமிழ் மன்னன் அடுத்தவன் மனைவியைக் கவர்ந்தது தன் தங்கையை மானபங்கப் படுத்தியமைக்காக. நிஜத்தில் கணவனைக் கொன்றது ஆயிரக்கணக்கான தங்கையரை மானபங்கப் படுத்தியதற்காக.

கேள்வி: கடைசிக் கேள்வி. சமீபத்தில் ரசித்த நகைச்சுவைத் துணுக்கு?
பதில்: வேட்டைக்காரனைப் பற்றி வந்த்து: நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட.
அடிக்கிறதெல்லாம் இருக்கட்டும் நீ நடிச்சாத்தான் தாங்கவும் முடியல தூங்கவும் முடியல.

Saturday, December 19, 2009

மேக்கிங் ஆஃப் வேட்டைக்காரன்

aஸ்டோரி டிஸ்கஷன்
======================


விஜய்: பாபு, நீங்க தரணியோட அஸிஸ்டண்ட். உங்க டைரக்டரோட ஃபர்ஸ்ட் படம் தில் மாதிரி இதுவும் சூப்பர் ஹிட் ஆகணுங்க்ண்ணா


aபாபு: சரி சார். அதே மாதிரியே செஞ்சிடுவோம்.


விஜய்: இந்த ராகுல் காந்தி என்ன யூத் இல்லன்னு சொல்லிட்டார். அத ஒடக்கிற மாதிரி ஒரு யூத்ஃபுல் ஸ்டோரி சொல்லுங்க்ண்ணா.


பாபு: இந்தப் படத்துல நீங்க ஒரு +2 ஸ்டுடண்ட்.


விஜய்: அதுக்காக இவ்வளவு யூத்தா? மக்கள் நம்புவாங்களாங்க்ண்ணா?


பாபு: அப்ப நாலு வருசம் கோட்டடிச்சு கோட்டடிச்சு பாஸ் பண்றீங்கன்னு வச்சிக்கலாம் சார்.


விஜய்: ஹா. இது நல்லா இருக்கு. அப்புறம் சூப்பர் ஸ்டாருக்கு பாஷா ஹிட் குடுத்த மாதிரி இந்தப் படமும் ஹிட்டடிக்கணும். சொல்லிட்டேங்க்ண்ணா


பாபு: கண்டிப்பா சார். அதே மாதிரியே செஞ்சிடுவோம்.


விஜய்: சரி கதைய சொல்லுங்க்ண்ணா.


பாபு: நீங்க +2 ஃபெயிலாகிட்டு ஊர் சுத்திட்டு இருக்கிங்க. ஆனா உங்களுக்கு ஒரு குறிக்கோள் இருக்கு. அது என்னன்னா உங்க ஆதர்ச ஹீரோ ஒரு போலிஸ்காரர். என்கவுண்ட்டர் ஸ்பெசலிஸ்ட். அவர் மாதிரி நீங்களும் போலிஸ் ஆகணும்னு நினைக்கிறீங்க.


விஜய்: இருங்க இருங்க. ஏற்கனவே நான் போக்கிரி படத்துல போலிஸா நடிச்சிட்டேனே? மறுபடியும் போலீஸா நடிச்சா ஒரே மாதிரி நடிக்கிறேன்னு மக்கள் சொல்ல மாட்டாங்களாங்க்ண்ணா?


பாபு: அய்யய்யோ நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க. போலீஸ் ஆகணும்னு ஆசதான் படுறீங்க. ஆனா ஆக மாட்டிங்க.


விஜய்: ஓ அப்பிடியா அப்ப ஓக்கேங்க்ண்ணா. மேல சொல்லுங்க்ண்ணா.


பாபு: ஒரு வழியா பாஸ் ஆகி உங்க ஆதர்ச போலிஸ்காரர் படிச்ச காலேஜ்லயே உங்களுக்கும் சீட் கிடைக்கிது. அங்க போயி படிக்கிறீங்க. அப்ப..


எஸ்.ஏ.சி: இருப்பா. எம்மகன் பாட்சா மாதிரி வேணும்னு கேட்டானே. நீ என்ன காலேஜ் கதை சொல்ற?


பாபு: அப்ப இப்பிடி வச்சிக்கலாம் சார். காலேஜ் படிக்கும்போதே ஆட்டோ ஒட்டுறாரு படிப்பு செலவுக்காக.


விஜய்: அப்ப ஆட்டோ ஓட்டுறப்போ ஆயுத பூஜைக்கி ஒரு பாட்டு பாடுறதுல இருந்து ஆரம்பிச்சி ஃப்ளாஷ் பேக்குல +2 கதை சொல்லலாமாங்க்ணா?


பாபு: அய்யோ சார். அது பாட்சா படத்துல வந்திருச்சே. அதுனால உங்களுக்கு ஃப்ளாஷ் பேக் வேணாம்சார். வேணும்னா அந்த போலிஸ் ஆபிசருக்கு வச்சிடலாம்.


விஜய்: அப்பிடிங்கிறீங்களா. சரி. மேல சொல்லுங்க்ணா


பாபு: அப்ப உங்களுக்கும் அந்த ஏரியா தாதாவுக்கும் மாமூல் விசயத்துல பிரச்சனை வந்துடுது. நீங்க அவரைப் போட்டு பொளந்து கட்டிரீங்க.


எஸ்.ஏ.சி: ஏம்ப்பா. இந்த மாமூல் விசயத்துல பிரச்சனைன்னு வக்காம, ஏதாவது லேடிஸ் மேட்டர்னு வச்சா கொஞ்சம் லேடீஸ் செண்டிமெண்ட்டா இருக்கும்ல?


பாபு: ம்ம்ம்ம். அப்ப இப்பிடி வச்சிக்கலாம் சார். காலேஜ்ல உங்க ஃப்ரண்டு ஒரு பொண்ணு. அந்தப் பொண்ணுக்கிட்ட தப்பா நடந்துக்கிறாரு அந்த தாதா.


விஜய்: இது சூப்பருங்க்ண்ணா.


பாபு: அந்த தாதாவுக்கு இருக்குற போலீஸ் பவர வச்சி உங்கள அரெஸ்ட் பண்ண வச்சிடுறாரு. அப்படியே என்கவுண்ட்டர் பண்ணவும் ஏற்பாடு செஞ்சிடுறாரு. நீங்க போலீஸ் கிட்ட இருந்து தப்பிச்சிப் போயிடுறீங்க.


எஸ்.ஏ.சி: தப்பிச்சிப் போகும்போது இண்ட்டர்வல் விட்டுடு.


பாபு: சரி சார். வித்தியாசமா ஏதாவது செய்யரப்போ இண்ட்டர்வல் விட்டா நல்லா இருக்கும்னு..


எஸ்.ஏ.சி: ஹா.. நேத்து ஒரு இங்க்லீஸ் படம் டிவிடி பாத்தேன். அப்போகேலிப்டோ. அதுல ஹீரோ ஒரு பெரிய அருவில குதிச்சி சாகாம எழுந்து வர்றான். அதுமாதிரி ஒரு பெரிய அருவில குதிக்கிறா மாதிரி சீன் வச்சிட்டு இண்ட்டர்வல் விட்டுடு.


பாபு: நல்ல ஐடியா சார். தப்பிச்சி வந்த நீங்க, அந்த போலீஸ் ஆஃபிசரை சந்திக்கிறீங்க. அவரோ உங்களப் பகச்சிக்கிட்ட அதே தாதாவால போலீஸ் வேலையயும் குடும்பத்தையும் இழந்து நிக்கிறாரு. அதப்பாத்து கொதிச்சிப்போன நீங்க அந்த தாதாவப் பழிவாங்குறதுக்காக நீங்களும் தாதாவாகிடுறீங்க.


எஸ்.ஏ.சி: இரு இரு. என்ன ஒரே ஒரு வில்லன் தானா? ரெண்டு மூணு வில்லன் வேணுமேப்பா. ஒண்ணு பண்ணு முதல்ல தகறாரு பண்ண வில்லனோட அப்பாதான் மெயின் தாதா. அவரத்தான் விஜய் சார் எதிக்கிறாரு சரியா?


பாபு: சரி சார். அந்த தாதாவோட வழியில போயி அவரோட சொத்து பவர் எல்லாத்தயும் ஒண்ணொன்னா அழிச்சுட்டு கடைசியில தாதாவையும் அழிக்கிறீங்க.


விஜய்: இது பகவதில நானே செஞ்சிட்டேனேங்க்ண்ணா?


எஸ்.ஏ.சி: தம்பி. பகவதி படம் ஃப்ளாப்பு. அதுனால மக்கள் அத நினைவுல வச்சிருக்க மாட்டங்க.


பாபு: ஆமா சார்.


எஸ்.ஏ.சி: தம்பி. விஜய் சார் அரசியலுக்கு வரணும்னு நினைக்கிறாரு. அதுனால வில்லன் அரசியல்வாதியாவோ இல்ல அரசியல் சம்மந்தப்பட்டவனாவோ இருக்குறது நல்லா இருக்கும்.


பாபு: அவரை மந்திரியாகுறதுக்கு ஆசப்படுறவர் மாதிரி காட்டி அரசியல் பன்ச் வச்சிரலாம் சார். 


எஸ்.ஏ.சி: கதை நல்லாருக்கு. எனக்குப் பிடிச்சிருக்கு.


விஜய்: அப்பிடின்னா எனக்கும் பிடிச்சிருக்குங்க்ண்னா. ஆமா, இதுல ஹீரோயின் யாரு?


பாபு: அனுஷ்க்கா தான் சார் இன்னிக்கி ஹாட். அவங்களையே போட்டுடலாம்.


விஜய்: அவங்க ரோலு? 


பாபு: அதுக்கென்ன சார் அங்கங்க நுழைச்சிட்டு நாலு பாட்டுக்கு ஆட விட்டா போதும்.


எஸ்.ஏ.சி: ஆமா படத்துக்கு என்ன தலைப்பு?


பாபு: முரட்டுக்காளைன்னு வக்கலாம்னு இருக்கேன் சார்


எஸ்.ஏ.சி: வேண்டாம். ரஜினி அரசியலுக்கு வரலை. அதுனால எம்.ஜி.ஆர் பட டைட்டில் வைக்கலாம்


பாபு: அப்ப வேட்டைக்காரன்னு வக்கலாம் சார்.


************************************************************************************


ஷூட்டிங் ஸ்பாட்:
==================


விஜய்: இன்னிக்கு என்ன சீன்ங்க்ண்ணா?


பாபு: ஃபர்ஸ்ட் ஃபைட் சீன் சார். ஒரு போலீஸ் காரர் அராஜகம் பண்றாரு அத நீங்க தட்டிக் கேக்குறீங்க.


கனல் கண்ணன்: சார் ஒரு ரிகர்சல் பாத்துரலாமா?


விஜய்: வாங்க்ண்ணா. பாட்சா படத்துல தலைவர்க்கு வச்ச ஃபர்ஸ்ட் ஃபைட் மாதிரி இருக்கணுங்க்ண்ணா. 


கனல் கண்ணன்: இருக்கு சார். அதுல அவர் அடிச்சதும் ஒருத்தன் போயி போஸ்ட் மரத்துல விழுகுர மாதிரி இதுல நீங்க ஒரே அடியில ஒரு கல்தூணை நொறுக்குரீங்க. அதப் பாத்ததும் வில்லன் ஆஃப் ஆயிடுறான்.


விஜய்: நல்லா இருக்குங்க்ண்ணா


**************************************************************************************
விஜய்: டைரக்டர்ண்ணா. எல்லாரும் கெட்டப் மாத்துறாங்களே? எனக்கு எதாவது கெட்டப் போடலாமா?


பாபு: போடலாம் சார். வேணும்னா போலீஸ்ல இருந்து தப்பி வந்தப்புறம் வேற கெட்டப்ல நடிக்கிறீங்களா? 


விஜய்: அய்யோ? பாதி படத்துக்கெல்லாம் அப்பிடி நடிக்க முடியாதுங்க்ணா. எதாவது சின்ன சீன்...


பாபு: அப்போ சின்னத் தாமரை பாட்டுல வேற கெட்டப்ல வந்திடுங்க சார்.


விஜய்: சரிங்க்ண்ணா


****************************************************************************************
ஷூட்டிங் முடிந்து ரஷ் பார்த்த டைரக்டர் விஜயிடம்


பாபு: சார், ஒரு ஆர்வத்துல வேட்டைக்காரன்னு தலைப்பு வச்சுட்டு ஃபோட்டோ ஷூட்ல கௌ பாய் வேசம் போட்டு எடுத்துட்டோம். ஆனா படத்துல அப்பிடி எந்த சீனுமே வரலை.


விஜய்: அய்யோ? நம்ம ரசிகரெல்லாம் அப்பிடி ஒரு சீன் எதிர்பாத்து காத்துட்டு இருப்பாங்களேங்க்ண்ணா?


பாபு: இப்பிடி பண்ணிடலாம் சார். ஃபர்ஸ்ட்டு ஃபைட்டுக்கு முன்னால ஒரு சேஸிங்க் வச்சி அதுல நீங்க குதிரைல கௌபாய் ட்ரெஸ்ல சேஸ் பண்றா மாதிரி வச்சிடலாம்.


*****************************************************************************************


எல்லாம் முடிந்து விஜயும் எஸ்.ஏ.சியும் படம் பார்த்துவிட்டு


விஜய்: என்னப்பா இதுவும் குருவி வில்லு மாதிரி ஆயிடுமா?


எஸ்.ஏ.சி: தம்பி பல வெற்றிப்படங்களக் குடுத்த அனுபவத்துல சொல்றேன். இது கண்டிப்பா சூப்பர் ஹிட்டுதான்


விஜய்: என்னவோப்பா எனக்கு கொஞ்சம் கலக்கமாத்தான் இருக்கு


விஜயின் செல்ஃபோன் அடிக்கிறது. எடுத்துப் பேசும் அவர் முகம் கொஞ்ச கொஞ்சமாய் பிரகாசமாகிறது.


விஜய்: அப்பா, ஒரு ஹேப்பு நியூஸ். படம் எப்பிடியும் ஹிட் ஆகிடும்.


எஸ்.ஏ.சி: எப்பித்தம்பி சொல்றிங்க?


விஜய்: படத்த சன் பிக்சர்ஸ் வாங்கிட்டாங்களாம். அவங்க எப்பிடியும் படத்த ஓட வச்சிருவாங்க. எனக்கு இனி நல்லா தூக்கம் வரும்


**************************************************************************************

Thursday, December 17, 2009

சம்பவம்

அவன் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டு இருந்தான். பங்குனி வெயில் உச்சந்தலையைப் பதம் பார்த்துக் கொண்டிருந்தது. தூரத்தில் பேருந்து வருகிறதா என்று உடன் நின்றிருந்தோரைப் போல அவனும் எட்டிப் பார்த்தான். தார்ச்சாலையின் கறுமையில் தொலைவில் கானல் நீர் தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை. சலித்துக் கொண்டு திரும்பினான்.


பையில் வைத்திருந்த அலைபேசி அழைத்தது. எடுத்துப் பார்த்தான். அழைப்பு வந்த எண்ணைப் பார்த்ததும் ஒரு மரியாதையோடு பச்சைப் பொத்தானை ஒத்தி காதில் வைத்து - "அய்யா! சொல்லுங்கய்யா"
...
"சரிங்கய்யா"
...
"நீங்க கவலைப் படாதிங்க அய்யா. நான் பாத்துக்கிறேன்"
...
"அதுக்குத்தானய்யா போறேன். விசயம் முடிஞ்சதும் உங்களுக்குக் கூப்புடுரேன்யா"
...
அலை பேசியை அணைத்து பையில் வைத்துக் கொண்டு பேருந்துக்காகக் காத்திருக்க ஆரம்பித்தான்.


நீல வண்ணத்தில் கட்டம் போட்ட சட்டையும் துவைத்துத் துவைத்துப் பழுப்பேறிய வேட்டியும் கட்டி இருந்தான். கழுத்தில் வியர்வையை மட்டுப் படுத்த கைக்குட்டை ஒன்றை சுருட்டி வைத்திருந்தான். வேட்டியை மடித்தும் கட்டாமல் கீழிறக்கியும் விடாமல் லேசாக வழித்து கால்களுக்கிடையில் கொடுத்து நின்றிருந்தான்.


பேருந்து வந்தது. அவன் போகும் பேருந்தா என்பதை சரி பார்த்துக் கொண்டு ஏறினான். அவனுடன் இரண்டு பள்ளிச் சிறுவர்களும் போட்டி போட்டுக் கொண்டு ஏறினர்.


உள்ளே ஏறி காலியாய் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தான். நடத்துனரிடம் சீட்டு வாங்கிக் கொண்டு பேருந்தை பார்வையால் அலசினான். 


பேருந்தில் ஒரு சிலரே இருந்தனர். இவனுடன் ஏறிய இரு சிறுவர்களும் இன்றைய தேர்வில் தாங்கள் எழுதிய/எழுதாமல் விட்ட பதில்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். முன்னால் ஓட்டுனருக்கு இடதுபுறம் இருந்த இருக்கையில் அமர்ந்து அவரிடம் கதைத்துக் கொண்டு வந்தார் நடத்துனர். அவருக்குப் பின்னாலிருந்த இருக்கையில் இரண்டு பெண்கள் கையில் பெரிய கூடையுடன் அமர்ந்து அடுத்த வீட்டு ஆண்டாளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர்.


இவனுக்கு மூன்று இருக்கைகள் பின்னால் ஒரு இளைஞனும் யுவதியும் அமர்ந்திருந்தனர். அவர்களின் நெருக்கமும், சிரிப்பும், அந்தப் பெண்ணின் கன்னத்தில் பூசியிருந்த சிவப்பு வெட்கமும், அவர்கள் காதலர்கள் என்று சொல்லாமல் சொல்லின. அவன் குறும்பாய் எதாவது சொல்லி இருக்க வேண்டும். அவள் சிணுங்கிக் கொண்டு செல்லமாய் அவனுக்கு வலிக்காமல் அவன் கையில் அடித்தாள். அவன் அது வலித்தது போல அழுதான்.  அவள் அவனைச் சமாதானப் படுத்துவதற்காக,  பேருந்தில் யாரும் பார்க்காத தைரியத்தில், அவன் கைகளில் முத்தம் கொடுத்தாள். அவன் கிறங்கிக் கண்களை சொறுகினான்.


அவர்களைப் பாத்ததும் இவனுக்கு செல்வியின் ஞாபகம் வந்தது. இவனும் செல்வியும் அந்தக் காதலர்களைப் போலத்தான். இவன் அய்யா வீட்டுக்கு தினமும் செல்லும் பேருந்து வழித்தடத்தில் அவளும் வருவாள். அங்கே உள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் வாசலில் முறுக்கு, சீடை, பொரி உருண்டை போன்றவற்றை வியாபாரம் செய்து வந்தாள். இவனைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு சிறு புன்னகை. கண்களில் ஒரு ஒளிக்கீற்று. அது போதாதா ஒரு ஆண்மகனுக்கு?


சீண்டலாகப் பேச ஆரம்பித்து சினிமா போகும் வரை நீண்டது காதல். தன் வாழ்க்கையில் எல்லாமே செல்விதான் என்று நினைத்திருந்தான். தன் தொழிலில் அவ்வப்போது மொத்தமாகப் பணம் கிடைக்கும்போதெல்லாம் செல்விக்கு சேலை, தோடு என்று வாங்கிக் கொடுத்து அழகு பார்த்தான். வேலை நிமித்தம் மூன்று மாதங்களோ ஆறு மாதங்களோ பிரிந்திருக்க நேர்ந்தால் செல்வியின் நினைவிலேயே அந்தக் காலத்தைக் கழித்தான். செல்விக்கு இருந்த மூன்று மூத்த சகோதரிகளால் இவர்கள் திருமணத்திற்குக் காத்திருக்க வேண்டியதாயிற்று. 


ஆறு வருடங்கள் ஓடிப் போன தடமே தெரிய வில்லை. அந்தச் சனியன் பிடித்த ஒருநாளில் இவன் என்ன தொழில் செய்கிறான் என்பதை செல்வி கண்கூடாகப் பார்க்க நேர்ந்தது. எந்தத் தொழிலுக்கு தன் தந்தையைப் பறி கொடுத்து விட்டு இவர்கள் குடும்பம் நடுத்தெருவில் நிற்கிறதோ அதே தொழிலை இவனும் செய்கிறான் என்று தெரிந்ததுமே இவனிடம் இருந்து விலகினாள். இவன் சமாதானம் செல்லவில்லை. "எம்பிள்ளைங்கள அனாதியா பாக்குற தயிரியம் எனக்கு இல்ல சாமி" என்று சொல்லி இவன் வாங்கிக் கொடுத்த அத்தனையையும் இவன் முகத்தில் எறிந்துவிட்டுப் போய்விட்டாள்.


அவளை அதன் பிறகு அந்த வழித்தடத்தில் அவன் பார்க்கவே இல்லை. இன்னும் அந்தத் தொழிலையே தொடர்வதால்,அவள் எங்கே என்று அவளைத் தேடவும் முயலவில்லை. கண்களின் ஓரத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டான்.


பேருந்து அந்த நிறுத்தத்தில் நின்றது. இவன் இறங்கி அங்கே இருந்த இளநீர்க் கடையின் முன் நின்றால். வாங்க யாருமில்லாமல் ஈ ஓட்டிக் கொண்டிருந்த கடைக்காரன் "வாங்கண்ணே வழுக்கையா வெட்டவா தண்ணியா வெட்டவா" என்று கேட்டு பதிலுக்கு அவன் முகத்தைப் பார்த்தான். 
"எளநி எம்புட்டு?"
"பன்னெண்டு ரூவாண்ணே"
பேருந்து கிளம்புவதற்காக நடத்துனர் கொடுத்த இரட்டை விசில் கேட்டது. கேட்டதும் சட்டையின் பின்னாலிருந்து எடுத்த அருவாளை ஓங்கி "ஏண்டா எங்க அய்யாவுக்கு எதிராவா சாச்சி சொல்லப்போற" என்று அவன் கழுத்தில் இறக்கினான். வெட்டை வாங்கியவன் வெட்டிய வாழை மரம் போல சரிந்தான். கிளம்பிக்கொண்டிருந்த பேருந்தை நோக்கி ஓடிக் கொண்டே கைக்குட்டையால் அருவாளில் இருந்த ரத்தத்தைத் துடைத்துவிட்டு, சட்டையின் பின்னால் சொறுகிக் கொண்டு பேருந்தின் படிக்கட்டில் தொற்றினான்.


"ஐயா சாமி எங்கய்யனப் போல ஒங்களயும் வெட்டிட்டாய்ங்களே பாவிங்க" என்ற சத்தமான அழுகுரல் கேட்டு படியில் இருந்தவாறே திரும்பினான். அழுதுகொண்டிருந்தவளைப் பார்த்ததும் கம்பியைப் பிடித்துக் கொண்டிருந்த அவன் கை தானாக நழுவியது.

செம்மொழிப் பைந்தமிழ் மன்றம் நடத்தும் சிறுகதைப் போட்டிக்காக

குளிர் காலமும் குழாய் வெடிப்பும்

பன் பிக்சர்ஸ் பலாநிதி சாரன் வழங்கும்,
மையத் தளபதி முகிலன் நடிக்கும்
குழாய் ரிப்பேர்.


ஒப்பன் பண்ணா ஏரியல் வியூவுல பூமியக்காட்டுறோம். அப்பிடியே ஜூம் பண்ணி நார்த் அமெரிக்கா, யூ.எஸ், நியூ யார்க், ராச்செஸ்டர்னு வந்து அந்த வீட்டுக்கு மேல கேமராவ நிறுத்துறோம். வீட்டுக் கூரை, ரோடு எல்லாம் ஸ்நோ. ஸ்லோவா ஒரு கார் ரோட்டுல போகுது. அந்தக் கார் க்ராஸ் பண்ண உடனே கேமரா கீழ வந்து வீட்டோட முன் பக்கத்த வைடு ஆங்கிள்ல காட்டுறோம். அப்பிடியே ஜூம் போயி கதவோடக் கைப்பிடில நிறுத்துறோம். கைப்பிடி திரும்புது. கதவு மெதுவா திறக்குது. 


ஜூம் அவுட் ஆகுறோம். கதவு திறந்து - கில்லில தேவை இல்லாம மெட்றாஸோட மொட்ட வெயிலுல டாக்டர் விஜய் போட்டுட்டு வர்றா மாதிரி - ஒரு ஜெர்க்கின் போட்டுட்டு ஒரு உருவம் வருது. அது கையில என்னவோ ஒரு பொருள வச்சிருக்கு. 


வீட்டுக்கு முன்பக்கத்துல ஒரு குழாய்ல ஒரு ஹோஸ் பைப்பு மாட்டி சுத்தி வச்சிருக்கு. அந்த ஹோஸ் பைப்போட இன்னொரு முனைல ஒரு வாட்டரிங்க் நாஸ்ஸில் இருக்கு. வெளிய வந்த அந்த உருவம் தன் தலைல இருக்குற ஹூட எடுத்ததும் தியேட்டர்ல க்ளாப்ஸ் பறக்குது. அவர்தான் நம்ம ஹீரோ. கேமராவப் பாத்து - செஞ்சிடலாமா? - அப்பிடின்னு கேட்டுட்டு, குழாய திறக்குறாரு. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்னு சத்தம். தண்ணி வர்ற சத்தம். அந்த நாஸ்ஸில கைல எடுத்து ஸ்க்ரீன நோக்கி அழுத்துறாரு. எல்லாரும் ஸ்க்ரீன்ல தண்ணி தெறிக்குனு நினப்பாங்க அதுதான் இல்ல. தண்ணியே வரல. என்னான்னு பாத்துட்டு - ஓ ஹோஸுக்குள்ள முந்தி இருந்த தண்ணி ஃப்ரீஸ் ஆயிடுச்சி போல. ஆனா நான் ஒரு முடிவு எடுத்துட்டா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்னு ஸ்கிரீனப் பாத்து சொல்லிட்டு, பின்னாடி இருக்குற பைப்புல போயி அந்தப் பொருள கழுவப்போயிடுறாரு.


அவரு போறத ஸ்டேஷனரியா கேமராவ வச்சி அவரு முதுக மட்டும் காட்டுறோம். அவரு போகவும் முன்னாடி இருக்குற பைப்ப ஜூம் பண்ணிட்டு கட் பண்றோம்.


இப்போ வீட்டுக்குள்ள ஷாட். ஃபாஸ்ட் ஃபார்வர்ட்ல, ஹீரோ ஹீரோயின் குழந்தை மூணு பேரும் கிளம்பி கார்ல ஏறி மாலுக்கு போற வரைக்கும் காட்டுறோம். இப்போ மாலுக்குள்ள ஒரு சாங். மால் எம்ப்ளாயீஸா இருக்குற வெள்ளக்காரங்களையும் வேட்டி சேல கட்டி ஆட வுடுறோம். பாட்டு முடிஞ்சதும் கட் பண்றோம்.


இப்போ ஸ்க்ரீன் இருட்டா இருக்கு. பேக்க்ரவுண்ட்ல எதோ மோட்டார் ஓடுற மாதிரி ஒரு இரைச்சல். கதவு திறக்குற சத்தம் (ரசூல் பூக்குட்டி புண்ணியத்துல இதெல்லாம் தெளிவா கேக்கும்).  ஸ்விட்ச் போடுற சத்தம். ரூமே வெளிச்சம் ஆகுது. கதவத் திறந்துட்டு ஹீரோ உள்ள வர்றாரு. பின்னாடியே ஹீரோயின் குழந்தையோட.


என்ன சத்தம் அப்பிடின்னு கேட்டுட்டு ஹீரோ அலர்ட் ஆகுறாரு. தட தடன்னு வீடு முழுக்க ஓடுறாரு. பேஸ்மெண்ட்ல போய் பாத்தா பைப் ஒடஞ்சி தண்ணி கொட்டுது. பேஸ்மெண்ட் எல்லாம் தண்ணி. “ஆஆஆஆஆஆஆ”ன்னு அங்கயே மண்டி போட்டு சத்தமா கதறி அழுவுறாரு. பின்னாடியே வந்த ஹீரோயின் அவரு தோள ஆறுதலா தட்டுறாங்க. 


அப்பிடியே ஒரு சோகப் பாட்டு. யாருமே இல்லாதக் காட்டுக்குள்ள ஹீரோ நிலாவையும் ஏரியையும் பாத்துக்கிட்டே சால்வைய சுத்திக்கிட்டு பாடுறாரு.


பாட்டு முடிஞ்சதும் ஹீரோயின் ஹீரோவப் பாத்து - “எதாவது பண்ணு. உன்னால கண்டிப்பா முடியும். உன்னால முடியாதுன்னா எந்தத் தலயாலும் முடியாது” அப்பிடிங்கிறாங்க. கேட்டதும் நம்ம ஹீரோ வீரமா எந்திரிக்கிறாரு. இப்போ ஹீரோவ ஃப்ரீஸ் பண்ணிட்டு குழாயத்திறந்தது, நாஸ்ஸில அழுத்துனது, குழாய மூடாமப் போனது இதையெல்லாம் ஸ்லைட் ஷோவா ஹீரோ மேல ஓட்டுறோம். ஸ்லைட் ஷோ முடிஞ்சதும் ஹீரோ வேகமா மாடிக்கு ஏறிப்போறாரு. சும்மா பறந்து பறந்து அந்தக் குழாயோட சண்ட போட்டு ஒரு வழியா அத மூடிடுறாரு. இப்போ தண்ணி கொட்டுறது நின்னுடுச்சி. ஹீரோ கீழ வந்து ஹீரோயின்கிட்ட எப்பிடி வெளிய இருக்குற குழாயோட ஷட் ஆஃப் வால்வ் ஒடஞ்ச பைப்புக்கு இந்தப் பக்கம் இருக்கு. அத மூடினதும் எப்பிடி தண்ணி நின்னுடுச்சின்னு எக்ஸ்ப்ளெயின் பண்றாரு. கேட்டுட்டு ஹீரோயின் ஹீரோவ பெருமையா பாக்குறாங்க.


அப்பிடியே கட் பண்ணி ரெண்டு பேரும் சஹாரால போய் ஒரு டூயட் பாடுறாங்க.


டூயட் முடியப்போற நேரம் அதாவது பல்லவி மறுபடி வர்றப்போ ரெண்டு பேரும் வீட்டுக்கே வந்து பேஸ்மெண்ட்லயே ஆடுறாங்க. அப்பிடியே பாடிட்டே மேல ஏறி போறாங்க. அப்போ கேமரா அப்பிடியே அந்த பைப்ல ஏற்பட்டு இருக்குற க்ராக்ல போய் நிக்குது. அந்த க்ராக்குக்கு உள்ள இருந்து இடைவேளைன்னு எழுத்து வந்து இண்ட்டர்வல் விட்டிடுறோம்,


காலைல எழுந்ததும் நம்ம ஹீரோவுக்கு தலைக்கு ரைட்ல சிஜில ஒரு க்ளௌட் போட்டு அதுல க்ராக் விட்ட பைப்பக் காட்டுறோம். சட்டுன்னு எந்திரிச்சி ஹீரோ பல இடங்களுக்கும் போறாரு. அந்த வில்லன எப்பிடி ஒழிக்கிறதுன்னு தெரிஞ்சிக்க. கடைசியில ஒரு குங்ஃபூ மாஸ்டர்கிட்ட அந்த வித்தைய கத்துக்கிறாரு. 


அந்த மாஸ்டர் சொன்னபடி ஹோம் டிப்போ போயி சில பல சாமான்களை வாங்கிக்கிறாரு. வீட்டுக்கு வந்து தண்ணி வர்ற இன்லெட்ட ஆஃப் பண்ணிட்டு அந்த க்ராக் விழுந்த பைப்புல க்ராக்குக்கு ரெண்டு பக்கமும் அறுக்குறாரு.


இப்போ பேக்ரவுண்டுல ஒரு தன்னம்பிக்கை சாங் - சிங்கம் ஒன்று புறப்பட்டதே மாதிரி - போடுறோம். அந்த சாங் முடியிறதுக்கும் அந்தப் பைப்பு கட் ஆகுறதுக்கும் சரியா இருக்கு. நெத்தில வழியிற வேர்வைய துடச்சிக்கிறாரு. ஜெயிச்சிட்டோம்னு நினைக்கும்போது இன்னொரு சிக்கல்.


வெளியில இருக்குற குழாயில இருந்து உள்ள இருக்குற ஷட் ஆஃப் வால்வுக்கு ஒரு ராட் வருது. அது ஹீரோ அறுத்த அந்த பைப் துண்ட வெளிய எடுக்க விடாம தடுக்குது. என்ன பண்றதுன்னு ஹீரோவுக்குத் தெரியல. மாஸ்டருக்கு ஃபோன் போடுறாரு. அவர் சொன்ன அறிவுரையக் கேட்டுட்டு அத செய்ய வீட்டுக்கு வெளிய போறாரு. ஹால்ல உக்காந்து டி.வி பாக்குற ஹீரோயின் வெளிய எங்க போறன்னு கேக்குறாங்க. போயிட்டு வந்து சொல்றேன்னு சொல்லிட்டு நிக்காமப் போறாரு. ஹீரோயின் ஹீரோவோட முதுகையே பாக்குறாங்க. கேமராவ ஹீரோ முதுகுல இருந்து pan பண்ணி ஹீரோயின் முகத்துல க்ளோஸ் அப் பண்ணி நிறுத்துறோம். மெல்ல ஒரு நாலு வரி சாங்க பேக் க்ரவுண்ட்ல போடுறோம்.


கட் பண்ணி ஹீரோ என்ன பண்ராருன்னு காட்டுறோம். கஷ்டப்பட்டு அந்த ராடக் கழட்டிடுறாரு. இப்போ மறுபடி பேஸ்மெண்ட் போயி கட் பண்ண பைப்ப எடுத்துட்டு ஷார்க் பைட் ஸ்டாப் எண்ட் - அந்த பைப்பையே மொத்தமா க்ளோஸ் பண்ண - மாட்டுறாரு. ஆனா மறுபடியும் ஒரு சிக்கல். வாக்கிட்டு வந்த ஸ்டாப் எண்ட் பைப்ப விட பெருசா இருக்கு. மாட்டுனா லூஸா இருக்கு. ஹீரோ தலைல கைய வச்சிட்டு உக்கந்துடுறாரு. அவரோட ஃபேஸ் க்ளொஸ்-அப்ல ஒரு மூணு வரி சாங் பேக் க்ரவுண்ட்ல ஓடுது.


ஹீரோயின் வந்து என்ன ஆச்சின்னு கேக்குறாங்க. விசயத்த சொல்றாரு. இத ஃபுல்லா கட் ஷாட்லயே காட்டுறோம். மணி ஏழு ஆயிடுச்சி. இனிமே போனா கடை பூட்டி யிருப்பாங்க. சின்ன சைஸ் ஸ்டாப் எண்டும் கிடைக்காது. என்ன பண்றதுன்னு தெரியல. மறுபடி மாஸ்டரக் கூப்பிடுறாரு. மாஸ்டர் அந்த ராடை மறுபடி மாட்டிடு. காலைல சின்ன சைஸ் ஸ்டாப் எண்ட் வாங்கிக்கலாம்னு சொல்றாரு. ஆனா அந்தோ பரிதாபம் ஆர்வக் கோளாறுல அந்த மெக்கானிசத்த உடச்சிட்டாரு ஹீரோ. 



இப்ப எல்லாரும் கைல ஒரு கொசுவத்திய எடுத்து கண்ணு முன்னாடி வச்சி சுத்திக்கிங்க. (கொசுவத்தி இல்லாதவங்க என்ன பண்றதுன்னு எல்லாம் கேக்கப்படாது ப்ரியா. கொசுவத்தின்னு நினச்சிக்கிட்டு எதயாவது சுத்திக்குங்க)

2004ம் வருஷம். அப்போ இந்தியாவுல பெங்களூர்ல இருக்கோம். கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகுது. ஊர்ல எங்கப்பா ஒரு வீடு கட்டுறதுக்காக பூமி பூஜை போடுறாரு. நானும் தங்கமணியும் ஊருக்குப் போயிருந்தோம். பூமி பூஜை போட வந்த ஒரு சாமியாரு - EBல வேலை பாத்துட்டு இருந்துட்டு ரிட்டயர் ஆன உடனே ஃபுல் டைம் சாமியாராகிட்டாரு. வழக்கம்போல குறி சொல்றது, ஜோசியம் பாக்குறது, பரிகாரம் பண்றதுன்னு பொழப்ப ஓட்டிட்டு இருக்காரு. அவர் கிட்ட என்னையும் தங்கமணியையும் கையக் காட்டச் சொன்னாரு எங்கப்பா. அமெரிக்காவுக்கு கிளம்புறதுக்கான முயற்சிகள் இருந்ததனால ஜோசியம் பாத்துடணும்னு எங்கப்பா ஆசை. சரி அவர் ஆசையைக் கெடுப்பானேன்னு கைய நீட்டுனோம்.

முதல்ல என் கைய பாத்தவரு “இவருக்கு பணம் பல வழியிலயும் தங்கு தடையில்லாம வரும். ஆனா வந்த வேகத்துல போயிடும் [இதுக்கு எதுக்கு வரணும்]. வேலைல பெரிய பெரிய பதவிக்குப் போவாரு [இதத்தான எல்லாருக்கும் சொல்றீங்க. எல்லாரும் பெரிய பதவிக்குப்போயிட்டா சின்ன வேலையெல்லாம் யாரு பாக்குறது]” அப்பிடின்னு சொன்னாரு.

சும்மாவே தங்கமணி நம்மள செலவு பண்றதுக்காக பர்ஸ்னு நினக்கும்போதெல்லாம் திட்டுற ஆளு. இதுல இந்த சாமியாரு வேற பெட்ரோல் டேன்க்குக்குள்ள சீனிய அள்ளிப் போட்டுட்டாரு. 

அப்புறம் தங்கமணி கையப் பாத்தாரு. பாத்தவரு தங்கமணிக்கு சொல்லவேண்டியது தான. அத விட்டுட்டு என்னயப் பாத்து - “நீங்க நல்லா இருக்கணும்னா இவங்க பேச்ச கேட்டு நடங்க. சக்தி பேச்ச மீறி நடந்தா எதுவுமே உருப்படியா இருக்காது.” அப்பிடின்னு என் தலையில ஒரு லிட்டில் பாயை இறக்கிட்டுப் போயிட்டாரு. 

மினி குறிப்பு: நீளம் கருதி இந்த ஃப்ளாஷ் பேக்க படத்துல வெட்டிட்டாங்க. அதான் வேற ஸ்டைல்ல இருக்கு.
இப்போ கொசுவத்திய மறுபடி சுத்திக்குங்க.

ஹீரோயின் ஹீரோவப் பாக்குறாங்க. வெளிய போகும்போதே எதுக்குப் போறேன்னு கேட்டேனே. அப்போவே இந்த மாதிரின்னு விசயத்தச் சொல்லியிருந்தா நான் நிறுத்தியிருப்பேனே. எம்பேச்சக் கேட்டுருந்தா இது நடந்திருக்குமா? அப்பிடின்னு கேக்குறாங்க. ஹீரோயின் டயலாக் பேசும்போது கேமரா ஹீரோ முகத்துக்கும் ஹீரோயின் முகத்துக்கும் pan ஆகிட்டெ இருக்கு.

ஹீரோ அவரோட ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரக் கூப்பிட்டிட்டு வந்து என்னென்னவோ ட்ரை பண்றாரு. எதுவும் ஒர்க் அவுட் ஆகல. காலைல எழுந்து பாத்துக்கலாம்னு ஹீரோவும் ஹீரோயினும் நடந்து மேல போறாங்க. அப்போ இன்னொரு அஞ்சி வரி சோகப்பாட்டு. 

கனவுல ஹீரோவுக்கு ஒரு யோசனை வருது. காலைல எழுந்ததும் ஹீரோ கார எடுத்திட்டு நேரா ஹோம் டெப்போ போறாரு. போகும்போதே கட் பண்ண பைப் எடுத்துட்டு போய் அளவு பாத்து அதுக்கு சேர்ற மாதிரி ஸ்டாப் என்ட் தேடுறாரு. ஆனா கிடைக்கல. ஒண்ணு பெருசா இருக்கு இல்ல சின்னதா இருக்கு. அங்க வேல பாக்குற ஒரு ஆள் கிட்ட கேட்டதும் அவர் சொல்றாரு - இந்தப் பைப் எக்ஸ்பேண்ட் ஆயிடுச்சி. அதுனால நீ அதுக்குப் பின்னால எங்க பைப் நார்மல் சைஸ்ல இருக்கோ அங்க வெட்டுன்னு சொல்லிட்டாரு. உடனே ஹீரோ புத்துணர்ச்சியோட - மறுபடி அந்தத் தன்னம்பிக்கை சாங் பேக்ரவுண்ட்ல வீட்டுக்கு வர்றாரு. வந்தக் கையோட பைப்ப அறுத்து ஸ்டாப் எண்ட போட்டு அந்த க்ராக் வில்லனோட கதைய முடிச்சிடுறாரு. 

ஹீரோ ஹீரோயின் குழந்தையோட ஒரு சந்தோசமான பாட்டு பாடுறதோட படம் முடிஞது.

பி.கு-1: இந்தப் படத்துல இருந்த பல அனல் பறக்குற அரசியல் வசனங்களை பன் பிக்சர்ஸ் கட்டாயத்தின் பேர்ல எடுத்துட்டோம். அதுனால படம் உப்புச் சப்பில்லாம இருக்குன்னு தோணிச்சின்னா கையில கொஞ்சம் மிளகாய்ப் பொடியோட பாருங்க.

பி.கு-2: இந்தப் படத்தோட அடுத்த பாகம் - கார்டன் ஹோஸ திரும்ப மாட்டுறதப் பத்தி அடுத்த ஸ்ப்ரிங்ல வெளியாகும்னு மறுபடியும் எச்சரிக்கை.